ஈசக்கரையான்
தன் கருமணிகளுக்குள் காலார நடையிட்டுக் கடந்து சென்று கொண்டிருக்கும் பச்சை நிறப் பூமியை ஊற்றெடுக்கும் உவகையுடன் நேசப் பார்வை பார்த்தபடி அந்தப் பேருந்தின் ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்திருந்தான் அவன்.
வெகுநாளைக்குப் பிறகான பஸ் பயணம்!
அதுவும் அவன் பிறந்து,வளர்ந்த கிராமத்தை நோக்கி!
ரத்தத்தில் ரசனை உணர்வு உச்சத்தைத் தொட்டிருக்க, குலுங்கிச் செல்லும் பேருந்தோடு சேர்ந்து கிட்டத்தட்டக் குதித்துக் கொண்டிருந்தது அவன் மனது.
வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் வெம்மையை மீறி, நெற்றி முடி கொண்டுத் தன் நேத்திரம் தீண்ட வந்தக் காற்றை நாசிக்குள் இழுத்து ஆழ மூச்செடுத்தான்.
இயற்கையின் சுவாசம், வாசமாய் உள்ளிறங்கி அவனை வசியம் செய்தது.
நாட்டுக் கோழி, மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை என மூக்கை அடைத்தக் கவுச்சி நாற்றத்திற்காக நாட்கணக்கில் ஏங்கிப் போயிருந்தவன், அத்தனையையும் நிரப்பிக் கொண்டான் அடி வயிறு வரை!
காட்சிகளாய்க் கடந்து சென்ற கால்வாயும்,கிணற்றடியும் அவனைக் குதித்தாட அழைப்பது போலிருக்க, பரபரத்தக் கை,கால்களை அடக்கி அமர்ந்திருந்தவனின் முகத்தில் குதூகலம் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது.
அவனது ஆர்வம், ஆழ் மனதில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்க எண்ணிய பேருந்து அந்த நிறுத்தத்தில் நின்றது.
கூடை நிறைய வைக்கோல் புற்களால் பதமாய்ப் போர்த்தப்பட்டிருந்த நாட்டுக்கோழி முட்டைகளை தலையில் ஏந்திக் கொண்டு, தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் மூச்சு வாங்க “யாத்தே, யாத்தே” என்றபடி பேருந்தின் குலுங்கலுக்கேற்ப தள்ளாடி நடந்து வந்து அவனுக்கு முன்னேயிருந்த இருக்கையை நிரப்பியது பெருசு ஒன்று.
பாக்கெட்டிலிருந்து சில்லறையை எடுத்துக் கிழவன் கண்டக்டரிடம் நீட்டுவதை சாதாரணமாய் நோக்கிக் கொண்டிருந்தவனின் பார்வை, கண்டக்டர் மற்றும் கிழவனின் நீண்டிருந்தக் கைகளுக்கு நடுவே தெரிந்த உருவத்தின் மீது அசாதாரணமாய்ப் பதிந்தது.
தாடையைக் கீழிறக்கி, கைகளுக்கிடையே தெரிந்த அந்த உருவத்தை நோக்கினான்.
அது.. ஒரு தாவணிக் காடு!
இயற்கைக்குப் போட்டியாய் இறைவன் வகுத்த மென்மை இலக்கணம்! ஏவாளின் வாரிசு!
அண்டத்தின் அகராதி! ஆண்மையின் உயிரெழுத்து!
மொத்தத்தில் அது.. பெண் எனும் உயர்திணை!
அதுவரை மண்ணைக் கண்டு மலர்ந்திருந்த மனது, இப்போது மலரைக் கண்டதும் மயங்கி விட, அதுவரையிருந்த ஏகாந்த மனநிலையின் எல்லையைக் கண்டுவிடும் நோக்கத்துடன் கையைக் கட்டிக் கொண்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்தவன், மெல்ல விழியுயர்த்தி அவளை நோக்கினான்.
மல்லிகையும்,மூக்குத்தியுமாய் நின்ற அவள்.. கரிசல்காட்டுக் கருப்பழகி!
கருமை கடவுளின் நிறம்! திராவிடத்தின் அடையாளம்!
அவனது ரசனையின் பார்வையில் அவள் ஒரு வானவில்லாய்த் தெரிந்தாள்.
பொறுமையாய் அவள் முகத்தைக் கண்டபடி அவன் மூவுலகையும் சுற்றி வந்த போது, ‘சில்ல்ல்ல்ல்’-எனக் கண்ணாடி உடையும் சப்தம்!
பேருந்தின் முன்புறக் கண்ணாடி சுக்கு நூறாய் உடைபட்டிருக்க, டிரைவர் அவசரமாய் வண்டியை நிறுத்தியதில் அவன் நெற்றி, முன்னே அமர்ந்திருந்த கிழவனின் பிடரியை முட்டி நின்றது.
வலித்த நெற்றியைக் கையால் தேய்த்துக் கொண்டு அவன் நிமிர்ந்த போது, பீதி நிறைந்த முகத்துடன் காதுகளிரெண்டையும் பொத்தியபடித், தன் பெரிய கண்களை அகலமாய் விரித்து முன்னே நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்.
அவள் பார்வையை அவன் தொடர்ந்த போது, கத்தி,கம்பு,அருவாள் –என இன்ன பிற ஆயுதங்களோடு கூட்டமாய்ப் பலர் முன்னும்,பின்னுமாய் பேருந்தை வளைத்திருந்தனர்.
குழப்ப முகங்கள் புலம்பத் துவங்கிய நொடி,
“பஸ்ஸைக் கொழுத்து டா எலேய்!! எஞ்சாதிக்காரன் மேல கையை வைச்சா என்னாகுமுண்டு இந்த ஊர்ப்பயலுகளுக்குத் தெரியட்டும்” – என ஆவேசமாய் ஒருவன் குரல் கொடுத்ததும், நொடியில் நிலைமை மாறி விட, பஸ்ஸை விட்டு அனைவரும் பதறியடித்துக் கீழிறங்க முற்பட்டனர்.
இயற்கைக் காற்றுக்கும்,இரைச்சல் இல்லா வாழ்க்கைக்கும் பேர் போன கிராமங்களை சாதி என்கிற பெயரில் கலப்படமாக்கும் சல்லிக் *******-களை நினைத்து ஆத்திரம் மேலோங்க, பல்லைக் கடித்தபடி எரிச்சலோடு எழுந்து நின்றவனுக்கு, சட்டையை மடித்துக் கொண்டு சண்டைக்குச் சென்று விடும் வேகம் தான்! ஆனாலும் அடக்கி.. முட்டைக் கூடையோடுத் தடுமாறிக் கொண்டிருந்தப் பெரியவருக்குக் கை கொடுத்துக் கீழிறக்கினான்.
“எலேய் ******* பயலுகளா, சண்டை போட நினைக்கிறவிங்க ஆத்துப் பக்கமோ,கிணத்துப் பக்கமோ போய் மல்லு கட்டிக்கிட்டு சாக வேண்டி தான டா?, சும்மா போற சனத்துக் கிட்ட என்னத்துக்கு டா உங்க வீரத்தைக் காட்டுறீங்க?,” – பெருசு பொக்கை வாயுடன் சத்தமிட்டபடி வண்டியை விட்டுக் கீழிறங்க,
“நாக்கு செத்த காலத்துல நாலு பக்கத்துக்கு வசனம் பேசுறான் பாரு கிழட்டு நாயி!” – என்ற ஒருவன் கூடையோடு சேர்த்து அவரைக் கீழே இழுத்துத் தள்ளியதில்.. முட்டைகளனைத்தும் நாலா புறமும் சிதறி விழுந்தது.
“படுபாவிப் பயலுகளா!, ஒரு நாள் வியாபாரத்தையும் ஒழிச்சுக் காட்டிப் போட்டானுங்களே” – என்றபடி பெருசு நெற்றியில் அறைந்து கொள்ள, கடுப்பாய் நோக்கியவன், கோப மிகுதியில்.. பெரியவரைக் கீழே தள்ளியவனின் நெஞ்சில் ஓங்கி மிதித்தான்.
ஆனால் மறு நொடி அவன் அடித்தவனைச் சுற்றி நின்ற அத்தனை பேரும் மிதித்த மிதியில்.. பஸ் டயரில் முகம் அழுந்த, நெற்றியில் வழியும் ரத்தத்துடன் கீழே கிடந்தான்.
கண்ணை மூடிப் பல்லைக் கடித்து ஆத்திரத்தை அடக்கியவன், விழி திறக்கையில் கூட்டம் பெருகியிருந்தது.
அநேகமாக, சச்சரவுக்குட்பட்ட இரண்டு சாதியினரும் ஒன்று கூடியிருக்க வேண்டும்! கண்ணில் படுபவனையெல்லாம் கண்டமாக்குபவர்களைக் கண்டு கலவரமாகி, அவன் எழ முயற்சிக்கையில் பலர் அவனைத் தார் ரோடாக எண்ணி ஏறி,மிதித்து செல்ல.. கஷ்டப்பட்டு முதுகை நிமிர்த்தி அவன் எழுந்து அமர்கையில், கூட்டத்தைத் தாண்டி நான்கைந்து பேர் சோளக்காட்டுக்குள் அவசரமாய் ஓடிச் செல்வது தெரிந்தது.
ஓடுபவர்களின் பின்னே.. காற்றிலாடியபடிப் பச்சை நிறத் தாவணி!
திடுக்கிட்டு ஒரு நொடி இமை விரித்தவன், உற்று நோக்குகையில் அவர்களது கைகளில் துள்ளிக் கொண்டிருந்தது அவன் ரசித்த கரிசல்காடு!
நொடியும் தாமதிக்காமல் விழுந்தடித்துக் கொண்டு ஓடியவனின் கண்களில் ஒடிந்த கால்களோடு அலறிக் கொண்டிருந்த முட்டைப் பெரியவர் கடந்து சென்றார்.
தோல் உரிந்து ரத்தம் சொட்ட எரியும் முதுகுடன், சோளத்தட்டைகளின் இடையே தட்டுத்தடுமாறி ஓடியவனின் இடது கை விரல்கள் நசுங்கி வீங்கிப் போயிருந்தது. கிழிந்த சட்டையும்,புடைத்த நெற்றியுமாய் தடதடத்த இதயத்துடன் அவன், அந்தக் கும்பலை நெருங்கிய போது அங்கிருந்த ஆலமரத்தினடியில் தன் உள்ளுறுப்பைக் காத்துக் கொள்ளும் உத்வேகத்துடன் போராடிக் கொண்டிருந்தாள் அந்தக் கருப்பழகி!
அவள் யாரோ ஒருத்தி தான்! ஆனால் அவளைக் காக்க வேண்டிய கடமை அவனுக்கிருக்கிறது! அது.. இயற்கை அவனுக்களித்த பொறுப்பு!
அவளை விட பலம் பொருந்தியவனாய் அவள் இனத்தைச் சேர்ந்த ஒருத்தி அவனைப் படைத்ததற்காக அவன் செலுத்தும் நன்றிக்கடன்!
கண்ட காட்சி மூளையைச் சென்றடையும் முன், பாய்ந்திருந்தான் ஆக்ரோஷமாய்! அவன் வேகத்துக்குப் பலியானது, ஐவரில் ஒருவனது கபாலம்!
அலறலுடன் கீழே விழுந்தவனைக் கண்ட மற்ற நால்வரும் இவனை ஆத்திரத்துடன் அடித்து நொறுக்க, மங்கிய மூளையுடன் மயக்கத்திற்குச் செல்லவிருந்த உடலை இழுத்துப் பிடித்து வைத்து எவ்வளவோ எதிர்த்துப் போராடியும், நால்வரின் உடல் பலத்தின் முன்பு ஒற்றையாளான அவன் தோற்றுப் போக.. கடைசியில், தப்பிக்க முடியாது சிக்கிக் கொண்டவளைக் கண்டபடி, நினைவிழந்துச் சரிந்து விழுந்தான்.
காட்டெருமைக் கூட்டத்தின் நடுவே நசுங்கி,நைந்துத் தன் கம்பீரமிழந்த சிங்கத்தின் கடைசி கர்ஜனையாய் அவளது குரல் அவன் காதுக்குள் ஒலித்தது.
விடாது ஒலிக்கும் குரல் தந்த இயலாமையில் தன் காதுகளை அழுந்த மூடிக் கொண்டு புரண்டவன், தடாலெனக் கீழே விழுந்தான்.
தரையை முட்டி எழுந்தமர்ந்த போது அவனது உடல் ரிதத்துடன் ஆடிக் கொண்டிருந்தது.
சுற்றி சுற்றி நோக்கியவனுக்குத் தான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பது புரிய, பெருமூச்சுடன் இருகைகளால் முகத்தை அழுந்தத் தேய்த்துக் கொண்டான்.
அவன் விழுந்த சப்தத்தில் அரண்டு எழுந்த அவனது நண்பன் விருமன், வியர்த்துப் போய் அமர்ந்திருந்தவனின் தோளைத் தொட்டு “என்னடா?” என்றான் மெல்லமாய்.
ஒன்றுமில்லையென்பது போல் தலையாட்டியவன் எழுந்து இருக்கையில் அமர,
“நீ ஒறங்கிட்டியோ-ண்டு நினைச்சுத்தேன் டா நான் கண்ணசைஞ்சேன்” என்றான் விருமன் கவலையாய் அவனை நோக்கியபடி.
