இருவாய்ச்சி-3

றுநாள் இரவு விருமன் போபால் புறப்படுவதாகக் கூறிய போது, கண்டு கொள்ளாதிருந்த ஆரனும்,அகலருவியும், அவன் தன்னுடன் சுஜாதாவையும் அழைத்துச் செல்வதாகச் சொன்ன போது அதிர்ந்து அவனருகே வந்து நின்றனர்.

“என்னா சொல்ற?, சுஜியக்காவையா?, என்னத்துக்கு?” – முன்னே வந்து பொங்கிய அகலருவியின் நெற்றியில் உள்ளங்கையைப் பதித்துப் பின்னே தள்ளிய விருமன்,

“பொண்டாட்டியாகப் போறவ, கூடதேன இருக்கனும்?, ஏன் நீ உம் மாமன்-கூட இல்ல?” – என்று திமிராய் கேள்வி கேட்க,

“பொண்டாட்டியா?” என அதிர்ந்த அகலருவியைக் கண்டுகொள்ளாது,

“எலேய்” என்று அதட்டிய ஆரன்,

“அதுவும்,இதுவும் ஒன்னா டா?” என்று பல்லைக் கடிக்க,

“ஏன், இவ, நீ கட்டிக்கப் போறவதேன?” – எனக் கேட்டதும்,

“அ…..அது….” – தலையைச் சொரிந்தவனைக் கண்டு, அகலருவி கோபத்துடன்,

“மாமா…” என்று கத்த, விருமனை முறைத்தவன்,

“பேச்சை மாத்தாத டா! அந்தப் புள்ளையவங்க வீட்ல என்னா டா நினைப்பாங்க?” என்று திட்டினான்.

“அதெல்லாம் நான் அவங்கப்பாட்ட பேசிட்டேன்”

“என்னாடா சொல்ற?”

“நீ ஏன் பங்காளி எல்லாத்துக்கும் வாயைப் பொளக்குற?”

“மாமா, எனக்கென்னமோ இவன் ஏதோ களவாணித்தனம் பண்ற மாறி தெரியுது! ஒரு வாரத்துக்கு முன்னாடி, மூக்கொழுக அழுதுக்கிட்டுத் திரிஞ்சானே! அப்பதேன் ஏதோ நடந்திருக்கு”

“சரியாச் சொன்னடி என் அயித்த மவளே”

“டேய், அந்தப்புள்ளைக்கும்,உனக்கும் எப்பிட்றா பழக்கமாச்சு?” – ஆரன்.

“மொட்டை மாடி மேல! புதன் கிழமை மாலை! நான் கர்லா கட்டையோட நிண்டேன்! அவ காதுல வாக்மேனோட வந்தா” – என ரைமிங்காக சொல்லிக் கொண்டே சென்றதும்,

அகலருவி காதில் புகை வர நிற்க, ஆரனோ கையைத் தட்டி “செவத்த புள்ளயதேன் கட்டுவேன்-ண்டு எடுத்த சபதத்தை, நிறைவேத்திட்ட டா பங்காளி!! எந்துணைப்பொறப்பு டா நீயி!” என்று பாராட்ட, விருமனோ, அவனைச் சந்தேகமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அகலருவியை நோக்கி,

“என்னாடி?” என்று அதட்டினான்.

உதட்டைச் சுழித்துப் புருவத்தைத் தூக்கியவள், “அந்தக்காவை நினைச்சா பாவமாத்தேன் இருக்குண்டாலும், வாழ்த்துக்கள்” எனக் கூற, சிரித்து அவள் பிடரியில் அடித்து நகர்ந்து விட்டான்.

அதன் பின்பு நேராக சுஜாதா வீட்டுக்குச் சென்று, விருமன் வந்து விரட்டும் வரை அவளை ஆயிரம் கேள்விகளால் அர்ச்சித்து, ஒரு வழியாக இருவரையும் வழியனுப்பி வைத்தாள் அகலருவி.

விருமன், சுஜாதாவை உடனழைத்துச் சென்ற சேதி கேட்டு, மறுநாள் அவனது போபால் அலுவலகத்திற்குக் கிழவர் ஃபோன் அடித்துத் திட்ட,

“ஏன், உன் மூத்தப் பேரன் மட்டும், அவன் கட்டிக்கப் போறவ கூட ஒரே வீட்ல இருப்பியான்! நான் இருக்கக் கூடாதா?, நான் இங்க இருந்து ஒருத்தியை இழுத்துட்டு வந்தா, கட்டி வைக்கிறேன்-ண்டு நீதேன சொன்ன?” – என்று எகிறினான் விருமன்.

“எலேய்!, எல்லாத்துக்கும் வரைமுறை-ண்டு ஒன்னு இருக்குல்லடா?, அம்புட்டுத் தூரத்துல இருந்துக்கிட்டு இம்புட்டு சலம்பல் பண்ணா எப்பிட்றா?”

“தாத்தா, என்னால அவளை விட்டுட்டு இருக்க முடியாது தாத்தா”

“எலேய் பொசகெட்டப் பயலே”

“அடச்சை கிழவா! என்னைய என்னாண்டு நினைச்ச! விட்டுட்டு இருக்க முடியாது-ண்டா, பார்க்காம இருக்க முடியாதுண்டு அர்த்தம்”

“எலேய்! என்னால உங்களை வைச்சுக்கிட்டு மாரடிக்க முடியல டா! சீக்கிரம் ஊர் வந்து சேருங்க டா! பூராப் பயலுக்கும் கல்யாணத்தை பண்ணி வைச்சாத்தேன் டா என்னால நிம்மதியா கஞ்சி குடிக்க முடியும்” எனப் புலம்பி ஃபோனை வைத்திருந்தார்.

கிழவரின் விருப்பப்படி அடுத்த சில வாரங்களில் நால்வரும் டெல்லியிலிருந்து மதுரை வந்து சேர்ந்தனர்.

என்னவானார்களென அறியாது மூன்று வருடங்களாய் ஒட்டுமொத்த ஊரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மூவரும்,ஒரு வழியாக ஊர் திரும்பிய சேதி கேள்வி பட்டு, ஆவல் அடங்காது, ஊர்க்காரர்கள் அனைவரும் ஆளாளுக்கு பட்டாளத்துக்காரரது வீட்டைத்தேடி வந்து சென்ற வண்ணமிருந்தனர்.

மூவரோடு சேர்ந்து உடன் வந்திறங்கிய சுஜாதா குறித்து ஊரே பேச்சாக இருக்க, அவளது முகத்தின் முன்பே சில கிழவிகள்,

“அழகு பெத்த பிள்ளையா இருக்கேய்யா! இதப் போய் இப்புடி முடமாக்கிப்புட்டானே ஆண்டவன்!?” – என தங்களது வருத்தத்தைப் பதிவு செய்ய,

“உம் மூக்கு ஓட்ட கூடத்தேன் நல்லா, ரெண்டு பஸ்ஸூ டயரை ஒட்ட வைச்ச மாறி அம்புட்டுப் பெருசா இருக்கு! நாங்க ஏதாவது சொன்னோமா?, பெருசா வருத்தப்பட வந்துருச்சு! குருட்டுக் கெழவி! போவியா?” என்று அகலருவி தான் ஒவ்வொருவரையும் திட்டி அதட்டிக் கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு வெளியே அந்தக் கிழவிகள் கேட்டதை, வீட்டினுள்ளே வீரலட்சுமியும்,சோலையாத்தாளும் சுஜாதாவை நோட்டம் விட்டபடி புறணி பேசிக் கொண்டிருக்க, அவர்களையும் விட்டு வைக்காத அகலருவி,

“நீங்க ஆசையா வளர்த்த உம்ம மருமவனுக்குப் பொண்டாட்டியாகப் போற புள்ள அது!, இப்பிடியெல்லாம் அவன் முன்னாடி பேசுனீகண்டா, காதை அறுத்துப்புடுவியான் சொல்லிப்புட்டேன்!” என்று மிரட்டி வைக்க,

அதன் பின்பு, சோலையாத்தாள் வழக்கம் போல், அகலருவிக்குத் தான் விருமனைத் திருமணம் செய்து வைக்க வேண்டுமெனக் கிழவரிடம் போட்டக் கூப்பாட்டில் கோபமுற்ற விருமன், கிழவியைக் கிழித்துத் தொங்க விட்டதில், கிழவி ரோஷப்பட்டு, சோறு தண்ணியில்லாது திண்ணையில் படுத்துக் கொண்டது.

ஆரனுக்கும்,அகலருவிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருப்பதாகக் கிழவர் சங்கிலியனிடம் கூறிய போது, எதிர்த்து எதுவும் பேசாது மௌனமாய் சம்மதித்து விட்டார் அவர். ஒருவகையில் அவர் இதை எதிர்பார்த்திருந்தார் என்பதால் பெரிதாக ஆச்சரியம் கொள்ளவில்லை!

தன்னுடன் கடிதம் வழி உரையாடும் சுஜாதாவை நேரில் கண்டதும் ஆசையாய் அரவணைத்துக் கொண்ட மீனாட்சி, அவளை ‘உன் மருமகள்’ என விருமன் அறிமுகப்படுத்திய போது ஒரு நொடி ஆச்சரியப்பட்டுப் பின் பாசமாய் உடனழைத்துக் கொண்டார். அன்பு காட்டுவதைத் தவிர வேறு எதையும் அறியாதவர் அவர்!

அதே சமயம், “என்னா அயித்த, மருமவளைக் கண்டதும், மவ மாறி வளர்த்தவளைக் கழட்டி விட்டுட்ட” என வம்பு செய்த அகலருவியின் காதைக் கிள்ளி, “உன்னைக் கட்டிக்கிட்டு என் ஆரன் என்னா பாடு படப் போறானோ” என்று கேலி செய்து மகளாய் வளர்த்தவளையும் விட்டுக்கொடுக்காது ஆதரித்துக் கொண்டார்.

திண்ணையில் கிடந்தக் கிழவியை சமாதானம் செய்யும் நோக்கத்துடன், தான் வரைந்த படங்களனைத்தையும், அவர் முன்பு அடுக்கி வைத்த அகலருவி, தனது டிப்ளமா சர்டிஃபிகேட்டை அவர் மடியில் விட்டெறிந்து பெருமை பீற்ற, அவள் எதிர்பார்த்தது போல் ஆச்சரியமாகப் பார்த்தபடி எழுந்தமர்ந்து, “இம்புட்டும் நீயா டி வரைஞ்ச?” என்று கிழவி ஒவ்வொரு படமாக எடுத்துப் பார்த்ததும்,

“சந்தேகப்படாத கெழவி! நான் வரைஞ்சதுதேன்! உம்பேரன் கட்டிக்கப் போற புள்ளதேன் அம்புட்டையும் எனக்கு சொல்லிக் குடுத்துச்சு! எம்புட்டுத் திறமையான புள்ள தெரியுமா அது! இதை பார்த்தேல?, சர்டிஃபிகேட்டு! இதை வைச்சு மதுரைல நானு எந்த ஸ்கூல்லண்டாலும் ஓவியம் கத்துக்குடுக்குற டீச்சரா சேரலாம் தெரியும்ல?” எனக் கேட்டதும்,

“என்னா கத்துக்கிட்டு என்னா பிரயோசனம், ச*****லி பெத்த மவனைக் கட்டிக்கிட்டு நீயும் ச*****லி-ண்டுல்ல பேரு வாங்கப் போற!” எனக் கிழவி நஞ்சைக் கக்க, பொறுமையாய்க் கிழவியை ஏறிட்ட அகலருவி,

“ஊருக்குள்ள இப்பிடிப் பேச்சு பேசிக்கிட்டிருந்தவிங்க என்னா கதியானாய்ங்க-ண்டு தெரியும்ல உனக்கு! ஒருத்தன் கஞ்சிக்கு வக்கில்லாம தெருவுல கிடக்கியான்! உம்மவன், உசுரா வளர்த்த ஜீவனை சதிக்கு இரையாக்கிப்புட்டு, சகலமும் அடங்கிப் போய், சத்தமில்லாம திரியுறாப்ல! இத்தனையும் பார்த்தும் அடங்காத நீயி, என்னா கதில சாகப் போறியோ தெரியல” – என்று அடிக்குரலில் கூறியதும், அடங்கிப் போனக் கிழவி, அவ்வப்போது உள்ளுக்குள் பொறுமிக் கொண்டாலும், வெளியே வாய் திறப்பதில்லை.

