அத்தியாயம் - 9
“ஒவ்வொன்றாய் திருடுகிறாய்.. திருடுகிறாய்..
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்……
முதலில் என் கண்களை, இரண்டாவது இதயத்தை…
மூன்றாவது……………… முத்தத்தை………….!!!”
- ஸ்டேட்டஸை வாசித்த எனக்குப் புல்லரித்தது. சும்மா சொல்லக் கூடாது! மனுஷன் செம ரொமாண்டிக் பர்சன்! அவர் வயசுக்கு லேட்டஸ்ட் சாங்ஸை எல்லாம், ரசிக்கிறார்! வெர்ரி குட்! இத்தனை நாளா.. ஆண்ட்டி மட்டும் தான் முறைச்சிட்டு இருந்துச்சு! இப்போ அங்கிளும் கோபப்படுறார்! என்ன தான் நடக்குது இங்க?
“ஜீனு.. நான் யுவனி வீட்டுக்குப் போறேன்” – ஸ்கூல் பேக்குடன் வந்து ஜீவனின் முன்னே நின்றாள் அதிதி.
“தனியா எப்படிப் போவீங்க?, நான் வந்து ட்ராப் பண்றேன்”
“அடுத்தத் தெரு தான் டாடி, நான் போய்ப்பேன்”
“ம்ம், உங்கம்மாக்கிட்ட சொல்லிட்டீங்களா?, இதுக்கும் என்னைத் திட்டப் போறாங்க”
“சொல்லிட்டேன் ஜீனு” – என்றவள் ‘பாய்’ எனக் கூறி ஓடி விட்டாள்.
தலையைப் பற்றியபடி சோஃபாவில் அமர்ந்திருந்தவனுக்கு இன்னமும் முகம் மாறிய பாடில்லை! கோபம்,அவமானம்,இயலாமை என அனைத்து உணர்வுகளும் நொடிக்கொரு தரம் அவன் கண்ணில் வந்து போய்க் கொண்டிருந்தது.
அவளாக மாறி வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தச் சண்டை அவசியம் தானா?, கொஞ்சம் அவள் சிரித்துப் பேச ஆரம்பித்ததும் ரொம்பவும் உரிமை கொண்டாடி, அருகே நெருங்கியது குற்றமோ?, இத்தனைக்கும் அவள் யாரோ அல்ல! அவனது சொந்தப் பொண்டாட்டி! அவன் பிள்ளைகளுக்குத் தாய்!
ப்ச், அவள் மீது தவறே இல்லையா என்ன?, எத்தனை நாட்கள் அவளுக்காக மான,ரோஷத்தைக் கை விட்டு அடி மட்டத்துக்கு இறங்கி நின்றிருக்கிறான்?, அவன் தான் புத்தி கெட்டுப் போய் உணர்ச்சி வேகத்தில் ஏதோ செய்து விட்டான், விலகலைக் கூடப் பொறுமையாய் புரிய வைக்க முடியாதா அவளுக்கு?, கட்டியக் கணவனை விலக்கித் தள்ளும் முதல் பொண்டாட்டி இவளாகத் தான் இருக்க முடியும்! ராட்சசி!
தவறு தன் மீது தான் என்று அடித்துக் கொள்ளும் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடித்து அவளுக்கு அலைபேச.. அவனது கைகள் துறுதுறுத்தது. ஆனாலும், அடக்கிக் கொண்டான்! மன்னிப்புக் கேட்டு விட்டு.. மீண்டும் அனைத்தையும் முதலில் இருந்துத் தொடங்க வேண்டுமா?, சலிப்பாக இருந்தது அவனுக்கு! இந்த ஜென்மத்தில் அவளோடு சேர்ந்து வாழும் பிராப்தமே அவனுக்கு இல்லை போலும்! தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தவனை, மேலும் கவலைக்குள்ளாக்கவென்றே ஃபோன் செய்தார் கெடாமீசை.
“ஹலோ.. மாப்ள”
“சொல்லுங்க மாமா, எப்படியிருக்கீங்க?, அத்தை எப்படியிருக்காங்க?”
“எங்களுக்கென்ன மாப்ள?, நல்லாயிருக்கோம். அங்க… உ…உங்களுக்கும்,ரோஹினிக்கும் பிரச்சனை எதுவுமில்லையே?”
‘என்ன உளறி வைத்திருக்கிறாளோ இந்த அடங்காப்பிடாரி!’
பல்லைக் கடித்தபடி “அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே மாமா” என்றான்.
“இல்ல, ஃபோன்ல பேசும் போது ரோஹினி குரலே சரியில்ல. உங்களைப் பத்திப் பேசும் போதும், சரியா பதில் சொல்லல. எல்லாம் சுமூகமாகப் போயிட்டிருக்கிறதா.. நாங்க எல்லாரும் சந்தோசப்பட்டுட்டிருக்கோம் மாப்ள, இன்னொரு முறை புதுப் பிரச்சனை எதையும் தாங்கிக்கிற சக்தி எங்களுக்கில்ல” – தளுதளுத்தக் குரலில் கூறியவரிடம் “அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மாமா” எனப் பேசிச் சமாதானம் செய்து ஃபோனைக் கட் செய்தவனுக்கு, மட்டுப்பட்டிருந்தக் கோபம் மீண்டும் தலைக்கேறியது.
என்னவோ சேர்ந்து வாழத் திட்டமிட்டிருப்பவள் போன்றுத் தேவையில்லாமல் அவனோடு நெல்லை சென்று, பெரியவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டி விட்டு இன்று இப்படி நடந்து கொண்டு, அவர்களையும் வருத்துகிறாள்! திமிர்பிடித்தவள்!
மிகச் சரியாக அந்த நேரம் ‘கால்’ செய்தாள் ரோஹினி. எரிச்சலுடன் பட்டெனக் கட் செய்தான். ஆனால் அவள் மீண்டும் அழைத்தாள்.