“ஒறக்கத்துலதேன் உருண்டுட்டேன்! ஒன்னுமில்ல! நீ படு”
“……..” – பதில் கூறாதுத் தன் முகம் பார்த்தவனிடம்..
“பட்றா” – என்று அவன் அதட்ட.. பெருமூச்சுடன் கண்களை மூடினான் விருமன்.
நண்பனை ஒரு பார்வை பார்த்தபடித் தானும் இருக்கையில் சாய்ந்த ஆரணனுக்கு அதன் பின்பு தூக்கம் தூரப் போனது.
உறக்கமின்மை! சில வருடங்களாய், இது வழக்கம் தான்!
இயலாமை கொடுக்கும் இம்சையின் வெளிப்பாடு!
உதிர்ந்து,மடிந்து போன பூவொன்று நினைவுபடுத்தும் தன் கையாலாகாத்தனத்தின் நிலைப்பாடு!
ஆண் எனப் பெயர் சூட்டி அழகு பார்த்தத் தமிழின் ழகரத்தைக் காக்க முடியாது, தோற்றதன் வலி!
அவள் ழகரத்தைப் போன்றவள்! ழகரம் தமிழுக்கான கம்பீரம்! அவள்.. மனித இனத்துக்கான கம்பீரம்!
அவள் யாரோ ஒரு ஆணின் அன்பு மகளாயிருக்கலாம்! காதலியாய் இருக்கலாம்! தோழியாய் இருக்கலாம்!
தன் பேரன்புக்குரியவள், தன் இனத்தைச் சேர்ந்த சிலரால் தோற்கடிக்கப்பட்ட நிலையை, அந்த ஆண் என்பவன் எப்படி உணர்வான்?
ஆம்! அது வெறும் பலப் போட்டி தான்! அந்த நிகழ்விற்கு கற்பழிப்பென்று அலங்காரமாய்ப் பெயர் வைக்க விரும்பவில்லை அவன்!
மகனை விட மகள் மீது அதிக அன்பைப் பொழியும் தந்தைகள் நிறைந்த உலகு இது! துப்பட்டா விலகினால் கூட கண்டிப்பாய்ப் பார்க்கும் பாசமிகு அண்ணன்கள் இங்கு அதிகம்! தாமதமாக வீடு திரும்புகையில் துணையாய் உடன் வரும் தோழர்கள் பலர் உண்டு இங்கே!
அவளை அன்பாய்,மரியாதையாய்,கௌரவமாய்,சகமனுஷியாய் நடத்தும் ஒரு ஆண், இந்த வன்முறை நிகழ்வை எப்படி சகித்துக் கொள்வான்?
பால் உறுப்பைக் கண்டதும் பாயத் துடிக்கும், ‘ஆண்’ என்ற போர்வையிலிருக்கும் விலங்கினங்களைப் பற்றி அவன் விமர்சிக்க விரும்பவில்லை!
ஆனால் அடுப்படியில் எலி அடிப்பதிலிருந்து தொடங்கி, ‘அவன் ஆண் பிள்ளை, பலமானவன், அவன் தூக்குவான் அரிசி மூட்டையை’ என வீட்டுப்பெண்கள் அவனை ஆண் என முன்னிருத்திய வேளைகளிலெல்லாம், தன் பாலினத்தைத் தாண்டிக் கர்வமாய் உள்ளே வளர்ந்து நின்ற பொறுப்புமிக்கப் பாதுகாவலனால் இதை எப்படி சுலபமாகக் கடந்து விட முடியும்?
அந்த உன்னத நிகழ்வின் உள்ளம்சம் புரியாமல், அதை வெறும் ஒத்த உறுப்பின் பத்து நிமிஷ திருப்தியாகக் கணக்கிடும் தெருநாய்களின் குதறல்களை அவள் எங்கனம் சகித்திருப்பாள்?
எத்தனை வலித்திருக்கும்? எப்படிப் பொறுத்திருப்பாள்?
வலி தாங்கி இனம் பெருக வழி செய்பவள் அவள்! வலி அவள் இனத்திற்குப் புதிதல்ல தான்!
ஆனால்.. தானாய் விரியும் மலர் மொட்டு ஒன்று பொறுக்க வேண்டிய வலியை, சில தரங்கெட்டத் தா****-களின் திறமற்ற செயல் கொடுப்பதை எப்படிச் சகிக்க முடியும்?
காத்து விடுவான் எனக் கடைசி நொடி வரை அவனை அவள் நம்பியிருப்பாள்! அவன், அவளுக்குத் துரோகம் இழைத்து விட்டான்!
தன் கையாலாகாத்தனத்தினால் கடமையைத் தவற விட்டு விட்டான்!
காக்க முடியாது போன உயிரின் கடைசி நிமிட அரற்றல்களைக் காதாரக் கேட்ட பின்னும், கண் மூடி அவனால் நிம்மதியாய்த் துயில் கொள்ள முடியுமா?
குற்ற உணர்ச்சியின்றி அவள் இனத்தில் ஒருத்தியையேனும் இனி அவனால் நிமிர்ந்து பார்க்க முடியுமா?,
அழியும் உலகை அரைக்கண்ணில் கண்ட நிமிடங்களை அரை நொடியேனும் மறந்து வாழ்ந்திட முடியுமா?
ஆயுதமின்றி அவளைப் போட்டியில் இறக்கி வேடிக்கை பார்த்த இயற்கை, அவளுக்குச் செய்த துரோகத்தை எண்ணிக் குறையாத ஆத்திரத்தோடுக் கொதித்துக் கொண்டிருக்கும் ரத்தத்தின் தகிப்பை எப்படித் தணிப்பான்?
வருடம் இரண்டு கடந்த பின்னும் மங்காது,மறையாது உள்ளேயே உறுத்திக் கொண்டிருக்கும் அந்நிகழ்வின் தாக்கத்திற்குத் தன் உறக்கத்தைக் காணிக்கையாகக் வைத்து விட்டு.. கொண்ட பாவத்தைக் கரைக்கக் குளம் தேடி அலைந்து கொண்டிருக்கிறான் அவன்.
கள்ளந்திரி, மதுரை.
“பங்காளி! அலுப்பு தீர ஆத்துல ஒரு குளியலைப் போட்டுப்புட்டு அப்புறம் வீட்டுக்குப் போனா என்னாடா?”
ட்ரைன்,பஸ் என மாறி மெட்ராஸிலிருந்து ஊர் வந்திறங்கிய பின், மண்ணின் மணத்தை சுவாசித்ததும் நடையிலும்,பேச்சிலும் புத்துணர்ச்சி பாய, பொங்கிய உற்சாகத்துடன், நண்பன் புறம் திரும்பி கேள்வி கேட்டான் விருமன்.
அவனிடமிருந்தத் துள்ளலின் பிரதபலிப்பு சிறிதுமின்றி, நேராய்ப் பார்த்தபடித் தோளில் பையுடன் நடந்து கொண்டிருந்த ஆரணன், “இப்பத்தேன் ஆத்தா கையால ஆட்டுக்கறிக் குழம்பைத் தின்னுப்புட்டு அக்கடா-ண்டு படுக்க ஆசையா இருக்கு-ண்டு சொன்ன?” – எனக் கேட்டான்.
“அது… ரொம்ப நாள் கழிச்சு ஊர்ப்பக்கம் வாரோமா, அதேன்ன்.. கிணத்து மேடா, கிடாக்கறிக் குழம்பா-ண்டு ஒரே குழப்பமா இருக்கு பங்காளி” – கையை நீட்டி சோம்பல் முறித்துப் பின் காலரை தூக்கி விட்டுக் கொண்ட விருமனை நோக்கிய ஆரன் சிரித்து,
“பல்ல விளக்கிட்டுப் பொறுமையா யோசிப்போம் பங்காளி!” எனக் கூற..
“சரியாச் சொன்ன பங்காளி! சுத்தம்தேன் சோறு போடும்” என்றவன் ஏதோ பாட்டை முணுமுணுத்தபடியே நடையைத் தொடர்ந்தான்.
“அடியாத்தே! இதென்ன?, ஊர் காணாத சனமெல்லாம் வீதி உலா வந்துக்கிட்டிருக்கு??,பங்காளிக ரெண்டு பேரும் பையோட எங்கடா வந்தீக?” - தோளில் பையோடு ஊருக்குள் நுழைந்த இருவரையும் வாயில் வேப்பங்குச்சியுடன் மந்தையில் அமர்ந்திருந்த பெருசு ஒன்று கேள்வி கேட்க..
“கிழவனுக்குக் குசும்பப் பாரு” என்று முணுமுணுத்த விருமன் “உன் வீட்டுக்குத்தேன் தாத்தா!” என்றான்.
“என் வீட்டுக்கா? அதுசரி”
“ஆமா! கடமை-ண்டு ஒன்னு இருக்குல்ல?, அதைத் தவறாம செய்யனுமில்ல?”
“என் வீட்ல உனக்கென்னாடா கடமை?”
“ம்ம்ம், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சின்னப்பட்டி சின்னாத்தாளோட கம்மாயோரமா நீ கரை ஒதுங்குன கதையை சீனியம்மாட்ட போட்டுத் தர்றதுதேன்.” எனச் சொல்லவும்..
“ஆமா! நீ வந்து போட்டுக் கொடுப்ப-ண்டுதேன் அவ காத்துக் கிடந்தாளாக்கும்! போடா எலேய்! பத்தே நாள்-ல விஷயத்தைத் தெரிஞ்சிக்கிட்டு, என் சின்ன மவன் வீட்டோட தொலஞ்ச சிறுக்கி, இன்னைக்கு வரைக்கும் ஊர்ப்பக்கம் தல வைச்சுப் படுக்கல” – வேப்பங்குச்சியை வாயிலிருந்து எடுத்து விட்டு வீராவேசமாய் பேசிய பெருசைக் கண்டு.. ஒரு அடி பின்னே நகர்ந்த விருமன்,
“எலேய் என்னாடா, என்னமோ, நான்தேன் சின்னாத்தாளோட கரை ஒதுங்குனது மாதிரி பெருசு என்-ட்ட எக்கிட்டு வர்றாரு” – என்று முணுமுணுத்தான்.
“அப்ப கஞ்சிக்கு என்னா தாத்தா பண்ற?” - ஆரணன்.
“சின்னாத்தா தெனம் சிக்கன் செஞ்சு போடுமாயிருக்கும்” – விருமன்
“அந்த சிறுக்கியைப் பத்தி பேசாதீங்கடா டேய்!” – பெருசு கோபமாய் வேப்பங்குச்சியைத் தூக்கி எறியவும்..
“அடியாத்தே! அப்ப கட்டுனதும் போச்சு! கரை ஒதுங்குனதும் போச்சா?”– என்ற விருமன் நமுட்டுச் சிரிப்புடன் நிற்க.. எரிச்சலாகிப் போன பெருசு,
“போங்கடா பொசகெட்டப் பயலுகளா!” –என்று துண்டை உதறிக் கொண்டு புலம்பியபடியே முன்னே நடந்து விட.. புன்னகை முகங்களுடன் வீட்டை நோக்கி நடை போட்டனர் இருவரும்.
“அடியேய் மீனாட்சி! நீ பெத்ததும்,வளர்த்ததும் சோடி போட்டு வர்ற சோக்கப் பார்றியேய்ய்ய்…”
-இருவரையும் ஒன்றாகக் கண்டு விட்ட அண்டை வீட்டு சிந்தாமணிக் கிழவி கொல்லையில் நின்றிருந்த விருமனின் அன்னை மீனாட்சியிடம் குரல் கொடுக்க, வேக வேகமாக வாசலை நோக்கி ஓடி வரும் அன்னையின் காலடி சத்தத்தைக் கேட்டபடி வீட்டினுள் நுழைந்தனர் இருவரும்.
முதலில் உள் நுழைந்த விருமனைக் கிட்டத்தட்ட இடிப்பது போல் முன்னே ஓடி வந்து நின்றவளைக் கண்டு ஒரு அடி பின்னால் சென்றவன், நிமிர்ந்து அவளைக் கீழிருந்து மேல் வரை நோக்கி சைஸாய் புருவத்தைத் தூக்கினான்.
அந்நேரம் சரியாக..
“ஆட்டுக்காலை அடுப்புக்குள்ள கருகவிட்டுப்புட்டு போனவ எந்த சிறுக்கி டி?,”
-சோலையம்மாளின் குரல் கொல்லையில் முழு சத்தத்துடன் ஒலிக்க, வியர்த்துப் போன நெற்றியும், எண்ணெய் வழியும் முகமுமாய் விருமனின் முன்னே நின்றிருந்த அவள்-அகலருவி, ‘அய்யோ’-வென உதட்டை கடித்தாள்.
“அய்யோ அய்யோ! கரிக்கட்டையா கருக்கி வைச்சிருக்கிறாளுகளே!, திங்க மட்டும் வாங்கடி, வாய்ல தீயை வைக்குறேன்”
-சோலையாத்தாளின் குரல் தொடர்ந்து சபித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு அவள் பிடரியைச் சொரிவது கண்டு..
