அத்தியாயம் - 2
“சசி கிட்டயா?”
புலர்ந்தும்,புலர்ந்திராத அந்த அதிகாலை வேளையில் டெஸ்க் ஃபோனைக் காதில் வைத்தபடி அலுவலகத்தில் கிட்டத்தட்டக் கதி கலங்கிப் போய் அமர்ந்திருந்த சக்தி, லைனில் இருந்த சுந்தரிடம் இரண்டாவது முறையாக உள்ளே போன குரலில் வினவினாள்.
“யெஸ் சக்தி! இது Known issue தான். நீங்க சசிக்கு கால் பண்ணிக் கேட்டு சீக்கிரம் ஃபிக்ஸ் பண்ணுங்க and thanks for finding out. நீங்க கண்டுபிடிக்கலன்னா இது ப்ரொடக்ஷன்ல பெரிய இஷ்யூ ஆயிருக்கும்”
-சுந்தரின் பாராட்டை ‘ச்சூ’ என விரட்டி விட்டு “ஓகே! ஐ வில் கால் சசி” – எனக் கூறி கால்-ஐ கட் செய்த சக்தி,
லேப்டாப்பில் சசிதரன் பழனிவேல் – என்ற பெயருக்கெதிரே தெரிந்த அவனது கைபேசி எண்ணை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
பின் கைகள் தன் போக்கில் அவனது எண்ணை டயல் செய்ய, கண்ணை மூடிப் பெருமூச்சை வெளியிட்டு, மறுபுறம் அவன் கூறப் போகும் ‘ஹலோ’-விற்காகக் காத்திருந்தாள்.
“ஹலோ” – இயல்பிலேயே கரகரத்தக் குரலைப் பெற்றிருப்பவன் தூக்கக் கலக்கத்தில் மேலும் கரகரத்தான்.
“ஹ..ஹலோ, நான்.. சக்தி பேசுறேன்” – புருவங்கள் உயர, சுருங்கிய கண்களும், கடித்த உதடுகளுமாய் ‘இவன் கிட்டலாம் பேச வேண்டியிருக்கே’ என்ற பாவனையுடன் அவள் குரல் தயங்கி வெளி வந்ததும்,
“சக்திஇஇஇஇ??” – என இழுத்தவனிடம்,
“சக்தி சென்னியப்பன். உங்க டீம் மேட். நியூ ஜாயினி” – என அவள் அவசரமாய்க் கூற ஒரு நொடி மௌனமானவன், பின் தொண்டையைச் செருமிக் கொண்டு,
“சொ..சொல்லுங்க” என்றான், குரலில் டீசன்சியைக் கொண்டு வர முயன்றபடி.
“வ..வந்து.. சாரி.. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” – சம்பிரதாயமாக அவள்.
“இல்ல,பரவாயில்ல! சொல்லுங்க. என்னாச்சு?” – சாம்பிராணி அடித்தது போல் அவன்.
“அ..து.. ப்ரொடக்ஷன்ல ஒரு இஷ்யூ. அதான் சுந்தர் உங்களுக்குக் கால் பண்ண சொன்னாரு” – என்று அவள் பிரச்சனையை விளக்கியதும்,
“ஓகே, sharepoint-ல போய் ***** டாகுமெண்ட் ஓபன் பண்ணுங்க. அதுல ஸ்டெப் பை ஸ்டெப் சொல்யூஷன் இருக்கும். அதை அப்பிடியே ஃபாலோ பண்ணுங்க!” – என்றான்.
“ஓ! ஓகே! தேங்க்யூ”
“இட்ஸ் ஓகே-ங்க!, வைக்கட்டுமா?”
“இல்ல,இல்ல வெய்ட் பண்ணுங்க! வ..வந்து.. நான் சொல்யூஷன் அப்ளை பண்ற வரைக்கும் நீங்க லைன்ல இருக்க முடியுமா?, ஃபர்ஸ்ட் டைம் பண்றேன். அதான்”
“மார்னிங் ஷிஃப்ட்-ஆ நீங்க?”
“ஆமா”
“அப்டின்னா உங்காளு ரவி இருப்பானே கூட!, அவனும் இந்த வீக் மார்னிங் ஷிஃப்ட் தான்”
“என் ஆளா?” – அவள் குரல் முறைப்பாய் மாறியதும் மறுபுறம், ‘ஷ்ஷ்ஷ்’ என நெற்றியைத் தேய்த்துக் கொண்டு அவன்,
“இல்லங்க, அப்பப்ப ரெண்டு பேரும் ‘மாட்லாடிக்குவீங்களா’. அதான் நீங்களும் அக்கட தேசத்து ஆளோன்னுஊஊஊ”
“எனக்கு தெலுங்கு பேசுற ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அவங்களால தெலுங்கு பேசக் கத்துக்கிட்டேன்! மத்தபடி நான் பச்சைத் தமிழச்சி! போதுமா?”
“புரிஞ்சதுங்க”
“இன்னொரு தடவை அவனை என் ஆளு,கீளுன்னுலாம் சொல்லாதீங்க! பார்க்க அன்ட்ராயர் போட்ற அரைவேக்காடு மாறி இருக்கான்! அவன் என் ஆளா?” – என்று அவள் பாய்ந்ததும் பம்மியவன்,
“இஷ்யூ என்ன ஸ்டேட்ல இருக்குன்னு சொல்றீங்களா?” – எனப் பேச்சை மாற்ற, அவளும் பணி குறித்து பேசத் துவங்கினாள்.
அந்த டாகுமெண்ட்டிலிருந்த ஒவ்வொரு ஸ்டெப்பையும் ஏன்,எதற்காக செய்கிறோம் என்பதைப் பொறுமையாக எடுத்துரைத்து, அவன் அவளை கைட் செய்ததும், வெற்றிகரமாக சொல்யூஷனை இம்ப்ளிமெண்ட் செய்து முடித்தாள் அவள்.
“இப்ப வர்க் ஆகும். செக் பண்ணிப் பாருங்க” - சசி
“ம்ம், லோட் ஆயிட்டிருக்கு”
“KT-ல இதெல்லாம் சொல்லிக் கொடுக்கலீங்களா?”
“சொன்னாங்க! எனக்கு தான் பயத்துல எல்லாம் மறந்துடுச்சு”
“என்ன பயம்?, பயப்பட-லாம் எதுவுமில்ல! கத்துக்கிட்டா.. கொஞ்ச நாள்ல எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க!”
“ஹ்ம்ம்” – பொறுமையாய்,பதமாய் பேசுகையில் அவனது கரகர குரல், கண்ணியம் தாங்கி வருவதை உணர்ந்து புன்னகைக்க முயன்றபடி அவள்.
“பேஜ் ஓபன் ஆயிடுச்சா?” - சசி
“ஸ்டில் லோடிங்..”
“ம்ம்ம்ம்” – என்றவன் ஊஃப்ஃப்ஃப்ஃப் என மூச்சு விட…
ரிசீவரின் வழி அவன் மூச்சுக் காற்று வெளி வந்து காதருகே இருந்த முடிகளைக் கலைத்துச் செல்லும் உணர்வு அவளுக்கு. புருவம் சுருக்கி ரிசீவரை முறைத்து விட்டு மீண்டும் காதில் வைத்தாள்.
“எந்திரிச்சுட்டியா டா சசி, டீ கொண்டு வரவா?” –பின்னால் சசியின் தாயினது குரல் கேட்டு,
“வர்க் ஆகலேன்னா, திரும்ப கூப்பிடுறேன்! இப்ப வைக்கட்டுமா?” – என்று சக்தி அவசரமாகக் கூற,
“இல்ல” எனத் தொடங்கியவன் பின் “சரி! கொஞ்சம் டைம் எடுக்கும், ஆனா லோட் ஆயிடும்! வர்க் ஆயிடுச்சுன்னா, இஷ்யூ பத்தி டீம்க்கு ஒரு மெய்ல் போட்ருங்க. அவ்ளோ தான்” – என்று அவன் கூறியதும் சரியெனச் சொல்லி ஃபோனைக் கட் செய்தாள்.
அதன் பின்பு ஜெனரல் ஷிஃப்ட் மக்கள் ஒவ்வொருவராக வரத் துவங்க, பத்து மணி போல் வந்து சேர்ந்தான் சசி.
அலெக்ஸ் மற்றும் சசி அமர்ந்திருக்கும் க்யூபிகளின் முன்னே, தடுப்பிற்கு அந்தப்புறம் பவித்ரா,சக்தியின் டெஸ்க் இருந்தது.
வரும் போதே ரவியிடம், “ஏன்ட்ரா buddy பாகுன்னாவா?” – எனக் கேட்டு அவன் முறைப்பதை கண்டு கொள்ளாது தன் இடத்திற்கு வந்து நின்று, தோள்ப்பையைக் கழட்டி டெஸ்க்கின் மீது வைத்தபடி சக்தியை ஒரு பார்வை பார்த்தான்.
