அத்தியாயம் - 6

செய்வோம் புது காதல் விதி!

ன் அன்னையின் ஆசையை நிறைவேற்ற வேண்டி.. நான் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தக் காலகட்டம் அது!

முதலில் அன்னைக்காகவென என்னையே சமாதானப்படுத்திக் கொண்டு.. நான் வேலையில் சேர்ந்திருந்தாலும்.. செய்யும் வேலையைத் திருந்தச் செய்யும் கோட்பாட்டோடு நான் வாழ்பவன் என்பதால்.. போகப் போக.. என் வேலையின் மீது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டேன்!

மூன்றாண்டு காலம் எவ்விதப் பிரச்சனையுமின்றிக் கழிய… எங்களது காதலும்.. தேன் கூடாய் ஒரு புறம் வளர்ந்து கொண்டிருந்தது.

மூன்றாமாண்டு முடிவில்.. எனக்கு ஐரோப்பா செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அதற்கான படிப்பு,பரீட்சையென தீவிரமாகத் திரிந்த என்னிடம்.. ‘என் வீட்ல மாப்ள பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க” என்கிற ‘ஸ்டாண்டர்ட் டயலாகோடு’ அவள் வந்து நின்றாள்.

எதைப்பற்றியும் யோசிக்காமல்.. அடுத்த நொடி “உன் வீட்ல நம்ம கல்யாணத்தைப் பத்தி நான் பேசட்டுமா?” என்ற என் கேள்வியில் அநியாயத்திற்கு மலர்ந்து போனவள்.. “பரவாயில்ல! நீங்க ஏற்கனவே யூரோப் போற டென்ஷன்ல பிஸியா சுத்திட்டிருக்கீங்க! நான் வேற இடைல வந்து.. எந்தப் பிரச்சனையும் பண்ணத் தயாரா இல்ல! நீங்க நல்லாப் படிங்க. படிச்சு வேலைல சேருங்க! அப்புறம் வீட்ல பேசலாம். அதுவரைக்கும் எங்கப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன்” என்றாள்.

ஒரு வேளை.. அப்போதே வீட்டில் பேசியிருந்தால்.. அனைத்தும் சுபமாக முடிந்திருக்குமோ என்னவோ!

நான் ஐரோப்பா வேலையில் சேர்ந்து.. வெற்றிகரமாக ஓராண்டை முடித்த சமயம்.. கோரச் செய்தியொன்று என் காதை அடைந்து.. என்னை,என் குடும்பத்தை நிலைகுலையச் செய்தது.

அன்னை,தந்தையாய் எனை வளர்த்த என் சித்தப்பாவும்,சித்தியும் சாலை விபத்தொன்றில் மரணித்து விட.. அவர்களோடு அதே காரில் பயணித்த என் தங்கை யமுனா.. மோசமான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

விஷயம் கேள்விப்பட்டு இந்தியா வந்தடைந்த எனக்கு.. பொறுப்பைக் கையில் எடுத்தாக வேண்டிய கட்டாயம்!

மூன்று மாதத் தீவிர சிகிச்சைக்குப் பின்.. ஒரு கையை இழந்த நிலையில் யமுனா வீடு திரும்ப.. அவளைக் காணும் போதெல்லாம் கண்ணீர் விட்ட என் அன்னை “அப்பன்,ஆத்தாளை இழந்துட்டு அநாதையா நிற்குற புள்ளைக்கு நீ தான் ராசா எல்லாமுமா இருக்கனும்! யமுனாவுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க வேண்டியது உன் கடமை.” என்று கூற..

உடன் பிறக்காவிடினும்.. சொந்தத் தங்கையாக அவளைப் பார்த்து வந்த நான் என் அன்னையிடம் “யமுனா என் தங்கச்சிம்மா! அப்படியெல்லாம் அவளை விட்ருவேனா?” என்று கூறிய சமயம்..

“எனக்கு மாப்ள பார்த்துட்டாரு எங்கப்பா! உடனே நாம நம்ம விஷயத்தை வீட்ல பேசியாகனும்” என்கிற கட்டாயத்துடன் பவித்ரா வந்து நின்றாள் என் முன்னே!

மூன்று மாதத்திற்கும் மேலாக விடுமுறையிலிருந்த நான்.. அப்போது தான் மீண்டும் வேலையில் சேரத் திட்டமிட்டிருந்தேன்! சம்பாதித்த பணத்தில் பாதிக்கும் மேல் யமுனாவின் சிகிச்சையிலும்,சித்தப்பா வாங்கி வைத்திருந்தக் கடனை அடைப்பதிலும் கழிந்து போக.. என் ஐரோப்பா வேலையைக் கை விட முடியாத சூழ்நிலை எனக்கு.

மீண்டும் விவசாயத்தைத் தொடர்ந்தாலும்.. நான் அங்கே சம்பாதிக்கும் அளவிற்குப் பெரும்பணத்தை ஈட்ட முடியுமா என்கிற சந்தேகம்! எங்களுக்குச் சொந்தமாயிருந்த விவசாய நிலங்களில் ஏகப்பட்டப் பிரச்சனை வேறு!

அடுத்தடுத்தத் துயரச் சம்பவங்களால்.. இடிந்து போய் நிற்கும் என் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தியாக வேண்டிய பாரம்.. என் தலையில்!

குழப்பமும்,சிந்தனையுமாய் நான் நிலையற்றுத் திரிந்த சமயம்.. அவள் இப்படியொரு கோரிக்கையை வைக்க.. எனக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை!

வீடு இப்போதிருக்கும் கதியில்.. யமுனா இப்போதிருக்கும் நிலையில்.. திருமணத்தைப் பற்றி யோசித்தேப் பார்க்க முடியாத எனக்கு.. அவளிடம்.. அவள் எதிர்பார்க்கும் எந்த பதிலையும் கூற முடியவில்லை.

