அத்தியாயம் - 1

ள் அரவமற்ற பேருந்து நிறுத்தம் அது.

மழை வரும் அறிகுறியுடன் தென்பட்ட மாலை நேரத்து வானத்தை ஒரு முறை அண்ணார்ந்து நோக்கி விட்டு, எரிச்சலுடன் தன் கைக்கடிகாரத்தில் விழிகளைப் பதித்தாள் சக்தி.

தணல் பரப்பும் சூரியன், இருளுக்குப் பயந்து தலை தெறிக்க ஓடி விட்டதாலோ என்னவோ, நாள் முழுக்கப் பம்மியிருந்த காற்றுத் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள, ஆசுவாசப் பெருமூச்சை வெளியிட்டதில், இண்டு,இடுக்கிலிருந்தக் குப்பைகளனைத்தும் பறந்து வந்து சாலை நடுவில் சால்சா ஆடிக் கொண்டிருந்தது.

கூந்தல் கலைத்தக் குளிர்க் காற்றையோ,கருப்பாய் நிறம் மாறிக் கொண்டிருந்த வான் மேகத்தையோ ரசிக்க முடியாது, அவ்வப்போது கடந்து சென்ற வாகனங்களை வெறித்தபடி சுழித்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.

காரணம்..

குப்பென்று நாசியில் ஏறிய கெட்ட்ட்ட நாற்றம்! சற்றுத் தள்ளியிருந்தக் குப்பைமேட்டைக் கண்டு விட்டு, முகத்தை வலப்பக்கம் திருப்பி முடிந்த அளவு தம் கட்டிப் பார்த்தாள்!

மூச்சடக்கிக் கொண்டிருக்கையிலேயே, முட்டிக்குக் கீழே சொரியத் தொடங்க, இடைவெளியின்றி இரத்தம் உரியும் கொசுக்களை சபித்தபடி, பரபரவென்று கால்களைத் தேய்த்து விட்டாள்.

இடக்கையால் மூக்கைப் பொத்தியபடி, வலக்கையால் கெண்டைக் காலைச் சொரிந்து கொண்டிருந்தவளின் நிலை சற்றுப் பரிதாபத்திற்குரியதாகத் தானிருந்தது.

‘நல்ல வேளை! பஸ் ஸ்டாப்ல யாருமில்ல’- என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே, தொப்பெனக் கேட்ட சத்தத்தில், இடப்புறம் திரும்பி நோக்கினாள்.

இரு கைகளால் முகத்தை மூடியபடிக் குனிந்து அமர்ந்திருந்த அந்தப் பெண், சத்தமின்றி அழுவது, குலுங்கிய அவளது முதுகின் வழி கண்டு கொள்ள முடிந்தது.

ஏதேதோ புலம்பலுடன் முணுமுணுத்தபடி அப்பெண் விடாது அழுது கரைய, சொரிவதை மறந்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த சக்தி, அருகில் சென்று என்னவென விசாரிக்க முற்படும் போது, அவசரமாய் அவளருகே ஓடி வந்த ஒருவன், தன் கையிலிருந்தக் குளிர்பானத்தை அவளிடம் நீட்டி,

“அழறதை நிறுத்திட்டு முதல்ல இதைக் குடி சத்யா” என்றான்.

விடைத்த மூக்கும், அழுந்த மடிந்திருந்த இதழ்களுமாய், கண்ணீர் விழிகளுடன் நிமிர்ந்து எதிரிலிருந்தவனை நோக்கியவள், ‘வேண்டாம்’ என்பது போல் தலையை இரு புறமும் ஆட்டினாள்.

“ப்ச்” என்ற சொல்லுடன் தலையைக் கோதிக் கொண்டு அவளருகே அமர்ந்தவன், ஒரு நொடி மௌனமாகிப் பின் மூச்சு வாங்க,

“நடக்குறது எதுக்கும் நீ காரணமில்ல சத்யா.புரிஞ்சுக்கோ” என்றான்.

அவன் புறம் பார்வையைத் திருப்பாது, ஏளன சிரிப்புடன் மூக்கை உறிஞ்சியவள், பின் எதையோ நினைத்துத் தலையை ஆட்டி மறுத்தபடி, நெற்றியில் அடித்துக் கொண்டுச் சத்தமில்லாது பொங்கி அழ,

“ஷ்ஷ், சத்யா…” என அவளது தோள் பற்றியவனிடம்,

“எனக்குத் தெரியும்! என்னால தான்! என்னால தான் எல்லாம்! நான்.. நான் தான் என் அப்பாவைக் கொன்னுட்டேன்! அவருக்குப் பிடிக்கலன்னு தெரிஞ்சும், அவர் பேச்சை மதிக்காம, என் சந்தோஷம் தான் முக்கியம்ன்னு சுயநலமா யோசிச்சு, வீட்டுக்குத் தெரியாம உங்களைக் கல்யாணம் பண்ணிக் கடைசில… கடைசில.. எங்கப்பாவுக்குக் கருமாதியும் பண்ணிட்டேன்!” – மெல்லிய குரலில் பேசியபடி அவன் தோளில் தன் நெற்றியை இடித்துத் துக்கத்தில் கதறியவளின் புலம்பல்கள், அருகே அமர்ந்திருந்த சக்தியையும் வந்தடைந்தது.

அவள் தலை பற்றி நிமிர்த்தித் தன் முகம் பார்க்கச் செய்த அந்த ஆடவன்,“நிச்சயம் இல்ல! நம்ம கல்யாணம் நடந்திருக்கலைன்னாலும், உன் அப்பா இன்னைக்கு உயிரோட இருந்திருக்க மாட்டாரு! டாக்டர் சொன்னதைக் கேட்ட தான?, அவருக்கு ரொம்ப நாளாகவே ஹார்ட்ல மேஜர் ப்ராப்ளம் இருந்திருக்கு. பெருசா கவனிக்கப்படாததால இன்னைக்கு உயிர் போற நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கு! நம்ம கல்யாணத்துக்கும், அவரோட மரணத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல! எமோஷனலா அதை,இதை யோசிச்சு உன்னை நீயே காயப்படுத்திக்காத” – பொறுமையாக, கடுமையாக சஞ்சயன் அவளை சமாதானப்படுத்தும் முயற்சியிலிருக்க.. மறுத்துத் தலையசைத்தபடியே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவளிடம்,

“மாலையும்,கழுத்துமா நாம அவர் முன்னாடி நின்னப்போ, என் சட்டையை பிடிச்சு எகிறி சண்டைக்கு நின்ன மனுஷன் அவரு! கஷ்டத்தை உள்ள வைச்சு மறுகிற ஆள் கிடையாது, வெளிப்படையா கோபத்தைக் காட்டுறவரு!, அவரு உன்னை நினைச்சு,நினைச்சு உருகி,மறுகி செத்துட்டாருன்னு உன் சொந்தக்காரங்க இட்டுக் கட்டி பேசுறதெல்லாம் உண்மை கிடையாது. தெரிஞ்சுக்கோ” என்று அவன் கூற,

அவனை விட்டு விலகி அமர்ந்தவள், விழி நீரைத் துடைத்தபடி,

“செத்துப் போனவர் மேல கோபப்படாதீங்க. அது ரொம்பத் தப்பு” என்றாள் மெல்லிய குரலில்.

