பொன்வண்டு

யா.. எழவு சொல்ல வந்திருக்கேங்கய்யா”

-வாசலில் ஒலித்தக் குரல் கேட்டு, அடுக்களையில் அமர்ந்திருந்த அகலருவி தலையை நீட்டி, வெளியே எட்டிப் பார்த்தாள்.

“யார்றி?” – கழுவி வைத்திருந்த உப்புக் கருவாட்டுத் துண்டங்களைக் குழம்பிலிட்டபடி கேள்வி கேட்ட மீனாட்சியிடம்..

“அழகரு பய” – என்றவள், அருகிலிருந்தக் கிண்ணத்திலிருந்துப் பழைய சோற்றைப் பிழிந்தெடுத்துத் தட்டிலிட்டு, அதில் முதல் நாள் வைத்தப் புளிக்குழம்பை ஊற்றிப் பிசைந்து, சின்ன வெங்காயத்தைக் கடித்தபடி லபக்,லபக் என விழுங்கத் தொடங்கினாள்.

கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பிற்கு மூடி போட்டபடி “அவன் மாங்குளத்துக்காரனாச்சே! அப்டின்-ண்டா, சுப்பையன் சித்தப்பு மண்டையைப் போட்ருச்சு போலடியேய்!” என்ற மீனாட்சி வாசலுக்கு விரைந்தார்.

“எலேய் அழகரு..”

“அம்மா.. மாங்குளம் பெரியசாமி-பேச்சியாத்தா மவன் சுப்பையா, இன்னிக்கு விடியகால 4 மணிக்கு நெஞ்சுவலியில தவறிட்டாருங்க! நான் எழவு சொல்லிட்டுப் போக வந்தேனுங்கம்மா”

கருத்த முகத்தோடு வியர்த்து வழிய நின்றிருந்த இளைஞன், மீனாட்சியைக் கண்டதும் தான் ஏந்தி வந்த செய்தியைக் கடகடவென ஒப்பித்தான்.

“போன வாரத்துல இருந்து சோறு,தண்ணி இறங்காம இழுத்துட்டுக்கிடந்த மனுஷன், ஒரு வழியா போய்ச் சேர்ந்துட்டாரு போல!, ஏன் டா அவுக பங்காளி வீட்டுக்கு சொல்லிட்டியா?”

“பயலுக போய்ருக்காய்ங்கம்மா, அவிங்கள அங்கிட்டு அனுப்பிப்புட்டு நான்தேன் இங்கிட்டு ஓடியாந்தேன்” – என்றவன் லேசாய்ப் பிடரியைச் சொரிய,

“சரி,சரி திண்ணைல உட்காரு! இந்தா வாரேன்” – என்றவரிடம்.. அவன்,

“அம்மாஆஆஆ” – என்று இழுக்க, சுற்றும்,முற்றும் பார்த்தவர் லேசாய்க் குனிந்து, “கெழவி, ரேசன் சாமான் வாங்கப் போயிருக்கு! வர நேரமாகும்! நீ கவலைப்படாம உட்காரு” எனக் கூறி உள்ளே சென்றவர், இரண்டு கைகளிலும் தட்டும்,கிண்ணங்களுமாய்த் திரும்பி வந்தார்.

அவர் வந்ததும் எழுந்தவனைக் கண்டு,

“உட்கார்றா” என்றவர், அவன் அமர்ந்ததும் தட்டு வைத்து அன்னமிட்டார்.

காலையிலிருந்து இழவு செய்தி சொல்வதற்காக சுற்றுவட்டாரக் கிராமங்களில் அலைந்து,திரிந்து வந்தவனுக்கு, கருவாட்டுக் குழம்பின் மணம், பசியை ஏகத்துக்கும் தூண்ட, ஆர்வமாகச் சோற்றைப் பிசைந்து வாயிலடைத்துக் கொண்டான்.

“ருசியா இருக்குதுங்கம்மா” – வேக,வேகமாகத் தின்பவனைக் கண்டுப் புன்னகைத்தவர், “பைய்யத் தின்னுடா, விக்கிக்கப் போகுது” என்று விட்டு “இரு தண்ணி எடுத்துட்டு வாரேன்” என மீண்டும் உள்ளே சென்றார்.

அவர் நகர்ந்த வேளை, வீட்டுக்குள் நுழைந்த சிலம்பன்,

“எலேய் அழகரு, என்னா டா இந்தப்பக்கம்?” எனக் கேட்டபடி அருகே வர, வாயில் நிரம்பி வழிந்த சோற்றுடன் புன்னகைத்தவன்,

“மாங்குளம் சுப்பையா தவறிட்டாருங்கண்ணே! அதேன் எழவு சொல்ல வந்தேன்” என்றான்.

“உன் ஊர்க்காரய்ங்கதேன் சேதி சொல்லக் கிளம்பிருப்பாய்ங்களே! படிக்குற பய உனக்கென்னத்துக்குடா இந்த வேலை?”

“அண்ணே..” – எனத் தலையைச் சொரிந்தவன் “அது வந்துண்ணே.. பட்டாளத்துக்காரர் வீட்டுக்கு வந்தா, நல்ல சோறு கிடைக்குமுண்டு, நான்தேன் அவிங்களைத் துரத்திப்புட்டு இங்கிட்டு வந்தேண்ணே!” – என்றான்.

அவன் பதிலில் சிரித்து “அடக் களவாணிப்பயலே!” என்ற சிலம்பன், “தின்னு! தின்னு! நல்லாத் தின்னு! கெழவி வந்து ஏசுறதுக்குள்ள சீக்கிரம் தின்னுட்டுக் கிளம்பு” எனக் கூறி உள்ளே சென்றான்.

அவசர,அவசரமாக வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவனின் தட்டில் மீனாட்சி, மேலும் சுடச் சுடச் சோற்றைக் கொட்ட,

“எம்மா, எம்மா போதும்மா,போதும்மா!” என்றவனிடம் “நல்லாத் தின்னு டா! பட்டாளத்துக்காரரு இருந்திருந்தா, கறிசோறு போடலையாண்டு என்னைய ஏசியிருப்பாரு” எனக் கூறிக் கொண்டிருக்கையில்.. வீட்டிற்குள் நுழைந்தார் சங்கிலியன்.

அவரைக் கண்டதும், அன்னமிட்டக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு மீனாட்சி அமைதியாய் அமர்ந்து விட,

பீதி நிறைந்த விழிகளுடன் தன் முகம் பார்க்கும் அழகரின் தட்டில் ஆவி பறக்கும் சோற்றைப் பார்த்தவரின் இதழ்கள் ஏகத்துக்கும் இறுக,

“அடியேய்ய் வீரலட்சுமி… வீரலட்சுமி….” என முழுக்குரலில் கத்தி, மனைவியை அழைத்தார் சங்கிலியன்.

கணவனின் குரலில் அடித்துப்பிடித்துக் கொண்டு வெளியே வந்த வீரலட்சுமியைத் தொடர்ந்து அகலருவியும் வாசலருகே வர,

“ஏன் டி வாசத் திண்ணையோட நிப்பாட்டிப்புட்டீக?, வீட்டுக்குள்ளக் கூப்ட்டு வைச்சுத் தலவாழ இலை போட்டு விருந்து வைக்க வேண்டிதேன?,”

கணவனின் காட்டுக்கத்தலையும்,சோற்றுத் தட்டுடன் அழகரையும் கண்ட வீரலட்சுமி திரும்பி, மீனாட்சியை முறைத்து, “இந்த மதினிக்கு எம்புட்டு சொன்னாலும் புத்தியே வராது” எனத் தலையில் அடித்துக் கொண்டார்.

வாயிலிருந்த சோற்றை விழுங்க மறந்து, பயப்பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தவனைக் கண்டு கொதித்துப் போன சங்கிலி,

“என்னாத் திண்ணக்கமிருந்தா, என் வீட்டுத் திண்ணைல விருந்தாளி கணக்கா, சம்மணங்கட்டி உட்கார்ந்து, சோத்தை அள்ளித் தின்ப நீயி?, எந்திர்றா நாயே, எந்திர்றா முதல்ல” – என்றவர் தோளிலிருந்தத் துண்டை வைத்து அவன் முதுகில் அடிக்க, அவசரமாய் தட்டிலிருந்துக் கையை எடுத்துக் கொண்டு எழுந்து நின்றான் அழகர்.

“இப்பிடிப் பொங்குன சோத்தை அவதி,அவதியா சூடு குறையாம தட்டுல கொட்டுற அளவுக்கு, முக்கியமான விருந்தாளியா டி இவிங்க?, உறவுக்காரனுக்குப் பரிமாறுற மாதிரி பக்கத்துல உட்கார்ந்து, பகுமானம் பண்ணிக்கிட்டுத் திரியுறீக! இப்ப நான் வீட்டுக்குள்ள வந்தா எனக்கும் இதே சோத்தைத்தேன் கொட்டுவீகளா?, திண்ணைல உட்கார்ந்து இந்த ச******யப்பய திங்குற சோத்தை, வீட்டுக்குள்ள உட்கார்ந்து நானும் தின்-ண்டா, எனக்கும் அவனுக்கும் என்னாடி வித்தியாசம்?” – ஆவேசமாய் அவர் சீறிக் கொண்டிருக்கையில்..

“சோத்துல வித்தியாசம் பார்க்குறதெல்லாம் இருக்கட்டும்! இப்ப, இங்கன, இவன் நிற்குற இடத்துல சுத்துற அதே காத்தை நீயும் என்ன மயித்துக்கு டா எடுபட்டபயலே உள்ள இழுக்குற?, நீ அம்புட்டுப் பெரிய சாதிமானா இருந்தா, மூச்சைப் புடிச்சுக்கிட்டு நில்றா பார்ப்போம்”

-தலையில் கருப்புத் துண்டுடன், வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முன்னே வந்தார் வீரைய்யன்.

தாய்மாமனைக் கண்டதும், அதுவரை சீறிப் பாய்ந்து கொண்டிருந்தக் கோபம் ப்ரேக் அடித்து விட, எதிர்த்து எதுவும் பேச முடியாது, கையை இறுக்கிக் கொண்டு நின்ற சங்கிலியனைக் கண்டு..

“எலேய்! என் வீட்ல, எவன் உட்கார்ந்து திங்கனுமுண்டு தீர்மானம் பண்றதுக்கு நீ யார்றா?, ஏன் டா?, யார் வீட்ல யார்றா நாட்டாமை பண்றது?, நான் இல்லாத நேரத்துல இப்பிடித்தேன் பூராப் பயலும், என் முதுகுக்குப் பின்னாடி பகுமானம் பண்ணிக்கிட்டுத் திரியுறீங்களா டா?. எங்கடா எங்கூடப் பொறந்த சிறுக்கி?, நாக்கை நாலு மொழத்துக்குத் தொங்க போட்டுக்கிட்டு மூச்சு வாங்க பேசுவாளே, எடுபட்ட சிறுக்கி! எங்கடா தொலஞ்சா? மவனைப் பேச விட்டு வேடிக்கை பார்க்குற அளவுக்கு பயமில்லாம போச்சா டா அவளுக்கு?” என்றவர் தொடர்ந்து..

