அத்தியாயம் - 1

குழந்தைப் பேறு!

புத்திர யோகம், பிள்ளைச் செல்வம், குழந்தை வரம்ன்னு பேரு வைச்சு இந்த விஷயத்தை அரும்பெரும் பாக்கியமாகவேக் கருதுகிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம! மரத்துல தொட்டில் கட்டி, அரசமரத்தை சுத்தி வந்து.. குழந்தை வேணும்ன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிற தம்பதிகள் ஒவ்வொருத்தரும்.. எப்போவாவது யோசிச்சுப் பார்த்திருப்பாங்களா? ஆசை,ஆசையா நாம பெத்தெடுக்கிறக் குழந்தையை மாசு நிறைந்தக் காற்றும், அசுத்தமானத் தண்ணீருமிருக்கிற ‘பொல்யூடட்’ பூமி தான் வரவேற்கப் போகிறதென்பதைப் பற்றி?

உலகம் உருவான காலம் தொடங்கி,குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்ற வரை நாகரீக முன்னேற்றத்தையும், கால மாற்றத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்கப் போகிற நாம.. பஞ்ச பூதங்களும் ஏன் பங்க்ச்சர் ஆன ஸ்டேஜ்ல இருக்குன்னு அவங்க கேள்வி கேட்டா…. பதில் சொல்ற நிலைமைல இருக்கோமா?

பெத்த புள்ள நோய்,நொடியில்லாம நீண்ட காலம் வாழனும்ன்றது தான் ஒவ்வொரு தாய்மாரோட ஆசையாகவும் இருக்கு! ஆனா.. அவங்க நீண்ட காலம் வாழ்றதுக்கான சூழலை நாம உருவாக்கிக் கொடுத்திருக்கோமா?

குடிக்க சுத்தமானத் தண்ணீர் கிடைக்காம, சுவாசிக்க நல்லக் காற்று இல்லாம.. வர்ற காலத்துல அல்லல் பட்டு தவிக்கப் போறத் தலை முறையினருக்குத் தான் நாம இப்போ சொத்து சேர்த்துட்டிருக்கோம்ன்ற புரிதல் கொஞ்சமாவது நமக்கு இருக்கா?

யார் மேல தப்பு சொல்லப் போறோம்? யாரைக் கை காட்டப் போறோம்? தலை குனிஞ்சு நிற்கிறதைத் தவிர வேற என்ன வழியிருக்கு நமக்கு?

படுக்குற கட்டில், டிரெஸ்ஸிங் டேபிள், கப்போர்டு, டிவி ஸ்டாண்ட், டைனிங் டேபிள், சோஃபா செட்டுன்னு நாம அறுத்து வைச்சிருக்கிற மரங்களெல்லாம்.. நாளைக்குத் தொண்டை வரண்டு, மூச்சுக்குத் தவிச்சு சாகப் போகிற மனித உயிர்களைக் கண்டு அலட்சியமா சிரிக்கப் போகுதுன்றது தெரியுமா நமக்கு!

இன்னும் எதற்காகக் காத்திருக்கிறோம் நாம்? எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?, கடவுள் கல்கி அவதாரமெடுத்து.. ஒட்டு மொத்த உலகத்தையும் காவு வாங்கியபடி கண் முன்னே குதிரையில் வலம் வரும் போதா?

-இவன்.

ம்பள உறையைக் கையில் வாங்கிய அந்தப் பெரியவரின் முகம்.. மாதக் கடைசி விட்டுச் சென்றத் துன்ப சுவடு நீங்கியதில்.. பாரம் விலக்கிப் பெரிதாய்ப் புன்னகையைத் தத்தெடுத்திருந்தது.

கணக்கர் காட்டிய இடத்தில் கையொப்பமிட்டு விட்டு, பணத்தை சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்தியவர்.. அந்த இரண்டடுக்குக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தத் தனது மிதிவண்டியை நோக்கிப் படியிறங்கினார்.

மனம் ‘கால்குலேட்டராக’ மாறி அந்த மாதத்திற்குரிய வரவு,செலவுகளைக் கணக்கிடத் துவங்க.. யோசனையுடன் மெல்ல நடையிட்டபடி.. முதல் தளத்தை அடைந்தவர்.. வளைவில் இறங்குகையில்.. பின்னால் வந்த ஒருவன்.. சட்டைப்பையில், அவர் செருகி வைத்திருந்த உறையை உருவிக் கொண்டு சிட்டாய்ப் பறந்து விட.. திடுக்கிட்டுப் போனவர்.. செய்வதறியாது உதறிய கை,கால்களுடன் ‘என் பணம்,என் பணம், திருடன்,திருடன்..” என்று பதற்றத்தில் அலறத் துவங்கினார்.

சத்தம் கேட்டுப் படிக்கட்டை ஒட்டியக் கடையிலிருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தத் தாவணிப் பெண்ணொருத்தி.. மின்னலாய் ஓடியவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்.. பெரியவர் தள்ளாடியபடிக் கீழிறங்குவதைக் கண்டு.. அவசரமாகப் பலகணி வழியே எட்டிக் கீழ்த்தளத்தை நோக்கினாள்.

அதி வேகத்தில் கட்டிடத்தைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தத் திருடனைக் கண்டு.. உதவி கோரி அலைந்த அவளது பார்வை எதிரேயிருந்த ‘STD/ISD PCO’-வை நோக்க.. அதன் வாசலில் நின்றிருந்த இளைஞனிடம்..

“சார்,சார்… திருடன்.. திருடன்ன்ன்ன் சார்… அந்தப் பச்சை சட்டைக்காரன். அவனைப் பிடிங்க,பிடிங்க சார்” – என்று குரல் கொடுக்க..

அதுவரை கைகளைக் கட்டிக் கொண்டு இருபுறமும் வேடிக்கை பார்த்தபடி.. அசட்டையாக நின்றிருந்த அந்த இளைஞன்.. அந்தப் பெண்ணின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு எதிரேயிருந்த கட்டிடத்தை நோக்கினான்.

அணிந்திருந்தக் கைலியை வாயில் கவ்விக் கொண்டு, கையில் கவருடன்.. பி.டி.உஷாவாக ஓடிக் கொண்டிருந்தவனைக் கண்டு.. நிமிடத்தில் செயல்பட்டு ஒரே பாய்ச்சலாக ஓடி.. கோழி அமுக்குவது போல் அவனது பின் கழுத்தை அழுத்திப் பிடித்திருந்தான் அவன்.

“பிடிச்சிட்டாரு, பிடிச்சிட்டாரு! சார் திருடனைப் பிடிச்சுப் போட்டாரு! எல்லாரும் ஓடி வாங்க” என்கிற மகிழ்ச்சிக் குரல் கேட்டு.. நிமிர்ந்து முதல் தளத்திலிருந்தப் பெண்ணை நோக்கினான்.

“ப்ச், ஏனுங்கம்மணி! நான் ஏதோ பெருசாஆஆஆ வீர சாகசம் பண்ணிப் போட்டதாட்டம் இப்படிக் கூவுறீங்க? சரி, நீங்க கீழ வர்றீங்களா?, இல்ல, நான் இவனை மேல இழுத்துட்டு வரட்டும்ங்களா?” என்றான்.

அவன் பேச்சில் சிரிப்பு வர.. மலர்ந்த முகத்துடன் தான் கீழே வருவதாக சைகை செய்தவளிடம்.. “வாங்க,வாங்க!” என்றவன்.. விடாது திமிறிக் கொண்டிருந்தத் திருடனிடம்“எங்க, எங்க, எங்க ஓடப் பார்க்குற?” – என அடிக்குரலில் கேட்ட வண்ணம், பற்றியிருந்த அவன் கழுத்தை அழுத்த.. பல்லைக் கடித்தத் திருடன்..

“மனசுல ஹீரோன்னு நினைப்பாக்கும்?, கைய எடு கண்ணு!” – எனத் தோளை உதறினான்.

“அப்டில்லாம் பொசுக்குன்னு விட்ற முடியுமா? இரு, அந்தம்மணி வரட்டும்” என்றவன்.. படிகளின் புறம் பார்வையைச் செலுத்த.. பணத்தைப் பறி கொடுத்தப் பெரியவரின் தோளைப் பற்றியபடி அவள் அவசரமாய் இறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“அவனை விட்றாதீங்க தம்பி,விட்றாதீங்க” – பதற்றம் குறையாத குரலுடன் கத்திய பெரியவர்.. அருகே வர.. அதற்குள் அக்கம்பக்கத்துக் கடைகளிலிருந்த அனைவரும் அவர்களிருவரைச் சுற்றிக் குழுமியிருந்தனர்.

“வேடிக்கை பார்த்துக்கிட்டே நிற்காம.. யாராவது போலீசுக்கு ஃபோன் போடுங்க!..” என்று கத்தியவன்.. அந்தப் பெண்ணிடம் “சீக்கிரம் உங்க பணத்தை வாங்குங்கம்மிணி!, தப்பிச்சு ஓடிடப் போறான்” என்றான்.

“பணம் என்னோடதில்லீங்க! பெரியவரோடது!” என்றாள் அவள்.

“உங்களோடதில்லியா?” என உள்ளே போன குரலில் வினவியவன்… “ப்ச், இந்தப் பெருசுக்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டேன்!” என்று முனகியபடிக் குறுகுறுவென அவளை மேலும்,கீழுமாய் பார்க்க.. அவன் பார்வையில்.. தன்னாலேயே பூத்த வெட்க முறுவலை அடக்கித் தாவணியைத் திருகிக் கொண்டு அவள் நிற்கையில்..

யாரும் எதிர்பாராத வண்ணம்.. தன் இடுப்பில் செருகியிருந்தக் கத்தியைப் படாரென எடுத்து.. இளைஞனை வளைத்து விட்டான் திருடன்.

