அத்தியாயம் - 3
ஸ்ட்ரிக்ட் ஆசாமியான கேசன், தாய்,தந்தையற்று வளரும் சாருமதி எந்த வகையிலும் எதற்காகவும் ஏங்கி விடக் கூடாதென்பதில் வெகு முனைப்புடன் இருந்தார்! அதிலும் தன்னால்,தன் மகனால் சாருமதிக்கு எந்த அவப்பெயரும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்.
ஆண்டாண்டு காலமாய் உடன் வளர்ந்தாலும்.. இருவரும் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட்டது கூடக் கிடையாது! ஏன், தந்தையோடு கூட சேர்ந்து அமர்ந்து உண்ட நினைவு அவனுக்குக் கிடையாது! எப்போதும் அன்னம்மா தான் உணவு மேஜையில் அவனுக்காகக் காத்திருப்பார்.
ஆனால் சாருமதி வந்த பின்பு மனிதர் மாறிப் போனார். காலை,இரவு இரு வேளையும் அவளுடன் உண்பதை வழக்கமாக்கிக் கொண்டார். ஆனால் அந்த வாய்ப்பை அவர் மகனுக்குக் கொடுக்கவேயில்லை!
தன்னை மீறி மகன் மீது வெளிப்படும் பாசம்,அக்கறையெதுவும் சாருமதியைப் பாதித்து விடுமோ என்றெண்ணிக் கூடப் பல முறை அவனை தவிர்த்திருக்கிறார்.
எடுத்துச் சொல்லியிருந்தால் கூட புரிந்து நடந்து கொண்டிருந்திருப்பான் அவன்!
அதுவரை சாருமதி என்பவளை மனுஷ ஜென்மமாம மதித்து ஒரு முறை கூட நின்று பேசியது கிடையாது அவன். கீழ்த்தளத்தின் மூலையில் இவன் அறை என்றால்.. மாடியறையின் மூலையில் அவளது அறை! தப்பித் தவறி இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலும் கூட பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.
ஆனால்.. தந்தை தன்னை விடுதியில் தள்ளி விட்ட ஆத்திரத்தில் அவளைக் காணும் போதெல்லாம் வம்பு செய்யத் துவங்கினான் வசந்த். தந்தையின் மீது காட்ட முடியாத கோபத்தை இவளிடம் வெளிப்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது. அதன் விளைவாக தன் தந்தையிடம் அவன் வாங்கிக் கட்டிக் கொள்வதும் வழக்கமாகியது.
தான் மட்டும் விடுதி சாப்பாட்டை உண்டு அரை வயிற்றுடன் திரிய.. இவள் மட்டும் வக்கணையாகத் தின்று வளர்வதா.. என்ற எண்ணத்தில்.. அந்த முறை விடுமுறைக்கு வீடு வந்த போது.. தந்தையில்லாத சமயத்தில் அவளைக் கட்டம் கட்டி விட்டான்.
அன்று தன் நண்பர்களுடன் தர்மயுத்தம் படத்துக்குச் செல்லத் தீர்மானித்திருந்தவன்... டேப்-ரெக்கார்டரில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படக் கேசட்டை ஒலிக்கச் செய்தபடி தயாராகிக் கொண்டிருந்தான்.
இடையில் கட்டியத் துண்டும்,வெள்ளை சட்டையுமாய் நின்றவனுக்கு வார்ட்-ரோபில் தான் தேடிய கால் சட்டைக் கிடைக்காது போக...
“அன்னம்மா... என் ப்ளாக் பெல்ஸ் எங்க?” என்று குரல் கொடுத்தான்.
“கருப்புக் கால்சட்டையா ராசா?”
“ப்ச், சுத்தத் தமிழ் வேற! ஆமா”
“அது மாடில காயுதே!, எடுத்துட்டு வந்துத் தரட்டுமா?”
“வேண்டாம்,வேண்டாம்! நானே போய் எடுத்துக்கிறேன்” – என்றபடி.. அறையை விட்டு வெளியே வந்தவன்..
“நினைவோ ஒரு பறவை..
விரிக்கும் அதன் சிறகை..
பறக்கும்.. அது கலக்கும் தன் உறவை...”
- டேப்-ரெக்கார்டில் ஒலித்த கமலஹாசன் குரலோடுத் தானும் பாடியபடி விறுவிறுவெனப் படியேறியவன்..
முதல் மாடியைக் கடக்க எத்தனித்த வேளை.. உள்ளிருந்து வெளி வந்த சாருமதியின் மீது இடிக்காத குறையாகச் சென்று பின் ஒருவாறு சமாளித்துக் கொண்டு நின்றான்.
சுடிதாரும்,துப்பட்டாவுமாக ஒற்றை ஜடையோடு நின்றவளின் முகத்தை அசிரத்தையுடன் நோக்கியவன்..
“கை-ல என்ன?” என்றான்.
முதலில் அவனைக் கண்டதும் வழக்கம் போல் கடந்து செல்ல முற்பட்டவள்.. அவன் வழியை மறித்து நின்று கேள்வி கேட்பதைக் கண்டு நிமிர்ந்து அவனை நோக்கினாள்.
