அத்தியாயம் - 8

கண்கள் சொருக மடிக்கணிணியின் மீது ‘டங்’ எனத் தலையைக் கவிழ்ந்திருந்தேன் நான்! ம்க்க்கும்! ரொமான்ஸ் சீன்-ன்னா, சீட் நுனில உட்கார வைக்கிற மாதிரி இருக்கனும்! இவனுங்க என்னடான்னா, தூக்கம் வர வைக்கிறானுங்க! இருந்தாலும்.. நைஸ்!! ஈஈஈஈ-எனச் சிரித்துக் கொண்டேன்! கொட்டாவி மேல் கொட்டாவியாக வீடு கட்டினாலும், அடுத்த என்ன நடந்ததென்பதைத் தெரிந்து கொள்ளாமல், நான் உறங்கப் போவதில்லை! கண்களைத் தண்ணீர் அடித்துக் கழுவி விட்டு மீண்டும் மிஸ்டர்.மார்க்கிடம் வந்தேன்! ஆஹா அடுத்த ஸ்டேட்டஸே ரொமாண்டிக்கா இருக்கே!

“வான் விட்டு வாராய் சிறகுள்ள நிலவே! தேன் விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே!”

ன்னடி இது மேத்ஸ்ல மட்டும் இவ்ளோ கம்மியா மார்க் வாங்கியிருக்க?” – அதிதியின் டெஸ்ட் பேப்பரைப் பார்த்து உச்சஸ்தாதியில் கத்திக் கொண்டிருந்தாள் ரோஹினி.

“எனக்குக் கணக்கு அவ்ளோவா வராதும்மா” – கையில் க்ரீம் பிஸ்கட்டுடன் அதிதி.

“என்னடி பதில் இது?”

“பின்ன?, யுவனி கூட க்ரூப் ஸ்டடி பண்றதுக்கு நீ அலவ் பண்ண மாட்ற?, டியூஷன் போறதுக்கும் ஜீனு ஒத்துக்கல. பின்ன மார்க் மட்டும் எப்படி வரும்?” – எரிச்சலுடன் பதிலளித்தவளைக் கண்டு ரோஹினி வாயைப் பிளக்க ஜீவனுக்கோ சிரிப்பு வந்தது.

“உன்கிட்டல்லாம் வாயால பேசுனா சரி வராதுடி” என்றவள் கையிலிருந்த நோட்டை வைத்து அவள் தலையில் ஒரு போடு போட்டாள்.

பதறி ஓடி வந்து அதிதியைத் தன்புறம் இழுத்துக் கொண்டவன் “ஏங்க, அடிக்காதீங்க ப்ளீஸ்” என்றான். அதிதியின் கவனம் இப்போதும் பிஸ்கட்டின் மீதே பதிந்திருந்தது.

“சரிடி, நீ சொல்ற மாதிரி இந்த வீக்-என்ட் யுவனி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். அடுத்த வாரம் டெஸ்ட்ல செண்டம் வாங்கிக் காட்டனும். சரியா?”

முகம் விகசிக்க “ஓகேம்மா” என்றவள் தம்பியுடன் விளையாடச் சென்று விட்டாள்.

“இவ வளர்ந்தப்புறம் நான் எப்படி சமாளிக்கப் போறேனோ தெரியல”- புலம்பியபடித் திரும்பியவள் தன்னையே சிரிப்புடன் நோக்கிக் கொண்டிருந்தவனிடம் “உங்களுக்கு என் நிலைமை சிரிப்பா இருக்கா?” என்று பொறிந்தாள்.

அதுவரை எதிரேயிருந்த மேசையின் மீது சாய்ந்து நின்றிருந்தவன், முன்னே வந்து.. அவளருகேயிருந்த நாற்காலியில் அவளை உரசியபடி அமர்ந்து, அவள் கை விரல்களைப் பற்றினான்.

“நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகுற அளவுக்கு பேரண்டிங் அவ்ளோ கஷ்டமான விசயமில்லங்க. குழந்தைங்க நம்மை விடத் தெளிவானவங்க! அவங்க போக்கில போனா.. எல்லாமே ஈசியாய்டும்!”

