அத்தியாயம் - 4
யேசுதாஸின் குரலோடு இந்த மனிதரின் குரலைக் குழப்பிக் கொண்ட அனுபவம் நம்மில் பல பேருக்கு உண்டு! மிஸ்டர்.பி.ஜெயச்சந்திரன்! இளையராஜா இசையில் இவரோட பாடல்கள் அனைத்தும் அல்மோஸ்ட் ஹிட் தான்! சித்திரைச் செவ்வானம் சிவக்கக் கண்டேன், தாலாட்டுதே வானம், பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வைச்சேனே, ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு இதெல்லாம் ஆல் டைம் ஃபேவரைட்!! ஆனா.. இந்தப் பாட்டு தான் லிஸ்ட்ல ஃபர்ஸ்ட் எப்பவும்!
“பறிக்கச் சொல்லித் தூண்டுதே... பவளமல்லித் தோட்டம்..
நெருங்க விடவில்லையே.. நெஞ்சுக்குள்ளக் கூச்சம்!
கொடியிலே.... மல்லியப் பூ.. மணக்குதே மானே..”
எப்படி யோசிச்சிருப்பார் இளையராஜா?, ஒரு இன்னசெண்ட் ஆன பையனுக்குள்ள வர்ற காதல்,அதைத் தொடர்ந்த ரொமான்ஸ்! காதலுக்கு ‘அடி ஆத்தாடி’-ன்னு பாட்டு கம்போஸ் பண்ணிட்டார்! அதைத் தாண்டின உணர்வுகளை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுத்த மெட்டு இருக்கே! Simply beautiful! ரசிப்பு,சிலிர்ப்பு,ஆசை,மோகம்! இவ்வளவு தான்! வைரமுத்து வரிகளும்,பின்ணணி இசையும்,ஜெயச்சந்திரன், ஜானகி குரல்களும் இந்த உணர்வுகள் அத்தனைக்கும் உயிர் சேர்க்கும் விதம்.. ஒரு அனுபவம்!
துணுக்கு: பாடல் இடம் பெற்ற படம் கடலோரக் கவிதைகள்.
ஆர்ப்பாட்டமான மாலை வேளையொன்றில்.. கலை நிகழ்ச்சிகளால் களை கட்டியிருந்தது வசந்தின் கல்லூரி வளாகம்!
சேலை,ஒற்றை ஜடை,சைட் ரோஸ் சகிதமாய் சில அம்மணிகள், சுரிதார்,ரெட்டைப் பின்னலுடன் சிலர், இன்னும் கொஞ்சம் மேல் தட்டு ரகப் பெண்கள் மேக்ஸியுடனும்,மிடியுடனும்! ஆக மொத்தம்.. பெண் என்றாலே ‘பன்’-ஐக் கண்டது போல் வாய் திறக்கும் நம் பெல்ஸ் இளைஞர்கள்.. அன்று தரையில் கால் படாத வண்ணம்.. மிதந்தபடியே திரிந்து கொண்டிருந்தனர்.
ஒரு சிறிய மியூசிக் ட்ரூப் ஒன்று மேடையை ஆக்கிரமித்திருக்க.. வழக்கம் போலத் தன் நான்கு நண்பர்கள் சகிதம் மேடையில் முழு உற்சாகத்துடன் மைக்கும்,பாட்டுமாய் ஆட்டம் போட்டபடி வசந்த்! வெள்ளை நிற பெல்ஸூம்,நீண்ட காலர் வைத்த சிகப்புச் சட்டையுமாய்!
“நீலாம்பரி ராகம்.. உனக்காக நீலா..
ஒன்றும் சொல்லாமல் போவாயோ.. என் கலா..
அடக் கலா...”
எப்போதும் அடித் தொண்டையையும்,மேல் தொண்டையையும் மட்டுமே உபயோகித்தில் வைத்திருக்கும் வசந்தின் குரல், அப்போது காட்டிய மென்மையில்.. மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த அவனது நண்பர்கள் விசிலைப் பறக்க விட..
முடியைக் கோதிக் கொண்டு முழுச் சிரிப்புடன்..
“சந்திக்கத் துடிக்கும் சாந்தி..
நிந்திக்க நினைப்பாள் ஜெயந்தி..
இடையினில் கிடைத்தாள் வசந்தி..
நான் எவளிடம் போவேன் மயங்கி..”
ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு பாவனையைக் கொடுத்தபடி ஆர்ப்பாட்டமாய்ப் பாடியவனைக் கண்டு கூட்டம் ஆரவாரத்துடன் கைத் தட்டத் துவங்கியது!
அவன் கூறிய பெயர்களிலிருந்தப் பெண்களனவரும் கூச்சமும்,வெட்கமுமாய் சிரிப்பை அடக்கியபடித் தலை குனிந்து கொள்வதைக் கண்டு ஆண்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க... கல்லூரிக்கே உரித்தான குறும்பும்,கும்மாளமும் அந்த இடம் முழுதையும் நிறைத்திருந்தது.
அடுத்தடுத்துப் பாட்டும்,நடனமும் தொடர.. நண்பர்களுடன் கும்மியடித்துக் கொண்டிருந்தவன்.. கூட்டத்திலிருந்து விலகி வந்தான் தண்ணீர் அருந்துவதற்காக.
தண்ணீர்த் தொட்டியினருகே நின்று நீர் அருந்தி விட்டு, முகம் கழுவிக் கொண்டிருந்த வேளை.. பின்னால் அரவம் கேட்டுத் திரும்பி நோக்கினான்.
நின்று கொண்டிருந்தவன் ஹரிஹரன்! அவனது வகுப்பைச் சேர்ந்தவன்! பொதுவாக அவன் எவருடனும் உரையாடி அவன் கண்டதில்லை! எப்போதும் தனிமையிலேயே இனிமை காண்பவன்! அதுமட்டுமின்றி.. அவனைப் பற்றி மற்றுமொரு எண்ணம் கூட மாணவர்களின் மத்தியில் உண்டு.
தயங்கித் திணறியபடி தன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முயன்று கொண்டிருந்தவனிடம்.. புன்னகைத்து..
“தண்ணி வேணுமா?” – என்று வினவினான் வசந்த்.
“இ..இல்ல.. நான் உங்க.. உன்.. உன் கிட்டப் பேசத் தான் வந்தேன்"”- குரலில் மென்மையுடன் அவன் பேசிய விதம்.. தான் கேள்வி பட்டது உண்மை தான் என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்தது வசந்துக்கு. ஆனாலும்.. காட்டிக் கொள்ளாமல்..
“சொல்லு” என்றான்.
“நீ மேடைல பாடுன விதம் ரொம்ப ரசிக்கும் படியா இருந்தது”
“அப்படியா?, ரொம்ப நன்றி” – மீண்டும் புன்னகையுடன் வசந்த்.
“ம்ம், பாவனைகளெல்லாம் ரொம்ப அருமை! லட்சணமும் கம்பீரமும் நிறைஞ்ச முகம் உனக்கு”
“அடடா!, இதையெல்லாம் ஒரு பொண்ணு சொல்லிக் கேட்டா.. என் மனசு குளிர்ந்திருக்கும்!”
-சிரித்தபடி வசந்த் கூறியதும் அதுவரை ஒரு மலர்ந்த பாவனையுடன் பேசிக்கொண்டிருந்த ஹரிஹரனின் முகம் சட்டெனச் சுருங்கி.. சுண்டிப் போயிற்று.
பின் தான் பேசியதை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்ட வசந்த் “ஏய்.. நான் தப்பான அர்த்தத்துல சொல்லல! நீ.. நீ ஹர்ட் ஆயிடாத” என்று அவசரத்துடன் கூறவும்..
மறுத்துத் தலையசைத்தபடிக் கைகளைக் கட்டிக் கொண்டான் அவன்!
அவனது முக பாவனை,செய்கை அத்தனையும் பெண்ணை ஒத்திருப்பதை சற்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் வசந்த்.
“இல்ல, நீ மனசு கஷ்டப்பட்ற மாதிரி நடந்துக்க மாட்ட. எனக்குத் தெரியும்”
“அடேங்கப்பா!, என்னைப் பத்தி உனக்கு எப்படித் தெரியும்?, க்ளாஸ்ல நீ யாரோடயும் பேசியே நான் பார்த்ததில்லையே”
“பேசுனதில்ல தான்! ஆனா.. எல்லாரையும் கவனிப்பேன்! உன்னை.. கொஞ்சம் அதிகமாவே!”
“ஏன்?”
“ஏன்னாஆஆஆ.. எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்”
“ஹாஹாஹா”
“நிஜமாத் தான்!, பொண்ணுங்களைக் கேலி பண்ணி வம்பு செஞ்சாலும்.. நீ எப்பவும் எல்லை மீறினதில்ல!, எந்தப் பொண்ணையும் ரொம்ப இண்ட்ரெஸ்ட்-ஆ பார்த்ததில்ல! பெருசா.. சண்டை,சச்சரவுக்குப் போனதில்ல!, ப்ரண்ட்ஸ்-க்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்ப”
-அவன் சொல்லச் சொல்ல வாயில் கை வைத்துக் கொண்ட வசந்த்..
“அடப்பாவி! இப்படி தூர இருந்தே என்னை சைட் அடிச்சிட்டு இருந்ததுக்கு, பக்கம் வந்து பேசியிருக்கலாம்ல டா?” – என்று கூற.. லேசாய்ப் புன்னகைத்தவன்..
“பேசியிருக்கலாம்!.. ஆனா.. நீயும் எல்லாரை மாதிரியும் என்னைக் கேலி பேசிடுவியோன்னு பயம். இதனால.. உன்னைப் பத்தின என்னோட மதிப்பு குறைஞ்சிடுமோன்னும் பயம்!”
“என்னைப் பத்தின மதிப்பா?, டேய்.. இதையெல்லாம் என் அப்பா கேட்டார்ன்னா.. ஆச்சரியப்பட்டுப் போவார் டா”
“ஹாஹாஹா” – அதிக சத்தமின்றிக் கிண்கிணியாய் நகைத்தவனை மீண்டும் ஆச்சரியத்துடன் நோக்கினான் வசந்த்.
“என்ன அப்படிப் பார்க்குற?”
“ஒன்னுமில்ல!, உனக்குப் பாட்டு,டான்ஸ்ல எல்லாம் ஈடுபாடு இல்லையா?”
