அத்தியாயம் - 9.2
தந்தையின் பார்வையை உணர்ந்து ஓரக் கண்ணில் அவரை நோக்கியவள் “இத்தனை நாளா பதுங்கிட்டிருந்த புலி இன்னிக்குப் பாசப் பார்வையெல்லாம் பார்க்குதுங்கப்புச்சி” என வேண்டுமென்றே சத்தமாய்க் கூற..
“ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமிய கணபதி “நான் டென்ஷனோடயே சுத்துனாத் தான் அவ சந்தோஷமா இருப்பாளாட்ருக்குங்ப்பா” என்றதும்..
“ப்ச், ப்பா….” என்றவள்.. எங்கோ நோக்கியபடி அமர்ந்திருந்தவரிடம்..
“என்னைப் பாருங்ப்பா” என்றாள்.
முறைப்புடன் மகளை நோக்கியவரை.. தயக்கமாய் பார்த்து..
“சாரிங்ப்பா” என்றாள்.
வியப்பாய் பார்த்தவரிடம்… “இந்த சாரி உங்களுக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்போ, ஒரு மகளா நான் உங்க கூட இல்லாம போனதாலங்” என்றவள் “வேற எதுக்கும் என்றனால மன்னிப்புக் கேட்க முடியாதுங்ப்பா. ஏன்னா.. அது எதையும் நான் தப்புன்னு நினைக்கலீங்” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்டு அனைவரும் அமைதியாகி விட..
“நானும் மன்னிப்புக் கேட்டுக்குறேன் கண்ணு! ஒரு வேளை உனக்கும்,ரகுவுக்கும் கடைசி வரை ஒத்துப் போகாமலே இருந்திருந்தா.. உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் என்ற பிடிவாதத்தால கெடுத்தப் பாவியாகியிருப்பேன்! உன்ற விருப்பத்தை மதிக்காம நானா எல்லாத்தையும் முடிவு செஞ்சதுக்கு மன்னிப்புக் கேட்டுக்குறேன் கண்ணு” என்றார்.
அவரிடம் பதில் கூற அவள் வாய் திறந்த வேளை..
“பெத்த பாசத்துல அவன் வேணுமின்னா மன்னிக்கலாம்! ஆனா சரியெது,தப்பு எதுன்னு சொல்லிக் கொடுத்து வளர்த்த, என்னை மீறி, நீயா முடிவெடுத்துப் போனது தப்பு தான்! அந்த விஷயத்துல என்றனால உன்னை என்னைக்கும் மன்னிக்க முடியாது” எனத் துளசிநாதன் கெத்தாய்க் கூற.. புருவத்தை உயர்த்தியவள்..
“நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்கவேயில்லயே” எனக் கூறவும் “திமிர்ப்பிடிச்சக் கழுதை” என அவர் பல்லைக் கடிப்பதைக் கண்டு பூர்ணியும்,ஜீவரஞ்சனும் சத்தமின்றி சிரித்தனர்.
வெகு நாளைக்குப் பிறகு சிரிப்பும்,பேச்சுமாய் கலகலவென்றிருந்த வீட்டை மனநிறைவுடன் நோக்கியவள், இது அத்தனைக்கும் காரணமானவனை எதிர்பார்த்து.. வழி மேல் விழி வைத்தபடி காத்திருக்கத் தொடங்கினாள்.
இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்பியவன் தன் அறையில் தஞ்சமாகியிருக்க, அவன் அறையில் விளக்கெரிவதைக் கண்டு அவசரமாய் டைனிங் டேபிள் மீதிருந்த ஹாட்பாக்ஸை எடுத்துக் கொண்டு அவனறைக்குச் சென்றாள்.
கையில் புத்தகத்தோடு நாற்காலியில் அமர்ந்திருந்தவன், தயங்கிய பாவனையுடன் தன் அறை வாசலில் நின்றவளை நிமிர்ந்து நோக்கிப் பின் அவள் கையில் இருந்ததைக் கண்டு..
“கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதால, பொறுப்பான பொண்டாட்டியா என்ற மேல அக்கறை காட்ட ஆரம்பிச்சுட்டயாட்ருக்கு” எனக் கூறியதும்.. ரோஷமாய் ஹாட்பாக்ஸைப் பின்னே இழுத்துக் கொண்டவள்..
“நீ சாப்பிட்டா என்ன, சாப்பிடாட்டி எனக்கென்ன?” என்று விட்டு வெடுக்கெனத் திரும்பிச் செல்லப் பார்க்க..
“ஏய்..ஏய்..ஏய்..” எனத் தடுத்தவன்.. “உள்ள வா” என்றான்.
சுருக்கிய முகத்துடன் அறைக்குள் நுழைந்தவளின் கையைப் பற்றியிழுத்துத் தன் மடி மீது அமர்த்திக் கொண்டவனை அவள் வியப்பாய் நோக்க..
“என்ன?” எனப் புருவம் உயர்த்தினான் அவன்.
“என்ற மேல கோபமில்லியா?”
“காலைல இருந்தது. இப்போ இல்ல”
“ஏன் இப்போ இல்ல?”
“நாள் முழுக்க பார்க்கலன்னதும், என்னைத் தேடி வந்து நீ நின்னதால” –முன் நெற்றியில் பரவிக் கிடந்த கூந்தலை அவள் காதோரமாய் ஒதுக்கியபடி அவன் கூற..
