அத்தியாயம் - 2
ஜீவரஞ்சன் மற்றும் ரகுவரனின் தந்தை துளசிநாதன், பூர்ணியின் தந்தை ராஜாமணி, மோகனாவின் தந்தை கணபதி மூவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த நெருங்கிய நண்பர்கள். எந்த அளவிற்கு நெருக்கம் என்றால், நண்பனுடனான உறவு பலப்பட வேண்டுமென்கிற காரணத்திற்காகத் துளசிநாதன், தனது ஒரே தங்கையான பொற்கொடியை ராஜாமணிக்குத் திருமணம் செய்து கொடுக்குமளவிற்கு!
“எனக்கு இன்னொரு தங்கையிருந்திருந்தால் கணபதிக்குத் திருமணம் செய்து கொடுத்திருப்பேன்” எனத் துளசிநாதன் அடிக்கடி நண்பனிடம் கூறுவார்.
ராஜாமணி-பொற்கொடியின் திருமணத்தின் போது ஜீவரஞ்சனுக்கு இரண்டரை வயது. திருமணம் முடிந்த 10 மாதத்தில் அவர்களுக்குப் பூர்ணி பிறந்த விட, அவளுக்கடுத்து இரண்டரை ஆண்டு இடைவெளியில் துளசிநாதன்-தேவகிக்கு ரகுவரன் பிறந்தான்.
துளசிநாதனும்,ராஜாமணியும் இணைந்து ஸ்பின்னிங் மில் ஒன்றைத் தொடங்கி வளர்ச்சி கண்டிருந்த நேரம் அது. தனது டெக்ஸ்டைல் பிஸினசில் மூழ்கிப் போயிருந்தக் கணபதித் திருமணம் பற்றிய எண்ணமின்றி இருக்க, நண்பர்களிருவரும் இணைந்து வற்புறுத்தி, அவரது தூரத்து சொந்தமான மங்கையர்க்கரசியுடன் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
மூன்று குடும்பங்களும் ஒரே தெருவில் வசித்து வர.. மூன்று பெண்களும் தங்களது கணவன்மார்களைப் போன்றே ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
கணபதி-மங்கையர்க்கரசி தம்பதிக்கு மோகனா பிறந்து ஆறுமாதக் கைக்குழந்தையாக இருந்த சமயம்.. நெருங்கிய உறவினர் ஒருவரின் இறப்புச் செய்து கேட்டு, அனைவரும் அருகிலிருக்கும் ஊருக்குக் காரில் புறப்பட்டனர்.
குழந்தைகளனைவரையும் துளசிநாதனின் வீட்டில், குருவம்மாவின் மேற்பார்வையில் விட்டு விட்டு பெண்கள் மூவரும் ராஜாமணியின் துணையோடு புறப்பட, ஃபேக்டரியிலிருந்த துளசிநாதனும்,கணபதியும் வேலையை முடித்துக் கொண்டுப் பின்னால் வருவதாகக் கூறியிருந்தனர்.
“தாய்ப்பால் கொடுக்குற புள்ள நீ, கண்டிப்பா வரனுமா கண்ணு” எனக் கேட்டத் தேவகியிடம் “மல்லிகா-க்காக் கூட நான் உசுராப் பழகியிருக்கேன், எப்பிடிக்காப் போகாம இருக்குறது, மோகனாவுக்குத் தான் புட்டிப்பால் கொடுத்துப் பழக்கியாச்சே!, ஒரு எட்டு பார்த்துப் போட்டு வந்திடலாம்” என மங்கையர்க்கரசி கூறி விட.. அனைவரும் ஒன்றாகக் காரில் ஏறி விட்டனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மூன்று பெண்களும், சம்பவ இடத்திலேயே உயிர் நீத்து விட.. ராஜாமணி கோமா நிலையில் பத்து நாட்கள் கிடந்து.. அதன் பின் இறைவனடி சென்று சேர்ந்தார்.
நான்கு குழந்தைகளும் தாயை இழந்து அநாதையாக நிற்க.. துளசிநாதனுக்கும்,கணபதிக்கும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட நிலை! இறந்த மனைவியை நினைத்து வருத்தம் கொள்வதா, உயிராய்ப் பழகியத் தோழனை நினைத்து மருகுவதா அல்லது.. பச்சிளம் குறுத்தாய்ப் பாலுக்கு அழும் குழந்தைகளை நினைத்து அழுவதா என.. நிலை குலைந்து போய்க் காட்சி தந்தனர்.
துளசிநாதனின் தந்தையான சுவாமிநாதன் நிலைமையைக் கையிலெடுத்துக் கொண்டு அடுத்து ஆக வேண்டியதை முடிக்க.. பெரியவர்கள் இருவரும் குழந்தைகளின் முகத்தைக் காண முடியாமல்.. முற்றிலும் உடைந்த நிலையில் காணப்பட்டனர்.
குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவேனும் திருமணம் செய்து கொள்ளும் படி சுவாமிநாதன், ஆண்களிருவரையும் கேட்கையில்.. இருவரிடமும் மௌனமே பதிலாகக் கிடைக்க.. ஒரு நிலைக்குப் பிறகு அவரும் அவர்களை வற்புறுத்தவில்லை.
மோகனாவைத் தன்னுடன் கூட்டிச் சென்று வளர்ப்பதாகக் கணபதி கூறிய போது சுவாமிநாதன் மறுத்து விட்டார். நால்வரும் ஒரே வீட்டில் ஒன்றாக வளரட்டுமென்று அவர் கூறிய போது மறுக்கா விட்டாலும்.. அவர் மட்டும் தனி வீட்டில் வசித்து வந்தார்.
குழந்தைகளோடு இங்கேயே தங்கும் படி துளசிநாதன் வற்புறுத்தியும் மறுத்து விட்டார். ஒரே தெரு தானே!, நினைக்கும் போது வந்து செல்கிறேன் என்றதோடு முடித்து விட்டவரை, மற்றவர்கள் எதிர்த்து எதுவும் கூறவில்லை.
எட்டு வயது ஜீவரஞ்சனுக்கு வீட்டு நிலவரம் புரிபட்டு விட்டது. பூர்ணிக்கு அனைத்தையும் புரிந்து கொள்ளுமளவிற்குப் பக்குவமில்லையென்றாலும்.. எந்நேரமும் அழுது வடியும் ரகுவரனைத் தூக்கி விளையாட்டுக் காட்டிச் சமாதானம் செய்வதில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள். கைக்குழந்தையான மோகனா முழுவதுமாக வேலைக்காரி குருவம்மாவின் கவனிப்பில்!
அன்றிலிருந்து இன்று வரை நால்வரின் இயல்பிலும் சிறிது கூட மாற்றமில்லை!
எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அறிந்து,புரிந்து நின்று,நிதானமாய் யோசித்து.. எவருக்கும் கஷ்டம் கொடுக்காமல் தன் பொறுப்பையும்,கடமையையும் உணர்ந்த மனிதனாக ஜீவரஞ்சன் வளர்ந்து நின்றான்.
சுற்றி நடக்கும் அனைத்தையும் புரிந்து கொள்ளுமளவிற்கு அறிவும்,முதிர்ச்சியும் இல்லாவிட்டாலும்.. சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைப் பொருத்திக் கொண்டு.. தனக்குக் கீழிருக்கும் இரு சிறுசுகளின் நிலையை மனதில் வைத்தபடி.. அவர்களிருவரும் தன்னுடைய பொறுப்பென்கிற எண்ணத்துடனே பூர்ணி வளர்ந்தாள்.
தங்களுக்கு மேலே மூத்தவர்களிருவர் பொறுப்புடன் இருக்கையில் இளையவர்களுக்கு என்னக் கஷ்டம் வந்து விடப் போகிறது?, பெரிதாக எதைப் பற்றியும் சிந்திக்காமல்,கவலை கொள்ளாமல்.. அவர்களிருவர் கொடுக்கும் செல்லத்தில்,கண்டிப்பில், அக்கறையில், அன்பில்.. முழுதாய் நனைந்தபடி சொகுசாக வளர்ந்த சீமாட்டிகள் தான் ரகுவரனும்,மோகனாவும்.
அன்று அன்னையை இழந்து, மூக்கில் நீர் வடிய அழுது கொண்டு நின்றவனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சிய பூர்ணி, அவன் வளர்ந்த பிறகும் கூட, அவனை இறக்கி விட மனம் வைத்ததில்லை!
கைக்குழந்தையான மோகனாவுடன் குருவம்மா பிஸியாகி விட.. பொறுப்பான ஆண் பிள்ளையாய் ஜீவரஞ்சன் தந்தைமார்களுடன் ஐக்கியமாகி விட.. தனியே நின்ற பூர்ணிக்குக் கிடைத்தப் பொழுதுபோக்கு பொம்மை அவன்!
அவனைக் குளிப்பாட்டுவது,சோறூட்டுவது, கதை சொல்லித் தூங்க வைப்பதென, அவனைத் தனது தனிமை போக்க வந்த விளையாட்டு பொம்மையாக அவள் உடன் வைத்துக் கொள்ள.. அன்னையின் நிழல் தேடி அலைந்தவனும், அவளையே அனைத்துமாக பாவித்து அவளை ஒண்டியே வளர்ந்து வந்தான்.
ரகுவரனும்,மோகனாவும் வளர்ந்த பின்பு.. இருவருக்கும் சோறு ஊட்டி,சீருடை மாட்டிப் பள்ளிக்கு அனுப்பத் துவங்கிய பூர்ணிக்குத் தானும் படிக்க வேண்டுமென்கிற எண்ணம் துளியும் இல்லாமற் போனது.
ரகுவரனை விட இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் மூத்தவள் தானென்றாலும், அடுத்தடுத்து ஃபெயில் ஆகித் தொலைந்ததால் கடைசியில் அவனுடனே,அவன் வகுப்பில் ஒன்றாகப் படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
ஆனால்.. பூர்ணியைத் தவிர மற்ற மூவரும் படிப்பில் படு சுட்டி!
பரீட்சைத் தாளில் அவர்கள் பெறும் நூற்றுக்கு நூறை, இவள் அடுக்களையில் தன் கைவரிசையைக் காட்டிக் குருவம்மாவிடம் வாங்கினாள்.
வீட்டைச் சுத்தம் செய்வது, தோட்டத்தில் செடி நடுவது, கைவினைப் பொருட்கள் செய்வது,பாட்டு படிப்பதென அவளுக்கான ரசனை மற்ற மூவரிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது.
அவள் படிப்பில் படு மக்காக இருப்பதை மற்ற அனைவரும் பெரிதாகக் கண்டு கொள்ளா விட்டாலும், துளசிநாதனின் தந்தையும், அவளது அன்னையைப் பெற்ற அப்பனுமான அப்புச்சி சுவாமிநாதன், ஒவ்வொரு முறையும் அவள் ஃபெயில் ஆகி வந்து நிற்கையில்.. அவளைப் பிரம்பால் சாத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆதலால் வீட்டு விஷயங்களில் ஸ்கோர் செய்து வீட்டில் அனைவரது பாசத்திற்கும் பாத்திரமாக விளங்கும் பூர்ணி, பயப்படுவதும்,பதுங்குவதும் சுவாமிநாதன் ஒருவருக்குத் தான்.
அவள் பிரம்படி வாங்கும் போதெல்லாம் தாத்தாவிடமிருந்து அவளைக் காக்கும் பொறுப்பை ரகுவரன் பெற்றிருந்தான்.
அடி வாங்கித் தவ்விக் குதித்து ஓடுபவளின் பின்னே “அடிக்காதீங்கய்யா, அடிக்காதீங்கய்யா” எனத் தானும் ஓடுபவனைக் கண்டு ஜீவரஞ்சன் போகிற போக்கில் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்து விடுவானென்றால்.. மோகனாவோ கையில் ப்ரிக் கேம்-ஐ வைத்து விளையாடியபடி இருவரையும் நோட்டம் விட்டுக் கொண்டு நமுட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருப்பாள்.
பூர்ணிக்கில்லாதத் தெளிவையும்,புரிதலையும் அந்த வயதிலேயே பெற்றிருந்த மோகனா.. கிட்டத்தட்ட ஜீவரஞ்சனின் மறு பதிப்பாயிருந்தாள்.
ரகுவரன் நன்றாகப் படிப்பான். பேச்சு,பாட்டு,விளையாட்டு,கவிதை எழுதுவது, அரசியல் பேசுவது, உலக நடப்பை அலசுவது என விசாலமான அறிவைப் பெற்றிருந்தவனுக்கு.. காசு,பணம்,பிசினஸ்,சம்பாதிப்பது என்பது போன்ற விஷயங்களிலெல்லாம் பெரிதாக ஆர்வமிருந்ததில்லை.
பத்தாம் வகுப்பில் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு.. அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் களம் இறங்குபவனைப் போன்று வெகு ஈடுபாட்டோடு முழு மூச்சாகக் கற்றுக் கொண்டிருந்தான். பின் என்ன நினைத்தானோ! ஆறே மாதத்தில் அதை முழுக்குப் போட்டு விட்டு.. கூடைப்பந்தைக் கையில் எடுத்துக் கொண்டான்.
சில நேரம் புத்தகங்களோடு லைப்ரரியில் தவமிருப்பான்! கீ-போர்டு,வீணை,கிட்டார் என சில நேரம் இசைக்கருவிகளோடு உலா வருவான்! எல்லைகளற்ற ஆர்வத்தைக் கொண்டிருந்தவன்.. வீட்டில் எவருக்கும் கட்டுப்பட்டதில்லை.
நிலையாக ஒரு விஷயத்தில் நிற்காமல், ஜீவனைப் போலல்லாது இஷ்டத்திற்குத் தன் போக்கில் அலைபவனைக் கண்டு துளசிநாதனுக்கு எரிச்சல் தான்! அவனைத் திட்ட வாய் திறந்தாலே.. பூர்ணி புஸ்,புஸ்ஸென மூச்சு விட்டுக் கொண்டு முன்னே வருவதாலோ என்னவோ.. முறைப்புடன் நிறுத்தி விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஜீவரஞ்சன் அன்பையும்,அக்கறையையும் வெளிப்படுத்துபவன் கிடையாது. பெரிதாகப் பேசிக் கொள்ள மாட்டான்! அனைத்தையும் தூர நின்று கவனிப்பதோடு சரி! அதிலும் கல்லூரிப் படிப்பை முடித்துத் தந்தையுடன் தொழிலில் இணைந்து விட்ட பிறகு, இவர்களுடன் செலவழிக்கும் நேரம் வெகுவாகக் குறைந்து போனது அவனுக்கு.
