அத்தியாயம் - 2
டாலண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி, வில்லிவாக்கம்.
காலை, மணி 7.30.
இந்தியாவின் எதிர்கால விளையாட்டு வீரர்கள் பத்துப் பேர் பின் தொடர வியர்வை வழிய மைதானத்தில் ஓடிக் கொண்டிருந்தான் ஜீவன். அனைவருமே பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறார்கள். இடையிடையே அவர்களை நோக்கித் திரும்பி ஊக்குவிக்கும் வசனங்கள் சிலவற்றை உதிர்த்தபடி சீரான ஓட்டத்திலிருந்தான்.
ஓட்டம் முடிந்து மேலும் சில உடற்பயிற்சிகளையும் முடித்து மாணவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடி விட்டு எதிரேயிருந்த படிக்கட்டில் வந்தமர்ந்தான்.
அவனுக்கு நான்கடி தள்ளி அமர்ந்து அவனையே தயக்கத்துடன் நோக்கியபடி மடியிலிருந்த பையை இறுகப் பற்றியிருந்தாள் ஒரு சிறுமி. அவனுடைய மாணவி தான்! 8 to 9 பேட்சைச் சேர்ந்தவள்.
கையிலிருந்த பாட்டில் தண்ணீரை வாயில் ஊற்றிக் கொண்டவன் மைதானத்தை வெறித்தபடி ஏதோ யோசனையிலிருந்தான். பின் திடீரென… வினவினான்.
“என்ன வயசு உனக்கு?” – ஜீவன்
“ப..பதினாறு.”
“ஹ்ம்ம்” – உதட்டை வளைத்துப் பற்கள் தெரியாத அவனது ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்த்தபடி “என் வயசு என்னன்னு தெரியுமா?” என்று வினவினான்.
தெரியாது என்பது போல் தலையாட்டினாள் அவள்.
“40. கிட்டத்தட்ட உன் அப்பா வயசு.”
“பொய் சொல்றீங்க. என் அப்பாவுக்கு நிறைய வெள்ளை முடி இருக்கும்”
“நான் வாரத்துக்கு ஒரு முறை ‘ஹேர் டை’ பண்ணிப்பேன். அதனால தான் கருப்பா இருக்கு.”
முகத்தைச் சுருக்கியபடி மடியிலிருந்த பையின்-ஸ்ட்ராப்பைக் கசக்கினாள் அவள்.
“எனக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு இருக்கா. உன்னை விட 5 வயசு சின்னவ. உன்னைப் பார்த்தா.. அவ நியாபகம் தான் வருது எனக்கு.”
“…………….”
“நான் சொல்றது உனக்குப் புரியுதாம்மா?, நான் உனக்கு அப்பா மாதிரி. அப்பாவுக்கு எந்தப் பொண்ணாவது லவ் லெட்டர் கொடுப்பாளா? ம்?” – அவன் வினவியதும் அவள் முகம் அவமானத்தால் சிவந்து போனது.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்.. பின்..
“சினிமா நிறைய பார்ப்ப தான?”
“ம்ம், பார்ப்பேன்”.
“ரஜினிகாந்த், அதர்வா.. ரெண்டு பேர்ல யார் ரொம்ப அட்ராக்டிவ்வா இருக்கிறதா நினைக்கிற?”
சற்று யோசித்தவள் “அதர்வா” என்றாள்.
“ஏன் ரஜினியைப் பிடிக்காதா?”
“பிடிக்கும். ஆனா அவருக்குத் தான் வயசாயிடுச்சே! அதர்வா இஸ் யங் அண்ட் ஹேண்ட்சம்”
“ஹ்ம்ம், அதே லாஜிக்கை என் விஷயத்துல அப்ளை பண்ணு. நான் என்ன தான் விடாம எக்சர்சைஸ் பண்ணினாலும், இன்னும் 7,8 வருஷத்துல என் பேக்ஸ், பை-செப்ஸ் எல்லாம் காணாம போயிடும். நானே விரும்பாட்டியும்… என் முகத்துல சுருக்கம் விழும். ஹேர்-டை பண்ணிக்கிட்டாலும் நான் ஒரு தாத்தா-ன்றதை மறைக்க முடியாது. இன்னிக்கு என் வெளித் தோற்றத்தைப் பார்த்து அட்ராக்ட் ஆயிருக்க நீ.. அப்போ.. இவருக்கா லவ் லெட்டர் கொடுத்தோம்ன்னு வயித்தைப் பிடிச்சுக்கிட்டு விழுந்து விழுந்து சிரிப்ப.”
சற்று நிமிர்ந்து அவன் முகத்தை நோக்கினாள் அச்சிறுமி. புரிந்து விட்டது போலும்!
“அன்னிக்கு உன் வயசு அதர்வாக்கள் தான் உன் கண்ணுக்கு ஹேண்ட்சம்மா தெரிவாங்க. நான்-லாம் ரஜினிகாந்த் இடத்துக்குப் போயிடுவேன்!”
“சா…சாரி சார்”
“ப்ச், டோண்ட் சே தட்! இந்த வயசுல, எனக்கு மட்டும் இல்ல. யாருக்கு லவ் லெட்டர் கொடுத்தாலும்.. தப்பு தான்! நீ போடுற ட்ரெஸ், கால்ல மாட்டியிருக்கிற ஸ்போர்ட்ஸ் ஷூ,கையில கட்டியிருக்கிற வாட்ச்ன்னு உனக்கான அத்தனையையும் நீயே சுயமா சம்பாதிச்சு வாங்கிக்கிற வயசு வர்ற வரைக்கும், இதெல்லாம் தப்பு தான்! புரியுதா?”
