அத்தியாயம் - 6
தன் வீட்டு போர்டிகோவில் வண்டியிலமர்ந்தபடி ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டிருந்த சசி, வாசலருகே தன்னையே பார்த்தவாறுத் தயங்கி நின்ற விசாலத்தை சலிப்புடன் நோக்கி,
“ப்ச், என்னம்மா பிரச்சனை உனக்கு?, காலைல இருந்து என் மூஞ்சியைப் பார்த்த மாதிரியே சுத்திட்டிருக்க?, என்ன சொல்லனும்?, சொல்லு கேட்குறேன்” – என்றான் வண்டியிலமர்ந்தபடியே கைகளைக் கட்டிக் கொண்டு.
“சொன்னா நீ திட்டக் கூடாது”
“திட்டல! சொல்லு”
“அடுத்த வாரம் புதன் கிழமை நல்ல நாளா இருக்குன்னு கோகிலா சொன்னா?”
“அதனால என்னவாம்?”
“அன்னைக்கே…”
“அன்னைக்கே?”
“கோயில்ல வைச்சு சிம்பிள்-ஆ உனக்கும் சக்திக்கும் பேசி முடிச்சிடலாம்ன்னு சொல்லுறா டா” – அவசரமாய்க் கூறி விட்டு மகனின் முகம் பார்த்தவரிடம்,
மூக்கை விடைத்தவன் “இது அந்த பொண்ணுக்குத் தெரியுமா?” – எனக் கேட்டான்.
“அ..து.. அதெல்லாம் கோகிலா மக-கிட்டப் பேசாமலா இருந்திருப்பா?”
“எனக்கென்னவோ, உன் ஃப்ரண்ட் ஏதோ வில்லி வேலை பார்க்குதுன்னு ஹெவியா தோணுது.”
“டேய்ய்”
“ப்ச்,அந்தப் பொண்ணு என்னையெல்லாம் கட்டிக்க ஒத்துக்காதும்மா!, உனக்கு எப்பிடி சொல்லிப் புரிய வைக்குறது?, அதுக்கு.. அதுக்கு.. என்னைய எப்பிடிம்மா பிடிக்கும்?, அது எவ்ளோ அழகா இருக்குன்னு பார்த்தேல?”
“உனக்கு என்ன டா சசி குறை?”
“அந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னா, எனக்குக் குறையிருக்குன்னு அர்த்தமா?”
“பின்ன என்ன தான் டா உன் பிரச்சனை?, அந்தப் பொண்ணே உன் முகத்தைப் பார்த்து, உன்னைக் கட்டிக்க சம்மதம் தான்னு சொன்னா, ஒத்துக்குவியா?”
-எனக் கோபமாய்க் கேட்ட அன்னையின் முகம் காணாது, அந்தக் காட்சியைக் கற்பனையில் கண்டபடிப் பிடரியைக் கோதியவன் பின் வழக்கமாய் அவள், அவனைக் காணும் போதெல்லாம் மூக்கை விடைத்து, முழியை விரிக்கும் எக்ஸ்ப்ரஷன் இடையில் வந்ததில், ஜெர்க் ஆகி ‘ஷ்ஷ்ஷ்’-எனத் தலையை உலுக்கி,
“இதை மட்டும் அந்தப் பொண்ணு கேட்டுச்சுன்னா, என்னைய விரட்டி விரட்டி அடிக்கும்மா, ஏன் டா, உன்னை மாதிரி ஒரு டபரா மண்டையனுக்கு, என்னை மாதிரி ஒரு டயானா கேட்குதா-ன்னு?” என்றான் பாவமாய்.
“ஏன் டா அப்பிடி சொல்ற?”
“ப்ச், அதெல்லாம் உனக்குப் புரியாதும்மா” – என சலித்தவன் பின் அன்னையிடம் அழுகாத குறையாக,
“நீ திரும்பத் திரும்ப இதைப் பத்திப் பேசி பேசி, என் வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கிட்டே இருக்கம்மா!, முதல்ல அந்த கோகிலாத்தை ஃப்ரண்ட்ஷிப்-ஐக் கட் பண்ணு!, அந்தத்தை அவங்க பொண்ணுக் கிட்ட, எனக்கு செருப்படி வாங்கிக் கொடுக்க ஸ்கெட்ச் போட்டுட்டுத் திரியுது!,” என்று புலம்பியவாறு வண்டியை ஸ்டார்ட் செய்து, அன்னை அழைத்தும் நில்லாது கிளம்பி விட்டான்.
‘ரெண்டு நிமிஷம் அவ முகத்தை விடாம பார்த்தாலே, மூர்க்கமா மூக்கை விடைச்சு, மூனு நாள் முறைக்குற ஆள் அவ!’
‘இந்தம்மா இப்பிடிலாம் யோசிக்குறது தெரிஞ்சா.. மூக்குத்தி வழியா நெருப்பைக் கக்கி, என்னைத் தார்க்குள்ளத் தலையை விட்ட, தெருநாய் மாதிரி ஆக்கிடுவா’
-எண்ணங்களே பதற வைக்க, ம்க்கும் எனத் தொண்டையைச் செருமியபடி சிந்தனையை அடக்கி சாலையில் கண்ணை வைத்தான்.
கேரளா ட்ரிப்பிலிருந்துத் திரும்பிய அடுத்த இரண்டு நாட்கள் வர்க் ஃப்ரம் ஹோம்-மில் இருந்த சக்தி, அன்று தான் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தாள்.
சசி தங்களது தளத்திற்குள் நுழைகையில், ஒட்டு மொத்த டீமும் daily stand up meeting-ல் மூழ்கியிருந்தனர்.
கையைத் திருப்பி மணி பார்த்தபடி, அவசர,அவசரமாய்த் தன் டெஸ்க்கிற்கு விரைந்தவன், லாப்டாப்பை வெளியிலெடுத்து, கால் கனெக்ட் செய்தான்.
“சசி, உன் பக்கெட்ல இருக்குற லாங் பெண்டிங் இஷ்யூவைக் க்ளோஸ் பண்றதுக்கு ஸ்டீவ் அப்ரூவல் வேணும் டா”
-என சுந்தர் chat-ல் வர,
“யெஸ், கோன்னா செக் வித் ஹிம் இன் திஸ் கால்” – என டைப் செய்தவன்,
“உங்க வீட்ல இன்னைக்கு ப்ரேக் ஃபாஸ்ட் இட்லி,தக்காளி குருமா போல இருக்கு” என்றான்.
“டேய், உனக்கு எப்பிடி டா தெரியும்?”
“உங்க டெஸ்க் என்ன ஒரு கிலோ மீட்டர் தூரத்துலயா இருக்கு?”
“அடப்பாவி” – என்று அவர் டைப் செய்து கொண்டிருக்கையிலேயே,
அலெக்ஸ் அவர் புறம் திரும்பி,
“அடுத்தவனுக்கு கொடுத்துட்டு சாப்பிடனும்ங்குற பழக்கமே இல்லையா சுந்தர் உங்களுக்கு?, என்ன டீம் லீடர் நீங்க?” எனக் கலாய்ப்பதும்,
“டேய், என் பொண்டாட்டி, எண்ணி 4 இட்லி தான் டா கொடுத்து விட்டுருக்கா!, பங்கு கேட்டு என் பசியைப் பகைச்சுக்காதீங்க டா” என சுந்தர் பதிலளிப்பதையும் கேட்டுச் சிரித்து,
கால்-ஐ அன் ம்யூட் செய்து, “ஸ்டீவ், சாரி டூ இண்டரெப்ட்! ஐ ஹேவ் அ ரெக்வஸ்ட்” என்றபடி சுந்தர் கூறிய விசயத்தைக் கேட்க,
போனவாரமே இது குறித்து சக்தி தனக்கு ஈமெயில் அனுப்பியிருந்ததாகக் கூறிய ஸ்டீவ், “ஐ வில் ரெஸ்பாண்ட் டூ யுவர் ஈமெயில் பை டுடே சக்தி” – என்றார்.
அவர் சக்தி குறித்துப் பேசத் துவங்கியதுமே, அதுவரையிருந்த பரபரப்பு மறைந்து, நிமிர்ந்து அவன், எதிரிலிருந்தவளைப் பார்வையிடுகையில்,
டெஸ்க் ஃபோன் அருகே குனிந்து - “யப்!, ஷ்யூர் ஸ்டீவ்” – எனக் கூறி, அதற்கு ஸ்டீவ் பதில் பேசுவதை, சுருக்கியப் புருவங்களுடன், கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சக்தி.
முழுதாக இரண்டு நாட்கள் கழித்து அவளைப் பார்க்கிறான்.
வெள்ளையும்,கருப்புமாய் காலர் வைத்த காட்டன் சுடிதார் அணிந்திருந்தாள். எப்போதும், தோளில் வழிந்தபடியும், குதிரை வாலுக்குள்ளும் அடங்கிக் கிடக்கும் கூந்தல் இன்று, ஒற்றைப் பின்னலாய், இடது தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. காதில் குட்டியாய் ஜிமிக்கிகள்!, புருவ மத்தியில் வட்டமாய்க் கருப்புப் பொட்டு!
ஸ்டீவ்விடம் பேசி முடித்ததும், டெஸ்க்கை விட்டு ஒரு அடி தள்ளி, கால் நீட்டி, சேரில் சாய்ந்தமர்ந்தவள், ஒரு கையைக் கன்னத்தில் வைத்தபடிக் குனிந்து மறுகையிலிருந்த ஃபோனை மிகத் தீவிரமாய்ப் பார்த்திருந்தாள்.
அதன் பின்பு கால் முடிந்து, அனைவரும் அக்கடாவென இருக்கையில் அமர்ந்து, அவரவர் சோலியைப் பார்க்க,
“டேய் சசி, பசிக்குது டா!, வா போய் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு வருவோம்!”
“காஃபடீரியா வேணாம், சரவணபவன் போவோம்!”
“பூரி கிழங்கு பாரு… இதுவே எனக்கு ஜோரு-ன்னு சாப்பிடனும் போல இருக்கு! போவோமா?”
-என வளவளவெனப் பேசிய அலெக்ஸின் வார்த்தைகளைக் காதில் வாங்காது, கீபோர்டில் எதையோ டைப் செய்தபடி, பார்வை முழுதையும் எதிரிலிருந்தவளின் மீதே பதித்திருந்தான் சசி.
ரிதமாய் சேரை ஆட்டியவாறு கேஷ்வலாய் அமர்ந்திருந்தவளை,
“சக்தி, டீ குடிச்சிட்டு வருவோமா?” என பவித்ரா அழைத்ததும், “ம்ம்” எனக் கூறியபடி எழுந்தவள், நின்று லாப்டாப்பை லாக் செய்து விட்டு, ஃபோனைப் பார்த்தபடியே அவள் பின்னே நடந்து சென்று விட்டாள்.
தான் விடாது பார்ப்பதை உணர்ந்தும் கண்டு கொள்ளாது எழுந்து சென்றவளைக் கண்டபடி நிமிர்ந்தமர்ந்திருந்தவனைக் கைப் பிடித்து எழுப்பி,
“எந்த வேலையா இருந்தாலும் வந்து பார்த்துக்கலாம்! வா டா” என இழுத்துச் சென்றான் அலெக்ஸ்.
லிஃப்ட்டில் ஏறிய சக்தி,பவித்ராவின் பின்னே இருவரும் ஏறினர்.
“அலெக்ஸ்ண்ணா, நாம ட்ரிப்ல எடுத்த க்ரூப் ஃபோட்டோஸ் எல்லாம் யார்க்கிட்ட இருக்கு?” – முன்னே நின்ற பவித்ரா கேள்வி எழுப்பியதும்,
“எல்லாம் நண்பன் கேமரால எடுத்தது தான்!, டேய், ட்ரைவ்ல போட்டு, எல்லாருக்கும் லிங்க் ஷேர் பண்ணு டா” என்றான் அலெக்ஸ்.
“ம்ம்” –லிஃப்ட்டின் கதவில் தெரிந்த சக்தியின் பிம்பத்தைக் கண்டபடி அசட்டையாய் சசி.
“என்னா ரெட்டூ மூக்குத்தி அமைதியா வர்ற?”
“சரியான கேள்வி ப்ரோ” – முணுமுணுப்பாய் சசி.
“………” – அவனுக்குப் பதில் கூறாது புருவத்தைத் தூக்கி, உதட்டைச் சுழித்து விட்டுக் கையைக் கட்டிக் கொண்டு நின்றாள் சக்தி.
“திமிரைப் பாரேன்!” – என்ற அலெக்ஸ்,
“அந்தப் புருவத்தை அப்ப்ப்ப்பிடியே தூக்குனமேனிக்கயே வைச்சு, ஸ்டேப்லர் அடிச்சு விட்றனும் ப்ரோ!, எப்பப் பாரு ஆட்டிடியூட் காட்டிக்கிட்டு” – எனப் பொங்க,
அதற்கும் அமைதியாய் நின்றவளைக் கண்டு,
“டேய்ய்ய் வாயை மூட்றா” என்ற சசி, ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவாறு,
“அது ஆட்டிடியூட் இல்லடா” என்று முணுமுணுத்தான்.
கோப மூச்சை வெளியிட்டுக் கம் போட்டபடி வாயை இறுக மூடிக் கொண்டு நிற்கும் சக்தியை எட்டி நோக்கிப் பின், அவள் மௌனத்தைக் கண்டு ஏகக் குஷியாகி,
“ஏன் டா சசி, அன்னைக்கு இதை வண்டில ஏத்திட்டுப் போறப்ப ஆக்சிடெண்ட் எதுவும் பண்ணி வுட்டியா?, தொண்டைல தவக்களை உட்கார்ந்திருக்கிற மாதிரி, கரட்டு,கரட்டுன்னு சத்தம் தான் வருதே தவிர, குரல் வெளிய வர மாட்டேங்குதே டா” – என்றான்.
“அவங்க வீட்டுப் பாதைல ஒரு குழி கூட இல்ல ப்ரோ” – மெல்லமாய் சசி.
“ப்ச், கிடைச்ச சான்ஸை நீ மிஸ் பண்ணிட்ட டா சசி!, நானா இருந்திருந்தா, முன் வீலை வைச்சு மொக..ரையைப் பேத்துருப்பேன்” – அவன் கூறுவதை டீலில் விட்டபடி அலெக்ஸ்.
“கம்முன்னு இருங்களேன் ப்ரோ” – அவளது விடைத்த மூக்கைக் கண்டு விதிர்விதிர்த்தபடி சசி.
“ப்ச், எனக்குப் புரிஞ்சுடுச்சு டா சசி”
“என்ன்ன்ன ப்ரோ?”
“ரெண்டு நாள் வர்க் ஃப்ரம் ஹோம்ன்ற பேர்ல, காலைல எந்திரிச்சு கால் அட்டெண்ட் பண்ணிட்டு, குப்புறடிச்சுப் படுத்துத் தூங்கியிருக்கும்!, இன்னைக்கு ஆஃபிஸ்ல முழிச்சு உட்கார வேண்டியிருக்கேன்னு கடுப்பா இருக்கு போல அதுக்கு! அதான் உர்ருன்னு உராங்குட்டான் மாதிரி நிக்குது”
“குப்புறப் படுக்குறது ஹெல்த்க்கு நல்லதில்லை ப்ரோ” – மறுபடி ம்யூட்டில் சசி.
“…………” – மிதமிஞ்சியப் பொறுமையுடன் சக்தி.
“வெட்டி வைச்ச பன்னு மாதிரி இருக்குற இது கன்னம் ரெண்டும், இன்னைக்குப் பூரி சைஸ்க்கு உப்பியிருக்குன்னா, வூட்ல நல்லாத் துன்னு,துன்னு தூங்கி எந்திரிச்சுருக்குன்னு தான டா அர்த்தம்?”
-அலெக்ஸ் விடாது கலாய்த்ததும் எரிச்சலுற்றுப் பக்கவாட்டில் திரும்பி முறைத்துப் பார்த்தவளின் கன்னத்தை நோட்டம் விட்ட சசி,
“பூ…பூரின்னுலாம் ஏன் டா சொல்ற?, நல்லா.. புஸ்,புஸ்ன்னு குஷ்பூ இட்லி மாதிரின்னு சொல்ல..லா..ம்..ல.” – என்று கூறிக் கொண்டிருக்கையில் லிஃப்ட் நின்று விட..
உஷ்ணப் பெருமூச்சுடன் இரண்டடி பின்னே நகர்ந்த சக்தி, முன்னே நின்றபடித் தன் ஹீல்ஸை வைத்து, நச்,நச்சென அலெக்ஸின் காலில் 2 மிதி,மிதிக்க..
அவள் தாக்கத் தொடங்கியதும், தோளைக் குறுக்கி, காதை அடைத்தவாறு லிஃப்ட்டின் மூலையில் பம்மி விட்ட சசி, பலமாய் மிதி வாங்கி, சத்தமிடத் துடித்தத் தொண்டையை அடக்கி, ‘ஆஆஆஆ’-வென வலியோடு வாயசைத்த நண்பனைக் கண்டு,
“ஐய்ய்யூயூயூ..” – எனக் கண்ணைச் சுருக்கி, உதட்டைப் பிதுக்கி “சுண்டு விரல் நசுங்கி, சுண்டக்காய் மாறி ஆயிடுச்சு ப்ரோ” என்று கமெண்ட் கொடுத்தான்.
மிதித்து முடித்ததும் தன் ஹீல்ஸை சரி செய்து கொண்டுத் திரும்பிப் பாராமல் அவள் சென்று விட, வேகமாக நண்பனின் அருகே சென்று அவன் கையைப் பற்றித் தன் தோளில் இட்டுக் கொண்ட சசி,
“நீங்க கடக ராசிக்காரரு-ங்குறதால உங்க காலை எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் வைச்சிக்கனும் ப்ரோ” – என்றான்.
“ஏன், சனி பகவான், ஹீல்ஸ் போட்ட பொம்பள ரூபத்துல சுத்துறாரா?”
“இல்ல,அவுரு உங்க வாய்ல, வக்கிர சனியா உட்கார்ந்திருக்கிறாரு”
“அப்ப உனக்கு?”
“என் ராசில குரு குறுக்கால படுத்திருக்கிறாராமா” – பெருமையாய்க் கூறியவனிடம்,
“பார்த்து டா, குறுக்கால படுத்திருக்கிற குரு, குல்லாவை மாட்டிவிட்டுப் போயிற போறாரு”
“இப்பிடிப் பேசுறது நீங்க இல்ல ப்ரோ!, உங்க வாய்ல உட்கார்ந்திருக்கிற வக்கிர சனி”
“சரி, வாயை மூட்றா என்னைப் புடிச்ச ஜென்ம சனி” – எனத் திட்டிய அலெக்ஸ்,
“எத்தனை இஞ்ச் ஹீல்ஸ் டா அது கருமம்?” – எனப் புலம்பியபடியே நண்பனோடு தத்தி,தத்தி நடந்து சென்றான்.
அதன் பின்பு, காலைச் சாப்பாட்டை முடித்து விட்டு இருவரும் டெஸ்க்கிற்கு வருகையில், லாப்டாப்பின் மீது பார்வையைப் பதித்தபடித் தீவிரமாய் வேலை செய்து கொண்டிருந்தாள் சக்தி.