அவன் செய்கையில் திகைத்தக் கூட்டத்தினர்.. நின்றிருந்த இடத்தை விட்டு நான்கடிப் பின்னால் நகர்ந்து விட.. முன்னே நின்ற அந்தப் பெண்ணும்,பெரியவரும் திருடனின் செய்கையில் அதிர்ந்து இருவரையும் நோக்கினர்.

இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு, திருடன் இழுத்த இழுப்புக்குச் சென்று கொண்டிருந்த இளைஞனின் விழிகளில் ஏகத்துக்கும் எரிச்சல் நிரம்பி வழிந்தது.

‘வேலியில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டக் கதையாய்டுச்சே! ஒரு பொண்ணு குரல் கொடுத்ததுன்றதுக்காக, கொஞ்சம் கூட யோசிக்காம.. ஓடி வந்ததுக்கு, இதெல்லாம் தேவை தான்!’ - எனத் தன்னையே திட்டிக் கொண்டவன்.. மெல்ல..

“ண்ணா.. ண்ணா..” என்று திருடனை அழைத்தான்.

கூட்டத்தின் சலசலப்பை மீறி.. சன்னமாய் ஒலித்த அந்த இளைஞனின் குரலில்.. அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தத் திருடன்..

“அண்ணனா?, யாரு,யாருக்குடா அண்ணன்?, குரவளை நெரிபட்டாத் தான் மருவாதையெல்லாம் வருமோ?” எனக் கூற..

அவன் அழுத்தம் தந்த எரிச்சலில் ‘லொக்,லொக்’-என இருமியவன்..

“ண்ணா.. நீங்க கத்தியெல்லாம் வைச்சிருப்பீங்கன்னு தெரியாதுங்கண்ணா.. விட்ருங்கண்ணா,ப்ளீஸ்ங்ண்ணா!” என்று தொடர்ந்து கூறினான்.

“ஏன் டா, என் பாட்டுக்க போயிட்டிருந்தவனை பெரிய *****-யாட்டம் பிடிச்சுக் கொடுத்ததுமில்லாம.. இப்போ உன் கழுத்துல கத்தி வைச்சதும் பம்முறியோ?”

“அழுத்திப் பிடிக்காதீங்கண்ணா, வலிக்குதுங்ண்ணா”

“வலிக்குறதுக்குத் தான் கண்ணு அழுத்துறது”

“போலீஸ் வந்தா, உங்களுக்குத் தானுங்ண்ணா பிரச்சனை!, பேசாம.. அந்தப் பெரியவர் கிட்டக் காசைக் கொடுத்துப் போட்டு ஓடிடுங்ண்ணா” – மெல்லிய குரலில் கிட்டத்தட்டக் கெஞ்சியவனிடம்..

“எனக்கே அறிவுரை கொடுப்பியா நீ?” – எனக் குரல் உயர்த்தினான் திருடன்.

“எனக்கே-ன்னு இழுக்குறீங்க! பிக்-பாக்கெட் அடிக்குறதுல பி.ஹெச்.டி வாங்குனதாட்டம்!”

“நக்கலா கண்ணு உனக்கு?, கத்தியை லைட்-ஆ அசைச்சேன்னு வை.. தொண்டை நரம்புல ரெண்டு கீழ அந்து விழுந்துடும் சொல்லிப் போட்டேன்”

“ண்ணா,ண்ணா, வேணாம்ண்ணா, வேணாம்ண்ணா, ப்ளீஸ்ண்ணா”

“ம்ம், அந்தப் பயம் இருக்கோணும்”

மிரட்டியவனைக் கண்டு எரிச்சலுற்று “எவனாவது போலீஸைக் கூப்பிட்டுத் தொலைங்களேன் டா” – என விரக்தியில் அந்த இளைஞன் கத்த.. மிரண்டு போனத் திருடன்.. சாரி,திருடர்ர்.. அவனது தொண்டையைப் பதம் பார்த்து விட..

“ஆஆஆஆஆஆஆ” என வலியில் துடித்தவன்..

“என்னங்கண்ணா பேசிட்டிருக்கும் போதே அறுத்துப் போட்டீங்க? சொல்லிட்டுச் செய்ய மாட்டீங்களா?” என முறைத்தான்.

“என்றா கோவிச்சுக்குற?,”

“பின்ன, பேச்சு பேச்சா இருக்குறது தானுங்ண்ணா ஆம்பளைத்தனம்”

“அப்டின்னா நான் ஆம்பளை இல்லன்றியா?”

“ஆம்பளையா இருந்தா.. நீங்க ஏன்ங்ண்ணா இப்படித் திருடிப் பொழைக்கப் போறீங்க”

“அடேய் பரதேசி” – எனப் பொங்கிய திருடர் மீண்டும் கத்தியை அழுத்தி.. “இனி நீ ஒரு வார்த்தை பேசுனாலும்.. மொத்தமா சோலியை முடிச்சிப் போடுவேன் சொல்லிட்டேன்” – என்று எகிற..

வியர்த்து வழிந்த நெற்றியை உணர்ந்தபடி.. பெரும் எரிச்சலிலிருந்தவன்.. கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்து நின்றவனைக் கண்டு.. ‘ஊஃப்ஃப்ஃப்ஃப்’ என விசில் அடித்து..

“இப்ப உங்க சோலி தானுங்கண்ணா முடியப் போகுது” எனக் கூற.. திருடனும் நிமிர்ந்து.. வந்தவனை நோக்கினான்.

டக்-இன் செய்யப்பட்ட சட்டையும், கழுத்தில் டையுமாக நின்ற ‘அவன்’.. திருடனின் கையில் அகப்பட்டிருந்தவனைக் கண்டு.. தலையில் அடித்துக் கொண்டுப் பின் கைகளைக் கட்டியபடிக் கோபத்துடன் முறைக்க..

“போச்சுடா” என்றவன்..

“அட்வைஸ் பண்ணப் போறீங்களா?, அப்புறமா வீட்டுக்குப் போனப்புறம் காஃபி,டிபனெல்லாம் சாப்பிட்டுப் பொறுமையா பண்ணலாம்ங்ண்ணா! இப்போ என்னைக் காப்பாத்துங்க ப்ளீஸ்” என்றான்.

“உன்னைத் திருத்தவே முடியாது டா ரகு..”

“நீங்க திருத்துற அளவுக்கு நான் என்னங்ண்ணா பண்ணேன்?”

“ஒரு பத்து நிமிஷம் சும்மா நிற்க முடியாம, வம்பை விலைக்கு வாங்கி வைச்சிருக்க?

“இதுல என்ற தப்பு எதுவுமில்லங்ண்ணா! கண் முன்னாடி அநியாயம் நடக்குறப்ப எப்படிங்கண்ணா பார்த்துட்டுக் கண்டுக்காம இருக்குறது?”

“ஏன், சுத்தியிருக்கிற இத்தனை பேரும் கம்முன்னு தான நிற்குறாங்க?”

“அ..அவரை உதவிக்குக் கூப்பிட்டது நான் தானுங்க” – கம்மிய குரலில் தாவணி வேறு இடையில் வர..

“உங்க மேல எந்தத் தப்புமில்லங்கம்மிணி, நீங்க வெசனப்படாதீங்க! அவரோட கோபமெல்லாம் கற்பூரம் மாதிரிங்க! நிமிஷத்துல காத்தாப் பறந்துடும்” – தன்னைத் தவிர்த்து விட்டு அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்துவதில் இறங்கியவனைக் கண்டுக் கடுப்புடன்.. வந்தவன் நகர.. வேகமாய் அவன் புறம் பார்வையைச் செலுத்தியவன்..

“என்னை இப்படியே இந்தப் பீக்காலி பய கிட்ட விட்டுட்டுப் போகப் போறீங்களா?” என்று கத்தினான்.

“யாரு டா பீக்காலி?” – இடையில் திருடர் வேறு கத்திய அழுத்தியபடிக் கோபத்துடன்.

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” – எனப் பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு நொடி நின்ற ‘அவன்’.. மீண்டும் இவன் புறம் திரும்பி…

“உன்ற கழுத்துல கத்தி வைச்சிருக்கிறவனுக்குக் குறைஞ்சது நாற்பது வயசாவது இருக்கும்! ஒரு அரைக்கிழத்தைக் கூட உன்றனால அடிச்சு சாய்க்க முடியாதா டா? தடிமாடு, தடிமாடு“

“கிளப்பி விடாதீங்ண்ணா” – பல்லைக் கடித்தபடி அவன்.

“டேய்.. யாரை டா அரைக்கிழம்ன்னு சொன்ன?” – திருடர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

“கராத்தே க்ளாஸ்க்கெல்லாம் போனியே டா?” – தன் போக்கில் புதியவன் வேறு.

“பூர்ணிக்கு பாடிகார்டா மட்டும் தானுங்கண்ணா போனேன்! மத்தபடி எதுவும் கத்துக்கல!,”

“வேஸ்ட் ஃபெல்லோ!”

“யெஸ்,யெஸ்ங்க்ண்ணா! ஷ்ஷ்ஷ்ஷ்,இந்தாளு வேற தொண்டைல கீறிப் போட்டாரு! பயங்கரமா எரியுதுங்ண்ணா!” – முகத்தைச் சுருக்கிச் செல்லம் கொஞ்சியவனைக் கண்டு..

நொடியில் கோபம் மறைய “கீறிட்டானா?, எங்க, எங்கடா?” எனக் கேட்டபடி அவனருகே நெருங்கிக் கழுத்தை ஆராய முயற்சித்தவனைக் கண்டு.. சுதாரித்தத் திருடன்.. வேகமாக இரண்டடிப் பின்னே நகர்ந்தபடி..

“டேய்.. என்றா நடக்குது இங்க?, யாரு டா இவன்” – எனக் கேள்வி கேட்க...

“அவரு என்ற உடன்பிறப்புங்கண்ணா” – பாசம் வழியப் பதில் கூறினான் அவன்.

“அ..அ..துக்குன்னு ப..பக்கத்துல வருவானா?” – தந்தியடித்தத் திருடனைக் கண்டு.. “டேய் ரகு..” – எனப் பொறுமையற்றக் குரலில் கத்திய புதியவன்.. திருடனை நோக்கி சைகை காட்ட..