“ஹலோ..” – கோபமாய் ஒலித்தது அவன் குரல்.
“எதுக்குக் கட் பண்றீங்க?” - ரோஹினி
“……………”
“ஆதியை அழைச்சிட்டு வந்துட்டீங்களா?”
“ம்”
“என்னப் பண்ணிட்டிருக்கான்?”
“தூங்குறான்”
“ஓ!, சரி, அவன் எழுந்ததும் கூப்பிட்றேன்” – கட் செய்து விட்டிருந்தாள் அவள்.
அவள் கூறுவதை மட்டும் அவன் கேட்க வேண்டும்!, அவனிடமிருந்துப் பதில் எதையும் எதிர்பார்க்க மாட்டாள்! அழுத்தம்,அழுத்தம் மகா அழுத்தம்! ஒரு மன்னிப்போ, குற்ற உணர்ச்சியோ எதுவுமில்லை! எரிச்சலுடன் அவளுக்கு மீண்டும் அழைத்தான்.
“ஹலோ…” – ரோஹினி
“உங்கப்பாக்கிட்ட என்னங்க சொன்னீங்க?”
“எதைப் பத்தி?, என்னக் கேட்குறீங்க நீங்க?”
“நமக்குள்ளப் பிரச்சனைன்னு சொன்னீங்களா?, அவர் எனக்கு ஃபோன் பண்ணி மறுபடியும் எதையும் எங்களாலத் தாங்க முடியாதுன்னு ஃபீல் பண்ணிப் பேசுறார்”
“நீங்க ஃபோனை வைங்க, நான் எங்கப்பாக்கிட்ட பேசிக்கிறேன்”
எரிச்சலுடன் கண் மூடித் திறந்தவன் “அதுக்கு முன்னாடி, உங்கக்கிட்ட இத்தனை வருசமா போராடிட்டு இருக்கிற என் கிட்டப் பேசுங்க, அப்புறமா உங்கப்பாட்டப் பேசலாம்” என்றான்.
“என்ன பேசனும்?”
“எப்படிங்க ஒன்னுமே நடக்காத மாதிரி காஷ்வலா இருக்கீங்க?, அம்னீஷியாவா உங்களுக்கு?, நேத்து நடந்த எதுவும் ஞாபகம் இல்ல?,”
“………………”
“சேர்ந்து வாழ யோசிக்கிறதா சொன்னப்போ, என்ன நினைச்சிருந்தீங்க நீங்க?, படத்துல வர்ற மாதிரி நான் உங்கப் பக்கத்துலயே வராம, தூரமா ஒதுங்கி நின்னு ஒரே வீட்ல வாழ்வேன்னா..??, நான் அவ்ளோ கண்ணியமான ஆள் இல்லங்க! என் கண்ணியத்தோட அளவு எப்பவோ முடிஞ்சு போச்சு! பக்கத்துல வந்தாலே விலகி ஓடுறீங்க?, அவமானப்படுத்துறீங்க? இத்தனை நாள் என்னைப் படுத்துனது போதாதா?, இன்னும் என்னல்லாம் சித்ரவதை பண்ணலாம்ன்னு ப்ளான் வைச்சிருக்கீங்க?”
ரோஹினி வழக்கம் போல, அவன் கூறிய மற்ற வசனங்கள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு கோபக் குரலில் “அப்படி சித்ரவதை பண்றவ கூட, சேர்ந்து வாழனும்னு ஏன் ஆசைப்படுறீங்க?” எனக் கூறி ஃபோனைக் கட் செய்திருந்தாள்.
தலையை அழுந்தக் கோதி அலைபேசியை சோஃபாவின் மீது எறிந்து விட்டு உள்ளே சென்று படுக்கையில் விழுந்தான் ஜீவன்.
“ஜீனு… ஜீனு….” என்று ஆதி அவன் கன்னம் தட்டும் வரை ஆழ்ந்த நித்திரையிலிருந்தவன் அதன் பின் எழுந்து அவன் தேவைகளைக் கவனித்தான்.
அவன் விளையாடத் தொடங்கியதும் வெளியே வந்தவன் டைனிங் டேபிளில் ஸ்கூல் பேக்கைக் கூடக் கழட்டாமல் நகம் கடித்தபடி ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்த அதிதியைக் கண்டு அருகே சென்றான்.
“டார்லி….” என்று அவள் தோளைத் தொட்டதும் “ம்” என்று நிமிர்ந்தவளிடம் என்னவென்று விசாரித்தான்.
பதில் கூறாமல் பேக்கைக் கழட்டி மடியில் வைத்தாள் அவள்.
“என்னாச்சுங்க?, ஏன் டல்லா இருக்கீங்க?”
கேட்கலாமா,வேண்டாமா என்றத் தயக்கத்துடன், தலையாட்டியபடி மீண்டும் நகம் கடித்தவள்.. பின் வினவினாள்.
“ஆர் யூ டிவர்ஸ்ட்??” - அதிதி
உள்ளே சுள்ளென்று எழுந்த சூடான உணர்வு, மகள் தங்களது நிலையைக் கண்டு கொண்டதில் எழுந்த பயம் தான் எனப் புரிந்து கொண்டவனுக்கு, தன்னையறியாமல்.. பார்வை, அவள் முகத்தைத் தவிர எங்கெங்கோ பயணித்தது.
ஏற்கனவே சரியில்லாத மனநிலையில் இருந்தவன், பொறுமையாய்ப் பதில் சொல்லும் நிலையில் இல்லை.
தந்தை மறுத்து எதுவும் கூறவில்லையென்றதும், நிமிர்ந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள்…
“யுவனி சொன்னது உ…உண்மை தானா ஜீனு??, நீயும்,ரோனியும் டிவர்ஸ் ஆனவங்களா??”
“………………….”