அவளையேப் பார்த்தபடியேத் தன் இருக்கைக்கு வந்தமர்ந்த சசி,
பவித்ரா சக்தியிடம், “ஏய் சக்தி, சசிண்ணா பேஜ்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணியிருக்காரு பார்த்தியா?” என வினவுவதையும்,
அதற்கு அவள், “ம்ம்” என்பதையும்,
“என்ன ம்ம்?, தோகையைத் தொங்க விட்டு மரத்துல உட்கார்ந்திருந்த இந்த மயிலைப் பாரேன்! எவ்ளோ அழகு! என்ன ஃபில்டர் யூஸ் பண்ணியிருக்காருன்னு கேட்கனும்!, செம்ம இல்ல?” – என பவித்ரா விடாது பொங்கியதில் எரிச்சலுற்று,
“ப்ச், போ அந்தப் பக்கம்! எனக்கு வேலை இருக்கு” – என அவள் துரத்துவதையும் கேட்டு,
முகத்தைச் சுருக்கித் தன் செல்ஃபோனைக் கையிலெடுத்துத் தனது இன்ஸ்டா பேஜ்ஜை ஓபன் செய்தான்.
நேற்று அவன் பதிவிட்டப் புகைப்படங்களுக்கு முதல் ஆளாக லைக் கொட்டியிருந்த ‘Sakthi-The Sunshine’-ஐக் கண்டு விட்டு, நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.
என்னவாமாம் ரெட்டூ மூக்குத்திக்கு???
யோசனையாய் அவன் நோக்கிக் கொண்டிருக்கையிலேயே,
“ஹாய்..” என சாட்டில் வந்தாள் அவள்.
அவளைப் பார்த்தபடியே “ஹாய்” என அனுப்பியவனிடம்,
“ஸ்டீவ் அப்ரூவ் பண்ணிட்டாரு. இஷ்யூவை க்ளோஸ் பண்ணிடட்டுமா?” என்றாள்.
“யெஸ் ப்ளீஸ்..”
“ஓகே” – அத்தோடு முடித்துக் கொண்டவளை விட மனமில்லாது,
“மௌத் அல்சரா உங்களுக்கு?” – எனக் கேட்டு, நிமிர்ந்து தடுப்பிற்கு மறுபுறம் தெரிந்த அவள் விழிகளை நோக்கினான்.
ஒரு நொடி அசையாது நின்ற அவள் கருமணிகள்,பின் சாதாரணமாகி விட,
“மிளகுத் தக்காளி கீரை ட்ரை பண்ணுங்க! வாய்ப் புண்ணுக்கு ரொம்ம்ப நல்லது” – என்றான் விடாது.
அவன் கேட்டதற்குப் பதில் அனுப்பாமல், அலட்டிக் கொள்ளாது தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பவளைக் கண்டு கடுப்பாகி, அவன் நொட்,நொட்டென வேண்டுமென்றே என்டர் கீயைப் பெரிதாய்த் தட்டிக் கொண்டிருக்கையில்,
“சக்தி, ஃப்ரீ-கா உன்னாவா?” – எனக் கேட்டபடி அவளது டெஸ்க்கில் வந்து நின்றான் ரவி.
“ஹான், செப்பண்டி”
“மார்னிங் ஒக்க டெவலப்மெண்ட் இஷ்யூ குறிஞ்ச்சி செப்பானு காதா?, இப்புடு செக் சேஸ்தோமா?”
“ஓ சாரி!, மறிச்சி போயானு!, இப்புடு சேதாம்” – என்றவள், அவனோடு இஷ்யூவைப் பார்ப்பதில் பிஸியாகி விட,
அடுத்த இரண்டு நிமிடம் வேலை குறித்துத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்த இருவரில் ரவி,
“இன்கரெக்ட் பாஸ்வேர்ட்-ஆ?, நீக்கு தெலுசா ஈ பாஸ்வேர்ட்?” எனக் கேட்டான்.
“தெலுசு, பட், இட்ஸ் நாட் வர்க்கிங்” – என்று அவள் பதிலளித்ததும், ரவி,
“ரேய் சசி, ***** பாஸ்வேர்ட் தெலுசா ரா நீக்கு?” -எனக் கேட்டான்.
“பாஸ்வேர்ட் மேனேஜர்ல இருக்குமே” – சசி.
“அதி, பணி சேயட்லேது ரா”
“சான்ஸ் இல்லையே!, கண்டிப்பா வர்க் ஆகனுமே”
“இக்கட ரா நுவ்வு!” – என்று ரவி அழைத்ததும், எழுந்து சக்தியின் டெஸ்க்கிற்கு சென்றவன்,
“ச்சூடு” என அவன் காட்டிய ஸ்க்ரீனைப் பார்த்து விட்டு,
தன் புறம் திரும்பாது லாப்டாப்பைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளிடம், “தள்ளுங்க” என மெலிதாய்க் கூறி, அவள் லேசாய் நகர்ந்ததும், குனிந்து, அவளது லாப்டாப்பை இயக்கத் தொடங்கினான்.
“லாக் ஆகியிருக்கு டா அக்கௌன்ட்” -சசி
“அன்லாக் ச்சேயச்சா இப்புடு?”
“ஹ்ம்ம்” என்றவன், அக்கௌண்ட்டை அன்லாக் செய்து விட்டு பாஸ்வேர்டை டைப் செய்கையில்,
“caps lock – on-ல இருக்கு” – என முணுமுணுத்தபடி, அவசரமாய்க் கை நீட்டிய சக்தி, கீபோர்டின் மீதிருந்த அவன் கரங்களை உரச எத்தனித்துப் பின் சுதாரித்து, நீட்டிய கரங்களை மடக்கி விட,
அவள் அவசரமாய்ப் பின்னிழுத்ததும் மெல்லத் திரும்பி, மிக அருகே தெரிந்த அவள் முகத்தை ஓரக்கண்ணால் நோக்கினான் சசி.
ஜன்னல் வெளிச்சம் முகத்தில் அடித்ததில், மூக்குத்தி மினுமினுக்க, கவனமாய் அவனைத் தவிர்த்து நேராய்ப் பார்த்தமர்ந்திருந்தவளின் பெரிய விழிகளில் பதிந்தத் தன் பார்வையைக் கீழிறக்கியவனின் கண்கள், நாடியில் புதிதாய் முளைத்திருந்தப் பருவை நோட்டமிட்டு மீண்டும் அவள் விழிகளில் சென்று நின்றது.
“அயி போயிந்தா ரா?” – ரவி இடையிட்டதும், பார்வையை மீண்டும் லாப்டாப்பில் பதித்தவன்,
“ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமித் தானே caps lock-ஐ off செய்து வேலையைத் தொடர்ந்தான்.
பாஸ்வேர்ட் அடித்ததும், டெஸ்ட் பட்டனை அழுத்தி விட்டு நிமிர்ந்தவன், கையைக் கட்டிக் கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தவளை, கீழ்க்கண்ணால் அளவிட்டான்.
“வர்க் அவுத்துந்தி ரா” – என்று ரவி கூறியதும்,
“இதைக் கவர் பண்ண, ஒரு டிக்கெட் ரைஸ் பண்ணிடு” – என்ற சசியிடம்,
“ஷ்யூர் ரா!, தேங்க்ஸ் ரா, தேங்க்ஸ் சக்தி” – எனக் கூறி ரவி நகர்ந்து விடத் தானும் தன் இருக்கைக்கு வந்தமர்ந்தான் சசி.
அடுத்த சில மணி நேரங்கள், தன்னைப் பொறுப்பாய்த் தவிர்க்கும் அவள் செய்கையை கவனித்தபடி அமர்ந்திருந்தவனுக்குக் கொலை காண்டு தான் அவள் மீது!
“சக்தி, இந்த மந்த் உன் ஷிஃப்ட் டீடெய்ல்ஸ் அனுப்ப முடியுமா” -சுந்தர்
“ஷ்யூர் சுந்தர்” – பெரிதாய் வந்த குரல்,
“அப்டியே சசி,பரத்தோடதும் சேர்த்து அனுப்பு” – என்றதும்,
“ம்ம்” – முனகலாய் மாறியது.
உடனே குரூப் சாட்டில் பரத்தையும்,தன்னையும் இணைத்து, அவள் அனுப்பிய,
“கைஸ், ப்ளீஸ் செண்ட் மீ யுவர் ஷிஃப்ட் டீடெய்ல்ஸ் ஃபார் திஸ் மந்த்” – என்ற கேள்விக்கு அவன் வேண்டுமென்றே பதிலளிக்காது விட,
சுந்தருக்கு அனுப்பிய ஈமெய்லில் அவளது,மற்றும் பரத்தின் டீடெய்ல்களை மட்டும் இணைத்து அவனுடையதை டீலில் விட்டு,
@சசி, குட் யூ ப்ளீஸ் ஆட் யுவர்ஸ்? – என எழுதியிருந்தவளைக் கண்டு எரிச்சலாய் வந்தது அவனுக்கு.
‘கை தொடுற தூரத்துல உட்கார்ந்திருக்கேன்?, என் கிட்ட வாயைத் திறந்து கேட்க மாட்டாளாமா?’
அவாய்ட் பண்றா என்னை!
ஏன்வாம்?
முகத்தைக் கூடப் பார்க்க மாட்டாளாமா?
ஸ்ட்ரைக் பண்ணிட்டிருக்கா!
அப்பிடி என்ன செஞ்சுட்டாங்களாம் இவளை?
முசுமுசுவென மூண்டக் கோபத்துடன் மூக்கை விடைத்தவனுக்கு, மூளை வேலை செய்யாது போக, விடாது மௌஸை க்ளிக்கியவனின் புண்ணியத்தால், அவன் ஓபன் செய்து வைத்திருந்த டாகுமெண்ட் ஒன்று, மேக்ஸிமைஸ்,மினிமைஸ் என சென்று வந்து கொண்டிருந்தது.
பொறுக்கின்னு நினைச்சுட்டா டா உன்னை! பொறுக்கி! பொறுக்கி!
அப்பிடியா டா பேசுவ?
ஒரு பொண்ணைப் பார்த்து, என்னை டெம்ப்ட் பண்ற நீ-ன்னு சொன்னா, உன்னை pervert-ன்னு நினைச்சுப் பயந்து விலகி ஓடாம என்ன செய்யும்?
அவ கண்ணைப் பார்த்துப் பேச பயப்படுற உனக்கு, எங்க இருந்து டா தைரியம் வந்துச்சு அந்த மாதிரி பேச?
திட்டுறதுக்காகவாவது உன் முகத்தைப் பார்க்குறவ, இனி உன்னை நிமிர்ந்து கூட பார்க்கப் போறதில்ல!, நொட்டு!
மனசாட்சி விடாது குற்றம் சாட்டியதில் கலங்கிப் போனவன்,
‘தப்புப் பண்ணிட்டியே டா சசி!, தப்புப் பண்ணிட்டியே! – எனத் தன்னையே சாடியபடி நெற்றியை அழுத்தமாய்த் தேய்த்துக் கொண்டான்.
சம்பவம் நடந்து முடிஞ்சப்புறமும் நல்லாத் தான டா பேசுனா?,
ட்ராப் பண்ண சொல்லிக் கேட்டு பைக்ல கூட ஏறுனாளே!
இப்ப என்ன வந்து விடிஞ்சுச்சாம்?,
ரெண்டு நாள் வர்க் ஃபரம் ஹோம் எடுத்து, இதைத் தான் யோசிச்சிருப்பாளோ!
புலம்பித் தவித்த மனம் கொண்ட கலக்கத்தில், நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன், அவள் சலனமற்ற முகத்துடன் மானிடரைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டு ஆத்திரமுற்று,
‘சரி தான் போடி’
-என்று விட்டு, “ப்ரோ….” என அலெக்ஸை அழைத்தான் சத்தமாய்.
“இன்னா டா?”
“ஜான் மேரி ஜான் ஜலஜா இப்போ எங்க இருக்கும்?”
-அவன் கேட்டதும், பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு சர்ர்ர்ரென தனது நாற்காலியை நகட்டி, அவனருகே வந்த அலெக்ஸ்,
“எதுக்கு டா அம்பி கேக்குற?” – என்றான்.
“இனிமே ஜலஜா தான் என் ஜாங்கிரி” – சிறுபிள்ளைத்தனமாய் சசி.
“அப்பிடிச் சொல்லு டா என் செல்லக் குட்டி!, இந்த ரெட்டூ மூக்குத்திலாம் ஒரு ஆளா டா சசி?, காலைல இருந்து பாவம் நீயும், அந்த முக்கு,முக்கின்னு இருக்குற!, அது உன்னைக் கொஞ்சமாவது மதிக்குதா?”
“உனக்கும் தெரிஞ்சுருச்சா டா?” – நண்பனை வியப்பாய்ப் பார்த்தபடி சசி.
“ண்ணா, எனக்கும்!” – ஈஈஈ-என இளித்தபடி அந்தப்பக்கமிருந்து பவித்ரா.
மூவரும் பேசிக் கொள்வது நன்றாகக் காதில் விழுந்தும் கூட, அழுத்தமாய் அமர்ந்திருந்தவளைக் கண்டு, அழுகாத குறையாக முகத்தைத் தூக்கியவனை சமாதானம் செய்து,
“விடுங்க ப்ரோ! விடுங்க ப்ரோ!, இந்தப் பொண்ணுங்களே இப்பிடித் தான்!” -என்ற அலெக்ஸ், “ஜலஜா இப்ப வாஷ்ரூம் வாசல்ல உட்கார்ந்து வடை சாப்பிட்டுட்டு இருக்கும்!, வாங்க, நாமளும் போய் ஜாயின் பண்ணிக்கலாம்!, வா டா,வா டா!, அழாம வா டா தங்கம்!” என்றான்.
“வடைக்கு காம்போவா (combo) காபி வாங்கிட்டுப் போய் குடுப்போமா ப்ரோ?”
“க்ளீனர் கந்தசாமி ஏற்கனவே வாங்கிக் கொடுத்துருப்பான்! நீ அதைப் பத்தி வர்ரி பண்ணிக்காத”
“கந்தசாமி யாரு ப்ரோ?”
“ம்ம், ஜலஜா புருசன்”
“என்னாஆஆஆது?”
“ப்ச்,ப்ச்! புருசனாகப் போறவன்னு சொல்ல வந்தேன் டா!,அதுக்குள்ள ஏன் கூவுற?”
“நமக்கு சான்ஸ் இருக்குல்ல ப்ரோ?”
“அதெல்லாம்.. பா…க.. உந்தி!, நீ கவலைப்படாம ரா ரா”
“ம்ம்” – என்றவன், சக்தியை ஒரு முறை திரும்பிப் பார்த்துப் பல்லைக் கடித்து விட்டு, விறுவிறுவென நண்பனின் பின்னே சென்றான்.
அன்று மதியத்திற்கு மேல் 2.30 மணி வாக்கில் சசி,அலெக்ஸ்,ரவி,போபன்,பரத் என அனைவரும் சுந்தரின் டெஸ்க்கைச் சுற்றி நின்றிருந்தனர்.
மதிய உணவை உண்டு முடித்துத் தங்களது இருக்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களை நிறுத்தி வைத்திருந்தார் சுந்தர்.
“டேய், தீபாவளி லீவ் ப்ளான் சொல்லிட்டுப் போங்க டா!, நான் backup ரெடி பண்ணனும்!” – சுந்தர்.
“ரேய் மாவா வேம்பட்டி, நுவ்வு தீபாவளிக்கு ஊருக்குப் போக லேதா டா?” – அலெக்ஸ்
“வெல்துன்னானு ரா” - ரவி
“ஐஆம் நாட் டேக்கிங் எனி லீவ் ஃபார் தீவாளி சுந்தர், கட் மீ அவ்ட்” – போபன்.
“ஆமாமா, இவனுக்குலாம் லீவ் குடுக்காதீங்க! இப்ப தான ஓணம்ன்னு 10 நாள் எஸ் ஆனான்!”-அலெக்ஸ்
“டேய் பரத், உங்கம்மா சுடுற அதிரசத்தை இந்தத் தடவை ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்றேன் டா” – சசி.
“அதிரசம் அண்ட்டே, அரிசாலு காதா?” -ரவி.
“அதே! அதே!” - பரத்
“அலெக்ஸ், ஸ்டார்ட் பண்ணு டா!, உன் லீவ் ப்ளான் சொல்லு?” – சுந்தர்.
-ஆளாளுக்கு மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டு ஒரே இடத்தில் குழுமியிருந்த நேரம், அவர்களுக்குப் பின்னாலிருந்த டிவி திரை பட்டென ஒளிர்ந்தது.
எப்போதும் செய்திகள்,கிரிக்கெட் என்று மட்டுமே ஒளிபரப்பப்படும் அத்திரையில் திடீரென “ப ச நி ச நி ச நி த ப ம க” – என பாம்பே படத்தின் BGM ஒலிக்கத் தொடங்க, அனைவரும் திரும்பித் திரையை நோக்கினர்.
சினிமா பாடல் ஒலிக்கத் துவங்கியதுமே, தளத்திலிருந்த மற்றவரும் வியப்புடன் ‘என்ன என்ன’ எனக் கேட்டபடி எழுந்துத் திரையின் முன்னே வந்து நிற்க,
கொட்டும் மழையின் நடுவே.. ஈரப் பாறையொன்றில் பாதம் பதித்து நடக்கும் ஷூ-கால்களைத் தொடர்ந்து.. ப்ளூ ஜீன்ஸ், ப்ளாக் ஹூடியில், கையில் கேமராவுடன் திரையில் தெரிந்தது சாட்சாத் சசியே தான்!
எதிரிலிருந்த சிற்றருவியை நோக்கியவாறு முதுகு காட்டி நின்றிருந்தவன், சட்டெனத் திரும்பி,
தலையைப் பின்னே சாய்த்து, சிந்தியத் தூறல்களை கண்ணைச் சுருக்கி முகத்தில் வாங்கியபடி, மெல்லிய சிரிப்புடன் எதிரிலிருந்த ஆண் மயிலை நோக்கினான்.
கேமராக் கண்ணின் வழி ஒரு முறை அதைப் பார்த்து விட்டுப் பின் இடப்புறமாய்த் தலை சாய்த்து, நீண்ட புன்னகையொன்றை சிந்தியவனின் இதழ்கள், ஸ்லோ மோஷனில் மெல்ல விரிந்து கொண்டிருந்தது.
“ரேய்… சசி இ இ இ இ….”
“டேய்… சசி, நீயா டா இது??”
“சசி டேய்ய்ய்ய்ய்…”
நாற்புறமிருந்தும் சசி,சசியென்று ஒலிக்கும் குரல்களைக் கவனியாது, மூளை மரத்துப் போய்த் திகைப்பில் விரிந்த கண்களோடு எதிரிலிருந்தத் திரையை பெக்கே,பெக்கேவென பார்த்துக் கொண்டிருந்தான் சசி.
தண்ணீர் வடியும் பாறை மீது நடந்தபடிக் கண் மூடி, முன்னுச்சி முடி கோதும் சசி..
கேமராவை சுழற்றிப் பிடித்தபடி பூச்செடிகளின் நடுவே நடந்து வரும் சசி..
தண்ணீருக்குள் நின்று கொண்டு, முகத்தில் வழியும் நீரைத் துடைத்துத் தன் பெரிய கண்களை விரிக்கும் சசி..
ஏரி நடுவே.. படகில் அமர்ந்தபடி மாலைக் காற்றில் தன் கன்னம் தீண்டிப் போனக் காற்றைக் கண்டு, மூடிய இதழ்களுக்குள் மெலிதாய்ப் புன்னகைக்கும் சசி..
பச்சைப் புற்களுக்கிடையே பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு, எதிரே எதையோ தீவிரமாய் வெறித்தபடி நின்றிருக்கும் சசி..
கையில் கேமராவுடன், நுனி நாக்கை முன் பற்களில் வைத்துக் கொண்டு, நெரித்தப் புருவத்துடன், ஒற்றைக் கண்ணை மூடியபடித் தீவிரமாய் எதையோ ஃபோகஸ் செய்து கொண்டிருக்கும் சசி..
முன்னுச்சி முடி பறக்க, தலை சாய்த்துக் கண் மூடி துயில் கொண்டிருக்கும் சசி..