மோகனா, பூர்ணி மற்றும் ரகுவரனுக்குக் கிட்டத்தட்ட எதிரியைப் போன்றவள்! இருவரிடமும் வம்பு வளர்க்காமல், அவளது நாட்கள் நகர்ந்தது கிடையாது. இருவரும் புரியும் கூட்டுக் களவாணித்தனத்தைப் பெரியவர்களிடம் போட்டுக் கொடுக்கும் வில்லி அவள்!
நினைத்தக் காரியத்தை எப்படியேனும் சாதித்துக் கொள்வாள்! துளசி நாதனின் செல்லப் பிள்ளை! கணபதிக்கு அவள் பூர்ணியைப் போல, அடக்க,ஒடுக்கமானப் பெண்ணாய், வீட்டு வேலைகளைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்பவளாய் வளர வேண்டுமென்கிற ஆசை! ஆனால் அவள்.. பூர்ணிக்கு நேர் எதிராய் வளர்ந்து.. கணபதியின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டாள்.
அன்னையாய்,தோழியாய்,சகோதரியாய் உடன் வளர்ந்தப் பூர்ணியின் மீது பாசத்தைத் தாண்டிய பிணைப்பை வளர்த்திருந்தான் ரகுவரன். அவன் உடுத்தும் உடையிலிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தையும் தீர்மானிப்பவள், அவனது உலகமாயிருந்தாள், அவளுக்கான அவனது எண்ணங்களில் அவன் ‘அந்த’ மாற்றத்தை உணரும் வரை!
“நிலா காயும் நேரம் சரணம்..
உலா போக நீயும் வரனும்..
பார்வையில் புது புது புது புது புது..”
இழுத்துக் கொண்டிருந்த கேசட்டைக் கண்டு எரிச்சலுற்று, கையிலிருந்தப் புத்தகத்தைக் கீழே வைத்து விட்டு டேப் ரெக்கார்டரின் அருகில் வந்தான் 17 வயது ரகுவரன்.
பட்டனை அழுத்திக் கேசட்டைக் கையிலெடுத்தவன், அதன் வெளியே தொங்கிக் கொண்டிருந்த நாடாவைக் கண்டு “ப்ச்” என்றபடி மேஜையிலிருந்தப் பேனாவை எடுத்து, கேசட்டின் ஓட்டைக்குள் நுழைத்து அதைத் திருகியபடி நாடாவை உள்ளே தள்ளத் துவங்கினான்.
தீவிரமாக அவன் திருகிக் கொண்டிருந்த வேளை, தடதடவெனப் படியேறி வந்து அவன் முன்னே மூச்சு வாங்க நின்றாள் 15 வயது மோகனா.
இடுப்பில் ஒரு கையும்,நெஞ்சில் ஒரு கையுமாய் விழி மூடியபடி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டு கேசட்டைத் திருகியபடியே எழுந்து நின்றவன்..
“எப்பிடி மூச்சு வாங்குது பார்த்தியா டா மோகன்?, இதுக்குத் தான் அளவாத் திங்கோனும்! குருவம்மா குருமாவுக்கு அடிமையாகி ரசிச்சு,ருசிச்சு பத்துப் பூரி தின்னா.. இப்பிடித் தான் பத்துப் படி ஏறக் கூட முடியாம, நெஞ்சைப் புடிச்சுக்கிட்டு நிக்கோனும்” என்றான்.
“கீழ வா”
அவனது கேலியை முற்றிலுமாகப் புறந்தள்ளி விட்டு மூச்சு வாங்கியபடியே கூறியவளிடம்..
“என்னத்துக்கு?” என்றான் அவன்.
“நெல்லிக்கா பறிக்கத் தான்” – ஓரக்கண்ணில் அவனைப் பார்த்தபடியே கூறியவளிடம்..
“வாயை எப்போ தான் டா மோகன் ரெஸ்ட்ல வைச்சுப்ப?, இதே தான் வேலையா உனக்கு?, தினம் அரை நெல்லிக்காயைத் தின்னு,தின்னுத் தொண்டையைக் கெடுத்துட்டு, பாட்டு க்ளாஸ்ல பசங்க வாய்ஸ்ல பாட வேண்டியது” – சலித்துக் கொண்டான் அவன்.
“ஆமாமா, இல்லாட்டியும் என் வாய்ஸ்ல சித்ராவும்,ஜானகியும் சமபந்தி போஜனம் நடத்திட்டிருக்காங்க” – நக்கலாய்க் கூறியவளைக் கண்டு சிரித்து..
“எங்க இருந்து டா மோகன் இப்படிப் பேசக் கத்துக்கிட்ட?” – என்று கேட்டவனிடம்..
“ப்ச், எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. சீக்கிரம் வா!” – என்றவள் வம்படியாய் அவனை இழுத்துக் கொண்டுக் கீழே சென்று, மரத்திலிருந்த அரை நெல்லிக்காய்களை அவன் பறித்துக் கொடுத்ததும் முழு சிரிப்புடன் வாங்கித் தன் ஜியோமெட்ரிக் பாக்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டாள்.
அழுக்கிலும்,பேனா மையிலும் ஊறிக் கிடக்கும் நெல்லிக் காய்களை வகுப்பில் ஆசிரியருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகத் தின்பதில் தனி சுகம்!
கையைத் துடைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தவன், அடுக்களையிலிருந்து வெளி வந்தப் பூர்ணியைக் கண்டு வேகமாக அருகே சென்றான்.
இவனைக் கண்டதும் திகைத்துப் பெரிதாய் முழித்த பூர்ணி பின்..
“என்ன வெயில், என்ன வெயில், ஜில்லுன்னு ஒரு எலுமிச்ச ஜூஸ் குடிச்சா நல்லா இருக்கும். என்ன கண்ணு?” எனக் கேவலமான இளிப்புடன் கேள்வி கேட்டாள்.
“இருக்கும், இருக்கும்”
“ஏன் முகத்தை அப்படி வைச்சிக்கிற?, இங்கயே உட்காரு, நான் போய் உனக்கு ஜூஸ் போட்டுக் கொண்டு வர்றேன்”
“ப்ச், பூர்ணி! படிக்கிறதா உனக்கு ஐடியாவே இல்லையா?”
அவன் எதைக் கேட்டு விடுவானென்கிற அச்சத்தில் ஓட விரும்பினாளோ.. அவன் அதைக் கேட்டு விட.. மெல்லத் தலையைச் சொரிந்தவள்..
“ஆ…மா… படிக்கோனுமில்ல?” என்றாள்.
“இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் பூர்ணி. காசு கொடுத்தெல்லாம் பாஸ் பண்ண வைக்க முடியாது”
“என்ன கண்ணு, சொல்லிக் காட்டுறியா?” எகிறியவளிடம்..
“இத்தனை வருஷம் அப்படித் தான பாஸாகிட்டு இருக்க நீ?, அப்படியும் இடைல ரெண்டு வருஷம் ஃபெயிலு?” – என்று அவன் மேலும் நக்கலடிக்கக் கடுப்பாகிப் போனவள்..
“இப்ப என்னன்ற?” – என்றாள்.
“நான் கொடுத்த கணக்குக்கு பேலன்ஸ் ஷீட் பார்த்துட்டியா,இல்லையா?”
“அ…அ..அது வந்து”
“நீ கண்டிப்பா ஃபெயில் ஆகத் தான் போற! அப்புச்சிட்ட பிரம்படி வாங்கத் தான் போற”
“ஏன் தம்பு இப்படி சொல்ற?”
அதுவரை எகிறிக் கொண்டிருந்தவள் ‘அப்புச்சி’ என்ற சொல் கேட்டு அடங்கி, அவனிடம் பாவமாய் வினவினாள்.
அவள் ‘தம்பு’ என்கிற வார்த்தையை ரகுவரனை நோக்கி உச்சரிக்கிறாளென்றால்.. அவள் அதிகபட்ச பயத்திலோ, பாசத்திலோ இருக்கிறாளென்று அர்த்தம்!
இருக்கும் சூழ்நிலை அவளது பயத்தை எடுத்துக் கூற.. அவளைச் சமாதானப்படுத்தும் விதமாய்..
“சரி,சரி போ. போய் நோட்டை எடுத்துட்டு வா, நான் சொல்லித் தரேன்” என்றான் ரகு.
அவன் கூறியதும் ஓடிச் சென்று அவள் நோட்டை எடுத்துக் கொண்டு வர.. இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து பாடம் படிக்கத் தொடங்கினர்.
தான் பொறுமையாகப் பத்து முறை கூறியும் கூடத் தலையாட்டலைத் தவிர, புரிந்ததைப் போன்ற எந்தப் பாவனையும் காட்டாது அமர்ந்திருந்தவளைக் கண்டுப் பேனாவைக் கீழே போட்ட ரகுவரனுக்கு சிரிப்பு வந்தது.
முடியைக் கோதியபடி இருபுறமும் தலையை ஆட்டியவன்.. “உன்னை மாதிரி ஒரு மக்கை நான் பார்த்ததேயில்ல பூர்ணி” எனக் கூற.. ஆமோதிப்பது போல் அமைதியாயிருந்தவள் அவன் முகத்தைக் காணாமல் நேர் எதிரே நோக்கியபடி அமர்ந்திருக்க.. காலை உணவிற்காக இவர்களருகே வந்தமர்ந்தான் ஜீவன்.
இருவரையும் கண்டபடி அவன் உணவு உண்ணத் துவங்க..
“கடைசியா சொல்லித் தரேன். நல்லாக் கேட்டுக்கோ” – என்றபடி ரகுவரன் கூறியதையும், பூர்ணியின் முகத்தையும் நோக்கி ஜீவன் உண்டு முடித்து இவர்களருகே வந்தான்.
“புரிஞ்சதா?” – ரகுவரன் கேட்டதும்..
“ம்ம்ம்ம்ம்ம்ம்.. ம்ம்” என்றவளின் தலை நாலாபுறமும் சென்று வந்தது.
“எங்க, இந்தக் கணக்கைப் போடு பார்ப்போம்” – அவன் கேட்டதும் பதறிப் போனவள்..
“இல்ல, இல்ல, நான் அ..அப்புறமா போட்டுப் பார்த்துட்டு ஏதும் சந்தேகம்ன்னா, உன்ற கிட்ட வந்து கேட்குறேன்!” என்றாள்.
அவளது ரியாக்ஷனைக் கண்டு முன்னே வந்த ஜீவன் “அவன் சொல்லித் தந்தது புரியலயா?” என்று வினவினான்.
“நா..ன் அப்ப்….ப்பிடி சொல்லவே இல்லியே”
“அப்டின்னா கணக்கைப் போடு” – ஜீவன் ஸ்ட்ரிக்ட் வாத்தியாராகக் கூறியதும் வேறு வழியின்றி நோட்டைக் கையிலெடுத்தவள்.. வெகு தீவிரமாய் யோசித்து.. ஓரக் கண்ணில் இருவரையும் பார்வையிட்டபடி.. மெதுவாகத் தொடங்க..
கைகளைக் கட்டிக் கொண்டு நின்ற படி ஜீவனும், அதே நிலையில் அமர்ந்தபடி ரகுவரனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
“பத்துல 2 போச்சுன்னா.. எ..எட்டு! அ..அ..அப்புறம், ஆ..ஆறுல நா..நாலு போச்சுன்னா.. ரெ…ரெண்டு”
பொறுமையாக வாய் விட்டுக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தவளைக் கண்டுக் கடுப்பான ஜீவன்,
“இங்க கொடு” எனக் கூறி.. ரகுவரன் விளக்கியதை வேறு பாணியில் விளக்கத் துவங்க..
“இ..இப்ப லை..லைட்-ஆ புரியுற மாதிரி இருக்கே” என்றவாறுத் தலையைச் சொரிந்தவளைக் கண்டு எரிச்சலுற்றவன்.. பேனாவை விட்டெறிந்து..
“பேசாம நீ மொட்ட மனப்பாடம் பண்ணிடு. அதான் உனக்கு ஒதுக்கு வரும்” என்றவன் புத்தகத்தைத் திருப்பி.. சில,பல கணக்குகளைக் குறித்துக் கொடுத்தான்.
“இதை மட்டும் நல்லாப் படிச்சுக்க. பாஸ் ஆகிடலாம்” என்று கூறி விட்டு அவன் நடையைக் கட்ட.. செல்லும் அவனையே பார்த்திருந்தவள்..
“மாமா, ரொம்ப அறிவாளியாட்ருக்கு ரகு! எவ்ளோ நல்லா சொல்லிக் கொடுக்குது பாரேன்!” என சிலாகித்துக் கூற காண்டான ரகுவரன்..
“தினம் 4 மணி நேரம் உன்ற கூடப் போராடுற நான் அறிவாளி இல்லையா?” என்றான்.
“நீ சொல்லிக் கொடுக்குறது எதுவும் என்ற மரமண்டைக்குப் புரிபட மாட்டேங்குது டா ரகு! மாமா பாரேன்! கணீர்,கணீர்ன்னு நாலே வார்த்தைல எவ்ளோ சுருக்கமா, சுலபமா சொல்லிக் கொடுத்துடுச்சு”
“அதுசரி, அப்டின்னா தினம் நீ அவர் கிட்டயே படி” – எனக் கூறிய ரகுவரன் எரிச்சலுடன் எழுந்து செல்ல..
ஜீவன் எழுதிச் சென்றதை எடுத்து இப்படியும்,அப்படியும் திருப்பி நோக்கியவள்..
“அறிவாளிங்க கையெழுத்தெல்லாம் இப்படித் தான் இருக்குமாட்ருக்கு” எனக் கூறி உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.
மறுவாரம் அவர்களிருவரும் எழுதிய மிட்-டெர்ம் பரீட்சையின் முடிவு வந்திருந்தது.
எதிர்பார்த்தபடி பூர்ணி ஃபெயில் ஆகியிருக்க.. தான் அவளுக்குப் பாடம் எடுத்துப் பாஸ் ஆக வைக்க, எடுத்த முயற்சிகளனைத்தும் மண்ணைக் கவ்வி விட்டதைக் கண்டு கொள்ளாமல்,
“இதை எப்படி ஐயா கிட்டக் காட்டப் போற பூர்ணி?” என்று கவலையுடன் விசாரித்தான் ரகுவரன்.
“அதைத் தான் நானும் யோசிக்கிறேன், பேசாம, நம்பரை மாத்திப் போட்டு விட்றவா?”
“அவரு கண்டுபிடிச்சிட்டா?”
“பிரம்படி தான்”
“இப்ப என்ன பண்றது?”