“எனக்கென்ன கோபம் அவர் மேல?, அவர் நடந்துக்கிட்ட விதத்தை நான் தப்பு சொல்லவே இல்ல! அவர் மேல எனக்கு எந்த வெறுப்பும் இல்ல. பொண்ணு கேட்ட வந்த அன்னைக்கு அவர் என்னை அவமானப்படுத்துனப்பவும், கல்யாணம் நடந்த அன்னைக்கு அடிச்சு விரட்டுனப்பவும், பொறுத்துக்கிட்டு அமைதியா தான நின்னேன்?”

“ப்ச், சஞ்சயன்! நான் உங்களைக் குற்றம் சொல்லவே இல்ல”

“பின்ன, அழுதுகிட்டே இருக்க?, என்னைக் கல்யாணம் பண்ணதால தான் உனக்கு இந்த நிலைமை-ன்ற மாதிரி?”

“என் அப்பா செத்து போயிட்டாரு சஞ்சயன், நான் அழக் கூடாதா?”

“நல்லா அழு! எவ்ளோ வேணா அழு! ஆனா, நம்ம கல்யாணம் பண்ணதால தான் அவர் செத்துட்டாருன்னு புலம்பாம அழு!”

அவன் வெடுக்கெனப் பேசியதும், அழுகையை அடக்கியபடி அவனையே பார்த்தவளைக் கண்டுக் கண்களை மூடி ஆயாசத்துடன் பெருமூச்சை வெளியிட்டவன், அவள் தோள் பற்றித் தன் மீது சாய்த்துக் கொண்டான்.

“நாம அவரோட முடிஞ்ச அளவு போராடிட்டோம் சத்யா! அவர் நம்மள கடைசி வரை புரிஞ்சுக்கவே இல்ல! என் பொண்ணோட நீ எப்படி வாழ்றன்னு பார்க்குறேன்டா-ன்னு சொடக்கு போட்டு சவால் விட்டவர் கிட்ட, கண்டிப்பா வாழ்ந்து காட்டியே ஆகனும்ன்னு சபதம் எடுத்திருந்தேன் நான்! ஆனா எனக்கு அவர் சான்ஸ் கொடுக்காமலே போயிட்டாரு” – கம்மிய குரலில் கூறிய சஞ்சயனுக்கும் கண்கள் கரித்து விட..

அவனது கைகளை அழுந்த பற்றிக் கொண்ட சத்யா, “காதலிக்கிறது அவ்ளோ பெரிய குற்றமா சஞ்சயன்?, ஏன் எதிரி மாதிரி பாவிச்சு எட்ட நிறுத்துறாங்க எல்லாரும்?” என்றாள்.

“ப்ச், விடு சத்யா! அம்மா,அப்பா இல்லாத அநாதை பையன் நானு! ஆசிரமத்துல வளர்ந்து,படிச்ச எனக்கு என்ன தகுதியிருக்கு,பொண்ணு கொடுக்கன்னு அவர் யோசிச்சது சரி தான?”

“சொந்த முயற்சியால வளர்த்துக்கிட்ட தகுதியை விட, பிறப்பு பெரிய தகுதியைக் கொடுத்திடுமா?”

“அப்பிடி யோசிக்குறவங்க ரொம்ப கம்மி சத்யா!”

“அவர் என்னைப் பத்தியும்,என் விருப்பத்தைப் பத்தியும் யோசிக்கவே இல்லையே சஞ்சயன்?”

“இதையே அவரும் சொல்லலாமில்லையா?”

“என் தம்பி… அவன் கூட என்னைப் புரிஞ்சுக்கல!, என்னை அவன் நிமிர்ந்து கூட பார்க்கல”

“சின்னப் பையன் தானே? விடு! கண்டிப்பா ஒரு நாள் உன்னைப் புரிஞ்சுப்பான்”

“அவன் என்னைப் புரிஞ்சுக்கனும் சஞ்சயன்! காதலிச்சவனைக் கல்யாணம் பண்ணி நேர்மையா வாழனும்ன்னு நான் நினைச்சதை,என் எண்ணப் போக்கை அவன் சரியா புரிஞ்சுக்கனும்! அவன் என்னை வெறுத்தா, என்னால அதைத் தாங்கிக்க முடியும்ன்னு தோணல!”

“விடு! உன் மனம் போல ஒரு நாள் உன் குடும்பமே நம்மை ஏத்துக்கும்! அமைதியா இரு! கலங்காத!” – என்று அவன் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கையிலேயே, பேருந்து நிற்கும் சத்தம் கேட்க..

இருவரையும் பார்த்தபடி பஸ்ஸில் ஏறினாள் சக்தி.

அவன் கூறியதை ஆமோதித்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டு சிரிக்க முயன்ற சத்யாவையே, நகர்ந்து கொண்டிருந்த பேருந்தின் ஜன்னல் வழி கண்டாள்.

பேருந்து நகர்ந்ததும் யோசனையுடன் செல்ஃபோனை எடுத்துத் தன் தோழி ஷர்மிளாவுக்கு அழைத்தாள்.

“ஷர்மி, நம்ம ஸ்கூல் சீனியர் சத்யாவை உனக்கு ஞாபகமிருக்கா?”

“ஆமா!, ஏன் திடீர்ன்னு அவங்களைப் பத்தி கேட்குற?”

“அவங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆமா, ஏன் அதுல உனக்குக் கஷ்டமா?,ஏன் டி ஸ்கூல்ல நீ அந்தக்காவை க்ரஷ்,க்ரஷ்ன்னு சொல்லிட்டு சுத்துனதெல்லாம் உண்மை தான் போலயே! அவங்க கூட ஒரே காலேஜ்ல படிக்கிற எனக்கே, அவங்க கல்யாண விவகாரம் இன்னைக்குத் தான் தெரிய வந்தது! சம்மந்தமேயில்லாத உனக்கு அதுக்குள்ள தகவல் எட்டியிருக்குன்னா, நீ அவங்களை தீவிரமா ஃபாலோ பண்ற-ன்னு தான அர்த்தம்?”