கடைசியாக.. ஓரக் கண்ணில் எதையோ கண்டு.. ஒரு புறமாய் உதடு வளைய.. கருமணியைச் சுழற்றிப் பிடரியைத் தடவி, சங்கடமாய்ப் புன்னகைக்கும் சசியோடு…
நீண்ட அந்த 40 செகண்ட்ஸ் வீடியோ க்ளிப் முழுதிலும், ஏ.ஆர்.ரஹ்மான் பேக்-க்ரவுண்ட் மியூசிக்கில் ஹீரோவைப் போல் காட்டப்பட்டிருந்த சசியைக் கண்டு அனைவரும்,
“ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ” – எனக் கைத்தட்டி ஆர்ப்பரிக்க..
சசியைச் சுற்றி நின்றிருந்த ஆண்கள் அனைவரும், அவன் தோளைப் பற்றிக் குலுக்கி, முதுகில் அடித்து, தலையைக் கலைத்து, கன்னத்தைக் கிள்ளி,
“சசி- தமிழ் நாட்டின் அழகிய தமிழ் மகன்!, சசி- மன்மதனின் மச்சான் மகன்!, சசி – ஆண்களையே அசர வைக்கும் பேரழகன்!, சசி – தி காதல் மன்னன்!” – என ஏகத்துக்கும் பட்டம் சூட்ட,
காட்டெருமைக் கூட்டத்தின் கால்களுக்கிடையே சிக்கியக் கட்டெறும்பாக, நொந்து நூலாகிப் போன சசி,
“டேய், டேய்… டேய் விடுங்க டா” – என அனைவரும் பிடித்திழுத்ததில் பட்டன் அவிழ்ந்து போய் ஒரு புறமாய் வழிந்து கொண்டிருந்த சட்டையைச் சரி செய்தபடி, தலை கிறுகிறுத்துப் போய் மூச்சு வாங்க நிற்க,
“நண்பா….. என் நண்பா…. டேய்.. சசி….” என அழுது கொண்டே நண்பனின் அருகே வந்த அலெக்ஸ், அவன் வயிற்றைக் கட்டியணைத்துக் கொண்டு,
“வால்டர் வெற்றிவேல் படத்துல வர்ற மன்னவா,மன்னவா பாட்டுல, கண்ணு தெரியாத சுகன்யா, விஷம் கலந்த பாலை, குழந்தைக்குக் கொடுத்த சீன்ல அழுதவன் டா நான், அதுக்கப்புறம் இப்ப, இந்தப் படத்தைப் பார்த்துத் தான் டா இப்ப்ப்ப்பிடி அழுகுறேன்!” – எனக் கூறி மேலும் ஒப்பாரி பாட,
நடுக்கமெடுத்த விரல்களைக் கொண்டு அவன் கையை விலக்கிய சசி, “டேய்ய்” என்றதைப் பொருட்படுத்தாது,
“உன்னைப் போய் நான் கரிமேட்டுக் கருவாயன், கஞ்சாக் கருப்புன்னு லாம் திட்டிருக்கேனே டா!, நண்பா.. நீ அழகன் டா!, நீ அழகன் டா!, என்னை மன்னிச்சுரு டா, நண்பா…” – எனத் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்க..
“வாயை மூட்றா டேய்..” என அடிக்குரலில் நண்பனை அதட்டியவனிடம்,
“சசி, வீடியோ-லாம் பயங்கரமா இருக்கே!, யார் எடுத்தது?, எனி வே, ரொம்ப ஹேண்ட்சம்-ஆ இருந்த டா!” -என்று சுஷ்மா பாராட்டிச் செல்ல,
விடாதுத் தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் திரையைத் தடுக்க வழி தெரியாது திணறியவனின் தவிப்பைப் புரிந்த பரத் மெல்ல,
“ப்ரோ, இதுக்குக் கன்ட்ரோல் இங்க இல்ல ப்ரோ” என்றான்.
“டேய் சசி.. இது நீ தான?, என்ன உன் மூன் அண்ட் ரெய்ன் பேஜ்க்கு ப்ரோமோஷனா?” – அக்கட ப்ராஜக்ட் ஒன்றில் பணி புரியும் நண்பன் அஜய்.
“அ..அப்பிடிலாம் இல்ல டா”
“சசி வீடியோ ஏதோ ஓடுதாமே!, எங்க?” – எனக் கேட்டபடி அருகே வந்த பக்கத்து பில்டிங்கில் வேலை செய்யும் நண்பன் பத்ரியைக் கண்டு,
“டேய் டேய்.. அதுக்குள்ள உனக்கெப்பிடி டா விசயம் தெரிஞ்சுச்சு?” – என்று அழாக் குறையாக் கேட்டவனிடம்,
“ஆஃபிஸ் க்ரூப், ஸ்கூல் க்ரூப், காலேஜ் க்ரூப்ன்னு அத்தனைலயும் உன் பிட்டு தான் டா ஓடுது டுபுக்கு!” – என்ற பத்ரி,
திரையைக் கண்டபடி, “அழகு.. நீ நடந்தால் நடை அழகு… அழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகு..” எனப் பாடி அவன் தோளைத் தட்ட..
“டேய்ய்ய் அலெக்ஸ் நாயே….” – என்று பொருமியபடித் திரும்பி அவன் முறைக்கையில்,
அலெக்ஸ் இன்ஸ்டண்ட்டாகக் கண்ணீரை வடிய விட்டு, “நண்பா….. நீ அழகன் டா!, உன்னைப் போய் நான் காலா ஜாமூன்-ன்னு சொல்லிட்டேனே டா ” – என ரிப்பீட் மோடில் கதறுவது கண்டு கடியாகி,
தளத்திற்குள் சுத்தம் செய்ய வரும் ஆயாவில் தொடங்கி, ஆங்காங்கு அமர்ந்திருக்கும் மற்ற ப்ராஜக்ட் மக்களும் கூட, ஆர்வமாய் எழுந்து வந்து திரையையும்,அவனையும் மாறி மாறி பார்த்து சிரிப்பது கண்டு,
முகத்தை எங்கு கொண்டு மறைப்பதெனத் தெரியாமல், சங்கடமாய்த் தழைந்த விழிகளுடன், தலை தெறிக்க ஓடி வந்தவன்,
கையிலிருந்த காஃபியை ஸ்டிரெர் ஸ்டிக்கைக் கொண்டுக் கலக்கியபடிப் பான்ட்ரியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைக் கண்டு, மூச்சு வாங்க ப்ரேக் அடித்து நின்றான்.
அனைவரின் முன்பும் காட்சிப் பொருளாக்கி விட்ட சங்கடமும்,சஞ்சலமுமாய், எங்காவது ஓடி,ஒளிந்து கொள்ளத் துடித்த அகத்தின் அழகை முகத்தில் காட்டியபடி, அசடு வழிய நிற்பவனைப் பார்த்தபடியே நமுட்டுச் சிரிப்புடன் முன்னே நடந்தாள் சக்தி.
இவ தான்!
இவ தான் இந்த வேலையைப் பார்த்திருப்பா!
காலையிலிருந்து அவன் முகத்தை நிமிர்ந்து கூடக் காணாது அவனைத் தவிக்கச் செய்தவள், இப்போது கண்களில் பொங்கி வழியும் சிரிப்போடு, கடந்து செல்வது கண்டு, காண்டாகிப் போனவன், விறுவிறுவென அவளை நோக்கிச் சென்றான்.
படிக்குச் செல்லும் கதவைத் திறந்து கொண்டு நுழைந்தவளைத் தொடர்ந்து, தானும் நுழைந்தவன்,
எதிரிலிருந்த ஜன்னலில் முதுகைச் சாய்த்து, இரு கைகளாலும் கப்பைப் பற்றிக் பொறுமையாய் காஃபியைக் குடித்தபடி, காலாட்டிக் கொண்டு நின்றவளைக் கண்டு மூக்கை விடைக்கையில்,
“ஹே.. ஹீ இஸ் த ஒன்” – என்று முணுமுணுத்தவாறு நடந்து வந்த இரு பெண்களில் ஒருத்தி, “வீடியோல ரொம்ப ஹேண்ட்சம்-ஆ இருந்தீங்கண்ணா” என்று சிரிப்புடன் கூறிச் செல்ல,
பல்லைக் காட்ட முயன்று முடியாமல், திரும்பி அவர்களது முகம் பாராது மெல்லத் தலையசைத்தவன், பிடரியை இறுக்கிப் பிடித்துப் பல்லைக் கடித்துக் கண்ணை அழுந்த மூடுவது கண்டு, தோள் குலுங்கச் சத்தம் வராது சிரித்தாள் சக்தி.
அவள் சிரிப்பதைக் கண்டு கொண்டவன் கடுப்பாகி, சுற்றும்,முற்றும் பார்த்தபடி,
“எ…எ..என்னங்க இதெல்லாம்?” – என்று கலங்கிய குரலில் கேட்க,
“எது?” என்றாள் அவள் அசால்ட்டாக.
“எதா?, எது,எதுன்னா கேட்குறீங்க?” –டைப் அடித்தப் பற்களோடு எகிறிக் கொண்டு வந்தவனைக் கண்டு அவள் உதட்டைச் சுழிக்க,
“நீங்க தான இப்பிடிப் பண்ணீங்க? – என்றான் அழாத குறையாக.
“ப்ச்”
“தயவு செஞ்சு அதை நிறுத்தச் சொல்லுங்க! எனக்கு.. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்குங்க”
“இன்னும் பத்து நிமிசத்துல அவங்களே நிறுத்திடுவாங்க”
“ப..ப..பத்து நிமிசமா?, விளையாடுறீங்களா?” – என்று அவன் குதிக்கையில்,
“வீடியோல ஹீரோ மாதிரி இருந்தியே டா சசி!, யாருடா எடுத்தது?, காண்டாக்ட் இருந்தா குடேன்!, என் ப்ரீ வெட்டிங் ஷூட்டை அவங்கக் கிட்டயே குடுக்குறேன்” – எனப் பேசியபடி வந்த நண்பன் ஒருவனிடம் என்ன பதில் சொல்வதெனப் புரியாது..
“கு…குடுக்குறேன் ப்ரோ” – என்றவன், அவன் நகர்ந்ததும், பரபரவெனத் தலையைக் கோதிக் கொண்டான்.
“ஏன், இவ்ளோ தடுமாறுறீங்க?”
“……” – இடுப்பில் கை வைத்தபடி அவளை முறைத்துப் பார்த்தான் சசி.
“யாராவது ஹேண்ட்சம்ன்னு சொன்னா, தேங்க்ஸ்ன்னு சொல்லி சிரிச்சுட்டுப் போகாம, எதுக்கு இப்பிடித் தப்பிச்சு ஓடிட்டு இருக்கீங்க?”
“நீங்க தான வீடியோ எடுத்தீங்க?”
“ஆமா”
“ஏன் எடுத்தீங்க?”
“சும்மா தான்”
“சும்மாவா????” – பல்லைக் கடித்தான் அவன்.
“ப்ச், ரொம்பப் பண்ணாதீங்க!, உள்ளதைத் தான் காட்டியிருக்கேன் நான்”
“எது?”
“ஹேண்ட்சம்-ஆ இருந்தா, ஹேண்ட்சம்-ஆ இருக்கீங்கன்னு தான் சொல்லுவாங்க. இதுக்கு ஏன் இவ்ளோ அலட்டிக்குறீங்க?” – என்றவளின் வார்த்தைகள், ஜிவ்வெனத் தலைக்கேறி, நொடியில் போதையேற்றியதில், அவளை இமைக்காது நோக்கியவன்,
“நீங்க அப்பிடி நினைக்குறீங்களா?” எனக் கேட்டான் அடங்கிய குரலில்.
“எப்பிடி?”
“நா…நான்.. நான்.. ப்ச், ஒன்னுமில்ல விடுங்க”
-திணறியவனுக்குப் பதிலாய்,
“அப்பிடி நினைச்சதால தான் அத்தனை ஃபோட்டோ எடுத்தேன்” – அசால்ட்டாய்க் கூறியவளை, ஒரு நொடி நின்று, விடாது நோக்கியவன், அவளது எக்ஸ்ப்ரஷனில் காண்டாகி, அது கொடுத்த உந்துததில், தன்னை மறந்து இரண்டு எட்டு வைத்து அவளை நெருங்கி நின்று,
“காலைல இருந்து என் முகத்தைக் கூட பார்க்காம ஸ்ட்ரைக் பண்ணிட்டு, இப்போ இவ்ளோ பேசுறீங்க?” – நக்கல் சிரிப்பில் வளைந்திருந்த அவள் இதழ்களையும், குறும்பில் சுருங்கிய கண்களையும் கண்டபடிக் கடித்தப் பற்களுக்கிடையே அவன் முணுமுணுக்க,
“ப்ச்” என உதட்டைச் சுழித்துப் புருவம் தூக்கி வேறு புறம் நோக்கியவளின் பெரிய விழிகளை வெகு அருகே நோக்கியதில், மதியிழந்து..
அவளிரு கன்னங்களையும் இறுகப் பற்றி முகம் முழுக்க அழுந்த இதழ் பதிக்கத் துடித்த இதயத்தின் ஆசை, அடிவயிற்றிலிருந்து எழுந்துத் தொண்டை வரை வந்து நின்றதில் அதிர்ந்து,
அடித்துக் கொண்ட நெஞ்சுடன் சட்டென அவளிடமிருந்து விலகி, மறுபுறம் திரும்பி நின்றவனின் தோள் பற்றித் திருப்பியவள்,
கையிலிருந்த காஃபி கப்பை அவன் கையில் திணித்து,
“ஆறுறதுக்குள்ளக் குடிங்க!, படபடப்புக் குறையும்” எனக் கூறி நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்து சென்றாள்.
என்ன தான் நினைக்குறா இவ?,
தலை சுற்றிப் போனது சசிதரனுக்கு!
இங்கு அவளது எண்ணத்தின் போக்கு புரியாது சசி திணறிக் கொண்டிருப்பது போல், அங்கு தன் மகனின் மனதை அறிய முடியாது விசாலம், கோகிலத்திடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
“பேசாம, பொண்ணு பார்க்குற சடங்கு ஒன்னை ரெடி பண்ணி, ரெண்டு பேரையும் சந்திக்க வைச்சிருவோமாடி விசாலம்?” – கோகிலா.
“அங்க வைச்சு இந்தப் பையன் கோக்குமாக்கா எதுவும் பேசிப்போட்டான்னா என்னாடி பண்றது?”
“அவன் மட்டுமா, இந்தக் கழுதையும் தான் எடக்குமடக்காப் பேசுது!, இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் தான்னு, இன்னும் இவளும் வாய் விட்டுச் சொல்லலைடி விசாலம்”
“நாம அவசரப்படுறோமோ”
“இல்ல இல்ல!, விருப்பம் தான்னு ரெண்டு பேரும் சொல்லலியே தவிர, வேணாம்ன்னும் சொல்லலியேடி”
“ஆமால்ல?”
“அவளுக்கு நான் பொருத்தமில்லன்னு உன் மவனும், அம்மா,அப்பா என்ன முடிவு பண்ணினாலும் சரி தான்னு என் மகளும் சொல்றாங்களே ஒழிய, எனக்கு அவளைப் பிடிக்கல, எனக்கு அவனைப் பிடிக்கலன்னு விருப்பமில்லாத மாதிரி எந்த வார்த்தையும் இதுவரை வரலயேடி அதுங்க வாய்ல இருந்து”
“ஆமாடி,யோசிச்சுப் பார்த்தா, என் மவனுக்கும் சக்தியை ரொம்பப் பிடிச்சிருக்கிற மாதிரி தான் தோணுது! இப்ப என்ன தான் டி பண்றது?”
“ப்ச், நினைச்சபடி, அடுத்த வாரம் பூ வைச்சு முடிப்போம்!, நீ உன் கொழுந்தன்மாருங்கக் கிட்ட பேசு”
“அப்பிடிங்குறியா?”
“ஆமாங்குறேன்”
“சசிக்குத் தெரிஞ்சா குதிப்பானேடி”
“ப்ச், அப்ப என்னா தான் பண்ணலாம்ங்குற”
“தெரியலயேடி!”
“அப்டின்னா இது எல்லாத்தையும் இப்பிடியே நிறுத்திடுவோமா?”
“அதெல்லாம் முடியாது! சக்தி தான் என் மருமக-ன்னு நான் முடிவெடுத்துட்டேன்! இனி என்னால அதை மாத்திக்க முடியாது”
“அப்புறம்?”
“எப்பிடியாவது ரெண்டு பேரையும் சந்திக்க வைச்சு, என்னா தான் அவங்க மனசுல ஓடுதுன்னு தெரிஞ்சுக்கனும்டி”
“அதுக்குத் தான் பொண்ணு பார்க்க வர்ற மாதிரி வாடி-ங்குறேன்”
“என் மவன் நிச்சயம் ஒத்துக்க மாட்டான்”
“பிறகு என்னா தான் டி பண்ணனும்ங்குற?”
“பூ வைக்குறதுக்குப் புடவை எடுக்கனும்ன்னு சொல்லி, ரெண்டு பேரையும் ஜவுளிக்கடைக்கு வர வைப்போமா?”
“நல்ல யோசனை டி விசாலம்”
“இந்த வாரம் வெள்ளிக்கிழமை புடவை எடுத்துடலாம்! என்ன சொல்ற?”
“டபிள் ஓகே டி” – என்று குதூகலித்தார் கோகிலா.
இரண்டு அன்னைகளும் இங்கு ஜேம்ஸ் பாண்ட் வேலையில் ஈடுபட்டிருக்க, அங்கு, சக்தியை இமை கொட்டாது ஆராய்ச்சியாய்ப் பார்த்தபடியே தன்னிருக்கையில் அமர்ந்திருந்தான் சசி.
“கலக்கிட்டடி சக்தி! வீடியோ செம்ம!, சசிண்ணா.. அதை உங்க பேஜ்ல போடுங்களேன்! கேர்ள் ஃபேன்ஸ் ஏகப்பட்ட பேர் வருவாங்க”
“சு..சும்மா இரேன்ம்மா” – சங்கடத்துடன் நெளிந்தபடி சசி.
“வெட்கத்தைப் பாரு என் நண்பனுக்கு!, நேத்து வரை இந்த ப்ராஜக்ட்டோட திருஷ்டிப் பொட்டா இருந்தவனைத் திடீர்ன்னு ஹீரோவா மாத்தி விட்டீங்கன்னா, வெட்கப்படத் தான செய்வான்”
“அலெஸ்ண்ணா, ஃபோட்டோக்ராஃபில சக்தி ஒரு ப்ரோ-ங்குறதை இப்போவாவது நம்புங்க” – தோழியின் தோளைக் கட்டிக் கொண்டு கூறிய பவித்ராவின் பேச்சைக் கேட்டு சுந்தர்,
“நிஜமாவே ரொம்ப நல்லாயிருந்தது சக்தி!, என்னையும் அந்த மாதிரி ஒரு ஃபோட்டோ ஷூட் எடுத்துக் கொடுக்குறியா” – என்றார்.
“காலம் போன காலத்துல உங்களுக்கு ஏன் சுந்தர் இந்த ஆசையெல்லாம்?” – அலெக்ஸ்.
“டேய் டேய்.. இவனுக்கு மட்டும் என்ன வயசு வாழுதோ?”
“அவர் மோஸ்ட் எலிஜிபிள் பாச்சுலர் ஆச்சே சுந்தர்!, அதான், பொண்ணு,கிண்ணு பார்க்க உதவுமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல எடுத்தேன்” – இடை புகுந்த சக்தியைக் கண்டு,
“இனி எந்த பொண்ணைப் பார்க்குறதாம்” என்று முணுமுணுத்த சசி, அவளையே தன் பார்வையால் தொடர்ந்தான்.