“அம்மா,அப்பாவும் வேற,வேற வீட்ல இருக்கிறதுக்குப் பேரு தான் டிவர்ஸ்ன்னு சொன்னா அவ. நீ…நீயும்,ரோனியும் வேற வேற வீட்ல தானே இருக்கீங்க??” – இப்போது அவள் கண்ணில் இனம் புரியாதக் கலக்கம் தோன்றியிருந்தது.
தொண்டையைச் செறுமிக் கொண்டு “அ..அப்படியெல்லாம் இல்லக் கண்ணம்மா” என்றவனின் குரலும் கம்மிப் போனது.
“அப்புறம் ஏன் வேற,வேற வீட்ல இருக்கீங்க?, அதுமட்டுமில்லாம, யுவனி அம்மா, அவளோட டாடிக்கு காஃபி,சாப்பாடுன்னு எல்லாம் செஞ்சு கொடுக்கிறாங்க. ரோனி ஒரு தடவைக் கூட உனக்கு அந்த மாதிரிக் கொடுத்து நான் பார்த்ததில்ல.”
“………”
“எக்ஸாக்ட்டா எனக்கு சொல்லத் தெரியல.. ஆனா… அவங்களுக்கும், உங்களுக்கும் ஏதோ வித்தியாசம் இருக்கு ஜீனு..”
“……………..”
“ஆதி ஸ்கூல் மாறினப்புறம், நாம எல்லாரும் ஒரே வீட்ல இருப்போம்ன்னு நான் சொன்னேன்! ஆனா.. டிவர்ஸ்ட் கப்பிள், அப்படியெல்லாம் சேர்ந்து இருக்க மாட்டாங்கன்னு அவ சொன்னா. உண்மையா டாடி??”
“…………”
“இந்த விசயத்தைப் புரிஞ்சுக்க, நான் 5,6 இட்லி சாப்பிடுற பெரிய பொண்ணா வளரனுமா?,”
“………….”
“நீங்க சொல்லாட்டி, நான் ஆத்தாவுக்குக் ‘கால்’ பண்ணிக் கேட்பேன். ஐ நீட் ஆன் ஆன்சர் ரைட்நவ்”
குழம்பிய மனநிலையுடன் என்ன பதில் சொல்வதென்ற யோசனையில் அமர்ந்திருந்த ஜீவனுக்கு, கையைக் கட்டிக் கொண்டுத் தன்னையே நோக்கும் மகளின் தோரணை ரொம்பவும் பயமுறுத்தியது.
“உண்மை தான். இல்ல டாடி??, நீங்க 2 பேரும் யுவனி அம்மா-அப்பா மாதிரி கிடையாது. ம்???”
-உதடு துடிக்க வினவியவளின் கண்களில் லேசாய்க் கண்ணீர் திரண்டிருந்தது. மகள் எதற்குமே இதுவரைக் கண்ணீர் விட்டதுக் கிடையாது. அவள் வயதிற்கு, அவள் ரொம்பவும் மெச்யூர்ட் என ஜீவன் அடிக்கடிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதிசய குணாதிசயம் கொண்டவள்! எதையும் எடுத்துச் சொன்னால்.. தன்னால் முடிந்த வரை புரிந்து கொண்டு, அநாவசியப் பிடிவாதம் ஏதுமின்றி வளர்ந்தவள்!
உயிர் உருக.. மகளின் கையைப் பற்றியவன்… அவள் தலையை வருடி “அப்படியெல்லாம் எதுவும் கிடையாதுங்க. நீங்களா எதையும் நினைச்சு யோசிச்சிட்டிருக்காதீங்க”- என்றான்.
அவன் குரலிலிருந்த வருத்தத்தை உணர்ந்து கொண்டாள் போலும்! எச்சில் விழுங்கிக் கண்ணீரை உள்ளே தள்ளியவள் மெல்லத் தலையாட்டியபடி அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து இறங்கினாள்.
பின் ஸ்கூல்பேக்கைத் திறந்து, ஸ்நாக்ஸ் பாக்ஸை எடுத்து, அதில் மீதமிருந்த ஆப்பிள் துண்டுகளை எடுத்துக் குப்பையில் கொட்டினாள். பின் டப்பாவைப் பாத்திரம் கழுவுமிடத்தில் போட்டு விட்டு வெளியே வந்து.. க்ளாசெட்டிலிருந்துத் தன் இரவு உடையை எடுத்துக் கொண்டு அறைக்குள் மறைந்தாள்.
மகளின் செய்கைகள் அத்தனையையும் வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவனுக்கு, இதயம் வலித்தது. இமைகளை அழுந்த மூடித் திறந்தவன்,கை முஷ்டியை இறுக்கினான். பின் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு முழு வேகத்தில் கே.கே.நகரை நோக்கிப் பறந்தான்.
அந்த இரவில்.. படபடவெனக் கதவுத் தட்டப்படும் ஓசையில் திடுக்கிட்டுக் கதவைத் திறந்த ரோஹினியை இடித்துத் தள்ளிக் கொண்டு அவள் வீட்டினுள் நுழைந்தான் ஜீவன்.
விறுவிறுவென உள்ளே வந்தவன்.. நேராக அவள் அறைக்குச் சென்றான்.
சுற்றிச் சுற்றிப் பார்த்து எதையோத் தேடியவன், பின் கட்டில் மீது ஏறி… அலமாரியின் மேலிருந்த பெரிய ‘பை’ ஒன்றை எடுத்து, அலமாரியைத் திறந்து.. கண்ணில் பட்ட அவள் துணிமணிகள் அத்தனையையும் அள்ளிப் பையில் திணித்தான்.
அவன் செய்யும் செயல்கள் அத்தனையையும் சுருக்கிய புருவங்களுடன் பார்த்துக் கொண்டிருந்த ரோஹினி… “என்ன செய்றீங்க நீங்க?” என்றாள்.
“உடனே நீ என்னோட கிளம்பு?” – பையின் ஜிப்பை இழுத்து மூடிக் கொண்டிருந்தான் அவன்.