“கையில என்னன்னு கேட்டேன்”
“புக்”
“என்ன புக்?”
“மேத்ஸ்”
“நல்லா படிக்கிறியா?”
“ம்ம்”
“நல்லாப் படிச்சா மட்டும் பத்தாது!, ரொம்ம்ம்ம்ப நல்லாப் படிக்கனும்! புரியுதா?, எங்கப்பா உன்னைத் தான் அவரோட விடிவெள்ளியா நினைச்சிட்டிருக்கார்”
“ம்ம்”
“என்ன ம்ம்?, ரொம்ப நல்லாப் படிக்கிறதுக்கு என்ன செய்யனும்ன்னு என் கிட்டக் கேட்க மாட்டியா?”
“ஏன், உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியுமே”
“வாய்ப்பே இல்ல! பார்டர்ல பாஸ் ஆகி காலேஜ் சேர்ந்திருக்கிற உங்களுக்கு ரொம்ம்ம்ப நல்லாப் படிக்கிறதப் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல”
“ஏய்.. என்ன நக்கலா?”
“அதை நான் கேக்கனும், இப்போ எதுக்கு என்னை வழியை மறிச்சு நிற்க வைச்சுப் பேசிட்டிருக்கீங்க?”
-சுருக்கியப் புருவங்களுடன் அவள் காட்டிய எரிச்சலில் திகைத்து வாயில் கை வைத்தவன்..
“பரவாயில்லயே! எப்பவும் எங்கப்பன் வேட்டிக்குப் பின்னாடி ஒளிஞ்சு நிற்கிற உன்னை.. நான் என்னமோன்னு நினைச்சேன்! இவ்ளோ பேசுவியா நீ?” – என்றான்.
“அப்டி என்ன பேசிட்டேன்?, நான் சொன்னதெல்லாம் உண்மை தான?”
“உண்மை தான்! உனக்கென்ன.. 3 வேளை வீட்டு சாப்பாடு தின்னு.. எங்கப்பன் கொட்டுற அன்பு மழைல நனைஞ்சு... குருவிக்கூட்டுக்குள்ள வாழ்ற மாதிரி.. சுகமா சுத்துற!, நான் அப்படியா?”
“ஏன், உங்களுக்கென்ன குறை?, லேட்டஸ்ட் மாடல் சட்டை உடுத்தியிருக்கீங்க!, வாட்ச்,செயின்! வாரம் தவறாம ஹேர் ஸ்டைல் மாத்துறீங்க!, ஃப்ரன்ஸ்ங்குள்ளோட தியேட்டர்,பார்ட்டின்னு போய் என் மாமா காசைத் தெண்டம் போடுறீங்க! இதை விடப் பெரிய ராஜபோக வாழ்க்கை யாருக்குக் கிடைக்கும்?”
“என்னடி விட்டா ரொம்பப் பேசுற?”
“அப்படித் தான் பேசுவேன்! உங்களால மாமா.. எவ்ளோ கஷ்டப்படுறாரு தெரியுமா?”
“அந்தாளுக்குப் புள்ளையா பொறந்ததுக்கு நான் தான் கஷ்டப்படுறேன்! இவருக்கு என்ன கஷ்டம்?”
“நீங்க இப்டியே எதுலயும் நாட்டமில்லாம, எத்தனை நாளைக்கு பொறுப்பில்லாம சுத்தப் போறீங்களான்னோ நினைச்சுக் கவலைப் பட்றார்”
“ஓஹோ”
“என்ன ஓஹோ!, தகப்பன் இல்லாத எனக்குத் தான் அந்த அருமை தெரியும்!”
“அப்படியா?”
“இருந்தும் கூட நீங்க இப்படி நடந்துக்கிறீங்க”
“ஏய்ய்ய்.. ஒரு நாள்.. ஒரு வேளை.. என்னைப் பக்கத்துல உட்கார வைச்சுப் பாசமா பேசி... சோறு பரிமாறச் சொல்லு உன் மாமாவை! அதுக்கப்புறம் நான்.. பொறுப்பு சிகரமா மாறிக்கிறேன்”
“என்ன இப்படி பேசுறீங்க?”
“நீங்களே யோசிங்க இளவரசி! அன்பும்,அக்கறையுமா உன் மாமா உன் கிட்ட பேசுற மாதிரி என்னைக்காவது என் கிட்டப் பேசியிருக்காரான்னு?”
“அவர் அன்பா பேசுற அளவுக்கு நீங்க என்னைக்காவது நடந்துருக்கீங்களா?”
“எல்லாம் எங்கப்பன் வளர்ப்பு! அதான் உன்னை இப்படிப் பேச வைக்குது”
“அதுல எனக்குப் பெருமை தான்”
“இருந்துட்டுப் போ!, உன்னால எனக்கு ஒரு காரியமாகனும்”
“என்ன?”