என் தயக்கத்தைப் புரிந்து கொண்டவளும் “இப்போவே உங்களோட வாழ வர்றேன்னு நான் சொல்லல! கல்யாணம் மட்டும் பண்ணிக்கோங்க! நிலைமை சரியாகி, யமுனாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சதும்.. நாம சேர்ந்து வாழலாம்” என்றாள்.

-சினிமா பாணியில் அவள் கூறியது.. எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை எனக்கு.

என் அன்னையிடம் சென்று.. நான் காதலிப்பதாகச் சொல்லி, காதலித்தப் பெண்ணைக் கைக் காட்டி.. கல்யாணத்திற்குக் கேட்கும் தைரியம் எனக்கில்லை அப்போது!

கையோடு சேர்ந்து மன பலத்தையும் இழந்து விட்ட யமுனாவைத் தேற்றும் முயற்சியில்.. தான் பெற்ற மகனைக் கூட மறந்து.. அவளுடைய சிறு,சிறு தேவைகளைக் கவனித்துக் கொண்டு.. அவளோடே திரியும் அன்னையிடம் என்னவென்று கூறுவேன்?

சுழலுக்குள் சிக்கிக் கொண்டு விட்ட உணர்வு எனக்கு!

சிந்திக்கும் திறனை இழந்து.. சூழ்நிலையைக் கையாளத் தெரியாதக் குழப்பவாதியாக மாறி.. நிலை குலைந்து நின்றேன்!

என் அன்னையும்,யமுனாவும் எவ்வளவு முக்கியமோ.. அதே அளவு என் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்தவள் பவித்ரா. அவளை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க முடியாது. அதே நேரம் அன்னையிடம் சென்று.. இப்போது எனக்குக் கல்யாணம் செய்து வைக்கும் படியும் என்னால் கேட்க முடியாது.

அதனால் தீவிரமாக யோசித்து.. பவித்ராவின் தந்தையைச் சந்தித்தேன்.

நடந்த அத்தனையையும் கூறி.. எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் தரும்படிக் கேட்டேன்.

நான் கூறிய அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர் ‘யோசிக்கிறேன் தம்பி’ என்றதோடு அனுப்பி வைத்து விட.. திருப்தியான மனநிலையுடன் திரும்பி வந்த எனக்கு… பவித்ராவிடமிருந்து அழைப்பு வந்தது.

“கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க” என்றபடி!

அதிர்வோடு நின்ற என்னிடம்.. “யோசிக்க நேரமில்ல! சீக்கிரம் ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றாள்.

எத்தனை சாதாரணமாகக் கூறுகிறாள்! எப்படி முடியும்? முடிவெடுக்கத் தெரியவில்லை எனக்கு!

சேற்றுக்குள் சிக்கிக் கிடக்கும் என்னை.. ஒரு புறம் கை கொடுத்துத் தூக்கி உதவும் விதி.. மறு புறம் காலைப் பற்றி உள்ளிழுக்கும் உணர்வு எனக்கு! மேலே வரவும் முடியாமல்.. ஒரேடியாக மூழ்கிச் செத்து விடவும் முடியாமல்.. இடையில் நின்று கொண்டுத் தவிக்கும் நிலை!

அன்னையையும்,யமுனாவையும் மறந்து.. சுயநலத்துடன் திருட்டுத் தனமாகத் திருமணம் செய்து கொள்ள முடியுமென்றுத் தோன்றவில்லை! இப்போது வரை.. அன்னையிடம் விஷயத்தைக் கூறவும் தைரியம் வரவில்லை!

‘யமுனாவுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்காம.. நான் என் வாழ்க்கையைத் தேடிக்க மாட்டேன்ம்மா’- என நான் செய்து கொடுத்த சத்தியத்தின் ஈரம் கூட என் அன்னையின் கைகளில் காய்ந்திருக்காத நிலையில்.. எப்படி என்னால் என் அன்னையின் முகம் பார்த்து விஷயத்தைச் சொல்ல முடியும்?

சுயநலவாதியெனக் காறி உமிழ மாட்டார்களா?

சூழ்நிலையின் கனம் கொடுத்த மனவுளைச்சலில் தூக்கமின்றி,நிம்மதியின்றித் தவித்த என்னை.. என் ஐரோப்பா கம்பெனி உடனே வருமாறு அழைப்பு விடுவிக்க.. உடனே கிளம்பிச் சென்று விட்டேன்!

பவித்ராவிடம் எந்தப் பதிலையும் கொடுக்காமல்!

அதன் பிறகு.. அவளைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை! யமுனாவும் தன்னிலையை எண்ணித் தாழ்ந்திருந்த சமயம் என்பதால்.. அவளுக்கும், பவித்ராவைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

நிச்சயிக்கப்பட்டபடி.. அவளுக்குத் திருமணமாகி விட்ட சேதி யமுனாவின் மூலமாக ஒன்றரையாண்டு கழித்து என் காதுகளை வந்தடைந்தது.

“என்னாச்சு அண்ணா?” எனக் கேட்டவளிடம்.. “ஒன்னுமில்லம்மா” எனக் கூறிச் சமாளித்து விட்டேன் நான்.

இப்போது தான் அவளுக்கொரு வரன் அமைந்திருக்கிறது. இத்தனை நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியை நுகரத் தொடங்கியிருப்பவளுக்கு மனக் கஷ்டத்தைத் தர வேண்டாம் என்கிற எண்ணத்தில் நான் சமாளிக்க.. அவளும் மேலே அதைப் பற்றி விசாரிக்கவில்லை!

ஆனால்.. அவளுடனான உரையாடலுக்குப் பிறகு நிலை கொள்ளவில்லை எனக்கு!

நான் அவளுக்கு செய்தது.. நம்பிக்கைத் துரோகம்!

எதிர்பார்ப்பின்றி.. என்னைக் காதலித்தவளை.. ஏமாற்றியிருக்கிறேன் நான்!

துடிக்கத் துடிக்க மரண வலியை.. தெரிந்தே அவளுக்குக் கொடுத்திருக்கிறேன்!

