அத்தியாயம் - 6
“நெஞ்சினில் ஆடிட குறிஞ்சியைப் போல் ஒரு..
மலர் தேடவோ.. மகிழ்ந்தாடவோ...
வசந்தம் பாடி வர... வைகை ஓடி வர..
இளமை கூடி வர.. இனிமை தேடி வர..
ஆராதனை செய்யட்டுமா... நீரோடையில் நீந்தட்டுமா!!!”
ஒரு புறம் இளையராஜா, மணிரத்னம்,பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், பாலச்சந்தர் என அத்தனை இயக்குனர்களுடனும் இணைந்து கொண்டு தமிழ் சினிமாவை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்த வேளையில்... சத்தமில்லாமல் ஒரு மனிதன்.. ஏகலைவனாகத் தானே படத்தை இயக்கி, இசையமைத்துப் பாடல் எழுதி.. இதுவரையிலில்லாதப் புது ட்ரெண்ட் அமைக்கிறார்! வேறு யாருமல்ல! தாடிக்குள் திறமையை ஒளித்து வைத்திருக்கும் தி ஒன் அண்ட் ஒன்லி டி.ராஜேந்தர்!
நான் முதன் முதல்ல பார்த்த படம் ரயில் பயணங்களில்! கை-ல மைக்கோட மேடையில நின்னு பாட்டு பாடுற ஹீரோவை யாருக்குத் தான் பிடிக்காது?, மலையாள முகம் வேறு! படம் நகர்கிற விதம், பாடல்கள் எல்லாம் ரொம்பப் பிடிச்சுப் போய்.. அதுக்கப்புறம் ஒரு தலை ராகம்,உயிருள்ள வரை உஷா, மைதிலி என்னைக் காதலி எல்லாம் தேடி தேடிப் பார்த்தது வேறு கதை! ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம்! காதல் தோல்வியை இவரைப் போல உருகிச் சொல்ல.. இனியொருவர் பிறக்கப் போவதில்லை!
பகல் முழுதும் பணி செய்த களைப்பில் துவண்டு.. தன் கதிர்க் கரங்கள் தொய்ந்து விழ... சோர்வுடன்.. மேற்குத் திசை நோக்கி நகரத் துவங்கியிருந்தான் ஆதவன். அவன் தலை முழுதாய் மறைந்ததும் வெளியே வரும் நோக்கத்தோடு.. மேகத்திரை வழி லேசாய் எட்டிப்பார்த்தபடி திருட்டுப் பார்வையுடன் வெண்மதி! காகம்,குருவிகளென அத்தனைப் பறவைகளும் கூட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த சந்தியா வேளை அது!
வண்டுகளின் ரீங்காரத்தோடுப் போட்டி போட்டுக் கொண்டு சலசலத்தபடி.. உற்சாகமாய்க் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தக் காவிரி ஆற்றங்கரையில்.. கற்பாறைகளுக்கிடையில்.. அந்த மயக்கும் மாலை நேரத்தின் தாக்கம் சிறிதுமின்றி சோகமாய் அமர்ந்திருந்தாள் அவள் – ஆதிமந்தி!
ரோமியோ-ஜீலியட், லைலா-மஜ்னு, தேவதாஸ்-பார்வதி போன்ற க்ளாசிக் காதலர்களை மட்டுமே கண்டு ரசித்த நமக்கு... இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் சங்க இலக்கியங்களான குறுந்தொகை,அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் தோன்றியக் காதல் ஜோடியான ஆட்டனத்தி-ஆதிமந்தியைப் பற்றியப் பொது அறிவு இல்லாமற் போனது நம் மொழிக்கு நேர்ந்த அவலம் தான்!
அன்றைய மேடை நாடகத்தில்.. வழக்கம் போல் பெண் வேடமிட்டிருந்த ஹரி.. கற்பாறையொன்றின் மீது ஆதிமந்தியாக அமர்ந்திருந்தான்.
நீண்ட நயனங்களும்,அதை விட நீண்டு படர்ந்திருந்தக் கூந்தலுமாக.. காவிரி ஆறு அள்ளித் தெளித்தக் காற்றில் சோகமே உருவாய் அமர்ந்திருந்த ஆதிமந்தி ஒரு ஆடுகளமகள் ஆவாள்!
தினமும் இம்மாலை வேளையில் காவிரி ஆற்றுப் படுகையில் சிறுமியாய்த் துள்ளி விளையாடியபடித் தன்னோடு உலா வரும் தோழி ஆதிமந்தியைக் காணாது.. தேடி வருகிறாள் அவள் தோழியொருத்தி.
காவிரிக்கேத் தண்ணி காட்டி விடும் நோக்கத்தோடு.. கண்களில் நீர் வழிய.. ஆதிமந்தி அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு.. அவள் நீண்ட கார் கூந்தலை வருடி “என்னவாயிற்று?” என்று விசாரணை செய்கிறாள்.
“ஓ! என்னவென்று சொல்வேன்?” – எனக் கேட்டு மீண்டும் கண்ணீர் விடும் ஆதிமந்தி.. தன் சோகக் கதையைத் தோழியிடம் கூறுகிறாள்.
“என் தலைவனாக, என் காதலனாகக் கருதி.. நான் கனவு கண்டு வந்த.. அந்த நீச்சல்-நடன விளையாட்டு வீரனும், ஆட்டக்கார ஆடுகளக் கூட்டத்துத் தலைவனுமாகிய.. ஆட்டனத்தி என்பவனை.. பலம் உடைய போர் வீரர்கள், மள்ளர் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் இன்று பகல் முழுதும் தேடிப் பார்த்து சோர்ந்து விட்டேன்! எங்கும் அவனை என்னால் காண முடியவில்லை! அவனைக் காணாது என் உடல் பசலை நோயால் வாடி.. என் சங்குக் கை வளையல் நழுவுகிறதடி தோழி”
-எனக் கூறி.. காதலனைப் பிரிந்து வாடும் தன் துயரத்தைத் தோழியுடன் பகிர்ந்து கொள்கிறாள் ஆதிமந்தி.
அவளின் வருத்தத்தைக் கண்டு புன்னகை கொள்ளும் தோழியானவள்..
“அடி அசடே! ஒரு நாள் காணாததற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?, ஏன் இந்தக் கவலை?, நாளை ஆட்டனத்தி எமது அரசன் முன்னிலையில் ஆடப் போகிறான். அதற்காக அவனது சக ஆட்டக்காரி காவேரி என்பவளுடன் ஒத்திகை பார்க்கிறானோ என்னவோ!, நாளை அவனது ஆட்டத்தை நாம் இருவரும் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்கலாம்! கவலை கொள்ளாதே” – எனக் கூறிச் சமாதானப்படுத்துகிறாள்.
அடுத்ததாகக் காட்சி மாறுகிறது.
முப்போகமும் விளைந்து வளமும்,செழிப்புமாய்.. தனம்,தான்யம் போன்றவற்றில் சோழ நாடுத் தன் நிலையை.. நிலையாய்த் தக்க வைத்துக் கொள்ளப் பெரும்உதவி செய்பவள் அந்தக் காவிரி அன்னை! அப்பேர்ப்பட்டவளைத் தெய்வமாகக் கருதி.. அந்நாளில் அவளுக்குப் பொங்கல் வைத்து, அகல் விளக்கேற்றி வழிபட்டு.. ஆட்டனத்தி-காவேரியின் நீச்சல் நடனத்தைப் பார்க்க.. காவிரி ஆற்றங்கரையில் ஆர்வமாய்க் கூடுகின்றனர் மக்கள்.
ஆதிமந்தியும் சீவி,சிங்காரித்துக் கொண்டுத் தன் தோழியுடன் ஆட்டத்தைக் காண வருகிறாள்.
பச்சைப் பசேல் என வயல்கள் நிறைந்திருந்தக் கழார் எனும் ஊரில் காவிரி ஆற்று நீர்த்துறையில் கூட்டம் கூடியிருந்தது. மக்களின் ஆர்வத்துக்கு சிறிதும் குறையாத ஆர்வத்தோடு.. ஆட்டத்தைக் காண ஆசையோடு அமர்ந்திருக்கிறார் அரசர் கரிகால்வளவன்.
சிறிது நேரத்தில் தோன்றுகிறான் ஆட்டனத்தி.. தன் சக ஆட்டக்காரியான காவேரியோடு சேர்ந்து!
நீண்டத் தலைமுடியுடனும்,நெற்றியில் விபூதிப் பட்டையுடனும் கால் சிலம்பத்தோடு.. வெற்று மார்புடன்.. ஆட்டனத்தி வேடத்தில் மேடையில் நிற்கிறான் வசந்த்.
தன் தலைவனைக் கண்ட ஆதிமந்தி, மதி மயங்கி.. சுற்றம் மறந்து நிற்கும் வேளையில் காட்சி மாறுகிறது.
இப்போது அவனும் அவளும் மட்டுமே மேடையில்!
நுரை ததும்பப் பவனி வரும் காவிரியின் நீரோட்டத்தில் தன் மன்னவனுடன் மிதக்கிறாள் ஆதிமந்தி. நீர் தந்த சில்லிப்பின் தாக்கமோ அல்லதுத் தன் தலைவன் தந்த ஸ்பரிசத்தின் தாக்கமோ..! விழி மூடி.. உடல் நடுங்கி.. தண்ணீருக்குள் தனி உலகம் பார்க்கிறாள்!
தான் மட்டும் சஞ்சரித்த அந்த மாய பூமியிலிருந்து அவள் வெளி வந்த நேரம்.. கரிகாலனுக்கு வணக்கத்தை வைத்து விட்டு காவிரியில் இறங்குகிறான் ஆட்டனத்தி.
ஊர் மக்கள் அனைவரும் ஆர்ப்பரிக்க.. ஆரவாரத்துடன் நீடித்த அவனது நீச்சல் நடனத்தைக் கண்டுப் பூரித்துப் போய்.. அந்தக் காவிரி அன்னையும் உற்சாகத்துடன் மேல் எழும்பியதன் விளைவு.. அந்நீர்த்துறையில் நிமிடத்தில் வெள்ளம் பாய்கிறது.
அவனோடு சேர்ந்து ஆடிய ஆட்டக்காரி பிடிமானத்துக்கு இவனைப் பற்றிக் கொண்டு நீரில் மூழ்கிப் போக.. அவளோடு சேர்ந்து தானும் நீருக்குள் அடித்துச் செல்லப்படுகிறான் ஆட்டனத்தி.
அடுத்ததாகக் காட்சி மாறுகிறது.
இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் காவேரியென்பவள் மாண்டு போக.. கரை ஒதுங்கிய ஆட்டனத்தியை மீனவர் மகளான மருதி என்பவள் மீட்டுப் பணிவிடை செய்கிறாள். அத்தோடு அவன் மீது காதலும் கொள்கிறாள்!
அடுத்தக் காட்சி கண்ணீரும்,புலம்பலுமாய் ஆதிமந்திக்கானது!
ஆற்றோடு போய் விட்டத் தன் காதலனைக் காணாது.. கரை முழுதும் பிச்சியாய் ஓடிப் போவோர்,வருவோர் அனைவரிடமும் தன் காதலனின் அங்க அடையாளங்களைச் சொல்லி “கண்டீரோ!, என் தலைவனைக் கண்டீரோ?” எனக் கேட்டுக் கண்ணீர் வடிக்கிறாள் ஆதிமந்தி.
தன் மாண்தக்கோனையை(தனக்கேற்றவனாகக் கருதிய தலைவன்),தன் ஆட்டக்காரனைப் பறி கொடுத்து விட்ட துக்கத்தில்.. கடவுளாய்க் கண்ட காவிரியை.. அன்னையாய் மதித்த பொன்னியை.. ஒரு நொடி.. கடும் வார்த்தைகளால் சாடுகிறாள்!
மறு நொடி “காவிரித் தாயே! நீயேனும் சொல்! எங்கே என் மன்னவன்?” எனக் கேட்டுத் தவிக்கிறாள்.
நீரோடும் போக்கில்.. கால் நோக நடந்து.. வழியெங்கும் தென்படும் ஆட்களிடம் தன் காதலனைப் பற்றி அவள் விசாரித்துக் கொண்டுச் செல்லும் வேளையில்.. அவள் கண்ணில் படுகிறாள் மருதி.
அடுத்த காட்சி மருதி,ஆட்டனத்தி,ஆதிமந்திக்கிடையேயானது!
ஒருதலையாய் அவன் மீது காதல் கொண்டிருந்தாலும்.. களைந்தத் தலையும்,நலுங்கிய உடையுமாய் பிச்சி தோற்றத்தில் கண் முன்னே நின்ற ஆதிமந்தியைக் கண்டுத் தன் மனதை மாற்றிக் கொண்ட மருதி.. அவளை அழைத்துச் செல்கிறாள் ஆட்டனத்தியைக் காண!
ஓலைப் பாயின் மீது.. நெற்றியிலிட்டப் பச்சிலையுடன்.. ஆழ்ந்த நித்திரையில் கிடந்தவனைக் கண்ட ஆதிமந்திக்கு மகிழ்ச்சி பெருகிறது.
கண்ணிலிருந்து இறங்கியக் கண்ணீரின் சூடு.. கன்னத்துச் சிவப்பு தந்த வெப்பத்தில் கலந்து.. அனலாய் அவள் உதட்டில் இறங்கியதும்... தன் காதலனை, தன் தலைவனை, தன் மன்னவனை கை பிடித்து விட்டத் திருப்தியில் அழகாய்ப் புன்னகைக்கிறாள் ஆதிமந்தி.
நாடகம் முடிந்த அந்த இரவு வேளையில்.. அருகிலிருந்த டீக்கடையொன்றில் அமர்ந்திருந்தனர் ஹரியும்,வசந்தும். நெற்றியிலிருந்தப் பட்டையை நீக்காது.. பெல் பாட்டமும், ஸ்டெப் கட்டுமாக அமர்ந்திருந்தவனைக் கண்ட ஹரிக்கு சிரிப்பு வந்தது.
“ஹாஹாஹா” – ஹரி.
“என்னடா?”