சுருக்கியப் புருவங்களும்,குவிந்த உதடுமாகத் தீவிரமாய் லேப்டாப்பை நோக்கிக் கொண்டிருந்தவளைக் கண்டபடியே, பையைத் திறந்துத் தனது லேப்டாப்பை வெளியிலெடுத்தவன்,
‘ஹூய்ய்ய்ய், இந்தாடி கப்பக் கிழங்கே, ஹூய்ய்ய்ய் என்னாடி காரக் குழம்பே’ – எனப் பாடத் துவங்க,
அவனது ஹூய்ய்ய்ய்யில் ஒரு நொடி உடல் உதறிப் பின் பல்லைக் கடித்து “ஷ்ஷ்ஷ்” என்றபடி நெற்றியில் கை வைத்தாள் சக்தி.
அவள் இங்கு வேலைக்குச் சேர்ந்து, அவனது டெஸ்க்கிற்கு எதிரே அமர்த்தப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தினம் தொடர்ந்து நடக்கும் சம்பவம் இது!
கையை நீட்டி சோம்பல் முறிக்கும் போது, மூக்கு சொரியும் போது, முட்டி அரிக்கும் போது.. என மூட்-க்குத் தகுந்தாற் போல் அவளை நோட்டம் விட்டபடி, பாட்டாகப் பாடிக் கதற விடுவதைத் தொழிலாகவே வைத்திருந்தான் சசி.
இன்று வந்ததுமே அவன் தொடங்கி விட்டதைக் கண்டு பவித்ரா நமுட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருக்க, அவளை முறைத்த சக்தி, பின் அவனது இந்த விளையாட்டை இன்றோடு முடித்து விடும் நோக்கத்துடன் அவனை நிமிர்ந்து நோக்கினாள்.
அப்போது தான் அவன், ‘ஐத்தலக்கா,ஐத்தலக்கா,ஐத்தலக்கா, ஐ!’ என்றபடியே அடாப்டரை ப்ளக்கில் செருகிக் கொண்டிருந்தான்.
“இஷ்யூ ரிசால்வ் ஆயிடுச்சு” – அவனது ஐத்தலக்காவைத் தாண்டி அவள் குரல் ஹைபிட்சில் ஒலிக்க, திடுக்கிட்டு அவள் முகம் பார்த்தவன், அவள் உரையாட முற்படுவது தன்னிடம் தான் என்பது புரிந்து அனிச்சையாக, சீட்டில் இல்லாத அலெக்ஸைத் தேடித் துலாவி விட்டு அவள் புறம் திரும்பினான்.
‘பன்னாட பதறிட்டான்!’
“காலைல நீங்க ஹெல்ப் பண்ண இஷ்யூ, ரிசால்வ் ஆயிடுச்சு” – அவள் மீண்டும் கூறியதும்,
“ம்…ம்… மெய்ல்…. பார்த்தேன்” – என்றான்.
‘பார்ரா!, வார்த்தை வாய்க்குள்ளேயே வண்டி ஓட்டுது!, கண்ணைப் பார்த்து பேசச் சொன்னா மட்டும், காக்கா வலிப்பு வந்தவன் மாதிரி திணற வேண்டியது! கேப்மாரி! – மனதுக்குள் அர்ச்சித்தவள்,
“உங்களுக்கு நான் தேங்க்ஸ் கூட சொல்லல!” – அவனோடு இயல்பாகப் பேச முயன்றாள்.
ம்…,ம்ம்ம் என்பது போல் தலையாட்டியவன், புருவம் உயர்த்தி அவள் முகத்தையே பார்க்க, விழி சுருக்கியவளிடம்,
“தேங்க்ஸ்…. இன்னும் சொல்லலையே!” என்று அவன் கூறியதும்,
“ம், ஆமா! தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப்” – என்றாள் ஈ-யென்ற வாயுடன்.
ஏற்றுக் கொண்டேன் என்கிற தலையசைப்புடன் அவன், பதிலேதும் பேசாது, லேப்டாப்பை ஆன் செய்தபடி அமர்ந்து விட, காண்டாகிப் போன சக்தி,
“இவனெல்லாம் என்ன ஜென்மம்?” – என்று பவித்ராவிடம் முணுமுணுத்தாள்.
“ஷ்ஷ்,மெதுவா பேசுடி”
“காதுல விழுந்தா மட்டும் கம்முன்னா உட்கார போறான்?? கட்டைல போறவன்” – அவள் எரிச்சலுறுகையில்,
‘பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு..
தீக்குச்சி ஒன்றைப் போட்டுப் பாரு’ – அவன் குரல் அடுத்த பாடலைத் தேர்ந்தெடுத்திருக்க,
“சொன்னேன்ல?, இவனைஐஐஐ…! அந்தத் தீக்குச்சியை உன் வாய்ல தான் டா போடனும்! வெளங்காதவனே!” என்றபடித் தடுப்பின் வழி ஊடுருவுபவள் போன்று, அதை முறைக்க,
‘முத்து நிலவே! ஹே ஹே ஹே! தித்திக்கின்றதே!!!!!’ – என்றவனைக் கண்டு, பொறுமை பறி போக,
“பேசாம இவனை POSH-ல போட்டுக் குடுத்தா என்ன?” – எனக் கேட்டதும்,(POSH-Prevention of sexual harassment)
ஒரு நொடி அமைதியானவன் பின் “என் கதை முடியும்…. நேரமிது…” – என்று அடிக்குரலில் அடக்கமாய்ப் பாட, கெக்கே,பெக்கேவென சிரித்து வைத்த பவித்ராவை முறைத்த சக்திக்கு, சுந்தர் இந்த டெஸ்க்கை கை காட்டிய நாள் நினைவிற்கு வந்தது.
“லேப்டாப் கலெக்ட் பண்ணியாச்சா?, குட்! சீட் நம்பர் 402,403 உங்க ரெண்டு பேருக்கும் அலகேட் ஆயிருக்கு அண்ட் ஐ வில் ஆஸ்க் அலெக்ஸ் டூ ஹெல்ப் யூ வித் த கான்ஃபிகரேஷன்ஸ்”
-சுந்தர் கூறியதும் தலையாட்டிய சக்தியும்,பவித்ராவும் தங்களது சீட் நம்பரைத் தேடிக் கண்டுபிடித்து நின்றது சசியின் டெஸ்க்கிற்கு முன்னே!
ஹெட்செட்டுடன் தனது சீட்டில் அமர்ந்திருந்த சசி, லேப்டாப்பில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்க,
“டேய் சசி, சசி..” – என அவன் காலை மிதித்த அலெக்ஸ், நிமிர்ந்து பார்க்குமாறு கண்ணைக் காட்டினான்.
என்னவென நிமிர்ந்த சசி, தடுப்பிற்கு மறுபுறம் நின்ற இருவரையும் கண்டு விட்டு கண்ணைச் சுருக்கி அலெக்ஸிடம், “என்னாவாமா?” என வாயசைத்தான்.
அதற்குள் பவித்ரா அலெக்ஸிடம், “அண்ணா, லேப்டாப் கான்ஃபிகரேசனுக்கு உங்கக் கிட்ட ஹெல்ப் கேட்க சொன்னாரு சுந்தர்” எனக் கேட்க,
ஹெட்செட்டைக் காட்டி “கால் முடிச்சுட்டு வரேன்ம்மா! 5 மினிட்ஸ்” என்றான் அலெக்ஸ்.
பையைத் திறந்து லேப்டாப்பை வெளியே எடுத்து வைத்தபடி இருவரும் அமர்ந்து விட, சீட்டிலிருந்து லேசாக எக்கி, சக்தியை நோட்டம் விட்டான் சசி.
“ப்ச், போயும்,போயும் இந்த சீட் தான் எனக்குக் கிடைக்கனுமா?” – என்று அவள் புலம்புவதைக் கேட்டுப் புருவம் உயர்த்தியவன், “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமி,
“இந்த சீட்ல உட்கார்றவங்கெல்லாம் வாட்டிகன் வரைக்கும் போவாங்க-ன்னு வாஸ்து சாஸ்திரம் சொல்லுது” – என்றான் சற்றுப் பெரிய குரலுடன்.
அவள் எட்டி இவனை முறைத்ததும், லேப்டாப்புக்குள் பதுங்கியவனைக் கேவலமாகப் பார்த்த அலெக்ஸ்,
“ரெட் கலர் மூக்குத்தியைப் பார்த்தாலே ரத்த வாந்தி வர்ற மாதிரி இருக்குன்னு சொல்லிட்டு, இப்ப ரகம்,ரகமா ஜொள்ளிட்டிருக்கேளே மிஸ்டர்.சசி?” என்றான்.
“நானா யாரையும் தேடிப் போகலையே மிஸ்டர்.அலெக்ஸ்!”
“அப்டின்னா?”
“அதுவாத் தான தேடி வந்திருக்கு!”
“அதாவது?”
“இது விதி போட்ட முடிச்சு மிஸ்டர்.அலெக்ஸ்!”
“டேய், டேய்! முடிச்சவிக்கி”
“ப்ச்!, முசுடா இருந்தாலும், முகவெட்டு மூளையைக் கலங்கடிக்குது டா அலெக்ஸூ! அதான்.. முயற்சியைக் கைவிட வேணாமேன்னு..”
“ஷ்ஷ்ஷ் அவங்க ‘வீச்சருவா சாமி! இது வேலு,கம்பு பூமி’-ன்னு பாடுற பழுவேட்டரையர் பரம்பரை டா சசி!”
“நான் கிட்ட போனாத் தான டா வெட்டுக் குத்து சம்பவெல்லாம்?”
“பின்ன?”