“ஹ்ம்ம், நீங்க இருக்கீங்கன்ற நம்பிக்கைல தான் இருக்கேன் நான்!, இல்லேன்னா.. எப்பவோ தலை வெடிச்சிருக்கும் எனக்கு” – பேச்சு வாக்கில் இயல்பாகக் கூறி விட்டாள் அவள்! ஆனால்.. ஜீவனுக்குத் தான் மனம் மிகவும் லேசாகி விட்டது!

“நான் பார்த்துக்கிறேன்ங்க”-என்றவனிடமிருந்துக் கை விரல்களைப் பிரித்துக் கொண்டவள், சற்றுத் தள்ளி அமர்ந்தாள்.

“எதுக்கு இப்போ விலகிப் போறீங்க?”

“நாளைக்கழிச்சு ஆதி பர்த்டே! ஞாபகம் இருக்கா உங்களுக்கு?”

“ஏன் தள்ளிப் போறீங்கன்னு நான் ஒரு கேள்வி கேட்டேன்??, பெருசா.. யோசிக்கிறேன்னு சொன்னீங்க. இப்போ வரைக்கும் ஒரு மாற்றமும் இல்ல”

“ஒரு மாற்றமும் இல்ல??, ம்?” – முறைத்தபடி வினவினாள் அவள்.

“அப்படிப் பச்சையா சொல்லிட முடியாது. மாற்றமில்லாட்டி, இப்படி என்னால பக்கத்துல உட்கார்ந்து பேச முடியுமா?”

“பின்ன என்ன?, பர்த்டேவைப் பத்திப் பேசலாம்”

“ஞாபகம் இருக்குங்க. பெருசா செலிப்ரேட் பண்ணனும்னு ஆசைப்படுறீங்களா?, ஹால் ஏதாவது புக் பண்ணலாமா?”

“இல்ல,இல்ல அதெல்லாம் வேண்டாம். காஃபேலயே சிம்பிளா செலிப்ரேட் பண்ணலாம்!”

“ஓகே-ங்க. அப்படியேப் பண்ணிடலாம்” – என்றவன் பிறந்தநாளன்று மாலை காஃபேயிலேயே சிம்பிளாக ஒரு பர்த்டே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

மாலை ஆறு மணிவாக்கில் வந்திறங்கினர் ஆதி,அதிதி மற்றும் ரோஹினி. காஃபே பணியாளர்கள் கலர்பேப்பர்களையும்,ஆதியின் புகைப்படங்களையும் ஒட்டி அலங்காரம் செய்து கொண்டிருக்க.. ஜீவனைக் காணாதுத் தேடினாள் ரோஹினி.

சரியாக அப்போது கேக் பாக்ஸூடன் உள்ளே நுழைந்த ஜீவன் தன்னை நோக்கி ஓடி வந்த ஆதியை அள்ளிக் கொண்டான். நீல நிற ஷர்வாணி உடையில், அன்னை அணிவித்திருந்தத் துப்பட்டாவைக் கையில் கட்டியிருந்தவன், அதைத் தந்தையிடம் காட்டி வெட்கப் புன்னகைப் பூத்தான்.

“ஜீனு… என் ட்ரெஸ் எப்படியிருக்கு?” – ஆரஞ்சு வண்ண முழு நீள ஃப்ராக்கில் ஜொலித்த அதிதியின் கன்னத்தில் முத்தமிட்டு “சூப்பர்” என்றான் அவன்.

இருவரையும் கொஞ்சி நிமிர்ந்தவனின் பார்வைத் தானாகவே ரோஹினியிடம் சென்றது. மரூன் நிறத்தில் அவள் கட்டியிருந்தக் காட்டன் புடவை அவள் நிறத்தை அத்தனை அழகாய் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

அவன் பார்வையை உணர்ந்து அருகே வந்தவள் “நீங்க ரெடியாகலையா?” என்று வினவினாள்.

“இதோ போறேன்-ங்க” என்றவன் “சாரி ரொம்ப அழகாயிருக்குங்க” என்றான்.

“தேங்க்ஸ்” என்றவள் சற்றுத் தயங்கியபடியேக் கையிலிருந்த கவரை அவனிடம் நீட்டினாள்.

“என்ன இது?” என்றபடி ஆச்சரியத்துடன் வாங்கிப் பிரித்தான்.