மெல்லத் தலையாட்டினாள் அவள்.
“ஸ்போர்ட்ஸ்மேனுக்கு கான்சென்ட்ரேஷன் ரொம்பவும் முக்கியம். எதுலேயும் கவனத்தைச் சிதற விடக்கூடாது. போ”
தலையாட்டியபடி எழுந்து கொண்டவள் நன்றி கூறி விட்டு மைதானத்தில் இறங்கி ஓடினாள்.
அடுத்த இரண்டு பேட்ச் மாணவர்களின் ட்ரைனிங்கை முடித்து விட்டு ராஜாஜி நகரிலிருந்தத் தன் வீட்டை ஜீவன் அடைந்த போது மணி 10.30. குளித்து விட்டு ப்ரேக்ஃபாஸ்ட்டுடன் டைனிங் டேபிளில் அமர்ந்தவனின் அருகே வந்தாள் அதிதி.
“குட்மார்னிங் டார்லி” – ஜீவன்
“இது தான் ப்ரேக்ஃபாஸ்ட் டைமா ஜீனு?”
“இன்னிக்கு லேட் ஆயிடுச்சு. சாரி. உங்களுக்கு ஸ்கூல் லீவா? சொல்லவேயில்லையே?”
“நான் பங்க் பண்ணிட்டேன்”
“ஏன்?”
“ப்ச், அப்செட்டா இருக்கேன் ஜீனு.”
“ஹாஹாஹா, அப்செட்டா இருந்தா லீவ் போட்டுடுவீங்களா?, யார் உங்களுக்கு பர்மிஷன் கொடுத்தா?, சரி, ஏன் அப்செட்?”
கைகளைக் கட்டிக் கொண்டு புருவத்தைச் சுருக்கி, முகத்தைக் கொஞ்சம் தீவிரமாக்கிக் கொண்டாள் அதிதி. ஹாஹா! உருவத்தில் அப்படியே ஜீவனைப் போல் இவள்! ஆனால் செய்கைகள் மட்டும் அன்னையை ஒத்திருக்கும்!
“இது கொஞ்சம் சென்சிடிவ் சப்ஜக்ட் போல ஜீனு. யுவனி கிட்ட இதை நான் கேட்டப்போ, இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு பட்டுன்னு சொல்லிட்டா”
“ம்ஹ்ம்???”
“ம்ம்ம்” என்றவள் தொடர்ந்து “என் கூட படிக்கிற நிதிஷ் இருக்கான்ல?, அவன் என் கிட்ட ஐ லவ் யூன்னு சொன்னான் ஜீனு” என்றாள்.
சாண்ட்விச்சை மென்றபடி மகள் கூறியதைக் கேட்டவனுக்கு சிரிப்பு வந்தது.
“நீங்க பதிலுக்கு என்ன சொன்னீங்க?”
“நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி, அந்த விவேக் இல்ல, அவன்.. வயசுக்கு வராத இவ கிட்ட ஐ லவ் யூ சொல்லி என்னடா யூஸ்ன்னு கேட்டான். வ…வயசுக்கு வர்றதுன்னா என்ன ஜீனு??” – மிகுந்தத் தயக்கத்துடன் பதில் தெரிந்தே ஆக வேண்டுமென்கிற ஆர்வத்துடன் அவள் கேட்ட கேள்விக்கு… என்ன சொல்வதென்று ஒரு நிமிடம் யோசித்தான்.
‘இப்போ தான் ஒன்னை சமாளிச்சேன், இன்னொன்னா??, இந்த ஜெனரேஷன் பிள்ளைங்களுக்குப் பதில் சொல்லியே நாக்குத் தள்ளிடும் போலயே!’ – என்று உள்ளே தோன்றினாலும்.. தகப்பன் என்றதும் நான்கடித் தள்ளி நிற்கும் அந்த காலப் பெண் குழந்தைகளைப் போலல்லாது, இந்த வளர்ச்சி அவனுக்குப் பிடித்திருந்தது!
சாண்ட்விச்சைக் கீழே வைத்து விட்டு மகளை அள்ளி மடியில் அமர்த்திக் கொண்டவன் எதிரேயிருந்த அதிதியின் குழந்தைப் பருவ புகைப்படத்தைக் காட்டினான்.
“நீங்க குட்டிப் பாப்பாவா இருந்தப்போ, கை,கால் எல்லாம் குட்டியாயிருந்தது. இப்போ நீங்க 6-த் ஸ்டாண்டர்ட் படிக்கிற பெரிய பாப்பா ஆயிட்டதும், பாருங்க.. கை,கால் எல்லாம் நீளமாகி வளர்ந்துடுச்சு. இதுவே.. என் வயசு வரும் போது.. இன்னும் நீளமா வளர்ந்துடும். கை,கால் மாதிரி நம்ம உடம்புக்குள்ள இருக்கிற இன்னர் ஆர்கன்ஸூம் வளரும் இல்லையா?, அதைத் தான் வயசுக்கு வர்றதுன்னு சொல்றாங்க. கைண்ட் ஆஃப் ஃபிஸிகல் க்ரோத், உடல் வளர்ச்சி”
“அது.. பொண்ணுங்களுக்கு மட்டும் தான் நடக்குமா?”