“நெத்தில இருக்குற பட்டையை அழி டா வசந்த், நீ போட்டிருக்கிற ட்ரெஸ்க்கும்,பட்டைக்கும் சம்மந்தமே இல்லாம இருக்கு” – என்றபடி அவன் நெற்றியை நோக்கிக் கை நீட்டியவனைத் தடுக்க.. டீ க்ளாஸூடன் தலையைப் பின்னே இழுத்துக் கொண்ட வசந்த்..
“ப்ச், அழிக்காத! இருக்கட்டும்” என்றான்.
“ரொம்பவே மாறிட்ட டா நீ! நானே கூப்பிட்டாலும் நடிக்க அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்ட! இப்போ நீயே எப்போ நாடகம்ன்னு கேட்குற அளவுக்கு முன்னேறிட்ட?”
நண்பன் கூறியதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டான் வசந்த். உண்மை தான்! ஹரியின் கட்டாயத்தினால் அவனோடு சேர்ந்து மேடை ஏறியவனுக்கு இப்போது நாடகத்தின் மீதும், நடிப்பின் மீதும் புது மோகமே பிறந்து விட்டது.
எதிலும் பிடிப்பின்றி.. அசுவாரசியமாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையின் மீதுத் திடீரென ஆர்வம் தோன்றியதைப் போல் ஒரு உணர்வு அவனுக்கு.
மனைவி இறந்தத் துக்கத்தைத் தொலைக்கத் தன்னைத் தொழிலுக்குள் புகுத்திக் கொண்ட சாருகேசன், மகனைக் கண்டு கொள்ளாது விட்டதன் விளைவு.. அவனுக்குப் படிப்பு,வேலை போன்றவற்றின் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டு விட்டது.
தன்னுடைய சுயநலத்துக்காக.. பெற்ற மகனைத் தவிர்த்து.. அவர் தன் இஷ்டப்படி நடந்து கொண்ட போது.. தான் மட்டும் எதற்காக அவர் பேச்சைக் கேட்டு அவர் வளர்த்து.. நிமிர்த்தி வைத்திருக்கும் தொழிலுக்குத் தலை வாரிப் பூ வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு!
அதனாலேயே இளங்கலைப் பட்டம் வாங்கிய பிறகுத் தொழிலில் அவனை ஈடுபடுத்த முனைந்தவரின் விருப்பத்துக்கு செவி சாய்க்காமல்.. கடனே என்று முதுகலைப் படிப்பில் சேர்ந்தான் அவன்.
இந்த இரண்டு வருடங்களும் கழிந்த பிறகு.. அடுத்து வாழ்க்கையில் என்ன செய்தால்.. இந்தப் பரந்து விரிந்த பூமியில் திருப்தியாகத் தன்னால் வாழ முடியுமென்கிற சிந்தனை வந்துவிட்டது அவனுக்கு!
காசு சம்பாதிப்பது அவனது நோக்கம் கிடையாது! தங்க மகனின் நலம் பேணாமல்.. ஓடி,ஓடி உழைத்தத் தந்தை லட்ச,லட்சமாகப் பணம் சேர்ப்பதைக் கண்டு விட்டதாலோ என்னவோ.. பெரிதாகப் பணத்தின் மீது ஆசை தோன்றவில்லை!
ஏதேனும் செய்தாக வேண்டும்! மரம் நடுவது, மழை நீர் சேமிப்பது, வாகனப் புகையைக் குறைத்துக் காற்று மாசுபடுதலைத் தவிர்ப்பது, குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் உலக அமைதியைப் பற்றின சிந்தனையை உருவாக்குவது! இது போல.. வித்தியாசமாக ஏதேனும்! வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துத் திருப்தியளிக்கும் இது போல ஏதேனும் செய்ய வேண்டும்!
தன்னைச் சுற்றியிருப்போரில்.. பணம் சம்பாதிப்பதைத் தவிர மற்ற சிந்தனைகளிலும் ஈடுபடும் ஆட்களை வரிசைப் படுத்த நினைத்தான். எவருமே நினைவிற்கு வரவில்லை!
வரி விலக்குக்காக சமூக நலனில் அக்கறையிருப்பதைப் போல் காட்டிக் கொள்ளும் பணக்கார அங்கிள்களை மட்டுமே அவன் அறிவான்!
எரிச்சலுடன் கண்ணை மூடிக் கொண்டவனின் முன்பு ஹரி வந்து நின்றான்!
தான் போற்றும் கலையை வளர்க்கப் போராடும் ஹரியும் கூட ஒரு வகையில் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது அவனுக்கு!
ஆயிரம் பேர் ஒன்று கூடும் பெரும் மேடையில் நாடகம் போடுபவனல்ல அவன்! பங்குபெறும் தெருக்கூத்துகளில் பெரிதாகப் பணம் பார்ப்பதுமில்லை! ஆனால்.. ஏதோ ஒரு ஈர்ப்பினால் அக்கலையின் மீது தீராக் காதல் கொண்டிருக்கிறான்.
சொன்னாரே எம்.ஆர்.ராதா.. கலை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமிர்தமடா என்று! அந்த அமிர்தத்தின் சுவையை ருசித்து விட்டதாலோ என்னவோ.. அதிலிருந்து வெளி வர முயற்சிக்கவேயில்லை அவன்!
வசந்துக்கும் கூட மேடையின் மீது ஈர்ப்பு அதிகம் தான்! சிறு வயதிலிருந்தே! வருடம் முழுதும் பள்ளி செல்வதற்கு மூக்கால் அழுபவன், விழாக்களின் போது மட்டும் ஆர்வம் குறையாது கலந்து கொள்வான்.
ஆடல்,பாடல்,நாடகம் என அனைத்திலும் பங்கு பெறுபவன்.. அநேகக் கைத்தட்டல்களையும் பெற்று விடுவான்! கொஞ்சமும் மேடை பயமின்றி.. கூச்சமின்றி.. இயல்பாய் வலம் வருபவனை ஆச்சரியமாய்ப் பார்க்கும் தோழர்களிடம்.. மேடை தனது முதல் காதலியெனக் கூறிப் பெருமை பீற்றிக் கொள்வான்!
பாட புஸ்தகங்களை மனனம் செய்வதற்கு பாடாய்ப் படுபவன்.. எத்தனை நீள வசனத்தைக் கொடுத்தாலும் அசால்ட்டாய்ப் பேசி கைத் தட்டல் வாங்கி விடுவான்!
வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன் போன்ற வேடங்களுக்கெல்லாம் பள்ளியில் நிறைய பரிசு வாங்கிக் குவித்திருக்கிறான்.
கல்லூரி வந்த பின்பு அது அனைத்தும் குறைந்து.. பாட்டு பாடுவதற்கும், நடனம் ஆடுவதற்கும் மேடை ஏறப் பழகி விட்டான்.
உள்ளே குவிந்து கிடந்த.. மறைந்து கிடந்த ஆசையை.. திறமையை.. ஹரி என்பவன் ஊதி விட்டதின் விளைவு.. இனித் தன் வாழ்வு என்ன மாதிரியான பாதையை நோக்கிச் செல்லப் போகிறதென்ற யோசனையில் இருந்தவனை.. நாடகக்கலையை நோக்கி முன்னேற வைத்தது.
யோசித்துப் பார்த்தால்.. அதைத் தவிர எதிலும் அவனது எண்ணங்கள் ஆர்வமாய் நுழைவது போலத் தோன்றவில்லை. இது மட்டுமே தனக்குத் தெரிந்த.. இயல்பிலேயேத் தனக்கு நன்றாக வருகின்ற திறமை என்றெண்ணிக் கொண்டான்.
அதன் பிறகு சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் அவன் கண்களுக்குக் குருவாகத் தெரிந்தார்கள்.
பழைய காலத்தில் மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டத் தெருக்கூத்து ஆட்களிடம் மைக் செட்டெல்லாம் கிடையாது! கடைசி வரிசை வரை அமர்ந்து பார்க்கும் ஆட்களுக்குத் தங்களது முக பாவமும்,தாங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளும் சரியாகச் சென்றடைய வேண்டுமென்பதற்காகவே.. அதீத ஒப்பனையும், மிகைப்படுத்தப்பட்டப் பாவனைகளுமாய் மேடையில் தோன்றுவார்கள்!
அது போன்ற நாடகங்களை ஆர்வமாய்க் கண்டு மகிழ்ந்ததாலோ என்னவோ.. சமூக நோக்கத்துடன் நக்கலும்,நையாண்டியும் கலந்து நிகழ்த்துப்படும் நாடகங்களும், குடும்பம் சார்ந்த நாடகங்களும் அச்சமயம் பிரபலமாகத் திகழ்ந்தாலும்.. சரித்திரக் கதாபாத்திரங்களைத் தழுவி எடுக்கப்படும் நாடகங்களே அவனை அதிகம் ஈர்த்தது. அது போன்ற நாடகங்களில் பங்கு பெறவே அவன் ஆர்வமும் கொண்டான்.
ஹரியின் குழுவினர் பலரும் ஆளாளுக்கு சொந்தக் காரணங்களுக்காக விலகித் துவங்க.. வசந்தும், அவனைப் போல நாடகம் போடுவதில் ஆர்வம் உள்ள அவன் நண்பர்கள் சிலரும் ஒன்றிணைந்து ‘மறுமலர்ச்சி’ என்ற குழுவை உருவாக்கினார்கள்.
ஹரிக்கு இருந்த பழக்கவழக்கத்தை வைத்து மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு இன்று அவர்கள் நடத்திய நாடக வாய்ப்புக் கிடைத்தது.
இப்போது அவனது சிந்தனையெல்லாம்.. இந்த வாய்ப்புகளை எப்படி அதிகப்படுத்துவதென்பது தான்! எத்தனை நாட்களுக்குத் தான் கோவில் திருவிழாக்களிலும், பொருட்காட்சியிலும் நாடகம் போடுவது?, முறையான மேடை கிடைக்க என்ன செய்ய வேண்டுமென்கிற யோசனையுடனே சுற்றினான் வசந்த்.
கையில் டீ க்ளாஸூடன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனைக் களைக்கும் வண்ணம் வானொலியில் செய்தி ஒலித்தது.
உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்காகக் இங்கிலாந்து சென்றிருந்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி.. மேற்கிந்தியத் தீவுகளுடனானக் கடைசி ஆட்டத்தில் வென்று.. கோப்பையைக் கைப்பற்றி விட்டதாக வானொலி வழி வந்த செய்தி கூறியது.
டீக்கடை அருகே நின்றிருந்த இளைஞர் கூட்டமொன்று துள்ளிக் குதித்தபடி ஆர்ப்பரிக்கத் தொடங்க.. ஹரி மற்றும் வசந்தின் முகங்களிலும் ஏகப்பட்ட மகிழ்ச்சி! இந்தியாவுக்கான முதல் உலகக்கோப்பையல்லவா இது!
தமிழக வீரரான ஸ்ரீகாந்த் அதிகபட்சமாக 38 ரன்-களையும், மதன்லாலும்,அமர்நாத்தும் ஆளுக்குத் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழியமைத்துக் கொடுத்ததில்.. சுலபமாகக் கோப்பையைக் கைப்பற்றியிருந்தது இந்தியா.
செய்தி கொடுத்த களிப்பில் வீடு திரும்பிய வசந்த்.. வாசலில் செருப்பைக் கழட்டும் போதே.. மாடியறையிலிருந்து வந்த பாட்டுச் சத்தம் காதைக் கிழித்தது.
“மோகனங்கள் பாடி வந்து மோகவலை விரித்தாயே!
சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பல கோடி!
பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா..
வான் போலே.. வண்ணம் கொண்டு..
வந்தாய் கோபாலனே! பூ முத்தம் தந்தவனே..!”
ரெட்டை ஜடையும்,ப்ரௌன் நிறச் சுரிதாருமாய்.. இடையில் துப்பட்டாவைக் கட்டிக் கொண்டு தன் நீண்ட நயனங்கள் முழுதிலும் நாணத்தையும்,குறும்பையும் தேக்கிக் கொண்டு.. அழகாய் நடனமாடிக் கொண்டிருந்தாள் சாருமதி.
ஜன்னல் வழியே அவள் ஆடுவதைக் கண்டபடி.. மெல்லக் கதவைத் திறந்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தான் வசந்த்.
வேறுபுறம் திரும்பி ஆடிக் கொண்டிருந்தவள் பின்னால் நிற்பவனைக் கண்டு கொள்ளாது போக, டொக்-என டேப்-ரெக்கார்டை அணைத்த வசந்த், தன் இருகைகளையும் சேர்த்துப் பலமாகித் தட்டி... “பியூட்டிஃபுல்!! ஃபெண்டாஸ்டிக்!!! வண்டர்ஃபுல்!” என்று புகழ.. திடீரென அவனைக் கண்டதில் திடுக்கிட்டுப் பின் நிமிர்ந்து அவனை முறைத்தாள் சாரு.
“நீங்க ஏன் உள்ள வந்தீங்க?”
அவள் கேள்விக்குப் பதிலளிக்காமல் அருகிலிருந்தக் கேசட் கவரை நோக்கினான் அவன்.
“சலங்கை ஒலி! ஹ்ம்ம்! கேசட்டைக் காணோமேன்னு நான் அங்க தேடிட்டிருந்தா.. நீ எடுத்து வைச்சிருக்கியா?, புதுப் படக் கேசட் எல்லாம் என் ரூம்ல இருந்து காணாம போற மாயம் இது தானா?” – என்றவன் டேப் ரெக்கார்டரிலிருந்த ஃபார்வர்ட் பட்டனை அழுத்தினான்.
மனதை மயக்கும் எஸ்.ஜானகியின் குரல் மெல்ல ஒலிக்கத் தொடங்கியது.
“மௌனமான நேரம்.. இள மனதில் என்ன பாரம்..”
“ஏன் பாட்டை மாத்துனீங்க?, வான் போலே சாங் போடுங்க! நான் ப்ராக்டிஸ் பண்ணனும்!” – கீச்சுக்குரலுடன் சாருமதி.
“எதுக்கு?”
“நாளைக்கு நான் காலேஜ்ல பெர்ஃபார்ம் பண்றேன்!”
“அடேங்கப்பா! உனக்குத் தான் மேடை-ன்னாலே அலர்ஜியாச்சே!”