“எங்க உன்ற பேப்பரைக் காட்டு”
“200/200” - என்றிருந்த அவனது பேப்பரைப் பார்த்து விட்டு..
“ப்ச், நீ ஏன் கண்ணு இவ்ளோ நல்லா படிக்கிற?, கொஞ்சம் கம்மியா வாங்கியிருந்தேயின்னா.. உன்ற பேப்பரை, என்ற பேப்பராக் காட்டி தப்பிச்சிருப்பேன் நான். இப்ப அதுக்கும் வாய்ப்பில்லாம போச்சு”
அவள் சலித்துக் கொண்டிருந்த வேளை..
“என்றா இங்க மாநாடு போட்டுட்டிருக்கீங்க?” – தன் அறை வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த இருவரையும் கண்டபடி மாடியேறி வந்து கொண்டிருந்தான் ஜீவன்.
இருவரும் அமைதியாக நிற்க..
“கேள்வி கேட்டா பதில் வராதோ?, கைல என்ன பரீட்சை பேப்பரா?”- என்றான் அவன்.
“……….”
“என்றா கம் போட்டு ஒட்டுனா மாதிரி, வாயை இறுக்கி மூடி வைச்சிருக்கீங்க?” என்றவன் தம்பியின் பேப்பரை எட்டிப் பார்த்து விட்டு.. பூர்ணியை நோக்கித் திரும்பினான்.
அவன் பார்வையை உணர்ந்து, மெல்ல பேப்பரை அவள் பின்னோக்கிக் கொண்டு செல்லும் வேளை, பட்டெனப் பறித்துக் கொண்டவன் அவள் எடுத்து வைத்திருந்த மார்க்கை வாசித்துக் காட்ட..
“எ..என்ற அனுமதியில்லாம, என்ற பேப்பரை என்னத்துக்கு நீங்க பார்க்குறீங்க?” – என்று அவள் பொங்கிய வேளை..
“ரகு..” என்ற சுவாமிநாதனின் குரலில் அண்ணனை நோக்கியவன்..
“பேப்பரை அவகிட்டக் கொடுங்கண்ணா, நாங்க கீழ போகோனும்” என்றான்.
“வேணாம், வேணாம். பேசாம நீங்களே வைச்சுக்கங்க, அப்புச்சி கேட்டா பேப்பரைத் தொலைச்சிட்டேன்னு சொல்லிக்கிறேன்”
“ப்ச், பூர்ணி”
கையை உதறிக் கொண்டு நிற்பவளைக் காணப் பாவமாக இருந்தது ரகுவிற்கு.
“எதையாவது சொல்லி சமாளிச்சுக்கலாம். வா பூர்ணி”
“ரகு……” – தொடர்ந்து சுவாமிநாதனின் குரல்.
“வர்றேனுங்கய்யா” – என்றவன்.. “வா பூர்ணி” என்று விட்டுப் படியிறங்கிச் சென்று விட..
நகத்தைக் கடித்துக் கொண்டு நின்றவளைக் கண்டு.. தோள் குலுங்க வாய்க்குள் சிரித்தபடி அருகே வந்தான் ஜீவன்.
அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டவள்.. புருவம் சுருக்கி..
“என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு?” என்றாள்.
“ஏன் டி, படிக்குறது அவ்ளோ கஷ்டமா உனக்கு?”
“கஷ்டம் தான்! அதுக்கு என்னவாம் இப்ப?”
“கோபம் வேற வருதா உனக்கு?”
“பின்ன?, இப்ப உங்க கைல கரண்டியைக் கொடுத்து சமைக்கச் சொன்னா உங்களால முடியுமா? அது போலத் தான் எனக்கும். படிப்பு வரல. என்னால முடியல. இது பெரிய விஷயமா?”
“சமையல் வராதுன்னாலும், இருக்குற மூளையை வைச்சு தேவைக்கு,பசிக்கு எதையாவது செஞ்சு திங்குற அளவுக்கு எனக்கு அறிவு இருக்குடி. ஆனா நீ பாரு, பார்டர்ல கூட பாஸ் ஆக முடியாத தத்தியா இருக்க?”
“தத்தி,கித்தின்னீங்கன்னா, எனக்குக் கெட்டக் கோபம் வரும் சொல்லிப்போட்டேன்”
“எங்க கோபப்படு! கோபப் பட்றி பார்ப்போம்!, இதை மட்டும் படின்னு நான் 4 கணக்கைக் குறிச்சுக் கொடுத்தேனே! அதைப் படிச்சிருந்தா கூட பாஸ் ஆகியிருக்கலாம்”
“ஆகியிருக்கலாம் தான்! என்ன பண்றது? அதை மனப்பாடம் பண்ணி மண்டைல ஏத்திக்கிற அளவு கூட எனக்கு அறிவில்லாம படைச்சுட்டான் ஆண்டவன்”
“இப்ப ஆண்டவனை எதுக்குடி இழுக்குற?”
“பின்ன, பத்து,பாஞ்சு வருஷமா ஸ்கூலுல வாத்தியாருங்க அவ்ளோ நல்லா சொல்லிக் கொடுத்தே இத்தனை வருஷம் நான் ஃபெயில் ஆயிட்டிருக்கேன்! இவரு ஒரு நாள், ரெண்டு நிமிஷம் நின்னு படபடன்னு சொல்லிக் கொடுத்துட்டுப் போவாராமா! நான் அதை மடமடன்னு படிச்சுப் பாஸ் ஆகிடனுமாம்! இதெல்லாம் நடக்குற காரியமா?” – ஓரப்பார்வையால் அவனைப் பார்த்தபடி அங்கலாய்ப்புடன் கூறியவளைக் கண்டு வாயடைத்துப் போனது ஜீவனுக்கு.
“படிக்காம, என்ன தான் டி பண்ணலாம்ன்னு இருக்க வாழ்க்கைல?”
பளீர் சிரிப்புடன் அவனை நோக்கியவள்..
“உங்களுக்காவது இப்படி என்ற கிட்டக் கேட்கோனும்ன்னு தோணுச்சே” என்று பாராட்டி விட்டு..
“படிப்பு வராட்டி வேற என்னத்தைப் பண்றது! உங்கம்மையையும், எங்கம்மையையும் மாதிரி.. நல்ல பையனாப் பார்த்துக் கல்யாணம் கட்டிக்கிட்டுப் பிள்ளை,குட்டிகளுக்குச் சோறாக்கிப் போட்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான்” – என்றவளிடம்..
“என்னடி இப்படி சொல்ற?” எனக் கேட்டான் ஜீவன்.
“ஏன் என்ன இல்லாததைச் சொல்லிப்போட்டேன் நான் இப்ப?”
“மோகனா மாதிரி உனக்குக் கனவு,லட்சியம்,அப்டி,இப்டின்னு எதுவும் கிடையாதா?”
“அப்டி,இப்டின்னு புளுகுற அந்தக் கழுத கிட்ட, தக்காளி சேவையைக் கண்ணுல காட்டுங்க, தட்டைத் தூக்கிக்கிட்டு முதல் ஆளா வந்து நிற்கும்” – சவாலாய்க் கூறியவளைக் கண்டு சிரித்து..
“சமையல்ன்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா?”- என்றான் அவன்.
“ஆமா, ரொம்ப இஷ்டம்! காலைல உறிஞ்சு,உறிஞ்சு குடிச்சீங்களே ஆட்டுக்கால் பாயா, அது கூட நான் சமைச்சது தான்! தெரியுமல்லோ?” – பெருமையாய்க் கூறினாள்.
“அதுசரி”
“……..”
“அப்டின்னா, ஒரு நல்லவனாப் பார்த்துக் கல்யாணம் கட்டிக்கிட்டுக் குடும்பம் நடத்துறது தான் உன்ற லட்சியம்?”
“ல..ல..லட்சியம்ன்னு சொல்லிட முடியாது. நமக்கு எது வருமோ அதை லட்சியம்ன்னு வைச்சுக்கலாமே…ன்ற நினைப்புல தான்.. ஏ..ஏ…ன்… எ..எ..என்னத்துக்கு இவ்ளோ பக்கத்துல வர்றீங்க?”
அவளருகே நெருங்கி வந்தவனைக் கண்டுத் திகைத்துப் பதறியவளிடம் பொறுமையாக..
“சரி, இந்த நல்லவனைப் பத்தி என்ன நினைக்குற” என்றான் அவன்.
“யா..யாரை?,”
“என்னைத் தான்! ஏன், என்னைப் பார்த்தா நல்லவன் மாதிரி தெரியலையா உனக்கு?”
மெல்லிய புன்னகையோடு.. அமைதியான குரலில் வினவியவனைக் கண்டு விழி விரித்து.. “எ..என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்றாள் பூர்ணி.
“நீ தானடி சொன்ன?, கல்யாணம் பண்ணிக்கனும், புள்ள,குட்டிக்கு சமைச்சுப் போடனும்ன்னு!, அதுவும் நீ வைச்ச ஆட்டுக்கால் பாயாவோட டேஸ்ட் வேற காலைலயிருந்து நாக்கை விட்டுப் போய்த் தொலைய மாட்டேங்குது”
“அ…அ..அதுக்குன்னு?”
“ப்ச், என்னத்துக்கு இப்பப் பின்னாடியே போறவ?, உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன்! நில்லு இங்கனயே”
“அ..அப்படியெல்லாம் நிற்க முடியாது”
“ப்ச், நான் நேராவே கேட்குறேன்! என்னைக் கட்டிக்கிறியா?”
தன் முகம் நோக்கிக் குனிந்துக் கேள்வி கேட்டவனைச் சுருங்கிய புருவங்களுடன் நோக்கியவள்..
“ஏன் திடீர்ன்னு இப்பிடி கேட்குறீங்க?” என்றாள்.
“திடீர்ன்னு கேட்கோனும்ன்னு தோணுச்சு”
“ஏன் தோணுச்சு?”
“………”
“எ…எ..என்னைக் காதலிக்குறீங்களா?” – சந்தேகமாய் வினவியவளிடம்..
“அப்பிடிச் சொல்லிட முடியாது”
“பின்ன?”
“ஏன், காதலிக்குறேன்னு சொன்னாத் தான் கட்டிக்க ஒத்துப்பியாக்கும்?”
“அ…அ..அப்பிடி இல்ல”
“அப்புறம் என்ன?, வா கட்டிக்கலாம்”
“எ….எ..என்னது?, எ..எந்தக் கட்டிக்கிறதைச் சொல்றீங்க நீங்க?”
“அப்போ சொன்னது.. தாலி கட்டி பொண்டாட்டியா என் கூடக் குடும்பம் நடத்துறதைப் பத்தி, இப்போ சொல்றது.. இப்படிக் கட்டிக்கிறதைப் பத்தி” என்றவன்.. அவள் கையைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க முயற்சிக்க.. முழுதாய் அதிர்ந்து போனவள்..
பதறி அவனிடமிருந்து விலகி “கை..கை..கையை விடுங்க” என்று சப்தமின்றித் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த வேளை..
“அண்ணாஆஆஆஆஆ” என்று கர்ஜித்த ரகுவரனின் குரல் கேட்டு.. அதிர்ந்து அவளை விலக்கினான் ஜீவன்.
அவன் கையை விடுவித்தும் கூட திகைப்பு மாறாது நின்ற பூர்ணி, இருவருக்கும் முகம் காட்டாமல் பட்டென மறுபுறம் திரும்பிக் கொள்ள.. அவளருகே சென்று அவள் தோளைப் பற்றினான் ரகுவரன்.
ஜீவன் பற்றியிருந்தக் கையைத் தேய்த்தபடித் தலை குனிந்து நின்றிருந்தவளிடம் ஒரு பார்வையைச் செலுத்தி விட்டு கோபத்துடன் அண்ணனை நோக்கினான்.
“என்ன நடக்குது இங்க?”
தன்னையே அதட்டியவனைக் கண்டு எரிச்சலுற்ற ஜீவன்..
“என்றா?” என்றான்.
“எதுக்கு அவ கையைப் பிடிச்சீங்க?”
“ஏன்? பிடிச்சா என்ன தப்பு?”
“எந்த உரிமைல பிடிக்குறீங்க?”
அவன் கேள்வியில் பொறுமையைத் தொலைத்த ஜீவன்..
“ம்ம்ம்! நீ எந்த உரிமைல இப்போ அவ தோள்ல கையைப் போட்டிருக்கியோ! அதே உரிமைல தான் கையைப் பிடிச்சேன்” – என்றான்.
“அண்ணாஆஆ..”
“என்றா?, என்ற கிட்டயே குரலை உசத்துற?”
அண்ணன் எகிறியதும் தன் கர்ஜனையைக் குறைத்த ரகு..
“இது பொம்பளப்பசங்க இருக்குற வீடு! ஆம்பளைங்க நாம கண்ணியமாத் தான் நடந்துக்கோனும்” – என்று அவனை ஓரக் கண்ணால் பார்த்தபடி முசுட்டு முகத்துடன் கூற… கடுப்பின் உச்சத்துக்கே சென்ற ஜீவன்… அவன் தலையில் ஓங்கி ஒரு இடியை இறக்கி “யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுறவன்?? வயசுக்கேத்த மாதிரி பேசிப் பழகு” -எனக் கூறி... பூர்ணியை முறைத்தபடி நகர்ந்து விட்டான்.
அவன் சென்றதும் நெற்றியைப் பிடித்த பூர்ணி..
“நீ என்னத்துக்கு கண்ணு அவர் கூட சண்டைக்குப் போற?” என்றாள்.
“அவர் உன்ற கையைப் பிடிச்சது தப்பு தான?”
“அதெப்படி கண்ணு அப்படி சொல்லிட முடியும்?”
“எது???”
பேச்சு வாக்கில் கூறியவளைக் கவனித்து அவன், அவளை ஒரு மாதிரியாக நோக்க..
“அய்யோ! இந்த டென்ஷன்ல அப்புச்சியை மறந்துட்டேன் பாரு” எனப் பதறிக் கொண்டு அவள் படியிலிறங்கி ஓட.. அறைக்குள் நின்றுத் தன்னை முறைத்துக் கொண்டிருந்த அண்ணனைத் தானும் பதிலுக்கு முறைத்து விட்டுக் கீழிறங்கினான் ரகுவரன்.
அதன் பிறகு என்ன நினைத்தானோ.. பூர்ணியைத் தனியே விடாமல் தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தான்.
