அத்தியாயம் - 5

என் வானமெங்கும் பௌர்ணமி!

‘அவன்’… உயரமாயிருந்தான்!

என்னை விடக் குறைந்தபட்சம் இரண்டடியேனும் அதிகமிருப்பான்!

மாநிறத்தோடு இருந்தான்!

என் கருநிறத்துடன் ஒப்பிடுகையில்.. அவன் நல்ல நிறம் தான்!

கலையான கண்களுக்கும், வடிவான இதழ்களுக்கும் சொந்தக்காரனாயிருந்தான்.

என்னைப் போல.. தாடிக்குள் முகத்தை மறைத்து வைத்துக் கொண்டு.. பக்கித்தனமாகத் திரியாமல்.. அளவான மீசையோடு அழகனாய்!

சுருக்கிய புருவங்களுடன்.. என் விழிகள் மேலும்,கீழுமாய்.. அவனை ஆராய.. என் பார்வையோடு பயணித்துக் கொண்டிருந்த மனசாட்சியோ.. எனக்கும்,அவனுக்குமான வேற்றுமையை வரிசைப் படுத்திக் கொண்டிருந்தது.

என் பார்வையில் நிச்சயம் பொறாமை இல்லை!

வெறும் ஆராய்ச்சி மட்டுமே!

கையில் கிடைத்த அரிய வகைக் காட்டுப் பூவொன்றைப் பொக்கிஷமாய்.. உள்ளங்கையில் பொத்தி வைத்தபடிக் கர்வத்தோடு நடை புரிந்து கொண்டிருந்த என்னை.. காலனாய் வந்துத் தாக்கிய பெரும் புயலொன்று.. என் கண்ணில் மண்ணைத் தூவி… எனக்கே,எனக்கான உடைமையாய் நான் எண்ணி வைத்திருந்த பூவை.. என் கையிலிருந்துப் பறித்துக் கொண்டு சென்று விட்டது!

காற்றோடு காற்றாய்.. வீசி அடிக்கப்பட்டப் பூவின் கதி என்னவானதென்பதை நான் அறிந்து கொள்ள வேண்டாமா?

பூஜிக்கப்பட வேண்டிய வாடாமலர் அது!

அது சென்றடைந்த கைகளுக்கு.. அதன் தராதரம் தெரியுமா? அதன் மேன்மை புரியுமா?

வெறித்து நோக்கிய என் விழிகளுக்குள் அவ்விருவரின் பிம்பம்!

காரை விட்டிறங்கிய அவன்.. அவள் கையில் எதையோ கொடுத்து விட்டுப் பாண்ட் பாக்கெட்டுக்குள் தன்னிரு கரங்களை அடக்கிய படி.. ஹாண்ட் பாக்கை நோக்கித் தலை குனிந்திருந்தவளை இமைக்காது.. பார்த்திருந்தான்.

பின் அவன் ஏதோ கேள்வி கேட்கப் பதில் சொன்னவளை… அதே பார்வையுடன் நோக்கியவன்.. அவள் காதை விட்டு சற்று விலகியிருந்தக் குல்லாவை இழுத்துச் சரிசெய்து.. லேசாகத் தலையசைத்து விடை கொடுக்க.. அவள் முன்னே நடந்து சென்றாள்.

அவள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் வரை பொறுமையாய் நின்று பார்த்திருந்தவன்.. பின் பிடரியைக் கோதியபடி கார் கதவைத் திறந்து ஏறிக் கொள்ள..

இருவரையும் பார்த்திருந்த எனக்குள் லேசாய் ஒரு பரபரப்பு!

எனக்கு அவனைப் பற்றித் தெரிந்தாக வேண்டும்! அவன் எப்படிப்பட்டவன் என்பதை அவனருகிலிருந்து கண்டாக வேண்டும்!

புதிதாகக் குழந்தையைப் பள்ளியில் சேர்த்து விட்டு.. பின் பொறுக்க முடியாது.. வகுப்பறையை எட்டிப் பார்த்துக் குழந்தையின் நலனை அறிந்து கொள்ளும் தாயின் மனநிலை என்னுடையது!

மூளை யோசிக்கத் துவங்கும் முன்பே கால்கள் செயலில் ஈடுபட்டு விட.. இதோ.. அவனது காரின் முன்னே மூச்சு வாங்க நின்று கொண்டு… ஒரு கரத்தை நீட்டி அவனைத் தடுத்தபடி.. நான்!