“ம்ஹ்ம்! உங்களைப் பார்த்துப் பார்த்து.. எனக்கும் பயம் போயிடுச்சு” – பெருமையாய்க் கூறியவளைக் கண்டுப் புருவம் தூக்கி உதட்டை வளைத்தவன்..
“அப்டின்னா இந்தக் கேசட் என்னோடது தான?” என்று வினவினான்.
“இப்போ அதுவா பிரச்சனை?”
“பின்ன! நான் இல்லாதப்போ என் ரூம்க்குள்ள வந்து என் கேசட்டை எடுத்திருக்க நீ”
“ப்ச், அதனால என்ன இப்போ?” – எரிச்சலுடன் வினவியவளின் இடையிலிருந்தத் துப்பட்டாவைப் பற்றி அருகிலிழுத்து..
“நான் இருக்கும் போது வரலாம்ல?” – என்று கொஞ்ச.. அவன் கையைத் தட்டி விட்டுத் தூரப் போய் நின்றாள் அவள்.
“ஒழுங்கா வெளியே போங்க”
“முடியாதுடி! நீ மட்டும் என் ரூம்க்கு வரலாம்! நான் உன் ரூம்க்கு வரக் கூடாதா?, இது என்ன நியாயம்?”
“நான்.. நான்... கேசட் எடுக்கத் தான் வந்தேன்”
“நான் உன்னைப் பார்க்க வந்தேன்!,”
“பார்க்க மட்டுமா செய்றீங்க?”
“ஏய்ய்.. அது என் தப்பு இல்ல! உன்னை யாரு பூ முத்தம் தந்தவனேன்னு அழகா வெட்கப்படச் சொன்னது?, நான் முத்தம் கொடுக்காமலே இவ்ளோ வெட்கப்பட்ற நீ! கொடுத்தா.. என்னல்லாம் ரியாக்ட் பண்ணுவ-ன்னு.. இந்த ரூம்க்குள்ள வந்த நிமிஷத்துல இருந்து யோசிச்சிட்டு இருக்கேன்”
“ச்சிஇஇஇஇ”
“என்ன ச்சி?, உனக்கு இப்போ 18 வயசு முடிஞ்சிடுச்சு சாரு! கல்யாண வயசை தொட்டுட்டன்னு கவர்மெண்ட்டே சொல்லுது”
“அதனால?”
“அதனால.. இனி முத்தம்-ன்ற வார்த்தையையெல்லாம் நீ இயல்பா.. ஏத்துக்கப் பழகிக்கனும்”
“ஓஹோ!” என்றவள் “என் மாமாவைக் கூப்பிட்றேன்! அவர் வந்து நான் இதையெல்லாம் ஏத்துக்கலாமா, வேணாமான்னு தீர்ப்பு சொல்லட்டும்” என்று விட்டு.. “மாமாஆஆஆஆ” என்று கத்த..
“ஏய்ய்ய் ஏய்ய்ய் வாயை மூடு டி!” என்று பதறிப் போன வசந்த்..
“மதி.. என்னடா அம்மா....?” என்ற தந்தையின் குரலைக் கேட்டு.. “என் கிட்ட மாட்டாமலா போவ?, உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன் டி” என்று விட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு மாடியை நோக்கி ஓடினான்.
சிரிப்புடன் இடையிலிருந்தத் துப்பட்டாவைக் கழட்டிய சாருமதியின் கண்களில்.. உள் மனதின் பிரதிபலிப்பு அப்பட்டமாய்த் தெரிந்தது!
அந்த மழைநாளுக்குப் பிறகு அவளைக் காணும் போதெல்லாம் இப்படித் தான் வம்பு செய்கிறான்! அடம் பிடித்து அன்று அவளை அழைத்துச் சென்று ‘நீயும் என்னைக் காதலிக்கனும், பதில் சொல்லு’ என்றவன் அதன் பிறகு.. அவளிடம் அதைப் பற்றிப் பேசவில்லை!
வெளிப்படையாக மனதில் இருப்பதைப் பேசிக் கொள்ளாவிட்டாலும் பார்வைகளுக்கும், வார்த்தையாடல்களுக்கும் பஞ்சமேயில்லை!
அவளுக்குப் பிடித்திருக்கிறது! அவன் பார்வை தரும் இதம், அவன் வார்த்தைகளால் உள்ளத்தில் ஊறும் கிளர்ச்சி என அத்தனையையும் பிடித்திருக்கிறது! ஆனால் அதற்கு மேல் யோசிக்கத் தோன்றவில்லை! துணிவில்லை! ஆரம்பித்து வைத்தவனே.. முடித்தும் வைப்பான் என்கிற நம்பிக்கை! ஆசை மேகங்களிடையே ஆடிக் களித்தபடி.. ஒவ்வொரு நாளையும் அழகாய்க் கடத்திக் கொண்டிருந்தாள்.
மந்தகாசப் புன்னகையும்,சிந்தனையுமாயிருந்தவளை கீழே ஒலித்த மாமனின் குரல்.. வாய் விட்டுச் சிரிக்க வைத்தது.
“இந்நேரத்துக்கு மொட்டை மாடில என்னடா வேலை உனக்கு?, வீட்டுக்குள்ளயே சிகரெட் பிடிக்கிறியா டா ப்ளடி ராஸ்கல்?” – முழுத் தொண்டையுடன் சாருகேசன்.
“பெத்த மகனை சந்தேகப்படுறவங்களுக்கெல்லாம் நரகம் தான் கிடைக்குமாம்” – எரிச்சலுடன் வசந்த்.
“உன்னால எனக்குப் பூமியே நரகமாத் தான் டா இருக்கு!”
“அப்டின்னா சீக்கிரமா சொர்க்கத்துக்குப் போங்கப்பா”
“உயிர் கொடுத்தத் தகப்பனை செத்துப் போகச் சொல்றியேடா பாவி!”
“ஷ்ஷ்ஷ்... மொட்டை மாடியில சொர்க்கமா காத்து வருது! அங்க போங்கன்னு சொன்னேன்ப்பா”
“எதுக்கு?, நீ பிடிச்ச சிகரெட் வாடையை சுவாசிச்சு எனக்குப் புற்று நோய் வர்றதுக்கா?”
“ஆண்டவா! எனக்கு சிகரெட் பிடிக்குற பழக்கமே கிடையாதுப்பா. நம்புங்க”
“பார்த்தேனே! அன்னிக்கு ஃபுட் பால் க்ரௌண்ட்ல! தில்லு முல்லு படத்துல வர்ற ரஜினிகாந்த் மாதிரி ஸ்டைல்-ஆ நீ சிகரெட்டை வாய்ல போட்ட விதத்தை”
“ஆனா.. நீங்க அந்தப் படத்துல வர்ற தேங்காய் சீனிவாசனை விடப் பெரிய தத்தி-ப்பா”
“எல்லாம் என் நேரம்!, நெத்தில என்ன டா பட்டை?, நாம-லாம் நந்த கோபாலனைக் கும்பிடுற ஆளுங்க! நாமம் தான் போடனும்! புரிஞ்சதா?”
-என்றவரைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்டவன்.. “ஹரியும்,சிவனும் ஒன்னு! அறியாதவன் வாய்ல மண்ணு” எனக் கூறி விட்டு நகர்ந்து விட.. வழக்கம் போல் மகனின் வார்த்தைகளினால் பல்லைக் கடித்தார் கேசன்.
அன்று காலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வசந்தை.. அவன் வீட்டு டெலிஃபோன் மணி அடித்து எழுப்பியது.
“ஹலோ..”
“வசந்த இன்னும் எழுந்திருக்கலயா?” – மென்மையான குரலுடன் ஹரி.
“அதான் நீ எழுப்பிட்டியே! எழுந்தாச்சு! சொல்லு டா”
“இல்ல, இன்னிக்கு வீட்டுக்கு வா-ன்னு கூப்பிட்டியே!, இப்ப வரட்டுமான்னு கேட்கத் தான் ஃபோன் பண்ணினேன்”
“ஹேய்... ஆமாம்! மறந்தே போய்ட்டேன்! ரெண்டு நிமிஷம் டா! நான் வந்து உன்னைப் பிக்-அப் பண்ணிக்கிறேன்”
“நாலு தெரு தள்ளியிருக்கிற வீட்டுக்குப் பிக்-அப் வேறயா?, நானே வந்துட்றேன்! நீ அட்ரஸ் மட்டும் சொல்லு”
“தேர்ட் மெய்ன், ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட்ல.. ஆறாவது வீடு டா!, சாருசந்திரா இல்லம்ன்னு பேர் போட்டிருக்கும். பார்த்து வா”
“ஹ்ம்ம் ஓகே”
“டேய் ஹரி..”
“ம்ம், சொல்லு”
“ஃபோன்-ல உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்-ஆ இருக்கு டா”
“ஹாஹா” – என்ற ஹரி ஃபோன்-ஐக் கட் செய்து விட்டான்!
இப்போது கண்டிப்பாக வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டிருப்பான். அதை அருகிலிருந்துப் பார்த்திருந்தால்.. இவனும் கேலி செய்திருப்பான்! ஹரியை நினைத்தபடிக் கடகடவெனக் கிளம்பினான் வசந்த்.
“அன்னம்மா.....” – தன் அறையிலிருந்துக் குரல் கொடுத்தபடி வெளியே வந்த வசந்த்.. தந்தையின் அறையை எட்டிப் பார்த்து..
“மிஸ்டர்.கேசன் வீட்ல இல்ல தான?” என்று அன்னம்மாவிடம் விசாரித்தான்.
“இல்ல தம்பி” என்று அன்னம்மா கூறியதும் நெஞ்சில் கை வைத்துப் பெருமூச்சொன்றை வெளியிட்டவன்..
“என் ஃப்ரெண்ட் ஒருத்தன் வர்றான்னு சொல்லியிருந்தேனே!, நான் சொன்ன எல்லாத்தையும் சமைச்சு வைச்சியா?” – என்று விசாரிக்க..
“எல்லாம் ரெடி தம்பி”-என அன்னம்மா பதில் கூறியதும்.. வாசலில் அரவம் கேட்டு வெளியே சென்றான்.
காக்கி நிற பெல்ஸூம்,வெள்ளைச் சட்டையுமாக நின்ற ஹரியைக் கண்டு “வா,வா டா ஹரி” என்று வரவேற்றவன் அவனை உள்ளே அழைத்துச் சென்றான்.
“சாரி டா ஹரி! உன் கூட இத்தனை வருஷமாப் பழகியும் ஒரு தடவை கூட உன்னை நான் வீட்டுக்குக் கூப்பிட்டதில்ல!”
“ஃபார்மாலிட்டி பார்க்குற அளவுக்கா நாம பழகுறோம்?”
“இல்ல தான்! ஆனா.. எனக்கு அந்த உறுத்தல் எப்பவும் உண்டு டா! எல்லாம் எங்கப்பாவால தான்! அவருக்கு என்னையும் பிடிக்காது, என் கூடப் பழகுறவங்களையும் பிடிக்காது! அதனால தான்.. அவர் வெளியூர் போயிருக்கிற நேரமாப் பார்த்து உன்னை வரவழைச்சிட்டேன்”
“ப்ச், இதெல்லாம் தேவையா வசந்த்?, நான் உன் கிட்ட எதுவும் எதிர்பார்க்கல டா”
“ம்ஹ்ம்! இது என் திருப்திக்காக! நீ அன்னம்மாவோட கைப்பக்குவத்தை டேஸ்ட் பண்ணியே ஆகனும்! அதுக்காகத் தான் உன்னை வரச் சொன்னேன்” என்றவன் “அன்னம்மா” என்று குரல் கொடுக்க..
அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நின்ற அன்னம்மாவின் தோளைப் பற்றிக் கொண்டு “இது தான் அன்னம்மா! என் இன்னொரு அம்மா” என்றவன்.. அன்னத்திடம் “இது ஹரி! என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்று அறிமுகம் செய்தான்.
அவன் அறிமுகப்படுத்தியதும் படாரென எழுந்து சடாரெனக் காலில் விழுந்து வணங்கியவனைக் கண்டு அன்னம்மா திருதிருவென விழிக்க..
“டேய்.டேய்... எழுந்திரு டா! அன்னம்மா ஷாக் ஆயிடுச்சு பாரு” என்று சிரித்தவன்.. “என்ன அன்னம்மா, உனக்கு இப்டி ஒரு ஃப்ரெண்டான்னு தான ஆச்சரியப்பட்ற?,” என்று கலாய்க்க.. “ஹிஹிஹி” என அசடு வழிந்த அன்னமும் “நல்லாயிருப்பா” எனக் கூறி எழுப்ப... பிறகு இருவரும் பேசியபடியே சாப்பாட்டை முடித்தனர்.
“உன் அப்பா எப்போ வருவார் டா வசந்த்?” – ஹரி
“நைட் தான்! வேலை விஷயமா செங்கல்பட்டுப் போயிருக்கார் டா”
“ஓ!! வீட்ல வேற யாரும் இல்லையா?,” என்றவன் சிரித்து “உன் மனம் கவர்ந்த மதியைக் காணோம்” என்று வினவ..
“ஷ்ஷ்ஷ்.. அன்னம்மா” என்று எச்சரித்தவன் மாடியை எட்டிப் பார்த்து விட்டு “மேடம்.. பாதி நேரம் ரூம்க்குள்ள படுத்து விட்டத்தை பார்த்துட்டிருப்பாங்க” என்றான்.
“எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க மாட்டியா?, நான் இன்னும் அவளைப் பார்த்ததேயில்ல”
“அவளே வெளியே வருவா! வெய்ட் பண்ணுவோம்! நான் இப்பப் போய்க் கூப்பிட்டா.. உன் ஃப்ரெண்ட்-ஆ, நான் வர மாட்டேன் ஆ,ஊன்னு குதிப்பா” – முகத்தைச் சுழித்துக் கூறியவனைக் கண்டுச் சிரித்து..
“வீட்ல யார்க்கிட்டயும் உனக்கு நல்ல பேரே இல்லையாடா?”
“டேய்.. நல்லவனைத் தான் டா இந்த உலகம் ஒதுக்கி வைக்கும்!” என்ற வசந்த்.. “மொட்டை மாடிக்குப் போகலாம் வா” என்றழைத்துச் சென்றான்.
