இருவாய்ச்சி-2

மறுநாள் அலுவலகத்திலிருந்த விருமனைக் கிழவர் டெலிஃபோனில் அழைத்து, அவனது போபால் பயணத்தைப் பற்றி விசாரித்தார்.

“ரெண்டு பேரும் ஒரே ஆபிஸ்லதேன டா வேலை பார்க்குறீங்க?, பிறகு என்னத்துக்கு உன்னைய மட்டும் வெளியூருக்கு அனுப்புறாய்ங்க?”

“அதை வேலை கொடுத்தவிங்கட்டதேன் தாத்தா கேட்கனும்”

“சரி, என்னைக்குப் பொறப்படனும்?”

“நாளைக்கழிச்சு தாத்தா”

“விருமா..”

“ம்ம்”

“என்னாடா குரலே சரியில்ல”

“…………”

“விருமா….”

“லைன்லதேன் இருக்கேன் தாத்தா”

“என்னா ராசா?” – கிழவர் பேரனைக் கொஞ்சத் துவங்கியதும், அமர்ந்திருந்த இருக்கையில் ஆடியபடித் தன் இறுக்கத்தைக் குறைக்க நினைத்தவன், பின், அடைத்தத் தொண்டையுடன்,

“உம் பேத்திக்கு அவனைத்தேன் பிடிக்குமாம்ல?” – மொட்டையாய்க் கூறியவனைக் கேட்டுக் குழம்பிய பெரியவர்,

“எவனை?” – என்று வினவ,

“எனக்குத் துணையாப் பொறந்தவனை” – என்று அவன் கூறியதும், ஒரு நொடி அமைதியான கிழவர் பின்,

“விடு ராசா!, உம் மாமன் மொகரையைக் கொண்டு பொறந்தவ அவ! ஊளமூக்குக்காரி! கரு,கருண்டு அண்டங்காக்கா மாறி இருக்கிறவ உனக்கு எப்பிடி பொருத்தமாவா?, நல்லா செவத்த,அழகான புள்ளையாப் பார்த்து நான் உனக்குக் கட்டி வைக்கிறேஞ்சாமி” – என்று அவன் மனநிலை புரிந்து, சமாதானமாய்க் கூற,

“கள்ளந்திரில எந்தச் சிறுக்கி செவத்த நிறத்துல இருக்குறா?” – என்றவனின் முணுமுணுப்பில்,

“அப்ப வடநாட்டுல இருந்து ஒருத்தியை இழுத்துட்டு வா! உன் ஆத்தா,அப்பனை சரிக்கட்டி நான் உனக்குக் கட்டி வைக்கிறேன்” என்றார்.

“அப்ப, என்னைய வேணாம்ண்டு ஒதுக்குன உம்பேத்தியை நீ ஒரு வார்த்தை கேட்கப் போறதில்ல?”

“எலேய்! எம்பேத்தி என்னாடா தப்பு பண்ணுனா?, உங்கையைப் புடிச்சுக் கூட சுத்திட்டு அத்து விட்டாளா?”

“என்ன இருந்தாலும் உனக்கு என்னைய விட, அவ மேலதேன் பாசம் அதிகம்”

“பல்லை உடைச்சுப்புடுவேன் சொல்லிட்டேன்! பெரியவக யாரும் துணைக்கு இல்லாம, பொட்டப்புள்ளையக் கூட வைச்சுக்கிட்டு அலப்பரையைக் கொடுக்குறீங்களா டா நீங்க?, புள்ளைய என்னாடா பண்ணி வைச்சிருக்கீங்க?” – கிழவர் எகிறியதும், தலையில் அடித்துக் கொண்ட விருமன், உர்ரென்றாகி விட்ட முகத்துடன்,

“யோவ் பெருசு! எங்களைப் பார்த்தா எப்பிடித் தெரியுது உனக்கு?” – எனத் திட்டினான்.

“ஒன்னு மண்ணா வளர்ந்துப்புட்டு, பொட்டச்சிக்காக அடிச்சுக்கிட்டுக் கிடக்குறவிங்களைப் பார்த்தா எப்பிட்றா தெரியனும்?, களவாணிப்பயலுகளா!” – கிழவர் தொடர்ந்து எகிற,

“ஆரனுக்கு எதுவும் தெரியாது தாத்தா” என சலித்தக் குரலில் கூறியவன்,

“அவனுக்கும் எனக்கும் பிரச்சனை வரனும்ண்டா சூரியன் மேற்குலதேன் உதிக்கனும்” என,

மறுபுறம் புன்னகைத்துக் கொண்டப் பெரியவர், “ஏன் டா, படிச்சு முன்னேற நினைச்ச பய ஒருத்தன், தாண்டி வந்தக் கஷ்டத்தையெல்லாம் உடனிருந்து பார்த்தும் கூட, சில்றத்தனமான விசயத்துக்கெல்லாம் மனசு உடைஞ்சு கிடக்குறதா டா?, ஏன் டா பட்டணத்துல பகட்டா வாழ்ந்தா, உலகத்துல பட்டினி கிடந்து வாடுறவனைப் பத்தின நினைப்பெல்லாம் பின்னுக்குப் போயிருமா?” – எனக் கேட்டதும், உதட்டை வளைத்தவன்,

“இம்புட்டுப் பேசுற நீயி, கள்ளைக் குடிச்சா, இந்த வயசுலயும் உன் முன்னாள் காதலியைப் பத்திதேன் புலம்புற”- எனக் கூற

“வாயை மூட்றா போக்கேத்தவனே!” எனத் திட்டியப் பெருசு, “நீங்க டெல்லில இருந்து கிழிச்ச வரை போதும் டா பயலுகளா!, திருச்சிக்கு ட்ரான்ஸ்ஃபர் எழுதிப் போட்டுப்புட்டு ஊரு வந்து சேருங்க சொல்லிட்டேன்” எனக் கூறிப் பட்டென ஃபோனை வைத்து விட, பெருமூச்சுடன் ரிசீவரைத் தாங்கியில் இட்டான் விருமன்.

ன்று மாலை விரைவாகவே வீடு திரும்பியிருந்தவன், ‘புதன் கிழமை’ எனக் காட்டிய நாட்காட்டியைக் கண்டு விட்டு யோசனையுடன், மொட்டை மாடிக்குப் படியேறினான்.

கைப்பிடிச் சுவர் வழியே தெருவைப் பார்த்தபடி நின்றிருந்தவன், சற்று நேரத்தில் சுஜாதா வரும் அரவம் உணர்ந்தும் திரும்பாமல், நேர்வெறித்தபடியே நின்றிருந்தான்.

அன்றைய வாக்குவாதத்தின் போது திட்டி விட்டுச் சென்றவனை எண்ணிக் கலங்கிப் போயிருந்தவள், கடந்த நாட்களில் அவன் காட்டும் மாற்றம் குறித்து அகலருவியின் வழியாகக் கேள்வியுற்றிருந்தாள்.

இந்த மூன்று வருடத்தில் ஒரு முறை கூட அகலருவியின் வீட்டிற்குச் சென்றதில்லை அவள். அவனைக் கண்டு உரையாடும் மார்க்கம் அறியாமல், கவலையுடனே திரிந்தவளுக்கு இன்று அவனை மொட்டைமாடியில் கண்டது மகிழ்ச்சியைக் கொடுக்க, விடாது அவனைப் பார்வையால் தொடர்ந்தபடிக் கல் பெஞ்சில் அமர்ந்தாள்.

அவள் தன்னையே நோக்குவதை உணர்ந்தும், அமைதியாய் நின்றவனைக் கண்டு அவளும் மௌனமாய் அமர்ந்திருக்க, ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போனவன், வெடுக்கென அவள் புறம் திரும்பி,

“என்னத்த அப்பிடி உத்து,உத்துப் பார்க்குற?, மூஞ்சில தாடி வளர்ந்துருக்கா-ண்டா?” எனக் கேட்டதும்,

பளிச்செனப் புன்னகைத்தவள்,

“இல்ல, உன் முகத்துல எப்பவும் தாடியிருக்கும்ன்னு எனக்குத் தெரியும்” – என்று கூற, முறைப்பாய் அவளை நோக்கியவன்,

“அதான, உனக்குத்தேன் என்னைப் பத்தி ரொம்ப நல்லாத் தெரியுமே?” என நக்கலாய் வினவ, அசராமல் ஆம் எனத் தலையாட்டியவள்,

“அதனால தான் நீ வருத்தப்படக் கூடாதுன்னு நினைச்சேன்” என்றாள்.

டாண்,டாண் எனப் பதில் பேசுபவளைக் கண்டு எரிச்சலாய் வரப் பல்லைக் கடித்தவன்,

“ஆமாமா, என்னை வருத்தப்படுத்திடக் கூடாதுங்குற எண்ணம் இருந்ததாலதேன், மூளையில்லாதவன், முட்டாப்பய-ண்டு இஷ்டத்துக்கு எனக்குப் பட்டம் கொடுத்த” எனக் கூற,

முகம் சுருங்கியவள், “அன்னைக்கு ஹார்ஷா பேசுனது தப்பு தான் விருமன். எனக்கு உன் கிட்ட வேற எப்பிடி சொல்லிப் புரிய வைக்குறதுன்னு தெரியல. இதை வளர விட்டா, நீங்க 3 பேருமே பாதிக்கப்படுவீங்கன்னு தோணுச்சு” என்றாள்.