“எட்ட நின்னு ‘எகிறி குதித்தேன்! வானம் இடித்தது’-ன்னு பாடலாம்ன்னு இருக்கேன்”
“அப்ப நானு?”
“நீயும் வேணா கூடச் சேர்ந்து குதியேன்” – பெரிய மனதோடு கூறியவனிடம்,
“அப்டிங்குறியா?” – என்று அலெக்ஸ் பேசிக் கொண்டிருக்கையிலேயே,
“ஹே அலெக்ஸ்,சசி, இந்தப் பொண்ணுங்களுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க டா! தேவையான சாஃப்ட்வேரெல்லாம் ஷேர் பண்ணுங்க” – என்று சுந்தர் இடையில் வர,
இது தான் சாக்கென பட்டென்று எழுந்த இருவரும், “ஷ்யூர் ஷ்யூர்” என்றபடி அவர்களது டெஸ்க்கை நோக்கி நடந்தனர்.
டெஸ்க்கில் சாய்ந்து கையைக் கட்டியபடி நின்றிருந்த சக்தி, மூக்கை விடைப்பது கண்டுப் பம்மிய அலெக்ஸ், பவித்ராவின் கணினியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சசியைத் தடுத்து, சக்தியின் புறம் அனுப்பி விட்டு,
“என் ஜாதகப்படி நான் ஜன்னல் கிட்ட உட்காரக் கூடாதும்மா” என்றபடியே பவித்ராவின் கணினியின் முன்பு அமர்ந்தான்.
சக்தியின் பார்வையை உணர்ந்து உள்ளே உதறினாலும், மெல்ல அவளது இருக்கையில் அமர்ந்த சசி, ஸ்பேஸ் பார்-ஐத் தட்டி, கணினி பாஸ்வேர்ட் கேட்டதும், அவள் முகம் பாராது, “பா..பாஸ்வேர்ட்” என்றான்.
அவனது குரல் மியூட்டில் ஒலிப்பது கண்டு உதட்டை வளைத்தபடி, பாஸ்வேர்டை டைப் செய்ய அவள், அவனருகே குனிந்ததும், சர்ர்ர்ர்ர்ர்ரென சேரை நகட்டி அலெக்ஸின் அருகே சென்று விட்டான் சசி.
“என்னா டா?” – முணுமுணுப்பாய் அலெக்ஸ்.
“தோளை உரசுற அளவு, கிட்ட்ட்ட்ட வருது டா அந்தப் பொண்ணு! கற்பு ரொம்ப முக்கியம்ல!”
“சரியாகச் சொன்னாயடா சசிதரா!”
“பேசாம அவ மூக்குத்தி மேல ‘அபாயம்’-ன்னு ஸ்டிக்கர் ஒட்டி விட்றலாமா?”
“பாஸ்வேர்ட் போட்டாச்சு” – சக்தியின் குரல் ஒலித்ததும், மறுபடி சர்ர்ர்ர்ர்ரென கணினியின் முன்னே வந்தவன்,
கையைக் கட்டியபடி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் குண்டு முகத்தில்,வெள்ள்ள்ள்ள்ளைக் கன்னத்தில், நீண்டிருந்த மூக்கில், டாலடித்த மூக்குத்தியை முழுதாக மூன்று வினாடிகள், மூச்சு விடாது நோக்கி விட்டுப் பின்,
“இங்க பாருங்க” என்றான்.
என்னவென அவன் முகம் பார்ப்பவளை உணர்ந்து, கணினியைக் கை காட்டி,
“இங்க.. இங்க..” என்றவன் தொடர்ந்து,
“இந்த shared drive-ல எல்லா சாஃப்ட்வேர்ஸூம் இருக்கு. ஒவ்வொன்னா இன்ஸ்டால் பண்ணுங்க! இப்போதைக்கு **** இண்ஸ்டால் பண்ணி க்ளையண்ட் பாஸ்வேர்ட் மட்டும் ரீசெட் பண்ணுவோம்” – எனக் கூறி விட்டுப் பின் அடுத்த சில நிமிடங்களில்,
“இப்போ நியூ பாஸ்வேர்ட் செட் பண்ணுங்க” – எனக் கூறி, அவளுக்கு வழி விட்டு ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டான்.
‘பரவாயில்ல! அடுத்தவன் பாஸ்வேர்டை பார்க்கக் கூடாதுங்குற அடிப்படை அறிவு இருக்குது’ – என நினைத்தபடி புது பாஸ்வேர்டை செட் செய்து விட்டு, “ம்க்கும்” என்றாள்.
அவளது செருமல் அவனது செவியை எட்டாது போக,
ஒற்றை விரலால் அவன் கையை ‘knock knock’ எனத் தட்டி “முடிஞ்சது” என்றாள்.
அவள் விரல் தொட்டதும் சட்டெனக் கையை இழுத்துக் கொண்டவன், அவள் தொட்ட இடத்தைத் தடவியபடி, புருவம் சுருக்கி, விழி பிளக்க அவளை திகைப்பாய் நோக்கினான்.
‘என்னா டா எக்ஸ்ப்ரஷன் இது??!, ஆசைப்பட்டுத் தொட்ட மாதிரி ஆ-ன்னு வாயைப் பொளக்குறான்!
“நான் கூப்பிட்டேன்! உங்களுக்குக் கேட்கல!” – நறநறத்தப் பற்களுக்கிடையே அவள் வார்த்தைகளைத் துப்பவும், பதில் கூறாது அவள் தொட்ட இடத்தை நன்றாகத் தேய்த்து விட்டுக் கணினியின் புறம் திரும்பினான்.
அவமானத்தில் அடிவயிறு கருகியதில், முகம் கறுத்துப் போன சக்தி, அவன் விரலை வெட்டத் துடித்த கைகளை அடக்கியபடி நின்றாள்.
அதன் பின்பு வேலையை முடித்து விட்டு எழுந்தவனும் அவள் முகம் பாராது சென்று விட, அநியாயத்திற்குக் காண்டாகிப் போன சக்தி, அதன் பின்பு தேவைக்குக் கூட அவன் முன்பு சென்று நிற்கவில்லை.
வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாதங்களில், முதன் முறையாக இன்று அவனுடன் தானே வழிய சென்று ஃபோன் செய்து பேசியாக வேண்டிய சூழ்நிலையில் நிறுத்தி வைத்த விதியை நொந்தபடி அந்த நாளைக் கடத்தினாள் சக்தி.
அன்று காலை அலுவலக பார்க்கிங்கில் தனது பைக்கை நிறுத்திய சசி, அருகே அலெக்ஸ் வந்து நிற்பதைக் கண்டு முகத்தை சுழித்து,
“ப்ச், ஆஃபிஸ்க்குள்ள காலெடுத்து வைச்சதுமே கருமம், உங்க மொகரைல முழிச்சா, இன்னைக்கு நாள் எப்பிடி ப்ரோ விளங்கும்?” என்று சலித்தபடி ஹெல்மட்டைக் கழட்ட,
“ஸேம் டூ யூ ப்ரோ” – எனத் தானும் ஹெல்மெட்டைக் கழட்டிய அலெக்ஸ், எதிரேயிருந்த லிஃப்ட்டை நோக்கியபடி,
“மங்கிக் கிடக்கும் தங்களது மனதை மகிழ்விப்பதற்காகவே, இரண்டு மங்கைகள் எதிரில் நிற்கிறார்கள் மன்னா” – என்றான்.
“மங்கைகளா, அது யாரது அமைச்சரே! எனக்கு எப்போதும் உம்மைப் போன்ற சொங்கிகள் தானே வாய்ப்பார்கள்!”
“அவ்விட நோக்கு டா நோஞ்சானே”
“எவ்..விட” என்றபடித் திரும்பிய சசி, லிஃப்ட்டிற்காகக் காத்திருந்த சக்தி மற்றும் பவித்ராவைக் கண்டு,
“வாடா வா டா..”என்றபடி விறுவிறுவென நடந்து சென்று, அவர்களருகே நின்று, பாக்கெட்டுக்குள் கை விட்ட படி, வழியும் முகத்துடன்..
‘கண் முன்னே எத்தனை நிலவு, காலையிலே’ – என அவிழ்த்து விட,
இவன் குரலைக் கேட்டதும் உச்சுக் கொட்டிய சக்தி, இருவரிடமும் பவித்ரா ‘ஹாய்’ சொல்லியதைக் கண்டு கொள்ளாது நிற்க, இருவரும் இவளை ஒரு பார்வை பார்த்து விட்டு ‘ம்ம்ம்ம்’ என உதட்டை வளைத்துக் கொண்டனர்.
லிஃப்ட்டில் ஏறியதும், சக்திக்கு எதிரே நின்ற சசி, அவளைப் பார்த்தும்,பாராதது போல் நோட்டம் விட்டுக் கொண்டிருக்க, அலெக்ஸ், பவித்ராவிடம்,
“கையில என்னம்மா, சோத்துப் பையா?” – எனக் கேட்டான்.
“ஆமாங்கண்ணா”
“வீட்ல இருந்து கொண்டு வர்றியா?”
