கருப்பர் இனம்

முதல் சுற்றான உடற்தகுதித் தேர்வில் நடக்கும் போட்டிகளைப் பற்றிக் கூறி, அவர் பயிற்சி கொடுக்கத் தொடங்க, ஆர்வமாய்க் கற்றுக் கொண்டான் அழகர்.மைதானத்தில் வெயில் ஏறத் துவங்கியதும், பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு வந்தனர் இருவரும்.வாசலில் காத்திருந்த கலாம்மாள், பெரியவரின் கையில் காபி கப்பையும், அழகரிடம் கேப்பைக் கஞ்சியையும் நீட்ட, தயக்கத்துடன் நன்றி கூறி வாங்கிக் கொண்டவன், அருகிலிருந்தத் திண்டில் அமர்ந்தான்.அவர் நீட்டியக் கப்பைக் கையில் வாங்கிய கிழவர், கப்பைத் திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு,“கப்பு எம்புட்டு?” எனக் கேட்க, மூக்கை விடைத்தார் கலாம்மாள்.

“பொழுது விடிஞ்சதும், மண்ணு சட்டில ஊறுன பழைய கஞ்சியைக் மடக்,மடக்ண்டு குடிக்குறவன் கையில, காபி கப்பை நீட்டுனா, எப்பிடி?”- எந்நேரமும் கிழவர், அந்தம்மாளை வம்பிழுத்தபடித் திரிவதைக் கண்டு சிரிப்பு வர, கேப்பைக் கஞ்சியைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்திற்கு நகர்ந்து விட்டான் அழகர்.

“சரி, கப்பை இப்பிடி குடுத்துப்புட்டு, வீட்டுக்குப் போய் கஞ்சியைக் குடிங்க” – கையை நீட்டியவரிடம், மறுத்த பெருசு, “அதெப்பிடி?, நீங்க நாற்காலில உட்கார்ந்துக்கிட்டு, நாகரீகமா, நாக்குல படாம சோறு திங்குற வித்தையைக் காண்ங்காம, நான் வீடு போய்ச் சேருவேனா?” எனக் கேட்டார்.

“அப்ப காபியைக் குடிச்சுப்புட்டு, பைய்ய உட்கார்ந்து வேடிக்கைப் பாருங்க”

“ஆமா,பின்ன, விரல் நுனில எடுத்து, நாக்கு நுனில படாம, நடுவயித்துக்கு சோத்தைத் தள்ளுறது எம்புட்டுப் பெரிய சவாலான விசயம்! நானெல்லாம் உம்மைப் பார்த்துத்தேன் கத்துக்கிடனும்”

“அது கஷ்டம்! வாய் நிறையா, நீரு வளர்த்து வைச்சிருக்கிற மீசைக்கு, நாகரீகம் கத்துக் கொடுக்கிறது ரொம்பக் கஷ்டம்”

கிண்டலாய்க் கூறியவரைக் கண்டு புருவம் சுருக்கி, மீசையை நீவிக் கொண்ட பெருசு, “மீசை புடிக்கல போலயே” என்று விட்டுப் பின், “எடுத்துற வேண்டிதேன்” என்று கூறியதும், கண்ணை விரித்த கலாம்மாள், “அய்யய்யோ! அப்பிடியெல்லாம் செஞ்சுபுடாதீக! அப்புறம் பார்க்குறவிங்க, உம்மைக் கண்டு பயப்பட மாட்டாய்ங்க, பப்பரமுட்டாய்தேன் வாங்கித் தருவாய்ங்க!” என்று சிரிக்க,

“நக்கலுக்கு மட்டும் குறைச்சலில்ல” – பல்லைக் கடித்தவரிடம், “ஆமா! உம்ம கூட நின்-டா, தானா வருது” – என்றவரைக் கண்டு,

“அதுசரி” என்று நொடித்துக் கொண்டவர், வீட்டினுள் தரை பெருக்கிக் கொண்டிருந்தப் பெண்ணைப் பார்த்து, “யாரு?” என்று விசாரித்தார். திரும்பிப் பார்த்த கலாம்மாள், “என் சிநேகிதி! புருசன் விட்டுட்டுப் போயிட்டியான்! புள்ள இல்ல! தனியா நிண்டா! அதேன் கூட அழைச்சுக்கிட்டேன்!” என்று கூறி விட்டு “ஏற்கனவே கூட்டுன வீட்டுன எத்தனை முறைடி பெருக்குவ?”என்று குரல் கொடுக்க, “ஓ! கூட்டிட்டியா?” எனக் கேட்டவர், பெரியவரிடம் வரவேற்பாய்ப் புன்னகைத்து விட்டு உள்ளே சென்று விட்டார். முகம் மாற காபியைக் குடித்தப் பெரியவரின் அமைதியைக் கண்டு, கலாம்மாள் என்னவெனப் புருவம் உயர்த்த, “புருசன்,புள்ள குட்டி-ண்டு வாழ்ந்திருந்தா, இதெல்லாம் தேவைப்பட்டிருக்காதுல்ல?” எனக் கேட்டார்.