“நல்லாக் கேட்டுக்கங்க டா! நான் பட்டாளத்தான்! என் வீட்டுத் திண்ணைக்கு சாதி பேதம் பார்க்கத் தெரியாது! இஷ்டமிருந்தா உள்ள இருங்க! இல்லையா, துண்டை உதறிக்கிட்டுக் கிளம்பிப் போயிட்டே இருங்கடா! அதை விட்டுப்புட்டு சாதிப்பெருமை பேசி வீட்டுக்குள்ள சாக்கடை ஓட்டனும்ண்டு நினைச்சீகண்டா, கொண்டேபுடுவேன் சொல்லிப்புட்டேன்” என்று பெருசு சவுண்டைக் கொடுக்க..

அத்தனை பேரின் முன்பும் மாமன் தன்னை அவமதித்து விட்டது கண்டு முகம் கூம்பிப் போன சங்கிலியன், நிமிர்ந்து அழகரை ஒரு பார்வை பார்த்துப் பின் விருட்டென வெளியேறி விட்டார்.

அவர் நகர்ந்த பின்னும் பீதியுடனே நின்ற அழகரிடம்,

“எலேய்! என்னாடா நீயி?, இளரத்தம் ஓடுற இளவட்டப்பய, இம்புட்டுப் பயந்து சாகுற?, உன் வயசுல நானெல்லாம் பட்டாளத்துல பாஷை தெரியாதவனோட சண்டைக்கு நின்னவன்டா! ஒன்னு, அப்பிடித்தேன் தின்பேன், உனக்கென்னாடாண்டு எதிர்த்துப் பேசுற எகத்தாளமிருக்கனும்! இல்ல, சோத்தை உதறிப்புட்டு எந்திரிச்சுப் போற அளவுக்கு ரோஷமாவது இருக்கனும்! ரெண்டுமில்லாம தொடைநடுங்கிப் போய் பம்மிக்கிட்டு நிண்டா, உனக்கெப்பிட்றா மீசை முளைக்கும்? ஏன் டா?” – என்று அவர் ஏச..

“அதில்லைங்கய்யா! ஒரு வாய் சோறு திங்க என்னத்துக்கு மல்லுக் கட்டிக்கிட்டுண்டுதேன்” – என்று அவன் இழுத்ததும்..

“இன்னிக்கு உன் கூட சோத்துக்கு மல்லுக்கட்டுறவன்தேன், நாளைக்கு நீ பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போனா நிப்பியான், சாக்கடை அள்ளுறனுவனுக்கு என்னத்துக்கு டா சமூக அறிவியலுண்டு! நீ கோயில் படி ஏறுனா வருவியான், பரதேசிப் பயலுக்கெல்லாம் பரமசிவன் தரிசனம் கேக்குதாண்டு!, அவனுக்குப் பயந்து இன்னிக்கு நீ சோத்துல இருந்து கையை எடுத்தண்டு வையி, நாளைக்கு அவன் உன்னைய, உன் வீட்டை விட்டு வெளிய எங்கயும் கால் வைக்க முடியாத மாறி பண்ணிப்புடுவியான்” – என்று பெரியவர் கூறுகையில்..

“சரி,சரி விடு தாத்தா! சின்னப்பயல பயமுறுத்திக்கிட்டு” – கிழவர் சங்கிலியனை சரமாரியாகக் கழற்றி எறிந்து கொண்டிருக்கையில் வீடு வந்து சேர்ந்திருந்த ஆரனும்,விருமனும் ஆளுக்கொரு புறமாக அழகரினருகே நின்று கொண்டுத் தாத்தனை அடக்கினர்.

“அடப் போங்கடா பயந்தாங்கோழிப் பயலுகளா! முதுகெலும்பு இருக்கிறதே, நிமிர்ந்து நிற்கத்தேன்! தழைஞ்சு தரைல கிடந்தா, பொணமுண்டு நினைச்சு சாத்தி வைச்சிருவாய்ங்க! நியாபகத்துல வைச்சுக்கங்க” – என்ற வீரைய்யன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அழகரிடம் கொடுத்து..

“கறி சோறு வாங்கித் தின்னு”-என்று விட்டுப் போக,

“நீ வா டா அழகரு” – என்ற இருவரும், அவனைத் தள்ளிக் கொண்டு வெளியே நடந்தனர்.

மெயின் ரோட்டிலிருந்த பரோட்டாக் கடையில் நுழைந்த மூவரும், அங்கு போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து, ஆளுக்கொரு இலையை விரித்தனர்.

“அண்ணே! எனக்குப் பசியே இல்லண்ணே! திண்ணைல தின்ன சோறே நெஞ்சு வரைக்கும் நிக்குதுண்ணே!”

இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த அழகர், புலம்பியபடி இலையில் தண்ணீர் தெளிக்க,

“எலேய்! இவன் ஒருத்தன் நெஞ்சுல நிக்குது *****-ல நிக்குதுண்டு நசநசத்துக்கிட்டு! மூடிட்டுத் தின்றா! நீ பசியே இல்லாட்டியும், பத்து புரோட்டா சாப்பிடுறவண்டு எனக்கு நல்லாவே தெரியும்” – என்ற விருமன்,

“மணியண்ணே! 4 சாதா புரோட்டா, 1 கொத்து, 2 முட்டை வீச்சு, 2 ஆம்லேட்டு” – என்றான் கடைக்காரரிடம்.

புரோட்டாக்களைப் பிய்த்துப் போட்டு சால்னாவில் மூழ்க வைத்துக் குழைத்துப் பிசைந்து, வெங்காயத்துடன் உண்ணத் தொடங்கிய அழகரிடம் ஆரன்,

“பள்ளிக்கூடத்துக்குப் போறியா இல்லையா டா நீயி” எனக் கேட்டான்.

“போறேன் ஆரன்ணே!” – அவசரமாய்ப் பதிலளித்தவனிடம்,

“படிப்பை விட்றக் கூடாது. புரிஞ்சதுல?” – என்று ஆரன் கூற தலையாட்டினான் அவன்.

“ஏன் டா எங்கத்தை மக புவியரசியும் உன் கூடத்தேன படிக்குது?”

இதழோரமாய் ஒட்டிக் கிடந்த சால்னாவை சட்டைக் காலரில் துடைத்தபடி “இல்லண்ணே! அந்தப் புள்ள பதினொண்ணாங்க்ளாஸூ, நான் ப்ளஸ்-டூண்ணே” என்றான் அழகர்.

“எந்த குரூப்பு டா?”

“பர்ஸ்ட் குரூப்புண்ணே”

“ஓழுங்கா படிக்குறேல?”

“படிக்குறேன்ண்ணே! எங்க க்ளாஸ்ல நான்தேன் பர்ஸ்ட் மார்க்கு” – வெட்கமும் பெருமையுமாய்க் கூறியவனைக் கண்டு சிரித்த இருவரும், அவன் தோளில் தட்டி,

“பார்றா! ரொம்ப சந்தோஷம் டா தம்பி! அடுத்து காலேஜெல்லாம் சேரனும். இத்தோட படிப்பை விட்றக் கூடாது. சரியா?” எனக் கூற,

“சரிண்ணே” எனத் தலையாட்டினான் அவன்.

திருப்தியாய் உண்டு முடித்து விட்டு மூவரும் தெருவில் நடக்கையில்,

“எலேய் அழகரு, கள்ளு இறக்குனாய்ங்கண்டா சொல்றா” என்றான் விருமன்.

“டேய், ஆரம்பிச்சுட்டியா டா நீயி?” – ஆரன் திட்டியதும் பொங்கியெழுந்தவன்,

“எலேய் பங்காளி! தெனம் கறி சோறு திண்டும் கூட, என்னமோ குறையுதேண்டு கதறிட்டுக் கிடந்த என் மனசு, இன்னிக்கு ஒத்தப்பனை மரத்தை கண்டதும், அலப்பரையைக் கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு டா! டேய்! நீ சுத்தமானவனா, கண்ணியவானா, ஊரே கை எடுத்துக் கும்பிடுற நல்லவனா இருந்துட்டுப் போடா! ஆனா என்னையும் அப்பிடியே இருக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தாத டா! நான்-லாம் போர் வீரன் டா! என்னால போதையில்லாம இருக்க முடியாது! உனக்கு அதெல்லாம் சொன்னாப் புரியாது டா” – என்று கிட்டத்தட்டக் கதறி விட்டு அழகரிடம்,

“எலேய், நீ சொல்றா” என்றான்.

“அண்ணே! 5 மணிக்கு மொட்டைப் பாறை கிட்ட வாங்கண்ணே!, இறக்குவாய்ங்க” – என்றவனைக் கட்டிப்பிடித்து “சூப்பர் டா தம்பி! அண்ணன் சரியா 5 மணிக்கு மொட்டைப்பாறைல இருப்பேன் டா” என்ற விருமனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

தன் பின்பு கரும்புக் காட்டில் வேலையை முடித்து விட்டுக் கிழவனுடன் மாலை நான்கு மணி வாக்கில் இருவரும் வீடு திரும்பிய போது, வெளி வாசல் குழாயடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள் அகலருவி.

ஒரு குடத்தை இடுப்பிலும்,இன்னொரு குடத்தைக் கையிலும் ஏந்திக் கொண்டு விறுவிறுவென வீட்டை நோக்கி நடந்தவள், திண்ணையில் இறக்கி வைத்து விட்டு, திரும்பி வந்து ஏற்கனவே நிரப்பி வைத்திருந்தக் குடங்களை மறுபடி இடுப்பிலொன்றும்,கையிலொன்றுமாய் தூக்குவதைப் பார்த்த வீரைய்யன்,

“ஏன் ஆத்தா, ஒன்னொன்னாத் தூக்கிட்டுப் போறதுக்கென்ன?, உன் ஒருத்தியை மட்டும் குடம் தூக்க விட்டுப்புட்டு என்னா செய்றாளுக இந்த வீட்டுப் பொட்டச் சிறுக்கிக?” – என்று பேத்தியிடம் கேட்க..