இரண்டு ஆண்களோடு சென்று விட்டாள் என அகலருவி குறித்து ஆங்காங்கு மட்டமாய்ப் பேசப்பட்டப் புறணிகளனைத்தும் விருமனுடன் சுஜாதாவைக் கண்டதும், மட்டுப்பட்டு விட,

‘ச******லி பெத்த மவன்-ண்டு அந்தப் பயலை, கிழவரு மருமவன்(சங்கிலியன்) கொஞ்ச,நஞ்சப் பேச்சா பேசிருப்பாரு! கடைசில அந்த ச******லி மவனையே, மருமவன்-ண்டு கூப்பிட்டாக வேண்டிய நிலைமை உண்டாகிருச்சு பார்த்தியா! கடவுள்-ண்டு ஒருத்தன் இருக்கியான் டா!’- எனக் கிழவரது முயற்சிகள் அத்தனையையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, கடைசியில் கடவுளுக்குக் கூஜா தூக்கியது ஒரு கூட்டம்! (அம்புட்டுத்தேன்-ங்க இந்தப்பயலுக அறிவு மசுரெல்லாம்!)

தான் வரைந்தப் படங்களைக் காட்டிக் கிழவியை harass செய்தது போதாதென்று அகலருவி, ஒரு நாளைக்கு இரு முறை குளிப்பது, சுரிதாருடனே வலம் வருவது, தன் குட்டை முடியை விரித்து விட்டு அலப்பரை பண்ணுவது எனத் தன் பட்டணத்துப் பவுசைக் காட்டி அவரைக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

போதாதற்கு, கண்ணாடி முன் அமர்ந்தபடி, கை,கால்,முகம் அனைத்திலும் க்ரீமைப் பூசிக் கொண்டு “வில்லேஜ், சூரியன்,ஸ்கின் டேமேஜ்’ என அரைகுறை ஆங்கிலம் பேசியபடிப் படம் ஓட்ட, அறை வாசலிலிருந்து அவளை நோட்டம் விட்டிருந்தக் கிழவி புவியரசியிடம்,

“என்னாடி களிம்பு அது! இம்புட்டை அள்ளி அப்பிக்கிட்டுக் கிடக்குறா?” என்று முணுமுணுக்க,

“ப்ச், டெல்லில ரொம்பப் பனியடிக்கும் ஆத்தா! பனிப்பத்துக்குப் பூசுற க்ரீமை, நம்மூர்ல அடிக்குற மொட்டை வெயில்ல பூசிக்கிட்டு வேணும்-ண்டே உன்னைய வெறுப்பேத்திட்டுக் கிடக்குறா அவ” – என்று சத்தமாய் புவியரசி பதில் கூறியதும், வேகமாய் எழுந்து வந்த அகலருவி,

“இதை வெயிலுக்கும் பூசலாம்! உனக்கென்னாடி தெரியும்!” என்று திட்டி விட்டு, தன்னையே ‘ஆ-வென’ நோக்கும் கிழவியிடம் கழுத்தை வெட்டித் தன் கன்னத்தைத் தடவிக் கொள்ள,

அவள் காட்டும் படத்தைக் கண்டுக் கேவலமாய் முறைத்தபடி ஆரன் வந்ததும் பம்மியவள்,

“நீ என்னைக்காவது என்னைய இப்புடி ஆ-ண்டு பார்த்திருக்கியா?, கிழவியாவது பார்க்கட்டுமே-ண்டு விடேன் மாமா” – என்று முகத்தைச் சுருக்கித் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்ததும், தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான் அவன்.

அதன் பின்பு, சுஜாதாவின் தந்தை மற்றும் மதுரையிலிருக்கும் அவளது சொந்த,பந்தங்கள் அனைவரும் பட்டாளத்துக்காரரின் வீட்டில் ஒன்று கூடி தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள, தன்னைப் போன்ற சிந்தனை கொண்ட ஒருவர் (சுஜாதாவின் தந்தை) சிக்கியதும், கிழவரைக் கேட்கவும் வேண்டுமா?, மும்முரமாய் வாய் பேசத் தொடங்கி விட்டார்.

இரு குடும்பமும் சிரித்துப் பேசிக் கொள்வதையும்,சுஜாதா மற்றும் அகலருவியிடமிருந்த ஒற்றுமையையும் எரிச்சலுடன் பார்த்திருந்த சோலையாத்தாள், அகலருவியை அழைத்து,

“இந்தாடி, அவ கூட ரொம்பக் குழையுற வேலையெல்லாம் வைச்சுக்காத! என்னா இருந்தாலும் அவ உனக்கு ஓரகத்தியா வரப் போறவ! திங்குற சோத்துல இருந்து, சொத்து,பத்து வரைக்கும் அத்தனையிலயும் உங்கூடப் பங்கு போடப் போறவ! நீ கரு,கரு-ண்டுஆட்டுப்புளுக்கை மாறி இருக்குற! அவ செவ,செவ-ண்டு அம்புட்டு அழகா இருக்குறா!, ஊர்ப்பய கண்ணெல்லாம் அவமேலதேன் இருக்கு! ஜாக்கிரதையா இரு நீயி, இல்ல-ண்டா உன்னைய உரிச்சு வாய்ல போட்டு மெண்டு திண்டாலும் தின்றுவா அவ! உன் அயித்தை-ங்குறவளைப் பாரு, மருமவ-ண்டு ஒருத்தி வந்ததும் உன்னையெல்லாம் கண்டுக்குறாளா-ண்டு” – என்று ஏத்தி விட,

கண்ணை மூடிப் பெருமூச்சை வெளியிட்ட அகலருவி,

“இல்ல,தெரியாமதேன் கேக்குறேன்! பொம்பள-ண்டாலே எந்நேரமும் பொறாமைல வெந்துக்கிட்டும், புகைச்சல்ல வயிறெரிஞ்சுக்கிட்டும்தேன் திரியனுமா?, ஏன் கிழவி, காலைல எந்திரிச்சதும் மாட்டைப் பார்க்கனும்! காட்டுக்குப் போகனும், மாந்தோப்பு,தென்னந்தோப்பு-ண்டு கிழவன் கூட ரவுண்டு அடிக்கனும்! என் சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு ஊருக்குள்ள வேலை தேடனும்! இப்பிடி ஆக்கப்பூர்வமான விசயங்களைப் பத்தி யோசிக்கவே எனக்கு மூளை-ல இடம் போத மாட்டேங்குது! இதுல நானு, சுஜாதா ஏன் வெள்ளையா இருக்குது?, நான் ஏன் கருப்பாப் பொறந்தேன்?, அயித்த ஏன் அவளுக்கு அவிச்ச இட்லியைக் குடுக்குது-ண்டா யோசிச்சுக்கிட்டுத் திரிய முடியும்?, என்னா கிழவி நீயி?, எங்கிட்ட பேசுன மாறி, அந்தப் புள்ளக் கிட்ட பேசி வைச்சுராத! பட்டணத்துப்புள்ள அது! இங்கிலிஷ்ல திட்டும்! அப்புறம் நீதேன் முழிச்சுட்டு நிற்கனும் சொல்லிப்புட்டேன்” – என்று மிரட்டி வைத்தாள்.

ன் பேரன்,பேத்திகள் அனைவரும் ஒன்று கூடி விட்ட நிலையில் கலகலத்துக் கிடந்த வீட்டைக் கண்டு நிம்மதியும்,உற்சாகமுமாய் வலம் வந்தக் கிழவரின் மனம் முழுதும் அழகரை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

அவர் மட்டுமல்ல. அவ்வப்போது எதிர்பார்ப்புடன் பெரியவரின் முகம் பார்த்தப் புவியரசியும்! பட்டாளத்துக்காரரின் பேரன்களும்,பேத்தியும் ஊர் திரும்பி விட்டதை அறிந்து அவர்களுக்கு நன்றி கூற வந்த அழகரின் அன்னையும்! 3 வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டுச் சென்ற நால்வரில் மூவர் திரும்பியிருக்க, அழகர் என்னவானானென்று முணுமுணுத்த ஊர் மக்களும்!

வந்தான் அவன்!

நெருப்பில் குளித்தெழுந்தும், தகர்த்திட முடியாத தங்கமாய்!

துண்டு,துண்டாய் வெட்டப்பட்டாலும், ஒளி வீசும் வைரமாய்!

நீருக்குள் அமிழ்த்தப்பட்டாலும் நிமிர்ந்து வரும் பந்தாய்!

சாதி என்கிற பெயரில் கடைசி வரை துரத்திய சதியை வென்றுக் கக்கத்துக்குள் செருகிக் கொண்டுக் கம்பீர நடை போட்டு வந்தான் அவன்!

ராணுவ உடுப்பணிந்துத் தோளில் பையுடன் ஊரில் கால் வைத்த அழகருக்கு, அம்மண்ணை மனிதனாக்கி அள்ளி அணைத்துக் கொள்ளும் உணர்வு!

சாதிப் பேரைச் சொல்லி அவனை சறுக்க விட்டு வேடிக்கை பார்த்தக் கூட்டத்தைத் தாண்டி, அவனுக்கு ஆதரவாய் தோள் தந்த காடும்,கல்லும்,பூவும்,பூஞ்சையும் அதிகம் இங்கே!

எத்தனை வருடங்களுக்குப் பிறகு அத்தனையையும் காண்கிறான்!

முன்னேற நினைத்தவனை மூலையில் ஒடுக்கி முக்காடு போட வைத்து கெக்கொலிக் கொட்டிச் சிரித்தச் சில்லறைகளுக்குப் பயந்து, முறையாய் விடை பெற மறந்து, ராவோடு ராவாய் சொல்லாமல்,கொள்ளாமல் ஓடி மறைந்தவனை இம்மண்ணும், மரமும் மன்னிக்குமா?

அநியாயத்திற்கு அடங்காது முரண்டிய அறிவு,தளர்ந்து போகச் சொன்ன மனதை வென்று, தடுப்பணையைத் தகர்த்தெறியச் செய்ததன் பின்னேயிருந்த நியாயத்தை இந்தக் காற்றும்,நீரும் புரிந்து கொள்ளுமா?

தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டு, ஓடும் நீரைக் கண்டபடிக் கம்மாயருகே இருந்த மரத்தில் தலை சாய்த்து நின்றிருந்தான் அவன்.

சுட்டெரிக்கும் சூரியனுக்குக் கீழ் சுடரொளியாய் நின்றவனின் தோற்றம், சுற்றி வீசும் காற்றில் பரப்பிய நேர் மறை அதிர்வில், பூரித்து ஆடிய மரக்கிளைகள், பூ மழை பொழிந்ததில், சிந்தனை கலைந்தவன், நிமிர்ந்து மரத்தைப் பார்த்தான்.

இனியொரு விதி செய்யப் பிறந்தவனை இயற்கை ஒதுக்குமா? – என மரம் அவனைப் பார்த்துக் கேட்டது.

ஓடும் நீரின் சலசலப்பையும், காற்றுக்கு ஆடும் மரக்கிளையின் ஓசையையும் தவிர, நிசப்தமாயிருந்த இடத்தில், திடீரெனத் தெருநாயொன்று பலமாய்க் குரைக்கும் ஒலி கேட்டு மரத்திலிருந்துப் பார்வையைத் திருப்பினான்.

கரையோரம் மண்டிக் கிடந்தப் புதருக்குள்ளிருந்துப் பதறியடித்துக் கொண்டுக் குரைத்தபடித் தெரு நாயொன்று வெளியே வர, அதைத் தொடர்ந்து கையிலிருந்த வேட்டியால் நாயைத் துரத்தியபடி “ஓ…ஓடு, ஓடு கழுதேய் அங்குட்டு! ****** கடிக்க வருது ***** நாயி!” என்று குழறலாய்க் கூறியபடித் தள்ளாட்டத்துடன், அரை நிர்வாணமாய்ப் புதரிலிருந்து எழுந்து நின்றான் மணிவண்ணன்.

அவனைச் சுற்றி சுற்றி வந்த நாயை விரட்டுவதில் மும்முரமாய் இருந்தவன், எதிரே ஒருவன், மூச்சடைத்துப் போய் சிவந்த விழிகளால் தன்னை வெறித்து நோக்கிக் கொண்டிருப்பதை அறியவேயில்லை.

முட்டிவரைக் கருகிக் கருத்திருந்த வலது கையோடு, விலா எலும்புகள் விடைத்துத் தெரியுமளவிற்கு உடல் மெலிந்து, ஒட்டிப் போன முகமும், கலைந்தத் தலைமுடியும், கன்னம் முழுக்கத் தாடியுமாய், நாய் நக்கிப் போட்ட எலும்புத் துண்டைப் போல் பைத்தியக்காரனாய்க் குப்பையிலிருந்து எழுந்து நின்றவனைக் கண்டு, நம்ப முடியா அதிர்வுடன் அடைத்தத் தொண்டையுடன், இமை தட்ட மறந்து, சிலையாய்ச் சமைந்து விட்டான் அழகர்.

தான் அரை நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கும் சுரணையேயில்லாது, கையிலிருந்த வேட்டியால் நாயை அடித்துத் துரத்தி, அது ஓடிச் சென்றதும், வெற்றி பெற்று விட்டக் களிப்பில், முழுப்பற்களையும் காட்டிச் சத்தமாய் சிரித்து விட்டு, நெஞ்சை சொரிந்தபடியேத் திரும்பியவனின் பார்வை எதிரே நின்றவனின் மீது படிந்தது.

விடைத்த மூக்கும்,துடிக்கும் இதழ்களுமாய், இறுகிய கைகளோடு விறைப்பாய் நின்றவனைக் கண்ணைச் சுருக்கிப் பார்த்தான் மணிவண்ணன்.

எதிரே நின்றவனின் முடி வெட்டும், சீருடையும் அவன் பட்டாளத்தான் என்பதைப் பறை சாற்ற, மீசைக்குப் பின்னிருந்த அந்த முகத்தை எங்கோ கண்டது போல் தோன்றிய உணர்வில், அவன் முகத்தையே உற்று நோக்கியவனுக்கு, விடை தெரிந்ததும் ஒரு நொடி உடல் நடுக்கம் கண்டது.

தன்னைக் கண்டதும், தனது சாதிப் பேரைச் சொல்லி நக்கல் பேசி நான்கு கெட்ட வார்த்தைகளை உதிர்த்து மட்டம் தட்டும் நாக்கு இன்று, பேச்சு வராமல் குழறி நடுங்குவதை வெறித்துப் பார்த்தான் அழகர்.

தன் பெயரையோ,படிப்பையோ,தோற்றத்தையோ மதியாது, ச****ன் எனத் தன்னை அடையாளப்படுத்தி இகழ்ந்து பேசும் வாய் இன்று, எச்சில் வடிய நிற்பதை இறுகிப் போய் நோக்கினான்.

இதற்காகவா அத்தனை ஓட்டமும்?, இந்த நிலையை அடைவதற்குத் தானா அத்தனை வெறியாட்டமும்?, என்ன பிறப்பு டா நீ?

நிர்கதியடைந்து நிர்வாணமாய் நடுத்தெருவில் நிற்கும் உன்னை அம்போவென விட்டு விட்டு என்னடா செய்கிறது நீ தூக்கி நிறுத்த நினைத்த சாதி?,

உனக்கும், நீ காட்டும் சாதி அடையாளத்தைப் பின்பற்றிப் பின்னால் வருபவர்களுக்கும் தடையாய் நிற்கும் முட்செடி நானென்றாயே!, துணியில்லாது நிற்கும் உன்னைத் துரத்தும் தெருநாயைத் தவிர, உன் பின்னால் எவனடா நிற்கிறான் இன்று?, நீ உனது அடையாளமாகக் காக்க நினைத்த சாதி கூட, தோல் சுருங்கித் தோற்றம் மங்கி அருவெறுப்பின் உருவமாய் நிற்கும் உன்னை, அடையாளம் காண முடியாத அளவிற்குக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாயே!

என்ன தேடிக் கொடுத்தது உன் வக்கிரக் குணம் உனக்கு?, சாதியைக் காரணம் காட்டி எனை வாழ்வின் எல்லை வரை விரட்டி?, மனிதம் பேசிய மனிதனின் பின்னே நாயாய் துரத்தி, என்ன பெரிதாக சாதித்து விட்டாய்?, வாழும் வயதில் வாழ்வை இழந்து, வக்கற்றுப் போய் வீதியில் நிற்பது தவிர?

உன்னால் பட்டத் துன்பத்தையும், கொண்ட துயரத்தையும் தூண்டுகோலாக நினைத்து, உன் உயரத்துக்குச் சமமாய் நின்று உன் முகத்தில் காறி உமிழ வேண்டுமென்கிறத் துடிப்பில் அயராது உழைத்துத் தனக்கான அடையாளத்தோடு வந்தவனை ஏமாற்றி, இப்படித் தரம் தாழ்ந்து, உருக்குலைந்து, எச்சில் இலையாய்க் குப்பையில் கிடக்கிறாயே!

திரே நிற்பவன் யாரென்று அறிந்ததும், அவனது சிவந்த விழிகள் கேட்டக் கேள்விகள் புரிந்ததும், நிதானமற்றிருந்த மணிவண்ணனின் மூளை மொத்தமாய் நிலைகுலைந்து, ஏற்கனவே தள்ளாட்டத்திலிருந்த உடலை அதிகமாய் ஆடச் செய்ய, அவனை நிமிர்ந்து பார்க்கக் கூசிய கண்களை அவசரமாய்த் திருப்பிப் பரபரவென இங்குமங்கும் ஓடிய கருமணிகளோடு, விரல் நடுங்க நின்றவனின் அருகே நடந்து வந்தான் அழகர்.

சிறுத்துச் சின்னா பின்னமாகியிருந்தத் தன்னருகே அடி மேல் அடி எடுத்து வைத்து நெருங்கிக் கொண்டிருப்பவனின் ஆஜானுபாகுவான தோற்றம், தன்னை விழுங்க வருவது போல் பிரம்மையொன்று தோன்ற, விழி முழுக்கப் பீதியுடன், அஞ்சி நடுங்கித் தடுமாறிக் கீழே விழுந்தவனை நெருங்கி நின்றான் அழகர்.

கால்கள் தள்ளாட, கை நடுங்க, அச்சத்திலும்,அவமானத்திலும் வியர்த்து வடிய, இழுத்த மூச்சுடன் கீழே கிடந்தவனை ஒரு நொடித் தன் கூரிய பார்வையால் கூறு போட்டு, சிவந்த விழிகள் முழுக்க ஆத்திரத்தில் தேங்கிக் கிடந்தக் கண்ணீருடன், குனிந்து அவனைத் தூக்கி நிறுத்தினான் அழகர்.

கீழ் உடல் முழுக்கத் துணியின்றி அம்மணமாய் நின்றவனின் இடுப்பில் கீழே கிடந்த வேட்டியை எடுத்துச் சுற்றியபடியே, அவன் மீது படிந்திருந்தத் தன் அழுத்தமான பார்வையைத் திருப்பாது, ஆழ் மனதின் ஆத்திரத்தையும்,ஆதங்கத்தையும் தன் கம்பீரக்குரலில் தேக்கிக் கண்ணீர் வடியக் கடித்தப் பற்களுக்கிடையில் உச்சரித்தான்.

“நிகரென்று கொட்டு முரசே! - இந்த

நீணிலம் வாழ்பவரெல்லாம்!

தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச்

சாதி வகுப்பினை யெல்லாம்!

அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்

அத்தனைப் பேரும் நிகராம்!

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே!

நன்றென்று கொட்டு முரசே!இந்த

நானில மாந்தருக்கெல்லாம்!” – இடுப்பில் வேட்டியை அவன் இறுக்கிக் கட்டியதில், ஒரு நொடித் தள்ளாடி நின்ற மணிவண்ணனின் கண்கள், அடிக்குரலில், ஆதங்கம் பொங்க, கடித்தப் பற்களுக்கிடையே அவன் கொட்டித் தீர்த்த வார்த்தைகளைக் கேட்டு மனம் நொந்துக் கரகரவெனக் கண்ணீரைச் சொரிய, தரம் தாழ்ந்து, தலை தொங்கிப் போய் நிற்கும் தன் நிலையை எண்ணி, தொய்ந்து போய்த் தளர்ந்த நடையோடு அவனை விட்டு விலகி நடந்தான்.

குடித்த ‘கள்’ அவன் செல்லைச் சுரண்டியிருக்க, பாதியாகப் போன உடலுடன், பாதையறியாதுத் தள்ளாடித் தடுமாறி, வெறுங்காலோடுப் பைத்தியக்காரனாய் நடந்து செல்பவனைக் கண்டு, மனம் கதறியது அழகருக்கு.

மூக்கு விடைக்கப் பொங்கிய அழுகையைக் கட்டுப்படுத்த முனையாது, நெஞ்சு குலுங்க அழுதவனை, “டேய் அழகரு….” – என்று கத்தியழைத்தபடி அருகே வந்தனர் ஆரனும்,விருமனும்.

