அத்தியாயம் - 5

இளையராஜா தானே இசையமைத்துப் பாடின பாடல்களின் வரிசை மிக நீளமானது! நான் தேடும் செவ்வந்திப் பூவிது, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா, தென்றல் வந்துத் தீண்டும் போது, அப்புறம் the most beautiful... சங்கத்தில் பாடாத கவிதை.. இவையெல்லாம் என்றுமே அலுத்துப் போகாத பாடல்கள்! ஆனால் ஜென்சியுடனான இந்தப் பாடல்.. இதற்கெல்லாம் உச்சம்!

வேதம் ஓதும் குரலும்,தேவாலய மணியோசையும் இணைந்து இசைப்பதிலிருந்துத் தொடங்கும் பாடல் இது! இளையராஜாவோட மூளையும்,விரலும் என்ன மாதிரியான சிங்க்ல இருந்தா இப்படிப்பட்ட ட்யூன் வெளியே வரும்?, நிஜமாவே இவர் இசை பிரம்மா தான்! அதிலும் ஜென்சியின் குரல்! டிவைன்-ன்ற வார்த்தைகான அர்த்தத்தைத் தத்ரூபமா உணரலாம்!

பாடல் வரிகள், பாடுபவர்களின் குரல், ரெண்டையும் தாண்டி.. BGM தான் இந்தப் பாட்டோட ஹை-லைட்! That too.. 2nd BGM.. அந்த வீணை ஒலி! சான்ஸே இல்ல! சும்மா.. சிலிர்க்க வைச்சிடும்! எத்தனை தலைமுறை தாண்டினாலும் சரி, இதெல்லாம் அழியும்ன்னா நினைக்கிறீங்க? வாய்ப்பே இல்ல!

நீ என் நாயகன்.. காதல் பாடகன்..

அன்பில் ஓடி.. இன்பம் கோடி.. என்றும் காணலாம்..

காதல் ஓவியம்.. பாடும் காவியம்..

துணுக்கு: பாடல் இடம் பெற்ற படம் அலைகள் ஓய்வதில்லை!

ந்தக் காலேஜ்ல தான் நீ கண்டிப்பா சேர்ந்தாகனுமா?, ஸ்டெல்லா மேரிஸ்ல என் ஃப்ரண்ட் ஒருத்தன் சீட் வாங்கித் தர்றேன்னு சொல்றான்ம்மா”

“வ..வந்து.. எனக்கு பிரசிடென்ஸில படிக்கனும்ன்னு ரொம்ப ஆசை மாமா. சார் சி.வி.ராமனே அங்க தான் படிச்சிருக்கார். தெரியுமா?” – எப்படியேனும் மாமனைச் சம்மதிக்க வைத்து விடும் நோக்கத்துடன் சாருமதி.

“சி.வி.ராமன் படிக்கிறது இருக்கட்டும்! நம்ம வீட்டுத் தறுதலை அங்க படிக்கிறானே! படிச்சது போதும்,தொழிலைக் கத்துக்க வாடான்னு கூப்பிட்டா... மாஸ்டர் டிகிரி வாங்கியே ஆகனும்ன்னு ஒத்தக் கால்-ல நிக்கிறான்! இவனெல்லாம் யு.ஜி பாஸ் ஆனதே பெரிய விஷயம்! இதுல பி.ஜி வேற”

“படிக்கனும்ன்னு ஆசைப்பட்றது தப்பில்லையே மாமா” – மெல்லிய குரலில் முணுமுணுத்தவளைக் கண்டு கொள்ளாமல்..

“என் கண் முன்னாடியே லெட்டர்,அது,இதுன்னு உனக்குத் தொந்தரவு கொடுக்குறவன், காலேஜ்ல வைச்சு என்னல்லாம் பண்ணுவானோ! வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு சுத்தனும்மா நான்! பேசாம நீ ஏதாவது லேடீஸ் காலேஜ்ல சேர்ந்துக்கோயேன்”

“உங்க இஷ்டம் மாமா” – சுருங்கிப் போன முகத்துடன் தலையைக் குனிந்தபடி கூறியவளைக் கேட்டு..

“ப்ச், சரி உனக்கு அங்க படிக்குறது தான் பிடித்தம்ன்னா நான் என்ன செய்ய?, இந்தப் பய அங்க எதுவும் வம்பு பண்ணினா.. என் கிட்ட சொல்லிடனும். சரியா?” – என்று அவர் கூறியதும்..

முகம் மலர “அவர் அப்படியெல்லாம் எதுவும் பண்ண மாட்டார் மாமா” என்றாள் சாருமதி.

“பெத்தது ஒன்னு! அதுவும் மண்ணு-ன்ற கதையாய்ப் போச்சு!, அவனை மாதிரி இல்லாம நீயாவது நல்லாப் படிச்சு, நல்ல வேலைக்குப் போகனும். சரியா-ம்மா?”

“கண்டிப்பா மாமா! B.sc,M.sc அப்படியே M.phil பண்ணி லெக்சரர் ஆகனும் மாமா! வேலைக்குப் போய்க்கிட்டே ph.D பண்ணனும்! நிறைய நினைச்சு வைச்சிருக்கிறேன்”

“படி படி! நீ நினைச்சதெல்லாம் படி! இனி போற காலத்துல பொண்ணுங்களுக்குப் படிப்பு ரொம்பவும் அவசியம்! கல்யாணமெல்லாம் பொறுமையா.. உனக்குப் பிடிக்கும் போது பண்ணி வைக்கிறேன்! சரியா?”

மாமனின் பதிலில் வெகுவாய்ப் புல்லரித்துப் போனவள் “நாட்டுல எத்தனை பேர் உங்களை மாதிரி யோசிக்கிறாங்க! பெண் பிள்ளைங்களைப் பெத்தாலே கல்யாணம் பண்ணிக் கொடுத்துக் கடமையை முடிச்சிடனும்ன்னு நினைக்கிறவங்க மத்தியில நீங்க ரொம்ப க்ரேட் மாமா” – பரவசத்துடன் கூறிக் கொண்டிருக்கையில் “ம்க்க்க்க்க்கும்” என்றபடி டைனிங்-டேபிளில் வந்தமர்ந்தான் வசந்த்.

அவனைக் கண்டதும் தன்னாலேயே கேசனின் முகம் கடுகடுத்து விட.. கடைசி வாய் இட்லியை.. சாம்பாருடன் வழித்து விழுங்கி விட்டு அவனை முறைத்தபடியே கையைக் கழுவினார்.

“அன்னம்மாஆஆஆ” – அவரைக் கண்டு கொள்ளாமல் குரல் கொடுத்தான் வசந்த்.

“வந்துட்டேன் ராசா” – என்ற அன்னம்மா அவன் தட்டில் இட்லிகளை அடுக்க..

“மூணு போதும். ஒரு ஆம்லேட் ஊத்து” – என்று விட்டு..

“ஏன் அன்னம்மா, உனக்கு இந்த இங்க்லிஷ் ப்ரேக் ஃபாஸ்ட் எல்லாம் தெரியாதா?, ஃப்ரெஞ்ச் டோஸ்ட், சாண்ட்விச் மாதிரி” என்று வினவினான்.

“பிரிஞ்சி தோசை, சாந்து பொட்டா?, என்ன கண்ணு சொல்றீங்க?” – தலையைச் சொறிந்த அன்னம்மாவைக் கண்டு சாருமதி களுக் எனச் சிரிக்க.. “போ,போ..” என்று அடுக்களையை நோக்கிக் கை காட்டினான் வசந்த்.

ஈரக் கையைத் துடைத்தபடித் தன் முறைப்பைத் தொடர்ந்தவரைக் கண்டு..

“என்ன?, உங்களுக்கும் முட்டை வேணுமா?” – தந்தையின் முகத்தைப் பார்க்காமல்.. தட்டைப் பார்த்து உண்டபடியே கேள்வி கேட்டான் வசந்த்.

“என்னடா நக்கலா?”