“இல்ல, எல்லாருமே புது டிரெஸ் போட்டிருக்கோம். அ..அதனால தான்.. உ…உங்களுக்கும்ம்ம்ம்” என்று இழுத்தாள்.

முறுவலாய் உதட்டில் தொடங்கியப் புன்னகை நீண்டு விரிய.. “ரெண்டு நிமிஷம். சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்” என்று விட்டு விசில் அடித்தபடிச் சென்றான் அவன்.

மஸ்டர்ட் நிறத்தில் குர்த்தா வாங்கிக் கொடுத்திருந்தாள். அணிந்திருந்த ப்ளூ ஜீன்ஸ்-ன் மேல் அதை அணிந்தவன் தலையைக் கோதியபடியே வெளியே வந்தான்.

அவனுக்காகவேக் காத்திருந்தாள் போலும், ரெஸ்ட் ரூமின் அருகே சுவரில் சாய்ந்தபடி நகம் கடித்துக் கொண்டிருந்தாள்.

அவளை அங்கே எதிர்பாராமல் விழி விரித்தவனைக் கண்டு கொள்ளாது அவனருகே நெருங்கியவள், டிரெஸ்ஸை நோக்கியபடியே “கரெக்ட் சைஸ் தானே?, டைட்டா இல்லையே?” என்று வினவினாள்.

“இல்லங்க, சரியாத் தான் இருக்கு” – ஏனோ அவன் குரல் அடக்கமாய் வந்தது.

“ஊஃப்ஃப்.. பத்தாம போயிடுமோன்னு ரொம்பப் பயந்தேன்” – என்றவள் நிமிர்ந்து அவன் முகம் நோக்கிச் சிரிக்க.. அத்தனையருகில் தன் நெஞ்சோரமாய் நின்றிருந்தவளைப் பார்த்தவனின் பார்வை.. அவள் மனதை வசியம் செய்தது.

புன்னகை மாற.. இமைகளைத் தாழ்த்தியவளின் கன்னத்தைத் தன் புறம் திருப்பி இதழ் நோக்கிக் குனிந்தான் அவன். திகைத்து.. விலகியவள்.. அவன் முகம் பாராமல் ஓடியே விட்டிருந்தாள்.

அதன் பின்பு ஆதியைக் கேக் கட் செய்ய வைத்து.. ஹாப்பி பர்த்டே பாடி.. அவனுக்குப் பிடித்த பொம்மைக் காரை இருவருமாய்ச் சேர்ந்து பரிசளித்து.. அந்த மாலை நேரம் முழுவதையும் இருவரும் ஒரு மோனநிலையிலேயேக் கடந்தனர்.

இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டுக் கிளம்பிய மூவரையும் தானே ட்ராப் செய்வதாகக் கூறி.. அவர்களுடன் காரில் பயணித்தான் ஜீவன்.

கே.கே.நகரை அடைகையில் பிள்ளைகள் இருவரும் தூங்கிப் போயிருந்தனர். இருவரையும் கண்டபடி ரோஹினியின் புறம் திரும்பியவனிடம் “நான் ஆதியைப் படுக்க வைச்சுட்டு வந்து.. அதிதியைத் தூக்கிக்கிறேன்” என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் ஆதியுடன் இறங்கியிருந்தாள்.

அவள் சாதாரணமாகத் தான் கூறிச் சென்றாள். ஆனால் ஜீவனுக்குத் தான் முகம் கன்றிப் போனது.

என்றைக்கும் போல இன்றும்.. வாசலிலேயேத் துரத்துகிறாள்! மாறி விட்டதாகப் பெரிதாகக் கூறினாளே! ஏன், அவன் அதிதியைத் தூக்கிக் கொண்டு உள்ளே வரக் கூடாதாமா?, உன் எல்லை இது தான் என்றுத் தெளிவாய் உணர்த்துபவளிடம் என்ன முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்?, காஃபேயில் அவள் விலகி ஓடும் போதே புரிந்திருக்க வேண்டும்.