துடைக்கத் துடைக்கப் பெருகியக் கண்ணீரோடு, மணிவண்ணன் சென்ற வழி பார்த்தபடி அசையாது நின்றவனின் தோளில் கையிட்ட ஆரன், “என்னடா டேய்ய்…” என்று கண்ணீரைத் துடைத்து விட, வார்த்தைகளற்று அவன், தன் கையை நீட்டித் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் மணிவண்ணனின் உருவத்தைக் காட்டியதும், பெருமூச்சை வெளியிட்ட விருமன்,

“ப்ச், வந்ததும் நீ அவன் மொகரைலதேன் முழிக்கனுமா?, விட்றா டேய்” என்று சலித்துக் கொள்ள,

“எப்பிடிண்ணே விட்றது?, அவேன் காலடில செருப்பாக் கிடக்க வேண்டியவன் நான்-ண்டு எகத்தாளமா சொன்னவன், இப்பிடிக் கல்லுக்கும்,மண்ணுக்கும் வித்தியாசம் புரியாம வெறுங்கால்ல நடந்து போறியான்!, அவேன் உசரத்துக்கு வளர்ந்து நிண்டு சட்டையைப் புடிச்சுக் கேள்வி கேளுடாண்டு சொல்லித்தேன-ண்ணே என்னைய பட்டாளத்துக்கு அனுப்புனாரு பெரியவரு!, அம்புட்டு வெறியோட நான் உழைச்ச உழைப்பெல்லாம் இப்பிடி, கூனிச் சிறுத்துப் போய்ப் பைத்தியக்காரனாத் திரியுறவனை எதிர்த்து நிற்கத்தேனா?, இதுக்குத்தேன் எங்காத்தா கழுத்துல கத்தியை வைச்சானா?, என்னைய ராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டு ஓட வைச்சானா?, இவனால எம்புட்டு மனக்கவலையையும், வேதனையையும் கடந்து வந்தோம்?, முன்னேற்றம் கண்டு நான் முழுதகிரியத்தோட வாரையில, பலமான எதிரியா முன்ன நிண்டு வரவேற்குறதை விட்டுப்புட்டு, தெருநாய் ***** கடிக்கிறது கூடத் தெரியாமக் குப்பையில கிடக்குறானேண்ணே!” – அடைத்தத் தொண்டையுடன் ஆதங்கமாய்க் கேட்டவனை அங்கிருந்து நகர்த்தி, உடன் நடந்தபடி,

“விட்றா! உன்னை அழிக்கனும்ண்டு நினைச்சப்ப, தீயா வேலை செஞ்சு விதவிதமான யுக்தியை யோசிச்ச மூளையை, அவன் தன்னோட வாழ்க்கையை உருப்படியாக் காப்பாத்திக்குறதுக்கு உபயோகிச்சிருந்தா இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டியான்!” என்ற விருமன், அதன் பின்பு வீடு செல்லும் தூரம் வரை மூன்று வருடத்திற்கு முன்பு நடந்ததைக் கதை,கதையாய் சொல்லிக் கொண்டு வந்தான்.

அனைத்தையும் கேட்ட அழகருக்கு ஒன்று மட்டும் புரிந்தது.

சாதி எனப் பெயர் சொல்லி அவன் செய்த சில்லறை அரசியல் அத்தனையிலும் அவனது பச்சை சுயநலமும், வக்கிரக் குணமும் மட்டுமே பின்னேயிருந்திருக்கிறது!

தன் தந்தை காலத்திலிருந்து, சொத்துப் பிரச்சனைக் காரணமாக அவன் குடும்பத்திற்கு பட்டாளத்துக்காரருடனிருக்கும் பனிப்போரில் வென்று, ஊரே மதிக்கும் பெரியவரின் பெயரைக் கெடுத்து, அவரைத் தலைகுனியச் செய்து, ‘இங்கு நானே உயர்ந்தவன்’ என்கிற எண்ணத்தை ஊராரின் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென்கிறப் பேராசைக்காக, சாதிப் பிரச்சனையை இழுத்து அழகரைப் பகடையாக்கியிருக்கிறான்.

சங்கிலியனோடு சமரசமாய் நடந்து, அவரது பெண்ணான அகலருவியைத் தன்னுடைமையாக்கிக் கொள்ள நினைத்திருந்தவன், அவள் பட்டாளத்துக்காரரின் வழித்தோன்றலாயிருந்ததில் கோபமுற்று, முதலில் அவரை ஜெயித்து, அதன் மூலம் அகலருவியைத் தன் சொந்தமாக்கிக் கொள்ளும் பெண்ணாசையும் கொண்டிருக்கிறான்.

தன் வக்கிரம் நிறைந்த அற்ப ஆசைகளுக்காக சாதியெனும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டுத் தனி மனிதன் ஒருவன் செய்த செயலால் எத்தனை பேர் முட்டாளாகிப் போனார்கள்! அவன், சாதிப் பேரைச் சொல்லித் தூண்டி விட்டதும், கத்தியையும், அரிவாளையும் தூக்கிக் கொண்டு அவன் பின்னே கூடிய கும்பலுக்கு, அவனது தூண்டுதலுக்குப் பின்னிருக்கும் சுயநலம் பற்றி புரிந்திருக்குமா?, எத்தனைப் பேரைப் பகடைக்காய் ஆக்கியிருக்கிறான்?

அவனால் எத்தனை இழப்புகள்! அவமானங்கள்!

தேதோ யோசித்தபடி ஆரன் மற்றும் விருமனுடன் பெரியவரின் வீட்டருகே வந்திருந்தான் அழகர்.

“பெருசு, கட்டுத்தரைலதேன் டா இருப்பாரு” – என்று விருமன் கூறியதும் மூவரும் கொட்டகையருகே செல்கையில், மாடுகளுக்குத் தண்ணீர் காட்டியபடிக் குனிந்து நின்றிருந்தார் வீரைய்யன்.

வளைந்து நின்றவரின் உருவத்தைக் கண்டபடி அருகே நெருங்கினான் அழகர்.

தொடர் போராட்டமும், மூப்பும் அவரை மேலும் நரைக்கச் செய்திருக்க, முகம் மட்டும் முதுமையிலும் ஜொலித்துக் கொண்டிருந்தது.

ஒரு மணிவண்ணன் அல்ல! ஒன்பது மணிவண்ணன் வந்தாலும், சோர்வின்றி, சலிக்காமல், தைரியமாய் எதிர் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டப் பிதாமகன் அவர்! போர் இல்லாதுத் தரணியில்லை என்கிற நிதர்சனம் புரிந்தவர்! தன் படையைக் காத்து,வழி நடத்திச் செல்லும் பொறுப்பை ரத்தத்திலேயே பெற்ற பட்டாளத்துக்காரர் அவர்!

நீர் அருந்தும் மாட்டைத் தடவிக் கொடுத்து விட்டு, வழிந்த வியர்வையைத் துடைத்தபடி நிமிர்ந்தவர், நெகிழ்ச்சியாய்த் தன்னை நோக்கியபடி எதிரே நின்ற அழகரைக் கண்டு வியப்பில் விழி விரித்தார்.

“ஐயா….” – என்றவனின் கரகரத்தக் குரலில் இமை தட்டி விழித்து, கனிந்து, நெகிழ்ந்த முகத்தோடு அவனருகே சென்றவருக்கு, உயரமும், அகலமுமாய், சீராக வெட்டப்பட்டத் தலைமுடியும்,மீசையுமாய் ராணுவ உடுப்பில் நின்றவனைக் கண்டுப் பெருமையும்,பூரிப்பும் பெருக, அவன் தோள்களை இறுகப் பற்றி மேலும்,கீழுமாய் அவனை நோக்கி நிறைவாய்ப் புன்னகைத்தார்.

யார் இவர்?, அவருக்கும்,தனக்கும் ரத்த உறவு கூடக் கிடையாது. முன்னேற நினைத்து முழு முயற்சி எடுத்த சராசரி இளைஞனின் அடிப்படை உரிமைக்காக எத்தனைப் போராட்டம் நடத்தி, எத்தனை இழப்புகளை சந்தித்து விட்டார்!

இனி நூறு ஜென்மம் பிறக்க வேண்டும்! நூறு ஜென்மத்திலும் அவர் பட்டாளத்துக்காரராகவும்! தான் அழகராகவும் பிறக்க வேண்டும்! – என்றெண்ணிக் கொண்டு நெகிழ்ச்சியில் நிரம்பியக் கண்ணீருடன் அவரை ஏறிட்டவன், மகிழ்ச்சியில் வார்த்தை வர மறுத்துக் கையை உயர்த்தி அவரிடம், தன் உடுப்பைத் தொட்டுக் காட்டினான். சட்டையின் இடது புறமிருந்தத் தன் பெயரைத் தொட்டுக் காட்டினான்.

அவனது செய்கை, கிழவரின் விழிகளில் நீர் வர வைக்க, அவன் தோள்களை இறுக்கிப் பற்கள் தெரிய சந்தோஷமாய் சிரித்தவரைக் கண்டு, விழி மூடிக் கண்ணீரை உள்ளிழுத்தவன், பின் நிமிர்ந்து,

“கையைத் தூக்கிக் கும்பிட்டாத் தட்டி விடுவீக! கால்ல விழுந்தா உதைப்பீக! இந்த நிமிசம் என் நெஞ்சு முழுக்கப் பொங்கி நிற்குற உமக்கான என் நன்றியை நான் எப்பிடித்தேன் காட்றது?” – என சலித்தக் குரலில் கேட்கத் தலையைப் பின்னே சாய்த்து பெரிதாய் புன்னகைத்தக் கிழவர், தன் இருகைகளையும் அகல விரித்து,

“we are comrades now, buddy” என்று ஆங்கிலத்தில் கூறியதும், பற்கள் தெரிய சிரித்தவன், அவரது அகலத் தோள்களில் ஆசையாய்ச் சாய்ந்து, அவரை இறுகக் கட்டிக் கொண்டுக் கண்ணீர் உகுத்தான்.

அவன் முதுகைத் தடவிக் கொடுத்தப் பெரியவர் கரகரத்துப் போனக் குரலைச் செருமிச் சரி செய்து கொண்டு,

“எலேய்! என்னா டா நீயி! பட்டாளத்துக்காரன்-ண்டா உணர்வுகளை அடக்கத் தெரிஞ்சவனா இருக்கனும் டா! இப்பிடிப் பொடிப்பய மாறி அழுதுட்டுக் கிடக்கக் கூடாது” என்று கூறியதும், மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தவன், கண்களைத் துடைத்துக் கொண்டு,

“பட்டாளத்தான் பாசத்துக்குக் கட்டுப்பட்டவன்ய்யா” என்று கூற,

“அதுசரி” என்ற பெரியவர், பருவ வயது தோற்றம் மறைந்து இளைஞனாய், விரிந்தத் தோள்களோடு,அசாத்திய உயரத்தோடு, ஆளுமையுடன் நின்றவனைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கொண்டார்.

த்தம் கேட்டு கட்டுத்தரையருகேக் கூடியிருந்த ஒட்டு மொத்தக் குடும்பமும், இந்தக் காட்சியைக் கண்டு நெகிழ்ந்து போய் நின்றிருக்க, அப்போது வந்து சேர்ந்த அழகரின் தாயாரும் மகனைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டுத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இரவோடு இரவாய் ஊரை விட்டு ஓடிய அழகர், பட்டாளத்துக்காரனாய் படம் எடுத்து வந்திருக்கும் சேதி அதற்குள் ஊர் முழுதும் பரவி விட, ஆளாளுக்கு அவனை வியப்பும்,ஆச்சரியமாய் வந்து பார்த்து விட்டுச் செல்வது கண்டு, சங்கோஜமாய் நின்றிருந்தவனைக் கேலி செய்தபடி ஆரனும்,விருமனும் உடனிருந்தனர்.