அமைதியாய் அவள் முகம் பாராது நின்றவனிடம்,

“அன்னைக்கு நான் அகலருவிக்காக மட்டும் பேசல விருமன்” என்றவளின் முகத்தைக் குழப்பமாய் ஏறிட்டவனைக் கண்டு விழி தாழ்த்தி எச்சில் விழுங்கியவள், “உனக்காகவும் தான்” என்றாள்.

“ஏன், உன் தோழியோட சந்தோசத்துக்கு நான் தடையா இருந்துடக் கூடாதுண்டா?” – ‘உனக்கு என் மேல அம்புட்டு மட்டமான எண்ணமா?’ என்ற உள்ளர்த்ததோடு வெறுப்பாய் வினவியவனின் விழி மொழி புரியாது,

“என் மேல இப்பிடிக் கோபப்பட்றதால, உன் ஃப்ரஸ்ட்ரேஷன் குறையுதுன்னா, எனக்கு சந்தோசம் தான் விருமன்” என்றாள்.

“எனக்கு என்ன ஃப்ரஸ்ட்ரேஷன்” எனக் கேட்டுத் தோளைக் குலுக்கியவன் “உன் மேல கோபத்தைக் காட்ட எனக்கு என்ன உரிமையிருக்கு” என்றான்.

குன்றிப் போன விழிகளோடு, அவனையேக் கவலையாய் ஏறிட்டவளின் வாடிய முகத்தைக் காணப் பிடிக்காமல்,

“நான் போபால் போறேன்” என்றான்.

சுருங்கிச் சிறுத்துப் போன முகத்துடன் மெல்லிய குரலில்“தெரியும். உனக்கான உறவுகளைத் தக்க வைச்சுக்க நீ விலகி நிற்க நினைக்கிறது எனக்குப் புரியுது” என்றவளைக் கண்டுப் புருவம் உயர்த்தியவன்,

“ஏன் உன் முகம் அப்பிடிப் போகுது?, நான் போயிட்டா, என்னால அவங்க ரெண்டு பேருக்கும் எந்தக் கஷ்டமும் வராதுண்டு நினைச்சு நீ சந்தோசம்ல படனும்?” எனக் கூறியதும், உதடு இறுகத் தரையை வெறித்தவள்,

“அன்னைக்கு நான் அவசரப்பட்டு வார்த்தையை விட்டது தப்பு தான் விருமன். ஐம் சாரி. சாரி. ஓகே?” என்றவளின் முகம் கோபத்திலும்,ஆதங்கத்திலும் சிவப்பது கண்டுப் பெருமூச்சை வெளியிட்டவன், தன்னை நிலைப்படுத்தி அவள் புறம் திரும்பி நின்று,

“நியாயமா பார்த்தா, நான் உங்களுக்கு நன்றிதேன் சொல்லனும். நீங்க விஷயத்தை வெளிப்படுத்தியிருக்கலேன்னா, இது பெரிய பிரச்சனையா முடிஞ்சிருக்க வாய்ப்பு அதிகம். தேவையில்லாம என்னால அவங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட்டிருப்பாங்க. 3 பேரோட வாழ்க்கையும் கேள்விக்குறியாயிருக்கும். நீங்க செஞ்சது சரிதேன்.” என்றவன் இடைவெளி விட்டு,

“சில வருஷப் பழக்கந்தேன்னாலும், எதைப் பத்தியும் யோசிக்காம, முக்கியமா என் அயித்த மக கவனத்துக்கு எடுத்துட்டுப் போகாம இதை என்னோட முடிச்சதுக்கு நன்றி! நீங்க நினைச்சிருந்தா, என்னோட எண்ணங்களைப் பத்தி அவக்கிட்டயே சொல்லியிருக்கலாம். ஆனா நீங்க அதைப் பண்ணல. அதுக்கே நான் நன்றி சொல்லனும்.” எனக் கூறிப் பின்,

“ஏதோ கோபத்துல, அதிகமா உரிமை எடுத்துக்கிட்டு, உங்களைக் கஷ்டப்படுத்துற மாதிரி நிறைய பேசிட்டேன்! என்னை.. மன்னிச்சிடுங்க” என்றான்.

கருமேகம் சூழ மங்கிக் கிடந்த அந்த மாலை நேரத்தில், குளிர்க்காற்றில் நெற்றி முடி அசைந்தாட, தன்னையே தொடரும் அவள் விழிகளைப் பார்த்தும்,பாராமல், அவளது நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டுத் தனது கோப,தாபத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, நேர்மையாய், நியாயமாய்ப் பேசியவனைக் கண்டு, அதுவரையிருந்த இறுக்கம் இளகி, புன்னகை கொண்டது சுஜாதாவின் மனது.

தன் பேச்சிற்கு எதிர்வினையாற்றாது, தன்னையே இமைக்க மறந்து நெகிழ்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டிருப்பவளைக் கண்டு அவன் புருவம் சுருக்க,

அவன் முக பாவத்தில் இமை தட்டி விழித்தவள், ஒரு நொடிக் குனிந்து சில்லிட்டுப் போயிருந்தத் தன் விரல்களைப் பார்வையிட்டுப் பின் நிமிர்ந்துத் தனது பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பவனைத் தலையசைத்து அருகில் அழைத்தாள்.

ஒரு நொடி புரியாது விழித்தவன் பின், அவளருகே வந்து நிற்க, முறுவல் மறையாத முகத்துடன், கை நீட்டி அவள், அவனைக் குனியச் சொன்னதும், என்னவோ,ஏதோவெனப் பயந்து “என்ன செய்யுது?” எனப் பதட்டமாய்க் கேட்டபடியே யோசிக்காது குனிந்தவனின் இதழ்களில் முதல் மழைத்துளியொன்று பட்டது, கூடவே அவளது ஈர இதழ்களும்.

மின்சாரம் தாக்கியது போல் ஒரு நொடி உடல் முழுதும் விறைத்துப் போக, நின்று விட்டக் கருமணிகளில், அவனையே பார்த்தவண்ணம் சிலையாய் அமர்ந்திருந்தவளின் பிம்பம் தென்பட்டதும், மூக்கு விடைக்க நிமிர்ந்தவன், ‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்’ என்கிற உணர்வோடுக் கடித்தப் பற்களுடன் அவளைக் கோபமாக ஏறிட்டு, அனிச்சையாய்க் கை ஓங்கியதும்,

இழுத்துப் பிடித்த மூச்சுடன், கண்களை இறுக மூடி, அசையாதிருந்தவளைக் கண்டு “ச்ச” எனக் கையைக் கீழிறக்கியவன், ஒட்டுமொத்தக் கோபத்தையும், பெஞ்சில் அவள் சாற்றி வைத்திருந்தத் துணைக்கால்களிடம் காட்டி, அதுத் திசைக்கொரு புறமாய் பறந்து விழுவதைப் பொருட்படுத்தாது, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டான்.

மூச்சை இழுத்த விட்டபடி மெல்ல இமை திறந்த சுஜாதா, தூரமாய்க் கிடந்த துணைக்கால்களைக் கண்டபடி மௌனமாய் அமர்ந்து விட்டாள்.

மனதின் எதிர்பார்ப்பு புரிந்தது. அவனது எதிர்ப்பும் புரிந்தது. ஆனாலும் எதிர்வினையாற்றத் தோன்றாமல், மேற்கில் மறைந்த சூரியனைக் கண்டபடி அதே இடத்திலேயே அமர்ந்திருந்தாள்.

அரைமணி நேரம் கடந்திருக்கும்.

வாயிற்படியருகே அரவம் கேட்டதும், படபடத்த மனதை அடக்கி, விறைத்தத் தோள்களுடன் அமர்ந்திருந்தவளின் முன்னே வந்து நின்றான் விருமன்.

தூறத் தொடங்கிய மழையைப் பொருட்படுத்தாது, எதிரே நிற்பவனின் முகம் பார்க்க முயலாது, அழுத்தமாய் அமர்ந்திருந்தவளை, இடுப்பில் கை வைத்தபடி மூச்சு வாங்க நோக்கியவன், தூரத்தில் கிடந்த அவளதுத் துணைக்கால்களை எடுத்து வந்து அவளருகே வைத்தான்.

அப்படியும் அவனைப் பாராமல், நேரே வெறித்துக் கொண்டு, நிச்சலனமான முகத்தோடு பிடிவாதமாய் அமர்ந்திருந்தவளின் முகத்தைக் கண்டு ஒரு நொடி பல்லைக் கடித்தவன், மறு நொடி, குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டான்.

வேகமாய்ப் பொழியத் துவங்கியிருந்த மழை அவனை முழுதாய் நனைத்து விட, விழி திறக்க விடாது முகத்தில் அடித்த நீர்த்துளிகளை, இமை சிமிட்டி விலக்கி, இறுகிக் கிடந்தக் கன்னங்களில் நீர் வழிய, அவசரமாய் முன்னே நடந்து கொண்டிருந்தவனை அசராது நோக்கியவள், தன் ஈர இதழ்களைப் பிரித்து, மெல்லிய குரலில்,

“அர்த்தம் தெரிஞ்சு தான் முத்தம் கொடுத்தேன்” என்றாள்.