“இல்லண்ணா, பி.ஜி ஃபுட்”
“சரி தான்! நம்ம கம்பெனி கஃபேடீரியால 40 ரூபா குடுத்து சாப்பிட்டு நாக்கு செத்துப் போறதுக்கு, கரப்பான் பூச்சி செத்துக் கிடந்தாலும் பரவாலன்னு பட்ஜெட் ஃப்ரண்ட்லி பிஜி ஃபுட் சாப்பிட்றது பெட்டர் தான்”
“ஹிஹிஹி ஆமாங்ண்ணா”
“எனக்குப் புரியுதும்மா, ஏன்னா நாங்களும் ஒரு பட்ஜெட் பத்மநாபனுங்க தான்!, இந்தா என் நண்பனோட லேப்டாப் பையைத் திறந்து பார்த்தேனா.. லெமன் சாதம் வாசனை குப்புன்னு வரும்!, இல்ல நண்பா?” – எனக் கேட்டு அலெக்ஸ் தன் நண்பனின் முகம் பார்க்க, அவன் சக்தியின் புறம் கண் காட்டினான்.
“அ..அவங்க எப்பிடி?, பந்தா பரமசிவமா?, இல்ல பட்ஜெட் பத்மநாபனா?” – சக்தியைக் கை காட்டியபடி அலெக்ஸ்.
“அப்டின்னா?” – பச்சைப் புள்ளையாகப் பவித்ரா.
“இல்லம்மா, வீட்டு சாப்பாடா?, இல்ல காஃபடீரியா சாப்பாடான்னு கேட்டேன்”
“அவ கேஃபடீரியால தான் சாப்பிடுவாண்ணா”
ஓஓஓஓ – எனப் புருவத்தைத் தூக்கிய சசி, அலெக்ஸிடம் “பணக்காரங்க போல டா அலெக்ஸூ” என்று முணுமுணுத்தான்.
அதுவரை அவர்களின் பேச்சை அசட்டை செய்தபடி நின்று கொண்டிருந்த சக்தி, வெடுக்கெனத் திரும்பி சசியை முறைத்து,
“மைலாப்பூர்ல இருந்து சோழிங்கநல்லூருக்குப் பஸ் பிடிச்ச வர ஒன்றரை மணி நேரத்துக்கு மேல ஆகுது! இதுல எங்க நான் மதிய சாப்பாட்டைக் கட்டிட்டு வர?, ஒரு வேளை காஃபடீரியால சாப்பிட்டா, நான் பணக்காரியா?, அப்பிடியே இருந்தாலும் என்ன?, என் சொந்த சம்பாத்தியத்துல நான் சாப்பிடுறேன்! உங்களுக்கென்ன வந்தது?”
“எங்களுக்கென்ன?, உங்க காசு, நீங்க சாப்பிட்றீங்க!, என்னா டா சசி?”
அவனுக்கு பதில் கூறாது ‘மைலாப்பூரா!’ என்ற யோசனையுடன் சசி.
“டேய்.. டேய்.. என்னா டா?, என்னை மட்டும் கோர்த்து விட்டுட்டு, நீ அமைதியா நிக்குற பரதேசி!”
“தப்பா எடுத்துக்காதீங்கண்ணா, அவ ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடலன்னு சொல்லிட்டிருந்தா! அதான் கத்துறா! பசி வந்தா அவ,அவளா இருக்க மாட்டா” – பவித்ரா இடையில்.
“அய்யய்யோ அப்பிடியா?” என அதிகப்படியாகப் பதறிய அலெக்ஸ், “என் கிட்ட ஸ்நிக்கர்ஸ் கூட இல்லையேம்மா?” – எனப் பாவம் போல் கூற, தலையைப் பிடித்துக் கொண்டாள் சக்தி.
அவள் நொந்து போவதை நமுட்டுச் சிரிப்புடன் நோக்கிய இருவரும், லிஃப்ட் நின்றதும் இறங்கிக் கொண்டனர்.
“அவங்க உன்னை சும்மா கலாய்க்கிறாங்க சக்தி, நீ ஏன் டென்ஷன் ஆகுற?, ரெண்டு பேரும் எவ்ளோ நல்லவங்க தெரியுமா?” – என்ற பவித்ராவிடம்,
“யாரு இவனுங்களா நல்லவனுங்க?, இவனுங்களைப் பத்தி உனக்குத் தெரியாது! அதுலயும் அந்த வெள்ளை கலர் சட்டை போட்ட வெளாங்காதவன் இருக்கானே! அவன் எவ்ளோ பெரிய விளக்கெண்ணெய்ன்னு எனக்குத் தான் தெரியும்.” – சக்தி சரமாரியாகக் கிழித்துத் தொங்க விட்டதும்,
காலரை சரி செய்து “யா, இட்ஸ் மீ” என்பது போல் உதட்டை இழுத்துப் பிடித்துப் புன்னகைத்த சசி, அலெக்ஸின் தோளில் கை போட்டு,
“பொண்ணுங்கக்கிட்ட பச்சை,பச்சையா கிழி வாங்குறதுக்கும் ஒரு குடுப்பினை வேணும் டா அலெக்ஸூ” – எனக் கூறியபடியே இருவரையும் கடந்து செல்ல,
“என்ன பீஸ் இவன்! சரியான டோப்மாரி!” எனப் பல்லைக் கடித்தபடி வேகமாக அவர்களைத் தாண்டித் தன் டெஸ்க்கிற்குச் சென்றாள் சக்தி.
அதன் பின்பு சசியும்,அலெக்ஸூம் வழக்கம் போல் ரவியிடம் உரண்டை இழுத்து விட்டுத் தங்களது இருக்கைக்கு வந்தடைந்தனர்.
“ஏன் டா சசி, இந்த ரெட்டு மூக்குத்தி உன்னைக் கண்டாலே மூர்க்கமாகுது?, நான் இல்லாதப்ப தனியா எதுவும் நீ, அந்தப் பொண்ணுக் கிட்ட ‘தோடி’ ராகம் வாசிச்சியோ?”
“ப்ச், அது வேற பஞ்சாயத்து டா அலெக்ஸூ”
“பஞ்சாயத்தா?, அடப் பரதேசி! உனக்கு அந்தப் பொண்ணை ஏற்கனவே தெரியுமா?”
“உடனே கண்டமேனிக்கு கற்பனை பண்ணாதீங்க ப்ரோ!, மெட்ரோ ட்ரெய்ன்ல வைச்சு நான் ஒரு மெல்லினத்தை மேலோட்டமா பார்த்தது,இந்த வல்லினத்துக்குப் பிடிக்கல!, அது வன்மையா கண்டிக்க, நான் மென்மையா எஸ் ஆக-ன்னு அன்னைக்கு ஒரே அக்கப்போரா போயிடுச்சு! அதுல இருந்தே வல்லினம் கொஞ்சம் வயலண்ட்டா தான் இருக்காக!, ஆனா அலெக்ஸூ கலவரம் பண்ணினது காத்து(காற்று)! ஆனா இவ சம்பவம் பண்றது எனக்கா!, இதெல்லாம் என்னா டா நியாயம்!”
“ப்ச், சசி.. இதான் டா உன் கிட்ட எனக்குப் பிடிக்காதது!”
“எது?”
“என்னைய விட்டுட்டு நீ மட்டும் எதுக்கு டா மெட்ரோ ட்ரெய்ண்ட்ல போற?, நான் போற பக்கமெல்லாம், காத்தே அடிக்கிறதில்ல டா சசி!,” என நொந்து கொண்டு பின், ஆனா…”-என யோசித்தவன், திடீரெனப் பொங்கி,
“இந்தப் பொண்ணுக்கு உன்னைப் பேசுறதுக்கு ரைட்ஸே கிடையாது டா சசி” என்று கத்த,
“சௌண்டைக் குறை டா சாவுகிராக்கி!” – சுற்றும்,முற்றும் பார்த்தபடி சசி திட்டவும், காதில் வாங்காது சக்தியின் டெஸ்க்கை எட்டிப் பார்த்தவன்,
அவள் தனது செல்ஃபோனை சார்ஜில் இட்டு விட்டு சாப்பிடச் சென்று விட்டதைக் கண்டு, சசியை இழுத்துக் கொண்டு அதனருகே சென்றான்.
“என்னா டா பண்ற?”
“இங்க பார்றா, இங்க பார்றா சசி” என்றவன், ஒரு விரலால் பட்,பட்டென அவளது செல்ஃபோனைத் தட்ட,
லாக் ஸ்க்ரீன் வால் பேப்பராக வருண் தவான்! தனது படிக்கட்டுத் தேகத்தை பகிரங்கமாகக் காட்டியபடி, சைட் போஸில்!
‘ஐயோ!!!’-என வாயில் கை வைத்த சசி,
“என்ன ப்ரோ இது?, அபச்சாரம்! அபச்சாரம்!”-என்றான்.
“பார்த்தியா??”