“எ..எ..என்றா சொல்றான்?” என்றார் திருடர் பதைப்புடன்.

“உங்க மண்டையைப் பொளக்காம, இவ்ளோ நேரம் நின்னு வெட்டிப் பேச்சு பேசிட்டிருக்கேன்னு என்னைத் திட்றாருங்க”

“பொளந்துருவியா நீ?”

“ஹான், பொளப்பேனுங்கண்ணா”

“எங்க, பொளந்து காட்டுடா பார்ப்போம்”

திருடன்.. ம்க்கும், திருடர்ர் சவால் விட்ட நொடி போலீஸ் வண்டியின் சைரன் ஒலிக்கத் துவங்க.. “இதுக்குத் தானுங்கண்ணா வெய்ட் பண்ணிட்டிருந்தேன்” எனத் தன் உடன்பிறப்பை நோக்கிக் குரல் கொடுத்தவன்.. ஆழ மூச்செடுத்துக் கொண்டு..

பின்னங்காலால் திருடரைப் ‘பாய்ண்டாக’ தாக்க… வலி தாங்க முடியாமல் கத்தியபடி.. இரு கால்களையும் குறுக்கித் தள்ளாடியவனின் கையை வளைத்துக் கத்தியைப் பறித்துக் கொண்டு.. குனிந்து நின்றிருந்தவனின் முதுகில்.. முட்டியை அழுத்தி..

“எப்படிங்கண்ணா நம்ம பேக்-ஷாட்?” என மீண்டும் தன் அண்ணனை நோக்கிக் குரல் கொடுத்தான்.

தம்பியின் செய்கையில் முன்னே வந்த முறுவலை அடக்கியவன் ஒன்றும் கூறாமல் தோளைக் குலுக்க..

“உங்கக் கிட்ட கேட்டேன் பாருங்க, என்னைச் சொல்லோனும்” என்றவன்..

ஜீப்பிலிருந்துக் குதித்த காவலர்களை நோக்கி.. “போலீஸ்ன்னாலே.. சீன் முடிஞ்சப்புறம் தான் வரோணும்ன்னு ஏதாவது இருக்குங்களா?, ஏன் சார் எப்பவும் லேட்டாவே வர்றீங்க?” – எனக் கடுப்புடன் கேட்டான்..

“ஏய்ய் யாரு டா நீ? எங்கக்கிட்டயே ரவுசு பண்ற?” – எனப் போலீசார் எகிற..

“ரகு…..” – என அழுத்தமாய் அழைத்துத் தம்பியை அடக்கியபடி.. முன்னே வந்து நின்றான் உடன்பிறப்பு.

“சார், நான் ஜீவரஞ்சன். திலகவதி ஸ்பின்னிங் மில்ஸ் ஓனர் மிஸ்டர்.துளசிநாதனோட பையன். இவன் என்ற தம்பி ரகுவரன்” என்று கூற..

“வணக்கம் சார்” எனப் பேசத் தொடங்கிய போலீஸ்காரரிடம்.. ரகுவரன் அங்கே நடந்த திருட்டு சம்பவத்தைப் பற்றிக் கூறினான்.

“ஒன்னாந்தேதி ஆனாலே இதே பிரச்சனையா தான் சார் இருக்கு! எங்க பாரு, பிக்-பாக்கெட் கேசு தான்!’ என சலித்துக் கொண்டப் போலீசாரிடம் “சம்பளப் பணத்தைக் கையில வாங்காம பேங்க்ல போட்டு எடுக்குற நிலைமை வர்ற வரைக்கும் இதெல்லாம் மாறாதுங்க” என்ற ரகு அந்தப் பெரியவரின் பணத்தை மீட்டுக் கொடுத்து.. அவரது நன்றியையும் பெற்றுக் கொண்டு.. தன்னையே படபடப்புடன் நோக்கியபடித் தாவணியைத் திருகிக் கொண்டு ஆலமரத்தடியில் நின்றிருந்த பெண்ணிடம் வந்தான்.

அவள் நின்றிருந்த தோற்றம் மெல்லிய சிரிப்பை வரவழைக்க.. பின்னங்கழுத்தில் இரண்டடி நீளத்திற்கு வளர்த்து வைத்திருந்த ‘ஃபங்கைக் கோதியபடி மெல்ல நடையிட்டவன்..

“சின்னச் சின்ன சேதி சொல்லி.. வந்ததொரு ஜாதிமல்லி…

ஆலமரக் காத்தடிக்கும் தோப்போரம்… ஆச மனம் பாடுதொரு தேவாரம்..”

-எனப் பாட.. உதட்டைக் கடித்து முறுவலை அடக்கித் தலை குனிந்தவளிடம்..

“2307896” என்றவன்.. கேள்வியாய்த் தன்னை நிமிர்ந்து பார்த்தவளிடம்..

“என்ற ஃபோன் நம்பருங்கம்மணி!, அடுத்தத் தடவை யாரும் திருட வந்தா.. மறக்காம எனக்கு ஃபோன் போட்டுச் சொல்லுங்க” என்று வழிசலாய்க் கூறிய நொடி.. அவன் பின்னந்தலையில் ஒரு இடியை இறக்கி விட்டு..

“வண்டில ஏறு டா போக்கேத்தவனே” எனத் திட்டியபடியே ஜீவரஞ்சன் கடந்து சென்றான்.

“அப்புறமா பார்க்கலாமுங்க” என அவசரமாய்க் கூறிப் புன்னகைத்து விட்டு “இதோ வர்றேனுங்கண்ணா” என்றவன்.. கடைசியாய்.. போலீஸ்காரர்களிடம் முதுகில் மொத்து வாங்கிக் கொண்டிருந்தத் திருடனின் அருகே சென்றான்.

“அப்பவே.. பணத்தைக் கொடுத்துட்டு ஓடிடுங்கன்னு சொன்னேனல்ல! நீங்கக் கேட்ருக்கலாம்லங்கண்ணா?” – நொடித்துக் கொண்டவனிடம்..

“இன்னும் என்றா அண்ணன்,நொண்ணன்னுட்டு” – எனக் கடுப்படித்தார் திருடர்.

“ஆமாமா,களவாணிப் பசங்களுக்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு!”

“கண்ணு! என்ற கைல ஒரு நாள் நீ சிக்காமலா போவ?, மாட்டுற அன்னிக்கு.. மிச்ச,சொச்சத் தொண்டையையும் நானே அறுத்து ஆப்பரேஷன் பண்ணிப் போட்றேன் பாரு” – ரத்தம் வழிய சபதம் எடுத்தவனைக் கண்டு கட்டுப்படுத்த முடியாமல் கையை ஓங்கியவன் பின் முறைத்து..

“இந்தாளு வாய்லயே ரெண்டு போடு,போடுங்க போலீஸ் மாமா” எனக் கூறி விட்டு நகர..

காரின் முன்னே அவனுக்காகக் காத்து நின்ற ஜீவன்..

“காவாலியா டா நீ? கண்டவனுங்க சகவாசமெல்லாம் வைச்சிருக்கிற?” எனக் கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான்.

“நீங்க பேசாதீங்கண்ணா! காப்பாத்துங்கன்னு கெஞ்சுனப்ப.. எனக்காக சுண்டு விரலைக்கூட அசைக்கல நீங்க! இந்த லட்சணத்துல நீங்களும், நானும் ராமன்,லட்சுமணன் மாதிரின்னு சொல்லிட்டுத் திரியுறாரு வீட்ல ஒரு பெரிய மனுஷன்” – என்று முகத்தைச் சுருக்கினான் ரகுவரன்.

“அப்பாவை மரியாதையில்லாம பேசாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!”

“இப்ப என்ன மரியாதையில்லாம பேசுனதைக் கண்டீங்க?, அவரு எனக்கும் அப்பா தான்றதை மறந்துடாதீங்க!”

“நீ ஞாபகம் வைச்சிருக்கிறதே எனக்கு ரொம்ப சந்தோஷம் டா தம்பி! மிச்ச சண்டையை வீட்டுக்குப் போய் போடுவோமா? நேரமாச்சு! பூஜை முடியுறதுக்குள்ள வீடு போய்ச் சேரோனும்”

“ஆனா, ஒன்னு சொல்றேனுங்கண்ணா! இந்த உலகத்துல என்னோட பெரிய எதிரியே நீங்க தானுங்க”

“ரொம்ப நன்றி டா தம்பி”

முறைப்பும்,முசுட்டு முகமுமாய் பேசுபவனைக் கண்டு ஜீவனுக்குச் சிரிப்பு வந்தது! அவனை விட ஐந்து வயது இளையவன்! 24 வயது இளைஞன்! ஆனாலும் செய்கையும்,பேச்சும் இன்னும்.. சிறுவனைப் போலத் தான்! முதிர்ச்சியடையாத.. இல்லை, முதிர்ச்சியடைய விரும்பாத பிறவி அவன்!

வாய் மூடாது பேசுபவனுக்குப் பதிலளித்தபடி வண்டியை செலுத்திய ஜீவன்.. வீட்டின் முன்பு காரை நிறுத்திய போது.. அவனது இரண்டு காதுகளும் கிட்டத்தட்ட சூடாகியிருந்தது.

“பேசுனது போதும்! வீடு வந்துடுச்சு. இறங்கு”-ஜீவன்.

“நீங்க?”

“நான் வண்டியை ஷெட்-ல போட்டுட்டு வர்றேன்”

“சரி”-யெனத் தலையாட்டியவன்.. வண்டியை விட்டிறங்கி ஒதுங்கி நின்று கொள்ள.. இரு புறங்களிலும் செடிகளோடும், நடுவில் கூழாங்கற்களோடும் நிறைந்திருந்த அந்தப் பாதையில் கார் ஊர்ந்து சென்றது.

