அத்தியாயம் - 7
சக்தியின் சிறிய(?!) வீட்டில் அளவாய் நிரம்பியிருந்தக் கூட்டத்தின் நாயகனாக அறிவிக்கப்பட்டிருந்த சசிதரன், தனக்குக் கொடுக்கப்பட்ட ரோலை ப்ளே செய்தபடி அமைதியாக அமர்வதை விட்டு விட்டுத் தன் குடும்பத்தினரோடு சேர்ந்து வேலை செய்தவாறு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.
“இவ்ளோ வெயிட்டா இருக்குற தாம்பாளத்தட்டை ஏன் பெரிம்மா தூக்கிட்டு வர்ற?” – எனக் கேட்டு அந்தத் தடிமனானப் பெண்மணியின் கையிலிருந்ததைப் பறித்தவன், வாங்கிக் கீழே வைக்க,
“ப்ச், மாப்ளகாரன் நீ என்னத்துக்கு டா இந்த வேலையெல்லாம் பார்க்குற?, சம்பத் எங்க போனான்?, அவனுக்கு அவன் பொண்டாட்டி பின்னாடி திரியவே நேரம் சரியாயிருக்கும்!” – என நொடித்துக் கொண்டவரை முறைத்தவன்,
“ப்ரெக்னண்ட்-ஆ இருக்குற பொண்ணு அது, வாந்தி,மயக்கம்ன்னு இருக்கு!, புருசன்காரன் பின்னாடி திரியுறான்! உனக்கென்ன அதனால?, பொறுப்பான மாமியாரா இல்லாட்டியும் பரவாயில்ல, சகப்பெண்மணியா, அடிப்படை மனசாட்சியோடயாவது நடந்துக்கிறியா நீ?, கல்யாணமான அடுத்த மாசத்துல இருந்து, எப்ப குழந்தை,எப்ப குழந்தைன்னு நச்சரிக்க வேண்டியது, குழந்தை உண்டாகி அந்தப் பொண்ணு சுணங்கிப் படுத்துக்கிட்டா, நாங்கல்லாம் இப்பிடியா இருந்தோம்ன்னு, ராகம் பாட வேண்டியது!, உன் மகன் கூட சண்டை போட்டா, இவளால என் மகன் நிம்மதியே போச்சுன்னு கதற வேண்டியது, இதுவே இரண்டு பேரும் இணக்கமா இருந்தா, இவ என் மகனைக் கைக்குள்ளப் போட்டுக்கிட்டான்னு கண்ணீர் விட வேண்டியது!, நீயெல்லாம் எதுக்கு உன் மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்குற?, கடைசி வரை உன்னோடயே வைச்சுக்க வேண்டியது தான?” – என லெங்க்த்தியாக வசனம் பேச,
இடுப்பில் செருகியிருந்த கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தவர்,
“ஆரம்பிச்சுட்டான்!” என்று முணுமுணுத்து விட்டு, “இந்தாடி விசாலம்!, இவனெல்லாம் உன்னைக் கடைசி வரைக் கூட வைச்சுக் கஞ்சி ஊத்துவான்னு நினைச்சுப் பார்த்திராத!, அழகு பெத்த புள்ளையை வேற கட்டுறான்!, கண்டிப்பா அவ பின்னாடியே தான் திரியுவான் பாரு” என்று விசாலத்தை வம்பிழுத்தார்.
கீழிருந்தத் தட்டுக்களை அடுக்கிக் கொண்டிருந்த விசாலம் அவரிடம்,
“தாரளமா திரியட்டும்! உங்க கொழுந்தன் பண்ணாததை அவனாவது பண்ணட்டும்! விடுங்க” என்று விட,
“எங்கம்மாவை என்ன, உன்னை மாதிரி கொடுமைக்கார மாமியார்ன்னு நினைச்சியா?, ஓடிரு” – என்று மிரட்டியவனைப் பார்த்துப் புருவம் உயர்த்தியபடி அங்கிருந்தப் பெண்கள் கூட்டத்தில் நின்றிருந்தாள் சக்தி.
நொடிக்கொரு முறை அவள் புறம் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தவன், பெரியவர்களிடமிருந்து விலகி நின்றபடி அவளைப் பார்க்க, அவள் உயர்த்தியிருந்தப் புருவங்களை மேலும் உயர்த்தி, உதட்டை வளைத்து “ம்ம்” எனத் தலையாட்டினாள்.
சொந்த அக்காவைத் தவிர ஊர்ல இருக்குற எல்லார்க்கிட்டயும் பெரிய நியாயவான் மாதிரி நடந்துக்க வேண்டியது! முட்டாப்பய!
அவள் சலிப்பும்,முறைப்புமாய் தன்னை நோக்குவது கண்டு புருவம் சுருக்கியவன், பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்து, வாட்ஸ் ஆப்-ஐத் திறந்து,
“சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!, என்ன முறைச்சுப் பார்க்குற மாதிரி இருக்குது?, என்னாச்சு?” – எனக் கேட்டனுப்பினான் அவளுக்கு.
இஷ்டத்திற்கு வளவளத்துக் கொண்டிருந்தத் தன் அத்தையொருவரின் அருகே நின்றிருந்த சக்தி, கையிலிருந்த ஃபோனை எடுத்து,
“சுடிதார் இல்ல. சேலை கட்டியிருக்கேன். பச்சைக் கலர் புடவை! அதுவும் நீங்க செலக்ட் பண்ணுனது” – என்றாள்.
“நான் வேணா, சிங்கு ச்சா,சிங்கு ச்சா பச்சைக்கலரு சிங்கு ச்சா-ன்னு பாட்டு பாடவா?”
“ப்ச், யோவ்”
“அந்த பாட்டுல வர்ற மீனா மாதிரி நீங்களும் ரொம்ப அழகாயிருக்கீங்க கண்மணி!”
“கரெக்ட்-ஆ சொல்லுங்க! மீனா அழகா?, நான் அழகா?”
“ம்க்க்க்கும், டஃப் க்வஸ்டின்! இடது கண் முக்கியமா, வலது கண் முக்கியமான்னு கேட்குற மாதிரியே இருக்குதே”
“யோவ் யோவ்!, நீ அடங்கவே மாட்டியாய்யா?”
“அதான்!, உங்களைக் கட்டிக்கப் போறேன்ல! முடிஞ்சா நீங்க அடக்குங்க”
“ப்ச், அதெல்லாம் இருக்கட்டும்!, எனக்கு இந்தப் புடவை நல்லாயிருக்கா இல்லையா?, அதைச் சொல்லுங்க முதல்ல”
“இஷ்கான் டெம்பிள்-ல இருக்குற ராதா பொம்மை மாதிரி இருக்கீங்க”
“அதாவது இப்ப நான் உங்களை கண்ணா,கருமை நிற கண்ணா-ன்னு சொல்லனும். அதான?”
“வாயால தான் சொல்லனுமா என்ன!, நீங்க தான் படமாவே போட்டுக் காட்டிட்டீங்களே!”
“அய்யோடா!”
“சும்மா சொல்லக் கூடாது, உங்க பால் கலருக்கு, இந்தப் பச்சைக் கலரு புடவை சும்மா அள்ளுதுங்க!, என்னை விட்டா….”
“விட்டா??”
“ம்க்க்க்க்க்கும், நாள் ஃபுல்-ஆ பார்த்துட்டே இருப்பேன்ங்க”
“அவ்ளோ நல்லவனா நீ?”
“நான் வேற ஏதாவது ட்ரை பண்ணி, நீங்க செருப்பு ஸ்மைலி அனுப்பிட்டா..?, ஏற்கனவே உங்கக் கண்ணுக்கு நான் பொறுக்கியா வேற தெரியுறேன்”
சிரிப்பு வந்தாலும்,அடக்கி புன்னகை முகமாக நின்றவளை நிமிர்ந்து நோக்கி,
“தங்க நிறத்துக்குத் தான் தமிழ்நாட்ட எழுதித் தரட்டுமா?” – என்று பாட்டாக அனுப்பியவன்,
“டேய் சசி, சட்டையை மாத்திட்டு வா டா!, நேரம் ஆச்சு” – என்று விசாலம் திட்டியதும், ஃபோனைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு நகர்ந்தான்.
குடும்பத்தினரும்,நெருங்கிய சொந்தங்களும் மட்டுமே கலந்து கொண்ட அந்தத் தட்டு மாற்றும் விழாவில், அதன் பிறகு வரிசையாக நடந்த சம்பிரதாயங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளாது ஆளுக்கொரு புறம் வாட்ஸ் ஆப்பில் கதைத்தபடி நின்றிருந்த இருவரின் கழுத்திலும் மாலையை மாட்டி அருகருகே நிற்க வைத்தனர்.
பெருசுகள் ஒவ்வொருவராக வந்து சந்தன,குங்குமம் வைத்து விட்டுச் செல்ல, நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைக்கும் சாக்கில் அதை அழித்துக் கொண்டிருந்தவனிடம்,
“மாப்பிள்ளைன்னா கையில ப்ரேஸ்லேட்,கழுத்துல செயின் எல்லாம் போட்டு கலர்ஃபுல்-ஆ இருக்க வேணாம்?, ஆஃபிஸ் போற மாதிரி ஃபார்மல் டிரஸ்ல வந்திருக்கீங்க?” – என்றாள் அவள் முணுமுணுப்பாக.
“காதுல தோடு, மூக்குக்கு மூக்குத்தி இதெல்லாம் விட்டுட்டீங்க?”
“ஹாஹாஹா”
“உங்களுக்கு அப்பிடி இருந்தாத் தான் பிடிக்குமா என்ன?”
“ச்ச ச்ச!, அத்தை தான் நீங்க அதெல்லாம் போட்டுக்கலன்னு புலம்பிட்டே இருந்தாங்க.”
“எங்கம்மாவுக்கு வேற வேலை இல்லங்க”
“சரி, எங்க உங்க ஃப்ரண்ட்ஸ் யாரையும் காணோம்?, முக்கியமா உங்க உயிர்ர்ர் நண்பர் அலெக்ஸ் மிஸ்ஸிங்?”
“அவன் தீபாவளி லீவ்ன்னு ஊருக்குப் போயிட்டான்ங்க”
“ஏன், அவர்க்கிட்ட நீங்க சொல்லலையா?”
“காலைல 6 மணிக்கு ஃபோன் பண்ணி, சக்திக்கும்,எனக்கும் இன்னைக்கு நிச்சயதார்த்தம் டா-ன்னு சொன்னேன். கனவு கண்டுட்டிருக்கியா டா கிறுக்கு ***-ன்னு சொல்லித் திட்டி ஃபோனை கட் பண்ணிட்டான்ங்க! அதுக்கப்புறம் நான் எத்தனையோ மெசேஜ் அனுப்பியும் அவன் ரெஸ்பாண்டே பண்ணலங்க”
“ஹாஹாஹா”
“நீங்க ஏன் பவித்ராவைக் கூப்பிடல?”
“அதுங்களலாம் கல்யாணத்துக்குக் கூப்பிடலாம்ன்னு இருக்கேன்! அவங்களலாம் விட, ரொம்ப முக்கியமான ஆள் ஒருத்தரை இன்னைக்கு இன்வைட் பண்ணியிருக்கேன். அவங்களுக்குத் தான் வெயிட்டிங்”
“ஓஹோ”- அவன் தலையை ஆட்டியதும்,
“ம்ம்ம்” – என்றுத் தானும் தலையாட்டியபடி, மூடிய இதழ்களோடு புன்னகை முகமாகக் கூறியவளின், இதழ் வளைவில் விழுந்த இரு பிறை நிலவுகளைக் கண்டு.. மனம் மயங்கி நின்றவனின் தோளில் இடித்து,
“பார்த்தது போதும், அந்தப் பாட்டிக்கு நெத்தியைக் காட்டுங்க” – என்று அவள் முணுமுணுக்க,
சரியாய் நின்றவன்,அந்தப் பெண்மணி பொட்டு வைத்து விட்டுப் பக்கவாட்டில் நகர்ந்ததும், மீண்டும் அவள் புறம் திரும்பி,
“கண்ணைத் திருப்பவே முடியல! கொள்ளை அழகா இருக்கீங்க!, ” என்றான் அடிக்குரலில்.
மீண்டும் பிறை நிலவுகளை இதழோரங்களில் உலா வர விட்டபடி, தன் கன்னத்து வண்ணத்தை மறைக்க, அவன் கையிலிருந்த கர்சீப்பைப் பிடுங்கியவள், அவன் நெற்றியில் மிகுதியாயிருந்த சந்தனத்தைத் துடைத்தவாறு,
“இப்பிடியே பார்த்துட்டிருந்தீங்கன்னா, நான் அப்பிடியே ஓடிடுவேன் சொல்லிட்டேன்!” – என்று அவன் விழி பாராது மிரட்ட,
அவள் கைப்பற்றிக் கீழிறக்கியவன், “முடிஞ்சா ஓடிப் பாருங்க” – என்றான் சவாலாய்.
சட்டென அவன் விழிகளை நோக்கிப் புருவம் தூக்கியவளிடம்,
“என் கிட்ட வசமா மாட்டிக்கிட்டீங்க! இனித் தப்பிக்கவே முடியாது” என்றான் அவள் முகம் முழுக்கத் தன் கருமணிகளை நகரச் செய்தபடி.
“அப்பிடியா?” என்கிற பாவனையுடன் விழிகளை விரித்து உதட்டை வளைத்தாலும், “ஸேம் டூ யூ” என்றாள் அவள் அலட்சியமாய்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி, கோர்த்திருந்தக் கைகளுடன் உலகம் மறந்து நின்றிருந்த வேளை,
“நீ எதுக்குடி இங்க வந்த?” – எனக் காட்டுக்கத்தலாய் கத்திய சசிதரனின் சித்தியினது குரலில், இருவரும் ஒரு சேரத் திரும்பி வாசலை நோக்கினர்.
தன் குடும்பத்தினரையும்,உறவுகளையும், முக்கியமாக.. அவ்விழாவின் நாயகனாகத் தன் தம்பியை எதிர்பார்த்திராத சத்யா, திகைப்பும்,மகிழ்ச்சியுமாய்க் கலங்கிய விழிகளுடன் வாசலருகே நிற்க, அவள் பின்னே கலக்கமான முகத்துடன் தன் மகனைக் கையில் ஏந்தியவாறு நின்றிருந்தான் சஞ்சயன்.
“இவன் தான் முக்கியம்ன்னு வீட்டை விட்டு ஓடி, குடும்ப மானத்தை வாங்கி, பெத்த அப்பனையும் காவு வாங்குனது பத்தலன்னு, இப்ப ஒரு நல்லது நடக்கையில, எந்த விதக் குற்றவுணர்ச்சியுமில்லாம, இப்பிடி வந்து நிற்குற? உன்னை யாருடி இங்க வரச் சொல்லிக் கூப்பிட்டது?” – பொங்கிய பெரியம்மாவின் கையைப் பற்றி, “ம்மா,ம்மா” என்று அவரது மகன் சம்பத் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க,
தன் கையைப் பற்றியிருந்தவனின் கைகள் இறுகுவதை அறியாது,அவன் முகத்தைக் கூட கவனிக்காது, குனிந்தத் தலையோடு அழுத படி நிற்கும் சத்யாவைக் கண்டதும், கோபத்தில் மூக்கு விடைக்கத் தன் கையை அவசரமாக அவனிடமிருந்து உறுவிக் கொண்டு,
“நான் தான் வர சொன்னேன்” என்றபடி முன்னே சென்று நின்றாள் சக்தி.
“நீயா?” – என்றவர்கள் அவளை எரிச்சலும்,அதிருப்தியுமாய் நோக்க,
தன் மருமகனின் கையிலிருக்கும் பேரன், அப்படியேத் தன் கணவரை உரித்து வைத்திருப்பதைக் கண்டு, மெலிதாய்த் தேங்கி விட்ட விழிகளுடன், உணர்ச்சிப் பெருக்கில் சிலையாக நின்றிருந்த விசாலத்திடம்,
“ஏன்-த்தை நீங்க அமைதியா இருக்கீங்க?” எனக் கேட்டாள் நேரடியாக.
பதிலற்றுக் கண்ணீரைச் சிதற விட்டவர், இரு கண்களையும் ஒரு கையால் மூடியபடிக் குனிந்துத் தோள் குலுங்க அழத் தொடங்க, இங்கு சத்யாவின் அழுகையும் பெருகியது.
“நீ எதுக்கு இவளை வரச் சொன்ன?, உனக்கென்னத்துக்கு இந்தத் தேவையில்லாத வேலை?, என்ன?, உள்ள வர்றதுக்கு முன்னாடியே குடும்பத்தை சேர்த்து வைக்குறியாக்கும்?, என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசுல?, இவ செஞ்சு வைச்சக் காரியத்தால, மலை போல கம்பீரமா இருந்த மனுசன், நெஞ்சு வலியில உசுரை விட்டாரு! அது தெரியுமா உனக்கு?, இந்த ஜென்மத்துல இவளை நாங்க யாரும் மன்னிக்கிறதாவும் இல்ல!, வீட்டுக்குள்ள சேர்த்திருக்கிறதாகவும் இல்ல!” – எகிறிக் கொண்டு வந்த சித்தியைக் கண்டு, நெற்றியைச் சொரிந்த சக்தி,
“இப்ப எதுக்குக் காலம் போன காலத்துல, இப்பிடி மூச்சைப் பிடிச்சு பேசிட்டிருக்கீங்க?, இந்தக்கா என் ஸ்கூல் சீனியர், என் ஃப்ரண்ட். அதான் அவங்களை நான் என் நிச்சயதார்த்தத்துக்கு இன்வைட் பண்ணுனேன்!, மத்தபடி, இவங்க தான், என் நாத்தனார்ன்னு எனக்கு நீங்கக் கத்த ஆரம்பிச்ச நிமிசம் வரைத் தெரியாது” என பல்ட்டி அடிக்க,
திகைப்பில் விழி விரித்த சத்யா, “என்ன சொல்ற சக்தி?, அன்னைக்கு என் வீட்டுக்கு வந்தப்போ, என் குடும்ப ஃபோட்டோ அத்தனையையும் நீ பார்த்தியே” - என்று இடையில் வர,
ஐயோ! நாரதர் வேலை மட்டும் பார்த்துட்டு, நாசூக்கா விலகிடலாம்ன்னு நினைச்சா, இந்தக்கா வேற, என் வேசத்தை மாத்தி விடுதே!
என்ன சொல்லி சமாளிப்பதென அவள் யோசித்த வினாடியில் இடை புகுந்த பெரியம்மா,
“என்னது, நீ இவ வீட்டுக்கெல்லாம் போயிருக்கியா?, அப்டின்னா தெரிஞ்சு தான கூப்பிட்டிருக்க?, பெரியவங்கக் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்காம, நீயா இவ்ளோ பெரிய முடிவெடுத்து உன் இஷ்டத்துக்கு வேலை பார்த்திருக்கேனா, உனக்கெல்லாம் எவ்ளோ திமிரு இருக்கனும்!, அழகா இருக்குறவளுக, குணமா இருக்க மாட்டாளுகன்னு நான் அன்னைக்கு சொன்னேனே, யாராவது கேட்டீங்களா?” – என்று புகைய,
“தேவையில்லாம பேசாதீங்கத்தை” – பல்லைக் கடித்தவளை அடக்கிய கோகிலா, “என்னடி செஞ்சு வைச்சிருக்க?, உனக்கென்னத்துக்குடி இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம்?” என்று கடிந்து விட்டு,
“தெரியாம, ஏதோ ஆர்வக் கோளாறுல பண்ணிட்டா!, வார்த்தையை வளர்க்க வேணாம் மதினி!” என்று இரைஞ்சலுடன் கூறவும்,
“ம்மா, எதுக்குக் கெஞ்சுற மாதிரி பேசுற இப்போ?” என்றவள், விசாலத்திடம்,
“அத்தை, அத்தை நிமிர்ந்து பாருங்க! இப்பவும் எதுவும் பேசாம, குனிஞ்சு அழுதுட்டே இருந்தீங்கன்னா, காலம் முழுக்க நீங்க, உங்க மகளை நினைச்சு அழுதுட்டு மட்டும் தான் இருக்க முடியும்! பாட்டி,மாமான்னு உறவுகளோட வளர வேண்டிய உங்க பேரப்புள்ள, தன்னந்தனியா நிக்குறதைப் பாருங்க!, உங்க ஒரே மக வயித்துப் பேரன் வேண்டாமா உங்களுக்கு?” – என மற்றவர்களை ‘நெக்லெக்ட்’ செய்து விட்டு, விசாலத்தை நோக்கி ‘நெட்’-ஐப் போட, அதில் சரியாகச் சிக்கினார் விசாலம்.