“ப்ச், ஏய்ய், தேவையில்லாம பேசாத”

“நாங்க எல்லாரும் அந்தக்காவோட க்ளாஸ் பசங்களை சைட் அடிச்சுட்டு சுத்துனப்போ, இந்தக்கா எவ்ளோ அழகு,நளினம்,feminine,divine-ன்னு பிணாத்திக்கிட்டு அவங்கள ஃபாலோ பண்ணிட்டிருந்த ஆளு தான டி நீ!”

“ஏன், பொண்ணுங்களுக்கு பொண்ணுங்களைப் பிடிக்கக் கூடாதா?, ‘girl crush’-ன்னு இப்ப ஒரு term வரல?, அந்த மாதிரி தான்!”

“அதுசரி! ஆனா அந்தக்கா ரொம்பப் பாவம் டி” – என்றவள் தொடர்ந்து, நேரில் சஞ்சயனும் சத்யாவும் அவளது தந்தையைக் குறித்து பேசிக் கொண்ட அத்தனையையும் சில,பல எக்ஸ்ட்ரா பிட்டுகளுடன் புட்டு,புட்டு வைக்க,

“ஹ்ம்ம்” எனக் கேட்டுக் கொண்ட சக்தி, “என்ன தான் உலகம் நவநாகரீகமாகி, பொண்ணுங்க சுதந்திரமா வளர்ந்து, சுவிட்சர்லாந்துக்கு ஃப்ளைட் ஓட்ட ஆரம்பிச்சுட்டங்கன்னாலும், இந்த பொண்ணுங்களைப் பெத்த அப்பனுங்க மட்டும் இன்னும் சிந்து சமவெளி நாகரீகத்துலயே இருக்கானுங்க பாரேன்!” என்று பொருமிய சக்தி,

“அந்தப் பையன் பார்க்க நல்லவராத் தான தெரியுறாரு! படிச்சு,நல்ல வேலையில இருக்குற மாதிரி தான் இருக்கு! இன்னும் என்ன வேணுமாம் அந்தக்காவோட அப்பனுக்கு? பொண்ணைப் பெத்தவனுங்க பூரா அம்பானிக்கு சம்பந்தியாகனும்னு பேராசைப்பட்டா எப்பிடி?,” என அங்கலாய்க்க..

“ஏய்ய் இரு,இரு! நீ எப்ப அந்தக்கா ஹஸ்பண்டை பார்த்த?” – என்ற ஷர்மியின் கேள்வியில்..

“ம்க்குக்க்கும், ஹ…ஹ..ஹலோ, ஷர்மி! ஷர்மி! கேட்கல டி! பஸ்ல இருக்கேன், வீட்டுக்குப் போய்ட்டுக் கூப்பிட்றேன்” என அவசரமாய் கால்-ஐ கட் செய்த சக்தியின் மனம், அழுகையில் கூட நளினம் தெறித்த சத்யாவின் அழகு முகத்தையும்,மென்மை தாங்கிய குரலையும் சுற்றி வந்தது!

சில வருடங்களுக்குப் பிறகு…..

“Yeah, you got that yummy-yum

That yummy-yum, that yummy-yummy” – ஹெட்செட்டுக்குள் ஜஸ்டின் பீபர் யம்மிக் கொண்டிருக்க, அந்த மெட்ரோ ரயிலில் அமர்ந்திருந்த சக்தியின் விரல்கள் பாடலுக்கேற்ப மடியிலிருந்த ஷோல்டர் பேக்-ல் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

அலை மோதும் கூட்டம் தானென்றாலும் ஏசியின் விளைவால் அனல் அண்டாது ரயில் பெட்டி சில்லிட்டிருக்க, நெற்றி வியர்வையில் ஊறிக் காய்ந்து ஒட்டிக் கிடந்த முன்னுச்சி முடியைப் பிரித்துக் காதோரம் ஒதுக்கியபடி லேசாய் அவள் இமை மூடித் திறந்த போது, ரயில் அந்த நிறுத்தத்தில் நின்றது.

கதவு திறந்த வேகத்தில் விருட்டென உள் நுழைந்த காற்று, கதவின் எதிரே நின்றிருந்த பெண்ணை சற்று அதிகமாய்த் தீண்டியதில், அப்பெண் அணிந்திருந்த சுடிதார் டாப் ‘சௌய்ங்ங்ங்…’ எனப் பின்னால் தூக்கிப் பின் மீண்டும் அதனிடத்தை வந்தடைந்தது.

காற்றின் வேகத்திற்குத் தன் முகத்தின் முன்னே ஆடிச் சென்ற அப்பெண்ணின் நீல நிற ஆடையைக் கண்டபடி அசட்டையாக அமர்ந்திருந்த சக்தியின் விழிகள், எதேச்சையாக எதிரே அமர்ந்திருந்தவனை நோக்கியது.

சொடுக்கிடும் கணத்தில் நடந்த அந்த ‘சௌய்ய்ங்ங்ங்’ காட்டிய சொர்க்கத்தை, சொகுசாய் அவன் விழிகள் அளவிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, ‘அட சல்லிப் பயலே’ என்று அவள் எண்ணும் நேரம் அடுத்த ‘சௌய்ங்ங்ங்கை’, பெரு மூச்சோடுப் பொறுமையாய் பார்வையிட்டு முடித்தவனின் கருமணிகள், இப்போது சக்தியின் விழிகளோடு நேர்கோட்டில்.

முகத்தின் முக்கால்வாசியை மாஸ்க் மறைத்திருக்கும் தைரியத்தில், விழிகளை அவன் மீது அழுந்தப் பதித்து ‘உன்னை நான் கண்டு கொண்டேன்’ என்ற செய்தியுடன் அசையாது நோக்கியவளைக் கண்டு அவனுக்குப் பதறியிருக்க வேண்டும்!

முடிந்தால் மூக்கோடு சேர்த்து கண்ணையும்,மாஸ்க்கினால் மூடிக் கொள்ளும் முனைப்புடன் கருமணிகளை இங்குமங்கும் நகர்த்தியவன்,பின் மெல்ல சட்டைக் காலரை சரி செய்து, இருக்கையிலிருந்து லேசாய் அசைந்தமர்ந்து, முன்னுச்சி முடியைக் கோதிக் கொண்டு மீண்டும் அவள் புறம் நோக்கினான்.

மடியிலிருந்த பையை இறுகப் பற்றியபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்த சக்தியின் விழிகள் நகைக்கத் தொடங்குவது கண்டு, அதிர்ந்து பின், அவமானம் தாங்காது மேலே எரிந்த விளக்கைப் பார்க்கும் சாக்கில் தலையை உயர்த்தியவன், அப்படியே பின்னால் சாய்ந்து, உறங்குவது போல் கண்களை மூடிக் கொண்டான்.