“ஹ்ம்ம்,ஆமா”
“ஏன் அப்படி?”
“ஏன்னா… அந்த ஆர்கனை ஆண்டவன் பொண்ணுங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கான், சின்ஸ் யூ ஆர் சோ ப்ளெஸ்ட்”
“அப்போ, ஐ லவ் யூக்கும், இந்த ஃபிஸிகல் க்ரோத்துக்கும் என்ன சம்பந்தம் ஜீனு?? விவேக் ஏன் அப்படிச் சொன்னான்?”
டேய்… எவன் டா நீ! பிஞ்சுலயே பழுத்த ஞானப்பழம்! பெத்து விட்ருக்கானுங்க பாரு! – மனதுக்குள் அந்த விவேக்கை சபித்தவன்..
“இந்த க்வஸ்டினுக்கெல்லாம் ஆன்சர் தெரியனும்னா.. ஃபிஸிகல் க்ரோத்தோட சேர்த்து.. மெண்டல் க்ரோத்தும் ஆகனும் டார்லி. இப்போ நீங்க.. 3 இட்லி சாப்பிடுற அளவுக்குத் தான் வளர்ந்திருக்கீங்க. 5,6 இட்லி சாப்பிட ஆரம்பிக்கும் போது, இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சுடும் ஓகே??” – என்று அவன் புன்னகையுடன் பதில் கூறுகையில் அலைபேசி ஒலித்தது.
“ஹலோ…” - ஜீவன்
“நான் ரோஹினி பேசுறேன்”
“சொல்லுங்க”
“இந்த வாரம் சனிக்கிழமை ஆதிக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்கு. நீங்க போறீங்களா?, இல்ல, நான் போகட்டுமா?”
“ஏன்?, இரண்டு பேரும் சேர்ந்தே போகலாமே?”
“……………..” – கோபமாய் மூச்சு விடுகிறாள் போலும்! அவன் காது லேசாய் சூடாகியது.
“இல்ல, இரண்டு பேரையும் சேர்ந்து பார்த்தா.. ஆதி சந்தோசப்படுவான். அதான் சொன்னேன்”
“எனக்கு லீவ் இல்ல”
“ஓகே!, அப்போ நான் மட்டும் போறேன்”
“ஹ்ம்ம், அதிதி ஏன் இன்னிக்கு ஸ்கூலுக்குப் போகல?”
“அப்செட்டா இருக்கிறதா சொன்னா”
“இந்த வயசுல என்ன அப்செட் வேண்டிக் கிடக்கு?, அதுமட்டுமில்லாம, எனக்கு ஃபோன் பண்ணி வயசுக்கு வர்றதுன்னா என்னம்மான்னு கேள்வி கேட்டுட்டு இருக்கா?”
“உங்கக்கிட்டேயுமா?”
“ஏன்?, உங்கக் கிட்டேயும் கேட்டாளா?”
“ஆமாங்க, என்ன பதில் சொல்லட்டும்?”
“ஒன்னுமே சொல்ல வேண்டாம். எதையும் சொல்லி அவளைக் குழப்பிட்டு இருக்காதீங்க”
“சரிங்க”
“மணி 11 தான் ஆகுது. அவளை ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போங்க. ஏன் லேட்டுன்ன்னு மிஸ் கேட்டா…. ட்ராஃபிக்ன்னு பொய் சொல்லுங்க”
“ஜீனு… ஜீனு.. வேண்டாம் ஜீனு… ப்ளீஸ்.. நான் போகல.” – ஃபோனில் நடந்த உரையாடலை ஒட்டுக் கேட்ட அதிதி சைகையிலேயே கெஞ்ச.. ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பது போலத் தலையாட்டியவன்.. “சரிங்க. கூட்டிட்டுப் போறேன்” என்றான்.
“ம்ம்” என்றபடி அவள் ஃபோனைக் கட் செய்து விட.. அலைபேசியை பாக்கெட்டில் போட்டபடி “டார்லி, ஸ்கூலுக்குப் போகாம என்ன பண்றதா ஐடியா?, நாள் பூரா கார்ட்டூனா?” என்று வினவினான்.
“நான் உங்களோட காஃபே வர்றேன் ஜீனு.. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” – கண்களைச் சுருக்கி இரு கைகளையும் குவித்து அழகாய் அவள் கெஞ்சிய விதம், அவள் அன்னையை நினைவூட்ட.. சிரிப்புடன் குனிந்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் “நீங்க அப்படியே உங்க அம்மா மாதிரி கண்ணம்மா” என்றபடி.
ஆனால் அவள் ஸ்கூலுக்கு பங்க் அடித்து விட்டாள் என்பதை எப்படியோ மோப்பம் பிடித்த ரோஹினி நேராக காஃபே வந்தடைந்தாள்.
காஷ் கௌண்டரில் தந்தையுடன் அமர்ந்து செல்ஃபோனில் கேம் ஆடிக் கொண்டிருந்த அதிதி அன்னையைக் கண்டதும் விதிர்த்துப் போய் “ம்மா…” என்று எழுந்து நிற்க.. “வாங்க…” என்று வரவேற்றான் ஜீவன்.
வழக்கம் போல் வரமிளகாய் முகத்துடன் கைகளைக் கட்டிக் கொண்டு வெறித்தவளைக் கண்டு, பெட்டியில் அகப்பட்டுக் கொண்ட எலிக்குஞ்சுகளாய் இருவரும் செய்வதறியாது விழித்துக் கொண்டு நின்றனர்.