அதற்குள் மீனாட்சி, கட்டுத்தரையில் கூடி விட்டிருந்த அழகரின் குடும்பத்தாருக்கு மோர் கொடுத்து உபசரிக்க, பாகுபாடு பாராது அவர், சகஜமாய் தன்னைச் சேர்ந்தவர்களுடன் பழகுவதைக் கண்டபடி நின்றிருந்த அழகரின் பார்வை, கையில் மோருடன் நடந்து வந்தப் புவியரசியை எதேச்சையாக நோக்கியது.

அவன் கட்டுத்தரையில் கால் பதித்ததிலிருந்து விடாது அவனைப் பார்வையால் தொடர்ந்து நிம்மதியிலும்,சந்தோசத்திலும் குதித்திருந்தவளை அப்போது தான் கண்டான் அழகர்.

அவள் நீட்டிய கடிதத்தை அவன் நிராகரித்ததும், அழுதபடி அவள் நடந்து சென்ற போதுக் கடைசியாய் அவளைப் பார்த்தது. அதன் பின்பு இத்தனை சம்பவங்களுக்குப் பிறகு, இத்தனை வருடங்களுக்குப் பிறகு இன்று தான் காண்கிறான்.

விடாது பேசிக் கொண்டிருந்தவன் திடீரென அமைதியாகி விட்டது உணர்ந்து, அவன் புறம் திரும்பிய பெரியவர், அவன் பார்வை சென்ற இடத்தைக் கண்டுப் புருவம் உயர்த்த, தானும் அவரை நோக்கியவன், மனதை மறையாது,

“அ…அ..அந்தப் புள்ள.. ரொ..ரொம்ப வளர்ந்துருச்சுங்கய்யா” – என்றான்.

“ஆமா! பின்ன, காலேஜூ மூணாவது வருசம் படிக்குதுல்ல”

“ஓஓஓ” என்றவனின் பார்வை, அனைவருக்கும் கொடுத்து முடித்து விட்டுத் தன்னை நோக்கித் தயங்கியபடி நடந்து வருபவளையே அசையாது நோக்கியது.

ஆளாளுக்கு அவரவர் போக்கில் பேசிக் கொண்டிருந்தாலும், அனைவரது பார்வையும் கண்டும் காணாதவாறு, அவர்களிருவரின் மீதே படிந்திருந்தது.

தன் தாத்தனிடம் ஒரு குவளையை நீட்டி விட்டு, அவன் முகம் பாராமல் குனிந்தத் தலையுடனே அவனை நோக்கித் தட்டை நீட்டினாள் அவள்.

அவனது பாதி உயரத்திலிருந்தவளைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, படபடக்கும் அவள் விழிகளைச் சந்திக்க, ஆவல் பிறக்க, அவள் நீட்டியும், குவளையை எடுக்காது அசையாது நின்றான்.

அவர்களது இளமை விளையாட்டைக் கண்டு உதட்டை வளைத்தப் பெரியவர், கண்டும் காணாது வேறு புறம் திரும்பிக் கொள்ள, கிழவர் திரும்பியதும், பதற்றமாய் அவனை நிமிர்ந்து பார்த்தப் புவியரசி, மீண்டும் தட்டை அவன் புறம் நீட்டியதும்,

அவள் விழி பார்த்துத் திருப்தியுற்று, “நீ… நீங்க குடிக்கலயா?” எனக் கேட்டு அவள் ‘உள்ளேயிருக்கிறது’ எனப் பதில் மொழிந்த பிறகு ஒரு வழியாகத் தட்டிலிருந்து குவளையை எடுத்தான் அழகர்.

அதுவரை இருவரது வயதையும் மனதில் வைத்து, தான் எடுத்த முடிவை செயல்படுத்தலாமா,வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்த பெரியவருக்கு, அவர்களது செய்கையைக் கண்டுத் தெளிவு பிறக்க, பெருமூச்சுடன் கூடியிருந்தக் கூட்டத்தை நோக்கினார்.

அதன் பின்பு மணிவண்ணன் குறித்தப் பேச்சு எழுந்ததும், தான் அவனைக் கம்மாயோரம் கண்ட நிலையை எடுத்துக் கூறி வருத்தப்பட்ட அழகரைக் கண்டு மௌனமாய் அமர்ந்திருந்தார் பெரியவர்.

“எப்ப தாத்தா கோர்ட்டு தீர்ப்பு வருது?” – எனக் கேட்ட விருமனிடம்,

“நாளைக்கு” – என்று கிழவர் கூறியதும், அவரையே பார்த்துக் கொண்டிருந்த அழகர்,

“அவனை இப்பிடியே விட்றப் போறீங்களாய்யா?” எனக் கேட்டதற்குப் பதிலின்றிப் பெருமூச்சுடன் எழுந்து சென்றார் பெரியவர்.

றுநாள் கோர்ட்டிற்குப் புறப்பட்டப் பெரியவருடன் ஆரன்,விருமன் மற்றும் அழகரும் இணைந்து கொண்டனர்.

என்றுமில்லா அதிசயமாக அன்று மணிவண்ணன், சுத்தமாய் மழிக்கப்பட்டத் தாடி,மீசையும், மடிப்பு கலையாத வேட்டி,சட்டையுமாய் கோர்ட்டிற்கு வருகை தந்திருந்தான்.

நிலமோசடி வழக்கில் அவன் மேல் சுமத்தப்பட்டக் குற்றங்களனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், அவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கோர்ட்டு முடிவு செய்ததும், மணிவண்ணனின் தாயார் அங்கேயே அமர்ந்து அழத் துவங்கி விட்டார்.

சொத்து கை விட்டுப் போனதிலிருந்து மிருகமாய் மாறி, அன்னை வெயிலிலும்,மழையிலும் நின்று சம்பாதித்து வரும் காசை பிடுங்கிச் சென்றுக் கள்ளுக்கடையில் கொட்டும் மணிவண்ணன், அன்று, போலீசார் அவனை அழைத்துச் செல்லத் தயாராகி நின்ற தருணத்தில், அவர் தோளைப் பற்றித் தூக்கி நிறுத்தி,

“எம்மா, ப்ச், எம்மா அழுகாதம்மா! எங்க போயிரப் போறேன்! இங்கதேன் இருப்பேன்! ரெண்டு வருசந்தேன?, அதெல்லாம் வேகமா ஓடிரும். திரும்பி வந்துருவேன்! அழுகாத. தகிரியமா இரு” என்று கூறி விட்டுச் செல்ல,

மகனது வார்த்தை கேட்டு மேலும் பொங்கிய அழுகையுடன், அவனைப் போலீசார் கூட்டிச் செல்வதைக் கண்டபடி நின்றிருந்தவரின் அருகே வந்தார் பெரியவர்.

பெரியவரைக் கண்டதும் சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு விம்மியவரிடம்,

“அழுகாத தாயி! அழுகாத!” எனக் கூறிச் சமாதானப்படுத்திய கிழவர், ஆரனை நோக்கியதும், அவன் தன் கையில் வைத்திருந்தப் பையிலிருந்து ஒரு பத்திரத்தை எடுத்து அவரிடம் நீட்டினான்.

பேரனிடமிருந்துப் பத்திரத்தை வாங்கி மணிவண்ணனின் தாயாரிடம் கொடுத்தப் பெரியவர்,

“உம் பேர்ல இருந்த தென்னந்தோப்பையும்,தோட்டத்தையும், வீட்டையும் உனக்கேத் திருப்பிக் குடுக்குறேன்! ரெண்டு வருசம் கழிச்சு உம் மவன் திரும்பி வரும் போது, அவனுக்கான வாழ்வாதாரத்தை வளர்த்து வையி. அதை அடிப்படையா வைச்சுக்கிட்டு, அவன் உழைச்சு முன்னேறி, கல்யாணம் கட்டி, பிள்ளை,குட்டியெல்லாம் பெத்து, உனக்கு நிம்மதியைத் தேடிக் குடுக்கட்டும்” – என்று கூற,

விரிந்த விழிகளில் உறைந்து விட்டக் கண்ணீருடன், பெரியவரை வியப்பாய்ப் பார்த்தவரிடம்,

“இத்தனை நாள் இல்லாம, இன்னைக்கு என்ன புதுசா இரக்கப்படுறியான்-ண்டு யோசிக்குறியா?, சொத்து கை விட்டுப் போய், நீயி காட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சதும், நீ படுற கஷ்டத்தைப் பார்த்தாவது அவன் மாறுவியான்-ண்டு நினைச்சேன்! ஆனா நடக்கல! அதேன் நான் கேஸையும் வாபஸ் வாங்கல! இந்த அனுபவமாவது அவனுக்கு நல்ல மாற்றத்தைக் குடுக்கும்ண்டு நம்புறேன். அதுக்கு மேல அவன் இஷ்டம்” எனக் கூறி விட்டு,

“ஏதாவது தேவை-ண்டா என்னைத் தயங்காம கூப்பிடு” என்றவர், அதிர்ச்சியில் சிலையாய் நின்ற பெண்மணியின் கையில் பத்திரத்தைத் திணித்து விட்டு நகர்ந்தார்.

கிழவர் தன் அன்னையிடம் பேசுவதை போலீஸ் ஜீப்பில் அமர்ந்தபடிப் பார்த்திருந்த மணிவண்ணன், மௌனமாய்ப் பின்னே தலை சாய்த்துத் தன் கண்களை மூடிக் கொண்டான்.

சுற்றியிருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போனதும், இனி இது சுபநிகழ்ச்சிகளுக்கான நேரம் எனத் தீர்மானித்துக் கொண்ட பெரியவர், மூன்று ஜோடிகளுக்குமான திருமணப் பேச்சை வீட்டாரிடம் தொடங்கி வைத்தார்.

மூன்று ஜோடிகள்??, ஆம்! அழகரையும்,புவியரசியையும் சேர்த்து!

இந்த முறை எதிர்ப்புத் தன் மகள் மற்றும் மருமகனிடமிருந்து வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க, ஆனால் எதிர்ப்பு கிளம்பியதென்னவோ புவியரசியிடமிருந்து.

“ஏன்??” – என எரிச்சல் குரலில் வினவிய அகலருவிக்கு அவள் பதில் சொல்லாமல் நகர்ந்து விட,

“அவனுக்காகச் சாகப் போனவ, என்னத்துக்குடி அவனை வேணாண்டு சொல்லனும்?” என்று திட்டியபடி அவள் பின்னே செல்லப் பார்த்தவளை சிலம்பன் பிடித்து நிறுத்தி,

“பொறுத்தா! கிழவன் அப்படியெல்லாம் இவ போக்குக்கு விட்ற மாட்டாரு” எனச் சரிக் கட்டி வைத்தான்.