திடீரென.. முன்னே வந்து அவனது காரில் கிட்டத்தட்ட நான் பாய்ந்து நின்றதும்.. சடன் பிரேக் இட்டுக் காரை நிறுத்தியவன்.. ஜன்னலைத் திறந்து எரிச்சலுடன் என் முகம் பார்த்தான்.

நான் நின்ற நிலை அவனுக்கு என்ன உணர்த்தியதோ..

சுருக்கிய புருவங்களுடன் என் முகத்தை நேர்ப்பார்வையாய் நோக்கியவன் பின்.. தன் தாடையை உயர்த்தி என்னவென்று வினவினான்.

என்ன கூறுவேன்!

மூளை, உடலின் எங்கோ ஓர் மூலையில் முடங்கிக் கிடக்க.. நெற்றியில் வழிந்த வியர்வைத் துளியை துடைக்கும் சாக்கில்.. ஒரு நொடி பார்வையைத் தாழ்த்தி.. கண்ணை இறுக்கி.. என்னை,என் மூளையை நான் நிலைபடுத்திக் கொண்ட பின்.. சட்டென என் இதழ்கள்..

“லி..லிஃப்ட்” என உச்சரித்தது.

தலை முதல் கால் வரை என்னை ஒரு நொடி நோக்கியவன்.. பின்.. வந்து ஏறிக் கொள்ளுமாறு கண்ணைக் காட்டினான்.

எங்கு செல்ல வேண்டுமென்று அவனும் கேட்கவில்லை! நானும் கூறவில்லை!

பல்கலைக்கழகத்தைக் கடந்து.. நெடுஞ்சாலையை எட்டிய கார்.. அவனது கைகளில் சீரான வேகத்தில் செல்லத் தொடங்கியது.

அதுவரை இருவரும்.. எதுவும் பேசிக் கொள்ளவில்லை!

ஓரக்கண்ணில் அவனை நோட்டம் விட்டபடி.. அமர்ந்திருந்த எனக்கு.. எங்கே,என்ன,எப்படி ஆரம்பிப்பதென்கிற குழப்பம்!

பாடப் புத்தகத்தைத் தொட்டுக் கூடப் பார்க்காமல்.. பரீட்சை எழுத வந்து விட்ட மாணவனைப் போல் மண்டையைச் சொரிந்தபடி.. மக்கு மடச்சாம்பிராணியாய் அமர்ந்திருந்தேன்.

பேசாமல்.. சினிமா பாணியில் ‘நீங்க நல்லவரா,கெட்டவரா’ எனக் கேட்டு விடுவோமா..??

எப்படி அவனைப் பற்றித் தெரிந்து கொள்வது? என்ன செய்ய? இதயத்தின் நான்கு அறைகளும் சரமாரியாகக் கேள்விக்கணைகளை மூளையை நோக்கி செலுத்தியதன் விளைவு.. நெற்றியின் இரு பக்கங்களிலும் வியர்வை அருவியாகக் கொட்டியது எனக்கு.

அதைத் துடைத்தபடியே அவன் புறம் திரும்பிய நான்..

“ஹீ…ஹீட்டரை ஆஃப் பண்ணிக்கட்டுமா?” எனக் கேட்டேன்.

“ஷ்யூர்” என்றவன் என் முகத்தை நோக்கி விட்டு.. “இந்த ஜாக்கெட்டைக் கழட்டுனீங்கன்னா.. இவ்ளோ வியர்க்காதுன்னு நினைக்கிறேன்” என்றான் தயக்கமாய்.

“ஆ…ஆமாம்ல” என்றபடியே மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டு அணிந்திருந்த ஜாக்கெட்டை அவசரமாய்க் கழட்டிய எனக்கு.. அதுவரை எனைச் சூழ்ந்திருந்த இறுக்கம்.. தளர்ந்து போன உணர்வு.

“தமிழா நீங்க?” – கேள்வி அவனிடமிருந்து வர..

“ம்” என்றபடித் திரும்பி நோக்கிய நான்.. “ஆமாம்” என்றேன்.

“எந்த ஊரு?”