“அதிதி.. ஆதியைக் கூப்பிட்டு உள்ளே போ..” – ஆர்டர் போட்டவளிடம் மெல்லத் தலையசைத்தவள் தம்பியின் கையைப் பற்றியபடியே “ஜீனுவை ரொம்பத் திட்டாத ரோனி, நான் தான் ஸ்கூல் போ மாட்டேன்னு சொன்னேன்” என்று கூற.. அவள் முகத்திலிருந்த கலக்கத்தைக் கண்டு அருகே சென்ற ஜீவன்..
“முகத்தை ஏன் அப்படி வைச்சிருக்கீங்க?” என்று மூக்கைப் பிடித்து ஆட்டி “அம்மா என்னைத் திட்டுவாங்கன்னு உனக்கு யார் சொன்னா?” என்று வினவினான்.
“என்னையும்,ஆதியையும் திட்டும் போது ரோனி ஃபேஸ் இப்படித் தான் இருக்கும். அதான், உங்களையும் திட்டப் போறாளோன்னு……”
“நினைச்சியா??, அவங்க திட்டுறதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் கண்ணம்மா”
“நிஜமாவா??”
“ஆமாம், சொல்லிக் கொடுங்க. அவங்களுக்கு என் மேல இருக்கிற கொஞ்ச,நஞ்ச பயமும் போகட்டும்” – ரோஹினி
“குழந்தைங்க ஏன்-ங்க நம்மளப் பார்த்து பயப்படனும்?”
“செல்லம் கொடுக்கத் தான் நீங்க இருக்கீங்களே!, நானும் கொஞ்சுனா.. தறுதலையாத் தான் வளருவாங்க”
“ஷ்ஷ், பார்த்துப் பேசுங்க ப்ளீஸ், நீங்க உள்ளே போங்க கண்ணே” – என்று அனுப்பி வைத்தவன் ரோஹினியின் புறம் திரும்பினான்.
“என்னங்க பிரச்சனை உங்களுக்கு?, ஒரு நாள் ஸ்கூல் போகாததால என்ன பெருசா ஆயிடப் போகுது?”
“ஒரு நாளா?, வாரத்துல ஒரு நாள் அவ லீவ் போடுறதா மிஸ் கம்ப்ளைண்ட் பண்றாங்க”
“இல்லியேங்க, இந்த மாசம் எல்லா நாளும் ஸ்கூல் போய்ட்டா. அ..அது.. அப்பப்போ காலைல நல்லா தூங்கிட்றா. எழுப்புறதுக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அதான்ன்ன்ன்ன்…”
“இதெல்லாம் ஒரு ரீசனா?”
“பின்ன இல்லையா?”
“உங்களோட பேசுனா.. எனக்குத் தலைவலி தான் மிஞ்சும்” – ஒரு கையால் நெற்றியை அழுத்தியபடிக் குனிந்தவளைக் கண்டுச் சிரித்து “மகேஷ்… சூடா ஒரு காஃபி… சர்க்கரை தூக்கலா….”என்று குரல் கொடுத்தான்.
அவன் சிரிப்பும்,செய்கையும் அவளை வெறுப்பேற்ற.. “உங்களால அதிதியை ஒழுங்கா வளர்க்க முடியலன்னா.. தயவு செஞ்சு என் கிட்டக் கொடுத்துடுங்க ஜீவன்.” என்றாள்.
அதுவரை இருந்த சிரிப்பு மறைந்து.. தாடை இறுகி.. கைகள் விறைப்புற்று.. அவன் கண்கள் எங்கோ நோக்கிய விதம்… இந்தப் பேச்சு அவனுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதை பறைசாற்ற ஒரு நொடி அமைதியாய் நின்றவன்.. நிமிர்ந்து அவளை நோக்கினான்.
“இந்த மாதிரி என்னைக் காயப்படுத்தும் போது உங்க கோபம் கொஞ்சமாச்சும் குறையுதாங்க??”
உள்ளே கனன்று கொண்டிருக்கும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாய் அவன் கேள்வி கேட்ட விதத்தில் தடுமாறி.. எப்போதும் போல.. அவன் பொறுமையை எண்ணி வியப்புற்று.. தலை குனிந்தபடி.. கூறினாள்.
“சாரி..”
“இதுக்கு நான் என்னங்க பதில் சொல்லட்டும்?”
“ஆதி இன்னிக்கு நைட் உங்களோட இருக்கட்டும். நான் ஒரு காம்படிஷனுக்காக வெளியூர் போறேன்”
“சரிங்க”
“அப்போ நான், குழந்தைங்கக் கிட்ட சொல்லிட்டுக் கிளம்புறேன்” – நகரப் பார்த்தவளிடம்..
“ஒரு நிமிஷம்.. எ..எந்த ஊருக்குப் போறீங்கன்னு நான் கேட்கலாமா?”
“எங்க போறோம்,வர்றோம்ன்றதை ஷேர் பண்ணிக்கிற அளவுக்கு நமக்குள்ள எதுவுமில்லன்னு கோர்ட் சொன்னதை மறந்துட்டீங்களா?”
“கோர்ட்டைக் கேட்டுக்கிட்டாக் குழந்தை பெத்துக்கிட்டோம்?”