சூழ்நிலையைக் கையாளத் தெரியாத.. கையாலாகாதவனாய்.. சுயநலமே.. பெரு நலமாய்க் கருதி.. ஓடி ஒளிந்த கோழை நான்!

எனக்காகக் காத்திருந்த ஜீவனை நோகடித்திருக்கிறேன்!

நல்ல காதலன் என்கிறப் பட்டத்தைப் பறி கொடுத்து விட்டு… ஒரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றியக் கயவன் என்கிற பெயரைச் சுமந்து கொண்டிருக்கிறேன்!

குற்ற உணர்ச்சிக் கூறு போட்டதன் விளைவால்.. துண்டாகிப் போன என் உடல்.. ஒவ்வொரு இரவையும் தூக்கமின்றி.. நிம்மதியின்றி.. சூனியமாய்க் கழித்த சமயம்..

யமுனாவின் தோழியொருத்தி ஃபேஸ்புக்கில் டேக் செய்திருந்த பவித்ராவின் ப்ரொஃபைலைக் கண்டு.. அவள் இருப்பிடத்தைக் கண்டறிந்த நான்… இதோ மூன்று நாட்களாக.. இந்த ஊரில்.. அவளைத் தொடர்ந்தபடித் திரிகிறேன்!

கால்கள் தன் போக்கில் கடந்த காலத்தைத் தொடரும் முயற்சியில்.. விடாது.. நடக்க.. மீண்டும் பல்கலைக்கழகத்தை வந்தடைந்தேன்!

இம்முறை வாசலருகே..! அவளை எதிர் நோக்கியபடி!

என்னை அதிகம் காத்திருக்க வைக்காமல்.. சிறிது நேரத்திலேயே தரிசனம் தந்தாள் அவள்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு என் கருமணிகளுக்குள் அவள் பிம்பம்!

மூளை அதிர.. உடல் உதற.. உள்ளம் நடுங்க.. கண்களில் கோர்த்துக் கிடந்த நீருடன்.. உறைந்து போய் அவளையே நோக்கினேன் நான்!

தன் நீள்சிகை காற்றிலாட.. சலனமற்ற முகத்துடன் நடந்து வந்தவள்.. தான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும்.. என் இதயத்தைக் குலுங்கச் செய்தாள்.

அவள் என்னருகே நெருங்க,நெருங்க… இறுக்கிப் பிடித்த மூச்சுடன்.. இறுகிப் போய் அமர்ந்திருந்த நான்.. என் பார்வை அம்பை அவள் கண்களை நோக்கிச் செலுத்தினேன்!

ஆர்ப்பரிக்கும் அலைகடலாய்.. ஆரவாரத்துடன் காட்சி தரும் அவள் விழிகள்.. இப்போது ஆழ்ந்த அமைதியைத் தேக்கி வைத்திருந்தது.

என்னைக் காணும் போதெல்லாம் வெட்க மின்னல் தெறிக்க… அகல விரியும் அவள் விழிகள்.. இப்போது… தன் நீள,அகலங்களைச் சுருக்கி.. நிச்சலனத்துடன் காணப் பட்டது!

வாய் விட்டுக் கதறத் துடித்த.. நெஞ்சத்தின் ஆசையை நிராகரித்து விட்டு.. மெல்ல எழுந்தேன் நான்.

கையில் புத்தகத்துடன் நேர்ப்பார்வையாய் நடந்து வந்தவள்.. என்னைக் கடக்கவிருந்த வேளை..

“பவித்ரா….” என்றழைத்தேன்!

உள்ளே அடித்த சுனாமியை மென்று முழுங்கி.. குரலைச் சீராக்க முயன்று.. தோற்றுக் கரகரத்தக் குரலுடன் நான் அவளை அழைக்க.. மறுநொடி.. அசைவற்று நின்றாள் அவள்.

லேசாய் விரிந்த அவளது தோள்கள் என் குரலால் அவளுக்குண்டான அதிர்ச்சியை அடையாளம் காட்ட.. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் முன்னே சென்று நின்றேன்.

என் காலணியில் பார்வையைப் பதித்து.. மெல்ல மெல்ல நிமிர்ந்து.. மூச்சடைக்க.. என் முகம் நோக்கியவளின் விழிகளுக்குள் மெலிதாய் நீர்ப்படலம்!

ஒரு நொடி தான்! அடுத்த நொடி தன் விழித்திரைக்குள் அத்தனையையும் அடக்கியிருந்தாள் அவள்! கண்ணீர் உட்பட!

மெல்ல அதிர்ந்து அடங்கிய அவள் தொண்டைக்குழி… அவள் தன் உணர்வுகளை அடக்க முயற்சிப்பதை எடுத்துச் சொல்ல.. நிமிர்ந்து அவள் முகம் நோக்கினேன் நான்.

“நீ சிரிக்கல, சந்தோஷமா இல்லன்னு உன் புருஷன் சொல்றாரே! ஏன்??” – அதிரடியாய் நான் துவங்க.. என்னை அசைவற்று நோக்கினாள் அவள்.

அவளது மௌனம் என்னைக் கூறு போட்டதன் விளைவு…

“என் சட்டையைப் பிடிச்சு சண்டை போடப் போறியா?” – மெல்லிய குரலில் நான்.

“……………………” - உதட்டை வளைத்துத் தோள் குலுங்க ஒரு சிரிப்பை உதிர்த்துக் கைகளைக் கட்டிக் கொண்டு எங்கோ பார்த்தபடி நின்றாள் அவள்.

“பளீர்ன்னு கன்னத்துல ஒரு தடவை அறைஞ்சுடேன்! வாங்கிக்கிறேன்”

“………………….” – அதற்கான தகுதியும் எனக்குக் கிடையாது போலும்! அவள் மௌனமாய் சாதித்தாள்.

“எப்படியிருக்க-ன்னு நான் கேட்கலாமா?”

“……….”