“இருக்கே” என்று கண் மலரக் கூறியவன்.. “எனக்கு நடிப்பு மேல ரொம்ப ஈடுபாடு! நாடகம் போடுறதுல விருப்பம் அதிகம்.. ஸ்கூல் படிக்கும் போதெல்லாம்.. சரித்திர நாடகங்கள்ல நிறைய நடிச்சிருக்கேன்! இப்போவும் ஒரு சின்ன நாடகக் குழுவுல மெம்பர்-ஆ இருக்கேன்! அப்பப்போ.. தெருக்கூத்துகளுக்குப் போவேன்!” என்றான்.
“எனக்கும் கூட நடிப்புன்னா இஷ்டம் தான்! ஸ்கூல் படிக்கும் போது வருஷம் தவறாம கலந்துக்குவேன்! காலேஜ் வந்தப்புறம் அது பாட்டாகவும்,டான்ஸாகவும் மாறிடுச்சு! எந்த வகையிலாவது மேடையேறிடனும் எனக்கு! மேடை தான் என் முதல் காதலின்னு நானே சொல்லிக்குவேன்” – என்று வசந்த் கூறியதும்..
“நான் ஒன்னு கேட்டா.. தப்பா நினைச்சுக்க மாட்டியே?” என்றான் ஹரிஹரன்.
“சொல்லு”
“எங்க நாடகக் குழுவுல நீயும் சேர்ந்துக்குறியா?, எங்கக் குழுவைச் சேர்ந்த யாருக்கும் உன் அளவு ஹீரோ ஃபேஸ் கிடையாது!”
“நாடகமா? நானா?, எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா.. பெல்ட்டாலேயே என்னைப் பரலோகம் அனுப்பிடுவார்”
“ஓஓஓஓஓ”
“உடனே முகத்தை சுருக்கிக்காத! எல்லா விஷயத்துலயும் என் அப்பாவுக்கு எதிரா நடந்துக்கிறது தான் என் ஜீவ சங்கல்பம்! அதனால யோசிச்சு சொல்றேன். சரியா?”
“ம்ம்!” – கண்ணும்,முகமும் மலரத் தலையாட்டியவனின் சிறு பிள்ளைத் தனமான பாவனையைக் கண்டு சிரிப்பு வர.. அவன் தோளில் அடித்த வசந்தின் செய்கையில்.. தடுமாறி.. கூச்சத்துடன் சற்றுத் தள்ளி நின்று கொண்டான் ஹரி.
“என்னாச்சு டா?” – என்றவனின் கேள்விக்கு.. பதில் சொல்ல முடியாமல் திணறி.. தலை குனிந்தபடி..
“கொ..கொஞ்சம்.. கூச்சமாயிருக்கு” என்றான் அவன்.
“எப்பவுமே இப்படித் தான் இருக்குமா?”
“இ..இல்ல.. பழகிட்டா.. குறைஞ்சிடும்!” – மிகுந்தத் தயக்கத்துடன் வந்தது பதில்.
“ஹ்ம்ம்ம்” – என்ற வசந்த்.. அமைதியாக நடப்பதைக் கண்டு அவன் முகம் பார்த்தவன்.. அதே தயக்கத்துடனே..
“என்னால.. இயல்பா யாரோடயும் பழக முடியாதோன்னு தான் நான் யார் கூடவும் பேசுறதில்ல” – என்றான்.
“ப்ச், அங்க தான் நீ தப்பு பண்ற!, இது வெறும் ஹார்மோனல் சேஞ்ச் தான்!, பசி,தூக்கத்தைத் தர்ற ஹார்மோன்ஸையெல்லாம் நாம பழி சொல்லிக்கிட்டா இருக்கோம்?, அந்த மாதிரி தான் இதுவும்!, பையனா உருவத்தைக் கொடுத்த ஆண்டவன்.. பொண்ணுக்கான ஹார்மோனை உனக்குக் கொடுத்திருக்கிறான்னா.. அது அவனோட தப்பு தான். உன்னோடது இல்ல”
“என்.. என் அப்பா கூட இப்படித் தான் சொல்லுவார்”
“அப்பாவாஆஆஆஆ?, உன் அப்பா நல்லவரா?”
“என்ன இப்படிக் கேக்குற?”
“எங்கப்பா ரொம்பபபபபபக் கெட்டவரு! அதான் கேட்டேன்”
“அப்பா எப்படிக் கெட்டவரா இருக்க முடியும்?”
“இருக்காரே!, எங்கப்பா!”
“நீ ஏதோ அவரைப் பத்தித் தப்பாப் புரிஞ்சிட்டிருக்க போல”
“ஆமாமாமா.. அடப் போடா!”
“...................” – சிறிது நேரம் அமைதியாய் நடந்த ஹரி..
“நீ சொல்றது எல்லாம் சரி தான்! ஆனா.. நடப்புல எல்லாத்தையும் சந்திக்கும் போது.. வர்ற சேலஞ்சஸ்.. ரொம்பக் கஷ்டமானது! யாரும் இயல்பா நெருங்கிப் பழக மாட்டாங்க! கேலி,கிண்டல் ஒரு பக்கம்! ஏன் வாழ்றோம்ன்னு தான் பல முறை நினைச்சிருக்கேன்!”
“ப்ச், யார் தான் சேலஞ்சஸை ஃபேஸ் பண்ணாம இருக்காங்க! ஒரு நாள் எங்கப்பனை சமாளிச்சுப் பாரு, இந்த உலகத்தையே சமாளிச்சுடலாம்ன்ற தைரியம் தன்னால வந்துடும்”
“ஹாஹாஹா.. நீ ஏன் அவரை இவ்ளோ திட்டுற?”
“அந்தாளுக்கு மகனாப் பொறந்துட்டு நான் பட்ற பாடு, சொல்லித் தீர்க்க முடியாது”
“ஹாஹாஹா..” – மீண்டும் கலகலவென நகைத்தவனை நின்று பார்த்துப் புன்னகை கொண்டான் வசந்த்.
“நீ மட்டுமில்ல!,நானும் உன்னை நிறைய கவனிச்சிருக்கேன்! சோலோவாவே சுத்துறானே-ன்னு பேசலாமான்னு நினைச்சிருக்கேன்! ஆனா.. நான் கொடுக்குற ஸ்பெஷல் அட்டென்ஷன் உன்னை பாதிக்குமோன்னும் கவலைப்பட்டுருக்கேன்”
“நீ ரொம்ப நல்லவன் வசந்த்”
“இந்த ஸ்டேட்மெண்ட்டை அப்டியே ஒரு பேப்பர்ல எழுதிக் கொடு டா! எங்கப்பாக் கிட்ட காட்டனும்”
“விளையாடத வசந்த்! நான் உண்மையா தான் சொல்றேன்”
“சரி! இனி யாராவது கேலி பண்ணுவாங்களோன்னு ஒதுங்கியிருக்காம, இயல்பாப் பழகு! அதையும் மீறி யாராவது ஏதாவது செஞ்சா.. என் கிட்ட சொல்லு! நான் பார்த்துக்கிறேன்”
திருத்தப்பட்டப் புருவங்களுக்குக் கீழிருந்தத் தன் பெரிய கண்களை விரித்தபடி அவன் கூறியதைக் கேட்ட ஹரி..
“அப்போ நீயும்,நானும் ப்ரன்ஸ்-ஆ” என்று வினவ..
“அட ஆமா டா!, ப்ச், தோளைத் தட்டிச் சொல்லனும் போல இருக்கு! நீ கூச்சப்பட்டு நாலடி பின்னாலே போய்டுவன்னு தான் அமைதியா நிற்குறேன்” – என்று வசந்த் கூறியதும் புன்னகைத்துக் கொண்டான் ஹரி.
“அப்புறம், நான் சொன்னதை யோசி! எங்க நாடகக் குழுவுல சேர்றதைப் பத்தி”
“கண்டிப்பா யோசிக்கிறேன்” – என்று கூறியதும் அவன் விடைபெற.. அவனையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான் வசந்த்.
அச்சு,அசல் பெண்ணைப் போலவே ஒரு நடை அவனுக்கு! தரைக்கு வலிக்காத வண்ணம் சின்ன எட்டுக்களால் முன்னே செல்பவனை வியப்புக் குறையாமல் நோக்கினான்.
காக்கா,குருவி,பன்றி,நாய்,காண்டாமிருகம்,சாருகேசன் போன்ற கடவுள் உருவாக்கிய ஜீவராசிகளின் வரிசையில்.. இது எந்தமாதிரியான படைப்பு?
உடல் அளவில் ஆணாகவும்,மனதளவில் பெண்ணாகவும்.. இரு வகையான பாலினங்களையும் ஒரு உருவில் பெற்று.. அடையாளமும்,அங்கீகாரமும் இன்றி.. கல்லாய்,மண்ணாய் இப்பூமியில் வாழ வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது யார் தவறு?
மீசை,தாடியெதுவுமின்றி,திருத்தப்பட்டிருந்தப் புருவங்களுடன் பெண் முகத்தைப் பிரதபலிக்க முயற்சியெடுத்திருந்தவனின் ஒவ்வொரு செய்கையிலும் அத்தனை நளினம்!
நினைக்க.. நினைக்க வியப்பு தான் வசந்துக்கு!
இரட்டைப் பிறவிகளை, ஆறு விரல் கொண்டவர்களை, இடது கை பழக்கமிருப்போரை எல்லாம் ஆச்சரியமாய்ப் பார்த்து.. ஏற்றுக் கொள்ளவும் தெரிந்த நாம், இதை மட்டும் எதற்காக வித்தியாசமாய் ஒதுக்கி வைக்கிறோம்?
இதுவும் கூட மேற்கூரிய வரிசையில் வரும் அசாத்திய மனிதப் பிறவிகளின் பட்டியலில் ஒன்று தானே?,
வசந்தைப் பொறுத்தவரை ஹரி ஒரு ஆச்சரியம்! அதிசயம்!
எப்போதும் ஒதுங்கியிருப்பவன்.. இன்று அருகில் வந்து பேசவும்.. இதையே வாய்ப்பாக பயன்படுத்தி அவனை நெருங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டான்.
தனது இந்த உடல் மாற்றங்களைப் பெரிதாக நினைத்துக் கொண்டுத் தள்ளியே நிற்பவனை.. இயல்பாக்கி விட வேண்டுமென்கிற உத்வேகம் அவனுக்குள்!