“எனக்கு ஹாஸ்டல்ல இருக்குறது சுத்தமாப் பிடிக்கல! மறுபடி நான் வீட்டுக்கு வரனும்! அதுக்கு உன் மாமனை நீ சம்மதிக்க வைக்கனும்!”
“நானா?”
“ஆமா!, உன்னால.. உனக்காகத் தானே என்னை ஹாஸ்டல்ல தள்ளினார் மனுஷன்?”
“என்னாலயா?, நான் என்ன பண்ணினேன்?”
“ம்ம், உன்னைப் பாவப்பட்டப் பசுவாகவும், என்னைக் கட்டுத்தறிக் காளையாகவும் அவரே இமேஜின் பண்ணிக்கிட்டார்! அதனால வந்தப் பிரச்சனை இது”
“புரியல எனக்கு”
“ப்ச், நீ வயசுக்கு வந்த பொண்ணாம்! நான் இங்க இருந்தா.. உன் மேல பாய்ஞ்சு உன்னைக் கற்பழிச்சிடுவேனாம்”
“அய்யோ!” எனக் கண்ணை விரித்து வாயை மூடிக் கொண்டவள் “நீங்க அப்டில்லாம் செய்வீங்களா?” எனக் கேட்டு வைக்க.. மேலிருந்து கீழ் வரை அவளை வினோதமாக நோக்கினான் வசந்த்.
“ரொம்ப அசால்ட்டா கேக்குற?, கற்பழிக்கிறதுன்னா என்னன்னாவது தெரியுமா உனக்கு?”
“இல்ல!, நான் பயாலஜில வீக்கு”
“வீக் ஆவே இரு! அதான் நல்லது!, ப்ச்! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”
“மாமா கிட்ட நீங்களே நேரா சொல்லலாமே!, உங்களுக்கு அங்க இருக்கப் பிடிக்கலன்னு”
“ஆமா, நான் சொன்னதும் அவர் அப்டியே கேட்டுடுவார்”
“நான் சொன்னா மட்டும் கேட்டுடுவாரா என்ன?”
“அது எனக்குத் தெரியாது. நீ தான் ஏதாவது பண்ணனும்”
“பண்ணலேன்னா?”
“ம்ம்ம்ம்ம், கற்பழிக்கிறதுன்னா என்னன்னு தெரியாதுன்னு சொன்னியே! தெரிய வைச்சிட வேண்டியது தான்”
“ச்சி”
“என்ன ச்சி?, ம்? என்ன ச்சி?” – அதட்டிக் கொண்டு அருகே வந்தவனைக் கண்டு எரிச்சலுடன் இரண்டடி பின்னே நகர்ந்தவள்.. கண்களைச் சுருக்க...
“எதுக்கு இவ்ளோ அடர்த்தியா மை தீட்டியிருக்க?” என்று வினவினான் திடீரென.
“என்னது?”
“கண்ணுக்கு எதுக்கு இவ்ளோ மை-ன்னு கேட்டேன்”
“................”
“இப்டில்லாம் தீட்டாத!, பார்க்குறவன் வேற மாதிரி நினைப்பான்” – என்றவனைக் கண்டுப் பல்லைக் கடித்தபடி அவனைக் கடந்து சென்றவள்..
போகிற போக்கில் அருகிலிருந்தப் பூந்தொட்டியை ஒரு காட்டு,காட்டி விட்டுச் சென்றதில்.. தொட்டி விழுந்து அவனது வலது கால் சுண்டு விரலை பதம் பார்த்திருந்தது.
“ஆஆஆஆஆஆ” எனக் கத்தியவனைக் சட்டை செய்யாமல் முன்னே நடந்தவளைக் கண்டு “ராட்சசி” என முணுமுணுத்துக் கொண்டான் அவன்.
அதன் பின்பு அந்த விடுமுறை நாட்கள் முழுவதிலும் அன்னம்மாவிடம் விடுதியில் போடப்படும் உணவு வகைகளின் அருமை,பெருமைகளைச் சொல்லி அவன் பொங்கித் தீர்க்க.. அவனறியாமல் அனைத்தையும் ஒட்டுக் கேட்ட சாருமதிக்குக் கொஞ்சம் பாவமாகித் தான் போனது.
அதன் பிறகு மாமாவின் மனதை மாற்றி வசந்த்தை மீண்டும் இல்லம் திரும்ப வைக்க என்ன செய்யலாம் என்றுத் தீவிரமாக யோசிக்கத் தொடங்கி விட்டாள்.
அவளுக்கு உதவும் வகையில் அன்று காலை செய்தித்தாளில் வெளி வந்தக் கட்டுரையொன்று அவள் கையில் சிக்கியது.
அதை எடுத்துக் கொண்டு நேராக மாமனின் முன்பு நின்றாள்.
“மாமா...”
“என்னடா அம்மா?”
“வ..வந்து.. நீங்க இன்னிக்கு தந்திப் பேப்பர் படிச்சீங்களா?”
“இன்னும் இல்ல, ஏன் என்னாச்சு?” – கையில் பெரிய கணக்கு நோட்டுடன் அமர்ந்திருந்தவர்.. மருமகளின் புறம் திரும்பாமலே பேசிக் கொண்டிருந்தார்.