அழுகையோடு அனைவரையும் கடந்து விரைந்தோடி வந்தவர், மருமகனின் கையிலிருந்தப் பேரனை இழுத்துத் தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டு, அவன் தலையில் முத்தமிட்டு, “என் சாமி, என் சாமி” என்றவாறு கண்ணீரைப் பொழிய,
சத்யாவும் மொத்தமாக உடைந்து, தன் அன்னையை நெருங்கி “என்னை மன்னிச்சுரும்மா, என்னை மன்னிச்சிரும்மா!, சாரிம்மா” எனக் கதறவும், நிமிர்ந்து, அவள் கன்னம் பற்றித் தேய்த்துப் பின் பெருகிய விழி நீருடன், அவளையும் அணைத்துக் கொள்ள,
“ஷ்ஷ்ஷ்ஷ்” – எனப் பெருமூச்சை வெளியிட்டு, ஹப்பாடா என ஆசுவாசமானாள் சக்தி.
அன்னையும்,மகளும் ஒன்று சேர்ந்து விட்டதை அருவெறுப்புடன் நோக்கிய ஓரகத்திகளிருவரும், தங்களது கணவன்மார்களைப் பார்க்க,
“என்ன விசாலம், நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டியா?, உன் புருசனைக் கொன்னு, உன் தாலி மேல குடும்பம் நடத்துறவ அவ!, அவ பண்ண தப்பெல்லாம் மறந்து, இப்பிடித் தாய்ப் பாசத்துல நீ அவளை வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டா, இவளால உயிரை விட்ட என் தம்பி சாவுக்கு எப்பிடி நியாயம் கிடைக்கும்?, நீ உன் புருசனுக்கு துரோகம் செய்ற விசாலம்” – பெரியப்பா கடுமையாய்ப் பேச,
அதிர்ந்து நின்றவரிடம்,
“கடைசி வரை உன் புருசன் அவளை ஏத்துக்கவே இல்ல!, நான் சாகுற வரை நீ என் முகத்துல முழிக்கக் கூடாதுன்னு அவரு, துரத்தி விட்டவளை, நீ வீட்டுக்குள்ள சேர்த்துக்கப் பார்க்குற!, உன் புருசன் இதையெல்லாம் ஆமோதிப்பாருன்னு நினைக்குறியா?” – என பெரியம்மா வேறு ஏற்றி விட,
‘இவளுங்க அடங்க மாட்டாளுங்க போலயே’ – என உச்சுக் கொட்டிய சக்தி,
“அவரு உங்கக் கிட்ட வந்து சொன்னாரா?, நான் இதையெல்லாம் ஏத்துக்க மாட்டேன்னு?, எப்பிடி இவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?” – எனக் கேட்டாள்.
“சக்தி..” – சென்னியப்பன் மகளை அமைதிப்படுத்த நினைக்க,
“அவளை எதுவும் சொல்லாதீங்கண்ணா” என்ற விசாலம் மகளையும்,பேரனையும் கையில் பிடித்தபடி,
“அவரு இருந்திருந்தா, தன் மகளை இத்தனை வருசமா இப்பிடித் தனியா விட்ருக்க மாட்டாருக்கா! யாருமில்லாத அநாதை மாதிரி தன் பேரனைத் தவிக்க வைச்சிருக்க மாட்டாரு! பாசமா வளர்த்த பிள்ளை, தனக்கான வாழ்க்கையைத் தானே தேடிகிச்சேன்னு அன்னைக்கு அவருக்கிருந்தது கோபம் மட்டும் தான்! வெறுப்பு கிடையாது! அது மட்டும் நிச்சயம்! ஏன்னா, சாகுறதுக்கு 2 நாள் முன்னாடி உயில் எழுதியிருக்காரு, தன் சொத்து,பத்து அத்தனையையும் தன்னோட 2 பிள்ளைங்களுக்கும் சரி சமமா! தீராத கோபமிருக்கிறவரு பண்ற காரியமா அது? சொல்லுங்க” என்றார்.
“………” – அதிர்ச்சியும்,குழப்புமாய் நின்றிருந்தக் கூட்டத்திடம்,
“அவரு நினைச்சிருந்தா, அன்னைக்கு அவருக்கிருந்த கோபத்துக்கு, மகளுக்குன்னு சல்லி பைசா கூட வைக்காம அத்தனையையும் மகனுக்கே எழுதியிருக்கலாம்! ஆனா அவரு, இந்தக் கோப,தாபமெல்லாம் தற்காலிகம் தான்!, ஆத்திரம் அடங்குனதும் மகளை நிச்சயம் தன்னோட சேர்த்துக்கனும்ங்குற நினைப்புல தான் அப்பிடிப் பண்ணியிருக்காரு” என்றார்.
“இதை ஏன்ங்கண்ணி எங்கக் கிட்ட முன்னமே சொல்லல?” – சித்தப்பா கேட்கவும்,
கண்ணீர் வழிய தன் மகளின் கன்னம் பற்றியவர், “சொந்தக்காரங்க முன்னாடி என் புள்ள இப்பிடியெல்லாம் பேச்சு வாங்க வேணாம்ன்னு தான் தம்பி நான் ஒன்னும் சொல்லிக்கல!, கண்ணுல படாம இருந்தாலும் பரவாயில்ல, அவ சந்தோசமா சுகமா வாழ்ந்தா போதும்ன்னு நினைச்சு, என் மனசைத் தேத்திக்கிட்டேன்ப்பா” – என்று கூற..
“பெத்தப் பொண்ணை விட சொந்தக்காரங்க அவ்ளோ முக்கியமா-த்தை?, அவங்களை விட்டுக் கொடுத்துட்டு, இவங்களை வீட்டுக்குள்ள வைச்சிட்டிருக்கீங்க?” – என எரிச்சலுடன் கேட்டாள் சக்தி.
“சக்திதிதிதி” – ஓரகத்திகளின் நெருப்புக் கக்கும் விழிகளைப் பார்த்துப் பயந்து மகளைக் கட்டுப்படுத்த நினைத்தபடி கோகிலா.
“விசாலம் இந்தப் பேச்செல்லாம் நாங்க கேட்கனுமின்னு எந்த அவசியமுமில்ல” – பெரியம்மா
“சரியா சொன்னீங்கக்கா!, வாங்க கிளம்புவோம்” – சித்தி.
“ஐயோ அக்கா, அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க” – பதறிய விசாலத்திடம்,
“போய்ட்டுப் போறாங்க விடுங்கத்தை” – என்றவளைக் கண்டுத் தலையிலடித்துக் கொண்டு,
“வாயை மூட்றி” – என கோகிலா பல்லைக் கடிக்க,
“இப்பிடியெல்லாம் பேசக் கூடாதும்மா சக்தி” – பாவமாய்க் கூறிய விசாலத்தை முறைத்து,
“இப்பிடித் தான் எதுவும் பேசக் கூடாதுன்னு சொல்லி சொல்லி வளர்த்துருக்கீங்க போல சத்யாக்காவை!, அதான் இவங்கள்லாம் அவ்ளோ பேசியும் எதுவும் பதில் பேசாம, அத்தனைப் பேச்சையையும் வாங்கிக்கிட்டு, அமைதியா நிக்குறாங்க!, பேச வேண்டிய இடத்துல பேசனும்த்தை!, அப்பப்ப வந்து போற சொந்தங்களுக்கு பயந்துக்கிட்டு, பெத்த மகளை எப்பிடித்தை இத்தனை வருசமா ஒதுக்கி வைச்சீங்க?, அப்பிடியே கோபப்பட்டுக்கிட்டு அவங்க உறவை உதறி விட்டுட்டுப் போனாத் தான் என்ன இப்ப?, என்ன குறைஞ்சிடும் உங்க வாழ்க்கைல?,
சத்யாக்காவை எனக்கு ஸ்கூல் படிக்குற காலத்துல இருந்து தெரியும்! எனக்கு ரொம்ப ரொம்ப விருப்பமானவங்க!, அவங்களோட ஒரு ஃப்ரண்ட்-ஆ பழகுற எனக்கே, அவங்க தன்னோட பெத்தவங்களைப் பத்திப் பேசிக் கண்ணீர் விடறதைப் பார்க்குறப்ப அவ்ளோ கஷ்டமா இருந்தது!, ஆனா.. நீங்க எப்பிடித்தை இத்தனை வருசமா அவங்களை அழ விட்டு வேடிக்கை பார்த்துட்டிருந்திருக்கீங்க?”
“விடு சக்தி… பழசெல்லாம் பேச வேணாம்” – மெல்லிய குரலில் இடையிட்டபடி சத்யா.
“நீங்க சும்மாயிருங்கக்கா!, இந்த பெரிய பாப்பாவுக்கும்,சின்ன பாப்பாவுக்கும் பயந்துக்கிட்டாத்தை சத்யாக்காவை ஒதுக்கி வைச்சீங்க?, வாய் கிழிய நியாயம் பேசுற உங்க மகனுக்குத் தெரியாதா இவங்களை சமாளிக்க?, தப்பு பண்ணிட்டீங்கத்தை! அநாவசியமா அவங்களை 5 வருசமா ஒதுக்கி வைச்சுப் பெரிய தப்பு பண்ணியிருக்கீங்க”
“இங்க வந்து இவ்ளோ பேசுறாங்களே இந்த சின்னத்தை, அவங்க பையன் ஹரி, ரெஜினா-ன்னு ஒரு கிறிஸ்டியன் பொண்ணைக் காதலிக்குறது மட்டும் நாளைக்குத் தெரிய வந்ததுன்னா, உயிரை விட்ருவாங்களா என்ன?, கிடையாது! கொஞ்ச நாள் குதிச்சு ஆட்டமாடிட்டு, ஆத்திரம் தீர்ந்ததும், எனக்கிருக்கிறது ஒரே மகன்!, அவனை என்னால விலக்கி வைக்க முடியல-ன்னு சென்டிமெண்ட்-ஆ பேசி, மகன் பக்கம் ஜாயிண்ட் அடிச்சிருவாங்க!, போயும் போயும் இவங்களுக்காகவா நம்ம பிள்ளையை விலக்கி வைச்சோம்ன்னு உங்களையே ஃபீல் பண்ண வைச்சிடுவாங்க”
-விடாது பேசுபவளைக் கட்டுப்படுத்த முடியாது கோகிலா திணற, ஹரி பம்மி தன் தந்தையின் பின்பு சென்று நின்று கொண்டான்.
சக்தியின் பேச்சைக் கேட்டுப் பதறி நெஞ்சைப் பற்றியபடி “டேய் ஹரி, டேய்ய்” என விடாது கத்துபவரைக் கண்டு அவன்,
“டாடி,டாடி காப்பாத்துங்க டாடி” என்று தந்தையின் தோளைச் சொரிய, அவரோ,
“நீ முதல்ல உங்கம்மாக்கிட்டயிருந்து என்னைக் காப்பாத்துடா” எனப் புலம்பிக் கொண்டிருந்தார்.
“டேய் ஹரி, இந்தப் பொண்ணு சொல்றதெல்லாம் உண்மையா டா?, நீ வேத்து மதத்துப் பொண்ணைக் காதலிக்குறியா?” – குண்டு பெரியப்பா கர்ஜிக்க,
“ப்ச், ப்பா, இந்த இடத்துல இதைப் பத்திப் பேசியே ஆகனுமா?, சும்மா இருங்களேன்” – என்று அவரை அடக்கிய சம்பத்,
“சத்யா, உன் வீட்டுக்காரர் ரொம்ப நேரமா ஒரே இடத்துல பாவமா நிற்குறாரு! முதல்ல அவரைக் கூட்டிக்கிட்டு உள்ள வா நீ!, போதும் பேசுனதெல்லாம்! இங்க யாரும் மாறப் போறதில்ல!, யாரும் யாரையும் மாத்தவும் வேணாம்! ஏத்துக்கிறவங்க ஏத்துக்கட்டும்! முடியாதவங்க விலகி நிற்கட்டும்! பாவம் விசாலம் சித்தி!,விட்றேன் சக்தி!” என்றான்.
“ம்ம்” – எனத் தலையாட்டியவள், இரு அத்தைமார்களையும் முறைத்துப் பின், அழுதபடியே நின்றிருந்த விசாலத்தினருகே சென்று,
“நான் உங்களை மட்டும் தப்பு சொல்லல!, உங்க பையனையும் சேர்த்துத் தான் சொல்றேன்!, இந்த ரெண்டு பாப்பாங்களும், அவர்க்கிட்ட வாய்பேச பயப்பட்றாங்க, பட்டு,பட்டுன்னு பேசி விட்றாருன்னு! இந்த மாதிரி ஒரு சூராதி,சூரனை வீட்ல வைச்சுக்கிட்டு, எதுக்குப் பயந்துக்கிட்டிருந்தீங்க நீங்க?, உங்க மகளை விடுங்க! உங்க பேரன் பாவமில்லையா?, அம்மா,அப்பாவைத் தவிர அவனுக்கு வேற எந்த சொந்தமுமில்லைன்னு மனசுல பதிஞ்சுடாதா?” எனக் கேட்டதும்,
“சசி மாதிரி சத்யா கிடையாது சக்தி, வாய் பேசத் தெரியாது!, யாரும் அவ முன்ன கத்திப் பேசுனா, காதைப் பொத்திக்கிட்டு அழத் தான் செய்வாளே தவிர, அதிர்ந்து பேச மாட்டா!, என் பொண்ணை எங்க பேசியே கொன்றுவாங்களோங்குற பயத்துல தான் நான் ஒதுங்கியிருந்தேன்!, அது போக, உன் மாமா வேற, சத்யா புருசனை ரொம்பத் தரக்குறைவா பேசியிருக்காரு!, அவருக்கு எங்க மேல எதுவும் கோபமோ, அதான் அவளா என்னைத் தேடி வரலையோன்னுலாம் யோசிச்சு நான் பயந்துருக்கேன் சக்தி! அதான் எப்பிடியோ அவ புருசனோட சந்தோசமா இருந்தா போதும்ங்குற நினைப்போட இருந்துட்டேன்! தப்பு தான்! ரொம்பத் தப்போன்னு நீ சொன்னதும் தான் தோணுது” – எனப் பாவமாகக் கூறியவரிடம் சஞ்சயன்,
“எனக்கு எந்தக் கோபமும் கிடையாதுங்கத்தை! ஒரு வேளை எனக்கு அம்மா,அப்பா இருந்திருந்தா, அவங்களும் கூட காதல் கல்யாணத்தை எதிர்க்கத் தான் செய்திருப்பாங்க! மாமா மேல எனக்கு எந்தக் கோபமோ,வெறுப்போ இல்லைத்தை!, உங்க சொந்தங்களைத் தாண்டி எங்களால உங்களை நெருங்க முடியும்ன்னு தோணல!, அதான் நாங்களா உங்களைத் தேடி வரல! எங்க மேலயும் தப்பிருக்கு. மன்னிச்சிடுங்க” – என கையெடுத்துக் கும்பிட,
“ஐயோ தம்பி! நான் தான் மன்னிப்புக் கேட்கனும்” – என்று பதறிய விசாலம்,
“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருந்தது தம்பி, என் பொண்ணை நீங்க நல்லபடியா பார்த்துப்பீங்கன்னு!, அந்த நம்பிக்கை அவருக்கும் கூட வந்திருக்கும், ஆனா.. அதுக்குள்ள போயிட்டாரு!, நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க! அவரு ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் உண்டு” – என்றவர் பேரனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொஞ்சியபடியும், சத்யாவை அணைத்தபடியும் தனி உலகத்தில் சஞ்சரித்து விட, வந்த சொந்தங்களில் பலர் உணவுண்ணும் இடத்தை நோக்கிச் செல்வது கண்டு, கோகிலாவும்,சென்னியப்பனும் அங்கே விரைந்தனர்.
சசியின் குடும்பத்தை சம்பத் சமாளித்து, “சசிக்காக பாரும்மா!, அவன் இல்லாம உன்னால இந்தக் குடும்பத்துல ஒரு காரியம் பண்ணிட முடியுமா?, நீ பெத்த மவன் நானு, ஆனா… நீ என் பேரைச் சொல்றதை விட, சசி பேரை சொல்றது தான் ஜாஸ்தி!” எனக் கூற,
“அதுக்குத் தான் அவனுக்குப் பொண்டாட்டியா வரப் போறவ, என்னைய வெளிய போ-ன்னு சொல்லிட்டாளே” – எனப் பொருமியவரிடம்,
“ஆமா, நீ அவளை குணமில்லாதவ-ன்னு சொன்னா, கோபப்படத் தான் செய்வா” என்று அவன் திட்ட, சித்தப்பாவும் இடையில்,
“நல்ல குணமுள்ள பொண்ணா இருக்கப் போய்த் தான், கல்யாணத்துக்கு முன்ன குடும்பம் ஒன்னு சேரனும்ன்னு நினைச்சிருக்கு! இந்தக் காலத்துல யாரு இப்பிடியிருக்கா?, நாத்தனார் இல்லையா, ஹப்பாடா நிம்மதின்னு நினைக்குறவங்க தான் அதிகம்” – என்று கூற,
ஹரியையே முறைத்துப் பார்த்து நின்றிருந்த சித்தியைக் கண்டு, அவரது மகள் ஜனனி, “ரெஜினா என் ஃப்ரண்டு தான். அவ அண்ணியா வந்தா, அவளுக்குத் தான் நான் சப்போர்ட் பண்ணுவேன்” என்று விட,
“என் சப்போர்ட் என் மகனுக்குத் தான்”-என்று சித்தப்பாவும் தாவ,
“ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமிய பெரியப்பா, “எல்லாருக்கும் பயம் விட்டுப் போச்சு” என்றபடியே உள்ளே செல்ல, அவரைத் தொடர்ந்து அனைவரும் உள் நுழைந்தனர்.
அனைவரும் உள்ளே வருவதைக் கண்டு விசாலம் அவசரமாய் எழுந்து வந்து, “சக்தி சின்னப் பொண்ணு! தெரியாம பேசிட்டா!, நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க” என்று கூற, கோகிலாவும் அதை ஆதரித்தபடி அருகே நிற்க,
கண்ணசைவில் சத்யாவை அருகிலிழைத்த விசாலம் அவளிடம் கண்ணைக் காட்ட,
“என்னை மன்னிச்சிடுங்க பெரியப்பா” – என்று சத்யா மெல்லிய குரலில் கூறியதும்,
“உன் புருசன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா?” – என சஞ்சயனை ஒரு பார்வை பார்த்தபடி பெரியப்பா தொடங்கவும், அனைவரும் ஜாயிண்ட் அடித்துக் கொண்டனர்.
முறைப்பாய் இருந்தாலும், அதன் பின்பு பெரியம்மாவும்,சித்தியும் அதிகம் வாய் பேசாததால் சத்யா அத்துடன் தப்பித்தாள்!
சத்யாவையும்,அவளது மகனையும் இளசுகள் அனைவரும் சுற்றிக் கொள்ள, சம்பத்தும்,ஹரியும் சஞ்சயனோடு பேச முயற்சித்தனர்.
சக்தியின் சொந்தங்கள் சில, “உனக்கெதுக்குடி இந்த அன்னை தெரசா வேலையெல்லாம்” என்று முணுமுணுத்தும் சிலர், “அந்தப் பொண்ணைப் பார்க்க ரொம்பப் பாவமா இருக்கு! நல்ல காரியம் பண்ணிட்டடி சக்தி” என்றும் பாராட்டியவாறிருக்க, அவர்களனைவருக்கும் செவி சாய்க்காது, இக்காட்சிகளிலிருந்துத் தவறி விட்ட ஒருவனை வெகு தீவிரமாய்த் தேடிக் கொண்டிருந்தாள் சக்தி.
எங்க போனான்-எனக் கண்களை அலையவிட்டவள், பின் வாசல் வழியாக வெளியே வர, சற்றுத்தள்ளியிருந்த வேப்பமரத்தடியில் ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, மறு கையால் பரபரவெனப் பிடரியைக் கோதியபடி இறுகிய உடலோடு விறைத்துப் போய் நின்றிருந்தான் சசி.
“ஏன் இங்க நிற்குறீங்க?” – என்ற கேள்வியோடு அருகே வந்தவளை அவன் திரும்பியும் பாராது நிற்க,
“உங்கக்கா அங்க…” – என்றவாறே அவன் முன்னே வந்தவள், எதிரே வெறித்தபடி நின்றிருந்தவனின் பார்வை ஒளியிழந்து, உணர்ச்சியற்று, ஒரு வித அந்நியத்தன்மையோடு, காணப்படுவதைக் கண்டு புருவம் சுருக்கினாள்.