ஏதேதோ எண்ணங்களுடன் வீடு வந்து சேர்ந்தவனை வரவேற்றது டைனிங் டேபிளில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த சாருமதி தான்!
தந்தையுடன் நடந்த பெல்ட் சண்டைக்குப் பிறகு இவளுடன் சமாதானமாகியிருந்தாலும்.. அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை அவன்!
“அன்னம்மா...”
நாற்காலியில் அமர்ந்து கொண்டு வழக்கம் போலக் குரல் கொடுத்தவனைக் கண்டுப் பல்லைக் கடித்த சாரு..
“நட்ட நடு ராத்திரி வீட்டுக்கு வந்ததுமில்லாம, இப்போ அன்னம்மாவை வேற ஏன் எழுப்புறீங்க?” என்று வினவினாள்.
“சாப்பிடத் தான். பசிக்குது”
“உங்க முன்னாடி தான் எல்லாம் இருக்கே! எடுத்துப் போட்டு சாப்பிட வேண்டியது தான?”
“நான் என்ன பண்ணனும்ன்னு நீ எனக்கு சொல்லிக் கொடுக்கிறியா?, ப்ச், உன் கூட எனக்கு என்னப் பேச்சு?” என்றவன் தொடர்ந்து.. “அன்னம்மா...” – என்று குரல் கொடுக்க.. கையிலிருந்தப் புத்தகத்தை டொக்கெனக் கீழே வைத்தவள்..
“அன்னம்மாவுக்கு உடம்பு சரியில்ல. மருந்து கொடுத்து நான் தான் தூங்க வைச்சிருக்கேன்” – என்றாள்.
“ஏன்?, என்னாச்சு?” – பதற்றத்துடன் எழுந்தவனைத் தடுத்து..
“சாதாரணக் காய்ச்சல் தான்! இருந்தாலும் நான் தான் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டேன்! தூங்குறவங்களை நீங்க எழுப்ப வேண்டாம்” என்று அவள் கூற..
அவளைச் சட்டை செய்யாமல் விறுவிறுவென உள்ளே சென்றவன்.. அறைக்குள் உறங்கும் அன்னம்மாவின் நெற்றியில்,கழுத்தில் கை வைத்துப் பார்த்து.. காய்ச்சலின் அளவைக் கண்டு விட்டு.. வெளியே வந்தான்.
கைகளைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்தபடி நின்றவளிடம்..
“என்ன?” என்றான்.
“நான் சொல்லச் சொல்லக் கேட்காம நீங்க பாட்டுக்கப் போறீங்க?”
“நீ இப்படி அதட்டி,உருட்டி என் கிட்டப் பேசுறது எனக்குச் சுத்தமா பிடிக்கவே இல்ல தெரியுமா?”
“ஓஹோ! சும்மா போனவ வழியை மறிச்சு, எங்கப்பாக் கிட்டப் பேசி என்னை ஹாஸ்டல்ல இருந்து வீடு திரும்ப வழி பண்ணுன்னு கேட்குறதுக்கு முன்னாடி நீங்க இதையெல்லாம் யோசிச்சிருக்கனும்”
“அதாவது.. என் தயவுல தான் டா நீ இந்த வீட்ல நடமாடுறன்னு சொல்லாம சொல்றியா?”
“நான் எப்போ அப்படிச் சொன்னேன்?”
“பின்ன நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?”
“இப்போ நாம சண்டை போட்றோமா?”
“இல்ல தான்! வந்த வேலையைப் பார்க்குறேன்” – என்றவன் தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர.. தானும் புத்தகத்துடன் அமர்ந்தாள் சாருமதி.
“நீ போட்டது.. என் கண்ணிலே மந்திரம்..
நான் பார்த்தது.. அழகின் ஆலயம்..
சரி தான்! நடக்கட்டும் இளமையின் ரசனை!
பேரைச் சொல்லவா.. அது நியாயமாகுமா..?”
ஒருபுறம் எஸ்.பி.பியும்,எஸ்.ஜானகியும் டேப் ரெக்கார்டர் வழியே காதல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்!
‘பாட்டுக் கேட்டுக்கிட்டே படிக்கிறது என்ன பழக்கமோ!’
புத்தகத்தை விட்டு இங்கும்,அங்கும் நிமிராமல் குனிந்து அமர்ந்திருந்தவளைக் கண்டபடி இடியாப்பத்தை வாயில் திணித்தவனுக்குத் தன்னுடைய ‘லவ் லெட்டர்’ சம்பவம் நினைவுக்கு வந்தது.
அந்த ஒரு மஞ்சள் மாலையில்.. ஏகப்பட்ட உணர்ச்சி மாற்றங்களின் இடையே சிக்கிக் கொந்தளித்துப் போய் நின்றவனின் பார்வை.. அதன்பிறகு அவளைப் பார்க்கும் போதெல்லாம்.. அதே ‘ஷாக்’ உணர்வைப் பிரதிபலிக்க.. சற்று நின்று.. நிறுத்தி நிதானமாய் யோசிக்கத் தொடங்கினான்.
இதற்கு முன்பு அவன் அழகான பெண்களை ரசித்ததில்லை என்று கூறி விட முடியாது. நண்பர்களோடு சேர்ந்து கேலியும்,கிண்டலுமாய் ‘சைட்’ அடிப்பதிலேயே அந்த ரசனைகளின் எல்லை நின்று விடும்! அதையும் மீறி மனதில் நின்ற முகங்கள் எல்லாம்.. அன்னம்மாவின் ஆப்பத்தைக் கண்ட பின்பு மாயமாய் மறைந்து போனது கிட்டத்தட்ட அவமானத்திற்குரிய விஷயம் தான்!
மறுபடி,மறுபடி பார்க்கச் சொல்லியோ, நினைக்கச் சொல்லியோ.. அவனது மனம் இது போல் என்றும் சண்டித் தனம் செய்ததில்லை!
ஒரு வகையில் இது அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது. இருவரும் ஒரு முறை கூட இயல்பாய்ப் பேசிக் கொண்டதில்லை! அப்படியிருக்கும் பட்சத்தில் ஒரு மஞ்சள் மேகமும்,மஞ்சள் தாவணியும் இத்தனைத் தாக்கத்தை என்ன
எழவுக்காக ஏற்படுத்திச் செல்ல வேண்டுமென்று எண்ணிக் கொண்டான்.
அடி மனது கொடுத்த இந்த நமைச்சலுடனே சுற்றியவனின் முக மாற்றத்தை அன்று முழுதும் உற்று,உற்றுப் பார்த்துக் கவனித்துக் கொண்டிருந்தவளின் பார்வை வேறு... எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்ற... முழுதாக 24 மணி நேரம்.. பொறுத்துப் பார்த்தவன்.. வெகுவாக யோசித்து..
மறுநாள் காலை ஒரு காகிதத்தில் ஐ லவ் யூ – வசந்த் என எழுதி அதை நான்காய் மடித்து அவளது புத்தகமொன்றில் வைத்து விட்டான்.
பார்த்தவுடனே தெரியும்படி நீட்டிக் கொண்டு நின்ற காகிதத்தை எடுத்து முதலில் படித்தவர் மிஸ்டர்.கேசன்!
அடுத்த நிமிடம் “வசந்த்த்த்த்த்த்த்த்த்” என கர்ஜித்தவரைக் கண்டு அனைவரும் பதறியடித்து ஓடி வந்தனர்.
தந்தையின் கையிலிருந்தக் காகிதத்தைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தவன் மறு நொடி.. அவரருகே புரியாத பார்வையோடு நின்றிருந்த சாருவை முறைத்துப் பார்த்தான்.
“என்னடா இது?” – கேசன்.
“எனக்குத் தெரியாது” – தோளைக் குலுக்கிக் கொண்டு அலட்சியமாய்ப் பதிலளித்தான்.
“ஐ லவ் யூ – வசந்த்! நீ தான இந்த வீட்ல வசந்த்?”
“ஆமா.. அதனால?”
“எதுக்காக இப்படி எழுதி சாருவோட புத்தகத்துக்குள்ள வைச்சிருக்க?”
“அவ புத்தகத்துல இருந்ததை நீங்க எதுக்கு எடுத்துப் படிச்சீங்க?”
-அவனுக்கு மிக மிக எரிச்சலாகிப் போனது! என்னவென்றே புரியாமல்.. இதுவாகத் தான் இருக்க வேண்டுமென்கிற கணிப்புடன்.. போகிற போக்கில் ஒரு ஐ லவ் யூ-வை எழுதி இவன் அவளது புத்தகத்துக்குள் வைக்க.. அதைச் சரியாக எடுத்துத் தொலைத்தது மட்டுமில்லாமல் கேள்வி வேறு கேட்கிறார் மனிதர்”
“டேய் படவா!, ஒழுங்கா நான் கேட்குறதுக்குப் பதில் சொல்லு டா”
“ப்ச்,இதை நான் எழுதலப்பா!”
“வசந்த்-ன்னு தெளிவா பேரு போட்டு வைச்சிருக்க?, இப்போ மாட்டிக்கிட்டதும் மாத்திப் பேசுறியா டா ராஸ்கல்?”
“ஏன், இந்த உலகத்துலயே நான் ஒருத்தன் மட்டும் தான் வசந்த்-ஆ?”
“இது உன் கையெழுத்து தான். எனக்கு நல்லாத் தெரியும். ஒன்னாங்க்ளாஸ் பையன் கிறுக்கி வைச்ச மாதிரி கோணல்,மானலா இருக்கு”
“அப்பாஆஆஆ....”-இப்போது முழு கடுப்புடன் வசந்த்.
“இருக்காது மாமா!, அவரா இருக்காது. எனக்கு நிச்சயமாத் தெரியும்! ஆனா.. யாரு இப்படி எழுதி என் புக்ல வைச்சிருப்பா?” –திடீரென இடை புகுந்துத் தனக்காக வக்காலத்து வாங்கியவளைக் கண்டு சந்தோசத்துக்குப் பதில் கோபம் தான் வந்த வசந்துக்கு.
முறைப்புடன் அவள் புறம் திரும்பியவன்..
“ஏன்? ஏன்? ஏன் நானா இருக்கக் கூடாது? உன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொல்ற அளவுக்கு எனக்குத் தகுதியில்லன்னு நினைக்குறியா?”