நண்பனின் பார்வையை உணர்ந்த அலெக்ஸ் அவளிடம்,
“இங்க அவன் மட்டும் தான் எலிஜிபிள் பாச்சுலர்-ஆ?, அப்ப நாங்க-ல்லாம் யாராம்?” என வம்பு செய்ய,
உதட்டைப் பிதுக்கிய சக்தி,
“ஆனா, எனக்கு உன்னைப் பிடிக்காதே” என்றாள்.
“அப்ப என் நண்பனைப் பிடிக்குமா?”
“அப்டின்னு நான் எப்ப சொன்னேன்?”
“அப்புறம் எதுக்கு அவனை அம்பூட்டு அழகா வீடியோ எடுத்தியாம்?”
“வீடியோ எடுத்தா, விருப்பம்ன்னு அர்த்தமா?” – அலட்சியமாய்க் கூறியவளைக் கண்டு,
“டேய் நண்பா, இதெல்லாம் ஆகுற வேலையே கிடையாது டா!, இது ஒரு மரண சனி டா!, உன்னை மர்டர் பண்ணாம விடாது!, பேசாம நீ ஜலஜாவைக் கரெக்ட் பண்ணி, ஜம்மு-காஷ்மீருக்கு ஹனிமூன் போகப் பாரு” - எச்சரித்த நண்பனைக் கவனியாது, அதே ஆராய்ச்சிப் பார்வையுடன் அவளைத் தொடர்ந்து கொண்டிருந்தான் சசி.
அன்று மாலை அவள் லாக் அவுட் செய்து விட்டு வீட்டிற்குப் புறப்பட்ட வேளை, அவளையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தவனும் கடையைச் சாற்றி விட்டு அவள் பின்னே சென்றான்.
தன்னையே கவனித்துக் கொண்டிருப்பவனைக் கண்டு சிரிப்புப் பொங்கினாலும், அடக்கி ‘என்னா தான் பண்றான்னு பார்ப்போம்’ என்ற மனநிலையோடு நடந்தாள்.
பிங்க் நிற ஹெல்மெட்டை மாட்டியபடித் தன்னை நோக்குபவளைக் கண்டவாறுத் தன் வண்டியில் சாய்ந்து கொண்டுக் கைகட்டி நின்றான் சசி.
கண்களை மூடி, உதட்டைக் கடித்து, அடக்கிப் பார்த்தும் முடியாது சிரிப்பு வந்து விட, தோள் குலுங்க ‘ஹாஹாஹா’-வென சிரித்தவளைப் பிரதிபலிக்காது, அதே பார்வையுடனே நின்றிருந்தான் அவன்.
‘அடேங்கப்பா!, ரோபோ தான்’ – என்றெண்ணிக் கொண்டவள், வண்டியில் ஏறியமர்ந்து சாவியை மாட்டி, ஸ்டார்ட் செய்ய, அவனும் தன் வண்டியிலேறி அமர்ந்தான்.
தன்னைப் பின் தொடர்ந்து வருபவனைக் கண்டு நின்றவள் திரும்பி, ஹெல்மெட்டைத் திறந்து,
“என்னையே விடாம பார்த்துட்டு வந்து, வண்டியைக் கொண்டு போய் எங்கயாவது வுட்றாதீங்க” – என்று கத்த,
அலட்டிக் கொள்ளாது நின்றான் அவன். அதில் எரிச்சலாகி,
“ரோட்டைப் பாருய்யா யோவ்” என்று அவள் பல்லைக் கடிக்க,
அப்போதும் தன் பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை அவன்.
“எப்பிடியோ போங்க” – என்றுத் திட்டி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள் அவள்.
ட்ராஃபிக்கைக் கடந்து பிரதான சாலைக்குள் நுழைந்ததும், சைட் மிர்ரரை சரி செய்தவள், தன் பின்னால் வந்து கொண்டிருப்பவனைக் கண்டுத் திகைப்புற்றுப் பின் மூக்கை விடைத்தவாறு, வண்டியை ஓரம் கட்டினாள்.
அவள் நிறுத்தியதும், நான்கடித் தள்ளி தானும் நின்றவனைக் கண்டபடி வண்டியை விட்டு இறங்கியவள், ஹெல்மெட்டைக் கழட்டி சீட்டில் வைத்து விட்டு அவன் முன்னே வந்து நின்றாள்.
லேசாய்த் தூறல் போட்டுக் கொண்டிருந்த மழை, முகத்தை நனைக்க,இரு கைகளையும் நெற்றியில் வைத்துத் தன்னைக் காத்தவாறு அவனருகே ஓடி வந்து நின்றவள், கைகளை விலக்காமல், அவனை முறைத்துப் பார்த்து,
“உங்க வீடு அந்தப் பக்கம் இருக்கு” என்றாள் கடித்த பற்களுடன்.
சலனமில்லாதுத் தன் விழிகளை ஊடுருபவனைக் கண்டு உதடு கடித்து வேறு புறம் நோக்கியவள் பின், அவன் முகம் பார்த்து,
“விசாலம் அத்தைக் கிட்ட, ‘அவ ரொம்ப அழகு!, நான்-லாம் அவளுக்குப் பொருத்தமில்ல!’-ன்னு சொன்னீங்களாம்?” எனக் கேட்டாள்.
ஒரு நொடி புருவம் சுருக்கிப் பின், விழிகளை விரித்தவனிடம்,
“அதான் உங்களுக்கிருக்கிற இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸைப் போக்குறதுக்காக அப்பிடி ஒரு வீடியோ எடுத்தேன்!” – பெரிய மனதோடு கூறியவளைக் கண்டு,
இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸா??
கடுப்பின் உச்சத்தில் பல்லைக் கடித்தபடி மூச்சை இழுத்து விட்டவனிடம்,
“இப்ப, உங்க தோற்றத்தின் மேல உங்களுக்கே ஒரு கான்ஃபிடன்ஸ் வரும்!, இனி எவ்ளோ அழகான பொண்ணைப் பார்த்தாலும், நான் அவளுக்குப் பொருத்தமில்லையோன்னு யோசிக்க மாட்டீங்க”
-அறிவாளியைப் போல் பேசியவளின் பேச்சு உருவாக்கிய காண்டில், ‘ஐயோஓஓஓ’-வென சலித்துத் தலையசைத்துக் கண்களை மூடி நெற்றியைத் தேய்த்தவனைக் கண்டு,
உண்டான சிரிப்பை உதட்டுக்குள் அமுக்கியவள்,
“என்ன இருந்தாலும், உங்க பர்மிஷன் இல்லாம நான் உங்களை ஃபோட்டோ எடுத்தது தப்பு தான்!, அதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன்” – எனக் கூற,
ஹாண்டில் பாரை முறுக்கி வேறு புறம் பார்த்தான் அவன்.
பொறுமை பறி போக, அவன் முழு எரிச்சலில் நிற்பது புரிந்தாலும், விடாது,
“இதை வைச்சு நீங்க எதுவும்.. என்னைத் தப்…பா-ஆ” – என இழுத்து முடிப்பதற்குள் ‘போதும்’ என வலது கையைத் தூக்கி இடையிட்டவன்,
“போங்க” – என்பது போல் கையைக் காட்ட..
“இல்ல, நான் என்ன சொல்ல வர்றேன்ன்னா..” என வேண்டுமென்றே வம்பு வளர்த்தவளின் பேச்சை, அதற்கு மேலும் நின்று கேட்க முடியாது,
முழுக்கோபத்துடன் வண்டியை உதைத்துக் கிளப்பியவன், விடைத்த மூக்கும்,கடித்த பற்களுமாய்.. அவளைத் திரும்பியும் பாராது… வண்டியைத் திருப்பிக் கொண்டு சர்ரெனச் சென்று விட்டான்.
அவன் சென்றபிறகு இரு நொடி வண்டியருகே நின்று, போவோர்,வருவோரெல்லாம் ‘அட பைத்தியக்கார மூதேவி’ என்று பார்த்துச் செல்வதைப் பொருட்படுத்தாது வயிற்றைப் பிடித்தபடி விழுந்து விழுந்து சிரித்துப் பின் சமாளித்து, புன்னகை மாறாத முகத்துடன் கிளம்பிச் சென்றாள்.
அன்று வெள்ளிக்கிழமை..
மீட்டிங் அறைக்குள் சசியின் எதிரே அமர்ந்திருந்தாள் சக்தி.
“இந்த வீக் எண்ட் ஆக்ட்டிவிடிக்கு பரத் அவைலபிள்-ஆ இல்லையாம்! வேற யாரைக் கேட்கட்டும்?”
“யாரையாவது கேளுங்க” – ஆர்வமற்றக் குரலில் சசி.
“மும்பை டீமைக் கேட்கட்டுமா?”
“என்னவோ பண்ணுங்க”
“அந்த கேத்ரினோட இஷ்யூக்கு அப்டேட் கேட்குறாரு ஸ்டீவ், என்ன அனுப்பட்டும்?”
“என்னத்தையாவது அனுப்புங்க”
“ஹ்ம்ம்ம்ம், கனெக்டிவிடி இஷ்யூ மாதிரி தான் தெரியுது. நான் ரிப்ளை பண்ணட்டுமா?”
“என்னவாவது பண்ணுங்க”
“ப்ச் யோவ்” – என எரிச்சலுடன் நிமிர்ந்த சக்தி, எதிரே முசுட்டு முகத்துடன் அமர்ந்திருந்தவனைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கி,
“விளையாடுறீங்களா?, என்ன கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேங்குறீங்க?” என்று எகிறியதும்,
“என்ன பதில் சொல்லலயாம்?” – என முணுமுணுத்தவனிடம்,
“என்ன பிரச்சனை உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
“எனக்கென்ன பிரச்சனை?, ஒன்னுமில்ல, ஒன்ன்னுமே இல்ல” – மீண்டும் முனகலாய் அவன்.
“வாயைத் திறந்து பேசுங்க. முனங்கிட்டே இருந்தீங்கன்னா, எனக்கு எப்பிடிக் கேட்கும்?”
“கேட்டா.. மட்டும்ம்ம்” – மீண்டும் ம்யூட்டில் பேசியவனைக் கண்டு கடுப்புற்று,
“எப்பிடியோ போங்க!” என சலித்தவள் லாப்டாப்பைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டாள்.
வழியில் வந்த போபனிடம் நின்று உரையாடி விட்டு, டெஸ்க்கில் அமர்ந்திருந்த ரவியிடம் பேசிச் சிரித்து, அலெக்ஸிடம் முறைப்பாய் ஏதோ கூறி, பவித்ராவின் தோளைத் தட்டியபடி வெகு இயல்பாய்த் திரிந்தவளை வயிற்றெரிச்சலுடன் பார்த்தமர்ந்திருந்தான் சசி.
அதன் பின்பு லஞ்ச்சிற்கு செல்வதற்காக அலெக்ஸூடன் அவன் லிஃப்ட்டுக்குள் நிற்கையில், பவித்ராவுடன் உள் நுழைந்தாள் சக்தி.
“என்ன ரெட்டூ மூக்குத்தி, இன்னைக்கு யார் வீடியோவை ரிலீஸ் பண்ணப் போற?” – வழக்கம் போல் அலெக்ஸ்.
“செருப்புப் பிஞ்சிரும்”
“விக்கி லீக்ஸ் மாதிரி சக்தி லீக்ஸ்!”
“வேணாம்!!” – எச்சரித்தபடி சக்தி.
“இதுக்கு மேல வேணாம்ன்னு தான் நானும் சொல்றேன்!, நீ எடுத்த வீடியோவைப் போட்டுக் காட்டி, என் நண்பனுக்கு ஜலஜாவை செட் பண்ணி வுட்டுக்கிறேன்! நீ இத்தோட நிறுத்திக்க”
“ஜலஜா யாரு?”
“அது உனக்கெதுக்கு?, நீ தான், என் நண்பனைப் பிடிக்கலன்னு சொல்லிட்டேல?”
“ப்ச்”
“என் நண்பனுக்கு ரெட்டூ மூக்குத்தியை விட, இப்போல்லாம் க்ரீன் மூக்குத்தி மேல தான் க்ரேஸூ!, ஜலஜா தான் அவனோட ஜான் மேரி ஜான்”
“ஹாஹாஹா” – பவித்ரா.
“ஓஹோஓஓ” – நக்கலாய் இழுத்த சக்தி, “உங்க ஃப்ரெண்டு அந்தப் பொண்ணுக்கெல்லாம் ஒத்து வர மாட்டாரு”எனக் கெத்தாய்க் கூற,
பாக்கெட்டுக்குள் கையை விட்டுக் கொண்டு பின்னால் சாய்ந்து நின்றிருந்த சசி, “திமிரைப் பாரேன்!” – என்று முணுமுணுத்தான் நண்பனிடம்.
உடனே பொங்கிய அலெக்ஸ்,
“ஜலஜாக்கு ஒத்து வர மாட்டான்னா, உனக்கு ஒத்துப் போவானா?” என்று எகிற,
“ச்சி, ச்சி” என்றாள் அவள்.
“ச்சியா?, ஏய்ய்ய், நீயும் ஒத்து வர மாட்ட!, ஜலஜாவும் ஒத்து வராதுன்னா, அப்ப என் நண்பன், காலம் முழிக்கக் கன்னி கழியாம கடைசி வரை பாச்சுலராவே சுத்தனுமா?” – என்று ஹை பிட்சில் கத்த,
காதைப் பொத்திய சக்தி, “ப்ச்” என வழக்கம் போல் புருவம் தூக்கி உதட்டைச் சுழித்தாள்.
“டேய் சசி, பார்த்தியா?, பார்த்தியா டா?, உன்னைய இப்பிடிப் பேசியே ஒப்பேத்தி விடனும்ன்னு நினைக்குதுடா இது!, இது… இது.. உனக்கு வேண்டாம்டா!, சரியா?, இது வோணாம்!, வேணாம்ன்னு சொல்லு டா” – என்று அடித்துக் கொண்ட நண்பனைக் காணாது, சசி மூக்கை விடைத்தபடி அவள் முதுகை வெறிக்க,
திரும்பி, அவன் முகம் பார்த்தவள்,
“கேட்குறார்ல உங்க உயிர்ர்ர்ர்ர் நண்பர்?, பதில் சொல்லுங்க” – என்றாள் புருவம் அசைய.
அவள் வலது புறம் திரும்பியதால்.. மூக்குத்திப் பளிச்சென அவன் பார்வைக்கு விருந்தாக, மற்றதை மறந்து மயங்கி நின்றவன்,
“அ..அ..அப்பிடிலாம் பட்டுன்னு சொல்ல முடியாது டா” என்று தடுமாற,
“ச்ச” என்று தலையில் அடித்துக் கொண்ட அலெக்ஸ்,
“நீ இதைப் பார்த்து இப்பிடி பயப்பட்றதால தான் அது திண்ணக்கமா நிக்குது டா சசி!, என்னாடா நீ! அடப் போடா” – என்று சலித்துக் கொள்ள,
லிஃப்ட் நின்றதும் இறங்கிய நால்வரில் பவித்ரா,
“ண்ணாஆ… என்ன ஆனாலும் முயற்சியைக் கை விடாதீங்க!” – என்று கூறிச் செல்ல, “ப்ச்” என நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் சசி.
மாலை ஐந்து மணி வாக்கில் விசாலம் மகனை அழைக்க..
மீட்டிங் அறையில் அமர்ந்திருந்தவன், ஃபோனை உயிர்ப்பித்து,
“கால்-ல இருக்கேன்! அப்புறம் பேசுறேன்” – எனக் கட் செய்யப் பார்த்ததும்,
“டேய் இரு டா,இருடா” என்ற விசாலம், “நீ உடனே கிளம்பி சென்னை சில்க்ஸ்க்கு வா டா” என்றார்.
“எதுக்கு?”
“ப்ச், வாடான்னா,வாடா”
“என்ன தீபாவளி பர்ச்சேஸா?, பெரியம்மாவைக் கூப்பிட்டுப் போகாம, என்னைய எதுக்கும்மா கூப்பிட்ற?” – கடுப்படித்தவனிடம்,
“புடவை எடுக்கத் தான் வந்திருக்கேன்! ஆனா, எனக்கில்லை!” என்றார் அவரும் கடுப்பாக.
“பின்ன?”
“உன் வருங்காலப் பொண்டாட்டிக்கு?”
“எவ அவ?”
“ப்ச், சசி… சக்தி அப்பவே வந்துட்டா டா!, நீயும் கிளம்பி வா டா” – என்றவர், “நான் வைக்குறேன், நீ சீக்கிரம் கிளம்பி வா” எனக் கூறி கால்-ஐ கட் செய்து விட,
அவர் சக்தி என்றதில் அரண்டு போனவன், அவசரமாய் எழுந்து நின்று,
“ம்மா, ம்மாஆஆஆஆஆ” என்று கத்தி, கால் கட் ஆனதில் பதறி, மீண்டும் அழைத்து, அன்னை எடுக்காது போனதில் கதறி, அடித்துப் பிடித்து மீட்டிங் அறையை விட்டு வெளியே வந்தான்.
அனிச்சையாய் சக்தியின் டெஸ்க்கைத் திரும்பிப் பார்த்தவன் பவித்ராவிடம் அவள் எங்கே என வினவ,
“அவ வீட்ல ஏதோ ஃபங்க்ஷன்னு பர்மிஷன் வாங்கிட்டு அப்பவே கிளம்பிட்டாளேண்ணா” – எனக் கூறியதும், நெற்றியைத் தேய்த்தவன், ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறினான்.
மூச்சு வாங்க அவன் கடைக்குள் நுழைகையில், விசாலம்,கோகிலாவிற்கு நடுவில் அமர்ந்திருந்த சக்தித் தன் முன்னே பரப்பப்பட்டிருந்தப் பட்டுப்புடவைகளைத் தீவிரமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.
அதுவரை ஓடி வந்தவனின் கால்கள், அவளைக் கண்டதும் வேகத்தைக் குறைத்து விட, அவள் முகத்தையேத் தயக்கமாய்ப் பார்த்தபடி மெல்ல நடந்து வந்தான் சசி.
கோபமோ, விருப்பமின்மையோ ஏதுமின்றி, சலனமற்ற முகத்தில் லேசாய்ப் புன்னகையைத் தேக்கியபடிப் புடவைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவளின் மனதை அறிய முடியாது, பிடரியைக் கோதியபடி நான்கடி தள்ளி நின்று விட்டவனைக் கண்ட விசாலம்,
“இந்தா சசி வந்துட்டான்!, வா டா.. வாடா சசி” – என்று அருகில் அழைக்க..
தயங்கியவாறு அருகே வந்தவனின் கைப் பற்றிக் கொண்ட கோகிலா,
“வா டா சசி!, நல்லாயிருக்கியா?” எனக் கேட்டதும்,
புன்னகைக்க முயன்றவாறு மெல்லத் தலையசைத்தவனை,
“உட்காரு, உட்காரு!, நீயும் உட்கார்ந்து பாரு” – என அவளருகே அமர்த்தப் பார்க்க..
தோளைப் பற்றி அவர் அழுத்தியதில் தடுமாறி, அவர் கையை விலக்க முடியாது திணறி, “இல்ல, இல்ல.. இருக்கட்டும்” என்று அவன் திக்கிக் கொண்டிருக்கையிலேயே, “இவங்க இங்க பார்க்கட்டும். நாம அந்தப்பக்கம் பார்ப்போம்” – என்று பெருசுகள் இரண்டும் நைஸாய் நழுவி விட..
அதுவரை இவன் புறம் திரும்பியும் பாராது, பச்சைக்கலர் புடவையின் விலைச் சீட்டை சின்சியராய் பார்த்துக் கொண்டிருந்த சக்தி,
“உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?” எனக் கேட்டாள் அவன் புறம் திரும்பாமலேயே.