“மதுரைப் பக்கம் ஒரு கிராமம்” -நிதானமற்றிருந்த என் மூளை.. சற்றும் சிந்திக்காமல் பதிலை உதிர்த்து விட..

“ஓ! ரியலி? என் வைஃப் கூட மதுரை தான், மதுரைல எங்க?” – சிரித்தபடி மிகச் சாதாரணமாக.. அவன் கேட்ட கேள்வியில் திக்,திக் உணர்வு எனக்கு.

வேண்டுமென்றே ஊர்ப்பெயரை மாற்றிக் கூறி விட்டு.. நான் அவன் முகம் பார்க்க..

“ஓஓ! என் வைஃபோட ஊரு கள்ளிக்குடி” என்றான்.

“ஓ…” என்று விட்டு.. பேச்சை மாற்றும் பொருட்டு “நீ..நீங்க எந்த ஊர்?” – தயக்கமாய் ஆரம்பித்த நான்.. அதன் பின்பு.. வெகு தீவிரமாக அவன் பிறந்தது,வளர்ந்தது,படித்தது,பட்டம் வாங்கியதென.. ஒன்று விடாமல்.. அவனைப் பற்றிய அத்தனையையும் விசாரிக்க..

அசராமல் நான் கேட்க கேள்விகளுக்கு…. ஒரு நொடி.. புருவம் உயர்த்தி.. லேசாய் உதட்டை நெளித்து.. என்னை ஒரு பார்வை பார்த்தவன்… ஏன்,எதற்கென்று பதில் கேள்வி கேட்காமல்.. அனைத்திற்கும் பொறுமையாய் விடையளித்தான்.

“என்னைப் பத்தி இவ்ளோ கேள்வி கேட்குறீங்க! உங்களைப் பத்தி எதுவுமே சொல்லலையே!”

சைட் மிர்ரரை நோக்கியபடி.. ஸ்டியரிங்கைத் திருப்பிய வண்ணம்.. கேள்வி கேட்டவனின் பக்கவாட்டு முகத்தை நோக்கி..

“என்னைப் பத்தி சொல்லிக்க பெருசா எதுவுமில்லங்க” – என்றேன் நான்.

“ஏன்?”

“…………..”

“கல்யாணம் ஆயிடுச்சா உங்களுக்கு?” – சாலையில் கவனத்தைப் பதித்தபடி அவன்.

“இ..இல்ல”

“ஏன்?”

“புரியல..”

“ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்கன்னு கேட்குறேன்”

“அ..அது…” – மறுபடி குப்பென வியர்த்தது எனக்கு.

“உங்களைப் பார்த்தா… முப்பது வயசாவது இருக்கும்ன்னு தோணுது! ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க?”

‘அவனுக்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாது! வீணா.. உளறி.. சொதப்பி வைக்காத’ – எனக்கு நானே அறிவுரை கூறிக் கொண்டு.. உதட்டை ஈரப்படுத்தியபடி.. பதிலை யோசிக்கத் துவங்குகையில்..

“ஃபேமிலில ஏதாவது பிரச்சனையா?” – மீண்டும் கேள்வி கேட்டான் அவன்.

“இ..இல்லையே!, ஏன் கேட்குறீங்க?”

“இல்ல, கூடப்பிறந்தவங்களை செட்டில் பண்ணனும், உடம்பு சரியில்லாத அம்மா,அப்பாவுக்குப் பணம் சேர்க்கனும் அப்டி,இப்டின்ன்னு எதுவும் கமிட்மெண்ட் இருக்கான்னு கேட்குறேன்”

“அப்படியெல்லாம் எதுவுமில்ல”

“பின்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கல நீங்க?”

“…………..”

“லவ் ஃபெயிலரா?”

அவன் வார்த்தைகளில் அழுத்தம் அதிகமாய் இருந்ததைப் போல் ஓர் உணர்வு எனக்கு! ஒரு நிமிடம் மூச்சு நின்று போனது.

சட்டெனத் திரும்பி அவன் முகத்தை நான் ஆராய.. அவன்.. என்னை மெல்லிய சிரிப்புடன் நோக்கி.. என்னவெனக் கேட்டுப் புருவம் உயர்த்தினான்.

கண்களை எட்டும் சிரிப்பு அவனுக்கு!

ஏனோ அந்த செய்கை அவளை நினைவு படுத்தியது.