இரவு உணவுக்கு ஜீவன் தன் அறையை விட்டு வெளி வராது போக.. அப்புச்சிக் கொடுத்தப் பிரம்படியால் காந்தியக் கைகளை ஊதிக் கொண்டே மாடியறையை நோக்கியபடி அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள் பூர்ணி.
அவள் பார்வை நொடிக்கொரு முறை மாடிக்குச் சென்று வருவதைக் கண்ட துளசிநாதன்..
“என்ன கண்ணு” எனக் கேட்டார்.
அவர் தன்னைக் கண்டு கொண்டதில் வியர்த்துப் போனவள் “வ..வந்துங் மாமா.. அ…அ..அவரு சாப்பிட வரலீங்! அ..அதான்….” – என இழுக்க..
“எவரு?” – என்றார் அவர்.
“ம்ம்ம்,எல்லாம் இந்த வீட்டு மூத்த மவன் தான்” – பதில் ரகுவரனிடமிருந்து நக்கலாக வர.. அவனை முறைத்தவர்..
“அண்ணன்னு சொல்லத் தெரியாதோ?” என்றார்.
“ஆமா, அந்த நொண்ணனுக்கு மரியாதை ஒன்னு தான் குறை” என முணுமுணுத்தவன் தொடர்ந்து..
“அவரு இன்னிக்குப் பண்ணுன வேலையைப் பத்தித் தெரிஞ்சதுனா, நீங்க இப்படிப் பேச மாட்டீங்க! சும்மா அவரைத் தலைல தூக்கி வைச்சு எல்லாரும் கொண்டாடுறதால தான் மனுஷன் எல்லாத்தையும் பண்ணிட்டுத் தைரியமா சுத்துறாரு”
“வாயை மூட்றா! உன்னை விட மூத்தவன் அவன்! வயசுல மட்டுமில்ல! அனுபவத்துலயும் தான்! உனக்கு அவனைப்பத்தி பேச எந்தத் தகுதியும் கிடையாது”
“ஆமாமா, அவருக்கிருக்கிறத் தகுதியை வைச்சு அவர் என்ன செய்யத் துணிஞ்சார்ன்னு உங்க மருமவ கிட்டக் கேளுங்க முதல்ல! அப்புறம் என்ற கூட சண்டைக்கு வரலாம்”
-அவள் கமுக்கமாக மூடி விட நினைத்த விஷயத்தை ரகுவரன் அக்கப்போராக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட பூர்ணிக்கு கோபத்தில் பல்லைக் கடிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
“அப்படி என்ன நடந்ததுன்னு இவ்ளோ கோபப்பட்ற?” – அமர்ந்திருந்த நாற்காலியிருந்துப் பாதி வெளியே தொங்கிக் கொண்டிருந்தத் தொடையுடன்… கொழு,கொழுவென்றிருந்த மோகனா.. வழக்கம் போல் வெள்ளை-வெங்காயச் சட்னியில் தோசையைக் குளிப்பாட்டியபடிக் கேள்வி கேட்க..
அவளருகே அமர்ந்திருந்த ரகுவரன், அவள் தட்டில் மற்றுமொரு தோசையை வைத்து..
“எட்டுக்கு மேல தாண்டி போயிட்டிருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும்! ஆனாலும், இந்தா இன்னொன்னை வைச்சு வாயை அடைச்சுக்க! ஏன்னா.. விஷயம் 18+” என்றான்.
“அப்போ.. எனக்குக் கண்டிப்பாத் தெரிஞ்சாகனுமே” எனக் கூறி அவள் கண்ணடிக்க.. பல்லைக் கடித்தபடி முறைத்தவனைக் கண்டு கொள்ளாமல்..
“பூர்ணிக்கா.. என்னாச்சு? நீ சொல்லு” என்றாள் மோகனா.
அனைவரும் தன் முகம் பார்ப்பதைக் கண்டு விதிர்த்துப் போன பூர்ணி..
“இ..இவன் ஏதோ ஒளப்பிரிக்கிறானுங் மாமா! ஒ..ஒ..ஒன்னுமில்லீங்க!, அவரு கணக்கு சொல்லிக் கொடுத்தும் நான் பாஸாகலேன்னு லே..லேசா திட்டுனாருங்க! அவ்ளோ தான் நடந்தது” எனக் கூறிக் கொண்டிருக்கையிலேயே இடை புகுந்த ரகுவரன்..
“எதுக்கு இப்போப் பொய் சொல்ற நீ? அப்பா.. அண்ணன்..” எனத் தொடங்கவும் பதறிய பூர்ணி..
“மோகனா, அந்தக் குச்சிக்கிழங்கை எடுத்து அவன் வாயை அடை டி” எனக் கூற.. மோகனாவும் யோசிக்காமல்.. கிழங்கை அவன் வாயில் அடைத்துப் பேச்சை நிறுத்த..
பெருமூச்சை வெளியிட்ட பூர்ணி.. “நீ..நீங்க சாப்பிடுங்க மாமா! நான் தோசை எடுத்துட்டு வர்றேனுங்” எனக் கூறி ஓடியே விட்டாள்.
“எனக்குப் போதுங்கண்ணு!” என்று குரல் கொடுத்த நாதன் மகனை முறைத்தபடி நகர்ந்து விட..
தன் செய்கையால் புரையேறி ‘லொக்,லொக்’ என இருமியவனின் தலையில் தட்டிக் கொண்டிருந்த மோகனா “பெருசா ஏதோ நடந்திருக்காட்ருக்கு, பூர்ணி முகமே சரியில்லை?” என்று யோசனையாய் அவனிடம் கேட்க.. அவளை முறைத்தவன் அவள் கையை உதறி விட்டுச் சென்று விட்டான்.
அன்றிரவு அனைவரும் உறங்கச் சென்றதும், அடுக்களையைச் சுத்தம் செய்து விட்டு.. நகத்தைக் கடித்தபடியே மேடை மீதிருந்த ஹாட் பாக்ஸை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணி.
பின் என்ன நினைத்தாளோ.. அதைக் கையில் எடுத்துக் கொண்டு விறுவிறுவென மாடியை நோக்கி நடந்தாள்.
அதுவரை டைனிங் டேபிளில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த ரகுவரன், அவள் மாடிக்குச் செல்வதைக் கண்டு வேகமாக அவள் பின்னே வந்தான்.
“எங்க போற நீ?”
அவன் கேள்வியில் திடுக்கிட்டு அவன் புறம் திரும்பியவள்.. ‘இவன் தானா’ என ஆசுவாசம் அடைந்துப் பின் நெஞ்சை நீவியபடி..
“நீ இன்னும் தூங்கலையா கண்ணு?” – என்றாள் மெல்லிய குரலில்.
“நீ எங்க போற-ன்னு கேட்டேன்”
“பார்த்தா தெரியல? உன்றண்ணனுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போறேன்”
“ஏன்?, அவருக்குக் கை இல்லையா? இல்ல கால் தான் இல்லையா? பசிச்சா கிட்சனுக்கு வந்து அவரே கொட்டிக்க மாட்டாரா? நீ என்னத்துக்கு எடுத்துட்டுப் போற?”
“………..”
“நான் சொல்லிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கப் போயிட்டே இருக்க”
“அ..அ..அவரு பசி தாங்க மாட்டாரு ரகு”
“ஓஹோ”
“ஒரு எட்டு கொடுத்துப்போட்டு வந்துட்றேனே!”
“……….” – அவன் பதிலேதும் கூறாமல்.. தன்னையே ஆராய்ச்சியாய் நோக்குவதைக் கண்டுத் திகிலடைந்தவள்.. அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு.. அவசரமாய் ஜீவனின் அறைக் கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்த ஜீவனின் முகம்.. வாசலில் நின்றவளைக் கண்டு ஒரு நொடி மலர்ந்துப் பின்.. பின்னால் நின்றவனைக் கண்டு சுருங்கியும் போய் விட.. எரிச்சலுடன் “என்ன?” என்றான்.
“சா..சாப்பாடுங் மாமா” – ஹாட்பாக்ஸை அவன் முகத்தின் முன்பு நீட்டினாள் பூர்ணி.
“யாருக்கு?”
“பூர்ணி.. வா போகலாம்” – கடுப்புடன் ரகு.
“அட இரு கண்ணு! உங்களுக்குத் தானுங்க மாமா! சாமத்துல பசியெடுக்குமேன்னு கொண்டு வந்தேனுங்க”
அக்கறையாய் அவள் கூறியதும்.. உள்ளே குளிர்ந்தாலும் மறைத்து.. பதில் கூறாமல்.. மேஜையில் வைக்குமாறு தலையசைத்து விட்டுத் திரும்பிச் சென்றான் ஜீவன்.
“துரை, அதை வாயைத் திறந்து சொல்ல மாட்டாராக்கும்” – என்று முணுமுணுத்த ரகுவரன் எரிச்சலுடன் பலகணிக்குச் செல்ல.. பூர்ணி ஹாட்பாக்ஸூடன் ஜீவனின் அறைக்குள் நுழைந்தாள்.
கொண்டு வந்ததை மேஜையில் வைத்தபடி “4 தோசை வைச்சிருக்கிறேனுங்க! சூடு ஆறுறதுக்குள்ள… சா…” – என்று அவள் முடிப்பதற்குள்.. அவள் அருகே நெருங்கிய ஜீவன், அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட… திகைத்துப் பாதியில் பேச்சை நிறுத்தினாள் பூர்ணி.
சிலையாய் நின்றவளைக் கண்டு ரசனையாய் சிரித்தவன்..
“உன்ற கையைப் பிடிச்சதுக்கே அந்தக் குதி,குதிச்சானே உன்ற மாமன் மவன்! அவன் கிட்டப் போய் சொல்லு!, இந்த உலகத்துலயே உன்ற மேல உரிமையிருக்கிற ஒரே ஆளு நான் மட்டும் தான்னு” எனக் கூற.. அவன் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ஓடிச் சென்று விட்டாள் அவள்.
தடதடவெனப் படியில் ஓடுபவளைக் கண்டு முன்னே வந்த ரகுவரன், அவள் செல்லும் திசையை நோக்கியபடி அறை வாசலில் நின்ற ஜீவரஞ்சனை முறைத்து..
“இப்போ என்ன செஞ்சீங்க அவளை?” என்றான்.
தம்பியின் கேள்வியில் அதுவரையிருந்த இதம் மாற.. கையைக் கட்டிக் கொண்டு அவனை நோக்கியவன்..
“ம்ம், முத்தம் கொடுத்தேன்! அதான் வெட்கப்பட்டு ஓடிட்டா” என்றான்.
சுள்ளெனத் தலைக்கேறியக் கோபத்துடன் தன்னையே முறைப்பவனைக் கண்ட ஜீவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஏன் டா உனக்கு மட்டும் தான் இந்த வீட்டுப் பொண்ணுங்க மேல அக்கறை இருக்கா?, எனக்கில்லையா?”
“உங்க அக்கறையோட அழகைத் தான் நான் பார்த்தேனே!” – நொடித்துக் கொண்டவனின் தலையில் தட்டக் கை ஓங்கியவனிடம்..
“இன்னொரு தடவை அடிச்சீங்கன்னா.. எனக்குக் கோபம் வந்துடும் சொல்லிப் போட்டேன்” எனச் சீறினான் ரகுவரன்.
“வரட்டும்! அப்படிக் கோபம் வந்து.. நீ என்ன செய்றன்னு நானும் பார்க்குறேன்” – சவால் விட்டபடி மீண்டும் கையை ஓங்கியவனிடமிருந்துத் தப்பித்து..
“வே…வேணாங்ண்ணா!, அப்புறம், உங்க உறவே வேணாம்ன்னு அப்பா கிட்ட சொத்தைப் பிரிச்சுக் கொடுக்கச் சொல்லிக் கேட்பேன்” எனக் கூற..
“உன்னை….” என முன்னே வந்த ஜீவனைக் கண்டு அடித்துப்பிடித்துக் கொண்டு கீழே ஓடி விட்டான் ரகுவரன்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு ரகுவரன், பூர்ணியின் ‘பெர்மனண்ட்’ பாடி-கார்டாக மாறி விட.. அவனைக் கடந்து பூர்ணியைத் தனியே சந்திக்க முடியாமல் அரும்பாடு பட்டுப் போனான் ஜீவன்.
அந்த வருடம் எழுதிய பொதுத் தேர்வில் எப்படியோ பூர்ணி பாஸாகி விட, மேலே படிக்கச் சொல்லி வற்புறுத்திய அப்புச்சியின் காலில் விழுந்து ‘வேண்டாம்’ என மன்றாடி.. அவரது சம்மதத்தையும் பெற்று விட்டாள்.
நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த ரகுவரனை எந்தக் கல்லூரியில் சேர்க்கலாமெனத் துளசிநாதனும்,கணபதியும் விசாரித்துக் கொண்டிருக்க.. தான் ‘டிராயிங் அண்ட் பெயிண்டிங்’ சம்மந்தமான படிப்பைத் தொடரப் போவதாக அறிவித்து அவர் தலையில் இடியை இறக்கினான் ரகுவரன்.
அவன் பதிலில் வெகுண்ட துளசிநாதனை பூர்ணியும், ஜீவனும் சமாதானம் செய்ய..
“நாம பார்க்குற தொழிலுக்கும், இவன் சொல்ற படிப்புக்கும் ஏதாவது சம்மந்தமிருக்கா?, என்னத்துக்கு இப்படிப் பேசோனும்?” – எனக் கோபமாய்ப் பொங்கியவரிடம்..
“நீங்க சொல்ற படிப்பைப் படிக்கிறதுல எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லீங்ப்பா! 3 வருஷம் காலேஜ் படிப்பு,அப்புறம் மில்-ஐ கவனிச்சிக்கிறதுன்னு அண்ணனை மாதிரி என்னால இருக்க முடியாதுங். கொஞ்சம் என்னையும் புரிஞ்சுக்கோங்க”
“சரி, இந்தப் படிப்பை முடிச்சுட்டு என்ன செய்யலாம்ன்னு இருக்க?”
“அது… படிப்பை முடிச்சப்புறம் தானுங்-ப்பா யோசிக்கனும்”
“அப்ப கூட நீ யோசிக்கத் தான் செய்வ?, எதுக்காகப் படிக்கிறோம்ன்ற தெளிவே இல்லாம இருக்குற உன்ற பேச்சை நான் கேக்கோனுமா?”
“எதுக்காகப் படிக்கிறேனா?? ம்ம்ம்ம்… என்ற திருப்திக்காகப் படிக்கிறேனுங்ப்பா! எனக்குப் பிடிச்சப் படிப்பு எனக்கு சந்தோசத்தைக் கொடுக்கும்ன்ற நம்பிக்கையில படிக்கிறேனுங்கப்பா! போதுங்களா? இந்தத் தெளிவு போதும்ங்களா?”