“பின்ன எதுக்கு என்னையே வெறிச்சு வெறிச்சுப் பார்க்குறீங்க?, வயசுப் பையன்ப்பா நான்! அப்படியெல்லாம் பார்க்கக் கூடாது”

“அடி படவா!, என்ன டா வாய் நீளுது?”

“அன்னம்மா.. ஆம்லெட் ரெடியா?”

“நோகாம.. டைனிங் டேபிள்ல உட்கார்ந்து வக்கணையா.. வாய்க்கு ருசியாக் கேட்டு வாங்கி சாப்பிட்ற நீயெல்லாம்?, உன் வயசுல நான் உனக்கு அப்பனாகி, ராத்திரியும்,பகலுமா அயராம உழைச்சு என் பிஸினசைப் பெருக்கத் தொடங்கிட்டேன்”

“வெளி வேலையில உழைப்பைப் போட்டவரு அதோட நிறுத்தியிருக்க வேண்டியது தான?, வீட்ல வேற உழைச்சு, என்னை ஏன் பெத்துக்கிட்டீங்க?” – மீண்டும் அலட்டிக் கொள்ளாமல் கேள்வி கேட்டவனைக் கண்டு..

“ராஸ்கல்” எனக் கொதித்துப் போன கேசன் “பெண் பிள்ளை முன்னாடி என்னடா பேச்சு இது?” என்று காய..

பொறுமையுடன் இட்லியை மென்றபடி அவளை நோக்கியவன் “வீட்ல உழைக்கிறதுன்னா என்னன்னு தெரியாதா உனக்கு?” என்று கேட்டு விட்டு “குழந்தை....” என்று ஏதோ ஆரம்பிப்பதற்குள் அவசரமாய் அருகிலிருந்த ஆம்லெட்டை ஒரே சுருட்டலில் எடுத்து அவன் வாய்க்குள் அடைத்தாள் சாரு.

அப்படியும் அடங்காமல் அவன் ..

“அடுத்த தடவை ஊட்டும் போது சொல்லிட்டு ஊட்டு. பாரு சட்டையெல்லாம் சிதறிடுச்சு” என்று கூற...

எரிச்சலும்,கோபமுமாய் வாய்க்குள் அவனை அர்ச்சித்தபடிக் கலவரத்துடன் மாமனை நோக்கினாள் சாரு.

“என் மேல இருக்குற கடுப்பைக் காட்டத் தான் உன்னை வம்புக்கு இழுக்குறான் இந்தப் பய! நல்லா யோசிச்சுக்கோம்மா! இவன் படிக்குற காலேஜ்ல தான் நீயும் படிக்கனுமா?, மாமா உன்னை ஸ்டெல்லா மேரிஸ்லயே சேர்த்து விட்றேனே” – வெகுவாய்க் கெஞ்சிக் கேட்டவரிடம்..

பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொலைவெறியுடன் வசந்தை நோக்கினாள் சாரு.

கஷ்டப்பட்டு இவரை சம்மதிக்க வைச்சா, இவன் வேற!

“அ..அது.. வந்து.. மாமா...” – திக்கிக் கொண்டிருந்தவளைக் கண்டு விட்டு..

“ஆமாமா! விமன்ஸ் காலேஜ்க்கு என்ன குறை?, வாசல்-லயே வாலிபப் பசங்கக் காத்துக்கிட்டு நிற்பானுங்க, ஒருத்தி விடாம நூல் விட்டு காதல் கோட்டைக் கட்டுறதுக்காகவே! என் ஒருத்தனுக்கே இவ்ளோ பயப்பட்றார் உன் மாமா! அங்க, ஓராயிரம் பசங்க இருப்பானுங்க! ஒவ்வொருத்தனையும் எப்படி சமாளிப்பார்?, பெல்ட்டாலயா?, இந்த நிலைமை நீடிச்சா, சார் சேர்த்து வைச்சிருக்கிற சொத்து எல்லாத்தையும் பெல்ட் வாங்கியே வீணாக்க வேண்டியது தான்!” – என்று நக்கலடித்தான் வசந்த்.

“என்ன சொன்ன? உனக்குப் பயந்து நான் இவளை அங்க சேர வேண்டாம்ன்னு சொல்றேனா?, டேய்... நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா டா?, என் ஒரு பெல்ட்டால உன்னை ஒட்டு மொத்தமா சுருட்டிடுவேன்!”

“ஆமாமா! அதான் உங்க பெல்ட் சைஸ்-ஐப் பார்த்தாலே தெரியுதே! ஏன்-ப்பா பெரிய்ய்ய பெல்ட்-ஆ கட்டனும்ன்றதுக்காகவே தொப்பை வளர்க்குறீங்களோ?”

சிரித்தபடி கூறியவனைக் கண்டுப் பல்லைக் கடித்தவர் ஒரு செம்புத் தண்ணீரையும் கடகடவெனப் பருகினார்.

சிரிப்பை அடக்க முயன்ற சாருமதியும், தட்டுக்குள் தலையை விட்டுக் கொண்டாள்.

“டேய்.. என்னைக் கேலி பேசுனதெல்லாம் போதும்! யாரு டா அவன்?, நாலாவது தெருவுல குடியிருக்கிறவன்?, சிநேகிதனா?, சிநேகிதியா?, எந்த வரிசைல டா வருவான் அவன்?, அவன் கூட உனக்கு என்ன சகவாசம்?, சங்கரன் உன்னை அவனோட சேர்த்துப் பார்த்துட்டு, என் கிட்டயே கிண்டல் அடிக்கிறான்”

“யார் அது சங்கரன்?”

“என் நண்பன் டா”

“ஹ்ம், நல்லவங்களோடப் பழகுற பழக்கமே கிடையாது போல உங்களுக்கு! ஃப்ரெண்டாம் ஃப்ரெண்டு!!

“கண்டவனோடெல்லாம் சகவாசம் வைச்சிருக்கிற நீ என் சகவாசத்தைக் குறை சொல்றியா?”

“ப்ச், அப்பா.. உங்களுக்கு இப்போ என்னப் பிரச்சனை?, அவன் என் ஃப்ரெண்ட். நான் அப்படித் தான் பழகுவேன்! உடல் ஊனமிருக்கிற ஒருத்தனோட நான் பழகினா.. நீங்க தடை சொல்லுவீங்களா?, இல்லேல்ல?, அது மாதிரி தான் இதுவும்”

“ஊர்ல ஒவ்வொருத்தன் கிட்டயும் போய் இதே வசனத்தைச் சொல்லுவியா?, இப்படிப் பேசி எத்தனை பேர் வாயை டா உன்னால அடைக்க முடியும்”

“இப்போதைக்கு உங்க வாயை அடைச்சா மட்டும் போதும்” – என்று முணுமுணுத்தவன்..

“அன்னம்மா.. அந்த டிரான்சிஸ்டர் சத்தத்தைக் கூட்டு, தேவையில்லாத பேச்செல்லாம் என் காதுல விழுகுது” என்று கத்த... விருட்டென எழுந்து சென்று விட்டார் சாருகேசன்.

அன்னம்மா டிரான்சிஸ்டரைத் தொட்டதும்.. இலங்கை வானொலியில்.. எஸ்.பி.சைலஜா கொஞ்சத் தொடங்கினார்.

“ராசாவே.. உன்னை நான் எண்ணித் தான்!

பல ராத்திரி மூடல கண்ணைத் தான்!”

சிரித்துக் கொண்டே உண்பதைத் தொடர்ந்தவன்.. தன்னையே பார்த்தவளைத் திரும்பி நோக்கினான்.

“என்ன?” - வசந்த்

“யாரைச் சொல்றார் மாமா?”

“நீ தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போற?”

“...............” – முசுட்டு முகத்துடன் இட்லியைப் பிய்த்தாள் அவள்.

மெல்லச் சிரித்தவன்.. “எதுக்கு எங்க காலேஜ்ல தான் சேருவேன்னு இந்த மனுஷன் கூட போராடிட்டு இருக்க?” என்று கேட்டுப் பின் “எனக்காகத் தான?” என்று வினவ...