சாருமதியின் கைங்கரியத்தால் செடிகளும்,மரங்களுமாய்க் குளுகுளுவென இருந்த மொட்டை மாடியை ஹரி ரசித்துப் பார்க்க.. “நான் போய் சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்” என்று வசந்த் கீழே சென்றான்.
தூரத்தில் தெரிந்த வீடுகளைக் கண்டபடி மெல்ல நடந்த ஹரி.. அருகேயிருந்த கொடிக் கம்பத்தில் காய்ந்து கொண்டிருந்த சாருமதியின் ஆடையொன்றின் அழகில் ஈர்க்கப்பட்டு.. அருகே சென்று நின்று.. அதைத் தொட்டுப் பார்த்தான்.
முன்னும்,பின்னும் அதை அவன் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த வேளை..
“என்ன பண்றீங்க?????” – என்ற சாருமதியின் குரல் காட்டுக்கத்தலாய்க் காதில் விழ.. திடுக்கிட்டுத் திரும்பியவன்..
கோபமும்,அருவெறுப்புமாய் முகத்தைச் சுழித்துக் கொண்டு நின்றவளைக் கண்டுத் திகைத்து..
“வ...வந்து...” என்று திக்கத் தொடங்க.. அதற்குள்.. பொறுமையற்றுப் போன சாருமதி..
“யார் நீ?, எங்க வீட்டு மொட்டை மாடிக்கு எப்படி வந்த?, என் டிரெஸ்ஸைக் கையில் பிடிச்சுக்கிட்டு என்ன பண்ற?,” என்று மீண்டும் பொரியத் தொடங்கினாள்.
பொதுவாக அனைவரிடமும் ஒரு ஒதுக்கத்துடனே பழகும் ஹரி.. பெண்களைக் கண்டால் காத தூரம் ஓடி விடுவான். அவனைப் பெற்றெடுத்த அன்னையே அவனை அருவெறுப்புடன் நோக்குகையில்.. மற்றப் பெண்களைக் குறை சொல்லி என்ன பயன்? அதனாலேயோ என்னவோ.. எப்போதும் பெண்களிருக்கும் பக்கம் கூடச் செல்ல மாட்டான். வசந்துடன் பழகிய பின்பு ஓரளவு இதை இயல்பாக எதிர் கொள்ளத் தொடங்கியிருந்தவன்.. இன்று சாருமதியின் பார்வையில்.. முழுதாய் தைரியம் இழந்து.. வியர்த்து,விறுவிறுத்து முகம் வெளுக்க நின்றிருந்தான்.
“யார் நீ-ன்னு கேட்குறேன்ல?” – என்று அவள் மீண்டும் கத்திய சமயம்.. “ என்னாச்சு?” என்று கேட்டபடிக் கையில் தட்டுடன் வசந்த் வர.. அவனைக் கண்டதும் “வசந்த்.....” என்றபடி ஓடிச் சென்று அவன் பின்னே நின்று கொண்டான் ஹரி.
அவன் ஓடியதையும், வசந்தின் பின்பு நின்று கொண்டு மிரட்சியுடன் தன்னைப் பார்க்கும் விதத்தையும்.. திகைப்பும்,கோபமுமாய் நோக்கிய சாருமதியிடம்..
“ஏய்ய்... என்ன??” என்று வினவினான் வசந்த்.
“யார் இவன்?” - சாருமதி
“அவன்,இவன்னேனா பல்லை உடைச்சிடுவேன்!, உன்னை விட வயசு மூத்தவன் அவன்”
“வயசு மூத்தவன்னா, என் டிரெஸ்ஸைத் தொட்டுப் பார்ப்பானா?”
“என்ன உளர்ற?”
“ஃப்ரெண்டாம் ஃப்ரெண்டு! ச்சி! என்னைக்குமில்லாம இது என்ன பழக்கம்?,கண்டவனையெல்லாம் வீட்டுக்குள்ள விட்டுக்கிட்டு” – அருவெறுப்புடன் முகம் சுழித்தவளைக் கண்டுக் கோபமுற்ற வசந்த்..
“ஏய்.. என்னடி ரொம்பப் பேசுற?, யோசிக்காம.. வாய்லயே போட்ருவேன்! என்னாச்சுன்னு சொல்லு முதல்ல”
“அதை உங்க அருமை ஃப்ரெண்டு கிட்டயே கேளுங்க” – என்றவளுக்கு.. இன்னமும் வசந்தின் பின்னே அவன் தோளைப் பற்றியபடிப் பெண் பிள்ளையைப் போல் நின்றவனைக் கண்டு ஆத்திரம் பெருகியது.
“ஹரி.. நீ என் முன்னாடி வா” – வசந்த்
“இல்ல டா”
“வா-ன்றேன்ல?”
முன்னே வந்துத் தலை குனிந்து நின்றவனிடம் என்னவென்று விசாரித்தான்.
“அந்த டிரெஸ் அழகாயிருக்கேன்னு நான் சும்மா தொட்டு தான் டா பார்த்தேன்” – தயங்கித் தடுமாறிப் பதில் கூறினான் ஹரி.
“பார்த்தீங்களா?, உங்க முன்னாடியே எப்படி சொல்றான்னு! இவனெல்லாம் ஒரு ஃப்ரெண்டு?”
“நீ இப்போ வாயை மூடலன்னா.. நிச்சயம் உன் கன்னத்தைப் பேத்துறுவேன்” என்ற வசந்த் தொடர்ந்து “நீ ஏன் டா அவ டிரெஸ்ஸைத் தொட்ட?” என்று நண்பனிடம் எரிச்சலுடன் வினவினான்.
“இல்லடா... இந்த ஆலிவ் க்ரீன்ல ரொம்ப நாளா டிரெஸ் தேடிட்டு இருக்கேன்! ஆனா கிடைக்கல! இந்தப் பேட்டர்ன்ல யெல்லோ கலர் தான் இருக்கு என் கிட்ட! இது நான் ரொம்ப ஆசைப்பட்டுத் தேடின கலர்..”
தயக்கத்தைத் தாண்டிய ஆதங்கத்துடன்.. அந்த டிரெஸ்ஸைப் பார்த்தபடி சிறு பிள்ளைத்தனமாய்க் கூறியவனைக் கேட்டு வசந்துக்கு சிரிப்பு வந்ததென்றால்.. சாருமதியோ.. ‘என்னக் கருமாந்திரம் இது’ ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டு வாய் பிளந்து அவனை நோக்கினாள்.
அவள் முகத்தில் வந்து போன மாற்றங்களைக் கண்ட வசந்துக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“சரி, சரி விடு! அவ டிரெஸ்ஸைத் தொட்டதுக்கு ஒரு சாரி கேட்டுடு. இல்ல, இன்னும் சாமியாடுவா”
வசந்த் கூறியதும் தயக்கத்துடன் நிமிர்ந்து சாருமதியைக் கண்ட ஹரி “சாரி” என்றான்.
இருவரது செய்கையும்,பேச்சும் சாருமதியின் சிற்றறிவுக்குப் புரியாமல் போக.. இன்னமும் கோணிய முகத்துடனே நின்று கொண்டிருந்தவளை “சாரு...” என்று அதட்டினான் வசந்த்.
முறைப்புடன் அவனை நோக்கியவள் பல்லைக் கடித்தபடி “என்ன நடக்குது இங்க?” என்று கேட்க..
“இவன் என்னோட ஃப்ரெண்ட் ஹரிஹரன் அண்ட் ஹீ இஸ் அ ட்ரான்ஸ்ஜெண்டர். அதனால தான் உன் டிரெஸ்ஸை ஆசையாத் தொட்டுப் பார்த்துட்டான். இப்போ புரிஞ்சதா?” -விரிவாய்த் தெளிவு படுத்தினான் வசந்த்.
“ஹீ இஸ் அ ட்ரான்ஸ்ஜெண்டர் “ – என்ற வாக்கியத்திலேயே ஆடிப் போன சாருமதி.. பார்க்கக்கூடாத விசயத்தைப் பார்த்து விட்டது போல் முகத்தை ஏகத்துக்கும் அஷ்டகோணலாய் வைத்துக் கொண்டு மேலிருந்துக் கீழ் வரை அவனை அருவெறுப்புடன் நோக்கினாள்.
சிக்னல்களிலும்,ரயில்களிலும் மட்டுமே பார்த்திருந்த இவ்வகை மனிதர்களை இன்று தான் முதன்முறையாக இத்தனை அருகில் பார்க்கிறாள்.
ஆணைப் போல் பாண்ட்-சட்டை அணிந்திருந்தாலும்... அவன் முகத்தில் பெண்ணின் சாயல்! புருவம் திருத்தியிருந்தான்! அடிக்கடி ஃபேஸியல் செய்வான் போலும்! முடிகளிலின்றி வெயிலில் பளபளத்தது முகம்! பெண் வேடமிட்டானானால் நிச்சயம் சாமுத்ரிகா லட்சணம் கொண்டவனாகத் தெரிவான்.
இருக்கட்டும்! இவனோடு பழக வேண்டியக் கட்டாயம் என்ன இந்த வசந்துக்கு! ஹரியிடம் தோன்றிய அருவெறுப்புக் கடைசியில் வசந்தின் மீது கோபமாக முடியும் சமயம்... அவள் முகத்தைக் கவனித்து விட்ட வசந்த், அவள் மேலும் ஏதும் கூறும் முன்.. “ஹரி.. நாம கீழ போகலாம் டா” எனக் கூறி அவனை இழுத்துச் சென்று விட்டான்.
கீழ சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் புறப்பட்டு விட..
“ரொம்ப சாரி டா ஹரி! உன்னைப் பத்தி நான் அவக்கிட்ட இதுவரை பேசுனதேயில்ல! அதனால தான் பார்த்ததும் டென்ஷன் ஆயிட்டா! நீ ஹர்ட் ஆயிடாத!”
“ச்ச,ச்ச! இதெல்லாம் எனக்குப் பழக்கமானது தான் வசந்த்! உன் கூடப் பழகுனப்புறம் ஓரளவு தைரியமா இதை ஃபேஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்! ஆனா.. என் தைரியத்தையெல்லாம் தூக்கி சாப்பிட்ற அளவுக்கு சௌண்ட் விட்டுட்டா உன் சாரு”
“என் சாரு??, அடப் போடா! ஆனாலும்.. அவளுக்கு இருக்கு இன்னிக்கு. வீட்டுக்கு வந்தவங்களை எப்படி ட்ரீட் பண்ணனும்ன்னு கூடவா தெரியாது?, எல்லாம்.. எங்கப்பனோட வளர்ப்பு”
“ஹாஹாஹா! என்னால.. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம் டா”
“இல்லாட்டியும் நாங்க ரெண்டு பேரும் எந்நேரமும் கொஞ்சிட்டா சுத்துறோம்?”
“பாரு,பாரு, மனசுல இருக்குற ஆசையெல்லாம் ஒவ்வொன்னா வெளிய வருது”
“ப்ச், போடா ஹரி! சாரி டா!”
“என் மேலயும் தப்பு இருக்கு டா வசந்த்! ஒரு பொண்ணோட டிரெஸ்ஸைத் தொட்டு பார்த்தது தப்பு தான?”
“அதுசரி!, இல்லாட்டியும் அவ ஒரு ஹைப்பர் கேஸ் தான் டா”
“சரி, நான் கிளம்பட்டுமா?” – என்றவனை வழியனுப்ப வசந்த் வாசலுக்குச் சென்ற போது.. சரியாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தார் கேசன்.
கண்ணாடியைச் சரி செய்தபடி ஹரியை உற்று நோக்கியவரைக் கண்டுப் பதறிப் போனவன் “ஃப்ரெண்ட்ப்பா, என்னைப் பார்க்க வந்தான்! இப்போக் கிளம்பிட்டான்” என்று அவசரமாகக் கூறி விட்டு ஹரியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டான்.
ஹரியிடம் ஆயிரம் சாரிக்களைச் சொல்லி விட்டு அவன் மீண்டும் வீடு திரும்புகையில் ஹாலிலேயேக் காத்திருந்தார் கேசன் முழுக் கோபத்துடன்! அவர் அருகிலேயே சாருமதி, அவருக்குச் சற்றும் குறையாத கோபத்துடன்!
இருவரையும் கண்டு கொள்ளாமல் அறைக்குச் செல்லப் பார்த்தவனை “நில்லு டா” என்று நிறுத்தினார் கேசன். இதை எதிர்பார்த்திருந்ததால்.. பின் கழுத்தைச் சொரிந்தபடி கெத்து குறையாமல் நின்றான் வசந்த்.
“யாரு டா அவன்?” – கேசன்
“சொன்னேனே ஃப்ரெண்ட்ன்னு”
“ஃப்ரெண்டாவா? ஃப்ரெண்டியா?”
“அவன் ரெண்டு கேட்டகரிலயும் வர மாட்டான்!”
“அப்படிப்பட்டவனோட உனக்கு என்னப் பழக்கம் வேண்டிக் கிடக்கு?”
“ஆணா,பொண்ணா.. பணக்காரனா,ஏழையான்றதுக்கு முன்னாடி அவன் ஒரு மனுஷன்ப்பா! ஒரு மனுஷன்,இன்னொரு மனுஷனோடப் பழகுறது தப்பா?”
“வீணா தர்க்கம் பண்ணுற நீ”
“இல்ல! நீங்க கேட்டக் கேள்விக்குப் பதில் சொன்னேன்!”
“இது நாள் வரைப் படிப்பு வராம,பொறுப்பில்லாம வீணாப் பொழுதைக் கழிச்சிட்டிருந்த! நானும் இப்போ மாறுவ, அப்போ மாறுவன்னு காத்திட்டிருந்தா.. நீ நாளுக்கு நாள்.. உன் செய்கையாலும், சகவாசத்தாலும் இன்னும் சீரழிஞ்சு போயிட்டிருக்க?”
“அப்டி என்ன இப்போ சீரழிஞ்சு போய்ட்டேன்?”
