அத்தியாயம் - 1

மங்கிய மாலை நேரம்! விடாது வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் பேய் மழை! நரம்புகளை நிமிண்டிச் செல்லும் குளிர்க் காற்று! மடிக்கணிணியுடன் செருகப் பட்டிருந்த ஹெட் செட்டின் வழியே இதயத்தை ஸ்பரிசித்துக் கொண்டிருக்கும் இளையராஜாவின் இசை! மூளையும்,இதயமும் இணைந்து டூயட் பாடிக் கொண்டிருந்த ஏகாந்த வேளை!

ஜன்னலோர மேசை இருக்கையொன்றில் அமர்ந்தபடி தோட்டத்துச் செடிகளின் மீது பார்வையைப் பதித்திருந்தேன் நான்! இலைகளைச் சாலையாக்கி மெல்ல அதன் மீது ஊர்ந்து சென்று படாரெனக் கீழே விழும் மழைத் துளிகளும், காற்றோடு ஆலிங்கனம் செய்து நர்த்தனமாடும் பூக்களும், கூட்டிலிருந்தபடிக் கீச்,கீச்செனச் சத்தமிட்டு மழையின் ஒலியோடு போட்டிப் போட்டுக் கொண்டிருந்த பறவைகளும் எனது பொண்ணான ஓய்வு நேரத்தை அழகாக்கிக் கொண்டிருந்தன.

‘It’s a perfect time for a coffee! Isn’t it? பார்வை இன்னமும் மழையின் மீது பதிந்திருக்க.. இதழ்களில் தேங்கி விட்டப் புன்னகையுடன், காதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை முணுமுணுத்தபடி காஃபி கப்பைக் கையில் எடுத்துக் கொண்டேன். ‘DRINK,REFILL,REPEAT’ – என் காஃபி கப்பில் எழுதப்பட்டிருந்த வசனம்!

நாவில் தொடங்கி தொண்டையைக் கடந்து உணவுக் குழாய் வழியே இறங்கும் காஃபியின் கசப்பை நான் இமை மூடி அனுபவித்துக் கொண்டிருந்த தருணம் என் ரசனையைக் களைத்தபடி ‘டௌய்ங்ங்ங்ங்..’ என்ற சத்தத்துடன் வந்து விழுந்தது ஒரு ஃபேஸ்புக் மெசேஜ்!

கோப்பையைக் கீழே வைத்து விட்டு, கணிணியின் புறம் திரும்பினேன்!

‘மங்காத்தா டாஆஆஆ!!’ – நான் மற்றும் என் அராத்து நண்பிகள் இருவர் அடங்கிய குரூப்பின் பெயர் இது! ‘தல’ ரசிகைகள் நாங்கள்! அதில் வந்த மெசேஜைத் தான் நான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன்.

“கேர்ள்ஸ், செக் திஸ் லிங்க்.” – என்றபடி என் தோழி யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பியிருந்தாள். “ஹ்ம்ம் ஓகே!, பார்க்கிறேன்” என்று பதில் அனுப்பி விட்டு லிங்க்கை க்ளிக்கினேன்!

அது ஒரு கேஃபே போலும்! பேக் க்ரவுண்ட் முழுதும் காஃபி,பீட்சா,பர்கர் என கொறிக்கும் சமாச்சாரங்கள் சம்பந்தப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேற்கூரையில் ஆங்காங்கு தொங்க விடப்பட்டிருந்த இதய வடிவ பலூன்கள், சிகப்பு ரோஜாக் கொத்துகள், கலர் பேப்பர்கள், ஜிகினாக்கள் அனைத்தும் விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்த மஞ்சள் நிற விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தது! சுவரின் நடுவே கோல்டன் நிறத்தில் ‘ஹாப்பி வேலண்டைன்ஸ் டே’ என்று எழுதப்பட்டிருந்தது.