“முட்டாள்தனமா நடந்துக்கிட்டேனா?” எனக் கேட்டாள் அவள்.
“ஆரம்பத்துலயிருந்தே” – புருவம் உயர்த்திக் கூறியவனை முறைத்தவள்..
“நீ மட்டும் ரொம்ப அறிவாளியா நடந்துக்கிட்டியாக்கும்?”என ரோஷமாய்க் கேட்டாள்.
“ஏய்.. என்னைக் குறை சொல்ல உனக்கு எந்தத் தகுதியுமில்லடி”
“ஏன் இல்ல?, கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து பளிச்,பளிச்ன்னு என்னைப் பார்க்கும் போதெல்லாம் கண்ணுல பட்டாசு வெடிச்சிட்டிருந்தவன், நான் கவனிச்சுப் பார்த்துக் கேள்வி கேட்டதும், அப்படியெல்லாம் ஒன்னுமில்லன்னு ஏன் பம்முன?”
“அப்போ.. அப்போ எனக்கே என்ற ஃபீலிங்க்ஸ் என்னன்னு புரியலடி. நேத்து வரை என்ற கூட வளர்ற ஒருத்தியா மட்டும் உன்னைப் பார்த்துப் போட்டு திடீர்ன்னு அப்பிடி உரிமையா பார்க்குறது ஒரு மாதிரி இருந்துச்சு! போதாததுக்கு நீ வேற நான் ஏதோ குத்தம் பண்றதாட்டம் ஒரு லுக் கொடுத்த! அது என்ற நினைப்பு தப்போ-ன்ற எண்ணத்தைத் தான் அதிகப்படுத்துச்சு!”
“அதுசரி”
“ஆனா.. அத்தனையையும் தாண்டி.. உன்ற கழுத்துல அந்த சங்கிலியை மாட்டும் போது மனசுல எந்த உறுத்தலும் இல்ல. அது ஏன்னு யோசிச்சப்போ..“
“யோசிச்சப்போ..??”
“என்னைத் தவிர நீ எவனைக் கட்டியிருந்தாலும், என்றனால அவ்ளோ ஈசியா ஏத்துட்டிருந்துக்க முடியாதுன்னு புரிஞ்சது”
“அடப்பாவி”
“ஆமா! இந்தக் களேபரம் எல்லாம் நடக்காம இருந்திருந்தாலும் நான் உன்னைத் தான் கட்டியிருப்பேன்” – தீவிரமாய்க் கூறியவனை அவள் வியப்புடன் நோக்க..
“எல்லாத்தையும் பண்ணிப் போட்டு எப்பிடிடி ஒன்னும் தெரியாதவளாட்டம் இப்பிடிக் கண்ணை விரிக்கிற?” என்றான்.
“நான் என்றா பண்ணேன்?”
“மொட்டைமாடில வைச்சு அன்னிக்கு நைட் என்னத்துக்கு டி என்னைய இறுக்கமாக் கட்டிக்கிட்ட? அப்போ ஆரம்பிச்சது தான் எல்லாம்”
வாயில் கை வைத்து ‘அடப்பாவி’ என விழிகளைப் பெரிதாக்கியவள்..
“அப்போ நல்லவனாட்டம் என்ற கிட்ட ‘கட்டிப்பிடிச்சது தப்பு’ன்னு அட்வைஸ் எல்லாம் பண்ணியே டா?”
“அப்போ தப்புன்னு தான் பட்டது! அதை மறுபடி நான் நினைச்சுக் கூடப் பார்க்கல! ஆனா.. மனசுல எங்கேயோ ஒரு இடத்துல அந்த சம்பவம் ஆழமா பதிஞ்சு போச்சு போலடி! அதுதான், வீட்ல எல்லாருமா சேர்ந்து இவளைத்தான் நீ கட்டிக்கப் போறன்னு சொன்னதும், உன்னை உரிமையா பார்க்க வைச்சிடுச்சு” என்றான்.
“அப்போ ஏன் என்றகிட்டப் பேசி புரிய வைக்க முயற்சி பண்ணாம, என்னைப் போக விட்ட?”
“ஆமா! உனக்கும்,எனக்கும் ஒத்து வராது! நான் மெஷின்,நீ பூவுன்னு டயலாக் பேசுனவளை என்ன சொல்லி பிடிச்சு வைக்க முடியும் என்றனால?”
“அப்டின்னா எனக்காகத்தான் ஃபேக்டரிக்குப் போக ஆரம்பிச்சியா?”
“இன்னுமா உனக்கு அந்த டவுட் இருக்கு?”
“………” – அமைதியாய் அவன் முகம் பார்த்தவளிடம்..
“ஆனா இனி நான் அடிக்கடி ஃபேக்டரிக்கு வருவேனல்லாம் எதிர்பார்க்காதடி! என்ற விருப்பம்,லட்சியம் எல்லாம் எழுத்து தான். தெரியுமல்ல?” என்றான்.
மெதுவாய்ப் புன்னகைத்துத் தலையாட்டியவளிடம்.. “என்ன அமைதியாய்ட்ட?” என்றான் அவன்.
அவன் தோளில் பதிந்திருந்தக் கையை எடுத்து.. அவன் கன்னத்தில் பதித்தவள்.. பெருவிரலால் அவன் கன்னத்தை வருடியபடி.. “அந்தக் கவிதையெல்லாம் என்னை நினைச்சு எழுதுனியா?” எனக் கேட்டாள்.