இதுவரை அவனை ஒரு அசட்டு சிரிப்புடன், வழிசலும்,நெளிப்புமாய், தயக்கமும், தடுமாற்றமுமாய் கண்டிருப்பவள், இப்போது வெகு தீவிரமான விழிகளுடன், இலகுத்தன்மையற்று, கிட்ட நெருங்க முடியாத அளவு இறுகிய முகத்தோடு நிற்பவனைப் புதிதாய் நோக்கி, அதில் தெரிந்த விலகலில் வியந்து,
“என்னாச்சு?” எனக் கேட்டாள்.
“………..” – பதிலற்று மூக்கை விடைத்தவன், பற்களைக் கடித்து, உதட்டை அழுந்த மூடிக் கொண்டான்.
“உங்களைத் தான் கேட்குறேன், என்னாச்சு?, அங்க, இத்தனை வருசம் கழிச்சு உங்க அக்கா வந்திருக்காங்க!, நீங்க என்னடான்னா, இங்க வந்து தனியா நின்னுட்டிருக்கீங்க?”
விழிகளை மூடி, உதட்டை ஈரப்படுத்தியவன், தன்னைக் கட்டுப்படுத்த முயற்சித்தான்.
“ஹலோ.. என்ன்ன்ன??” – அவளுக்கும் மெல்ல பொறுமை பறி போகத் தொடங்கியிருந்தது.
“எவ்ளோ நாளா தெரியும் உங்களுக்கு?” – அவனது கரகரக்குரல், சற்று மெல்லிசாய் வர,
தன் முகம் பார்க்காது நிற்பவனை அளவிட்டபடியே,
“சத்யாக்காவையா?” – எனக் கேட்டு அவனிடம் பதிலில்லையென்றதும்,
“ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே தெரியும். அவங்க என் பிலவ்ட் சீனியர்” என்றாள் பெருமையாக.
“நா…நான் அவ தம்பிங்குறது??”
“சம்பத் மாமா நிச்சயதார்த்தத்துல இருந்து தெரியும்.”
“ஓ!” – என்றவாறு தலையசைத்தவனின் மூக்கு விடைத்த நிலையிலேயே வீற்றிருந்தது.
எப்போதும் கிண்டலும்,கேலியுமாய்.. வம்பும்,வாய்ப்பேச்சுமாய் நகரும் தங்களிருவருக்குமான நிமிடங்கள், திடீரென மாயமாய் மறைந்து.. ஏதோ ஒரு அசௌகரியம் சூழ்ந்தது போல்.. அவளருகே நிற்பதையே மனம் ஏற்காதது போல்.. நகர்ந்து விடத் துடித்தபடி நின்றிருந்தன அவன் கால்கள்.
கோபமோ, ஆதங்கமோ, ஏமாற்றமோ.. ஒரு அமைதியற்ற நிலையில் பிடரியைக் கோதியபடியும், நெஞ்சைத் தேய்த்தபடியும் திடீரென இங்குமங்கும் நடந்தவனைக் குழப்பமாய் நோக்கிக் கொண்டிருந்தவளை நெருங்கி வந்தவன்,
“என் கேள்வி முட்டாள்தனமா இருக்கலாம்! ஆனா, நான் கேட்டே ஆகனும். அந்த பிலவ்ட் சத்யாவோட தம்பி நான்-ங்குறதால தான் இந்தக் கல்யாணமா?” – எனக் கேட்டான்.
அவன் கண்களில் தெரியும் அலைப்புறுதல் அவளுக்குக் குழப்பத்தை மட்டுமே கொடுக்க, புருவம் சுருக்கி, முகத்தில் மறுப்பைத் தேக்கி,
“என்ன இடியாட்டிக்கா…” என்று அவள் முடிப்பதற்குள், கை நீட்டித் தடுத்துக் கண்களை மூடிக் கொண்டவன்,
“எனக்கு எல்லாம் தெரியும்ன்னு உண்மையை ஒத்துட்டிருந்திருக்கலாம். என்னாச்சுன்னு என் கிட்ட விளக்கம் கேட்டிருக்கலாம். இப்பிடிப் பண்ணப் போறேன்னு இன்ஃபர்மேசன் கொடுத்திருக்கலாம்… இது எதுவும் செய்யாம, அவளையும்,என்னையும் இந்த சூழ்நிலைல நிறுத்த, உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” – கொஞ்சமும் தடுமாற்றமின்றி, கோபத்தை வெளிப்படுத்தாதக் குரலில், ஆதங்கத்துடன் கேட்டவனைக் கண்டு அவள் வாயடைத்துப் போய் நிற்க,
திகைத்து விழித்த அவள் விழிகள், எப்போதும் பெற்றிருக்கும் லேசான திமிரையும், நிறைய அலட்சியத்தையும், நான் தான் சரி என்கிறத் தற்பெருமையையும் கை விட்டு, மெல்ல இயல்பு மாறி, கலக்கத்திற்குச் செல்வதை விழி திறந்து நோக்கியவன்,
அதைக் காண முடியாது, வேறு புறம் பார்த்தபடி, மெல்லிய குரலில்,
“என்னால, உங்கக் கிட்ட கோபப் படவே முடியாதுன்னு ஒரு நினைப்பு வைச்சிருந்தேன்! இப்போ,இந்த நிமிசம் அதை நீங்க மொத்தமா உடைச்சுட்டீங்க” என்று விட்டு விறுவிறுவென வெளியேறி விட்டான்.
திகைப்பு மாறாது நின்றவளுக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று தான்!
ஒழுங்கா கோபப்படக் கூடத் தெரியல! லூசுப்பய!
கடைசியாக அன்று அவனைக் கண்டவள் தான்! அதன் பின்பு அடுத்த இரண்டு நாட்கள் யார் கண்ணிலும் படாமல், எங்கோ தொலைந்து விட்டான் அவன்!
ஃபோன் அழைப்பு ஸ்விச்ட் ஆஃப் என்ற செய்தியோடு கட் ஆனது!
அவனது கசின்ஸ்,நண்பர்கள் என எவரிடமும் அவன் குறித்த சேதியில்லை!
தீபாவளி செலிப்ரேஷனில் பிஸியாக இருந்த அலெக்ஸ், தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தான்.
தன்னால் தான் அவன் சென்று விட்டான்!, அவனுக்கு இன்னமும் தன் மீது கோபம் குறையவில்லையெனச் சொல்லி,சொல்லி அழுகையில் கரைந்தபடி சத்யா.
‘எங்கேயோ ஃப்ரண்டு வீட்டுக்குப் போறதா சொல்லிட்டு ஃபோனைக் கட் பண்ணவன் தான், அதுக்கப்புறம் தகவலே இல்ல கண்ணு!’ – என்று கலக்கமாய்ப் புலம்பியபடி விசாலம் ஒரு புறம்.
யாரிடம் அவன் குறித்துக் கேட்பதெனப் புரியாது எரிச்சலும்,கோபமுமாய்ச் சுற்றிய சக்தியை விடாது திட்டித் தீர்த்தபடி கோகிலா மறுபுறம்.
தண்ணீர் வடியும் பாறையொன்றின் மீது ஒரு கையில் கேமராவுடனும், மறு கையால் தலையைக் கோதியபடியும், எதிரே நோக்கியவாறு நிற்கும் அவனது வாட்ஸ் ஆப் டிபியைக் கடுப்பும்,தவிப்புமாய் பார்த்தபடி முழுதாய் இரண்டு நாட்களைக் கடத்தியவளுக்கு அபயம் அளிக்கும் பொருட்டு, தீபாவளிக்கு அடுத்த நாள் காலை 8 மணி வாக்கில் ஃபோன் செய்தான் அலெக்ஸ்.
“என்ன ரெட்டூ மூக்குத்தி, 7,8 தடவை கால் பண்ணியிருக்க?, எங்க அப்ளிகேஷன்ல எதுவும் பிரச்சனையா?”
“எங்க உங்க ஃப்ரெண்டு?” – நேரடியாய் அவள்.
“சசியா?, இதென்ன கேள்வி?, அவன், வீட்ல தான் இருப்பான்!, தீபாவளிக்கு வைச்சக் கோழிக் குழம்பை மூனு வேளை தின்னுட்டுத் தீயா தூங்கிட்டிருப்பான்! ஆமா, நீ ஏன் அவனைப் பத்திக் கேக்குற?, என்ன, என் நண்பனைக் கரெக்ட் பண்ணப் பார்க்குறியா?”
“……..”
“ரெண்டு நாளைக்கு முன்னால ஃபோன் பண்ணி, கசின்ஸ் கூட தண்ணீ அடிக்கப் போறதா சொல்லி, என் ரூம் கீ வாங்குனான்! என்ன சரக்கு டா, ஃபோட்டோ அனுப்புன்னு சொன்னதுக்கு, பரதேசி பதிலே போடல”
“உங்க ரூம் அட்ரஸ் என்ன?” – பரபரப்பாய் அவள்.
“எதுக்கு?, தீபாவளி ஸ்வீட்ஸ் அனுப்பப் போறியா?” – கடுப்பேற்றியபடி அலெக்ஸ்.
“ப்ச், கேட்டா பதில் சொல்லுங்க!” – அவள் பல்லைக் கடித்ததும்,
“சரி, டென்ஷன் ஆகாத!” என்றவன் அட்ரஸை சொல்லி முடித்ததும், பட்டென ஃபோனைக் கட் செய்தவள், கூந்தலோடு சேர்த்துத் தான் அடக்கி வைத்திருக்கும் ஆத்திரம் அத்தனையையும் அள்ளிக் கொண்டையிட்டுத் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டுப் பறந்தாள்.
நகர வீதிகளில் நரகாசுரன், கருகிய காகிதங்களென குப்பையாய்க் குவிந்துக் கிடக்க, பண்டிகை மூடிலிருந்து வெளி வராத சிறார்கள் பலர், கருமேகம் சூழ டல்லடித்த அந்தக் காலை வேளையிலும், சரஸ்வதி வெடியோடு, சலசலத்துக் கொண்டிருப்பதைக் கண்டபடி, காற்றில் கலந்திருந்த பட்டாசின் நெடியை சுவாசித்தவாறு வண்டியை செலுத்திக் கொண்டிருந்த சக்தி, அடுத்த 30 நிமிடத்தில் அலெக்ஸ் கூறிய இடத்தை அடைந்தாள்.
அந்த மூன்று மாடிக் குடியிருப்பின் கடைசி தளத்தில், மொட்டைமாடியோடு ஒட்டியிருந்த அலெக்ஸினது இரண்டு படுக்கையறை வீட்டை நோக்கி முழு வேகத்தில் படியேறிக் கொண்டிருந்த சக்திக்கு, மிதமிஞ்சிய கோபத்தில் சற்று அதிகமாகவே மூச்சு வாங்கியது.
கடைசிப் படியை எட்டியதும், ஒரு நொடி நின்று, கண்களை மூடி, அதிவேகத்தில் அடித்துக் கொண்டிருந்த இதயத்தைப் பெரிய,பெரிய மூச்சுக்களை வெளியேற்றி, எச்சில் விழுங்கி ஆசுவாசப்படுத்தி விட்டு, கடித்தப் பற்களோடு கடுப்புடன் வந்த கோபத்தை, முகத்தில் காட்டியவாறு, விறுவிறுவென உள் நுழைகையில்,
அங்கிருந்த சிறியத் திண்டொன்றின் மீது, எதிரே தெரிந்த சாலையை வெறித்தபடிக் கையைக் கட்டிக் கொண்டுத் தன்னந்தனியாய் அமர்ந்திருந்தான் சசி.
அதுவரை நடையிலிருந்த வேகம், அவனைக் கண்டதும் தன்னாலேயே குறையத் தொடங்க, தன் கொலுசொலி கேட்டும், அவன் திரும்பாதிருப்பது கண்டு ஒரு நொடி ஆத்திரமும்,ஆதங்கமுமாய் அதே இடத்தில் நின்றவள், பின் இரு மடங்கு வேகத்துடன் தங்,தங்கென நடந்து சென்று அவனுக்கெதிரேயிருந்தத் திண்டின் மீதமர்ந்தாள்.
கலைந்தத் தலை முடியும், சிவந்த விழிகளுமாய், அழுத்தமாய் மூடியிருந்த இதழ்களோடு அமர்ந்திருந்தவன், அவளை எதிர்கொள்ளத் தயங்கவேயில்லை.
புஸ்,புஸ்ஸென மூச்சு வாங்க, ஏறியிறங்கும் மார்புடன், விடைத்த மூக்கோடு, குறையாத கோபத்தோடு எதிரே அமர்ந்திருந்தவளைத் தன் பெரிய கண்களால் பார்த்தபடி அமைதியாய் வீற்றிருந்தான் அவன்.
எப்போதும் தன் பார்வையிலிருக்கும் ஆர்வம்,ஆசை,தயக்கம், தடுமாற்றம், கள்ளத்தனமென எதையும் வெளிப்படுத்தாது, அவனது கண்கள் சலனமற்றிருப்பது வெறியைக் கிளப்ப, ஒரு நொடி கண்களை மூடித் தன்னை அமைதிப்படுத்தியவள், அதே நிலையிலேயே,
“ஸ்கூல் படிக்கும் போதுல இருந்தே எனக்கு சத்யாக்கான்னா ரொம்ப இஷ்டம்! ஏன்னா.. என் கண்ணுக்கு அப்போ அவங்க ஐஸ்வர்யா ராயா தெரிஞ்சாங்க! ரொம்ப சாஃப்ட், ஃபெமினைன், அவங்க என்ன பண்ணினாலும் நளினமா இருக்கும்!, அதை வைச்சுத் தான் அவங்களை கவனிக்க ஆரம்பிச்சேன்! என்னோட க்ரஷ் அவங்கன்னு கூட ஃப்ரண்ட்ஸ்ங்கக் கிட்ட சொல்லியிருக்கேன்!
காலேஜ் படிச்சிட்டிருக்கும் போது எதார்த்தமா ஒரு நாள், அவங்க ஹஸ்பண்டோட அவங்களை ஒரு பஸ் ஸ்டாப்ல வைச்சுப் பார்த்தேன்! அன்னைக்குத் தான் உங்கப்பா இறந்த நாள்! தன்னோட காதல் தான், உங்கப்பா உயிரைப் பறிச்சுக்கிட்டதா அவங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி, அழுதுட்டு இருந்தாங்க! உங்க அம்மா,அப்பா சொந்தக்காரவங்கன்னு எல்லார் பேசுனதையும் சொன்னவங்க, கடைசியா, என் தம்பி கூட என்னைப் புரிஞ்சுக்கல, அவன் என்னைப் புரிஞ்சுக்கனும்ன்னு சொல்லி ரொம்ப அழுதாங்க!,
நீங்க தான் அவங்க தம்பின்னு எனக்குத் தெரிய வந்தப்புறம், எனக்கு நினைவில வந்தது, சத்யாக்கா சொன்ன அந்த ஒரு வாக்கியம் தான்!,
நான் அன்னை தெரசா கிடையாது, வீடும்,நாடும் அமைதிப்பூங்காவா இருக்கனும்ன்னு சேவை பண்றதுக்கு!, உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு, நீங்க கட்டிப்புடிச்சு அழுகுறதை, தூர நின்னு ரசிச்சுப் பார்த்து கண்ணீர் விட்றதுக்கு நான் வானத்தைப் போல விஜயகாந்த்தும் இல்ல!, மகளை நினைச்சு விசாலம் அத்தையும், அம்மாவையும்,தம்பியையும் நினைச்சு சத்யாக்காவும் வருத்தப்பட்டுக்கிட்டே காலத்தை ஓட்டுறது எனக்கு முட்டாள்தனமாத் தோணுச்சு!, இது எனக்கு சம்மந்தமில்லாத, தேவையில்லாத விசயம் தான்! ஒத்துக்கிறேன்!
நான் ட்ரமாட்டிக்-ஆ எதுவுமே யோசிக்கல!, இவ்ளோ கவலையில இருக்குற ரெண்டு பேரையும் மீட் பண்ண வைச்சா, ஒரு வேளை நிலைமை மாறலாம்ங்குற நினைப்பு மட்டும் தான் எனக்கு!
இந்த நினைப்பு கூட அவங்க.. உங்க அக்கா-ன்றதால மட்டும் தான்!” என்றவள் பட்டெனத் தன் விழிகளைத் திறந்து,
தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம், அழுத்தமாக,
“ஊர்ல இருக்குற குடும்பத்தையெல்லாம் சேர்த்து வைக்குறது என் பொழப்பு கிடையாது! சசிதரனோட அக்கா சத்யா-ங்குறதால மட்டும் தான், இதெல்லாம்!, புரிஞ்சதா?” என்றவள் தன் பார்வையை விலக்கி,
“கையைக் காட்டிட்டு ஒதுங்கி நின்றனும்ங்குறது தான் என் ஐடியா! உங்க சொந்தக்காரங்க பேசத் தொடங்குனதும், அத்தையும்,சத்யாக்காவும் எதுவுமே பேசாம அமைதியா நிற்குறதைப் பார்த்துப் பொ..பொறுத்துக்க முடியாம தான் நான் பதில் பேசுனேன்!,
அதுவும் கூட, அவங்க எனக்கானவங்க-ன்னு மனசுல தோணுன உரிமையால தான்!, அந்த உரிமை.. சசிதரன் எனக்கானவன்-ன்னு உள்ளுக்குள்ளப் பதிஞ்சுட்டதால தான்!
எனக்குத் தெரியும்! என்னால தான் அவங்களுக்கு இந்தப் பேச்சு! அன்னைக்கு அவங்க வராம இருந்திருந்தா இந்த சிச்சுவேஷனை அவங்க ஃபேஸ் பண்ணியிருக்கத் தேவையே இல்ல!, உங்க சொந்தக்காரங்க பேசுறதுக்குப் பயந்துக்கிட்டு, அவங்கத் தனக்கான உறவுகளை விட்டு ஒதுங்கி வாழ்றது மிகப்பெரிய முட்டாள்தனம் தான்னாலும், அதை.. அதை.. விமர்சிக்க எனக்கு எந்த உரிமையும் இல்ல!
நீங்க அவங்களை வேற ஒரு சிச்சுவேஷன்ல சந்திச்சிருந்தா, இந்தக் களேபரம் எதுவுமில்லாம, எல்லாம்.. எல்லாம் அமைதியா,சுமூகமா கூட நடந்திருக்கும்!
அந்த நாளைத் தேர்ந்தெடுத்தது, நான் பேசுனது, பண்ணினது எல்லாமே அதிகப்பிரசங்கித்தனம் தான்!
ஆமா!, அதிகப்பிரசங்கித்தனம்!, ஏன்னா, என் மனசோட ஒரு மூலை, நான் பண்ற இந்த விசயம் உ..உங்களை சர்ப்ரைஸ் பண்ணும்ன்னும், சந்தோசப்படுத்தும்ன்னும் சிறுபிள்ளைத்தனமா எதிர்பார்த்திருக்கனும்! எப்பவும் உங்க கண்ணுல, என்னைப் பார்த்ததும் தெரியுற ஆர்வமும்,ஆசையும் இது…இதுக்கப்புறம் இன்னமும்.. இன்னமும் அதிகமாகுறதைப் பார்க்கனும்ங்குற எண்ணத்துல…. ப்ச், இட் இஸ் டோட்டலி இம்மெச்யூர்ட்! ஐ நோ!,
யாரைப் பத்தியும்,எதைப் பத்தியும் நினைக்காம, கான்சீக்வன்ஸ் என்னன்றதை யோசிக்காம.. சம்மந்தப்பட்டவங்கக் கிட்ட டிஸ்கஸ் பண்ணாம, நீங்க சொன்ன மாதிரி, எனக்குக் கொஞ்சமும் உரிமையில்லாத விசயத்துல, நான்… நான் தலையிட்டது…”
– என்று மூக்கு விடைக்க, சிவந்துத் தடித்திருந்த இமைகளைத் தொட்டு விட்டக் கண்ணீரோடு, அவள் முடிப்பதற்குள், எதிரே அமர்ந்திருந்தவளின் இடை பற்றித் தூக்கித் தன்னோடு சேர்த்தவன், திகைத்து விரியும் அவள் விழிகளோடுத் தன் உயிரைக் கலந்து, அவள் இதழ்களுக்குள் தன் உணர்வைப் புதைத்துக் கொண்டான்.