திடீரென விளக்கொளி பளிச்சிட்டு கண்களைச் கூசச் செய்ய.. அருகேயிருந்த மேடை மீது லேசாகச் சாய்ந்தபடி உயரமான சுழல் நாற்காலி ஒன்றில், கையில் கிட்டாருடன் அமர்ந்திருந்த ஒருவன், பட்டென நிமிர்ந்து கேமராவை நோக்கிச் சிரித்தான்! அதுவரை நிழலாகத் தெரிந்து கொண்டிருந்த உருவமது!

ஒரு காலைக் கீழேயும், மறு காலை நாற்காலியில் வைத்தும் அமர்ந்திருந்தவனது கிட்டார் கைகளும்,அகலமான தோள்களும் வனப்புடன் காட்சியளித்தது!

கருமைக்கு ஒரு இஞ்ச் கீழிருந்த மாநிறம் அவனது! காம்ப்ளான் பாய் போலும்! அத்தனை உயர நாற்காலியில் கூடத் தன் அனகொண்டா கால்களால் தரையைத் தொட்டிருந்தான்! க்ரீம் நிற பேண்ட்டின் மேல் டக் இன் செய்யப்பட்ட கருப்பு நிற சட்டை. ஃபுல் ஃபார்மல்ஸ்! பெரியக் கருமணிகள்,ஏர் நெற்றி! முடியை வேறு மேலும் ஏற்றிச் சீவியிருந்தான்! முகத்தை மைதானமாக்கிக் கருப்புப் புற்களாய் படர்ந்து கிடந்த சீரான தாடி! அடர் மீசைக்குக் கீழே பற்கள் தெரியாத கீற்றுப் புன்னகை! அதில் அத்தனை சாந்தம்! ஆள் அப்பாவி போலும்!

திடீரெனக் கைத்தட்டல்கள் ஒலிக்க.. அவன் கிட்டாரை இயக்கினான்.

“இமை விரல்களில் காற்றாய்.. கை வீசு…

மலர்ப் படுக்கையில் மோனம் நீ பேசு… காதலே!!

தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு..

இடைவெளியினில் என்னை நீ பூட்டு… காதலே..!!

தீண்டும் தினம் தென்றல் மணம்… கூந்தல் இழை.. வெந்நீர் மழை..!! – கிட்டாரை மீட்டியவனின் விரல்கள் வளைந்திருந்த விதமும், வரிகளின் அர்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றபடி லேசாகச் சிரித்து விழிகளை மூடித் திறந்த அழகும், ‘காதலே…’-எனும் போது அகன்று,விரிந்த தோள்களும், கொஞ்சம்,கொஞ்சமாக என்னை வீடியோவுக்குள்ளே இழுத்துச் சென்று.. அவனருகே அமர்ந்து கன்னத்தில் கை வைத்தபடி ஆ-வென நோக்கச் சொன்னது.

அத்தோடு வீடியோ முடிந்து போக… பதறிப் போனேன் நான். ஓ!காட்! யார் இந்த ஹேண்ட்சம் சூப்பர் சிங்கர்? என்ன குரல்வளம்! விஜய் டிவி உங்களை இன்னுமா மிஸ்டர் கண்டுபிடிக்கல?, என்ன பாட்டு இது??, ஓஓஓ.. ச.நா இசையில் வெளியான மோகத்திரை.. மூன்றாம் பிறை!! மை ஆல் டைம் ஃபேவரைட்! ஆனால் இந்த ஆள் யாரென்று எப்படிக் கண்டுபிடிப்பது?, பரபரவென என் விழிகள் டெஸ்க்ரிப்ஸனைத் தேட.. என்னை ஏமாற்றாமல், அங்கே அவனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜீவன் ஏகலைவன், டோனட் காஃபே.