ஒரு நொடி திடுக்கிட்டு நின்று, அதிர்வாய்,ஆச்சரியமாய் இமை தெறிக்க அவள் முகம் பார்த்தவன், தயங்காதுத் தன் கண்களை எதிர்கொண்டவளின் பார்வையில் ஈர்க்கப்பட்டு, ‘என்ன பெண் இவள்’ என்று குழம்பி, உள் மனதை ஆட்டம் காணச் செய்யும், அவள் பெரிய விழிகளின் தீட்சண்யம் பொறுக்காது, விறுவிறுவென முன்னே நடந்தான்.

ன்று அலுவலகத்திலிருந்து ஆரன் வீடு திரும்புகையில் நள்ளிரவு கடந்திருந்தது.

தன்னிடமிருந்த சாவியைக் கொண்டுக் கதவு திறந்து உள்ளே சென்றவன், இருள் சூழ்ந்திருந்த வீட்டில், விடிவிளக்கைக் கூடப் போடாமல், ஹாலில் தலை முதல் கால் வரை முழுவதுமாகப் போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்த அகலருவியைக் கண்டு விட்டு, சத்தம் செய்யாமல் உள்ளறைக்குச் சென்றுப் படுக்கையில் விழுந்தான்.

படுத்தவாக்கில் கைகளைக் கட்டிக் கொண்டு, அமைதியாய்க் கண்மூடியவனுக்கு, உறங்கும் வரை வாய் ஓயாமல் எதையேனும் வளவளத்தபடி அருகில் சாய்ந்து கிடக்கும் விருமன் இல்லாதது மனச்சோர்வைக் கொடுத்தது.

ஒன்பது வயதிலிருந்து இருவரது படுக்கையும் அருகருகில் தான். உறக்கமற்றுச் சில வருடங்கள் அவன் தவித்துக் கிடந்த போது கூடத் தானும் உறங்காமல், அவனது மனமாற்றத்திற்காக எதையேனும் பேசியபடி விழித்துக் கிடந்தவன் அவன். அவனுக்காகவே பல நாட்கள் உறங்கி விட்டது போல் நடிக்கக் கூடச் செய்திருக்கிறான் ஆரன்.

விடுமுறைக்காக அவன் தந்தை வீடு செல்லும் போது கூட, ‘நீயில்லாம ஊருக்குள்ள நான் என்னாடா பங்காளி பண்றது?’ என்றபடி உடன் தொற்றிக் கொள்பவன் விருமன். எப்போதாவது ஒரு முறை தான், அவன் தனியாகத் திருச்சி சென்று வந்ததெல்லாம்.

பிரிவென்பதே சிறிதுமின்றி இத்தனை வருடங்களாக ஒட்டிக் கொண்டுத் திரிந்தவனுக்கு, இப்போது மட்டும் அப்படி என்ன தனிமை தேவைப்படுகிறதாம்? – எனக் கோபமாய்ப் புலம்பிக் கொண்டவனின் மனம், இரு நாட்களுக்கு முன் மொட்டைமாடியில் அவனுடன் நடந்த உரையாடலை எண்ணிப் பார்த்துக் கொண்டது.

‘உன் அயித்த மக உனக்குப் பொண்டாட்டியாக ஆசைப்படலாம்’ – என்றவனின் பேச்சை நினைவு கூர்ந்தவனுக்கு, மெல்லிய முறுவல் தோன்ற,

“கறிச்சட்டியைக் காலி பண்ணிட்டுக் கவுந்தடிச்சுத் தூங்குறவளோடக் கல்யாணம் ஒன்னுதேன் குறை! உன் அயித்த மவ எனக்குப் பொண்டாட்டியா வந்தா, எனக்கு வாழ்நாள் முழுக்க உங்கூடதேன் படுக்கை பங்காளி!” – என்றெண்ணிச் சிரித்தபடி ஏதேதோ சிந்தனைகளுடன் வெகுநேரம் உறக்கம் வராது புரண்டு கொண்டிருந்தான் ஆரன்.

வெகுநேரம் விழித்திருந்துக் கண் மூடியதன் விளைவோ, பலநாளைக்குப் பிறகான தனிமையோ, எதுவோவொன்று கொடுத்த மன அழுத்தத்தில் உறங்கியும்,உறங்காத நிலையிலிருந்தவனின் மூளை, மங்கிக் கிடந்த நினைவுகள் பலவற்றை தூசி தட்டி எழுப்பிக் கூட்டி வந்து.. அகக்கண்ணில் அவனுக்குப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.

அறியாத வயதில்.. அன்னையை இழந்த போது.. உண்டான தனிமை உணர்வு உட்பட!

அவனைப் பெற்றவள் குறித்துப் பெரிதாக அவனுக்கு நினைவு ஏதுமில்லை. வித்தியாசம் பாராது, சிறப்பாய் அவனை வளர்த்த மீனாட்சி, அவள் குறித்த ஏக்கங்களை வர விட்டதுமில்லை. அன்னையென்றாலே, நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் அரை உயிராய்க் கிடந்தப் பெண்ணொருத்தியின் சோர்வான முகத்தை மட்டுமே அடையாளமாகத் தனது நினைவடுக்கில் சேமித்து வைத்திருந்தவனின் மூளை, இன்று முழு சிரிப்பும்,பூரிப்புமாய்த் தன் மாரில் இட்டு அவனைக் கொஞ்சித் தீர்க்கும் தெளிவற்ற உருவமொன்றை அகக்கண்ணில் காட்ட,

தனக்கான, தனக்கு மட்டுமே சொந்தமான உறவிதுவென அழுத்திக் கூறி அலறிய மனதோடு, தன்னை அணைத்திருக்கும் கைகள் கொடுத்த வெதுவெதுப்பை விட மனமில்லாது, அதை இறுகப் பற்றிக் கொண்டு, அதன் கழுத்தோடு முகம் பதித்துக் கொண்டான். எங்கோ மூளையின் ஒரு ஓரத்தில் பதிந்து போயிருந்த, அன்னையின் மஞ்சள் கலந்த வியர்வை வாசனை, இந்த நொடி மீண்டும் சுவாசிக்கக் கிடைத்ததில் நெகிழ்ந்து, மூச்சிழுத்து முழுதாய் அதைத் தன் நுரையீரலில் நிரப்பிக் கொண்டவனுக்குக் காரணமின்றி விழியோரம் நீர் கசிந்தது.

விடாது சொரிந்த கண்ணீருடன் அவ்வுருவத்தை இறுக்கி,இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தவன், கன்னத்தை நனைத்தத் தண்ணீரை உணர்ந்து பட்டெனக் கனவு கலைய, இமை திறந்தான்.

தன் முகத்தருகேத் தெரிந்த பச்சை நிறத் துப்பட்டாவைக் கண்டு ஒரு நொடி விழித்துப் பின் மெல்ல எழுந்தமர்ந்தான்.

தன் பாதி உடலை மறைத்துக் கிடந்தத் துப்பட்டாவை விலக்கியபடிப் பிடரியைக் கோதியவனுக்கு, இரவு அடித்தக் குளிரில், உறக்கக் கிறக்கத்தில் கைக்குக் கிடைத்ததைப் போர்த்திக் கொண்டது நினைவிற்கு வந்தது.

கையிலிருந்தத் துப்பட்டாவும், கனவில் உணர்ந்த வாசமும், அவன் மனதை நெகிழச் செய்திருக்க, கால்கள் தன்னாலே எழுந்து, ஹாலில், திறந்த வாயுடன் படுத்துக் கிடந்த அகலருவியிடம் வந்து நின்றது.

அவன் அன்னையை நினைவு படுத்துகிறாள் அவள்!

உடல் முழுதிலும் பரவிக் கிடந்த அவள் வாசம், என்றோ தன் அன்னையின் மார்புக் கூட்டுக்குள் பதிந்து கிடந்த நாட்களை நினைவுபடுத்துகிறது அவனுக்கு!

கழுத்தடியில் போர்வையை இறுக்கிக் கொண்டு, ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளின் கரங்களை விலக்கிக் கழுத்தோரமாய் முகம் புதைத்து சற்று முன் சுவாசித்த வாசத்தை உணர ஆசை கொண்ட மனதை அடக்கத் தெரியாமல், தன்னை மறந்து எத்தனை நேரம் அவளையே பார்த்தபடி நின்றிருந்தானோ!

உறக்கம் கலைந்து விழி திறந்த அகலருவி, தன்னையே நோக்கியவண்ணம் எதிரில் ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டுப் பதறி, அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்து,

“என்னாச்சு மாமா?” என்று வினவியதும், அவளது கரடிக் குரலில் கனவு கலைய, சட்டெனத் தலையை உதறி இயல்பு நிலைக்குத் திரும்பியவன், அவள் பார்வை தன் கையிலிருந்த துப்பட்டாவில் படிவது கண்டு, அவசரமாய் துப்பட்டாவை அவள் முகத்தில் எறிந்து,

“உன் துணியை என்னத்துக்குடி எங்க ரூம்ல போட்டு வைச்சிருக்கிறவ?” என்று திட்ட, முகத்தை சுருக்கி, உதட்டை வளைத்தாள் அவள்.