அவள் செய்கையில் மயங்கி.. ஆம் எனத் தலையாட்டியவன்.. “என்னை மீறி வெளிப்பட்ட வார்த்தைகள் அதெல்லாம்! இனியும் உன்ற கிட்ட மனசை மறைச்சு.. நல்லவனாட்டம் காட்டிக்க முடியாதுன்னு புரிய வைச்சது! குற்ற உணர்வெல்லாம் வர்ற அளவுக்கு இது தப்பான உணர்வில்லன்னு சொல்லிக் கொடுத்துச்சு” என்றான்.
தன் கன்னம் தீண்டும் அவள் விரல்களைப் பற்றியவன்.. “இதெல்லாம் என்ற கன்னத்துக்குப் பத்தாதேடி!” எனக் கூற..
அவன் கன்னத்தை இடித்து “முதல்ல தாடியை ஷேவ் பண்ணு” என்றவளிடம்.. “இதுக்கும் நீ தான் காரணம்” என்றவன்..
“எல்லாத்துக்கும் என்னையே சொல்லாதடா” என்று அவன் இருபக்கத் தாடியையும் பிடித்து ஆட்டியவளின் இடையைச் சுற்றி வளைத்துத் தன்னோடு இறுக்கி அவளை மேஜையில் சாய்த்துக் குனிந்தவன்.. அவள் முகம் நோக்கி..
“உன்ற கையைப் பிடிச்சதை,கட்டிப் பிடிச்சதையெல்லாம் பேட் எக்ஸாம்பிள்சோட கம்பேர் பண்ணி கேவலமா பேசுன நீ, என்னை உனக்குப் பிடிச்சிருக்குன்றதை எப்பிடி சொல்லப் போற-ன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா காத்திட்டிருக்கு என்ற மனசு” என்றான்.
உதட்டைக்கடித்தபடி ஒரு நொடி அவன் விழிகளை நோக்கியவள் பின்..
“பொதுவா பொண்ணுங்க எல்லாரும் தனக்கு வரப் போற ஹஸ்பண்ட் தன்னைத் தன்னோட அப்பா மாதிரி பார்த்துக்கோனும்ன்ற எதிர்பார்ப்போட இருப்பாங்க. ஆனா..” என்று இழுத்தவள்..
“நான்.. எனக்கே எனக்குன்னு வாழ்க்கைத்துணையா வரப் போறவன், எனக்கு அம்மாவா இருக்கோனும்ன்னு ஆசைப்பட்றேன்!” என்றாள்.
கண்கள் முழுக்க அன்பைத் தேக்கித் தன்னையே நோக்குபவனின் கன்னங்களை இரு கைகளால் பற்றிக் கொண்டவள்..
“தெரியல! ஏன் இப்பிடின்னு! அந்த அன்பு எப்படியிருக்கும்ன்றதை அனுபவிக்க முடியாமலே போய்ட்டதாலோ என்னவோ,. சின்ன வயசுலயிருந்து.. என்றப்பாக் கிட்ட,என்ற மாமாகிட்ட, என்றப்புச்சிக்கிட்ட நான் தேடுனதெல்லாம் அம்மாவோட அன்பு மட்டும் தான்! ஆனா.. வாழ்க்கைத் துணையா எனக்கு வரப் போறவன் கிட்டயும் நான் எதிர்பார்க்குறதை அந்த அன்பைத் தான்னு எனக்கு உணர வைச்சது நீ தான்” என்றாள்.
“……….”
“நாம எவ்ளோ கோபப்பட்டாலும்,கத்துனாலும்,திட்டுனாலும் விலக்கி நிறுத்துனாலும், கொஞ்சமும் குறையாத அன்பை வெளிப்படுத்துறது அம்மான்ற உறவு மட்டும் தான?”
“……….”
“அந்த வகைல நீ என்றக் கிட்ட அம்மாவாட்டம் தான் நடந்துக்கிற! நான் என்ன பண்ணாலும் பொறுத்துப் போன! விலக்கி நிறுத்தும் போதும் கூட இருந்த! விரட்டுனாலும் என்ற பின்னால வந்த! அப்பவும்,இப்பவும் என்ற மேல அன்பு,அக்கறையெதுவும் குறையாம நடந்துக்கிற! உன்னைத் தவிர வேற யாராலயும் நான் இழந்த அம்மா-ன்ற இடத்தை நிரப்ப முடியாதுன்னு தோணுச்சு”
“……….”
“அமெரிக்கால இருந்து திரும்பி வந்தப்போ, உன்ற விஷயத்துல எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்ல! அதே நேரம் நீ போட்ட சங்கிலியைக் கழட்டனும்ன்ற எண்ணமில்ல! ஆனா.. உன்ற கூட சேர்ந்து வாழறதைப் பத்தியும் மனசு யோசிக்கல! என்றப்பா சொன்னதுக்காகத் தான் இவன் என்னைக் கட்டிக்கிட்டான்ற நினைப்பு மட்டும் மனசுல பெருசா பதிஞ்சு போச்சு”
“…………..”
“காதல்ன்றதைப் பத்தி எனக்கு எந்தக் கனவும்,எதிர்பார்ப்பும் இல்லன்னாலும்.. நீ.. என்னை.. எ..எனக்காக… கட்டிக்கலன்ற எண்ணம் ரொம்பவே பாதிச்சது”
“………..”