இது போதுமே! இதை வைத்து அவன் வரலாற்றையே தெரிந்து கொண்டு விடலாம்! நம்மிடம் தான் அதற்கான தொழில்நுட்பம் இருக்கிறதே! என்ன அது என்கிறீர்களா?, டண்டடைங்!

www. facebook.  com

முகப்புத்தகம்! இளசுகளுக்கானத் தனிக் கோள்! பள்ளி மாணவ,மாணவிகளிலிருந்துத் தொடங்கி 60-வயது தாத்தா,பாட்டி வரை அனைவரும் ஒரு களம் காணும் சமூக வலைதளம்! காலை விழித்ததும் வரும் கொட்டாவியிலிருந்துத் தொடங்கி, உறங்கும் முன் இரவில் பருகும் ஹார்லிக்ஸ் பால் வரை அன்றாட வாழ்க்கையின் சாராம்சத்தை ஸ்டேட்டஸாக எழுதி செல்ஃபிக்களைப் போட்டு லைக்ஸ்களையும்,கமெண்ட்டுகளையும் லாரி,லாரியாக அள்ளச் சொல்லும் போதை வஸ்து!

ஆடை,அணிகலனிலிருந்துத் தொடங்கி, சோப்பு,சீப்பு வரை அத்தனை பொருட்களுக்குமான வர்த்தக உலகம்! அரசியல்வாதிகளும்,சாதி அமைப்பினரும், திரைப்பட ரசிகர் மன்றங்களும் தங்களுக்கான பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு ஆள் சேர்க்கும் சிலந்தி வலை! மொத்தத்தில் காற்று,நீர்,உணவு போன்ற மனிதனின் அடிப்படைத் தேவைகளில் புதிதாக இணைந்து கொண்ட ஆறாவது தேவை!

உன் நண்பன் யாரென்று சொல்,நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள் கற்கால மனிதர்கள்! இக்காலத்தில் ஒருவருடைய ஃபேஸ்புக் ஐடி கிடைத்தால் போதும்! ஒட்டுமொத்த விவரத்தையும் நொடியில் தோண்டி எடுத்து விடலாம்!

தோசை பிடிக்குமா,இட்லி பிடிக்குமா?, எந்த ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு அடிக்கடி செல்கிறான்?, எந்தத் தியேட்டரில் படம் பார்க்கிறான்?, தல ரசிகனா?, தளபதி ரசிகனா? இளையராஜா மியூசிக் இஷ்டமா?, இங்க்லீஷ் மியூசிக்கா?, அரசியல் மீம்ஸ்களுக்கு லைக் தட்டுகிறானா?, எந்தப் பக்கங்களை ஃபாலோ செய்கிறான்?, இதை வைத்தே அவனுடைய குணாதிசயங்களைக் கண்டறிந்து விடலாம்! பெரிய ஜாதக அறிவெதுவும் தேவையில்லை! ராகுவும்,கேதுவும் எந்தத் திசையில் பார்க்கிறார்கள் என்பதை அவனது கடைசி போஸ்ட்டை வைத்தே கணித்து விடலாம்!

சியர்ச் பாக்ஸில் ஜீவன் ஏகலைவன் என்று டைப் செய்து விட்டு, பரபரவென நகம் கடித்தபடி காலில் தாளம் போடத் தொடங்கினேன் நான். 3,4 ஏகலைவன்களுக்கு மத்தியில் வீடியோவில் பார்த்த அதே காஃபி பேக்ரவுண்டில் பேண்ட் பாக்கெட்டுக்குள் கை நுழைத்தபடி சாந்தமான புன்னகையுடன் ப்ரொஃபைல் பிக்சரில் தெரிந்தான் அவன்.

‘He must be in his early 30’s’ – அவன் முகத்தைக் கண்டவுடன் என் இதழ்கள் முணுமுணுத்த முதல் வாக்கியம் இது. வெறும் கருப்பு பேக்ரவுண்ட் தான் கவர் ஃபோட்டோ! ஆள் படு சோம்பேறி போலும், கடனே என்று கவர் ஃபோட்டோ வைத்திருப்பதைப் போல் தோன்றுகிறது! அடுத்ததாக பயோ-டேட்டாவை நோக்கின என் கண்கள்.