“அது.. மாமா.. இப்போ-ல்லாம் காலேஜ் படிக்கிற பசங்க மத்தில போதைப் பொருள் பழக்கம் சகஜமா இருக்குறதா.. இந்த ஆர்ட்டிகிள்ல போட்டிருக்கு”
-அவள் கூறியதும், கண்ணாடியைச் சரி செய்தபடி அவளை நிமிர்ந்து நோக்கியவர்..
“நீ ஏன் இந்த மாதிரி கட்டுரையெல்லாம் படிக்கிற?” – என்று கேட்டு வைத்தார்.
“அ..அ..அது.. நான் கன்னித்தீவு படிக்கிறப்போ.. இது கண்ல பட்டது மாமா”
“சரி, அதுக்கு நாம என்னம்மா பண்றது?”
“நம்ம வீட்லயும் ஒரு காலேஜ் கோயிங் பர்சனாலிட்டி இருக்காரே மாமா”
“யாரு?, வசந்த்தா?”
“ஆமாம்”
“அவனுக்கு இந்தப் பழக்கம் வேற இருக்கா?, அதைச் சொல்லத் தான் சுத்தி வளைக்கிறியா?, உனக்கு எப்படி அதைப் பத்தி தெரியும்?”
-எகிறிக் கொண்டு வந்தவரின் தோளைப் பற்றி சமாதானம் செய்து..
“அய்யோ மாமா! நான் சொல்ல வந்ததை முழுசாக் கேட்காம நீங்களா ஒரு அர்த்தம் பண்ணிக்காதீங்க!” என்றவள் தொடர்ந்து..
“அவர் படிக்கிற காலேஜ்ல கூட பசங்க மத்தில இந்தப் பழக்கம் இருக்குறதா என் ஃப்ரண்ட் ஒருத்தி சொன்னா. அதுவும் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற பசங்கக் கிட்ட அதிகமா இருக்குறதா!” என்றாள்.
“அவளுக்கு எப்படித் தெரியுமாம்?”
“ப்ச், அவளுக்கு எப்படியோ தெரியும். அது எதுக்கு நமக்கு?, அதனால.. அ..அ..அவரை ஹாஸ்டல்ல தங்க வைக்காம, மறுபடி வீட்டுக்கேக் கூப்பிட்டு வந்துடலாம் மாமா”
“இந்நேரத்துக்கு அந்தத் தறுதலை இந்தப் பழக்கத்தையெல்லாம் கத்துக்காம இருப்பான்னா நினைக்கிற?”
“ச்ச,ச்ச! அவர் அப்படியெல்லாம் பண்ண மாட்டார் மாமா”
“நீ என்ன புதுசா அவனுக்கு வக்காலத்து வாங்குற?”
“இல்ல மாமா, ஹாஸ்டல்ல போடுற சாப்பாடு சரியில்லன்னு அவர் அன்னம்மாக் கிட்ட புலம்புனதைக் கேட்டேன்! பா..பாவம்ல மாமா?”
“ம்ம்ம்! கஷ்டப்படட்டும்! அப்போ தான் கொஞ்சமாவது பொறுப்பு வரும்! ருசியா சோறு திங்குறதுக்கு துட்டு வேணும்!, அந்தத் துட்டை சம்பாதிக்க படிப்பு வேணும்,பதவி வேணும்ன்னு அப்பவாவது அவனுக்குப் புரியட்டும்”
கெட்டது குடி!
“ப்ச், மாமா... அதெல்லாம் தன்னால.. காலப்போக்குல வந்துடும்!, நீங்கக் கண்டுக்காம விட்டு.. கண்ட பழக்கத்தையும் பழகிட்டு வந்தார்ன்னா என்ன மாமா பண்றது?, இங்க இருந்தாலாவது.. உங்கக் கண் பார்வையில இருக்கோம்ன்ற பயத்தோடயாவது இருப்பார்”
“யார்?, அவன் எனக்கு பயப்பட்றவனா?, அடப்போம்மா”
“...............” – அமைதியாய் ஒரு நொடி நின்றவள் பின்..
“எதுக்காக மாமா அவரை ஹாஸ்டல்ல சேர்த்தீங்க?” என்று வினவினாள்.
“.............”
“எனக்காகவா?, ஊர் ஆயிரம் பேசும் மாமா! எங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?, அப்டி என்ன நடந்துடும் நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருந்தா?” – ஆதங்கத்தில் கேட்டு விட்டவளை..
“ப்ச், வயசுக்கு மீறி பேசக் கூடாது மதி” – என்று அவர் அதட்டி விட.. மீண்டும் அமைதியாகிப் போனாள் அவள்.
அவளது முகம் சுருங்கிப் போனதைக் கண்டு அவள் தோளில் தட்டி..
“மாமா காரணமில்லாம எதுவும் பண்ண மாட்டேன்! நீ அதை,இதை நினைச்சுக் குழம்பிக்காத!” என்றார் கேசன்.