“என்னைப் பிடிச்சிருக்குன்னு ஒரு வார்த்தை வெளிப்படையா சொல்லாம, உரிமையா நீ பார்த்ததும்,பேசுனதும் கோபத்தைக் கொடுத்தது. அந்தக் கோபம் தான் உன்னைக் காயப்படுத்த சொல்லுச்சு”
“…………..”
“அப்புறம் நீ செயினைக் கழட்டிடலாம்ன்னு அப்பா கிட்ட சொன்னது எல்லாத்தையும் புரட்டி போட்டுடுச்சு! நீ எப்படி,அப்பிடி சொல்லலாம்ன்னு! நான் கோபப்பட்டா, தப்பாப் பேசுனா.. ஒரேடியா என்னை வேணாம்ன்னு சொல்லிடுவியான்னு பயங்கர ஆத்திரம்”
“இதெல்லாம் ரொம்ப ஓவர்றி! சில்மிஷம் பண்றன்னு கேவலமா பேசிப்போட்டு அதுக்கு நான் ரியாக்ட் பண்ணுனா, அதுக்கும் திட்டுவியா நீ?”
“அது.. நீ எனக்கு விட்டுக் கொடுத்து, பொறுத்துப் போய்.. என்ற விருப்பத்துக்கேத்த மாதிரியே எப்பவும் நடந்துப்பியா?, அதான்.. இப்ப மட்டும் இவனுக்கென்ன பெரிய ரோஷம்ன்னு ஒரு எண்ணம் எனக்கு”
“அடிப்பாவி”
“அப்புறம்…” – என்றவளின் விழிகள் தன்னாலேயே கீழிறங்குவதைக் கண்டவன்..
“அப்புறம்?” எனக் கேட்க..
“அப்புறம் நடந்த எதையும்.. பிடிக்கலன்னு ஒதுக்கி வைக்க முடியல! அதே சமயம் நீ எந்த விளக்கமும் கொடுக்காததால ஏத்துக்கவும் முடியல! நீ பக்கத்துல வரும் போதெல்லாம் பதட்டமா தான் இருந்தது! அப்புறம் நான் எதிர்பார்க்கிறதை நீ பேச ஆரம்பிச்சப்புறம், மனசு சமாதானப்படத் தொடங்கிச்சு! ஆனா.. காதலிக்கிறியான்னு நான் கேட்டதுக்கு நீ எந்தப் பதிலும் சொல்லலன்னதும் மறுபடியும் கவலையா,குழப்பமா இருந்தது! கடைசியா நீ காலைல சொன்னதைக் கேட்டப்புறம்.. உன்ற அன்பை என்ற மூளைன்ற ஸ்கேலை வைச்சுக்கிட்டு எப்படியாவது அளந்துடனும்ன்னு நான் நினைச்சதெல்லாம் முட்டாள்தனம்ன்னு தோணுச்சு”
“……….”
“எனக்கான உன்ற அன்பு, நான் இத்தனை வருஷமா தேடுன,எதிர்பார்த்த என்றம்மையோட அன்புன்னு புரிய வந்தது. தாய்க்குப் பின் தாரம் தான் இருந்தாகோனும்ன்னு இல்ல! புருஷனும் கூட இருக்கலாம்ன்னு யோசிக்க வைச்சது”
பெரிதாய் உணர்ச்சிவசப்பட்டுக் கண்களில் நீரோடு அவள் காதல் சொல்லவில்லை, வெட்கப்பட்டு, தயக்கம் கொண்டு நெளிந்து, வளையவில்லை! அவன் கண் பார்க்கிறாள் நேராக, அவன் முகம் பார்க்கிறாள் அழகாக! அவன் கன்னங்களைப் பற்றிக் கொண்டு தனக்குள் நேசப் பூக்கள் பூத்த கதையை ஆசையாய் சொல்பவளைக் கண்டு.. அன்பு பெருக.. பின்னால் சாய்ந்திருந்தவனின் தோளில் முகத்தை அழுந்தப் புதைத்துக் கொண்டான் ரகுவரன்.
“தயக்கமா இருக்குன்னு என்ற முகத்தைக் கூட பார்க்காம இருந்த நீ?”
“அப்போ என்ற மனசு உன்ற கிட்ட என்ன தான் எதிர்பார்க்குதுன்னு புரியாமயில்ல இருந்தது?”
“புரிஞ்சப்புறம்?”
“உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கோனும்ன்னு தோணுது! வெட்கப்பட்டுக் கண்ணை மூடிக்கிட்டா கூட, உன்னை பார்க்குற நிமிஷம் குறைஞ்சிடுமேன்னுல்லாம் யோசிக்குது”
“ஹாஹாஹா”
“போடா..”
“மோகனா..” – தன் தலையைக் கோதியபடி சாய்ந்திருந்தவளை அழைத்தான் அவன்.
“ம்ம்”
“68 கிலோ இருப்பியாடி நீ?”
“ஏன்?”
“ஒரு மணி நேரம் நீ என்ற மடில உட்கார்ந்ததுக்கே, என்ற ரெண்டு தொடையும் மரத்துப் போச்சுடி” – கவலையாய்க் கூறியவனைக் கண்டுக் கோபம் பெருக.. அவனைத் தள்ளி விட்டு எழுந்து நின்றவள்.. தாடையை இறக்கி முறைத்துப் பார்த்தாள்.