நன்றாகத் திரும்பி அமர்ந்து அவனை முறைத்தவள்..

“பீச் ரோட்-ல காலேஜ்! யாருக்குத் தான் கசக்கும்?, அதுமட்டுமில்லாம, என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அங்க தான் ஜாயின் பண்ணுறாங்க! அதனால தான் நானும் அங்க சேர ஆசைப் பட்றேன்” – என்றாள்.

“ஓஹோ...”

“..................”

“காலேஜ்ல ராகிங் எல்லாம் பண்ணுவோம்!, தெரியும் தானே?”

“என்ன பண்ணுவீங்க?, பாட்டு பாடச் சொல்லுவீங்களா?, இல்ல டான்ஸ் ஆடச் சொல்லுவீங்களா?”

“ரெண்டும் இல்ல”

“பின்ன?”

“ஐ லவ் யூ சொல்லச் சொல்லுவோம்” – அலட்டிக் கொள்ளாமல் கூறியவனைக் கேட்டுப் புரையேறும் அளவுக்கு லொக்,லொக் என இருமியவள்.. அவனை நிமிர்ந்து பார்த்துப் பல்லைக் கடிக்க..

“மூணே வார்த்தை தான்! ஜஸ்ட் த்ரீ வேர்ட்ஸ்! இப்டியெல்லாம் நான் பண்ணிடுவேனோன்னு தானே உன் மாமா அவ்ளோ பயப்பட்றாரு! அவர் எதிர்பார்ப்பை ஏன் பொய்யாக்கனும்?,” தோளைக் குலுக்கியபடிக் கூறியவனை முறைத்தாள் அவள்.

“அப்டின்னா எனக்கு லவ் லெட்டர் குடுத்தது கூட மாமாவை கோபப்படுத்தி பார்க்கத் தானா?”

“இல்லைன்னு சொன்னா சந்தோசப்படுவியா?”

“இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு?”

“அப்புறம் எதுக்குக் கேள்வி கேட்குற?”

“ப்ச், அவரைக் கடுப்பேத்த என்னை எதுக்கு யூஸ் பண்ணிக்கிறீங்க?, வேற எவளும் கிடைக்கலையா?”

“ம்ஹ்ம் அல்வாத் துண்டு மாதிரி என் அத்தைப் பொண்ணு நீ இருக்கும் போது, நான் ஏன் எவளையும் தேடனும்! அதுமட்டுமில்லாம, நீ-ன்னா மட்டும் தான் மிஸ்டர்.கேசன் அநியாயத்துக்கு எகிறுவார்”

“இதுக்குப் பேரு தான் திமிரு”

“இருக்கட்டும்!, ப்ச், ராகிங்ல ஐ லவ் யூ சொல்லச் சொன்னா சொல்லுவியா மாட்டியா?, அதைச் சொல்லு முதல்ல”

மீண்டும்,மீண்டும் வம்பு செய்தவனை மூச்சு வாங்க முறைத்து.. அருகிலிருந்தக் காலி செம்பால் அவன் தலையில் அடியைப் போட்டு விட்டு நகர்ந்து விட்டாள் சாரு.

றுநாள் தன் மாமனோடு தனக்குப் பிடித்தக் கல்லூரியிலேயே அட்மிஷனுக்குக் கிளம்பி விட்டாள்.

ஏற்கனவே விண்ணப்பித்திருந்ததால் வேண்டிய ஃபார்மாலிட்டிஸை முடித்து விட்டுக் கல்லூரி வளாகத்தில் சாருகேசனுடனும்,தன் தோழிகளுடனும் நின்றிருந்தாள்.

“என்னம்மா வீட்டுக்குக் கிளம்பலாம் தான?” – கேசன்.

“மாமா அது வந்து..”

“என்னம்மா?”

“ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து வெளியே போகலாம்ன்னு ப்ளான் பண்ணியிருக்கோம் மாமா!,”

“வெளிய-ன்னா எங்க?”

“தியேட்டர்,பீச் அப்புறம்.. ஹோட்டல்” – தயங்கிப் பதிலளித்தாள்.

“தாராளமா போய்ட்டு வா! படத்துக்குப் போ.. பார்ட்டி பண்ணு! இந்த வயசுல இதெல்லாம் பண்ணாம, வேற எப்போ பண்றது?, நம்ம வீட்டுத் தறுதலையெல்லாம் என் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டா இருக்கான்?, நீ எஞ்சாய் பண்ணுடா அம்மா”

“தேங்க்ஸ் மாமா” – சிரிப்புடன் தலையாட்டியவளிடம்..

“ஜாக்கிரதை-ம்மா! சேஃப்ட்டி ரொம்ப முக்கியம்!” – என்று விட்டு அவர் நகர்ந்து விட..

தோழிகள் அனைவரும் ஆளாளுக்குக் கையைத் தட்டிக் கொண்டு “ஹேய்ய்ய்” எனக் குதித்தனர்.

கூட்டமாய் நடந்து வரும் பெண்களை வேடிக்கை பார்த்தபடி.. அக்கல்லூரியிலிருந்த அரசமரத்தடி நிழலில் அமர்ந்திருந்தனர் வசந்த் அண்ட் கோ.

“அந்த சிகப்பு சுரிதார் ஸ்ரீதேவி ரகம் மாமா.. அந்தப் பச்சை மேக்ஸி ரேகாஜி!! அதோ வர்றா பாரு.. கருப்பு மிடி.. அவ தான்.. அவ தான் நம்மாளு... ஜீனத் அமன் மாதிரி பார்க்கவே சும்மா குளு குளுன்னு இருக்கா பாரு..” – கடந்து செல்லும் பெண்களை வர்ணித்துக் கொண்டிருந்த ராகவன்.. தொடர்ந்து..

“சுரா லியா ஹேய் தும்னே ஜோ தில் கோ....

நஜர் நஹி சுரானா சனம்...” - என்று பாட வேறு செய்ய.. மற்ற அனைவரும் அவனுக்கு ஓஹோ போட்டனர்.

தங்களுக்குள் சலசலவெனப் பேசியபடி வந்து கொண்டிருந்த சாருமதியையும்,அவள் தோழிகளையும் கண்டு விட்ட ஜெயந்தன்.. நிமிடத்தில் திடுக்கிட்டு..

“டேய்.. வசந்த்” என்றுத் தன் நண்பனின் தோளை உலுக்கினான்.

“என்ன டா?”

“அங்க பார்த்தியா?”

“என்ன?”

“உன் அத்தைப் பொண்ணு அந்த சாமுண்டேஸ்வரி வர்றா டா!” – என்றவனைக் கண்டு.. அவன் சொன்ன திசையில் நோக்கியவன்.. லேசான சிரிப்போடு திரும்பிக் கொள்ள..

“என்னடா சிரிக்கிற? பின்னாடியே உங்கப்பா வருவாரோ? மனுஷன் பெல்ட் போட்டு வந்திருக்கிறாருன்னு எப்படி டா கண்டுபிடிக்கிறது?” – தன் போக்கில் உளறியபடிப் பதறியவனைக் கண்டு கடகடவென நகைத்த வசந்த்..

“எங்கப்பாவைப் பார்த்து நானே பயப்பட மாட்டேன்! நீ ஏன் டா இப்படி நடுங்குற?” – என்றான்.

“ம்ம்ம்ம்ம்ம், உனக்கென்ன? எவ்ளோ அடிச்சாலும் வாங்கிட்டு அபிமன்யு மாதிரி நிற்ப! நாங்கள்லாம்.. லுச்சா பசங்கப்பா! உத்துப் பார்த்தாலே... உச்சா போய்டுவோம்”

“அட ச்சி”

“ப்ச், உன் அத்தைப் பொண்ணுக்கு நம்ம காலேஜ்ல என்ன டா வேலை?, அதைச் சொல்லு முதல்ல”

“அவ இங்க தான் படிக்கப் போறாளாம்”

“என்னது??” – அதிர்ச்சியாய்க் கேட்டவனிடம்..

“நீ ஏன் டா ஷாக் ஆகுற?” என்றான் வசந்த்.