வாசல் முழுக்க நிரம்பி வழிந்தக் காலணிகளைக் கண்டபடியே தன் ஷூவைக் கழட்டிய ரகுவரன், எட்டி உள்ளே நோக்கினான்.

மொசைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தக் கூடத்தின் நடுவே பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தப் பானை வயிறுப் பிள்ளையார், ‘விநாயகர் சதுர்த்தியை’ அனுசரிக்கும் பொருட்டு தனக்கெதிரே பரப்பி வைக்கப்பட்டிருந்த பட்சணங்களையும், பண்டங்களையும் ஆசையாய்ப் பார்வையிட்டபடி அமர்ந்திருக்க.. அருகே விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளம் முழுதையும் சிறுசும்,பெருசுமாய் அக்கம்,பக்கத்தினர் நிறைத்திருந்தனர்.

கதம்பப் பூக்களின் வாசனையோடு போட்டி போட்டுக் கொண்டு அவன் மூக்கில் ஏறிய.. ஊதுபத்தியின் மணத்தையும்,விபூதி,சந்தனத்தின் வாசத்தையும் இழுத்து சுவாசித்தபடி கண் மூடித் திறந்தவனின் கருமணிகளில்.. தீப ஜோதியாய் அவள் பிம்பம்!

கூட்டத்தின் நடுவே.. கரும்பச்சை நிறப் பாவாடை-தாவணியில் கனகாம்பரப் பூக்கள் தோளில் வழிந்தோட.. புன்னகையே தன் முகவரியென்பதைக் குறிக்கும் பொருட்டு.. விரிந்த தாமரைப் பூவாய்.. மலர்ந்த இதழ்களுடன் அமர்ந்திருந்தாள் அவள்.

‘மாட்டல்கள்’ பற்றியிருந்த அவளது காதுத் தொங்கட்டான்கள், அவள் முக அசைவுகளுக்கேற்ப நடனமாடும் அழகைக் கண்டபடி.. நகர மறந்து.. மென்மையான சிரிப்புடன்.. வாசருகே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் ரகுவரன்.

கற்றுக் கொண்டக் கீர்த்தனைகளைனைத்தையும் கட்டவிழ்த்து விட்டுக் கடவுளைக் கவரும் முயற்சியிலிருக்கிறாள் போலும்! சம்மணங்காலிட்டபடி அவள் அமர்ந்த விதம்.. அவள் நடத்திக் கொண்டிருக்கும் மினி கச்சேரியை எடுத்துக் கூறியது.

“அக்கா ஒரே ஒரு சினிமா பாட்டு பாடுங்க்கா! ப்ளீஸ்க்கா, ப்ளீஸ்க்கா”

-தொந்தரவு தந்த சிறுமிகளிடம் மூக்கைச் சுருக்கித் தலையசைத்தவள்.. திரும்பித் தன் மாமாவை நோக்க.. அவரும் லேசாகத் தலையாட்டி அவளுக்குச் சம்மதம் தெரிவித்தார்.

அவரிடம் சரியெனப் புன்னகைத்து விட்டு நிமிர்ந்தவளின் விழிகள்.. வாசலில் நின்றவனைக் கண்டு.. அகண்டு.. அலர்ந்து.. அழகு கொண்டு.. ஆனந்தமடைய.. அடுத்த நொடி இமை மூடாமல்.. தன் பார்வையை அவன் மீதே நிலை நிறுத்தியபடி பாடத் தொடங்கினாள்.

“சின்னக் குயில்கள் .. உனை,உனை நலம் கேட்குதா..

நெஞ்சில் பரவும் அலை,அலை உனை ஈரமாக்குதா..

அவனுக்குப் பிடித்த கே.எஸ்.சித்ராவின் குரல்!

இடம்,பொருள்,ஏவலை மதியாமல்.. இலக்கணம் பாராமல்.. அவள் விழிகளிலிருந்து வந்து விழுந்தக் காதல் கணைகளில் ஒன்று கூட அவனை வந்தடையவில்லை!

ஆம்! அவனைத் தாண்டி கடந்து சென்ற அவள் விழி வீச்சு.. முற்று பெற்றதும், முக்தியடைந்ததும்.. பின்னால் நின்றிருந்தவனிடத்தில் தான்!

நொடியில் முகம் மாற.. பக்கவாட்டில் திரும்பியவனின் பார்வை வட்டத்துக்குள் ஜீவரஞ்சன்!

கைகளைக்கட்டிக் கொண்டுக் கதவில் சாய்ந்து நின்றிருந்தவன்.. லேசாகத் தலை சாய்த்தபடி.. தன் காதலியின்.. காதல் கீதத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மெல்ல நகரும் பகல்,பகல் யுகம் ஆகுதா..

மூச்சு விட்டதால் தலையணை, அது தீயில் வேகுதா…

தொடர்ந்த அவளது பாடலிலும்,பார்வையிலும் உள்ளே பற்றியெரிய.. கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்.. ஒரு அடி பக்கவாட்டில் நகர்ந்து.. அண்ணனை மறைத்து நின்றபடி.. அவள் முகம் நோக்கினான் ரகுவரன்.

அப்போது தான் ரகுவரனைக் கவனிக்கிறாள் போலும்! லேசாய் இதழ் சுருக்கி முறைக்க முயன்றுப் பின் சிரித்து.. பார்வை அம்புகளை நொடியில் பாச அம்புகளாக மாற்றி சேயைக் காணும் தாயாய் முக பாவனையை மாற்றியிருந்தாள் அவள்.

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல், கண்ணில் கனவும் வற்றாமல்..

தினமும்.. தினமும்.. உருகும் மனது..

ஏனிந்த நிலைமை.. தெரியவில்லை!

இந்தப் பரவசம்.. உனக்குள்ளும் இருக்கிறதா… அன்பே!

ஏக்கமும்,ஆசையுமாய் பாட்டை முடித்து விட்டு அவள் நிமிர்கையில்.. தம்பியின் தலை முடியைக் கொத்தாகப் பற்றி.. அவனை ஓரந்தள்ளி விட்டு.. முன்னே நடந்தான் ஜீவரஞ்சன்.

“சூப்பர்க்கா,சூப்பர்க்கா” – எனக் கைத்தட்டியக் குட்டீஸ்களிடம் சிரித்து விட்டு எழுந்து நின்றவளின் அருகே வந்தான் ஜீவன்.

“ஜீவா, எப்போ வந்த தம்பி?”

வேலை விஷயமாக இரண்டு நாட்கள் வெளியூர் சென்று வந்தத் தன் மகனைக் கண்டதும் துளசிநாதன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வந்து கேள்வி கேட்க..

அதுவரை அந்த இடத்தில் தன்னையும்,தன் காதலியையும் தவிர வேறு எவரும் இல்லையென்பது போல் பாவித்து.. அவளது முகத்தை மட்டுமே கண்டு.. பரவசம் கொண்டு.. ஆர்வமாய் முன்னே வந்தவன்.. தந்தையின் கேள்வியில்.. சூழ்நிலைக்குத் திரும்பி.. நிதானத்திற்கு வந்து..

“மதியம் 3,3.30 இருக்குமுங்கப்பா” என்றான்.

“போன வேலை நல்ல படியா முடிஞ்சதுங்களா?”

“ஹான் முடிஞ்சதுங்கப்பா” – வாய் அவருக்குப் பதில் கூறினாலும் பார்வை மட்டும் அவளிடத்திலிருந்தது.

“என்ன சொல்றான் திருச்சி மன்னாரு?”

“உன்னைப் பார்க்காம நேரத்தைக் கடத்துறது ரொம்பக் கஷ்டம்ன்னு சொல்றாருங்கப்பா” – முத்திப் போனப் பித்தின் விளைவால் அடிக்குரலில் பிதற்றியவனைக் கண்டு.. பதறி.. அவள் தன் மாமனைப் பார்க்க.. அவரோ மகனின் போதை நிலையை உணர்ந்து “ம்க்கும்” எனக் கனைத்தவராக..

“பூர்ணி, பூஜையை முடி சாமி” என்றுத் தன் மருமகளிடம் கட்டளையிட்டார்.

“சரிங்க மாமா” – எனப் பவ்யமாய்க் கூறிய பூர்ணி, சூடம் ஏற்றி மந்திரத்தை உச்சரித்தபடி அந்தப் பெரிய பிள்ளையார் சிலைக்கு ஆரத்தி காட்ட.. தந்தையுடன் நின்று கை கூப்பிக் கடவுளை வணங்கினான் ஜீவன்.

பூஜை முடிந்ததும் பிரசாதமாக, அங்கிருந்த அனைவருக்கும் பூர்ணி மோதகங்களை வழங்கத் தொடங்க.. கூட்டத்தோடுக் கூட்டமாகக் கை நீட்டிய ஜீவனைக் கண்டு.. சிரித்து.. அவன் உள்ளங்கையில் கிள்ளி விட்டு நகர்ந்தவளின் பின்னேயே சென்றான் அவன்.

“ஏன் டி, எனக்குன்னு எதுவும் ஸ்பெஷலா வைச்சிருக்கியா?” – ஜீவன்

“ஆமாமா, ரொம்ப ஸ்பெஷலா ஒன்னு வைச்சிருக்கேன்” - பூர்ணி

“வாவ்.. நிஜமாவா? எப்போ? எப்போ? எப்போ தருவ?”

“என்ன கொடுக்கப் போறேன்னு தெரியாமலே, இவ்ளோ ஆர்வமா?”

“ஆர்வம் தான்! ரெண்டு நாளாச்சு இல்லியா பார்த்து.. அதனால வந்த ஆர்வம்”

“ப்ச், பின்னாடியே வராதீங் மாமா! இன்னிக்கு நான் விரதம்”

“அப்புறம் எதுக்குடி, எனக்காக ஏங்குனவ மாதிரி அப்படியொரு பாட்டு பாடுன?”