“யப்பாஆஆஆ..” என்றபடிக் காலை உதறிக் கொண்டு எழுந்து நின்றவன் “இனி நானே கூப்ட்டாலும் தயவு செஞ்சு என்ற மடி மேல உட்கார்ந்திடாதடி” என்றவனைக் கண்டு…
“என்ற ஹெல்த் கண்டிஷன் என்ற வாழ்நாள் முழுக்க என்னைய குண்டாத் தான் வைச்சிருக்கும்! உனக்கு சிம்ரனாட்டம் ஒல்லியா பொண்டாட்டி வேணுமின்னா, வேற எவளையாவது பார்த்துக்க” – நொடித்து விட்டு வெளியே செல்லப் பார்த்தவளின் இடையைப் பற்றி அவன் கீழே தள்ளியதில் அவள் நேராகச் சென்று படுக்கையில் விழ, தானும் அவளைத் தொடர்ந்து விழுந்தவன், அவள் மீதே சாய்ந்திருந்தான்.
“அம்மாஆஆ” எனக் கண்களை மூடிப் பல்லைக் கடித்தவளிடம்.. “சாரிடி! ஸ்ட்ரைட்-ஆ உன்ற தொப்பைல லேண்ட் ஆயிட்டேன் போல! உன்ற தொப்பைல பாதியை வெட்டி எடுத்தா ஒரு மெத்தையே செய்யலாமாட்ருக்கு! பருத்த சதையா இருக்கேடி!” என்றவனின் கைகள் அவள் இடையைக் கிள்ளவும்.. பட்டென அவன் கைகளைத் தட்டி விட்டவளின் இருகைகளையும் பற்றி அவள் முகம் நோக்கிக் குனிந்தவன்..
“என்றம்மையாட்டம் நீ எனக்கு-ன்னு அவ்ளோ பெரிய வார்த்தையை சுலபமா உச்சரிச்சுட்ட! இனி உன்ற மேல என்றனால கோபப்படக் கூட முடியாதேடி” எனக் கூறி அவள் கன்னத்தில் இதழ் பதிக்க.. மயக்கமேறிய விழிகளுடன் அவன் முகம் நோக்கியவளிடம்..
“அந்தத் தெய்வீக ராகமெல்லாம் நம்ம பெட்ரூமுக்கு வெளியே வரை தான்! இங்க எப்பவும் ஒலிக்கப் போறது.. மோகனராகம் மட்டும் தான்!” என்றவனிடம் இதழ் விரிய புன்னகைத்து.. அவன் கழுத்தை வளைத்துக் கொண்டவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டவன்.. குனிந்து அவள் முகம் முழுதும் முத்தமிட்டான்.
அன்பாய்,ஆசையாய்,ஆர்வமாய், மோகமாய் அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை இமைக்காது நோக்கியவளை.. சொக்கிப் போன விழிகளுடன் பார்த்தவன்..
“அடுத்த முத்தத்துக்கு வெட்கப்படாம இப்பிடியே கண்ணைத் திறந்து வைச்சிருக்கியான்னு பார்ப்போம்” எனக் கூறி.. அவள் இதழ் நோக்கி குனியத் துவங்கியதும், மோகனமான புன்னகையுடன் விழி மூடிக் கொண்டவளைக் கண்டு சிரித்து.. அவள் இதழோடு இதழாகிப் போனான் அவன்!
முத்தத்தின் சத்தத்தில் தொலையத் தொடங்கிய இருவரும், கதவு தட்டும் சத்தத்தில் அவசரமாய்ப் பிரிந்து எழுந்து நின்றனர்.
சிவந்து,கனிந்த முகத்தோடு மூச்சு வாங்க நிற்பவளின் கன்னத்தில் அதிவேகமாய் ஒரு முத்தத்தைப் பதித்தவன், ஓடிச் சென்று கதவைத் திறந்தான்.
வெளியே நின்றிருந்த துளசிநாதனைக் கண்டு “இன்னும் நீங்க தூங்கலையாங்ப்பா?” எனக் கேட்டான்.
“அதையே நானும் கேட்கலாமல்ல?, ஒரு வாரத்துல கல்யாணத்தை வைச்சுக்கிட்டு நல்லாத் தூங்கி எழுந்து ஃப்ரெஷ்-ஆ இருக்கிறதை விட்டுப் போட்டு இன்னும் என்ன செய்யற தம்பி?”
“அது..அது.. எ..எழுதிட்டிருந்தேனுங்ப்பா, நீங்க எதுக்குக் கதவைத் தட்டுனீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல?”
கல்யாணப் பேச்சு தொடங்கி விட்டதால், மகனிடம் பேசாமல் திரிந்த நாட்கள் அத்தனையையும் பூர்வ ஜென்மமாய் நினைத்துக் கொண்ட துளசி, எப்போதும் போல் இயல்பாப் பேசத் துவங்க, தானும் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்லப் பழகியிருந்தான் ரகுவரன்.
“அண்ணன் கல்யாணத்துக்கு பூ அலங்காரம் பண்ணினானல்ல, முனியன், அவன் ஃபோன் நம்…பரு…” எனத் தொடங்கிய துளசி அவன் பின்னிருந்து வெளிப்பட்ட மோகனாவைக் கண்டுப் பேசுவதை நிறுத்தி.. மகனின் முகத்தை நோக்கினார்.
அவர் பார்வை சென்றத் திசையைத் தானும் நோக்கியவன் உதட்டை இறுக்கிப் பிடரியைக் கோதியபடி நின்று விட..