“அவுகல்லாம் அடுப்படில அயிர மீனு கூட அக்கப்போர்ல இருக்காக! எனக்கும்,சமையலுக்கும்தேன் ரொம்பத் தொலவாச்சே! அதேன், எனக்கு வர்றத நாஞ்செய்றேன்!” என்றாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே விருமனும்,ஆரனும் ஆளுக்கு இரண்டு குடங்களைத் தூக்கிக் கொண்டு சென்று திண்ணையில் வைக்க, தானும் இரண்டைத் தூக்கிய பெருசு,

“பொட்டப்புள்ளைக்கு கட்டாயம் சமைக்கத் தெரிஞ்சுருக்கனுமுண்டு எவன் சொன்னது?, வகுறும்,பசியும் எல்லாருக்கும் பொதுவுதேன்! பொம்பள சமைக்கனும், ஆம்பள திங்கனும்ண்டு எந்த விதியும் இல்ல! பட்டாளத்துல காட்டுலயும்,மலைலயும் திரிஞ்சு வெறும் ரொட்டியைத் தின்னு வயித்தை நிரப்பையிலயே போயிடுச்சு எனக்கு, ஆம்பளை,******-ன்ற தலக்கனமெல்லாம்! உனக்கு வர்றதை நீ செய் ஆத்தா! நல்லா சமையக்காரனாப் பார்த்து நான் உனக்குக் கட்டி வைக்குறேன்” – எனக் கூற.. தாத்தனின் பதிலைக் கேட்டுக் கலகலவென சிரித்த அகலருவி,

“நம்மூர்க்காரய்ங்க எவன் தாத்தா பொண்டாட்டியை உட்கார வைச்சு சோறு போடுறாய்ங்க! பொண்டாட்டி சமைச்சதை வசை பாடாம திங்குறவனைப் பார்க்குறதே அதிசயமாயிருக்கு! நீ வேற ஏன் தாத்தா?” எனக் கூற..

குடங்களை வைத்து விட்டுத் திரும்பியத் தன் பேராண்டிகளைக் கண்ட பெருசு,

“ஏன், என் பேரனுங்க இல்லையா?” எனக் கேட்டார்.

“அதான??” – என்றபடி அவளருகே இடித்து நின்ற விருமனைக் கண்டுத் தலையிலடித்துக் கொண்டவள்,

“இவனா?, இவன் அடுப்படில பொரிகடலை டப்பாவை உருட்டுற பொடிப்பயலாச்சே” எனக் கூறியதும் “ஏய்ய்ய், யாரைப் பார்த்து என்னாடி சொன்ன?” என்று எகிறியவனைக் கண்டு அவள் காதை மூடிய வேளை,

தன்னிடமிருந்தக் குடத்தை வாங்கித் திண்ணையில் வைத்துக் கொண்டிருந்த ஆரனைக் கை காட்டிய பெருசு,

“இவன் சரி வர மாட்டானா?,விடு! அப்ப ஆரனை என்ன சொல்லுவ?” எனக் கேட்க.. மெல்லிய சிரிப்போடு அருகே வந்து நின்றவனை நோக்கி உதட்டைப் பிதுக்கியவள்,

“இவரு அம்மிக்கல்லோட சேர்த்து விரலை அரைக்குற ஆளாச்சே!” என்று விட்டுப் பின் “ப்ச், எல்லாருமே முரட்டுப் பயலுகதேன் தாத்தா” எனக் கூற.. அவளைக் கடுப்பாய் நோக்கிய விருமன்,

“ஆமா, இவுக அப்டியே வெடிச்சு நிற்குறப் பருத்தியாட்டம் மென்மையானவக! நீ தூக்கிச் சொருகிகிட்டு, அந்தப் பாண்டீஸ்வரி வாயை உடைக்கப் புறப்பட்டப்ப, உன் மொகரையைப் பார்த்த எவனும், நீ இருக்கிற பக்கம் தலை வைச்சுக் கூட படுக்க மாட்டான்டியேய்! தாத்தா, இவ முக அமைப்பைப் பார்த்தா தெரிலயா, இவ-லாம் முதிர்கன்னியாகுறதுக்குன்னே முளைச்சவ-ண்டு! இவளையெல்லாம் நல்லக் கோயிலாப் பார்த்து நேந்து விட்டுப்புட்டு, எனக்குப் புவி புள்ளையைக் கட்டி வைக்கிற வழியைப் பாரு” என்றான்.

கையிலிருந்தக் காலி குடத்தைக் கொண்டு அவன் தலையில் இடித்தவள் “கெடா மாடு மாதிரி இருந்துக்கிட்டு, சுண்டெலிக்கு ஆசைப்பட்றதைப் பாரு” எனத் திட்ட..

“டேய், இப்புடிப் பேச்சு பேசாதண்டு உனக்கு எத்தனை தடவ சொல்றது?” – என ஆரனும் எகிற, சலித்துக் கொண்ட விருமன்,’அடப்போங்கடா’என்றபடி விறுவிறுவென மாடியேறி விட்டான்.

ஆரனின் கோபத்தையும்,விருமனின் சலிப்பையும் கண்டு சிரித்த பெருசிடம் “அய்யோ! மறந்தே போயிட்டேனே” என்ற அகலருவி, அவசரமாய் வீட்டுக்குள் ஓட,

“மெல்லப் போ தாயி! விழுந்து வைக்காத!, என்னத்துக்கு அம்புட்டு வேகம்?” எனத் திட்டியவரிடம் திரும்பி “இன்னிக்கு டிவில பாசமலர் படம் போட்றாய்ங்க தாத்தா! நானும்,எங்கண்ணனும் பார்க்கப் போறோம்” என்றபடியே உள்ளே ஓடிச் செல்ல.. உதட்டை வளைத்த ஆரன்,

“ஏன் தாத்தா, இவ கூட சாவித்திரியா இருந்துட்டுப் போகட்டும்!, பிரச்சனை இல்ல எனக்கு! ஆனா உன் பேரன் சிலம்பனை, எந்தத் திசைல நிண்டு பார்த்தா, சிவாஜிகணேசனா தெரியுறியான்-ண்டு இவ இம்புட்டுக் குதி,குதிக்குறா!!!” – என நெற்றியிலடித்துக் கொண்டு “எல்லாம் காலக் கொடும” என்றான்.

டுத்த அரை மணி நேரத்தில் திடுதிடுவென அந்த மச்சு வீட்டின் மரப்படிக்கட்டுகளில் இறங்கி வந்த விருமன், டிவி பொட்டியின் முன்புத் தன் தங்கையுடன் அமர்ந்துத் தீவிரமாகப் படம் பார்த்துக் கொண்டிருந்த சிலம்பனைக் கடுப்புடன் அழைத்தான்.

“எலேய் சிலம்பா! என்னாடா இதெல்லாம்?” – விருமன்.

“ம்ம், ஏன், பார்த்தாத் தெரியல?” – கேள்வி கேட்ட அகலருவியின் கைகள் தன் போக்கில், அவித்த நிலக்கடலைகளைத் தோல் உரித்து, அண்ணனின் வாயில் போட்டவண்ணமிருந்தது.

“ஏன் டா, தெனம் வீட்ல நீங்க ரெண்டு பேரும் ஓட்ற பாசமலர் படத்தைப் பார்க்குறது போதாதுண்டு, டிவி பொட்டில வேற பார்க்கனுமா டா நாங்க?”

“ம், உனக்கேன் பொறாமை?, வேணும்ண்டா, நீயும் போய், அயித்தை கிட்ட, எனக்கொரு தங்கச்சியைப் பெத்து குடு-ண்டு கேளு”

“அடியேய்ய்ய்?” – பல்லைக் கடித்தபடி விருமன்.

இரண்டு கடலைகளைத் தன் வாய்க்குள்ளும் போட்டபடி அவனை நிமிர்ந்து நோக்கியவள்,

“அயித்தை 40 வயசுலயும் சும்மா நச்சு-ண்டு இருக்குற ஆளு! நீ கேட்டா பெத்துக் கொடுக்கும்! சொல்ல முடியாது” என்று கூற..

“ஆனா, மாமா நிலைமையைக் கொஞ்சம் யோசி அகலு! ஆளு டொக்கு விழுந்த கன்னமும்,நரைச்ச முடியுமா பார்க்க, என்னண்டோண்டு இருக்குறாரு! அவரை வைச்சுக்கிட்டுத் தங்கச்சிப் பாப்பாவெல்லாம்.. கஷ்டம்தேன்” – தங்கையின் பேச்சில் இடை புகுந்தபடி சிலம்பன் வேறு.

தன்னைக் கடுப்பேற்ற இருவரும் ஒன்று கூடி விட்டதை உணர்ந்த விருமன், இடுப்பில் கை வைத்தபடி இருவரையும் முறைத்து,

“ஒன்னு கூடுறீங்களா டா உடன்பொறப்புகளா! இப்ப நான் என் துணைப்பொறப்பைக் கூப்பிட்றேன் பாருங்க டா” என்றவன் “ஆரணாஆஆஆஆ” என முழுக்குரலில் கத்தினான்.

“என்னா டா?” – மாடியிலிருந்துக் குரல் கொடுத்தவனிடம்,

“பங்காளி! கீழ வா டா” என்று அவன் அழைத்ததும்..

“என்னத்துக்கு டா?” – என அவன் மறு கேள்வி கேட்டதைக் கண்டு அண்ணனும்,தங்கையும் தொடையில் தட்டிச் சிரித்துக் கொள்ள, கடுப்பானவன்,

“பங்காளி, இங்க ரெண்டு எலிக்குஞ்சுகளை நசுக்கனும் டா! இறங்கி வாடா நீயி” என்றான்.

அவன் கத்தியதும் படியிறங்கி வந்தவனின் தோளைப் பற்றி இழுத்து வந்தவன்,

“பங்காளி! இந்த உலகத்துலயே, நீ அதிகமா பாசம் வைச்சிருக்கிற ஒரே ஆளு நான்தேன டா?” எனக் கேட்டான்.

அவனைக் கீழிருந்து மேல் வரை ஒரு மாதிரியாகப் பார்த்த ஆரன், “ஏன் டா குடிக்கப் போலாம்-ண்டு பேசுனதுக்கே உனக்கு போதை ஏறிடுச்சா?, உளறிட்டுத் திரியுற?, கிறுக்குக் ***” என்று திட்ட,

“ப்ச், பதிலைச் சொல்லு டா” என்றான் அவன் விடாப்பிடியாய்.

“நீதேன் டா. அதுக்கென்னா இப்போ?” – என்றவனை பாசப் பார்வை பார்த்து விட்டுத் திரும்பி, அண்ணன்-தங்கையை மிதப்பாய் நோக்கியவன், ஆரனின் தோளில் கை போட்டு “வா பங்காளி போவோம்” என்றான்.

“எங்கடா?”

“மொட்டைப்பாறைக்குத்தேன்” என்றவன், சிலம்பனைப் பார்த்து நக்கலாய்ச் சிரிக்க, புருவம் சுருக்கிய சிலம்பன்,

“இந்நேரத்துக்கு என்னத்துக்கு மொட்டைப்பாறை?”- என முணுமுணுத்துப் பின் பல்ப் எரிந்ததும்,

“அய்யோ! விசயம் தெரியாம இவனைக் கடுப்பேத்திப் போட்டேனே” எனப் புலம்பியபடியே “மாப்ள, இர்றா, நானும் வாறேன்! எனக்கும் அங்க வேலையிருக்கு” என எழப் பார்த்தான்.