மிகச் சாதராணமாய் அவள் வினவுவதைக் கேட்டு, திகைப்பில் ஆஆ-வென விரிந்த இதழ்களைக் கட்டுப்படுத்தி, எச்சில் விழுங்கி உதட்டை ஈரப்படுத்தியவன்,
“என்ன பண்ணிட்டிருக்கீங்கன்னு தெரியுதா உங்களுக்கு?” எனக் கேட்டான் அடிக்குரலில்.
“பார்த்தா தெரியல?, புடவை செலக்ட் பண்ணிட்டிருக்கேன்”
“எதுக்குன்னு சொன்னாங்களா?”
“என் நிச்சயதார்த்தத்துக்கு”
‘மாப்ள யாருன்னு தெரியுமா’-எனத் தொண்டை வரை வந்து விட்ட வார்த்தைகள், அதைத் தாண்டி வெளி வராது போக,
தன்னை ‘மாப்பிள்ளை’-என்ற பொசிஷனில் நிற்க வைக்க முடியாதுத் தடுமாறிய மனதோடு, சங்கடமாய் பிடரியைக் கோதியவன், அமைதியாகி விட,
புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் நீல நிறப் புடவையொன்றைக் கையிலெடுத்து, “எனக்கு இது புடிச்சிருக்கு! உங்களுக்கு ஓகே வா?” எனக் கேட்டாள்.
அவள் காட்டிய புடவையைப் பார்வையிட்டவன், சற்றுத் தள்ளியிருந்த ஒன்றைக் கைக் காட்டி, “எனக்கு இந்த ரெட்டூ கலர் தான் பிடிச்சிருக்கு” என்றான் முணுமுணுப்பாய்.
அவள் “ரெட் கலர், மேரேஜ்க்கு கட்டிக்கலாம்ன்னு இருக்கேன்! அதனால இப்போ ப்ளூ ஆர் க்ரீன் தான்” – என்றதும், அசந்து போய் அவளை ஒரு பார்வை பார்த்தவன்,
‘மேரேஜா???’ – என உதடசைத்து இடது கையால் வாயை மூடி அதிர்ச்சியை வெளிப்படுத்த,
அவள் அவனைக் கண்டு கொள்ளாது நீல நிறப்புடவையை சேல்ஸ் உமனிடம் நீட்டி, “இதை ட்ரை பண்றேன்” என்றாள்.
அதன் பின்பு நீளக் கண்ணாடியின் முன்பு அவளை நிறுத்தி அந்தப் பெண் புடவையைக் கட்டி விட, மிதமான சிரிப்புடன் கண்ணாடியைப் பார்த்து நின்றிருந்தவளை, நம்ப முடியாது வியப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் சசி.
வீட்டிற்குச் சென்று ரெஃப்ரஷ் ஆகி வந்திருப்பாள் போலும்!, பச்சை நிறக் காலர் வைத்த டாப்பும், பெரிதாய் ஜிமிக்கியும் அணிந்து, முடியைக் குதிரை வாலுக்குள் அடக்கியிருந்தாள். குண்டுக் கண்களில் கருப்பு மையும், இதழ்களில் பிங்க் நிற லிப்ஸ்டிக்கும் பளபளத்துக் கொண்டிருந்தது.
புடவையைக் கட்டி முடித்து அந்தப் பெண் நகர்ந்ததும், இவள் மெல்லத் திரும்பி, அந்த அரை மணி நேரத்தில் முதன்முறையாக அவனை நோக்க,
அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், இப்போது கவனமாய் அவளைத் தவிர்த்து, நாக்கு வரண்டு போய், தொண்டைக்குழி துடிக்க, நேரெதிரே நோக்கியதும்,
முறைப்பாய் அவனைப் பார்த்தவள், கையைக் கட்டிக் கொண்டுக் காண்டாடுடன் அவனையே பார்த்தவாறு நின்றாள்.
அவள் பார்வை உணர்ந்து தலை திருப்பி “ஷ்ஷ்ஷ்” என்றவன், மெல்ல நிமிர்ந்து அவளை நோக்கி, விடைத்த மூக்குடன் அவள் நிற்பதில் பயந்து, சட்டென அவளருகே வந்தான்.
“ஸாரி எப்பிடியிருக்கு?”
“ம்???, ம்ம்ம்ம்” –வெறுமையாய்த் தலையை ஆட்டியவனைக் கண்டு பொறுமை பறி போக,
அவன் அணிந்திருந்த சட்டையின் வயிற்றுப் பகுதியை கொத்தாய்ப் பிடித்திழுத்துத் தன்னருகே வரச் செய்தவள்,
“என்னப் பிரச்சனை உங்களுக்கு?” என்று சீறினாள்.
அவள் செய்கையில் அதிர்ந்து, அவசர,அவசரமாய் சுற்றி,சுற்றி நோக்கியவன், அவள் கையை அழுந்தப் பற்றி, “என்..என்ன பண்றீங்க நீங்க?” எனக் கம்மிப் போன குரலில் கேட்க,
“பின்ன எதுவுமே புரியாத மாதிரி எதுக்கு இவ்ளோ சீன்?, எவனுக்கோ கல்யாணம்ங்குறது போல எனக்கென்னன்னு வேடிக்கை பார்த்துட்டு நிற்குறீங்க?” எனத் திட்டியதும்,
“எனக்கு நிஜமாவே ஒன்னும் புரியலங்க” – என்றான் கலக்கமாய்.
“என்ன புரியல?”
“நீங்களும்,நானும் இப்பிடி நிற்குறது, கல்யாணம்,கல்யாணம்ன்னு நீங்க பேசுறது!, எதுவும் புரியல..!, என்னங்க நடக்குது இங்க?, நீங்க.. நீங்க எப்பிடி ஒத்துக்கிட்டீங்க” – என்றான் தவிப்போடு.
தனக்கு வெகு அருகே தெரிந்த அவன் முகத்தை அசையாது நோக்கிக் கையை விலக்கிக் கொண்டவள், பின் தொண்டையைச் செருமி,
“புரியாட்டிப் பரவாயில்ல!, இந்தப் புடவை எப்பிடியிருக்குன்னு மட்டும் சொல்லுங்க” என்றாள்.
தன் கேள்விகளைத் தவிர்ப்பவளைக் கண்டு தவிப்பு அதிகமாக, கடுப்புடன் அவளை நோக்கி,
“எனக்குப் புடிக்கல” என்றான் அவன் வெடுக்கென.
“அப்டின்னா இதையே ஓகே பண்ண வேண்டியது தான்” – எனக் கூறி நகர்ந்தவளை இயலாமையுடன் நோக்கியவன்,
நீல நிறப் புடவையைத் திருப்பிக் கொடுத்து விட்டு, சுருக்கியப் புருவமும்,விடைத்த மூக்குமாய் நின்று கொண்டே புடவைகளை பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே சென்றான்.
அதுவரை முகத்திலிருந்தப் புன்னகை மறைந்து அவளிதழ்கள் அழுந்த மூடியிருப்பது கண்டு, ஒரு மாதிரியாகி விட, அவள் கோபத்தைக் குறைக்கும் பொருட்டு,
“அ…அந்த ப்ளூவே ஓகே தான்” என்றான் சமாதானமாய்.
“உங்கக் கிட்ட யாரும் சஜஷன் கேட்கல” – என்று தணிந்த குரலில் பொரிந்து விட்டு விறுவிறுவெனப் புடவைகளை விட்டெறிந்து கொண்டிருந்தவளை யோசனையாய்ப் பார்த்தபடி நின்றவன் பின் நினைவு வந்தவனாக,
“உங்கப்பா ஹார்ட் பேஷண்ட்ன்னு சொன்னீங்கள்ல?, அவரு சீரியஸா இருக்குறாரா?” எனக் கேட்டான்.
திரும்பி அவனை எரிச்சலுடன் ஒரு பார்வை பார்த்தவள்,
“வாயைக் கழுவுங்க!, எங்கப்பா ஹார்ட், harley Davidson எஞ்சின் மாதிரி சூப்பர் ஸ்ட்ராங்! இன்னும் 20 வருஷத்துக்காவது அவரு ஹெல்த்தியா இருப்பாரு” எனக் கூற..
“ஓஓ” என்றவன் பின் “உங்கம்மா?” எனத் தொடங்குகையில்,
“ப்ச், எங்கம்மாவுக்கு ஹார்ட்,லிவர்,கிட்னி,ஸ்டமக்,ப்ரைன்னு எல்லா பார்ட்டும் நல்ல்ல்ல்ல்லாயிருக்கு, போதுமா?” என்று அவள் எரிச்சலாய்ப் பதிலளிக்க,
“ஆனா வாய் சரியில்லயேங்க”
“ஹலோ”
“உங்களை எதுவும் வற்புறுத்துறாங்களோ?”
“என்னைப் பார்த்தா, அவங்க வற்புறுத்தலுக்குத் தலையாட்டுற ஆள் மாதிரி தெரியுதா?”
“……..” – வேற என்ன காரணமாயிருக்கும் என்றபடி யோசனைக்குச் சென்று விட்டவனைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்டு,
“புடவை எடுக்குற மூடே போச்சு எனக்கு” என முணுமுணுத்தபடி நகர்ந்தவள் நேரே அன்னைமார்களின் அருகே சென்று நின்று கொண்டாள்.
முகம் சுருங்க வந்து நிற்பவளைக் கண்டு பதை,பதைத்துப் போன விசாலம், மகனைக் கண்ணால் எரிக்க,
“என்னடி?” என்றார் கோகிலா, மகளிடம்.
“அத்தை, உங்க மகன் என்னைக் கடுப்பேத்துனதுல, எனக்குப் புடவை எடுக்குற மூடே போயிருச்சு!, நீங்களாப் பார்த்து எதையாவது செலக்ட் பண்ணுங்க” எனப் போட்டுக் கொடுத்து விட்டு அவள் ஓரமாய் அமர்ந்து விட,
விறுவிறுவென மகனின் அருகே வந்து நின்ற விசாலம்,
“நா..நா…நான் எதுவும் பண்ணலம்மா” என அப்பாவியாய் விழித்து நின்றவனிடம்,
“நீ வாயை மூட்றா” என்று கொதித்து, “நீ மட்டும் இவளைக் கட்டிக்கிறதுக்கு ஒத்துக்கல, இப்பவே இந்தக் கடைலயே, நான் தூக்குப் போட்டுத் தொங்குவேன்” என்று பொங்க,
“ப்ச், ம்மாஆஆ” என எரிச்சலானவனிடம்,
“அழகு பெத்த புள்ள, அதுவே இறங்கி வந்து.. உன் மொகரையைக் கட்டிக்குறேன்னு ஒத்துக்கிருச்சு! உனக்கென்னா டா அவ்ளோ பவுசு?, இப்ப சொல்றேன் கேட்டுக்க டா!, இவளை விட்டா, உன்னைக் கட்டிக்க ஒருத்தியும் கிடையாது உலகத்துல! நல்லாத் தெரிஞ்சுக்க!, ஆளும், மண்டையும் பாரு! என் தப்பு டா!, உனக்குப் போய் இம்புட்டு அழகான புள்ளையைப் பார்த்தேன்ல?, என்னைச் சொல்லனும்” – என்று விசாலம், மகன் என்றும் பாராது, விடாமல் வசை மழை பொழிய,
‘இந்தம்மாவுக்கு அவளே பெட்டர்’ எனக் காதைச் சொரிந்தபடி அவளருகே சென்றவன், மகளது முகத்தைக் கலக்கமாய்ப் பார்த்து நின்றிருந்த கோகிலாவிடம்,
“அங்க ஒன்னும் சரியில்லத்தை! இங்க பார்க்குறோம்” எனத் தயக்கமாய்க் கூற
பளிச்செனப் புன்னகைத்த கோகிலா, “பாரு கண்ணு பாரு! நல்லாப் பாரு” என்று விட்டு “நாங்க அங்க உட்கார்ந்திருக்கிறோம்!, நீ பார்த்து முடிச்சிட்டுக் கூப்பிடு” எனக் கூறி நகர்ந்து சென்றார்.
அவர் நகர்ந்ததும், நேராய்ப் பார்த்தபடி கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் நாற்காலியை புடவைகளின் பக்கம் திருப்பி விட்டுத் தானும் அவளருகே அமர்ந்தான் சசி.
சேல்ஸ் மேன் எடுத்துப் போட்டப் புடவைகளில் தனக்குப் பிடித்ததை ஒவ்வொன்றாக அவள் புறம் வைத்தபடி, அவள் முகத்தை,முகத்தைப் பார்த்தவன்,
அவள் முழுக் கோபத்தில் அமர்ந்திருப்பது கண்டுத் தயங்கியவாறு,
“ஆஃபிஸ்ல உட்கார்ந்து வேலை செஞ்சிட்டிருந்தவனைத் திடீர்ன்னு ஃபோன் பண்ணி, இப்பிடி,இப்பிடின்னு சொல்லி புடவை எடுக்கிறோம் வா-ன்னு கூப்பிட்டா, நான் என்னங்க நினைக்குறது?” என்றான்.
“நீங்க வேற என்னைப் பார்த்தாலே காண்டாவீங்க!,
இன்னைக்குக் காலைல வரை பிடிக்கல,விருப்பமில்லை அப்பிடி,இப்பிடின்னு மூஞ்சி மேலயே சொல்லிட்டிருந்தீங்க!,
இங்க உங்களைப் பார்க்கவும் ரொம்ப ஷாக் ஆகியிடுச்சுங்க!
அதான் உங்களை யாரும் வற்புறுத்துறாங்களோன்னு.. அப்பிடிக் கேட்டேன்!”
-தான் இத்தனை பேசியதற்கும் அவள் பதிலளிக்காமல் அமைதியாய் அமர்ந்திருப்பது கண்டு, ஒரு பச்சை நிறப் புடவையை எடுத்து நீட்டி,
“இது ஓகேங்களா?” என்றான் மெல்ல.
அவள் அதற்கும் பதிலளிக்கவில்லையென்றதும், சேல்ஸ் மேனிடம் அதை நீட்டி, “இதை ட்ரை பண்ணனும்” என்றான்.
அதன் பின் மீண்டும் கண்ணாடியின் முன்பு அவளை நிறுத்தி, சேல்ஸ் வுமன் புடவையைக் கட்டி விட்டு விலகியதும், அதுவரை கைக்கட்டி அவளைப் பார்த்திருந்தவன், “ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமியபடி அவளருகே சென்று நின்றான்.
அவனைக் கண்டு கொள்ளாது, கண்ணாடியைப் பார்த்திருந்தவளை மேலிருந்து கீழ் வரை நோக்கி,
அவளைப் பாந்தமாய்த் தழுவியிருந்தக் கிளிப்பச்சை நிறப் புடவையைக் கடந்து மெல்ல அவள் முகம் பார்த்தான் அவன்.
வெற்று நெற்றியை,நீண்டிருந்த இமைகளை,மின்னிய மூக்குத்தியை, கோபத்தில் இறுகியிருந்த இதழ்களைத் திருட்டுத்தனத்தோடுத் திணறலாய் நோக்கிக் கொண்டிருந்தவனின் விழிகளில் தென்பட்ட பாவனைகளைக் கண்ணாடியில் பார்த்தபடி நின்றிருந்தாள் சக்தி.
கொஞ்சம் ஆசை!
கொஞ்சம் ஏக்கம்!
அதிகத் தயக்கம்!
அதைத் தாண்டிய மயக்கம்! – என அநியாயத்திற்கு எக்குத்தப்பான எக்ஸ்ப்ரஷன்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அவன் முகம் கண்டு புன்னகையில் துடித்த இதழ்களையும், கதகதத்தக் கன்னத்தையும் மறைக்க முடியாது படபடத்த இமைகளுடன் அலைபாய்ந்தவள், விருட்டென அவன் புறம் திரும்ப…
தன்னை உரசி நின்றவளின் நெருக்கத்தில் திணறி, அனிச்சையாய் இரண்டடி பின்னே நகர்ந்தவனிடம்,
“நான் இதையே ஓகே பண்றேன்” என்று முணுமுணுத்து விட்டு அவள் விலகிச் செல்ல, எகிறிக் குதித்து வெளியே வரத் துடித்த இதயத்தின் ஆரவாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது, மூச்சுக்குத் தவித்து நின்றான் சசி.
அதன் பிறகு நான்கு நாட்கள் வர்க் ஃப்ரம் ஹோம் என்ற பெயரில் அவன் கண்களில் அகப்படாது, அலைபேசியிலும் உரையாடாது ஆட்டம் காட்டியவளின் மீது கொலைக்காண்டிலிருந்தான் சசிதரன்.
வாட்ஸ் ஆப்-பில் அவன் அனுப்பிய ஹாய் ஒன்று கூட டெலிவர் ஆகவில்லை!
இவன் அனுப்புவான் எனத் தெரிந்தே வாட்ஸ்-ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்திருந்தாள் போலும்!
ஃபேஸ்புக்,இன்ஸ்டா என எதிலும் அவளைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.
அவன் செய்த ஃபோன் கால்கள், ஆஃபிஸ் மெசெஞ்சரில் அவன் அனுப்பிய ஹாய் என அத்தனையும் ‘went unanswered’.
வேலை தொடர்பான பேச்சுக்கள் தவிர வேறு எந்தவிதத்திலும் அவனுடன் உரையாடவில்லை அவள்.
மூன்றாம் நாள் காலை ஆர்வமற்று அலுவலகத்தில் நுழைந்தவனின் கண்கள்.. தன்னைப் போல் அவள் டெஸ்க்கிற்கு செல்ல, அங்கு அவளது தோள்ப்பை இருப்பது கண்டு, அதுவரையிருந்த சோர்வு மறைந்து கண்களும்,உடலும் புத்துணர்ச்சி பெற்றதில் குதூகலமாகி, பரபரப்புடன் தன் டெஸ்க்கில் வந்து நின்றவன், நாற்புறமும் அவளைத் தேடினான்.
ஷர்வாணி,வேஷ்டி சட்டையில் சில ஆண்களும், சேலை, சுடிதார் எனப் பெண்களும் ட்ரெடிஷனல் உடைகளில் திரிவதைப் பார்த்திருந்தவனிடம்,
“ஏன் டா அப்பிடிப் பார்க்குற?, இன்னைக்கு தீபாவளி ஸ்பெஷல் டா சசி!, அடுத்த வாரம் தீபாவளிக்கு பூராப் பயலும் ஊருக்குப் போயிருவாய்ங்கன்னு இப்பவே செலிப்ரேஷன்” – என்று அலெக்ஸ் கூற,
“ஓ” – எனத் தலையாட்டிக் கொண்டிருந்தவன்,
“பவி, எனக்கும் ஒரு காஃபி” – எனச் சத்தமாய் ஒலித்த சக்தியின் குரல் கேட்டுப் பட்டெனத் திரும்பினான்.
கருப்பு பார்டர் வைத்த வெள்ளை நிறக் காட்டன் புடவை அணிந்திருந்தாள். ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ்!, ஒற்றையாய் வழிந்த முந்தானை லாவகமாய் அவள் கைக்குள் அடங்கியிருந்தது. கருப்பாய் ஒரு ஜிமிக்கி, அதற்குத் தோதாய் நீளமாகப் பாசிமணியொன்று மார்பில் தொங்கிக் கொண்டிருந்தது. தலைமுடியைக் கொண்டையாக்கி, அதில் பூவை வேறு சுற்றியிருந்தாள்.