“அப்ப, அன்லாக் பண்ணினா, டெஸ்க்டாப் வால் பேப்பர்ல ரன்வீர் சிங் ஜட்டியோட நிற்பானோ!, ”
“இருக்கலாம்! இருக்கலாம்” – என்ற அலெக்ஸ்,
‘இவனுங்க எதுக்கு இங்க நிற்குறானுங்க’ என்ற ரீதியில் கண்ணைச் சுருக்கியபடிப் பின்னே வந்து கொண்டிருந்த சக்தியைக் கண்டு, நண்பனிடம்,
“சசி, முதுகுக்குப் பின்னாடி முப்பாத்தா டா” என்று எச்சரிக்கவும்,
“வரட்டும்” என்ற சசி, முகத்தைத் திமிராக வைத்துக் கொண்டு,
“ஏன் டா அலெக்ஸூ! அந்த ஹிந்தி ஆக்டர் வருண் தவான், வாடிப்பட்டிக்காரப் புள்ளையக் கல்யாணம் கட்டிக்கிட்டான்னு கேள்விப்பட்டேனே! உண்மையா?” எனக் கேட்க,
“ஆமா டா சசி! கருமம்! வாய்க்கால் ஓரம் உட்கார்ந்து வரட்டி தட்டிக்கிட்டிருந்த புள்ளையைப் புடிச்சுக் கட்டி வைச்சுட்டாய்ங்க”
“என்னா டா உலகம் இது?”
வழக்கம் போல் உளறிச் சென்றவர்களைக் கண்டு உதட்டைப் பிதுக்கிய சக்தி,
‘அடப்பாவிங்களா!, நடாஷா தலால் இதைக் கேட்டா, நாண்டுக்கிட்டு செத்துரும் டா டேய்! இவனுங்க எதுக்கு இப்ப சம்பந்தமே இல்லாம வருண் தவானைப் பத்திப் பேசுறானுங்க?’ – என்ற குழப்பத்துடனே இருக்கையில் வந்தமர்ந்தாள்.
அன்று முழுதும்,
“டேய் அலெக்ஸூ, நல்லாத் தான சம்பளம் வாங்குற?, அந்த வருண் தவானுக்கு ஒரு சட்டை வாங்கிக் கொடுத்தா குறைஞ்சா போயிருவ?”
“டேய் ரவி வேம்பட்டி, யார் தைச்ச சட்டை, தாத்தா தைச்ச சட்டை, இதை மூச்சு விடாம 3 தடவை சொல்லு பார்ப்போம்”
“சுந்தர், வருண் தவானுக்குப் பிடிச்ச சௌத் இண்டியன் ஃபுட் சக்கரைப் பொங்கலாமா! அதான் மனுஷன் சட்டையே போட மாட்டேங்குறாரு”
-என சம்மந்தமே இல்லாமல் வருண் தவானைப் பற்றி ஏதேதோ பேசி,பேசி க்யூபிகளில் அமர்ந்திருந்த அத்தனை பேரையும் நொந்து போகச் செய்தான் சசிதரன்.
கடைசி வரை விஷயம் புரியாது போன சக்திக்கு, அன்றிரவு வீட்டிற்குச் சென்றபின் செல்ஃபோனைக் கையில் எடுக்கையில், திரையில் தெரிந்த வருண் தவான் கருத்தில் பதிய, ‘அடக் கருமமே! கடைசில நீங்க செஞ்சது என்னைத் தானா டா!’ எனத் தலையில் அடித்துக் கொண்டாள்.
அடுத்த வந்த நாட்களில் சக்தி,சசி இருவரும் ஒரே ஷிஃப்ட்டில் இருந்த படியால், அவள் அலுவலகத்தை எட்டும் நேரத்தைக் கணக்கிட்டு, தானும் அதே நேரம் வருகை புரிவதை வேலையாகக் கொண்டிருந்தான் சசி.
தினமும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அலுவலகத்திற்குப் பயணம் செய்வது எரிச்சலைக் கொடுத்ததால், சக்தி தனது முதல் மாத சம்பளத்தில் ஸ்கூட்டி வாங்கியிருந்தாள்.
அன்று காலை அலுவலக பார்க்கிங்கில் ஸ்லோவாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்த சசி, தன்னருகே வந்த ஸ்கூட்டியைக் கண்டு அனிச்சையாக நிமிர்ந்து ஓட்டுனரின் முகம் பார்த்தான்.
பிங்க் ஹெல்மெட்டுக்குள் சிகப்பு மூக்குத்தி!
அட நம்மாளு! – என்றெண்ணிக் கொண்டு விடாது அவள் முகத்தைப் பார்த்தபடியே,
“நீ ஸ்டைலா ஓட்டும் ஸ்கூட்டியிலும் 50-50,
உன்னை ஃபாலோ பண்ணும் நிழலில் வேணும் 50-50” – எனக் கத்திப் பாட, பாதையை விட்டு, பாட்டுப் பாடிய பாமரனின் மீது சக்தித் தன் பார்வையை செலுத்தியதும், பட்டெனத் திரும்பிக் கொண்டவனை மூச்சு வாங்க முறைத்த சக்தி, எரிச்சலுடன் தன் வண்டியை நிறுத்தினாள்.
வேண்டுமென்றே அவள் ஸ்கூட்டியின் அருகேத் தானும் பார்க் செய்தவனைக் கண்டு கொள்ளாது அவள் லிஃப்ட்டை நோக்கி நடக்க, அவனும் உடன் நடந்தான்.
லிஃப்ட்டில் ஏறிய சக்தி, தன் செல்ஃபோனைக் கையில் எடுத்ததும், கூச்சம் பாராது, எட்டி நோக்கியவன் லாக் ஸ்க்ரீனில் ஐயப்ப சுவாமி குத்த வைத்த போஸில் குந்தியிருப்பதைக் கண்டு சிரிப்புடன்,
“சுவாமியே! சரணம் ஐயப்பா” என்று முணுமுணுத்தான்.
பட்டென அவன் புறம் திரும்பி மூக்கை விடைத்தவள், விறைப்பு குறையாது நிற்க, அவள் பக்கவாட்டு தோற்றத்தைக் கண்டு,
“சைட்(side) லுக்ல பார்க்க ‘ச்சை’-ன்னு இருக்கா!, மூக்குத்தி வேற அந்தப்பக்கம் போயிருச்சே! ச்ச”-என்று சலித்தபடி ஹெட்செட்டில் ‘பிரசாந்த் ஹிட்ஸை’ ஓட விட்டு, அவளது இட மற்றும் வலப்பக்கத் தோற்றத்திலிருக்கும் ஆறு வித்தியாசங்களைக் கணக்கிட்டபடி, அமைதியாக நின்றிருந்தான்.
ஹெட்செட்டுக்குள்..
‘நின்று போன லிஃப்ட்டுக்குள் இன்று பூத்த பூ ஒன்று..
ஒன்றாய் நின்றால் லக்கோ லக்கி தான்’ – என ஒலிக்க,
உதட்டை ஒரு புறமாக வளைத்தபடி ‘கற்பனைல கூட நடக்காது’ என நினைத்தவாறு அவன் அவளை நோக்கிக் கொண்டிருக்கையில்.. நிஜமாகவே லிஃப்ட் நின்று போனது!
திடீரென விளக்கணைந்து சடாரென நின்று விட்ட லிஃப்ட்டைக் கண்டு அரண்டு போனவன்,பதறியபடி ஹெட்செட்டைக் கழட்டி “எ..என்…என்னாச்சு, என்னாச்சு?” என அலற..
“ஷ்ஷ்ஷ்” என எரிச்சலடைந்த சக்தி, அவனைக் கடுப்புடன் திரும்பிப் பார்த்து,
“என்னைக் கேட்டா?, நானும் உங்க கூட தானே நிற்கிறேன்?” – எனப் பாய..
“இ..இல்ல, சா..சாரி!” என்றவனுக்கு அவளுடன் சேர்ந்து லாக் ஆனதில், இதயம் லப்டப்புக்குப் பதில் லாஆஆப் டாஆஆப் என இழுக்கத் துவங்க, அவசரமாக பெல் பட்டனை அழுத்தினான்.
எதிர்முனை பேசியதும், “அண்ணா, அண்ணா 5த் லிஃப்ட் ஃப்ளோர்ல நின்றுடுச்சுண்ணா! ஷ்ஷ்ஷ், 5த் ஃப்ளோர்ல லிஃப்ட் நின்றுடுச்சுண்ணா” – பதட்டத்தில் வாய் குழறியவனிடம்,
“பதறாதீங்க தம்பி! என்னன்னு பார்க்குறேன்” என்றது எதிர்முனை.
“கொஞ்சம் சீக்கிரம், சீக்கிரம்ங்ண்ணா”
“ஏன் தம்பி, எமர்ஜென்சியா?”
எதிர்முனை பேசுவதைக் கேட்பதற்காக அவனருகேக் கிட்டத்தட்ட உரசிய நிலையில் நின்ற அவளது தோளைக் கண்டு.. எச்சில் விழுங்கி..
“எ…எமர்ஜென்சி தானுங்ண்ணா!, சீக்கிரம் ஏதாவது பண்ணுங்கண்ணா” – கிட்டத்தட்டக் கெஞ்சிய நிலையில் அவன்.
அளவுக்கு மீறி அவன் அலறுவதை ஒரு மாதிரி நோக்கிய சக்தி, “உங்களுக்கு ‘Claustrophobia -ஆ இருக்கா?” எனக் கேட்டாள்.
காதோரம் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி “அப்டின்னா?” என்றவனிடம்,
“closed space-க்குள்ள மாட்டிக்கிட்டா வர்ற பயம்”
“அதெல்லாம் இல்லயே”
“அப்போ ஏன் இப்பிடிப் பதறுறீங்க?”
“நான் எங்க பதறுனேன்?, நா..நார்மலா தான் இருக்கேன்” – அவள் முகம் பாராது அவன்.