‘அட பேமானி! இந்த வீரத்தை வைச்சுக்கிட்டா டா அப்பிடி விவகாரமான வேலை பார்த்த நீயி! அப்பீட் ஆக நினைக்குறவனெல்லாம் எதுக்கு டா அறத்தை மீறி நடந்துக்கனும்?’

பாம்பாட்டி மாதிரி இருந்துக்கிட்டு, பார்க்கக் கூடாததெல்லாம் பார்க்குறான்! பன்னாட! ஆளும்,மண்டையும்! - என்று சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்த சக்தி, அடுத்த நிறுத்தத்தில் எழுந்து நிற்கையில், அவனும் உடன் எழுந்தான்.

பையைத் தோளில் மாட்டிக் கொண்டுப் புருவம் தூக்கியவளைக் கண்டுப் பதறி, அவள் விழிகளை அவசரமாய்த் தவிர்த்து விட்டு விறுவிறுவென அவளைக் கடந்து சென்று விட்டான்.

லோ சக்தி, நைஸ் டூ மீட் யூ”

-தன்னிடம் கை குலுக்கிய ‘டீம் லீட்’ சுந்தரிடம், மாஸ்க்கைக் கழட்டிப் புன்னகைத்து, “ஹலோ சுந்தர்” என்றவளுக்கு, அருகிலிருந்த இருக்கையைக் காட்டி அமரச் செய்தவன், “10மினிட்ஸ்! ஸ்டாண்ட் அப் கால் போயிட்டிருக்கு. முடிச்சுட்டு வரேன்” என்று அவசரமாகக் கூற, சரி,சரியெனத் தலையாட்டி அவனருகே அமர்ந்தாள்.

அந்தத் தளத்தின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்த டீம் மக்களனைவரும், தங்களது டெஸ்க் ஃபோனிலிருந்தே கான்ஃபரன்ஸ் காலில் கனெக்ட் ஆகியிருந்ததால், அருகிலிருந்தவர்களின் பேச்சுக் குரல்களை விட, ஃபோனிலிருந்தவர்களின் சத்தமே அதிகம் ஒலித்தது.

கார்னர் டெஸ்க்கிலிருந்த சுந்தருக்குப் பின்னே, நேர் எதிரில் டெலிஃபோனுக்குள்ளேயே நுழைந்து விடுபவர்களைப் போன்று, ஒட்டிப் போட்ட இருக்கையில் அமர்ந்திருந்த இருவரில் அலெக்ஸ் என்பவன், “ப்ச்” என்றபடித் தலையைக் கோதிக் கொண்டு “இந்தாளுக்கு வேற வேலையில்ல” என ஃபோனில் ஒலித்த குரலைத் திட்டியபடியே முன்னே திரும்பினான்.

தற்செயலாக சுந்தரின் டெஸ்க்கை நோக்கியவன், அவனருகே அமர்ந்திருந்த பெண்ணைக் கண்ணுற்று, நண்பனின் தோளைத் தட்டி,

“டேய் சசி, சசி டேய்ய்.. டேய் யார்றா இந்தப் பொண்ணு?” எனக் கேட்டதும்,

“யாரு?” என்றபடி ஃபோனிலிருந்து தலையைத் திருப்பிய சசி, சுந்தரிடம் உரையாடலில் ஈடுபட்டிருந்த சக்தியைக் கண்டு ஒரு நிமிடம் ஜெர்க் ஆகிப் பின், அவள் புறம் பார்த்தபடி முழுதாய்த் திரும்பி அமர்ந்து,

“நியூ ஜாயினியா டா அலெக்ஸூ?” – எனக் கேட்டான்.

“அப்பிடித் தான் போல டா” – அலெக்ஸ்.

“நம்ம டீம்-ஆ?”

“இருக்கலாம்! Fresher-ஓ?”

“எப்பிடி சொல்ற?”

“பார்க்க சின்னப் புள்ள மாதிரி இருக்கே டா”

“ஆனா, பல்க்-ஆ இருக்கே டா” – சசி.

நண்பனை அலெக்ஸ் திரும்பி முறைத்ததும், தாடையை இறக்கி ஒரு வழிசல் பார்வையுடன் சசி பல்லைக் காட்டப் பின், இருவரும் கோரசாக,

“திம்ஸூ கட்ட, ஐ,ஐ திம்ஸூ கட்ட, ஐ,ஐ திம்ஸூ கட்ட,ஐஐ..திம்ஸ்” – எனப் பாடிக் கொண்டிருக்கையிலேயே,

“போதும் லெங்க்த்-ஆ போகுது” – என அலெக்ஸ் முற்றுப்புள்ளி வைத்ததும் பாட்டை நிறுத்தி, மீண்டும் அவள் புறம் பார்த்தமர்ந்தான் சசி.

“சுந்தர் சுறுசுறுப்பா பேசுறதைப் பார்த்தா பொண்ணு நம்ம டீம் தான் போல டா சசி”

“இருக்கட்டும் டா! இந்த ஆன்ட்டிகளுக்கு மத்தில பொழப்பை நடத்தி, எங்க ஆண்டியா போயிருவேனோன்னு பயந்திட்டிருந்தேன்! இந்தா வச்சுக்கோ-ன்னு விதி ஒரு ‘விந்தியா’-வை அனுப்பியிருக்கு பாரேன்”

“விந்தியாவா?, நீர் 90ஸ் கிட் என்பதை நொடிக்கொரு தரம் நிரூபிக்கிறீர் சசி!”

நண்பனின் புகழ்ச்சியில் காலரை உயர்த்தி பெருமிதப் புன்னகையொன்றை அவன் செலுத்திய போது,

சுந்தர் எழுந்துத் தன் லேப்டாப்பை கை காட்டி, “நான் சொன்ன மாதிரி மெய்ல் மட்டும் பண்ணிடுங்க! அடுத்து நான் பார்த்துக்கிறேன்” எனக் கூறி வாயிலை நோக்கிச் சென்று விட, பட்டென எழுந்த அலெக்ஸூம்,சசியும், சக்திக்குப் பின்னே அமர்ந்திருந்த ரவியிடம் விரைந்தனர்.

“என்னாய்யா வேம்பட்டி, டப்பா பெருசா இருக்கு! என்னா லஞ்ச் இன்னிக்கு?” – சக்தி மீது ஒரு கண்ணை வைத்து, டெஸ்க்கிலிருந்த லஞ்ச் கூடையை பார்வையிட்டு, ரவியின் தோளில் கை போட்டபடி சசி.