ஒருமையில் அவன் அழைத்ததுமே யோசித்தவள் “குடிச்சிருக்கீங்களா?” என்று வினவினாள்.
நிமிர்ந்து அவளை நோக்கியவன் “ரொம்ப ரொம்பத் தெளிவா இருக்கேன்” எனக் கோபத்துடன் கூறினான்.
“பின்ன ஏன் இப்படிப் பைத்தியம் மாதிரி நடந்துக்கிறீங்க?, முதல்ல அந்த பேக்கைக் கீழ வைங்க”
“முடியாது” என்றவன் அவள் கையைப் பற்றித் தரதரவென இழுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.
“கையை விடுங்க ஜீவன், எங்கக் கூப்பிட்டுப் போறீங்க?” – விடாமல் கையை அவனிடமிருந்து உறுவியபடித் திமிறிக் கொண்டிருந்தாள் அவள்.
“நீயாவே மாறுவ, என்னோடு வந்து இருப்பன்னு நான் பொறுமையாக் காத்திட்டிருந்ததெல்லாம் போதும்!, எது நடந்துடக்கூடாதுன்னு பயந்துட்டிருந்தேனோ, அதுவே நடந்துடுச்சு… இனி உன் கிட்ட பொறுமையாப் போறது ரொம்பத் தப்பு”
வெடுக்கெனக் கையை உதறி ஒதுங்கி நின்றவள் “என்ன உளர்றீங்க?” என்றாள்.
பின் தலையை அழுந்தக் கோதியபடி மறுபுறம் திரும்பியவன், மீண்டும் அவள் புறம் திரும்பி “இன்னிக்கு என் பொண்ணு என்னைப் பார்த்துக் கேக்குறா, நீங்க டிவர்ஸ்ட்-ஆ டாடின்னு!, டிவர்ஸ்ன்னா என்னன்னு கேக்குற வயசுல இருக்கிற குழந்தைக்கிட்ட நான் என்னன்னு சொல்லிப் புரிய வைப்பேன். ம்??” என்று வினவினான்.
கோப முகம் மாறி.. விழிகள் விரிய அவனை நோக்கியவளின் தலைத் தானாகக் கவிழ்ந்து விட.. அவன் கண்களைப் பார்க்கும் சக்தியற்றுத் தரையை நோக்கினாள்.
“குழந்தைங்களுக்கு இதெல்லாம் புரிய ஆரம்பிக்கிறதுக்குள்ள நாம ஒன்னு சேர்ந்திடுவோம்ன்னு தான்டி நான் நினைச்சு வைச்சிருந்தேன். ஆனா.. உன்னால.. உன்னால.. எல்லாம் கெட்டது”
“………..”
“ஒரே ஒரு முறை தான் என் பொண்ணு கண்ணுல சோகத்தைப் பார்த்தேன், அந்தச் சோகம் நிரந்தரமா அவ கண்ணுலத் தேங்கிடக் கூடாதுன்ற காரணத்துக்காக, உயிரா நினைச்ச வேலையைக் கூடத் தூக்கி எறிஞ்சுட்டு வந்த ஆள் நான்!, இன்னிக்கு… மறுபடியும்.. அதே நிலைக்கு வந்து.. என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு நிற்கிறேன்”
“………….”
“உனக்கு என்னடிப் பிரச்சனை??, நீ அவ்ளோ கெஞ்சிக் கேட்டும்,டிவர்ஸ் பேப்பரைக் காட்டி மிரட்டியும் நான் வேலையை விடச் சம்மதிக்கல. அதனால…. நானா வேலையை விட்டுட்டு உன் பின்னாடி வந்தப்போ.. என் கூட வர உன் ஈகோ இடம் கொடுக்கல??, அதான??”
“……………..”
“நான் பண்ணினது தப்புத் தான்! நீ கேட்டப்பவே வேலையை விட்டுட்டு உன் பின்னாடி வந்திருக்கனும்!, அந்த ஒரு தப்புக்காக.. 5 வருஷமா உன் பின்னாடி நாயா அலைஞ்சு, உன் ஈகோவுக்குத் தீனி போட்டுட்டேன்! இன்னும்.. இன்னும்.. என்ன தான் டி எதிர்பார்க்குற??
“……………”
“நீ மாற மாட்டடி. லைஃப் லாங் என்னை இப்படியே அழ வைச்சுப் பார்த்தாலொழிய உன் கோபமோ,ஈகோவோ மாறாது!, ஆனா.. உன் பிடிவாதத்துக்கு என் குழந்தைங்க ஏன் டி பலியாகனும்??, நிச்சயம் நான் அதுக்கு அனுமதிக்க மாட்டேன்”
“…………..”
“போதும்!, இவ்ளோ நாளா.. நான் நல்லவனா இருந்தது போதும்!, இப்போவே.. நீ என்னோட என் வீட்டுக்கு வர்ற. எனக்குப் பொண்டாட்டியா இருக்கிறயோ இல்லையோ.. என் குழந்தைங்களுக்கு அம்மாவா.. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நீ என்னோட வாழ்ந்து தான் ஆகனும்.. நான் போய்ச் சேர்ந்தப்புறம், உன் இஷ்டப்படி என்னனாலும் பண்ணிக்கோ”
-பொறுமைக்குப் பெயர் போன, பூமாதேவியே அவ்வப்போதுத் தன் கோபத்தை பூகம்பத்தின் மூலம் வெளிக்காட்டும் போது, ஜீவன் மட்டும் எப்படி விதிவிலக்காய் இருப்பான்?
மகளின் கேள்விகள் ஒவ்வொன்றும் மூளைக்குள் சில்வண்டாய்ச் சுற்றிய வண்ணமிருக்க, ஆத்திரம் தலைக்கேறிப் போய்.. நிதானமின்றி.. அவள் முகம் பாராமல்.. மனதில் தோன்றிய அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டான்.