பெயர்: ஜீவன் ஏகலைவன்

தொழில்: டோனட் காஃபே-யின் முதலாளி மற்றும் டாலண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஃபிட்னெஸ் ட்ரைனர்.

வசிப்பது: சிங்காரச் சென்னை.

படித்தது: பி.இ.மெக்கானிக்கல், அரசு பொறியியல் கல்லூரி,திருநெல்வேலி.

வயது: 4………………2

??????????????வாஆஆஆஆட்ட்ட்ட்???, நாற்பத்தியிரெண்டா?? அங்கிளா இது??, அய்யோ சாரி அங்கிள்! பட்டென மடிக்கணிணியை மூடி வைத்து விட்டு நேரே வெறித்தேன்! மழை நின்று போயிருந்தது. ஆங்காங்கு இலைகளின் மீது ஒட்டிக் கொண்டிருந்த மழைத்துளிகள் மெல்ல,மெல்லக் கீழே விழுந்து உயிர் விட்டுக் கொண்டிருந்தன.

கூல்! கூல்! அடிக்கிறது சைட்டு! இதுல என்ன ஏஜ் லிமிட் வேற?, மனசாட்சி முகத்தில் அறைய மீண்டும் மடிக்கணிணியைத் திறந்தேன்.

அவனை.. இல்லை, அவரைப் பார்த்தால்.. 42 வயதென்று சத்தியமாகச் சொல்ல முடியாது! இமைக்காமல் அந்த ‘பேபி’ ஸ்மைலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு உள்ளே ‘மேடி…. மேடி.. ஓ.. ஹோ… மேடி..’ என்று ஓடியது!

ஃபிட்னெஸ் ட்ரைனராக இருப்பவன் கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால்… உடற்பயிற்சி செய்யும் காஃபி ஷாப் ஓனருக்கும், மியூசிக்குக்கும்ம்ம்ம்ம்…. கொஞ்சம் முரண்பாடு தான்!

நோ அரசியல்,நோ சினிமா, நோ மீம்ஸ்… ஆள் படு சீரியஸ் பார்ட்டி போலும்! தேவையற்ற ஒரு போஸ்ட் கூட இல்லை! ஆனால்.. ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்! எதற்காக?, ஓ! அந்தக் குரல் வளத்துக்காகவும், தோற்றத்துக்காகவும் போலும்!

கொஞ்சமே கொஞ்சம் புகைப்படங்களும், நிறைய வீடியோக்களும் இருந்த அவரது ப்ரொஃபைலைக் கடகடவென ஸ்க்ரால் செய்தேன்! சிற்சில வீடியோக்களின் முன்னே மட்டும், மனம் உருகும் ஸ்டேட்டஸ் மெசேஜ்கள்! என்ன அது?, ஆர்வம் உந்த முதல் வீடியோவை ஓபன் செய்தேன்.

‘தொலைத்து விடக் கூடாதென்றே நினைப்பிலேயே தொலைந்து போய் விடுகிறேன்’ – ஸ்டேட்டஸை வாசித்தபடி வீடியோவைக் க்ளிக்கினேன்.

வாகன நெரிசல் மிகுந்த சாலையொன்றின் காலை வேளை. பள்ளி,கல்லூரிப் பேருந்துகள் அணிவகுத்து நின்றதிலிருந்தேத் தெரிகிறது நேரம் ஒன்பதைக் கூட கடக்கவில்லையென்று! “கீன்ன்ன்ங்க். கீங்க்ங்க்ங்க்”-என்று விடாது சத்தமிட்டு காது ஜவ்வைக் கிழித்த ஹார்ன் ஒலிகளை அலட்சியம் செய்தபடித் தன் காரை விட்டிறங்கி அவசரமாக ஓடிக் கொண்டிருந்தான் ஜீவன்.