சரியெனத் தலையாட்டியவள் மீண்டும்..
“இனி.. நீங்க என் கூட உட்கார்ந்து சாப்பிட்ற நேரம்.. அவரையும் சேர்த்துக்கோங்க மாமா!, அவரும் என்னைப் போலத் தான?, 3 வயசுல அம்மாவை இழந்தவரு! உங்கக் கிட்ட அவருக்கு எதிர்பார்ப்பு எதுவும் இருக்குதோ என்னவோ.. சொ..சொல்லனும்ன்னு தோணுச்சு. சொல்லிட்டேன். தப்பாயிருந்தா மன்னிச்சுக்கோங்க” என்றவள் மெல்ல நகர்ந்து விட..
அதுவரை சலனமில்லாத முகத்துடன் நின்றிருந்தவர்.. “மதி நில்லு..” என்று நிறுத்தினார்.
“இந்தக் காலேஜ் சங்கதியைப் பத்தி உன் கிட்ட சொன்னாலே ஒரு சிநேகிதி! அவ பேர் என்ன?”
“எ....எதுக்கு மாமா?”
“இனி அவ சகவாசமெல்லாம் நீ வைச்சுக்கக் கூடாது! இந்த வயசுல டிஸ்கஸ் பண்ற விசயமில்ல இது. புரிஞ்சதா?” –எனக் கேட்டவரைப் பரிதாபமாய் நோக்கி மெல்லத் தலையாட்டி விட்டு ஓடியே விட்டாள்.
அவனுக்கு சப்போர்ட் பண்ணி நான் பேசுனா.. மனுஷன் எனக்கே ரிவீட் அடிக்கிறார் என்றெண்ணிக் கொண்டு!
சாருமதியின் புண்ணியத்தில் ஒரு வழியாக மறுபடி வீடு வந்து சேர்ந்தான் வசந்த். என்ன நேர்ந்ததென்பதை அன்னம்மா அவனிடம் புட்டு,புட்டு வைக்க.. ‘இவளா எனக்காகப் பரிந்து பேசியது’ எனக் கேட்டு மிகுந்த ஆச்சரியம் கொண்டான். ஆனால் அதை விட ஆச்சரியமொன்று அன்றிரவு நடந்தது.
இரவுச் சாப்பாட்டுக்காக சாருமதி மேஜையை அடைந்த போது, அவளுக்கு முன்பாகவே வந்தமர்ந்திருந்த கேசன் அன்னம்மாவிடம் வசந்தையும் அழைக்கச் சொல்லியதும்.. மகிழ்ச்சியாகிப் போனது மதிக்கு.
தன் பேச்சை மதித்து மாமா செய்த காரியத்தில் பூரித்துப் போய்.. மாமாவின் மீதிருந்தப் பக்தியின் அளவில் ஒரு சதவீதத்தைக் கூட்டிக் கொண்டவள்.. சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டாள்.
அன்னம்மா அழைத்ததும் அறையை விட்டு வெளியே வந்தவன்.. “என்ன?” என்றான் தந்தையிடம்.
நிமிர்ந்து அவனைப் பார்த்து அவர் முறைத்ததும்..
“என்னப்பா?” என்றான்.
“உட்காரு”
“எதுக்கு?”
“ஏன்?, காரணம் சொன்னாத் தான் உட்காருவியோ?”
“சாப்பாட்டு மேசைல எதுக்கு ராசா உட்காரச் சொல்வாங்க, சாப்பிடத் தான்” – என்ற அன்னம்மா அவன் தோளைப் பிடித்து நாற்காலியில் அமரச் செய்ய..
“என்ன இது புதுசா?” என்று கேள்வி கேட்டபடி அமர்ந்தான்.
அவன் முன்னே ஒரு தட்டை வைத்த கேசன், இட்லியையும், சாம்பார்,சட்னியையும் இட்டுத் தட்டை நிரப்ப.. நிமிர்ந்து அவரை நோக்கினான் வசந்த்.
“என்ன பண்றீங்க?”
“நான் பெத்த மகனுக்கு சாப்பாடு பரிமாறுறேன்” – தீவிர முக பாவத்தோடு கேசன்.
“எந்த லட்சணத்துல பரிமாறுறீங்க?, எனக்கு சாம்பாரை இட்லி மேல ஊத்துனாத் தான் பிடிக்கும். உங்களை யாரு சைட்ல ஊத்தச் சொன்னது?”
“ஏன் டா ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டியாடா?”
“நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்?, நான் உங்கக் கிட்ட கேட்டேனா, எனக்கு சாப்பாடு பரிமாறுங்கன்னு?”
பதில் சொல்லாமல் அவர் அன்னம்மாவையும்,சாருவையும் மாற்றி,மாற்றிப் பார்த்து வைத்தார்.
“எதுக்கு வாக்குவாதம்?, நான் ஊத்துறேன் இட்லி மேல சாம்பாரை” –என்று முன்னே வந்த அன்னத்தைத் தடுத்தவன்..