“நீங்க எப்படியிருக்கீங்கன்னு என்னைக் கேட்க மாட்டியா?” – நிராசையுடன் ஒலித்த என் குரல் அவளுக்கு எதை எடுத்துச் சொல்லியதோ..

“நல்லா இல்லன்றது தான்… பார்க்கும் போதே தெரியுதே” – என்றாள்.

-வரிசையாய் நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மௌனமாய் இருந்தவள்.. இதற்கு மட்டும் இதழ் திறக்க.. விழி உயர்த்தி அவளை நோக்கினேன்.

சுருக்கிய புருவங்களுடன்.. எங்கோ பார்த்தபடி நின்றிருந்தவளின் உணர்ச்சி பிரதிபலிக்காத முகம்.. எனக்கு முற்றிலும் புதிதாய்த் தெரிந்தது! அவள் மனதில்,மூளையில் என்ன ஓடுகிறதென்பதை அறிய முயற்சித்த எனக்கு.. தோல்வியே கிட்ட… விரக்தியடைந்தது என் இதயம்!

“புரிஞ்சுக்க முடிஞ்சதா என்னை?” – தயங்கித் தடுமாறி நான் கேட்டக் கேள்விக்குப் பதிலாய்..

“ஆரம்பத்துல இல்ல! அப்புறம் யோசிச்சுப் பார்க்கும் போது புரிஞ்சது” – என்றாள்.

உணர்ச்சி துடைத்த வெற்றுக் குரலுடன் பேசுபவளை வெறித்து நோக்கினேன் நான்.

இயல்பைத் தொலைத்து.. உருமாறி நிற்பவளின் நிலை.. என் நெஞ்சை அறுத்தது!

கட்டுப்படுத்தியும் முடியாமல்.. இரு துளி கண்ணீர் என் கன்னத்தை நனைக்க.. அதைத் துடைக்கக் கூடத் தோன்றாமல்.. அவள் முகம் பார்த்து நின்றேன்.

“நா… நான்.. மன்னிப்புக் கேட்கலாமா?” – கம்மிய குரலுடன் நான் கேட்க.. திரும்பி என் முகம் பார்த்தாள் அவள்.

“நீங்க என்ன தப்பு பண்ணீங்க?”

“பவி….”

“……………..”

“என் மேல உனக்குக் கோபமே வரலையா?” – அவள் மௌனத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் நான் கேட்டக் கேள்வியில்.. என்னை உற்று நோக்கினாள் அவள்.

“எனக்கு ஒரு அண்ணன் இருந்தான்னு உங்கக் கிட்ட சொல்லியிருக்கேனே! ஞாபகமிருக்கா?

“…………..” – பேசத் தொடங்கியவளை பதிலற்று நோக்கினேன் நான்.

“நான் 10த் படிச்சுட்டு இருக்கும் போது.. சூசைட் பண்ணி இறந்துட்டான்! என்ன காரணம், ஏன் செத்தான்-றது இப்போ வரை எங்களுக்குத் தெரியாது.”

“………….”

“அந்தக் கோரச் சம்பவத்துக்கு அப்புறம்.. நிம்மதி,சந்தோஷம்ன்றதெல்லாம் மொத்தமா என் வாழ்க்கையை விட்டு ஒதுங்கிப் போயிட்டதா நான் நினைச்ச காலம் அது! தாங்க முடியாத வலியும், வேதனையும்.. வாழவே முடியாத கட்டத்துக்கு என்னைக் கொண்டு போச்சு! அவன் பேச்சு,அவன் சிரிப்பு, அவன் வாசம்.. அத்தனையும்.. நினைப்பு முழுக்க நின்னுக்கிட்டு.. முழுசா ரெண்டு வருஷம் என்னைத் தூங்க விடாம பண்ணுச்சு!,

“………….”

“காலம் எப்பேர்ப்பட்டக் கவலைகளையும் மறக்க வைச்சிடும்ன்னு சொல்றாங்களே! அது எப்பேர்ப்பட்டப் பொய் தெரியுமா?, உயிரா நினைச்ச ஒருத்தரை.. எப்படி சுலபமா மறந்துட முடியும்? அவன் ருசிச்ச சாப்பாடு, ரசிச்ச பாட்டுன்னு அவனை ஞாபகப்படுத்துற ஓராயிரம் விஷயங்கள் என்னைச் சுத்தியிருக்கும் போது.. என்னால எப்படி அவனை அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியும்? இது.. உயிரோட இருக்குற வரை… நான் அனுபவிச்சாக வேண்டிய வலி!”

“…………..”

“நீங்க கொடுத்துட்டுப் போன காயம் கூட… எனக்கு அதே வலியைத் தான் கொடுக்குது! மரணம் மட்டும் தான் இழப்பா?, நாம உயிரா நேசிக்கிறவங்க.. நம்மை விட்டு விலகிப் போறது கூட… அவங்க செத்ததுக்குச் சமம் தான்! அத்தனை சுலபமா அந்த வலியை மறந்துடவும் முடியாது.. அத்தனை சீக்கிரம் கடந்துடவும் முடியாது!”

-அவள் முடிக்கையில்.. பிணமாய் நின்றேன் நான்!

இரு கைகளையும் இறுக்கிக் கொண்டு.. மண்ணோடு மண்ணாய்ப் புதைந்து விடும் நோக்கத்தோடு.. மரமாய் நின்ற என்னைக் கண்டு.. என்ன நினைத்தாளோ.. என்னருகே வந்து நின்று.. என்னிரு விழிகளை நோக்கினாள்.