“அண்ணே! படம் இப்பத்தேன் தொடங்கியிருக்கு! அதுக்குள்ள எங்கக் கிளம்பிட்ட?, பேசாம உட்காரு” என்ற அகல், எழுந்தவனைப் பிடித்திழுத்து அமர வைக்க,

“ஹேஹேஹேஹே”-வெனக் இடுப்பில் கை வைத்துத் தலை தூக்கி சிரித்த விருமனைக் கண்டுப் பல்லைக் கடித்த சிலம்பன்,

“தங்கச்சி, அண்ணனுக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கும்மா! பத்து நிமிஷத்துல வந்துர்றேன்” எனக் கூற, அவனை முறைத்துப் பார்த்தவள்,

“அந்த முக்கியமான வேலை மயிறு என்னாண்டு எனக்கு நல்லாத் தெரியும்! மூடிட்டு உட்காரு” என அடிக்குரலில் மிரட்ட, பம்மியபடி தலையைச் சொரிந்தவனைக் கண்டு,

“விடு மச்சான்! நீயி எனக்கு தங்கச்சிப்பாப்பா பொறக்குமாண்டு, உன் தங்கச்சியோட சேர்ந்து ஜோசியம் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திரு. நான் போய் உனக்கும் சேர்த்து அந்த முக்கியமான வேலையை முடிச்சுப்புட்டு வாறேன்” என்ற விருமன் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு வெளியே செல்ல, அவனை வாய்க்குள் திட்டியவன், தன்னை முறைப்பாய் நோக்கும் தங்கையைக் கண்டுப் பயந்து, அந்த ப்ளாக் அண்ட் வைட் டிவியில் அவசரமாய்ப் பார்வையைப் பதித்தான்.

ஆரனும்,விருமனும் மொட்டைப்பாறையைச் சென்றடைகையில் இருவருக்கும் முன்பே வீரைய்யன் அங்கு அமர்ந்திருந்தார்.

“ஏன் பெருசு, காலம் போன காலத்துல கம்முன்னு கட்டிலோட கிடக்குறத விட்டுப்புட்டு, கள்ளு குடிக்க அலையுறியா நீயி?”

“எலேய், நீ பள்ளிக்கூடம் போற வயசுல, பதநீருண்டு சொல்லி, உனக்குக் கள்ளு குடிக்கப் பழக்கி விட்டதே நான்தேன்! என்னையே நீயி வீட்ல அமுக்கிட்டு இருக்க சொல்றியா?” – என்ற கிழவனை முறைத்தபடியே பாறை ஏறிய விருமன், வீரைய்யன் மற்றும் அவரது நண்பரின் அருகே சென்றமர, ஆரன், கள்ளு இறக்க வேண்டி மரம் ஏற நின்றவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தான்.

இரு குடங்களையும், குடுவை ஒன்றையும் இடுப்பில் கட்டிக் கொண்டு லாவகமாகப் பனை மரத்தில் ஏறினார் அம்மனிதர்.

பனையோலைகளுக்கிடையே தென்பட்ட பாளைக் குருத்துகள் லேசாகச் சீவி விடப்பட்டிருக்க, அதில் சொட்டும் கள்ளானது, மரத்தோடு கட்டப்பட்டிருந்த சிறு,சிறு பானைகளில் சேகரிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு பானையிலிருந்ததையும் குடத்தில் கவுத்திய மனிதர், சில பாளைகளை மறுபடி சீவி, பானைக்குள் இட்டு விட்டு, மெல்லக் கீழிறங்கினார்.

அருகிலிருந்த மரங்களிலும் ஏறி, கள்ளைச் சேகரித்தவர், இவர்களருகே வந்த போது இரண்டு குடங்களும் நிரம்பியிருந்தது.

கையோடு வைத்திருந்த வடிகட்டியால் அவர், கள்ளை வடிகட்டிப் பாத்திரத்தில் ஊற்றிக் கொடுக்க, ஆரனைத் தவிர அனைவரும் வாங்கிப் பருகினர்.

இருள் கவிழ்ந்த வேளையில், உப்புக்கண்டத்தோடு கள்ளு குடிக்கத் துவங்கிய விருமனும்,பெருசும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் முழு போதையில்.. பாறையில் உருண்டனர்.

குடிமகனே…… ஹா..ஹா..ஹா.. குடி மக..னே…. ஏ…ஏ…ஏ..” – வேஷ்டியைத் தலையில் கட்டிக் கொண்டு பட்டாபட்டியுடன் பாட்டு பாடியபடி ரோட்டில் நடந்து வந்த விருமனைக் கண்டு தோள் குலுங்க சிரித்தபடி உடன் நடந்து வந்து கொண்டிருந்தான் ஆரன்.

“பாட்டு மயிறு வேறயா?, வாயை மூட்றா டேய்!, தூங்கப் போன சனமெல்லாம் உன் மொகரைல துப்ப எந்திரிச்சு வரப் போகுது ”- என்று அவன் அடக்கமுயன்றும்,

“யாருக்கா…க… இ….து.. யாரு…க்காக..” என்று அவன் அங்கிருந்த புளியமரத்தைக் கட்டிக் கொண்டு “இந்த மாளிகை.. வசந்த மா…ளிகை” என்று பாட.... எரிச்சலானவன்..

“அடக் குடிகாரப்******.. அது மாளிகை இல்ல, மரம் டா” – எனக் கத்த..

“எலேய்! இவன் என்னா டா?, ரெண்டு சொம்பு கள்ளு குடிச்சதுக்கே இம்புட்டு சலம்பல் பண்றியான்? – என்று கிழவன் தலையைச் சொரிந்து கொள்ள..

“பெருசு! எல்லாம் உன்னாலதேன்! வெறுங்கள்ளைக் குடிச்சுப்புட்டு செவனே-ண்டு இருந்தவனை, போதை நல்லா ஏறுமுண்டு சொல்லி, மருந்து கலந்ததைக் குடிக்க வைச்சு இப்பிடிப் பைத்தியக்காரனாக்கி விட்ருக்க” – என்று சாடிய ஆரனைக் கண்டு கொள்ளாமல்.. பெரிதாய் ஏப்பம் விட்டப் பெரியவர், வானத்தைப் பார்த்தபடி கேட்டார்.

“ஏன் டா ஆரணா, நெலாவுக்கு (நிலாவுக்கு) என்னத்துக்கு டா நெலா-ண்டு பேரு வைச்சாய்ங்க?”

“கலா-ண்டு வைக்க முடியாதுல்ல! அதேன்!”

“அந்தச் சிறுக்கி மவ கலா-வை என்னத்துக்கு டா இப்ப நினைவு படுத்துன?”

“அடக்கருமமே! அது எவ தாத்தா?”

“அவ….” என்று கிழவர் தொடங்குகையில்.. தங்கெனக் குதித்து அவர் முன்னே நின்ற விருமன்,

“காதலே……. போ… போ… போ….”-எனக் கையைத் தூக்கி ஆக்ஷ்னுடன் அவர் காதுக்குள் கத்த.. அவன் பொடனியில் அடித்து வேட்டியை உருவி விரட்டியவர்,

“கட்டைக் குரலை வைச்சுக்கிட்டுக் காதுக்குள்ள கத்துறியான் களவாணிப்பய” என்று விட்டு.. மீண்டும் அவர் “அவ…” என்று துவங்குகையில்..

‘சொர்ர்ர்ர்ர்ர்ர்’-என்கிற சத்தமும் அதைத் தொடர்ந்து “எந்த மூதேவிப்பய டா அது, செடி மேல மூத்திரம் அடிக்கிறது?” என்ற அகலருவியின் அகண்ட குரலும் ஒலிக்க, இருவரும் திரும்பி விருமனை நோக்கினர்.

அவன் “மர…ணம் எ…னும் தூ…து வந்தது…” எனப்பாடியபடி மண்டையைச் சொரிந்தவண்ணம் செடி மீது தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தான்.

“அட நாறப்பயலே! நீ ஒன்னுக்கடிக்க ஓமத்திரம் செடிட்கேப் கிடைச்சதா டா?” – அவன் சட்டையைப் பிடித்திழுத்து ஆரன் வீட்டுக்குள் தள்ளுகையில்,

“டேய்ய் ஆரணா.. அந்தக் கலா இருக்காளே டா கலா..” – எனக் கிழவன் வேறு இடையில் வர..

“யோவ் பெருசு! உன்னைய வயசானவன்-ண்டு கூட பார்க்க மாட்டேன்” – என்று அவன் பொங்கிய நேரம், விருமன்..

“கண்கள் தீண்டும் காதல் என்பது, அது கண்ணில் நீரை வரவழைப்பது” – எனப் பாட..

“எலேய்! சல்லிக் *******, நீ இன்னும் அந்த வசந்த மாளிகையை விட்டு வெளியே வரலையாடா?” – எனத் தலையில் அடித்துக் கொண்டவனைக் கண்டு சிரிப்பில் உடல் குலுங்க, வாசலருகே வந்தாள் அகலருவி.

“ஹாஹாஹா….” – நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிரிப்பவளைக் கடுப்புடன் நோக்கிய ஆரன்,

“ஏய்ய், கருவாக்குந்தாணி! என்னாடி உனக்கு இளிப்பு வேண்டிக் கிடக்கு! ஒரு கை புட்றி இவனை, கொண்டு போய் கொல்லைல தள்ளுவோம்” – என்றபடியே விருமனின் சட்டையைப் பிடித்தான்.

இருவரது தோளிலும் தொங்கிக் கொண்டு வந்த விருமன்,

“எழுதுங்கள் என் கல்லறையில்,அவள் இரக்கம் இல்லாதவள் என்று! பாடுங்கள் என் கல்லறையில்,இவன் பைத்தியக்காரன் என்று” – எனப் பாட..

“இல்லாட்டியும் நீயொரு பைத்தியக்காரக் ***-ண்டு ஊருக்குத் தெரியாதாக்கும்?” – என்ற அகல், அவன் கையைப் பிடித்துத் திருகி, முட்டியால் அவன் முதுகில் ஒன்று வைக்க,

“அடியேய்! இதேன் சாக்கு-ண்டு தாக்குறியா?, குடிச்சாலும், அவனுக்கு எல்லாம் நினைவுல இருக்கும்டியேய்” என மிரட்டினான் ஆரன்.

“நெனவு இருந்தா, இருக்கட்டும்! எனக்கென்னப் பயமா! சன்னமா,என் தங்கச்சியை வம்பிழுக்கிறியான் இவன்” என்றவள், தன் விரல் முட்டியில் எச்சில் துப்பி அவன் நடு மண்டையில் நச்சென்று குட்டி வைக்க,

“அடியேய்ய்ய் கருவாச் சிறுக்கி! இருக்குடி உனக்கு” – என்றபடியே பின்புற வாசலிலிருந்தத் திண்ணையில் சாய்ந்தான் விருமன்.