“வேற என்ன!, பப்பு பூவாவும்,ஆவக்காய் ஊறுகாயுமா இருக்கும்! என்னா டா?” – அலெக்ஸ்.

“எந்துக்கு ரா இப்புடு லஞ்ச் குறிஞ்ச்சி மாட்லாடுத்துன்னாவ்?, இங்க்க டைம் உந்திகா?”

“பின்ன, இரானி சாய் உங்கிட்ட இலியானாவைப் பத்தியா பேச முடியும்?”-சசி

“ஐ மிஸ் இரானி ச்சாய் ரா சசி”

“ஆமா, கிடைச்சா மட்டும், அப்பிடியே காசு கொடுத்து வாங்கிக் குடிச்சுக் கிழிச்சிருவ” – சசி

“போன வாரம் சிவா ரிலீவ் ஆகி போறப்ப, ட்ரீட் கொடுக்குறேன். குடும்பத்தோட ஈசீஆர் வாங்கன்னு கூப்பிட்டதுக்கு, ட்ராவல் அலவன்ஸ் உண்டா-ன்னு கேட்ருக்கான் டா இந்த சார்மினார்.” - அலெக்ஸ்

“ஏன் டா உங்க ஊர்க்காரனுங்க பூரா பார்சிலோனால வீடு வாங்கப் போற மாதிரி என்னத்துக்கு டா அப்பிடிப் பார்த்து பார்த்து காசு சேர்க்குறீங்க?, ஆனா, அண்டார்டிகா போனா கூட அங்க ஒரு ஆந்திராக்காரன் இருப்பான் போல டா அலெக்ஸூ! இவிங்க என்னைய ரொம்ப டிஸ்டர்ப் பண்றாய்ங்க டா!”

“ரேய்!, அர்த்தங்காலேது ரா, ஏன்ட்டிரா மாட்லாடுத்துன்னாவ்?” – ரவி.

“ம்ம்ம், மகேஷ்பாபுக்கு மச்சினிச்சி இருக்கான்னு மாண்டரின்ல டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தோம்” – சசி.

“********” – ரவி மானக்கேடாகத் திட்டியதும், தோளைக் குலுக்கி விட்டு நகர்ந்தனர் இருவரும்,

“கெட்ட வார்த்தை போல டா சசி” – அலெக்ஸ்.

“தெலுகுல எனக்குத் தெரிஞ்ச ஒரே கெட்ட வார்த்தை ‘தொங்கனா கொடுக்கா’ தான் டா மாப்ள” – சசி.

“அப்டின்னா?”

“உங்கொப்பன் மவனேன்னு அர்த்தம் போல டா”

-இஷ்டத்துக்கு உளறிச் சென்ற இருவரது பேச்சையும் கேட்டு சிரிப்பை அடக்கி அமர்ந்திருந்த சக்தி, “முடிஞ்சதா?” எனக் கேட்ட சுந்தரிடம், “யெஸ்,யெஸ் தேங்க்ஸ்” என்றபடி எழுந்து நின்றாள்.

“டேய்! சசி,சசி! நோட் பண்ணியா?” – இருக்கையில் வந்தமர்ந்ததும் அவசரமாய் சசியின் அருகே அலெக்ஸ்.

“ம்ம்,பார்த்தேன் பார்த்தேன்!”

“ஸ்வீட் நேம் என்னவாம்?”

“Thanks&Regards, Sakthi S”

“சக்தி???? வாவ்வ்!! டேய் சசி! போன வாரம் தான் டா டாக்டரு, எனக்கு ஊட்டசக்தி கம்மியா இருக்குன்னு கம்ப்ளைண்ட்-ஆ சொன்னாரு”

“அது எதிர்ப்பு சக்தி டா மாங்கா”

“ஏதோ ஒன்னு! மைலேஜ் ஏத்த ஒரு மயில் வந்தாச்சு” – அலெக்ஸ்.

“மயிலா, மாரியாத்தாவா-ன்னு போக போகத் தெரிஞ்சுடும்”

“ப்ச், டேய் சசி!, டிஸ்கரேஜிங்-ஆ பேசுற டா நீயி!” – என்றபடி முகத்தைச் சுருக்கிய அலெக்ஸின் தோளைத் தட்டி,

“விட்றா அலெக்ஸூ! மயிலா இருந்தா, ‘மல்லிக மொட்டு, மனசைத் தொட்டுன்னு பாடுவோம்! மாரியாத்தாவா இருந்தா ‘மரிக்கொழுந்தே,என் மல்லிகப் பூவேன்னு தண்ணியைத் தெளிச்சு விட்ருவோம், நமக்கு இதெல்லாம் புதுசா என்னா” – என்கையில், சக்தி,ரவியிடம் நின்று உரையாட்டி விட்டு சுந்தரிடம் ‘பை’ சொல்லி நகர்வது தெரிய,

“டேய் அலெக்ஸூ, அந்தப் பொண்ணு போகுது டா” – என்றான் சசி.

“வா வா, நாமளும் கூடப் போவோம்” – என்ற அலெக்ஸ் பரபரத்ததும், இருவரும் எழுந்து அவள் பின்னே தொடர்ந்தனர்.

பட்டனை அழுத்தி லிஃப்ட்டில் ஏறியவள் நிமிர்கையில், இருவரும் உள்ளே நுழைய, சசியைக் கண்டு கொண்ட சக்தி, ஒரு நொடி புருவம் சுருக்கிப் பின் நமுட்டு சிரிப்புடன் ஓரமாய் நின்றாள்.

ஒன்பதாம் தளத்திலிருந்து கீழ் நகர்ந்து கொண்டிருந்த லிஃப்ட்டில் இவர்கள் மூவரைத் தவிர எவருமில்லை.

“டேய் சசி, முடி கொஞ்சம் நீளமா இருந்திருக்கலாம் டா” – சக்தியின் முதுகின் பின்னே சலசலத்தபடி அலெக்ஸ்.

“வாயை மூட்றா கொரங்கு”

“நாம பேசுறதெல்லாம் அதுக்குப் புரியாது டா சசி”

“ஏன் அப்பிடி சொல்ற?”

“ப்ச்! மயிலு ‘மணவாடு’ ரா!”

“அய்யய்ய!” – அஷ்டகோணலாய் முகத்தை சுழித்தான் சசி.

“ரவி கூட தெலுங்குல திக்காம பேசுச்சு! நான் கேட்டேன்”

“ஆந்திராவா?”

“தெலங்கானாவா கூட இருக்கலாம்”

“ப்ச்,வாய் கொஞ்சம் சப்பையா இருக்கும் போதே நினைச்சேன்!” எனப் பிடரியைக் கோதிய சசி,” அப்ப ரிஜெக்ட் பண்றோமா டா அலெக்ஸூ?” எனக் கேட்டான்.