“அது வெறும் பாட்டு-ங்க மாமா”

“நம்பிட்டேன் டி! எதுவா இருந்தாலும் பரவாயில்ல! ஒழுங்கா… இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும், மொட்டை மாடிக்கு வந்துடு!”– அடிக்குரலில் அவளிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தவனை அவள் முறைத்த சமயம்..

“பூர்ணிக்கா, உங்க வீட்டுப் பிள்ளையார் பால் குடிக்குமாமே! வாங்க,வாங்க.. இந்த சுரேஷ் பையன் கேமரா-லாம் எடுத்துட்டு வந்திருக்கான் ஃபோட்டோ பிடிக்க!, சீக்கிரம் வந்து பிள்ளையாருக்குப் பாலை ஊட்டுங்க” – என்று ஒரு சிறுமி அழைக்க.. ஆர்வத்துடன் “இதோ வர்றேன்” என்றவள் அவனிடம் ‘இப்போ பாருங்க, என்ற குரங்கு வித்தையை’ என்பது போல் கண் காட்டி விட்டு.. பெரிய விநாயகர் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய களிமண் சிலையின் அருகே சென்றாள் பூர்ணி.

கிண்ணத்தில் தயாராய் வைக்கப்பட்டிருந்தப் பாலைக் கையில் எடுத்துக் கொண்டவள் “ஒழுங்கா ஃபோட்டோ எடுக்கோனும் டா சுரேஷூ, நான் ப்ரிண்ட் போட்டு பார்ப்பேன்” என அச்சிறுவனை மிரட்டியவள்.. கிண்ணத்திலிருந்த பாலை ஸ்பூனில் எடுத்து தும்பிக்கையின் அருகே நீட்ட.. பிள்ளையாரும் சமத்தாய் அவள் கொடுத்ததை உறிஞ்சிக் கொண்டார்.

சுற்றியிருந்தக் கூட்டம் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தபடி நிற்க.. ‘அடக் கூமுட்டைங்களா’ என்றபடித் தலையில் அடித்துக் கொண்ட ஜீவன் “ரூமுக்குப் போறேனுங்கப்பா” என எரிச்சலுடன் கூறி விட்டு நகர்ந்து விட்டான்.

அவள் ஸ்பூன்,ஸ்பூனாய் அளந்து கொடுத்தப் பாலை.. அமிர்தமாய்ப் பருகிக் கொண்டிருந்தப் பிள்ளையாரைக் கண்டு.. பிள்ளைகள் அனைவரும் கைத் தட்டிக் குதூகலிக்க..

கர்வமாய்ப் புன்னகைத்துக் கொண்ட பூர்ணி “போதும், பிள்ளையாருக்கு வயிறு நிறைஞ்சிருச்சாம்! மிச்சத்தை நாளைக்குக் குடிச்சுக்கட்டும்” எனக் கூற..

“அக்கா, நான் ஒரு ஸ்பூன் கொடுக்குறேன்ங்க்கா, நான்-க்கா, நான்-க்கா” என்று முன்னே வந்து சிறுமிகளை அதட்டி அடக்கி விட்டு.. அவள் கொழுக்கட்டை தருவதாகக் கூற.. சிறுமிகளும் ஆர்வமாய் உண்ணச் சென்றனர்.

கொழுக்கட்டை,பொரி,பயறு மற்றும் பழ வகைகளைத் தட்டில் வைத்து வந்திருந்தப் பெரியவர்களுக்குப் பொறுப்பாய் வழங்கிக் கொண்டிருந்தவளை.. வாசலில் நின்றபடிப் பொறுமையாய்ப் பார்த்திருந்தான் ரகுவரன்.

உள்ளே எழுந்த ஏக்கம்… நீளமான பெருமூச்சாய் வெளி வருகையில்.. அவனது பின்புறத்தைத் தட்டியபடி பக்கவாட்டில் வந்து நின்ற உருவத்தை உணர்ந்து.. எரிச்சலுடன் விழி மூடித் திறந்தவன்.. பின் அந்த உருவத்தின் புறம் திரும்பி..

“என்றா மோகன் இது?” – என்றான்.

“என்ன??” – முட்டியிலிருந்து இரண்டு இஞ்ச் கீழிறங்கியிருந்த டெனிம் நிற ஸ்கர்ட்டும், அடர் சிகப்பில் தொள,தொளவென டக்-இன் செய்யப் பட்டிருந்த டீஷர்ட்டுமாய்… உச்சியில் கவ்வி நின்றக் குதிரை வாலுடன், தன் கோழி முட்டைக் கண்களால் அவனை அளந்தபடிக் கைக் கட்டிக் கேள்வி கேட்டாள் மோகனா.

“ஆம்பளப் பசங்களாட்டம் பண்ணாத டா மோகன்! பொண்ணாட்டம் நடந்துக்க முயற்சி பண்ணு”

“பொண்ணாட்டம்ன்னா? எப்படி? எப்படி நடந்துக்கோனும் – விளக்கம் கொடு பார்ப்போம்! என்ற ரீதியில்.. புருவத்தைச் சுருக்கியபடி அவன் முகம் பார்த்து நின்றவளிடம்.,.

திரும்பிப் பூர்ணியை நோக்கி “அவளாட்டம் இருக்கோனும்” என்றான் ரகுவரன் முகத்தில் மென்மையுடன்.

“பூர்ணி கண்ணு, அசோகன் மாமாவுக்கு காரக் கொழுக்கட்ட ரெண்டு கொண்டு வா டா” என்றத் தன் மாமனின் குரலுக்கு “இதோ வர்ரேனுங்க மாமா” என்ற பூர்ணி, பம்பரமாய் சுற்றிச் சுழன்று வந்தோரைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

“அதாவது வீட்டு வேலை பார்த்துக்கிட்டு, வீட்ல இருக்கிறவங்களைப் பொறுப்பா கவனிச்சிக்கிட்டு, விருந்தாளிங்க வந்தா இந்த மாதிரி இதமா,பதமா நடந்துக்கிட்டு.. வீட்டோடயேக் கிடந்தா.. நல்ல பொண்ணுன்னு நீங்க சர்டிஃபிகேட் கொடுப்பீங்க, அப்படித் தான?”

“அவளைப் பார்த்தா.. நாம கொடுக்குற சர்டிஃபிகேட்டுக்காக இதையெல்லாம் பண்றதாட்டமா தோணுது?, இதெல்லாம் அவளோட இயல்பு டா மோகன்!” – பெருமையாய்க் கூறியவனிடம்..

“அடேங்கப்பா” – என்றவள் அவனைக் குறுகுறுவெனப் பார்க்க..

“என்ன பார்வை?” – என அதட்டியவனின் தோளில் கை பதித்தவள்.. “இங்க வா சாமி” என்றாள்.

“நாலடில இருந்துக்கிட்டு, ஆறடில இருக்குற என்ற தோள்-ல கையைப் போடுவியா டா மோகன்?”

“இப்போ உயரமா முக்கியம்?”

“பின்ன?”

“ரகு..”

“சொல்லு?”

“பட்சி கையை விட்டுப் போய் பல நாளாச்சு டா! பிடிக்கலன்னாலும், நீ இந்த உண்மையை ஏத்துக்கிட்டுத் தான் ஆகோனும்” – தீவிரமாய்க் கூறியவளின் கையை உதறியவன்.. கோபமாய் ஏதோ கூற வாயெடுக்கையில்..

“மோகனா… “ எனத் துளசிநாதன் அழைக்க..

அவசரமாய் அவனை விட்டு இரண்டடி விலகி நின்றவள் “இதோ வந்துட்டேனுங்க மாமா” எனப் பதிலளித்தபடியேக் குடுகுடுவென ஓடிச் சென்றாள்.

குட்டையாய்,கட்டையாயிருந்த அவள் உருவம்.. ஓடிச் செல்கையில்.. உருளைக்கிழங்கை உருட்டி விட்டதைப் போலிருக்க.. அதுவரையிருந்த சோகம் தளர்ந்து.. வாய் விட்டுச் சிரித்தபடித் தானும் உள்ளே சென்றான் ரகுவரன்.

“உன்றப்பன் எங்க கண்ணு??, நல்ல நாள் அதுவுமா என்னத்துக்கு ஃபேக்டரியே கதின்னு கிடக்குறான்?” – தன் கையிலிருந்தக் கொழுக்கட்டையை அவள் கையில் கொடுத்தபடிக் கேள்வி கேட்டவரிடம்..

“மில்லுல இன்னைக்குப் பூஜைங்க மாமா! முடிச்சுப் போட்டு வர்றேனாருங்க” – அவர் கொடுத்ததை வாயில் திணித்தபடிப் பதில் கூறினாள் மோகனா.

“எப்ப? நைட் சாப்பாட்டுக்கா?”

“அதெல்லாம் இன்னும் அரை மணி நேரத்துல வந்திருவாருங்க!” – என்றவள்..

“பூஜைக்கு வர்ற நேரமாடி இது? உடுத்தியிருக்க உடையைப் பாரு! பாவாடை-தாவணி போடாட்டியும் பரவாயில்ல, ஒரு சுடிதாரையாவது மாட்டிட்டு வந்திருக்கலாமில்ல?, நெத்தில பொட்டுக் கூட இல்ல!” -என்றபடித் தூரத்தில் நின்று கொண்டு.. துளசிநாதனின் காதுகளை எட்டி விடாத வண்ணம், சரமாரியாகத் தன்னைத் திட்டிக் கொண்டிருந்தப் பூர்ணியைக் கண்டு கொள்ளாமல்.. மாமனை நோக்கிய மோகனா, அவரிடம் மெல்லிய குரலில்..

“சரி நான் சொன்ன ரகசியத் திட்டத்தைப் பத்தி யோசிச்சீங்களா?” எனக் கேட்டாள்.

“என்ன திட்டம்?”

“ப்ச், அதானுங்க மாமா.. நம்ம மில் கணக்கு வழக்கையெல்லாம் கம்ப்யூட்டர்ல மாத்துறதைப் பத்தி”

“அதெல்லாம் நமக்கு ஒத்து வராது கண்ணு” – எடுத்த எடுப்பில் நிராகரித்தவரிடம்..