“கண்டவனோடெல்லாம் சகவாசம் வைச்சிருக்கியே டா”
“திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்கப்பா! கோபம் வருது எனக்கு! நாலு வருஷத்துக்கு முன்னாடி.. உயிரா ஒரு நாய் வளர்த்தீங்களே! யாராவது கேள்வி கேட்டோமா?, நாயோடெல்லாம் என்ன சகவாசம் உங்களுக்குன்னு?, அபத்தமா இருக்குல்ல என் கேள்வி?, அது போலத் தான்ப்பா இதுவும்! ரொம்ப சாதாரண விசயம்! ஏன் இவ்ளோ அலட்டிக்கிறீங்கன்னு தெரியல எனக்கு”
“சாதாரண விஷயமா?, எது சாதாரண விஷயம்?, அந்த சங்கரன் பய, நீ இந்தக் கருமாந்திரத்தோட பழகுற விசயத்தை என் தொழில் வட்டத்துல இருக்குற அத்தனை பேர்க்கிட்டயும் சொல்லி வைச்சிருக்கான்! உன் மகனுக்குப் பொண்ணுங்க கிடைக்கலன்னா, இப்டி ஒருத்தனோட சுத்திட்டிருக்கான்னு என் கிட்டயே அசிங்கமா கேட்குறானுங்க”
“எந்த நாய் அப்படிக் கேட்டது?”
“அது உனக்குத் தேவையா? இன்னிக்கு ஒருத்தன்,ரெண்டு பேர் பேசுற விசயத்தை நாளைக்கு ஊரே பேசும்!, வாட்டசாட்டமா புள்ளைய பெத்து வைச்சிருக்கேன், போயும்,போயும் ஒரு ஒம்போதோட உன்னை இணைச்சு வைச்சுப் பேசுறதை நான் எப்படி டா பொறுத்துப்பேன்?”
-கவலையும் ஆதங்கமுமாய்க் கேட்டவரைக் கண்டு கொதித்தெழுந்த வசந்த் வீடே அதிரும்படிக் கத்தினான்.
“அப்பாஆஆஆஆ”
“உண்மை அது தான டா?, சமூகம் இவனை மாதிரி ஆளுங்களையெல்லாம் பாலியல் இச்சையைத் தீர்க்குறவங்களைத் தான சித்தரிச்சு வைச்சிருக்கு!, அவன் நல்லவனாவே இருந்துட்டுப் போகட்டும்! அவன் சகவாசம் உனக்கு வேணாம்”
“என்னால அப்டி விட முடியாதுப்பா! அந்த மாதிரியான இமேஜை அவங்க மேல புகுத்துன பாவம் என் தலை மேலயும் இருக்குப்பா! நானும் நீங்க சொன்ன சமூகத்துல ஒரு ஆள் தான?, நாம உருவாக்குன கெட்ட பேரை நாம நினைச்சா தவிர யாராலயும் அழிக்க முடியாது! நான் அவனை ஒரு சக மனுஷனா ட்ரீட் பண்ண விரும்புறேன்ப்பா! நாளைக்கு எனக்குப் பிறக்குறக் குழந்தை இந்த மாதிரியான குறையோட வளர்ந்தா.. ஒதுக்கிடுவேனா நான்?, இல்ல விஷம் வைச்சுக் கொன்னுடுவேனா?, மாட்டேன் தான?, என் எண்ணத்துக்கு ஆதரவு கொடுங்கன்னு நான் உங்களைக் கேட்கல!ஆனா.. எனக்கு எதிரா நிக்காதீங்க! பாவம்ப்பா அவன்”
“உன் எண்ணம் நூறு சதவீதம் சுத்தமானது டா வசந்த்! இந்த வசனத்தையெல்லாம் சினிமால யாராவது பேசியிருந்தா.. நிச்சயம் கைத் தட்டி பாராட்டியிருப்பேன்! ஆனா.. என் வீட்ல.. என் மகன் இப்படிப் பேசுறதை என்னால ரசிக்க முடியல டா”
“எத்தனை சமூக சீர் திருத்தவாதிங்க வந்தாலும் உங்களை மாதிரி ஸ்டீரியோ டைப் ஆட்களை மாத்தவே முடியாதுப்பா”
“நான் ஒரு அப்பனா யோசிக்கிறேன் டா! உன்னைப் பத்தி என் முன்னாடித் தப்பா பேசுனா எனக்குக் கோபம் வராதா?”
“என் மகன் அப்படிப்பட்டவன் கிடையாதுன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்க!”
“நான் நெஞ்சை நிமிர்த்தி என் மகன்னு சொல்லிக்கிற அளவுக்கு நீ என்னடா பெருசா பண்ணியிருக்க?, பெரிய பதவில இருக்கியா?, இல்ல காசு சம்பாதிக்கிறியா?”
“இது ரெண்டும் இருந்தாத் தான் உங்க மகன்னு ஒத்துக்குவீங்களா?, அப்படி ஒத்துக்கிற அப்பா எனக்குத் தேவையில்ல” – இறுகிப் போன குரலுடன் உணர்ச்சியற்றுக் கூறியவனைக் கண்டு சிலிர்த்துக் கொண்ட சாருகேசனும்..
“இப்டி ஒரு மகன் எனக்கும் தேவையில்ல டா! ஒரு விசயத்துல கூட என் பேச்சைக் கேட்டதுமில்ல! மதிச்சதுமில்ல!, நீயெல்லாம் ஒரு மகனா டா?”
“மதிக்கிற மாதிரி ஒரு நல்ல அப்பாவா ஒரு நாளாவது நீங்க நடந்துருக்கீங்களா?, பெத்தது மட்டும் என்னை! ஆனா.. அன்பைக் கொட்டி வளர்த்ததெல்லாம் இவளை”
“அவளை ஏன் டா வம்புக்கு இழுக்குற?, உன்னை மாதிரி கிடையாது அவ! என் சொல் பேச்சுக் கேட்டு பொறுப்போடு வளர்ற பொண்ணு அவ! உனக்கு வராத படிப்பையும்,நீ பார்க்காத வேலையையும் அவ பார்க்கப் போறா!”
“ரொம்ப சந்தோஷம்! அப்புறம் என்ன?, எனக்கு மகன் கிடையாது! ஒரே ஒரு வளர்ப்பு மக தான்னு இவளைக் கைக் காட்டிக்கோங்க! என்னை விடுங்க”
“அப்படித் தான் டா காட்டப் போறேன்! என்னைப் பெருமைபடுத்துற மாதிரி அவ வளர்ந்து நிற்பா! என் ஆசையை நிறைவேத்துனதுக்காகவே... அவளுக்காக.. ஊரெல்லாம் தேடி ஒரு ராஜகுமாரனைக் கூட்டி வந்துக் கல்யாணம் செஞ்சு வைப்பேன் டா!”
-அதுவரை அசட்டையாக அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தவன்.. அவரது கடைசி வாக்கியத்தில் முகம் சிவக்கக் கோபம் கொண்டு.. “ஜஸ்ட்.... ஷட் அப்” என்று சீற..
“யாரை டா வாயை மூடச் சொல்ற?” என்று கத்திய கேசன்.. அமர்ந்திருந்த இடத்திலிருந்து கோபத்துடன் எழுந்து நின்றார்.
நிலைமை கை மீறிப் போவதைக் கண்டு பதறி “தம்பி,தம்பி” என்று அருகே வந்த அன்னம்மா அவசரமாக அவன் தோள் பற்றி ஆசுவாசப்படுத்த.. மாமனின் கையைப் பற்றியக் சாருமதியின் விரல்களை ஒதுக்கிய கேசன்..
“உருப்படாத பய! இவனால என்னைக்குமே எனக்கு நிம்மதி கிடைக்கப் போறதில்ல! ஊரெல்லாம் என் மானத்தை வாங்குறதுக்காகவே பொறந்துருக்கான்” என்று கத்த..
“அப்டி என்ன உங்க மானத்தை வாங்கிட்டேன் நான்?” – பதிலுக்கு எகிறி வசந்திடம்..
“ராமலிங்கத்தைப் பார்க்கப் போனியா இல்லையா டா நீ?, நாடகம் போட மேடை வேணும், அரேஞ்ச் பண்ணிக் கொடுங்கன்னு நீ கேட்கல?, கூத்தாடுறதுக்குத் தான் உன்னை வளர்த்து விட்டிருக்கேனா? போனதும் போனவன், என் மகன்னு சொல்லி ஏன் டா உன்னை அறிமுகப்படுத்திக்கிற?, இவ்ளோ சொத்து,பத்து இருந்தும் உங்க மகனுக்கு ஏன் இந்தப் பொழப்புன்னு அவன் என் மூஞ்சில காறித் துப்புறான் டா” என்று முழுக் கோபத்தில் கத்தினார்.
முகம் கருக்க.. இறுகிப் போய் அமைதியாய் நின்றிருந்தான் வசந்த்.
“நாடகம் போடுறானாம் நாடகம்! பெரிய நடிகர் திலகம் இவரு! ஏழு கழுதை வயசாகிடுச்சு! உருப்படியா உத்தியோகத்துக்குப் போடா-ன்னா பாட்டு,கூத்துன்னு திரியுறான்! ஏன் டா உன் எண்ணம் இப்படிப் போகுது?, நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது! இத்தோட இதை நீ விட்டொழிக்கல.. நீ என் மகனே இல்லன்னு எழுதி வைச்சிட்டு செத்துடுவேன்”
-அவர் மிரட்டலில் பதறிப் போன சாருமதி “மாமாஆஆ” என்று கத்த.. அன்னம்மா “என்னங்கய்யா இப்படிப் பேசுறீங்க?, வாழ வேண்டிய பையனைப் பார்த்து.. பெத்தவரே இப்படிச் சொல்லலாமா?” என்று கூறியதும்.. கோபத்துடன் அவனை முறைத்து விட்டுத் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நகர்ந்து விட்டார் கேசன்.
பின் தலை முடியைக் கோதியபடி அதிகபட்ச கோபத்துடன் ஜன்னலின் வெளியே நோக்கிய வசந்துக்கு ஆத்திரம் முழுதும் அந்த ராமலிங்கத்தின் புறம் திரும்பியது.
“ராசா..” – கவலை முகத்துடன் அருகே நின்றிருந்த அன்னம்மாவைக் கண்டு..
“என்ன?” என்றான்.
“ஐயா என்னென்னவோ சொல்றாரு! என்ன தம்பி நடக்குது?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல! அவருக்கு என்னை எப்படியாவது ஒழிச்சுக் கட்டனும்! அதான் இப்டில்லாம் பேசுறாரு! நான் அப்டில்லாம் விட்டுட மாட்டேன் அன்னம்மா! கோர்ட்ல கேஸ் போடுவேன் சொத்தைப் பிரிச்சுக் கொடுக்கச் சொல்லி”
சிரிப்புடன் கூறியவனைக் கேட்டு பாரம் குறைந்துப் புன்னகை கொண்ட அன்னம்மா...
“அவரை ரொம்பவும் கஷ்டப்படுத்தாதீங்க தம்பி! அவரும் ஒரு வகையில பாவம் தான்!”
“என்னை விடவா”
“இதுக்கு என்ன தம்பி பதில் சொல்ல?”
“போ அன்னம்மா! போய்.. அவருக்கு பி.பி மாத்திரை எடுத்துக் கொடு! மனுஷன் மூச்சு விடாம பேசியிருக்காரு” – எனக் கூறவும் அன்னம்மா நகர்ந்து விட.. கோபமும்,ஆத்திரமுமாய் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சாருமதியை நிமிர்ந்து நோக்கினான் வசந்த்.
நியாயமா பார்த்தா நான் தான் கோபப்படனும்! இவ என்ன மூஞ்சியைத் தூக்குறா?
“என்னம்மா ராஜகுமாரி?, என்னை ஏன் முறைக்குற?, பெரிய ராஜகுமாரனுக்கு வாக்கப்படப் போறீங்க! முகத்தைக் கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைச்சுக்க வேண்டியது தான?” – நக்கல் குரலில் கேட்டவனிடம்..
“இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாயில்ல?”- என்று பொரிந்தாள் சாரு.
“அவர் பேசப் பேச வாய் மூடிக் கேட்டுட்டிருந்த உனக்கே வெட்கமாயில்ல! நான் மட்டும் ஏன் வெட்கப்படனும்?”
“பின்ன?, அவர் கூடக் கூடப் பேசி, உங்களை மாதிரி அவரை டென்ஷன் பண்ணச் சொல்றீங்களா?, மாமாவை ஏன் இப்படிக் கஷ்டப்படுத்துறீங்க?”
“ஏய்ய்ய்.. என்ன இந்த மனுஷனைக் கஷ்டப்படுத்திட்டேன் நான் இப்போ?”
“நாடகம் நடிக்கிறதைக் கூட ஒரு வகையில என்னால ஏத்துக்க முடியும்! உங்கத் திறமையை இன்னும் ஒரு தடவை கூட மாமா நேர்ல பார்த்ததில்ல! அதனால இப்படிப்பேசுறாரு! ஆனா.. இந்த வேண்டாத சகவாசமெல்லாம் தேவை தானா?, எனக்கு அசிங்கமா இருக்கு” – அருவெறுப்புடன் முகத்தைச் சுழித்தவளின் கையைப் பற்றி அழுத்தி..
“நானும் பார்த்துட்டே இருக்கேன்! அதென்ன எக்ஸ்ப்ரஷன் உன் ஃபேஸ்ல?, ஏதோ அருவெறுக்கத்தக்க விசயத்தைப் பார்த்த மாதிரி முகத்தைச் சுழிச்சுக்கிற?, ஏன் டி அந்த மனுஷன் தான் அந்தக் காலத்து ஆளு! பழைய பஞ்சாங்கமா இருக்காரு! நீ கூட ஏன் டி அவரை மாதிரி யோசிக்கிற?, அடுக்கி வைச்சிருக்கியே ரூம் ஃபுல்-ஆ! பெரிய பெரிய மேதைங்களோட புத்தகங்களா! வெறும் ஷோ கேஸ்க்கு தானா?, எந்த விதமான சிந்தனை மாற்றத்தையும் படிக்குற புத்தகம் ஏற்படுத்தலேனா.. உனக்கெல்லாம் புக்கைத் தொடத் தகுதியே இல்லன்னு அர்த்தம்!, ரத்தமும்,சதையும் இருக்குற சாதாரண மனுஷன் டி அவன்! சராசரி மனுஷனுக்கு இருக்குற ஆசா,பாசங்களைக் கூட வெளிப்படையாக் காட்டிக்க முடியாம நத்தையா சுருண்டு வாழ்ந்திட்டிருக்கிற பாவப்பட்ட ஜென்மம்! தயவு செஞ்சு அவனை ஒரு மனுஷனா வாழ விடுங்க!” என்றவன் வலியில் முகம் சுளித்தபடி கண்ணீர் வழிய நின்றவளை “ச்சை” என உதறி விட்டுச் சென்று விட்டான்.