ஹீல்ஸ் சப்தம் ஒலிக்க நடந்து வருபவளின் அசரடிக்கும் அழகில் சொக்கித் தடுமாறி, நாற்காலியைப் பிடித்து நின்றவனை மெல்ல நிமிர்ந்து பார்த்து,
ஆஆஆ-வெனத் தன்னையே நோக்கிக் கொண்டிருப்பவனின் பார்வையில், கன்னம் தொடங்கிக் காது மடல் வரை சிவக்கச் செய்து சிதறித் தெறித்த வெட்கத்தை அவனறியாது அள்ளிக் கொள்ள முயன்று, முடியாமல், துடித்த இதழ்களில் புன்னகை வழிய தன் டெஸ்க்கருகே வந்து நின்றாள் சக்தி.
“என்ன?” – புன்னகையை அடக்கிப் புருவம் உயர்த்திக் கேட்டவளின் பாவனையில், இமை தட்டி விழித்துப் பின் அசடு வழிய பிடரியைக் கோதி,
“ஒ..ஒன்னுமில்ல” என்றான் சசி.
அதுவரை இருவரையும் ஆர்வமாய் வேடிக்கை பார்த்து நின்றிருந்த அலெக்ஸ்,
“என்ன ரெட்டூ மூக்குத்தி, மனசுல நயன்தாரா-ன்னு நினைப்போ?” – எனக் கேட்டதும்,
அவள் பதில் சொல்வதற்குள் இடை புகுந்த சசி,
“நயன்தாரா இல்ல ப்ரோ” என்று முணுமுணுத்து,
“வண்ணப் பூங்காவனம், சின்ன பிருந்தாவனம்ன்னு ஆடும்ல ஒரு ஹீரோயின்?” – எனக் கேட்டான்.
“மோகினியா டா?”
“ஹான்! மோகினி, மோகினி தான் ப்ரோ” – என்று அவன் கூறியதும்,
“ச்ச, மோகினிக்குப் பூனைக் கண்ணு டா” – என அலெக்ஸ் பதிலளிப்பதும்,
“அது மட்டும் தான் மிஸ்ஸிங்” – என்று இவன் முணுமுணுப்பதும், பின்பு இருவரும் ஒரு சேரத் தன் முகம் பார்த்து அளவிடுவதையும் கண்டு கடுப்பாகி,
“பேசாம போறீங்களா?,இல்ல, மூஞ்சில காஃபியை ஊத்தி விடவா?” என்று அவள் மிரட்டியதும்,
“இது மூஞ்சியாப் பார்த்தா டா மோகினிங்குற?” – எனக் கூறியபடி சசியின் தோளில் கைப்போட்டு அலெக்ஸ் இழுத்துச் செல்ல,
திரும்பித் திரும்பி அவளைப் பார்த்து, “மோகினி தான் ப்ரோ” – என்றபடியே சசி கூறிச் செல்வது கண்டு சிரிப்புடன் தலையசைத்து லாப்டாப்பின் புறம் திரும்பினாள் சக்தி.
அதன் பின்பு டெய்லி கால்-ல் டீம் பிஸியாகி விட, ஒரு வாய்க் காஃபியைப் பருகுவதும், பின்பு கீபோர்டில் எதுவோ டைப் செய்வதுமாய் இருந்த சக்தி, பவி கேட்ட கேள்விக்கு எட்டிப் பதிலளித்தபடிப் பரபரப்புடன் இருப்பதை பார்வையில் தொடர்ந்தபடி அமர்ந்திருந்த சசியை,
கால்-ல் ஸ்டீவ், “சசி” என்றழைத்த்தார்.
அவன் பதிலளிக்காது போனதும்,
“சசி, ஆர் யூ தேர்?” என அவர் மறுபடி அழைப்பதைக் கண்டு, அருகிலமர்ந்திருந்த அனைவரும் அவனைத் திரும்பப் பார்க்க,
அவனோ, ரிதமாக மௌஸை ஆட்டியபடி எதிரிலிருந்தவளையே பார்த்திருந்தான்.
எட்டி அவனை நோக்கிய சக்தி, அவன் பார்வை கண்டு தலையிலடித்துக் கொண்டு காதைக் காட்டி செய்கை செய்தும், அவன் அசையாது அமர்ந்திருக்க,
“டேய்ய் சசி….” என சுந்தரும்,அலெக்ஸூம் அதட்டியதும் பட்டென இமை தட்டி விழித்தவன்,
“ஹான் ஆ..ஆன்” எனத் திணறுகையில்,
“ஸ்டீவ் உங்களைக் கேட்குறாரு” – எனக் கலவரமான குரலில் சக்தி கத்திக் கூறியதும், அதிர்ந்து அவசரமாய் அன் ம்யூட் செய்து, “ஸாரி ஸ்டீவ். ஐ வாஸ் ஆன் ம்யூட்” என்றவன் வேலை குறித்து அவர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதிலை மறந்துப் பின் திக்கித் திணறி எப்படியோ பேசிச் சமாளித்து,
“என்னடா ஆச்சு உனக்கு?,
லூசா டா நீ?” எனத் திட்டிச் சென்ற அலெக்ஸிடமும்,சுந்தரிடமும் பதிலளிக்க முடியாது, சங்கடத்துடன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
அவன் முகத்தில் வந்து போகும் பாவனைகளைத் தன்னிருக்கையில் அமர்ந்தபடி வியப்பாய்ப் பார்த்திருந்தவளைக் கண்டு “ஷ்ஷ்ஷ்”-எனக் குனிந்தமர்ந்தவன் பின் மெல்ல எட்டி அவளை நோக்க,
“என்ன பிரச்சனை உங்களுக்கு?” – என்றாள் அவள் மெல்லிய குரலில்.
“நீங்க தான்” – என்றான் அவன் பதிலுக்கு.
“நான் என்ன பண்ணேன்?”
“பேசவே மாட்டேங்குறீங்க?” – முகம் சுணங்கக் கேட்டவனுக்கு,
“அதான், எனக்கும் சேர்த்து நீங்க பேசுறீங்களே” – என முறைப்பாய்ப் பதில் கூறினாள் அவள்.
“ப்ச்” – என பிடரியைத் தேய்த்தவன்,
“சாரி சொல்லட்டா” எனக் கேட்டான் சமாதானமாய்.
“ஒன்னும் தேவையில்ல”
“பின்ன?” – என்றவனுக்குப் பதிலளிக்காது அவள் உதட்டைச் சுழித்துப் புருவத்தை உயர்த்தி பிகு பண்ணிக் கொள்ள, மெலிதாய்ப் பூத்த புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தவனின் கைப் பற்றி எழுப்பி,
“அப்புறமா சைட் அடிப்ப!, இப்ப வா.. டீ அடிச்சிட்டு வருவோம்” – என இழுத்துச் சென்றான் அலெக்ஸ்.
ரெஸ்ட் ரூமுக்குச் சென்றுக் கடமையை முடித்து விட்டு இருவரும் பான்ட்ரிக்கு வருகையில் காஃபி வெண்டிங் மிஷின் அருகே நின்றிருந்த சக்தி, எதிரே ஜன்னலில் சாய்ந்திருந்த பவித்ராவுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு டீ கலக்கு டா சசி” – என்ற அலெக்ஸ், நண்பனைத் தொந்தரவு செய்யாது பவித்ராவுடன் ஐக்கியமாகி விட,
“ரெண்டு பேருக்கும் செட் ஆகிடுச்சாண்ணா?” – என்று பவித்ரா கேட்பதையும்,
“அப்பிடித் தான் நினைக்குறேன்” – என்று அலெக்ஸ் பதிலளிப்பதையும் கேட்டபடி, அவளருகே நின்று கொண்டு 2 கப்களைக் கையிலெடுத்த சசி, அவளைப் பார்த்தபடியே சக்கரை,காபி பவுடர் என கப்-களை நிரப்ப,
அவனை நிமிர்ந்து நோக்கியவள், அவனது பார்வையில் மீண்டும் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாது தோள் குலுங்கப் புன்னகைத்தபடியே, காஃபியைக் கலக்க..
சில்லென்ற அவள் சிரிப்பு, நெஞ்சை குளிரச் செய்ததில்,
“குற்றாலம் தேவையில்ல, நீ சிரிச்சா சாரல் வரும்” – என்று அவன் முணுமுணுத்ததும்,
வெகு நாளைக்குப் பிறகு அவன் அவிழ்த்து விடும் பாட்டைக் கேட்டு மேலும் புன்னகைத்து, சிவந்துத் திணறும் முகத்தை மறைத்து பவித்ராவிடம் சென்று நின்றாள் சக்தி.
இவனும் அலெக்ஸ் அருகே வந்து நின்றதும்,
“நீ இந்தப்பக்கம் வா டா, அப்ப தான் வசதியா இருக்கும்” – என்று தன்னை இடம் மாற்றி விட்ட நண்பனை,
“ப்ரோஓஓ..” என்று அவன் நன்றியுடன் பார்க்க..
“நல்லாயிர்றா, நல்லாயிர்றா!” என்று வாழ்த்தியவனைக் கண்டு சிரித்தபடி காஃபியை வாயில் வைத்தவன், எதேச்சையாய் எதிரிலிருந்தவளை நோக்கி,
பின் கண்ட காட்சியில் விழிகளைப் பெரிதாய் விரித்துப் புரையேறி லொக்,லொக் என இருமினான்.
“என்னா டா?” – என்ற அலெக்ஸைப் பொருட்படுத்தாது, இருமியபடியே நான்கடித் தள்ளிச் சென்றவன்,
கடந்து சென்ற கணம் கொடுத்தக் கனம் தாங்காது, நெஞ்சை நீவியபடி, எச்சில் விழுங்கி, மூச்சு வாங்க நின்றான்.
ஒரு நொடி தான், ஒரே நொடி தானென்றாலும், மைதானமாய்ப் பரந்து,விரிந்திருந்த அவளது பளீர் முதுகைக் கண்டு, பரிதவித்துப் போன இதயம், ஒரு நொடி தன் துடிப்பை நிறுத்திப் பின் அதிவேகமாக அடித்துக் கொள்ள, அதன் மோகினியாட்டத்தைத் தாங்க முடியாது, நா வரள, இன்னமும் இருமியவனின் அருகே வந்த சக்தி,
கையை உயர்த்தி அவன் தலையில் தட்ட வர, அவள் செய்கையில் அதிர்ந்து, அவசரமாய் அவள் தொடுகையிலிருந்துத் தன்னைக் காத்துக் கொள்ளப் பின்னால் தலை சாய்த்தவன்,
‘வேணாம் வேணாம்’ என சைகை செய்தபடி மேலும் நகர்ந்து சென்று அலெக்ஸை இடித்து நின்றான்.
‘என்னாச்சு இவனுக்கு’ எனக் குழம்பி நின்றவளை நிமிர்ந்தும் பாராது, காஃபி கப்பை நண்பனின் கையில் திணித்து விட்டு அவன் ஓட்டமாய் ஓடிச் சென்று விட, அலெக்ஸூம்,பவித்ராவும் ஒருவரையொருவர் பார்த்துத் தோளைக் குலுக்கிக் கொண்டனர்.
அதன் பின்பு அவனை கேவலமாய்ப் பார்த்தபடித் தன் இருக்கைக்கு வந்தமர்ந்த சக்தியை இமை உயர்த்தி லேசாய்ப் பார்த்து விட்டு அவன் மெல்லக் கழுத்தைத் தேய்த்துக் கொள்ள,
“பைத்தியமா இவன்” – என்று முகத்தைச் சுருக்கி உதட்டை கோணி விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தாள் அவள்.
அவளைப் பார்ப்பதும், லாப்டாப்பைப் பார்ப்பதுமாய் விளையாடிக் கொண்டிருந்தவனின் செய்கையில் அவள் எரிச்சலுறுவதைக் கண்டு, அவசரமாய்ப் பார்வையைத் திருப்பியவன்,
தன் டெஸ்க்கில் நின்றபடி வாய்க்குள் தண்ணீரைச் சரித்துக் கொண்டிருந்த ரவி, அவளது பரந்து விரிந்த மைதானத்தை, வைத்தகண் வாங்காது பார்ப்பது கண்டு, சுறுசுறுவென எழுந்த கோபத்தில், அனிச்சையாய் எழுந்து சக்தியின் டெஸ்க்கிற்குச் சென்றான்.
அவன் எழுந்ததும் நிமிர்ந்தவள், அவன் விறுவிறுவென நடந்து தன்னை நோக்கி வருவது கண்டுப் புருவம் நெரிக்கையில், அவளருகே நெருங்கி, இருபுறமும், அணையிட்டு, பின்னிருந்து மொத்தமாய் அவள் மீது சாய்ந்து நின்றவன்,
“க்ளைண்ட் மெய்ல் பாக்ஸ் வர்க் ஆகுதா?” எனக் கேட்டபடி அவளது மௌஸைப் பறித்துக் கொள்ள,
அவன் மார்பில் பதியும் தன் முதுகை உணர்ந்து அதிர்ந்து, வேகமாய் முன்னே சாய்ந்து, பக்கவாட்டில் திரும்பி அவன் முகத்தை நோக்கியவள்,
“என்ன பண்றீங்க நீங்க?, ஹராஸ்மெண்ட் கேஸ்ல உள்ள போகப் போறீங்க” எனப் பல்லைக் கடிக்க,
“பரவாயில்ல” என்றவன் தொடர்ந்து, “நான் ஒன்னு சொல்லட்டா?” என்றான்.
“தாராளமா சொல்லுங்க! ஆனா தள்ளி நின்னு சொல்லுங்க” – எச்சரித்தவளைக் கண்டு கொள்ளாது,
“நான் பொண்ணுங்க க்ளாமரா டிரெஸ் பண்ணிக்கிறதை எதிர்க்குற ஆள் கிடையாது” என்றான்.
“நீ யாருய்யா எதிர்க்குறதுக்கு?, ப்ச், எதுவா இருந்தாலும் நேரா சொல்லு”
“ஆனாலும், இந்த ரவி மாதிரி பசங்க வெறிச்சு,வெறிச்சுப் பார்க்குறதைப் பார்க்கும் போது தான்.. லை…ட்…ஆ” என்றவன் சொல்ல வந்ததை முழுதாக சொல்லாது விட,
கேள்வியாய் அவனைப் பார்த்தவளுக்குப் பதில் கூறாது, அவன் தன் புருவம் உயர்த்தி அவள் முதுகை நோக்கிக் கண்ணைக் காட்ட,
புரிந்து கொண்டதும் மூக்கை விடைத்தவள், கடித்தப் பற்களுடன் முறைத்துப் பார்த்தபடி, டக்கெனக் கூந்தலை அவிழ்த்து முதுகில் படர விட்டதை,
விழி விரியப் பார்த்தவன், “அ..அவங்க பார்க்குறது தான் சரியில்லன்னு சொன்னேன்!, ஆனா.. நா..நான் இன்னும் சரியா பார்க்கலங்க! அதுக்குள்ள… இ..ப்…பி..டி” என்றவனை மூச்சு வாங்க நோக்கியவள்,
தன் முட்டியைக் கொண்டு அவன் விலாவை இடித்து “உனக்கெல்லாம் காட்ட முடியாது போய்யா” என்று விரட்டியதும்,
“ச்சு” என உச்சு கொட்டித் தன்னிருக்கைக்கு வந்தமர்ந்தான் சசி.
‘ரொம்பத் தான் ஓவராப் போறான் லொடுக்கு பாண்டி!’
அதன் பிறகு சுந்தர் எழுந்து, “கைஸ்!, தீபாவளியை செலிப்ரேட் பண்றதுக்காக சின்னதா ஒரு கேக் கட்டிங் வைச்சுக்கலாம்ன்னு நினைச்சிருக்கோம்!, 4 ஓ க்ளாக் எல்லாரும் காஃபடீரியாக்கு வந்துடுங்க” – எனக் கூற,
“சின்ன கேக்-ன்னா எப்பிடி சுந்தர் பத்தும்?” – அலெக்ஸ்.
“இந்தக் காமெடிக்கு நான் அடுத்த தீபாவளிக்கு சிரிக்குறேன்” – முறைப்பாய் அவர் அமர்ந்ததும், அடுத்த சில மணி நேரங்கள், பண்டிகை குறித்த பேச்சுடன் தொடர,
மூன்று மணிக்கே சசியுடன் எழுந்த அலெக்ஸ்,
“ஜூனியர் புள்ளைங்களா,, போய் கேக் வாங்கிட்டு வாங்க” எனப் பத்தி விட்டதும்,
மூன்றரை மணி வாக்கில் மொட்டை மாடியிலிருந்த ஓபன் காஃபடீரியாவிற்கு வந்து சேர்ந்தனர் பவியும்,சக்தியும்.
“ஏய், நான் சொன்ன மாதிரி ஐரிஷ் காஃபி ஃப்ளேவர் வாங்குனியா?” எனக் கேட்ட அலெக்ஸைக் கண்டு கொள்ளாது, தன்னிடம் கை நீட்டிய சசியிடம் கேக்கைக் கொடுத்தாள் சக்தி.
“தங்கச்சி, சேர்ஸ் அரேஞ்ச் பண்ண அண்ணனுக்கு ஹெல்ப் பண்ணு, வா” – என அலெக்ஸ் அழைத்ததும், பவி அவனுடன் நகர்ந்து விட,
டேபிள் மீது சசி வைத்த கேக்கைப் பொறுமையாக டப்பாவிலிருந்து வெளியிலெடுத்துக் கொண்டிருந்தாள் சக்தி.
அவள் செய்கையைக் கவனித்தவாறு, கத்தி,கேண்டில்கள் அடங்கிய பாக்கெட்டைத் தூக்கி வந்தவன், அவள் பின்னே நின்றபடி,
“சலக்கு சலக்கு சேலை அதைக் கட்டிக்கிட்டாளே..” என முணுமுணுத்துச் செல்ல,
‘ஆரம்பிச்சுட்டான்ய்யா’ – என்றபடி சலிப்பாய்த் தலையசைத்து, செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தவள்,
அடித்துப் பெய்த மழைக்குத் தோதாய் வேகமாக வீசிக் கொண்டிருந்த குளிர்க் காற்று விரிந்திருந்த கூந்தலை தொந்தரவு செய்வது கண்டு, எரிச்சலுற்றவாறு, பர்ஸிலிருந்த க்ளட்ச் க்ளிப்பை எடுத்துத் தலையில் மாட்டச் சென்றாள்.
கையைத் தூக்க எத்தனித்தவள் ஒரு நொடி நிதானித்து, தன்னையே ஆர்வம் பொங்கும் விழிகளுடன் பார்த்தபடி எதிரில் நிற்பவனைக் கண்டு முறைத்துத் திரும்பி நின்று க்ளிப்பை மாட்டிக் கொள்ள,
ஏமாற்றத்தில் உதட்டைப் பிதுக்கியவன்,
“என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியுதா உங்களுக்கு?” என்றான்.
“பொறுக்கி மாதிரி இல்ல! பொறுக்கியே தான்! நீ எப்பிடி பார்ப்ப, எங்க பார்ப்ப-ன்னு எனக்குத் தெரியாதாய்யா?”
-கையைக் கட்டிக் கொண்டு அவள் நக்கலாய்க் கேட்டதும், “ம்க்கும்” எனப் பிடரியைக் கோதியவன்,
“இ…இப்போல்லாம் நான் மெட்ரோ ட்ரெயின்ல போறதே இல்லங்க” என்று வாக்குமூலம் கொடுக்க,
“நம்பிட்டேன்” என்றவள், “இந்தக் கவரை கொண்டு போய் பின்-ல போடுங்க” என்றதும், டேபிளைச் சுற்றிக் கொண்டு அவளருகே வந்து நின்றவன்,
“ரசிக்க வந்த ரசிகனின்.. விழிகளை மூடாதே” – என புலம்பிச் செல்ல,
“ஷ்ஷ்ஷ்ஷ்”-எனத் நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள் சக்தி.
பாட்டு பாடியே கொல்றானே!