“கிழவி உனக்குத்தேன் தோரணம் கட்டுது போல” – என்றான் விருமன் நக்கலாய்.
“அம்மணிக்கு இதெல்லாம் புதுசா?” – எனக் கேட்டபடி ஆரன் இருவரையும் கடந்து உள்ளே செல்ல.. தூக்கிச் செருகியிருந்தத் தாவணியை எரிச்சலோடு இறக்கி விட்டபடி, வழியை விட்டு விலகி நின்றாள் அவள்.
“எலேய்… ஆரணா.. விருமா..” – என்றபடி ஆசையாய் ஓடி வந்த மீனாட்சியின் குரலை மீறி.. சோலையம்மாள்,
“ஏன் டி ஆட்டுக்காலை வாட்ட சொன்னதுக்கு, அம்புட்டு வியாக்ஞானம் பேசுனியே!, காலைக் கருக விட்டுப்புட்டு எங்கடி போய்த் தொலைஞ்ச?” –வந்தவர்களைக் கண்டுகொள்ளாது அகலருவியை நோக்கி சத்தமிட..
கொதித்துப் போனவள் “ஏய்ய் கிழவி, வரட்டித் தட்டப் போ-ண்டு வடக்குப் பக்கமாக என்னைய அனுப்பிப் போட்டு, கால வாட்டல,கைய வாட்டலண்டு காலங்கார்த்தால என் கூட உரண்டை இழுக்கிறியா நீயி?” – என பதிலுக்குக் கத்த..
இது பாட்டிக்கும்,பேத்திக்கும் இடையேத் தினம்,தினம் நடக்கும் வாய்க்கால் தகராறென்பதால் இருவரையும் கண்டு கொள்ளாமல், ஆரணனையும்,விருமனையும் இழுத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தார் மீனாட்சி.
“காலைல காக்கா திண்ணைக் கிட்ட நிண்டு 3 தடவ கரையுறப்பயே நினைச்சேன் டா! என் பயலுக இன்னிக்கு வரப் போறாய்ங்கண்டு! எம்புட்டு நாளாச்சு டா உங்க ரெண்டு பேரையும் பார்த்து! வருஷக்கணக்குல வீட்டுப்பக்கம் வர முடியாத அளவுக்கு அப்பிடி என்ன டா படிப்பு படிக்குறீங்க?, இனி இப்படியெல்லாம் பண்ணாதீங்கடா”
முகம் வருடித் தோள் தடவிக் கொஞ்சும் அன்னையைக் கண்டபடி ஆரணன் அளப்பரியாப் புன்னகையுடன் அவர் தோளைப் பற்றிக் கொண்டு நிற்க, விருமனோ உதட்டைச் சுழித்து,
“ஏம்மா, வேலையத்துப் போய், காக்கா எத்தனை தடவை கரையுதுண்டு பொறுமையா எண்ணிப் பார்த்துட்டிருந்தியாக்கும்?,” –என நக்கலடித்தான்.
“நாங்கதேன் இன்னைக்கு வரப் போறதா போன வாரமே லெட்டர்ல எழுதியிருந்தோம்ல பெரிம்மா!” - ஆரன்.
“எனக்குக் கிழமை சரியா நினைவில்ல ராசா! இந்தக் கழுத அகலுக் கிட்ட கடுதாசியைப் படிச்சுப் பார்த்துத் தேதியை சொல்லுடிண்டு கேட்டா, ரெண்டு ரூவா கொடு,படிச்சுக் காட்றே-ண்டு பேரம் பேசுறா டா! ஒவ்வொரு தடவையும் லஞ்சம் கொடுத்தாத்தேன் டா உங்க கடுதாசியைப் படிச்சுக் காட்டுறா!”
“அப்பிடிக் காசை வாங்கிட்டுப் போய் என்ன செய்யுது அது?” – விருமன்.
“பூவாயியக்கா பொட்டிக் கடைல புளிப்பு மிட்டாய் வாங்கித் திங்குமாயிருக்கும்!” – என்று பதில் கூறிய ஆரனின் தோளில் தட்டிச் சிரித்த மீனாட்சி,
“சரியாத்தேன் சொல்ற ராசா! சூது,வாது இல்லாதவ டா அவ! ஏதோ அவளா இருக்கங்கண்டு, அவ ஆத்தாளையும்,அப்பத்தாளையும் சகிச்சுகிட்டுப் பொறுமையா போறா” – என புலம்பத் தொடங்க..
“அய்யய்ய, உங்குடும்பக் கதையைக் கேட்கத்தேன் மெட்ராஸ்ல இருந்து நாங்க ரெண்டு வருஷம் கழிச்சு வந்தோமாக்கும்?, போய் சோத்தை வடிம்மா, போம்மா” – என்ற விருமன் அருகேயிருந்த செம்புத் தண்ணீரை எடுத்து வாய்க்குள் ஊற்றிக் கொப்பளித்தபடியே கொல்லையை நோக்கி நடந்து விட்டான்.
அவன் நகர்ந்ததும் ஆரனின் தலை கோதிய மீனாட்சி “நீ சவுக்கியம்தேன ராசா?” எனக் கேட்க.. பதிலின்றி மெல்லப் புன்னகைத்தான் அவன்.
நெற்றி தொடங்கி புருவத்தைக் கிழித்து விழியோரம் வரை நீண்டிருந்தத் தழும்பை வருடியவர், “அந்த சொக்கன் உன் மனக்கவலையை சீக்கிரமே தீர்த்து வைக்கனும்” எனக் கூறி அவன் கன்னம் தடவி திருஷ்டி கழித்தார்.
கொல்லைக்கு வந்த விருமன் அங்கே கொடியில் தொங்கியக் கைலியை எடுத்துக் கட்டியபடி, அடுப்பின் முன் அமர்ந்திருந்த சோலையாத்தாளின் அருகில் சென்றான்.
“ஆத்தா..”
“வா ராசா! பட்டணத்துக்குப் படிக்கப் போனவிங்க, சோடிகளோட வந்து நிற்பீங்கண்டு பார்த்தா, நீங்க ரெண்டு பேருமில்ல சோடி போட்டு திரும்பி வந்திருக்கீங்க?” – எரியும் கண்களை முந்தானையில் தேய்த்தபடி ஆட்டுக்காலை அடுப்பில் வாட்டிக் கொண்டிருந்தது கிழவி.
‘எகத்தாளத்தப் பாரு’
“என்னா பண்றது! எனக்கு அவன்,அவனுக்கு நான்-ண்டு இருக்குற வரைக்கும் எங்க ரெண்டு பேத்துக்கும் சோடி அமையாது போல ஆத்தா” – தானும் ஒரு காலை எடுத்து வாட்டியபடி விருமன்.
“உன் கூட்டாளி பொழப்பு எப்பிடியோ தெரியாது எனக்கு! ஆனா ஒன்னுக்கு இரண்டு அயித்த மவளுகளை வைச்சுக்கிட்டு நீ என்னத்துக்கு ராசா இப்பிடிப் பேசனும்?” – கிழவி ஓரக்கண்ணில் அவனைப் பார்த்தபடி பதில் கொடுக்க,
பொறுமையாய்க் காலை வாட்டியவன் “எனக்கு மட்டுமா ஆத்தா அவளுக அத்தை மகளுங்க?” என்றான்.
அவனது கேள்வியில் முகத்தை அருவெறுப்புடன் சுழித்த சோலையம்மாள்,
“பின்ன?, அந்த சீக்காளி சிறுக்கிக்குப் பொறந்தவனையெல்லாம் மாப்பிளை-ண்டு நாற்காலில உட்கார வைக்க முடியுமா?, அவன் ஆத்தா குலம் என்ன, வகை என்ன?, அவ ரத்தம்தேன அவனுக்குள்ளயும் ஓடுது?, உன் சித்தப்பன்தேன் புத்தி கெட்டுப் போய் தப்பி விழுந்தான்னா, என் பேத்தியை நான் தெரிஞ்சே தள்ள முடியுமா?, நாடகக்காரி! வசியம் வைச்சு வளைச்சிட்டுப் போன கேடு கெட்ட சிறுக்கி அவ! அவ கூட வாழ்ந்து உன் சித்தப்பன் என்னத்தக் கண்டயான்?, சீக்குல கிடந்தவ மூத்திரத்தைத் தொடச்சதைத் தவிர?, இப்ப இந்தப் பய மொகரை கூட அவன் ஆத்தா படுக்கைல பாதி உயிராக் கிடந்தப்பப் பார்த்தா மாதிரி உயிரில்லாமத்தேன் இருக்கு! இவன் இந்த உலகத்துல இன்னும் எத்தனை நாள் தங்குவானோ” – என மேலும் என்னென்ன பேசியிருப்பாரோ!
“ஆத்தா….” – என்றபடிக் கோபமாய் விருமன் எழுந்து நின்ற வேளை.. பொல்லென அகலருவி ஊற்றிய வாளித் தண்ணீர் சோலையம்மாளை இடுப்பு வரை நனைத்திருந்தது.
பதறி எழுந்த கிழவி “அடியேய் செத்த சிறுக்கி! கண்ணைப் பொடனிலயா டி வைச்சிருக்க?, ஆளு உட்கார்ந்திருக்கிறது தெரியாம எங்கிட்றி தண்ணீயை ஊத்தி விட்றவ?” என்று காட்டுக்கத்தலாய்க் கத்தத் துவங்க..
“ம்ம்ம், நீ வாய்க்கரிசி போட்ற வரைக்கும் வாட்டிக்கிட்டு உட்கார்ந்து கிடப்ப! நான் அதுவரைக்கும் துணி அலசுன தண்ணியை தூக்கிக்கிட்டே நிற்க முடியுமா?, தண்ணீ போற இடத்துல தாட்டியமா உட்கார்ந்துக்கிட்டு, பேச்சைப் பாரு” – என்றவள் வாளியை நொட்டெனக் கீழே வைத்து விட்டுக் கிழவி மேலும் கத்தும் முன் விறுவிறுவென வீட்டுக்குள் ஓடி விட்டாள்.
விடாது புலம்பியபடி சேலையை உதறிய கிழவி, தன்னை முறைத்த வண்ணம் நின்றிருந்த விருமனிடம்,
“இன்னும் என்னா ராசா?, உம்பங்குக்கு நீயும், அந்த சீக்காளி மகனுக்கு ஏத்துக்கிட்டுப் பேசி என் நெஞ்சுல தண்ணியை ஊத்து” என்று கத்த.. எரிச்சலுடன் நெற்றியைத் தேய்த்தவன்,
“உம் பேச்சு சரியில்ல ஆத்தா! சீக்காளி,சீக்காளிங்குறியே!, இந்த வீட்லயே பெரிய சீக்காளி உன் புருஷன்தேன்றதை மறந்துட்டியா?, குடிச்சுக் குடிச்சே நோய்ல படுத்து, புள்ளையோட உன்னைய ஒத்தைல விட்டுப் போனவன் அந்தாளு!, நீ என்னைக்கு இங்க வந்து சேர்ந்தியோ, அன்னைல இருந்தே பிரச்சனைதேன்! அப்டிப் பார்த்தா, இந்தத் தரித்திரமெல்லாத்துக்கும் ஊ-னா சுழி போட்டதே நீதேன்” – என்று திட்ட..
“ஆமா லேய்!, இந்த வீட்டைப் பிடிச்ச பீடை,தரித்திரம் அத்தனையும் நான்தேன்! ஆனா உன் சிநேகிதன் ரொம்ப அதிர்ஷ்டக்காரன்”– என்றவர் மூக்கைச் சீந்தியபடியே நகர்ந்து விட.. கிழவியை அவன் கொலைவெறியுடன் நோக்குவதைக் கண்டபடி கிணற்றடிக்கு வந்தார் அகலருவியின் தந்தையும்,சோலையம்மாளின் ஒரே மகனுமான சங்கிலியன்.
மாமனைக் கண்டதும் மேலும் எரிச்சல் மண்ட, முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் விருமன்.
இங்கே நடந்த அத்தனை சம்பாஷணைகளுக்கும் காரணமான ஆரனோ, மீனாட்சி பசும்பாலில் போட்டுக் கொடுத்த ஒரு கோப்பைத் தேநீரைக் குடித்து விட்டு, வாசலில் கட்டியிருந்த நாயுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.
அதன் பின்பு சாவகாசமாக கோழி,ஆடு,மாடு,தவிடு,புண்ணாக்கு என வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருந்த இருவரையும் மீனாட்சி காலை உணவுக்காக அழைக்க, வாயில் ப்ரஷ்ஷுடன் கொல்லையில் நின்றான் ஆரன்.
பொறுக்கித் தின்றபடி சுற்றிக் கொண்டிருந்த நாட்டுக்கோழிகளைக் வேடிக்கை பார்த்தபடி மாதுள மரத்தினருகே நின்றவனுக்கு, அருகிலிருந்த அடுக்களையில் கிழவியும்,பேத்தியும் மீண்டும் சண்டையிடும் குரல் கேட்டது.
பத்து வயதிலிருந்து பார்க்கிறான் அவன், கிழவிக்கு அவளிடம் மட்டுமல்ல, எவரிடமும் ஒத்துப் போகாது.