“அநாவசியமா பேசாதீங்க”
“அம்மா எங்கன்னு குழந்தைங்க கேட்டா, பதில் சொல்றதுக்குத் தான் கேட்குறேன். ப்ளீஸ்.. சொல்லுங்க”
“பொள்ளாச்சி”
“எத்தனை நாள் கழிச்சு வருவீங்க?”
“நாளைக்கு நைட் ரிடர்ன். ஆதியோட அயர்ன் டானிக் பேக்ல வைச்சிருக்கேன். மார்னிங் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு அப்புறம் கொடுங்க, நைட் பாலோட சேர்த்து டேட்ஸ் கொடுக்க மறந்துடாதீங்க.”
அவள் கூறிய அனைத்திற்கும் “சரிங்க,சரிங்க” என்று தலையாட்டியவனைக் கண்டு எரிச்சல் வர.. “என்ன நக்கல் பண்றீங்களா?” என்று கடுகடுத்தாள்.
“இல்லங்க, நீங்க சொல்றதைத் தவறாம செய்றேன்னு சொல்றேன்.”
“அதான் பார்த்தேனே! அதிதியை இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பாம பங்க் பண்ண வைச்சதுலேயே”
“அதைத் தவிர நீங்க சொல்ற எல்லாத்துக்குமே சரின்னு தான தலையாட்டிட்டு இருக்கேன்?” – அவன் பார்வை தீவிரமாவதை உணர்ந்து பதில் கூறாமல் நகர்ந்தவளை மீண்டும் தடுத்தவன்..
“இந்த 5 வருஷத்துல எதுவுமே மாறலையாங்க?” – என்று வினவினான்.
அவன் மீதிருந்தப் பார்வையைத் திருப்பி தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்தக் குழந்தைகள் மீது பதித்தவள் “என்ன மாறனும்?” என்றாள்.
“என் மேல இருந்த கோபம், என்னைப் பற்றின அபிப்ராயம்”
“……………”
“ஆனா, எனக்கு ஒரு விஷயம் அப்பவும்,இப்பவும் மாறவே இல்லங்க.”
“????”
“உங்க மேல எனக்கு இருக்கிற காதல்,அக்கறை,பாசம்”
மீண்டும் முன் நெற்றியை அழுந்தப் பற்றியவள் “நான் கிளம்புறேன்” என்றபடிக் குழந்தைகளை நோக்கிச் சென்றாள்.
ரோஹினி கூறியிருந்தபடி அந்த வாரக் கடைசியில் ஆதியின் பேரண்ட்ஸ் மீட்டிங்கிற்குச் செல்ல.. கே.கே.நகரிலிருந்த ரோஹினியின் வீட்டை வந்தடைந்தான் ஜீவன்.
இருபுறம் சிறிய லானைக் கொண்டத் தனி வீடு அது. வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு அணிந்திருந்தக் கண்ணாடியைக் கழட்டியபடி அவன் இறங்க முற்படுகையில், வீட்டுக் கதவைப் பூட்டி விட்டு ஆதியுடன் வெளியே வந்தாள் ரோஹினி.
கருப்பு நிறத்தில் பெரிய பெரிய பொம்மை டிசைனுடன் கூடிய முழுநீள காட்டன் கவுன் அணிந்திருந்தாள். நீளக் கூந்தல், பூரான் ஜடையாக (Fish Tail :P) மாறி இடது தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. கண்களில் பட்டையாய் மை தீட்டியிருந்தாள். சின்னக் கருப்புப் பொட்டு. காதுகளில் சில்வர் நிறத்தில் நீள ஜிமிக்கி! காட் டாமிட்! 40 வயது ஆணால், ஒரு பெண்ணை இந்த அளவிற்கு சைட் அடிக்க முடியுமா?, தெரியவில்லை!
தீவிரமாய்த் தன் முகத்தையே நோக்குபவனின் பார்வையை, ‘பழகி விட்டது’ என்பது போல் அலட்சியம் செய்தபடிக் கைப் பையைத் திறந்து சாவியை உள்ளே வைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
ஜீவனைக் கண்டதும் “ஜீனு..” என்றபடி ஓடி வந்த மகனை வாரி இரண்டு முறை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துச் சிரிப்புக் காட்டி.. தோளில் நிறுத்தினான் அவன்.
வழக்கம் போல் அவனது செய்கையில் முகம் மலர்ந்து.. “பார்த்து.. மெல்ல.. மெல்ல” என்றவள் “ஏன் பைக்ல வந்திருக்கீங்க?” என்று வினவினாள்.
“போன வாரமே ஆதி பைக்ல போகனும்னு சொல்லிட்டிருந்தான். அதான்”
“சரி, அப்போ நான் கிளம்புறேன். குட்டிக் கண்ணா.. நீ அப்பாவோட பைக்ல டுர்ர்ர் போ, அம்மா ஈவ்னிங் உன்னை பிக்-அப் பண்ணிக்கிறேன்” என்றதும் “ரோனி, என்னோட ஸ்கூலுக்கு வரலையா?” என்றான் அவன்.
“இல்ல ஜூனியர், அம்மாவுக்கு இன்னிக்கு லீவ் இல்லையாம்” -ஜீவன்
“நீயும் வருவேன்னு தான சொன்ன?, நீ வராட்டி, நான் போ மாட்டேன்” – உதடு அழுகையில் பிதுங்க கண்களில் ஊற ஆரம்பித்தக் கண்ணீருடன் ஜீவனின் தோளிலிருந்துக் காலை உதைத்துக் கீழிறங்கினான் ஆதித்யன்.