கண்ணழகிக்கு ஏற்ற.. கண்ணழகனோ இவன்??

நான் அவன் முகத்தையே இமை கொட்டாமல் பார்ப்பதைக் கண்டு.. அவன் என் முன்னே சொடுக்கிட.. சட்டெனப் பார்வையைத் திருப்பிய நான்..

“லவ்-ஆ?, அந்தக் கொடுப்பினையெல்லாம் எனக்கு இல்ல சார்” என்றேன்.

“ரொம்ப விரக்தியா பேசுறீங்களே நண்பா”

ஒரே டயலாக்கில் என்னை நண்பனாகப் பதவி உயர்வு செய்தான் அவன்!

நண்பனா?, நான் இவனுக்கு நண்பனா? அந்தத் தகுதி இருக்கிறதா எனக்கு?

என்னைப் பற்றிய உண்மை நிலை தெரிந்தால்.. இதே சிரிப்போடு என்னுடன் பழகுவானா?

“என்ன மறுபடி ப்ளாக்-அவ்ட் ஆயிட்டீங்க?” – அவன் உதடுகளில் நெளிந்த மென் சிரிப்பை கண்ட நான்..

“நீங்க எப்பவுமே இப்படித் தானா?” எனக் கேட்டேன்.

“புரியல”

“எப்பவுமே.. இப்படி.. சிரிச்சுட்டே தான் இருப்பீங்களா?”

“ஏன், அதுல தப்பு எதுவுமிருக்கா?”

“அப்டின்னா, நீங்க கோபப்படவே மாட்டீங்களா?”

“ஹ்ம்ம்ம்..” என ஒரு நொடி யோசித்தவன் பின் “வாழ்க்கைல இதுவரை பெருசா எதுக்கும் கோபப்பட்டதா எனக்கு ஞாபகமில்ல” என்றான்.

“ப்ச், சும்மா சொல்லாதீங்க சார்! ஒரு மனுஷனால எப்படிக் கோபப்படாம இருக்க முடியும்?”

“ஏன் முடியாது?”

“எப்படி?, நீங்க சொல்லுங்க”

“எதுக்கெல்லாம் பொதுவா மனுஷன் கோபப்படுவான்?, ம்ம்? நினைச்ச விஷயம் நடக்காத போது.. பிடிச்ச விஷயம் கிடைக்காத போது.. வாழ்க்கை நம்ம போக்குக்கு வராம அடம்பிடிக்கும் போது.. நம்மளோட இம்மீடியேட் ரியாக்ஷன் கோபம் தான்! இல்லையா?”

“………….”

“நான்.. வாழ்க்கைல எதுக்கும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் வைச்சுக்கிறது இல்ல! கோ வித் த ஃப்ளோன்னு வாழ்ற ஆளு! நான் கடக்குற சூழ்நிலைகளும்,சம்பவங்களும் என் பேச்சோட,செயலோட பிரதிபலிப்பா தான் பார்க்குறேன்! அதனால நான் யார் மேலயும்,எது மேலயும் கோபத்தையோ,வெறுப்பையோ வளர்த்துக்கிறது இல்ல”

“சோஷியல் மீடியால மோடிவேஷனல் வீடியோ போடுற ஆளா சார் நீங்க?”

“ஹாஹாஹா”

“தப்பா எடுத்துக்காதீங்க! மூச்சு விடாம நீங்க பேசுறதைக் கேட்குறப்போ.. எனக்கு அப்படித் தான் தோணுச்சு! இதெல்லாம்.. சாத்தியமா சார்?”

“சாத்தியமில்லன்னு ஏன் நினைக்குறீங்க? சிரிப்பைத் தொலைச்சிட்டுக் கோபத்தைக் கட்டிக்கிட்டு அழுகுற ஆளுங்க எல்லாம் பெருசா என்ன சாதிச்சுட்டாங்க?”

“அப்டின்னா.. நீங்க எப்பேர்ப்பட்ட விஷயத்துக்கும் கோபமே பட மாட்டீங்களா?”

“ஏன் அவ்ளோ சந்தேகமா கேட்குறீங்க?”