“ஹய்யோ மாமா! நாம 20த் செஞ்சுரியை நோக்கிப் போயிக்கிட்டிருக்கோமுங்க! இனி உலகமே கணினி மயமா மாறப் போகுதுங்க! வளர்ந்து வர்ற உலகத்துக்கேத்த மாதிரி நாமளும் மாற வேணாமுங்களா?” – அவள் ஆதங்கத்துடன் வினவ..

“கண்ணு! நம்ம கணக்கர் வடுகனுக்கு நாம எவ்ளோ சம்பளம் தாரோமுன்னு தெரியுமா உனக்கு?”

“தெரியாது”

“மாசம், 3000 கொடுக்குறோம்! நோட்டுல இருக்குற கணக்கை கம்ப்யூட்டர் பொட்டில ஏத்தோனுமின்னா.. அதுக்கேத்த மாதிரி படிப்பு படிச்சவனுங்களைப் பிடிக்கோனும், அவனுக்கு ஏத்த சம்பளத்தைக் கொடுக்கோனும்! அதெல்லாம் நமக்குக் கட்டுப்படியாகாது சாமி”

“மாமா, அதெல்லாம் ஒத்து வரும். நீங்க என்னை நம்பிப் பொறுப்பை ஒப்படைங்க! எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்”

“நீ என்னத்த கண்ணு பார்ப்ப?, நீ நோட்டுல போடுற கணக்குக்கும், ஃபேக்டரி கணக்குக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு! இது என்ன சின்னப் புள்ளைங்க விளையாட்டா?, நம்மை நம்பி எத்தனை குடும்பம் வசிக்குதுன்னு தெரியுமல்லோ?”

“ப்ச், எல்லாம் தெரிஞ்சு தானுங் மாமா பேசுறேன்! கம்ப்யூட்டர் வந்துட்டா.. உங்க வேலை சுலபமாயிடுமுங் மாமா!, உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பேன்?”

“எனக்குப் புரியவே வேணாங்கண்ணு”

“மாமா.. ரெண்டு வருஷம்! ரெண்டே வருஷம் என்னை நம்பி ஸ்டேட்ஸ்க்கு அனுப்புங்க! நான் அங்க போய் இந்தப் படிப்பை படிச்சுட்டு வந்து.. உங்க கணக்கு வழக்கு அத்தனையையும் எப்பிடி மாத்துறேன்னு மட்டும் பாருங்க” – கண்களில் கனவு மின்னக் கூறியவளை ஓரக் கண்ணில் நோக்க..

“ஓஹோ” – என்று அவர் கூற..

“மாமா, என்ன கதையா சொல்லிட்டிருக்கேனுங்?” – எனப் பொறிந்தாள் மோகனா.

“பின்ன என்ன சாமி, ஸ்டேட்ஸ்,பக்கத்துத் தெருவுல இருக்குற மாதிரி சுளுவா சொல்லற?”

“மா..மா.. ப்ளீஸ் மாமா.. நீங்களும் அப்பா மாதிரி பேசாதீங்க! நான் உங்களைத் தான் நம்பியிருக்கேன்”

“அந்தப் படிப்பை இங்க இருந்து படிக்கக் கூடாதா?”

“முடியாதுங் மாமா”

“மாமனுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காத கண்ணு, நான் படிச்ச பசங்கக்கிட்ட விசாரிப்பேன்”

“எனக்கு ஸ்டேட்ஸ் போகோனுங் மாமா” – உர்ரென்ற முகத்துடன் தனது உள் மனது ஆசையை ஒத்துக் கொண்டாள் அவள்.

“வெளிநாட்டு மோகமெல்லாம் நமக்கெதுக்கு கண்ணு? அது போக, பொம்பளப்பசங்களை பெரிய படிப்பு படிக்க வைச்சா, நாளைக்கு அதுங்களுக்கேத்த மாப்பிள்ளையைத் தேடுறது கஷ்டம் டா மோகனா”

“மாமா, இந்த உலகத்துல நான் அதிகமா வெறுக்கிறது பிரிவினையை மட்டும் தான்! அது தொடங்குறது ஆண்,பெண்-ன்னு வித்தியாசம் காட்டுற இடத்துல இருந்து தான்”

“நான் அப்படிப் பிரிச்சுற பார்க்குற ஆளாங்கம்மிணி?”

“இல்ல தான்”

“………..”

“ப்ச், மாமா.. இது மோகம் இல்லீங். வெறி! எதையாவது புதுசா கத்துக்கிட்டு வந்து.. பெருசா செய்யோனும்! சும்மா இந்த மில்லை வைச்சு ஓட்டிக்கிட்டுப் பரம்பரையை வளர்க்கப் போறீங்களா நீங்க?”

“அடக் கழுதை”

“நான் மட்டமா நினைக்கலீங் மாமா. ஆனா.. நாமளும் வளரோனுமல்ல?”

“அதுசரி”

“யோசிங் மாமா”

“………”

“ப்ளீஸ் மாமா”

“பார்ப்போம் பார்ப்போம்! எதுக்கும் அப்புச்சியை ஒரு வார்த்தை கேட்டுக்குவோம்”

“கிழிஞ்சிடும்” – என முணுமுணுத்தவள் கொழுக்கட்டையை வாயில் அடைத்து.. விரக்தியைத் தன் நெஞ்சில் அடைத்தாள்.

பூர்ணி.. பசிக்குது”

-சத்தமாய்க் குரல் கொடுத்தபடி கிட்சனுக்குள் நுழைந்தான் ரகுவரன்.

பூஜை முடிந்து, வந்தக் கூட்டம் சென்றதிலிருந்து வேலையாட்களின் உதவியுடன் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தப் பூர்ணியின் முகத்தில் களைப்பென்பது சிறிதுமில்லை.

“குருவம்மாக்கா.. படையல் போட்டது அப்பிடியே இருக்கட்டும்! நாளைக்கு எடுத்துக்கலாமுங்க!, நீங்க இந்த இட்லியைக் கொண்டு போய் அப்புச்சிக்குக் கொடுங்க”

ஆவி பறக்கும் இட்லிகளை கொப்பரையிலிருந்து எடுத்து ‘ஹாட் பாக்ஸில்’ அடைத்துக் கொண்டிருந்தவள்.. உள்ளே நுழைந்த ரகுவரனிடம்…

“இவ்ளோ நேரமா எங்க டா போனவன்?, கொழுக்கட்டை சாப்பிடக் கூப்பிட்டதுக்குக் கூட வரவே இல்ல? நீ பசியோட இருப்பியேன்னு தான் இப்பிடி வேகு,வேகுன்னு சமைச்சிட்டிருக்கேன் நான்” என்றாள் பூர்ணி.

“அது…… உன்னைப் பச்சைக் கலர் தாவணில பார்த்ததும் கவிதை எழுதத் தோணுச்சு! அதான் ரூமுக்குள்ளாரப் போய்ட்டேன்! அப்புறமா நான் எழுதுனதைக் காட்டுறேன், படிச்சுப் பார்க்குறியா?”

அடுப்படி மேடையில் சாய்ந்து நின்று.. ஆசையாய் அவள் முகம் பார்த்தபடிக் கேள்வி கேட்டவனிடம்..

“எனக்குத் தமிழ் வாசிக்குறது தகராறுன்னு உனக்குத் தெரியுமில்ல ரகு?” – அசடுவழிய.. மண்டையைச் சொரிந்து கொண்டு அவள் கூறவும், வாய் விட்டுச் சிரித்தவன்…

முகம் மாற “புத்தம் புது மலரே.. என் ஆசை சொல்லவா…??” – எனப் பாடுகையில்.. “ம்க்க்க்க்க்கும்” எனக் கனைத்தபடிக் கரடியாய் அடுக்களைக்குள் நுழைந்தாள் மோகனா.

“கிட்சன்ல உனக்கென்றா வேல?, இடத்தைக் காலி பண்ணு முதல்ல” – ரகுவரனை நோக்கிக் கேவலமானப் பார்வையைச் செலுத்தி.. அதட்டியவளிடம்.

“நீ கொஞ்சமும் பயமில்லாம ஊரைச் சுத்தி வரும் போது, அவன் கிட்சன்ல நிற்குறதுல என்னடி தப்பிருக்கு?, போட்டிருக்கிற டிரெஸ்சைப் பாரு! ஒரு நாளாவது பொண்ணா,லட்சணமா உடுத்திருக்கியாடி நீ?” – எனப் பாய்ந்தாள் பூர்ணி.

“ப்ப்ப்ப்ப்ப்ப்ப்” – வாயில் கை வைத்து சிரித்த ரகுவரனை முறைத்த மோகனா..

அவளது பேச்சின் பிற்பாதியை முற்றிலுமாய் புறக்கணித்து விட்டு “ம்ம்ம், இப்பிடியே நீ இவனை உன்ற முந்தானையில ஒளிச்சு வைச்சுக்கிட்டே இரு! உனக்குக் கல்யாணமானப்புறமும் கூட அவன் உன்ற பின்னாலயே சுத்தட்டும்” – என்றாள்.

“வாயைக் குறை டா மோகன்” – பல்லைக் கடித்த ரகுவரன்…

“அவன் என்ற தங்கம் டி, நான் பெறாத பிள்ளை! அப்படித் தான் என்னைச் சுத்தி வருவான்! அதுல உனக்கென்ன பொறாமை?” – என்று பூரணி கூறியதைக் கேட்டு மிதப்பாய் சிரித்தபடி மோகனாவை நோக்கிப் புருவம் உயர்த்த..

நக்கலாய்ச் சிரித்தவள் “பிள்ளையாமா டா ரகு! நல்லாக் கேட்டுக்கோ” – எனக் கண்ணை உருட்டினாள்.