கொஞ்சமும் தயக்கமில்லாது, முதல் தடவைக்கான வரைமுறைகள் அத்தனையையும் சுத்தமாக மதியாது, வரையறைகளுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளாது, எல்லைக் கோடுகளையெல்லாம் எச்சில் கொண்டுத் தகர்த்தபடி, ஏழேழு பிறவிகளுக்கும் சேர்த்து வைத்து அந்த முத்துச் சிப்பிக்குள் மூர்க்கமாய் மூழ்கிக் கொண்டிருந்தான் அவன்.
மூடியிருந்த அவளது கண்களுக்குள் தேங்கியிருந்த சில கண்ணீர்த் துளிகள், காதோரமாய்ப் பதிந்திருந்த அவனது பெருவிரலைச் சென்றடைய, ஈரம் உணர்ந்த விரல்கள், இடது மூளையைத் தட்டியதில், மெல்ல நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன், அவள் கன்னம் தடவி, சின்னக் குரலில்,
“அன்னைக்கும் இப்பிடித் தான், நான் வேணும்ன்னு பண்ணல சசி-ன்னு கண்ணீர் விட்டப்போ, இறுக்கமாக் கட்டிக்கிட்டு, அழுத்தமா முத்தம் கொடுக்கனும்ன்னு தோணுச்சு” என்றான்.
குழப்பமும்,மயக்கமுமாய் அவன் முகம் பார்த்திருந்தவளின் விழிகளில் மெல்ல மெல்ல சிவப்பேறுவதையும், மூக்கு எரிச்சலுடன் விரிவதையும் கண்டு, புன்னகையில் நெளியும் உதடுகளோடு, அவள் முகம் முழுக்க எச்சில் பதித்தவனிடம்,
“இன்னைக்கும் கூட, நான் செய்யாதத் தப்புக்குத் தான் தண்டனை கொடுக்குறீங்க” – பல்லைக் கடித்தவளின் இடையை இரு கைகளால் வளைத்து, அவள் தோளில் முகம் நுழைத்து முகர்ந்து,
“உன் வியர்வை வாசம் இப்பிடித் தான் இருக்குமா?” என முணுமுணுத்து,
“கோபப்படாத கண்மணி” என்றான் அமைதியாய்.
“மனசாட்சியே இல்லையா உங்களுக்கு?, ரெண்டு நாள்.. ரெண்டு நாளா நீங்க என்ன ஆனீங்கன்னு தெரியாம, அங்க அத்தனை பேரும் தவிச்சுட்டிருக்காங்க!”
“நீ?”
“என்ன நான்??”
“நீ என்னைத் தேடுனியா?”
“இல்லவே இல்ல” – முறைப்பாய்க் கூறியவளிடம்,
“பொய்” என்றான் அவன், முகம் புதைத்திருந்த தோளில் இதழீரம் பதிய.
“ஏன் இப்பிடிப் பண்ணீங்க?, யார் மேல உங்க கோபம்? என் மேலயா?, இல்ல சத்யாக்கா மேலயா?”
“ரெண்டு பேர் மேலயும்” – முகம் நிமிர்த்தாமல் அவன்.
“சத்யாக்கா பாவம்”
“ஓ!, அப்போ நீ?”
“நானும் பாவம் தான்”
“அப்ப நான்?”
“ப்ச்!, இங்க என்ன வார்த்தை விளையாட்டா நடத்திட்டிருக்கோம்?”
மெலிதாய் அவள் தோள்களுக்கிடையே பதிந்தது அவன் புன்னகை.
“உங்களுக்கு இன்னும் கோபம் குறையல, அதான் எங்கேயோ போயிட்டீங்கன்னு நினைச்சு அழுதமயமா இருக்காங்க சத்யாக்கா!, உங்களுக்குக் கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?”
“அவளுக்குத் தான் இரக்கம் இல்லை”
“ஏன், அவங்க என்ன பண்ணாங்க?, உங்களையெல்லாம் மதிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு நீங்களும் முட்டாள்தனமா பேசாதீங்க!, சஞ்சயன் அண்ணாவுக்கு என்னக் குறைச்சல்?, அவரை மாதிரி சத்யாக்காவை யாரும் பார்த்துக்க முடியாது தெரியுமா?” – எகிறிக் கொண்டு வந்தவளின் கன்னத்தில் பற்களை அழுத்தமாய்ப் பதித்தவனின் செயலில்,
“ஆஆஆ” – எனக் கத்தி அவன் வாயில் அடித்து, “ச்ச” – எனக் கன்னத்தைத் தேய்த்தவளின் முசுட்டு முகத்தை அருகில் கண்டு, மயங்கி, மீண்டும் அவள் இதழ்களோடு, இதழ்களாய் மாறிப் போனான் அவன்.
அவன் நிமிர்ந்ததும், இயலாமையுடன் அவன் முகம் பார்த்தவள்,
“உங்களுக்கு சத்யாக்கா, அவரைக் கல்யாணம் பண்ணினதுல விருப்பம் இல்ல தான?, உங்கப்பா மாதிரி?” என்றாள்.
அவளது கற்பனையில் சிரித்து, நெற்றி முட்டியவனிடம்,
“உண்மை தான?” என்றாள்.
“இருக்கலாம்”
“இருந்தாலும், இப்ப எதையும் மாத்த முடியாது! ஒழுங்கா ஏத்துக்கப் பாருங்க!”
“மிரட்டலா?”
“சரி, என்ன பிடிக்கல அவர்க்கிட்ட?, படிச்சிருக்காரு! கை நிறைய சம்பாதிக்கிறாரு!, அன்பா,அக்கறையா, அவ்ளோ நேசத்தோட சத்யாக்காவைப் பார்த்துக்கிறாரு!”
“அதான் பிடிக்கல”
“வாட்?”
“அவர் அப்பிடி இருக்கிறதால தான, எங்களை அவ தேடல?”
“எ…எ..என்னது?” – அவன் முகத்தில் வந்து போன பொறாமை உணர்வு வியப்பையும்,மகிழ்ச்சியையும் ஒரு சேரத் தந்ததில், இதழ்களைப் பெரிதாய் விரித்துப் புன்னகைத்தவள்,
“சின்னப்புள்ளத்தனமா பண்றீங்க” என்றாள்.
அவள் சிரிப்பில் லேசாய் முகம் கன்றினாலும், ‘அதனால என்ன’ என்பது போல் பார்த்தவனைக் கண்டு மேலும் பொங்கிச் சிரித்து,
“யோவ் யோவ்!, உன் மூஞ்சிக்கு இந்த எக்ஸ்ப்ரஷனெல்லாம் செட்-ஏ ஆகலய்யா” -என நக்கலடித்தவளை, இறுக்கமாய்த் தன்னோடு வளைத்துக் கொண்டு,
“கேலி பண்ணாத கண்மணி” என்றான்.
“என்ன கோபம் உங்களுக்கு?, உண்மையைச் சொல்லுங்க! உங்க சித்தியும்,பெரியம்மாவும் சொல்ற மாதிரி, உங்கப்பா இறந்ததுக்கு சத்யாக்கா தான் காரணம்ன்னு நினைக்குறீங்களா?”
“இல்ல” – என்றான் அவன் ஒரு நொடி கூட யோசிக்காது.
“பின்ன?, அவசரப்படாம, பொறுமையா இருந்து உங்கப்பாவோட சம்மதத்தோட அவங்க கல்யாணம் நடந்திருக்கனும்ன்னு நினைக்குறீங்களா?”
“எத்தனை வருசமானாலும், எங்கப்பா கடைசி வரை ஒத்துட்டிருந்திருக்க மாட்டாரு”
“ஓ!, அப்டின்னா, சத்யாக்கா எங்கப்பா சம்மதிக்காத காதல் எனக்குத் தேவையே இல்லன்னு, அவங்க லவ் பண்ண பையனுக்கு டாட்டா காட்டிருக்கனும்ன்னு நினைக்குறீங்களா?”
மெலிதாய் சிரித்து “முட்டாள்தனம்” என்று முணுமுணுத்தான் அவன்.
“வேற என்ன தான் வேணும் உங்களுக்கு?”
“தெரியல”
“இது என்ன பதில்?”
“அ..அவரு வேணாம்ன்னு எதிர்த்தது அப்பா தான்!, நானோ, அம்மாவோ இல்ல. ஆனா.. எங்கப்பா போனப்புறமும் கூட, நாங்க அவளுக்குத் தேவைப்படவே இல்ல!”
“இது லூசுத்தனம்!, அவங்க எல்லா வகையிலயும் உங்களை நெருங்க முயற்சி பண்ணியிருக்காங்க”
“எப்பிடி?”
“அது தெரியாது! ஆனா, கண்டிப்பா உங்க பெரியப்பா,பெரியம்மா & சித்தி கண்டிப்பா ஏதாவது வேலை பார்த்திருப்பாங்க”
“நாம ஒருத்தரைக்கொருத்தர் கான்டாக்ட் பண்ணக் கஷ்டப்பட்ற கற்காலத்துலயா இருக்கோம்?, என் ஃபோன் நம்பர் தெரியாதா?, வீட்டு அட்ரஸ் தெரியாதா?, குழந்தை பிறந்தப்போ கூட நாங்க வேணும்ன்னு நினைக்கல” – ஆதங்கமாய்க் கூறியவனிடம்,
“இதையே சத்யாக்காவும் சொல்லலாம்ல?” – என்றவளை நிமிர்ந்து அவன் ஒரு பார்வை பார்க்க,
“வெட்டி ஈகோ!” என முணுமுணுத்தாள்.
“இதெல்லாம் விட என் கோபத்துக்கு, முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு”
“என்ன?”
“அது ஒரு வெள்ளிக்கிழமை!அப்போ நான் வேலையில்லாம, வெட்டியா சுத்திட்டிருந்தா காலகட்டம்!, தினம் பாக்கெட் மணியா, 200 ரூபாய் கொடுக்குற எங்கப்பா, அன்னைக்கு ஏதோ யோசனைல 500-ஆ கொடுத்துட்டாரு!, சந்தோசமா அதைக் கையில வாங்கி, அன்னைக்கு முழுக்க அதை வைச்சு, என்னலாம் பண்ணலாம்ன்னு நான் எக்கச்சக்க மனக்கோட்டை கட்டி வைச்சிருந்தேன்! ஆனா, அத்தனையையும், இவ மாலையும்,கழுத்துமா வந்து நின்னு, சிதைச்சு விட்டுட்டா” – வயிற்றெரிச்சலுடன் கூறியவனிடம்,
“நகைச்சுவையா?” எனக் கேட்டாள் சக்தி.
“இது ஃபாக்ட்டு”
“சகிக்கல”
“ப்ச், உனக்கு அந்த 500 ரூபாய் சந்தோசமெல்லாம் புரியாது”
“அதென்ன ங்க,ங்க-ன்னு விளிக்கிறதெல்லாம், இப்போ நீ,நீ-ன்னு மாறிடுச்சு?”
மடியிலிருந்தவளை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டு, அவள் காதோரம்,
“அந்த ங்க உன்னைக் கண்ணியமா நடத்தச் சொல்லுச்சு!, அதுக்கு இனி வாய்ப்பே இல்லன்றதால, தூக்கிட்டேன்” – என்றான் அசால்ட்டாய்.
“ரெண்டு நாளா உட்கார்ந்து இதைத் தான் யோசிச்சீங்களா?”
“இல்ல”
“அப்புறம்?”
“உரிமையில்ல,அது,இது-ன்னு பேசி வைச்சுட்டியேடா!, இனி அவ, உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டா என்னடா செய்வ-ன்னு மனசாட்சி கதற ஆரம்பிச்சிடுச்சு!, எங்க இந்த கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணிடுவீங்களோன்னு பயந்து, எஸ் ஆகி, இங்க வந்து செட்டில் ஆயிட்டேன்!”
“நம்பிட்டேன்”
“இதான் உண்மை”
“கிடையாது!, இத்தனை வருசமா என்னைத் தேடவேயில்லையேன்னு சத்யாக்கா கூட பாசப் போராட்டம்! இப்பிடிலாம் பண்ணப் போறேன்னு என் கிட்ட இவ சொல்லலையேன்னு, என் கூட உரிமைப் போராட்டம்!, இது ரெண்டுத்துக்கு இடையிலயும் குதிச்சிட்டிருந்த மனசை அமைதிப்படுத்த, இந்த இமயமலைக்கு வந்துட்டீங்க, கரெக்டா?”
அவள் முகம் பார்த்து லேசாய்ப் புன்னகைத்து, அவள் புருவம் நீவி,
“கண்மணி…” என்றான் அவன்.
அவன் அழைப்பில் மனம் நெகிழ்ந்து, பாசமும்,நேசமும் விழி முழுக்க, உடல் முழுக்கக் கரை புரண்டோடினாலும், வார்த்தைகளில் அதைக் காட்டாது, அவனது தொடர் பார்வையிலிருந்துத் தப்பித்து, கண்களை வேறு புறம் திருப்பியபடி,
“ம்ம்” என்றவளைத் தன் முகம் நோக்கித் திருப்பி, குனிந்து அவள் இதழ் சேர்ந்து நிமிர்ந்தான் அவன்.
சிணுங்கலாய் முகம் சுருக்கி, சிவப்பாய்ப் புன்னகைத்தவளின் இதழை மேலும், மேலும் சிவக்கச் செய்து, அவள் கழுத்தடியில் கண் மூடியவனின், பிடரியைக் கோதி,
“என் மேல கோபம் போச்சா?” எனக் கேட்டாள் அவள்.
“ம்ம்”
“சத்யாக்கா மேல?”
“ப்ச்”
“இப்பிடி சொன்னா எப்பிடி?, அவங்களோட நீங்க பேசனும்”
“பார்க்கலாம்”
“யோவ்”
“ப்ச், எப்பப் பார்த்தாலும் அவளைப் பத்தியே பேசிக்கிட்டு!, உனக்கு என்னைப் பிடிக்குமா?, இல்ல அவளைப் பிடிக்குமா?, ஒழுங்கா பதில் சொல்லு”
“ஹாஹாஹா”
“சொல்ல்ல்லு”
“சத்யாக்காவைத் தான் பிடிக்கும்” – எனப் புருவம் தூக்கிக் கூறி விட்டு கண்ணையும்,மூக்கையும் நக்கலாய்ச் சுருக்கியவளைத் தன்னோடு சேர்த்துத் தூக்கியபடி எழுந்து நின்றவன், இதழ் நுழைந்து, மூச்சு வாங்க,
“இப்போ?” என,
“இப்பவும் அவங்களைத் தான்” – என்றவளைக் கோபத்தோடு உலுக்கி, மோகம் மோத இடம் பார்த்து, அவன் செய்த வன்முறையில் வார்த்தைகளற்றுப் போய், அவன் தோள்களுக்குள் தொலைந்து போனவளிடம்,
“என்னைத் தான் பிடிக்கும்ன்னு சொல்றவரை விட மாட்டேன்” – எனக் காதோரம் கணக்காய்க் கூறிக் கொண்டிருந்தான் சசி….
“இவனுக்கு என்ன அப்பிடியொரு கோவம்! ஊர்,உலகத்துல யாரும் பண்ணாததையா அவ பண்ணிப் போட்டா?, செஞ்ச தப்புக்குத் தண்டனையா இத்தனை வருசமா ஒதுங்கியிருந்து தண்டனை அனுபவிச்ச புள்ளைய, இன்னும் எவ்வளவு தான் தண்டிப்பானுங்க அப்பனும்,மகனும்! அவ ஒரு கூறு கெட்டக் கழுத! தம்பி கூப்பிட்டாத் தான் வீட்டுக்கு வருவேன்னு கண்ணீர் சிந்திக்கிட்டுத் திரியுறா!, அங்க அவ தம்பி,தம்பின்னு உருக, இவன் இங்க எனக்கென்னான்னு உண்டு,உறங்கி,உருண்டுட்டுக் கிடக்கான்! என்ன பிள்ளையோ!, அப்பிடியே அவங்கப்பனை மாதிரி! கல்நெஞ்சுக்காரன்”
-எரிச்சலும்,பொருமலுமாய்ப் புலம்பியபடி, காரத் தேங்காய்ச்சட்னிக்கு (க்ரீன் சில்லிக்குப் பதிலாக ரெட் சில்லியை போட்டு அரைப்பது) தாளித்து ஊற்றிக் கொண்டிருந்தார் விசாலம்.
முந்தாநாள் இரவு வீடு வந்து சேர்ந்தவனை,”இப்பத் தான் அவ பஞ்சாயத்து தீர்ந்துருக்கு! இப்ப நீ ஆரம்பிக்கிறியா?, ஏன் டா என் உயிரை வாங்குறீங்க ரெண்டு பேரும்?” எனத் திட்டி,முதுகில் அடித்து, அழுது புலம்பியவரைக் கொஞ்சமும் சட்டை செய்யாது, தன் அறைக்குப் படியேறியவன், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து வைத்து நன்றாகத் தின்று, தூங்கிக் கொண்டிருந்தான்.
மணி 8 என ஹாலில் மாட்டியிருந்தக் கடிகாரம் சத்தமிட்டதும், மேலிருந்த அவனது அறையை நோக்கி, “டேய் சசி, சசி.. மணி எட்டாச்சு! எழுந்திரு டா” என்று கோபமாய்க் கத்தியவர், ஃப்ரிட்ஜிலிருந்த தோசை மாவை வெளியிலெடுத்துக் கொண்டிருக்கையில், காலிங் பெல் ஒலித்தது.
இந்நேரத்துக்கு யாரு பெல் அடிக்கிறது? – என்ற யோசனையுடன் வெளியே சென்றவர், வாசலில் தனது ஸ்கூட்டியில் அமர்ந்தபடி, ஹெல்மெட்டைக் கழட்டிக் கொண்டிருந்த சக்தியைக் கண்டு கண்ணை விரித்து,
“என்ன கண்ணு இப்பிடி வந்து நிற்குற?” – என்று அதிர்ச்சியாய்க் கேட்டபடி அருகே சென்றார்.
அவரது கூக்குரலைக் கேட்டுப் பதறிப் போன சக்தி குனிந்துத் தான் அணிந்திருந்த சல்வாரை ஒரு முறை பார்த்து விட்டு,
“ஏன் இந்த ட்ரெஸ்க்கு என்ன குறை?, ஏன் இப்பிடி அதிர்ச்சி ஆகுறீங்க?” என்றாள் வியப்பு குறையாது.
“ப்ச், நான் அதைச் சொல்லல கண்ணு!, கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி வீட்டுக்கு வர்றதெல்லாம் முறை கிடையாது ராசாத்தி!” – முகத்தைத் தூக்கியவரிடம், “ப்ச்” எனப் புருவம் தூக்கி அலட்சியமாய் உதட்டை வளைத்தவள்,
“எந்தக் காலத்துல-த்தை இருக்கீங்க?” எனக் கேட்க,
“எந்தக் காலமா இருந்தாலும், முறை-ன்னு ஒன்னு இருக்கு” – என்று நொடித்துக் கொண்டரை முறைத்து,
“உங்க பொண்ணு இன்னைக்கு வீட்டுக்கு வரப் போறாங்க-ன்ற நல்ல செய்தியைச் சொல்லத் தான் வந்தேன்! ஆனா உங்களுக்கு சத்யாக்காவை விட, வீணாப் போன சம்பிரதாயம் தான் பெருசுங்குறதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன்!, நான் என்னைக்கு இந்த வீட்ல காலடி எடுத்து வைக்குறேனோ, அன்னைக்குத் தான் சத்யாக்காவும் வருவாங்க!, இப்ப நான் கிளம்புறேன்” – என ரோஷமாய்க் கூறி விட்டு, வண்டியை நகர்த்தப் பார்க்க,
அவசரமாய் அருகே ஓடி வந்து ஹாண்டில் பாரைப் பற்றியவர்,
“என்ன கண்ணு சொல்ற?, சத்யா இங்க வர்றதுக்கு ஒத்துக்கிட்டாளா?, என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லல?, சசி அவக்கிட்ட பேசிட்டானா?, சொல்ல்லு கண்ணு” – என்று கேள்வியாய்க் கேட்டு நச்சரிக்க,
அசட்டையாய்க் காதைச் சொரிந்தவள்,
“காலைல எந்திரிச்சுக் காபி கூட குடிக்காம, உங்க மவனுக்காகவும், மவளுக்காகவும் நாய் மாதிரி அலைஞ்சுட்டிருக்கேன்! வீடு தேடி வந்த எனக்கு ஒரு வாய்த் தண்ணி குடுக்காம, வாசல்ல வைச்சே எல்லாத்தையும் பேசி முடிக்கப் பார்க்குறீங்க!” எனக் கேட்டதும்,
முகத்தைச் சுருக்கிய விசாலம் சங்கடத்துடன்,
“அது முறையில்ல கண்ணு” எனக் கூற,
“ப்ச்” என வண்டியை விட்டிறங்கியவள், அவரைத் தாண்டிக் கொண்டு விறுவிறுவென உள்ளே சென்றாள்.