உச்சந்தலையில் ஈட்டியாய்க் குத்திய வெயில், நொடியில் வியர்வை சுரப்பிகளை முன்நெற்றியில் முளைக்கச் செய்ய.. அதையும் கண்டு கொள்ளாமல் ஓடியவனின் பார்வை, ஜீப்ரா க்ராசிங்கில் கீழே விழுந்து கிடந்த சிறுவன் மீதே பதிந்திருந்தது.

கூடியிருந்தக் கூட்டத்தை விலக்கி முன்னே வந்தவன், சிறுவனைக் கண்டதும் ஒரு நொடி வியந்துப் பின் உடனேத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான். ஏதேதோ விடாமல் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தாரைக் கொஞ்சமும் மதியாமல் தன் காரை நோக்கி நடந்தவனை “நில்லுங்க” என்று ஒரு குரல் தடுத்தது.

முகம் முழுக்க பயமும்,கலக்கமும் அப்பிக் கிடக்க.. கண்களில் தேங்கியிருந்தப் பதட்டத்தை மறைக்க முயன்றபடி, சிறுவனின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அவனருகே நின்றிருந்த ‘அவள்’.. தன் புறம் திரும்பியவனிடம் “ஆ..ஆட்டோ வந்தாச்சு, இதுலயே ஏறிப் போயிடலாம்” என்றாள்.

முறைக்கத் தோன்றினாலும் முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு அவள் பின்னே சென்று ஆட்டோவில் ஏறினான். அவர்களுடன் மேலும் இரண்டு சமூக அக்கறையாளர்கள் ‘நடு ரோட்ல விழுந்த பையனுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கனும்ல சார்?,’ என்றபடித் தொற்றிக் கொள்ள.. மிகுந்த எரிச்சலுடன் அருகேயிருந்த மருத்துவமனைக்குப் பயணித்தான்.

“ஆதி…. ஆதி.. கண்ணைத் திறந்து அம்மாவைப் பாரு டா. ஆதி……” – மகனை மடியில் ஏந்திக் கொண்டு விடாமல் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தவளை உணர்ச்சியற்ற பார்வையால் நோக்கினான் ஜீவன்.

சிகப்பும்,கருப்பும் கலந்த காட்டன் புடவை அணிந்திருந்தாள். கற்றையான பின்னல்,இடை வரை நீண்டிருந்தது. லேசாக மையிடப்பட்டிருந்த விழிகள், பட்டையாய் வளைந்திருந்த புருவம், கூரான மூக்கு. அழகான இதழ்கள்! 35,36 வயது இருக்கலாம்! இந்த வயதில் குடும்ப பாரத்தைத் தாங்க வேனும்,பெருத்துப் பருமனாக இருக்க வேண்டிய உடம்பு,ஒல்லியாயிருந்தது. அவளை அளவிட்டபடியே வினவினான்.

“என்னாச்சு திடீர்ன்னு?”

அவன் கேட்ட பின்பு தான், அவனொருவன் அங்கிருப்பதையே உணர்பவள் போன்று, நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள். கண்களிலிலிருந்த கலக்கம் மறைந்து, ஒரு வகையான தைரியம் குடி கொண்டது.

“ஒரு வாரமா வைரல் ஃபீவர். சரியாயிடுச்சுன்னு டாக்டர் சொன்னதால தான், இன்னிக்கு ஸ்கூலுக்கு கிளப்புனேன். நடந்து வர்ற வழியிலயே திடீர்ன்னு மயங்கி விழுந்துட்டான். காலையில சரியாக் கூட சாப்பிடல. அதனாலயோ என்னவோ!”

பதிலேதும் கூறாமல் குனிந்து குழந்தையை நோக்கினான். அதற்குள் மருத்துவமனை வந்து விட, அவசரமாக ஆதியைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.