கிழவனும் அங்கிருந்தக் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து விட.. உள்ளே சென்ற அகலு, இருவருக்கும் உணவு எடுத்து வந்தாள்.

“எலேய் விருமா… டேய்…” என அவனை உலுக்கி எழுப்பிய ஆரன், அவனை உட்கார வைத்து, அவன் வாயில் சோற்றைத் திணிக்க.. அரை போதையில் மென்று விழுங்கியவன்,

“டேய்ய்… ஆரணா….. நீ என் ஆத்தா டா” என்றான் உருகியபடி, உளறலாக.

“சரி, நீ சாத்திட்டு முழுங்கு” – கடுப்படித்தவனின் கன்னத்தை வழித்து..

“என் ராசா! என் சாமி! என் துணைப்பொறப்பு டா நீயி! உனக்காக…. உனக்காக.. நான் என் உசுரைக் கூடக் கொடுப்பேன் டா நண்பா” என்க,

“உசுரை எடுக்காம இருந்தா சரி! மூடிட்டு தின்றா மூதேவி” – என்றவன் பெரிய கவளமாகப் பிடித்து அவன் வாயில் அடைத்தான்.

உண்ட இருவரும் சாய்ந்து விட, தனக்கான உணவை நீட்டிய அகலருவியிடம் வாங்கிக் கொண்டு வாசலில் அமர்ந்து உண்ணத் தொடங்கினான் ஆரன்.

கட்டிலில் சாய்ந்திருந்த பெரியவர் திடீரென “டேய்.. ஆரணா.. நீ அந்த நெலா யாரு-ண்டு கேட்கவே இல்லையே” என்றபடி எழுந்தமர்ந்தார்.

“ஷ்ஷ் அப்பா.. அடுத்து நீயா?” – பல்லைக் கடித்த ஆரனை நோக்கி விட்டு “நெலா யாரு?” என்றாள் அகலருவி.

“அது நெலா இல்லடி, கலா!” என்றவன் “மேல சொல்லு தாத்தா” என்றான் பெரியவரிடம்.

தாடியைச் சொரிந்தபடி ஒரு நொடி நிமிர்ந்துத் தன் சுருங்கிய கண்களால் நிலாவைப் பார்த்தப் பெருசு,

“அவ ஒரு ப******சி டா!” – என்றார்.

“யாத்தே” – அகலருவி.

“தன் பரம்பரைலயே ரவிக்கை போட்டு சீல கட்டுன ஒரே பொம்பள”

“பார்றா” – ஆரன்.

“நாயக்கன்பட்டிக்காரி! வாய்க்கொழுப்பெடுத்தவ! எல்லாத்துக்கும் நியாயம் பேசுவா! நம்ம அகலைப் போல” – என்றவர் பேத்தியின் நாடியைப் பற்றிக் கொஞ்ச… கண்ணைச் சுருக்கி ஈஈஈஈ-என்ற அகலைக் கண்டு “ப்ச்” என உதட்டை சுழித்துக் கொண்டான் ஆரன்.

“உன்னையப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவ நினைவுட்தேன்-த்தா வருது! உன்னைய மாறி நல்லா தடிச்ச உடம்பு அவளுக்கு! குரலும் கூட,அதே கட்டைக்குரலுதேன்”

“ப்ச், தாத்தாஆஆ”

“ஒத்துமையைச் சொல்றேன் தாயி”

“சரி,மேல சொல்லு”

“நாயக்கன்பட்டி அய்யனார் கோயில்ல, இவிங்க சாதிக்காரய்ங்க எவனும் கெடா வெட்டக் கூடாது-ண்டு ஊரே சட்டம் போட்டப்ப, சாமி எல்லாருக்கும் பொதுவுதேன்!, அதுலயும் பாகுபாடு வருமு-ண்டா, அப்படியொரு சாமி, யாருக்கும் தேவையில்லண்டு, கோயிலை இழுத்து மூடச் சொல்லி போலீசை இழுத்துட்டு வந்தவ அவ”

“அந்தக் காலத்துலயே அம்புட்டுத் தகிரியமா இருந்த பொம்பளையா?” – அகல்.

“ஆமா-த்தா! அவுகப்பன் ஒரு வெட்டியான், அவ ஆத்தா ஆடு மேய்க்கிறவ! ஊர்ல அவ சாதிக்காரனுக்கு ஏதாவது பிரச்சனை-ண்டா இவ முன்னால நிண்டு சலம்பலைக் கொடுக்குறது புடிக்காம, அவ ஆத்தா,அப்பன் இவளுக்கு ஒரு குடிகாரனைக் கல்யாணம் முடிக்க பேசி வைச்சாக! அந்த நாதாரி என் கூட்டாளி! கல்யாணத்தன்னிக்கும் அவன் குடிச்சுப்போட்டு வர, இவ மாலையை அவுத்து, அவன் மொகரைலயே வீசி ‘போய் கெணத்துல வுழுந்து சாவு டா நாயே-ன்னுட்டா”

“ஹாஹாஹா” – சிரித்த ஆரன் “அப்புறம்?” எனக் கதை கேட்டான்.

“அப்புறம் என்ன, தெளிஞ்சப்புறம் இவன் அவ கிட்ட மல்லுக்கு நிக்க, வுட்டா பாரு, அவன் செவுல்லயே ஒன்னு!, கட்டிக்கிட்டா இவளை மாறி ஒரு ராங்கிக்காரியைத்தேன் கட்டனுமுண்டு அப்பத்தேன் எனக்கு அவ மேல ஒரு பிடிப்பு வந்துச்சு”

“ஓஓ! காதல் கதையா?, ம்ம்ம்ம்ம்” – எனப் புருவம் தூக்கினாள் அகலருவி.

“பருத்திக் காட்டை விட்டுப்போட்டு நான் ப******சி பின்னால சுத்துறதைத் தெரிஞ்சுக்கிட்ட என் ஆத்தாகாரி, உத்திரத்துல தொங்கிக்கிட்டு, செத்துப்போவேண்டு என்னைய மிரட்டுனா. எங்கப்பன் ஒரு படி மேல போயி, அருவாளைத் தூக்கிக்கிட்டு என்னைய வெட்ட வந்தியான்! அப்ப அவிங்கட்ட கோச்சுக்கிட்டு, பட்டாளத்துலப் போய் சேர்ந்தவன், அடுத்த நாலு வருஷத்துல எங்காத்தா செத்தப்புறம்தேன் திரும்பி வந்தேன்”

“ச்ச, சோகக்கதையாப் போச்சே” – அகல்.

“அந்தம்மா உன்னைய விரும்புச்சா இல்லையா தாத்தா? நீ அதைச் சொல்லவே இல்ல” – ஆரன் பாய்ண்ட்டாக கேள்வி கேட்க..

“ஹ்ம்ம்ம்ம்ம்” எனப் பெருமூச்சை வெளியிட்ட மனிதர், “உன் சாதி என்ன, என் சாதி என்ன?, இது என்னைக்கும் நடக்காது! அநாவசியமா ஆசைய வளர்த்துக்காம, போய் ஆகுற வேலையைப் பாரு-ண்டு என்னையத் துரத்திவிட்டவ, நான் அவ பின்னாலயே சுத்தியும், ஒரு முறை கூட என்னைய திரும்பிப் பார்க்கல” என்றார்.

“அந்தம்மாளுக்குத்தேன் உம் மேல விருப்பமில்லையே தாத்தா, அப்புறம் எந்த நம்பிக்கைல நீயி, உங்கப்பன்,ஆத்தாளை எதிர்த்த?” – ஆரன்.

“விருப்பமில்லாம என்ன?, அதெல்லாம் விரும்புனா! ஆனா… விருப்பத்தை விட, இது நடக்காதுன்ற தெளிவு அதிகமா இருந்ததால, அவ எப்பவும் அதை வெளிக்காட்டுனதில்ல”

“அப்டின்னா, எங்கம்மத்தாளை எப்பக் கட்டுன?” – அகலருவி.

“எங்காத்தா செத்தக் கொஞ்ச நாள்லயே, என் அயித்தை மகளைக் கட்டுனாத்தேன் திரும்பப் பட்டாளத்துக்கு அனுப்புவேன்-ண்டு எங்கப்பன் அக்கப்போரைக் கூட்டி, அவ தலைல என்னையக் கட்டி வைச்சுட்டியான்”

“விருப்பமில்லாத கல்யாணம்ன்றதாலதேன், புள்ளைகளுக்கு வீரவேலன்,வீரபாண்டி,வீரலட்சுமி-ண்டு பேரு வைச்சுட்டீக போல”

“ஆத்த்தாஆஆஆ”

“பின்ன என்ன, புடிக்காம கட்டுனாலும் புள்ள பெத்துக்கிட்டீக தான”

“இல்லாட்டி, நான் ஆம்பளையே இல்லன்றுவாய்ங்கத்தா”

“நியாயம் பேசுறீக! சரிதேன்! ”

“அப்புறம் அந்தம்மா என்னாச்சு?, அதுக்கு எத்தனை புள்ளைக?, இப்ப எங்க இருக்கு?” – ஆரன்.

“………………”

“தாத்தா”

“ஹ்ம்ம்,”

“என்ன தாத்தா?”

“அவ கல்யாணமே பண்ணிக்கல-ப்பு” – கிழவன் மெதுவான குரலில் கூறியதும் வெடுக்கென எழுந்த அகலருவி,

“என்னாஆஆஆது?” என வாயைப் பிளந்தாள்.

“ஆமா, அவ அந்தக் காலத்துலயே, அவ சாதிக்கு அம்புட்டுக் கட்டுப்பாடு இருந்த நிலையிலயும், எழுதப்படிக்கக் கத்துக்கிட்ட ஆளு! அப்பவே டவுன்ல பத்திரிக்கை ஆபிசுல வேலையில இருந்தவ! அதுக்கப்புறம் ஏதோ கழகத்துல-லாம் இருந்தாளாம்! போராட்டம்,மறியலுண்டு பேப்பர்ல வர்ற சில செய்திகள்ல அவ போட்டோவைப் பார்த்திருக்கிறதா கூட்டாளிப் பயலுக சொல்லுவாய்ங்க! நான் அதுக்கப்புறம் அவளை ஒரு முறை கூட ஊருக்குள்ள பார்த்ததில்லப்பு”

கிழவர் கதையை முடிக்கையில், எழுந்த விருமன், ஏப்பம் விட்டபடி திண்ணையில் கிடந்தத் தனது வேஷ்டியை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டான்.

“தெளிஞ்சுட்டியான் போல” – முட்டி மீது நாடியை வைத்து அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அகலருவி.

“இவ்ளோ கேட்டீங்களே லூசுகளா! உங்க ரெண்டு பேருக்கும் அந்தம்மா முழுப் பேர் என்னாண்டு கேட்கத் தோணுச்சா?” – சட்டையைக் கழட்டித் திண்ணையில் போட்டபடி விருமன் கேள்வி கேட்க,

“அட நாயே! இம்புட்டு நேரம், நீ தூங்காமலா டா இருந்த?” என்றான் ஆரன்.