“பின்ன, தப்பித் தவறி உங்கப்பாவை நான் மறுபடி பார்க்க வேண்டிய நிலைமை வந்தா.. என்ன டா பண்றது?, உன் அத்தைப் பொண்ணு ஏன் இங்க படிக்க வருது?”

“ஏய்.. அவ இங்க படிக்குறதுல உனக்கு என்ன அவ்ளோ வருத்தம்?”

“வருத்தம் இல்ல டா பயம்!, உங்கப்பனைப் பார்த்து”

“ப்ச், வாயை மூடு” என்றவன்.. தன்னருகே அமர்ந்திருந்தவனிடம் திரும்பி “அசோக்.. அந்த ரோஸ் கலர் டிரஸ்-ஐ ஓரங்கட்டு டா” என்றான்.

“டேய்... டேய்.. மறுபடியுமா டா?” – பதறியபடி ஜெயந்தன்.

“ப்ச், எங்கப்பா வர மாட்டார் டா”

“நீ அப்படித் தான் சொல்லுவ! திடீர்ன்னு மனுஷன் பெல்ட் ஓட குதிப்பார்! குஸ்தி வீரன்னு வேற சொன்னார் அன்னிக்கு”

“ஏய்.. சும்மா இரு டா! அசோக்.. நீ கூப்பிடு”

வசந்த் அதட்டியதும் ஜெயந்தன் அமைதியாகி விட.. அசோக் என்பவன்.. அந்தப் பெண்களை நோக்கி விசில் அடித்தான்.

சட்டெனத் திரும்பிய சாருமதி.. ஒரே பார்வையில் வசந்தைக் கண்டு கொண்டாள்.

நண்பனின் தோளைச் சுற்றிக் கை போட்டபடி அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தவனின் கண்களில் அப்படியொரு பளபளப்பு!

“ஓய்ய்ய்.. சிட்டுக்குருவிங்களா!! கூப்பிட்றது காதுல விழல??”

“ஓ! விசில் அடிச்சாக் கூப்பிட்றதா அர்த்தமா?” – தோழிகளில் ஒருத்தி.

“இதெல்லாம் காலேஜ் பாஷை! படிப்படியா கத்துக்கனும்!, சரி, சரி வாங்க.. வாங்க.. வந்து வரிசைல நில்லுங்க”

“வரிசையா?, எதுக்கு?”

“ம்ம்ம், கூழ் ஊத்துவோம்! அப்டி ஓரமா நின்னு குடிச்சிட்டுப் போங்க”

“ஏய் சும்மா இரு டி! இவங்க நம்மை ராகிங் பண்ணப் பார்க்குறாங்க” “ராகிங்கெல்லாம் காலேஜ்ல சேர்ந்தப்புறம் தான நடக்கும்?, அட்மிஷன் போட வந்தவங்களையெல்லாமா கட்டம் கட்டுவாங்க?”

தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டவர்களைக் கண்டு..

“அடச்சை! சில்வண்டு மாதிரி நசநசன்னு சத்தம் விட்டுக்கிட்டு! சுப்” – என அதட்டிய ராகவன்..

நால்வரில் முதலாக நின்றிருந்தவளின் முகத்தை உற்று நோக்கி “எம்மாடி... எவ்ளோஓஓ நீள மூக்கு! பேசாம, தோள்ல மாட்டியிருக்கிறப் பையை எடுத்து மூக்குல மாட்டிக்க!, வசதியா இருக்கும்! மாமா, இவ உனக்கு...” என ராகம் பாடியவன் அவளை அசோக்கிடம் தள்ளினான்.

ரெண்டாவது பெண்ணிடம் “கும்க்காவா தாவணி கட்டியிருக்கியே! பேர் என்ன அம்சாவா?” என்றவன்.. “நீ அந்த சிகப்புச் சட்டைக் கிட்டப் போ..” என்று துரத்தினான்.

மூன்றாவதாக நின்றவளைச் சுற்றி வந்தவன் “கோவில் தூண் மாதிரி பரந்து,விரிஞ்சு வளர்ந்து நிற்குறியேம்மா! நீ நேராப் போய்.. அந்த அரசமரத்தைக் கட்டிப்பிடிச்சுக்க! உன்னையெல்லாம் எவனும் ராகிங் பண்ண மாட்டான்” என்று கூறி விட்டுக் கடைசியாக சாருமதியிடம் வந்தான்.

பெல்டட் மேக்ஸி என்று சொல்லக் கூடிய.. கணுக்கால் வரையிலான ரோஸ் நிற மேக்ஸி அணிந்திருந்தாள். மார்புக்குக் கீழே பெல்ட் அமைப்புடன்.. ஒரு சிறிய ‘போ’-வும் அதைத் தொடர்ந்து இரு ரிப்பனும் தொங்கிக் கொண்டிருந்தது. நேர் வகிட்டைத் தொடர்ந்து முன் நெற்றியில் கற்றையாய் முடிகள் இருபுறமும் தோரணம் கட்டியிருக்க.. காதில் ரோஸ் நிறத்தில் ப்ளாஸ்டிக் தோடுகள்!

தன்னருகே வந்து நின்ற ராகவனை முறைத்தபடி அழுத்தமாய் நின்றிருந்தாள் சாரு.

சட்டைக் காலரை சரி செய்து கொண்டு.. தலையைக் கோதியவன்.. பாக்கெட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து.. அதன் நுனியை வாயில் வைத்துக் கொண்டு.. மேலும்,கீழுமாய் அவளை நோக்கினான்.

“தனிமையிலே.. வெறுமையிலே.. எத்தனை நாளடி இள மயிலே..” என்று பாடிப் பின் “அன்பே மாதவி! உனக்கு இந்த அத்தானைப் பிடிச்சிருக்கா?” என்று வினவும் வேளையில்.. “ம்க்க்க்க்க்க்க்கும்” என்றான் வசந்த்.

“என்ன மாமா?, விட்றட்டுமா?” – வசந்தை நோக்கி ராகவன்.

“ம்ஹ்ம்... அவ எனக்கு” – பின் தலை முடியைக் கோதிக் கொண்டு அவளையே பார்த்தபடி கூறியவனைக் கண்டு முகத்தைச் சுருக்கிய ராகவன்..

“வசந்த்... ப்ளீஸ் டா!” என்று கூற...

“டேய்.. வந்துடு டா ராகவா! உன் உடம்பு பெல்ட் அடியெல்லாம் தாங்காது டா” – என்றபடி இடை புகுந்தான் ஜெயந்தன்.

தோன்றிய முறுவலை வாய்க்குள் அடக்கியவளைக் கண்டு அமர்ந்திருந்த இடத்திலிருந்துக் குதித்து இறங்கி வந்தான் வசந்த்.

“சிரிக்கிறியா?” – வசந்த்.

“ப்ச்” என்றபடி கைகளைக் கட்டிக் கொண்டவள் “மாமா கிளம்பிட்டார்ன்ற தைரியத்துல தானே இப்படியெல்லாம் பண்றீங்க?, தயவு செஞ்சு என் ஃப்ரெண்ட்ஸ்ங்களை விட்ருங்க ப்ளீஸ்”

“அப்டின்னா.. நீ, நான் சொல்றதைச் செய்யனும்”

“ஐ லவ் யூ-வைத் தவிர எது வேணாலும் சொல்லுங்க செய்றேன்”

“எது வேணாலுமா?ஹாஹா.. அநாவசியமா வாக்குக் கொடுக்காத! அப்புறம் நான் எக்குத்தப்பா ஏதாவது கேட்டு வைச்சிடுவேன்”

“டர்ட்டி மைண்டட் நீங்க”

“கெட்டன இரவுகள்.. சுட்டன கனவுகள்.. இமைகளும் சுமையடி இளமயிலே..” – அவளையே கண்டபடி ராகவன் வேறு இடையில் வந்து பாட்டு பாடிச் சென்றான்.

“இவனை விடவா?” - வசந்த்

“ச்சி! அவன் ஆளும்,மூஞ்சியும்! நல்லா.. தீஞ்சு போன தோசைச் சட்டி மாதிரி இருக்கான்! இவனுக்கு வைரமுத்துப் பாட்டு வேற!”