“கிழவி என்னால அம்மியெல்லாம் அரைக்க முடியாது! பட்டாளத்துக்காரர்தேன் அரவை மெஷின் வாங்கி போட்ருக்கிறார்ல?, அதுல சொகுசா அரைச்சா என்ன உனக்கு?” – வழக்கம் போல் கிழவியுடன் வாக்குவாதத்தில் அகலருவி.
“மாப்பிள்ளையா வரப் போறவனுக்கு மெஷினுல அரைச்சுப் பொங்கிப் போட்றதா?, பொச கெட்டவளே! போய் அம்மில அரைச்சிட்டு வாடி!”
“மாப்பிள்ளையா??” – வாயைப் பிளந்தபடி அகலு.
“ஆமா! நீயோ,உன் தங்கச்சியோ, எவளாவது ஒருத்தி என் அண்ணன் பேரனுக்கு வாக்கப்பட்டாகனும்”
“ஆமா, வாக்கப்பட்டாகனும்! ஆனா, ஆத்தா.. எனக்கு பனிக்கரடி கலர்ல புள்ள பெத்துக்கனுமுண்டு கொள்ள நாள் ஆச! அதனால இந்தக் கருப்பட்டியை எந்தக் கிறுக்கன்ட்டயாவது தள்ளி விட்டுப்புட்டு, உன் சின்னப் பேத்தி புவியரசியை எனக்குக் கட்டிக் கொடு” – கிழவிக்குச் சரியாகப் பேசியபடி விருமன் வந்து நின்றான்.
“கருப்பட்டியாம்ல?” என்ற அகலு, ‘பதினொன்னாங்க்ளாஸ் படிக்குற புள்ளைக்குப் பாடை கட்டப் பார்க்குறியான் பாரு’ என்று முணுமுணுத்துப் பேச்சுவாக்கில் கிழவி மசாலா அரைக்க வேண்டிக் கையில் வைத்திருந்தக் கிண்ணத்தைத் தட்டி விடப் பார்க்க, வேகமாக அதை எட்டிப் பிடித்தவன்,
“பொறாமைல நீ பொரிஞ்சு நிற்குறது புரியுது எனக்கு! அதுக்காக சோத்துல சூனியம் வைக்காதடி!” எனக் கூற..
“வதக்கி வைச்சத வேணுமின்னே தட்டி விடப் பார்க்கிறியாடி?, செத்த சிறுக்கி! இடுப்பை வளைச்சு குனிஞ்சு,நிமிர்ந்து வேலை செய்யனுமுண்டா, வலிச்சிரும் இவளுக்கு!” என்று கிழவி திட்டியதும் விசுக்கென அவனிடமிருந்து கிண்ணத்தைப் பறித்தவள் அவனை முறைத்தபடியே கொல்லையை நோக்கிச் சென்றாள்.
“வந்ததுமே தொடங்கிட்டியா டா நீயி?” – என்று மீனாட்சி திட்டியதும் கைலியை மடித்துக் கட்டி, ஏதோ பாடலை முணுமுணுத்தபடியே அடுக்களையைச் சுற்றியவன், கண்ணில் பட்டப் பொரிகடலை டப்பாவைத் திறந்து, கை நிறைய அள்ளி வாயில் போட்டுக் கொள்ள..
“நாறப் பய! பல்லு விளக்காம திங்குறதைப் பாரு” என்று அதற்கும் திட்டிய மீனாட்சியை முறைத்தபடியே சமையல் மேடையில் அமர்ந்தான்.
மாதுளமரத்தினருகே பல் தேய்த்துக் கொண்டிருந்த ஆரன், தங்,தங்கென நடந்து வந்து அம்மி முன்னே அமர்பவளைக் கண்டான்.
அவனைக் கண்டு கொள்ளாது அம்மியைக் கழுவியவள், கூடவே கிழவியையும் கழுவி ஊற்றியபடி கிண்ணத்திலிருந்ததைக் கொட்டி நச்சென கல்லை வைக்கையில், தேங்காய்ச் சில்லொன்று துள்ளிப் பத்தடித் தள்ளி விழுந்தது.
பொறுமையற்ற மூச்சுடன் ‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’ என்றபடி அதைப் பொறுக்கி எடுத்து வந்து மீண்டும் அம்மியில் வைத்தவள், கல்லை அசைத்தாள். அரைபட்ட தேங்காய்களை விட, எட்டுத் திசையிலும் எகிறி விழுந்தத் துண்டுகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்க, அரைப்பதை நிறுத்தி விட்டு எரிச்சலுடன் அம்மியை வெறித்தாள்.
“எனக்கு அம்மி அரைக்க வராது-ண்டு தெரிஞ்சே, கிழவி வம்புக்குன்னே அத்தனையும் பண்ணுது!” – என்று புலம்பியவள் ஓரக்கண்ணில் அருகே நின்ற ஆரனை நோக்கினாள்.
பல் விளக்குவதை நிறுத்தி விட்டு ‘அட தெண்டக் கருமாந்திரமே’ என்பது போல் அவளை நோக்குபவனைக் கண்டு ரோஷம் பொங்க, பல்லைக் கடித்தபடி மீண்டும் அம்மிக்கல்லை அசைத்தாள்.
ரோஷம் வெற்றியைக் கொடுக்காது, தோல்வியைத் தழுவி விட, பரிதாபமாய் அமர்ந்திருந்தவளினருகே, வாயைக் கொப்பளித்து விட்டு முகம் துடைத்தபடியே வந்தான் ஆரன்.
சிதறிக் கிடந்த தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்தவன் அவளை “நகரு” என்று விட்டு நேர்த்தியாக அம்மி அரைக்கத் தொடங்க, ஒரு நொடி அவனை வியந்து பார்த்தவள், பின் காரியமானால் போதுமென்ற மனநிலையுடன் இடை,இடையே தண்ணீர் ஊற்றத் தொடங்கினாள்.
“மெட்ராஸ்ல அம்மி அரைக்கவெல்லாம் சொல்லித் தாராகளா என்ன?”
ஓரடி இடைவெளியில் அருகே அமர்ந்திருந்தவள் கேள்வி கேட்க, அவள் புறம் திரும்பாமல்,
“இது என்ன பெரிய வித்தையா?, கண்ணு பார்க்குறதை, கை செய்யனும்! நான்-லாம் பெரிம்மா முந்தானைக்குள்ள வளர்ந்தவன்டி!” என்றான் அவன்.
“நானும்தேன் கிழவி அரைக்குறதைத் தெனம் பார்க்குறேன்”
“பார்த்து என்ன பிரயோஜனம்? உனக்குத் தான் வாய் மயிரைத் தவிர எதுவுமே வேலை செய்யாதே!”
-அலட்டிக் கொள்ளாமல் அவன் கூறியதில் கடுப்பாகிப் போன அகல், “அரைச்ச வரைக்கும் போதும், இனி நான் பார்த்துக்கிடுறேன்! நகருங்க” என்றபடி அம்மியில் கை வைக்க.. மசாலாவோடு சேர்த்து அவள் விரலையும் அரைத்தவனைக் கண்டு ‘ஆஆஆஆ’-எனக் கையை இழுத்துக் கொண்டவள், அவனைக் கொலை வெறியுடன் முறைத்தாள்.
“நல்ல சோறு திங்க நாங்க, நானூறு கி.மீ கடந்து வருவோமாம்! இவ மசாலா அரைக்குறேன்ற பேர்ல அம்மியை அலற விடுவாளாம்! எந்திரிச்சுப் போடியேய்! போடி” என்று அவன் விரட்டும் நேரம்,
“ஏய் அகலு” என்ற மீனாட்சியின் குரல் கேட்டு இவனை வாய்க்குள் சபித்து விட்டு உள்ளே எழுந்து சென்றாள் அகலருவி.
இன்னும் அடுக்களையிலேயே அண்டக் கொடுத்து அமர்ந்திருந்த விருமனின் கையில் மீனாட்சி ஆட்டுக்கால் சூப்பை நீட்ட, கிண்ணத்தை வாங்கி வாயருகே கொண்டு சென்றவன் முகம், ஏகத்துக்கும் பளபளத்தது.
அடுப்புக் கூட்டி ஆத்தா வாட்டிய ஆட்டுக்காலின் மணம் மூக்கைத் துளைக்க, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மிதந்த சூப்பைப் பருகியவன் சொர்க்கத்தின் வாசலைத் தொட்டுக் கொண்டிருந்தான்.
அதன் பின்பு தலை வாழை இலையில் கறித்துண்டுகளுக்கு நடுவேக் குழம்பில் நனைந்திருந்த இட்டிலிகளை விழுங்கி, நாக்கில் கரையும் ஈரல் வறுவல்களை ஒரு கை பார்த்து, நல்லி எலும்பை உறிஞ்சித் தொண்டையை சுத்தப்படுத்தி விட்டு.. பெருத்த ஏப்பத்துடன் பந்தியை முடித்தனர் இருவரும்.
“பங்காளி, சொர்க்கமா இருக்கு டா”
-உண்ட மயக்கத்தில் உளறிய விருமனைக் கண்டு சிரித்த ஆரனும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தான்.
“அப்டியே ஊரைச் சுத்தி ஒரு நடையைப் போட்டுப்புட்டு வந்திருவோம் பங்காளி! இல்லாட்டி மதிய சோத்துக்கு வயித்துல இடமிருக்காது டா!” – அருகிலிருந்த குழாயடியில் அமர்ந்து மீன் கழுவிக் கொண்டிருந்த அகலைப் பார்த்தபடி ஆரணன் கூற..
தானும் அகலை நோக்கிய விருமன் “இந்தாடி கருப்பட்டி” என்றான்.
திரும்பி அவனை முறைத்தவளிடம்,
“என்ன பார்வையில தீ பறக்குது?” எனப் புருவம் உயர்த்தியவன் “மதியத்துக்கு மீன் மட்டும் தானா?” எனக் கேட்டான்.
கையிலிருந்த மீனை சொத்தென சட்டிக்குள் எறிந்து விட்டு “மூணு கிலோ கறியைத் தின்னுப்போட்டு செரிக்க முடியாம முக்கிட்டு நிண்டும் கூட, மதிய சோத்துக்கு என்னாண்டு நோட்டம் விட்றதைப் பாரு” என்று அவள் முணுமுணுத்ததும்..
“என்னாடி???” என்று எகிறிய விருமனின் தோளைப் பற்றி அடக்கி “அது ஒன்னுமில்ல பங்காளி, அவளுக்கு காஞ்சு போன இட்லி ரெண்டும், 4 துண்டு கறியும் தான் எஞ்சியிருக்கும்! அதுலயும் ரெண்டு எலும்புத்துண்டா போச்சு போல! கறி கிடைக்காத கடுப்புல கடுத்துப் போய் உட்கார்ந்து கிடக்கா! நீ கண்டுக்காத” – என்றான் ஆரன்.
இருவரும் தின்ன சோறு செரிக்கத் தன்னிடம் வம்பு வளர்க்கத் தீர்மானித்திருப்பதை உணர்ந்தவள், பதில் சொல்லாது முனகியபடியே மீன் சட்டிக்குள் தலையை விட்டுக் கொள்ள,
“வா பங்காளி!, பட்டாளத்துக்காரரை பார்த்துட்டு வருவோம்!” என்ற ஆரன், விருமனோடு முன்னே நடந்தான்.
வாசலை நோக்கி வருபவர்களைக் கண்டபடியே அகலருவியின் தங்கை புவியரசி உள்ளே வர,
“பு……….வி… புள்ள..” எனப் பெரிதாய் வாயைப் பிளந்த விருமன்,
“வயசுக்கு வந்தப்புறம் ஆளு மினு,மினுண்டு கண்ணைப் பறிக்குறியேடி” என்று நக்கலடிக்க, அவனை முறைத்துப் பார்த்தவள்,
“எனக்கு ஏற்கனவே ரெண்டு கண்ணு இருக்கு. உன் நொள்ளைக் கண்ணைப் பறிக்கனும்ண்டு எனக்கு எந்த அவசியமுமில்ல” என்று நொடித்துக் கொள்ள..
“அக்காளுக்கும்,தங்கச்சிக்கும் வாய் மயிறு மட்டும் வாடிப்பட்டி வரை போய்ட்டு வருதுடி” – என்றவனைக்கண்டு கொள்ளாமல் ஆரனிடம்..
“எப்ப மாமா வந்தீக?, நல்லாயிருக்கீகளா?” என்று புன்னகைத்தாள் புவி.
அவள் கேள்விக்குப் பதிலளிக்காமல் புன்னகைத்து அவள் தலையைத் தட்டிய ஆரன் “நல்லா வளர்ந்துட்ட” எனக் கூற..
“இன்னும் ரெண்டு இஞ்சு வளரனும்டி! அப்பத்தேன் மாமன் உசரத்துக்கு சரியா வர முடியும்! புரியுதா?” – விடாது வம்பு செய்த விருமனை முறைத்த வண்ணம் வீட்டினுள் சென்று விட்டாள் புவி.
வேஷ்டியை மடித்தபடியே நண்பனுடன் நடந்த விருமன்,
“ஆனா, அத்தை மகள்களும், ஆட்டுக்கறியும் ஒன்னு பங்காளி! ஆசைப்பட்டு அள்ளி,அள்ளித் திண்டு தொண்டை வரை நிரப்பச் சொல்லுது மனசு! ஆனா உள்ள இறக்குனப்புறம் செரிக்க வைக்கக் கஷ்டப்படுது உடம்பு” என்றான்.