“இது என்னப் பேச்சு? நான் எப்போ அப்படிச் சொன்னேன்?”
“அப்டின்னா.. அப்பா.. அந்த லெட்டரை அவ கைல கொடுங்க! அவ என்ன பதில் சொல்லப் போறான்னு எனக்குத் தெரியனும்”
-மாமனும்,மருமகளும் அவன் கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போய் நிற்க.. முதலில் சுதாரித்த கேசன்..
“ராஸ்கல், எவ்ளோ தைரியம் இருந்தா.. இந்தக் கருமத்தை அவ கைல கொடுக்கச் சொல்லி என்னையே ஏவுவ?, ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருந்தா.. அப்படியென்ன மாமா நடந்துடும்ன்னு கேட்டியேம்மா மதி?, இதோ.. இது தான்! இந்தப் பய மேல எனக்குத் துளி கூட நம்பிக்கைக் கிடையாது! அங்க,இங்கத் தொட்டுக் கடைசியா அடிமடில கையை வைச்சுட்டான் பார்த்தியா?”
“ஷ்ஷ்ஷ்.. அப்பா.. எதுக்கு இவ்ளோ லெங்க்த்தியா டையலாக் பேசி எனர்ஜி வேஸ்ட் பண்றீங்க?, நெத்தியெல்லாம் வேர்த்துப் போய்.. எப்படி மூச்சு வாங்குது பாருங்க!, அன்னம்மா.. அப்பாவுக்கு ப்ரஷர் மாத்திரையெல்லாம் நீ சரியா கொடுக்கிறியா இல்லையா?”
“தினமும் காலைலயும்,ராத்திரியும் தவறாம கொடுத்திடுவேன் ராசா” –சின்சியராகப் பதில் சொல்லியபடி அன்னம்மா வேறு இடையில்!
“என் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறுறதுக்குக் காரணமே நீ தான் டா!, அக்கறையா என்ன கேள்வி வேண்டிக் கிடக்கு?, பேச்சை மாத்தி.. தப்பிச்சுக்கலாம்ன்னு பார்க்குறியா?”
“நான் பேச்சை மாத்தல-ப்பா!,” என்றவன் சாருவின் புறம் திரும்பி..
“ஐ லவ் யூ-ன்னு எழுதி உன் புக்-ல வைச்சது நான் தான்!” என்றான்.
“நீ...நீங்களாஆஆஆஆ?”-என்று இழுத்த சாருமதிக்கு அவன் சொல்ல வந்த விசயத்தைக் காட்டிலும், மாமாவின் முக பாவனையே நிறைய கலக்கமூட்ட.. அவரையும்,அவனையும் மாற்றி மாற்றிப் பீதியுடன் பார்த்தாள்.
“உன்னைப் பிடிச்சிருக்கா,இல்லையா.. உன்னை நேசிக்கிறேனே இல்லையா.. இந்த உணர்ச்சிகளெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும்ன்னு தெரிஞ்சுக்க.. காதலிச்சுப் பார்க்கனும்ன்னு தோணுச்சு! அதனால தான் யோசிக்காமப் பட்டுன்னு லெட்டர் எழுதிட்டேன்! நீ சொல்லு! காதலிக்கலாமா?”
கலக்கம்,பயம்,பீதி அனைத்தையும் தாண்டி.. வியப்பு ஒன்றே மேலோங்க.. விரிந்த வாயுடன் அவனை நோக்கியவளைக் கண்டவனுக்கு.. மெல்ல மெல்ல இதழ் விரிந்து.. புன்னகை தோன்ற... கன்னக்குழியுடன் அழகாகச் சிரித்து..
“உனக்குத் தோணுதோ இல்லையோ! எனக்கு நிறையத் தோணுது! காதலிச்சே ஆகனும்ன்னு”
-அவன் முடித்ததும் அவனது இரு கண்களிலும் பூச்சி பறக்குமளவிற்கு பட்டெனக் கன்னத்தில் அறைந்த சாருகேசன்..
“கமலஹாசன் மாதிரி தலைமுடியும்,மீசையும் வைச்சுக்கிட்டா.. நீ பெரிய காதல் மன்னன் ஆயிடுவியா டா?, ராஸ்கல்! அப்பா முன்னாடி நிற்கிறோம்ன்ற பயம் கொஞ்சமும் இல்லாம.. எவ்ளோ தைரியமா அவக் கிட்ட உளறுவ?” – எனக் கேட்டு.. அவன் கோபத்தைக் கிளப்பி விட.. பதிலின்றி இருவரையும் கலவர முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சாருவை ஏகத்துக்கும் கொலைவெறியுடன் நோக்கி விட்டுச் சென்றவன்... அதன் பிறகு பெல்ட் சம்பவத்தின் போது தான் மீண்டும் சந்தித்தான்!
புத்தகத்தினுள் ஆழ்ந்திருந்தவள் நிமிர்ந்து.. தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு..
“என்ன அப்படிப் பார்க்குறீங்க?” என்று வினவினாள்.
“நீ அடிக்கடி தாவணி போடுவியா?”
“ஹ்ம்ம்!, ஸ்கூல் யூனிஃபார்மே தாவணி தான?”
“ப்ச், அது இல்ல! அ..அ..அந்த மஞ்சள் கலர் தாவணி”
“என் கிட்ட மஞ்சள் கலர் தாவணியிருக்கிறது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
வெகு சிரமப்பட்டு முக பாவனையை அடக்கித் தட்டை அளந்தவன்.. பின் கையைக் கழுவியபடியே..
“போன வாரம் ஞாயிற்றுக் கிழமை நீ அந்தத் தாவணி தானே உடுத்தியிருந்த?, அதனால தெரியும்” – என்றான்.
“ஓ...”
“எனக்காக ஒன்னு செய்வியா?” – கெஞ்சலுடன் முகத்தை வைத்துக் கொண்டவனைக் கண்டு புருவம் சுருக்கி..
“என்ன?” – என்றவளிடம்..
“இனி அந்தத் தாவணி உடுத்தாத” – என்றான்.
குழப்பத்துடன் “ஏன்?” என்றவளிடம்..
“ம்ம், அதை நீ உடுத்துனா.. மறுபடி நான் லவ் லெட்டர் கொடுப்பேன். பரவாயில்லையா?” - மிடுக்குடன் கூறியபடி எழுந்து கொண்டவன்..
“அப்புறம்.. அடிக்கடி இப்படிக் கண்ணை விரிச்சு,விரிச்சுப் பார்க்காத!, எனக்கு நீச்சல் எல்லாம் தெரியாது” – என்று மொழிந்து விட்டு நகர்ந்து விட.. புரிந்தும்,புரியாத பாவனையுடன்.. முகம் மாற... அமர்ந்திருந்தாள் சாருமதி.
அன்று இடியும்,மின்னலுமாய்ப் பெய்த பலத்த மழையின் விளைவால்.. அந்தப் பின் மாலை நேரம் பாரபட்சமின்றி முழுதாய் நனைந்திருந்தது.
அப்போது இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முதல் நாள் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் (டிசம்பர்,1981) ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று விட.. நாடே மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்தது. திலிப் வெங்சர்கார் அடித்த சதம் பெரிதாகப் பேசப்பட.. அடுத்த போட்டியில் ஜெயித்து விட்டால்... அத்தொடருக்கான கோப்பையை வென்று விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் ஆர்வலர்கள் காத்திருந்தனர்.
வானொலி வழி வந்த செய்தியைக் கேட்டபடி மழைக்கு ஒதுங்கி ஒரு டீக்கடை வாசலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வசந்த்.
சிறிது நேரத்தில்.. கையில் குடையுடன் சாலையில் நடந்து சென்ற ஹரியைக் கண்டு... “டேய்.. ஹரி..” என்றழைத்தபடி அருகே ஓடிச் சென்றான்.
“வசந்த்... நீ எங்க இந்தப் பக்கம்?” – முகம் மலரக் கேட்டவனிடம் சிரித்து.. “என் வீடு இந்தப் பக்கம் தான்! மழைக்காக ஒதுங்குனேன்” என்றான் வசந்த்.
“என் வீடு கூடப் பக்கத்துல தான்! உன்னை நான் இதுக்கு முன்னாடி இங்க பார்த்ததே இல்லையே” என்றவன் தொடர்ந்து “வா என் வீட்டுக்குப் போகலாம்” எனக் கூறிக் கையோடு அழைத்துச் சென்று விட்டான்.
ஒற்றைப் படுக்கையறை கொண்டத் தனி வீடு ஒன்றில் தனியாகக் குடியேறியிருந்தான் அவன்.
கேள்வியாக நோக்கிய வசந்திடம் “அம்மாவுக்கு நான் இப்படியிருக்கிறது பிடிக்கல! நான் அங்க இருந்தா.. தம்பி,தங்கச்சி வாழ்க்கைப் பாதிக்கப்படுமோன்னு பயந்து.. என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க. ஆனா.. அப்பா தான் என்னை இங்க வீடு பார்த்துக் குடி வைச்சு காலேஜூம் சேர்த்து விட்டார்.” என்றான்.
“நிஜமாவே உங்கப்பா க்ரேட் டா ஹரி”
“ஹ்ம்ம், கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அப்புறம் இதை இயல்பா ஏத்துக்கிட்டார். அடிக்கடி என்னை வந்து பார்ப்பார்”
-சிரிப்புடன் கூறியவனைக் கண்டுத் தானும் புன்னகை கொண்டு வீட்டைச் சுற்றிப் பார்த்தான் வசந்த்.
ஒரு புற அலமாரி முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு அருகே சென்றான்.
“நிறைய புத்தகம் படிப்பியோ?” - வசந்த்
“ம்ம், உனக்கு மேடை முதல் காதலின்னா.. எனக்குப் புத்தகம்”
“நாடகக் கலை பத்தின புத்தகங்கள் தான் நிறைய இருக்கு”
“சொன்னேனே.. எனக்கு மேடை நாடகங்கள்ல ஈடுபாடு ஜாஸ்தின்னு”
“ஹ்ம்ம்.. எனக்கு ரெண்டு புஸ்தகம் இரவலா கொடுக்குறியா?, படிச்சிட்டுத் தர்றேன்”
“ம்ஹ்ம், புத்தகத்தை மட்டும் நான் யாருக்கும் கடன் கொடுக்குறது இல்ல! நீ தான் எனக்கு ஃப்ரண்ட் ஆயிட்டியே! வேணும்ன்றப்போ எல்லாம் இங்க வந்து படிச்சிட்டுப் போ”
“அதுசரி!”