புவியரசியின் மனநிலை குறித்துத் துல்லியமாகப் புரிந்து வைத்திருந்தக் கிழவர், அவளைக் கண்டு கொள்ளாது, அழகரது அன்னையையும்,அவனையும் அழைத்து வைத்துத் தன் முடிவு பற்றிக் கூற,

ஆரன் மற்றும் விருமன் மூலமாக விஷயத்தை அறிந்து வைத்திருந்த அழகர், பெரிதாக அதிராதுத் தன் அன்னையின் முகம் பார்த்தான்.

செய்த சிறு பிழைக்காகப் பெரிய பெரிய போராட்டத்தை எதிர்கொண்ட சிறு பெண் அவள்! அழகருக்கு நிகரான துன்பத்தையும், அவமானத்தையும் அனுபவித்தவள்! தன் தவறு புரிந்து அதற்காக வருந்தி, அழகரது அன்னைக்கு நிகராகக் கண்ணீர் சிந்தியவள்! அவளைத் தவிர யார் அவனுக்குப் பொருத்தமாய் இருந்து விட முடியும்? ஆனால்.. இன்னமும் கூடப் பெரியவரின் வீட்டாரின் முன்பு, தரையில் அமரக் கூடத் தயங்கும் தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் இது எப்படி சாத்தியமாகும்?

தடுமாற்றம் நிறைந்த குரலில் பெரியவரை ஏறிட்டப் பெண்மணி,

“சாத்தியப்படாது-ண்டு நான் நினைச்ச விசயங்களையெல்லாம் செயல்படுத்தத் தயங்காதவரு நீங்க! உங்களை நம்பி, நீங்க சொல்ற அத்தனைக்கும் யோசிக்காமத் தலையாட்டிடனும்ங்குறதுதேன் என் விருப்பமும்! ஆனா..” என்றவர் தன்னைச் சுற்றி நின்றக் கூட்டத்தைக் ஒரு நொடி கண்டு விட்டு,

“இது நடைமுறைக்குச் சரிப்பட்டு வருமாய்யா?” என்று வினவ, புன்னகைத்த கிழவர்,

“சரிப்பட்டு வருமா,வராதா-ண்டு ஒரு முறை நடைமுறைபடுத்திப் பரிசோதிச்சுடுவோம்! கவலையை விடு தாயி” என அசால்ட்டான குரலில் கூற சிரிப்புடன் அழகரை நோக்கினர் ஆரனும்,விருமனும்.

அவன் யாரையும்,எதையும் பெரிதாகக் கண்டுகொண்டது போல் தெரியவில்லை! அவனுக்குப் பெரியவரைப் பற்றித் தெரியும்! திருமணம் என்பது சாத்தியப்பட, அவள் பெண்ணாகவும், தான் ஆணாகவும் இருப்பதே போதும் என்று! இது பட்டாளத்துக்காரரின் சித்தாந்தம்!

அது கொடுத்த நிம்மதியில் நின்றவனின் பார்வை முழுதும் புவியரசியின் மீது தான்! பள்ளிக்கூடத்தில் ஒளிந்து,ஒளிந்து அவள் பார்த்த பார்வைக்குப் பதிலளிப்பது போல், அவளையே விடாது பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான்.

அசட்டையாய்க் கிழவர் கூறியதை அடக்கமாய் ஏற்றுக் கொண்ட அழகரின் அன்னையும் தன் ஒப்புதலைக் கூறி விட, நடப்பதனைத்தையும் கலவையான உணர்வுகளுடன் கலங்கிப் போய் பார்த்துக் கொண்டிருந்தப் புவியரசியை நோக்கியக் கிழவர், அவளை முன்னே அழைத்து,

“நீ என்னா தாயி சொல்ற?” எனக் கேட்டார்.

“அ…அவரு என்னா சொல்றாரு-ண்டு நீங்க கேட்கலையே தாத்தா” – என அவள் அழகரை இழுத்ததும், கிழவர் அவன் புறம் திரும்பி,

“எலேய் நீ என்னாடா சொல்ற?” எனக் கேட்டார்.

அப்போதும் அவளிடமிருந்துப் பார்வையைத் திருப்பாமல், “எங்காத்தா சொன்ன மாறி, நீங்க என்னா செஞ்சாலும், அது என் நன்மைக்குத்தேன்-ண்டு நம்புறவன்ய்யா நானு! என் கிட்ட நீங்க கேள்வியெல்லாம் கேட்கத் தேவையில்ல” என்றான்.

“ஓஹோ! அப்டின்னா, இப்ப உறுதி மட்டும் பேசி வைச்சுப்புட்டுக் கல்யாணத்தை ஒரு 3,4 வருசம் தள்ளி வைச்சுக்குவோமா?” எனக் கிழவர் நக்கல் சிரிப்புடன் கேட்டதும்,

“ஐயா….” என அதிர்ந்து அவர் முகம் பார்த்தவன் பின் “உங்க விருப்பம்ங்கய்யா” எனத் தொங்கிப் போன முகத்துடன் முணுமுணுப்பது கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர்,

“இப்ப சொல்லு தாயி! உன் விருப்பம் என்ன?” எனப் புவியரசியிடம் கேட்டார்.

குனிந்தத் தலையுடன், கண்களை இறுக மூடியவள் “ஏற்கனவே சொன்னதுதேன் தாத்தா! எனக்கு… எனக்கு.. விருப்பமில்ல தாத்தா” – எனக் கூறியதும் கூட்டம் சலசலக்க, அழகரின் அன்னையோ அவளைக் கவலையாய் ஏறிட்டார். இந்தப் பெண் எதை மனதுக்குள் வைத்துக் கொண்டு மருகுகிறாளோ என்றெண்ணி!

அவள் கூறிய பதில் கேட்டு ஒரு நொடி அதிர்ந்த அழகர், பின் ஆராயும் நோக்குடன் அவளையே வெறிக்க,

“ஏன் தாயி வேணாண்டு சொல்ற?” எனக் கேட்டார் பெரியவர்.

“ஒரு தடவை நான் அ..அவர் பக்கத்துல நிண்டதுக்கே அம்புட்டுக் கஷ்டத்தை அனுபவிச்சாரு! இதுல வாழ்க்கை முழுக்க நான் அவர் கூட இருந்து, என்னால அவருக்கு எந்தப் பாதிப்பும் வந்தா.. அதைத் தாங்கிக்கிட்டு உசுரு வாழ்ற சக்தி எனக்கில்ல தாத்தா” – என அழுதபடி வேதாந்தம் பேசியவளை முழு எரிச்சலுடன் நோக்கினான் அழகர்.

நெற்றியைத் தேய்த்தபடிக் கோபத்தை அடக்கியவனின் தோளைத் தொட்ட விருமன் அவனை வெளியே அழைத்துச் செல்ல, உள்ளே சுற்றி நின்றிருந்தக் கூட்டம் அவளுக்கு ஏதேதோ சமாதானம் கூறினர்.

எதற்கும் செவி சாய்க்காமல் ஜடமாய் நின்றவள், தன் பார்வையை உணர்ந்தும் கூடத் தன்புறம் திரும்பாதிருப்பது, கடுப்பைக் கிளப்பப் பல்லைக் கடித்த அழகர், விருமனிடம்,

“நான் அந்தப்புள்ள கூடத் தனியா பேசனும்ண்ணே!” எனக் கூறி “இப்பவே” என்று முடித்தான்.

“ரைட்டு வுடு” என்ற விருமன், அகலருவியை அழைத்து விசயத்தைச் சொல்ல அவளும், உள்ளே சென்று,

‘அந்தப் புள்ளைக்கு யோசிக்க நேரம் குடுங்க! தனியா விடுங்க’ – என அனைவரையும் அப்புறப்படுத்தி விட்டு, அவளைக் கொல்லைக்கு அழைத்துச் சென்றாள்.

மாதுள மரத்தினருகே அவளை நிறுத்தி வைத்து விட்டு அகல் ஓடி விட, கரை புரண்டோடியக் கண்ணீரை அணை போட்டுத்தடுக்க முடியாமல், தேம்பியபடி நின்றவள், இருளில் தன்னருகே வந்து நின்ற அழகரைக் கண்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

அவசரமாய் நகரப் பார்த்தவளின் கையைப் பற்றி நிறுத்திய அழகர்,

“இதுதேன் உன் முடிவா?” எனக் கேட்டான்.

“தெரியல! ஆனா, இனி எதுக்கும் நான் தொடக்கமாயிருக்க விரும்பல” – அவன் முகம் பாராது பதிலளித்தவளைக் கண்டுப் பல்லைக் கடித்தவன்,

“நீ என் வாழ்க்கைல வராம போயிருந்தா, இது எதுவுமே எனக்குச் சாத்தியமாகியிருக்காது தெரியுமா?” என்று கோபமாய்க் கூறியதும்,

“ஆமா! உன் படிப்பு பறி போயிருக்காது! ஊர் முன்னாடி உங்கம்மா அவமானப்பட்டிருக்க மாட்டாங்க! நீ ஊரை விட்டு ஓட வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது” – என்று மரத்த குரலில் கூற,

“கூடவே, ஊர்க்காரய்ங்க முன்னாடி, நான் பட்டாளத்தான்-ண்டு மார் தட்டிக்கிட்டுக் கம்பீரமா நிற்குற நிலைமை உருவாகியிருக்காது! சுத்தியிருக்கிறவிங்க இன்னைக்கு எங்காத்தாளுக்கு குடுக்குற மரியாதையும்,கௌரவமும் எப்பவும் கிடைச்சிருக்காது!” – என்று ஆதங்கத்துடன் கூறியவன், அவள் மௌனமாய் நிற்பது கண்டு,

“நான் தாண்டி வந்த எல்லாக் கஷ்டத்துக்கும் நீதேன் காரணம்ங்குறியே! இப்ப நான் முழுதிருப்தியோட அனுபவிச்சுக்கிட்டிருக்கிற மொத்த சந்தோசத்துக்கும் கூட நீதேன் காரணம்ங்குறதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற?, கஷ்டத்தை ஒன்னாதேன அனுபவிச்சோம்?, அதே மாறி, சந்தோசத்தைப் பகிர்ந்துக்கவும் நீ எனக்கு வாய்ப்புக் குடுக்கனும்தேன? உனக்கும்,எனக்கும் இடைல பெரிய இடைவெளி இருக்கிறதா நினைச்சு நான் ஒதுங்கிப் போனப்பல்லாம், விலகாம, எங்கூட நிண்டவ, இப்ப, இடைவெளியாவது,மசுராவது-ண்டு நான் நெருங்கி வந்தா விலகிப் போற?” என்று சீறினான்.