“நீ என்ன நினைக்குற?”

“ஹ்ம்ம்ம்ம்”-என நாடியைத் தட்டி யோசித்த சசி, “அலெக்ஸூ, அக்கட தேசத்தை நீ ‘துக்கடா’-வா எடை போட்றது ரொம்பத் தப்பு டா! நீ ஒரு இண்டியன் சிட்டிசனா யோசிக்க மாட்டேங்குற!”

“யாரு நானு?”

“பாரதியார் கூட, சுந்தரத் தெலுங்குன்னு சொல்லியிருக்காரு டா!”

-இவர்களது பேச்சுத் தன் காதை எட்டிய போதும் ‘இவனுங்க என்ன எப்பவும், சம்பந்தமே இல்லாம என்னன்னவோ பேசுறானுங்க’ என்று குழம்பியபடி நின்றிருந்த சக்திக்கு, அவர்களது சம்பாஷணைத் தன்னைப் பற்றித் தான் என்பதே புரியவில்லை.

“அப்டின்னா, மயிலை வைச்சு மஜா பண்ணத் தான் போறோமா?”

“யெஸ்!” என்று கண்ணை மூடித் திறந்த சசி ‘ஐயாரெட்டு நாட்டுக் கட்டை’ எனப் பாட, நிமிர்ந்து கதவில் தெரிந்த சசியை நோக்கினாள் சக்தி.

அவள் தன்னைக் கண்டதும், தன்னிச்சையாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டாலும், “கட்டான பொண்ணு ரொமாண்டிக்-ஆ கண்ணால சிக்னல் காட்டிட்டா” – எனத் தொடர்ந்து சிறிது சத்தமாகவே அவன் பாட,

“தம்பி சத்தத்தைக் குறை-ப்பா! அந்தப் பொண்ணு கவனிக்குது” – அலர்ட் செய்தபடி அலெக்ஸ்.

“கவனிச்சாலும் புரியாதுல டா?, குருவி குண்ட்டூர் மிளகா-ன்னு நீ தான சொன்ன?”

“அதுக்குன்னு?” – என்ற அலெக்ஸூ, பம்மியபடி அவளைப் பார்க்க, இருவரது ரியாக்ஷனையும் வைத்து, அவர்கள் தன்னைப் பற்றித் தான் கதைக்கிறார்கள் எனப் புரிந்துப் பல்லைக் கடித்தாள் சக்தி.

கண்ணால கங்கைக் கக்கியும் கம்னாட்டி, ‘அடங்க மாட்றானே இவன்’ – எனப் பொறுமியவளை, மேலும் சூடாக்கும் பொருட்டு சசி,

“டேய், மாஸ்க்கைக் கழட்டுனப்ப அது மூக்கைப் பார்த்தியா?, வலது பக்கம் மூக்குத்தி, அதுவும் ரெட்-டூ கலரு! இது கண்டிப்பா ராயலசீமா ரெட்டியா தான் இருக்கும்!” என்று கூற,

“ரெட்-டு கலரு மூக்குத்தி போட்டா ரெட்டியா?, என்னாடா லாஜிக் இது” என அலெக்ஸ் தலையைச் சொரிவதைக் கண்டு, கடுப்பின் உச்சத்திற்கே சென்று விட்ட சக்தி, விருட்டெனத் தன் ஃபோனை பையிலிருந்து உருவி அன்லாக் செய்யாமலே காதில் வைத்தாள்.

“அம்மா நான் தான்!” – சத்தமாக அவள் பேசத் தொடங்கியதும், படபடத்துப் போன இருவரும் முகத்தை எந்தப் பக்கம் திருப்புவதெனத் தெரியாது, அலைபாய்ந்து, ஒருவரையொருவர் இடித்துப் பதறிப் பின், சசி விழித்தபடியும், அலெக்ஸ் லிஃப்ட்டில் முகத்தை புதைத்தபடியும் நிற்க,

அவர்களை விடாது கண்களால் எரித்தவாறு “எம்மா, இன்னிக்குக் காலையில வெள்ளரி வெட்ட யூஸ் பண்ணுன வீச்சறுவாளை, நல்ல்ல்ல்லாஆஆ பட்டை தீட்டி வை! இங்க ரெண்டு விளக்கெண்ணெய்ங்க வாயை வெட்ட வேண்டியிருக்கு!” – பல்லைக் கடித்தபடி அடிக்குரலில் அலற விட்டவளைக் கண்டு, கலங்கிப் போன இருவரும், செய்வதறியாது திகைக்கையில், லிஃப்ட் நின்றது.

மாஸ்க்கைத் தாண்டி மூச்சை வெளியிட்டவாறு, பையைப் பிடித்தபடி அவள் மாங்கு,மாங்கென நடந்து செல்வதைக் கண்ட அலெக்ஸ் “ஷ்ஷ்ஷ் அப்பா” என நெஞ்சைப் பற்றினான்.

“என்னா டா அலெக்ஸூ இப்பிடிப் பண்ணிட்ட?” – மறுக்கா,மறுக்கா அவமானப்பட்டதில், மங்கிப் போன முகத்துடன் சசி.

“என்னாது?, ஏன் டா டேய், நான் மட்டுமா டா பண்ணேன்?, சும்மா, பராக்கு பார்த்துக்கிட்டு நின்னுட்டிருந்த புள்ளையை, பாட்டு பாடி பரமசிவன் ரேஞ்சுக்கு ஆட வைச்சது நீ தான டா பரதேசி”

“ப்ச், அது இல்லடா!, ஒரு ‘ராக்காயி’-யைப் போய் ‘பொம்மாயி’-ன்னு ராங் இன்ஃபர்மேஷன் கொடுத்திட்டியே டா”

“டேய் சசி, சாமி சத்தியமா… அந்தப் பொண்ணு சரளமா தெலுகு பேசுனதை என் ரெண்டு கண்ணால பார்த்தேன் டா”

“சரி வுடு! வுடு! அழுவாத”

“இப்ப என்னா டா சசி பண்றது?”

“வழக்கம் போல பம்மிருவோம்” – என வளவளத்தபடியே இருவரும் ஒரு ‘ஷார்ட் ப்ரேக்’-ஐ எடுத்து விட்டு டெஸ்க்கை நோக்கி நடந்தனர்.

அன்று மதியம் மீட்டிங்கில் சுந்தர், சக்தியையும்,அவளருகே நின்றிருந்த பவித்ராவையும், ‘நியூ ஜாய்னிஸ்’ எனக் கூறித் தங்கள் குழுவிற்கு அறிமுகப் படுத்தினார்.