“ஹாஹாஹா”

“ப்ச், எங்களை விட்ருங்க நாங்க போறோம் ப்ளீஸ்”

ஆளாளுக்கு ஒருவனிடம் சிக்கிக் கொண்டு.. பரிதாபமாய் நின்ற தோழிகளைக் கண்டு வசந்திடம் அவள் கெஞ்ச..

“ம்ஹ்ம்.. பசங்க ரொம்ப சீரியஸ் ஆய்ட்டானுங்க! இப்போதைக்கு விட மாட்டானுங்க”

“என்ன இப்படி சொல்றீங்க! நாங்க தியேட்டர்,பீச்ன்னு இன்னிக்கு ஃபுல்-ஆ ஆட்டம் போடலாம்ன்னு ப்ளான் பண்ணியிருக்கோம்! நீங்க எல்லாத்தையும் கெடுத்துடுவீங்க போல”

“அடேங்கப்பா! கேங்-ஆ சுத்துற அளவுக்கு நீங்க பெரிய ஆள் ஆயிட்டீங்களா?, ஆமா, உன் மாமா எப்படி சம்மதிச்சார்?”

“நீ படத்துக்குப் போனாலும் சரி, பார்ட்டி பண்ணாலும் சரின்னு எனக்கு சகல உரிமையும் கொடுத்துட்டார். தெரியுமா?” – கர்வமாய்க் கூறியவளைக் கண்டு..

“பாரேன்! நான் பர்ஸ்ல நாலணா வைச்சிருந்தா கூட.. சிகரெட் பிடிக்கிறியாடான்னு கேட்டு.. சந்தேகப் பட்ற மனுஷன், உன்னை பார்ட்டிக்கெல்லாம் போகச் சொல்லி பர்மிஷன் கொடுக்குறார்?” – என்று பெருமூச்சு விட..

“உங்க முகராசி அப்படி! யாருக்குத் தெரியும்?, நிஜமாவே நீங்க சிகரெட் பிடிப்பீங்களோ என்னவோ” – தோளைக் குலுக்கிக் கொண்டுத் திமிராய்க் கூறியவளை எரிச்சலுடன் நோக்கியவன்..

“நீ பார்த்த?, ஏய்ய் என்னடி கடுப்பேத்துறியா?” – என்று எகிறினான்.

“ப்ச், உங்களால அவங்களை விட முடியுமா முடியாதா?”

“விட்டுட்றேன்! ஆனா ஒரு கண்டிஷன்”

“என்ன?”

“இவங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு நீ சொன்ன தியேட்டர்,பீச்,ஹோட்டல்ன்னு எல்லா இடத்துக்கும் நீ என் கூட வரணும்” – கையைக் கட்டிக் கொண்டுத் தலை சாய்த்துக் கூறியவனைக் கண்டுப் பதறிப் போனவள்..

“வாஆஆஆஆட்???, என்ன விளையாடுறீங்களா?, மாமாவுக்குத் தெரிஞ்சா அவ்ளோ தான்!” – இண்ஸ்டண்ட் ஆக தாம்,தூமெனக் குதித்தாள்.

“ப்ச், அவர் என்னவோ உனக்கு ஸ்பை வைச்சிருக்க மாதிரி! ரொம்பப் பயப்பட்ற?, அதெல்லாம் அவருக்குத் தெரிய வராது”

“ம்ஹ்ம், என்னால் முடியாது! நான் ஒத்துக்க மாட்டேன்!”

கலவர முகத்துடன்.. தலையைப் பலமாக ஆட்டி மறுத்தவளை இரண்டு நிமிடம் பொறுமையாய் நோக்கியவன்.. பின் தன் நண்பர்களின் புறம் திரும்பி... “டேய்ய்.. இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு இவங்களை அங்க,இங்க நகர விடக் கூடாது” என்று ஆணையிட..

கோபத்தில் கொதித்துப் போனவள் “நான் இப்பவே போய் உங்களைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ணுவேன்!” என்று பாய...

“போ! போ! அந்த ரெண்டாவது பில்டிங்-ல முதல் மாடி! பிரின்சிபல் ரூம்! முடிஞ்சா போய் கம்ப்ளைண்ட் பண்ணு” – அசால்ட்டாக கூறினான் அவன்.

எரிச்சலுடன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டு “இதுவும் மாமாவை வெறுப்பேத்த தானா?” – என்று வினவினாள்.

“உனக்கு அப்படித் தோணுதா?” – பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு.. புருவம் உயர்த்திக் கேட்டவனிடம்..

“பின்ன எதுக்கு?, எனக்குப் புரியல! நீங்க புரிய வைங்க!” – என்றாள்.

புருவத்தை சொரிந்தபடி வேறு புறம் நோக்கியவன் பின் தன்னையே நேர்ப் பார்வையாகப் பார்த்தவளிடம்..

“ஏற்கனவே சொன்னேனே! உன்னைக் காதலிக்கிறேனா, இல்லையான்னு தெரிஞ்சுக்கக் காதலிச்சுப் பார்க்கத் தோணுதுன்னு?? – பார்வை மாற.. அடிக்குரலில் நிதானமாய்க் கூறியவனைக் கேட்டு.. வாயடைத்துப் போனவள்....

“அதனால??” என்று வினவ...

“என் கூட வா. காதலிக்கனும்” என்றான் அதே பார்வையுடன்! அதே நிதானத்துடன்!

திடுக்கிட்ட நெஞ்சம் உள்ளே பரப்பிய வெப்பத்தின் விளைவால்.. வியர்க்கத் தொடங்கிய நெற்றியுடன்.. கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்தவளுக்கு.. சில நொடிகளுக்கு மேல் அவன் பார்வை கொடுக்கும் தாக்கத்தை.. அது தனக்குள் செய்ய விளையும் மாற்றத்தை.. தாங்கிக் கொள்ள முடியாது போக.. சட்டென வேறு புறம் நோக்கினாள்.

நீள,நீள மூச்சுக்களுடன் கோபம்,பயம்,எரிச்சல்,படபடப்பு என அத்தனை உணர்வுகளையும் உள்ளே அடக்க முயன்றவளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.

“டெஸ்ட் எனக்குத் தான்! உனக்கு இல்ல! அதனால பயப்படாம வா” – என்றவனைக் கண்டு மட்டுப்பட்டக் கோபம் மீண்டும் முன்னே வர.. எரிச்சலுடன் அவனை நெருங்கி..

“என்னை சுத்தமாப் பிடிக்காதுன்னு சொல்லிட்டு லவ் லெட்டர் கொடுத்தே தப்பு! இதுல.. இது என்ன ஃபீலிங்க்ஸ்ன்னு தெரிஞ்சுக்கனும்,அதனால் என் கூட ஊர் சுத்த வான்னு கொஞ்சம் கூட யோசிக்காம.. கூப்பிட்றீங்க?”

மூச்சு விடாமல் கத்தியபடி முன்னே வந்தவளைக் கண்டு அதிர்ந்து அவளது நடைக்கேற்ப இரண்டடி பின்னால் சென்ற வசந்துக்கு சிரிப்புப் பொங்கியது.

“ஏய்ய்... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்!” என்றவன் தொடர்ந்து..

“அன்னிக்கு ஏன் நீ மஞ்சள் கலர் தாவணி போட்ட?, அது தான் இவ்ளோ பிரச்சனைக்கும் காரணம்” என்றான்.

“வாட்??”

“ப்ச், உன்னால வர முடியுமா முடியாதா?”

“என்னை சுத்தமா பிடிக்காதுன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் சொல்லியிருக்கீங்க நீங்க! அதுக்கு எக்ஸ்ப்ளனேஷன் கொடுங்க முதல்ல. அப்புறம் நான் வர்றதா வேணாமான்னு யோசிக்கிறேன்”– கையைக் கட்டிக் கொண்டு முறைப்புடன் கேட்டவளைக் கண்டுச் சிரித்து..