அவள் சொன்னதைச் செய்து விட்டுத் திரும்பி அவளருகே வந்து நின்றவனிடம்,
“இந்த டேபிளைக் கொஞ்சம் செண்டருக்கு நகட்டுவோமா?, அந்தப்பக்கம் பிடிங்க” என்றதும், சென்று நின்றவன், அவளோடு சேர்ந்துத் தூக்கியபடி,
‘அடி நேந்திக்கிட்டேன், நேந்திக்கிட்டேன் நெய் விளக்கு ஏத்தி வைச்சு..
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க..’ – என்றதும் பட்டென டேபிளை விட்ட சக்தி,
“உங்க பார்வை,பாட்டு எதுவும் சரியில்ல! போங்க அந்தப் பக்கம்! போங்க” என விரட்ட,
‘மாட்டேன்’ என்பது போல் தலையசைத்தவன், டேபிளில் சாய்ந்து நின்று, கையைக் கட்டிக் கொண்டுத் தலை சாய்த்து, டன்,டன்னாய் வழிந்தபடி அவளையே நோக்கினான்.
“அப்பிடி என்னடா சசி, அவளையே சுத்தி,சுத்தி வந்து குசு,குசுன்னு பேசிட்டே இருக்க?” – எனக் கேட்டவாறு சுந்தர் அருகே வரவும், அவசரமாய்ப் பார்வையை மாற்றி அவளை விட்டு விலகி நின்றவன்,
“அ…அ..அது… புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?, அர்ஜூன் அம்மா யாரு?, இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் தெரியுமான்னு கேட்டுட்டிருந்தேன் சுந்தர்” எனக் கூற,
“2K kid-க்கு எப்பிட்றா புள்ளி ராஜாவைப் பத்தி தெரியும்?” என்று சிரித்த சுந்தரைக் கண்டு,
“புள்ளி ராஜாவா, அது யாரு?” – எனக் கேட்டபடி, சலசலவெனப் பேசிக் கொண்டு, பொது,பொதுவென வந்து நின்றனர் டீம் மக்கள்!
அதன் பிறகு “ஹாப்பி தீவாளி” எனக் கத்தியபடி, அலெக்ஸூம்,சசியும் கேக் கட் செய்ய, அந்தப் பெரிய கேக்கை நேர்த்தியாகத் துண்டிட்டு, ஒவ்வொரு துண்டுகளையும் பேப்பர் ப்ளேட்டில் அடுக்கிக் கொண்டிருந்தாள் சக்தி.
மழைக் காற்றில் ஜிமிக்கி ஆட, புன்னகை முகத்துடன் ஜில்லென நின்றவளைக் கண்டவாறு, கேக்கை விழுங்கிய சசியிடம்,
“டேய் சசி, அடுத்து என்ன ப்ளான் டா?” எனக் கேட்டார் சுந்தர்.
“மிச்சர்,கிச்சரெல்லாம் கிடையாதா சுந்தர்?, வெறும் கேக் மட்டும் தர்றீங்க?” – குறை கூறியபடி பரத்.
“அதெல்லாம் உன் சொந்தக் காசுல வாங்கித் தின்னு டா நாயே” -அலெக்ஸ்
“சசி, சொல்லுடா” – சுந்தர்.
“கேம் ஆடலாம்” - சசி
“என்ன கேம்?”
“அதை நான் சொல்றேன்” – என்ற அலெக்ஸ்,
“பேச்சு வார்த்தைகளோட வர்ற சில சினிமா பாடல்களை நாங்க தேர்ந்தெடுத்து வைச்சிருக்கோம்!, நீங்கள்லாம் ஜோடி ஜோடியா வந்து வார்த்தைகளை ஒருத்தரும், பாட்டை இன்னொருத்தரும் பாடிக் காட்டனும், பாட்டுல வர்ற ஆக்டர்ஸ் கொடுக்குற அதே எக்ஸ்ப்ரஷன்களோட” என்றான்.
“ஃபார் எக்ஸாம்பிள்??” – சக்தி.
“ஃபார் எக்ஸாம்பிள் இப்ப நான் ‘அப்பிடிப் பார்க்குறதுன்னா… வேணா…’ அப்டின்னு சௌந்தர்யா மாதிரி பாடுனா, இவன் பதிலுக்கு பார்த்திபன் மாதிரி, ‘வேற என்ன தான் டி வேணும், பீடியா?” அப்டின்னு கேட்பான்” – என்று சசி கூறியதும்,
ஹாஹாஹாவென சிரித்த மக்கள், “ஏ, நல்லாருக்கு டா, நல்லாருக்கு டா” என்று குதிக்க,
“உங்களுக்கு யாரு ஜோடியா வேணும்ங்றதை நீங்களே செலக்ட் பண்ணிக்கலாம்” என்ற அலெக்ஸ்..
“முதல்ல யாரைக் கூப்பிடலாம் ப்ரோ?” என்றான் சசியிடம்.
“பஸ்ட் ஜூசு மாதிரி! ஃபர்ஸ்ட் நம்ம தல தான்!, சுந்தர் வாங்க வாங்க!” – சசி அழைத்ததும்,
“டேய் ஏன் டா டேய்..” – என முறுவலித்தபடி வந்து நின்ற சுந்தரிடம், டப்பா ஒன்றை நீட்டினர் இருவரும்.
டப்பாவில் சுருட்டிப் போடப் பட்டிருந்த காகிதங்களில் ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்து “நல்ல பாட்டு டா” என்றவரிடம்,
“உங்களுக்கு ஜோடியா யாரு வேணும்?” என்றான் அலெக்ஸ்.
“எனக்கு ஜோடியா.. ஹ்ம்ம்ம்” என யோசித்த சுந்தர் பின்” இன்னைக்கு எல்லார்க் கண்ணையும் கவர்ந்திழுத்திட்டு இருக்குற சக்தியை நான் ஜோடியா அழைக்கிறேன்” – என்றதும்,
“ஹேஏஏஏஏஏ” – என அனைவரும் கத்தியதில், “ஷ்ஷ்ஷ்ஷ்”-என நாக்கைக் கடித்து சங்கடமாய் முறுவலித்தபடி எழுந்து வந்த சக்தியிடம், அவர் காகிதத்தை நீட்ட,
“டயலாக் நான் சொல்றேன், நீங்க பாடுங்க” என்றாள் சக்தி.
“ஓகே, ஸ்டார்ட்” – என்று அலெக்ஸ் கூறியதும், சக்தி, காகிதத்தை ஒரு முறை பார்த்து விட்டு,
“படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் கதையால்ல இருக்கு!, பிழைக்குன்னு எழுதலயே! மழைக்குன்னு தான எழுதியிருக்கேன்?” – என நடிகை கஸ்தூரியைப் போல் கேட்டதும்,
அதற்கு சுந்தர் நடிகர் பிரபுவைப் பிரதிபலித்து, “ஓஹோஓஓஓ” எனச் சிரித்து,
“மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கு வருவதில்லை” – எனப் பாடியதும்,
சிரிப்புடன் கைத்தட்டி ஆர்ப்பரித்தது கூட்டம்.
“அடுத்து பரத் நீ வாடா” – என்று அலெக்ஸ் அழைத்ததும், வந்தவன் பவித்ராவை ஜோடியாக அழைக்க, இருவரும் சேர்ந்து ஒரு காகிதத்தை எடுத்துப் பிரித்தனர்.
“லிரிக்ஸ் ரொம்ப லெங்க்த்தா இருக்கு டா” என்ற பரத், காகிதத்தைப் பார்த்தபடியே,
“எட்டி எட்டிச் செல்லும் வெட்டும் பார்வை கொண்டு..
சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது?” – என நடிகர் பிரபுவைப் போல் ஏக்கம் தெறித்தக் குரலில் பாட,
“ம்ம்ம், சிற்றிளம் பூவு ஆட்டோ தேடுது, டாக்ஸி தேடுது, இன்னொரு ஜோடிக்கு ஆளைக் கூடத் தேடும்” – என்று பவித்ரா கோபமாய் நடிகை ரஞ்சிதாவைப் போல் கூற,
“சொல் ஏனிப்படி, ஏன் அம்மணி… நாடகம்….” – என்று பாடி பரத் முடிக்க,
“வாஆஆவ்வ்வ் நைஸ் சாங் டா!” – என்று சசியும் அலெக்ஸூம் கைத்தட்ட, இருவரும் குனிந்து, வணக்கம் வைத்துத் தங்கள் இடத்திற்குச் சென்றனர்.
“அடுத்த சீட்டு நான் தான் எடுப்பேன்!, எடுத்து பாட்டுக்கு ஏத்த மாதிரி ஆளைக் கூப்பிடுவேன்” – என்ற சசி, டப்பாவிலிருந்து சீட்டு ஒன்றை எடுத்து,
“டேய்ய் குமார், தலைவர் ரசிகனே! உனக்கேத்த பாட்டு டா இது!, வாடா வாடா” என்றழைக்க,
சிரித்துக் கொண்டே ரஜினி ஸ்டைலில் நடந்து வந்த குமார், “என்ன,என்ன,என்ன பாட்டு?” என்று அவரைப் போலவே பேசிக் காட்ட,
சர்ர்ர்,சர்ர்ர்ரென விசில் அடித்து “தலைவாஆஆஆஆ”- எனக் கத்திய அலெக்ஸைத் தொடர்ந்து கூட்டம் கோஷமிட,
குமார் தனக்கு ஜோடியாக சுஷ்மாவை அழைத்தான்.
“டேய்ய் என்னையும் விட்டு வைக்க மாட்டீங்களா டா?” – எனப் புலம்பியபடி எழுந்து வந்த சுஷ்மாவிடம், காகிதத்தைக் காட்டினான் குமார்.
“ஆரம்பிங்க ஆரம்பிங்க” – எனக் கூறி அலெக்ஸ் ஒதுங்கி நின்றதும்,
“அன்னைக்கு உங்களுக்குக் கண்டிப்பா மீசை இருந்தது” – நடிகை மாதவியைப் பிரதிபலித்து சுஷ்மா,
“ஐயோ…”என ரஜினிகாந்தைப் போல் கூறிய குமார், அவரது இடது கையைப் பற்றி,
“இது உங்க வாட்ச் தான?”என்றான்.
“ஆமா,”
“சொல்லுங்க, இது என்ன வாட்ச்?”
“சிட்டிசன்”
“எங்க தயாரிச்சது”
“மேட் இன் ஜப்பான்”
“இப்ப மணி எவ்வளவு?” – எனக் கேட்டவன், அவர் மாதவியைப் போல் “ஹா”-என எக்ஸ்ப்ரஷன் கொடுத்ததும்,
“என்னங்க, இப்ப தான் பார்த்தீங்க, கிட்ட வைச்சுப் பார்த்தீங்க, மணி எவ்ளோன்னா தெரியலங்குறீங்க, எப்பவோ,எங்கயோ தூரத்துல இருந்து பார்த்துட்டு மீசையிருக்குன்னு சொன்னா எப்பிடிங்க?, ஹாஹாஹா” – என்றவன்,
ரஜினியைப் போலக் கையையும்,தலையையும் ஆட்டியபடி,
“ராகங்கள் பதினாறு, உருவான வரலாறு.. நான் பாடும் போது அறிவாயம்மா” – என்று முடிக்க,
“ஏய்ய்ய் ஏய்ய்ய் ஏய்ய்ய்ய்ய்” – என விசிலடித்துத் துள்ளிக் குதித்தது கூட்டம்.
“டேய் ஆங்கர்ஸ், அடுத்து நீங்க வாங்கடா..!,” – என்று சுந்தர் அழைத்ததும்,
“கண்டிப்பா,கண்டிப்பா” என்ற அலெக்ஸூம்,சசியும் தங்களுக்கான சீட்டை எடுத்தனர்.
“ப்ரோ.. செம்ம ப்ரோ” – என்ற அலெக்ஸ், “ஸ்டார்ட் பண்ணலாம்” என்றான்.
“அய்யோ மக்கு, இந்த மாதிரி விசயத்துல பொய் சொல்லலாம்!, பொம்பளைங்களுக்குத் தெரியும்ன்னு சொல்ற ஆம்பளைங்களை விடத் தெரியாதுன்னு சொல்ற ஆம்பளைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்!, நீ மட்டும் தெரியாதுன்னு சொல்லியிருந்தேன்னா, அவளே உனக்கு சொல்லிக் கொடுத்திருப்பா, அப்பிடி,இப்பிடியாகி பெரிய ரொமான்ஸே நடந்திருக்கும்! நீ மிஸ் பண்ணிட்ட?” – சிம்ரனைப் போல் பெரிதாய் அலட்டலுடன் அலெக்ஸ்.
“இல்லையே!, அன்னிக்கு ரொமான்ஸ் நடந்ததே” – அஜீத்தைப் போல் அப்பாவி எக்ஸ்ப்ரஷனுடன் சசி.
“நீ தெரியும்ன்னு சொல்லி ரொமான்ஸ் நடந்ததா?”
“ஆமா”
“எப்பிடி?” – என்று அலெக்ஸ் கேட்டதும், அவனை இழுத்துத் தன் முன்னே நிற்க வைத்து,
“அவ மௌத் ஆர்கனைக் கொடுத்தா. நான் கிட்டப் போய் வாங்குனேன், வாங்கிட்டு மௌத் ஆர்கனைப் பார்த்தேன். அவளைப் பார்த்தேன். மௌத் ஆர்கனைக் கீழ வைச்சுட்டு” – என்றவன், அலெக்ஸின் கன்னங்களை இரு கைகளாலும் பற்றித் தணிந்த குரலில்,
“உன் மௌத்தே ஆர்கன் மாதிரி தான் இருக்கு அப்புறம் எதுக்கு மௌத் ஆர்கன்னு சொல்லி….” என நிறுத்தியவன், தலை சாய்த்து, மெல்ல இமையுயர்த்தி சக்தியைப் பார்த்து, கண்ணையும்,உதட்டையும் அசைத்து,
“கிஸ் பண்ணிட்டேன்” – என்றதும்,
கீங்ங்க்ங்க்ங்க்ங்க்ங்க்…- என ஒலிக்கும் இசைக்குப் பாட்டில், சிம்ரன் கொடுத்த ஜெர்க்கைப் பிரதிபலித்த சக்தி, குப்பென முகத்தைத் தாக்கிய உஷ்ணத்தில் வெந்து, விடாது சிமிட்டித் தவித்த இமைகளின் படபடப்பைத் தவிர்க்க முடியாது, உதடு கடித்துத் தலை தாழ்த்தினாள்.
அதன் பின்பு “ஓ சோனா….” எனக் குதித்து ஆடிக் கொண்டிருந்த அலெக்ஸின் தலையில் அடித்து, “விளையாடுனது போதும், போய் வேலையைப் பாருங்க! போங்க” என சுந்தர் விரட்டியதும், கூட்டத்தைக் கலைத்துத் தங்களது தளத்திற்குச் சென்றனர் மக்கள்.
அன்று மாலை வீட்டிற்குப் புறப்படுவதற்காக, அலுவலக வாயிலில் ‘கேப்’-ற்காகக் காத்திருந்த சக்தியைக் கண்டவாறு, பார்க்கிங்கிலிருந்து தனது வண்டியில் வந்து கொண்டிருந்த சசி, வண்டியை அவளருகே நிறுத்தி,
“ஏன் இங்க நிற்குறீங்க?” எனக் கேட்டான்.
“கேப்-க்கு வெய்ட் பண்ணிட்டிருக்கேன்”
“வண்டி எங்க?”
“இன்னைக்கு ஸாரி கட்டியிருந்ததால வண்டி எடுத்துட்டு வரல”
“சரி, வாங்க நான் ட்ராப் பண்றேன்”
“என்னதூஊஊ?”
“ஏன் இவ்ளோ ஷாக்?, இதுக்கு முன்னாடி என் கூட வண்டில வந்திருக்கீங்க தான?”
“இ..இல்ல.. மழை வர்ற மாதிரி வேற இருக்கு”
“அதனால என்ன?”
“நான் நனைஞ்சுட்டா?”
“கரைஞ்சுடுவீங்களா?”
“ப்ச், ஸாரி ஸ்பாயில் ஆயிடும்”
“ஸ்பாயில் ஆனா.. வேற ஸாரி வாங்கித் தரேன்! வாங்க” – என வண்டியைக் கிளப்பியவனை முறைத்து,
“நீங்க ஏன் எனக்கு வாங்கித் தரனும்?” – எனக் கேட்டவாறே அவன் பின்னே ஏறி அமர்ந்தவள்,
“உங்களுக்குப் பொண்டாட்டியானாலும், எனக்கான செலவை நானே தான் பார்த்துக்குவேன் சொல்லிட்டேன்” என்றதும்,
இன்ஸ்டண்ட்டாய்ப் பூத்த முறுவலுடன், ஹாண்டில் பாரை முறுக்கி வண்டியை ஸ்டார்ட் செய்தவன் பதில் பேசாது அமர்ந்திருக்க,
“என்ன பேச்சைக் காணோம்?, மேரேஜ்க்கு அப்புறமும், எனக்குன்னு நான் வைச்சிருக்கிற ப்ரின்சிபலை எப்பவும் நான் மாத்திக்க மாட்டேன், புரிஞ்சதா?” என மிரட்டினாள் அவள்.
உங்களுக்குப் பொண்டாட்டியானாலும்,மேரேஜ்க்கு அப்புறமும் – தான் வாய் விட்டுச் சொல்லத் தயங்கும் வார்த்தைகள் பலவற்றை, அவள் வெகு இயல்பாய்க் கூறுவது கேட்டு, உள்ளே சாரல் அடிக்க, மென் புன்னகையுடன் வண்டியின் வேகத்தைக் கூட்டியவனின் அருகே குனிந்து,
“ஏன் அமைதியா வர்றீங்க?” என்றவளின் கேள்விக்கு,
“பேசிக்கிட்டே வந்து, எங்கயாவது கொண்டு போய் நான் வண்டியை விட்டா பரவாயில்லையா?, நசநசங்காம, அமைதியா வாங்க” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறியவனிடம் பொங்கி,
“நச,நசன்னு பேசுறேனா?, யோவ் கொழுப்புய்யா உனக்கு!, ரொம்ப ஈசியா வண்டில ஏற ஒத்துக்கிட்டேன்ல?, அதான் திமிர் பண்ற மேன் நீ?” – என அவன் இடுப்பில் குத்தியதும்,
“ஆஆஆ கூசுதுங்க” – என அவள் கையை விலக்கி, நெளிந்தவனின் இடையை மீண்டும் கிள்ளி,
“அப்டித்தான் கிள்ளுவேன், அப்டித்தான் கிள்ளுவேன்!” – என்றவளின் தொடர் கிள்ளலில்,
“ஆஆ ஆஆ…”-வெனக் கத்திச் சிரித்து, தட்டுத் தடுமாறி வண்டியை ஓட்டி ஒரு வழியாக அவளது வீட்டின் முன்பு வந்து நிற்கையில், சடசடவென பொழியத் துவங்கியிருந்தது மழை.
“நல்ல வேளை, பெருசா பெய்றதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டோம்” – என வண்டியிலிருந்துக் குதித்திறங்கியவள், தன் பையை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று கேட்-ஐத் திறந்து உள் நுழைய, வண்டியைத் திருப்பி, புறப்படத் தயாரானான் சசி.
வீட்டு வாசலில் பையை வைத்து விட்டுத் திரும்பியவள், அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருப்பது கண்டு,
“என்ன கிளம்பிட்டீங்க?” எனக் கத்திக் கேட்டாள்.
“வீட்டுக்குப் போக வேண்டாமா?”
“மழை பெய்றது தெரியலையா?”