எரிச்சலுடன் அவளை நோக்கி.. அருகிலிருந்த இட்லியை சூடு பாராது.. அவள் வாய்க்குள் திணித்து விட்டு, அவள் துள்ளிக் குதித்து.. ஏகத்துக்கும் அவனைத் திட்டிக் குவிப்பதைக் கண்டு கொள்ளாமல்.. ஹாட் பாக்ஸை எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டான் ரகு.

அவனைத் திட்டிய படியே வாய்க் கொப்பளித்துக் கொண்டிருந்த மோகனாவிடம் “சித்தப்பா எங்கடி இன்னும் ஆளைக் காணோம்?” – எனப் பூர்ணி கேட்க..

“வருவாரு,வருவாரு.” என்றவள் “வாசம் தூக்குது!, என்ன சட்னி வைச்சிருக்க?” எனக் கேட்டபடி அவள் தாவணியில் கையைத் துடைத்தாள்.

“புதுத் தாவணில கையைத் துடைக்காதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?,” எனத் திட்டியவள் தொடர்ந்து “உனக்குப் பிடிச்ச வெள்ளை-வெங்காயச் சட்னி தான். சித்தப்பா வரும் போது வரட்டும், நீ சாப்பிட்டு, இன்னிக்கு இங்கயே படுத்துக்கோ” – என அக்கறையாய்க் கூற..

பெரிதாய் முறுவலித்து.. “ஹாஹாஹா, ஐ லவ் யூ சோ மச் பூர்ணி..” – எனத் தமக்கையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சியவளிடம்..

“ச்சி, போடி” – என அழகாய்ப் பூர்ணி வெட்கம் கொள்கையில்..

“பூர்ணி, சாப்பாடு எடுத்து வை” என்ற ஜீவரஞ்சனின் குரல் கேட்டு இருவரும் மீதிப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளை நோக்கிச் சென்றனர்.

“நீ வந்து.. இலை போட வேண்டும்…

நான் வந்து.. பரிமாற வேண்டும்…”

-பூர்ணி வெளி வருவதற்காகவேக் காத்திருந்தவன் போன்று.. கன்னத்தில் கை வைத்துக் கொண்டு பாட்டு பாடிய ரகுவரனை ஏகத்துக்கும் முறைத்த மோகனா.. கலவரமாய் ஜீவனின் முகத்தை நோக்க.. அவனோ.. பூர்ணி தன் தட்டிலிடும் இட்லிகளை அமைதியாய்ப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

‘இவனுக்குக் கொழுப்புக் கூடிப் போச்சு’ என்றெண்ணிக் கொண்டவள் வேகமாய் சென்று ரகுவின் அருகே அமர்ந்து..

“இப்போ நீ பாட்டு பாடலேன்னு யார் அழுதது?” என அடிக்குரலில் கடிந்தாள்.

“பாட்டு பாடுறது தப்பா?”

“நீ பாட மட்டுமா டா செய்யுற?”

“அது உனக்கும்,எனக்கும் மட்டும் தான டா மோகன் தெரியும்?”

“நீ இப்படிப் பண்ணும் போது, எனக்கு ஹார்ட்-அட்டாக் வராத குறையா நெஞ்சு அதிருது டா” – அழுகைக் குரலில் கூறியவளிடம்..

“செத்துடு!” – என அவன் அசால்ட்டாய்க் கூற..

“டேய்ய்ய்” – என கத்தத் துவங்கியவளை..

“பேசாம சாப்பிடுங்க” என்று அதட்டிய பூர்ணி.. யாருமறியாமல் மெல்ல.. ஒரு கிண்ணத்தை ஜீவனை நோக்கி நகர்த்தினாள்.

புருவம் சுருக்கியபடி அவளை நிமிர்ந்து பார்த்தவனிடம்.. ‘எடுத்துக்கோங்க’ என அவள் கண்ணைக் காட்ட..

“என்ன இது” என்றான் அவன்.

“மதியம் வைச்சப் பாயாசம்” – மெல்லிய குரலில் அவள்.

“வேஸ்ட்-ஆயிடக் கூடாதேன்னு என் வாய்ல ஊத்துறியா?” – அதே மெல்லிய குரலில் அவன்.

“ப்ச், நீங்க மதியமே வருவீங்கன்னு எதிர்பார்த்து… உங்களுக்குன்னு ஆசையா செஞ்சது! இஷ்டமிருந்தா சாப்பிடுங்க!,இல்லேன்னா குப்பைல கொட்டுங்க”

வேக,வேகமாய் தாவணியைத் திருகிக் கொண்டு முசுட்டு முகத்துடன் கூறியவளிடம்.. சிரித்துக் குரலைத் தணித்தவன்..

“இதை இப்போ கொடுத்ததுக்கு, நைட் என்னைப் பார்க்க வரும் போது எடுத்துட்டு வந்திருக்கலாமில்ல?”

“ஏன்?” – அவன் தட்டில் பாயாசத்தை இட்ட படியே கேட்டவளிடம்..

“ப்ச், உனக்கு விஷயமே புரியல பூர்ணி”-என்றான் அவன்.

“என்ன புரியோனும்?” – புருவம் சுருக்கி அவன் முகம் பார்த்தவளை புன்னகையோடு நோக்கியவனின் கண்களில் மையல் ஏற.. அடுத்த நொடி.. பாயாசத்துக்கும்,சட்னிக்கும் வித்தியாசம் தெரியாமல்.. இட்லியைப் பாயாசத்தில் தோய்த்து லபக்,லபக் என விழுங்கிக் கொண்டிருந்தவனை.. ஓரப்பார்வையில் கவனித்த மோகனாவிற்கு வாந்தி வரும் போலிருந்தது.

“அடச் சை! இந்த மாமா என்ன இட்லியை பாயாசத்துல தொட்டு சாப்பிட்டிட்டிருக்காரு! கருமம், என்ன காம்பினேஷனோ” என முனகியபடி அவள் ரகுவரனை நோக்க.. அவனும் தன் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு அண்ணனின் செய்கையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

உள்ளே பொங்கிய சிரிப்பை அடக்கி “ம்க்க்கும்” என்றவள் ரகுவரனின் புறம் குனிந்து..

“காதல்ன்னா, இப்பிடி இருக்கோனும்!, பாயாசத்துக்கும்,சட்னிக்குமே வித்தியாசம் தெரியாம மாமா எப்பிடி முழுங்குது பார்த்தியா?, நீயும் தான் இருக்கியே, எப்பப் பாரு கவிதை பேசி,பாட்டு பாடிக்கிட்டு!” – எனக் கூற..

பதில் பேசாமல் அவளை முறைத்தவன்.. எட்டி அண்ணனிடம் “ஏனுங்ண்ணா, திருச்சில எல்லாரும் இட்லிக்குப் பாயாசத்தைத் தொட்டுத் தான் சாப்பிடுவாங்களோ?” எனக் கத்திக் கேட்டான்.

தம்பியின் காட்டுக்கத்தலில் மோனநிலையிலிருந்து வெளி வந்த ஜீவன், வாயிலிருந்த இனிப்பை உணர்ந்து, செய்த தவறு புரிந்து அவசரமாகத் தண்ணீரைக் குடித்து இட்லியை விழுங்கியவன்..

“ப்ச், நான் இட்லி சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள பாயாசத்தை என்னத்துக்குடி ஊத்துனவ?” – எனப் பூர்ணியிடம் கத்தினான்.

“இப்ப எதுக்குப் பூர்ணியைத் திட்டுறீங்க? அவ ஊத்துற வரைக்கும் நீங்க எங்க மார்ஸ்லயா இருந்தீங்க?,” – பாய்ந்து கொண்டு சண்டைக்குச் சென்ற ரகுவரனைக் கண்டு மோகனா தலையிலடித்துக் கொள்ள..

“பேசாம உட்கார்ந்து சாப்பிடு ரகு” என்ற பூர்ணி “வேற வட்டல்ல இட்லி வைக்கட்டுமுங்களா?” எனச் சுருங்கிப் போன முகத்துடன் ஜீவனிடம் கேட்டாள்..

“வேணாம்,வேணாம்! எனக்குப் போதும்” என்றவன் இருவரையும் ஒரு பார்வை, பார்த்தபடி எழுந்து சென்று விட.. திரும்பி ரகுவரனை முறைத்தாள் பூர்ணி.

“இப்ப என்னத்துக்குடா அவர் கூட சண்டைக்குப் போற?”

“பின்ன, வட்டல்ல இருக்குறது என்னன்னு கூடத் தெரியாம.. வானத்தைப் பார்த்தா மனுஷன் திங்குறாரு?, உன்னை எதுக்குத் திட்டோனும்?”

“உரிமைப் பட்டவருத் திட்டுறாரு, உனக்கு ஏன் டா பொங்குது?” – வெள்ளை வெங்காயச் சட்னியை நாக்கில் ஒற்றி எடுத்தபடி மோகனா.

“ஏன், அப்ப நாங்க யாரு? எங்களுக்கெல்லாம் உரிமையில்லையாக்கும்?”

“எல்லா உரிமையும் உனக்கு இருக்கு கண்ணு, இப்ப என்ன?, உனக்கு 2 இட்லி வைக்கட்டுமா?” – சமாதானமாய்க் கேட்ட பூர்ணியிடம்..

“ஒன்னும் வேணாம்” – என முறுக்கிக் கொண்டான் ரகு.

“வேணாம்ன்னா விடுக்கா. ரெண்டு இட்லி கம்மியா சாப்பிட்டா, சார் ஒன்னும் குறைஞ்சிட மாட்டாரு”

“ஏய், நீ வாயை மூடு டி!, நீ உட்காரு கண்ணு” – என்றவள் இட்லிகளை அவன் தட்டில் வைக்க..

“அப்டின்னா.. நீ ஊட்டி விடு” என்று பேரம் பேசினான் ரகு.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்” – அவனது அலம்பல் தாங்காமல் பொங்கிய மோகனாவைக் கண்டு கொள்ளாமல்.. நின்றபடியே இட்லிகளைப் பிய்த்து அவன் முன்னே நீட்டியவளிடம்.. ஆர்வமாய் வாய் திறந்து அவன் வாங்கிக் கொள்ள.. கடுப்பாகிப் போன மோகனா..