ஆதி எனப்படும் ஆதித்யாவைச் சோதித்த மருத்துவர் அவன் அனீமிக்காக இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்கு காய்கறிகள்,கீரை வகைகளென இரும்புச் சத்து மிகுந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளும் படியும் கூற.. ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டுக் கண் மூடிப் படுத்திருந்த சிறுவனை நோக்கினர் இருவரும்.

நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும் அச்சிறுவனுக்கு! இமை வரை மறைத்த சுருள் முடி, நிறத்தில் அவன் அன்னையை ஒத்திருப்பான் போலும்! அரிசி மாவைப் போல பளீர் வெள்ளை! சாம்பல் நிற ட்ரௌசர்,வெள்ளை சட்டையெனப் பள்ளிச் சீருடையில் வெளுத்த இதழ்களுடன் பாவமாய்க் கிடந்தான்.

உள்ளே பொங்கிய உணர்வில் சட்டென அவனருகே அமர்ந்த ஜீவன் மெல்ல அவன் தலை முடியைக் கோத.. அவன் ஸ்பரிசத்தில் விழி திறந்த சிறுவன், அவனைக் கண்டதும் அழகாய்ச் சிரித்து “ஜீனு….” என்றழைத்தான்.

அவன் அழைத்த விதத்தில் இதழ்களில் புன்னகை அரும்ப “மயங்கி விழற அளவுக்கு நீங்க ரொம்ம்ம்ம்ம்ப வீக் பாய்-ஆ ஜூனியர்?” என்றான்.

“நோ, நோ. ஐ ஆம் அ ஸ்ட்ராங் பாய்”

“பார்த்தா அப்படித் தெரியலயே! ஸ்ட்ராங் பாய்ஸ் எல்லாரும் அம்மா கொடுக்கிற சாப்பாட்டைச் சமத்தா சாப்பிடுவாங்க. ஆனா நீங்க… சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க?”

“ப்ச், ஐ ஹேட் இட்லி ஜீனு” – முணங்கலாய்ச் சிணுங்கினான்.

“ஒரு வாரமா ஃபீவர்ல இருந்திருக்கீங்க. இப்போ தான் சரியாயிருக்கு. அதுக்குள்ள தோசை கேட்டா எப்படி?, ஆவியில சமைச்ச இட்லி எவ்ளோ ஹெல்தி தெரியுமா?”

“வாட் இஸ் ஆவி ஜீனு??”

“அம்மா இட்லி அவிக்கிறதை பார்த்துருக்கீங்களா?”

“ஹ்ம்ம், பார்த்திருக்கேன். ரௌண்ட்,ரௌண்டா இருக்கிற ப்ளேட்ல, அம்மா இட்லி பாட்டரை ஊத்துவாங்க”

“யெஸ், அதை வேக வைக்கிற பாத்திரத்தில இருந்து புஸ்,புஸ்ன்னு புகை வரும் தெரியுமா?, அது தான் ஆவி”

“போன வாரம் ஆவி-ன்னா என்னன்னு கேட்டதுக்கு, கோஸ்ட்ன்னு சொன்னீங்க?”

“போச்சுடா!!!, நீங்க இப்போ ரொம்ப டயர்டா இருப்பீங்க. இப்போ எதுவும் பேசாம ரெஸ்ட் எடுங்க. நான் உங்களுக்கு அப்புறமா எல்லாஆஆ விளக்கமும் கொடுக்கிறேன். ஓகே?” – என்றதும் “ம்ம்ம்ம்” – எனத் தலையாட்டியவன் அப்போது தான் கையிலிருந்த ட்ரிப்ஸைக் கண்டான்.