மூச்சு வாங்க நின்றவன், அவள் முகத்தை நிமிர்ந்து நோக்கும் போது, உதட்டை மடக்கிக் கண்களில் சேரத் தொடங்கியக் கண்ணீரை அடக்கிய வண்ணம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
மகளின் அழுகையையேப் பொறுத்துக் கொள்ள முடியாதவன், தன் மனைவியின் அழுகையை மட்டும் ஏற்றுக் கொள்வானா?
சற்றும் யோசிக்காமல், அவள் முகத்தைப் பற்றியிழுத்துத் தன் மார்பில் அழுத்தியிருந்தான்.
“சாரிங்க, ரொம்ப சாரி!, அழாதீங்க! ப்ளீஸ்… அழாதீங்க” – அவன் விடாது கூறியதைக் காதில் வாங்காமல், அவன் மார்பில் முகத்தைத் தேய்த்துப் பலமாய் அழுது கொண்டிருந்தாள் அவள்.
“அதிதி அப்படிக் கேட்டதும் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலங்க! ஏற்கனவே கோபத்துல இருந்தேனா.. அதான்.. ரொம்ப ஆத்திரப்பட்டுட்டேன்!, சாரிங்க…” – விடாமல் மன்னிப்புக் கேட்டவனிடம்… “நான்… நான் தான் சாரி கேட்கனும், என்னால தான் எல்லாஆஆஆம்” என்றவள் மேலும் தேம்பி அழ… அவள் முகத்தை நிமிர்த்திக் காண முயன்றான்.
அவன் செய்கையைத் தடுத்து, அவன் மார்பில் தன் முகத்தை அழுத்தமாய்ப் பதித்திருந்தவள் “ம்ஹ்ம், நிமிர மாட்டேன்! அழுதா என் முகம் அஷ்டகோணலா இருக்கும், அப்புறம் வாழ்நாள் முழுக்கக் கேலி பண்ணுவீங்க” எனக் கூறிக் கொண்டே அழுதாள்.
அந்தச் சூழ்நிலையில் அவள் அதைக் கூறியதும் சிரிப்பு வர “ஹாஹாஹாஹா’வெனச் சத்தமாய்ச் சிரித்தான் அவன்.
“5 நிமிஷம் நான் அழுதுக்கிறேன் ப்ளீஸ்…” – என்றவள் தன் இருகைகளாலும் அவனைக் கட்டிக் கொண்டுத் தேம்பித் தேம்பி இத்தனை நாளுக்கும் சேர்த்து அழுதுத் தீர்த்தாள்.
அவள் முதுகைத் தடவிச் சமாதானப்படுத்தியபடி அமைதியாய் நின்றிருந்தவன் “போதும்-ங்க ப்ளீஸ்! நீங்க இப்படி அழறதைப் பார்க்கவா நான் அவ்ளோ பேசுனேன்?” என்றான்.
ஒருவழியாகச் சமாதானமடைந்து நிமிர்ந்தவள், அவனிடம் முகத்தைக் காட்டாமலே வாஷ்ரூமுக்கு ஓடினாள்.
“எதுக்குங்க ஓடுறீங்க?”-என்றபடிப் பின்னாலேயே வந்தவன் வாஷ்ரூம் வாசலில் நின்றான்.
“ரெண்டு நிமிஷம் இருங்க, முகம் கழுவிட்டு வர்றேன். நான் இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் யார் முன்னாடியும் அழுததில்லை. எனக்குக் கொஞ்சம் ஷேம்-ஆ இருக்கு”
“நான் இந்த ஃபேஸைப் பார்க்கலாம்ங்க. தப்பில்ல”
“ம்ஹ்ம், நீங்க தான் முக்கியமாப் பார்க்கக் கூடாது. அப்புறம் ரொம்பக் கேலி பேசுவீங்க”
“ஹாஹாஹா, என்னை நல்லாப் புரிஞ்சு வைச்சிருக்கீங்க”
“பின்ன, நான் யாரு!”-முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தவளைக் கண்டுச் சிரித்து கையிலிருந்த டவலைப் பிடுங்கியவன் “இப்போ கட்டிக்கலாம்லங்க?” என்று வினவினான்.
புன்னகைத்தபடியே அவள் மார்பில் சாய்ந்தவளை இறுக அணைத்துக் கொண்டான் அவன். பிரிந்திருந்த அத்தனை நாட்களுக்கும் சேர்த்து!
“எதுக்குங்க நேத்து நான் கிஸ் பண்ண வந்தப்போ தள்ளி விட்டீங்க?” – ஜீவன்
“வீட்டு வாசல் என்ன உங்க பெட்-ரூமா?, அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க யாரும் மனுஷனாத் தெரியல உங்களுக்கு?,”
“ஓ!, அதனால தான் விலகிப் போனீங்களா?, நான் என்னென்னவோ நினைச்சுப் பயந்துட்டேங்க”
“நீங்க ஒரு மக்கு ஆஃபிசர்ன்னு ப்ரூவ் பண்ணிட்டே இருக்கீங்க”
“நான் இப்போ ஆஃபிசர் இல்லங்க. காஃபே ஓனர்!”
“அதுசரி”
“அப்டின்னா… இப்போ கிஸ் பண்ணாத் தள்ளி விட மாட்டீங்களே!”
“மாட்டேன்” என்றவளை அவன் பார்த்த பார்வை.. உடல் முழுதையும் சிவக்கச் செய்ய… மெல்லத் தலை குனிந்தவளைப் பற்றி முகம் முழுக்க முத்தமிட்டான் அவன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் ஜீவன் வீட்டில் அதிதியின் முன்பு அமர்ந்திருந்தனர். கையைக் கட்டியபடி ரோஹினி அதிதியை முறைக்க, அவளோ ‘இன்னா நைனா இது’ என்கிற ரீதியில் ஜீவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“டார்லியை ரொம்பத் திட்டாதீங்க ப்ளீஸ்” – ஜீவன்
“ஏய், என்னைப் பாருடி. அங்க என்ன பார்வை?”-ரோஹினி
திருதிருவென விழித்தபடித் தலை குனிந்தாள் அதிதி.