“அங்க உன்னைக் கட்டிக்கப் போற மனுஷன் சாப்பிடாம பாதியில எழுந்து போறாரு! நீ என்றான்னா, அவரைக் கண்டுக்காம இந்தக் காட்டெருமைக்கு ஊட்டி விட்டுட்டிருக்க?, உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மாமா மேல அக்கறையே இல்லக்கா”- என்று பூர்ணியை ஏற்றி விட..

“ஆமாமா, அக்கறையில்லாமத் தான் ஆச,ஆசையா பாயாசம் செஞ்சேன் பாரு” என முணுமுணுத்தப் பூர்ணியின் கோபம், வேகமாய் மாறி.. ரகுவரனின் வாய்க்குள் இட்லியைத் திணித்ததன் விளைவு.. அடுத்த ரெண்டாவது நிமிடம்.. வாயில் நிரம்பி வழிந்த இட்லிகளுடன் விக்கியபடி எழுந்து நின்றான் அவன்.

“கொ..கொ..கொல்லப் பார்க்குறியா என்னை?” – வாயில் அரைபட்ட இட்லிகளுக்கு மத்தியில் விக்கிக் கொண்டே பூர்ணியிடம் கேட்டவனைக் கண்டு..

“ஹாஹாஹாஹா” -வென வாய் விட்டுச் சிரித்தாள் மோகனா.

“சாரி, சாரி ,சாரி டா ரகு, மாமா மேல இருந்தக் கோபத்துல கணக்குப் பார்க்காம, உன் வாய்ல இட்லியைத் திணிச்சுட்டேன், இந்தா, இந்தா தண்ணீ” – தன் வாயில் நீரை வைத்தப் பூர்ணியைக் கண்டு கொள்ளாமல்..

“ஹாஹாஹா” – வென உருண்டு பிரண்டு சிரித்துக் கொண்டிருந்த மோகனாவை அவன் கொலை வெறியுடன் நோக்கிக் கொண்டிருக்கையில்..

“ம்க்க்கும்” எனத் தொண்டையைக் கனைத்தபடி துளசிநாதன் வருகை தர.. அனைவரும் கப்,சிப்பெனத் தங்களது இடத்தில் தஞ்சமடைந்தனர்.

விக்கிக் கொண்டிருந்த மகனையும், அவனருகே, அவனது தட்டில் கை வைத்தபடி நின்றிருந்தப் பூர்ணியையும் கண்டு..

“இன்னும் என்ன ரெண்டரை வயசுக் குழந்தையா அவன்?,ஊட்டி விட்டிருக்கிறவ?” – என அதட்டினார் நாதன்.

அவசரமாய் அருகிலிருந்தத் தட்டில் கையைக் கழுவியபடிக் குனிந்தவளிடம்..

“பொறுப்பா நீ குடும்பத்தைக் கவனிச்சுக்கிற அழகைப் பார்க்க உன்ற அப்பன்,ஆத்தாளுக்குக் கொடுத்து வைக்காம போச்சே கண்ணு” – என நெகிழ்ந்த குரலில் அவர் கூற..

தன் தட்டில் மீதமிருந்த இட்லிகளை விழுங்கிய ரகுவரன் “ம்க்கும், இனி இவரு 20 வருஷக் கதையையும் இழுத்து டின்னரை முடிக்குறதுக்குள்ள, ஆடி போய் ஆவணி வந்துடும்” என முனகியபடியே நைசாக நழுவி விட்டான்.

மாமனின் முன்பு எதுவும் கூற முடியாமல் பல்லைக் கடித்த மோகனா அமைதியாகத் தன் தட்டை நோக்கிக் குனிந்தாள்.

“இதோ, இதெல்லாம் ஆறு மாசக் கைக் குழந்தை” – என அவர் தன்னை நோக்கிக் கை காட்டவும் அவரருகே சென்ற மோகனா..

“நல்ல நாள் அதுவுமா அந்தக் கதையெல்லாம் எதுக்குப் பேசிக்கிட்டு, நீங்க முதல்ல சாப்பிடுங்க மாமா” என்றபடியே அவர் தட்டில் இட்லிகளை அடுக்க.. பொங்கியக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சட்னியைப் பரிமாறியப் பூர்ணியைக் கண்டு..

“அக்கா…” என அதட்டினாள் மோகனா.

“5,51/2 வயசு இருக்கும் போதே நீ, உனக்கடுத்துச் சின்ன,சின்னப் புள்ளைங்களா நின்ன ரகுவையும்,மோகனாவையும் பொறுப்பா கவனிக்கத் தொடங்கிட்ட!, வளர்ந்த பிறகும் கூட உன் குணமும்,பாசமும் மாறாம, இன்னும் அப்படியே இருக்குறதைப் பார்க்கும் போது.. உன்ற மாமனுக்கு மனசு நிறைஞ்சு போகுது கண்ணு”

உணர்ச்சி வசப்பட்டக் குரலில் கூறியவரிடம்…

“எனக்கும், உங்க எல்லாரையும் விட்டா யார் மாமா இருக்கா?” – எனத் தேம்பியபடி அவள் கேட்க..

“பூர்ணி..” என அதட்டியபடி மாடியறையிலிருந்து வெளி வந்து பலகணி வழியே அவளை நோக்கினான் ஜீவன்.

“ஏனுங்ப்பா, அவ இதைப் பத்திப் பேசுனா.. இமோஷனல் ஆவா-ன்னு தெரியாதுங்களா உங்களுக்கு?, எதுக்கு இப்போ இந்தப் பேச்செடுத்து அவளை அழ வைச்சிட்டிருக்கீங்க?”

கோபமாய்த் தன்னிடம் கேள்வி கேட்ட மகனிடம்.. “இல்ல தம்பி, இன்னிக்கு வீட்டுக்கு வந்தவங்க அத்தனை பேரும் என்ற மருமவளைப் பத்திப் பெருமையா பேசுனதும், எனக்கு அவ அப்பன்,ஆத்தா ஞாபகம் வந்திருச்சு! வேற ஒன்னுமில்ல! பூர்ணி, அழாத சாமி, கண்ணைத் துடைச்சுக்க” – என்று நாதன் கூற... வேகமாய்க் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளை எரிச்சலுடன் நோக்கியபடிக் கீழே இறங்கி வந்தான் ஜீவன்.

அவன் வருகையைக் கண்டு கொள்ளாமல்.. “இன்னொரு இட்லி வைக்கட்டுமுங்களா மாமா?” – எனக் கேட்டவளிடம்..

“எனக்குப் போதுங்கண்ணு” – என்றதோடு நாதன் எழுந்து செல்ல..

அவளருகே நெருங்கி “நீ சாப்பிட்டியா?” எனக் கேட்டான் ஜீவன்.

இல்லையெனத் தலையாட்டியவளை நாற்காலியில் அமர்த்தி.. அவள் முன்னே தட்டு வைத்து இட்லிகளை அடுக்கி “சாப்பிடு” என்றான்.

அமைதியாய் அமர்ந்திருந்தவளின் அருகே ஒரு சேரை இழுத்துப் போட்டுத் தானும் அமர்ந்தவன் அவள் முகத்தைத் தன் புறம் திருப்பி “என்னடி?” எனக் கேட்டதும்.. மூக்கு விடைக்கப் பொங்கிய அழுகையைக் கட்டுப்படுத்தியவள்.. முடியாமல்.. கண்களைத் துடைத்துக் கொள்ள..

“ப்ச், எதுக்குடி இந்த அழுகை?, உன்ற அம்மா,அப்பா கூடவே போய்ச் சேர்ந்துட்ட என்றம்மையை நினைச்சு நானும் அழுகட்டுமா?” – எனக் கேள்வி கேட்டான்.

“வேண்டாம்” – தேம்பியபடிப் பதில் கூறுபவளைக் கண்டு..

“உன்னை அழ விட்டு என்னால வேடிக்கை பார்க்க முடியாதுடி, கண்ணைத் துடை முதல்ல! உன்னைப் பெத்தவங்களும், என்னைப் பெத்தவளும் எங்க இருந்தாலும் உன்னையும்,என்னையும் ஆசிர்வதிச்சிட்டுத் தான் இருப்பாங்க. முதல்ல அழுகையை நிறுத்து” என்று அவன், அவளது தோளைத் தட்டிக் கொடுத்ததும்.. ஒரு வழியாக சமாதானமாகி அவள் நிமிர்கையில்..

“சாப்பிடு” எனக் கூறித் தட்டை அவள் புறம் நகர்த்தினான் ஜீவன்.

ஓரப் பார்வையால் அவனை நோக்கிய வண்ணம், “நான் செஞ்ச பாயசத்தைக் கூடக் குடிக்காமக் கோபமா போனீங்க அப்போ?” எனப் பூர்ணி கேட்க..

“நான் தான் நைட் எடுத்துட்டு வா-ன்னு சொன்னேனில்ல?” என மெல்லிய குரலில் கூறினான் ஜீவன்.

“ஹ்ம்ம், ஊசி,நாறிப் போனதைத் தான் குடிக்கோனும்ன்னு உங்க தலைல எழுதியிருந்தா, யாரால மாத்த முடியும்?” – நொடித்துக் கொண்டவளிடம்..

“ஏய் என்னடி, பாயாசம் மதியம் வைச்சது தான? இல்ல, இவன் காதல் மயக்கத்துல எதை வேணும்ன்னாலும் தின்பான்-னு நேத்து செஞ்சதை என்ற வயித்துல கொட்டப் பார்க்குறியா?” -என அலறிய குரலில் கேட்டவனைக் கண்டு அவள் கலகலவென சிரிப்பதை.. மலர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மோகனா… எதேச்சையாக நிமிர்ந்து மாடியறையை நோக்குகையில்..

பலகணியில் நின்றிருந்த ரகுவரனும் அவர்களிருவரையும் புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.