“ம்க்கும்” எனத் தொண்டையைச் செருமியவர் “கல்யாணம் முடியற வரைக்கும் மோகனா இனி அந்த வீட்ல இருக்கட்டும்” என்று ஸ்ட்ரிக்டாய் கூறி விட்டு கேட்க வந்ததைக் கேட்காமலேயே சென்று விட..
கதவைப் பூட்டி விட்டு, அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்த மோகனாவை நோக்கி..
“நாம ஜோடியா இருந்தாலே, இந்த மனுஷனால பொறுத்துக்க முடியாது போல டி” என்று முறைப்பாய்க் கூறவும், கலகலவென வாய் விட்டுச் சிரித்தவளை மோகனமாய் நோக்கியபடி அவன் கைக்கட்டி நின்றிருந்த வேளை… ஜன்னல் வழி பட்டாசு சத்தம் பெரிதாய் ஒலிக்க.. Y2K பிரச்சனையைத் தாண்டி, 2000-த்தில் உலகம் அழிந்து விடும் எனப் பிதற்றியக் கூட்டத்தின் கணிப்பை மீறி.. புதிய நூற்றாண்டொன்று புத்துணர்ச்சியுடன் பிறந்தது!
ஐந்து மாதங்களுக்குப் பிறகு…
நிறை மாத வயிற்றுடன் மெல்லப் படுக்கையில் அசைந்து கொண்டிருந்த பூர்ணி, வெளியே செல்லத் தயாராகி நிற்கும் ஜீவரஞ்சனைக் கண்டு அவசரமாய் எழுந்தமர்ந்தாள்.
அவள் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுவதைக் கடிந்தபடி அவளருகே வந்தமர்ந்த ஜீவன்,
“இப்பிடி அவசரமா எழுந்துக்காதன்னு எத்தனை தடவைடி சொல்றது?” எனத் திட்டவும்..
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லீங் மாமா!, ரெண்டு நிமிஷம் இருங்க! முகம் கழுவிட்டு உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்குறேனுங்” என எழப் பார்த்தவளின் கையைப் பற்றி நிறுத்தியவன்..
“ராத்திரி முழுக்க தூக்கமில்லாம, விடிய காலைல தான் தூங்க ஆரம்பிச்ச நீ! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு. நான் பார்த்துக்கிறேன்” எனக் கூற.. தயக்கமாய் அவன் முகம் நோக்கியவள்..
“நானும் வந்தா தான் என்னவாமுங் மாமா?” என்றாள் அந்த இரண்டு நாட்களில் ஆயிரமாவது முறையாக.
“ப்ச், கூட்டம் ஜாஸ்தியா இருக்கும் பூர்ணி! உன்றனால சமாளிக்க முடியாது! நான் சீக்கிரம் வீடு திரும்பிடுவேன்” என்றான் சமாதானமாய்.
“ம்ம்” என்றபடி முறைத்தவளைத் தோளில் சாய்த்துக் கொண்டவன்.. “கஷ்டமாயிருக்கா?” என்றான்.
“எதுங் மாமா?”
“இவ்ளோ பெரிய வயித்தை சுமந்திட்டிருக்கிறது?”
“இது எப்படிங் மாமா கஷ்டமாகும்?”
“இல்ல, குழந்தை உருவாகுறதுக்கு சரிபங்குக் காரணம் நானா இருந்தாலும், அடுத்து நடக்குற எல்லாத்துக்கும் நீ மட்டுமே கஷ்டப்படறதைப் பார்க்குப் போது.. கவலையா இருக்குடி”
“ஹாஹாஹா, நீங்க என்னங் மாமா மோகனாவாட்டம் பேசுறீங்க! இதெல்லாம் இயற்கைங் மாமா! கஷ்டமாவெல்லாம் நினைக்கத் தோணாதுங்! வரமாத் தான் நினைக்கத் தோணும்”
“என்னவோ போடி”
“இன்னும் ரெண்டு வாரம் தான்! உங்க மவ வெளியே வந்ததும், மிச்சக் கஷ்டத்தையெல்லாம் நீங்க பட்டுக்கோங்க”
“அதையும் ஒருத்தி ரிசர்வ் பண்ணி வைச்சிருக்கா அல்ல?”
“அதெல்லாம் சும்மாங் மாமா! குழந்தையைப் பார்த்ததும், தனக்குன்னு ஒன்னு பெத்துக்கோணும்ங்குற ஆசை தன்னால அவளுக்கு வந்துடும் பாருங்க”
“அதுசரி”
“உண்மைங் மாமா”
“சரி, முகம் கழுவிட்டு வா! என்ற கூட கொஞ்சம் சாப்பிட்டுப் போட்டு, அப்புறம் படுத்துக்க” – என்றவன் அவள் முகம் கழுவி வரும் வரை அமர்ந்திருந்து.. அவளை அழைத்துக் கொண்டு உண்ணச் சென்றான்.
இங்கே கணபதியின் வீட்டில் அரக்கப்பரக்க சமையலில் ஈடுபட்டிருந்தான் ரகுவரன்.
வாரம் ஒருமுறை ஃபேக்டரிக்குச் சென்று கொண்டிருந்தவன் அதன் பின்பு அதை மாதம் ஒரு முறையாக்கிப் பின் முற்றிலுமாய் நிறுத்தி விட்டு.. முழுக்க முழுக்க எழுத்துப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்! அதே நேரம், முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு ஒற்றை ஆளாய் சமாளிக்கும் மனைவியிடம், அவ்வப்போது நிலவரங்களைக் கேட்டுக் கொள்ளவும் தவறவில்லை அவன்!