பதில் கூறாமல் அவனை பார்த்தபடி நின்றவளை, மெல்ல ஓரக் கண்ணால் நோக்கியவன், அவள் உதட்டை வளைத்து ஒரு மாதிரி பார்ப்பதை உணர்ந்து,
“எ..என்ன?” என்றான்.
“தனியா என் கூட மாட்டிருக்கதால தான பயப்பட்றீங்க?”
“அ..அ…துஊஊ” எனத் திணறுகையிலேயே லிஃப்ட் திறந்து விட, அவளைக் கண்டு கொள்ளாது விழுந்தடித்துக் கொண்டு ஓடியே போய் விட்டான்.
அதன் பின்பு மதியம் வரை அவள் கண்ணில் அகப்படாதவன், இரண்டு மணி வாக்கில் மீட்டிங் ஒன்றுக்காக சுந்தர் அவளை அழைத்துச் செல்கையில், மீட்டிங் ரூமிற்குள் அமர்ந்திருந்தான்.
தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவனைக் கண்டபடியே அவள் உள் நுழைய,
“சசி, சக்தி இஸ் ஹியர்” என்ற சுந்தரின் குரலில் நிமிர்ந்தவனிடம், புதிதாக சசி தொடங்கப் போகும் வேலையொன்றைப் பற்றியும், சக்தியையும் அதில் ஈடுபடுத்த வேண்டுமென ஆன்சைட்டில் சொல்லியிருப்பதாகவும் சுந்தர் எடுத்துரைக்க, சரியெனத் தலையாட்டினர் இருவரும்.
தேவையானவற்றைக் கூறி விட்டு சுந்தர் நகரவும், சக்தியிடம், “இதைப் பத்தின டாகுமெண்ட்ஸ்,மெய்ல்ஸ் எல்லாம் ஃபார்வார்ட் பண்றேன், ரெஃபர் பண்ணிக்கோங்க” என்று சசி கூற, சரியெனத் தலையாட்டினாள் அவள்.
அவன் அனுப்பியதும் வாசிக்கத் தொடங்கி விட்டவளின் மீது, அவ்வப்போது பார்வையை செலுத்தியபடி அமர்ந்திருந்தான் சசி.
இடையிடையே அவள் கேட்ட கேள்விகளுக்கு, அவள் முகம் பாராது லேப்டாப்பைப் பார்த்தபடி அவன் பதில் அளிக்க, இரண்டு முறை பொறுத்துப் பார்த்தவள், மூன்றாம் முறை,
“கேள்வி கேட்டது நான்! உங்க லேப்டாப் இல்ல!” என்றாள்.
லேசாக அதிர்ந்தபடி அவள் முகம் பார்த்தவனிடம்,
“நேராப் பார்த்து பேச முடியாதா உங்களால?” எனக் கேட்டாள்.
“அ….அது…” – என்றபடிப் பிடரியைக் கோதினான் அவன்.
உதட்டை மடித்துப் பல்லைக் கடித்தவள்,
“ஜாடையா பாட்டு பாடும் போது மட்டும் ஜாலியா இருக்குதோ?”- எனச் சீற,
“அது வேற டிபார்ட்மெண்ட்” – முணுமுணுப்பாய்க் கூறியவனிடம்,
“என்னது??” – என்று அவள் பாய..
ஒன்றுமில்லையென்பது போல் அவசரமாய்த் தலையாட்டி லேப்டாப்பை நோக்கினான் அவன்.
அவன் செய்கையில் எரிச்சலுற்று,
“கண்ணைப் பார்த்துப் பேச முடியாதவனுக்குப் பொறுக்கின்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?” – அடித் தொண்டையில் கத்தியவளிடம்,
“நீ..நீங்க என்ன பேரு வைச்சாலும் சரி தாங்க” – பம்மினான் அவன்.
“அப்டின்னா?”
“அப்ப்பிடித் தாங்க”
“ஷ்ஷ்ஷ்” என நெற்றியைத் தேய்த்தவள் “கொஞ்சம் கூட மான,ரோஷமே கிடையாதா உங்களுக்கு?”
“அதை வைச்சுக்கிட்டு நான் என்னங்க பண்ண?” – அப்பாவியாய் அவன்.
“ஆண்டவா!” – அவள் தலையைப் பிடிக்க,
நமுட்டுச் சிரிப்புடன் அவன் மௌஸைக் க்ளிக்கினான்.
“நீங்க எப்பிடியோ இருந்துட்டுப் போங்க!, நான் பார்க்காதப்ப என்னையே பார்க்குறது, ஜாடை பேசுறது,பாட்டு பாடுறதுன்னு இன்னொரு தடவை ஏதாவது பண்ணீங்கன்னா, நான் நிஜமாவே டென்ஷன் ஆயிடுவேன் சொல்லிட்டேன்”
“சரிங்க”
“ம்??”
“சரின்னு சொன்னேங்க”
மூச்சு வாங்க அவனை முறைத்து விட்டு முசுட்டு முகத்துடன் அவள் லேப்டாப்பை நோக்க,
“நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்..
நீ பார்க்கா விட்டால் நானும் பார்க்க மாட்டேன்” – என்று அவன் மெல்ல முணுமுணுத்ததும், முகம் மாற, பட்டென லேப்டாப்பை மூடி விட்டு விறுவிறுவென வெளியேறி விட்டவளைக் கண்டு, கெக்கே,பெக்கேவென உருண்டு பிரண்டு சிரித்துக் கொண்டிருந்தான் சசி.
மறுநாள் எத்னிக் டே!
கலாச்சார உடையில் கலர்,கலராகத் திரிந்த மக்களால் அலுவலகமே கலை கட்டியிருந்தது.
‘ஐயோ! ஐயோ! ஐயோ! எதை விட்றது, எதைப் பார்க்குறதுன்னே தெரியலயே’ – என்ற பரபரப்புடன், அங்குமிங்கும் கடந்து சென்ற அழகிகளின் அலப்பரைகளைக் கண்ணுற்றவாறு ஹெல்மெட்டைக் கையில் வைத்தபடி தங்களது ஃப்ளோருக்குள் நடந்து வந்து கொண்டிருந்த சசி, திடீரென ஆணியடித்தது போல் பிளந்த வாயுடன் நின்று விட்டான்.
டீல் ப்ளூ நிற பாவாடை-தாவணியில், அதே நிறத்தில் கற்கள் பதித்த ஜிமிக்கியுடன், ஜில்லென எதிரே வந்த சக்தி, இவன் விழி அசையாது தன்னையே பார்த்தபடி நிற்பதைக் கண்டு, ஒரு நொடி மூக்கை விடைத்துப் பின், லேசாகக் கர்வம் கொண்டு, முந்தானையை நீவி விட்டபடி, தூக்கியப் புருவங்களுடன் நிமிர்ந்து, மீண்டும் அவன் புறம் நோக்கினாள்.
அப்போதும் அவன் அப்படியே நிற்பது கண்டு, சற்று உற்று நோக்கியவள், அவன் பார்வை தன் மீதல்லாது, தன் பின்னேயிருப்பது கண்டு மெல்லத் திரும்பினாள்.
பின்னால், அடர் சிகப்பு நிற லிப்ஸ்ட்டிக்கும்,லோ-கட் வெல்வெட் ப்ளவுஸூமாக, ஒரு நார்த் இண்டியன் ஆண்ட்டி நச்சென நிற்பது கண்டுப் பல்லைக் கடித்தவள், ‘அட! ஆன்ட்டி வெறியனே’- எனத் திட்டி விட்டு, உச்சுக் கொட்டியபடி அவனருகே வந்து,
“கண்ணை சிமிட்டுங்க! கல்லுச்சிலைன்னு நினைச்சு எவனாவது மாலையை மாட்டிறப் போறான்” – என முணுமுணுக்க,
வெகு அருகே நின்றவளின் மூக்குத்தியைக் கண்டு மூன்றடி பின்னே சென்றவன், நான்கு முறை இமைகளைத் தாழ்த்தி, நிமிர்த்தி, நாலாயிரம் முறை அவளைக் கண்களால் படம் பிடித்து விட்டு, “ம்க்கும்” என்றபடி முன்னே நடந்தான்.
அன்று மீட்டிங்கில், இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை பற்றி, ஆன்சைட்டிலிருப்பவர்கள் கேள்வி கேட்கவிருப்பதால், சசியின் டெஸ்க் ஃபோனிலிருந்தே call அட்டெண்ட் செய்ய அவனருகே வந்தாள் சக்தி.
அவள் இந்தப் புறம் வந்ததும், சட்டென எழுந்த அலெக்ஸ், தன்னுடைய சேரை அவளிடம் நீட்டி “உட்காருங்க,உட்காருங்க” எனச் சொல்லி ஈஈஈயென இளிக்கவும், தலையிலடித்தபடியே அமர்ந்தாள் அவள்.
பின்னிலிருந்து இரு கைகளால் அவள் உருவத்தை வழித்து நெற்றியில் வைத்து சொடுக்கிட்டு ‘எம்பூட்டு அழகு’ என்ற அலெக்ஸைக் கண்டு, சிரிப்பை அடக்கினான் சசி.