“வலது கால், வலது கால்!, வலது காலை முதல்ல வை” – பதறியபடி வந்த விசாலத்திடம்,
“உங்க மகன் மட்டும் இருந்திருந்தா, அப்ப இடது கால் எதுக்கு வேஸ்ட்டா, வெட்டித் தூக்கி எறிய வேண்டியது தானன்னு எடக்காக் கேட்டிருப்பாரு!” – எனக் கூறி அவர் சொன்னதைச் செய்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
சுற்றிச் சுற்றி வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் தண்ணீரை நீட்டியவர்,
“காபி போடட்டா கண்ணு?” எனக் கேட்டார்.
“போடுங்க” என்றபடித் தண்ணீரை வாங்கிக் கடகடவென வாயில் ஊற்றியவள், “உங்க மகன் எங்க?” எனக் கேட்டாள்.
அவனைப் பற்றிப் பேசியதும் மூக்கை விடைத்த விசாலம், “உறங்குறான்!, நேத்து சாப்பாட்டு நேரத்துக்கு ரூமை விட்டு வெளிய வந்தவன் தான், மீதி நேரம் பூரா தூங்கியே கழிக்கிறான்! இவனை எந்தப் பேய் பிடிச்சு ஆட்டுதோ தெரியல” – என்று புலம்ப,
“அவர் ரூம், எங்க மேலயா இருக்கு?” – எனக் கேட்டவாறு கிட்சனுக்கு சென்று தண்ணீர் செம்பை வைத்தவளிடம்,
“ஆமா” என்றவர் “ஏன் கேட்குற?” எனக் கேட்டார்.
“போய் எழுப்பத் தான்! தூங்குறாருன்னு சொன்னீங்களே?”
“என்னாஆஆஆது?, அவன் ரூமுக்கு நீ ஒத்தைல போகப் போறியா?”
“ஏன் வாயைப் பொளக்குறீங்க?, வேணும்ன்னா நீங்களும் வாங்க, சேர்ந்து போய் எழுப்புவோம்”
“அதெல்லாம் வேணாம், அவனுக்கு ஃபோனைப் போட்டு எழுப்பு”
“ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்” – வேண்டுமென்றே கூறினாள்.
“ப்ச், அப்டின்னா அவன் எந்திரிக்கும் போது எந்திரிக்கட்டும்! நீ காபியைக் குடிச்சுப் போட்டு இடத்தைக் காலி பண்ணு”
“எதுக்கு இப்ப பதறுறீங்க?”
“பதறாம?, முறையா நடக்க வேண்டிய விசயத்தையெல்லாம் நீ அசால்ட்டா முறியடிச்சுக்கிட்டிருக்க”
“அதனால என்னவாம் இப்போ?”
“ஒன்னுமில்ல! இந்தா காபி.. குடிச்சிட்டுக் கிளம்பு”
“அப்ப உங்க மக இன்னைக்கு வர வேணாம். அப்பிடித் தான?”
“என்ன சொல்ற?”
“அம்மன் படத்துல வர்ற மாதிரி, பொட்டு வைச்சுக் கூப்பிட்டாத் தான் வருவேன்னு உங்க பொண்ணு ஒரு பக்கம், தம்பி அழைக்கனும்ன்னு காத்துட்டிருக்காங்க! (முழுசா 90ஸ் கிட்-ஆ மாறி விட்ட சக்தியைப் பார்), இவரு எதைப் பத்தினக் கவலையுமில்லாம, வாயையும் தொறக்காம, அழுத்தமா இருந்து எல்லாரையும் பதட்ட நிலையிலேயே வைச்சிருக்காரு!, இப்டியே எத்தனை நாளைக்கு ஓட்டுறது?, ஒன்னு சேர்ந்துட்ட மகளை வீட்டுக்குக் கூப்பிடனும்ன்னு உங்களுக்குத் தோணவே இல்லையா?”
“தினம் ஃபோன் பண்ணி திட்டிட்டுத் தான் கண்ணு இருக்கேன்!, அவ தான் தம்பி,தம்பின்னு அவனை நினைச்சுக் கவலைப்பட்டுட்டு கிடக்காளே!”
“அதனால தான், அந்தத் தொம்பியவே சத்யாக்காக் கூட பேச வைச்சுடலாம்ன்னு நான் முடிவு பண்ணியிருக்கேன்”
“எப்பிடி?”
“அதுக்கு நான் முதல்ல மாடியேறிப் போய், அவரை எழுப்பனும்”
“ப்ச்”
“மூஞ்சியைத் தூக்காதீங்க! உங்க பையன் எப்பிடியோ தெரியாது! ஆனா நான் ரொம்ப ஒழுக்கமான பொண்ணு”
“அடிக்கழுத! வாய் மேலயே போட்ருவேன்”
“என்ன பிரயோஜனம்?, உங்க பையன் வாய்ல ஒன்னு போட்டிருந்தா, இந்நேரம் சத்யாக்கா இந்த வீட்ல இருந்திருப்பாங்க”
“இப்ப என்ன தான் கண்ணு செய்யப் போற?”
“நான் அவரைப் போய் எழுப்பிக் கிளப்பி விட்டுட்டு, என் ப்ளானை சொல்றேன்! நீங்க பதறாம இங்க உட்கார்ந்திருங்க” – எனக் கூறி, விறுவிறுவென மாடிப்படியேறினாள்.
திறந்திருந்த கதவைத் தாண்டி உள் நுழைந்தவள், இருட்டாய் இருந்த அறையைக் கண்டு நேரே ஜன்னலருகே சென்று, திரையை இழுத்து விட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
இடப்புறம் தொங்கியிருந்தத் தலையோடு, லேசாய்ப் பிளந்திருந்த வாயோடு, ஆழ்ந்த நித்திரையிலிருந்தான் சசி.
கையைக் கட்டிக் கொண்டு சுருக்கியப் புருவங்களுடன் அவனை யோசனையாய் நோக்கியவள், பின் அருகிலிருந்தத் தலையணையை எடுத்து அவன் முகத்தில் போட்டு, முட்டியால் தலையணையை அவன் முகத்தில் அழுத்தி, வாயைக் கோணிக் கொண்டுக் கொலைவெறித் தாக்குதல் நடத்த,
அரைகுறைத் தூக்கத்தில், அலறியடித்து விழித்தவன், பதட்டத்தில் தலையை அசைத்து,கையையும்,காலையும் உதறி, பின் முழுவேகத்தில் அவளைத் தள்ளி எழுந்தமர்ந்தான்.
மூச்சு வாங்க அவளைக் குழப்பமும்,அதிர்ச்சியுமாய் நோக்கியவனை, கையைக் கட்டிக் கொண்டு,கண்ணைச் சுருக்கிப் பார்த்து,இளித்து,
“வணக்கம். முக்கியச் செய்திகள். வாசிப்பது உங்கள் சக்தி சென்னியப்பன். இன்னைக்குக் காலைல சசிதரன் என்னும் ஆண்மகன், அவர் அக்கா சத்யா மற்றும் அவரது ஃபியான்ஸி சக்தியுடன் **** ஹோட்டலில் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட உள்ளார்! எல்லாரும் ஜோராஆஆ கைத் தட்டுங்க!
நோ,நோ நோ! இப்பிடி நீங்கள் முறைத்துப் பார்க்க வேண்டியது என்னை இல்ல. உங்கள் மாமாவை! ஏன்னா, மனைவியின் அழுகையைப் பொறுக்க முடியாமல், இந்தப் ப்ளானைப் போட்டதே அவர் தான்! நான் வெறும் தூதுவன் மட்டுமே” – என்று கூறிக் கொண்டிருக்கையிலேயே, அவனது செல்ஃபோன் தலையணைக்கடியில் வைப்ரேட் ஆக,
“அவர் தான்” – என்ற சக்தியைப் பார்த்தபடியே, எடுத்துக் காதில் வைத்தான்.
“சசி…” – சஞ்சயனின் கணீர்க் குரல் காதில் விழுந்தது.
“ம்”
“நான் சஞ்சயன் பேசுறேன்”
“சொல்லுங்க”
“ஃப்ரியா இன்னைக்கு?”
“ஏன் கேட்குறீங்க?”
“இல்ல, மீட் பண்ணலாமேன்னு” – அவன் லேசாய்த் தயங்க,
“என்னவாம் திடீர்ன்னு?”
“எப்பவோ இப்பிடிக் கூப்பிட்டுப் பேசியிருக்கனும். தப்பு தான்”
“……”
“உன்.. உன் அக்கா ரொம்ப ஃபீல் பண்றா, நீ பேசலன்னு!”
“ஏன், அவளுக்கு என் ஃபோன் நம்பர் தெரியாதா?”
“சசி…”
“ம்க்க்க்கும்” – தொண்டையைச் செருமினான்.
“அவ மேலக் கோபப்படாத! அவ பாவம்”
அவ்வளவு தான், காண்டாகிப் போனது சசிக்கு.
ஷ்ஷ்ஷ்-என நெற்றியைத் தேய்த்தவன், “அவ என் அக்க்க்கா” என்றான் பல்லைக் கடித்து.
“அவ்ளோ உரிமை இருக்கிறவன், அன்னைக்கு உங்கப்பா அடிச்சுத் துரத்துனப்போ, ஏன் டா வேடிக்கை பார்த்துட்டு நின்ன?” – அந்தப் பக்கம் சஞ்சயனும் எகிற, பொங்கியவன்,
“அது எங்கப்பாவுக்கும்,அவர் பொண்ணுக்கும் நடந்த பிரச்சனை. இடையில போக எனக்கு எந்த உரிமையும் இல்ல!, மோர் ஓவர், உங்க வைஃப், தம்பியோட சப்போர்ட் வேணும்ன்னு நினைக்கவே இல்ல!, உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்குற வரைக்கும், அவ ஒருத்தரைக் காதலிக்குறா-ங்குறதே எனக்குத் தெரியாது. நான் மட்டும் எதிர்த்த வீட்டு எலிசபெத்து, பக்கத்து மாடி பங்கஜம்ன்னு எல்லாரைப் பத்தியும் இவக்கிட்ட சொல்லுவேன், ஆனா இவ, அவ லவ் பண்ற பையனைப் பத்தி எங்கிட்ட சொல்ல மாட்டாளாமா?, அப்டின்னா.. என்னை அவ்ளோ முக்கியமான ஆளா அவ நினைக்கவே இல்லன்னு தான அர்த்தம்?, என்னைப் பத்தி யோசிக்கவே இல்லன்னு தான அர்த்தம்”
“அவ உன்னைச் சின்னப் பையன்னு நினைச்சா டா சசி”
“ஓஹோ”
“ப்ச், என்ன சண்டை போடுறதா இருந்தாலும், நேரடியா உங்கக்காக்கிட்டயே போட்டுக்கோ!, இதுக்கு மேல என்னால முடியாது டா!, உங்கக்காவுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கீங்க! எனக்கு, உங்கக்கா மட்டும் தான் இருக்கா. தயவு செஞ்சு அவளை சிரிக்க வை!”
“…..”
“கிளம்பி வா சசி” – பொறுமையாய் சஞ்சயன் அழைத்ததும்,
“வரேன். வைங்க” – என்றவன், எரிச்சலும்,ஆதங்கமுமாய் டீஷர்ட்டின் கழுத்துப் பகுதியை இழுத்து விட்டுத் தலையைப் பரபரவெனக் கோதி சரி செய்ய,
அவனது சோம்பல் முகத்தை சுவாரசியமாய் பார்த்து நின்றவள், அவன் தன் புறம் திரும்பியதும், அவசரமாய்ப் பார்வையை நேராக்கி,
“இத்துடன் செய்திகள் நிறைவுற்றது” என்று விட்டு, “சீக்கிரம் கிளம்பி வாங்க! நான் கீழ வெயிட் பண்றேன்!” எனக் கூறி நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்து விட்டாள்.
அதுவரை மாடியைப் பார்த்தபடி கலவரமாய் அமர்ந்திருந்த விசாலத்தை முறைத்து,
“தொடவே இல்ல!, தலகாணியை வைச்சுத் தட்டித் தான் எழுப்புனேன்! அதான், போன நிமிசத்துலக் கீழ இறங்கிட்டேனே!, இன்னும் ஏன் முகத்தைப் பதட்டமாவே வைச்சிருக்கீங்க?” எனக் கூறி,
“ஆமா, ப்ரேக் ஃபாஸ்ட் என்ன பண்ணியிருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“இட்லியும் தேங்காய்ச் சட்னியும்”
“நல்லவேளை தப்பிச்சேன்! தேங்காய்ச்சட்னி எனக்குப் பிடிக்காதுத்தை”
“அதுசரி! உன் புருஷனாகப் போறவனுக்கு அது மட்டும் தான் பிடிக்கும்”
“ச்ச!, ஒரு விசயத்துலயாவது ஒத்துப் போகுதா,கருமம்” என முணுமுணுத்தவள்,
“இப்ப நாங்க **** ஹோட்டல் போய், அங்க வெயிட் பண்ணிட்டிருக்கிற சத்யாக்கா கூட ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு, அவங்களையும் கூப்பிட்டுக்கிட்டு நேரா இங்க வருவோம்! நீங்க மதிய விருந்தை சீக்கிரம் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுங்க!, முதல் முறையா மருமகன்,மருமக-ன்னு எல்லாரும் சாப்பிடப் போறோம்! சமையல் தரமா இருக்கனும், சரியா?” – எனக் கேட்க,
“நிஜமாவா சொல்ற கண்ணு?” – என்றார் விசாலம் ஆச்சரியமும்,மகிழ்ச்சியுமாய்.
“ஆ…..மா!”
“சசியே போய் கூட்டி வரப் போறானா?”
“சசியோட சேர்ந்து இந்த சக்தியும்” – காலரைத் தூக்கி விட்டவளின் கன்னம் வழித்து, “நீ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைச்ச நேரம், எல்லாம் நல்லதாவே நடக்குது கண்ணு” – என்று அவிழ்த்து விட,
“ப்ச்,ப்ச், ரொம்ப ஸ்டாண்டர்ட் டயலாக்” என்ற சக்தி, “இதோ உங்க பையன் வந்துட்டாரு” என்றாள்.
மரூன் நிற சட்டையும், வெள்ளை வேஷ்டியுமாய் வந்திறங்கியவன்,
“காபி வேணுமா டா?” எனக் கேட்ட அன்னையிடம்,
“வேணாம்,வேணாம்” என்று விட்டு வண்டி சாவியையும்,ஹெல்மெட்டையும் எடுத்துக் கொண்டு வெளியே நடக்க, தானும் அவன் பின்னே சென்றவள்,
“அத்தை! வெற்றியுடன் திரும்பி வரேன்! நீங்க மறக்காம மஷ்ரூம் பிரியாணி ரெடி பண்ணிடுங்க” – எனக் கூறி அவன் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
இருவரும் வண்டியில் ஒன்றாய் செல்வதைக் கண்டு முகத்தைக் கோணியவரைக் கண்டுத் தலையிலடித்துக் கொண்டவள்,
“என்ன, கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒன்னா இப்பிடி ஊர் சுத்தக் கூடாதா?” எனக் கேட்டாள்.
அவள் கேள்வியில் “ப்ச்” என முகம் சுழித்துத் தன்னைப் பார்ப்பவனைக் கண்டு பம்மி,
“அ…அதெல்லாம் ஒன்னுமில்லையே!, பார்த்துப் பத்திரமா போய்ட்டு வாங்க” என்றவர், முகத்தைச் சுருக்கியவாறே ஒதுங்கி நின்று கொண்டார்.
அவரைக் கண்டு சிரித்தவளைக் கண்டுகொள்ளாது அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து சாலையில் விட, பின்னே அமர்ந்தபடி, அவனை அளவிட்டுக் கொண்டிருந்தவள்,
“ரொம்பத் தான் உர்ருன்னு இருக்காதீங்க!, இப்ப என்ன பண்ணிட்டாங்க உங்களை?” என வம்பிழுக்க,
கண்ணாடியைச் சரி செய்து அவள் முகம் பார்த்தவன், அமைதியாய் சாலையில் கவனம் வைத்தான்.
“ஆனாலும் ரொம்பத் தான் அழுத்தமா இருக்கீங்க! இப்பிடியிருக்குறது உங்க நேச்சருக்கு செட்-ஏ ஆகல”
“என் நேச்சரைப் பத்தி உனக்கு ரொம்பத் தெரியுமாக்கும்?”
“கரெக்ட்டு தான்! இதுவரை உங்களை, பொண்ணுங்களை வெறிச்சு வெறிச்சுப் பார்க்குற ‘வெறியான்’-ன்னு தான் நினைச்சு வைச்சிருந்தேன்! ஆனா, நீங்க வெறியான் இல்ல, அக்கா மேல பாசத்தைப் பொழியுற ‘மரியான்’-ன்னு இந்த 4,5 நாள்ல புரிஞ்சுக்கிட்டேன்”
“ஷ்ஷ்ஷ்”-என அவன் எரிச்சலுறுகையில் ஹோட்டல் வந்து விட, வண்டியிலிருந்து இறங்கி நின்று சத்யாவைத் தேடினாள் சக்தி.
சஞ்சயன் கைக் காட்டியதும், அவனை நோக்கி நடந்தவளின் பின்னே வந்தான் சசி.
“ஹாய் சத்யாக்கா” – பெரிதாய்க் கூவிய சக்தியிடம் லேசாய்ப் புன்னகைத்தாலும், சத்யாவின் பார்வை முழுக்கத் தம்பியையே சுற்றி வந்தது.
அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தும் கண்டுகொள்ளாது, கழுத்தைச் சொரிந்தவன், கணவன் மற்றும் மனைவியின் முகத்தில் தெரியும் அதீத எதிர்பார்ப்பில் சங்கடமுற்று,
“எனக்குப் பசிக்குது” என முணுமுணுத்து இருவரையும் கடந்து சென்றான்.
அவன் அமர்ந்ததும், அவனுக்கெதிரே சக்தி அமர்ந்து கொள்ள, விவரமாய் அவளுக்கருகே சஞ்சயன் அமர்ந்ததும், வேறு வழியின்றித் தம்பியின் அருகே அவனைப் பார்த்தபடி அமர்ந்தாள் சத்யா.
அதுவரை அனைவரையும் வேடிக்கை பார்த்தபடித் தூக்கக் கலக்கத்தில் பெக்கே,பெக்கேவென விழித்துக் கொண்டுத் தன் தந்தையின் மடியில் அமர்ந்திருந்த சிறுவனிடம்,
“டேய் தம்பி, இட்லி,தோசை,பூரி,பொங்கல்! இதுல உனக்கென்ன டா வேணும்?” எனக் கேட்டாள் சக்தி.
“பூரி” – என்றவனைக் கண்டு, “எனக்கும் பூரி தான்!, அண்ணா உங்களுக்கு?” – என சஞ்சயனை இழுக்க,
“எனக்கு இட்லி” என்றான் அவன்.
“சத்யாக்கா?”
“எனக்கு எதுன்னாலும் ஓகே”
“சார் உங்களுக்கு?”
“1 மினி டிஃபன்” – சசி கூறியதும், சக்தியிடம் திரும்பிய சஞ்சயன்,
“அவளுக்கும் அதையே சொல்லிடலாம்! அது தான் அவளுக்கும் பிடிக்கும்” என்றான்.
“ம்ம்” – என உதட்டை வளைத்தவள், பேரரை அழைத்து ஆர்டரைக் கூறினாள்.
அவர் நகர்ந்ததும், மீண்டும் சிறுவனிடம் குனிந்தவள்,
“டேய் தம்பே, எதிர்த்தாப்ல உட்கார்ந்திருக்கிற தாடிக்கார அங்கிள் யாருன்னு உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டாள்.
“ம்ம்”
“யாரு?”
“சசி மாமா”
“உங்கம்மா சொல்லிக் கொடுத்துக் கூட்டி வந்துட்டாங்களா?”
“இல்ல, ஃபோட்டோல பார்த்திருக்கேன்”
“போறியா அவருக்கிட்ட?” – என சக்தி கேட்டதும், திரும்பி சசியின் முகம் பார்த்தான் அவன்.
கைகளைக் கட்டிக் கொண்டு சிறுவனைப் பார்த்திருந்தவனைக் கண்டு, அவன் மீண்டும் திரும்பிக் கொள்ள,
“முறைக்குறாரா?” எனக் கேட்டாள் சக்தி.