மறுநாள் விடிந்ததும் நேராக அந்த ராமலிங்கத்திடம் சென்று நின்றான் வசந்த். பெரும் பணக்காரரும், கேசனின் நண்பனுமாகிய ராமலிங்கத்துக்குச் சொந்தமாக சிறிய அரங்கம் ஒன்றிருந்தது. பொதுக் கூட்டம்,கட்சி மீட்டிங்கிலிருந்துத் தொடங்கி சினிமா முகங்களின் நாடகங்கள் வரை அனைத்தும் அந்த அரங்கத்தில் நடைபெறும்.
அந்த அரங்கத்திற்கெனவே பார்வையாளர்கள் கூட்டம் இருந்ததால்.. தங்களது நாடகக் குழுவுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்குமென்று நம்பி அவரைத் தேடிச் சென்று சந்தித்திருந்தான் வசந்த். அவனிடம் நல்ல படியாகப் பேசியனுப்பிய மனிதர் இப்படி நாரதர் வேலை பார்த்து வைப்பார் என அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
கோபமாகத் தன் கண் முன்னே அமர்ந்திருந்தவனை.. அணிந்திருந்தக் கண்ணாடி வழி நோக்கிய லிங்கம் “என்ன தம்பி, காலங்கார்த்தலயே ஆஃபிஸ் பக்கம் வந்திருக்கீங்க?, உங்க நாடக விஷயமா நானே ஃபோன் செய்றேன்னு சொல்லியிருந்தேனே” என்றார்.
“ஏன் சார் நடிக்கிறீங்க?”
“தம்பி”
“உங்களுக்கு நாங்க உங்க அரங்கத்துல நாடகம் போடுறதுல விருப்பமில்லேன்னா.. அதை என் கிட்டயே நீங்க நேரா சொல்லியிருக்கலாம்! எங்கப்பாக் கிட்ட ஏன் என்னைப் பத்தித் தரக்குறைவா பேசியிருக்கீங்க?”
“அப்படி என்ன தம்பி நான் தப்பா கேட்டுட்டேன்?, வெற்றிகரமா ஓடிட்டிருக்கிற உங்கப்பாவோட தொழில்ல பங்கெடுத்துக்காம.. நீங்க நாடகம்,நடிப்புன்னு சுத்துனா.. அது உங்கப்பாவுக்குத் தான அசிங்கம்?, அதனால தான் நான் அப்படிச் சொன்னேன்”
“உங்களுக்கு இட்லி பிடிக்குமா?, தோசை பிடிக்குமா?”
“ஏன் தம்பி கேட்குறீங்க?”
“பதில் சொல்லுங்க”
“தோசை தான்”
“இப்போ நான் உங்க வீட்டம்மாக்கிட்டப் போய், எண்ணெய் ஊத்தி சுடுற தோசை உடம்புக்குக் கெடுதி, அதனால உங்க வீட்டுக்காரருக்கு இட்லி மட்டும் கொடுங்கன்னு சொன்னா.. நீங்க என்ன பண்ணுவீங்க?”
“................”
“நாம என்னத்த வேணா தின்போம்! இவன் எதுக்குக் கேள்வி கேட்குறானான்னு நினைப்பீங்களா மாட்டீங்களா?, அது மாதிரி தான் இதுவும்! நான் என்ன பண்ணனும், பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ண நீங்க யாரு சார்?”
“நான் ஒரு அக்கறைல தான் தம்பி சொன்னேன்”
“நீங்க யாரு என் மேல அக்கறைப் பட்றதுக்கு?, நான் உங்களைத் தொழில் ரீதியா அணுகியிருக்கேன்! ஒத்துக்கிறதும், மறுக்கிறதும் உங்க பிரியம். இதுல எங்க இருந்து சார் ஃப்ரீ அட்வைஸெல்லாம் வருது?, வயசாய்ட்டா போதும், எல்லாரும் தன்னை ஒரு பெரிய மனுஷனா உருவகப்படுத்திக்கிறீங்க”
அடக்கப்பட்டக் கோபத்துடன் பொறுமையாய்ப் பொரிந்தவனைக் கண்டு எரிச்சலுற்ற லிங்கம்..
“தம்பி! இது கலையை வளர்க்குற இடமில்ல! காசு சம்பாதிக்கிற இடம்! நீ போட நினைக்குற ராஜா காலத்து நாடகத்துக்கெல்லாம் இங்க ஆடியன்ஸே கிடையாது! திருவிழால நடக்குற தெருக்கூத்தையெல்லாம் நீ மேடைல ஏத்தி அழகு பார்க்க நினைச்சா எப்படிப்பா?, அரசியல்,குடும்பம்,சமூகம்ன்னு ஏதாவது ஸ்க்ரிப்ட் எழுதிக் கொண்டு வா! கூட்டம் கூடும்! அதை விட்டுட்டு.. சரித்திரக் கதையையெல்லாம் எவன் பார்ப்பான்! உன் லிஸ்ட்ல இருக்குற பாதி நாடகங்கள்.. சினிமாவா மாறி.. ப்ரமோஷன் வாங்கிட்டுப் போய் பல வருஷமாயிடுச்சு! குத்துயிரும்,குலையுயிருமாக் கிடக்குற விசயத்தை நீ காப்பாத்த நினைக்குறது பேராசை”என்றார்.
“என்ன சார் பெரிய சினிமா?, எல்லாத்துக்கும் அடிப்படை நாடகம் தான்! என்ன தான் வெளிநாடு போய் சம்பாதிச்சாலும் தாய்நாட்டு மேல ஒரு பற்றும்,பாசமும் இருக்குறதில்ல?, அந்த மாதிரி தான் இதுவும்.. அடிப்படையை என்னைக்குமே மறக்கக் கூடாது சார்”
“ம்ஹ்ம் சினிமா இன்னும் இன்னும் வளர்ந்துட்டுப் போகும்! பட்டி,தொட்டியெல்லாம் ரீச் ஆகும்! அந்தப் பவர் சினிமாவுக்கு இருக்கு! வளர்ந்து வர்ற நாகரீகத்துக்கு ஏத்த மாதிரி மக்களும் மாறிக்கிட்டே தான் தம்பி போவாங்க! அடிப்படையை யாரு நியாபகம் வைச்சிட்டிருக்கப் போறா?, இதெல்லாம் வேலைக்காகாது தம்பி”
“நிச்சயம் கிடையாது சார்! எல்லாமே ஆரம்பிச்ச இடத்துல வந்து ஒரு நாள் நிற்கும்! வாழ்க்கைச் சக்கரத்தோட நியதியே அது தான?”
“நீ பேசுற வசனம், வசனமாவே நின்னு போயிடக்கூடாதுன்னு நான் வேண்டிக்கிறேன்! இப்போ கிளம்பு தம்பி! சினிமா நடிகர் **** என்னைப் பார்க்க வர்றார்! அவர் நாடகம் அடுத்த வாரம் நம்ம அரங்கத்துல நடக்கப் போகுது”
-விரட்டியவருக்கு உணர்ச்சியற்றப் பார்வையொன்றைக் கொடுத்து விட்டு.. தளர்வுடன் வெளியே வந்தான் வசந்த்.
வாழ்க்கைப் பாதை அத்தனை சுலபமாய் இருக்கப் போவதில்லை போலும்! பழமையென்றாலேப் பரணியில் அடுக்க வேண்டிய விசயமாகப் பார்க்கும் இந்த நவநாகரீக உலகுக்கு எப்படிப் புரிய வைப்பது.. கட்டிடத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டால்.. கட்டிடமே இடிந்து விழுந்து விடுமென்பதை!
பெருமூச்சுடன் ஹரியைத் தேடிச் சென்றான்.
“என்னாச்சு வசந்த்?, உன் அப்பாவோட ஃப்ரெண்ட் என்ன சொன்னார்?” – ஆர்வமாக வினவினான் ஹரி.
“ப்ச், விடு டா” - வசந்த்
“என்ன டா?, உன் பர்த் டே-க்கு சர்ப்ரைஸ் தர்றேன்! அன்னிக்கு நிச்சயம் நாம.. பெரிய மேடைல நாடகம் போடப் போறோம்ன்னு சொன்ன?”
“முயற்சி பண்ணிட்டே இருக்கேன் டா ஹரி! அன்னிக்கு நம்மளால நாடகம் போட முடியாம போனாலும், நீ ஏமாற்றமடையக் கூடாது. சரியா?”
“இல்ல வசந்த்! நீ முயற்சி பண்றதே எனக்குப் பெரிய கிஃப்ட் தான் டா! இல்ல,இல்ல! நீயே எனக்குப் பெரிய கிஃப்ட் டா”
மெல்லப் புன்னகைத்தவன் “உன் பிறந்த நாள் அன்னைக்கு உன் அப்பா வர்றார்ன்னு சொன்ன?” என்று விசாரித்தான்.
“ஆமா, இந்த முறை நீ அவரைக் கண்டிப்பா மீட் பண்ணனும்” என்ற ஹரியிடம் சரியெனத் தலையாட்டினான்.
ஹரியின் பிறந்த நாளன்று காலைத் தன்னறையில் தயாராகிக் கொண்டிருந்தான் வசந்த்.
குளித்து முடித்து வெளி வந்தவன் வழக்கம் போல் டேப்-ரெக்கார்டரை ஆன் செய்யச் செல்கையில் கண்ணில் பட்டது சலங்கை ஒலி கேசட்.
“ஹ்ம்ம், இன்னும் திருட்டுத்தனமா ரூம்க்குள்ள வர்றதை மேடம் நிறுத்தல போல!” என்று முணுமுணுத்துக் கொண்டவன் எட்டி டைனிங்-டேபிளை நோக்கினான்.
புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு காலை உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் சாருமதி. அன்று அணிந்திருந்த அதே மஞ்சள் தாவணியுடன் அமர்ந்திருந்தவளை சிரிப்பும்,கோபமுமாய் நோக்கிப் பின் வேண்டுமென்றே சலங்கை ஒலி கேசட்டை ஒலிக்கச் செய்தான்.
முழுச் சத்தத்துடன் எஸ்.பி.பி தகிடததிமி,தகிடதிதிமி என பாடத் துவங்க.. ஹை-டெசிபலில் கூடச் சேர்ந்து பாடியவனைக் கேட்டு எரிச்சலுற்று.. நிமிர்ந்து அவன் அறையை நோக்கினாள் சாரு.
“பாவம் உண்டு பாவமில்லை!
வாழ்க்கையோடு கோபமில்லை!
காதல் என்னைக் காதலிக்கவில்லைஐஐஐஐஐஐஐ..” – தலை வாரியபடி வேண்டுமென்றே கத்தியவனைக் கேட்டுப் பல்லைக் கடித்தபடி நேர்ப்பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.
கோபத்தில் முகம் சிவந்து போய் மூச்சு வாங்க அமர்ந்திருந்தவளைக் கண்டபடிக் கையில் ஒரு பையுடன் டைனிங் டேபிளில் வந்தமர்ந்தான் வசந்த்.
விடாது அதே பாடலை ஹம் செய்து கொண்டிருந்தவனை ஓரப்பார்வையில் நோக்கி விட்டுத் தட்டில் கவனம் செலுத்தியவளை ஈர்த்தது அந்தக் கவர்.
வெள்ளைக் கவரின் கைப்பிடி வழியே தெரிந்த ஆலிவ் க்ரீன் நிறத்தை உற்று நோக்கியவளுக்கு அது ஒரு ஆடையென்று தெரிந்தது.
அவன் உண்டு முடிக்கும் வரைப் பொறுமையாகக் காத்திருந்தவள், அவன் நகர்ந்ததும் கடகடவெனக் கவர்-ஐப் பிரித்து நோக்கினாள்.
அன்று ஹரி தொட்டு ரசித்த அதே ஆலிவ்-க்ரீன் சுரிதார்! ஆனால்.. யாருக்காக வாங்கியிருக்கிறான்? யோசனையில் ஆழ்ந்தவளை அவன் காலடிச் சத்தம் தடை செய்ய.. பட்டென அதைக் கவர்-க்குள் திணித்து விட்டு சரியாக அமர்ந்து கொண்டாள்.
அவளை நோக்கியபடியே நின்று நிதானமாய் நீர் அருந்தியவன் பின் வெளியே சென்று விட்டான்.
அவன் சென்றதும் நேராக அன்னம்மாவிடம் சென்று நின்றாள் சாரு.
“அன்னம்மா..”
“என்னம்மா?”
“இப்போ அவர் எங்க போறார்?”
“எவர்?”
“அவர் தான்.. உன் வளர்ப்புப் பிள்ளை”
“வெளியே எங்கேயோ போறாரு தாயி! எங்க போறீங்கன்னு நான் கேட்கல”
“ஹ்ம்ம், கையில் வைச்சிருந்த கவர்-ல என்னோடது மாதிரியே ஒரு டிரெஸ் வைச்சிருக்கிறாரே!, யாருக்காம் அது?, உனக்குத் தெரியுமா?”
“தெரியும் கண்ணு! தம்பி ஃப்ரெண்ட் யாருக்கோப் பிறந்த நாளாம்! இந்த டிரெஸ்ஸை கிஃப்ட்-ஆ கொடுக்கப் போறதா சொன்னாரு. நீங்க அந்த டிரெஸ்ஸை எங்க வாங்குனீங்கன்னு என் கிட்ட ரெண்டு நாளைக்கு முன்னால விசாரிச்சார்”
“ஓஹோ!” என்று யோசித்தவளுக்கு நினைவில் நின்றது ஹரி ஒருவனே! அவனுக்காகத் தான் வாங்கியிருப்பான்! அவளுக்கு நிச்சயம் தெரியும்!
