இது காதல் காலமடி!
“இரண்டு பொண்ணுங்கள்ல பச்சை சுடிதார் போட்டிருக்கிற பொண்ணு தான் ரோஹினி. படத்தைப் பார்க்கலன்னியே!, இப்ப நேர்லயே பாரு மாப்ள”
“சும்மா இருங்க மாமா” – என்றவனுக்கு லேசாக வியர்க்கத் தொடங்க.. ஒற்றை விரலால் அதைச் சுண்டி எறிந்தவன் பஸ்ஸூக்காகக் காத்திருந்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே ரோஹினியோடு வந்த பெண் இவர்களின் அருகே வந்தாள்.
“மாப்ள, அந்தக் கோணவாய் நம்மக்கிட்ட தான் டா வருது”
“நீங்களே பேசி அனுப்பிடுங்க மாமா” – இருவரும் முணுமுணுக்கையில் அருகே வந்து விட்டாள் அவள்.
“நீங்க தான ஜீவனாந்தம்?” – அந்தப் பெண் ஜீவனைப் பார்த்து நேராகக் கேட்க.. ஒரு நிமிடம் விழித்துப் பின் தன் மாமனை நோக்கினான் அவன்.
“இவன் தான். அதுக்கென்ன இப்போ?”
“அங்க நிற்கிறாளே!, அவ ரோஹினி. அவளை உங்களுக்குப் பொண்ணு பார்த்திருக்கிற விசயம் உங்களுக்குத் தெரியுமா?”
“அந்தப் பொண்ணா இது?” – மாமாவின் அண்டப்புழுகு.
“ஆமாம். அவ இவரோட கொஞ்சம் தனியா பேசனுமாம்”
“ஓஹோ!, இதுக்குத் தான் எங்களையே ஃபாலோ பண்ணிட்டிருக்கீங்களா?, உங்களுக்கு எப்படியோ தெரியலம்மா, ஆனா நாங்க எங்க பையனை அப்படி வளர்க்கல. எதுவாயிருந்தாலும், பெரியவங்க பேசி முடிவு பண்ணட்டும். அதுவரைக்கும் பொறுத்திருங்க”- சற்றுத் தள்ளி நின்றபடி, இவர்கள் பேசுவதைக் கேட்ட ரோஹினிக்குக் கெட்ட கோவம் வந்து விட்டது போலும்! தங்,தங்கென நடந்து அருகே வந்தவள்.. கைகளைக் கட்டிக் கொண்டு ரௌத்திரத்துடன் செல்வத்தை நோக்கினாள். அவளது செய்கையில் ஆடிப் போன இருவரும், செய்வதறியாமல் விழித்துக் கொண்டு நிற்க, புஸ்,புஸ்-என கோப மூச்சை வெளியிட்டவள்..“நீங்க எங்கப்பாவைக் கோட்டிப்பயன்னு சொன்னதுக்கே நான் பயங்கர கோவத்துல இருக்கேன்! இப்போ என் வளர்ப்பைப் பத்தி வேற தப்பா பேசுறீங்களா?” என்று வினவினாள். தன் பெரிய கண்களை அநியாயத்திற்கு உருட்டி, இதழ்களை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு அவள் கேட்டக் கேள்விக்கு, செல்வம் பயந்தாரோ இல்லையோ, ஜீவன் மொத்தமாய் அரண்டு போனான்.
“மாமா.. மாமா.. போயிடலாம் மாமா, யாராவது பார்த்தா பிரச்சனையாய்டப் போகுது” –ஜீவன்.
“என்ன பிரச்சனையாகும்?, ஹ்ம்?, நான் இங்கப் பேசிட்டிருக்கேன். நீங்க என்ன அவரைப் பார்க்குறீங்க?” – இப்போது ஜீவன் புறம் திரும்பி விட்டாள் அவள். பேருந்து நிறுத்தத்தில் அருகில் நிற்பவர்கள் தங்களை விநோதமாக நோக்குவதைக் கண்ட ஜீவன் அவளைச் சற்றும் சட்டை செய்யாமல் “மாமா….” என்று அடிக்குரலில் செல்வத்தை அழைத்தான்.
“என்னம்மா ரொம்பத் தான் மிரட்டுற?, இன்னும் கல்யாணமே முடிவு பண்ணல, அதுக்குள்ள அவனை அதட்டுற?, உன்னை நம்பி எப்படிம்மா பையனைக் கொடுக்கிறது?"
“மாமா, கொஞ்ச நேரம் அமைதியா இருங்களேன்”
“உங்கப் பையன் தான் வேணும்னு இங்க யாரும் அழுதுட்டு கிடக்கல, சார், உங்களோட நான் ஒரு 10 நிமிஷம் பேசனும், கொஞ்சம் இப்டி வர்றீங்களா?” – ஜீவனை நேராக நோக்கி சட்டமாக அவள் கேட்ட விதம், அவனது அடி வயிற்றைப் பிசைய.. பேருந்தின் ஹார்ன் ஒலியில் ‘அப்பாடா தப்பித்தோம்’ என்றெண்ணிக் கொண்டு “பஸ் வந்துடுச்சு” என்று விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான்.
மேலும் வாசிக்க... கீழே உள்ள லிங்க்குகளைக் க்ளிக்கவும்!