“சரி, என்ன சாப்பிட்ற?, டீ ஆர் காஃபி?”
“ஏய்.. நீ தான் சமையலா இங்க?”
“ஆமா பின்ன?, எனக்கு சமையல்ன்னா ரொம்ப இஷ்டம்”
“அப்டின்னா டீ,காஃபி எதுக்கு?, சாப்பாடே சாப்பிட்றேன்”
“நிஜமா?” என்றவன் உற்சாகமாய் சமையலறைக்குச் சென்று விட.. வீட்டை நோட்டம் விட்டான் வசந்த்.
கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டுக்கள், செல்ஃபிலிருந்த நெய்ல் பாலிஷ் பாட்டில்கள், லிப்ஸ்டிக்குகளையெல்லாம் மெல்லப் பார்வையிட்டபடி நடந்த வசந்த்..
“இதுவும் இஷ்டமோ?” – என்றபடி அவற்றையெல்லாம் கை காட்டிக் கேட்க.. தயக்கமாய்த் தலை குனிந்த ஹரி....
“ம்ம்..” என்றான்.
அவன் சங்கடப்படுவதை உணர்ந்து..
“எல்லாம் டார்க் ஷேட்-ஆ இருக்கே டா! உன் ஸ்கின் கலருக்கு செட் ஆகுமா?” என்று சாதாரணமாகக் கேட்டபடி நடந்து சென்று சமையல் மேடையில் ஹரியின் அருகே நின்று கொண்டான்.
அவன் கேள்வியில் பளிச்சிட்டக் கண்களுடன் அவன் முகம் பார்த்தவன்.. அவன் முயற்சியைக் கண்டு கொண்டு..
“இதெல்லாம் வீட்டுக்குள்ள மட்டும் தான்!, வெளிய போகும் போது போட்டுக்கிட்டதில்ல” என்றான்.
“ஏன்?”
“ஏற்கனவே ஏகப்பட்ட கேலி,கிண்டல்! அதனால தான்”
“கமலஹாசன் பெரிய ஆணழகன் தான்! ஆனாலும் அவருக்கு உயரம் பத்தலன்னு விமர்சனம் பண்றதில்லையா?, யாரைத் தான் உலகம் கேலி பண்ணாம இருக்கு?, நமக்குக் கிடைச்சது ஒரு வாழ்க்கை டா ஹரி! அதைப் பிடிச்ச மாதிரி வாழ்றதுல எந்தத் தப்புமில்ல”
“எல்லாரும் உன்னை மாதிரியே இருந்துட்டா.. பிரச்சனையே இருக்காது போல வசந்த்”
“நீ ஒருத்தன் தான் டா என்னை ஒரு மகான் ரேஞ்சுக்குப் பார்க்குற!, அதான்.. எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்குது”
“ஹாஹாஹா”
“ஹ்ம்ம், இப்டியே சிரிச்சுக்கிட்டே இரு! பார்க்க நல்லாயிருக்கு! ஆமா, இந்த மாதிரி லீவ் நாள்ல நீ என்ன பண்ணுவ பொதுவா?”
“ம்ம்ம்ம்... வீடு சுத்தம் பண்ணுவேன்! துணி துவைப்பேன்! சமையல்,புக், ரேடியோ.. அவ்ளோ தான்”
“அவ்ளோ தானா?, வெளிய-லாம் போக மாட்டியா?”
“ப்ச், இண்ட்ரெஸ்ட் இல்ல வசந்த்! பெரும்பாலும் தெருக்கூத்து நாடகங்கள் எதுக்காகவாவது அழைப்பாங்க! அதுக்குப் போயிடுவேன்..”
“அடப்பாவி! அது தவிர.. வேற எங்கயும் போக மாட்டியா?, வேஸ்ட் டா நீ!, பேசாம நீ என் கூட்டத்துல கலந்துடு! வாழ்க்கைன்னா என்னன்னு நான் காட்டுறேன்”
“அதுசரி”
“சரி, என்ன மாதிரியான நாடகமெல்லாம் போடுவீங்க?”
“வள்ளித் திருமணம், குற்றாலக் குறவஞ்சி, அரிச்சந்திரா, கர்ணன் கதை இந்த மாதிரி..”
“ஓஹோ..”
“நாளைக்குக் கூட ஒரு நாடகம் போடப் போறோம்!, மெட்ராஸ் மேளா-வில்! சாயந்தரம் தான்!, நீயும் வர்றியா?”
“நானா?”
“ம்ம், நாடகம் பார்க்க பிடிக்கும்ன்னு சொன்னியே! வா வசந்த்.. நல்லாயிருக்கும்”
“சரி,சரி, அதுக்கு ஏன் கெஞ்சுற?, கண்டிப்பா வர்றேன்!, உன் முட்டைக்குழம்பு என்னை இழுக்குது.. முதல்ல சாப்பிடலாமா?” என்றவன்.. அந்த மாலை முழுதும் அவனுடன் நேரத்தைக் கழித்து விட்டு மறுநாள் சொன்னபடி.. நாடகம் பார்க்கச் சென்றான்.
அதே நேரம் பச்சை வண்ணத்தில் கருப்புப் பொட்டுக்கள் வைத்த முழு நீள மேக்ஸியில்.. அன்னம்மாவிடம் சொல்லிக் கொண்டுத் தன் தோழியுடன் அதே மேளாவிற்குப் புறப்பட்டிருந்தாள் சாருமதி.
நாடகம் தொடங்க சில மணி நேரங்களே மிச்சமிருந்த சமயம் அங்கு வருகை தந்த வசந்த் கண்டது, தொங்கிப் போன முகத்துடன் நின்றிருந்த ஹரியைத் தான்.
என்னவாகிற்று என்று வினவியவனிடம், அன்றைய நாடகத்தின் கதாநாயகனாக நடிக்க வேண்டிய ஆள், அவசர வேலையாக வெளியூர் சென்று விட்டதாகவும், வேறு எவரும் கிடைக்கவில்லையென்பதால் நாடகம் நடக்கப் போவதில்லை என்றும் கூறினான் ஹரி.
“அதுக்கு ஏன் டா நீ முகத்தை இப்படி வைச்சிருக்க?”
“இல்ல, நான் கூப்பிட்டதால வந்த உன்னை ஏமாத்திட்டோமேன்னு நினைக்கிறப்ப...”
“வருத்தமா இருக்கா?, டில்லி அப்பளம் 2 வாங்கிக் கொடு! என் வருத்தமெல்லாம் காணாம போயிடும்! அட ஏன் டா?”
“இன்னிக்கு நல்லக் கூட்டம் கூடும் வசந்த்! இது எங்கக் குழுவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு டா!”
“அப்டின்னா.. வேற யாரையும் ஏற்பாடு பண்ண முடியாதா?”
“ஆள் கிடைக்கல டா”
“ஹ்ம்ம்.. என்ன பண்ணலாம்?”
“வசந்த்”
“சொல்லு”
“இ..இல்ல.. உனக்கு நடிப்பு வரும்ன்னு அடிக்கடி சொல்லுவியே!, பேசாம நீயே நடிக்கிறியா?”
“டேய்.. வேடிக்கை பார்க்க வந்தவனை, மேடை ஏத்தி விடப் பார்ப்பியா நீ?, நான் கிளம்புறேன்”
“வசந்த்... வசந்த்.. ப்ளீஸ்.. போகாத நில்லு”
“என்னடா?”
“எனக்காக டா.. எங்கக் குழுவுக்காக டா! இவ்ளோ கூட்டத்துக்கு முன்னாடிலாம் நாங்க நாடகம் போட்டதே இல்ல டா! இது தான் முதல் முறை! ப்ளீஸ் டா”
“ப்ச், ஒத்திகையே பார்க்காம.. எப்படிடா என்னால நடிக்க முடியும்?”
“நாடகம் தொடங்க நேரமிருக்கே!, அதுக்குள்ள நாம ஒத்திகை பார்த்துடலாம்”
“உனக்கு என்னை நடிக்க வைக்குறதுல ஏன் இவ்ளோ ஆர்வம்?”
“ப்ளீஸ் வசந்த்”
“நீ இந்த மாதிரி முகத்தை வைக்கும் போது.. போனா,போகுது இவன் கேட்குறதைப் பண்ணிடலாம்ன்னு தோண ஆரம்பிச்சிடுதுடா ஹரி”
“என் மேல உனக்கு அவ்ளோ பாசம் டா வசந்த்”
“ம்ம்ம், நல்லா வருது வாய்ல! போடா.. போ..” – நண்பனைத் திட்டியபடித் தன்னுடைய முதல் நாடக மேடையில் ஏறிய வசந்துக்கு அப்போது தெரியவில்லை! இது தனக்குள் எத்தகைய தாக்கத்தைத் தோற்றுவிக்கப் போகிறதென்றும்.. இனித் தன் எதிர்காலத்தையே இது தீர்மானிக்கப் போகிறதென்றும்!
இப்போது நடக்கும் பொருட்காட்சி தான் அப்போது மேளா எனப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஒரு மைதானம் முழுவதும் விதவிதமான ஆடை,அணிகலனிலிருந்துத் தொடங்கி விளையாட்டுப் பொருட்கள்,தின்பண்டங்கள் என அனைத்தும் அணிவகுத்திருந்தது.
சர்க்கஸ்,ராட்டினம் போன்ற சிறுவர்களைக் கவரும் பொழுதுபோக்கு அம்சங்களும் எக்கச்சக்கமாய் இருந்தன.
அவ்வப்போது வாய்க்கு உகந்ததை வாங்கிக் கொறித்தபடி ஒருபுறம் ஷாப்பிங்கிலும் ஈடுபட்டிருந்த சாருமதியை, அவள் தோழி மைதிலி நாடகம் பார்க்க அழைத்தாள்.
களைத்துப் போயிருந்தவளுக்கும் எங்கேனும் அமர்ந்தால் போதுமெனத் தோன்ற.. உடனே தலையாட்டி விட்டாள்.
இருவரும் மூன்றாவது வரிசையில் அமர்ந்து கொண்டு மேடையை பார்க்கத் தொடங்கினர்.