“அன்னிக்கு வயசுக்கு வர்றதுன்னா என்னம்மான்னு நீ கேள்வி கேட்டப்போவே நான் என்ன சொன்னேன்?, ஸ்கூல்ல.. அவ இதச் சொன்னா, அவன் இதச் சொன்னான்னு லூசு மாதிரி வீட்ல வந்து கேள்வி கேட்கக்கூடாதுன்னு சொன்னேன்ல?”
“பிள்ளைங்களுக்கு வர்ற டௌட்ஸைக் க்ளியர் பண்றது நம்ம கடமைங்க ரோஹினி”
“நீங்கக் கொஞ்சம் சும்மாயிருக்கீங்களா?” – ரோஹினி
“ஜீனுவைத் திட்டாத ரோனி” – அதிதி
“அவரை நான் ஒன்னும் சொல்லலடி, ஒன்னும் சொல்லல” -என்றவள் பின்பு மகளின் அருகே சென்றமர்ந்து அவளை மடியில் இருத்திக் கொண்டு… அவள் தலையை வருடியபடி.. “அம்மா அன்னிக்கு சொன்னேன்ல கண்ணே?, ஆதி ஸ்கூலும், அம்மா இன்ஸ்டிடியூட்டும் பக்கமா இருக்கிறதால தான் நாங்க கே.கே.நகர்ல இருக்கோம்! அதிதி பாப்பா இவ்ளோ ஃபீல் பண்றது அம்மாக்கு இன்னிக்குத் தான தெரியும்? அதனால இனி அம்மாவும்,ஆதியும் இங்கேயே பாப்பா கூடவே இருக்கப் போறோம். ஓகே???” என்று வினவினாள்.
முகம் மலர்ந்து.. கண்களை விரித்து.. நம்ப முடியாமல் அவளை நோக்கியவள்.. “நிஜமா???” என்றபடித் தலையாட்ட… ரோஹினி ஆம் எனக் கூறியதும்… அவள் மடியிலிருந்து இறங்கி.. ஓடிச் சென்று தந்தையின் மார்பில் புகுந்தவள்.. அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
எதற்காக அந்த அழுகையென்பதைப் புரிந்து கொண்ட ஜீவனுக்குக் கண்களில் நீர் கோர்த்து விட்டது. மகளின் தலையை வருடியபடி.. அவள் தோளில் முகத்தைச் சாய்த்தவனின் தலையில் நங்கெனக் குட்டினாள் ரோஹினி.
அவளைச் சமாதானப்படுத்தாமல் என்ன அழுகை இது?- என்பது போல் அவள் செய்கையாலே மிரட்ட… மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்து அமர்ந்தான்.
“டார்லி….. அதான் யுவனி மம்மி-டாடி மாதிரி உங்க அம்மா-அப்பாவும் ஒரே வீட்ல இருக்கப் போறோமே!, அப்புறம் ஏன் அழறீங்க?”
அழுது கொண்டே ஹாஹாஹாவெனச் சந்தோசத்தில் அவள் சிரிக்கும் சத்தம் கேட்டது! பின் அவன் மார்பிலிருந்து விலகியவள், நேரே வாஷ்பேசனுக்கு ஓடினாள். அம்மாவும்,பெண்ணும் ஒரே ரகம் போலும்!
ரோஹினியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தவனைக் கண்டு கொள்ளாமல், அவள் நேரே அடுப்படிக்குச் சென்றாள்.
முகம் கழுவிக் கொண்டு வந்த அதிதிக்கு, ஜீவன் வீட்டுக் கிட்சனில் அன்னை நின்றிருப்பதுக் கூடச் சந்தோசத்தைக் கொடுத்தது போலும்!
“ரோனி….” என்றபடி ஓடிச் சென்று மேடை மீதேறி அமர்ந்து கொண்டாள்.
“ரோனி, நீ சமைக்கப் போறியா??” – அதிதி
“ம்ம், ஆமாம்”
“என்னது?, இன்ஸ்டண்ட் இடியாப்பமா??”
ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த ஜீவன் பக்கெனச் சிரிக்கும் சத்தம் கேட்டது.
“நக்கலா?” என்றுக் குரல் கொடுத்தவள் “தோசை ஊத்தலாம்ன்னா, ஃப்ரிட்ஜ்ல மாவு இல்லையேடி!, உங்க சமையல்காரம்மா அரைச்சு வைக்கல போலயே!, கிச்சடி பண்ணட்டுமா?” என்றாள்.
அதிதி “ம்ம்” எனத் தலையாட்டும் போது.. அவ்வளவு நேரமாக உள் அறையில் உறங்கிப் போயிருந்த ஆதி “ரோனி…” என்றபடி எழுந்து வந்தான்.
“உன்னைக் கவனிச்சிட்டு இருந்ததுல, என் மகனை மறந்துட்டேனே, நீ வா டா என் கண்ணுக்குட்டி”-என்றபடி அவனைத் தூக்கிக் கொஞ்சியவள் “குட்டிக் கண்ணனுக்கு என்ன வேணும்?, கிச்சடி ஓகே??” என்று வினவ.. அவனும் தலையாட்டிக் கொண்டிருந்தான்.
அதன் பின் ஏதேதோ பேசியபடி சமைத்துக் கொண்டிருந்த மூவரையும் கண்ட ஜீவனுக்கு.. எல்லையில்லாத நிம்மதி ஏற்பட்டது! பெரு மூச்சை வெளியிட்டபடி அமர்ந்திருந்த சோஃபாவிலேயேத் தலையைச் சாய்த்தவன், சற்று நேரத்தில் உறங்கிப் போனான்.