“வாயை மூட்றா தத்துவப் புடுங்கி! சின்னப்புள்ளக் கிட்ட போய் விவகாரமா பேசிக்கிட்டு!”
“விவாகத்தைப் பத்தி பேசுறது விவகாரமான விஷயமா?, நம்ம அத்தை மகளுகளுக்கு நாமதேன்டா வாழ்க்கை குடுக்கனும்! அந்தக் கருப்பட்டி உனக்கு, இந்தக் காந்தக் கண்ணழகி எனக்கு” – பேரம் பேசியவனின் பேச்சில் எரிச்சலுடன் திரும்பியவன், பக்கவாட்டில் நோக்கி விட்டு..
“எலேய்ய்ய்.. அங்க பார்றா டேய்ய்ய்..” – என்றவன் “ஹாஹாஹா பட்டாளத்துக்காரரு பக்கவாதத்துலதேன் டா படுக்கப் போறாரு” எனக் கத்தியபடியே வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாய் ஓடத் துவங்க..
தானும் அவன் காட்டிய திசையை நோக்கிய விருமன் “நான் உறிஞ்ச நல்லி எலும்பெல்லாம் நெஞ்சுக்கு வருது டா டேய்!” எனப் புலம்பியபடியேத் தானும் ஓடினான்.
இருவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடக் காரணமானப் பட்டாளத்துக்காரர் என்றழைக்கப்படும் கருப்புத் துண்டு வீரைய்யன், “எலேய்… கருப்பா.. எலேய்.. சங்கிலி கருப்பா” எனக் கூவியபடியே காளையின் பின்னே ஓடிக் கொண்டிருந்தார்.
திமிறி நிற்கும் திமிலும்,குத்திக் கிழிக்கும் கொம்புமாய் மூக்கணாங்கயிற்றோடு ஓங்கு தாங்காய் இருந்த கருப்பன், வீரைய்யனுக்குப் போக்குக் காட்டியபடி உறுமலுடன் முன்னே ஓடிக் கொண்டிருந்தது.
ஓடி வந்த மாட்டின் இரு புறமும் வளைத்து நின்ற விருமனும்,ஆரனும் “எலேய்ய்ய் கருப்பா.. காலம் போன காலத்துல கிழவனை ஏன் டா ஓட விட்டு வேடிக்கை பார்க்குற?” என்று கேட்டபடி முன்னே வர..
“அடேய் பேராண்டிகளா” எனக் குதூகலமாய் கூவிய பெருசு உடனே “யாரை டா கிழவன்-ங்குற?, பட்டாளத்துக்காரன் டா நானு! இந்த வயசுல கல்யாணம் கட்டுனாக் கூட பத்துப் புள்ளப் பெத்துக் காட்டுவேன்! தெரியும்ல?” – என்றபடி ஆளுக்கொரு கயிறைத் தூக்கிப் போட..
“நல்ல வேள, எங்கப்பத்தா செத்துப் போச்சு! இல்லாட்டி சனத்தொகையை பெருக்குறதையே முழு நேர வேலையாப் பார்த்திருப்பாரு சண்டியரு!” என்ற இருவரும், ஆளுக்கொரு புறமிருந்து கயிற்றைத் தூக்கிப் போட்டு மாட்டைப் பிடித்தனர்.
“ஷ்ஷ்,அப்பா” என்றபடித் தலையில் கட்டியிருந்தத் துண்டைக் கழட்டி முகத்தைத் துடைத்த பெருசு “நாலு கயிறு போட்டாத்தேன் டா இப்பல்லாம் இவன் அடங்குறியான்! திமிரு பிடிச்ச பய! போன வாரம் என் மேலயே பாய வந்துட்டியான்!” – எனக் கூற..
“சும்மாவா, சக்குடி வாடிவாசல்ல தங்கம் வாங்குன பயலாச்சே” என்ற படி பெருமையாய் அதன் திமிலைத் தடவினான் ஆரன்.
மாட்டை இழுத்து வந்து அங்கிருந்த தென்னைமரத்தில் விருமன் கட்ட, சிறிய சைஸ் அருவாள் ஒன்றை வைத்து அதற்குக் கொம்பு சீவத் துவங்கினார் கிழவன்.
“ஏன் தாத்தா ரெண்டு வருஷங் கழிச்சு ஊர்ப்பக்கம் தலை காட்டுற பேரனுங்களைப் பார்த்து நல்லாயிருக்கீகளா-ண்டு கூடக் கேட்காம, உம்பாட்டுக்க, மாட்டுக்குக் கொம்பு சீவக் கிளம்பிட்ட நீயி!” – மாட்டின் மூக்கணாங்கயிற்றைப் பற்றி கொம்பு சீவத் தோதாய் அதன் தலையை சாய்த்தபடிக் கிழவனிடம் கேள்வி கேட்டான் விருமன்.
“ஏன்னா.. உங்களை மாதிரி அது படிக்கப் போறேன்,பாடை கட்டப் போறேண்டு என்னைய விட்டு எங்கயும் போகாது” – முடி வெட்டுவதைப் போல் நேர்த்தியாக அவர் அரிவாளால் பதமாகத் தோல் சீவியதும், பளபளத்தக் கொம்பைப் பார்வையிட்டபடி,
“அதுசரி! படிக்கப் போகச் சொல்லி எங்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைச்சதே நீதேன தாத்தா?” – என்றான் ஆரன்.
“அதுக்குண்டு, ஒரேடியா அங்கனயே இருந்துக்கிறதா?, ஏன் டா?, கடுதாசில பேசிக்க நாம என்ன காதலர்களா?,லீவு விட்டா, ஊர்ப்பக்கம் வர்றதுக்கென்ன டா உங்களுக்கு?”
கிழவனின் கேள்வியில் ஆரன் அமைதியாகி விட
“காலம் போன காலத்துல கடுதாசி எழுதிக் காதலிக்க வேற ஆசைப்பட்றியா நீயி!?– எனக் கேட்டுச் சமாளித்த விருமன், கிழவன் சீவி முடித்த ஒரு புறக் கொம்பில் எண்ணெயைத் தேய்த்து, பதமாய் நீவினான்.
“நான் கேட்டக் கேள்விக்கு பதிலைச் சொல்றா வெண்ண” – மிரட்டலாய் கிழவன் வினவவும்… காதைச் சொரிந்த விருமன்,
“படிப்பு அப்பிடி தாத்தா! AMIE-ன்னா சும்மாவா?, அது பொறியியல் படிப்பு! நாங்க என்ன உங்களை மாதிரியா?, அப்பனுக்குப் பயந்து பட்டாளத்துல செட்டில் ஆகி, இப்ப ஜம்மு-ண்டு மாசம் தவறாம பென்ஷன் வாங்கித் திங்க? போதாதுக்கு ஊர்ப்பூரா சொத்தைக் குவிச்சு வைச்சுருக்கீக!”
“இப்ப என்னத்துக்கு டா என் பெருமையைப் பேசுறவன்?”
“எங்களால உங்களை மாதிரி பட்டாளத்துலயும் சேர முடியாது! விவசாயமும் பார்க்க முடியாது தாத்தா” – என்றான்.
“பன்னிரெண்டாங் க்ளாஸ் படிக்கிற வரைக்கும் உங்கப்பனோட சேர்ந்து விவசாயம் பார்க்கப் போறதாத் தவ்விக்கிட்டிருந்த நீயி?”
“அது அப்ப! இப்ப என் சித்தப்பன் மாறி கவர்மெண்டு உத்தியோகத்துல சேரனும்ங்குறதுதேன் என் ஆசை!”
“கவர்மெண்டு உத்தியோகத்துல காலாட்டிக்கிட்டு சம்பளம் வாங்குறதுனாலதேன டா சொந்த மண்ணைப் பத்தின நினைப்பே இல்லாம ஜடமாத் திரியுறான் உன் சித்தப்பன்” – கிழவன் விரக்தியாய்க் கூற..
“அது அவரு தப்பா?, ச******சியைக் கட்டிக்கிட்டாருண்டு ஊரே ஒன்னு கூடி அவரை செருப்பால அடிச்சுத் துரத்திப்புட்டு, இப்ப அவரு மேல தப்பிருக்கிற மாதிரி பழி சொல்றீக?” – வெடுக்கென விருமன் பேசியதும், அதுவரை அமைதியாயிருந்த ஆரன்,
“டேய்ய்ய்..” – என அதட்டினான்.
பேரனின் குற்றச்சாட்டில் கொதித்துப் போன வீரைய்யன் விழி சிவக்க “நானா டா துரத்துனேன்? பட்டாளத்துக்காரனுக்கு ஏது டா சாதி,மதமெல்லாம்??, இவன் அந்தப் புள்ளையக் கட்டுனதால நம்ம சாதிக்கே களங்கம் வந்துடுச்சுங்குற மாறி ஊர்ப்பயலுக அத்தனை பேரும் ஒன்னு கூடி அவனை வெட்டுவேன்,குத்துவே-ண்டு குதிச்சப்ப, உன் சித்தப்பனுக்கு ஆதரவா நிண்டவன் டா நானு! நான் இல்லேன்னா, அன்னைக்கு அவனைப் புதைச்ச இடத்துல இப்ப மரமே வளர்ந்திருக்கும்! அப்பன்-ண்டு ஒருத்தன் உயிரோட இருக்கிற நினைப்பிருந்திருந்தா, அந்தப் புள்ளையை விரும்புன விஷயத்தை என் கிட்ட சொல்லாம மறைச்சிருப்பானா அவன்? பச்சைக் கையெழுத்து போட்ற வேலை கொடுத்த பகட்டுல, இனி அப்பன்-ண்டு ஒருத்தன் நமக்கெதுக்குங்குற திமிர்ல, முன்ன,பின்ன யோசிக்காம அவன் எடுத்த முடிவால, ரெண்டு சாதிக்காரய்ங்களுக்கும் பிரச்சனை ஆகி ஊர்ல கலவரம் வந்ததுதேன் மிச்சம்!” – கிழவன் ஆக்ரோஷமாவதை உணர்ந்து..
“எல்லாம் தெரிஞ்சதுதேன, விடு தாத்தா” – என்று ஆரன் சமாதானப்படுத்த..
“அவனை மன்னிச்சு அந்தப் புள்ளையோட வாழ விட்டா, ஊருக்குள்ள ஒரு பய நம்ம சாதிக்காரனை மதிக்க மாட்டான்-ண்டு, அவனை ஊரை விட்டுத் துரத்துனாய்ங்க! ஊர்ல இருக்கிறவிங்க மட்டுமா தலைவலியைக் கொடுத்தாய்ங்க?, என் வீட்டுக்குள்ள… என் தங்கச்சின்றவளே (சோலையம்மாள்), அந்தப் புள்ள இந்த வீட்டுக்கு வாழ வந்தா, மகனைக் கூட்டிக்கிட்டு நான் வீட்டை விட்டு வெளியேறிடுவேண்டு என்னையே மிரட்டுனா”
“சனியன் தொலையுது-ண்டு அன்னிக்கே அந்தக் கிழவியை நீயி துரத்தி விட்ருக்கனும் தாத்தா!” – விருமன் வேறு இடையில்.
“சோலையம்மா மகன் சங்கிலியன்தேன் எம் மவ வீரலட்சுமிக்கு-ண்டு முடிவு செஞ்சிருந்ததால, எங்க, இந்தப் புள்ளைய வீட்டுக்குள்ள விட்டா, மக வாழ்க்கைக் கேள்விக் குறியாயிடுமோ-ண்டு உங்கப்பத்தாளும், உன் சித்தப்பனை ஏத்துக்க மாட்டேன்னுட்டா!”
“ஊரும்,வீடும் எதிர்த்து நிற்குறதைப் பார்த்து ரோஷப்பட்டு அவனே, இனி செத்தாலும் ஊர் மண்ணுல கால் வைக்க மாட்டேன்-ண்டு சொல்லி அந்தப் புள்ளையக் கூட்டிக்கிட்டு ஊரை விட்டேப் போயிட்டான்!”
“போனவன் நல்லாப் பொழைச்சானா? அதுவுமில்ல! பத்தே வருஷத்துல அந்தப் புள்ளையைத் தூக்கிக் குடுத்துப்புட்டு, ஒத்த மகனோட அனாதரவா நின்னுட்டியான்”
“அனாதரவா என்ன அனாதரவா??, அவர் ஊரை விட்டு வெளிய கால் வைச்ச நொடியுல இருந்து இப்ப வரைக்கும் நீங்க அவருக்கு ஆதரவாத்தேன இருக்கீக?, போதாததுக்கு, சித்தி இறந்ததுமே உங்க பேரனைக் கூட்டி வந்து உங்களோடயே வைச்சிருந்து, மலை மாடு மாதிரி வளர்த்து விட்டிருக்கீக! அப்புறம் என்ன?” – ஆரனின் தோளில் தட்டியபடி விருமன் கூற..