“நான் தூங்குனாலும், என் காது தூங்காது டா! பெருசு சொன்ன அம்புட்டுக் கதையையும் நானும் முழுசாக் கேட்டேன்”

“அவுக பேர் என்ன தாத்தா?” – விருமனைக் கண்டுகொள்ளாமல், தாத்தனிடம் கேட்டாள் அகலருவி.

“எனக்குத் தெரியும் அந்தம்மா பேரு என்னாண்டு” – விருமன்.

“உனக்கு எப்பிடித் தெரியும்?” – அகல்.

“இவரு சொன்னதையும், எனக்குத் தெரிஞ்சதையும் பொருத்திப் பார்த்தேன், விடை கிடைச்சிடுச்சு”

“எங்க, பேரைச் சொல்றா பார்ப்போம்” – ஆரன்.

“கலாமணியம்மாள்! இன்னும் அதே பத்திரிக்கை ஆபிசுல தான் வேலை செய்யுது! நான் கேள்வி பட்ருக்கேன்” – என்றவனிடம்..

“அப்டி-ண்டா, தாத்தன் காதலை எடுத்துச் சொல்லி, அந்தம்மாவோட அவரை சேர்த்து வையி” – ஆர்வமாய் அகல் கூறியதும்..

அவசரமாய் எழுந்த பெருசுக்கு, அவள் பேச்சில் போதை தெளிந்து விட, “அட கூறு கெட்டக் கழுதை! பேச்சைப் பாரு! சின்னக் கழுதைன்றது சரியா இருக்கு! உன்-ட்ட போய் கதை சொன்னேன் பாரு” –எனத் திட்டி விட்டுக் கழிவறையை நோக்கிச் சென்று விட்டார்.

“ஏன், இவர் சம்சாரம் செத்துப் போய் தனியாத்தேன இருக்காரு! அந்தம்மா ரொம்ப வருஷமாவே தனியா இருக்கு! ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா என்ன?” – கேள்வி கேட்டவளிடம்..

“ஏய்ய்ய் எந்திரிச்சுப் போடியேய் போடி” எனத் துரத்தி விட்டான் ஆரன்.

றுநாள் வாசத் திண்ணையில் தன் தங்கையுடன் அமர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த அகலருவி, வெளியே சென்று விட்டு வந்த மீனாட்சியம்மாளிடம்,

“என்னா அயித்த, இப்புடி வேர்க்க,விறுவிறுக்க எங்க போயிட்டு வாற?” எனக் கேட்டாள்.

“சுப்பையா சித்தப்பு கருமாதிக்குத்தேன் டி!, மொட்டைப்பாறைல படையல் போட்டாக, அங்க இருந்துதேன் வாறேன்! ஒரு காக்கா வரல டி திங்க! ரெண்டு மணி நேரத்துக்கும் மேல உட்கார்ந்திருந்து பார்த்துட்டு, நான் எந்திரிச்சு வந்துட்டேன்! சனமெல்லாம் சலசலத்துட்டுக் கிடக்குது!,என்னா பாவம் செஞ்சாய்ங்களோ” – என்ற மீனாட்சி வாசலிலிருந்தக் குழாயடியில் கை,கால்களைக் கழுவிக் கொண்டிருக்கையில்..

“நான் பெத்த மவன் கஞ்சிக்கு வழியில்லாம, தெருவுல கிடக்குறியான்!, இந்தச் சிறுக்கி மவளுக, கூசாம கறிக்கஞ்சியாக்கிக் குடிக்குறாளுகளே!” எனக் கத்தியபடியே வாசலுக்கு வந்தார் சோலையம்மாள்.

“பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது டி! கேட்க நாதியில்லண்டுதேன, ஒரு ****** மவனுக்குப் பரிஞ்சு பேசி, நான் பெத்த மவராசனை வீட்டை விட்டுத் துரத்திப்புட்டீக?, வீட்டை விட்டு வெளியே போன ஆம்பள, என்ன ஆனா-ண்டு தெரியாம, நான் இங்க தவியா,தவிச்சுட்டுக் கிடக்குறேன், இந்தச் செத்த சிறுக்கிக, எனக்கென்னாண்டு, சோறாக்கப் பொறப்புட்டாளுக! இந்தாடி அகலு, அப்பனைப் பத்தின கவலை கொஞ்சமாவது இருக்காடி உனக்கு?, - என்ற சோலையாத்தா, மீனாட்சியம்மாளை மறைமுகமாகத் தாக்கிப் பேசிக் கிழித்துத் தொங்க விட,

“ஏய் கெழவி, உனக்கு அம்புட்டு மனரோதனையா இருக்குண்டா, என்னத்துக்குய்யா எம்மவனை துரத்துன-ண்டு உன் சகோதரன் சட்டையைப் பிடிச்சு சண்டை போடு,!, அதை விட்டுப்புட்டு இங்கன வந்து சலம்பிட்டுத் திரியுற?”” – புடைத்துக் கொண்டிருந்த அரிசியை எடுத்து வாயில் போட்டபடி அசால்ட்டாகக் கிழவியிடம் கேட்டாள் அகலருவி.

“ம்ம்ம், எனக்கு அம்புட்டுத் தகிரியம் இருந்தா, நான் ஏன் டி இந்தப் பொழப்பு பொழைக்கிறேன்” – நொடித்த கிழவியிடம்..

“பின்ன என்ன?, மூடிட்டுப் போய், வடிச்ச சோத்தைத் தின்னுட்டுத் திண்ணைல தூங்கு! ஆனா, உனக்கென்னத்துக்கு இம்புட்டு ரோஷம்!, நீயே.. கட்டுனவன் கை விட்டதால,நாதியத்துப் போய், உடம்பொறந்தவன் தலையில மொளக அறைச்சு, உசுரு வாழ்ந்துட்டிருக்க!” என்று விட்டு “எங்க போயிரப் போறாரு உம் மவன்! கும்பி காய்ஞ்சா தானா வந்து சேருவாறு! போ,போய் பொழப்பைப் பாரு!” என்றவள், புடைத்த அரிசியை வாளியில் போட்டுக் கொண்டே “அண்டி வாழ்றதுங்கல்லாம், அலப்பரையைக் கொடுக்குறதைப் பாரு” – எனத் திட்டிக் கிழவியைக் கடந்து வீட்டுக்குள் சென்று விட,

“நேத்து பொறந்த கழுதையெல்லாம், நாக்கு மேல பல்லைப் போட்டு என்னையே நக்கல் பண்ணுது பாரு! இந்தாடி எடுபட்ட சிறுக்கி! ஆமா டி, நானும்,எம்மவனும் அண்டிப் பொழைக்கிறவகதேன்! இந்த வீட்ல சும்மா உட்கார்ந்தாடி கஞ்சி குடிக்கிறோம்? அப்பிடி உட்கார்ந்து திங்கத்தேன் விட்ருவீங்களாடி டி நீங்க?, பதிலைச் சொல்லிட்டுப் போடி” – என்றுக் கத்திய கிழவி, அகலருவியைத் தொடர்ந்து உள்ளே சென்று கொண்டிருந்த மீனாட்சியம்மாவை கொதிப்புடன் நோக்கி..

“ஒவ்வொருத்தி மாறி நாங்க என்ன, கிழவன் மனசு கோணாம நடந்துக்கிட்டு, நோகாம அவன் சொத்தை எழுதி வாங்க வகை பண்ணிக்கிட்டுத் திரியுறோமா” எனக் கேட்டது.

சடாரென நின்ற மீனாட்சி ரோஷத்துடன் “யாரைப் பெரியம்மா சொல்ற நீயி?, என்னையப் பார்த்தா?” – என மூக்கு விடைக்கப் பொங்கிய அழுகையுடன் கேட்க..

“அயித்தை…..” என வீட்டினுள்ளிலிருந்துக் குரல் கொடுத்த அகல், “கெழவி, மவன் போன கடுப்பைக் காட்ட, எவ தலை கிடைக்கும், வெட்டலாமுண்டு திட்டம் போட்டு சுத்திட்டு திரியுது! நீயா போய் வசதியா அது கிட்டத் தலையை நீட்டாம, வந்து, அரிசியை வேகப் போடு!” என்று கூற.. கண்ணைத் துடைத்தபடி உள்ளே சென்று விட்டார் மீனாட்சி.

அவர் நகர்ந்ததும், “இந்தச் சிறுக்கி எம்மவனுக்குப் பொறந்தாளா, இல்ல, இவளுக்குப் பொறந்தாளாடி” எனப் பல்லைக் கடித்தக் கிழவியிடம் புவியரசி,

“ஏன் ஆத்தா, வீட்டுக்கு வர மாட்டேண்டு, வம்பு பண்ணிக்கிட்டு வயக்காட்டுல படுத்துக் கிடக்குற என் அப்பனுக்கு, வேளை தவறாம நீதேன் கஞ்சி கொண்டு போய் கொடுக்குறேல? பின்ன என்னத்துக்கு வீட்ல அத்தனை பேரோடையும் மல்லுக்கு நிற்குற?” எனக் கேட்டாள்.

“ஆமா நான்தேன் மல்லுக்கு நிக்குறேன்! போங்கடி புழுத்த சிறுக்கிகளா” – என்று ஏசிய கிழவி விசுக்,விசுக்கென வெயிலில் நடந்து வெளியே சென்று விட்டது.

சோலையம்மாளின் இத்தனை புலம்பலுக்குக் காரணமான சங்கிலியன், பட்ட சாராயத்துடன், மொட்டைப்பாறையருகே பனை மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

பாட்டிலிலிருந்ததை வாயில் சரித்துக் கொண்டு, மட்டை ஊறுகாயை நக்கியவரைக் கண்டபடி அருகே வந்தான் மணிவண்ணன்.

“என்னா மாமா, சோளக்காட்டுல இருப்ப-ண்டு பார்த்தா, இப்பிடி சாராயத்தோட உட்கார்ந்திருக்க?” – கேள்வி கேட்டபடி அருகே வந்தவனைக் கண்டு, வாயைத் துடைத்தபடி,

“வா மாப்ள” என்றவர் “என்னா இந்தப் பக்கம்?” என்றார்.

“சுப்பையாத் தாத்தா கருமாதிக்கு வந்தேன்! உங்களை அங்க காணோமே-ண்டு பார்த்தா, நீங்க என்ன பகல்லயே பாட்டிலைத் தொறந்துப்புட்டீக?”

“குடிக்கிறியா மாப்ள?” எனக் கேட்டுப் பின் “சும்மா குடி மாப்ள” என்றவர் அவனுக்கும் ப்ளாஸ்டிக் தம்ளரில் ஊற்றிக் கொடுக்க, அவரை ஒரு விதமாய்ப்பார்த்தபடி அருகே அமர்ந்தான் மணிவண்ணன்.