கையை உயர்த்தியதும் நரம்பில் சொருகப்பட்டிருந்த ஊசி வலிக்கத் தொடங்க… “ஆஆஆஆ, வலிக்குது” என்றபடி உதறியவனைக் கண்டுப் பதறி அவன் கைகளை அசையாமல் இறுகப் பற்றியவன் “ஆதி,ஆதி. ரிலேக்ஸ்! கையை ஆட்டாதீங்க. ட்ரிப்ஸ் முடியப் போகுது” என்றான்.

அதுவரை இவர்களிருவரையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவள் அருகே வந்து அவன் கன்னத்தைப் பற்றி “ஆதி… ஒரு 15மினிட்ஸ் நீ அமைதியா படுத்திருந்தா.. நான் உனக்கு சாக்கோ-பை கொடுப்பேன். அம்மா ஹேண்ட்-பேக்ல தான் இருக்கு. உனக்குத் தெரியும்ல?” என்றதும் முகம் மலர்ந்தவன் “ஓகே!” என்று விட்டு அமைதியாய் படுத்துக் கொண்டான்.

‘எப்படி சமாளித்தேன் பார்’ – என்பதைப் போல் அவன் மீது ஒரு பார்வையைச் செலுத்தியவளிடம் உதட்டை வளைத்துத் தோளைக் குலுக்கினான் ஜீவன்.

அவன் செய்கையில் கடுப்பாகி “நான் போய் பில் பே பண்ணிட்டு வரேன்.” என்று வெளியேறப் பார்த்தவளிடம் “இல்ல, நீங்க ஆதியோட இருங்க. நான் ‘பே’ பண்றேன்” என்றான்.

அதுவரை அவன் முகத்தை நேராக நோக்காமல், எங்கெங்கோ பார்வையைப் பதித்திருந்தவள் இப்போது அவன் புறம் நன்றாகத் திரும்பி நின்று கைகளைக் கட்டிக் கொண்டு முறைத்தாள்.

“என்ன?” - ஜீவன்

“என் பையனுக்கு செலவழிக்கிற அளவுக்கு நான் நிறையவே சம்பாதிக்கிறேன். உங்களோட பணம் எங்களுக்குத் தேவையில்ல”

-கோபம் கொள்கையில் வர மிளகாயாய் மாறி விடுவாள் போலும்! அதிலும் எண்ணெயில் போட்ட வரமிளகாய்! வெள்ளை முகம் நிறம் மாறி சிகப்பைப் பூசிக் கொள்ள.. விடைத்த மூக்குடன், பல்லைக் கடித்தபடி வார்த்தைகளைக் கக்கினாள்.

அவளுக்குப் பதில் கூறாமல் திரும்பி சிறுவனை நோக்கினான் ஜீவன். கையில் செருகப்பட்டிருந்த ஊசியின் மீதே அவன் பார்வை பதிந்திருக்க, அவனது கவனத்தை ஈர்க்கா வண்ணம், அவளது கையைப் பற்றிக் கொண்டு அறை மூலைக்கு இழுத்துச் சென்றான்.

“பையன் முன்னாடி ஆர்க்யூ பண்ண வேண்டாம்ங்க ரோஹினி.”

அவள் பார்வை தன் வலது கையின் மீது பதிந்திருந்த அவனது நீள விரல்களின் மீது பதிந்திருந்தது.

பட்டெனக் கையை விலக்கிக் கொண்டவன் “சாரிங்க..” என்றான்.

“உரிமையா கையைப் பிடிக்கிறதெல்லாம் இதுவே கடைசி முறையா இருக்கட்டும்”

“இனித் தொட மாட்டேன். ஆனா, என்னை ‘பே’ பண்ண விடுங்க.”