“கண்ணா, இங்க பாரு, அழக்கூடாது. அம்மா இன்னிக்கு லீவ் போட்டா, என்னோட மிஸ் அம்மாவை அடிப்பாங்க, ப்ளீஸ் டா, ப்ளீஸ்.. இங்க பாரு.. உனக்கு சாக்கோ-பை வேணுமா, பாப்சிகில் வேணுமா?, சொல்லு,” – ஏதேதோ சமாதானம் கூறியபடி அவனைத் தேற்ற நினைத்தவளின் முயற்சிகளை ஓரம் கட்டியவன் வாசலில் குப்புறப் படுத்துத் தரையில் தலையை முட்டியபடி பெரிதாய் அழத் தொடங்கினான்.
இவனைச் சமாதானப்படுத்துவதும் இமயமலைப் பனியில் வெறும் காலால் நடப்பதும் ஒன்று தான்! அவன் நினைத்ததைச் சாதிக்கும் வரை அழுகையை நிறுத்த மாட்டான். அதிதிக்கு அப்படியே நேர் எதிர்! சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அவனது அன்னையைப் போல்! ஒன்றும் பேசாமல் ‘நீயே சமாளி’ என்று விட்டு ஜீவன் ஒதுங்கி நின்று கொண்டான்.
“சட்டை, சட்டை அழுக்காகப் போகுது ஆதி, எந்திரிக்கிறியா, அம்மா அடிக்கவா?” – கோபத்துடன் ஆதியைத் தூக்கி நிறுத்தியவள் “இப்படித் தான் வேடிக்கை பார்த்துட்டு நிற்பீங்களா?” என்று அவனையும் சாடினாள்.
இப்போது அவன் பெருங்குரலெடுத்து உச்சஸ்தாதியில் கத்த.. “இப்போ அழுகையை நிறுத்தப் போறியா இல்லையாடா?” என்று அதட்டியவள் வாயிலேயே ஒரு போடு போட.. “வேணாம்,வேணாம், அடிக்காதீங்க” என அவள் கையைப் பற்றியவன் மகனைத் தன்புறம் இழுத்துக் கொண்டான்.
“ஜூனியர்க்காகத் தான் இன்னிக்கு நான் பைக்ல வந்தேன், ஃபாஸ்ட்டா,ஜாலியா ஒரு ரைட் போகலாமா??, ம்?, அப்படியே ஐஸ்க்ரீம்? மேங்கோவா சாக்லேட்டா?, என்ன ஃப்ளேவர் வேணும் உங்களுக்கு?” – ஜீவன் கூறியதையும் அசட்டை செய்தவன் அவன் தோளிலிருந்துத் தொங்கி “ரோனினினினினி…” என்றபடி அவளின் கைப்பையைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தான்.
“அவன் கேட்க மாட்டாங்க. கிளம்புற நேரத்துல ஏன் பிரச்சனை?, பேசாம, எங்களோட வாங்களேன்.”-ஜீவன்
“ப்ச் இருங்க, நான் ஃபோன் பண்ணி பர்மிஷன் சொல்லிட்டு வர்றேன்” என்றவள் கைப்பேசியுடன் நகர்ந்து உரையாடி விட்டு வந்தாள்.
“நானும் வர்றேன் டா. போதுமா?, அழுகையை நிறுத்து”-ரோஹினி
ஆள்காட்டி விரலை வாயில் வைத்தபடி ஜீவனை நோக்கியவன் ‘ஈஈஈஈஈ’-யெனச் சிரித்து அவன் சட்டையிலேயே முகத்தைத் துடைத்துக் கொள்ள.. மகனின் செய்கையில் வாய் விட்டுச் சிரித்தபடி முன்னே நடந்தான் ஜீவன்.
“நீங்க 2 பேரும் பைக்ல போங்க, நான் ஆட்டோல வர்றேன்” - ரோஹினி
“என்ன?, இப்போ நீங்க ஆரம்பிக்கிறீங்களா?, ஏற்கனவே லேட். பேசாம பைக்ல ஏறுங்க ப்ளீஸ்”
மேலே எதுவும் கூறாமல் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆதியை முன்னே அமர்த்திக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்தவனிடம் “இவனோட ஸ்கூலுக்கு வர்றதா இருந்தா, வேற டிரெஸ் போட்டிருப்பேன் , ப்ச்” என்று புலம்பினாள்.
“இதுவே நல்லா தாங்க இருக்கு. என்ன,கையைத் தான் கொஞ்சம் எலி தின்னுடுச்சு போல! இ..இல்லங்க.. இது தான் ஃபேஷன்னு புரியுது எனக்கு. இருந்தாலும்ம்ம்ம்” – தோள்பட்டையை ஒட்டி வட்டமாகத் திறந்து விடப்பட்டு முட்டி வரை நீண்டிருந்த கை டிசைனைக் கேலி செய்தான் அவன்.
அமைதியாய் சாலையை வெறித்துக் கொண்டிருந்தவளை ரியர்வ்யூ மிர்ரரில் நோக்கியவன் “ஏன்?, சனிக்கிழமை கூட வேலைக்குப் போறீங்க” என்று வினவினான்.