“இந்த வீட்ல இருக்குறதே ஒரு ரூம்பு! ஆத்திர,அவசரத்துக்குத் துணி மாத்தனும்ண்டா, நான் பெப்பரப்பே-ண்டு இருக்குற இந்த ரூம்புல நிண்டா மாத்த முடியும்?, பொட்டப்புள்ளைக்குத் தனி ரூம்பு குடுத்துப்புட்டு, பயலுக இவிங்க இங்க படுக்குறதை விட்டுப்போடு, திண்ணைல கிடக்குறவதேன நீயிண்டு சொல்லி, என்னைய இங்க படுக்கப் போட்டுப்புட்டு, இவிங்க ரெண்டு பேரும் உள் ரூம்புக்குள்ள உருண்டுக்கிட்டுக் கிடக்காய்ங்க!” – பாதி உறக்கத்திலிருந்து எழுந்தாலும் கூட, பாரபட்சம் பாராது அவளது வாய் வளவளப்பதைக் கண்டு எரிச்சலுற்றவனிடம்,

“இன்னும் ஒரு மாசத்துக்குத்தேன் இந்தத் தொல்லையெல்லாம்! அப்புறம் என்னையக் கொண்டு போய் ஊர்ல தள்ளிப்புட்டு, நீங்க ரெண்டு பேரும் வீடு பூரா புரண்டுட்டுக் கிடங்க” என்று திட்டியவள், அவனை முறைத்து, வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடிக் கைகளைத் தூக்கிக் கூந்தலை அள்ளிக் கட்ட,

அதுவரை எரிச்சலும்,கோபமுமாய் அவளைப் பார்த்திருந்தவனின் விழிகள், அதிர்ந்து,விரிந்துப் பின் தடுமாறி.. வேறு புறம் நோக்கியது.

வரைமுறை பாராது, வரையறை அறியாது அநியாயத்திற்குக் கலைந்து கிடந்தவளின் அதிகாலைத் தோற்றமது கண் கூசச் செய்ய, அவசரமாய்ப் பார்வையைத் திருப்பியவன், அவனை ஒரு பொருட்டாகவே மதியாதுத் தன்னை சரி செய்து கொண்டிருப்பவளின் புறம் பல்லைக் கடித்தபடி மீண்டும் திரும்பினான்.

அள்ளி முடிந்த கூந்தலோடு நிமிர்ந்தவள், தன்னை முறைத்துக் கொண்டிருப்பவனைக் கண்டுக் கோபமுற்று, மீண்டும் ஏதோ கையை நீட்டிக் கூறத் துவங்க, ஆரனது விழிகள் அவள் தோற்றத்தை மெதுவாய் அளவிட்டது.

கொழுத்தக் கன்னங்களும்,குண்டுக் கண்களுமாய் பார்க்கப் பால் பன்னைப் போலிருந்தாள். கருத்த நிறமும்,வட்டமுகமுமாய்த் தடித்த இதழ்களுடனிருந்தவள், பேசுகையிலும் கூட, வலது கன்னத்தில் குழி விழும் அழகை நின்று கவனித்தவனுக்கு, கருவாக்குந்தாணி, கலையாய்த் தெரிவது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

தன் எண்ணப் போக்கை மட்டும் அவளறிந்தால், கிழித்துக் கூறு போடப் போவது உறுதி என்றெண்ணிய சமயம், தன்னையே பார்த்தபடி சிலையாய் நிற்பவனைக் கண்டுப் புருவம் சுருக்கிய அகலருவித் திரும்பிப் பின்னால் நோக்கி, அவன் தன்னைத்தான் கவனிக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டு,

“உன்ட்டதேன் மாமா பேசிட்டிருக்கேன்!” என்று கத்தியதும்,

“ப்ச்” என்றவன், “என்னாடி?” என்று பதிலுக்கு எகிற,

“இனிமே யாருக்கும் தொந்தரவில்லாம நான் அடுப்படில தூங்கிக்கிறேண்டு சொன்னேன்” என்று நொடித்தவளிடம்,

“வேணாம், வேணாம்! அங்க ஏற்கனவே ஒரு பெருச்சாளி சுத்திட்டிருக்கு” என்றவன் அவள் உக்கிரமாய் மூச்சு விட்டு உருமாறிக் கொண்டிருப்பதைக் கண்டு கொள்ளாது விறுவிறுவென அறைக்குள் மறைந்து விட்டான்.

அடுத்த சில மணி நேரங்களில் அலுவலகம் கிளம்பியவன், வாசலிலிருந்த பைக்கை எடுக்கையில், மல்லிகைச் செடிக் கண்ணில் பட, அதை நின்று நோக்கியவனுக்கு, வழக்கம் போல் மீனாட்சியம்மாளின் நினைவு வந்தது.

இரண்டு கன்னியேனும் மல்லிப்பூ சூடிக் கொள்ளாமல் அவர் ஒரு நாளைக் கூடக் கழித்ததில்லை. எப்போதும் பூக்கட்டிக் கொண்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும் அவர் புன்னகை முகத்தை, அந்தச் செடியைப் பார்க்கும் போதெல்லாம் நினைவு கூர்பவனுக்கு, அன்று அகலருவி வரைந்த படம் நினைவிற்கு வந்தது.

செடியைத் தொடர்ந்து அவன் பார்வைத் தன் வீட்டுப் பலகணியை எதேச்சையாக நோக்க, தினமும் அவன் வாசல் தாண்டும் வரை பலகணியிலிருந்து அவனைக் காண்பதை வழக்கமாய் வைத்திருக்கும் அகலருவி தெரிந்தாள், கூடவே அளவான சிரிப்போடு அவள் இதழ்களும், அளவில்லா அன்போடு அவள் கண்களும்!

அவள் விழி காட்டும் பாவனையைக் கண்டவனுக்கு முகம் மாறிப் போக, ஒரு நொடி வேறு புறம் பார்த்தவன், பின் மீண்டும் நிமிர்ந்து அவளை நோக்கினான்.

ஏதேனும் தேவையோ, அதனால் தான் மேலே பார்க்கிறானோ என்று நினைத்து புருவம் சுருங்கக் கேள்வியாய் அவனை நோக்கியவள், பின் “என்ன?”-வென சைகையால் வினவ, ‘கீழே வா’-வென அவனும் சைகையில் அழைத்தான்.

அவன் அழைத்ததும் கடகடவென மூன்று மாடிகளையும் படிகளில் கடந்து மூச்சு வாங்க, “என்னா மாமா?” எனக் கேட்டபடி அவன் முன்னே நின்றாள் அகலருவி.

அலுவலகத்திற்கான ஃபார்மல் உடையில், முன் நெற்றி முடியைக் கோதியபடி வண்டியருகே நின்றவனின் மீது அவளது குண்டுக் கண்கள் ஆர்வமாய்ப் படிவது கண்டு, ஆராய்ச்சியாய் அவளை நோக்கியவன்,

“3 வருசமா இப்பிடித்தேன் தெனம் நிண்டு பார்த்திட்டிருக்கியா?” எனக் கேட்டான்.

ஆவல் மொத்தமும் வடிய, மூக்கை விடைத்துப் பல்லைக் கடித்தவள், கைகளைக் கட்டிக் கொண்டு, அவனை ஏற,இறங்கப் பார்த்து,

“ஆமா, என்னாவாம் அதுக்கு இப்ப?” என்றதும்,

தானும் கைகளைக் கட்டிக் கொண்டு வண்டியில் சாய்ந்து நின்றவன்,

“என்னத்துக்கு என்னைய நோட்டம் விட்டுட்டுத் திரியுற நீயி?” என்று வினவினான்.

“என்னா நோட்டம் விட்டாய்ங்க?” – நெரித்தப் புருவங்களுடன் கேட்டவளிடம்,

“நான் இங்கன ஒரு மல்லிகாவைப் புடிச்சுருவேனோ-ண்டு?” – என அவன் தாடையை உயர்த்த,

ஒரு கணம் தடுமாறி “ஆ…மா, அதுல என்னாத் தப்பிருக்கு?” எனத் துவங்கியவள் பின், அஷ்டகோணலாய் முகத்தை வைத்தபடி,

“எங்குட்டுப் பார்த்தாலும் செவத்த சிறுக்கிகளாத் திரியுறாளுக! காணக் குளிர்ச்சியா இருக்குறாளுகளேண்டு நீங்க பாட்டுக்க எவ மேலயும் கண்ணு வைச்சுப்புட்டீக-ண்டா, எங்கப்பன்ட்ட நீங்க போட்ட சபதம் வீணாப் போயிருமே-ங்குற நல்ல எண்ணத்துல நோட்டம் விட்டேன்! அதுக்கென்னாவாம் இப்ப?” – என்று எகிறிக் கொண்டு வர,

“சபதமா?” – எனப் புருவம் சுருக்கினான் அவன்.