“வீடு,வாசல், தோப்பு,துறவுன்னு இருக்குற பணக்காரனுக்கு மகனா பொறந்தா.. இப்படி எகத்தாளமாத் தான் பேசத் தோணுங்கண்ணு”
“இதுல என்ன எகத்தாளத்தைக் கண்டீங்க?, என்ற விருப்பத்தை நான் வெளிய சொல்லக் கூடாதா?”
“ரகு…” அதட்டிய ஜீவனிடம்..
“நான் கோபப்படாம பொறுமையா தானுங்ண்ணா பேசுறேன்! அவரையும் அப்பிடியே பேசச் சொல்லுங்க”-என்றான்.
“என்றா பொறுமையா பேசோனும்?, ம், என்ன பொறுமையா பேசோனும்? உன்ற தலைல நீயே மண்ணை வாரிப் போட்டுக்கிறதைப் பார்த்துக்கிட்டுச் சும்மா நிற்கச் சொல்றியா?, படிச்ச படிப்பு எந்த விதத்துலயும் பிரயோஜனப்படாம நீ தெருவுல நின்னா.. யார் டா உனக்கு சோறு போடுவா?”
“அதுக்குத் தான அப்பா-ன்னு நீங்க இருக்கீங்க”
“ஜீவாஆஆஆ….” – பல்லைக் கடித்துக் கொண்டுத் தந்தை கோபத்தை அடக்குவதைக் கண்டு..
“ரகு, நீ உள்ள போ! அப்புறம் பேசிக்கலாம்” – எனத் தம்பியை அனுப்பி வைத்த ஜீவன்..
“பொறுமையா இருங்கப்பா! சின்னப் பையன் தான? சொன்னாப் புரிஞ்சுக்குவான்” எனக் கூறி அவரைச் சமாதானப்படுத்தி விட்டுத் தம்பியிடம் சென்றான்.
“இந்தத் தோசையை சாப்பிடு கண்ணு! காலைலயிருந்து ஒன்னும் சாப்பிடாம கிடக்க”
ரகுவின் அறையில்.. பூர்ணி அவனது வாயில் தோசையைத் திணித்துக் கொண்டிருப்பதைக் கண்டபடியே வந்தவன் அவனருகே அமர்ந்தான்.
அவனைக் கண்டதும் எழுந்து நின்றவளை எரிச்சலுடன் நோக்கிய ரகு.. அவளிடமிருந்துத் தட்டைத் தன் கையில் வாங்கியபடி “நீ போ” என்றான்.
அவன் செய்கையில் பல்லைக் கடித்த ஜீவன் “இதுக்கொன்னும் குறைச்சலில்லை” எனப் புகைய..
“வேறெதுக்குக் குறைச்சலா இருக்கோம்?” என்றான் ரகு.
“அய்யோ! புதுசா எதையும் ஆரம்பிக்காதீங்க” என எரிச்சல்பட்ட பூர்ணி, ஜீவனிடம்..
“நீங்களும் அவனைத் திட்ட வேணாம். பொறுமையாக் கேட்டா போதும்” எனக் கூற.. மேலும்,கீழுமாய் அவளை நோக்கியவனைக் கண்டு..
“பூர்ணி நீ போ” என்றான் ரகுவரன்.
அவள் சென்றதும்.. கையைக் கட்டிக் கொண்டுத் தம்பியை நோக்கிய ஜீவன்..
“என்ன தான் டா நினைச்சு வைச்சிருக்க நீ?” என்றான்.
“சண்டை போட வந்திருக்கீங்களா?”
“இல்ல”
“அப்போ இங்க உட்காருங்க, என் ப்ளானை சொல்றேன்” – எனப் படுக்கையைத் தட்டிக் கை காட்டியவன்.. அவன் அமர்ந்ததும்.. ஊட்டியிலிருக்கும் காலேஜின் பெயரைச் சொல்லி.. தான் படிக்க நினைத்திருக்கும் கோர்ஸைப் பற்றி விளக்கி.. வரைதலின் மீது தனக்கிருக்கும் ஆசைகளை எடுத்துரைத்து.. அங்கு படித்து வெளி வந்த மாணவர்கள் சாதித்த விஷயங்களையும் கூறினான்.
“இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா டா?”
“ஏன் வராது?,”
“நீ படிச்சு முடிச்சு நம்ம தொழிலை பார்த்துக்கோனும்ன்றது தான் டா அப்பாவோட ஆசை”
“ப்ச், தொழிலை பார்த்துக்க ஆளா இல்ல?, நானூறு மார்க்குக்கு மேல வாங்கியும் நான் காமர்ஸ் தான் எடுப்பேன், ஜீவன் மாமா மாதிரி வருவேன்னு சொல்லிட்டு சுத்துறாளே மோகனா, அவளையெல்லாம் பிடிச்சுத் தொழில்ல போடுங்கண்ணா! என்னை விட்டுடுங்களேன் ப்ளீஸ்.. என்னால சராசரி வட்டத்துக்குள்ள வர முடியாதுங்ண்ணா! விருப்பப்பட்டதை செயல்படுத்தி, வாழ்க்கையை அனுபவிச்சு வாழோனும்ங்கண்ணா! என்னோட கனவுகளும்,கற்பனைகளையும் வேற! புரிஞ்சுக்கோங்க”
“சோத்துக்கு வழியில்லாத நிலைமைல இருந்திருந்தா.. நீ இப்படியெல்லாம் பேச மாட்ட”
“நாம தான் அந்த நிலைமைல இல்லியே! பின்ன என்ன? என்னை ஊட்டி காலேஜ்ல சேர்த்து விடச் சொல்லுங்க”
“அப்பா வருத்தப்படுவாரு டா”
“அவரு வருத்தப்படாம பார்த்துக்கிறதுக்குத் தான் நீங்க இருக்கீங்கல்லீங்கண்ணா”
“காலேஜ்ல சேர்த்து விட்டு, சாப்பாட்டுக்குக் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டாருன்னா, என்றா செய்வ?”
“அவருக்குப் பதிலா நீங்க கொடுங்க”
“டேய்…”
“ஆமா, எனக்கு ஃபேக்டரில பங்கிருந்தும், எல்லாப் பொறுப்பையும் உங்களுக்கே கொடுத்து.. உங்களை ஓனரா வைச்சிருக்கிறேனல்ல?, கொடுங்க.”
“அடப்பாவி! சரி, நீ ஊட்டிக்குப் படிக்கப் போற கேப்-ல நான் பூர்ணி கையை பிடிச்சிழுத்தா என்றா பண்ணுவ?”
அதுவரையிருந்த இலகுத்தன்மை மாறி முகத்தைக் கடினமாக்கி.. அவனை நோக்கிய ரகுவரன்..
“வகுந்துருவேனுங்ண்ணா” என்றான்.
“எது?”
“பின்ன என்ன? எதெதுல விளையாடுறதுன்னு விவஸ்தை இல்லீங்களா?, நீங்க இப்டியே பேசிட்டிருந்தா.. போற போக்குல எல்லாத்தையும் அப்பாக் கிட்ட சொல்லிப் போடுவேனுங்க”
“சொல்லு! அவரு எல்லாத்தையும் முறையாக் கொண்டு போய், நான் பர்மனண்ட்-ஆ அவ கையைப் பிடிச்சே வைச்சிக்கிறதுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுக்கட்டும்”
“என்ன சொல்றீங்க?” – திகிலாய் நோக்கியவனின் முகம் கண்டு..
“எனக்கு டைம் ஆச்சு. நான் ஃபேக்டரிக்குக் கிளம்புறேன்” – எழுந்து கொண்ட ஜீவனின் பின்னேயே வந்த ரகு..
“ண்ணா.. ண்ணா.. அப்பா கிட்டப் பேசுங்க. ப்ளீஸ்..” என்றான்.
“எதுக்கு?”
“எதுக்கா?, ஊட்டி காலேஜைப் பத்தி”
“அப்போ, இனி நான் பூர்ணி கையைப் பிடிச்சாக் கோபப்பட மாட்டேன்னு சொல்லு”
“நான் படிக்கவே இல்லீங்ண்ணா! மருதமலை வாசல்ல பிச்சையெடுத்துப் பொழச்சுக்கிறேன்” – என வெடுக்கென கூறி விட்டு அறைக்கதவை சாத்திக் கொண்டவனைக் கண்டு வாய் விட்டு சிரித்தான் ஜீவரஞ்சன்.
ஜீவரஞ்சன் செய்த மூளைச் சலவையில், ரகுவரன் நினைத்தபடி படிப்பைத் தொடர்வதற்கு அவன் தந்தை அனுமதி தந்து விட, ஊட்டியிலிருக்கும் கலைக்கல்லூரியொன்றில் சேர்ந்தான் ரகுவரன்.
துளசிநாதன் அவனோடு பேசாதிருந்தா காரணத்தினால் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக வீட்டின் புறம் எட்டிக் கூடப் பார்க்காதிருந்தவன்.. சுவாமிநாதனின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பூர்ணியின் வற்புறுத்தலினால் வீடு வர வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருந்தான்.
விழா அன்று காலை வந்திறங்கியவனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வீடு வரவேற்றது.
நடுக்கூடத்தில் சிறிய மேடையொன்று அமைக்கப்பட்டிருக்க.. அங்கிருந்த இசை வாத்தியங்களைக் கண்டதும் தெரிந்தது, இன்று பூர்ணியின் கச்சேரி கலை கட்டப் போகிறதென்பது!
பூர்ணியை நினைத்ததும்.. அவளைக் காண வேண்டுமென்கிற ஆர்வம் உண்டாக, கையிலிருந்தப் பையைத் தன்னை வரவேற்க வந்த குருவம்மாவிடம் நீட்டி விட்டு “பூர்ணி எங்க?” என்று விசாரித்தான்.
குருவம்மா பதில் கூறிக் கொண்டிருக்கையிலேயே கையில் பூக்கள் நிறைந்தக் கூடையை ஏந்தியபடி உள்ளிருந்து வெளிப்பட்டாள் மோகனா.
ஒன்றரை வருடத்திற்கு முன் கொழு,கொழுவென சப்பி பேபியாக இருந்தவள், இப்போது சப்பிப் போட்ட ஐஸ்குச்சி சைஸிற்கு மாறியிருப்பதைக் கண்டு அவன் விழி விரித்தபடி நிற்க..
அவனைக் கண்டு கொண்டவள்.. மலர்ந்த முகத்துடன் பெரிதாய்ச் சிரித்து “ரகு….” என்றழைத்தபடி அவனருகே வந்தாள்.
மஞ்சளும்,சிகப்புமாய் பாவாடை-தாவணி அணிந்து.. ஒற்றைப் பின்னலுடன், தலை நிறைய மல்லிப் பூவும், காதோரம் லோலாக்குமாய் முன்னே நடந்து வந்தவள் உயரம் கூடி.. சிறு பிள்ளைத் தோற்றம் மறைந்து.. குமரியாகி விட்டதாய்த் தோன்றியது அவனுக்கு.
அவனது ரசிக மனம்.. பெண்களுக்கெனப் பிரத்யேக வளர்ச்சியமைப்பை வடித்து வைத்திருக்கும் இறைவனின் திறமையை எண்ணி சிலாகித்துக் கொண்டிருந்தது.
“வர்ற நேரமா டா இது?” – என்றபடி அவன் தோளைத் தட்டியவளின் கன்னம் கிள்ளியவன்..
“ரொம்ப அழகாய்ட்ட டா மோகன்” என்றான்.
“ஹ்ம்ம்ம்ம்” என மூக்கைச் சுருக்கியவள் “காஸ்ட்யூமைப் பார்த்துக் கவுந்திராத! இன்னும் ரெண்டே மணி நேரத்துல வேஷத்தைக் கலைச்சிடுவேன்” எனக் கூற “ஹாஹாஹா”-வென சிரித்தவன்..
“காஸ்ட்யூம் மாத்துனாலும் நீ குமரி தான்! கவுந்து விழறதையெல்லாம் அவாய்ட் பண்ண முடியாது” – என்றான்.
மீசையும்,தாடியும் மலர்ந்த விழிகளுடன் பேசிக் கொண்டிருப்பவனை நிமிர்ந்து நோக்கி..
“நீ கூடத் தான் விடலைப் பையன் லுக்-ல இருந்து மாறி.. முறுக்குன மீசையோட ஆம்பள மாதிரி இருக்க! அதுக்காகவெல்லாம் நாங்க கவுந்துட முடியுமா?” – என்றாள்.
“ஏன் டா மோகன், நான் அவ்ளோ சார்மிங்-ஆ இல்லையா?”
“இதெல்லாம் 18+ ல வராதா?”
“இப்போ நீயும் 18+ கேட்டகரி தான் டா மோகன்”
“அடப்பாவி” – என்றவள்..
கணபதியின் “வாங்க,வாங்க.. டேவிட்.. வெல்கம்” – என்ற குரல் கேட்டு.. அவசரமாய் அவன் தோளைத் தாண்டி எட்டி வாசலை நோக்கினாள்.
பரபரவென அவளது குண்டுக் கருமணிகள் அங்குமிங்கும் நகரும் வேகத்தைக் கண்டுத் தன் தோள் மீது பதிந்திருந்த அவள் விரல்களை விலக்காமல்..
“யாரையோ தேடுற போலயே டா மோகன்?” என்றான்.
“ம்ம்” என்றவள் தனக்கு வெகு அருகே தெரிந்த அவன் முகத்திடம்..
“முக்கியமான ஒருத்தருக்காக நான் வெயிட்டிங்” என்றாள்.
“அது யாரு? என்னை விட உனக்கு முக்கியமான ஆளு?”
“நீ எனக்கு முக்கியமான ஆளா?” – மீண்டும் அவன் முகத்தை நோக்கி அவள்.
“உன்ற மாமன் மகன் நான்! உன்ற கூடவே வளர்ந்தவன்! என்னை விட எவன் உனக்கு முக்கியமானவன் ஆயிடுவான்?”
“ ‘முக்கியமான’ ஆளுக்கு இதையெல்லாம் விடப் பெரிய தகுதி ஒன்னு இருக்கோனும்!”
“அப்டி என்ன தகுதியாம் அது?”