“உன்னைத் தவிர வேற யாரையும் பிடிக்கும்ன்னும் தோணலன்னு சொன்னேனே! அதை மட்டும் வசதியா மறந்துட்ட?

“தெளிவா குழப்புறதுல நீங்க பெரிய கில்லாடி!!”

“குழப்பம் தெளியத் தான் வா-ன்னு கூப்பிட்றேன்”

“...................” – உதட்டைக் கடித்தபடி அமைதியாக நின்றவளைக் கண்டு..

“இந்த காலேஜ்ல தான் நீ சேரப் போற-ன்னு தெரிஞ்சப்பவே நான் இதெல்லாம் ப்ளான் பண்ணிட்டேன்! இன்னிக்கு நீயாவே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்க! நிச்சயம் சும்மா விட மாட்டேன்”

அசால்ட்டாகக் கூறியவனைக் கண்டு அடப்பாவி எனக் கண்ணை விரித்தவளை எரிச்சலுடன் பார்த்து.. “ஆ,ஊ-ன்னா கண்ணைப் பொளக்க வேண்டியது! முதல் வேலையா.. நீச்சல் கத்துக்கனும்” எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டான்.

அவன் பேச்சு,செயல் எதையும் கோர்வையாகக் கோர்க்க முடியாமல்.. விழித்தபடி நின்று கொண்டிருந்தவளிடம்..

“ஒழுங்கா என்னோட வர்றியா? இல்ல, உன் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து இந்த அரசமரத்தடிலயே இன்னிக்கு ஃபுல்-ஆ உட்காரப் போறியா”

முடிவாகக் கேட்டவனைக் கண்டு ஒரு நொடித் தன் தோழிகளை நோக்கியவள் பின் வேறு வழியின்றி சரியெனத் தலையாட்டினாள்.

முகம் மலர சிரித்தவனை முறைக்க முயன்றுத் தோற்றுப் பின் தனது தோழிகளிடம் விடை பெற்று வந்தவளை அழைத்துச் சென்றான் வசந்த்.

“வசந்த் ஆல் த வர்ஸ்ட் டா” - அசோகன்

“மாமா, போன தடவையாவது பெல்ட்-ல தான் அடி வாங்குன! இந்தத் தடவை உங்கப்பன் செருப்பைத் தூக்கப் போறான் டா” - ஜெயந்தன்

“சாருமதி ஐ லவ் யூ.. என் ப்ரபோசலை கன்சிடர் பண்ணு”-ராகவன்.

பலதரப்பட்டக் குரல்களைக் கேட்டுப் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவளைத் தன் புல்லட்டில் ஏற்றிக் கொண்டான்.

ல்லூரி வளாகத்தைத் தாண்டி பீச் ரோட்டில் அவனது வாகனம் முழு உற்சாகத்துடன் சீறிப் பாய்ந்தது.

கடற்காற்றின் திருவிளையாடலால் முன்னுச்சி முடி பறக்க... நினைத்ததைச் சாதித்து விட்டத் திருப்தியில்.. முழுப் புன்னகையுடன்.. புருவம் சுருக்கியபடி.. ரியர் வியூ மிர்ரரை நோக்கினான் அவன்.

கண்ணாடி காட்டிய அவள் பிம்பத்தைக் கண்டவனின் கண்களில் கடற்காற்றையும் தாண்டிய குளிர்ச்சி!!

முழுப் பயமும், ஏகப்பட்டத் தயக்கமுமாய்.. பட்டும் படாமல் அமர்ந்திருந்தவளைக் கண்டு..

“அடுத்த ஸ்பீட் ப்ரேக்கர்ல கண்டிப்பா நீ கீழ விழப் போற”- என்றான்.

“ஏன்?”

“எதையுமே பிடிக்காம ரொம்ப அசால்ட்டா உட்கார்ந்துட்டு வர்ற?”

“பிடிக்கிறதுக்குத் தான் எதுவுமில்லையே இங்க”

“நான் எதுக்கு இருக்கேன் அப்போ?” – அடக்கப்பட்ட சிரிப்புடன் கேள்வி கேட்டவனை முறைத்து..

“அப்டியெல்லாம் பிடிக்க முடியாது” – என்றாள் அவள்.

“ஓஹோஓஓ” என்றபடி ஒரு நொடி அமைதியானவன்.. அடுத்த நொடி இஷ்டத்துக்குத் தன் வண்டியை குலுக்கியதில்... ஆடிப் போய்.. அவசரமாய் அவன் தோளைப் பற்றியவளைக் கண்டு வாய் விட்டுச் சிரித்தான்.

தலைக்கு மேல் வெள்ளம் போயாயிற்று! இனி ஜாண் என்ன முழம் என்ன என்றெண்ணிக் கொண்டு.. அவன் தோளைப் பிடித்தபடி நன்றாக அமர்ந்து கொண்டாள் அவள்.

“இதுக்கு முன்னாடி நான் உன் கையைப் பிடிச்சதே இல்லையா?, ரொம்பத் தான் பண்ணிக்கிற?”

முறைப்புடன் முகத்தை வைத்துக் கொண்டவளை மீண்டும் ரியர் வியூ மிர்ரரில் நோக்கியவன்..

“பிடிக்கலையா?” என்று வினவினான்.

“பயமா இருக்கு” – கலக்கத்துடன் வெளி வந்தது அவள் குரல்.

“உன் மாமாவை நினைச்சா?”

“ம்ம்”

“இருக்க வேண்டியது தான்!” – நக்கலாகக் கூறியபடிச் சிரித்துக் கொண்டான் அவன்.

“ப்ச்”

“பயத்தைத் தாண்டி வேற எதுவும் தோணலயா?”

“என்ன தோணனும்?”

“இதுக்கு முன்னாடி நீ பைக்ல போயிருக்கியா?”

“இல்ல.” என்றவள் தொடர்ந்து.. “நீங்க இதுக்கு முன்னாடி வேற எந்தப் பொண்ணையாவது பின்னாடி வைச்சுக் கூப்பிட்டுப் போயிருக்கீங்களா?” – என்று சந்தேகமாய் வினவினாள்.

அவள் முக மாற்றத்தைக் கண்ணாடி வழி நோக்கியவன்.. சிரிப்புடனே வினவினான்.

“ஆமா-ன்னு சொல்லனுமா, இல்லன்னு சொல்லனுமா?”

“உண்மையைச் சொல்லுங்க”

“இல்ல! நீ தான் என் வண்டில ஏறுன முதல் பொண்ணு. போதுமா?”

“நம்புற மாதிரி இல்லையே!”

“நம்பாட்டிப் போடி” – மிர்ரரை நோக்கி முகத்தை சுழித்தவனைக் கண்டு சிரிப்புடன் தலை குனிந்தவளுக்கு.. என்னவென்றே புரியாத உணர்வு!

ஒலித்த அலையோசையும்,தழுவிச் சென்ற குளிர்க் காற்றும்.. ஒரு விதமான மிதப்பைக் கொடுக்க.. மயங்கத் தொடங்கிய மனதின் கதவு,ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டு... அவன் பார்வையும்,பேச்சும் தூண்டியக் கிளர்ச்சியை, ஆசையை வரவேற்கக் காத்திருந்தாள் அவள்.

“என்ன படம் பார்க்கனும்ன்னு ப்ளான் பண்ணியிருந்தீங்க?” - வசந்த்

“பயணங்கள் முடிவதில்லை!”

“அந்தப் படம் ரிலீஸ் ஆகி மூணு மாசத்துக்கு மேல ஆச்சே!”

“ஆமா நூறு நாள் தாண்டி ஓடிட்டிருக்கு! ஆனா நான் இன்னும் பார்க்கல!, இளையராஜாவுக்காகவே அந்தப் படம் பார்க்கனும்”

“ஏன், நினைவெல்லாம் நித்யா-ல கூடப் பாட்டு நல்லாத் தான இருக்கு?, புதுப் படம்! அதுக்குப் போகலாமா?”