“ஆமா! எங்கப்பனைப் பார்த்து இந்த சென்மத்துல நாந்தேன் உம்ம மருமவன்-ண்டு கட்டுத்தரைல வைச்சுக் கோவமா சொல்லிட்டு வந்தீகளே” – என்று நினைவுபடுத்தி விட்டு அவன் முகம் பார்க்க,

வண்டியில் சாய்ந்து நின்ற நிலையிலேயே புருவம் சுருக்கி,உதட்டைக் கடித்து வானம் பார்த்து யோசித்தவன், பின் முகத்தைச் சுழித்தபடி,

“அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல! அப்பிடியே இருந்தாலும், கோவத்துல சொன்னதையெல்லாம் நிசமாக்கிட்டிருக்க முடியுமா?” – எனக் கேட்டதும்,

இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன் “அதனால?” என்றவளைக் கண்டுச் அடக்க மாட்டாமல் சிரிப்பு வர, அதை வெளிக்காட்டாமல்,

“சும்மா ஒரு உணர்ச்சி வேகத்துல நாஞ்சொன்னதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு, நீ என்னைய நோட்டம் விட்ற வேலையெல்லாம் வைச்சுக்காத” – என்று ஆரன் மிரட்டியதும்,

“அதாவது?” என்றவளின் தோரணையை ரசித்து,

“நான் வாங்குற சம்பளத்துக்கெல்லாம், உன்னைய வாழ்நாள் முழுக்கக் கூட வைச்சுத் தீனி போட்றது கஷ்டம்ண்டு சொல்றேன் டி” எனக் கூறியதும்,

“ஓஹோ! அப்டின்னா, எங்கப்பன்-ட்ட விட்ட சபதத்தை நீங்க நிறைவேத்தப் போறதில்ல?” – எனக் கேட்டவளிடம்,

“ப்ச்” என அசால்ட்டாய்த் தோளைக் குலுக்கினான் அவன்.

உதட்டைப் பிரித்து, தோள்கள் ஏறி இறங்கப் பெருமூச்சை வெளியிட்டவள், பின் கட்டியிருந்தக் கைகளை விலக்கி,

“அப்ப சரி மாமா! ஒன்னும் பிரச்சனையில்ல! ஊருக்குப் போனதும், ஒத்தக்கையோடத் திரியுற அந்தப் பீக்காளிப் பயலுக்குத் தாலியைக் கட்டி அவனையே எம் புருசனாக்கிக்கிறேன்.” என்று மிதப்பாய்க் கூறியதும்,

பல்லைக் கடித்த ஆரன், எட்டி, இரண்டடி தள்ளி நின்றவளின் தலையில் குட்டி வைக்க வர, அவசரமாய் விலகிய அகலருவி,

“நோட்டம் விடக் கூடாதுண்டு சொன்னவிங்களுக்கெல்லாம், இந்த நோபல் பரிசைத் தொட உரிமை கிடையாது” – என்று விரல் நீட்டி சீறியதில், சீண்டப்பட்டவன்,

நீட்டிய விரலைப் பற்றித் தன்னோடு இழுக்கத் தடுமாறி அவன் மார்பில் மோதி நின்றவள், கடுப்புடன் நிமிர்ந்து,

“அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட இப்பிடி அலப்பரை பண்றதெல்லாம் அல்பத்தனம்” – என்றுக் கடித்தப் பற்களுடன் கூறியதும்,

தனக்கு வெகு அருகே,தன் மார்புக்கும் கீழான உயரத்தில் நின்று கொண்டு கழுத்தைப் பின்னே சாய்த்தபடித் தன்னை நிமிர்ந்து பார்த்துப் பேசுபவளின் செய்கை சுகமாய்த் தோன்ற, அவளுடன் மேலும் வம்பு செய்ய விழைந்து,

“எவனுக்குப் பொண்டாட்டி? ஏன் டி, அவனே சோத்துக்கு வழியில்லாமத் தெருவுல கிடக்குறியான்-ண்டு கேள்விப்பட்டேன்! அவேன் எப்பிட்றி சட்டி,சட்டியா உனக்கு ஆக்கிப் போடுவியான்?” எனக் கேட்டதும்,

“அப்டின்னா நீங்க ஆக்கிப் போடுங்க, என்னையக் கட்டிக்கிட்டு”

நக்கலாய்க் கூறி விட்டு, விடைத்த மூக்குடன் வெகு அருகில் நிற்பவளின் அழகு முகத்தைக் கண்டு உள்ளே பொங்கிய உணர்வுகளை மறைக்காது, அவள் முகம் முழுக்க ரசனையாய்ப் பார்வையை ஓட்டியவன், அடிக்குரலில்,

“தெளிவாச் சொல்றேன் கேட்டுக்கடி! கட்டிக்க,கட்டிக்க-ண்டு நீ ரொம்ம்ம்ப அடம்புடிக்கிறதாலதேன் நான் கட்டிக்கிறேன். அப்புறம் வந்து, என்னா மாமா இப்பிடிப் பண்ற-ண்டு எங்கூட சண்டை,கிண்டையெல்லாம் போடக் கூடாது சொல்லிப்புட்டேன்” என்று எச்சரித்ததும், புருவம் உயர்த்தி,

“நிசமாக் கட்டிக்கிறியா?” – எனக் கேட்டவளிடம், போனாப் போகுது என்றத் தோரணையில்,

“ஆமா, நீதேன் மூக்கால அழுகுறியே” – என்றவனைக் கண்டுக் கண்ணைச் சுருக்கியவள்,

“அதுசரி” – என்று முணுமுணுத்ததும்,

“ப்ச், என்னாடி முனங்குற?, கட்டிக்கவா வேணாமா?” – என அதட்டியவனைக் கண்டு,

“கட்டித் தொல” – எரிச்சலுடன் கூறியவளைக் கண்டு, அதுவரை அடக்கி வைத்திருந்தப் புன்னகை, நீண்ட சிரிப்பாக விரிய, காலையிலிருந்து அவளைக் காணும் போதெல்லாம், அள்ளிக் கொள்ளச் சொன்ன உணர்வுகளுக்குச் செவி சாய்த்து, கனவில் உணர்ந்த வாசனைக்காகத் தவித்த மனதின் ஏக்கத்தைத் தீர்க்கும் பொருட்டு, தன் மார்பருகே நின்றவளைத் தன்னோடு இணைத்துக் கண் மூடி, அவள் கழுத்தோரமாய்த் தன் முகத்தை ஆழப் பதித்தவன், இரு கைகளால் அவளை இறுக,இறுக அணைத்துக் கொள்ள,

சுர்ரென்றுத் தலைக்கேறிய உணர்வில் அதிர்ந்து,நடுங்கி மறு நொடி கூசிச் சிலிர்த்துத் துள்ளி, அவசரமாய் அவனை விலக்கியவள், தடுமாறித் தொப்பெனத் தரையில் விழுந்தாள்.

வியப்பில் விரிந்த வாயும், அதிர்ச்சியில் ஏறி இறங்கும் மார்புமாய்க் கீழே கிடந்த நிலையிலேயே தன் குண்டு விழிகளைப் பெரிதாய் விரித்துத் தன்னையே பார்ப்பவளைக் கண்டபடி வண்டியில் ஏறியமர்ந்த ஆரன்,

“என்னத்துக்குடி வாயைப் பொளக்குறவ?, நீதேன கட்டிக்கக் கேட்ட?”- என்றதும், பல்லைக் கடித்தவள்,

“இதென்ன மொல்லமாரித்தனம்?” – என்று முணுமுணுக்க..

வண்டியிலிருந்தபடி பின்னால் நகர்ந்து வந்தவன், கீழே கிடந்தவளை நோக்கிக் கை நீட்டினான்.

அவனை முறைத்தபடியே, அவன் கையைப் பற்றிக் கொண்டு எழுந்து நின்றவளிடம்,

“பிடிக்கலண்டா சொல்லு, ஊருக்குப் போனதும் அந்த ஒத்தக்கை சுப்பனையே உனக்குக் கட்டி வைக்கிறேன்” எனச் சிரிக்காமல் கூற,

‘அடப் பீக்காளி மாமா’ என வாயைப் பிளந்த மனதை அடக்கி முகத்தை மிதப்பாய் வைத்துக் கொண்டவள், எங்கோ பார்த்தபடி,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் அவனுக்கு அந்த வாய்ப்பிருந்துச்சு. ஆனா இப்ப இல்ல” – எனக் கூறி விட்டு முழியைத் திருப்பி அவனை ஓரக் கண்ணில் பார்க்க, நீண்ட புன்னகையுடன் அவள் பிடரியில் அடித்து,

“போடி.. ஏய்ய் போடி..” என்றுத் திட்டி விட்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் ஆரன்.

அவள் கன்னம் அழுந்தியத் தன் மார்பில் அவள் வாசம் வீசும் சுகத்தை அனுபவித்தபடி அவனும், கோபமாய் முறைத்துக் கொண்டாலும், ‘ஐயோ’-வெனச் சிணுங்கிய மனதோடு அவளும், தத்தமது பாதையில் மெல்லிய சிரிப்போடு செல்லத் தொடங்கினர்.

சரியாக ஒரு வாரம் கழித்து.. ஒரு விடுமுறை நாளன்று..