ப்ரைவேட் இன்ஸ்டிடியூஷன் ஒன்றில் டிராயிங் டீச்சராகப் பணியாற்றும் ரோஹினி “அடுத்த வாரம் ஸ்டேட் லெவல் டிராயிங் காம்படிஷன் இருக்கு. அதான் வீக்-எண்ட் கூட பசங்க ப்ராக்டிஸ் பண்ணிட்டிருக்காங்க” என்றாள். அதன் பின்பு சாலையில் கவனம் செலுத்தியவன், ஆதியின் பள்ளியைச் சென்றடைந்தான்.
ஆதித்யனின் வகுப்பு ஆசிரியை முன்பு கலவர முகத்துடன் அமர்ந்திருந்தனர் இருவரும்.
“ரொம்ப சேட்டை சார் உங்க பையன், எப்பப் பாரு யாரையாவது அடிக்கிறதையே வேலையா வைச்சிருக்கான். க்ளாஸ்ல உட்கார்றதே கிடையாது, பக்கத்துல இருக்கிறவனையும் பேசியே கெடுக்கிறான்” – செய்தித்தாள் இல்லாமலேயே வாசித்துக் கொண்டு சென்ற ஆசிரியையைக் கண்டு ரோஹினி பல்லைக் கடித்தாள் என்றால், ஜீவன் அசடு வழியச் சிரித்து வைத்தான்.
“சின்னப் பையன் கொஞ்சம் துறுதுறுன்னு இருக்கிறது சகஜம் தான மேடம்?” – ஜீவன்
“இது கொஞ்சமா சார்?”
“அவன் சேட்டை மட்டும் தான் பண்ற மாதிரி, வெறும் கம்ப்ளைண்ட்டா சொல்றீங்க?, ரைம்ஸ்ல இருந்து ஏபிசிடி,1,2,3ன்னு எல்லாம் எவ்ளோ அழகா சொல்றான், எழுதுறான்?, அதையெல்லாம் விட்டுட்டீங்க?” – கோபமாய் ரோஹினி
“நல்லா படிச்சா மட்டும் போதுமாங்க?”
“பின்ன? வேறென்ன வேணும் உங்களுக்கு?”
“ரோஹினி….”-முணுமுணுத்தபடி அவள் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான் ஜீவன்.
“நீங்க சும்மா இருங்க, எப்போ பாரு இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு, குவார்ட்டர்லி ஒன்ஸ் பேரண்ட்ஸ் மீட்டிங் வைக்கிறாங்க, வரும் போதெல்லாம் இதை மட்டும் தான் சொல்றாங்க.”
“அப்படி இல்ல மேடம்”-பரிதாப முகத்துடன் மிஸ்.
“இருக்கட்டும், அடுத்த வருஷம் என் பையனை வேற ஸ்கூல்ல சேர்த்துக்கிறேன். இந்த உலகத்துல நீங்க மட்டும் தான் ஸ்கூல் நடத்துறீங்களா என்ன?”
“என்ன சார்?,இப்படிப் பேசுறாங்க?”- ஜீவனைத் துணைக்கு அழைத்தாள் அந்த டீச்சர்.
“சாரி மேம், பையனைப் பத்தி சொன்னதும் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாங்க. தப்பா நினைக்காதீங்க. வேற எதுவும் சஜஷன் இருக்கா?”
“இல்ல சார்,இல்லவே இல்ல. இருந்தாலும்,சத்தியமா சொல்ல மாட்டேன்”- ஈஈஈ-யெனப் பல்லைக் காட்டிச் சிரித்து அடுத்த பெற்றோர் புறம் திரும்பி விட்டாள் அந்த டீச்சர்.
முறைத்தபடியே அருகே நடந்து வந்தவளைக் கண்டு சிரிப்பு தாங்கவில்லை ஜீவனுக்கு.
“என்ன சிரிப்பு?”-ரோஹினி.
“அந்த மிஸ் என்ன ஜீவன் ஏகலைவனா??,நீங்க என்னத் திட்டுனாலும் அமைதியா இருக்குறதுக்கு?, ஏன் அந்தக் கிழி கிழிக்கிறீங்க?”
பதில் பேசாமல் முறைத்தாள் அவள்.
“இல்லங்க, கொஞ்சம் பொறுமையா பேசலாம் இல்லையா?”
“ரொம்ப அநாகரீகமா நடந்துக்கிட்டேனோ??” – வலது காதின் கீழ் லேசாய்ச் சொறிந்தபடி மூக்கைச் சுருக்கி அவள் வினவிய விதம், ரசிக்கத் தூண்ட..
“சமயத்துல உங்களுக்கும் ஆதிக்கும் எனக்குப் பெருசா வித்தியாசம் தெரியறதே இல்லங்க” – என்றான்.
“ப்ச்,”-என்று நொடித்தபடிச் சிரிப்புடன் தலை குனிந்தவள், பின் அப்படிச் சிரித்ததற்காகத் தன்னையே நொந்துகொண்டு… முகத்தை உம்மென்றாக்கி விறைப்பாக நிமிர்ந்து “நான் கிளம்பனும்” என்றாள்.
பதில் சொல்லாமல் சரியெனத் தலையாட்டியவன் அவள் மீதானத் தன் ரசனை மிகுந்தப் பார்வையை மாற்றிக் கொள்ளவேயில்லை.
அவனருகே நெருங்கி, அவன் தோளில் தலை சாய்த்து உறங்கி விட்டக் குழந்தையின் தலையைக் கோதியவள் “இவனை எப்படி அழைச்சிட்டுப் போவீங்க?,இப்படித் தூங்குறான்?”என்று வினவினாள்.