“சூழ்நிலையைத் தப்பு சொல்லி தப்பிச்சுக்கிற அளவுக்கு, நீங்களும்,நானும் கோழை கிடையாது! நமக்குத் தெரியும்! நாம நினைச்சிருந்தா.. விதியை மாத்தி எழுதியிருக்கலாம்ன்றது! ஆனா.. அதுக்கான தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்க.. அப்போ.. நம்ம வயசு தயாரா இல்ல! அதனால.. ஒட்டு மொத்தப் பழியையும் உங்க மேல போட்டுக்கிட்டு.. நிம்மதியைக் கெடுத்துக்காதீங்க! இப்படித் தான் நடக்கனும்ன்னு விதி இருந்திருக்கு! நடந்திடுச்சு! எதையும் மாத்தி எழுத முடியாது! பல சமயம் யோசிச்சிருக்கேன்.. என் அண்ணன் இல்லாத உலகத்தையே ஏத்துக்கிட்டு வாழ ஆரம்பிச்ச எனக்கு.. உங்களையும், உங்க நினைவுகளையும் கடக்குறது அத்தனைக் கஷ்டமான்னு! மாறிடும்! எல்லாம்! நீங்களும்..! மாறனும்!”

தீவிரமான அவள் பேச்சின் முடிவில்.. என் முகத்தில் புன்னகை தோன்ற..

“இவ்ளோ… ஃபிலாசஃபி பேசுற அளவுக்கு.. அவ்ளோ நல்லவளா நீ?” என்றேன்.

பதிலுக்குப் புன்னகைக்க முயன்றபடி…

“தெரியல! ஆனா.. நல்ல காதலியா இருக்க முயற்சி பண்ணியிருக்கேன். அது மட்டும் தெரியுது” – எனக் கூறி.. என்னை விட்டு விலகி நடக்க..

‘நிஜமாவே நீ நல்ல காதலி தான்’ என்று மனதுக்குள் நான் கூறியதை ஆமோதிக்கும் பொருட்டு.. என் மீது மழை தூவத் தொடங்கியது!

லுவலகம் முடிந்து இரவு வீடு திரும்பிய ‘அவன்’ டைனிங் டேபிளில்.. சமைத்து வைத்த உணவுகளை அடுக்கிக் கொண்டு.. அமைதியான முகத்துடன் நின்றிருந்த பவித்ராவைக் கண்டபடிக் காலணிகளைக் கழட்டத் துவங்கினான்.

கதவைத் திறந்து அவன் உள்ளே வருவதைக் கண்டதும் வரவேற்பாக.. நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் அத்தோடுத் தன் காரியத்தில் கண்ணாகி விட்டாள்.

அவளையே பார்த்தபடி சாக்ஸைக் கழட்டியவனின் கண்களில் டைனிங் டேபிளின் ஓரத்தில் வீற்றிருந்த அந்த ‘மோதிரம்’ யோசனையைக் கொடுத்தது.

கண்டு கொள்ளாமல் அவளருகே சென்றவன்.. “ஹாய் பொண்டாட்டி” எனக் கூறி.. “ரொம்பப் பசி! சாப்பிடலாமா?” என்றான்.

“கைக் கழுவிட்டு வாங்க” என்றதோடு அவள் முடித்துக் கொள்ள.. உதட்டை வளைத்து “ஹ்ம்ம்” எனப் பெரு மூச்சை வெளியிட்டு.. உள்ளே சென்று வந்தான்.

‘அவள் மெல்லச் சிரித்தாள்..

ஒன்று சொல்ல நினைத்தாள்..

அந்தப் பொல்லாதக் கண்ணனின்.. ராதை! ராதை!’

அவளது செல்ஃபோனில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைத் தவிர.. சர்வநிசப்தத்தில் ஆழ்ந்திருந்த அறையைக் கண்டபடி.. டைனிங் டேபிளில் வந்தமர்ந்தவன்.. அடுத்த அரைமணி நேரத்தை உணவில் கழித்தான்.

அவ்வப்போது.. நிமிர்ந்துத் தன் முகத்தைத் தீவிரமாக நோக்குபவளின் பார்வையைக் கண்டுச் சிரிப்பு வந்தது அவனுக்கு.

உண்டு முடித்து.. வெளியே அடித்துப் பெய்யும் மழையை வேடிக்கை பார்த்தபடி.. ஜன்னலருகே நின்றிருந்தவளின் புறம் சென்று நின்றான் அவன்.

அவன் வருகையை உணர்ந்ததும்.. திரும்பி அவனை நோக்கினாள் பவித்ரா.

அகண்ட விழிகளை மேலும் அகட்டிய வண்ணம்.. இமை அசையாது அவள் பார்த்த பார்வைக்கு… பதிலளிக்கும் நோக்கத்தோடு.. கையைக் கட்டிக் கொண்டு.. ஜன்னலில் சாய்ந்தபடி.. தானும் அவளையே நோக்கினான் அவன்.

உணர்ச்சியற்று வெறித்திருந்த அவளது பார்வை.. அவனது பதில் பார்வையால்.. மெல்ல மெல்ல உயிர் பெற்று.. அவனை உறையச் செய்ய..

“ஒன்றரை வருஷம்,ஒரு வாரம், மூனு நாள்” என்றான் அவன் அடிக்குரலில்.

புரியாமல் நோக்கியவளிடம்..

“உன்னோட இந்தப் பார்வைக்காக நான் காத்திருந்த நாட்களைச் சொல்றேன்” என்றான்.

பதிலற்றுத் தயக்கமாய் விழிகளைத் தாழ்த்தி.. மீண்டும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளிடம்..

“கட்டிக்கனும்ன்னு தோணுது. கட்டிக்கட்டுமா?” என்றான்.

புருவம் சுருக்கி.. அவள் அவனை நோக்க..

“இதுக்கு முன்னாடி பர்மிஷன் கேட்டுத் தான் கட்டிப்பிடிச்சியாடான்னு கேட்க வர்றியா?” என்று அவன் கூறியதும்.. ஆம் என்பதை வாயால் கூறாமல்.. மெல்ல.. மலரத் தொடங்கிய முகத்தோடுக் கைகளைக் கட்டிக் கொண்டு அவள் மழையை நோக்க..

அவளது முழங்கையைப் பற்றித் தன் புறம் திருப்பியவன்..