“என்னை ‘சைட்’ அடிக்க வைக்குற தகுதி அது” – எனக் கூறிப் புருவத்தை உயர்த்தி இதழை நீட்டிச் சிரித்தவளின் பாவனையை விழி விரித்து நோக்கியவன்.. பின் தலையை உலுக்கிக் கொண்டு.. அவள் கையைத் தன் தோளிலிருந்துப் பிரித்தெடுத்து…
“18+ ன்னு நான் உன்னைப் பேருக்குத் தான் டா மோகன் சொன்னேன்” என்றான்.
“வந்துட்டான்! வந்துட்டான்” – அடிக்குரலில் முணுமுணுத்தவள் பூக்களைக் காணும் சாக்கில் குனிந்து கொண்டு, ஓரப் பார்வையால் எதிரே வந்தவனை நோக்கத் தானும் திரும்பி.. அவனை நோக்கினான் ரகுவரன்.
“இவன் டேவிட் அங்கிள் மகன் மைக்கேல் ஆச்சே டா மோகன்”
“இவன் இல்ல, இவர்”
“இப்போ உன்ற மண்டையப் பொளக்கப் போறேன் டா மோகன்”
“ஷ்ஷ், சும்மா இரு. பக்கத்துல வரான்”
“இதெல்லாம் ரொம்ப ஓவர்” – அவன் பல்லைக் கடித்து முணுமுணுக்கையில் டேவிட்,மைக்கேல்,கணபதி அனைவரும் இவர்களருகே வந்து விட.. நலம் விசாரித்து.. மரியாதைக்காக ஒரு புன்னகையைச் சிந்தியவன்.. மோகனாவின் கள்ளப் பார்வையைக் கண்டு மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்.
“ரெண்டடி எக்ஸ்ட்ரா வளர்ந்ததும், ரெக்கை முளைச்சிடுச்சு இதுக்கெலாம்”
அவர்கள் முன்னே நகர்ந்ததும் ரகுவரனை முறைத்த கணபதி,
“வீட்டுக்குள்ள நுழைஞ்சு அரைமணி நேரமாச்சு! இந்தக் கழுதை கூட என்னப் பேச்சு உனக்கு?, போய் உன்ற அப்பன் கிட்ட ஒரு கும்பிடை வைச்சுப் போட்டுக் குளிச்சு நல்ல துணி போட்டுட்டு வா கண்ணு, நேரமாச்சல்லோ?” என்றார்.
அவர் திட்டிக் கொண்டிருக்கும் போதே.. அவரது கண்ணாடியைக் கழட்டித் தன் சட்டையில் துடைத்தவன்.. மீண்டும் அதை அவர் மூக்கில் மாட்டியபடி..
“இப்ப நல்லா உத்துப் பாருங்க, நான் குளிச்சு சுத்தபத்தமா வந்திருக்கிறது உங்கக் கண்ணுக்குத் தெரியும்” என்றான்.
அவன் செய்கையில் புன்னகை பூக்க “குசும்பைப் பாரு” என்றவர் கண்ணாடியைச் சரிசெய்தபடி மகளை மேலும்,கீழும் நோக்கி..
“இன்னிக்காவது பொம்பளையா லட்சணமா உடுத்தோனும்ன்னு தோணுச்சே” எனக் கூறி விட்டுச் செல்ல.. உதட்டைச் சுழித்தபடி அலட்சியமாய் நின்ற மோகனா.. அவர் நகர்ந்ததும்..
“இந்த அப்பனுங்களே இப்படித் தான்! என்றா ரகு?” என்றாள்.
அவளுக்குப் பதில் சொல்லாமல் முறைத்தவன் “மாமாவை மரியாதையில்லாம பேசாத டா மோகன்” என்கையில் “ரகு…” என்ற கணபதியின் குரல் கேட்டு “வர்றேனுங்க மாமா” என்று ஓடிச் சென்றவன் நேராகத் தந்தையின் அறைக்குச் சென்றான்.
சுவாமிநாதன்,துளசிநாதன்,ஜீவரஞ்சன் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க..
“கும்பிட்றேனுங்க” என்றபடியே உள்ளே வந்தவனை உணர்ந்து நிமிர்ந்த அத்தனை முகங்களிலும் மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது.
அவர்களது மலர்ச்சியைக் கண்டவனுக்குத் தான் இத்தனை நாட்களாய் வீட்டுப்பக்கம் வருகை தராதது உறுத்தலாய்த் தோன்ற.. அமைதியாய் அண்ணனின் அருகே சென்று நின்றான்.
துளசிநாதனைத் தவிர அனைவரும் இந்த ஒன்றரை வருடங்களாக அடிக்கடி ஊட்டிக்கு வருகை தரும் மக்கள் தாம்.
சுவாமிநாதனுக்கும் ரகுவின் மீது வருத்தம் தான்! நல்ல மதிப்பெண்கள் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவன், வரைதலைத் தொடர வேண்டுமென விருப்பப்பட்ட போது! ஆனால்.. ஏனோ.. அவன் மீது அவருக்கு அப்படியொரு நம்பிக்கை! படித்த படிப்பை நிச்சயம் வீணாக்க மாட்டான் என்று!
இன்னமும் கோபத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு மகனிடம் பேசாது திரியும் துளசிநாதனைக் கண்டு எரிச்சல் பட்டார் அவர். ஆனாலும்.. அவரிடம் வாயைத் திறக்க முடியாதே! அதனால் பேரனைத் திட்டுவது போல்.. இருவரையும் சமாதானப் படுத்த முயற்சித்தார்.
“ஏன் டா உன்றப்பன் கோவிச்சுக்கிட்டா வூட்டுப் பக்கம் வராம இருப்பியா நீ?, மன்னிச்சுங்கப்பா, படிக்குற படிப்பை வீணாக்காம நான் ஏதானும் செய்வேனுங்கப்பான்னு எடுத்துச் சொல்ல மாட்டியா?”
“மன்னிப்பு கேட்குற அளவுக்கு நான் எந்தத் தப்பும் செய்யலீங்கய்யா”
‘இவன் அடங்க மாட்டான்!’ எரிச்சலுடன் அவர் தன் வழுக்கையைச் சொரிந்த போது..
விசுக்கென எழுந்து நின்று துண்டை உதறித் தோளில் போட்ட துளசிநாதனைக் கண்டு.. பேரனை முறைத்த சுவாமி.. கண்ணால் சைகை காட்ட..
“அ..அ..அப்பா” என்றழைத்தபடி அவரருகே சென்று நின்றான் ரகு.
அவன் முகம் பாராமல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றவரை நோக்கி..
“மெலிஞ்சா மாதிரி இருக்கீங்களேப்பா! என்னைப் பார்க்காத சோகமா?, இல்ல சர்க்கரை வியாதி ஏதும் வந்திருச்சுங்களா?” என்றான்.
“ப்ச், ரகு….” – அதட்டலாய் ஜீவரஞ்சன்.
“சொல்லுங்கப்பா! சுகரா? சோகமா?, உங்க மெலிவுக்கு ரெண்டுல எது காரணம்?, ஆனா.. பொதுவா.. உங்களை பி.பியைத் தவிர எந்த வியாதியும் அண்டாதே”
“ஆமா, இப்ப அந்த பி.பியை எகிற வைக்குற வேலையை நீ நல்லாவே பார்த்திட்டிருக்க டா!, “ – ஜீவன் எச்சரிக்க..
இப்போது மகன் புறம் திரும்பி முறைத்தார் நாதன்.
“என்னால மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதுங்ப்பா!” என்றவன் தொடர்ந்து “கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கப்பா! சின்ன வயசுல நான் பூரி சாப்பிடும் போது நீங்க எண்ணைல சுட்ற பூரி கெடுதின்னு சொல்லி வளர்த்தீங்க! ஆனாலும் நான் பூரி சாப்பிட்றதை நிறுத்திட்டேனுங்களா?,இல்லியே! ஆனாலும் ஏன் நீங்க அமைதியா இருக்கீங்க?, எனக்குப் பிடிச்சதை நான் சாப்பிடனும்ன்றதால தானே?, அதே மாதிரி இதையும் நினைங்களேன்ப்பா”
“இந்தப் பொறுமை உனக்கு ஒன்றரை வருஷம் கழிச்சுத் தான் வரனும்ன்னு இருந்திருக்காட்ருக்கு” – இடையில் சுவாமிநாதன் வேறு.
“இவரு அப்போ பொறுமையா பேசியிருந்தா, நானும் பொறுமையா பதில் சொல்லியிருப்பேனுங்கய்யா! ஆ,ஊன்னா துண்டை உதறி தோளுல போட்டுக்கிட்டுக் கிளம்பிட்றாரு”
“ரகு….” – மீண்டும் அதட்டலாய் ஜீவன்.
“இப்போ என்னங்ப்பா, நான் இப்படியே ஊட்டிக்குக் கிளம்பட்டும்ங்களா?”
“போயேன்! யார் கேட்கப் போறா?, உன்ற காலேஜ்ல படிச்சு.. வெளிநாட்டுல ஆர்ட் கேலரி வைச்சு லாபம் பார்த்த ‘ஆர்ட்டிஸ்ட்’ ஒருத்தரை இன்னிக்கு விழாவுக்கு வரவழைச்சிருக்கேன்! அவரையெல்லாம் நீ பார்க்க வேணாம்! ஊட்டிக்கே போ” – முசுட்டு முகத்துடன் கூறியவரைக் கண்டு ஆச்சரியமாய் விழி விரித்தவன்..
“நிஜமாங்களாப்பா?” என்றான்.
“ம்ம், போய்.. தாடி,மீசையை சிரைச்சிட்டு.. நல்ல கலர் சட்டையாப் போட்டுக்கிட்டு வா”
அமைதியான குரலில் கூறியவரைக் கண்டு..
“தாடி,மீசையெல்லாம் எடுக்க முடியாதுங்ப்பா! ஸ்டைலுக்கு வைச்சிருக்கிறேன்!” எனக் கூறிய ரகு.. அவரது பி.பியை எகிற வைக்கும் பணியினை செவ்வெனே செய்து கொண்டிருந்தான்.
அடுத்த சில மணித்துளிகளில் விழா துவங்கி விட.. மேடைக் கச்சேரியும் மோகனா மற்றும் பூர்ணியின் குரல்களோடு அமர்க்களமாய்த் தொடங்கியது.
இறைவன் துதி பாடித் துவங்கிய இருவரும், தாங்கள் கர்நாடக சங்கீதத்தைப் பல வருடமாகப் பயில்பவர்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணமாய் சங்கதிகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க.. சுவாமிநாதன் அமர்ந்திருந்த இருக்கையின் பின்னே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த ரகு மற்றும் ஜீவனின் பார்வை பூர்ணியின் மீதே நிலைத்திருந்தது.
அப்போது தான் ரகுவரனைக் காண்கிறாள் போலும் பூர்ணி.
மீசை,தாடியுடன் கலைந்தத் தலையோடு நின்றவனை முறைத்து ‘என்ன கோலம் இது’ என ஜாடையாகக் கேட்டபடியே பாடிக் கொண்டிருந்தவளிடம் கண் சிமிட்டித் தலையசைத்துப் புன்னகைத்தான் ரகுவரன்.
அவனிடமிருந்து விலகிய அவள் விழிகள் ஒரு நொடி தரையை நோக்கிப் பின் மெல்ல,மெல்ல நிமிர்ந்து மிகுந்தத் தயக்கத்துடன் ஜீவரஞ்சனை நோக்க.. அவள் பார்வைக்காகக் காத்திருந்தவன்.. சட்டெனக் கண்ணடித்து உதடு குவித்து முத்தமிட்டான்.
அவன் செய்கையில் தடுமாறியவள்.. பதறி.. பாடிக் கொண்டிருந்தப் பாட்டின் ஸ்ருதி மறந்து.. மோகனாவின் முறைப்பைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்தமர்ந்து மீண்டும் பாடத் துவங்கினாள்.
பற்கள் தெரிய விரிந்த புன்னகையோடு நின்றவனைக் கோபமும், காதலுமாய் முழியை விரித்து அவள் நோக்க.. பின்னிருந்தத் தூணில் சாய்ந்து கொண்டு அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
காதல் என்கிற உணர்வு, இதுவரை அவள் முகத்தில், அவன் கண்டிராத வர்ணஜாலங்களை உருவாக்கும் அழகை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த ரகுவிற்கு… அவள் விழிகள் சென்றடையும் திசையைக் காண்கையில் விவரிக்க முடியாத உணர்வொன்று உள்ளே பொங்கி எழுந்தது.
இதுவரை தனக்கானதாக எண்ணி.. அவன் தன் உள்ளங்கைக்குள் பொத்தி வைத்திருந்தப் பொருளை ‘இது இனி உன்னுடையதல்ல’ எனக் கூறிக் காலம் அவனிடமிருந்துக் கதற,கதறப் பிரித்தெடுப்பதைப் போலுணர்ந்தான்.
முழு சிரிப்புடன் நிற்கும் அண்ணனின் முகம்.. என்றுமில்லா ஜொலிப்புடன் மின்னுவதைப் போல் தெரிந்தது.
அண்ணன் ரொம்ப ஹாண்ட்சமோ??
சுத்தமாகத் தாடியை மழித்து,ட்ரிம் செய்யப்பட்டிருந்த மீசையுடன், ஸ்டைலாக வாரப் பட்டிருந்தத் தலை முடியுடன்.. தன்னை விட உயரமாய்,வயதிற்குரிய உடற்கட்டோடு.. முழு ஆண் மகனாய் நின்றவனைப் பொறாமையோடு நோக்கினான்.
சுற்றி நடக்கும் எதையும் கண்டு கொள்ளாமல், பூர்ணியின் கள்ளப்பார்வையை ரசித்தபடிக் கட்டிய கைகளுடன் நின்றிருந்தவனை ஒரு நொடி இமைக்காது நோக்கிய ரகு..
“ண்ணா” – என்றழைத்தான்.
சட்டெனக் கலைந்தக் கனவின் தாக்கத்தோடு தம்பியை நோக்கியவன் எரிச்சலுடன் “என்றா?” எனக் கேட்க..
“உங்களை மாதிரி நானும் உடம்பைப் பெருக்கோனும்ன்னா என்ன செய்யோனும்?” – என்றான்.
இப்போது எதற்காக இந்தக் கேள்வி என்கிற ரீதியில் ஜீவன், எரிச்சலும்,குழப்பமுமாய் ரகுவரனை நோக்குகையில்..
“அதுக்கு நீ ஊட்டி காலேஜ்க்கு முழுக்குப் போட்டுட்டு வீட்டோட வந்து சேரோனும்” – என்ற பதில் சுவாமிநாதனிடமிருந்து வர..
“ப்ச், ஐயாஆஆ” – முகத்தைச் சுருக்கினான் ரகு.