அனைவரிடமும் ஒரு அறிமுகப் புன்னகையை உதிர்த்த சக்தி, சசியை முறைத்துப் பார்க்க,

“சசி, மாரியாத்தா இன்னும் மலை இறங்கல போல டா” – சசியின் புறம் சாய்ந்து முணுமுணுத்தான் அலெக்ஸ்.

“பரவாயில்ல!, அப்டியே மேகத்துல ஏறி மார்ஸூக்கு போயிரட்டும்! நீ வாயை மூட்றா”

“டேய்ய் சசி??”

“அலெக்ஸூ, இது சங்காத்தமே நமக்கு வேணாம்!, முறைக்குற முசுடுங்களையெல்லாம், முளையிலேயே கிள்ளி எறிஞ்சு விட்றனும்டா”

“எறிஞ்சுட்டு?”

“நமக்கு இருக்கவே இருக்கு பவித்ரா!, இந்த ரெட்-டூ மூக்குத்தி எந்துக்குரா?”

“அப்டிங்குறியா?”

“ஆமாங்குறேன்” – என்ற சசியிடம்,

“ஹே சசி, INC0000075 உன் பக்கெட்ல தான இருக்கு?,கரண்ட் ஸ்டேட்டஸ் கேட்குறாங்க பாரு” – என்று சுந்தர் கூறியதும், வேலை தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கியது.

மீட்டிங் முடிந்ததும், தங்களது லேப்டாப்களைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொருவராக அந்த அறையிலிருந்து வெளியேறத் துவங்க, சுந்தர், சுஷ்மாவிடம்,

“சுஷ், நியூ ஜாய்னிஸ்க்கு KT (Knowledge Transfer) ஸ்டார்ட் பண்ணனும். எந்தெந்த டாபிக்ஸ் யார் எடுக்குறாங்கன்னு எனக்கு லிஸ்ட் அனுப்புங்க! நான் ஆன்-சைட்டுக்கு ஸ்டேட்டஸ் அப்டேட் பன்ணனும்” எனக் கூறி விடைபெற்றதும், அவரருகே வந்த சசி,

“சுஷ் மம்மி!, KT எல்லாம் கிழடு,கட்டைங்க எடுக்கிறது! எனக்கு வாலிப வயசுன்னு உங்களுக்கு நன்னாத் தெரியுமோல்லியோ?, அதனால, எனக்கு எந்த டாபிக்கும் வரப் படாது.சரியா???” – என்றதும், சிரித்த சுஷ்,

“டேய் சசி! ஸ்டார் பெர்ஃபார்மர்ன்னு அவார்டு வாங்கிட்டு, நீ கொடுக்குற சலம்பல், அளவில்லாம போயிட்டிருக்கு டா” – என்றாள்.

“ப்ச்!,நெக்ஸ் மந்தல இருந்து DB migration ஸ்டார்ட் ஆகுது! நான் பிஸி ஆயிடுவேன்! என் வர்க் லோட் தெரிஞ்சும் என்னை கமிட் பண்ணாதீங்க மம்மி!, இதுக்கெல்லாம் எனக்கு நேரமில்ல”

“அடேங்கப்பா!” – இடையில் புகுந்து அலெக்ஸ்.

“இந்த அனகொண்டா தலையனுக்கு அஞ்சு டாபிக் கொடுங்க! அப்ப தான் இவன் அடங்குவான்”

“அந்த migration-ல நானும் தான் தம்பி இருக்கேன்! ஆனா, நாங்க பிஸின்னு லாம் உன்னை மாதிரி பீத்திக்கிறதில்ல”

“ப்ச், சுஷ்ஷூ மம்மி!, க்ளாஸ் எடுக்குறதுக்கு இவங்க என்ன சின்னப் பசங்களா?, வீடியோஸ்,டாகுமெண்ட்ஸ் எல்லாம் குடுத்து பார்க்க சொல்லுங்க! டவுட் இருந்தா க்ளியர் பண்ணி வைப்போம்!” – எனக் கூறியபடியே திரும்பியவன் பவித்ராவிடம்,

“சரி தானங்க?, டாகுமெண்ட்ஸை ஈஸியா ஃபாலோ பண்ணிடுவீங்க தான?” எனக் கேட்க,

“பண்ணிடுவோம் அண்ணா” – என்றாள் அவள்.

“அண்ணாவா?” – அதிர்ந்தபடி அலெக்ஸ்.

“அ…அது.. சு..சும்மா ஒரு ஃப்ளோல…” – பவித்ரா தயங்கியதும்,

கிழிந்த நெஞ்சை நீவி விட்ட படி, “பரவாயில்ல தங்கச்சி” என்றான் சசி.

“டேய்ய்ய் சசி….” -எனக் கம்மிய குரலில் அழைத்து, சசியின் முகத்தைப் பாவமாய் பார்த்த அலெக்ஸின் தோளைத் தட்டியவன்,

“நாம குடுத்து வைச்சது அவ்ளோ தான் டா அலெக்ஸூ” – என்று முணுமுணுத்தான்.

இவர்களிருவரையும் கண்டு கொள்ளாது சுஷ், சக்தியிடம்,

“சக்தி ரொம்ப அமைதியோ?, பேசவே மாட்டேங்குறீங்க” எனக் கேட்டார்.

“இல்ல, அப்பிடியெல்லாம் இல்ல! நான்.. வந்து…. அப்சர்வ் பண்ணிட்டிருந்தேன்!” – என்ற சக்தியின் முகத்தைப் பொறுப்பாய்த் தவிர்த்து, “அப்சர்வ் பண்றதுக்கு இங்க என்ன ஆபரேஷனா பண்றோம்?” என்று அலெக்ஸிடம் முணுமுணுத்தான் சசி.

“சரி, டாபிக்ஸ் மட்டுமாவது சொல்லிட்டுப் போங்க! யார் எடுக்குறாங்குறதை அப்புறம் பார்ப்போம்” என்று சுஷ் கேட்டதும், இருவரும் அவருடன் மூழ்கிப் போக,

விளையாட்டுத்தனமாய்த் தெரிந்தாலும், வேலையில் இருவரும் கில்லியாயிருப்பதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சக்தி.

ன்று மாலை அதே மெட்ரோ ரயில் நிலையம்.