அவனை ஆதரித்த ஆரனும் “எங்காத்தா இல்லாத குறையத் தீர்க்கத்தேன் எனக்குப் பெரியம்மாவை அறிமுகப்படுத்திட்டீகளே தாத்தா!, விருமனையும்,என்னையும் வித்தியாசம் பார்க்காம வளர்த்த அது, ஒரு நாள் கூட எங்காத்தா நினைப்பை வர விட்டதில்ல!” – என மீனாட்சியம்மாவை நினைத்துப் பாசமாய்க் கூறினான்.
“பின்ன, உங்காத்தாளும்,உன் பெரியம்மாளும் சிநேகிதிகளாச்சே!”
“ஆமா, சித்தப்பா, சித்தியைப் பார்த்ததே எங்கம்மா-அப்பா கல்யாணத்துல தானாம்!”
“நீ அவன் கிட்டக் கதை கேட்டியாக்கும்?” – அவனைக் கேவலமாய்ப் பார்த்தபடி பெருசு.
“ஆமா கேட்டேன்! நான்-லாம் உங்களை மாதிரி கிடையாது! காதலையும்,கலப்புத் திருமணத்தையும் ஆதரிக்கிறவன்”
“நான் மட்டும் என்ன எதிரியா?, எலேய்! வேற சாதிக்காரியோ,வேற மாநிலத்துக்காரியோ இல்ல வெள்ளைக்காரியோ, எவளனாலும் கூட்டி வந்து என் முன்னாடி நிண்டு, கட்டி வைங்க தாத்தா-ண்டு நீ கேளு! இந்த ஊர் என்ன, உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் நிற்பேன் டா! அதை விட்டுப்புட்டு உன் சித்தப்பன் மாறி என் முதுகுக்கு பின்னாடி எல்லா வேலையையும் பார்த்துப்புட்டு, அப்புறம் வந்து குடி முழுகிப் போச்சுண்டு நிற்காத”
“சரி விடுங்க தாத்தா! எப்பப் பாரு அவரைப் போட்டு திட்டிக்கிட்டு” – விருமன்.
“வயித்தெரிச்சலா இருக்கு ராசா! அவங்காத்தா செத்ததுக்குக் கூட அவன் ஊருக்குள்ள நுழையலயே டா! மயானத்துக்கு வந்து மாலையைப் போட்டுப்புட்டு அப்டியே போயிட்டியான்!”
“விடு தாத்தா” – கிழவன் புலம்புவது பொறுக்காமல் ஆரன்.
“நாளைக்கு நான் செத்தாக் கூட வர மாட்டானோ-ண்டு கிடந்து பயப்படுது டா மனசு”
“ப்ச், தாத்தா…” – கோரசாய்க் கூவிய இருவரும், தளர்வாய் நின்றவரின் அருகே செல்ல..
“சாதி,**-ன்னு சொல்லி நாட்டாமை பண்ணி என் மவனை ஊர்ப்பக்கம் தலை வைக்க முடியாத மாறி செஞ்சுப்புட்டாய்ங்க பரதேசிப்பயலுக! “ – என்றவர் பத்து வயதில் ஆரனை இங்கே அழைத்து வந்த போது ஊரார் செய்த பிரச்சனைகளை நினைவு கூர்ந்தபடியே..
“இனியொரு முறை இந்த சல்லிப் பயலுகளுக்காக, எந்த விஷயத்துலயும் நாம அடங்கிப் போகக் கூடாது டா” என்றார்.
“எவன் வீட்டு வாசல்ல நாம சோத்துக்கு நிற்குறோம், அடங்கிப் போறதுக்கு??, விடு தாத்தா! வீட்ல விசேஷம் வைச்சிருக்கும் போது எதுக்குக் கண்டதையும் பேசிக்கிட்டு” – என்ற ஆரன்,
“எலேய் விருமா, என்ன டா சிலம்பன் காலைல இருந்து கண்ணுலயே பட மாட்டேங்குறியான்?” – என்றான்.
“அவன் உங்கத்தைகாரி கூட, சீர் சாமான் வாங்க மதுரைக்குப் போயிருப்பியான்” – என்ற பெரியவர் தன்னிரு புறமும் அணை கட்டி நின்ற பேரனுங்களைக் கண்ணாரக் கண்டுக் கன்னம் வழித்து..
“கஞ்சி குடிச்சிட்டீகளா ராசா?” என்று வினவ..
“உன் கூட கதை பேசுனதுல தின்ன கறியெல்லாம் செரிச்சுப் போச்சுய்யா பெருசு! மாட்டை அவுத்து இழுத்துக்கிட்டு வீட்டுக்குக் கிளம்பு மொதல்ல” – என்ற விருமன், காலரைத் தூக்கிக் கொண்டு முன்னே நடக்க, “அட மொன்ன நாயே” என்றுத் திட்டி அவன் முதுகில் மிதித்தபடிப் பின்னே நடந்தான் ஆரன்.
அன்று மாலை சங்கிலியன்-வீரலட்சுமி தம்பதியினரின் மூத்த மகளும், அகலருவி,புவியரசியின் அக்காளுமான வள்ளியம்மையின் மகளுக்குப், பூப்புனித நீராட்டு விழா வெகு விமர்சையாக பக்கத்து கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தாய் மாமனாக வள்ளியம்மையின் தம்பியும், அகலருவி,புவியரசியின் அண்ணனுமான சிலம்பன் முன்னே நடந்து வர, கள்ளந்திரி பட்டாளத்துக்காரர் திரு.வீரைய்யனின் குடும்பமும்,சொந்த பந்தங்களும் சீர் பொருட்களை ஏந்தியபடிப் பொடி நடையாக விழா நடைபெறும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
புதுத்துணி,கண்ணாடி,சீப்பு,வளையல்,பொட்டிலிருந்துத் தொடங்கி பூ,பழம்,வெற்றிலை பாக்கு, பலகாரம் என பலவகையான தாம்பாளத் தட்டுக்கள் ஒரு புறம் பவனி வந்து கொண்டிருக்க, மறுபுறம் பெரிய பெரிய பித்தளை அண்டாக்களும்,சில்வர் அண்டாக்களும் ஊர்ந்து வந்து கொண்டிருந்தன.
கனமான பித்தளை அண்டா ஒன்றைத் தலையில் வைத்தபடி நடந்து கொண்டிருந்த அகலருவி, தோளில் வந்து விழுந்த டிசம்பர் பூவைப் பின்னுக்குத் தள்ளியபடி, வலித்த கழுத்தை லேசாய்த் தேய்த்து விட்டுக் கொண்டாள்.
“எப்போதேன்டி இதை இறக்கி வைக்க சொல்லுவாய்ங்க?” – எரிச்சலாய்க் கேட்டவள் ஊருக்குத் தோதாக கத்திரிப்பூ நிறத்தில் பாவாடை தாவணி உடுத்தியிருந்தாள். கழுத்தில் தாமரைப் பூ டாலர் வைத்த நீளச் செயின். தலையில் உடைக்கு மேட்ச் ஆக டிசம்பர் பூ, ஒற்றை ரோசாவோடு.
“கேட்டதுக்கு பதில் சொல்லாம என் மூஞ்சில என்னத்தடி தேடுறவ?” – தன்னையே முறைத்துக் கொண்டிருக்கும் தங்கையிடம் கேள்வி கேட்டாள்.
“நான் உன்னைய நீலக் கலரு தாவணிதேன போடச் சொன்னேன்?, நீ என்ன கருமத்துக்கு இதை மாட்டிட்டு வந்த?”
“ம்ம், உனக்கென்னடி வெள்ளைத் தோல்க்காரி! என்னா போட்டாலும் அழகா இருப்ப! நான் அப்பிடியா?, பளிச்சு-ண்டு போட்டாத்தேன் பார்க்குற மாதிரியாவது இருப்பேன்” – நொடித்தவளிடம்..
“ஆமாமா! ஊரே பார்க்குற மாதிரி பளிச்சு-ண்டுதேன் இருக்குற! லைட்டு கிட்ட நின்றாத! பார்க்குறவன் கண்ணு கெட்டுப் போயிடப் போகுது!!” – என்ற புவி தலையில் அடித்துக் கொள்ள..
“என்னாங்கடி, என் அயித்த மவளுகளா?, இரண்டு பேருல யாரு அழகு-ண்டு சண்டை போட்டுட்டு இருக்கீகளா?” – எனக் கேட்டபடி அருகே வந்தான் விருமன்.
அவனைக் கண்டு இருவரும் ஒரே சமயத்தில் எரிச்சலுடன் உச்சுக் கொட்ட.. கடுப்பாகிப் போனவன் “மொகர ஏன் டி அப்பிடிப் போகுது?, போங்கடியேய் போங்கடி! அழகழகா சுத்துற அசலூர்க்காரிகளை விட்டுப்புட்டு அத்தை மகளுகளாச்சே-ண்டு உங்கட்ட வந்தேன் பாரு! என்னையச் சொல்லனும்” என்று விட்டு வேஷ்டியை மடித்துக் கட்ட..
“பார்த்து டேய்! அவளுக-லாம் காய் நறுக்கவே அருவாளைத் தூக்குறவளுக” – என்று கமெண்ட் அடித்தபடியே அவனை இழுத்துச் சென்றான் ஆரன்.
ஆரனின் அருகே நடந்து வந்த வீரைய்யனைக் கண்டு “என்ன பெருசு முகத்தை உர்ருண்டு வைச்சிருக்கு?” என்ற விருமன் “என்னா தாத்தா?” என்றான்.
தோளிலிருந்த கருப்புத் துண்டை எடுத்துத் தலையில் கட்டியவர், அவனை முறைத்தபடியே “நீ என்னா டா இம்புட்டு உற்சாகமா இருக்க?” எனக் கேட்டார்.
“நம்ம வீட்டு விசேஷம்ல தாத்தா! சிரிச்சு,சந்தோஷமா இருக்க வேணாமா?”
“என்னா விசேஷம்?”
“யோவ், பெருசு!” – கடுப்புடன் விருமன்.
“எலேய்!பொட்டப்புள்ளைக வயசுக்கு வர்றதெல்லாம் இயற்கையான விஷயம் டா! இதுக்குப் போய் ஊரைக் கூட்டி,சனத்தை சேர்த்து அலப்பரை பண்ணி, புள்ளைய மிரள விட்டுட்டுக் கிடக்குறாய்ங்க! பச்சப்புள்ள டா அது! அதுக்கென்ன தெரியுமுண்டு, சேலையைக் கட்டி, மாலையைப் போட்டு மேடைல ஏத்துறாய்ங்க?”
“ம்ம்ம்ம்ம்,அதுசரி” என்று இழுத்த விருமன், சட்டையின் கைப்பகுதியை மடித்து விட்டபடியே “உனக்கு உம் பட்டாளத்துப் பகுமானம்” என்றான்.
“இந்தப் பூ இனி விற்பனைக்கு-ண்டு பெத்தவிங்களே புள்ள கழுத்துல போர்டு மாட்டி விட்ற மாறி இருக்கு! இவிங்க கூட்ற அக்கப்போரால, இனி வினயம் புடிச்ச எல்லா நாயும், அந்தப் பச்சப்புள்ளைய விவகாரமாத் தான் பார்க்கும்” – வழக்கம் போல் அழுத்தமான குரலில் ஆரன்.
இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்த விருமன், “நீங்க 2 பேர் மட்டும் சீர்திருத்தவாதிகளா இருந்து என்ன பிரயோஜனம்?” என்று கூறுகையில்..
“ஒரு பிரயோசனமும் இல்ல” என்றபடி க்ராஸ்-டாக்கில் வந்த சோலையம்மாள், தன் அண்ணனைப் பார்த்து..
“எங்க வந்து என்ன வியாக்ஞானம் பேசுறீக?, சொந்தக்காசுல எம் பேத்திக்கு சீர் செய்ய எனக்கு நாதியில்லண்டுதேன வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறீக?, உங்களை அண்டிப் பொழைக்குறவளுக்கு ஆடம்பரம் என்னத்துக்கு-ண்டு நினைக்குறீகளா?” – என்று மூக்கை உறிஞ்ச,
பெருமூச்சு விட்ட்படித் தலையில் கட்டியத் துண்டைக் கழட்டிய வீரைய்யன் “அவ உன் பேத்தி மட்டுமில்ல, எம் பேத்தியும் கூடத்தேன்! வந்த இடத்துல கண்ணைக் கசக்காம போய் ஆகுற வேலையைப் பாரு” எனக் கூற.. கண்ணைத் துடைத்துக் கொண்டு வாய்க்குள் முணுமுணுத்தபடியே நகர்ந்தது கிழவி.
“இப்பிடிப் பேசி,பேசியேதேன் டா இவ நினைச்சதை சாதிச்சுக்கிறா” – என்று கிழவன் கூறியதும் “புரிஞ்சா சரி” என்றான் விருமன்.
அதன் பின்பு பன்னிரெண்டு வயது சிறுமியான இளமதி பாவாடை,சட்டையோடு மஞ்சள் முகமும்,மல்லிகைப் பூவுமாய் அவளது அத்தைமார்கள் சங்கு முழங்க.. அழைத்து வரப்பட்டு அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டாள்.
கொள்ளுப் பேத்தியைக் கண்டு திருஷ்டி கழித்த சோலையம்மாள், அகலருவியிடம் கண்ணைக் காட்ட, அவளும் உடனே இடுப்பில் முடிந்து வைத்திருந்தப் பையை எடுத்து.. அதிலிருந்த தங்கச் செயின்,தோடு,கொலுசு என அத்தனையையும் தன் அக்கா மகளுக்கு அணிவித்தாள்.