“அப்போ-லாம் நான் மட்டும் தான் உன்னைக் கட்டிக்கிட்டேன்! இப்போ.. நீயும் என்னைக் கட்டிக்கனும்ன்றது என்னோட ஆசை! கட்டிப்பியா?” எனக் கேட்டான்.

குனிந்துத் தன் முகம் பார்த்தபடிப் பேசுபவனின் கண்களில் தெரிந்த உணர்வுகள்.. அவள் தயக்கத்தை உடைக்கச் செய்ய.. கண்களை இறுக மூடியபடி.. அவன் மார்பில் முகத்தைப் புதைத்தாள் அவள்.

ஆதரவாய் அவளை அணைத்துக் கொண்டவனும்.. அவள் தலை கோதியபடி அமைதியாய் நின்றான்.

“எப்படித் தெரியும்?” – மெல்லிய குரலில் தொடங்கினாள் அவள்.

“தெரிஞ்சுக்கிட்டேன்” – அசால்ட்டாய்க் கூறினான் அவன்.

“ஏன் இதுவரைக்கும் என் கிட்ட ஒன்னுமே கேட்கல?”

“நீயா சொல்லுவ-ன்னு எதிர்பார்த்தேனோ.. என்னவோ”

“சொல்ற அளவுக்கு.. இது என் வாழ்க்கைல முக்கியமான விஷயமா இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்! ஆனா… முடியல…”

“…………..”

“கோபப்பட்டீங்களா?”

“யார் கிட்ட?”

“…………….”

“அவர் கிட்டயா..? இல்ல… நன்றி சொல்லத் தான் தோணுச்சு”

-அவன் கூறியதும்.. நிமிர்ந்து அவன் முகத்தை வியப்பாய் நோக்கினாள் அவள்.

விரிந்த நிலையில் அசையாது நின்ற அவள் விழிகளில் இதழ் பதித்து நிமிர்ந்தவன்..

“எனக்கே எனக்கான இந்தக் கண்ணை.. எனக்கேக் கொடுத்துட்டதால.. நன்றி சொல்லத் தோணுச்சு” என்றான்.

படபடக்கும் விழிகளோடு.. அவள் மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து கொள்ள.. அவள் முதுகை வருடியபடி நின்றவனிடம்..

“அவர் ரொம்ப நல்லவர்” என்றாள் அவள்.

“தெரிஞ்சது”

“அவருக்கும்.. நல்ல லைஃப் அமையனும்! எ…எனக்கு நீங்க கிடைச்ச மாதிரி” – தயக்கமாய் அவள் கூறி முடித்ததும் சட்டென அவள் தோளைப் பற்றி விலக்கி.. அவள் முகத்தைக் குனிந்து நோக்கியவன்..

“ஒரே நாள்-ல இவ்ளோ அதிர்ச்சி கொடுக்காத! என் ஹார்ட் தாங்காது” எனக் கூற… முறைப்பாய் நின்றவளை இரு கைகளால் அணைத்துக் கொண்டவன்..

“கவலைப்படாத! இனி அவர் மாறிடுவார்! சீக்கிரமே கல்யாணம் கூட பண்ணிப்பார் பாரேன்” எனக் கூற.. நிமிர்ந்து பார்த்து..

“எப்படி சொல்றீங்க?” என்றாள் அவள்.

“அது அப்படித் தான்! ஒரு ஆணோடு மனசு இன்னொரு ஆணுக்குத் தான் தெரியும்ன்னு கேள்வி பட்டதில்லையா நீ?”

சுருக்கிய புருவங்களுடன் அவன் கூறிய விதத்தில் சிரிப்பு வர.. பூக்கத் தொடங்கிய அவளது இதழ்களை… மெல்ல வருடி..

“சிரிக்கும் போது நீ ரொம்ப க்யூட்” என்றான் அவன்.

வருடிய அவன் விரலை இறுகப் பற்றிக் கொண்டு.. அவன் மார்பில் அவள் தஞ்சம் புக..

“இப்படியே எத்தனை தடவை தப்பிக்கிறன்னு பார்ப்போம்” எனக் கூறி.. டைனிங் டேபிளிலிருந்த மோதிரத்தை நோக்கினான் அவன்.

அவன் பார்வையைத் தொடர்ந்துத் தானும் நோக்கியவள் “இதை அவர் கிட்டக் கொடுக்கனும்” என்றாள்.

“கொடுத்துடலாம்” - பதில் கூறியவன்.. அந்த மோதிரத்தையே பார்த்தபடி..

“இந்த மோதிரம்.. சீக்கிரமே… அவருக்கேத்த மாதிரியான.. அருமையான ஒரு விரலைத் தேடிப் போகப் போகுது பாரு!” – என்று கூற.. மௌனமாய் அவன் பேச்சை ஆமோதித்தவள்.. கண்களை மூடிக் கடவுளை வேண்டிக் கொண்டாள்.

அமைதியாய் மழையை வேடிக்கை பார்த்தபடி சிரிப்பு மாறாத முகத்துடன்.. அவள் தோளைப் பற்றிக் கொண்டு நின்றிருந்தவனின் முகத்தை விழியில் ஏந்திக் கொண்டவள்.. அவனிடம்..

“இந்த ஒன்றரை வருஷத்துல.. ஏன் டா இவளைக் கல்யாணம் பண்ணினோம்ன்னு ஒரு தடவை கூட உங்களுக்குத் தோணுனதே இல்லையா? என்றாள்.

“ஏன் அப்படிக் கேட்குற?”

“ஆசையாவோ,அன்பாவோ.. ஒரு முறை கூட நான் உங்களோட பேசுனதில்லை!” –என்றவளை இடைமறித்தவன்..

“காதலாவோ..? அதை விட்டுட்ட?” – என்று எடுத்துக் கொடுக்க.. அமைதியாய்த் தலை குனிந்தவள்.. அடிக்குரலில்..

“இனி அந்த வார்த்தை தயக்கமில்லாம.. என் வாய்ல வர.. நாளாகும்ன்னு தோணுது” எனக் கூற.. அவள் தோளை அழுத்தியவன்..