“அவரே ஊத்தட்டும்” என்றான்.
‘எல்லாம் நேரம்’ என்றபடி முகத்தை வைத்துக் கொண்ட கேசன் மகன் கூறியதைச் செய்ய..
“இந்த கறிவேப்பிலைச் சட்னியை என் தட்டுல இருந்து எடுங்க!, எனக்குப் பிடிக்காது” – மீண்டும் கட்டளையிட்டவனைக் கண்டு..
பல்லைக் கடித்தபடி அவன் சொன்னதைச் செய்தார் அவர்.
இரண்டு வாய் உள்ளே இறங்கியதும்.. அவனுக்கு விக்கல் எடுக்க.. எரிச்சலுடன் தந்தையை நோக்கி..
“டம்ளர் காலியா இருக்குறது தெரியலயா?, தண்ணி யார் ஊத்துவா?” என்றுத் திட்டவும்..
அவ்வளவு தான்! மூச்சு வாங்க முறைத்தவரைக் கண்டு ‘இவன் இன்னைக்குக் கைக்கலப்பாக்காம விட மாட்டான் போலவே’ என்று பதறிப் போன சாரு..
மேஜைக்கு அடியிலிருந்த அவன் காலில் ஓங்கி ஒரு மிதி மிதித்தாள்.
எரிச்சலுடன் அவளைப் பார்த்தவனிடம் பல்லைக் கடித்துக் கொண்டுத் தன் பெரிய கண்களால் அவள் ஜாடை செய்ய.. கண்டு கொள்ளாமல் தட்டில் கையைக் கழுவியவன்.. தந்தையை நோக்கி..
“20 வயசுப் பையன் வாய்ல பால் பாட்டிலை வைக்குற மாதிரி இருக்கு நீங்க பண்றது! இதையெல்லாம் நீங்க.. பத்து வருஷத்துக்கு முன்னாடி பண்ணியிருந்தீங்கன்னா.. இன்னிக்கு இப்பிடிப் பரிதாபமா நின்னுருக்க மாட்டீங்க”
“யாரு நான்?, நான் பரிதாபமா நிற்கிறேனா?”
“இல்லையா?, ப்ச்! ப்பா... உங்களுக்கு என்ன வருமோ அதை மட்டும் பண்ணுங்க! கண் கெட்டப்புறம் எதுக்கு சூர்ய நமஸ்காரம்?”
“பார்த்தியா அன்னம்?, என்ன வார்த்தை பேசுறான்னு, அப்படி என்ன நான் பண்ணிட்டேன் இப்போ?”
“பரிமாற வந்துட்டாரு பெருசா! எனக்கு என்னப் பிடிக்கும், பிடிக்காதுன்னாவது தெரிஞ்சு வைச்சிருக்கீங்களா?”
“ஏன் டா ஆயிரம் யோசனைகளோட இருக்குறவன் டா நான்! இதையெல்லாமாடா தெரிஞ்சு வைச்சிட்டிருப்பேன்?”
“தெரிஞ்சு வைச்சுக்கனும்! தாயில்லாத பிள்ளைக்குத் தகப்பன் தான் எல்லாமுமா இருக்கனும்!, நீங்கள்லாம் படிச்சு,சம்பாதிச்சு இவ்ளோ பெரிய நிலைக்கு வந்து என்ன பிரயோஜனம்?”
“அன்னம்.. இவனைப் பேச வேண்டாம்ன்னு சொல்லு”
“இதுக்குத் தான் நான் தினம் தனியாவே சாப்பிட்றேன்” – என்றவன் அதற்கு மேல் நில்லாமல் எழுந்து சென்று விட்டான்.
மறக்காமல்.. சாருமதியின் காலை பதிலுக்கு மிதித்து விட்டுத் தான் சென்றான்!
பல்லைக் கடித்துக் கண்ணை மூடி வலியை அடக்கியவளுக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று தான்! இந்த அப்பன்-மகன் போர் என்றுமே தீரப் போவதில்லை!
கஷ்டப்பட்டு உருவாக்கிய சூழ்நிலையை இப்படிக் கெடுத்துக் கொண்டானே! மாட்டினால்.. கடித்துக் குதறி விட வேண்டுமென்கிற எண்ணத்துடன் நடமாடியவளை.. அன்றிரவே மறுபடி சந்தித்தான் அவன்.
“அன்னம்மா...” என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தவன்.. அங்கு நின்றிருந்த சாருமதியைக் கண்டு.. “அன்னம்மா எங்க?” என்றான்.
“தூங்கப் போயாச்சு”
“சரி, உனக்கு சமைக்கத் தெரியுமா?”
“என்ன வேணும்?”
“ஒரு தம்ளர் ஓவல்”
பொறுமையாய் ஓவலைக் கலக்கியவளைக் கண்டபடி நாற்காலியில் அமர்ந்தவன்..
“எவ்ளோ நேரம் ஆகும்” என்றான்.
“அவசரமா குடிச்சுட்டுப் போய் எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீங்க?”
“ஏன் கோபப்பட்ற?”