“வேண்டாம்!, படம் நல்லாயில்லைன்னு கேள்விப்பட்டேன், எனக்குப் பயணங்கள் முடிவதில்லை தான் பார்க்கனும்!” – பிடிவாதம் பிடித்தவளைக் கண்டு..

“சரி, அந்தப் படத்துக்கே போகலாம்” – என்றவன் வண்டியை மௌண்ட் ரோட்டிற்குச் செலுத்தினான்.

தேவி காம்ப்ளெக்ஸில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தவர்களை வரவேற்றது.. இளையராஜாவின் பெரிய பெரிய கட் அவுட்டுகள் தான்!

நாட்டிலேயே மியூசிக் டைரக்டருக்காக அதிக கட் அவுட்டுகள் வைக்கப்பட்ட ஒரே படம் பயணங்கள் முடிவதில்லை!

படத்தில் இடம் பெற்ற ஒட்டு மொத்தப் பாடல்களும் ஹிட்டோ ஹிட்! ஏ.. ஆத்தாவிலிருந்துத் தொடங்கி, இளையநிலா பொழிகிறதே,தோகை இளமயில், வைகறையில் வைகைக் கரையில், மணியோசை கேட்டு எழுந்து, ராக தீபம் ஏற்றும் நேரம்,சாலையோரம் சோலையொன்று பாடும்.. என ஒவ்வொன்றும் முத்து,முத்தான பாடல்கள்! நூறு நாட்களையும் தாண்டி ஓடி சில்வர் ஜூப்லியைத் தொட்ட இந்தப் படம் ஏகப்பட்ட விருதுகளையும் குவித்ததென்பது குறிப்பிடத்தக்கது.

நூறு நாட்கள் தாண்டியும் கூட்டம் குறையாதிருந்தது தேவி –பாரடைஸில் திரையிடப்பட்ட அந்த முதற் காட்சி!

படம் தொடங்கியதும் ஆர்வத்துடன் திரையில் மூழ்கிப் போனவளைக் கண்டுச் சிரித்துத் தானும் படத்தில் ஆழ்ந்தான் வசந்த்.

லொக்,லொக் என இருமியபடி மோகன், மணியோசை கேட்டு எழுந்து எனப் பாடத் தொடங்கியதும் எரிச்சலுற்று அவன் புறம் திரும்பினாள் சாரு.

“sad ending-ன்னு முன்னமே சொல்லியிருக்கலாம்ல?”

“ஜஸ்ட் படம் தான?, ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற”

“ப்ச், உங்களோட ஃபர்ஸ்ட் டைம் பார்க்குற படம், ஹாப்பி எண்டிங்-ஆ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” – தன் போக்கில் புலம்பியவள் பின் தான் கூறியதை எண்ணி நாக்கைக் கடித்ததைக் கண்டு அவன் லேசாகச் சிரித்தான்.

“சாரு...”

“ம்ம்?”

“லவர்ஸ் எல்லாம் ஏன் தியேட்டருக்கு வர்றாங்கன்னு தெரியுமா?”

“எக்குத்தப்பா ஏதோ சொல்லப் போறீங்க தான?” – இருட்டில் பளபளத்த அவன் கண்களைக் கண்டு சந்தேகமாய் வினவியவளிடம்..

“பரவாயில்லையே! உன்னைச் சின்னப் பொண்ணுன்னு நினைச்சேன்! எல்லாஆஆஆமே தெரிஞ்சு வைச்சிருக்க” – என்று நக்கலடித்தான் அவன்.

“பின்ன?, ஜெனரல் நாலேஜ் ரொம்பவும் முக்கியம்! என் கேங் லேடீஸ் 24 மணி நேரமும் பேசிக்கிற ஒரே விஷயம் இது தான்!” – கூச்ச நாச்சம் பாராமல் ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தவளைக் கண்டுப் புருவம் உயர்த்தி..

“ஹ்ம்ம்! அப்ப எனக்கு வேலை சுலபம்ன்னு சொல்லு” – என்று அவன் கூற..

“என்னது?” – எனப் பதறிப் போனாள் அவள்.

“ஏன் ஷாக் ஆகுற?”

“காதலிக்கனும்ன்னு மட்டும் தான சொன்னீங்க?”

“கிஸ்ஸிங் எல்லாம் லவ்க்கு கீழ தான் வரும் சாரு”

“வா...வா...வாட்ட்ட்ட்ட்??” – ஏகத்துக்கும் வாயைத் திறந்தவளிடம்..

“முத்தமெல்லாம் காதலில் ஒரு அங்கம்-ன்னு சொல்றேன்” என்றான்.

“முத்தமாஆஆஆஆ?”

“சரி, கண்ணை விரிக்காத! நெக்ஸ்ட் டைம் நீச்சல் கத்துக்கிட்டு வந்து.. உன் கிட்ட இதைப் பத்தியெல்லாம் பேசுறேன்! அப்போ தான் நான் சேஃப்-ஆ இருக்க முடியும்” – தலை முடியைக் கோதிக் கொண்டவனிடம்..

“ப்ச், புரியுற மாதிரி பேசுங்க”- என்று சிடுசிடுத்தாள் அவள்.

“புரியுற மாதிரியா?” – என்றவன்.. அருகே அமர்ந்திருந்தவளிடம் “இங்க வா..” என்று கையசைத்தான்.

“நம்பி வரலாம்ல?”

“கவலைப் படாத! உனக்குப் பதினெட்டு வயசு முடியற வரைக்கும் நான் ஒன்னும் பண்ண மாட்டேன்”

வாக்களித்தவனைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்டு அவனருகே முகத்தைக் கொண்டு வந்தவளிடம்..

“உன் கண்ணு இல்ல?”

“ம்ம்ம்”

“மையெல்லாம் தீட்டிப் பெருசா வைச்சிருக்கியே”

“ப்ச், விசயத்தைச் சொல்லுங்க”

“ஹ்ம்ம்ம்ம், அது ஒரு ஆழ்கடல் மாதிரி! அநியாயத்துக்கு மொத்தமா என்னை உள்ள இழுத்துப் போட்டுடுது! ஒவ்வொரு தடவையும் உன்னைப் பார்க்குறப்போ அதுக்குள்ள மூழ்கிப் போய் மூச்சுத் திணறுற உணர்வு எனக்கு! அதனால தான் நீச்சல் கத்துக்கனும்ன்னு சொல்றேன்”

அவள் விழிகளில் பார்வையைப் பதித்துப் பொறுமையாய்க் கூறியவனைக் கண்டு உதட்டை நக்கலாக வளைத்தவள்..

“சும்மா சொல்லக் கூடாது! வசனமெல்லாம் பின்றீங்க! அடுத்த நாடகத்துக்கு யூஸ் பண்ணிக்கோங்க! நிச்சயம் க்ளாப்ஸ் வாங்கும்” – என்று சிரிக்காமல் கூற..

“போடி” – என்ற படி நகர்ந்தமர்ந்து கொண்டான் அவன்.

அதன் பின்பு படம் முடிந்து வெளியே வந்து.. சங்கம் ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டு.. மாலை மெரினாவில்.. கால் நனைத்துக் கொண்டிருந்த சாருவுக்கு.. வசந்தைத் தவிர வேறு எவரும் இப்பூவுலகில் வசிக்கும் ஜீவராசிகளாகவேத் தோன்றவில்லை.

தன் நீண்ட கூந்தலைக் கட்டிக் கொண்டையாக்கி.. காலணிகளைக் கையில் வைத்துக் கொண்டு.. கடலலையுடன் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தவளைப் பாண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டபடி சற்றுத் தள்ளி நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் வசந்த்.

“இப்படிக் கரையோரமா நின்னு காக்கா விரட்டுறதுக்கு, நீங்க வராமலே இருந்துருக்கலாம்ல?” – சாரு.

மூச்சு வாங்க வசந்தை நோக்கிக் கத்தினாள்.

“நான் சும்மா நிற்கிறேன்னு யார் சொன்னா?”

“பின்ன?”