“இல்ல, நீங்க எப்பவும் சிரிச்சு சந்தோஷமா இருந்தா.. உங்களைச் சுத்தியிருக்கிறவங்களுக்கும் அது பிரதிபலிக்கும் இல்லையா? அதான் கேட்டேன்”

“இருக்கலாம்”

“இருக்கலாமா?, ஆமாம்ன்னு திடமா பதில் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்”

பற்கள் தெரிய மெல்லப் புன்னகைத்தவன்..

“என்னைச் சுத்தியிருக்கிறவங்களும் என்னை மாதிரியே இருந்தாகனும்ன்னு கட்டாயம் எதுவுமில்ல இல்லையா?”

“நான் அதைக் கேட்கல! உங்களால.. உங்களைச் சுத்தியிருக்கிறவங்க முகத்துல இதே சிரிப்பைக் கொண்டு வர முடியுதான்னு கேட்கிறேன்!, முக்கியமா… உங்களையே சார்ந்திருக்கிற.. உங்க வைஃப்”

‘நீ உன் பொண்டாட்டியை சந்தோசமா வைச்சிருக்கியா டா?’ – இது தான் என் கேள்வியின் சாரம்சம்!

அம்பை எய்து விட்டு.. நான் முகம் பார்த்துக் காத்திருக்க…

“ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டீங்களா?” எனக் கேட்டான் அவன்.

நான் பதிலின்றி அவனைப் பார்க்க..

“நான் இன்னும் சாப்பிடல! பசிக்குது. உங்களுக்கு டைம் இருந்தா.. என்னோட ஜாயின் பண்ணிக்கிறீங்களா?” எனக் கேட்டான்.

அவனுடனான என் பேச்சுத் தொடர்ந்தே ஆக வேண்டிய கட்டாயமிருந்ததால்.. நான் சரியெனத் தலையாட்ட ஒரு இந்திய உணவகத்தின் முன்பு காரை நிறுத்தினான்.

“வாங்க போகலாம்” என்றபடி முன்னே நடந்தவனிடம்..

“கல்யாணமாயிடுச்சுன்னு சொன்னீங்க! ஏன் வெளிய சாப்பிட்றீங்க? வைஃப் வீட்ல சமைக்க மாட்டாங்களா?” - நான் கேலியாகக் கேட்பது போல்.. மீண்டும் பாய்ண்ட்டுக்கு வர..

“அவ சமையல்காரி இல்லங்க! என் வீட்டுக்காரி!” எனக் கூறியபடி உள்ளே சென்றமர்ந்தவன், என்னையும் அமரச் சொல்லி கை காட்டி விட்டு..

“வீக் டேஸ்ல எங்களுக்கு டைம் இருக்கிறதில்ல. அதனால வெளிச் சாப்பாடு தான்! வீக் எண்ட் ஆனா.. ரெண்டு பேரும் சேர்ந்து சமைப்போம்” என்றான்.

அவனிடம் ஒரு குறையையேனும் கண்டு விடத் துடித்துக் கொண்டிருந்த மனது.. அவனது ஒவ்வொரு பதிலிலும் அறை வாங்கித் தொங்கிப் போனத் தலையுடன் திரும்பி நடப்பதைக் கண்டு சிரிப்பு வந்தது எனக்கு.

என்ன சாப்பிட்றீங்க எனக் கேட்டு ஆர்டர் செய்தவன்.. உணவு வந்ததும் உண்ணத் துவங்க..

நானும் உண்டபடியே அவனை நோக்கி..

“நான் கேட்டதுக்குப் பதிலே சொல்லையே?” என்றேன்.

உணவை மென்றபடி எதையோ யோசித்தான் அவன். பின்..

“லைஃப்ல நான் பெருசா பயப்பட்ற விசயம் ஒன்னு இருக்கு” என்றான்.

சம்மந்தமில்லாமல் பேசத் தொடங்கியவனை நான் உண்பதை நிறுத்தி விட்டுக் குழப்பமாய் நோக்க..

“இழப்பு” என்றான்.

அதுவரை அவன் முகத்தில் நீங்காது வீற்றிருந்த புன்னகை முற்றிலும் மறைந்திருக்க.. எங்கோ நோக்கியபடிக் கூறியவன்.. பின் திரும்பி என் முகம் பார்த்தான்.

நான் பதிலற்று அவனை வெறித்திருக்க.. அவனோ.. மீண்டும் புன்னகையைத் தத்தெடுத்தபடி..