மறுபடி அவன் கண் விழிக்கையில்.. மணி இரவு பதினொன்றைக் கடந்திருந்தது.
வேகமாக எழுந்து சென்று படுக்கையறையை நோக்கினான். அங்கே ஆதியும்,அதிதியும் உறங்கிப் போயிருக்க.. ரோஹினி மடிக்கணிணியுடன் அமர்ந்திருந்தாள்.
அவனைக் கண்டதும் எழுந்து வந்தவள் “நல்லா தூங்கிட்டிருந்தீங்க, அதான் எழுப்பல. சாப்பிடுறீங்களா?, கிச்சடியைச் சூடு பண்றேன்” என்றபடி அவனைக் கடந்து சென்றாள்.
வெகு இயல்பாய்ப் பொருந்திப் போனாள்! இத்தனை வருடப் பிரிவையும் நொடியில் உடைத்து எறிந்து விட்டு! இந்த நிலைக்காக வெகுவாய் ஏங்கிப் போயிருந்தவன்… அதை முழுதாக அனுபவித்தபடி அவள் பின்னே சென்றான்.
அவள் பரிமாறிய கிச்சடியையும்,தேங்காய்ச் சட்னியையும் திருப்தியாய் உண்டு.. மீண்டும் சோஃபாவுக்கு வந்தமர்ந்தவனிடம் “என்ன?, மறுபடியும் இங்கேயே தூங்கப் போறீங்களா?” என்று வினவினாள்.
“அதான் பெட் ஃபுல்லா நீங்களும்,உங்க பசங்களுமே ஆக்குப்பை பண்ணிக்கிட்டீங்களே, நான் இப்படியே இந்த சோஃபா ஓரமா.. படுத்துட்டுப் போறேன்” -ஜீவன்
“ஹாஹாஹா”
“சிரிக்காதீங்க, அப்புறம் என்னென்னவோ தோணும்”
“சரி, அப்போ எனக்கும் இந்த சோஃபாலயேக் கொஞ்சம் இடம் கொடுங்க, நானும் இங்கேயே உங்களோடேயேப் படுத்துக்கிறேன்” – என்றபடி வந்து அவனை இடித்துக் கொண்டு அமர்ந்தவளைத் தடுத்துத் தன் கைகளில் அள்ளிக் கொண்டவன் “இந்த ஒரு வார்த்தைக்குத் தான் வெயிட்டிங்” எனக் கூறி எதிரேயிருந்த அறைக்குள் நுழைந்தான்.
அந்த அறை முழுதும் ரோஹினியின் பெயிண்டிங்-களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை வியந்தபடி கண்ட ரோஹினி.. “வாவ்வ்வ், இந்த வீட்டுக்குள்ளே இப்படியொரு ரூம்-ஆ?”- என்றாள்.
“பின்ன, என்னைக்காவது நீங்க திரும்பி வந்து, நான் எங்க படுக்கட்டும்,கிட்சன்லயா இல்ல, வீட்டு வாசல்லயான்னு சண்டை போட்டா?, அதனால தான்!”
“ப்ச், கில்லாடி தான் நீங்க”
அந்தப் படுக்கையறையின் ஜன்னலருகே நின்று உரையாடிக் கொண்டிருந்தனர் இருவரும். உள்ளே நுழையும் வரை சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த இருவரும், ஏனோ அதன் பின்பு வார்த்தைகளற்ற மௌனத்துடன் நின்றிருந்தனர்.
திடீரென “மச்சுக்குப் போகலாமா?” என்று வினவினாள் ரோஹினி.
திருமண இரவை நினைவுபடுத்துகிறாள் போலும் என்றெண்ணிய ஜீவன் “பேட் ஐடியா” என்றான்.
“ஏன்? ஏன்?”
“இது என்ன நெல்லையாங்க?, வயக்காட்டுக்கு மத்தில ஜில் காத்துல நிற்க?, இந்த ஏசியை விட்டு வெளியே போனா.. வெறும் வெப்பக் காத்தைத் தான் அனுபவிக்கனும்”
“ஆமாமா, கரெக்ட்!”
“மோர் ஓவர், அங்க மாதிரியெல்லாம், மொட்டைமாடில வைச்சுக் கட்டிப்பிடிக்க முடியாது! பிட் படம் ஓட்டுறோமோன்னு, அவனவன் செல்ஃபோனைத் தூக்கிடுவான்”
“ச்சிச்ச்சிச்சி”
“உண்மை தான்ங்க”
“சரி அப்போ என்ன பண்றது?”
“என்ன பண்ணனும்?”
“ஜீவன்ன்ன்ன்ன்ன்” – பல்லைக் கடித்தாள் அவள்.
“சொல்லுங்க, என்ன பண்ணனும்?, சீரியஸாத் தான் கேட்குறேன்! உடனே எல்லாமே வேணும்ன்னு நான் நினைக்கலங்க!, எனக்கு உங்கப் பக்கத்துல படுத்துக் கண்ணை மூடித் தூங்குனாலே போதும்! இப்போதைக்கு!”
“………” – விரல்களை நோக்கியபடி நின்றிருந்தவளின் கையைப் பற்றி அருகிலிழுத்தவன் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
கண்ணை மூடி அவன் மார்பில் சாய்ந்திருந்தவளும், அவனுக்கு நிகரான நிம்மதியை உணர்ந்திருப்பாள் போலும்! தான் செய்த முட்டாள்த்தனங்கள் அத்தனையையும்.. பல சமயம் பொறுமையாய் எதிர் கொண்டு.. சில சமயம் கோபப்பட்டு.. சில சமயம் செய்வதறியாதுத் தவித்து.. இத்தனை வருடங்களை அவளுக்காகவேத் தனிமையில் கடத்தியவனை.. என்ன தான் செய்ய! இனி ஒரு போதும் இது போன்ற பிரிவைக் கொடுத்து.. அவன் வருந்தும்படிச் செய்து விடக் கூடாதென மானசீகமாகச் சத்தியம் செய்து கொண்டாள்.