கணக்கில்லாமல் பாட்டிலைப் பிரித்து,உள்ளே சரித்துக் கொண்டிருந்தவரின் வேகத்தைக் கண்டு, அவசரமாய் அவர் கையிலிருந்ததைப் பறித்தவன்,

“என்னா மாமா நீயி?, ஒரேடியாக் குடிக்கிற! இப்புடிக் குடிச்சுப்புட்டு வீட்டுக்குப் போனா, பட்டாளத்துக்காரரு உன்னைய வகுந்து போட மாட்டாரு?” எனக் கேட்டான்.

எரிந்த நெஞ்சை நீவியபடித் தலையைச் சொரிந்தவர், “நான் அங்க போறதில்ல மாப்ள” என்றார்.

“போறதில்லையா?, அப்டின்னா?, வேற எங்க இருக்கீக?”

“எனக்கு-ண்டு வீடுண்டா, காடு-ண்டா?, வக்கத்தவனுக்குப் போக்கிடம் ஏது மாப்ள?, வரப்புல படுத்துக்கிட்டு, வாய்க்கரிசி போட்ற நாளை எதிர்பார்த்துக் காத்திட்டிருக்கேன்ய்யா” – சோகமாய் சங்கிலி.

“ப்ச், என்னத்துக்கு மாமா இப்பிடிப் பேசுற?, உனக்கு-ண்டு உன் மருமவன், எம் பங்காளி இருக்கியான்! பேரன்,பேத்திக இருக்குக! சாகுற வரைண்டாலும் நீ அங்கன இருக்கலாம்”

“ச்சி,ச்சி, புள்ளையக் கட்டிக் கொடுத்த இடத்துல போய் காலம் பூரா கிடக்க முடியுமா?, அது மருவாதையா இருக்காது மாப்ள”

“நீ ஏன் அப்பிடி நினைக்குற மாமா! கட்டிக் கொடுத்த இடமுண்டு சொல்லி, எங்களை ஏன் பிரிச்சு வைக்குற?, மாமன்-ண்டு உன்னைய நான் கூப்பிட்டாலும், நீ எனக்கு அப்பன்-மாறி மாமா” – அவர் தோளைத் தடவியபடி சொன்னதும், அவன் கையைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டவர்,

“ஒரு நாள் ஒரு பொழுது கூட, என் வீட்டு வெண்ணைக, இப்பிடிப் பாசமா பக்கத்துல உட்கார்ந்து பேசுனது கிடையாது மாப்ள! அம்புட்டு ஏன், என்னைய அவிங்க ஒரு பொருட்டாக் கூட மதிச்சதில்ல! சீக்காளிக்கு மவனாப் பொறந்து, சோத்துக்கு வழியில்லாம என் ஆத்தாளோட என்னைக்கு என் தாய்மாமன் வீட்டு வாசப்படியை மிதிச்சேனோ, அன்னைக்கே, ரோஷம்,மானம்,வெட்கம்ன்றதெல்லாம் என்னைய விட்டுத் தூரப் போயிருச்சு மாப்ள! போக வைச்சுட்டியான் என் தாய்மாமன்றவன்!”

“சரி விடு மாமா”

“இல்ல மாப்ள!, இவன் வீட்ல சோறு திண்டு வளர்ந்தேங்குறதுக்காக, இந்தாளு சொல் பேச்சைக் கேட்டுக்கிட்டுப் பின்னாடியே சுத்த, நான் என்ன ஆட்டுக்குட்டியா?, பேரன்,பேத்தி எடுத்த வயசுல, என்னால எப்புடி மாப்ள அந்தாளுக்கு எடுபிடியாத் திரிய முடியும்?”

“உங்க பேர்ல சொத்து எதுவும் அவரு எழுதி வைக்கலயா?”

“மயிரை எழுதி வைச்சியான்! எங்காத்தா வீட்டுக்கும்,காட்டுக்கும் அலைஞ்சு, திரிஞ்சு அந்தாளு சொத்து சேர்க்கவும்,புள்ள வளர்க்கவும் வம்பாடுபட்ட மனுஷி! அவ பேர்லயே எந்தச் சொத்தையும் எழுதி வைக்கல! எம் பேருக்கு எழுதத்தேன் காத்துக் கிடக்கானாக்கும்! என் பொழப்பு கடைசி வரைக்கும் மண்வெட்டியோடதேன் மாப்ள! மண்ணாளுற கொடுப்பினையெல்லாம் எனக்குக் கிடையாதுய்யா”

“ப்ச், அப்பிடிப் பேசாத மாமா! என்னைக்கா இருந்தாலும், அயித்தைக்கு சேர வேண்டிய சொத்து உம்ம கைக்குத்தேன வந்தாகனும்?”

“அந்த ஒன்னுத்துக்காகத்தேன் மாப்ள, நானும்,என் ஆத்தாளும் என் மாமனைப் பகைச்சுக்காம, எல்லா அவமானத்தையும்,அசிங்கத்தையும் சகிச்சுக்கிட்டு இத்தனை வருஷமா அந்த வீட்டோட கிடக்கோம்!”

“பட்டாளத்துக்காரரு, பெத்த புள்ளைக மூனுக்கும் கண்டிப்பா சொத்தை சரிசமமாத்தேன் பிரிச்சுக் கொடுப்பாரு! சொத்தை மூனு பங்காப் பிரிச்சா உங்க கைக்கு என்ன கிடைக்கும் மாமா?”

“மூனு என்ன மூனு! இருவத்தஞ்சு வருஷமா ஊர்ப்பக்கம் கால் எடுத்து வைக்காத பயலெல்லாம், சொத்துல பங்கு கேட்க வந்துருவானா?”

“ஓஓஓ, அப்பிடிச் சொல்றீகளா?, நியாயம்தேன்”

“அவன்-லாம் பங்கு கேட்டு வந்தா, நான் சும்மா விட மாட்டேன் மாப்ள”

“ஆனா பெரியவரு ஆரன் மேல ரொம்பப் பாசம் வைச்சிருக்கிறாரு போலயே மாமா!, அவனுக்கு ஒன்னும் தராம விட்ருவாரா என்ன?”

“அந்த ****** இருக்கானே! அவனை முதல்ல அடிச்சுத் தொரத்தனும் மாப்ள! ****** எல்லாம் அவ ஆத்தா ஆரம்பிச்சதுதேன், கிழவனை இன்னிக்கு சலங்கை கட்டி ஆட வைக்குது! அவளுக்கு ஏத்துக்கிட்டு 25 வருஷத்துக்கு முன்னாடி அந்தாளு பேசுனது, ஊர்க்காரய்ங்க முன்னாடி செல்லாம போயிட்டதால, இன்னிக்கு ஊர்ல உள்ள கீழ்சாதிக்காரப் பயலுக அத்தனை பேருக்கும் கொடி புடிச்சுட்டுத் திரியுறாரு மனுஷன்! முந்தா நாளு அந்தத் ****** மவன் அழகருக்கு ஏத்துக்கிட்டு, என் வீட்டு வாசல்ல வைச்சு, அவன் முன்னாடியே என்னைய அவமானப்படுத்திப்புட்டாரு மாப்ள! கக்கூஸ் கழுவுறவிங்களுக்குக் கறி சோறு எதுக்குண்டு நான் கேட்டதுக்கு, கிழவன் அம்புட்டுப் பேச்சு மாப்ள! அவனை நடுவீட்ல உட்கார வைச்சு நாக்கு ருசியா சமைச்சுப் போடச் சொல்றாருய்யா”

“பட்டாளத்துக்காரருல்ல, அதேன்! பாகுபாடு பார்க்க யோசிக்குறாரு”

“அதுக்கு?, பேரன்-ண்டு வீட்டுக்குள்ள வளர்றவன் உடம்புல ச******சி ரத்தம் ஓடுதுண்டு, அவனை எப்போ தொரத்தலாம்ன்னு கன்னம் வைச்சு சுத்திட்டிருக்கிற என் கிட்ட, பகுமானம் பண்ணிட்டுத் திரியுது மாப்ள பெருசு”

“அழகரு-ண்டா, அந்த மாங்குளத்துக்காரன் தான?”

“ஆமா மாப்ள, எழவு சொல்ல வந்த வெண்ணைக்கு 2 ஓவாயைக் கொடுத்துத் துரத்தி வுட்றதை விட்டுப்புட்டு, சோத்தைப் போட்டு உபசரிக்குறாளுக சிறுக்கி *****! இப்பிடித் தூக்கி வைச்சு சீராட்டிக்கிட்டுத் திரிஞ்சா, அவிங்களுக்கு நம்ம சாதிக்காரய்ங்க மேல பயம் விட்ரும் மாப்ள”

“வீட்டுப் பொட்டச்சிகளை விடுங்க!, இரக்கம்,மசுருண்டு வசனம் பேசுற செத்த சிறுக்கிக அவளுக! செவுட்டுல ரெண்டு விட்டா, அடங்கிருவாளுக! ஆனா.. இவன் எந்தத் தகிரியத்துல மாமா நம்ம வீட்டு சோத்துல கை வைக்குறியான்! ம்??, கைல சிக்கட்டும்! இருக்கு அவனுக்கு!” – கையிலிருந்த பைக் சாவியைச் சுழற்றியபடிப் பேசியவனைப் பெருமையாய் நோக்கியவர்,

“உன்னை மாறி ஒருத்தன் என் குடும்பத்துல இல்லையேண்டு ரொம்பக் கவலையா இருக்கு மாப்ள!”

அவர் கூறியதும் மெல்லப் புன்னகைத்தவன், “எனக்கும் கூட உன் குடும்பத்துல ஒரு ஆளா இருந்து, உனக்குத் தோள் கொடுக்க முடியலேண்டு கவலையாத்தேன் மாமா இருக்கு” என்றான்.

அவன் தோளைப் பற்றித் தடவியவர், “விட்றா, ஒன்னுக்கு ரெண்டு பொட்டச்சிகளைப் பெத்து வைச்சிருக்கேன்! ஒருத்தியை உனக்கே கட்டி வைக்கிறேன்” என்றார்.

முகம் பளபளக்க அவரை நோக்கி, “நா…நான் கேட்கனுமுண்டு நினைச்சத, நீயே சொல்லிட்ட மாமா! எனக்கு.. எனக்கு.. உம் மவ அகலருவியைக் கட்டிக் கொடுக்கிறியா?” எனக் கேட்டான் மணிவண்ணன்.