மேடையின் பிண்ணனியிலிருந்தத் திரையில் அன்றைய நாடகத்தின் பெயரும்,குழுவின் பெயரும் எழுதப்பட்டிருந்தது.
நாடகம்: மிருச்சகடிகம்
குழு: எம்.கே பிரதர்ஸ்.
நாடகம் தொடங்கியதும் அசுவாரசியமாய் மேடையை நோக்கிய சாருமதி, பஞ்சகச்சமும்,மேல்சட்டையுமாய் தலைப்பாகையுடன்.. அம்மேடையின் மேற்கூரையை தொட்டு விடும் உயரத்தில் அகலமாய் நின்றிருந்தவனைக் கண்டு விழி விரித்தாள்.
அவந்திநகரத்தில் அந்தணர்குலத்தில் பிறந்தப் பெரும் வணிகனான சாருதத்தன் என்பவன் மிகச் சிறந்தக் கொடையாளியாவான். தன் கொடைப் பண்பினால் பொருளிழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்படுபவன் மீது அவ்வூரின் தேவதாசியான வசந்தசேனையென்பவள் தீராக் காதல் கொள்கிறாள். இதற்கிடையே அரசன் பாலகனின் மைத்துனான சகாரன் என்பவன் வசந்தசேனையை அடைய முயல்கிறான். ஒருமுறை அவனிடமிருந்துத் தப்பித்து எதேச்சையாக சாருதத்தனின் வீட்டில் தஞ்சம் புகுகிறாள் வசந்தசேனை. தன் வீட்டில் அவளைக் கண்டு உபசரிக்கும் சாருதத்தனிடம் தன் அணிகலன்களை ஒப்படைக்கிறாள் ‘இரவு வேளையில் இத்தனை நகை அணிந்து செல்வது பாதுகாப்பு இல்லையென்று கருதி’. இந்நகையானது மறுநாள் இரவு சாருதத்தனின் வீட்டிலிருந்துக் கொள்ளை போகிறது.
இத்திருட்டுச் சம்பவத்தை வசந்தசேனை நம்புவாளோ, இல்லையோ என்று கருதி.. தன் மனைவியின் ரத்தினஹாரத்தை அவளிடம் ஒப்படைத்து, தான் சூதாட்டத்தில் அந்நகைகளை இழந்து விட்டதாகப் பொய் கூறுகிறான் சாருதத்தன்.
சாருதத்தனின் வீட்டிலிருந்து நகையைத் திருடியவன்.. வசந்தேசனையின் சேடிப் பெண்ணான மதனிகையின் காதலன் சர்விலகனன் என்பவன். இந்நகையைக் கொடுத்து மதனிகையை அடிமைத்தனத்திலிருந்து விலக்கி விவாஹம் செய்யத் திட்டமிட்டிருந்தான்.
நகைகளைக் கண்டதும் விஷயம் புரிந்து கொண்ட வசந்தசேனை, ரத்தினஹாரத்துடன் சாருதத்தனைச் சந்திக்கிறாள். நடந்ததைக் கூறுகிறாள். அன்றிரவு அவன் வீட்டிலேயே தங்கிக் களிக்கிறாள்.
மறுநாள் சாருதத்தனுடன் புஷ்பகரண்டகம் செல்லவிருந்தவள்.. வண்டி மாறி சகாரனின் இடத்திற்குச் சென்று விடுகிறாள். தன் ஆசைக்கு அடி பணியக் கோருபவனிடம் அவள் மறுத்து விட.. அங்கேயே அவளை அடித்துக் கொல்ல முயல்கிறான் சகாரன். அதன் பிறகு என்ன நடக்கிறது,சாருதத்தன் எப்படித் தப்பிக்கிறான் என்பதே கதை.
கல்வி,அறிவு,பொறுமை,தயை முதலியவற்றில் சிறந்தவனும், கட்டழகும்,யௌவனமும் வாய்ந்த சாருதத்தனின் கொடைப்பண்பைப் பற்றி எடுத்துக் கூறும் வகையில் துவங்குகிறது முதல் காட்சி.
பசி,பட்டினியில் வாடுபவர்களுக்கு.. தான் வணிகத்தில் ஈட்டும் பொருளையும்,பொன்னையும் கை நிறைய அள்ளிக் கொடுத்து விட்டு வீடு வந்து சேர்பவனுக்கு.. வெறும் கூழையும்,கஞ்சியையும் நீட்டுகிறாள் அவனது சேடிப் பெண்ணான ரதனிகை.
“ஏன்?” என்று பார்ப்பவனிடம் “தானம் அளித்தே அவனது வீட்டுத் தாழி காலியானதை” எடுத்துக் கூறிகிறாள் ரதனிகை.
தான் வறிஞனாகியதை எண்ணிச் சிறிதும் கவலை கொள்ளாமல் இன்றுத் தன் வயிறு நிறைய வழி செய்த கடவுளுக்கு நன்றி கூறி விட்டுக் கஞ்சியை உண்ணுகிறான் சாருத்தத்தன்.
அடுத்ததாகக் காட்சி மாறுகிறது. வருகிறாள் பேரழகி வசந்தசேனை!
அவந்திநகரத்தின் தேவதாசிகளில் ஒருத்தி! திராட்சை விழிகளுக்கும், பலாப்பழ உதடுகளுக்கும் சொந்தக்காரி! அழகில் ரதியையும்! பண்பிலும்,கருணையிலும் அன்னை மீனாட்சியையும் ஒத்திருப்பவள்! நல்லுள்ளம் படைத்த கற்புக்கரசி!
காமதேவன் கோயிற்றோட்டத்திற்கு வருகை தந்தவளின் கண்களில் படுகிறான் சாருதத்தன். அவனது கொடைப் பண்பைப் பற்றி ஊரார் கூறக் காதால் கேட்டு வந்தவள், இன்று தான் அந்த ஆணழகனை நேரில் காண்கிறாள். கண்டதும் காதல் கொள்கிறாள்.
திருவிழாவில் கூடியிருந்த அத்தனை பேரும் அவள் கண்களிலிருந்து மறைந்து போக.. இப்போது அவனும்,அவளும் மட்டும்! அவளது கற்பனையில்!
மேடையின் நடுவில் சாருதத்தனாக வசந்தும், வசந்தசேனையாக ஹரியும் ஒருவரையொருவர் கண் பார்த்துக் காதல் பேசியபடி எதிரெதிரே நின்று கொண்டு சுற்றி வர... பிண்ணனியில் பாகவதர் காலத்துக் காதல் பாடலொன்று ஒலிக்கிறது.
அடுத்த காட்சியில் தோன்றுகிறான் சகாரன் என்னும் அரக்கன் தன் நண்பன் விடன் என்பவனோடு!
கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கும் வசந்த சேனையை விடாது துரத்தியபடி ஏதேதோ பிதற்றிக் கொண்டுப் பின்னால் வருகிறான் சகாரன்.
எப்படியேனும் அவளைக் கவர்ந்து விட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தனது இதிகாச அறிவை அவிழ்த்து விட்டவனைக் கண்டு மேடையின் கீழ் அமர்ந்தோர் சிரிக்கத் தொடங்கினர்.
“இராவணன் கையில் குந்தி எப்படி அகப்பட்டாளோ அப்படி நீ என் கையில் அகப்பட்டாய்” – என்பவனைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்ய முடியும்?, இராமயணத்தில் குந்தி எங்கே வந்தாள்??
அவனிடமிருந்துத் தப்பிக்கும் பொருட்டு புகுந்து கொள்கிறாள் சாருதத்தனின் வீட்டுக்குள்.
அப்போது பார்த்து சாருதத்தனின் நண்பன் மைத்திரேயனும், அவனது சேடி ரதனிகையும் வீட்டை விட்டு வெளியே வர.. ரதனிகையை வசந்தசேனை என்றெண்ணிக் கொண்டுக் கட்டிப்பிடித்தபடி “நான் உன்னைப் பிடித்து விட்டேன்” என்று குதித்த சகாரனின் தலையிலேயே ஒரு போடு போடுகிறான் மைத்திரேயன்.
“வசந்தசேனையை என்னிடம் கொணர்ந்து விடா விடில், உனக்கும்,எனக்கும் தீராப்பகை விளையும்” என்று சாருதத்தனிடம் சொல் என்று மைத்ரேயனை மிரட்டுகிறான் சகாரன்.
வீட்டினுள்ளே நடக்கிறது மற்றுமொரு காதல் அரங்கேற்றம்!
ரதனிகையென்றெண்ணித் திரும்பிய சாருதத்தன், வசந்தசேனையைக் கண்டு மகிழ்ச்சியுற்று விழி மலர அவளருகே வந்து வரவேற்று உபசரிக்கிறான்.
தன் கண்ணாளனை அருகில் கண்ட மிதப்பில், உலகம் மறந்து.. வெட்கம் சூழ தலை குனிந்து அமர்ந்திருந்தவள்.. அவன் முகம் பாராமல் நடந்ததை விவரிக்கிறாள்.
அன்றிரவு அங்கு தங்க வற்புறுத்துபவனிடம் மறுத்து தன் நகைகளனைத்தையும் கழட்டிக் கொடுத்து “பணிகளினிமித்தம் பாவிகள் என்னைத் துரத்துகிறார்கள். உம்மிடத்தில் இந்த முடிப்பை அடைக்கலமாக வைக்கிறேன்” என்கிறாள். இதைச் சாக்காக வைத்து மீண்டும் அவனைச் சந்திக்கும் எண்ணத்துடன்!
“சரி”-என்று விட்டு எழும் சாருதத்தன் அவளைத் தானே அழைத்துச் சென்று அவள் வீட்டில் விடுகிறான்.
இரவும்,நிலவும் இடையே பவனி வர.. மோனநிலையில் இருவரும்!
அடுத்து வசந்தசேனையின் நகைகள் களவு போகும் காட்சி துவங்குகிறது!
அன்று மாலை பாடகன் ரைபிலன் என்பவனின் கானக் கச்சேரியில் கலந்து கொண்டு சாருதத்தனும்,மைத்ரேயனும் இரவு தாமதமாக வீடு திரும்ப.. களைப்பில் நண்பனை நோக்கிய சாருதத்தன்..
“இந்த ஆபரணங்களை நீயே பாதுகாப்பாக வைத்திரு” என்று கூறி விட்டு உறங்கி விடுகிறான்.