இல்லையெனத் தலையாட்டியவனிடம்,
“பார்க்க பூச்சாண்டி மாதிரி இருக்குறாரா?, பயமா இருக்குதா?” என விடாது அவள் கேட்க,
தயக்கமாய் மறுத்து,மறுத்துத் தலையாட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த சசி, திடீரெனப் பாக்கெட்டுக்குள் கை விட்டு எதையோ எடுத்து அவன் புறம் நீட்டினான்.
அவன் நீட்டியதை எட்டிப் பார்த்த சிறுவன், அதுவரையிருந்தத் தூக்கக்கலக்கம் மறைந்து, பளிச்செனப் புன்னகைத்தபடி,
“ஐ! சூப்பர் மேன் ஸ்டாம்ப்” என்றவாறு, அவன் கையிலிருந்ததை பறித்தெடுத்து, உற்சாகமாய்ச் சிரிக்க,
மூவரும் தன்னை ஆராய்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் பார்ப்பதைக் கண்டு முகத்தைத் திமிராய் வைத்துக் கொண்டான் சசி.
“என்னாது டா இது?” – சக்தி.
“இது ஸ்டாம்ப் அத்தை!, கைக் காட்டுங்க” – என்றவன், அந்த சிறிய பொம்மையைத் திறந்து, சக்தியின் கையில் அச்சுப் பதிக்க, அது சூப்பர்மேன் உருவத்தில் விழுந்தது.
“க்க்க்க்க்க்க்க்” – என அதைப் பார்த்து பார்த்து அவன் கிளுக்கிச் சிரித்துக் கொண்டிருக்கத் தன் கையை அவன் புறம் நீட்டினான் சசி.
அவன் கையின் மீதும் அச்சுப் பதித்தவனின் வலது கையை இறுகப் பற்றி, இழுத்து அவன் தன்னோடு தூக்கிக் கொள்ள, சிறுவனும் அடம் செய்யாது, அவன் இழுத்த இழுப்புக்கு உடன் வந்தான்.
“மாமா வீட்ல இது மாதிரி நிறைய ஸ்டாம்ப் வைச்சிருக்கேன் தெரியுமா?”
“ம்ம்?, என்ன ஸ்டாம்ப்பெல்லாம் இருக்கு?”
“டொனால்ட் டக்,டைனோசர்,ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ்” – கூறிக் கொண்டே சென்றவனின் முகத்தை ஆச்சரியமாய்ப் பார்த்து,
“எனக்குத் தருவியா மாமா?” எனக் கேட்டான்.
“நீ உன் அம்மா,டாடிக்கு டாட்டா சொல்லிட்டு என் கூட வீட்டுக்கு வந்தேனா தருவேன்”
“திமிரைப் பாருங்களேன்” – முணுமுணுப்பாய் சக்தி.
அவன் கூறியது கேட்டு ஒரு நொடித் தன் அன்னையையும்,தந்தையையும் நோக்கிய சிறுவன்,
“அவங்களும் வரட்டும் மாமா” என்றான்.
“ம்ம்ம்” – என யோசித்த சசி, “சரி, போனா போகுது! அவங்களையும் கூட்டிப் போவோம்” – என்றதும் மகிழ்ச்சியாய்த் தலையாட்டியவன், “வேற என்ன டாய் வைச்சிருக்கீங்க?” எனக் கேட்டதும், அவனுக்குப் பதிலளித்தபடி அவனுடன் சசி ஐக்கியமாகி விட,
தன் தம்பியும்,மகனும் வளவளப்பதை பார்த்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தாள் சத்யா.
அதற்குள் ஆர்டர் செய்த ஐட்டங்கள் வருகை தர, அனைத்தையும் வாங்கி சஞ்சயன் அவரவர் புறம் நகர்த்தியதும்,
“சாப்பிடுவோமா?” என்றபடி சிறுவனைத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக் கொண்ட சசி, மினி டிஃபனிலிருந்த கேசரியைத் தன் தமக்கையின் தட்டுக்கு “எனக்குப் பிடிக்காது” என முணுமுணுத்தவாறு கடத்திக் கொண்டிருந்தான்.
அதையும் அமைதியாய்ப் பார்த்திருந்தவளிடம்,
“உங்களுக்குக் கேசரி பிடிக்குமா சத்யாக்கா?” எனக் கேட்டாள் சக்தி.
“ரொம்ம்ம்ம்ப” என்ற சத்யாவின் முகம், தன் ப்ளேட்டிலிருக்கும் பூரியை விட பூரித்திருப்பது கண்டு புன்னகைத்து,
“கேசரி பிடிக்காதவங்கல்லாம் இந்த உலகத்துல வாழ்ற்தே வேஸ்ட்டூ” – என்று முணுமுணுக்க,
அவனோ அவளைக் கண்டுகொள்ளாது, மருமகனுக்குத் தோசையை ஊட்டுவதில் பிஸியாக இருந்தான்.
அதன் பின்பு உண்டு முடித்ததும் “காபி,டீ சார்?” என்று வந்து நின்ற பேரரிடம் சசி,
“ஒரு மசாலா டீ” என்று கூற, சத்யாவின் முகம் மலர்வதைக் கண்டுவிட்டு, அவசரமாய் இடைபுகுந்த சக்தி,
“ரெண்டா கொண்டு வந்துடுங்கண்ணா” – என்று விட்டு, தனக்கும், சஞ்சயனுக்குமானதையும் சேர்த்துக் கூறினாள்.
டீ வந்ததும், தம்பி குடிக்கும் பதத்திற்கு டீயை ஆற்றி, அவன் முன்பு சத்யா வைக்க, அவன் அதை எடுத்துப் பருகியதும், நெற்றியைச் சொரிந்த சக்தி, சஞ்சயனின் புறம் குனிந்து,
“இன்னைக்கு ஒரு நாள் தானண்ணா இந்த சீனெல்லாம்?” எனக் கேட்டாள்.
“ஏன், உனக்குப் பொறாமையா இருக்கா?”
“இல்ல, எனக்குப் புதுசா இருக்கு”
“எனக்கும் தான்!”
“ஆனா.. “
“என்ன ஆனா?”
“கொஞ்சம் , இல்ல ரெம்ம்ம்ப க்ரிஞ்சா இருக்குங்ண்ணா” – என்றவளைக் கேட்டு சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தான் சஞ்சயன்.
ஒரு வழியாக அக்காவும்,தம்பியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல், தங்களது அன்பை கேசரியிலும்,மசாலா டீயிலும் வெளிப்படுத்திக் காலை உணவை முடித்து ஹோட்டலிலிருந்துக் கிளம்பினர்.
சிறுவனைத் தூக்கிக் கொண்டு முன்னே நடந்தவனிடம்,
“நான் பில் பே பண்றேன்” – என்று பர்ஸை எடுத்துக் கொண்டு சஞ்சயன் வேகமாக அருகே வர, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தவன்,
“பில் கவுண்ட்டர் அந்தப் பக்கம் இருக்கு” என்றான், தான் சென்று கொண்டிருக்கும் பாதையைப் பார்த்தபடி.
“ஓ” என்று விட்டு நெற்றியைத் தேய்த்துக் கொண்டு சஞ்சயன் மறுபக்கம் செல்ல, பின்னால் வந்து கொண்டிருந்த சத்யாவிடம்,
“மனுசன் செலவாளியா, இல்ல கஞ்சமா?” எனக் கேட்டான் சசி.
அவசரமாகக் கணவன் செல்லும் பாதையைத் திரும்பிப் பார்த்து விட்டு,
“டேய் அவரு உன் மாமா டா” என்றவளைக் கண்டு அலட்சியமாய் உதட்டை வளைத்தவன்,
“கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றான்.
“அவர் நம்ம அப்பா மாதிரி தான் டா”
“ப்ச், அப்ப பெரிய கஞ்சத்தனம் புடிச்ச கேஸ் தான் போல” – என்று முணுமுணுத்தபடியே அவன் முன்னே நடக்க,
“அப்பா உனக்கு மட்டும் தான் 100,200ன்னு கொடுப்பாரு. எனக்கெல்லாம் 500,1000 தான் தெரியுமா?” – என்றபடியே அவனோடு நடந்த சத்யாவைக் கண்டுப் பின் தங்கிய சக்தி, சஞ்சயனுடன் சென்று நின்று கொண்டாள்.
“அதையும் நீ செலவளிக்காம சேர்த்து தான வைப்ப”
“பின்ன உன்னை மாதிரியா!”
“உன்னைப் பத்தி பேசுனாலே, ரொம்ப உருகுறாரு மனுசன்! என் கிட்ட சும்மா சீனைப் போட்றாரா?, இல்ல, நிஜமாவே பாசமா தான் இருக்காரா?” – என்றதும் நின்று அவனை முறைத்த சத்யா,
குழந்தையை அவனிடமிருந்து பறித்துக் கீழிறக்கி, “நீ அத்தைக் கிட்டப் போ!, அம்மா வரேன்” என்று அனுப்பி விட்டு,
“குழந்தை முன்னாடி என்ன டா பேசுற?” என்று திட்டி,
“உனக்கு மாமாவை பிடிக்கலையா டா?” எனக் கலக்கமான குரலில் கேட்டதும்,
“இதை எப்ப வந்து கேட்குற?” என்று சீறியவன், “இனி எனக்குப் பிடிச்சா என்ன, பிடிக்காட்டி என்ன?” எனப் பொரும,
“அவரு ரொம்ப நல்ல மனுஷன் டா! , அதட்டிக் கூட பேச மாட்டாரு!, பாசத்துக்கு ஏங்குற ஆளு!, நம்மளத் தவிர அவருக்கு வேற எந்த சொந்தமும் கிடையாது, அவரு பாவம் டா சசி! இனி இப்பிடிப் பேசாதடா!” – கெஞ்சியவளின் முகம் பாராதுப் பிடரியைக் கோதியவன்,
“நீ உன் புருசனுக்குத் தான சப்போர்ட் பண்ணுவ” – என முணுமுணுக்க..
“சரி, அவருக்கு சப்போர்ட் பண்ணல!, இப்ப நான் என்ன செய்யனும்ன்ற, அதைச் சொல்லு” என்றாள் சத்யா.
தூரத்தில் மகனுடன் பேசிச் சிரித்தபடி நடந்து வந்து கொண்டிருந்த சஞ்சயனை ஒரு பார்வை பார்த்து விட்டு,
“ஒன்னும் செய்ய வேணாம்” என்று முனகியவனிடம்,
“உனக்கு அவரைப் பிடிச்சிருக்கு தான டா?” – என அவள் மறுபடி கலக்கத்துடன் கேட்க, அவளை நேராய்ப் பார்த்தவன்,
“உனக்குப் பிடிச்சிருக்கிறப்ப, எனக்கு மட்டும் எப்பிடிப் பிடிக்காம போகும்?” எனக்கூற, அவன் தலையைத் தட்டி,
“அதை ஏன் டா முறைச்சுக்கிட்டே சொல்ற?” எனத் திட்டியவள்,
“அக்கா மேல ரொ..ரொம்பக் கோபமா டா?” -எனக் கேட்க,
கண்ணீர் கோர்த்து நின்ற அவள் விழிகளைக் கண்டு, அவள் தோளில் கையிட்டுக் கொண்டவன், அவளை நகர்த்தி, “நட நட” என்றவாறு முன்னே இழுத்துச் செல்ல, மூக்கை உறிஞ்சிக் கண்ணீரை அடக்கிப் புன்னகைத்துக் கொண்டாள் சத்யா.
இருவரும் சேர்ந்து வருவதைக் கண்டு உதட்டை வளைத்த சக்தி,
“அக்காவும்,தம்பியும் சமாதானமாய்ட்டீங்க போல” என்று கேலி செய்ததைப் பொருட்படுத்தாது, சஞ்சயனின் கையிலிருந்த விஷ்ணுவைத் தூக்கிக் கொண்ட சசி,
“மாமாவோட வண்டில போலாம் வா” – எனக் கூறி தன் வண்டியை நோக்கி நடக்க,
“நான் இவங்களோட கார்ல வரேன்!” என்று அவனிடம் கூறிய சக்தி, “பார்த்து, பத்திரம்” எனக் கூற,
திரும்பி அவளைப் பார்த்து “போடி” என்று விட்டுப் போனான் அவன்.
“டியா?” – எனக் கண்ணை விரித்த சக்தி, “உங்க தம்பி, உங்க கூட ஜாயிண்ட் அடிச்சுட்டக் குஷில கொஞ்சம் ஓவராத் தான் போறாரு சத்யாக்கா” என்று புலம்பியவாறு, அவர்களுடன் காரில் ஏறி அமர்ந்தாள்.
இவர்களனைவரும் வீட்டிற்குள் நுழைகையில், ஆரத்தியைக் கரைத்து வைத்துக் கொண்டு வாசலில் காத்திருந்த விசாலம், பேரனுடன் நால்வரும் ஒன்றாய் வருவது கண்டு சந்தோசத்தில் மகிழ்ச்சி பொங்கக் கண்ணீர் விட்டபடி, மகளையும்,மருமகனையும் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க,
“நீயும் வா சக்தி, சசி வா டா” என்ற சத்யா, இருவரையும் அழைத்துத் தங்களோடு நிற்க வைத்துக் கொண்டாள்.
நால்வரையும் சுற்றி முடித்த விசாலம், பொட்டு வைத்து, மகளையும்,பேரனையும் முத்தமிட்டு உள்ளே அனுப்புகையில்,
“உங்க மகனை விட்டுட்டீங்கத்தை! அவரு பொசஸிவ் போஸ்பாண்டி வேற!, உனக்கு என்னைப் பிடிக்குமா, அவளைப் பிடிக்குமான்னு கேட்டு சண்டையைப் போட்றப் போறாரு” என்று சக்தி கேலி செய்ய,
“அந்த சண்டையெல்லாம் நாங்க சின்னப் பிள்ளைலயே போட்டாச்சு” – என்றவாறு சத்யா உள்ளே நுழைய, தொடர்ந்த சசி,
வாசலில் நின்றவளின் கன்னத்தைப் பற்றிக் கிள்ளி விட்டுச் செல்ல,
“காலைல இருந்து என்னை ‘null’ கேரக்டர் மாதிரி ட்ரீட் பண்ணிட்டு, இப்ப நிமிண்டி விட்டுப் போறதைப் பாரேன்” – என்று புலம்பியபடியே உள்ளே சென்றாள் சக்தி.
அதன் பின்பு தன் தந்தையின் புகைப்படத்தைப் பார்த்து அழுதபடி சத்யா!
அவளைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்ட விசாலம்!
இருவரையும் கஷ்டப்பட்டு சமாதானம் செய்தவாறு சஞ்சயனும்,சக்தியும்!
இது எதையும் கண்டுகொள்ளாது மருமகனைக் கொஞ்சியபடி சசி!
-எனக் கடந்த சில மணி நேரங்கள், மெல்ல மெல்ல இயல்புக்குத் திரும்பியதும்,
சத்யா தன் வீட்டையும், தன் அறையையும் சுற்றி,சுற்றிப் பார்த்து ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடித்து, “இதை ஏன்ம்மா இங்க வைச்சிருக்க?, அதை ஏன் மாத்துன?, பழைய புக்ஸையெல்லாம் ஏன் இப்பிடிப் பரண் மேல போட்டு வைச்சிருக்க?, அதெல்லாம் என் ஃபேவரைட் கலெக்ஷன்ஸ்ம்மா” – எனத் தன் அன்னையை விடாது தொல்லை செய்து சுற்றி வர,
அவள் முகத்திலும்,செய்கையிலும் தெரியும் உயிர்ப்பைத் திருப்தியாகக் கண்டபடி அமைதியாய் அமர்ந்திருந்த சஞ்சயனின் அருகே வந்தமர்ந்த சசி,
“அங்கயும் இப்பிடித் தான் இருப்பாளா?” எனக் கேட்டான்.
அதற்குப் புன்னகைத்து “ம்ம்” என்றவன் “ஆனா, இந்த சத்தமெல்லாம் நம்மக்கிட்ட மட்டும் தான்” எனச் சேர்த்துக் கூற,
“சரியாத்தான் புரிஞ்சு வைச்சிருக்கீங்க” என்றான் சசி.
அருகில் விளையாடிக் கொண்டிருந்த விஷ்ணு, கேப்டன் அமெரிக்காவின் கையை மாட்டத் திணறுவது கண்டு, அதை வாங்கிப் பொறுமையாய் சரி செய்து கொண்டிருந்தவனையே ஒரு நொடி பார்த்திருந்துப் பின்,
“சசி…” என்றழைத்தான் சஞ்சயன்.
“ம்ம்” – பொம்மையிலிருந்துக் கண்ணைத் திருப்பாது சசி.
“சாரி டா..”
கைகள் ஒரு நொடி நின்று பழைய நிலைக்குத் திரும்ப, பொம்மையிலேயே பார்வையைப் பதித்து, “நானும்” என்றான்.
அதன் பின்பு, தன்னறையில் பரண் மீதிருந்தப் புத்தக டப்பாக்களைப் பிரித்துப் போட்டு அதகளம் செய்து கொண்டிருந்த சத்யாவைத் தேடிச் சென்றவன்,
தீவிரமாய்ப் புத்தகங்களைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தவளிடம் தன் கையிலிருந்ததை நீட்டினான்.
“என்ன அது?” – என்ற சக்தி, சுருட்டப்பட்டிருந்த நீண்ட காகிதத்தை சத்யாவிடமிருந்துப் பறித்துப் பிரித்துப் பார்க்க,
சிகப்பு டீஷர்ட்டில் தோள் மீது படர்ந்திருந்தக் க்ரீம் நிற கோட்டை ஒற்றை விரலால் பற்றியபடி, பக்கவாட்டில் பார்த்தவாறு புன்னகை முகமாக அந்தப் போஸ்ட்டரில் நின்றிருந்தது.. கேப்டன் விஜயகாந்த்!!!!!
அதைக் கண்டதும் துள்ளிக் குதித்த சத்யா,
“டேய்ய்ய்ய் சசி!!!” – என்றவாறு அவன் தோளைக் கட்டிக் கொள்ள,
“ஏய், ச்சி, கையை எடு”- எனத் தட்டி விட்டவனைக் கண்டு கொள்ளாது, அவன் நாடியைப் பற்றிக் கொஞ்சி,
“இந்த போஸ்ட்டரை நான் எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா டா?, முன்னாடி இருந்த பச்சை பீரோல, இதைத் தான் ஒட்டி வைச்சிருந்தேன்! பரீட்சைக்குப் படிக்காம இந்த வேலை பார்க்குறேன்னு அப்பா திட்டுனதால பிரிச்சு மூலைல தூக்கிப் போட்டது!” – என்று கும்மாளமிட,
சந்தோசத்தில் குதிக்கும் சத்யாவும், எதையோ சாதித்தது போல முகத்தைக் கர்வமாய் வைத்துக் கொண்டு நின்ற சசியையும் ஆஆ-வென நோக்கிய சக்தி, ‘குடும்பமே மெண்டலா இருப்பாய்ங்க போல’ என முணுமுணுத்துக் கொண்டாள்.
“போதும், போதும்! உன் பொக்கிஷத்தோட பாசத்தை வளர்த்தது! வந்து பிள்ளைக்குப் பாலை ஆத்து!, இந்தக் காபியையும்,வாழைப்பூ வடையையும் எடுத்துட்டுப் போய் தம்பிக்குக் கொடு” – என விசாலம் சமையலறையிலிருந்து சத்தமிட்டதும்,
“வரேன்ம்மா” – என்றுக் கத்தியபடியே ஓடிச் சென்ற சத்யாவைக் கண்டவாறு சிரிப்புடன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்த சக்தி, ஏதோ உறுத்தத் திரும்பி எதிரிலிருந்தவனை நோக்கினாள்.
எதிர்ப்புறமிருந்த சிறிய கட்டிலில் இரண்டு கைகளையும் பின்னால் நீட்டி அமர்ந்திருந்தவன், தலை சாய்த்து அவளையே பார்த்திருப்பது கண்டு புருவம் உயர்த்தினாள் சக்தி.
“இன்னா மேன்?”
“ப்ச்”
“அப்டின்னா?”
“அப்டித் தான்”
“உங்களுக்கு உங்கக்காவைப் பத்தின ஆல் இன்ஃபர்மேஷன் ஆல்ரெடி தெரியும் தான?”
“தெரியாம இருக்குமா” – அசால்ட்டாய்க் கேட்டவனைக் கண்டுக் கண்ணை விரித்தவள்,
“விஷ்ணு கிட்ட சூப்பர் மேன் ஸ்டாம்ப்பை நீட்டும் போதே நினைச்சேன்!” – எனக் கூற,
பதில் கூறாமல் தோளைக் குலுக்கினான் அவன்.