“பின்ன கோபப்படாம?, எங்கப்பாப் பாசமா எனக்கு ஒரு வாய் சோறு பரிமாறுனதில்லன்னு கவலைப் பட்றீங்களேன்னு நான் மாமா கிட்ட பொறுமையாப் பேசி வைச்சா.. நீங்க.. அத்தனையையும் கெடுக்குற மாதிரி சண்டை போட்டு வந்து நிற்குறீங்க?”
லேசாய் நகைத்தவன்.. அவள் நீட்டிய ஓவலைப் பருகிய படி.. “ஓ! இதெல்லாம் உன் வேலை தானா?” என்று வினவினான்.
“சொல்லுங்க! அன்னிக்குப் பெருசா கவலைப்பட்ற மாதிரி பேசிட்டு இன்னிக்கு ஏன் இப்படி நடந்துக்கிட்டீங்க?”
“எங்கப்பாவைப் பார்த்தா.. பாசமாப் பரிமாறுன மாதிரியா தெரிஞ்சது உனக்கு?”
“................”
“அவர் உனக்குப் பரிமாறுறதை நான் பார்த்திருக்கேன்! பக்கத்துல உட்கார்ந்து... தலையைக் கோதி.. ‘இது வைக்கட்டுமா,அது வைக்கட்டுமா’-ன்னு கேட்டு கேட்டுப் பாசத்தைப் பொழிவார்”
“..............”
“உண்மை தான?”
“அம்மா,அப்பா இல்லாத பொண்ணாச்சேன்னு ஒரு நல்ல எண்ணத்துல அவர் அதையெல்லாம் பண்றார்! அதை விமர்சனம் பண்ணாதீங்க ப்ளீஸ்”
“அவர் ஏன் உன் மேல பாசம் காட்டுறார்ன்னு நான் என்னைக்காவது சண்டை போட்ருக்கேன்னா?, என் கிட்ட ஏன் அந்த மாதிரி நடந்துக்க மாட்டேங்குறார்?, அது தான் கேள்வி”
“.............”
“ரொம்பவும் குழப்பிக்காத! இந்த டாபிக் எல்லாம்.. உன்னைப் பொறுத்தவரை அவுட் ஆஃப் சப்ஜெக்ட் தான்! நீ இதையெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமேயில்ல! எனிவேஸ்!, நான் மீண்டும் இல்லம் திரும்ப உதவியமைக்கு கோடான கோடி நன்றிகள்!” – என்றபடி அவள் கையில் காலி தம்ளரைத் திணித்தவன்.. தொடர்ந்து..
“ஹ்ம்ம், மை இல்லாத கண்ணைப் பார்க்க.. எவ்ளோ அழகா இருக்கு!, இனி இப்படியே இரு” எனக் கூறிச் செல்ல.. என்ன பிறவி இவன் ரீதியில் வாய் பிளந்து நோக்கினாள் சாருமதி.
அதன் பிறகு.. வருடங்கள் கடக்க.. அவளை நேர் எதிரே பார்க்க நேரும் போதெல்லாம்.. ஏதேனும் வம்பு பேசி அவளை எரிச்சலோ,கோபமோ கொள்ள வைத்துக் கொண்டிருந்த வசந்த், அவள் விஷயத்தில் தெளிவாகத் தானிருந்தான் அந்த ஒரு தினத்திற்கு முன்பு வரை!
அது மஞ்சள் மேகம் சூழ்ந்திருந்த ஒரு மாலை வேளை...
விடியலின் போதும்,அஸ்தமனத்தின் போதும் மட்டுமே தோன்றும் இம்மஞ்சள் மேகக் கூட்டங்களின் கொள்ளை அழகை வர்ணித்து எழுதாத உலகத்துக் கவிஞர்கள் எவரும் இலர்!
குளிருமல்லாத, வெயிலுமல்லாத இதமான வேளையில்.. மேற்குத் திசையில் முழுதாய் மூழ்கக் காத்திருக்கும் சூரியனுக்கு விடை கொடுக்கும் நோக்கத்துடன்.. உதிர்ந்த மஞ்சள் பூக்களாய்.. வான்வெளியில் பரவிக் கிடக்கும் இம்மேகக் கூட்டம் கொடுக்கும் ரசனை.. வேறு மாதிரியானது!
அன்னம்மா கொடுத்த மாலைக் காபியையும்,சிற்றுண்டியையும் உண்டதும்.. இலங்கை வானொலி நிலையத்தை ட்யூன் செய்து விட்டு.. தோட்டத்துச் செடிகள் சிவற்றைக் களையெடுத்த வண்ணம் அமர்ந்திருந்தான் வசந்த்.
வேலை முடிந்து செம்மண் அப்பிக் கிடந்த சட்டையுடன் நிமிர்கையில்.. அவன் எதிரில் கண்டது மஞ்சள் மேகங்கள் சூழ்ந்திருந்த வானைத் தான்.