மற்ற விஷயத்தில் எப்படியோ, அகலருவி காசு,பணத்தைப் பத்திரமாகப் பாதுகாப்பதில் கெட்டிக்காரி. அதுமட்டுமல்லாமல், எங்கு போனாலும் அவளை ஆடாமல்,அசையாமல் ஒரு இடத்தில் பிடித்து வைக்க வேண்டி அவளிடம் விலைமதிப்புமிக்கப் பொருட்களைக் கொடுப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தனர் குடும்பத்தினர்.
அதன் பின்பு சீர் பரப்பி, இளமதியைக் குளிப்பாட்டி சேலை உடுத்தி, நகைகள் அணிவித்து.. மாக்கோலத்தின் மீது வைக்கப்பட்டிருந்த சிறிய பலகை ஒன்றில் நிறுத்தி சடங்கு சுற்றித் தீட்டுக் கழித்தனர்.
அதற்குப் பின், முறை செய்வதும்,புகைப்படம் எடுப்பதுமென்னக் கூட்டம் கலை கட்ட, அனைத்தையும் சிவனே என வேடிக்கை பார்த்தபடி தாத்தாவின் அருகில் அமர்ந்திருந்தான் ஆரன். கூட்டமென்றாலே குஷியாகி விடும் விருமன், உறவுக்காரர்களுடன் வளவளத்தபடி எங்கோ ஐக்கியமாகி விட்டிருந்தான்.
கையில் சோத்துக் குவளையுடன், விசேஷ வீட்டின் வாசலில் செடிகளினோரமாய் அமர்ந்திருந்தாள் அகலருவி. அவள் முன்னே விளையாடியபடி, வள்ளியம்மையின் மூன்று வயது மகன்.
“ஏன் டா, எனக்கு சோறு ஊட்ட-லாம் வராது-ண்டு தெரிஞ்சும் என்னத்துக்கு டா உங்காத்தா என் கைல சோத்துக் குண்டாவ கொடுத்துட்டுப் போனா?”
அவள் எரிச்சலாய்க் கேட்டதும், வாய் நிறைய அடைபட்டிருந்த சோற்றுடன் அவளை நிமிர்ந்து பார்த்து சிரித்தது குழந்தை.
“பல்லைக் காட்டாத டா, கடுப்பு மசுரா வருது” – என்றவள் குண்டாவிலிருந்தக் கோழித் துண்டுகளில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
“அது என்னோடது..” – தன்னுடையதை அவள் தின்றது கண்டுப் பிதுங்கிய வாயுடன் அருகே வந்து குழந்தை,அவளது முடியைப் பிடித்து இழுக்க..
அதன் கையில் கிள்ளித் தலையில் குட்டி வைத்தவள், “உன்னோடதா இருந்தா என்னா டா?, நம்ம சித்திதேன, தின்னுட்டுப் போகட்டும்ண்டு விட வேண்டியதுதேன?, அப்பிடியே அவங்கப்பனை மாறியே இருக்கியான் பாரு! சோத்துக்கு செத்தவன்” எனத் திட்ட.. அவன் ரோஷ மிகுதியில் பெருங்குரலெடுத்துக் கத்தத் துவங்கினான்.
“தொடங்கிட்டியான்! இனி எப்ப வாயை மூடுவியானோ!” என்று முணுமுணுத்தவள் இன்னும் இரண்டு குட்டுக்களை வைத்து “ஷ்,ஷ்!வாயை மூடு,வாயை மூடு” என்று மிரட்டி விட்டு, அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்தாள்..
“உம் மவன் அழுகுறியா-ண்டு சொல்லி, எங்கக்காகாரியைக் கூட்டி வா, போ” என்று விரட்டியவள், கிண்ணத்திலிருந்து மேலும் சில,பல கோழித் துண்டுகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
முழுக் கோபத்துடன் அவசர,அவசரமாக அவளருகே வந்த வள்ளி “தெண்டச் சிறுக்கி! புள்ளைக்கு ஒரு வாய் சோறு ஊட்டக் கூடத் துப்பில்ல! நீயெல்லாம் என்னாடி பொம்பள?, நான் இவனைப் பார்க்குறதா, வந்தவிங்களைப் பார்க்கிறதா?” என்று கடிந்தபடியே பிள்ளையைத் தூக்கிச் செல்ல,
அவள் திட்டுவது எதுவும் காதில் விழாதது போல அமர்ந்திருந்தவள் அவள் நகர்ந்ததும் “அம்புட்டுத் தொந்தரவா இருந்தா என்னத்துக்குப் பெத்துக்கிறா?” என்று முணுமுணுத்து விட்டுக், குண்டானிலிருந்தக் கோழியைக் கொறிக்கையில்,
“என்னா அகலு! அக்கா மவனுக்குச் சோறு ஊட்டச் சொன்னா, நீ தின்னுட்டிருக்க?” என்றபடி அவள் முன்னே நின்றான் அழகுபாண்டி.
அவனை நிமிர்ந்தும் பாராது மென்று கொண்டிருந்தவள் “உனக்கு வேணும்ண்டா, நீயும் போய்த் தின்னு! கூப்பிடாமலே ஊர் விசேஷத்துக்குப் பூரா ஓசிச் சோறு திங்க வர்ற பயதேன நீயி” என்றாள்.
“பார்றா! நீ என்னா வேணா பேசு அகலு! உனக்கில்லாத உரிமையா?, என்னைக்கா இருந்தாலும், நீ எங்கண்ணனோட சொத்தாகப் போறவ!” – எனப் பல்லிளித்தவனைக் கண்டு கடுப்பாகி, விருட்டென எழுந்தாள் அவள்.
நகரப் பார்த்தவளினருகே வந்தவன், அவள் கையில் வைத்திருந்த மருதாணியைக் கண்டு “மருதாணி நல்லா செவந்திருக்கே! யாரை மனசுல நினைச்சுக்கிட்டவ?” என்றபடி அவள் கையைப் பற்ற வர, வெடுக்கென பின்னே இழுத்துக் கொண்டவள் அவனை முறைத்துப் பார்க்க,
அவன் சிரித்தபடி “எங்கண்ணன் சொத்தெல்லாம் எங்க சொத்து மாறி அகலு” என்றான்.
கண்ணை மூடிப் பல்லைக் கடித்தவள் “சொத்து,சொத்து-ண்டு உன் சொத்தைப்பல்லைக் காட்டாம, ***** சாத்திட்டு போடா சல்லி நாயே! வந்துட்டியான் அண்ணன்,நொண்ணன்னுட்டு! **** பய” என்று சரமாரியாக அவனை திட்டிப் பாடையில் ஏற்றி விட்டு நகர, எதேச்சையாக இருவரின் புறமும் பார்வையைச் செலுத்திய ஆரன், அவள் அலட்டாமல் கிழித்துத் தொங்க விடுவதைக் கண்டு எழுந்து வந்தான்.
அவள் போக்கில் குண்டானோடு அவள் நடந்து சென்று விட, அவள் பின்னே வந்த அழகு பாண்டியின் தோள் பற்றி நிறுத்தினான்.
“என்னா டா?”
தன் தோளில் அழுத்தமாய்க் கரம்பதித்தபடி கேள்வி கேட்ட ஆரனைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்தவன் பின், நெற்றியைச் சுருக்கி அசட்டையாக,
“எலேய், நீயி…. அந்த ச******சி மவன்தேன?” என்று விட்டு “உங்கப்பா சவுக்கியமா டா?” எனக் கேட்டான்.
மெல்லச் சிரித்தபடி அவன் தோளைத் தட்டியவன் “இப்ப ரத்தம் கொதிச்சு, என் கோபம் உச்சத்துக்குப் போகுமுண்டு நினைச்சுத்தேன இதைச் சொன்ன நீயி?” என்று விட்டு அவன் தோளில் கைப் போட்டு “எங்கப்பா சவுக்கியமிருக்கட்டும்! இனி உன் சவுக்கியத்தைப் பத்தி நீ கவலைப்பட வேண்டிய சூழ்நிலை வரப் போகுது போலயே டா” என்றான்.
தோளிலிருந்தவனது கையை விலக்க முயன்றபடி “ஏன், என் சவுக்கியத்துக்கு என்ன கேடு?” என்று அவன் மீசையை முறுக்க,
“நான் உன் கழுத்தைத் திருகி சோலியை முடிச்சுப்புட்டா, நீ எப்பிட்றா சவுக்கியமா இருப்ப?” என்றான் ஆரன்.
எரிச்சலுடன் தன் புறம் பார்ப்பவனின் பின் கழுத்தில் கையை வைத்தவன், என்ன செய்தானோ!, அதன் பின்பு சுளுக்கு விழுந்தது போல் அழகு பாண்டியின் கழுத்து பிடித்துக் கொள்ள, வலியில் பல்லைக் கடித்தவன் அவனது கையை நகர்த்த முயல்வது கண்டு,
“யார் மவன் நானு??” எனக் கேட்டான்.
“ச******சி மவன் டா” – வலியோடு முனகியவனின் கழுத்தில் மேலும் அழுத்தி “யாரு மவன்” என்று ஆரன் மீண்டும் அழுத்திக் கேட்க,
“வீரபாண்டியனுக்கும்,எழிலரசிக்கும் பொறந்தவன் டா” என்று கதறலாய்க் கூற..
“அது!” என்றவன் “ஆமா, நீயி அந்த மணிவண்ணன் கூட்டாளி தான?, உன் பீக்காளித்தனத்தையெல்லாம் உன் ஊர்க்காரிகளோட நிறுத்திக்கனும். புரிஞ்சதா?” எனக் கூறி அவன் கழுத்தைத் தடவி “அடுத்த ஒரு வாரத்துக்கு ஒத்தப் பக்கமாவே படு” என்றுரைத்து விட்டுச் சிரித்தபடி நகர்ந்து விட்டான்.
குண்டானிலிருந்த கோழி வறுவலை முடித்து விட்டு கூட்டத்தை நோக்கிச் சென்ற அகலருவி, அங்கே தனது அண்ணன் சிலம்பன், எதிரிலிருந்த பெண்ணைப் பார்த்து வழிந்த வண்ணம் நிற்பது கண்டு அருகே சென்றாள்.
வள்ளியம்மையின் நாத்தனாரும்,அவனது காதலியுமான பாண்டீஸ்வரியைக் கண்டு புருவம் உயர்த்தியபடி அவனருகே வந்து நின்றாள்.
“சங்கிலியைப் பார்த்தியா புள்ள, நீ சொன்ன டிசைன்தேன்” – காதலியின் காதில் சன்னமாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தான் சிலம்பன்.
“சங்கிலியை இவளா போடப் போறா?, இவ என்னத்துக்கு டிசைன் பார்த்து சொல்லனும்??” – அவனது இடது புறமிருந்து அகல் குரல் கொடுக்க, வலது புறம் பாண்டீஸ்வரி அவனை முறைத்தாள்.
“என்னா புள்ள வேணும் உனக்கு?” – தங்கையிடம் சிடுசிடுத்தான் அவன்.
“உன் அக்கா மகளுக்குப் புடிச்சா மாதிரி சங்கிலி வாங்கிட்டு வரச் சொன்னா, இவளுக்குப் புடிச்சதை எடுத்துட்டு வந்திருக்கியா நீயி?” – அண்ணனை அவள் மிரட்டுகையில்..
“யாருக்குப் பிடிச்சதா இருந்தா என்ன?, எப்பிடியும் அது உங்கண்ணன் சொந்தக்காசுல வாங்குனதா இருக்காது” – எனக் கூறி பாண்டீஸ்வரியின் அருகே வெற்றிலை மென்றபடி நின்றான் மணிவண்ணன் – வள்ளியம்மையின் கணவருக்குப் பங்காளி முறைப்படுபவன்.
அவனைக் கண்டதும் முகம் ஏகத்துக்கும் சுருங்கி விட, அகலருவி விடைத்த மூக்குடன் அவன் புறம் திரும்பாது நின்றாள்.
“மாப்ள, ஏன் மாப்ள?” – என்ற சிலம்பன் சிரித்தே சமாளிக்கப் பார்க்க,
“சபைல அத்தனையையும் பதிவு பண்ணியாகனும் மச்சான்! உனக்கு அள்ளிக் கொடுக்க பட்டாளத்துக்காரரு இருக்காரு! நீயும் வெட்கமில்லாம வாங்கிட்டு வந்து சபையை நிரப்புற! யாரு யாரு என்ன செஞ்சாய்ங்கண்டு பார்த்து, திருப்பி செய்றது முறைமையாச்சே! நாளைக்குக் கணக்கு மாறிப் போச்சு-ண்டு யாரும் சண்டைக்கு நிக்கக் கூடாதுல்ல?” என்றான் குத்தலாய்.
சிலம்பனின் சிரிப்பு மெல்ல மறைவதையும், முகம் அவமானத்தில் சுருங்குவதையும் கண்ட அகல் பொங்கி,
“என்னா எங்கண்ணன் அள்ளிட்டு வந்ததைப் பார்த்த நீயி? அவனுக்கு உரிமைப்பட்ட இடம்,அவன் அள்ளுறியான்! உனக்கு ஏன் எரியுது?, அடுத்தவன்-ட்ட ஆட்டையப் போட்டே சொத்து சேர்த்த நீயெல்லாம் அள்ளிட்டு வர்றதைப் பத்தி பேசக் கூடாது” – என்றாள்.