“டேய் சசி, டின்னருக்கு பூண்டுச் சட்னி அரைக்கவா?, வெங்காயச் சட்னி அரைக்கவா?” – என ஃபோனில் கேட்ட அன்னையிடம்,

“முந்தா நாள் ரெண்டையும் சேர்த்து அரைச்சு ஒரு சட்னி வைச்சிருந்தியே! அதுக்கென்ன பேரு?, ஆனா, உங்களுக்கு சமையல்ல வெரைட்டி காட்ட வரலையேம்மா விசாலாட்சி”எனக் கலாய்த்துக் கொண்டே நடந்து வந்த சசி,

ரயிலுக்காகக் காத்திருந்தபடி, செல்ஃபோனில் முகத்தைக் கவிழ்த்தியிருந்த சக்தியைக் கண்டு ‘ம்க்கும்!, மோகினி மோளத்தோட நிற்குதே’ – என்றெண்ணியபடி,

“எதையாவது அரை-ம்மா! இப்ப ஃபோனை வை” எனக் கூறி கால்-ஐ கட் செய்து விட்டு, அவளை விட்டுப் பத்து,பதினைந்தடி தள்ளி நின்றான்.

அவன் குரல் கேட்டு நிமிர்ந்த சக்தியும், இவனா என்றெண்ணிக் கொண்டு கடுப்புடன் குனிந்து விட, மறந்தும் அவள் புறம் திரும்பாது அட்டென்ஷனில் நின்றான் சசி.

அடுத்த இரண்டு நிமிடத்தில் ரயில் வந்து விட,

‘இவ ஏறுற ரயில்ல நாம ஏறக் கூடாது டா சசி! கண்டமேனிக்கு அவமானப்படுத்துனவ, கால்தடம் பதியுற இந்த ரயில் நமக்கு வேணாம்! அடுத்த ரயில்ல ஏறிக்குவோம்’ – என சசியும்,

‘பாடைல போனாலும் போவேனே தவிர, இந்தப் பாம்பாட்டி பாதம் பதிக்குற ரயில்ல நான் ஏறவே மாட்டேன்!, நாம அடுத்த ரயில்ல ஏறிக்கலாம்’ – என சக்தியும், அந்த ரயிலில் ஏறுவதை ஒரு சேரப் புறக்கணித்தனர்.

ரயில் சென்றதும் பெருமூச்சு விட்ட சசி, மொபைலில் கவிழ்ந்திருந்தத் தலையை நிமிர்த்தி, அவள் புறம் நோக்குகையில், அவளும் தன்னை அதிர்வுடன் நோக்கிப் பின் முறைப்பதைக் கண்டு பதறி, சட்டெனத் திரும்பிப் பிடரியைக் கோதியபடி மெல்ல நடை போட்டான்.

‘unnecessary-ஆ இவ கூடப் போய் sync ஆக நினைக்குதே என் wavelength! துயரம் டா யப்பாஆ! – என்று முணுமுணுத்து, பின்னே திரும்பி அவளை நோட்டம் விட்டபடியே, அவள் கண் காணாத தூரம் கிட்டத்தட்ட ஓடிச் சென்று விட்டான்.

‘முறைச்சுப் பார்த்தாலே, மந்தவெளில இருந்து மத்தியப் பிரதேசம் வரை ஓடிருவான் போல! இவனெல்லாம் என்ன டிசைனு!’ – என்றெண்ணிய சக்தி சிரிப்பை அடக்கிக் கொண்டு அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்தாள்.

துணுக்.. துணுக்.. துணுக்ஸ்ஸ்ஸ்ஸ்..

டை மழையுமல்லாது.. சிறு தூறலுமல்லாது.. மிதமான வேகத்தில் சீராகப் பெய்த மழைத்துளிகளுக்கிடையே மிதந்தபடி, அந்த நெடுஞ்சாலையைக் கடக்க முயன்று கொண்டிருந்தவளது, இடக்கை முழுதும் டியூலிப் மலர்கள் கொத்தாய்ப் பூத்திருந்தது.

விர்ரென விர்ரென காற்றோடு போட்டி போட்டுக் கொண்டு, அதிவேகத்தில் கடந்து சென்ற வாகனங்கள், சாலையைக் கடக்க விடாது அவளைத் தேங்கச் செய்ய, முன்னே அடி எடுத்து வைப்பதும், பின்னே நகர்வதுமாய் கடுப்புடன் கபடி ஆடிக் கொண்டிருந்தவள், ஒரு வழியாய் கிடைத்த இடைவெளியில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடியதில், கையிலிருந்து சில மலர்கள் தவறிக் கீழே விழுந்தன.

ஒரே ஓட்டமாக ஓடி வந்து எதிரிலிருந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்றவள், கீழே விழுந்த மலர்களைக் கண்டு உச்சு கொட்டி எரிச்சலும்,ஆதங்கமுமாய் ‘ஐயோ! காஸ்ட்லியான பூவாச்சே! இப்போ என்ன பண்றது, போய் எடுத்துட்டு வந்துடலாமா!,அதுக்குள்ள எவனும் நசுக்கிடக் கூடாதே’ என்று புலம்பியபடி, மலர்களில் ஒரு கண்ணும், வரும் வாகனங்களில் ஒரு கண்ணுமாய் பரபரத்துக் கொண்டிருந்த போது, டூவீலர் ஒன்று அம்மலர்களை உரசுவது போல் அருகே வந்து நின்றது.

‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்’ எனப் பல்லைக் கடித்து எரிச்சலுடன் ஒரு நொடி கண்களை மூடித் திறந்தவள் கண்டது, ஹெல்மெட் அணிந்திருந்த அந்த டூவீலர்க்காரன், தன் வண்டியிலிருந்தபடியே குனிந்து கீழே கிடந்த மலர்களைக் கையிலெடுத்தபடி அவள் புறம் நோக்குவதைத் தான்.

அவள் திகைப்பும்,மகிழ்ச்சியுமாய் ஆர்வம் பொங்க அவனை பார்த்துக் கொண்டிருக்கையில், மலர்களோடு வண்டியை நகர்த்தியவன், யுடர்ன் எடுத்து இவள் புறம் வந்து நின்று, மழையில் குளித்திருந்த மலர்களை அவள் புறம் நீட்டினான்.

இதழ் விரிந்த சிரிப்பும்,விழி முழுக்க நன்றியுமாய் அவன் நீட்டியதை, அவள் வாங்கிக் கொண்டதும், அவன் நகர்ந்து விட, அவசரமாய்… “ஹே…” என்றழைத்து நிறுத்தினாள்.

திரும்பி அவளை என்னவெனப் பார்த்த அவன் விழிகளிடம், ஒரு பூவை நீட்டி, “தேங்க்ஸ்”- எனக் கூற, வியப்பில் உயர்த்தியப் புருவங்களுடன் அவளை நோக்கிய அவன் கண்கள், பின் ஒரு மெல்லிய நகைப்புடன் அவள் நீட்டியதை வாங்கிக் கொண்டு பறந்தது.