அன்றிரவு சாருதத்தனின் வீட்டில் கன்னமிட்டு நுழையும் திருடன் சர்விலகனென்பவன், மைத்ரேயனின் மார் மீதிருந்த நகையைத் திருடுகிறான்.
உறக்கத்திலிருந்த மைத்ரேயனும் சாருதத்தன் என்றெண்ணி “இந்தத் தங்கப்பானையைக் காப்பாற்ற என்னால் முடியாது. நீரே வைத்துக் கொள்ளும்” என்று கொடுத்து விடுகிறான்.
மறுநாள் காலை எழுந்து நகை திருட்டுப் போனதை உணர்ந்து பதறிய மைத்ரேயன்.. கள்வன் கன்னமிட்ட இடத்தைக் கண்டு வியந்து.. அவனது திறமையை எண்ணி சிலாகித்த சாருதத்தனை முறைக்கிறான்.
அடுத்து திருடன் சர்விலகனென் தன் காதலியும், வசந்தசேனையின் சேடிப் பெண்ணுமான மதனிகையைச் சந்திக்கும் காட்சி..
நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கும் தனது காதலனைக் கட்டியணைத்துக் கொள்ளும் மதனிகையின் கண்கள் தானாய்க் கண்ணீரைச் சொரிய..
“இனி கவலை தீர்ந்தது. முறிப்பணத்தை உன் முதலாளியிடம் கொடுத்து உன்னை அழைத்துச் சென்று விவாஹம் புரியவே நான் வந்திருக்கிறேன்” – என்ற சர்விலகனென் தான் திருடிய நகைகளைக் காட்டுகிறான்.
ஒரு பார்வையில் அது வசந்தசேனையினுடையது என்பதைக் கண்டு கொண்ட மதனிகை விரைந்து சென்று அதை அவளிடம் கொடுக்கிறாள்.
“முறிப்பணத்தைக் கொடுத்து என்னை மீட்டு மணந்து கொள்ளும் ஆசையில் என் காதலன் இவ்வாறு செய்து விட்டான்” – எனக் கூறிக் கதறுபவளை அணைத்துக் கொண்ட வசந்த சேனை அவன் தவறை மன்னித்து உடனே மதனிகையுடனான அவன் திருமணத்தை நடத்திக் கொடுக்கிறாள்.
இதற்கிடையில் சாருதத்தன் அளித்த ரத்தின மாலையோடு வசந்தசேனையின் வீட்டிற்கு வருகிறான் மைத்திரேயன்.
களவு போன நகைகளுக்கு ஈடு கொடுக்க எண்ணி, தன் மனைவியின் நகையொன்றைக் கொடுத்தனுப்பியிருந்தான் சாருதத்தன்.
“என் நண்பன் நேற்று சூதாட்டத்தில் உங்கள் நகைகளைத் தனதாக நினைத்து ஆடி.. அனைத்தையும் இழந்து விட்டான். அவற்றை ஈடுகட்ட இந்த ஆபரணத்தைக் கொடுத்தான்” – என்று கூற..
உண்மையறிந்த வசந்தசேனையோ அதை வாங்கி வைத்துக் கொண்டு “உன் நண்பரை நான் இன்று மாலை சந்திப்பதாகச் சொல்” என்று விடுகிறாள்.
“வேசியிடம் நட்பு பாராட்ட வேண்டாமென்றேனே!, தாங்களளித்த நகையை ஈ-யென்று வாங்கிக் கொண்டாள்” எனச் சாடும் நண்பனை அதட்டி அடக்குகிறான் சாருதத்தன்.
அடுத்த காட்சி சாருதத்தனுக்கும்,வசந்தசேனைக்கும்!
களவு போன நகையைக் கையோடு கொண்டு வந்து அவனைச் சந்திக்கிறாள் வசந்தசேனை.
வரவேற்றபடி வந்து நிற்பவனை கோபமும்,ஆதங்கமுமாய் நோக்கி..
“நான் ஒரு சூதாட்டக்காரரைக் காண வந்துள்ளேன்” என்கிறாள். புரியாமல் விழிப்பவனிடம்..
“சூதாட்டத்தில் எனது ஆபரணங்களை இழந்ததாகப் பொய்யுரைத்தீர்களே!, இதோ அந்நகைகள்” என்று அவள் நீட்ட.. வியந்த சாருதத்தனிடம் நடந்ததைக் கூறுகிறாள்.
“தானத்தில்,தர்மத்திலும் தாங்கள் கர்ணணுக்கு ஈடல்லவா?, வறுமை நிலையிலும் கூட உள்ளதைக் கொடுத்து பலர் உள்ளத்தை மகிழ்விக்கும் பெரும் கொடையாளியாகியத் தாங்கள் சூதாடுபவரா?”
ஆதங்கத்துடன் கேள்வி கேட்டவளிடம்.. “என் மீது அத்தனை நல்ல எண்ணமா?, எதற்காக?” என்பவனுக்குப் பதிலாய் வெட்கத்தைப் பரிசளிக்கும் வசந்தசேனையை அன்பாய் அணைத்துக் கொள்கிறான் சாருதத்தன்.
மறுநாள் காலை தனது பூந்தோட்டத்துக்கு அவளை அழைத்துச் செல்வதாக வாக்களிப்பவன், தன் சேடனிடம் அவளை அழைத்து வரும்படி கூறி விட்டு முன் செல்கிறான்.
அடுத்த காட்சி வசந்தசேனைக்கும், சாருதத்தனின் மகன் உரோகணனுக்கும்!
சாருதத்தனின் சேடிப் பெண் ரதனிகையுடன் வீட்டுக்குள் நுழையும் சிறுவனை மேலிருந்துக் கீழ் வரை நோக்குகிறாள் வசந்தசேனை.
ஒரே பார்வையில் அவன் தான் நேசிக்கும் காதலனின் மகன் என்பதை அறிந்து கொள்பவளுக்கு, அச்சிறுவனின் மீதுப் பாசம் பொங்குகிறது.
ஓடிச் சென்று அவனை அணைத்து உச்சி முகர்பவளை சிறுவன் அழுகையுடன் எதிர் கொள்கிறான்.
என்னவென்று கேட்பவளிடம் ரதனிகை கூறுகிறாள்.
“அவன் விளையாடுவதற்கு மண் வண்டியொன்று தந்தேன்! ஆனால் அவன் அதை மறுத்து விட்டு, அடுத்த வீட்டுக் குழந்தை வைத்து விளையாடும் தங்க வண்டி வேண்டுமென்கிறான்”
தன் கண்ணாளனின் மகனைத் தன் மகனாகவே கருதும் வசந்தசேனை தன் ஆபரணங்களனைத்தையும் கழட்டிக் கொடுத்து “இதில் பொன் வண்டி செய்து கொள்ளடா கண்ணே” என்கிறாள்.
அடுத்தக் காட்சியில் ஜனசந்தடி மிகுந்த சாலையொன்றில் போக்கு வரத்து நெரிசலில் இரண்டு குதிரை வண்டிகள் அருகருகே நிற்கின்றன.
சாருதத்தன் வண்டியென நினைத்து ஒரு வண்டியில் வசந்தசேனை ஏற.. மறு வண்டியிலோ.. முக்காடணிந்த ஒருவன் ஏறிக் கொள்கிறான்.
வசந்தசேனை ஏறிய வண்டி நேராக சகாரனின் தோட்டத்திற்குச் சென்று நிற்கிறது.
வண்டிக்குள் இவளிருப்பதைக் கண்ட விடன் (சகாரனின் தோழன்) சகாரனிடம் “தங்களுடன் கூடுவதற்காகவே அவள் தங்களைத் தேடி வந்திருக்கிறாள்” எனக் கூற ஆவலாக வருகிறான் சகாரன்.
இவனைக் கண்டதும் அதிர்ந்த வசந்தசேனை “தான் வண்டி மாறி வந்து விட்டதாக” விடனிடம் கூறித் தன்னைக் காப்பாற்றுமாறு மன்றாடுகிறாள்.
அவள் பதிலில் வெகுண்ட சகாரன் “ஏன் எனக்கு மட்டும் மறுப்பு?, வறுமை மிக்க சாருதத்தனுடன் கூடுதற்குச் செல்லுகின்றாய்!” எனப் பாய..
“இச்சொல்லால் நான் அலங்கரிக்கப்பட்டுள்ளேன்” என்று மகிழ்கிறாள்.
முற்றிலும் கோபமுற்ற சகாரன், விடனைப் பார்த்து “உனக்குத் தக்க பரிசளிக்கிறேன்!, வசந்தசேனையை வதை” என்கிறான்.
விடன் தயக்கத்துடன் நிற்க.. தன் சேடனைப் பார்த்தும் அதே வசனத்தைக் கூறுகிறான். அவனும் மறுக்க, இருவரையும் சிறையில் தள்ளுகிறான்.
பின் வசந்தசேனையை முடிந்த மட்டும் அடித்துக் கொன்று விட்டு.. அங்கிருந்த காய்ந்த சருகுகளால் அவள் உடலை மூடுகிறான்.
“மாட்சிமிக்க சாருதத்தருக்கு வணக்கம்” – என்ற கடைசி வார்த்தையோடுக் கண் மூடுகிறாள் வசந்தசேனை.
அடுத்த காட்சியில் நீதிபதியின் முன்பு சாருதத்தன் நிற்கிறான்.
வசந்தசேனையின் நகைகளைப் பறித்து அவளைக் கொன்று விட்டதாக அவன் மீது குற்றம் சாட்டி அவனை நீதிபதி முன்பு நிறுத்தி வைக்கிறான் சகாரன்.
போதிய சாட்சிகளில்லாததால் அவனுக்குத் தண்டனையளிக்க இயலாது எனக் கூறும் நீதிபதியிடம் “நான் அரசனின் மைத்துனன், நான் நினைத்தால் இப்போதே உன்னைப் பதவியிலிருந்துத் தூக்கி விட முடியும்” என்று சகாரன் கொக்கரிக்க.. அவரும் பயந்து கொண்டு சாருதத்தனுக்கு மரண தண்டனை விதிக்கிறார்.
அடுத்த காட்சியில்..
சகாரனின் தோட்டத்தில் சருகுகளினிடையே மயங்கிக் கிடக்கும் வசந்தசேனையைக் காப்பாற்றுகிறார் சித்தர் ஒருவர்.