“அந்த இழப்பு மரணமாயிருக்கலாம்! இல்லை, மரணத்தை உணர வைக்குறக் கொடூரமான சம்பவமாயிருக்கலாம்” என்றான்.

“ஒரு இழப்புக்குப் பிறகு.. வாழ்க்கை இயல்பானதா இருக்கிறது இல்ல. சிரிப்பு,சந்தோஷத்துக்கான டெஃபனிஷன் மொத்தமா மாறிப் போயிடுது! மலர்ச்சிக்கும்,கலகலப்புக்கும் அடையாளமா வாழ்ந்திருந்த ஆட்கள் கூட.. அமைதியையும்,மௌனத்தையும் தங்களோட குணமா மாத்திக்கிறாங்க! எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு.. வாழ்க்கையை அதன் போக்குல வாழ வேண்டியக் கட்டாயத்தை காலப் போக்குல கத்துக்குறோம்ன்னாலும்.. நடப்பைக் கடக்குற நிமிடங்கள் ஒவ்வொன்னும் ரொம்பக் கொடூரமானது.”

“………………..”

“என்னால அவ சிரிக்குறா! ஆனா.. தானாகவே சிரிக்குற இயல்பை அவ மறந்துட்டதா எனக்குத் தோணுது!”

திகைப்பு மாறாத விழிகளோடு அவனை நோக்கி... “ஏ..ஏன்??” என்றேன் நான்.

நிமிர்ந்து.. என்னை நோக்கியவனின் பார்வை ஏதோ கேள்வி கேட்டது.

பின் உணவை அளந்தபடி “தெரியல” எனக் கூறித் தோளைக் குலுக்கியவன்.. தொடர்ந்து..

“என்னால அவ சந்தோஷமா இருக்காளான்ற உங்க மறைமுகக் கேள்விக்கு.. எனக்கும் விடை தெரியல!, நீங்க வேணா, எனக்காக.. அவ கிட்டக் கேட்டு சொல்றீங்களா?” – நமுட்டுச் சிரிப்புடன் கூறினான்.

திகைப்பை அடக்கித் தொண்டையைச் செருமிக் கொண்டுத் தட்டில் பார்வையைப் பதித்த நான்..

“உங்க வைஃப் கிட்ட நான் எப்படி சார் கேட்க முடியும்?” எனக் கூற..

உதட்டை வளைத்து சிரிப்பை நெளிய விட்டவன் “அதுசரி!” எனத் தலையாட்டியபடி உணவை மென்றான்.

ஏதேதோ யோசனையில் தவித்த மனதைக் கட்டுப்படுத்த முடியாமல்.. கரகரத்தக் குரலுடன் மீண்டும் அவனிடம் கேள்வி கேட்டேன்.

“நீங்க.. நீங்க…. அவங்களை.. மாத்த முயற்சி பண்ணதில்லையா?”

“ட்ரை பண்ணேன்”

“……..”

“ஆனா வெற்றி கிடைக்கல! குணப்படுத்தனும்ன்னு டாக்டர் நினைச்சா மட்டும் போதுமா? குணமாகனும்ன்னு பேஷண்ட் நினைக்க வேண்டாமா?”

பதில் இல்லை என்னிடம். குற்றக் குறுகுறுப்பில்.. குருதி கொதித்துக் கொண்டிருந்தது எனக்கு.

“ஏன் இப்படி இருக்காங்கன்னு கோபப்பட்டதில்லையா நீங்க?, ஃப்ரஸ்ட்ரேட் ஆனதில்லையா?”

“ம்ஹ்ம்…”

“ஏ..ஏன்??”

“பிகாஸ்.. ஐ லவ் ஹெர்”

ஒரே வார்த்தையில்.. சம்மட்டியால் ஓங்கி அடித்தான் என்னை!

அவன் வார்த்தை கொடுத்தத் தகிப்பு தாங்காது.. அமர்ந்திருந்த இடத்திலிருந்து நான் சட்டென எழ.. துளைக்கும் பார்வையுடன் என்னையே நோக்கியவன்…

“என்னாச்சு?” என்றான்.

“ஒன்றுமில்லை”-எனத் தலையாட்டி விட்டு மீண்டும் அமர்ந்த என்னால்.. அவனை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை!