இயலாமையும்,கோபமும் போட்டிப் போட.. முகம் கன்ற அமர்ந்திருந்தான் அவன். அதிதியைப் படுக்க வைத்து விட்டு அவனிடம் வந்த ரோஹினிக்கு அவன் மனநிலையின் மாற்றம் புரிய வாய்ப்பில்லை.

விடைபெறும் நோக்குடன் அருகே வந்தவள் “நாளைக்கு ஈவ்னிங் ஆதியை நீங்களே பிக்-அப் பண்ணிக்கிறீங்களா?, என் கலீக் வீட்ல ஒரு ஃபங்க்ஷன் இருக்கு” என்றாள்.

“சரிங்க. குழந்தைகளைப் பிக்-அப் பண்ணிக்கவும்,ட்ராப் பண்ணிக்கவும் மட்டும் தான நான் இருக்கேன்?, நீங்க சொல்ற மாதிரியே பண்றேன்” – அடக்கப்பட்டக் கோபத்துடன் வெளிவந்தது அவன் குரல்.

அவன் குரல் மாற்றத்துக்குக் காரணம் புரியாமல் “என்னாச்சு?” என்று புருவம் சுருக்கினாள் அவள்.

முகம் இறுக ஒரு நொடி அமைதி காத்தவன் பின்…

“அதிதியைத் தூக்கிட்டு நான் உங்க பெட்-ரூம் வரைக்கும் வரக் கூடாதாங்க?, அப்படி உங்களை என்ன பண்ணிடுவேன்னு நினைக்கிறீங்க?”

“……………” – என்ன உளறுகிறான் என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

“இப்போ கூட இந்த வாசல் தான் உன் எல்லைன்னு வெளியே நிற்க வைச்சுத் தான் பேசுறீங்க??, ம்?, நீங்க மாறிட்டதா நினைச்சு நான் சந்தோசப்பட ஆரம்பிச்சு முழுசா பத்து நாள் கூட ஆயிருக்காது! மறுபடி என்னை அதலபாதாளத்துக்குத் தள்ளிட்டீங்க”

“நீங்களா எதையாவதுக் கற்பனை பண்ணிட்டு உளறாதீங்க ஜீவன்” – முழு எரிச்சலுடன் பதில் கூறினாள் அவள்.

“சரி, நான் கற்பனை பண்ணல. காஃபேல நான் கிஸ் பண்ண வந்தப்போ ஏன் விலகிப் போனீங்க?, பிடிக்காதனால தான??”

“உங்க இஷ்டத்துக்கு எதையாவது அர்த்தம் பண்ணிக்காதீங்க”

“சரி, அப்டின்னா இப்போ கிஸ் பண்ணுங்க” – பட்டெனக் கேட்டவனைக் கண்டு விழி விரித்தாள் அவள்.

சிறுபிள்ளைத்தனமாய் பிடிவாதம் பிடித்துக் கொண்டு, தண்ணியடிக்காமலே போதையேறியவன் போன்று நடந்து கொண்டிருந்தவனை என்ன செய்வதென்றே புரியவில்லை.

இறுகிய முகத்துடனும், அடக்கப்பட்டக் கோபத்துடனும், ஏமாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாத இயலாமையுடனும் அவளையே நோக்கிக் கொண்டிருந்தவன், அவளிடமிருந்துப் பதில் இல்லாது போனதும்… அவள் கையை இறுகப் பற்றி அழுத்தினான்.

வாசலில் நின்று கொண்டு இது என்ன அட்டகாசம்??, வெடுக்கெனக் கையை இழுத்துக் கொண்டவளுக்குக் கோபம் தலைக்கேறியது.

அவள் கையை உறுவியதும் அவனுக்கும் கோபம் வந்து விட்டது போலும், விடாமல் மீண்டும் அவள் கன்னத்தைப் பற்றி முத்தமிட முயன்றான்.

உச்சகட்டக் கோபத்தில் வலது கையால் அவன் முகத்தைத் தள்ளி, ஓரடி விலகி நின்றவள் மூச்சு வாங்க ஆத்திரமாய் அவனை நோக்கினாள்.

அவமானத்தில் முகம் கறுக்க.. கையை இறுக மூடித் தன் கோபத்தை அடக்கியவன், அவளைத் திரும்பிப் பாராமல் விறுவிறுவெனச் சென்று விட்டிருந்தான்.