அதற்கடுத்த காட்சியில் கழுவேற்றும் இடத்தில் சாருதத்தன்.
சண்டாளர் அவன் கழுத்தில் அலரிப்பூமாலையை மாட்டி அவனைக் கொலைக்களத்துக்கு அழைத்துப் போய்.. கொலையைத் தம்பட்டமடித்துப் பிரசித்தப் படுத்துகின்றனர்.
அவன் செய்த தர்மத்தால் பலன் கண்ட மக்கள், அவனது நிலையை எண்ணிக் கலங்கி வாய் விட்டுக் கதறுகின்றனர்.
மைத்ரேயனுடன் வந்தத் தன் மகன் உரோகணனை ஆரத் தழுவி முத்தமிட்டு.. தனது பூணூலை மைந்தனுக்கு அணிவித்து “அவனைச் சாவதானமாய்ப் பார்த்துக் கொள்ளும்படி” மைத்ரேயன் வசம் ஒப்படைக்கிறான் சாருதத்தன்.
சகாரனால் சிறையில் தள்ளப்பட்ட விடன் திடீரென எங்கிருந்தோ குதித்து.. “சாருதத்தனால் வசந்தசேனை கொல்லப்படவில்லை! சகாரனே கொன்றான்” என்று நடந்த உண்மையனைத்தையும் கூறுகிறான்.
அதற்குள் கொலைக்களத்தை எட்டி விட்ட வசந்தசேனை, சாருதத்தனைக் கட்டித் தழுவுகிறாள்.
தன்னை உயிராய் நேசித்தக் காதலி செத்து விட்டத் துயரத்திலிருந்தவன் முதலில் அதைக் கனவென்றே எண்ணினான். தன் இருகைகளால் அவள் முகம் ஏந்தி, நடப்பவை கனவல்ல என்றுணர்ந்துத் தானும் அவளைத் தழுவிக் கொள்கிறான்.
பின் வசந்த சேனை சகாரனுடையக் கோர நாடகத்தை உலகுக்கு எடுத்துச் சொல்கிறாள்.
தப்பியோடத் துடித்த சகாரனைக் கையும்,களவுமாக சேவகர் பிடித்து விட, அவன் நடுநடுங்கிப் போய் சாருதத்தனின் கால்களில் விழுகிறான்.
அவனுக்கு அபயம் அளித்த சாருதத்தன் “அவனைக் கொல்லாது அவன் இஷ்டப்படி விட்டு விடும் படி” சேவகர்களிடம் பிரார்த்திக்கிறான்.
முக்காடிட்டு தன் வண்டியில் ஏறிய புரட்சியாளன் ஆரியகன் என்பவனை சாருதத்தன் ஆதரித்த நிலையில், அவன் கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசன் பாலகனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றி.. சாருதத்தனின் நிலையறிந்து, அவனது பண்பைப் புரிந்து கொண்டு.. ராஜ்யத்தையே அவனுக்காகப் பரிசளிக்க முன் வருகிறான்.
அவனிடம் அன்புடன் அதை மறுத்து விட்ட சாருதத்தன் தன் காதலி,குழந்தை,நண்பர்கள் என அனைவருடனும் மகிழ்ச்சியான இல் வாழ்க்கையை வாழ்கிறான்!
தர்மம் தலை காக்கும் பாடலோடு நாடகம் முடிந்து விட..
தன் மாமன் மகனின் நடிப்புத் திறமையில் முற்றிலும் ஆச்சரிமுற்றுப் போய் மேடையையே வெறித்த வண்ணம் சிலையாய் அமர்ந்திருந்தாள் சாருமதி.
‘பொறுப்பில்லாதவன், ஊதாரி, எதற்கும் லாயக்கில்லாதவன், உருப்படாதவன்’ என்று சாருகேசன் தினம்,தினம் ஏசிய.. வசந்த் இவன் தானா என்ற வியப்பே மேலோங்கியிருந்தது அவளுக்கு.
கஞ்சி கொடுத்த சேடிப் பெண் கூறிய காரணத்தைக் கேட்டு.. லேசான சிரிப்புடன் அதைப் பருகிய விதமாகட்டும், வசந்தசேனையாக வந்தவனிடம் செலுத்திய காதல் பார்வையாகட்டும், திருட்டு சம்பவத்தின் போது, திருடனின் திறமையை வியந்து பேசி.. தாடையில் கை வைத்ததாகட்டும், கடைசிக் காட்சியில் மகனாக வந்த சிறுவனைக் கட்டித் தழுவிக் கண்ணீர் விட்டதாகட்டும்!,
அவன் முகத்தில் வந்து போகும் ஒவ்வொரு பாவனையிலும் அத்தனை கம்பீரம்! சாருதத்தனாகவே இயல்பாய் வாழ்ந்தவனின் மீது ஒரு மரியாதையே வந்தது! இத்தனையா திறமையா இவனிடம்! நிஜமாகவே மேடையின் காதலன் தான் இவன்!
இவள் ஒரு புறம் இப்படிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்க, அவனோ தன் முன்னே அமர்ந்து மேக்-அப்பைக் களைத்துக் கொண்டிருந்த ஹரியைக் கண் இமைக்காமல் பார்த்தான்.
“எவ்ளோ அழகா நடிக்கிற டா ஹரி?, சாவித்ரியும்,சரோஜா தேவியும் தோத்துப் போவாங்க டா”
“நீயும் தான் டா! ஒரு தடவை ஒத்திகை பார்த்தே இவ்ளோ அழகா நடிச்சுக் கொடுத்துட்ட?, ரொம்ப ரொம்ப நன்றி டா”
“ப்ச், அதை விடு! உனக்கு இவ்ளோ ஈடுபாடு இருக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லடா ஹரி!, பேசாம சினிமாவுல நடிக்கிறியா?”
“ஏன்?, வளர்ந்த வர்ற சினிமாவால தான் இந்த மாதிரி பாரம்பரியக் கலையெல்லாம் கொஞ்சம்,கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது!, நான் நேசிக்கிற விசயத்தை ஆதரிச்சுக் கொண்டாடாம, என்னையே அழிக்கச் சொல்றியா?”
“...........”
“என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த நாடகக்கலையை வளர்க்கத் தான் டா பார்ப்பேன்”
“சூப்பர் டா!, ஒரு தடவை கைத் தட்டல் வாங்குன எனக்கே, இன்னும்,இன்னும் நடிச்சா என்னன்னு தோணும் போது, நீ இதை உயிரா மதிக்குறதுல தப்பே இல்ல! எனக்கும் கூட உன்னை மாதிரி ஆகனும்ன்னு ஆசையா இருக்கு”
“நீ என்னை விடப் பிரமாதமாகவே நடிக்கிற வசந்த்! இயல்பாவே உனக்கு பாவனைகளெல்லாம் அற்புதமா வருது”
“அப்படியா?”
“ஆமாம்! உனக்கு இஷ்டமிருந்தா.. அடுத்தடுத்து எங்களோட நாடகங்கள்ல நீயும் கலந்துக்கோயேன்”
“ஹேய்... அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல டா!”
“யோசிச்சு சொல்லு வசந்த்” – என்றவனிடம் தலையாட்டி விட்டு.. உடை மாற்றி வெளியே வந்தவனை வரவேற்றது.. மந்திரித்த ஆட்டைப் போல் நின்ற சாருமதி தான்!
அவளைக் கண்டதும் திடுக்கிட்டவன்..
“நீ எங்க இங்க?” என்று சந்தேகமாய் வினவினான்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து..
“தங்களைக் காணவே வந்தேன் சாருதத்தரே” என்றவளைக் கண்டுத் தலையில் கை வைத்துக் கொண்டவன்... பின் தலை முடியைக் கோதியபடி..
“நான் கொடுத்த லெட்டரை எங்கப்பாக் கிட்ட காட்டுன மாதிரி, இதையும் போட்டுக் கொடுத்திடாத! சாமியாடிடுவார் அப்புறம்” – என்றான்.
“ப்ச், என்னைப் பார்த்தா போட்டுக் கொடுக்கிற ஆள் மாதிரியா தெரியுது?”
மேலிருந்துக் கீழ் வரை அவளை நோக்கியவன் “இல்ல தான்” எனக் கூற.. அவன் பார்வையைப் பெரிது படுத்தாமல்..
“நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க தெரியுமா?, சில பாவனைகள் எல்லாம் ரொம்பத் தத்ரூபமா இருந்தது!, நீங்க ஏன் சினிமாவுல நடிக்கக் கூடாது?” என்று வளவளத்தபடி வந்தவள் நிறுத்தி “ப்ச், வேண்டாம், வேண்டாம்! சினிமாவெல்லாம் வேண்டாம்” என்றாள்.
“ஏன்?”
“ஹீரோயினோடெல்லாம் ரொமான்ஸ் பண்ண வேண்டி வருமே?"
அவள் பதிலில் உள்ளே இதம் பரவ.. லேசாய்ச் சிரித்தபடி நின்று அவள் முகம் பார்த்தவன்.. தலை சாய்த்து “ஏன்?, ரொமான்ஸ் பண்ணா என்ன?” என்று வினவ..
திடீரென வியர்க்கத் தொடங்கிய நெற்றியைத் துடைத்தபடி..
“இல்ல, நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்து வராது தானே?, அதனால சொன்னேன்” என்று அவள் கூற..
“அதுசரி” எனத் தலையாட்டியவன் சிரிப்பு மாறாமல் முன்னே நடந்தான்.
ஓட்டமும்,நடையுமாக அவனைத் தொடர்ந்தபடி பின்னே சென்றவள்.. “என்ன சிரிப்பு?” என்று கடுப்புடன் வினவியதும்..
பதில் சொல்லாமல் பக்கவாட்டில் ஒலித்தப் பாடலை ஹம் செய்த படி அவன் நடக்க...
அவனது இதழோரத்தில் தேங்கித் தெப்பமாகியிருந்த சிரிப்பு.. அவன் முகம் முழுதிலும் வழிந்தோடிக் கொடுத்த சோபையில்.. அழகில்.. படபடத்துப் போய்.. வேகம் குறைத்துக் கிட்டத்தட்ட நின்று விட்ட சாருமதியின் இதயத்துக்குள்.. அவன் ஹம் செய்த பாடல் ஹை-டெசிபலில் ஒலித்தது.
“ஒரே நாள்... உனை நான் நிலாவில் பார்த்தது..
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது.....”