அவனுடன் இவன் பழகுவதை நினைத்தாலே தலை முதல் கால் வரை அத்தனை உறுப்பும் அருவெறுப்பில் சுருங்கிப் போய் விடுகிறது அவளுக்கு. இதில்.. பெண்கள் அணியும் சுரிதாரை வாங்கி.. இவன் அவனுக்குப் பரிசளிப்பானாமா? இத்தனைக்கும்.. இதுவரை.. இவளுக்கு ஒரு கடலை மிட்டாய் கூட வாங்கிக் கொடுத்தது கிடையாது இவன்! அப்படியிருக்கையில்.. இதையெல்லாம்.... இதையெல்லாம்.. பார்த்துக் கொண்டு எப்படி அவளால் சும்மாயிருக்க முடியும்?
அடிவயிற்றிலிருந்துக் கொதித்துப் போய்க் கிளம்பிய அமிலசுரப்பிகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் புறப்பட்டு விட்டாள் ஹரியின் வீட்டை நோக்கி!
அங்கே ஹரியின் வீட்டை அடைந்த வசந்த்.. குளித்துக் கொண்டிருந்தவனைப் பாத்ரூமிலேயே வைத்துப் பூட்டி விட்டு.. வெளியே... தான் வாங்கி வந்த கேக்கின் மீது மெழுகுவர்த்தியை வைத்து செட் செய்து விட்டு.. பாத்ரூமின் கதவைத் திறந்தான்.
“என்னடா வசந்த் பண்ற?, காலங்கார்த்தால வீட்டுக்கு வந்ததுமில்லாம,பாத்ரூமுக்குள்ள வைச்சுப் பூட்டுற?” - எரிச்சலில் பாய்ந்தவனிடம் வசந்த் கேக்கை நோக்கிக் கை காட்ட.. கன்னத்தில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டுத் தன் விழிகளைப் பெரிதாக விரித்தான் ஹரி.
“தேங்க் யூ சோ மச் டா வசந்த்! கடைசியா எந்தப் பிறந்த நாளைக்குக் கேக் வெட்டினேன்றது கூட மறந்துடுச்சு எனக்கு” –நெகிழ்ந்து போய் குரல் கம்மக் கூறியவனிடம்...
“முதல்ல கேக்கை வெட்டு! அப்புறம் வசனம் பேசலாம்” எனச் சொல்லி.. கேக் வெட்ட வைத்து.. புகைப்படம் எடுத்தான் வசந்த்.
ஆசையாக ஒரு வாய்க் கேக்கை வசந்துக்குப் புகட்டியவன்...
“எங்கப்பாவுக்கு அப்புறம் என்னை மனுஷனா ட்ரீட் பண்ற ஒரே ஆள் இந்த உலகத்துலயே நீ தான் டா” – என்றவனிடம் சிரித்து...
“ஆச்சரியங்கள் இத்துடன் நிற்கவில்லை” எனக் கூறித் தான் கொண்டு வந்தக் கவர்-ஐ நீட்டினான் வசந்த்.
“உனக்கு ரொம்பப் பிடிச்ச ஆலிவ் க்ரீன் கலர் டிரெஸ்! பிரிச்சுப் பாரு” – என்றதும் கவர்-ஐப் பிரித்த ஹரி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான்.
“தேங்க் யூ டா! ரொம்பத் தேங்க்ஸ் டா வசந்த்” எனக் கூறிப் பாய்ந்து அணைத்துக் கொண்டவனிடம்..
“தேங்க்ஸ் மட்டும் போதாது. இப்போ நீ இந்த டிரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு என் கூட வெளியே வரனும்” என்று கோரிக்கை வைத்தான் வசந்த்.
“வெளியேவா?” எனத் திகைத்த ஹரி உடையை வருடியபடியே “ஏற்கனவே சொல்லியிருக்கேனே வசந்த், நான் இந்த மாதிரி டிரெஸ் பண்ணி வெளியே போனதில்ல டா!, எல்லாரும் வித்தியாசமா பார்க்குற ஃபீல் அதிகமாகும்! என்னால.. என்னால இயல்பா இருக்க முடியாது”என்றான்.
“உனக்கு இதைப் போட்டுக்கிட்டு வெளிய போகனும்ன்ற ஆசை இருக்கா இல்லையா?”
“இருக்கு. நிறைய இருக்கு”
“பின்ன ஏன் தயக்கம்?, நீ, நீயா இருக்கனும் ஹரி! யாருக்காகவும்.. உன்னோட விருப்பங்களையும், ஆசைகளையும் பூட்டி வைச்சுக்கனும்ன்ற கட்டாயமில்ல! புரிஞ்சதா?, நாடகம் போடும் போது பெண் வேஷம் போடுற தான?, அது மாதிரி நினைச்சுக்கோ”
“அ..அது...”
“ப்ச், வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்கப் போறியா?, ஒரு மாற்றம் வர வேணாமா?, எதையும் ஃபேஸ் பண்ணிப் பழகு ஹரி! இப்போ என்ன பெருசா நடந்துடும்ன்னு பயப்பட்ற?, மிஞ்சி மிஞ்சிப் போனா.. சில கேலிப் பார்வைகள், அதைத் தொடர்ந்த கிண்டல்! அவ்ளோ தான?, உலகத்துலயே நீ மட்டும் தான் கேலி,கிண்டலையெல்லாம் ஃபேஸ் பண்ற ஆளா?, இதையெல்லாம் இயல்பா எடுத்துக்கிட்டுக் கடந்து போயேன்!”
“சரி, இதை உடுத்திக்கிட்டு உன் கூட வெளிய வர்றேன்! போதுமா?”
சிரிப்புடன் கேட்டவனிடம் “தட்ஸ் குட்” என்று விட்டு அறையை நோக்கி அவனைத் திருப்பினான் வசந்த்.
சிறிது நேரத்தில் அவன் பரிசளித்த உடையில்.. லேசான அலங்காரத்தோடு அறையிலிருந்து வெளி வந்தவனை ஆச்சரியமாய் நோக்கினான் வசந்த்.
பெண் தோற்று விடுவாள் அவனது முக லட்சணத்தின் முன்பு!
“ரொம்ப ரொம்ப அழகா இருக்க டா ஹரி!!” –மனம் விட்டுப் பாராட்டியவனைக் கண்டுப் புன்னகைத்தவனுக்கு.. வாசலை விட்டுக் கீழிறங்குவதில் ஏகப்பட்டத் தயக்கம்.
“வா டா” என்று அவன் கைப் பற்றி வசந்த் அழைத்து வருகையில்.. அந்தத்தெரு முழுதும் அவனைத் தேடி அலைந்த சாருமதி எதிர்ப்பட்டாள்.
வசந்த் வாங்கிக் கொடுத்த ஆடையில்.. முழுமையான பெண் தோற்றத்துடன்.. அவனது கையைப் பற்றியபடி ஜோடி போட்டுக் கொண்டு வாசலில் இறங்கிய ஹரியைத் திகைபும்,வெறுப்புமாய் நோக்கி தொண்டை அடைக்க.. அதிர்ச்சியுடன் நின்று விட்டாள் சாருமதி.
தயக்கமும்,சிரிப்புமாய் வசந்துடன் இணைந்து நடந்த ஹரி தான் முதலில் அவளைக் கண்டான்.
அங்கு அவளை எதிர்பாராது அதிர்ந்து “வசந்த்” என அவனது தோளை பற்றிய வேளை.. வசந்தும் அவன் பார்வை சென்ற திக்கை நோக்கினான்.
நீ எங்க இங்க? என்பது போல் புருவம் சுருக்கி வசந்த் அவளைப் பார்க்க.. அவளோ.. கோர்த்திருந்த இருவரது கைகளின் மீதும் ஒரு நொடி பார்வையைச் செலுத்தி விட்டுப் பின் நிமிர்ந்து... தன் நீண்ட கண்கள் முழுக்கக் குளம் கட்டி நின்றக் கண்ணீருடன் அவனை நோக்கி.. ஆத்திரத்தில் மூக்கு நுனி சிவக்க.. வெறுப்பான ஒரு பார்வை பார்த்து விட்டு விறுவிறுவென நடந்து சென்று விட்டாள்.
அவள் பார்வையையும்,பாவனையையும் வைத்தே அவள் என்ன நினைத்திருப்பாள் என்பதை யூகித்து விட்ட வசந்துக்கு அவள் மீதுக் கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கியது.
அன்று அவ்வளவு எடுத்துச் சொல்லியும், இன்று இப்படியொரு பார்வை பார்த்து விட்டுச் செல்கிறாளென்றால்.. எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்! அப்படியென்ன செய்து விட்டான் அவன்! மாமனும்,மருமகளும் இவர்களிருவரையும் வெறுப்புடன் நோக்குமளவிற்கு! அதிலும் ஹரியிடம் அவள் காட்டும் அருவெறுப்பு தாங்கிக் கொள்ளவே முடியாததாகப் பட்டது அவனுக்கு!
இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது! இந்த மாதிரியான குருவி மூளைக்காரர்களை சுற்றி வைத்துக் கொண்டு பெரிதாய் சமூக மாற்றத்துக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கிறான் இவன்! இதெல்லாம் என்று மாறுமோ!
அவள் சென்ற திசையைக் கண்டு வெறுப்புடன் தோளைக் குலுக்கியவன்.. அவள் பின்னே சென்று சமாதானப்படுத்த விழையவில்லை.
“டேய் வசந்த்.. அந்தப் பொண்ணு போகுது பாரு டா”
“போனா போகட்டும்”
“ப்ச், என்ன பதில் இது?, அவ நீ காதலிக்குற பொண்ணு டா”
“அதே தான் நானும் சொல்றேன்! நான் காதலிக்குற பொண்ணுக்கு என் மேல கொஞ்சமாவது நம்பிக்கை வேண்டாமா?”
“முதல்ல நீ காதலிக்கிறதை அந்தப் பொண்ணுக் கிட்ட ஒழுங்கா வெளிப்படுத்தியிருக்கியா?, புதிர் போட்டு விளையாடுறவன் மேல நம்பிக்கை வைக்குறது ஒன்னு தான் குறை”
“ஹரி....” – எரிச்சலுடன் நண்பனை முறைத்தான் வசந்த்.
“உண்மை தான?, சிறுபிள்ளைத்தனமா ஐ லவ் யூன்னு மூணு வருஷத்துக்கு முன்னாடி நீ கொடுத்த லவ் லெட்டர் எல்லாம் இன்னும் செல்லுமா டா வசந்த்?”
“வெறுப்பேத்தாத டா என்னை”
“போய் அவளைச் சமாதானப்படுத்து வசந்த்! உன்னைப் பத்திப் புரிய வைக்க முயற்சி பண்ணு! உன்னால முடியாட்டி சொல்லு! நான் சொல்றேன்! நீ ரொம்ப நல்லவன் டா! நீ நினைச்சதெல்லாம் உன் வாழ்க்கைல நடக்கனும்”
“ஷ்ஷ்ஷ், நீ என்னை ஒரு மகான் மாதிரி பார்க்குறதை இன்னும் விடலயா டா?”
“கேலி பண்ணாத வசந்த், ஒழுங்கா வீட்டுக்குப் போ” என்று அவன் கூறிக் கொண்டிருக்கையிலேயே வந்து சேர்ந்தார் அவனது தந்தை நெடுமாறன்.
தொப்பையும்,கண்ணாடியுமாய் உருண்டு வந்தவரைத் தன் தந்தையென வசந்திடம் அறிமுகப்படுத்தினான் ஹரி.
“வாங்க, வாங்கப்பா!, நீங்க வருவீங்கன்னு சொன்னான் ஹரி! ஆனா.. எப்போ வருவீங்கன்னு சொல்லல!, எப்படியிருக்கீங்க?” – உற்சாகமாய் நலம் விசாரித்தவனிடம் தானும் பதிலுக்கு விசாரித்தார் மாறன்.
“அப்புறம் சொல்லுப்பா! என்ன சொல்றான் ஹரி?, சுரிதாரெல்லாம் போட்டு வாசல்ல நிற்கிறான்?, எப்படி ஒத்துக்கிட்டான்?”
“ஐயோ! ரொம்பவே கஷ்டப்பட்டுத் தான் ஒத்துக்க வைச்சேன்ப்பா”
“நானும் நிறைய தடவை சொல்லியிருக்கேன்! நீ,நீயாவே இரு. அப்பா உனக்கு சப்போர்ட் பண்றேன்னு! ஆனா அவனோட தயக்கம் இதுவரை போனதேயில்ல! இப்போ சம வயசுத் தோழன் கிடைச்சிட்டதாலோ என்னவோ, கொஞ்சம் நார்மலா இருக்கான்! நான் உனக்கு ரொம்ப,ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன்ப்பா!” –நெகிழ்ச்சியுடன் அவன் கையைப் பிடித்துக் கொண்டார் மாறன்.
“ச்ச,ச்ச நான் அவனுக்கு எதுவும் பண்ணல! அவன் தான் எனக்கு நிறைய செஞ்சிருக்கான்! இவன் கூடப் பழகுறதுக்கு முன்னாடி வரை எதுலயும் பிடிப்பில்லாம சும்மா சுத்திட்டிருந்தேன்! இவனோடு சேர்ந்து நாடகம் போட ஆரம்பிச்சப்புறம் தான்.. எனக்கு இந்தக் கலை மேல ஈடுபாடு இருக்குறதையேத் தெரிஞ்சுக்கிட்டேன்! நான் தான்ப்பா அவனுக்குத் தேங்க்ஸ் சொல்லனும்”
“அடடா! ரெண்டு பேரும் இப்படியே மாத்தி,மாத்தி தேங்க்ஸ் சொல்லிட்டே இருக்கப் போறீங்களா?”