“நான் தான் தேவையில்லன்னு சொல்றேனே”

“உங்களுக்குத் தேவையில்லன்னு சொல்லுங்க. ஆதிக்கு என் பணம் தேவையா,இல்லையான்றதுக்கு கோர்ட் ஏற்கனவே பதில் சொல்லிடுச்சு”

மறுத்துத் தலையசைத்தபடித் தொடங்கியவளின் முன்னே கை நீட்டித் தடுத்தவன் “இதுக்கு மேல எதுவும் பேசி ஆதி முன்னாடி சீன் க்ரியேட் பண்ண வேண்டாம்” என்று சட்டமாகப் பதில் சொல்லி விட்டான்.

எதுவும் கூறாமல் வேறு புறம் திரும்பிக் கொண்டவளிடம் தயக்கமாய் ஒரு பார்வையைச் செலுத்தியவன் மேலே எதுவும் கூறாமல் முன்னே நடந்தான்.

அவர்களுடனே வந்த ‘சமூக அக்கறையாளர்’ ஒருவர் அவனைத் தொடர்ந்து பின்னே வந்து “எங்க சார் போறீங்க?, பையன் கண் முழிச்சுட்டானா?” என்று விசாரித்தார்.

“ம்ம்”

“நீங்க எங்க போறீங்க?”

“பில் கட்டத் தான்”

“நீங்க ஏன் சார் பில் கட்டனும்?, அந்தம்மாவைக் கட்டச் சொல்ல வேண்டியது தானே?, அப்படியே, கூட வந்து ஹெல்ப் பண்ண நமக்கும் ஏதாச்சும் கிடைக்குமான்னு கேட்டுப் பாருங்க சார்”

“ஏதாச்சும்ன்னா??”

“காசு தான், வேற என்ன?”

“இதுக்கு நீங்க தேனாம்பேட்டை சிக்னல்ல பிச்சையே எடுக்கலாமே!, எதுக்கு இந்தப் பொழப்பு?”

“என்ன ஓவரா பேசுறீங்க?”

“அப்படித் தான் டா பேசுவேன். நீயா வெளிய போறியா?, இல்ல உன் மூக்கை உடைக்கவா?”

“ஏய்… என்னாய்யா?, நீ என்ன அவ்ளோ நல்லவனா?, கீழ கிடந்த யாரோ ஒரு பையனை ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டு வந்துட்டு பெருசா சீன் போடுற?”

அதற்குள் இருவரும் காஷ் கௌண்ட்டரை எட்டி விட, தன் டெபிட் கார்டையும் பில்லையும் காஷியரிடம் நீட்டியவன், உதட்டை வளைத்தபடித் தாடியைத் தடவிக் கொண்டே “அவன் யாரோ ஒரு பையன் இல்ல.” என்றான்.

“பின்ன?”

கார்டைத் தேய்த்து விட்டு மறுபடி அவனிடமே நீட்டியவரிடம் நன்றி சொல்லி வாங்கியவன், அதைப் பர்ஸில் வைத்தபடியே “என் ரத்தத்தின் ரத்தம். என் சொந்த மகன்” என்றான்.

-‘ஊஃப்ஃப்ஃப்ஃப்ஃப்’ மூச்சை இழுத்து விட்டபடி ஏமாற்றத்தின் கடைசிப்படியைத் தொட்டிருந்தேன் நான்! ஏன் இந்த ‘புஸ்ஸ்ஸ்’ உணர்வு?, அவன்.. சாரி! அவர்.. வயதானவர் என்பதாலா?, அல்லது திருமணமானவர் என்பதாலா?, இல்லை, 5 வயதுச் சிறுவனுக்குத் தகப்பன் என்பதாலா?? ஆனாலும், அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் காட்டருவி போல.. மூளையிலிருந்து ஆரம்பித்து,விரல் வழியே அடித்துக் கொண்டு முன்னே வர.. என்னையறியாமல்.. அடுத்த ஸ்டேட்டஸின் மீது கண்கள் தாவின. அது கூறியது, இந்த வரிகளை..

“பெண்மையில் பேராண்மை..

ஆண்மையில் ஓர் பெண்மை,

கண்டறியும் நேரமிது….. காதலியே!”