“நான் அப்பிடியே அங்கங்க நின்னு,நின்னு போயிடுவேன்ங்க”
“அதெல்லாம் வேணாம், உள்ள வந்து காஃபி சாப்பிட்டுட்டு, மழை நின்னதும் போகலாம்!, வாங்க” – என்றவளிடம்,
“வ….வந்து” எனத் தயங்கியவன், “இன்னொரு நாள் அம்மாவோட வர்றேனே” என்றான்.
“அம்மாவோட அப்புறம் வரலாம்!, இப்ப என்னோட வாங்க!, ப்ச்!, மழை பெருசா பெய்யுது! இறங்கி வாய்யா” – எனக் காட்டுக்கத்தலாய்க் கத்தியதும், அவசரமாய் வண்டியை விட்டிறங்கியவன், வீட்டிற்குள் நுழைந்து கேட்டைச் சாற்றி விட்டு, ஹெல்மெட்டைக் கழட்டித் தலை முடியைக் கோதி விட்டான்.
பையிலிருந்த சாவியை எடுத்து அவள் வீட்டுக்கதவைத் திறப்பது கண்டு, திடுக்கிட்டு,
“வீட்ல யாருமில்லையா?” என அவன் திகிலான குரலில் கேட்டதும்,
“ஆமா! பூ வைக்குற ஃபங்க்ஷனுக்கு இன்வைட் பண்ண, எங்கம்மா,அப்பா எங்கத்தை வீட்டுக்குப் போயிருக்காங்க” – எனக் கூறி விட்டு, அவனை சைடாய் திரும்பிப் பார்த்தாள் அவள்.
ஆஆ-வெனப் பிளந்த வாயுடன், பேஸ்தடித்துப் போய் நின்றிருந்தவன்,
“நா…நா..நான் கிளம்புறேன்ங்க”-என வேகமாய் ஹெல்மெட்டை மாட்டப் போக,
“ஷ்ஷ்ஷ்ஷ்”-எனத் தலையிலடித்துக் கொண்ட சக்தி,
“ரொம்ப ஓவரா பண்ணாதீங்க” எனக் காய,
“யாரு நானா?, நீங்க தான் ஓவரா பண்றீங்க!, ஆளில்லாத வீட்டுக்குள்ள என்னை வா-ன்னு கூப்பிட்றீங்க” – எனப் பதறியவனின் தலையில் தட்டி,
“அசிங்கமா பேசாதீங்க” – என்று அவள் பல்லைக் கடித்ததும்,
அவள் அடித்த இடத்தைத் தடவியபடி, கதிகலங்கிப் போய் நின்றவனைக் கண்டு உஷ்ண மூச்சை வெளியிட்டு,
“24-ஹவர்ஸூம் டர்ட்டி திங்க்கிங் மட்டும் தான்! எக்குத்தப்ப்பா யோசிக்காம ஒழுங்கா உள்ள வாங்க!”-என முறைப்பாய்க் கூறி அவள் உள்ளே சென்று விட,
‘போவதா, வேண்டாமா’ – எனக் கால்களை இப்படியும்,அப்படியுமாய் நகற்றிப் பின் போகலாம் என முடிவெடுத்துத் திகிலுடனே உள்ளே நுழைந்தான் சசி.
பையை ஓரமாய் வைத்து விட்டு, வீட்டைச் சுற்றிப் பார்த்தவனிடம் அவள் துவாலையை நீட்ட, வாங்கி லேசாய் நனைந்திருந்தத் தலையைத் துடைத்தவன்,
“வீடு ரொம்ப ஹை-டெக்-ஆ இருக்கேங்க” என வியப்புடன் கூற,
“ஆமா!, எங்கப்பா, தான் சம்பாதிச்ச அத்தனையையும் இந்த வீட்லயே கொட்டிட்டாருன்னு எங்கம்மாவுக்கு ஏகக் கடுப்பு!, ஹை-ஃபை வீட்ல குடியிருந்தும், எப்பவும், பஞ்சப்பாட்டு பாடிட்டே தான் இருக்கும்” – என்றவள்,
“கரண்ட் இல்ல போல!, நீங்க மேல இருக்குற பால்கனிக்குப் போங்க, நான் காஃபி எடுத்துட்டு வரேன்!, அங்க கொஞ்சம் வெளிச்சமா இருக்கும்” – எனக் கூறியதும்,
“ம்ம்” என்றவன் வீட்டைச் சுற்றிப் பார்த்தபடியே அவள் கைக் காட்டிய படிகளில் ஏறிச் சென்றான்.
சிறிதாயிருந்த அந்தப் பலகணியில் குட்டி,குட்டிப் பூச்செடிகளும், லவ் பேர்ட்ஸ், கிளிகள் ஒரு புறமும், கூண்டொன்றில் இரு முயல்குட்டிகளும் இருப்பது கண்டு புன்னகைத்தவன்,
“ஓரு முயல்குட்டியே, முயல்குட்டி வளர்க்கிறதே!, அடடே, ஆச்சரியக்குறி” – என்றவாறு அருகே சென்று பார்வையிடுகையில்,
“அக்கா, அக்க்காக்க்கா” – என பச்சைக்கிளியொன்று பேசத் தொடங்க, அதனருகே சென்று நின்று, அருகிலிருந்த மிளகாய்ப் பழத்தை கூண்டுக்குள்ளிட்டான்.
“அவ பேரு அக்கா இல்ல, கண்மணி… கண்மணி சொல்லு” – என அதனுடன் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்தபடிக் கையில் இரு காஃபி கப்புகளோடு அருகே வந்தாள் சக்தி.
“பொண்ணுங்க பொதுவா நாய்,பூனைன்னு தான வளர்ப்பாங்க, நீங்க என்ன முயல்,குயில்ன்னு வளர்க்குறீங்க?” – எனக் கேட்டவனிடம், ஒரு கப்பை நீட்டி,
“இதெல்லாம் வளர்க்குறது நான் இல்ல. எங்கம்மா” என்றாள் அவள்.
“அதான, உங்களால குழந்தைங்கக் கூடயே பாசமா பழக முடியாது, இதுல பிராணிங்களையா கொஞ்சப் போறீங்க?”
“ஹலோ!, அதான் எனக்கும் சேர்த்துக் கொஞ்ச நீங்க இருக்கீங்களே, அப்புறம் என்ன?” – எகிறியவளிடம்,
“உங்கம்மாவுக்கு பிராணிங்கன்னா இஷ்டமா?” – எனக் கேட்டான்.
“உங்கம்மா இல்லை, அத்தை, அத்தைன்னு சொல்லனும்!”
“சரி அத்தை, அத்தைக்குப் பிராணிங்கன்னா இஷ்டமா?”
“ஆமா, எனக்கப்புறம் எங்கம்மாக்கு குழந்தை உண்டாகாததால, இந்த மாதிரி கிளி,கோழியெல்லாம் வளர்த்துத் தன்னோட குழந்தை ஏக்கத்தைத் தீர்த்துக்குறாங்க”
“ஓஹோ!, உங்களுக்கெப்பிடி?” – என்றவனின் கேள்வி புரியாது, தன் முகம் பார்த்தவளிடம்,
“ஒரேயொரு பாப்பா போதுமா?” – காஃபியை உறிஞ்சியபடியே, ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முயன்று, முடியாமல், மொத்தமாய்க் கண்ணில் காட்டியபடி அவன் வினவ,
இரு கைகளாலும் கப்பைப் பற்றிக் கொண்டு, பலகணி சுவரில் சாய்ந்து நின்றவள், “ஒன்னு போதாது?” எனக் கண்ணைச் சுருக்கிக் கேட்டதும்,
“போதாதுங்க” என்றான் அவன் பட்டென.
“பின்ன?”
“குறைஞ்சது 2 குழந்தைகளாவது வேணும்ங்க”
“பார்றா”
“நீங்க பெத்து மட்டும் கொடுங்க!, நான் வளர்த்துக்கிறேன்” – என்றவனின் குரலில் சிரிப்பு வர, பார்வையைத் திருப்பியவள்,
“போன வாரம் வரை, அந்தப் பொண்ணுக்கு நான் செட் ஆக மாட்டேன்னு சொல்லி, மூக்கால அழுதிட்டிருந்த மனுசன், இன்னைக்கு 2 குழந்தை வேணும்ன்னு சட்டமா கேட்குறாரு” – என மெல்லிய குரலில் முணுமுணுக்க,
அவனும்,அவள் முகம் பாராது சங்கடமாய்ப் பிடரியைக் கோதியபடி,
“நீங்க தான் என்னை இப்பிடி மாத்திட்டீங்க” எனக் கூற,
அவனுக்குப் பதிலளிக்காமல், காலாட்டிக் கொண்டுப் புன்னகையுடன் நின்றாள் அவள்.
காலியான கோப்பையைக் கீழே வைத்து விட்டு நிமிர்ந்தவன்,
“கிளம்பட்டும்ங்களா?” எனக் கேட்டான்.
சட்டென சுருங்கிய முகத்துடன் அவள், “மழை இன்னும் நிக்கலையே” என்றதும்,
அவள் முகம் காட்டிய ஏமாற்றத்தை உள் வாங்கியபடி, “பரவாயில்ல, கிளம்புறேன்” எனக் கூற, மூக்கை விடைத்து முறைத்தவள்,
“நனைஞ்சுட்டே போவீங்களா?, கொஞ்ச நேரத்துல நின்னுடும், வெய்ட் பண்ணுங்க” எனக் கூறி, “ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்றீங்களா?” எனக் கேட்டுத் திரும்பி நடக்க,
அவசரமாய் அவள் கைப்பற்றி நிறுத்தி “இருங்க, இருங்க, அதெல்லாம் வேணாம்” -என்றவனைக் கண்டு அவள் நின்றதும்,
“காஃபியே போதும்!, கிளம்பும் போது ஆஃபிஸ்ல ஸ்நாக்ஸ் சாப்பிட்டுத் தான் வந்தேன்” – என்றவனிடம் தலையாட்டியவள், அவன் இன்னமும் தன் கையைப் பற்றியிருப்பதை உணர்ந்து குனிந்து பார்க்க,
தானும் அவள் பார்வையைத் தொடர்ந்தவன், பட்டென அவள் கரத்தை விட்டு, “சா…சாரி” என்றான்.
அவனுக்குப் பதில் கூறாது, எதிரே நின்றவள், கையைக் கட்டிக் கொண்டு மழையை வேடிக்கை பார்க்க, அவன் அவளை வேடிக்கை பார்த்தான்.
அலுவலகத்திலிருந்த போது ஒற்றை முந்தானையுடன் தோளில் வழிந்திருந்த புடவை, இப்போது சில,பல,சீரற்ற மடிப்புகளுடன் அவள் தோளைத் தழுவியிருந்தது.
மின்சாரமில்லாத வீட்டிற்குள்ளிருந்த உஷ்ணத்தாலோ என்னவோ, நெற்றியிலும்,உதட்டின் மீதும் லேசாய் வியர்த்திருக்க, களைப்பையும்,சோர்வையும் தாண்டி, அவன் அருகில் நிற்கும் உணர்வு கொடுக்கும் தாக்கத்தை விழிகளில் காட்டிக் கொண்டு, ரசனையான புன்னகையுடன் நின்றவளைக் கண்டு,
நின்றிருந்த இடத்திலிருந்து நகர்ந்து மெல்ல அவளருகே வந்தான் அவன்.
அவன் தன்னை நோக்கி நடந்து வருவதைக் கண்டு, அதுவரை சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தவள், அனிச்சையாய் நிமிர்ந்து படபடப்புடன் அவனை நோக்கி, அவன் விழி மாற்றத்தில் சொக்கிய இதயத்தின் அதிவேகத்துடிப்பை உணர்ந்து பக்கவாட்டில் முகத்தைத் திருப்பினாள்.
அவன் வம்பு செய்ததும், அவள் விரித்து விட்டிருந்தக் கூந்தல், இப்போது கொண்டையாகி, பின் கழுத்தில் நிற்பதைப் பார்த்தபடி, அவளை நெருங்கி நின்றவன், அவள் காதோரம்,
“பசங்களுக்குப் பொண்ணுங்க கொடுக்கிற மிகப்பெரிய தண்டனை என்ன தெரியுமா?” எனக் கேட்டான்.
எக்குத்தப்பாய் ஏதோ கூறப் போகிறான் என்று தெரிந்தாலும், மௌனமாய்ப் புருவம் சுருக்கி அவன் பதிலுக்குக் காதைக் கொடுத்து விட்டு நின்றவளிடம்,
“கொண்டை போட்டுக்கிறது தான்” என்றதும்,
பெரிதாய்க் கண்ணை விரித்தவள், ‘பொறுக்கி,பொறுக்கி’ என முணுமுணுத்தவாறு அவசரமாய் அவன் புறம் திரும்பி..
நெற்றி மீது படும் அவன் மூச்சுக் காற்றை உணர்ந்தபடி அண்ணார்ந்து அவன் முகம் நோக்கியவள், மையலேறிய விழிகளுடன் தன்னையே பார்ப்பவனைக் கண்டு,
மூக்கை விடைத்து முறைக்க நினைத்துப் பின், சிணுங்கலான சிரிப்புடன் மழையின் புறம் பார்வையைத் திருப்பிக் கொள்ள,
அவளது வலப்புற மூக்கில் அமர்ந்து கொண்டு, வகையாய் அவனை வைத்து செய்யும், சிகப்பு மூக்குத்தி, அவனது அடக்கி வைத்த உணர்வுகளை சில்லு,சில்லாய்ச் சிதறச் செய்ததில், தன்னை மறந்து, மூக்குத்தியை நோக்கிக் குனிபவனைக் கண்டு,
அவள் இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்ட நேரம்,
மூச்சடக்கி சட்டென நிமிர்ந்தவன், அவளை விட்டு ஓரடி விலகி நின்று, பிடரியைக் கோதி,
படபடப்பில் தன்னாலேயே தழைந்து போன விழிகளோடு, தலை குனிந்து நின்றவளிடம், “சாரி…” என்றான் மெல்லிய குரலில்.
நடுங்கித் துடித்த விரல்களை இறுகப் பற்றியபடி, அவள் மழையின் புறம் திரும்ப, அவளருகே நெருங்கி, கன்னக்குழியில் ஒற்றை விரலைப் பதித்தவன், தன் விழி பார்த்தவளிடம்,
“ஆரம்பிச்சா முடிக்க முடியும்ன்னு தோணல” என்றான் தடுமாற்றமின்றி.
அவன் பேச்சில் சிவப்பேறிக் கதகதத்தக் கன்னங்கள், இதழ்களை நடுங்கச் செய்ததில், திணறி, அவன் முகம் பாராதுத் திரும்பி நின்றவள், கண்களை அழுந்த மூடித் திறந்து, தனக்கு வெகு அருகே நின்றிருந்தவனின் மார்பில், பின்னிருந்தபடியே மெல்லத் தலை சாய்த்துக் கொண்டாள்.
சிந்தும் தூறல்களிடையே.. அவனோடு தொலைந்து போக முயன்றபடி அவளும்!
மார்பில் சாய்ந்தவளின் ஸ்பரிசத்தில்.. பொழியும் மழைத்துளிகளோடு, காற்றில் கரைந்தபடி அவனும்!
விண்ணையும்,மண்ணையும் இணைத்து விடும் நோக்கத்தோடு விடாது முயன்றபடி மழையும்!
ச்ச!, கவிதை! கவிதை!
துணுக் துணுக் துணுக்ஸ்ஸ்ஸ்…..
“சசிக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன். இப்ப வந்துடுவான், அதுவரை நாம புடவையைப் பார்ப்போமா?”
-சென்னை சில்க்ஸ் கடையினுள்ளே, தன் எதிரே நின்றிருந்த சக்தியிடமும்,கோகிலாவிடமும் கூறிய விசாலம், சற்றுத் தயக்கத்துடனே சக்தியைப் பார்த்திருந்தார்.
அவள் பார்க்கத் தொடங்கியதும், அவளருகே அமர்ந்த விசாலம் புடவைகளையும், அவளையும் மாறி மாறி பார்ப்பதை உணர்ந்த சக்தி, அவர் புறம் நேராகத் திரும்பி, “எதுக்கு என் மூஞ்சியை,மூஞ்சியைப் பார்த்திட்டிருக்கீங்க?, என்ன பிரச்சனை உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
அவள் கேள்வியில் எச்சில் விழுங்கியவர்,
“வ..வந்து கண்ணு, உ..உனக்கு என் மகனைக் கட்டிக்க சம்மதம் தான?” எனக் கேட்டார்.
“ஓ!, அதை புடவை எடுக்க வரச் சொல்லித்தான் கேட்பீங்களோ”
“ஏய், அவ உன் மாமியா டி!, அவளையே மிரட்டுற நீயி?” - கோகிலா இடையில்.
“கண்ணு.. என் மகன் உன் அளவுக்கு நிறம் கிடையாது!, உன் அளவுக்கு அழகு கிடையாது, அதான்…”
“ப்ச், பசங்க கருப்பா இருக்குறது தான் கம்பீரம்த்தை! நம்மூர்ல வெள்ளையா இருக்குறவனெல்லாம், பெரிய மாய்க்யான்ங்களா இருக்காய்ங்க! எங்கப்பாவையே எடுத்துக்கோங்களேன்,” – என அவள் தொடர்வதற்குள்,
“அடியேய்! அடியேய்” – என இடை புகுந்த கோகிலாவைக் கண்டு “ப்ச்” என முகம் சுழித்தவளிடம்,
“என்ன தான் கண்ணு சொல்ல வர்ற?, என் பையனைப் பிடிச்சிருக்குன்னா?” – என ஆர்வமாய் விசாலம் கேட்க,
“அப்…..பிடி சொல்லிட முடியாது” – என இழுத்தவளைக் கடுப்புடன் பார்த்து
“ஏய்ய் ஏய்ய்” – எனக் கோகிலா பல்லைக் கடிக்க.
“ப்ச், இரும்மா நான் இன்னும் முடிக்கல” என்றவள், விசாலத்தின் கையைப் பற்றிக் கொண்டு,
“ஆனா, இந்த ஜென்மத்துல உங்க பையனைத் தவிர வேற யாரையும் பிடிக்கும்ன்னும் தோணலத்தை” எனக் கூற,
அதிர்வாய் அவளைப் பார்த்த இருவரிடமும்,
“ஏன் ஷாக் ஆகுறீங்க?, எங்கம்மா இன்னொரு பையனைக் காட்டிக் கட்டிக்குறியான்னு கேட்டப்ப, எனக்கு இப்பிடித்தான் தோணுச்சு” – என அசால்ட்டாய்க் கூறித் தோளைக் குலுக்கியவளைக் கண்டு,
“அவனை ரெண்டு தடவை தான பார்த்திருக்க நீயி?” – சந்தேகமாய்க் கேட்ட விசாலத்திடம்,
“ரெண்டு தடவையா?, ரெண்டு லட்சம் தடவைப் பார்த்திருக்கேன்! ப்ச், ரெண்டு பேரும் ஒரே ஆஃபிஸ்ல, ஒரே டீம்ல தான்த்தை வேலை செய்றோம்” என்றதும்,
“என்னாதூ?” – என வாயைப் பிளந்தவர்களைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்டு, “இது கூடத் தெரியாம, கல்யாணம் பண்ணி வைக்கக் கிளம்பிடுச்சுடுங்க” – என முணுமுணுத்தவள்,
“உங்க பையனை.. எனக்கு ரொம்ப.. இல்ல, இந்த உலகத்துல இருக்குற ஆம்பளைங்கள்ல, எங்கப்பாவுக்கு அடுத்து, உங்க பையனை மட்டும் தான் எனக்குப் பிடிக்கும்! போதுமா?” எனக் கூறி புடவைகளின் பக்கம் திரும்பிக் கொள்ள,
அன்னையர் இருவரும் ஆஆஆ-வென அவளைப் பார்த்து நின்றனர்.