அவன் கேள்வியில் முகம் சுருக்கிய சங்கிலி, “அவளை என் மூத்த மச்சினன் மகன் விருமனுக்குக் கொடுக்கனுமுண்டு, எங்காத்தா பேசி வைச்சிருக்காளே மாப்ள! என் மச்சானோட சொத்தையும் ஆட்டையப் போட்றனுமுண்டு எங்காத்தாளுக்கு ஆசை” என்று சிரிப்பாய்க் கூற, ஒரு நொடி முகம் இறுகியவன் பின்,

“அப்டியெல்லாம் விருமனுக்குக் கிடைக்குற சொத்தை நீ ஆண்டுற முடியுமுண்டு நினைக்குறியா மாமா?, அவன் எமகாதக-ண்டு தெரியாது உனக்கு?, உம்மவளை அவனுக்குக் கட்டிக் கொடுத்தா, உன் பங்கும் அவனுக்கே போய்ச் சேர்ந்திடும்! அது மட்டுமா, அவன் உனக்கு மாப்பிள்ளையானா, இன்னிக்கு திண்ணைல உட்கார்ந்து திங்குற ச******யப்பய, நாளைக்கு உன் வீட்டு நாற்காலில உட்கார்ந்து சோறு திண்டாலும், நீ ஆச்சரியப்பட முடியாது”

“……………..” – பதிலின்றி யோசனையாய் அமர்ந்திருந்தார் சங்கிலியன்.

“மண்ணு எம்புட்டு முக்கியமோ, அதே அளவுக்கு மானமும் முக்கியம் மாமா! நமக்கு மானம்,மருவாதையைத் தேடித் தர்றதே நம்ம சாதிதேன்! இன்னிக்குக் கீழ்சாதிக்காரனுக்கு சோறு போட்டுக் கொடு-ண்டு சொல்ற வாயி, நாளைக்கு அவனை சரிசமமா உட்கார வைச்சு சம்பந்தம் பேசவும் தயங்காது! மாமா, இதெல்லாம் நடக்கக் கூடாது-ண்டு நினைச்சியின்னா, உம்மவளை எனக்குக் கட்டி வை! இல்ல, நாளைக்கு உம் பரம்பரைல உதிக்கிற சிறுக்கி எவளும், அவிங்க ரத்தத்தை சுமந்துட்டு நிற்குறதை பார்க்குறதுக்குத் தயாராகு”

அரைகுறை போதையில் குழம்பிய மூளையோட அமர்ந்திருந்தவரை, பேசிப் பேசியே மேலும் குழப்பிய மணிவண்ணன், யோசனையில் ஆழ்ந்திருக்கும் அவர் முகத்தைத் திருப்தியுடன் கண்டு “வா மாமா, உன்னைய வயக்காட்டுல விட்டுப்புட்டு நான் வீடு போய்ச் சேர்றேன்” என்றபடி அவரைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

இங்கே பட்டாளத்துக்காரரின் வீட்டில்,

“மாமா, எனக்குக் கணக்கு சொல்லித் தா மாமா” – என்றபடி ஆரனிடம் வந்து நின்றாள் புவியரசி.

“திண்ணைல உட்காரு! கஞ்சி குடிச்சிட்டு வாறேன்” – என்றவன் அடுக்களைக்குச் செல்ல, அங்கு தரையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த அகலருவியைக் கண்டபடியே, தனக்கொரு தட்டு எடுத்து அன்னமிட்டுக் கொண்டான்.

“ஏன் டி, வெஞ்சனம் எதுவுமில்லையா டி?”

“வெங்காயம் தான் இருக்கு. வேணுமுண்டா கடிச்சுக்கங்க”

“வாய்க்கொழுப்பெடுத்தவ” – என்று முணுமுணுத்தவன் சோற்றுடன் பின்வாசல் திண்ணைக்கு வந்தான்.

“கணக்குல என்ன சந்தேகம் உனக்கு?” – சோற்றைப் பிசைந்தபடி கேள்வி கேட்டவனிடம், தலையைச் சொரிந்த புவி,

“எல்லாமே சந்தேகம்தேன் மாமா” எனக் கூற,

“அட மக்குக் கழுத! உங்கக்காகாரி மாறி பத்தாவது பெயிலாப் போய் வீட்டோட உட்காராம, நீயாவது நல்லா படிக்கிறியேண்டு நான் உன்னைப் பெருமையா நினைச்சேனேடி” – என்றான் அவன்.

“இப்பவும் நான் எங்கக்காவை விட நல்லாப் படிக்கிறவதேன்! எனக்கு அங்கங்க கொஞ்ச,கொஞ்சம் சந்தேகம் இருக்கு! அதை மட்டும் தீர்த்து வைங்க. போதும்”

“அதுசரி” – என்று அவன் புருவம் உயர்த்துகையில் அவன் முன்னே ஒரு வட்டியை வைத்தாள் அகலருவி.

அதில் பொரித்த உப்புக்கண்டங்களும்,குச்சிக்கருவாடும் இருந்தது.

“உங்களுக்கு வெஞ்சனம் இல்லாம சோறு வைச்சா, அயித்தை என்னைய உப்புக்கண்டம் போட்ரும்!” – என்று அவள் நொடித்துக் கொண்டதும்,

“ஆமா, நீ அப்பிடியே உன் அயித்தைக்குப் பயந்தவதேன்” – என்று அவன் கேலி செய்கையில்..

“பயந்தவ இல்ல மாமா! எங்கக்கா பாசக்காரி!” – என்று புவி கூற.. இருவருடனும் வளவளத்துக் கொண்டு சிரித்தபடியே உணவு உண்டு கொண்டிருந்தான் ஆரன்.

அப்போது குளியலறையிலிருந்து வெளியே வந்த சோலையம்மாள், தன் பேத்திகள் புடை சூழ அமர்ந்திருந்த ஆரனைக் கண்டு கொதித்துப் போய்,

“இந்தாங்கடி பொழப்பேத்த சிறுக்கிகளா, மத்தியான சாமம், செத்த நேரம் மண்டையை சாய்க்கிறதை விட்டுப்புட்டு, திண்ணைல உட்கார்ந்து என்னாடி பல்லைக் காட்டிக்கிட்டிருக்கீங்க?” என்று பேத்திகளை நோக்கிக் கத்த,

கிழவியைத் திரும்பிப் பார்த்த இருவரும் “உனக்கு சாய்க்கனுமுண்டா போய் சாயி!, எங்க-ட்ட ஏன் கெழவி சவுண்டைக் கொடுக்குற?” என்று திட்டினர்.

“என்னத்துக்கு சொல்றே-ண்டு புரியுதா பாரு இவளுகளுக்கு” என்று முணுமுணுத்த கிழவி,

“இப்ப எந்திரிச்சுப் போறீகளா இல்லையாடி?, பல்லிளிக்க நல்ல பதமானவனைப் புடிச்சுருக்காளுக! பகுமானக்காரிக” என்று திட்ட.. அதற்குள் கிழவியின் அருகே வந்திருந்த ஆரன், தட்டைப் போட்டு விட்டுக் கை கழுவியபடியே,

“நான் பதமானவன்-ண்டா, உன் புருசன் யாரு?” என்றான்.

கிழவி முறைப்பாய் நிற்பதைக் கண்டு, அதை வம்பிழுக்கும் நோக்கத்துடன் “அவளுக பல்லிளிக்கக் கூடாது-ண்டா, நீ இளி கெழவி!” என்றான்.

“பேச்சைப் பாரு, பொச கெட்ட பய” – கிழவி முணுமுணுத்ததும் சிரித்தவன்,

“ஏன் கெழவி?, சீக்காளியைக் கட்டி ஒரு சொகமும் காங்கல-ண்டு வருசம் பூரா புலம்புவியே! நீ என்னையப் பார்த்து இளிச்ச-ண்டு வை, நான் உன்னையே கட்டிக்கிட்டு தங்கமும்,வைரமுமா வாங்கிப் போடுவேன்! நீயும் சொகமா காலத்தைக் கழிக்கலாம். என்னா சொல்ற?” – எனக் கேட்க, அந்தப் பக்கம் அகலும்,புவியும் கெக்கெ,பெக்கேவெனச் சிரித்தனர்.

“தண்டட்டி போட்டவ-ட்ட போய் இப்புடிப் பேச்சு பேசி தகராறு பண்றியா நீயி?”

“என்னா கிழவி நீயி! தண்டட்டி போட்ட நீயும் இளிக்க மாட்ட! தாவணி கட்டுன என் அயித்தை மவளுகளையும் இளிக்க விட மாட்ட”

“யாரு,யாருக்கு டேய் அயித்த மவளுக?, ச******சி ரத்தம் ஓடுற உனக்கு அவளுக அயித்த மவளுகளா?” – சீறலாய்க் கிழவி.

“ஆமா-த்தா! நான் ச******சி மவன்தேன்! இல்லைண்டு யாரு சொன்னா?, ஆனா.. நான் ரெண்டு பேர்ல ஒருத்தியைக் கட்டிக்கிட்டு இந்த ச******ய ரத்தத்துல ஒன்னுதேன் உன்னைய கொள்ளுப்பாட்டிண்டு கூப்பிடனும்ண்டு விதி இருந்தா, என்னாத்தா பண்றது?” – என்றான் வேண்டுமென்றே.

“எலேய்ய்ய்” – கிழவி அதிர்ச்சியாய் குரல் உயர்த்தக் குனிந்தவன்,

“அவளுக, எனக்கு உரிமைப்பட்டவளுக! நீ இழுத்து,இழுத்துப் புடிச்சு வைச்சண்டு வை, அவளுகளை எம்பக்கம் எம்புட்டு இழுக்க முடியுமோ, அம்புட்டு இழுத்துருவேன் நானு. சொல்லிப்புட்டேன்” – என்று மிரட்டியதும்.. கிழவி வாயடைத்துப் போய் நிற்க, கை நீட்டி சோம்பல் முறித்தவன்,

“இந்தத் தொல்லையெல்லாம் வேணாமுண்டு நினைச்சேனா, பேசாம,நீயே என்னைக் கட்டிக்க” என்று விட்டுத் திரும்பி நடந்து, திண்ணையில் அமர்ந்தபடி இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த புவியரசிக்கும்,அகலருவிக்கும் இடையில் சென்றமர்ந்தவன், கிழவியைப் பார்த்து “எப்புடி?” என்பது போல் புருவம் உயர்த்தினான்.

பார்க்கப் பள,பளன்னு கவர்ச்சியா இருக்குற பொன்வண்டு ரொம்பப் பொல்லாதது! அது செடியில போய் உட்கார்ந்துச்சுன்னா, அதோட வேர்லயும்,தண்டுலயும் ஓட்டையைப் போட்டு, செடியோட மேற்பரப்புக்கு போற ஒட்டுமொத்த சத்தையும் உறிஞ்சுத் திங்க ஆரம்பிச்சுடுமாம்! இதனால, தண்ணியும்,ஊட்டச்சத்தும் தடைபட்டுப் போய் செடி வாடி இறந்துடுமாம்.

சாதி கூட பொன் வண்டைப் போலத் தான்! பார்க்கக் கவர்ச்சியாத் தெரிஞ்சாலும், வந்து உட்கார்ந்தா போதும், யாரையும்,எதையும் வளர விடாம, உருத்தெரியாம மொத்தமா அழிச்சிடும்.