அவளிடம் அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு என்ன பதில் கூற வேண்டுமென அவன் சொல்லிக் கொடுக்க, புரிந்ததெனத் தலையை உருட்டியவள், விரல்களால் டெஸ்க்கில் தாளம் போட்டபடி லேசான பதற்றத்துடன் அமர்ந்திருப்பதை, ஓரக்கண்ணால் நோட்டம் விட்டான்.
அவளது பொன்னிறத்தின் முன்னே, அவள் அணிந்திருந்த தங்க ப்ரேஸ்லெட்டின் நிறம் மங்கித் தெரிவதைக் கண்டவன், ‘ஹ்ம்ம்ம்ம்!, எலுமிச்சை கலருன்னு இதைத் தான் சொல்றாங்களோ!’ – என்றபடி, அவளையே பார்த்தவண்ணமிருக்க,
அவன் பார்வை உணர்ந்து, பதட்டத்தை மறந்துத் தாடையை இறக்கி அவனை முறைத்த சக்தி,
“ஆன்ட்டி அந்தப் பக்கம் இருக்காங்க” – என்று பல்லைக் கடித்தாள்.
“ம்ம், ஆமா.. தெரியும்!, கால் முடிச்சுட்டுப் போய்.. பார்க்கனும்”– அசராமல் அவன் அளித்த பதிலில் காண்டாகியவளிடம்,
“இப்போதைக்கு…..” – என்றவனின் இமைகள் அவளை நிமிர்ந்து பார்த்து விட்டுப் பதில் சொல்லாதுப் பம்மி விட,
“இப்போதைக்கு??” – என முறைத்தபடி கேட்டவளிடம்,
“call-ல கூப்பிட்றாங்க! உங்களை.. உங்களைத் தான்” எனக் கூறி அவளை டைவர்ட் செய்து விட்டான்.
அதன் பின்பு விதவிதமான எக்ஸ்ப்ரஷன்களோடு விடாது பேசியவளையே, விழியகலாது பார்த்தபடி அமர்ந்திருந்தவன்,
“யா ஷ்யூர்! தேங்க்ஸ்” எனக் கூறி call-ஐ முடித்து விட்டு எழுந்து நின்றவளின் விலகிய முந்தானை காட்டிய வில்லங்கத்தில், விக்கி, மூச்சு விட முடியாது திணறிக் கொண்டிருக்க, அவன் பார்வை போகும் திக்கை உணர்ந்து, அவள் காளி அவதாரம் எடுத்ததும்,
சட்டென நிமிர்ந்து மேலே நோக்கியவன், “இந்த சீலிங் டிசைன் சிலோன்ல இருந்து வந்திருக்குமோ?, ஏன் டா அலெக்ஸூ?” – என அலெக்ஸைத் தேட, “பொறுக்கி” என முணுமுணுத்து விட்டுத் தன் இருக்கைக்கு நகர்ந்து விட்டாள் சக்தி.
அன்றிரவு டீம் டின்னர் என மக்களனைவரும் அருகிலிருக்கும் ரெஸ்ட்டாரண்ட்டில் ஒன்று கூடினர்.
‘எல்லாரும் ஒன்னாவே போகலாம்’ எனக் கூறி சுந்தர் வண்டி ஏற்பாடு செய்ய, காரில் முன்னிருந்த இருக்கையில் பவித்ராவும்,சக்தியும் ஏறிக் கொண்டதும், பின்னிருந்த இருக்கையில் ரவியுடன் ஏறினர் அலெக்ஸூம்,சசியும்,
காற்றுக்கு அசைந்த கற்றை முடியைக் காதோரம் ஒதுக்கியபடி, ஜிமிக்கி ஆட, மூக்குத்தி பளபளக்கப் பவித்ராவுடன் வளவளத்த சக்தியை,
கையைக் கட்டியபடி, கூச்ச,நாச்சம் பாராது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சசியின் தோளை இடித்தான் அலெக்ஸ்.
“என்ன ப்ரோ இப்பிடி வைச்ச கண்ணு வாங்காம பார்க்குறீங்க?” - அலெக்ஸ்
“ஜிமிக்கி, ஜின் மாதிரி கிண்னு-ன்னு மூளைக்கு ஏறுது ப்ரோ” – வழிசலாய் அவன்.
“ஆ…..ஹான்! ஜிக்குனா, ஜின்னாபின்னமாயிடுவீங்க ப்ரோ”
“ஜிக்குனாத் தான ப்ரோ?”
“அப்ப எனக்கு சான்ஸ் இல்லையா ப்ரோ?”
“உங்களுக்கு எட்டாவது ஃப்ளோர்ல சீட் நம்பர் 803-ல ஒரு பொண்ணு காத்துக்கிட்டிருக்கு ப்ரோ”
“அந்த சீட்-டு நேத்தே காலியாயிடுச்சாம் ப்ரோ”
“துக்….கம்” – என்றவன், சக்தி கையைத் தூக்கித் தனது ஹேர் க்ளிப்பை சரி செய்வது கண்டு,
“இந்தப் பக்கம், இந்தப் பக்கம் ரெண்டு முடி பறக்குது!, லெஃப்ட்,லெஃப்ட் சைட்ல” – என ரன்னிங் கமெண்ட்டரி கொடுத்துக் கொண்டிருக்க,
“நான் வேணா போய் ஹெல்ப் பண்ணட்டா ப்ரோ?” என இடையில் வந்த அலெக்ஸிடம், “மூக்கே இல்லாத உங்களுக்கெல்லாம், மூக்குத்தி போட்ட பொண்ணு எப்பிடி ப்ரோ செட் ஆகும்?” என்று தனது நீள மூக்கைத் தடவியபடி கூறவும்,
“பார்த்து ப்ரோ!, செருப்பால அடி வாங்கி அழும் போது, சீந்துறதுக்கு மூக்கில்லாம போயிடப் போகுது ,” என நொடித்தபடி திரும்பிக் கொண்டான்.
“பார்த்துக்கலாம் ப்ரோ” – என்றவன், முன்னிருக்கை ஜன்னலைத் திறந்து கொண்டிருந்த சக்தியைப் பார்த்தபடி,
‘சின்னச் சின்ன சிகரங்கள் காட்டி
செல்லக் கொலைகள் செய்யாதே’ – எனத் தொடங்க, பக்கவாட்டில் திரும்பி புருவத்தை உயர்த்திய சக்தி, பவித்ராவிடம்,
“இன்னிக்கு எல்லாமே வரம்பு மீறி போயிட்டிருக்கு பவி” – எனக் கோபம் கொள்ள,
“வரைமுறையே இல்லாம அழகா இருந்தா, வரம்பு மீறத் தான் தோணும்” என்று இவன் முணுமுணுக்க, நன்றாகத் திரும்பி அமர்ந்து அவள் முறைத்துப் பார்த்ததும், அவன், ஜன்னலில் தலையை விட்டு ‘வாரான் வாரான் பூச்சாண்டி, ரயிலு வண்டியிலே’ என்று புலம்பியபடி அமர்ந்து விட்டான்.
அதன் பின்பு அந்த BBQ ரெஸ்ட்டாரண்ட்டில் அலெக்ஸூம்,சசியும் எதிரெதிர் இருக்கையை ஆக்கிரமிக்க, அலெக்ஸின் அருகில் பவித்ராவும், சசியின் அருகே சக்தியும் அமர்ந்தனர்.
“அண்ணா, அவ வெஜிடேரியன்-ண்ணா” – நால்வருக்கும் நடுவிலிருந்த BBQ station-ல் நான்-வெஜ்களாக அடுக்கப்படவும், அவசரமாகக் கூறினாள் பவித்ரா.
“ஏன்-ம்மா?, வெள்ளிக் கிழமை விரதமா?” – என்ற அலெக்ஸிடம்.
“ப்ச், இல்லண்ணா! அவ பொதுவாவே சைவம் தான்” – என பவித்ரா கூறுவதைக் கேட்டு,
“அய்யய்ய” என முகத்தை சுழித்தான் சசி.
“நான், வெஜ் சாப்பிடுறவங்களோட ஜாயின் பண்ணிக்கிறேன்!” – என்றபடி சக்தி எழுந்து சென்றதும், “நானும் வரேன் டி” என பவித்ராவும் ஓடி விட்டாள்.
“என்ன ப்ரோ! காலி ஃப்ளவர் காலை சூப்பு வைச்சுக் குடிக்கப் போறீங்களா?, இல்ல, மஷ்ரூம் மண்டையைக் குழம்பு வைக்கப் போறீங்களா?” – அலெக்ஸ் நக்கலடித்ததும்,
“ப்ச்! க்ரேட் டிஸப்பாயிண்ட்மெண்ட்!” – என உதட்டைக் கடித்துத் தலையைத் தாழ்த்திய சசி, “மூக்குத்தி,மைலாப்பூரு,பேபிகார்னு.. ப்ச், அலெக்ஸூ மாமியா டா இது?” எனக் கேட்டான்.
“பால் கலர்ல இருக்கிறவ, ப்ராமின் தான்-ன்னு பார்த்தப்பவே கன்ஃபார்ம் பண்ணிருக்கனும் டா சசி!”
“விட்றா விட்றா! மடிசார் கட்ற புள்ளையை சைட் அடிச்சா, மண்ணுக்குள்ள போற வரைக்கும் மங்கலகரமா வாழலாம்” – என்று விட்டு எட்டி, க்ரில்ட் பைனாப்பிளை கடித்துக் கொண்டிருந்தவளை நோட்டம் விட்டபடியே உணவைக் காலி செய்யத் துவங்கினான் சசி.