காலிங் பெல் ஓசை கேட்டதும் கதவைத் திறந்த ஷாஜி, வெளியே நின்ற உருவத்தைக் கண்டு ஒரு நொடி விழித்துப் பின் “அருவி இங்க இல்லயே” என ஹிந்தியில் கூற, அவரது வியந்தத் தோற்றத்தைத் தயக்கமாய் ஏறிட்டுத் தடுமாறியபடி நின்றிருந்த விருமன், சின்னக் குரலில் “சுஜாதா…..” என்று இழுக்க,

‘உள்ளே தான் இருக்கிறார். வாருங்கள்’ எனக் கூட்டிச் சென்று வலப்புறமிருந்த சோபா ஒன்றில் அமரச் சொல்லிக் கைக் காட்டியதும், தயக்கத்துடனே அமர்ந்தவன், ஷாஜி உள்ளே சென்று, குளியறையிலிருந்த சுஜாதாவிடம் தன்னைப் பற்றிக் கூறுவதையும், அதற்கு அவள் உம் கொட்டி விட்டு அமைதியாகிப் போவதையும் காதில் வாங்கிக் கொண்டு, தரையை வெறித்தபடி மௌனமாய் அமர்ந்திருந்தான்.

“ச்சாய்” – என நீட்டிய ஷாஜியிடம் மறுக்காமல் வாங்கிக் குடித்தவனை முழுதாக எட்டு நிமிடங்கள் காத்திருக்கச் செய்து விட்டு, முகம் காட்டினாள் சுஜாதா.

அவளது துணைக்கால்களின் ஒலி கேட்டதும், சட்டென நிமிர்ந்த விருமன் கண்டது, கொண்டைக்குள் அடக்கியக் கூந்தலோடு, முகத்தில் நீர் சொட்ட நின்றிருந்த சுஜாதாவைத் தான்.

அவசர,அவசரமாய்க் குளித்திருப்பாள் போலும். பருக்களோடு, பருக்களாய் கன்னத்தில் அமர்ந்திருந்த நீர்த் துளிகளைத் தவிர ஒப்பனையேதுமற்றிருந்த வெளுத்த முகத்தில், சிகப்புக்கல் மூக்குத்தியை மட்டும் அணிகலனாக சூடிக் கொண்டு அழகே உருவமாய் நின்றிருந்தவளைக் கண்டவனின் விழிகள் அவள் முகத்திலேயேத் தேங்கி விட்டது.

அன்றைய மழை நாளுக்குப் பிறகு, ஒரு வாரம் கழித்து அவனை காண்கிறாள் அவள். எப்பேர்ப்பட்ட ஒரு வாரம்??, கடந்த நொடிகளை நினைத்து சிலசமயம் வியப்பாய், பலசமயம் முட்டாள்த்தனமாய், தன்னைத் தானேத் திட்டிய படியும், புலம்பிய படியும், கனவு கண்டும், நினைவு புரிந்து வருந்தியும், எவரிடமும் உள்ளத்து ஆசையைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிப்பும், தடுமாற்றமுமாய் நரகமாய்க் கழிந்த முழு ஏழு நாட்களுக்குப் பிறகு, இன்று அவன் முகம் காண்கிறாள்.

அவனைக் கண்டபடி அவளும், அவளைக் கண்டபடி அவனும் முழுதாய் ஒரு நொடியைப் பேச்சற்றுக் கடந்த பிறகு, சுதாரித்து இமை தாழ்த்தி, தன்னையே விடாது நோக்குபவனை மீண்டும் தயங்கி ஏறிட்டவளுக்கு, உணர்ச்சியற்ற அவன் பார்வைக் குழப்பத்தைக் கொடுக்க, புருவம் சுருக்கியவள், மெல்ல நடந்து வந்து எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

‘இன்னும் கோபம் தீரவில்லையோ?’

‘நீ செய்தது தவறெனச் சொல்லி அறிவுரை கூறி அலற விட வந்திருக்கிறானோ?’

‘அவன் நிராகரித்தால்,அதை நிதானமாய் எதிர்கொள்ளும் தெளிவு தனக்கு இருக்கிறதா?’

‘நிராகரிப்பானா?’

கடகடவெனக் கேள்விகளைத் தொடுத்த மூளையை அடக்கி,

தன் தொடையில் இரு கைகளையும் ஊன்றிக் கோர்த்தபடி, முன்னே சாய்ந்த நிலையில் தன்னையே அவதானித்துக் கொண்டிருப்பவனிடம், புன்னகைக்க முயன்றவள், சகஜமாகப் பேச எத்தனித்து, அடைத்தத் தொண்டையைச் செருமி,

“போபால் போன வேலையெல்லாம் முடிஞ்சதா?” எனக் கேட்க, அமைதியாயிருந்தான் அவன்.

விடாதுத் தன்னை நோக்குபவனின் விழிகளை ஒரு நொடி ஆராய முயன்றுப் பின் பெரு மூச்சுடன்,

“காஃபி சாப்பிட்றீங்களா?” எனக் கேட்டாள்.

பதிலற்று அவன் குனிந்துத் தன் காலடியிலிருந்த காஃபி கப்பைப் பார்த்து விட்டு,அவளை நோக்கி நிமிர,

“ஓ! ஷாஜி ஏற்கனவே குடுத்தாச்சா?” என அவளாகவே பதில் சொல்லிக் கொண்டாள்.

பின், அநியாயத்திற்கு வியர்க்கத் துவங்கிய நெற்றியை உள்ளங்கையால் துடைத்தபடி அவனை ஓரக்கண்ணால் அளவிட்டவள்,

“மண்டே-ல இருந்து டெல்லி ஆஃபிஸ்ல தான் வேலையா?, இல்ல மறுபடி போபால் போகனுமா?” – எனக் கேட்டாள்.

அதற்கும் அவனிடம் பதிலில்லையென்றதும் பொறுமையிழந்து மூக்கு விடைக்கத் துவங்கி விட, இறுகிய இதழ்களோடு, லேசாய்த் தலை சாய்த்து அவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.

கடித்தப் பற்களும், நெரித்த புருவங்களுமாய் தன்னை நோக்குபவளைக் கண்டு அவன் கண்ணைச் சுருக்க,

துடித்த இதழ்களுடன், “பேசவே இஷ்டம் இல்லன்னா, எதுக்கு இங்க வரனும் விருமன்?” எனக் கோபமாய்க் கேட்டாள்.

உரிமையாய்த் தன் பெயரை உச்சரிப்பவளைக் கண்டு உதடு வளையப் புன்னகை கொண்டவனை மேலும் முறைத்து,

“ஏன் சிரிக்குறீங்க?, எனக்குப் புரியல” என்றாள் குரலுயர்த்தி.

அவள் அதட்டியும் அடங்காமல் மீண்டும் சிரித்தவனைக் கண்டு எரிச்சல் வர, ஏமாற்றத்திலும்,ஆத்திரத்திலும் சிவக்கத் தொடங்கி விட்டக் கண்களோடு மூச்சு வாங்க அமர்ந்திருந்தவளை, சோதித்தது போதுமென்று எழுந்து அவளருகே வந்தான் அவன்.

தன்னை நோக்கி நடந்து வருபவனைக் கோபம் குறையாது அவள் நோக்கிக் கொண்டிருக்கையில், அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான் அவன்.

இறுகிக் கிடந்த அவள் இதழ்கள், அவன் செய்கையில் தானாய்ப் பிளந்து கொள்ள, ஏக்கத்தைப் பிரதிபலித்தக் கண்களோடுத் தனக்கு வெகு அருகே, தன் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி மண்டியிட்டு அவன் அமர்ந்திருந்த விதத்தை நம்ப முடியாது அவள் விழி விரிக்க, அவளது பெரிய கண்கள் காட்டிய பாவனையில் மயங்கி முகம் மாற அவன்,

“அந்த அர்த்தம் தெரிஞ்ச முத்தத்தை இப்போ குடுக்கப் போறதில்லையா?” எனக் கேட்டான்.

தவிப்பாய் வெளி வந்த அவன் வார்த்தைகள், அவளை மூச்சடைக்கச் செய்ய, கல்லாய் மாறிப் போனக் கருமணிகளோடு, இமை தட்ட மறந்து அவன் பிம்பத்தைத் தன் விழிகளுக்குள் பிரதிபலித்தபடி சிலையாய் அமர்ந்தவளின் வலது கையைப் பற்றித் தன் கன்னத்தோடு அழுத்திக் கொண்டவன்,

“பதில் சொல்லு” – எனக் கரகரத்தக் குரலில் கேட்டதும்,

அதுவரை மூளை கொண்டிருந்த பரபரப்பு மறைந்து, ஆர்ப்பரிப்பு அடங்கி ஆசுவாசப்பட, இமைகளைத் தாழ்த்திக் கண்களுக்கு உயிர் கொடுத்தவள், மனம் நெகிழ, விழி நனைய அவன் முகம் பார்க்க,

உள்ளத்து அன்பையெல்லாம் கருமணிகளில் தேக்கி, ஆசையாய், ஆர்வமாய் தன்னை நோக்குபவளின் விழிகளில் தெரிந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து, அகம் மலர புன்னகையுடன் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் விருமன்.