கையில் ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்தபடி சற்று நேரம் மேகக் கூட்டத்தைப் பார்த்திருந்து விட்டு.. எதேச்சையாகத் திரும்பியவன்.. முதல் மாடி பலகணியில் மஞ்சள் தாவணியும்,சிகப்புப் பாவடையுமாய்.. முன்னே விழுந்திருந்த ஒற்றை ஜடையைத் திருகியபடி.. தோழியொருத்தியுடன் புன்னகையோடு பேசிக் கொண்டிருந்த சாருமதியைக் கண்டதும்... திடீரென உள்ளுக்குள் மின்சாரம் ஊடுருவிச் சென்றதைப் போல் அதிர்வுடன் நின்று விட்டான்.
பெண்,அழகு,ரசனை,காதல் என்பதற்கெல்லாம் அவனது அகராதியில் ஒரு தனி விளக்கமே உண்டு!
ஆசை கொண்ட ஆண் மகனின் பார்வையில், எதிரிலிருக்கும் பெண் ரதியாய்த் தோன்றியதும்.. தேவதைகள் புடை சூழ காற்றாய் வந்திறங்கும் மன்மதன்.. மன்னவனின் இடது மார்பில் தன் பானத்தை செலுத்துவதும்.. பின் அதில்.. மயங்கி.. மகிழ்ந்து.. சுற்றம் மங்கி.. மறந்து.. திடீரெனத் தலை கீழாய்ப் பாயத் தொடங்கும் ரத்தத்தின் தாக்கத்தில் இறக்கையின்றிப் பறந்து.. நகக் கண்ணில் கூட சுகம் உணர்வது தான் காதல் என்று நினைத்திருந்தான்!
ஆனால்.. அதில் ஒன்றைக் கூட இப்போது அவன் உணராமல் போனது தான் துக்கம்!
காதல்.. எப்போது.. எப்படி... யார் மீது வருகிறதென்பதெல்லாம் படைத்தவனுக்கு மட்டுமே தெரிந்த தெய்வீக ரகசியம் போலும்!
திடீரென உள்ளே ஏற்பட்ட அதிர்வில் திகைத்து சட்டென மறுபுறம் திரும்பியவனுக்கு சத்தியமாகப் புரியவில்லை! ஏன் இந்த ஷாக் அடித்த உணர்வென்று! அடுத்தடுத்துப் பூத்துக் குலுங்கத் தொடங்கிய நெற்றி வியர்வையை ஒரு வித படபடப்புடனே சுண்டி எறிந்தான்.
மீண்டும்,மீண்டும் அவளைத் திரும்பிப் பார்க்கச் சொல்லி கண்களுக்குக் கட்டளையிட்ட இதயத்தை.. தடுக்கத் தோன்றாமல்.. அவன் செய்கையற்று நிற்க.. இப்போது அவனது இரண்டு கண்களுக்குள்ளும் இருநூறு சாருமதிக்கள்!
இதற்கு முன்பு அவள் தாவணி அணிந்து அவன் பார்த்ததில்லை! ஆனால்.. அதற்காக மட்டுமே கண்கள் அவள் புறம் திரும்புவதாகவும் தோன்றவில்லை! ஏதோ செய்கிறது உள்ளே! என்னவென்று அலசி ஆராயத் தோன்றவில்லை! இந்த நொடி.. அவள் பிம்பத்தை இதயத்துக்குள் அடுக்கி வைக்கப் பிடித்திருக்கிறது!
அவள் அழகி தானென்று தெரியும்! ஆனால்.. இத்தனை அழகியென்பதை இன்று தான் காண்கிறான்.
மஞ்சள் மேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு.. மஞ்சள் தாவணியில் அவள் முகம் மிளிர.. டாலடித்த வைர மூக்குத்தியின் பளபளப்பை ஓரங்கட்டி விட்டு மாலை வெயிலில் மின்னியது அவள் கன்னப்பருக்கள்! அனைத்தையும் தாண்டி.. நீலக் கடலாய் விரிந்து நின்ற அந்தக் கண்கள்.. அவனை நீந்த அழைப்பதைப் போல் உணர்ந்தான்.
காது வரை நீண்ட அவளது புன்னகையை.. இந்த அதிர்வுக்கும், இந்த சூழ்நிலைக்கும் என்ன பெயர் வைக்கலாமென்கிற குழப்பத்துடன் புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனை இப்போது அவளும் நோக்கினாள்.
பார்வையை மாற்றிக் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு புருவம் சுருக்கி அவள் என்னவென்று கேட்க..
அடித்துப்பிடித்துக் கொண்டு இதயத்தை நோக்கி ஓடி வந்த ரத்தம் கொடுத்த ‘தடதட’-ப்பில் தடுமாறி.. திணறித் தவித்து.. சட்டெனப் பார்வையைத் திருப்பியவனைக் கிளப்பி விடும் நோக்கத்துடன் வானொலி ஒலித்தது.
‘கண்மணியே.... காதல் என்பது..
கற்பனையோ.. காவியமோ..
கண் வரைந்த ஓவியமோ...
எத்தனை,எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா.. பல்சுவையும் சொல்லுதம்மா’