“அதனால என்ன குறைஞ்சு போச்சு என் வாழ்க்கைல?”

“……….”

“என் குறிக்கோளும்,லட்சியமும் பொது வாழ்க்கையைப் பத்தி யோசிக்க விடல! இப்ப வரைக்கும் அந்த நினைப்பும் வரல! விடிஞ்சா தொடங்குற என் ஓட்டம், ராத்திரி, நிம்மதியான உறக்கத்தைத்தேன் குடுக்குதே தவிர, எனக்கு யாருமே இல்லங்குற ஏக்கத்தை இல்ல! அழகரு மாறி, சமூகப் பிரச்சனைக்குப் பலியாகுற ஆயிரம் புள்ளைகளை தெனம் பார்க்குறேன்!, அதுகளை என் சொந்தக் குழந்தைகளா மனசு, நினைக்கையில, ஏக்கமெல்லாம் எனக்கு ஏன் வரப் போகுது?” - அவர் பதிலில் புன்னகை கொண்ட பெரியவர்,

“உம்ம மேல பக்தி-ண்டு சொன்னா சிரிக்குறீக! ஆனா, இந்த மாதிரி நீங்க பேசுறதைக் கேட்கையில, பக்தியைத் தாண்டுன பரவச நிலைக்குப் போயிருது மனசு” என்று விட்டு, அவர் அதற்குப் பதிலளிக்கும் முன், பாக்கெட்டிலிருந்துக் கத்தைப் பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினார்.

“அழகரு செலவுக்கு வைச்சுக்கங்க”

“நான் வறுமைல வாடுறதா உங்கட்ட சொல்லவேயில்லயே”

“ஆத்தீ! பீங்கான் தட்டுல சோறு திங்குறவகளுக்குப் பணத்துக்காப் பஞ்சமிருக்கப் போகுது”

“பின்ன எதுக்கு இது?”

“என்னைய நம்பி வந்தப் பயலுக்கு எதுவுமே செய்யல-ண்டா, என் மனசாட்சி நாளைக்கு என் மூஞ்சில காறித் துப்பாதா?, உம்மை, அவனுக்குச் செலவு செய்ய வேணாண்டு சொல்லல! நான் குடுக்குறதையும் ஒரு பங்கா சேர்த்துக்கங்கண்டுதேன் சொல்றேன்!” கிழவர் பொறுமையாய்க் கூறியதைக் கேட்டபின், காசை வாங்கக் கை நீட்டியவரிடம், “நீங்க, என் கூட எதைப் பகிர்ந்துக்கவும் விரும்ப மாட்டீகண்டு எனக்கு நல்லாத் தெரியும்! ஆனாலும்” என்று கிழவர் வம்பு செய்ய, “உம்ம நட்பைப் பகிர்ந்துக்க நான் எப்பவும் தயார்தேன்” என்று கூறியபடியே பணத்தை வாங்கிக் கொண்டவரிடம்,

“யாத்தே! இப்பவாச்சும் மனசு வந்துச்சே” – என்று கேலி செய்தவரைக் கண்டபடி வந்து சேர்ந்தனர் ஆரனும்,விருமனும். “என்னா மனசு வந்துச்சு?” – அவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்ட விருமன், ஆர்வமாய்க் கேள்வி கேட்க, “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமிய கிழவர், “காபி-ண்டு கழனித்தண்ணீ ஒன்னு குடுத்தீகளே! அதை இவிங்களுக்கும் ஊத்திக் குடுங்க! அப்பத்தேன் இவிங்க வாயை அடைக்க முடியும்” என்று விட்டு “மறக்காம அந்தக் கப்-ல ஊத்திக் கொண்டு வாங்க” என்றார்.

மேலும் வாசிக்க... கீழே உள்ள லிங்க்குகளை க்ளிக்கவும்......