தன் அன்புக்கான பிரதிபலிப்பை அவன் விழிகளில் கண்டதில் வியந்து, கேள்வியாய் அவன் முகம் நோக்கியபடி, அவன் கன்னத்தை வருடிய அவள் விரல்களின் மென்மையில் மெய் சிலிர்க்கக் கண் மூடியவன், ஷாஜி வரும் அரவம் உணர்ந்துப் பட்டென எழுந்து நின்றான்.

நிமிர்ந்து அவன் விழி பார்த்தவளிடம், “நைட் பத்து மணிக்கு மொட்டைமாடிக்கு வா” என்றவன், தான் கரம் பிரித்ததில் முகம் வாட அமர்ந்திருந்தவளை விட்டுச் செல்ல மனமில்லாது ஒரு நொடி தயங்கி நின்று பின், தலையசைத்து விடைபெற்றுச் சென்று விட்டான்.

ன்றிரவு பத்து மணியானதும், மொட்டை மாடிக்குச் செல்ல வெளி வந்தவள், தனது வீட்டை ஒட்டியப் படிக்கட்டினருகே தனக்காகக் காத்து நின்றிருந்தவனைக் கண்டு விழி விரிக்க, அவளது வியப்பைக் கண்டு கொள்ளாது அருகே வந்தவன், தன் கையிலிருந்தத் தலையணையையும், விரிப்பையும் அவளிடம் கொடுத்து, அவளது துணைக்கால்களை வாங்கி வாசலருகே சாற்றி வைத்து விட்டு, அவளைத் தன்னிருகைகளில் ஏந்திக் கொண்டு மாடிப்படி ஏறத் தொடங்கினான்.

கேள்வியாய்த் தன்னைப் பார்த்தபடிக் கைகளில் கிடந்தவளிடம்,

“நான் கூட இருக்கும் போது, அது எதுக்கு?” எனக் கேட்டவனைக் கண்டுப் புருவம் உயர்த்தியவள், பின்,

“எப்போ வரைக்கும் கூட இருப்பீங்க?” எனக் கேட்டாள்.

படிகளிலிருந்தப் பார்வையைத் திருப்பி அவள் முகம் நோக்கியவன்,

“எப்போ வரைக்கும் இருக்கனும்?” என மறுகேள்வி கேட்டான்.

யோசிக்காது பட்டென “லைஃப் லாங்” என்றவளைக் கண்டு முறுவல் விரிய, பற்கள் தெரியப் புன்னகைத்தவன், அவளைக் கல்பெஞ்சில் இருத்தி விட்டு, விரிப்பை விரித்து, மீண்டும் அவளைத் தூக்கி வந்து அதில் அமர வைத்தான்.

இரண்டடி தள்ளி, முதுகை சுவற்றில் சாய்த்துக் கால் நீட்டி அமர்ந்திருந்தவனைக் கண்டபடியே, தானும் சுவற்றில் தலை சாய்த்தவள், அவன் புறம் திரும்பி,

“தினமும் இப்பிடித் தூக்குவீங்களா?” எனக் கேட்டாள்.

“ஏன், பிடிக்கலையா?”

“உங்களுக்குக் கஷ்டமா இருந்தா…??”

“கஷ்டமெல்லாம் எதுவுமில்ல! நாள் தவறாம எக்ஸர்சைஸ் பண்ற உடம்பு இது! 50 வயசுலயும் கூட அசால்ட்டாத் தூக்குவேன்!”

“எதுக்கு இந்த மாற்றம்?, பரிதாபமா?”

“பல்லைக் கழட்டிருவேன்”

“பின்ன?, அன்னைக்கு அவ்ளோ கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சுட்டுப் போனீங்க?”

“தப்பு-ண்டு தோணுனதும், உடனே திரும்பி வந்தேன்ல?”

“தள்ளி விட்டுட்டு வந்துட்டோமே, எப்பிடி எடுப்பாளோன்னு இரக்கப்பட்டு வந்திருப்பீங்க?”

“இல்ல! என்னை விட பலம் குறைஞ்ச ஒருத்திக் கிட்டக் கோபம்-ங்குற பேர்ல ஹார்ஷா நடந்துக்கிட்டது கோழைத்தனம்ண்டு தோணுச்சு. அதேன் வந்தேன்”

“அப்புறம் ஏன், சொல்லாம,கொள்ளாம ஊருக்குப் போனீங்க?”

“அ….து, மனசு ரொம்ப ஆடிப் போச்சு! பைத்தியக்காரப் பொண்ணு ஒன்னு, பைத்தியக்காரத்தனமா என்னமோ செஞ்சு, உன்னையப் பைத்தியமாக்கி விட்ருச்சேடா-ண்டு புலம்புறதுக்கு டைம் எடுத்துக்குச்சு”

“ஃபோர்ஸ் பண்ணிட்டேனா?” – தயங்கி வந்த அவள் குரலில், திரும்பி அவள் முகம் பார்த்தவன், அவளருகே நெருங்கியமர்ந்து,

“இல்ல, அந்த நெருக்கம் உனக்கும்,எனக்கும் நடுவுல ஊசலாடிக்கிட்டிருந்த இடைவெளியை உடைச்சிடுச்சு. உன்னையத் தவிர யாரோடயும் என்னால அந்த நெருக்கத்தைப் பகிர்ந்துக்க முடியாதுங்குற தெளிவைக் கொடுத்துருச்சு.” – என்றான்.

“ஆரம்பத்துல இருந்தே, ரெண்டு பேருமே ஒருத்தர்க்கொருத்தர்க் கிட்ட எந்தத் தயக்கமுமில்லாம ரொம்ப இயல்பாப் பொருந்திப் போன மாறிதேன் உணர்ந்தேன். மூனு வருசமாத் தெரியும்ங்குறதாலயோ என்னவோ, மூனாவது மனுசியா உன்னைய நான் எப்பவும் தூர வைச்சுப் பார்த்ததில்லை. ரொம்ப நெருங்குன ஆளுங்குற நினைப்பு! அந்த நினைப்புதேன் உங்கூடப் பேசத் தொடங்குனதும், ஏதோ ரொம்ப நாள் பழகுன மாதிரி, அக்கறை காட்ட சொல்லுச்சு, உரிமையா கோபப்படத் தூண்டுச்சு, நீ என்னைய மட்டமா நினைக்குறதா-ண்டு ஆதங்கப்பட வைச்சுச்சு. கடைசியா, உன்னோட செய்கை, நான் காட்டுன அக்கறைக்கும், எடுத்துக்கிட்ட உரிமைக்கும் அர்த்தம் என்னாண்டு சொல்லிக் குடுத்துச்சு. ஆனா..” – என்றவன் தனக்கு வெகு அருகே தெரிந்த அவள் கண்களிடம்,

“ஏன்-ன்னு நான் காரணம் கேட்கலாமா?” என்று அவள் செய்கை குறைத்து வினவியதும், தயக்கமாய்த் தலை தாழ்த்தியவள்,

“தெரியல! எல்லாரோட பக்கத்துல இருந்தும் நீங்க யோசிச்சு நடந்துக்கிட்ட விதம், சந்தோசத்தைக் கொடுத்ததாலோ என்னவோ!” எனக் கூறித் தொடர்ந்து “எப்பவும் கலகலன்னு இருக்குற ஆளு, கலங்கிப் போய் நின்னதைப் பொறுத்துக்கவே முடியல என்னால! நான் அவசரப்பட்டு வார்த்தையை விட்டதும், நீங்க கோபமா பேசிட்டுப் போனது வேற ரொம்பவே பாதிச்சது! உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேனோன்னு தோணுச்சு! ஆனா, எனக்குத் தெரிஞ்ச விருமனோட ரியாக்ஷன் இந்த விசயத்துல இப்பிடித் தான் இருக்கும்ன்னு நான் நினைச்ச மாதிரியே, நீங்க நடந்துக்கிட்டதும், எனக்கு மனசுல உண்டான உணர்வை எப்பிடி வெளிப்படுத்துறதுன்னு தெரியல.. அதான்…” என்று இழுத்தவளிடம்,

“என்னைப் பத்தி அம்புட்டுத் தெரியுமா உனக்கு?” – எனக் கேட்டதும் புன்னகைத்தவள்,

“அகலருவி சொல்லி மட்டுமில்ல!, நானே நிறைய முறை உங்களை நோட் பண்ணியிருக்கேன்! சில சமயம் எதேச்சையா.. பல சமயம் வாண்டட்-ஆ.. “ கண்ணைச் சுருக்கியவளைக் கண்டு அவன் வாயைப் பிளக்க,

“இருங்க இருங்க! அப்ப எனக்கு வேற மாதிரி எண்ணம் எதுவும் கிடையாது! நான் உங்களைக் கவனிச்சதுக்கான முக்கியக் காரணம், எப்பவும் மேல் வீடு வரைக் கேட்குற உங்க சத்தம்! ஏதாவது வம்பு செஞ்சு ஆரனோடயும், அருவியோடயும் பேச்சு கொடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டே இருப்பீங்க! எதைப் பத்தியும் கவலைப் படாம, எப்பவும் கலகலன்னு இருந்ததால, கவனிக்கத் தோணுச்சு! ஆனா.. அன்னைக்கு அந்த நிமிஷம் ஏன் அப்பிடின்னு.. எனக்கும் தெரியல!” என்றவளைக் கண்டு சிரித்துக் கொண்டவன்,