மறுநாள் மாலை அதிதி,ஆதி,ரோஹினி,ஜீவன் நால்வரும் பெசண்ட் நகர் பீச், மணலில் அமர்ந்திருந்தனர். கடலில் குளித்தேத் தீர வேண்டுமென ரோஹினியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஆதியையும்,அதிதியையும் கண்டுச் சிரித்தபடி.. கால் நீட்டி அமர்ந்திருந்தான் ஜீவன்.
“கடல்ல குளிக்கக் கூடாதுன்னா எதுக்கும்மா எங்களை பீச்-க்குக் கூட்டிட்டு வந்த?, ப்ளீஸ்.. ரோனி.. ப்ளீஸ்…” என்று கெஞ்சிய அதிதியிடம் இருபுறமும் தலையை ஆட்டியபடி “நோ… கூடாதுன்னா கூடாது” என்றுப் பிடிவாதமாய்க் கூறினாள் ரோஹினி.
மூவரையும் கண்டபடிச் சற்று நேரம் அமைதியாய் இருந்தவன் பின் குழந்தைகள் இருவரையும் இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு ஓடிக் கடலில் டொம்மென விழுந்தான்.
குழந்தைகள் இருவரும் “ஹேஏஏஏஏஏஏ” என ஆர்ப்பரிக்க…. “பார்த்து…. பார்த்து…” என்று பதறி எழுந்த ரோஹினித் தண்ணீரில் காலைக் கூட நனைக்காமல் தள்ளியே நின்றிருந்தாள்.
முழுதாக நனைந்து விட்டத் திருப்தியுடன் முகத்திலிருந்த நீரைத் துடைத்தபடிக் குதித்துக் கொண்டிருந்த இருவரையும் கண்டு விட்டுத் திரும்பி ரோஹினியை நோக்கினான் ஜீவன்.
“எ..என்ன இங்க பார்க்குறீங்க??” – தடுமாறியபடி வினவியவளைக் கண்டுச் சிரித்தபடி எழுந்தவன் அவளை நோக்கி நடந்து வர… அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்டவள்.. “நோ… நோ.. நோ ஜீவன் ப்ளீஸ்….” எனக் கூறிக் கொண்டே மெல்ல ஓடத் தொடங்கினாள்.
அவன், அவள் பின்னேயே வரவும், வேகத்தை அதிகப்படுத்தியவள்.. நொடிக்கும் குறைவான நேரத்தில்.. அவனிடம் தோற்றிருந்தாள்! போலீஸ்காரனை ஓட்டத்தில் ஜெயிக்க முடியுமா???
அவள் வயிற்றைப் பற்றித் தூக்கி இழுத்து வந்து கொண்டிருந்தவனைக் கண்டுக் குழந்தைகள் கைத் தட்டிச் சிரிக்க.. “ப்ளீஸ் ஜீவன், ப்ளீஸ்,ப்ளீஸ்.. வேண்டாம்.. வேண்டாம்” எனத் துள்ளியவளைத் தூக்கிக் கொண்டு அவளுடனே கடல் நீரில் அமிழ்ந்தான் அவன்.
நீரில் மூழ்கி மூச்சு வாங்க நிமிர்ந்தவள்.. தன்னைச் சிரிப்புடன் நோக்கியவனின் தோளில் அடித்துச் சண்டையிட…. அவள் இடையை இறுகப் பற்றி அருகில் இழுத்தவன்.. அவள் இதழில் பதிந்திருந்த உப்பு நீரின் சுவையை ருசிக்கத் தொடங்கியிருந்தான்.
-நேரம் காலை 6.30. சூரியக் கதிர்கள் ஜன்னல் வழியே ஊடுருவி என் அறையை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது. இரவு பெய்த மழையின் புண்ணியத்தால் தோட்டத்து மணலில் ஈரம் படிந்திருந்தது! நான் இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை! இன்னும் என் விரல்கள் ஜீவன் ஏகலைவனின் ஃபேஸ்புக் பக்கத்தையே ஸ்க்ரால் செய்து கொண்டிருந்தது. ச்ச! வாட் அ கபிள்! வாட் அ லவ் ஸ்டோரி!! அவர்களிருவரும் ஒன்று சேர்ந்த பிறகு, அவரிடமிருந்து ஒரு போஸ்ட் கூட இல்லை! மனுஷன் ஃபீல் பண்ணினாத் தான் மார்க் கிட்ட வருவார் போல! இப்போ எப்படியிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கனுமே!
என் சி.ஐடி மூளையை வைத்து அவரது ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்டில் ரோஹினியின் பெயரைத் தேடிக் கண்டுப்பிடித்து ரோஹினி ஜீவானந்தம் என்கிற ப்ரொஃபைலை ஓபன் செய்தேன்!
ஆண்ட்டியும்,அங்கிளும் குடும்பமாய்ப் பறந்த வண்ணமிருக்கிறார்கள் போலும்! லண்டன் ட்ரிப் என்றிருந்த அவளது கவர் ஃபோட்டோவில்.. ட்ரைனில் அமர்ந்திருந்தனர் நால்வரும்!
ரோஹினியின் தோளில் ஜீவன் தலைசாய்த்திருக்க… பின்னிருந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஆதியும்,அவள் மடியில் சாய்ந்தபடி அதிதியும் போஸ் கொடுத்திருந்தனர்! பார்க்கவே ரம்யமா இருக்கு! சூப்பர்!!! – என்றெண்ணிக் கொண்டு மடிக்கணிணியை மூடி வைத்தேன்!
“கண்கட்டி வித்தைக் காட்டி என்னை எப்போக் கட்டிப் போட்ட…” – பாடியபடியேப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கத் தொடங்கினேன்!
******************************** முற்றும் ******************************