சிரிப்பு வரப் பார்த்தாலும் அடக்கி, “ஆக, உங்கக்காவைப் பார்த்ததும், இந்த ஆவக்காயை மறந்துட்டீங்க?” – எனக் கேட்க,
உடனே நாடியை இறக்கி, கண்ணைச் சுருக்கி, “ஊறுகா போட்றலாமா?” – என்றவனைப் புரியாது நோக்கியவளிடம்,
“மேல வா” என்றான்.
“என்னாஆஆதூதூ?”
“என் ரூம்க்கு”
“யோவ் யோவ்”
“நான் போறேன். நீ வா” – என்று விட்டு எழுந்து சென்றவனை,
“கொஞ்சம் கூட கூச்ச,நாச்சமே கிடையாதா உங்களுக்கு?, வீட்ல இத்தனை பேரை வைச்சுக்கிட்டு நான் எப்பிடி உங்க ரூம்க்கு வர முடியும்?, அறிவில்ல?, அத்தை மட்டும் இதைக் கேட்டுச்சு, உங்க சங்கைக் கவ்விரும்” – என விடாது திட்டித் தொடர்ந்தவளைக் கண்டு கொள்ளாது, அவன் படியேறி விட,
“லூசா இவன்?” – என்று புலம்பியபடி அறையை விட்டு வெளியே வந்தவளின் கையில் வாழைப்பூ வடையைத் திணித்த சத்யா,
“எங்க அவன்?” எனக் கேட்டாள்.
“மேல”
“சரி, அவன் கிட்டப் போய்க் கொடு”
“அதெல்லாம் வேணாம், அவன் கீழ வரும் போது சாப்பிட்டுக்கட்டும்” – வடையை சுட்டுக் கொண்டிருந்த விசாலம், தன் பெரிய விழிகளால் இவளையும் சுட்டுத் தள்ளி “சசி……” என்று கத்த,
அவனிடமிருந்துப் பதில் வராததும், உதட்டை வளைத்த சக்தி,
“பெரிய கற்புக்கரசனைப் பெத்து வைச்சிருக்க மாதிரி இந்தத்தை ரொம்பத் தான் பண்ணுது சத்யாக்கா!, நீங்களே போய்க் கொடுங்க” – என்று அலட்சியமாய்க் கூற,
“எந்தக் காலத்துலம்மா இருக்க நீயி?” என்று அன்னையை அதட்டிய சத்யா, “நீ போ” என்று விட்டு நகர்ந்ததும்,
அடுப்படியிலிருந்தவரை எட்டிப் பார்த்து நாக்கைத் துருத்தியவளிடம்,
“இந்தா கண்ணு, வடையைக் கொடுத்தோமா, கீழ இறங்குனோமான்னு இருக்கனும்” என்று விசாலம் விடாது கூற, ‘ஹ்ம், பார்ப்போம்’ என்று விட்டு விறுவிறுவென மேலே ஏறினாள் சக்தி.
படுக்கையில் அமர்ந்த நிலையில், கையிலிருந்த மொபைலில் பார்வையைப் பதித்து, மீசையை நீவிக் கொண்டிருந்தவனைக் கண்டபடி உள்ளே வந்தவள், அருகிலிருந்த டேபிளில் வடைத் தட்டை வைத்து,
“வாழைப் பூ வடை! விசாலம் ஸ்பெஷல்” என்று கமெண்ட் கொடுத்தபடியே ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, அந்த டேபிளில் சாய்ந்து காலாட்டியபடி நின்றவாறு,
“என்னவாம்?” எனக் கேட்டாள்.
மொபைலைக் கீழே வைத்து விட்டு, அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகம் தன்னாலேயே மாறி விட,
“வடை நல்லாயிருக்கா?” – எனக் கேட்டான்.
“நல்லாயிருக்கே!”
“ஹ்ம்ம்???”
“ஏன்?”
“கே..ட்டேஏஏன்”
“உங்களுக்கு வேணாமா?”
“எனக்கு வடையெல்லாம் வேணாம்”
அவன் குரலிலிருந்த பேதத்தைக் கண்டு, அவனைக் கேவலமாய் நோக்கியவள்,
“நீ எங்க வர்றன்னு எனக்குத் தெரிஞ்சுருச்சு மேன்!, செருப்பு,வெளக்கமாறு எல்லாம் பிஞ்சுடும் சொல்லிட்டேன்”
“நல்ல வேளை, என் ரூம்ல அதெல்லாம் இல்ல!” – என்றவாறு எழுந்து வந்தவனைக் கலவரமாய்ப் பார்த்தபடி நிமிர்ந்து நின்றவளின், அருகே வந்து,
அவளிரு கைகளையும் பற்றி அகல விரிக்கச் செய்து, இடைபற்றித் தூக்கித் தன்னோடு கட்டிக் கொண்டவன், “தைரியமிருந்தா இப்பப் பாடேன், நான் எட்டுத் திக்கும் அலைகிறேன்னு” என்றான்.
முழுதாக வாய்க்குள் அமுக்கியிருந்த வடையை அவசரமாய் மென்று,
“90ஸ் கிட்ஸ்-க்கு ரொமான்ஸ் பண்ணவே வராதுன்னு நினைச்சேன்” – என,
“ஏன், எங்களைப் பார்த்தா, ஆம்பளையாத் தெரியலையா?” – என்றவாறு கட்டிக் கொண்டவனை,
“கஜகஜா பண்ண நல்ல காலம் பார்த்த! இறக்கி விடு மேன்” – என்று அவள் அடிக்குரலில் சீற,
“வாய்ப்பே இல்ல” எனக் கூறி, “எங்கம்மா எனக்குக் கொடுத்த வடை தான இது?, நீ ஏன் சாப்பிட்ட?” என்றவாறு தன் முகம் நோக்கிக் குனிபவனைக் கண்டு, கண்ணைப் பெரிதாக விரித்து மூக்கை விடைத்து, வேக,வேகமாய் விழுங்கப் பார்த்தவளின் இரு கன்னங்களையும் பற்றி அழுத்தி,
இதழ் திறக்கச் செய்து, சிரிப்புடன், தன் பங்கை கணக்காய் வாங்கியவனின் முதுகில் அடித்துக் குதித்து இறங்கப் பார்த்தவளைத் தடுத்து, அவளுடனே தன் படுக்கையில் விழுந்தான் அவன்.
விழுந்த வேகத்தில் தன் தோளில் நெற்றியை இடித்தவனை உணர்ந்து வலியில் முகத்தை சுழித்தவள், அவசரமாய் அவனை உருட்டி விட்டு எழப் பார்க்க,
முன்னேற விடாமல், அழுத்தமாய் அவளோடு ஒட்டிக் கொண்டவனின் செய்கையில் கண்ணில் நீர் வர விழுந்து விழுந்து சிரித்தாள் சக்தி.
“ஹாஹாஹாஹா”-வென்கிற அவளது சத்தமான புல்லட் சிரிப்பு, கீழே எட்டி விடாதிருக்க, அவள் வாயைப் பொத்தியவனைக் கண்டு சிரிப்பை நிறுத்திப் புருவம் நெரித்துக் கண்களால் தன்னை மிரட்டியவளை, ஆர்வமாய் நோக்கினான் அவன்.
அவனது அறையில்,அவனது படுக்கையில், அத்தனை அருகில் அவள் விழிகளைக் காண நேர்ந்ததில் மயங்கி, பேச்சற்று ,இமைக்காது நோக்கியவனை உணர்ந்து, எதிர்ப்பை நிறுத்தி, பதில் பார்வை பார்த்தவள்,
“ஆரம்பிச்சா முடிக்க முடியாதுன்னு சொன்னீங்க?”-என்று முணுமுணுத்ததும்,
“இன்னைக்கு…. முடிக்கிறதா இல்ல” எனத் தானும் முணுமுணுத்து, தன்னையே இமை அசையாது நோக்கும் அவள் விழியைக் கண்டு, மெலிதாய்ப் புன்னகைத்தவன், நெற்றி முட்டி, அவள் கண்கள் மீது இதழ் பதித்தான்.
அவன் இதழீரம் பட்டு ஒட்டிக் கொண்ட இமைகளை அவள் பிரிக்காது போக,
அதன் பின்பு, அகப்பொருளின் அர்த்தம் தேடி, அறம் தளர்த்தி, சுற்றுப்புறம் மறந்து, சுக எல்லைக்கான சூட்சுமத்தை அறிந்து கொள்ளத் துடித்து, கள்ளிக் காட்டுக்குள் சுள்ளி பொறுக்க முயன்று கொண்டிருந்தவனை,
திறந்திருந்த கதவின் வழி “மாமா…” எனும் அழைப்பு விழித்திடச் செய்ய, அவசரமாய் விலகி எழுந்து, தலையைக் கோதி, சட்டையை நீவியபடி நடந்து வந்தவனை, வாசலில் எதிர்கொண்ட விஷ்ணு,
“மாமா கிரிக்கெட் விளையாடுவோமா?” எனக் கேட்க,
“விளையாடலாமே!” – என்று அவனுக்குப் பதில் கூறியவாறுத் திரும்பிப் படுக்கையை நோக்கினான் சசி.
அவன் விலகியதும் எழுந்தமர்ந்து இவர்களிருவரது உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் தலைமுடி, தாறுமாறாகக் கலைந்திருப்பது கண்டு புன்னகை பூத்து,
“அத்தையையும் விளையாட்டுல சேர்த்துக்குவோமா?- எனக் கேட்டபடி மருமகனை நகர்த்திக் கொண்டு உள்ளே வந்து, படுக்கையருகே நின்றவன்,
“அத்தை,உனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா?” – என சிறுவன் கேட்டதும்,
“ஓ! தெரியுமே!” என ஜோராகத் தலையாட்டியவளின், தலையைப் பற்றி நிறுத்தி முடியை இரு கைகளால் கோதிச் சரி செய்ய,
“ப்ச்” என முறைத்து அவன் கையைத் தட்டி விட்டவள், “ஆனா அத்தை தான் பௌலிங் பண்ணுவேன்” என்றதும், “அப்ப நான் பேட் பண்ணுவேன்!” என்ற சிறுவன், “அப்டின்னா, மாமா என்ன செய்வான்?” எனக் கேட்க,
அவள் விலக்கி விட்டதில் கடுப்பாகி, அவள் கன்னத்தைக் கிள்ளி, “மாமா தான் ஃபீல்டிங்!” என்றவாறு சிறுவனைத் தோளில் தூக்கிக் கொண்டவன், அவனிடம் “இப்ப கீழ போலாமா” எனக் கேட்டு,
தன்னை முறைப்புடன் நோக்கியபடி, தலைமுடியைக் கட்டிக் கொண்டிருந்தவளிடம் குனிந்து, கிள்ளிய இடத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து நிமிர,
தன்னாலேயே நீண்டு விட்டப் புன்னகையுடன் விழி தாழ்த்தி நிமிர்ந்து, அவன் முகம் பார்த்தவளைப் பிரதிபலித்துத் தானும் புன்னகைத்தான் சசிதரன்.
ஜன்னல் வழி வந்த வெயில் முகத்தில் அடித்ததில், மஞ்சளாய்ப் புன்னகைத்த இருவரது சிரிப்பிலும் தினப் பொருத்தத்திலிருந்து கணப் பொருத்தம் வரை, இப்பிறவி முழுதையும் சேர்ந்தே கடப்பதற்கான அத்தனைப் பொருத்தமும், அம்சமாய்ப் பொருந்தியிருந்தது.
அந்த மஞ்சள் சிரிப்பு, வெள்ளையாய் மாறிய போது, இருவரும் கணவன்-மனைவியாய் மணமேடையில் அருகருகே நின்று, எதிரிலிருந்த கேமராவைப் பார்த்தவாறு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
கலர்,கலராய்ப் புன்னகைத்த இருவரையும் கண்டு, அந்த மண்டபத்தின் வாசலில் காண்டாடுடன் நின்றிருந்த ஆள், யாரென நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
அலெக்ஸ் ப்ரோ!
“ஏன்-ண்ணா முறைச்சிட்டே இருக்கீங்க?, உங்களுக்கென்ன அப்பிடி சசிண்ணா மேல காண்டு?”
–இருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு கடுப்பாகி, தன் கையிலிருந்தப் பன்னீரை அவன் மீதுத் தெளித்தபடி பவித்ரா.
“வாழ்க்கை முழுக்க சிங்கிளாவே இருந்து, சாமியாரா போவேன்னு சபதம் எடுத்தவன், இன்னைக்கு சலோமியான்னு பாடிட்டு இருக்கான் பாரேன்!, காவி கட்டி, கஜ,கஜான்னு வாழுவோம்ன்னு இவன் கூடச் சேர்ந்து சத்தியம் பண்ணுன, எனக்குத் தெரியாம, இவ்ளோ வேலை பார்த்திருக்கான்னா, இவனெல்லாம் என்ன நண்பன்?”
“அவரு தான் நிச்சயதார்த்தத்தன்னிக்கு உங்களுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னாராமே”
“சத்தியமா கம்னாட்டி, கனவு கண்டுட்டு கண்டமேனிக்கு உளறுதுன்னு தான்ம்மா நினைச்சேன்!”
“அது உங்கள் தவறு”
“இருந்தாலும், கொஞ்சம் இவன் அமுக்கினு இருந்திருந்தா, என் நண்பன் அழகுக்கும்,குணத்துக்கும் ஒரு அடக்கமானப் பொண்ணா கிடைச்சிருக்கும்!”
“ஏன், எங்க சக்தியோட அடக்கத்துக்கு என்ன குறை?”
“அதுவா அடக்கமான ஆளு?, பேசியே 4 பேரை அடக்கம் பண்ற ஆளு”
“ப்ச் ண்ணா.., இப்டியே பேசிட்டிருந்தீங்கன்னா, அவ கண்டிப்பா இந்த மண்டபத்துலயே உங்களை அடக்கம் பண்ணாலும் பண்ணிருவா” – என்று அவள் மிரட்டியதும், சோகமும்,விரக்தியுமாய்ச் சுற்றிக் கொண்டிருந்த அலெக்ஸ், கடைசியாய் மேடையேறினான்.
இவனைக் கண்டதும் அலட்சியமாய் உதட்டை வளைத்த சக்தியைக் கண்டுப் பொங்கி, அவளை நோக்கி எகிறிக் கொண்டு வந்தவனை, அவசரமாய்த் தடுத்து நிறுத்திய சசி,
“ப்ரோ! ப்ரோ! ப்ளீஸ் ப்ரோ” – என்று கெஞ்ச,
நெற்றியில் கை வைத்துப் பெருமூச்சை வெளியிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்தியவன், அவளிடம்,
“இதோ பாரு ரெட்டூ மூக்குத்தி, நான் உங்கிட்ட சொல்ல நினைக்குறது ஒன்னே ஒன்னு தான்” என்றான் அதிதீவிரமான குரலில்.
“என்ன?” – திமிராய் அவள்.
“வாரத்துல 5 நாளும் நீ அவனை உன் கூடவே வைச்சுக்க!, நான் எதுவுமே சொல்ல மாட்டேன்! ஆனா.. வீக் எண்ட்ல அவன் எனக்குத் தான்” – தீர்மானமாய்க் கூறியவனைக் கண்டு மூக்கை விடைத்து,
“5 நாள்ல, தினம் 10 மணி நேரம் ஆஃபிஸ்ல உட்கார்ந்திருப்பாரு!, மிச்சமிருக்கிற 4 மணி நேரத்தை வைச்சு, நான் நாக்கு வழிக்கவா?” என்று எகிற,
“சரி வோணாம்! சாட்டர் டே நைட் மட்டும், அவன் எனக்கு!”
“எதுக்கு?”
“நாங்க ஒன்னா தண்ணியடிச்சு, ஒன்னா வாந்தியெடுத்து, ஒன்னா ஒன்னுக்குப் போய், ஒன்னா…” – என்றவனை அவசரமாய்த் தடுத்தவள்,
“ச்சை கருமம்! வாயை மூடுய்யா” – என்று திட்ட,
“முடியாது! சசி, சாட்டர் டே நைட், நீ எனக்குத் தான் டா!, இந்த ரெட்டூ மூக்குத்தி எந்த வகைலயும் உனக்கும்,எனக்கும் இடைல வரவே கூடாது” – என்று அவன் சசியை மிரட்டியதும்,
“அவரை ஏன் மிரட்டுறீங்க?, அவரு வர மாட்டாரு! குடும்பஸ்தனை குடிக்கக் கூப்பிட்றியே!, நீயெல்லாம் விளங்குவியா?”
“அப்டின்னா, என்னையும் குடும்பஸ்தனாக்கி விடச் சொல்லு அவனை!, இவன் மட்டும் கல்யாணம் பண்ணிட்டுப் பொண்டாட்டியோட மால்தீவ்ஸ் போவான்!, நான் மட்டும் மல்லாக்கப் படுத்துக்கிட்டு மண்டையை சொரிஞ்சிட்டிருக்கனுமா?”
“அப்ப உனக்குக் கல்யாணமாகிட்டா, என் புருசனை விட்ருவேல?”
“பாயாசம் கைல இருக்கும் போது, எவனாவது பாய்சனைத் தேடுவானா?”
“அப்ப சரி!, எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. சித்தி பொண்ணு! பேரு ரோஜா! பார்க்க.. அப்பிடியே என்னை மாதிரியே இருப்பா”
“ஆ…மா!, இவங்க பெரிய கண்டேன் காதலை தமன்னா!, ரோ..ஜாவாமா! ரோ….ஜாஆஆ” – என்று இழுத்தவனைக் கண்டு ரோஷமாகி, தூரத்தில் தெரிந்தத் தன் தங்கையை “ரோஜா…” என்று சக்தி அழைத்ததும்..
குட்டையாய்க் கட்டையாய்,அவளைப் போலொரு வெள்ளைப் பன்னி மேடையேறுவது கண்டுக் கண்ணை விரித்த அலெக்ஸ்,
சசி அணிந்திருந்த மாலையிலிருந்து ஒரு ரோசாப்பூவை அவசரமாகப் பறித்து, “ரோஜா.. ரோஜா.. ரோஜா.. ரோஜா” – எனப் பாடி, அந்தப் பெண் ‘களுக்’ எனச் சிரித்து நகர்ந்ததும், கையிலிருந்ததை நுகர்ந்து, நடிகர் சிவாஜியைப் போல் நடந்தவாறு, அவள் பின்னாலேயே சென்றான்.
அதன் பின்பு சோகம் நீங்கிக் குஷியாகிப் போனவன், ரோஜாவைக் கவர்வதற்காக, “ரண்டக்க,ரண்டக்க” என்று ஆடுவதும், “எங்கே அந்த வெண்ணிலா” எனப் பாடுவதுமாய், சில,பல குரளி வித்தைகளை ஃப்ரீ ஷோவாகக் காட்டியதும், எதிர்ப்புறம் ரோஜா எஞ்சாய் செய்வது கண்டு மேலும் குதூகலமாகி,
“நண்பா வா டா வா டா” – என மாப்பிள்ளைப் பையனைப் பிடித்திழுத்து,
“நான் சால்ட்டு கொட்ட, நீ சைதாப் பேட்டை” – எனத் தொடங்கி விட,
அணிந்திருக்கும் ‘கோட்’-ஐ அவமானப்படுத்த மனமின்றி, கையை மட்டும் ஆட்டி பஞ்சாபி ஸ்டெப் போட்டவனைக் கண்டு கடுப்பாகிப் போன அலெக்ஸ்,
“கைலி நுனியை பல்லுல மாட்டிக்கினு, காபரே டான்ஸ் ஆடுறக் கம்னாட்டி நீயி!, இன்னாடா படம் காட்டுறியா?” – எனத் திட்டிப் பரபரவென அவன் கோட்டை இழுத்து அவிழ்க்க, கூட ஆடிக் கொண்டிருந்த பன்னாடைகள், அவனது டையைக் கழட்டி எறிந்து, டக் இன் செய்திருந்த சட்டையை இழுத்து விட்டு, அழகாய் வாரியிருந்தத் தலையை கலைத்து விட்டு, ‘ஐடி டூட் லுக்கிலிருந்து அம்ஜிக்கரை லுக்கிற்கு மாற்றி விட்டதும், வேறு வழியின்றி இறங்கிக் குத்தியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டான் சசிதரன்.