அதன் பின்பு, மெயின் கோர்ஸ் எடுத்து வந்த சக்தி, இடம் மாற்றி அமர்வதைக் கண்டு அலெக்ஸிடம் கண்ணைக் காட்டிய சசி, தட்டு முழுவதும் நான்-வெஜ்களாக நிரப்பிக் கொண்டு அவளெதிரே சென்றமர்ந்தான்.
வேண்டுமென்றே அவள் முகத்தருகே ச்சவக்,ச்சவக்கெனக் கறியைக் கடித்த இருவரும்,
“யோவ் அலெக்ஸூ, சுவரொட்டி திங்காதவனுக்கெல்லாம் சொர்க்கத்துல எப்பிடிய்யா இடம் கிடைக்கும்?”
“மூளை ஃப்ரையை மூச்சு விடாம தின்னா, ராக்கெட் இல்லாமலே மூன்-ல கால் வைக்கலாம் தெரியுமா ப்ரோ?” - அலெக்ஸ்
“அன்னைக்கொரு நாள் குஷ்பூ வீட்ல குடல் குழம்பு சாப்பிட்டோமே! ஞாபகம் இருக்கா”
“ஈரல் நாக்குல கரையும் போதும், ஈரக்குலை குளிருது டா சசி”
-என மாற்றி மாற்றி ஆட்டின் அனாடமியை வர்ணிப்பது கண்டுக் குமட்டலை அடக்கிய சக்தி, இருவரையும் பார்வையால் எரிக்க, சசி,
“நண்டு வறுக்கத் தெரியுமா, கோழி பொரிக்கத் தெரியுமா?,
ஆட்டுக்காலை நசுக்கிப் போட்டு சூப்பு வைக்கத் தெரியுமா?” – என முகத்தைச் சுருக்கிக் கொண்டு, எக்ஸ்பிரஷனிலேயே வறுத்துப் பொரிக்க, கடுப்பாகிப் போன சக்தி, ‘இவனுங்களால நிம்மதியா சாப்பிடக் கூட முடியல’ எனப் புலம்பியபடியே எழுந்து சென்றாள்.
முதல் நாள் ரெஸ்ட்டாரெண்ட்டில் சரியாக உண்ணாததால், மறுநாள் காலை பசியோடு கண் விழித்தவள், சசியை சபித்தபடியேத் தன் நாளைத் தொடங்கினாள்.
விடுமுறையான அன்று மாலை தன் அன்னையுடன், உறவினரும், தனது பள்ளித் தோழியுமான கீதாவின் நிச்சயதார்த்தத்திற்கு வருகை தந்திருந்தவள் தன் பள்ளித் தோழிகளை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த மகிழ்ச்சியில், திறந்த வாய் மூடாது வளவளத்தபடி அமர்ந்திருந்தாள்.
அந்தப் பெரிய வீட்டின் ஒரு மூலையில் மாடிப்படிக்கட்டில் அமர்ந்திருந்தபடி வாயடித்துக் கொண்டிருந்தவள், முற்றத்திலிருந்துப் பரிட்சயமான குரலொன்று ஒலிப்பதைக் கண்டு எட்டி நோக்கினாள்.
“ஏன் டா சசி, அவனுக்கு ஒரு வேஷ்டியைக் கட்டி கூட்டி வந்திருந்தா, லட்சணமா இருந்திருக்கும்ல?”
“ம்க்கும்! மூக்குக் கண்ணாடியையே முந்நூறு தடவை சரி பண்றான்! இதுல வேஷ்டி கட்டி விட்ருந்தா, வெளங்கிருக்கும்!, இப்ப யாரு நிச்சயத்துக்கு வேஷ்டியெல்லாம் கட்டுறா?, நீ புலம்பாம இரேன்த்தை” – சசி.
“சசி, சித்தப்பாவுக்கு ஃபோனைப் போட்டு இந்த அட்ரஸை சொல்லுடா! இல்லாட்டி மனுஷன் பஸ் ஸ்டாண்ட் வாசல்லையே பத்து மணி வரை உட்கார்ந்திருப்பாரு”
“உனக்கெல்லாம் நக்கலு!, புருஷனை அங்க கழட்டி விட்டுட்டு, இங்க வந்து முழுப் புன்னகையோட உட்கார்ந்திருக்க! இரு உன் புன்னகை முகத்தை ஃபேஸ்புக்ல போட்டு சித்தப்பாவை டேக் பண்றேன்”
“ஏன் டா சசி, உன் பெரியப்பாவுக்கும்,உன் மாமனுக்கும் என்னடா பிரச்சனை?”
“ஏன், தெரிஞ்சுக்கிட்டு நீ தெருத் தெருவா போய் நோட்டீஸ் ஒட்டப் போறியா?, கிழவி, நீ அடங்க மாட்ட?”
“சசி, ஆத்தாக் கிட்ட அப்டிலாம் பேசாத” – சசியை அதட்டியபடி அவன் அம்மா விசாலாட்சி.
“சித்தி, சித்தப்பா இன்னும் வீட்ல இருந்தே கிளம்பலயாம்!, நீ, எடுத்து வைச்ச மஞ்ச கலர் சட்டையக் காணோம்ன்னு மாங்கு,மாங்குன்னு தேடிட்டு இருக்காராம்”
“ஐயோ! இந்த மனுஷனோட! இங்க ஃபோனைக் குடு டா”
“சசி, சம்பத் ஆஃபிஸ் ஃப்ரண்ட்ஸ் கால் பண்றானுங்க டா”
“இங்க குடு அத்தை! நான் பேசிக்கிறேன்”
அம்மா,சித்தி,அத்தை,பெரியம்மா,பாட்டி எனப் பெண்கள் சூழ் உலகொன்றில், திறந்த வாய் மூடாது வளவளவெனப் பேசியபடி மிக இயல்பாக நின்ற சசியைக் கண்டு வாயைப் பிளந்தாள் சக்தி.
துணுக் துணுக் துணுக்ஸ்ஸ்ஸ்ஸ்….
விடாது பெய்து கொண்டிருந்த மழையைச் சபித்தபடி அந்தக் கூடாரத்தின் கீழிருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்திருந்தாள் அவள்.
“ஐயோ உடம்பைக் குறைக்கிறேன்ங்குற பேர்ல நடையோ நடைன்னு நடந்து இப்பிடி உரண்டை இழுத்து வைச்சிருக்கேனே! இப்ப எப்பிடி வீட்டுக்குப் போறது! கால் வலி பின்னுதே! இதுல மழை வேற! ப்ச்!”
ஜாகிங் ஷூஸூடன் ஏதோ ஆர்வத்தில் வீட்டிலிருந்து 2,3 கிலோ மீட்டர்கள் கையை வீசி நடந்து வந்து விட்டவள், கால் வலி பொறுக்க முடியாது அந்தப் பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
அவள் குனியும் போது லேசாக ஆடிய பெஞ்சைக் கண்டு கொள்ளாது அதன் நுனியிலமர்ந்து, எரிச்சலுடன் அவள் காலை பிடித்துக் கொண்டிருக்கையில், அருகில் காலடியோசை கேட்டது.
மழைக்குத் தோதாக ஜெர்க்கின் அணிந்திருந்த அவன், தன் cap-ஐக் கழட்டி, முன் தலை முடியைக் கோதி விட்டுத் தன் கையிலிருந்த செல்ஃபோனில் பார்வையைப் பதித்து ‘பிரசாந்த் ஹிட்ஸை’ ஒலிக்க விட்டபடி மெல்ல அந்த பெஞ்சில் அமர்கையில்,
ஏற்கனவே ஆட்டமாடிக் கொண்டிருந்த பெஞ்ச், அவனது எடை தாங்காது சடாஆஆஆரென எகிறவும், மறுபுறம் அமர்ந்திருந்தவள், சௌய்ய்ய்ய்ய்ய்ங்கென ஸ்லைடில் சறுக்குவது போல் சறுக்கி, அவன் மேலேயே டம்மென வந்து விழுந்தாள்.
திடீரெனத் தன் மீது படர்ந்த பருமனான உடலின் எடை தாங்காது ஒரு நொடி தடுமாறிக் காலை ஊன்றி, அனிச்சையாக அவளை ஒரு கையால் பிடித்தபடி நிமிர்ந்தவனின் கழுத்தோரமாய்… அவளது சூடான மூச்சுக் காற்று!
‘அரும்பு மலரும் வசந்த காலம், ஆசை மலரும் கார்காலம்!
அன்பு மலரும் ஆறு காலம்!
ஒரு கண்ணில், இரு கண்ணில் உலவக் கண்டதால்..
விரும்புகிறேன்!!!!’ – ஹெட்செட்டுக்குள் பிரசாந்த் ஹிட்ஸ்!
எதிர்பாராது நடந்து விட்ட சம்பவத்தால், திகைப்பிலும்,பதற்றத்திலும் கிறுகிறுத்துப் போனவன், அவளையும் சேர்த்திழுத்தபடி எழுந்து நின்று,
“சாரி,சாரி” என அவள் விடாது முணுமுணுப்பதைக் காதில் வாங்காமல், மழையைப் பொருட்படுத்தாது அடித்துப் பிடித்து ஓடி விட்டான்.