“அதான?, என்ன ப்ளான் வைச்சிருந்தீங்க ரெண்டு பேரும்?, சொல்லுங்க நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்” என்ற மாறனிடம் “அப்பா அதுக்கு முன்னாடி இவனுக்கு வேற ஒரு முக்கியமான வேலையிருக்கு. இவன் அதை முடிக்கட்டும் முதல்ல” என்ற ஹரி அவனை வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
அவனது கட்டாயத்தால் வீடு திரும்பிய வசந்துக்கு, சாருமதியைச் சமாதானப்படுத்தும் எண்ணமெல்லாம் சிறிதும் கிடையாது! அப்படியென்னத் தன் மீது நம்பிக்கையற்றுப் போய் விட்டது அவளுக்கு என்கிறக் கோபம் தான் மிகுதியாயிருந்தது.
அதனால் வீட்டிற்கு வந்தவன்.. அன்னம்மா வெளியே சென்றிருப்பதைக் கண்டு நேராகத் தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
எப்போதும் போல் டேப் ரெக்கார்டரில் பாட்டை ஒலிக்க விட்டு.. ஹரி கொடுத்த நாடகக் குறிப்புகள் அடங்கிய புத்தகமொன்றைக் கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த வேளை.. அவன் அறைக் கதவைத் தள்ளிக் கொண்டுக் கண்ணீரும்,கோபமுமாய் வந்து நின்றாள் சாருமதி.
அவளைக் கண்டதும் மட்டுப்பட்டிருந்த எரிச்சல் தலை தூக்க.. அவள் வருகையை அசட்டை செய்து விட்டுப் புத்தகத்தினுள் பார்வையைத் திருப்பியவனைக் கண்டு ஆத்திரம் அதிகமாக.. அவனருகே நெருங்கி.. அவன் கையிலிருந்தப் புத்தகத்தைப் பிடுங்கித் தூர எறிந்தாள் அவள்.
“ஏய்ய் என்னடி பண்ற?” – உச்சகட்டக் கோபத்தில் கத்தியவனிடம்..
“நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க, உங்க வாழ்க்கையோட! என் வாழ்க்கையோட! அதைச் சொல்லுங்க முதல்ல” – கண்ணீருடன் கேள்வி கேட்டவளைக் கண்டு..
“என்ன உளர்ற?” என்றான் வசந்த்.
“நிஜமா நீங்க நடந்துக்குற விதம், பண்ற விஷயம் எதுவும் எனக்குப் புரிபடவேயில்ல! நான் அந்தப் பையனைப் பத்தி எந்த விமர்சனமும் பண்ணல! அதுக்கான உரிமையும் எனக்கு இல்ல! ஆனா.. ஆனா.. நீங்க.. அவனுக்குப் பொண்ணுங்க போட்ற துணி எடுத்துக் கொடுத்து அழகு பார்க்குறதையும்.. கை.. கையைப் பிடிச்சுக்கிட்டு தெருவுல உலா வர்றதையும்.... பார்க்க... பார்க்க எப்படியிருக்குத் தெரியுமா எனக்கு?”
“எப்படியிருக்கு?”
“தலைல இருந்து கால் வரைக்கும் பத்திக்கிட்டு எரியுது” – கையை நீட்டி சைகை செய்து.. தன் பெரிய கண்கள் முழுக்க ஆத்திரத்தைக் காட்டியவளைப் பார்த்துச் சிரிப்பதா, அழுவதா என்றே புரியவில்லை வசந்துக்கு.
அப்படியும் அவளுக்குப் புரிய வைத்துவிடும் நோக்கத்தோடு “அவன் என் ஃப்ரெண்ட் சாரு” என்றவனை ஆங்காரமாய்ப் பார்த்து...
“அதுக்காக.. அதுக்காகக் கையைப் பிடிச்சுக்கிட்டு ஜோடியா உலா போவீங்களா?” என்று கத்தினாள் அவள்.
“சத்தத்தைக் குறை! நாம வீட்ல இருக்கோம்”
“நான் அப்படித் தான் கத்துவேன்”
“சரி, கத்து”
அலட்டிக் கொள்ளாமல் கூறியவனைக் கேட்டுக் கண்ணீர் பெருக..
“நீங்க அத்தனை தடவைக் கேட்டும் நான் பதில் சொல்லலன்றதுக்காகத் தான் இப்படியெல்லாம் பண்றீங்களா?” – கன்னத்தில் வழிந்தோடும் அருவியை நிப்பாட்டும் எண்ணமின்றி அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து வினவியளைக் கண்டவனின் அகமும்,புறமும் வெகுவாய் மயங்கிப் போனது.
அவன் கரு மணிகள் இரண்டும் அசையாது.. அவள் முகத்திலேயே பதிந்து விட.. இப்போது அவனது மொத்த முக பாவமும் மாறிப் போயிருந்தது.
“என்ன கேட்டேன்?” - வசந்த்
“அ...அன்னிக்கு பீச்-ல கேட்டீங்களே!”
“என்னன்னு?”
“காதலிக்கலாமான்னு?”
“இப்போ அதுக்கு பதில் சொல்லப் போறியா?”
அவன் பார்வையில் படிப்படிப்பாய் கூடத் தொடங்கியிருந்த ஆசையையும்,காதலையும் கவனிக்காது தன் எண்ணங்களிலேயே உழன்று கொண்டிருந்த சாருமதிக்கு.. அவனிடம் என்ன பதில் கூறுவதென்றே புரியவில்லை.
உதட்டைக் கடித்தபடி வேறு புறம் நோக்கியவளுக்குக் கண்ணீர் மட்டும் நின்ற பாடில்லை!
வேறு வழியின்றித் தயக்கத்துடன் திரும்பி அவன் முகம் நோக்குகையில்.. அந்தக் கண்கள் காட்டிய பாவனையில் திணறி.. தடுமாறி.. சட்டென அவன் மார்பிலேயேத் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் அவள்.
தன் நெஞ்சோடு அமிழ்ந்து போயிருந்தவளை கண்டவனுக்குத் தன் மார்புக்கூட்டினுள்ளே.. உரத்த குரலுடன் அவளிடம் காதல் பாஷை பேசத் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் துடிப்பை புரிய வைத்து விடும் வேகம் சீற்றமாய் எழுந்தது!
மொத்தமாய் அவளைத் தன்னோடு சேர்த்துக் கொள்ளத் துடித்தக் கரங்களின் ஆசையைக் கஷ்டப்பட்டு அடக்கி.. நீட்டிய கையை பாண்ட் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டுக் குனிந்துத் தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் சிகையை நோக்கினான்.
“சாரு...” – அடிக்குரலில் அவஸ்தையாய் வெளி வந்த அவன் குரலின் தாக்கம் உண்டாக்கிய சில்லிப்பில் கண்களை இறுக மூடிக் கொண்டவள்..
“நீங்க கொடுத்த லவ் லெட்டரை நான் இன்னும் பத்திரமா வைச்சிருக்கேன் தெரியுமா?” என்றாள்.
“................”
“மாமா சுக்குநூறாக் கிழிச்சுப் போட்டதும்.. ஒரு காகிதம் விடாம அத்தனையையும் பொருக்கி எடுத்துப் பத்திரப்படுத்தி வைச்சிருக்கேன்”
“.................”
“நீங்க... நீங்க... அந்தப் பையனோடக் கையை இனிப் பிடிக்காதீங்க”
வார்த்தைகளில் கோர்வையின்றி.. வாய்க்கு வந்ததைப் பேசியவளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.
“சாரு..”
“ம்ம்”
“ஹரி என்னோட ஃப்ரெண்ட்! ஃப்ரெண்ட் மட்டும் தான்!”
“மூளைக்குத் தெரியுது! ஆனா.. மனசுக்குப் புரியல”
“ரெண்டும் உன் உடம்புக்குள்ள தான இருக்கு?, ரெண்டையும் சிங்க்-ல வை!”
“.................”
“நாம எல்லாம் படிச்சவங்க சாரு! கால,காலமா எல்லாரும் ஃபாலோ பண்ற விசயத்தை நாமளும் கடைபிடிக்கனும்ன்னு எந்த அவசியமும் இல்ல! மாறி வர்ற உலகத்தைப் பத்தியும், வளர்ந்து வர்ற நாகரீகத்தைப் பத்தியும் நல்லாத் தெரிஞ்சவங்க நாம! அதனால.. இந்த வளர்ச்சி அனுமதிக்கிற சில விசயங்களுக்கு அங்கீகாரம் கொடுக்குறதுல எந்தத் தப்புமில்ல! காலச் சக்கரத்துல முன்னாடி ஓடிட்டவங்கக் கிட்ட நம்ம தலைமுறைக்கான மாற்றங்களைப் புகுத்த முடியாது! அதனால.. இயல்பை மாத்துற இந்த மாதிரியான விசயங்களுக்கு அவங்கக் கிட்டயிருந்து எதிர்ப்பு கிளம்பத் தான் செய்யும்! அதையெல்லாம் கண்டுக்காம.. நாம இந்த மாற்றங்களுக்கு அடையாளம் கொடுத்தோம்ன்னா.. இனி வர்ற தலைமுறை.. இதை இன்னும் சிறப்பான இடத்துக்கு எடுத்துட்டுப் போகும்! நான் சொல்றது புரியுதா?”
“....................”
“நாய்,பூனையெல்லாம் அருவெறுப்புப் பார்க்காம வீட்ல வைச்சு அன்பு காட்டி வளர்க்குறீங்க! அதே அன்பை சக மனுஷன் மேல காட்டச் சொன்னா.. கோபப் பட்றீங்க!”
“................”
“அவன் பொண்ணு மாதிரி உடுத்துறதையும்,லிப்ஸ்டிக் போட்டுக்கிறதையும் பார்க்குறது எனக்கும் புதுசு தான்! ஆனா.. அதை நான் ஆச்சரியமாத் தான் பார்த்தேனே ஒழிய.. அருவெறுப்பாப் பார்க்கல! இந்த மாற்றம் அவனுக்குக் கடவுள் கொடுத்தது.. அதை அவன் இயல்பா ஏத்துக்க வழி செஞ்சு கொடுக்க வேண்டியது.. சக மனுஷனான நம்மளோட கடமை”
“.............”
“சாரு...”
“...........”
“இனி அவனை அருவெறுப்போட பார்க்க மாட்டியே!”
“...............”
“அவன் ரொம்ப நல்லவன் சாரு! அன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்தப்போ, உன்னை அறிமுகப்படுத்தி வைக்கச் சொல்லி என் கிட்ட ஆசையாக் கேட்டான்! நீ தான் அவனைப் பார்த்ததும் தாம்,தூம்ன்னு குதிச்சு கலாட்டா பண்ணிட்ட!”
“................”
“உன் மாமா-லாம் முந்தைய தலைமுறை ஆளு! அவரோட எண்ணங்களுக்கெல்லாம் நீ வடிவம் கொடுத்துட்டு இருக்காத! சரியா?”
“...................”
“சாரு.. பதில் பேசு..” – அவன் அதட்டியதும் தயக்கத்துடன்...
“அ..அவங்க.. என்னைத் தப்பா நினைச்சிருப்பாங்களா?” என்று வினவினாள்.
“எவங்க?”
“அவங்க தான்.. உங்க ஃப்ரெண்ட் ஹரி!”
“அதெல்லாம் நினைக்க மாட்டான்! இன்ஃபாக்ட் உன்னைச் சமாதானப்படுத்தச் சொல்லி என்னை ஃபோர்ஸ் பண்ணி அனுப்பி வைச்சான்”
“நா..நான்.. சாரி கேட்கட்டுமா அவங்கக்கிட்ட?”
“ஹாஹாஹா! தாராளமா! ஆனா.. அதுக்கும் அவன் என்னைத் தான் திட்டுவான்! நான் தான் உன்னை ஏதோ மிரட்டி வைச்சிருக்கேன்னு”
“கொஞ்சம் பொறாமையா இருக்கு”
“எதுக்கு?”
“உங்க ஃப்ரெண்ட்ஷிப் பார்த்து..”
“அதனால தான் கண்ணீர் விட்டியா?”
“..............”
“சாரு...” – மீண்டும் மென்மையைத் தேக்கி ஆழ்ந்த குரலில் அழைத்தவனைக் கண்டு.. அவள் மீண்டும் தன் கண்களை மூடிக் கொள்ள..
பாக்கெட்டுக்குள்ளிருந்தத் தன் இடது கையை எடுத்து.. அவள் வலது கையின் ஐவிரல்களையும் பற்றிக் கொண்டவன்.. அதைத் தூக்கி...
“கையென்றே செங்காந்தள் மலரை..
நீ சொன்னால்.. நான் நம்பவோ..” என்று பாட.. வெடுக்கெனக் கையை இழுத்துக் கொண்டு.. அவனிடமிருந்து விலகி.. நான்கடித் தள்ளி நின்றாள் சாரு.
அவளது விலகல் கொடுத்த ஏமாற்றத்தில் முறைத்து..
“கம்பன் ஏமாந்தான்..
இளம் கன்னியரை ஒரு மலரென்றானே” – என்று இன்ஸ்ட்டெண்டாகப் பாட்டை மாற்றியவனைக் கண்டு வாய் விட்டுச் சிரித்தாள் அவள்.
ரசனையுடன் அவள் சிரிப்பை நோக்கியவனின் கண்களில் ஆயிரம்,ஆயிரம் காதல் பூக்கள்!
சிரிப்பு மறையாமல் பதில் பார்வை பார்த்தவளிடம்..
“நானாவது லவ் லெட்டர் தான் கொடுத்தேன்! ஆனா.. நீ என்னைக் கட்டிப் பிடிச்சிருக்க! இதுக்கெல்லாம் உன் மாமா விளக்கம் கேட்பாரு! பதில் சொல்ல ரெடியா இரு” என்று அவன் போலியாக மிரட்ட..
வேகமாய் அடித்துக் கொண்ட இதயத்தின் விளைவால்.. முப்பரிமாணத்தையும் முகத்தில் காட்டி.. கண்களைச் சுருக்கி.. நாக்கைக் கடித்துத் தலையைக் குனிந்து கொண்ட சாருமதிக்கு.. சத்தியமாய் அந்த நொடி.. விண்ணுக்கும்,மண்ணுக்கும் வித்தியாசம் தெரியவில்லை!
அனைத்தும்,அனைத்துமே அழகாகச் சென்று கொண்டிருந்தது. அந்த ஒரு நாள் சாருகேசன் அவளிடம் வந்து “உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் டா அம்மா” என்று சொல்லும் வரை!