“நீ என்னைய ஒதுக்குன-ண்டா, இம்புட்டுப் போராடி நான் உச்சில ஏறி நிண்டதுக்கு அர்த்தமே இல்லாம போயிரும்! எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாத மாறிதேன் உணருவேன்! இனி இந்த ஊர்ப்பக்கம் நிம்மதியா காலடி எடுத்து வைக்கக் கூடத் தோணாது! நீ இல்ல-ண்டா, எனக்கு எதுவுமே இல்ல” - உணர்ச்சி மிகுந்த குரலில் ஆவேசமாய்ப் பேசுபவனைக் கண்டு, மனம் கலங்கிக் கண்ணீர் வர, துடித்த மூக்கும், ஏறி,இறங்கும் நெஞ்சுமாய் அழுகையை அடக்கப் போராடியபடி தலை குனிந்து நின்றவளின் கன்னங்களைத் தன்னிருகைகளால் பற்றி நிமிர்த்தித் தன் முகம் காணச் செய்தவன்,

“பட்டாளத்துக்காரரு என்னைய நம்பி ஏகப்பட்டப் பொறுப்பை ஒப்படைச்சிருக்காரு! அது எல்லாமே, நீ எங்கூட இருந்தாத்தேன் சாத்தியப்படும். தயவு செஞ்சு என் கனவைக் கலைச்சுடாத” – எனக் கூறி, நின்று போனக் கண்ணீருடன் ஏக்கமாய்த் தன் முகம் வருடுபவளின் பார்வையில் கனிந்து,

“உன் கையைப் புடிச்சதுக்கே, உங்கக்கா என்னைய முறைச்சுப் பார்த்துச்சு. இதுக்கு என்னா சொல்லப் போகுதோ தெரியல” எனக் கூறி, என்னவெனப் புருவம் சுருக்கியவளை நோக்கிக் குனிந்து, அவள் மூக்கு நுனியில் முத்தமிட்டு விருட்டெனத் திரும்பி நடந்தான் அவன்.

அதன் பின்பு அகலருவியின் “பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கிருச்சேய்ய்” என்ற குரலில் கோலாகலமாய்த் தொடங்கியது மூவரது திருமண வைபவமும்.

தன் மகனுக்குப் பிறந்த இரு பெண்களுமே, தனக்குச் சற்றும் ஒவ்வாத ஆட்களோடு ஜோடி சேர்கிறார்கள் என்பது சோலையாத்தாளுக்குப் புகைச்சலையும்,எரிச்சலையும் கொடுத்தாலும், அதை வாய் விட்டுப் புலம்ப வழியின்றி, முணுமுணுப்புடனே திரிய,

“விடு கெழவி, உனக்குப் பிடிச்சா மாறி சிலம்பனுக்கு, வள்ளி கொழுந்தியா பாண்டீஸ்வரியைக் கட்டி வைச்சுத் திருப்திபட்டுக்க!” – எனச் சமாதானப்படுத்தி வைத்தாள் அகலருவி.

சாமியாவது,ஒன்னாவது எனச் சவடால் பேசும் பட்டாளத்துக்காரர், ஜாதகத்தைக் கையில் தூக்கி, பஞ்சாங்கத்தில் பணத்தை வீணடித்து, ஐயரை அழைத்து மந்திரம் ஓதி, அர்த்தமற்ற சடங்குகள் செய்து, ஊரைக் கூட்டிக் காசு செலவழித்துத் திருமணம் செய்வாரா என்ன?

இறக்கினார்! எப்போதும் தன் கொள்கைகளுக்கு உறுதுணையாய் நிற்கும் கலாமணியம்மாளை!

ள்ளந்திரியில் அன்று நடந்த பட்டாளத்துக்காரரின் இல்லத் திருமணம், ஊரிலுள்ளக் கிழவிகளனைவரும் ‘இதென்னாடி கொடும?’ என்று மோவாயில் கை வைத்துப் புறணி பேசுமளவிற்குப் படு எளிமையாக நடைபெற்றது.

கட்டுத்தரையருகேக் கூடாரம் அமைத்து, மேடை அலங்காரமோ, மேள,தாள அலப்பரையோ ஏதுமின்றி, சடங்கையும்,சம்பிரதாயத்தையும் பின்பற்றாது, மணமக்களான மூன்று ஜோடிகளின் கலகலப்பை மட்டுமேப் பிரதானப்படுத்தி ஆடம்பரமற்ற முறையில் நடத்தப்பட்டது.

மனதிற்கினியவனே துணையாகக் கிடைத்து விட்டத் திருப்தியில், தன் புன்னகையை மட்டுமே அணிகலனாகச் சூட்டி, தன் மகிழ்ச்சியை மட்டுமே அலங்காரமாக்கி, எளிமையான உடையில் மணப்பெண்கள் ஆன மூவரும், பேரழகிகளாய் நிற்க, அவர்களைப் பிரதிபலித்தபடி மணமகன்களாய் மூன்று பேரழகன்மார்களைப் பெற்றிருந்தது அக்கூடாரம்.

தாலி கட்டுதல் என்கிற சடங்கு இத்திருமணத்தில் நடக்கப் போவதில்லை என்பதை அறிந்து ஆரம்பத்தில் வீட்டார் முணுமுணுத்த போது,

“அப்பிடி சம்பிரதாயத்தைக் கடைபிடிச்சுத்தேன் ஆகனும்ண்டா, எனக்கு அவரு தாலி கட்டுற மாறி, அவருக்கொரு தாலி நான் கட்டுவேன்! சம்மதம்ண்டா சொல்லுங்க, அப்பிடியே செஞ்சுப்புடலாம்” என்று அகலருவி ஒரு புறம் எகிறிக் கொண்டும், சுஜாதாவின் தந்தை ஒரு புறம் அவளை ஆதரித்துக் கொண்டும் வர, வேறு வழியின்றிப் பெரியவரின் போக்கிலேயே சென்று, இன்று மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் தங்களது பிள்ளைகளைக் கண்டு, அதைப் பிரதிபலித்தபடி நின்றனர் வீட்டினர்.

மூன்று ஜோடிகளையும் எதிரெதிரே நிற்க வைத்துத் தன் கையிலிருந்த உறுதிமொழிப் பத்திரத்தை வாசித்தார் கலாமணியம்மாள்.

‘எனக்கு நீ அடிமை, உனக்கு நான் அடிமை என்பது, உங்களிருவருக்கிடையே இருக்குறக் காதலுக்கு மட்டும் தான் பொருந்தும்ங்குறதைக் கடைசி வரை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்’

‘வீட்டு வேலை பார்க்குறதெல்லாம் பெண்ணுடைய கடமை என்கிற எண்ணமில்லாம, ‘நீ பாத்திரம் தேய்ச்சா, நான் கக்கூஸைக் கழுவுறேன்! நீ இட்லி சுட்டா, நான் சட்னி அரைக்கிறேன்’-என்று சமத்துவத்தை சமையலறையிலிருந்துத் தொடங்கனும். அதே நேரம், வெளியே சென்று வேலை பார்த்து வருவது ஆணுக்கானக் கடமையென்கிற மனப்பாங்குடனிருக்கும் பெண்களைக் களி திங்க வைக்கும் உரிமை ஆணுக்கு நிச்சயம் உண்டென்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்’

‘பெண்கள் பிறவியெடுத்ததே பிள்ளை பெறத்தான் எனச் சொல்லி, திருமணமான அடுத்த மாதத்திலிருந்து குழந்தை குறித்துப் பெண்ணிடம் மட்டுமே நச்சரிக்கும் உலகை, உரலில் போட்டு இடித்து விட்டு, தோணும் போது பிள்ளை பெற்றுக் கொள்ளவோ, பெறாமலே விட்டு விடவோ சம்பந்தப்பட்டத் தம்பதிகளுக்கு முழு உரிமையும் உண்டென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! இதன் மூலம் மலட்டுத்தன்மையை விளம்பரப்படுத்திக் கல்லா கட்டும் கூட்டத்திலிருந்துத் தப்பிக்கலாம் என்பதுக் கூடுதல் தகவல்’

‘ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவென்பதே புரிதலிலும், விட்டுக்கொடுத்தலிலும், அன்பிலும், அரவணைப்பிலும் தான் அடங்கியிருக்கிறது. இந்த நான்கில் ஒன்றை அளிக்கக் கூடத் துணையாக அமைந்த ஆணோ/பெண்ணோ தயங்கினால், அந்த பந்தத்தை முறித்துக் கொள்வதற்கான உரிமையும், வேறு துணை தேடிக் கொண்டு வாழ்வைத் தொடர்வதற்கான உரிமையும் இருவருக்கும் உண்டென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்’

நக்கலும்,கிண்டலுமாய்க் கலாமணியம்மாள் வாசித்த உறுதிமொழியில் கலகலத்து, அதன் பின்னேயிருந்த நிதர்சனத்திற்குச் சம்மதித்து, திருமணப் பதிவுச் சான்றிதழில் கையெழுத்திட்டுப் பத்தே நிமிடத்தில் தங்களது திருமணத்தை முடித்தனர் மூன்று ஜோடிகளும்.

வேடிக்கை பார்க்கவெனக் கட்டுத்தரையருகே கூடியக் கூட்டம் கேட்டக் கேள்விகளுக்கு சளைக்காது பதில் கூறியக் கிழவரைச் சிரிப்புடன் நோக்கியபடி அருகே வந்தார் கலாமணியம்மாள்.

“சாதிச்சுப்புட்டீகளே பட்டாளத்துக்காரரே” – என்று கேலி செய்தவரிடம், புன்னகைத்தவர்,

“எல்லாம் உங்க மார்க்ஸூ குடுத்த மனதைரியம்தேன்” என்று கூற,

“மார்க்ஸ்-ஆ?” என்ற கலாமணியம்மாளிடம் தூரத்தில்.. கட்டுத்தரையில் நின்றிருந்த, அவர் வளர்க்கச் சொல்லிக் கொடுத்தக் காளையைக் கை காட்டி,

“மார்க்ஸூ! கார்ல் மார்க்ஸூ” என்று மீசையைத் தடவியப் பெரியவரைக் கண்டு வாயைப் பிளந்தார் கலாமணியம்மாள்.

திருமணம் முடிந்த மறுநாளே, அழகரது அன்னைக்கென மாங்குளத்தில் கிழவர் விலைபேசி வைத்திருந்த வீட்டிற்குக் குடியேறினர் அழகர் குடும்பத்தினர். திருமணம் பேசி முடித்த சில நாட்களில் அந்த வீட்டிற்கான ரெஜிஸ்ட்ரேஷன் நடைபெற்று முடிந்திருந்தது. அழகருடைய சம்பாத்தியம் அழகரின் பெயரில் தான் இருக்க வேண்டுமென அவன் அன்னையும், உனக்கென நிதி சார்ந்த பிடிப்பொன்றை உருவாக்கித் தர வேண்டியதுத் தன் கடமையென்று அழகரும் விடாது சண்டையிட்டுக் கடைசியில், அழகரது அன்னையின் பெயரில் வீட்டை முடித்திருந்தனர்.

மருமகள் வந்த பிறகு தான் குடியேற வேண்டுமென்று அழகரின் அன்னை முடிவு செய்திருந்ததால் திருமணம் முடிந்த மறுநாள் அனைவரும் புது வீட்டிற்கு வருகை தந்தனர்.

அடுத்த இரண்டு,மூன்று நாட்களில் அந்த வீட்டிற்கும், அழகரது அன்னைக்கும்,சுற்றத்தாருக்கும் பழக்கப்பட்டிருந்தப் புவியரசி, அக்கம் பக்கத்துக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்குமளவிற்கு முன்னேறியிருந்தாள்.

ன்று மாலை வெளிவேலையை முடித்து விட்டுப் பட்டாளத்துக்காரருடன் வீடு திரும்பியிருந்த அழகர், வீட்டு வாசலை அடுத்திருந்தக் காலியிடத்தில் கையில் குச்சியுடன் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தப் புவியரசியைக் கண்டு, வீட்டிற்குள் செல்லாமல், அங்கிருந்த மரத்தடியில் சாய்ந்து நின்று விட்டான்.