“என்ற மேல எதுக்கு டா காயுறவன்?”
“எனக்கு உடம்பு போடோனும், வழி சொல்லுங்க” – சிறு பிள்ளைத்தனமாய் நின்றவனை நிமிர்ந்து முறைத்த துளசிநாதன் ஜீவரஞ்சனை ஒரு பார்வை பார்க்க..
“லூசுத்தனமா என்றா கேள்வி இது?, எதை எப்போ பேசோனும்ன்னு தெரியாதா உனக்கு?, “ – எனத் தம்பியைக் கடிந்தவன்..
“நான் போய் சாப்பாட்டைப் பார்க்குறேனுங்கப்பா” என நகர்ந்து விட..
“ஐயா.. நான் சீரியஸாத் தான் கேட்குறேனுங்க, எனக்கு அண்ணன் மாதிரி உடம்பு போடோனும்! வழி சொல்லுங்க” – என்றுத் தாத்தனிடம் குனிந்தான் ரகு.
“வயசு ஏறும் போது, உடம்பு தன்னால பெருத்துருங்கண்ணு! இதெல்லாம் ஒரு பிரச்சனையா?”
“நிஜமாவா?”
“நிசமாத் தான்” – நம்பாமல் அவன் சுவாமிநாதனைப் பார்த்துக் கொண்டிருந்த வேளை.. டேவிட் மோகனாவின் கையைப் பற்றி..
“ஆளு நல்லா வளர்ந்துட்டியே கண்ணு! க்ளாஸ்ல ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்குறியாமா! உன்ற மாமன் வாயைத் திறந்தாலே உன்ற பேச்சைத் தான் பேசுறாரு” – எனக் கூறிக் கொண்டிருந்தார்.
“ஆமா, என்ற அப்பாரை மாதிரி இல்லாம, என்ற மாமாவுக்கு என் மேல ரொம்பப் பாசமுங்க அங்கிள்! ”
இது தான் சாக்கெனத் தன் தந்தையைத் தாக்கிக் கொண்டிருந்த மோகனாவைக் கண்டு..
“மோகன்ன்ன்ன்” என அவளை அடக்கியபடி அருகே சென்று நின்றான் ரகு.
ரகுவின் காலேஜைப் பற்றி விசாரித்தவர், ஓரக் கண்ணால் மைக்கேலை ‘சைட்’ அடித்துக் கொண்டிருந்த மோகனாவிடம்..
“நல்லா பாடுனியே! ஒரு சினிமா பாட்டு பாடேன், கேட்போம்” எனக் கூற.. அவள் தன் தந்தையை நோக்கினாள்.
கணபதி தலையைசைத்ததும்.. மைக்கேலின் மீது ஒரு பார்வையை செலுத்தியவள்..
“இஞ்சி…. இடுப்பழகா…. தப்ப்,தப்ப்,தப்ப்ப்ம்ம்ம்ம்” – என வாயால் மியூசிக் போடத் துவங்க.. கணபதி கடுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“மோகன்ன்ன்ன்” என மீண்டும் அவளை அதட்டிய ரகு..
“வேற பாட்டு பாடு” என்று முணுமுணுத்தான்.
“ஏன் இந்த பாட்டுக்கென்ன?” என்றவள் தன் தந்தையின் முகத்தை நோக்கித் தோளைக் குலுக்கி விட்டு..
“சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி….” –
என்றுத் தன் தந்தைக்குப் பிடித்த பாடலைப் பாட.. அழகான குரலில்.. அடக்கமாய்ப் பாடுபவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கணபதி.
மாமன் மகிழ்ச்சி கொண்டதில் தானும் திருப்தியாகப் புன்னகைத்த ரகு.. அவள் முடித்ததும் கைகளைத் தட்ட.. உதட்டைப் பிதுக்கி.. அலட்சியமாய்த் தோளைக் குலுக்கி விட்டு.. டேவிட்டிடம் தலையாட்டி நகர்ந்து விட்டாள் மோகனா.
அதன் பின்பு அவன் வீட்டிலிருந்த நேரம் முழுதும் அவனது பார்வையும்,கவனமும் முழுக்க முழுக்கப் பூர்ணி-ஜீவரஞ்சன் மீது தான்!
அவர்களிருவரும் வீட்டிற்குள் நடத்தும் காதல் நாடகத்தைக் கையாலாகாதவனாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு.. எப்படியேனும் பூர்ணியைத் தன்னுடனேத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்கிற உணர்வுப் பிரவாகமாய்ப் பொங்கியது.
உரிமையுடன் அவள் மீது பதியும் ஜீவரஞ்சனின் பார்வை, அவனைத் தொந்தரவு செய்தது.
தன்னை ஒதுக்கி, அவனை நோக்கி ஓடும் அவளது எண்ணங்கள், அவனுக்குக் கோபத்தைக் கொடுத்தது.
‘அவள் எனக்கானவள், என்னுடையவள்’ என்கிற உரிமை எழுந்து அவன் அறிவை மங்கச் செய்து யோசிக்கும் திறனை மட்டுப்படுத்தியது.
அனைத்தையும் பார்வையிட்டபடி மௌனமாயிருந்தான்.
அன்றிரவு தம்ளர் நிறையப் பாலுடன் ரகுவின் அறைக்குள் நுழைந்தாள் பூர்ணி.
“என்ன கண்ணு, சரியாவே சாப்பிடலயாட்ருக்கு!, இந்தப் பாலையாச்சும் குடிச்சுப் போட்டுப் படு!, கூடைல வாழைப்பழமும் வைச்சிருக்கிறேன்! அர்த்தராத்திரி பசிச்சா எடுத்து சாப்பிடு”
தன் போக்கில் பேசிக் கொண்டே சென்ற பூர்ணி, அவன் பதிலளிக்காததை உணர்ந்துத் திரும்பி அவனை நோக்கினாள்.
கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்தவனைக் கண்டு..
“என்ன கண்ணு?” என்றாள்.
“நீ இப்போ-லாம் என்னைச் சரியாவே கவனிக்கிறதில்ல பூர்ணி”
“ஏன் தம்பு அப்டி சொல்ற?,”
“……….” – அமைதியாய் தன்னையே நோக்குபவனைக் கண்டு குழம்பி..
“நீ ஊட்டில போய் உட்கார்ன்ட்ருந்தா நான் எப்படி கண்ணு உன்னை கவனிக்க முடியும்?”- என்றாள்.
“அது மட்டும் தான் காரணமா?”
கூறு போடும் பார்வையுடன் கேட்டவனைக் கண்டு மேலும் குழம்பி..
“எதை மனசுல வைச்சு பேசிட்ருக்க நீ?” – என்றாள்.
“நான் உன்ற மேல வருத்தமா இருக்கேன். அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்”
“என்ன கண்ணு இப்படிச் சொல்ற?, உன்ற வருத்தத்தைப் போக்க நான் என்ன செய்யோனும்? சொல்லு”
“என்னைத் தூங்க வை”
“ம்???”
“சின்ன வயசுல உன்ற மடில படுக்க வைச்சுத் தூங்க வைப்பேல, அப்டித் தூங்க வை”
“அப்ப நீ ஒரு ஜாண் உசரத்துல இருந்த. இப்ப ஜாக்கி சான் மாதிரி வளர்ந்து நிற்குற! உன்னைப் போய் எப்படி கண்ணு மடில படுக்க வைச்சுக்க முடியும்?”
“நான் ஜாக்கி சானை விட உயரம் அதிகம்”
“ப்ச், இப்போ அதுவா முக்கியம்?
“……….”
“எதையாவது போட்டு யோசிச்சுட்ருக்காம, பேசாம தூங்கு”
“இதையே அண்ணன் கேட்ருந்தா மறுத்திருப்பியா?”
-இரவின் அமைதியோடு அடக்கமாய் ஒலித்த அவன் குரல் அதிர்ச்சியைக் கொடுக்க சட்டென அவள் புறம் திரும்பியவளைக் கண்டு..
“அண்ணன்,மோகனா யார் கேட்டிருந்தாலும் மறுத்திருக்க மாட்ட தான?”- உடனே மாற்றிக் கூறினான் அவன்.
“ஏன், அவங்கலாம் வளராமலேவா இருக்காங்க?” என்றவள் தொடர்ந்து..
“நீ ரொம்பப் பசில இருக்கியாட்ருக்கு, அதான் பேச்சு ஒரு மாதிரியிருக்கு! பால் ஆறுறதுக்குள்ள குடிச்சிட்டுப் படு” – என்றவள் படபடவெனப் படியிறங்கி விட்டாள்.
இரவு வெகு நேரம் உறங்காமல் எதை,எதையோ யோசித்தவன்.. பின் தனது ‘பொஸஸிவ் நெஸ்ஸிற்கு’ காதல் எனப் பெயர் வைத்து.. அந்தக் காதலுக்கு வடிவம் கொடுத்துக் கடிதமாக்கி விட்டு.. அந்தக் கடிதத்தை சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டு புறப்பட்டு விட்டான் மாடியை நோக்கி.
காலைப்பனி உடலை விறைக்கச் செய்தும் அசராமல், மாடியில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தவனைக் கண்டபடி.. ஒரு கையில் காஃபி கப்பும்,மறு கையில் புத்தகங்களுமாய் மேலே வந்தாள் மோகனா.
“இங்க என்ன பண்ற நீ?”
புத்தகங்களைக் கீழே வைத்து விட்டு காஃபியை உறிஞ்சியபடிக் கேள்வி கேட்டவளிடம்..
“ப்ச், நான் உனக்குப் பதில் சொல்ற மூட்ல இல்லடா மோகன்” நடையை நிறுத்தாமல் பதில் கூறினான் அவன்.
“ஏன்?”
“ஏன்னா… நான் இப்போ ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்” – பாக்யராஜ் பாணியில் கூறியவனைக் கண்டு நக்கலாய்ச் சிரித்து..
“ஓஹோ!!!!!” என இழுத்தவள்…
“பூர்ணியை நினைச்சுத் தானே?” – எனக் கேட்டு அவன் தலையில் இடியை இறக்கினாள்.
சட்டென நின்று.. திரும்பி அவளை நோக்கியவன்.. கட்டிய கைகளுடன் சிரிப்பு மாறாமல்.. அவனைப் பார்த்தபடி காலாட்டிக் கொண்டிருந்தவளின் அருகே வந்து நின்றான்.
“என்ன சொல்ற?”
“அப்டின்னா??”
“எ…எ..எதுக்கு இப்போ பூர்ணியை இழுக்குற?”
“மொசை புடிக்குற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாது?”
“என்னை ‘நாய்’ன்னு சொல்றியா டா மோகன்?”
“ஹாஹாஹா”
“சிரிக்காத டா மோகன். நான் ஏற்கனவே ரொம்பக் கடுப்புல இருக்கேன்”
“ம்ம்ம்ம்ம்”
“உ…உ..உனக்கு எப்படித் தெரியும்?”
“நீ ஊருக்கு வந்ததுல இருந்து நானும் உன்னைக் கவனிச்சிட்டுத் தானிருக்கேன். அக்காவைப் பார்க்கும் போதெல்லாம் உன்ற மூஞ்சி போற போக்கை”
“மோகன்..”
“என்ன?”
“நீ தான் டா எனக்கு ஹெல்ப் பண்ணோனும்?”
“நானா?”
“ம்ம், இ..இதை அவ கிட்டக் கொடுக்கோனும்”
“எதை?” – எனக் கேட்டவளிடம்.. தயக்கத்துடன்.. பாக்கெட்டிலிருந்த கடிதத்தை எடுத்தான்.
கண்களைப் பெரிதாய் விரித்து “ஊஊஊஃப்ஃப்ஃப்ஃப்” என விசிலடித்தவளைக் கண்டு முகம் சுழித்து..
“ஆம்பளப்பசங்க மாதிரி என்றா மோகன் பழக்கமிது?” என்றான்.
“வாயிருக்கிற யாராயிருந்தாலும் தாராளமா விசில் அடிக்கலாம்! இதுல ஆம்பளை என்ன, பொம்பளை என்ன?”
நொடியில் முகம் மாறித் தீவிரமாய் அவனிடம் பொங்கியவளைச் சமாதானப்படுத்தி..
“தெரியாம சொல்லிட்டேன் டா மோகன், நீ எத்தனை விசில் வேணும்னாலும் அடிச்சுக்கோ! இப்ப எனக்கு ஹெல்ப் பண்ணு டா” எனக் கெஞ்சலாகக் கேட்டான்.
கருப்பு நிற ஸ்கர்ட்டும்,முட்டி வரைக் கை வைத்த பச்சை நிற சட்டையுமாய் நின்றவள் முடியைக் கொண்டையாக்கிப் பின் கழுத்தருகே நிறுத்தி வைத்திருந்தாள்.
காதைத் தாண்டி அவள் கன்னத்தில் ஆடிக் கொண்டிருந்தக் கூந்தலைக் கண்டவன்..
“நீ எப்படி டா மோகன் இவ்ளோ ஒல்லியான?” எனக் கேட்டான்.
“ஏன் நல்லாயில்லையா?”
“நான் எப்ப அப்டி சொன்னேன்?, நீ ரொம்ப ரொம்ப அழகு டா மோகன்”
“இப்ப உனக்குக் காரியம் ஆகோனுமில்ல! அதான் இப்டி சொல்ற”
“அப்டில்லாம் இல்ல டா மோகன்”
“சரி,சரி! இது என்ன? லெட்டரா” -என்றவளிடம்.. ஆமாம் எனத் தலையசைத்தவன்..
“இதை யாருக்கும் தெரியாம நீ தான் பூர்ணி கிட்டக் கொடுக்கோனும்” என்றான்.
“ஏன் நீயே கொடுத்தா என்ன?”
“அது… அது.. அப்டில்லாம் அவ முன்னாடி போய் நின்னு.. ஈசியா.. கொடுத்துட முடியாது டா மோகன்”
அந்தக் காட்சியைக் கற்பனையில் கண்டிருப்பான் போலும்! “ம்ஹ்ம்ம்ம்ம்” என மறுத்துத் தலையசைத்தபடி அவளை நோக்கினான்.
“காதலிக்குறதுல இருக்குற தைரியம், அதை வெளிப்படுத்துறதுலயும் இருக்கோனும் கண்ணு”
“நீ எனக்கு அட்வைஸ் பண்ணாம, நான் சொல்றதை மட்டும் செய்!”
“என்ன மிரட்டுற?”