அளக்கும் பார்வையுடன் என்னையே வெறித்துக் கொண்டிருந்தவன் “ஒரு வகைல நான் உங்களுக்கு தேங்க்ஸ் தான் சொல்லனும்” –என அடிக்குரலில் கூற.. சட்டென நிமிர்ந்து நோக்கினேன் நான்.

அவனது அடையாளப் புன்னகையைப் பொறுமையாய் உதிர்த்து..

“தினம் தனியா தான் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவேன்! ரொம்ப போரிங்-ஆ இருக்கும்! இன்னிக்கு நீங்க எனக்கு கம்பெனி கொடுத்தீங்க இல்லையா? அதுக்குத் தான் தேங்க்ஸ்”

அவன் பார்வையும்,பேச்சும் எதையோ உணர்த்துவது போல்.. உறுத்தியது எனக்கு! அதுவரைக் காய்ந்திருந்த நெற்றியில் மறுபடி வியர்வை பூக்கத் தொடங்க.. எச்சில் விழுங்கியபடி அமர்ந்திருந்தேன் நான்.

என்ன எதிர்பார்த்தது என் மனது? என்ன மாதிரி அவனை உருவகப்படுத்த நினைத்தது? கொடுமைக்காரனாக? காமுகனாக? சைக்கோவாக?

அப்படியே அவன் கெட்டவனாக இருந்திருந்தாலும்.. என்னால் என்ன செய்ய முடிந்திருக்கும்? அவன் சட்டையைப் பிடித்துச் சண்டையிட்டு.. என் காதலியை மீட்டெடுத்து.. கதைகளில் வருவதைப் போல.. அவளோடு சுக,போக வாழ்க்கை வாழ்ந்திருப்பேனா? அது சாத்தியமா?

எதைத் தான் வேண்டுகிறது என் மனம்?

அவனைப் பற்றியறிந்து கொண்டே ஆக வேண்டுமென்கிற எண்ணத்தோடு அவன் வண்டியில் ஏறினேன்! வந்த வேலை முடிந்தாகி விட்டது!

ஆனால் மனம் எதற்காக.. நிறைவையும்,ஏமாற்றத்தையும் ஒரு சேர உணர்ந்தாக வேண்டும்?

கலவையான மனநிலையோடு.. கலையற்ற முகத்தோடு நான் அமர்ந்திருக்க.. என் தோளில் லேசாகத் தட்டி என்னை நடப்புக்குக் கொண்டு வந்தான் அவன்.

“என்னாச்சு? அப்பப்போ கனவுக்குப் போயிட்றீங்க?, சாப்பிடுங்க” – சிரித்தபடி அவன்.

“இருந்தாலும்.. நீங்க.. இவ்ளோ நல்லவனா இருக்கக் கூடாது சார்” – பொறுக்க மாட்டாமல்.. அதுவரை மனதை அரித்துக் கொண்டிருந்த வாக்கியத்தை நான் கூற.. இரு கைகளையும் கோர்த்து நாடியில் வைத்தபடி.. சிரிப்புடன்.. என்னை நோக்கியவன்.. தட்டை நோக்கிக் கண் காட்டினான்.

மீதமிருந்த உணவை விழுங்கி வைத்து விட்டு.. நான் எழ.. என்னோடு அவனும் எழுந்தான்.

“அப்….போ… நான் கிளம்புறேன்” – அவன் முகம் பார்க்க முயற்சிக்காமல் நான் கூற..

இடது கையைப் பாக்கெட்டுக்குள் விட்டபடி என்னை ஒரு நொடி நோக்கியவன் பின் தன் வலது கரத்தை என்னை நோக்கி நீட்டினான்.

தன்னிச்சையாக நீண்ட என் கரத்தைப் பற்றிக் குலுக்கியவன்..

“நைஸ் டாக்கிங் டூ யூ மிஸ்டர்.********” எனக் கூறி விட்டுத் தலையசைத்தபடி விடை பெற.. நகர்ந்து செல்லும் அவனது காரை வெறித்தபடி சிலையாய் நின்றிருந்த எனக்குள்.. ஷாக் அடித்த உணர்வு!

ஏனெனில்.. அவனுடனான இந்த மூன்று மணி நேரப் பேச்சில்.. ஒரு முறை கூட நான் எனது பெயரை அவனிடம் உச்சரிக்கவில்லை!