“பரவாயில்ல! நம்ம புள்ளக்குட்டி,பேரன்,பேத்தியெல்லாம் வந்தப்புறம்.. பொறுமையா.. நீ அந்த வார்த்தையை உச்சரிக்கத் தொடங்கலாம். தப்பில்ல” எனக் கூறிச் சிரித்தான்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”

“என்ன கேட்ட?”

“ஏன் டா இவளைக் கல்யாணம் பண்ணினோம்ன்னு உங்களுக்குத் தோணுனதே இல்லையா”

“ம்ஹ்ம் இல்ல”

“ஏன்?”

“ஏன்னா… எனக்கு உன்னை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது. விருப்பமில்லாம என்னைக் கல்யாணம் பண்ணியிருந்தாலும்.. என் கிட்ட நீ காட்டுன சின்சியாரிட்டி எனக்குப் பிடிச்சிருந்தது! கடனுக்கேன்னு வாழாம.. கடமையாகவும் நினைக்காம.. ஒவ்வொரு விஷயத்துலயும் என் விருப்பத்தை மதிச்சு நடந்துக்கிட்ட! என் சந்தோஷத்துக்கு எந்தப்பங்கமும் வராம பார்த்துக்கிட்ட!”

“விஷயம் தெரிஞ்ச பிறகு?”

“என்ன?”

“எ..என்னைப் பத்தின.. எல்லாம் தெரிஞ்ச பிறகு.. என்.. என் மேலக் கோபப்படத் தோணலயா? ஏமாத்திட்டாளேன்னு?”

“ப்ச், ட்ராமாடிக்-ஆ பேசாத பவி! எனக்குக் கோபமெல்லாம் வரல! வருத்தம் தான் அதிகமா இருந்தது. யார்க்கிட்டயும் கஷ்டத்தைப் பகிர்ந்துக்காம.. உள்ளுக்குள்ளயே எல்லாத்தையும் வைச்சுக்கிட்டு.. உன்னை,நீயே வருத்திக்கிறதைப் பார்த்து! நானா ஸ்டெப் எடுத்து.. இதைப் பத்தி உன் கிட்டப் பேசலாம்ன்னு நினைப்பேன்! ஆனா.. உன் ரியாக்ஷன் என்ன மாதிரி இருக்குமோன்னு ஒரு பக்கம் பயம் வேற! காலப்போக்குல நீயே மாறிடுவன்னு நம்புனேன்”

-அவன் பேச்சும்,செய்கையும் ஆச்சரியத்தைத் தந்தது அவளுக்கு. எத்தனை கணவன்மார்களுக்கு.. எத்தனை ஆண்களுக்கு.. இது சாத்தியம் எனத் தோன்றியது.

கோபம் கொண்டு அவளைக் கொடுமைப்படுத்தவில்லை! பாஸ்ட் இஸ் பாஸ்ட் எனத் தத்துவம் பேசவில்லை! ‘படிக்குற காலத்துல வர்றதெல்லாம் ஒரு காதலா’ எனக் கேலி செய்யவில்லை!

சண்டையிட்டுக் கொள்ளும் குழந்தைகளில்.. தவறு செய்யாத குழந்தையொன்று தண்டனையையும் பெற்றுக் கொண்டு ‘நான் அவனை அடிக்கல’ எனக் கூறி அழுகையில்.. ‘குழந்தை தானே! ஒன்றுமில்லை’ எனக் கூறி சாக்லேட்டைக் கொடுத்து சமாதானப் படுத்தி விட்டு நகரும் தந்தைகள் ஒரு ரகம் என்றால்... என்ன நடந்ததெனப் பொறுமையாக விசாரித்து.. தவறு செய்யாமல் தண்டனையை அனுபவித்து விட்டக் கோபத்தில்,விரக்தியில்.. அரற்றும் குழந்தையைப் பக்குவமாய்க் கையாளும் பொறுப்பான தந்தைகள் மற்றொரு ரகம்! இவனை அந்தத் தந்தைகளின் வரிசையில் பொருத்திப் பார்க்கத் தோன்றியது அவளுக்கு!

அவனது நிதானமும்,பக்குவமும்.. அவளை வெகுவாக ஈர்க்க.. தன் தோளில் கை போட்ட படி நின்றிருந்தவனின் பக்கவாட்டுத் தோற்றத்தை.. முதன் முறையாக ரசித்து நோக்கினாள் அவள்.

அவள் பார்வை.. மையலைக் கொடுக்க..

“இப்போவாவது… என்னைப் பிடிக்குதா?” என்று நிதானமாகக் கேட்டான் அவன்.

“ம்ம், கொஞ்சமே கொஞ்சம்..” – மெல்லிய குரலில் அவள் கூறியதும்.. உதட்டைச் சுருக்கியவன்..

“பரவாயில்ல! இந்த மழை நிற்குறதுக்குள்ள.. மொத்தமா பிடிக்க வைச்சிட்றேன்” எனக் கூற..

புரியாமல்.. “எப்படி?” என்றவளிடம்.. அழகாய்ச் சிரித்து… அவளைத் தன் கை வளைவில் நிறுத்தினான் அவன்.

Epilogue:

வள் சென்றத் திசையை நோக்கியபடி.. கொட்டும் மழையில்.. உணர்வற்று நின்றிருந்த என்னை.. ஒரு கரம் தோளில் தட்டி நடப்பிற்கு அழைத்து வந்தது.

திடுக்கிட்டு நான் திரும்புகையில்.. நீலச் சேலையில்.. கையில் ஒரு குடையுடன் ஒரு பெண் நின்றிருந்தாள்.

“எருமை மாடா-ய்யா நீ?, மழை எப்படி அடிச்சுப் பெய்ஞ்சுட்டிருக்கு? கொஞ்சம் கூட அசராம நின்னுட்டிருக்க?”