“ப்ளீஸ் டா மோகன்! நீ எனக்கு உதவி செஞ்சா.. நானும் உனக்கு மைக்கேல் விஷயத்துல ஏதாச்சும் பார்த்து பண்ணுவேன்”
பேரம் பேசியவனைக் கண்டுத் தலையிலடித்துக் கொண்டவள்.. அவசரமாய் சுற்றும்,முற்றும் பார்த்து…
“லூசு மாதிரி ஒளப்பிரிக்காத. எங்கப்பாரு காதுல விழுந்தா சங்கு தான்” என அடிக்குரலில் அவனிடம் சீற..
“மாமா மேல உனக்கு அவ்ளோ பயமா டா மோகன்?” – என்றான் அவன் முழுப் புன்னகையுடன்.
“பின்ன? உன்னை மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா?”
“இப்ப உன்றனால லெட்டரைக் கொடுக்க முடியுமா முடியாதா?”
“கொடுக்குறேன்”
அவள் ஒப்புக் கொண்டதும், பெருமூச்சுடன் அவளிடம் லெட்டரை நீட்டியவன்..
“இ..இதைப் படிக்கும் போது அவ ரியாக்ஷன் எப்படியிருந்ததுன்னு பக்கத்துல இருந்து பார்த்து.. நீ எனக்கு சொல்லோனும்” என்றான்.
“அப்டியே பதிலையும் கேட்டு வந்துரட்டுமா?”
“ம்,முடிஞ்சா”
“ஒரே வீட்டுக்குள்ள இருந்தும் போஸ்ட் மேன் வேலை பார்க்க வைக்குறானுங்கப்பா”- என சலித்தபடி கடிதத்தை வாங்கியவள்..
“ஒரு கடிதம் எழுதினேன்.. என் உயிரை அனுப்பினேன்….” – எனப் பாட.. பிடரியைக் கோதியபடி சிரித்து வெட்கப்பட்டவன்..
“எனக்கும் கூட அந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் டா மோகன்” எனக் கூறி “ஏன்னு கேளேன்” என்றான்.
அவள் “ஏன்?” என்றதும்..
“ஸ்வாதி அந்தப் பாட்டுல தாவணியைக் கழட்டிட்டு ஓடி வருமல்ல! அதான்” எனக் கூறி அவன் கண்ணடிக்க..
“த்தூ” எனத் தலையிலடித்துக் கொண்டவள்.. ஆர்வமாகக் கடிதத்தைப் பிரிக்க..
“ஏய்ய்,ஏய்ய்..” எனப் பதறியவன்..
“அதை எதுக்கு டா மோகன் பிரிக்குற?” என்றான்.
“பின்ன லெட்டர்ல என்ன இருக்குன்னு நான் பார்க்க வேண்டாமா?”
“நீ என்னத்துக்குப் பார்க்கோனும்?”
“ம்ம், நீ பாட்டுக்க ஏதாவது விவகாரமா எழுதி வைச்சிருந்தா.. நாளைக்கு நானல்ல அப்புச்சிக்கிட்ட பிரம்படி வாங்கோனும்?”
“விவகாரமாவா? என்னை என்னன்னு நினைச்ச?”
“தாவணியைக் கழட்டி வீசுற ஸ்வாதியை ரசிக்குறவனை, நல்லவன்னு நான் எப்படி நம்ப முடியும்?”
“நீ அதைக் கொடுக்கவே வேணாம்.” – என்றவன் அவள் கையிலிருந்தக் கடிதத்தைப் பறிக்கப் பார்க்க..
“அப்டின்னா நீ ஏதோ பலானதாத் தான் எழுதியிருக்க போல” என்றவள் அவன் கைக்குக் கடிதம் எட்டி விடாத வண்ணம் உயர்த்திப் பிடித்தாள்.
“பல்லை உடைச்சிடுவேன் டா மோகன்! என்ன பேச்சு பேசுற நீ?” என்றவன் ஒரே எட்டில் அவள் கையைப் பற்ற.. இருவரும் போட்ட சண்டையில் சிக்கிக் கசங்கிப் போன காகிதம்.. உயிர் விட்டுப் படாரெனக் கீழே விழ.. அதிர்ச்சியுடன் இருவரும் கீழே எட்டிப் பார்த்தனர்.
கொல்லையில் விழுந்து கிடந்தக் காகிதத்தைக் கண்டு மோகனாவை முறைத்த ரகுவரன்,
“பெருசுங்க யார் கையிலயும் லெட்டர் சிக்குச்சுன்னா, நான் கைமா தான் டா மோகன்” எனப் பதறினான்.
“லெட்டர்ல பேர் போட்டிருக்கியா?”
“இல்லையே”
“பின்ன என்ன?, மொட்டைக் கடுதாசியாட்ருக்குன்னு நினைச்சுக் குப்பைல போட்ருவாங்க! பதறாத”
“மோகன் மோகன் லூஸ் மோகன்! என்ற கையெழுத்து என்னைக் காட்டிக் கொடுக்காதா? பார்த்ததும் தெரிஞ்சிடும் அதை எழுதுனது நான் தான்னு”
“அய்யோ ஆமா! நீ வேற அழகா எழுதித் தொலைவியே”
“இப்போ அதுவா முக்கியம்?”
“இப்படிப் பதறிக்கிட்டே நிற்குறதுக்கு, யாரும் பார்க்குறதுக்குள்ள போய் லெட்டரை எடுக்கலாம் வா”
அவள் கூறியதும் அவசரமாய் இருவரும் கீழே இறங்க முற்பட்ட சமயம்.. நைட்டியும்,கொண்டையுமாய் கையில் ‘கோல்கேட்’ பல்பொடி டப்பாவுடன் கொல்லைக்கு வந்து சேர்ந்தாள் பூர்ணி.
“ஏய்,ஏய்,ஏய் நில்லு நில்லு நில்லு. பூர்ணி வர்றா”
மோகனா மெல்லிய குரலில் பரபரப்புடன் கூற.. வேகமாய் எட்டி நோக்கினான் ரகுவரன்.
“நீ அதிர்ஷ்டக்காரன் ரகு! லெட்டர் சேர வேண்டிய இடத்துல சேர்ந்திடுச்சு! காலைல யார் முகத்துல முழிச்ச?” என்ற மோகனாவிடம் பதில் கூறாமல் கீழே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
காலில் மிதிபட்டக் காகிதத்தைக் கையில் எடுத்த பூர்ணி, அதைப் பிரித்துப் பார்த்தாள்.
அது ரகுவின் கையெழுத்தென்பதைப் புரிந்து கொண்டாள் போலும்!
சுருக்கிய புருவங்களுடன்.. அதை வாசித்தபடியே அவள் உள்ளே நடக்க..
ஒருவரையொருவர் ஒரு நொடி நோக்கிய மோகனாவும்,ரகுவரனும்.. அடுத்த நொடிக் கடகடவென மாடியிறங்கி.. அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினர்.
லெட்டரைக் கூர்ந்து பார்த்தபடி அடுக்களைக்குள் நின்றிருந்தப் பூர்ணியைக் கண்டு அவசரமாய் அருகே சென்றவர்கள்..
ஆர்வமாய் அவளது ரியாக்ஷனை நோக்கியபடி வாசலருகே அவளறியாமல் நின்றனர்.
கதவைப் பற்றிக்கொண்டு மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தபடி மோகனா, அவள் பின்னே ரகுவரன்.
பரபரப்புடன் எச்சில் விழுங்கியபடி மோகனா நிற்க, மூச்சைப் பிடித்துக் கொண்டு இமைக்காமல் பூர்ணியையே வெறித்தபடி ரகுவரன் நின்றான்.
ஆர்வம் குறையாது இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க.. அதையறியாத பூர்ணி..
புருவம் சுருக்கி உதட்டைக் கடித்துக் கொண்டு கடிதத்தை ஒரு நொடி ஆழ்ந்து நோக்கினாள். பின்.. மெல்லக் கையை உயர்த்தி.. புரியாத பாவனையுடன் தலையைச் சொரிந்தாள்.
அதன் பின் என்ன நினைத்தாளோ…
“நி… த்… தி.. ய.. த்… தி… ல், நித்தியாத்தில்… இ…ரு…. பே..ரு..ம். ஈறுபேறும்” என வாய் விட்டு, தட்டுத் தடுமாறி, எழுத்து கூட்டித் தப்பு,தப்பாய் வாசிக்கத் துவங்க..
வெளியே நின்றபடி அவளையே கவனித்துக் கொண்டிருந்த மோகனா, சத்தியமாக இப்படியொரு ரியாக்ஷனை அவளிடமிருந்து எதிர்பார்த்திராத காரணத்தினால்.. சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட்டுப் பின் முடியாமல்.. இரு கைகளால் வாயைப் பொத்திக் கதவில் சாய்ந்து.. கண்ணில் நீர் வர சிரிக்கத் துவங்க..
அவள் சிரிப்பைக் கண்டுப் பல்லைக் கடித்த ரகுவரன், அவளை இடித்துத் தள்ளி விட்டுக் கடகடவென உள்ளே நுழைந்து.. பூர்ணியின் கையிலிருந்தக் காகிதத்தைப் பட்டெனப் பறித்தான்.
திடீரென உள்ளே நுழைந்துத் தன் கையிலிருந்ததைப் பறித்தவனைக் கண்டு பூர்ணி..
“என்ன கண்ணு இது?, உன்ற கையெழுத்தாட்டம் இருக்கேன்னு தான் என்னன்னு பிரிச்சுப் பார்த்தேன்!” என்றாள்.
“ஒன்னுமில்ல” – முழுக் கடுப்புடன் பல்லைக் கடித்தபடி முணுமுணுத்தவன்.. நிமிர்ந்து..
“தமிழ் வாசிக்கத் தெரியாதா?” என்றான்.
அசடு வழியச் சிரித்து தலையைச் சொரிந்தவள் “கொஞ்சம் தகராறு தான்” என்றாள்.
சிரிப்பதா?, அழுவதா? எனப் புரியாமல் பரிதாபத் தோற்றத்துடன் நின்றிருந்தவனைக் கண்டு “ஹாஹாஹாஹா”-வெனப் பெரிதாகச் சிரித்தபடி உள்ளே நுழைந்த மோகனா..
“ஆனாலும்.. சான்ஸே இல்ல பூர்ணி நீ!! ரொம்ப ரொம்ப அருமையா விடிஞ்சிருக்கு இன்றைய நாள்!” எனக் கூறி மேலும் சிரிக்க..
“வாயை மூடு டா மோகன்” எனச் சீறினான் ரகுவரன்.
அவனைக் கண்டு கொள்ளாமல் தமக்கையிடம் திரும்பியவள்..
“அந்த லெட்டர்ல என்ன இருந்ததுன்னு தெரியுமா உனக்கு?” எனக் கேட்டாள்.
“அதான் படிக்க முன்ன, பிடுங்கிப் போட்டானே” – குறையாகக் கூறிய பூர்ணியை முறைத்து..
“ஆமா, இல்லாட்டியும் நீ அப்டியே படிச்சுக் கிழிச்சுப் போடுவ. சின்னப் பசங்க மாதிரி இன்னும் எழுத்து கூட்டிப் படிச்சிக்கிட்டு” – என்ற ரகுவரனின் முகத்தில் எள்ளும்,கொள்ளும் வெடிக்க.. அவன் முகம் போன போக்கைக் கண்டுப் பொங்கிய சிரிப்பை அடக்கிய மோகனா..
“சரி,சரி, படிக்கத் தெரியாட்டி என்ன?, என்ற அக்காளுக்கு எல்லாத்தையும் நல்ல்ல்லாஆஆ புரிஞ்சுக்கத் தெரியும்! அதனால.. நீ எழுதியிருக்கிறத வாசிச்சுக் காட்டு” எனக் கூறிக் கண்ணால் அவனிடம் ஜாடை காட்டினாள்.
“ஒன்னும் தேவையில்ல” என்றவன் காகிதத்தைக் கசக்கப் போக.. அவசரமாய் அவனிடமிருந்துப் பறித்தவள்.. கடகடவெனப் பிரித்து.. அதிலிருந்ததை வாசித்தாள்.
“தம்பு என்ன எழுதியிருக்கிறான்? கவிதையா? எங்க வாசி பார்ப்போம்”
பூர்ணியின் ஆர்வத்தைக் கண்டுக் கொஞ்சம் கோபம் குறைய, மெல்லப் புன்னகைத்தவனின் முகம் காட்டும் மாற்றத்தைப் புரிந்து கொண்டு..
“வாசிக்குறது என்ன?, மச்சான் பாடியே காட்டுவாரு” என்ற மோகனா.. “பாடு ரகு” என்றாள்.
“இல்ல,இல்ல அதெல்லாம் வேண்டாம்”
“ப்ச், ரொம்பப் பண்ணாம பாடு ரகு! இது செகண்ட் சான்ஸ், ம்ம்ம்” என்று அவள் முணுமுணுக்க… மனமில்லாமல் காகிதத்தைக் கையில் வாங்கியவன்..
கண் மூடி.. தான் அதை எழுதிய போது.. உண்டான உணர்வை உள்ளுக்குள் கொணர்ந்து.. பெருமூச்சொன்றை வெளியிட்டுப் பாடத் துவங்கினான்.
“நித்தியத்தில் இருபேரும் கலந்து போவோம்..
நீ யாரோ.. நான் யாரோ மறந்து போவோம்..
புத்துலகம் நாம் தேடி பறந்து போவோம்..
புவியீர்ப்பு மையத்தைக் கடந்து போவோம்..
பித்தத்தில் இருவருமே பின்னிப் போவோம்..
பிரபஞ்சம் அழிகையிலேயே பிரிந்து போவோம்..”
-உணர்ச்சி பொங்கப் பாடிக் கொண்டிருந்தவன்.. அடுத்த வரியைப் பாடத் தயங்கி.. அப்படியே நிற்க…
சமையல் மேடையில் சாய்ந்து நின்றிருந்தவனின் அருகே சென்ற மோகனா..
“முத்தத்தின் சத்தத்தில் உடைந்து போவோம்..
மோகத்தால் முக்தி நிலை அடைந்து போவோம்..” – என முடிக்க.. தன் தோள் உரச… குண்டு விழிகளில்.. குறும்பு குறையாது.. மெல்லிய சிரிப்புடன் தன் முகம் பார்த்துப் புருவம் உயர்த்தியவளை.. குனிந்து நோக்கினான் ரகுவரன்.
(இந்தப் பாடல் சிகரம் படத்தில் எஸ்.பி.பி பாடினது. தீ தித்திக்கும் தீ பாடல்லயும் இந்த வரிகள் வரும்.)