“நான் உன்னை சைட் அடிச்சிட்டு இருக்கேன்”

“அடேங்கப்பா! இதுக்குப் பேரு தான் ஃப்ளர்ட்டிங்! இதுவும் கூட காதல்ல ஒரு அங்கம்! அப்படித் தான சொல்லப் போறீங்க?”

“எக்ஸாக்ட்லி! இப்போ தான் நீ என்னோட வேவ் லெங்க்த்துக்கு வந்திருக்க”

“கடவுளே!!!!”

“சாரு.....”

“ம்ம்”

“இப்போ பயமெல்லாம் இல்லையே!”

“இவ்ளோ நேரம் இல்லாம இருந்தது! இப்போ நீங்க தான் நியாபகப் படுத்திருக்கீங்க”

“சரி, அப்டின்னா நான் கேட்டதை உன் மெமரில இருந்து அழிச்சிடு”

“அதுசரி”

“சாரு....”

“சொல்லுங்ங்ங்ங்ங்ங்ங்க...” – மீண்டும் கரையை நோக்கிக் கத்தினாள் அவள்.

“காதலிக்கலாமா??”

“கேட்கல” – காதில் விரலை வைத்துக் கையசைத்தவளிடம்..

“லவ் பண்ணலாமான்னு கேட்டேன்” – என்று அவனும் கத்தினான்.

“காலையில இருந்து நீங்க அதைத் தான பண்ணிட்டு இருக்கீங்க!”

“ம்ஹ்ம்!காலையில இங்க வரும் போது.. நான் உன்னைக் காதலிக்கனும்ன்னு சொல்லித் தான் கூட்டிட்டு வந்தேன்! ஆனா.. இப்போ.. நீயும் என்னைக் காதலிக்கனும்ன்னு தோணுது”

கரு மேகங்கள் சூழ மங்கிப் போயிருந்த அந்த மாலை வேளையில்.. சந்தன நிற பெல்ஸூம்,கருப்புச் சட்டையுமாய்.. வேகமாய் வீசியக் காற்றில்.. முன்னுச்சி முடி பறக்க.. பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு நின்றவனைக் கண்டு.. அதுவரையிலிருந்தத் துள்ளல் மறைய... படபடக்கும் இதயத்துடன் அவனை நோக்கினாள் அவள்.

உதட்டில் உறைந்து போன சிரிப்புடன் அவளையே நோக்கியவனும் தன் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை.

“இதுக்கு என்ன பதில் சொல்றது?” – சாரு.

“காதலிக்கலாம்ன்னு சொல்லு”

“என்னைப் பிடிக்கல! ஆனா வேற யாரையும் பிடிக்கும்ன்னும் தோணலன்னு சொன்னீங்களே! அந்தக் குழப்பமெல்லாம் தீர்ந்துடுச்சா உங்களுக்கு?”

“யெஸ்! இப்போ வரைக்கும் வேற யாரையும் பிடிக்கல! இனிமேலும் பிடிக்கும்ன்னும் தோணல! அப்டின்னா உன்னைப் பிடிச்சிருக்குன்னு தான அர்த்தம்?”

“எனக்கு லேசா தலை சுத்துது”

“ஹாஹாஹா”

“சிரிக்காதீங்க. எப்பவும் என்னைக் குழப்புறீங்க நீங்க” – எரிச்சலுடன் அவள் சிணுங்கிக் கொண்ட வேளை.. பெரிய,பெரிய துளிகளுடன் மழை பொழியத் துவங்க..

அவசரமாய் ஓடிய இருவரும்.. மூடப்பட்டிருந்தக் கடையொன்றின் வாசலை அடைந்த நேரம்.. ஏறக்குறைய முழுதாய் நனைந்திருந்தனர்.

முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தபடித் தலையைக் கோதியவனைக் கண்டு..

“நான் நெகட்டிவ்-ஆ பதில் சொன்னா என்ன செய்வீங்க” என்று ஓடி வந்ததில் மூச்சிரைக்க.. திணறியபடி வெளி வந்தது அவள் குரல்.

தானும் மூச்சிரைக்க.. அவளை நோக்கியவன்.. அவள் நெற்றியோரத்தை அலங்கரித்திருந்த முடிகளிலிருந்து சொட்டிய நீரில் பார்வையைப் பதித்து..

“சாருமதி இல்லேன்னா ஒரு வெண்மதின்னு! யாரையாவது பார்த்துட்டுப் போக வேண்டியது தான்” எனவும்..

அவனை முறைத்து விட்டு வேறு புறம் திரும்பியவள்.. காதோரத்தில் வழிந்த நீரைத் துடைத்த வேளை... வேகமாய் அவளருகே வந்து... அவள் வலது கன்னத்தை பற்றித் தன் புறம் திருப்பினான் அவன்.

திடுக்கிட்டு அவன் முகம் நோக்கியவளிடம்.. “அவ்ளோ ஈசியால்லாம்.. உன்னை விட்டுட மாட்டேன்! நீ நெகட்டிவ்-ஆ பதில் சொல்றதைக் கேட்டுட்டுச் சும்மா நிப்பேன்னு நினைச்சியா?” என்றான்.

“என்ன பண்ணுவீங்க?”

பற்றியிருந்த அவள் கன்னத்தை அழுத்தி.. “உண்ணாவிரதம் இருந்தாவது.. உன்னைக் காதலிக்க வைப்பேன்” எனக் கூற... மெல்லப் பரவத் தொடங்கிய முறுவலை அடக்கியபடி மறுபுறம் திரும்ப எத்தனித்தவளைத் தடுத்துத் தன் முகம் காணச் செய்தான் அவன்.

“பதில் சொல்லு” – அழுத்தமாய் வெளி வந்தது அவன் குரல்.

“..........” – பார்வையைத் தழைத்தபடி அமைதியாய் நின்றவளைக் கண்டு மீண்டும்..

“சாரு....” என்றான் அவன்.

விழிகளை நிமிர்த்தி அவன் முகம் நோக்கியவள்.. அடக்கப்பட்ட சிரிப்புடன்.. “பதில் தான?, என் மாமா சொல்லுவாரு” எனக் கூற.. முறைப்புடன்.. அவள் காதோரத்தை அழுத்தினான் அவன்.

கண்ணைச் சுருக்கி.. சிரிப்பை அடக்கி.. “ஷ்ஷ்ஷ்..” என்றவளைக் கண்டு.. அதுவரையிருந்த விளையாட்டுத்தனத்தைக் கை விட்டுத் தீவிரமாய் அவள் விழி நோக்கியவனின் பார்வையில் திணறி.. திடீரென..

“எனக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகல” என்றாள் அவள்.

புரியாமல் நோக்கியவனிடம்..

“பதினெட்டு வயசு முடியுற வரைக்கும் எதுவும் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க” – தரையைப் பார்த்தபடிக் கூறியவளைக் கண்டு இதழ் வளைய முறுவலித்து..

“அந்த எண்ணத்தை நான் மாத்திக்கிட்டுப் பத்து நிமிஷம் ஆச்சு” – என்றான் அவன்.

வாய் பிளந்து நின்றவளின் கன்னத்தை அழுத்தித் தன்னருகே வரச் செய்தவன்.. விரிந்த விழிகளுடன் தன்னையே நோக்கியவளைக் கண்டு மெல்ல அவள் கன்னத்திலிருந்தக் கையை விலக்கிக் கொண்டு..

பார்வை மாறாமல்.. இரண்டடிப் பின்னே நகர்ந்து.. சுவரில் சாய்ந்து.. ஒரு காலை மடக்கி நின்று.. கையைக் கட்டிக் கொண்டு.. லேசாய்த் தலை சாய்த்தபடி அவளையே நோக்கினான்.

கடல் நீரும்,மழை நீரும் உறையச் செய்யாத கால்களை.. அவன் பார்வை உறையச் செய்ய.. அசையாது நின்றவள்.. உள்ளே உருகிய இதயத்தின் நடுக்கத்தைத் தொண்டைக் குழிக்குள் உணர்ந்த சமயம்.. மிச்ச,சொச்ச மூளையையும் அவன் ஒருவனே.. பாரபட்சமின்றி நிறைந்திருந்தான்.