“பார்றா! அண்ணனைச் சொன்னதும் அகலுக்குப் பலியா கோவம் வர்றத!” – என்று அவன் நக்கல் பேசுகையில் இடையிட்ட பாண்டீஸ்வரி,
“ஆட்டையப் போட்டு சொத்து சேர்த்தோமுண்டு யாரடி சொல்ற?” எனச் சீறினாள்.
“உன் நொண்ணங்களைத்தேன்! கையெழுத்தை மாத்திப் போட்டு கையளவு நிலத்தைக் கூட விடாம அடிச்ச திருட்டுப் பயக் குடும்பம்தேன் நீங்க?”
“அகலு, சும்மா இரு புள்ள” - தங்கையை அடக்க முயன்றபடி சிலம்பன்.
“என்னண்ணே! பொட்டச்சி ஒருத்தி, இந்தப் பேச்சு பேசுறா?, கேட்டுக்கிட்டு எல்லாரும் அமைதியா நிற்குறீக?”
“அகலு, நீ அமைதியா இருக்க மாட்ட?”-வள்ளியம்மையின் கணவன் கோபமாய் குரல் கொடுப்பதைக் கண்டு கொள்ளாமல், அவள் பாண்டீஸ்வரியிடம்,
“ஏய், பொட்டச்சி,குட்டச்சின்னேண்டா, வாயை ஒடைச்சிருவேன் சொல்லிப்புட்டேன்! உன் நொண்ணன் எங்களை மானக்கேடா பேசும் போது மூடிட்டு நின்னுப்புட்டு? இப்ப என்னடி துள்றவ?,”என்றவள் அண்ணனிடம் “இவ்ளோதேன் இவ வகுசி, நல்லாத் தெரிஞ்சுக்க” என்று முடிக்க, மேலும் பொங்கிய பாண்டீஸ்வரி,
“எங்க உடை டி! வந்து உடை டி பார்ப்போம்” – என்று தாவணியைத் தூக்கிச் செருக,
“உனக்கு அம்புட்டு ஆசை-ண்டா, இந்தா வாங்கிக்கடி” என முன்னே செல்லப் பார்த்த அகலைப் பிடித்து நிறுத்திய சிலம்பன்,
“சும்மா இரு அகலு” என்று அதட்டியதும் “நீ இம்புட்டுப் பணிஞ்சு போறதுக்கு, அவ தகுதியான ஆளே இல்ல” என்று அவள் அடிக்குரலில் முணுமுணுக்க, அதைக் கேட்டு விட்ட பாண்டீஸ்வரி, மேலும் குதிக்கத் துவங்குகையில் வீரைய்யன் தனது பேராண்டிகள் இருவர் புடை சூழ கூட்டத்தை நெருங்கியிருந்தார்.
“பட்டாளத்துக்காரரே, என்னா பொண்ணு வளர்க்குறீக நீங்க?, பொட்டப்புள்ள-ண்டா, அடக்க,ஒடுக்கத்தோட இருக்க வேணாமா?, இத்தனை ஆம்பளைகளுக்கு முன்னாடி சீறிக்கிட்டு நிற்குது இந்தப் புள்ள”
கூட்டத்தில் ஒரு பெருசு குரல் கொடுத்ததும் கொதித்துப் போன அகல்,
“அடக்க,ஒடுக்கத்தைப் பத்தி பேசுறதுக்கு முன்னாடி, முதல்ல ஆடாம நிற்கப் பழகு பெருசேய்ய்! கள்ளைக் குடிச்சுப்புட்டு முழு போதைல கபடி ஆட்ற மயிராண்டிக்குப் பேச்சைப் பாரு” – என்று கத்த,
“இந்தா புள்ள, உன் பேச்சே சரியில்ல! பொம்பளப் புள்ள நீயே இந்தப் பேச்சு பேசுனா, ஆம்பளைங்க சும்மா விடுவாய்ங்களா? அப்புறம், அடுத்து நடக்குற சேதாரம் எதுக்கும் நாங்க பொறுப்பாக முடியாது” – மிரட்டலாய் ஒருவன் கூறியதும்
“யோவ் என்னாய்யா செய்வ?” – தாவணியை தூக்கிச் செருகியவளைக் கண்டு..
“ஏய்ய் வாயை மூட்றி!” என்று விருமன் அவளருகில் நின்று உறும, அசராமல் எகிறியவளை முறைத்து,
“இந்தாரு வள்ளி! இனியொரு வார்த்தை உன் தங்கச்சி பேசுனாண்டு வை, நீயும்,உம் புள்ளைங்களும் காலம் முழுக்க ஆத்தா வீட்லதேன் கஞ்சி குடிக்கனும் சொல்லிப்புட்டேன்!” – என்றான் வள்ளியின் கணவன்.
“எம் பொழப்பைக் கெடுக்கிறதுக்குண்டே கங்கணம் கட்டிட்டு வந்தியா டி நாசமா போறவளே!” –இடுப்பில் குழந்தையுடன் வள்ளி, அழுதபடியே தங்கையை ஏச,
“ஆமா, பெருசா பொழச்சுக் கிழிச்சுட்ட! பொறந்த வீட்டு மானத்தை அடமானம் வைச்சுப்புட்டு, இவிங்க காலைக் கழுவிக் குடிச்சுக்கிட்டு இருக்கிறதெல்லாம் ஒரு பொழப்பாக்கும்?” – அகல் விடாது சரமாரியாக வார்த்தையை விட.. அவள் வாயை அடைக்க முடியாமல், வள்ளியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் அவள் கணவன்.
“மாப்ள…” என்றபடி வீரைய்யனும்,சிலம்பனும் அவனை அடக்கச் செல்ல,
“பொண்டாட்டியை அடிச்சு வீரத்தைக் காட்றவனெல்லாம் என்ன ஆம்பள?” – என அகல் இன்னமும் விடாது தன் போக்கில் கத்திக் கொண்டிருப்பது கண்டு ஆத்திரமடைந்த ஆரன்,
“டேய்.. இந்தக் கருவாக்குந்தாணிய முதல்ல பின்னாடி இழு டா” என்று விருமனை ஏவ.. “இவன் கிட்ட அடி வாங்கிப் பொழைக்குறதுக்கு, அவளை வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடு தாத்தா. புள்ளைகளை வளர்க்க மண்ணு போதும்! இந்த மயிராண்டியெல்லாம் தேவையேயில்ல” – தொடர்ந்து கத்தியவளின் வாயை மூடிய விருமன்,
“இங்தாருடி! நீ ஒருத்தி மட்டும்தேன் பேசனும்ண்டு நினைச்சண்டா, எங்களுக்கெல்லாம் சீலையைக் கட்டி விடு! மாட்டிக்கிட்டு ஒரு ஓரமா மூடிக்கிட்டு நிற்கிறோம்” – என்று சீற.. அவன் முகம் பாராமல் கோபத்தில் மூச்சு வாங்க பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவளைக் கண்காணிக்கும்படி, புவியரசியிடம் கண்ணைக் காட்டி விட்டு கூட்டத்தினுள் புகுந்தான்.
“கட்டுன பொண்டாட்டிக்கிட்ட கை ஓங்குறதெல்லாம் ரொம்ப அநாகரீகம் மாப்ள!, அது சின்னப்புள்ள! அது ஏதோ பேசுதுண்டு, பொண்டாட்டிய அடிக்கக் கிளம்பிட்டீக?,” – வீரைய்யன் வள்ளியின் கணவனை உட்கார வைத்துப் பேச்சுக் கொடுக்க..
“அவன் பொண்டாட்டி! அவன் அடிப்பியான்,கொஞ்சுவியான்! அதுல நாம தலையிட்றது கூட அநாகரீகம்தேன்” – வெற்றிலையை மென்றபடி மணிவண்ணன்.
“அவர்தேன் பேசிட்டிருக்காருல்ல?” – தாத்தனை அவன் இடையிட்டுப் பேசியதில் கடுப்பாகிப் போன விருமன்.
“பேசட்டும்! பேசட்டும்” – அடக்கமாகக் கூறுவது போல் நக்கலடித்தவனை, பின்னால் கட்டியக் கைகளுடன் அடிக்கண்ணில் நோக்கினான் ஆரன்.
“அது சின்னப்புள்ள மாறி பேசல பட்டாளத்துக்காரரே! வார்த்தை ஒவ்வொன்னையும் கத்தியா வீசுது!”
“வாயைத் திறந்தாலே அனலைக் கக்குறவளுக்கு, பேரு மட்டும் அகலருவி” – மீண்டும் இடையில் மணிவண்ணன்.
“ஏய்ய், என்னா தேவையில்லாம பேசுற நீயி? என்னா பிரச்சனை உனக்கு” – ஆரன் வேஷ்டியை மடித்துக் கட்ட….
“எலேய்ய், என் மச்சானைப் பத்திப் பேசி, அவளைக் கிளப்பி விட்டதே நீதேன?, “ – என விருமனும் அவனருகே வந்தான்.
“டேய்… பயலுகளா.. தேவையில்லாத பிரச்சனை வேணாம்” – என வீரைய்யன் அவர்களை அடக்க,
“ஏன் டா வேட்டியை மடிச்சுக் கட்டுறவனெல்லாம் பெரியாளா டா?, எங்க வந்து யார்ட்ட டா எகிறுறீங்க?” – மணிவண்ணன் இருவரிடமும் சண்டைக்கு நிற்க..
“அடச்சீ நிறுத்துங்க டா டேய்!” என்ற கிழவியொன்று, “எப்பவும் கறி சோத்துக்குத்தேனடா மல்லுக் கட்டுவீங்க?, இப்ப என்னா டா புதுசா அளக்குறீங்க?, விவகாரம் பண்ணாம விசேஷத்தை நல்லவிதமா முடிச்சுப்போட்டு வீடு போய்ச் சேருங்கடா எலேய்” என்று குரல் கொடுக்க, அங்கிருந்த மற்ற பெருசுகளும்,
“போங்கப்பா ஏய் போங்கப்பா! பாதி சனம் இன்னும் சோத்துல கை வைக்கல! அதுக்குள்ள அக்கப்போரைக் கூட்டுறீக!,” என்று அனைவரையும் விலக்கி விட,
“அந்தப் புள்ள பேசுனது தப்பு-ண்டா, உம் பங்காளின்றவன் பேசுனதும் தப்புத்தேன்! நான் சேர்த்து வைச்ச சொத்தெல்லாம் எம் பேர,பேத்திகளுக்குத்தேன்! நான் குடிக்குற கஞ்சி கூட, அவுகளுக்குப் போன மிச்சம்தேன்! எம் பேர,பேத்திக எதுவும் அடுத்தவனை ஏய்ச்சுப் பொழைக்கிற ரகம் கிடையாது! அத்தனையும் உழைப்பாளிங்க! இந்த மாதிரி பேச்சையும், நீங்க எம்புள்ளைய அடிக்கிறதையும் நான் பார்க்குறதும்,கேட்குறதும் இதுவே கடைசி முறையா இருக்கனும்!” – மணிவண்ணனை ஒரு பார்வை பார்த்தபடி பேசி முடித்த வீரைய்யன் கடைசியில்..
“உங்க மனசு நோகுற மாதிரி நானோ, என் குடும்பமோ பேசியிருந்தா மன்னிச்சுக்கங்க மாப்ள! புள்ளையைப் பார்த்துக்கங்க” என்று விட்டு விறுவிறுவென நகர்ந்து விட்டார்.
மூவரையும் நோக்கிப் புருவத்தை உயர்த்தி “ச******சி மவனெல்லாம் சவுண்டு கொடுக்குற அளவுக்கு வளர்ந்துட்டானே டா” – என்ற மணிவண்ணனிடம் கழுத்தை திருப்ப முயன்றபடியே அழகு, “அண்ணே அவிங்களை சாதாரணமா எடை போடாதீங்கண்ணே” என்றான்.
“அப்டிங்குறியா?” என்றவனின் பார்வை, தாத்தனின் பின்னே சென்று கொண்டிருந்த ஆரன் மற்றும் விருமனின் மீது யோசனையாகப் படிந்தது.
ஈசல் என்றாலே, அது ஒரே நாளில் இறந்து போகும் பூச்சி என்பது தான் பலருக்கும் நினைவு வரும். ஆனால் அது உண்மையல்ல! பறவைக்கும்,பல்லிக்கும் இரையானது போக, மிஞ்சுற ஈசல்களெல்லாம் இறகு உதிர்ந்து கீழே விழும் போது, ஈர மண்ணைத் துளைத்துக் கொண்டு உள்ளே புகுந்து, புதிய கரையான் காலனியையே உருவாக்குமாம்! அப்படி உருவாகுற ஈசலின் ஆயுட்காலம் 12 முதல் 20 ஆண்டுகளாம்!
நம் கதை மாந்தர்கள் கூட ஈசக்கரையான்களைப் போன்றவர்கள் தான்! இறகு உதிர்ந்தாலும் புதிதாய்ப் உருவெடுப்பவர்கள்!