வியர்வை ஊற்றக் கூட்டமாய்க் கும்மி அடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தபடி பெண்கள் கூட்டத்தில் நின்றிருந்த சக்தியைக் கண்டு அலெக்ஸ் நக்கலாகச் சிரிக்க,
“இனி இதுக்கெல்லாம் வாய்ப்பில்ல! அதனால ஆடட்டும்! ஆடட்டும்! நல்லா, ஆடட்டும்!” – என்று தாராள மனதோடு பெருந்தன்மையாகக் கூறியவளைக் கண்டு, ஆண்கள் கூட்டம்,
“ஏய்ய்ய்ஏய்ய்ய்ஏய்ய்ய்ய்ய்ய்” – என எகிறிக் கொண்டு வர,
“இன்ன்ன்ன்னாஇன்னாஆஆஆ?” – என சக்தி தனது பெண்கள் கூட்டத்தோடு பதிலுக்குக் குதிக்க,
“மச்சான்! தூக்குடா இதை” – என்று அலெக்ஸ் கத்தியதும், வேகமாய் முன்னே வந்து அவள் கத்திக் கதறுவதைப் பொருட்படுத்தாது, கையோடு தூக்கிய சசியைக் கண்டு ஃபோட்டோகிராஃபர் தனது கேமராவைக் கையில் எடுத்ததில்…
“வேணாம்,வேணாம்” என்று அதிர்ந்து கதறும் சக்தியை ஒரு க்ளிக்!
நண்பர்களோடு கும்மாளமிட்டதில் ஓவர் குஷியாகி, அவளைத் தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்துக் கொண்டிருந்த சசியை ஒரு க்ளிக்!
“போட்றா போட்றா! நல்லா தூக்கி எறி டா!, நேரா போய் ஸ்ரீலங்கால விழனும்”-எனக் கையைத் தட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அலெக்ஸை ஒரு க்ளிக்!
“ஐயோ புள்ளைய விடுங்க டா” – என கையை உதறித் தவிக்கும் அன்னைமார்களை ஒரு க்ளிக்!
அத்தை பந்தைப் போல் மேலும்,கீழும் சென்று வருவது கண்டுக் குஷியாகிக் கையைத் தட்டிச் சிரிக்கும் விஷ்ணுவைக் கண்டவாறு தாங்களும் புன்னகை கொள்ளும் சத்யா & சஞ்சயனை ஒரு க்ளிக்! – என நிறைவாய் முடிந்தது அவர்களது திருமணம்.
90ஸ் கிட்-ஐ கல்யாணம் செய்தோர் நாண்டுக்கிட்டுத் தான் சாவார் என்ற புதுமொழியை முழுமையாக உணர்ந்து கொண்ட சக்தியின், சாகச வாழ்வின் சில பகுதிகள் உங்கள் பார்வைக்காக:
சம்பவம் 1:
காலை 8.30 மணி. இருவரும் பரபரப்புடன் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் பீக் அவர்.
விசாலத்திற்கு காலைச் சமையலில் உதவி விட்டு விறுவிறுவென மாடிப்படியேறிய சக்தி, மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்த மறு நொடி,
“ச்சை கருமம்! கருமம்!! டேய்ய்ய்ய்ய் சசீஈஈஈஈஈஈ.. பரதேசி நாயேஏஏஏஏஏ” – என்று ஏழு ஊருக்குக் கேட்குமளவிற்கு எட்டுக் கட்டையில் கத்த,
“என்னாச்சு, என்னாச்சு? என்ன?– என்று அவசரமாய் அருகே ஓடி வந்தவனின் பிடரியில் ஒரு இடியை இறக்கி, அவன் முன்நெற்றி முடியைப் பற்றி இழுத்து பாத்ரூமுக்குள் தள்ளியவள்,
“உள்ள போய்ப் பாரு! உள்ள போய்ப் பாருய்யா யோவ்!, படிச்சிருக்கேல?, அறிவில்ல? பாத்ரூம் போனா ஃப்ளஷ் பண்ணனும்ன்னு தெரியாது?, கருமாந்திரம் பிடிச்சவனே!,” – என்று விடாது வசை பாட,
“ஐயோ! எப்பவும் போல இன்னைக்கும் மறந்துட்டேனே!, அது… இந்தக் கைல ஃபோன் வைச்சிருந்தேனா, இந்தக் கையால கக்கா போன இடத்தைக் கழுவுனேனா, கழுவுன கையோட எப்பிடி ஃப்ளஷ் பண்றது, கையை வாஷ் பண்ணிட்டு வந்து ஃப்ளஷை அழுத்தலாம்ன்னு நினைச்சுட்டு….., அப்ப்ப்ப்ப்பிடியே மறந்துட்டேன்” – என தினம் கூறும் வாக்கியத்தை அவன் ரிபீட் அடிக்க,
“வேணும்ன்னே பண்றயாய்யா? இனி எப்பிடிய்யா இன்னிக்கு நான் சாப்பிடுவேன்?, நாள் ஃபுல்-ஆ கருமம் இது தான் கண்ணுல நிற்கும்” – என்று குதித்தவளிடம்,
“சரி, பார்த்ததும் தான் பார்த்த!, என்ன கலர்ல இருந்துச்சுன்னு சொல்லேன்?, பேல் யெல்லோவா, இல்ல ப்ரௌனா” – என்று கக்காவின் கலரைக் கேட்டதும்,
“டேய்ய்ய்ய்ய்” – எனப் பொங்கிப் பாய்ந்து அவனை அடித்து நொறுக்கியவளிடமிருந்துத் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தான் சசி.
சம்பவம் 2:
“நான் சீக்கிரம் ஆஃபிஸ் போகனும்ன்னு சொல்ற அன்னைக்குத் தான் வேணும்ன்னே லேட்-ஆ கிளம்புவீங்களா?, அஞ்சே நிமிசத்துல சாப்பிட்டு எந்திரிச்சிடனும் சொல்லிட்டேன்” – எனத் திட்டியவாறு 4-வது பூரியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த சக்தியிடம்,
“நான் என்ன பண்றது?, காலங்கார்த்தாலயே இஷ்யூன்னு உட்கார வைச்சுட்டானுங்க” – எனக் கூறித் தன் தட்டிலிருந்த பூரியைப் பிய்த்து வாய்க்குள் திணித்தவனின் முகம், நொடியில் மாறியது.
“என்ன முழிக்குறீங்க?, நல்லாத் தான இருக்கு பூரி?”
“என்னடா?, உப்பு அதிகமா இருக்கா?, மூஞ்சியை ஏன் அப்பிடிக் கோணிக்கிற?” – விசாலம் வேறு இடையில்.
“பூரி நல்லா தான் இருக்கு” என்றவன் “வ..வந்து..” என்றிழுக்க..
முறைக்கத் தொடங்கினாள் சக்தி.
“ப..ப..பல்லு விளக்க மறந்துட்டேன் போல” – என்று மெல்லக் கூறியவனைக் கண்டு அவள் தலையில் கை வைத்துக் கொள்ள,
அவனது முதுகில் ரெண்டு தட்டு,தட்டிய விசாலம் “கருமம் பிடிச்சவனே போய்த் தொல டா அந்தப்பக்கம்!, இப்ப-ல்லாம் அவ உன்னைக் கிழிக்கிறதுமில்லாம, என்னையும் சேர்த்துக் கிழிக்கிறா டா!, என்னா தான் பிள்ளை வளர்த்து வைச்சிருக்கீங்கன்னு கேட்டு” – என்று திட்டியதும்,
அவளது முறைப்பிலிருந்துத் தப்பிக்க அவசரமாய் எழுந்தவன்,
“என்ன டா வாய் நம,நமன்னு இருக்கேன்னு ரொம்ப நேரமா யோசிச்சிட்டிருந்தேன்” – என அசால்ட்டாய்க் கூறியபடி நகர்ந்து செல்ல,
கொலைக் காண்டுடன் விசாலத்தை முறைத்தவள் “அதெப்பிடி உங்க பொண்ணுக்கு அப்பிடியே ஆப்போசிட்-ஆ ஒரு பையனை பெத்தீங்க?” – என்று திட்டத் தொடங்க,
வாஷ்பேசின் அருகே, ஃபுல் ஃபார்மல்ஸில் வாயில் ப்ர்ஷ்ஷூடன் நின்றிருந்தவன், நுரை தள்ள ஈஈஈ-என இளித்து வைத்தான்.
சம்பவம்-3:
“சிங்காரக் கண்ணுக்கு மை கொண்டு வா.. நந்தலாலா”
-கண்ணாடியின் முன்பு நின்று கண்ணுக்கு மை பூசிக் கொண்டிருந்தவளைப் பார்த்துப் பாடியபடி பின்னால் இடித்து நின்றவனைத் திரும்பி முறைத்து,
“சனிக்கிழமையானா குளிக்க மாட்டேன்னு சபதம் எடுத்திருக்கீங்களா?, கருமம்! கெட்ட வாடை வருது! போய்க் குளிச்சுத் தொலைங்க!, அந்த ஷார்ட்ஸ் கண்றாவி, இன்னையோட மூணாவது நாள்! அதைக் கழட்டித் துவைக்கப் போடலேன்னா, நான் டென்ஷன் ஆயிடுவேன் சொல்லிட்டேன்!” – என்று கத்தித் தீர்த்தவளைக் கண்டு காதைத் தேய்த்து,
“கத்தாத! கத்தாத! குளிக்கத் தான் போறேன்” – என்றவாறு அணிந்திருந்த பனியனைக் கழட்டியவன், தன்னை ஒரு மாதிரி பார்ப்பதை உணர்ந்து சுதாரித்து, அவள் தப்பிப்பதற்குள்,
அவள் கழுத்தை வளைத்து, கையில் சுருட்டி வைத்திருந்தப் பனியனை அவள் முகத்தில் அழுத்தோ,அழுத்தென அழுத்தி, “மோர்ந்து பார்த்தே சாவு” – என்று விட்டு, அவள் முழுபலத்துடன் தள்ளியதும், அவசர,அவசரமாய் குளியலறைக்குள் ஓடி மறைந்தான்.
போட்டிருந்த மேக்-அப் கலைந்து, பரட்டைத் தலையுடன் மூச்சு வாங்க நின்றவள், “செத்த பயலே! நாறப் பயலே! கைல சிக்குனேனா, கைமா பண்ணிடுவேன்! வாடா வெளிய”என்று முழுத் தொண்டையைத் திறந்து கத்துவது கண்டு, கீழே காதைப் பொத்திக் கொண்டிருந்தார் விசாலம்.
அதன் பின்பு குளித்து முடித்து, வெளியே வந்தவனுக்காகக் காத்திருந்தவள், கையிலிருந்த பனியனை அவன் மூக்கில் அழுத்தப் பார்க்க,
அவள் கையைப் பற்றிப் பின்னே வளைத்து, கழுத்தோடு சேர்த்து அவளைத் தூக்கி, “ஏஏஏஏஏஏ” – என்றவாறு படுக்கையில் சொத்தென எறிந்து ராக் பாட்டம் போட்டதும் ஆஆஆஆ-வெனக் கத்திக் கழுத்தைப் பற்றியவளின் மீது, டம்ம்ம்மென விழுந்து மேலும் கதறச் செய்ததில்,
கொலைவெறியோடு அவனைத் தள்ளி விட்டு அடிகளைப் போட்டவளைக் கட்டிக் கொண்டு உருண்டு புரண்டு,அவளைத் தனக்குக் கீழே வர வைத்து, எகிறியவளின் கைகளைப் பற்றி அடக்கி, “சனிக்கிழமை குளிச்சது வேஸ்ட் ஆயிடும்! சண்டையை அப்புறம் வைச்சுக்கலாம்” – என்று பலான எக்ஸ்ப்ரஷனுடன் சமாதானத்துக்கு வந்தவனிடம் சிக்காமல் தப்பிக்க நினைத்து அவள் செய்த முயற்சிகளை அவன், இஷ்டத்திற்கு முறியடிக்க,
சிரித்து,கத்தி,குதித்து, துள்ளியவளின் சத்தம் அந்த அறை முழுக்க நிறைந்து, வழிந்து, ஒரு கட்டத்தில் அடங்கி, அவனோடு கரைந்தே போனது!
இப்படியாக, சில நாட்கள் ‘செத்தப் பயலே,நாறப் பயலே’ என்றும், பல நாட்கள் ‘செல்லமே,தங்கமே’ என்றும், நாளொரு சண்டையும், பொழுதொரு சமாதானமுமாக, சக்தி-சசியின் வாழ்வு கலகலப்புக்குப் பஞ்சமின்றி, கலாட்டாவோடு தொடர்ந்து கொண்டிருந்தது.
துணுக்.. துணுக்.. துணுக்ஸ்ஸ்ஸ்..
“ரோஸ்??, எனக்கா??” – எனக் கேட்டுக் கண்ணை விரித்த சத்யாவிடம்,
குண்டு உடலும், தெற்றுப் பல்லுமாய், பார்க்கவே கண்றாவியாக இருந்த பள்ளிச் சிறுமி சக்தி, ஈஈஈயென வெட்கமாய்ச் சிரித்து, “ஆமாக்கா” என்றாள்.
“வேலண்டைன்ஸ் டே அதுவுமா எனக்குக் கொடுக்குற?”
“இப்போதைக்கு எனக்கு உங்க மேல தான்க்கா க்ரஷ்ஷூ! அதான் உங்களுக்குக் கொடுக்கிறேன்”
“அது சரி!”
“எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்க்கா!, நீங்க ரொம்ப அழகு!, ரொம்ப நளினமா இருக்கீங்க! சாஃப்ட்-ஆ சிரிக்குறீங்க!, பார்த்துட்டே இருக்கலாம்ன்ற அளவுக்கு.. சூப்பரா இருக்கீங்க!, உங்க ஹேண்ட் ரைட்டிங் கூட சூப்பர்க்கா! போன வாரம் நடந்த தமிழ்க் கட்டுரைப் போட்டில உங்க கையெழுத்தைப் பார்த்து, அப்டியே நான் அசந்து போயிட்டேன்”
“அடடாஆஆ! போதும் போதும்!, இவளுக்கு ப்ரோபோஸ் பண்ணுன தனபாலு கூட இவ்ளோ ரசிச்சுப் பேசல! இந்தப் பொண்ணைப் பாரேன்! சத்யாஆஆ ம்ம்ம்ம்” – என நண்பிகள் கேலி செய்ததும் அவர்களை அடக்கிய சத்யா, சக்தியிடம்,
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! நீயும் ரொம்ப அழகா இருக்க!” எனக் கூறி அவள் கன்னம் கிள்ள, பூரித்து “ஹிஹிஹி” என்றவள், உடனே பல்லை மூடி,
“அக்கா, அந்தத் தனபாலூ குடைச்சலைக் கொடுத்தான்-னா சொல்லுங்க, அவன் கடவாப் பல்லைப் பேத்தெடுத்து வந்து காணிக்கையா உங்க காலடில போடுறேன்” – என்று வெகுண்டவளை வியந்து நோக்கி, சிரித்த சத்யா,
“அதெல்லாம் வேணாம்! நானே அவனைத் திட்டி அனுப்பிட்டேன்” எனக் கூற,
“சரிக்கா!” என்றவள் “க்ளாஸ்க்கு நேரமாச்சு, நான் வரேன்! பூவை பத்திரமா வைச்சுக்கோங்க!, என் பாக்கெட் மணில வாங்குனது, அ…ஞ்..சு ரூவா” – எனக் கூறிச் செல்ல, பெரிதாய் நகைத்தனர் சத்யாவின் தோழிகள்.
தன் க்ரஷ்ஷிடம் ரோஸை நீட்டியதில் குஷியாகி துள்ளிக் குதித்து நடந்து வந்தவளை,
தன் தமக்கையை பள்ளியில் இறக்கி விட வந்த சசி வண்டியிலிருந்தபடி, “ஏ.. பாப்பா” என்றழைத்து இடைமறித்தான்.
“ம்ம்?” என நின்றவளிடம்,
“நிஜமாவே தனபாலூ பல்லைப் பேத்துருவியா?” எனக் கேட்டான்.
“ஏன், முடியாதா?, சத்யாக்காவுக்காக உயிரையே கொடுப்பேன்”
“பார்றா!, சரி, அடுத்த தடவை அவனைப் பார்க்குறப்ப, நறுக்குன்னு அவன் தலைல ஒரு கொட்டு வைச்சுட்டு ஓடிப் போயிரு! சரியா?”
“கொட்டுறது ஓகே! ஆனா ஓடுறது கஷ்டம்”
“புரிஞ்சது! உன் சைஸ் அப்பிடி”
“ஹல்ல்ல்லோஓஓ”
“சரி கோபப்படாத!, கொட்டி வைச்சுட்டு, எங்கயாவது ஒளிஞ்சு நின்னுக்க. சரியா?”
“உங்களுக்கும் சத்யாக்கான்னா ரொம்பப் பிடிக்குமா?”
“ஏதோ.. கொஞ்சம்”
“ஓஹோ!, சரி, நான் அந்தத் தனபாலு மண்டையைப் பொளந்தா, நீங்க எனக்கு என்ன தருவீங்க?”- புருவம் தூக்கி அவள் கேட்டதும் பாக்கெட்டிலிருந்துப் பத்து ரூபாயை எடுத்து,
“10ரூவா போதுமா?” எனக் கேட்டான்.
“அய்ய!, சில்றத்தனமா இருக்கு” – முகத்தைக் கோணியவளை முறைத்து,
“எங்கப்பன் எனக்குக் கொடுக்குறதே அவ்ளோ தான்” – என முணுமுணுத்து மீண்டும் பாக்கெட்டுக்குள் கை விட்டு,
“முப்பதா வாங்கிக்க பாப்பா! என் கிட்ட அவ்ளோ தான் இருக்கு” என்றவனிடம்,
“கூட 5 சேர்த்து 35-ஆ கொடுங்க” என்றவள் பள்ளி வாசலின் எதிரிலிருந்த பேக்கரியையும், அவன் கையிலிருந்த முப்பத்தைந்து ரூபாயையும் பார்த்துக் கண்ணில் ஹார்ட் விட்டுக் கொண்டாள்.
“இங்க பாரு பாப்பா, காசை வாங்கிட்டு ஜூட் விட்றக் கூடாது, கண்டிப்பா அவனைக் கொட்டி வைக்கனும், நான் நாளைக்கு வந்து கேட்பேன் உன் கிட்ட” – என்றவன், அவள் இடது கையிலிருந்த ரோஸைக் கண்டு,
“இது எந்த க்ரஷ்ஷூக்கு?” – எனக் கேட்டான்.
“ச்ச,ச்ச இது ஃப்ரீயா வந்தது! 10 ரூபாய்க்கு ரெண்டு பூ”
“ஓஹோ!, சரி இதை எனக்குக் கொடு”
“எதுக்கு?”
“அடக் குடு பாப்பா!” – வற்புறுத்தியவனை முறைத்து,
“வேலண்டைன்ஸ் டே அதுவுமா ஒரு சின்னப் பொண்ணுக் கிட்ட கம்பெல் பண்ணி ரோஸ் வாங்கறீங்களே! வெட்கமாயில்ல”
“பொண்ணுக்கிட்ட வாங்குனாத் தான் தப்பு!, உன்னை மாதிரி பன்னு கிட்ட வாங்கலாம்! ஈஈஈ-ன்னு இளிச்சுக்கிட்டே 35 ரூவாயை அபேஸ் பண்ணேல?, ஒத்த ரோசாப்பூ கொடுக்க இவ்ளோ யோசிக்குற?, குடு,குடுங்குறேன்ல?” – என வண்டியை நகர்த்தி அருகே வந்து, அவள் கையிலிருந்தப் பூவை வெடுக்கெனப் பறித்துக் கொண்டான் சசி.
“சரியான காய்ஞ்ச மாடா இருப்பான் போல!” என முணுமுணுத்த சக்தியைக் கண்டு கொள்ளாது அவன் மனதுக்குள் ‘சத்யா இன்று தனக்கு வந்த காதல் கடிதங்களை அடுக்கி வைத்துப் பீற்றிக் கொள்ளும் போது, இந்த ரோசைக் காட்டி அவள் முகத்தில் கரியைப் பூச வேண்டுமென்று எண்ணிக் கொண்டான்.
அவன் தனக்குள் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு முகத்தைக் கோணி விட்டு, சக்தி நகர்ந்து செல்ல,
“ஏ பாப்பா!” என்றழைத்தவன் “இந்த ஜென்மத்துல வேலண்டைன்ஸ் டே அன்னைக்கு எனக்கு ரோஸ் குடுத்த ஒரே ஆளு நீ மட்டுமா தான் இருக்கப் போற” என்று பல்லைக் காட்டிச் சிரித்து வண்டியில் சர்ர்ர்ரெனப் பறந்து விட,
“அடப்பாவி!, நான் எங்கடா குடுத்தேன்! நீயாத் தான டா பிடுங்கிக்கிட்ட!” – எனப் புலம்பி விழித்து நின்றாள் சக்தி.
************முற்றும்************