பூர்ணி கர்ப்பமாகி ஐந்து மாதங்கள் கடந்த பிறகும், மசக்கைத் தொடர்ந்து கொண்டிருந்ததால், சமையல் வேலையை அவளிடமிருந்து முற்றிலுமாகப் பறித்திருந்தனர் வீட்டினர். குருவம்மா அந்த வீட்டில் சமையலைப் பார்த்துக் கொண்டதால், இந்த வீட்டு சமையல் பொறுப்பை ரகுவரன் ஏற்றிருந்தான்.
ஆள் வைத்துக் கொள்ளலாம் என்ற மோகனாவிடம் “எழுத மட்டும் தான் செய்றேன்! எனக்கும் ரிலாக்ஸேஷன் வேணுமல்ல! இனி என்ற சமையல் தான் இங்க! மாமனோடு குக்கிங் ஸ்கில்லைப் பத்தி என்ன நினைச்ச நீ” என்று ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்தவன், வாய்க்கு ருசியாய் சமைத்துப் போடுவதிலும் வல்லவனாய் இருந்தான்.
சமையலை முடித்து விட்டு அவன் அடுப்பை அணைத்த சமயம் அவசர,அவசரமாய் ஈரமுடியைத் துண்டில் கட்டியபடி அடுக்களைக்குள் நுழைந்த மோகனா,
“சாரி,சாரிடா! உனக்கு ஹெல்ப் பண்ணிட்டுக் குளிக்கப் போகலாம்ன்னு நினைச்சேன்! லேட் ஆனா.. அதுக்கும் திட்டுவியேன்னு தான் போய்ட்டேன்” என்று மன்னிப்பு வேண்டியதும்.. அவளை முறைத்துப் பார்த்தவன்..
“நீ ஹெல்ப் பண்ணிக் கிழிக்குற லட்சணம் தான் தெரியுமே எனக்கு” என்றவனைக் கண்டு அவள் உதட்டை சுழிக்க..
கழுத்திலிருந்தத் துண்டை உருவி, அவள் முகத்தில் எறிந்தவன் “எல்லாத்தையும் கொண்டு போய் டைனிங் டேபிள்-ல வை” என்று விட்டுத் திரும்ப..
அவன் சொன்னபடி பாத்திரங்களை எடுத்து வைத்தவள்.. “ஏதோ பூர்ணியாட்டம் ருசியா சமைக்குறானேன்ற ஒரே காரணத்துக்காக இவன் கத்துறதையெல்லாம் பொறுத்துப் போக வேண்டியதாயிருக்கு! திருப்பித் திட்டுனா வேற ரெண்டு நாளைக்கு சமைக்க மாட்டான்! குருவம்மாக்கா சமையல் என்ற வாய்க்கு ஒப்பாது! கடைசில இவனுக்கு அடங்கிப் போற நிலைமை வந்துடுச்சேடி மோகனா” என்று புலம்பியபடி நின்றவள்.. சமையலறை வாசலில் கைக்கட்டி நின்று கொண்டு தன்னை முறைத்துப் பார்த்தவனைக் கண்டுத் திடுக்கிட்டுப் பின் பம்மி.. அவன் முகம் பார்த்து..
“அப்பிடி என்ன என்ற முகத்துல அழகு வடியுதுன்னு இப்பிடிப் பார்க்குறவன்! கிளம்பு சீக்கிரம்! லேட்-ஆ போனா.. உன்ற அவார்டை வேற எவனும் வாங்கிட்டுப் போயிடப் போறான்” என்று விட்டு.. விறுவிறுவென டைனிங் டேபிளை நோக்கிச் சென்று விட்டாள்.
அவள் கூறியதும் மணியைப் பார்த்தவன் பின் அவசரமாய் மாடியேற..
“பெட் மேல ப்ளூ கலர் ஷர்ட் ஒன்னு வைச்சிருக்கேன். அதைப் போடு” – என்று கீழிருந்தே அவள் குரல் கொடுக்க..
“முடியாதுடி” என்றபடியே மாடியேறியவன்..
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ் டா ரகு” என்று கெஞ்சியவளின் குரலைக் கேட்டு சிரித்தபடியேத் தன் அறைக்குள் நுழைந்தான்.
அவன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஒன்றுக்காக அவனுக்கு அந்த வருடத்தின் சிறந்த புத்தகத்திற்கான மாநில விருது கிடைத்திருந்தது. அன்று அவன் விருது வாங்கும் விழா நடைபெறவிருந்ததால், பூர்ணியைத் தவிர ஒட்டுமொத்தக் குடும்பமும் களேபரத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
ஒரு வழியாகப் புறப்பட்டு,உண்டு முடித்து அனைவரும் காரில் ஏற.. கடைசியாய் வந்து சேர்ந்த மோகனாவையும்,ரகுவரனையும் கண்டு..
“ஒரு இடத்துக்குப் போறோமின்னா.. நேரமாக் கிளம்போனும்ன்ற நினைப்பு புருஷனுக்கும்,பொண்டாட்டிக்கும் என்னைக்கு வரப் போகுதோ தெரியல” என்று புலம்பியபடி துளசிநாதனும்..
“என்ன சட்டை போட்டிருக்கிற கண்ணு?, பச்சைக் கலர்ல போன பொங்கலுக்கு நான் ஒன்னு எடுத்துக் கொடுத்திருந்தேனல்ல?, அதைப் போட வேண்டியது தான?” என்றபடி கணபதியும் குறை கூறத் துவங்க..