யாரோ தன்னை உற்றுப் பார்க்கும் உணர்வில் புத்தகத்திலிருந்துப் பார்வையை மரத்தடி நோக்கிச் செலுத்தியப் புவியரசியும், அங்கு நிற்பவனைக் கண்டு ஒரு நொடி கண்ணைச் சுருக்கி முறைத்துப் பின் குழந்தைகளைப் படிக்குமாறு கூறி விட்டு எழுந்து வந்தாள்.

வழக்கமாய் அணியும் சாதாரணச் சுரிதாருடன், அவன் அன்னையளித்த மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டு, முகம் முழுக்கப் பூத்துக் குலுங்கியப் புன்னகையுடன், அவன் விழி பார்த்தபடி அருகே வந்து நின்றவளை இமைக்காது நோக்கினான் அழகர்.

புருவம் உயர்த்தி என்னவெனக் கேட்டவளின் பாவனையில் மயங்கி,

“பொருந்திட்டீக போல டீச்சரம்மா?” – எனக் கேட்டான்.

“ஆமா, இந்த வீட்டோட! என் மாமனார்,மாமியாரோட, என் கொழுந்தனோட! அப்புறம் இந்தப் புள்ளைகளோட!”

“நான் இந்த வரிசைல இல்லையா?”

“அ….து… தெரியல”

“அடிக்கழுத”

“ஆமா! நிண்டு பேசக் கூட நேரமில்லாம ஓட்றவகளோட எங்குட்டுப் பொருந்திப் போறது?”

“அது, பெரியவர் பண்ணுற சதி! பேசிப் பழகவெல்லாம் நமக்கு வயசிருக்காம்! எதுக்கும் அவசரப்படக் கூடாதுண்டு அறிவுரை குடுத்தேக் கொல்றாரு” – சலித்தக் குரலில் கூறியவனின் பேச்சைக் கேட்டு உதட்டுக்குள் புன்னகைத்துப் பார்வையைத் திருப்பியவளின் முகம் பிரதிபலித்த வெட்கத்தைப் பார்த்து நின்றவன்,

“காலேஜ் எப்பப் போகனும்?” எனக் கேட்டான்.

முறைத்தபடி அவன் புறம் திரும்பியவள், “நீங்க லீவு முடிஞ்சு போறவரைக்கும், எனக்குக் காலேஜ் லீவுதேன்” எனக் கூறவும் சிரித்தவன், முறைத்தவளின் மூக்கைப் பிடித்துக் கிள்ளி, அவள் கன்னத்தை உரசியக் கூந்தலைக் காதோரம் ஒதுக்கி விட, அவன் செய்கையில் சில்லிட்டுப் போனக் கன்னங்கள் முழுதும் செம்மை பரவ நின்றவளிடம், மெல்லிய குரலில் அவன்,

“இது கனவா, நனவா-ண்டே தெரியல” என்றதும், மீண்டும் நிமிர்ந்து முறைத்து,

“கல்யாணமான இந்த ஒரு வாரத்துல, என்னைப் பார்க்குறப்பல்லாம் நீங்க சொல்ற ஒரே வாக்கியம் இதுதேன்” – என்று நொடித்தவள்,

“ஆனா, இந்த முறை உம்ம சந்தேகத்தை ஒரேடியாத் தீர்த்துடலாம்ண்டு இருக்கேன்” எனக் கூறி அவன் இடுப்பில் நறுக்கெனக் கிள்ளி வைக்க,

ஆஆஆ-வென அலறியவன், அவள் கையைப் பற்றித் தன்னோடு இழுத்ததில், அவன் நெஞ்சில் மோதி நின்றாள் அவள்.

தனக்கு வெகுஅருகே நின்றவளின் முகத்தை மையல் குறையாது நோக்கியவனின் பார்வையில் திணறி, சட்டென அவன் நெஞ்சில் புதைந்து முகத்தை மறைத்துக் கொண்டவளின் செய்கையில் சிலிர்த்து நெஞ்சோடு அவளை அணைத்துக் கொண்டான் அவன்.

கண்ட துயரங்களனைத்தும் அவன் ஸ்பரிசம் வென்று வீழ்த்துவதை உணர்ந்தபடி, நிம்மதியாய் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் “டீச்ச்ச்ச்ச்சர்” என்ற அழைப்பில் திடுக்கிட்டு அவனிடமிருந்து விலகி,

“நான் போறேன்” என அவசரமாய்க் கூறி ஓடி விட்டாள்.

சில நொடிகள் அங்கேயே நின்று அவள் குழந்தைகளிடம் திக்கித் திணறுவதை வேடிக்கை பார்த்துப் பின், அவள் திட்டித் துரத்தியதும் வீடு நோக்கி நடந்தவன்,

அங்குக் கையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த சிறுமியொருத்தித் தன்னருகே அமர்ந்திருந்தச் சிறுவனுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தப் பாட்டைக் கேட்டு அப்படியே நின்றான்.

“சாதிகள் இல்லையடி பாப்பா,

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

நீதி, உயர்ந்தமதி கல்வி – அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்”

அந்தச் சிறுமி சொல்லச் சொல்லப் பாடிய சிறுவனின் அருகே சென்று மண்டியிட்டமர்ந்து அவர்களதுத் தலை கோதிய அழகருக்குத் தன் பொறுப்பு, எங்கு தொடங்குகிறதெனப் புரிந்தது!

பிள்ளைகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவனுக்கு, தூரத்தில் எவரிடமோ பெரியவர் “இன்னும் என்னாடா சாதி ****-ண்டுத் திரியுறீக!” என சத்தமாகப் பஞ்சாயத்துப் பேசுவது கேட்டது.

வாழ்வு முடியும் வரைப் பெரியவர் ஓயப் போவதில்லை!

பெரியவரின் கருத்தியலை நிலைநாட்டுபவரும் ஓயப் போவதில்லை!

இணையோடு வாழக் கூடிய இயல்பு கொண்ட இருவாய்ச்சிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தின் போது, உயரமான மரப்பொந்துக்குள்ளக் கூடு கட்டுமாம்! பெண் பறவையை பொந்துக்குள்ள உட்கார வைச்சு, ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடி, பெண் பறவைக்கு உணவு கொடுக்க மட்டும் ஒரு சிறிய ஓட்டை போடுமாம்! பெண் பறவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க வரைக்கும் இரை தேடப் போகாதாம்! ஆண்பறவை தான் அதுக்குத் தேவையான உணவைக் கொண்டு வந்து அந்தத் துவாரம் வழியா கொடுக்குமாம்! குஞ்சு பொரிஞ்சுக் கூட்டை விட்டுப் பெண் பறவை வெளியே வந்ததும், ஆண்,பெண் பறவைகள் ரெண்டு பேரும் சேர்ந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுமாம்!

‘Complementing each other’-ன்னு சொல்லுவாங்களே, அதுக்கு நல்ல எடுத்துக்காட்டில்லையா இந்தப் பறவைகள்?, துணையைச் சரியாக நடத்துவதில், நம்ம கதைல வர்ற மூன்று ஆண்களுமே இருவாய்ச்சியைப் போன்றவர்கள் தான்!

                                                            *************************** முற்றும்***********************

விளக்கவுரை

* சமீபத்துல சில,பல கிராமங்களுக்குச் செல்ல நேர்ந்தது. (Thanks to corona) ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகமா வசிக்குற கிராமங்கள் அது. அங்க இருக்குறவங்களுக்கு வாயைத் திறந்தாத் தன் சாதிப் பெருமையைப் பத்தி பேசுறதைத் தவிர வேற எதுவுமே தெரியாது போல. இத்தனைக்கும் பூராப் பயலும் படிச்சவிங்க!

* அதுவரைக்கும், பத்து வருசத்துக்கும் மேலான IT job! வெளி மாநில வாழ்க்கை, intercaste marriage-ன்னு, சாதியெல்லாம் இப்ப யாருப்பா பெருசா நினைக்குறா-ங்குற மைண்ட் செட்ல இருந்த ஆளு நான்!

* ஒரு ரெண்டு மணி நேரம் odd man out மாதிரி அந்த சூழ்நிலைக்குக் கொஞ்சமும் பொருந்தாம உட்கார்ந்திருந்த எனக்கு, அவங்க பேசுன குலப்பெருமையையும்,இனப்பற்றையும் கதறக் கதற கேட்டாக வேண்டிய கட்டாயம்! அந்த ரெண்டு மணி நேரமும் ‘அடப்பாவிங்களா’ அப்டிங்குற நினைப்பு தான்! அது கொடுத்த எரிச்சல்ல உருவான கதை தான் இது.

* கதைல அங்கங்க லாஜிக்கல் மிஸ்டேக் இருக்கலாம்! உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டுல ஜெயிக்கிற காளையை வேளாண்மைக்குப் பயன்படுத்த மாட்டாங்க (not 100% sure)! ஆனா, கருப்பனுக்காக எழுதுன ஒப்பாரில நான் ரெண்டையுமே எழுதியிருப்பேன்! அப்புறம், கதை நடக்குற காலகட்டத்துல இருந்த army selection process என்னன்னு தெரியல! So, இப்ப இருக்குற Process-அ தான் எழுதியிருந்தேன்!

* நெக்ஸ்ட், கதைல வர்ற ஏகப்பட்டக் கெட்ட வார்த்தை!!!! மதுரைக்காரய்ங்க-ண்டு முடிவானதும், அது அவசியமாப்பட்டது. இயல்பா இருக்கனும்ன்னு எழுதுனது! அதனால, ‘பொண்ணு இப்பிடி எழுதியிருக்கே ச்ச-ங்குற முகச்சுழிப்பும், பொண்ணா இப்பிடி எழுதியிருக்குங்குற ஆச்சரியமும், எனக்குக் கிடைத்த அவமானமாகவே கருதப்படும்.

* அகலருவியோட நிமிர்வு so called பெண்ணியத்துக்குக் கீழ் பேசப்பட்டால், அதுக்கு சங்கம் பொறுப்பாகாது.

* ஒரு தரமான தாத்தா கேரக்டரை உருவாக்கனும்ங்குறது என்னோட ரொம்ப நாள் கனவு! ஏன்னா, நம்ம கடந்து வந்தக் கிழவர்கள் அப்படி!

- அழகர் தங்கம் மாதிரியானவன்-ன்னு தாத்தா சொல்ற இடம், ‘நெருப்பில் குளித்தாலும் மீண்டு வரக் கூடியது பனங்கொட்டை! பனை மரத்தைக் குலச் சின்னமாகக் கொண்டவன் வேள்பாரி’ -ன்னு கபிலர், வேள்பாரியைப் பத்திச் சொன்ன impression-ல எழுதினது.

- அடுத்துக் கட்டைவிரல் விஷயம், Obviously கலைஞர் சொன்னது.

* நான் பெரிய அறிவாளி கிடையாது. பந்து கோட்டைத் தொட்டா '4’-ங்குற அளவுக்குத் தான் என் புத்திசாலித்தனமெல்லாம். அப்படிப்பட்ட நான், என் அறிவுக்கு எட்டுன விசயங்களைக் கோர்த்துக் கதையா கொடுத்திருக்கேன்! இது ஒரு immatured attempt என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.

-நிவேதா.ஜெ.