இப்போதும் அவன் தன் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை. பதில் வரவில்லையென்றதும் அவனை நோக்கியவளையும், அந்தப் பார்வை பாதித்திருக்க வேண்டும்.
அத்தனை அருகில் நிற்பதைக் கூட மறந்து, அந்தப் பார்வையில் கட்டுண்டிருந்தாள். ஒரு நொடிக் கருமணிகளை இடதுபுறம் அசைத்து விட்டு மீண்டும் அவள் மீது நிறுத்தியவன் “ம்க்கும்” என்றான்.
அதில் தன்னை சுதாரித்துக் கொண்டவள், குனிந்து கைப்பையை நோக்கினாள், கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்ததோ என்னவோ! திடீரென அவன்…
“இந்த வயசுல கூட நான் ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கிறதா, என் ஃப்ரண்ட்ஸ் சொல்றாங்க!, பாருங்க,தொந்தி,தொப்பை,ஏன் அநாவசியமா ஒரு சதை கூட கிடையாது எனக்கு!”
“ப்ச்,ஒரு ஃபிட்னெஸ் ட்ரைனர் தொப்பை இல்லாம இருக்கிறதுல என்ன பெருமை?, எதுக்கு இப்போ இந்த பீத்தல்?”
“இல்லங்க, என்னைப் பார்க்கும் போது உங்க பார்வையில ஒரு சின்ன ஆர்வம் கூட இல்லயே! அதான் கேட்டேன்.”
“……………”
“உங்களுக்கு என் மேல எந்தவிதமான செக்ஸூவல் அட்ராக்ஷனும் வரலீங்களா?”
இதை அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை போலும்!, கடுப்புடன் நெற்றியைச் சொறிந்தாள். அவன் தொடர்ந்து பேசினான்.
“ஆனா.. எனக்கு உங்களைப் பார்க்கும் போது, நிறைய தோணுதுங்க. எஸ்பெஷலி, இந்த மாதிரி அழகா டிரெஸ் பண்றப்போ!,”
“லூசு மாதிரி உளர்றான் பாரு,”-பல்லைக் கடித்தபடி முணுமுணுத்தவள் கையை வீசி முன்னே நடக்கத் தொடங்கியிருந்தாள்.
ஓடாத குறையாக அவள் பின்னே சென்றவன் “லேடீஸ்க்குத் தான்ங்க மெனோபாஸோட இந்த மாதிரி பீலிங்க்ஸ் எல்லாம் மறைஞ்சு போயிடும், ஆனா எங்களுக்கு அப்படியில்ல. 40-வயசுல செக்ஸூவல் ஃபீலிங்கை கண்ட்ரோல் பண்ணிக்கிறது பெரிய விஷயமில்ல தான், ஆனா.. நான் ஏன்-ங்க கண்ட்ரோல் பண்ணிக்கனும்?” என்றான். இவன் விட மாட்டான் போலயே!
“சரி, பண்ணிக்காதீங்க. இதுக்கு நான் என்னசெய்யனும்?”
“என் குழந்தைகளோட அம்மா நீங்க. என்ன செய்றதுன்னு என் கிட்ட கேட்குறீங்க?”
“உங்க குழந்தைகளோட அம்மா மட்டும் தான் நான்-ன்னு நீங்களே சொல்லிட்டீங்க!, அப்புறம் என்ன?”
“சரி, என் பொண்டாட்டி நீங்க. ஈகோவை விட்டு நான் ஒத்துக்கிட்டேன்”
“நீ எனக்குத் தேவையில்லன்னு டிவர்ஸ் கொடுத்துட்டு, இப்போ வந்து பொண்டாட்டின்றீங்க?”
“டிவர்ஸ் கேட்டது நீங்க தான். நான் இல்ல”
“நீங்களும் கையெழுத்துப் போட்டீங்க தான?”
“நீங்கக் கேட்டு எந்த விசயத்தையாவது நான் மறுத்திருக்கேனா?”
“ஓ!,அப்படியா?, அப்போ இதையும் கேட்டுக்கோங்க. இனிமே இந்த மாதிரி பேசி என்னை முகம் சுளிக்க வைக்காதீங்க. உங்களுக்கு எப்படியோ தெரியல, எனக்கு ரொம்ப அருவருப்பா இருக்கு” – என்றவள் முகம் கன்ற,வேதனையைத் தேக்கிய விழிகளுடன் தன்னையே நோக்குபவனை முறைத்து விட்டு விடுவிடுவென நடந்து விட்டாள்.
-ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்!, ச்ச, முப்பதோ,நாற்பதோ! யங்க்ஸ்டரோ,அங்கிளோ! இந்தப் ஆம்பளைங்களுக்குப் பிரச்சனையே பொம்பளைங்க தான்! இந்த ரோஹினி சண்டிராணியா இருப்பா போலவே!, இந்த மனுஷன் ஏன் அநியாயத்துக்கு பொறுமைசாலியா இருக்கார்??, வாய் விட்டுப் புலம்பிய எனக்கு, லேசாகப் பசிப்பது போல் தோன்ற.. ஃப்ரிட்ஜிலிருந்த பீட்சாவை அவனில் வைத்து சூடு படுத்திக் கொண்டு வந்து மீண்டும் ஃபேஸ்புக்கைத் திறந்தேன்!