சும்மா நின்றிருந்த என்னைக் கூப்பிட்டுத் திட்டியது மட்டுமில்லாமல்.. எருமை மாடெனப் பட்டம் வழங்கியவளை எரிச்சலுடன் நோக்கிய நான்..

“என்னை உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினேன்.

“ஏன், கண்ணு முன்னாடி தான நிற்குற?, தெரியாமலா இருக்கும்?”

“ஷ்ஷ்ஷ்ஷ்..” – எரிச்சல் உச்சிக்கு ஏறி விட.. அந்த மழையிலும்.. என் மண்டை காய வைத்தவளைப் பல்லைக் கடித்தபடி நோக்கி விட்டு.. விறுவிறுவென முன்னே நடந்தேன்.

“சார்,சார் நில்லுங்க! என் கைல தான் குடை இருக்கே! அப்புறம் ஏன் நனைஞ்சிட்டுப் போறீங்க?”

என் பின்னேயே ஓடி வந்தவள்.. என் உயரத்துக்குக் குடையைத் தூக்கிப் பிடித்தபடி என் வேகத்துக்கு உடன் நடக்க… கண்டு கொள்ளாமல் தொடர்ந்து நடந்தேன்.

என் முகத்தையும்,அதிலிருந்தக் கடுமையையும் ஓரக்கண்ணால் நோக்கியபடி வந்தவள்..

“ஏன் இவ்ளோ தாடி வைச்சிருக்கீங்க? லவ் ஃபெயிலரா?” என்றாள்.

“ப்ச்!” – பொறுமை போனது எனக்கு.

“அந்த ப்ளாக் கலர் பென்ஸ் கார்ல வருமே! அந்தப் பொண்ணு தான?” – அவள் கேட்டதும்.. அதிர்ச்சியுடன் நின்று.. நான் அவளை நோக்க..

நனைந்திருந்தக் கையை உதறியபடி.. “நானும் 3 நாளா பார்த்துட்டு தான் இருக்கேன்! அந்த ஸ்டோன் பெஞ்ச்ல உட்கார்ந்துக்கிட்டு.. அந்த பென்ஸ் காரையே நீங்க வெறிச்சு,வெறிச்சுப் பார்க்குற அழகை” – என்று அவள் நக்கலாகக் கூற..

“என்ன ஸ்டாக்கிங்-ஆ?” என்றேன் நான்.

“அடேங்கப்பா! உங்களுக்கு அந்தளவுக்குலாம் வர்த் இல்ல” – நக்கலாய்க் கூறியவளை எரிச்சலுடன் நோக்கி..

“என்ன வேணும் உங்களுக்கு?” என்றேன்.

“ப்ச், மழைல நனைஞ்சுக்கிட்டு நிற்குறீங்களேன்னு பாவம் பார்த்துக் குடையோட வந்தேன் பாருங்க! என்னைச் சொல்லனும்! நியூஸெல்லாம் பார்க்க மாட்டீங்களா நீங்க?, அடுத்த 24ஹவர்ஸ்க்கு புயல்ன்னு அறிவிச்சிருக்காங்க! உங்க ஃபீலிங்க்ஸையெல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டைக் கட்டி வைச்சிட்டு.. வீட்டுக்குள்ளயே இருக்க வழியைப் பாருங்க” என்றவளிடம் பதில் சொல்லாமல்.. நான் முன்னே நடக்க..

“லெஃப்ட் சைட், லெஃப்ட் சைட்!” என்றாள் அவள்.

திரும்பி நான் அவள் முகம் நோக்க.. “இல்ல, உங்க கார் லெஃப்ட் சைட்ல நிற்குதுன்னு சொல்ல வந்தேன்” என்று அவள் நமுட்டுச் சிரிப்புடன் கூறியதும்.. தலையைக் கோதிக் கொண்டு உஷ்ண மூச்சுடன்.. நான் என் காரருகே செல்ல.. அவளும் எனைத் தொடர்ந்து வந்தாள்.

கோபத்துடன் காரை ஸ்டார்ட் செய்த என்னை ஜன்னலைத் தட்டி அழைத்தவள்..

“வர்த் இல்லன்னு சும்மா தான் சொன்னேன்! கருப்புக் கலரு,முட்டக்கண்ணு, மூஞ்சி முழுக்க தாடின்னு.. ஆளு பார்க்க டக்கரா இருக்கீங்க! உங்களை என் க்ரஷ்-ஆவே நான் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்னா.. பாருங்களேன்! இந்த சண்டே காத்ரீனா வீட்ல பார்ட்டி இருக்கு! கம்பெனியோடத் தான் வரனும்ன்னு எல்லார் கிட்டயும் ஆர்டர் போட்டிருக்கா! எனக்குப் பார்ட்டிக்குப் போகனும்ன்னு ஆசை! ஆனா.. கம்பெனிக்கு யாருமே இல்ல! நீங்க வேணா.. என் கூட வர்றீங்களா?”

முதன் முறையாகப் பார்க்கும் ஒருவரிடம் இப்படியெல்லாம் பேச முடியுமா? சிறுபிள்ளைத் தனமாக பேசியவளைக் கண்டு தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றியது எனக்கு.

சரியான அரை மெண்டல் என்றபடிக் கார்க் கண்ணாடியை நான் ஏற்றத் தொடங்கிய சமயம்.. அவசரமாக ஒரு விசிட்டிங் கார்டை என் காருக்குள் எறிந்து..

“உங்க முடிவு எதுவாயிருந்தாலும்.. இந்த நம்பருக்கு கால் பண்ணி சொல்லுங்க” என்றவள் தொடர்ந்து..

“பை த வே.. என் பேரைச் சொல்லாமலே பேசிட்டிருக்கேன் பாருங்க, நான் ஒரு லூசு” எனத் தலையலிடித்துக் கொண்டவள்.. அடைக்கவிருந்த ஜன்னலைத் தடுத்துத் தன் வலது கரத்தை என் முன்னே நீட்டியபடி..

“என் பேரு பவித்ரா” என்றாள்.

                                       *****************************முற்றும்******************************************