கையைத் தூக்கி சோம்பல் முறித்தபடித் தலையணையில் சாய்ந்து படுக்க,

“படுத்துட்டீங்க?, நைட் ஃபுல்-ஆ இங்க தானா?” என்று கேட்டதும்,

“நான் மட்டுமில்ல. நீயும் இங்க தான்” என்றவன், “மதியம் உன் கையை விலக்கிட்டு எழுந்து வரும் போதே, உசுரை உருவிப் போட்ட மாறி வலிச்சது. நீதேன் எல்லாம்ண்டு ஆனப்புறம், இனி உன்னை விட்டுத் தள்ளியிருக்கிறதெல்லாம் எனக்குச் சாத்தியமேயில்லை” – என்றவனை வியப்பாய் பார்த்தவளின் கைப்பற்றி இழுத்துத் தன்னருகே சாய்த்துக் கொண்டவன்,

“நீ கண்ணை விரிக்குற அளவுக்கு இங்க எதுவும் நடக்கப் போறதில்ல. அதனால ரொம்ப யோசிக்காத” எனக் கூறியதும்,

“ப்ச்” என்றவள், “நான் ஒன்னும் யோசிக்கல” என்று முகத்தைத் திருப்பியதும், அவள் கன்னம் பற்றித் தன் முகம் காணச் செய்தவன்,

“என் கூட போபால் வர்றியா?” எனக் கேட்டான்.

“நானா?” – ஆச்சரியமாய் வினவியவளிடம்,

“ஆமா! இன்னும் ரெண்டு வாரத்துக்கு எனக்கு அங்கதேன் வேலை! ஒரு வாரமா பொழப்பை கவனிக்க விடாம, உன் நினைப்பு மண்டையப் போட்டுக் குடைஞ்சனாலதேன் உன்னைய நேர்ல பார்க்கனும்ண்டு கிளம்பி வந்தேன்! நாளைக்கு நான் திரும்பப் போகனும். நான் அங்க, நீ இங்க-ண்டு தனித்தனியா இருக்கிறதெல்லாம் எனக்கு ஒத்து வராது.”

“………..”

“என்ன யோசிக்குற?”

“எங்கப்பாக்கிட்ட சொல்லனுமே”

“என்னா சொல்லுவாரு உங்கப்பு?, சண்டை கட்டுவாரா?, சொல்லு, நான் எல்லாத்துக்கும் தயாராதேன் இருக்கேன்”

“பார்றா! எங்கப்பாவும் உங்கூருக்காரருதேன்! உங்களை விடப் பெரிய முரட்டு ஆளு! தெரியும்ல”

“அப்டிண்டா எங்கூட ஒத்தைக்கு ஒத்த வரச் சொல்லு! ஜெயிச்சா, அவர் பொண்ணு எனக்குத்தேன்”

“ஷ்ஷ்ஷ் எப்பா சண்டியரே! அதுக்கெல்லாம் அவசியமே இருக்காது. எங்கப்பா உங்க தாத்தா மாதிரி! ரொம்ப முற்போக்கான ஆளு”

“அப்ப நமக்குப் பிரச்சனையில்ல!, எங்கூட உங்க பொண்ணை அனுப்பி வைங்க, பத்திரமா பார்த்துக்கிறேன்-ண்டு சொல்லி, நானே அனுமதி கேட்டுக்கிறேன்”

“அதுசரி”

“என்னா பண்றாரு உங்கப்பா?”

“மும்பைல டெக்ஸ்டைல் பிசினஸ் பார்க்குறாரு”

“ஓஓ! துணிக்கடைக்காரருல்ல, அதேன் மனசைத் தூய்மையா வைச்சிருக்கிறாரு”

“ஹாஹாஹா, இதென்ன லாஜிக்?, சொன்னாலும்,சொல்லாட்டியும் எங்கப்பாவுக்குத் தூய்மையான மனசு தான்! பொண்டாட்டி போனப்புறமும் கூட வேற துணை தேடாம, எனக்காக வாழ்ந்துட்டிருக்க மனுசன்”

“விடு! இனி அவருக்காக நாம வாழ்வோம்”

“சொல்லப் போனா, எனக்கு மதுரைக்காரப் பையனாப் பார்த்து கட்டிக் வைக்கனும்ன்றது தான் அவர் ஆசை தெரியுமா?, அப்போ தான், சொந்த ஊரோட எப்பவும் உறவு விட்டுப் போகாதுன்னு சொல்லிட்டே இருப்பாரு”

“பார்றா”

“விருமன்..”

“ம்ம்” – என்றவனுக்கு, வழக்கம் போல் அவள் தன் பெயர் சொல்லி அழைக்கும் விதம் புன்னகையைக் கொடுக்க,

“எதுக்கு சிரிக்கிறீங்க?” – எனக் கேட்டவளைக் கண்டு, ஒரு கையை தலைக்கு அடியில் கொடுத்து அவள் புறம் திரும்பியவன்,

“இதுவரைக்கும் எந்தப் பொம்பளப் புள்ளையும், என் முன்னாடி உரிமையா பேரைச் சொல்லிக் கூப்பிட்டது இல்ல. நீ கூப்பிட்றது வித்தியாசமாத் தெரியுதா, அதேன் சிரிப்பு வருது.”

“ப்ச், இப்ப நான் உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிட்றது பிடிச்சிருக்குன்றீங்களா?, பிடிக்கலன்றீங்களா?”

“பேர் சொல்லியே கூப்பிடு!அதுவும் நம்ம ஊருக்குப் போனப்புறம், அங்க ஒரு கெழவி இருக்கும். அது முன்னாடி என்னையப் பேர் சொல்லிக் கூப்பிடு, ஒரே டண்டணக்காவா இருக்கும்” – என்று சிரித்தவனிடம்,

“ஊருக்கா?” என்றவளின் கேள்வியில்,

“ஆமா! கல்யாணம் கட்டிக்கனும்ண்டா ஊருக்குப் போய்த்தேன ஆகனும்?, போபால்ல இருந்து வந்ததும் நாம நேரா ஊருக்குத்தேன் போறோம்” என்றவனைக் கண்டு,

“கல்யாணமா???” என வாயைப் பிளந்தவளிடம்,

“ஏன், வேணாமா?”

“இவ்ளோ சீக்கிரமாவா?”

“சீக்கிரமா-லாம் இல்ல. இடைல ரெண்டு மாசமிருக்கு.” – அவன் பதில் சொன்ன விதத்தில் சிரிப்பு வர, விழி மூடிப் புன்னகைத்தவளைக் கண்டு,

“என்ன???” – அதட்டியவனிடம்,

“ஒன்னுமில்ல” என்றவளது பாவனையில் கடுப்பாகி,

“எனக்குக் காதலிக்கிறதெல்லாம் ஒத்து வராது” –என அடிக்குரலில் கூற, தோள் குலுங்கச் சிரித்தவள்,

“தெரியுமே” – எனப் புருவம் உயர்த்தினாள்.

“அப்புறம் என்ன?, கட்டிக்கலாம்ண்டு சொன்னா சிரிக்குற?”

“நான் சிரிக்கல சாமி. போதுமா?” – கையைத் தூக்கிக் கும்பிட்டவளைக் கண்டு முகத்தைச் சுருக்கி,

“என்னையக் கேலி பண்ற தான நீயி?” – என்றவனிடம்,

“புரிஞ்சுடுச்சா??” –நமுட்டுச் சிரிப்புடன் வினவியவளை முறைத்து,

“போடி…” – என்று சலித்தவனைக் கண்டுப் பற்கள் தெரிய அவள் சிரித்த சிரிப்பைக் கன்னத்தில் கை வைத்து இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவன்,

அவன் பார்வையில் சிரிப்பு நின்று, முகம் கனிய, தன் கரம் உயர்த்தி அவன் தலை கோதியவளைக் கண்டு நெகிழ்ந்து, அவள் விழி கடத்திய அன்பில் கரைந்து போக நினைத்து, குனிந்து அவள் இதழ்களில் தன்னைச் சேர்த்துக் கொண்டான்.

இட்ட இதழ் முத்தம் அவர்களது, இளமைக்கு இரையாகி விட, அதன் பின்பு காந்தமாகிப் போன இருவரது இதழ்களில் வடதுருவமாய் அவனும், தென் துருவமாய் அவளும்!

இச்சையென இதை இகழ்ந்தாலும் சரி,

என் பிறப்பில் இது எச்சமாக மீந்தாலும் சரி,

காமமெனக் கணக்கெடுக்கப்பட்டாலும் சரி,

உயர் காதலென கவனிக்கப் பட்டாலும் சரி,

உன் எச்சில் பட்டுக் குளிர்ந்த எரிமலையென நானும்,

என் பக்கம் தொட்டுப் பற்றி எரியும் பனிமலையாய் நீயும்..

சிற்றின்பச் சிறைதனில்..

இட்டுக் கொண்ட எண்ணிலடங்கா இதழ் முத்தமது..

நம் காலத்தின் நீளத்தை நீட்டிக்க உதவட்டும்!