திரும்பித் தந்தையை முறைத்த மோகனா “அந்த சட்டையைப் போட்டா, பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்தாக் கூட அவன் பளிச்சுன்னு தெரியுவானுங்ப்பா” என்றாள்.
“அதுக்குத் தான போடச் சொல்றேன்! ஃபோட்டோ,வீடியோவுக்கெல்லாம் நல்லா பளிச்சுன்னு தெரியுமல்ல?”
“விடுங் மாமா! அடுத்து திருச்சில ஒரு விழாவுல பேச கூப்பிட்டுருக்காங்க! அதுக்குப் போட்டுக்கிறேனுங்!” – என சமாதானமாய் கூறிய ரகு தன் தந்தையிடம்..
“நேரத்தை இழுத்தடிக்கிறதெல்லாம் உங்க மருமவ தான்! நானல்ல! பத்து செண்ட் பாட்டிலைத் திறந்து வைச்சுக்கிட்டு, எனக்கு எந்த செண்ட்டை போட்டு விடலாம்ன்னு பத்து நிமிஷமா யோசிச்சுட்டு நிற்குறா” என்றவனைக் கண்டுப் பல்லைக் கடித்து..
“அப்டியெல்லாம் ஒன்னுமில்லீங் மாமா” என்று மோகனா முணுமுணுத்த வேளை..
“ரகு.. உன்ற ஈவெண்ட் எத்தனை மணிக்கு டா தொடங்கும்?” எனக் கேட்டான் ஜீவரஞ்சன்.
“போனதும் 15,20 நிமிஷத்துல தொடங்கிடுமுங்ண்ணா! அரை மணி நேரத்துல நீங்க திரும்பியிரலாமுங்க” என்றவன்.. வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டுப் பின் யோசனையுடன் தன்னருகே அமர்ந்திருந்த மோகனாவை நோக்கி..
“ஃப்ளாஸ்க்ல வெந்நீர் ஊத்தி வைச்சிருந்தேனே! எடுத்துட்டு வந்தியா?” எனக் கேட்க..
“அய்யோ மறந்துட்டேன்!” என்றபடியே, அவன் மேலே ஏதும் சொல்லித் திட்டத் துவங்குவதற்குள் கார்க்கதவைத் திறந்து கொண்டு இறங்கியவளை முறைத்தபடித் தானும் இறங்கிய ரகுவரன்,
“காரை ஸ்டார்ட் பண்ணப்புறம் தான் உனக்கு எல்லாம் ஞாபகம் வருமா தம்பி?” எனத் திட்டிய தந்தையிடம்..
“போன வாரம் முழுக்க அவளுக்கு இருமல்ங்கப்பா! நைட் சரியா மூச்சு விட முடியாம தூக்கமில்லாம கிடந்தா! எங்க போனாலும் வெந்நீரைக் கைல வைச்சுக்கன்னு கொடுத்தா, அதையும் மறந்துட்டுப் போயிட்றாளு-ங்க” என்று திட்டி விட்டு அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.
டைனிங் டேபிளிலிருந்த வெந்நீர் பாட்டிலைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் திரும்புகையில் முறைப்பாய் உள் நுழைந்தவனைக் கண்டு.. அவசரமாய்..
“இங்க பார்றா! நான் பொறுத்துப் போறேன்றதுக்காக சும்மா,சும்மா எகிறிட்டிருந்தன்னு வையி, நான் பாட்டுக்க வீட்ல உட்கார்ந்திடுவேன் சொல்லிப் போட்டேன்” படபடவெனப் பேசியவளிடம்…
“இருந்துக்க! போற வழியில எவளையாவது பொண்டாட்டியாக்கிக் கூட்டிட்டுப் போய்க்கிறேன்” – எனக் கூற.. அவனருகில் வந்து முறைத்தவள் “உனக்கு அந்த ஆசை வேற இருக்கா?” எனக் கூற..
ஏற்கனவே பருத்த உடலைப் பெற்றிருந்தவள், அவனது கைவண்ணத்தில் வஞ்சகமின்றி வக்கணையாய் உண்பதிலும், அவனுடனான வாழ்க்கை கொடுக்கும் மகிழ்ச்சியிலும்,பூரிப்பிலும் மேலும் பெருத்து புஸூ,புஸூத் தோற்றத்திலிருக்க..
அவள் முகத்திலிருந்து இரண்டடித் தள்ளி நின்ற கன்னங்களில் குனிந்து அழுத்தமாய் முத்தமிட்டவன்.. இரு கைகளால் அவளை வளைத்துக் கட்டிக் கொண்டு..
“வெயிட்டைக் குறைடி” என்றான்.
“கட்டிக்குறப்பல்லாம் உனக்கு இதைத் தான் சொல்லத் தோணுமா?” – குறை கூறியவளிடம்..
“பின்ன நீ தான் மூச்சு விட சிரமப்படுவ” எனக் கூற..
“பேசாம, நீயே ஏன் எனக்கு ஒரு டயட் ப்ளான் ப்ரிபேர் பண்ணக் கூடாது?” எனக் கேட்கவும்..
“என்னை ஒரு கம்ப்ளீட் ஹோம் மேக்கர் ஆக்கிடுவ போலயேடி” என்றவனை நிமிர்ந்து நோக்கி..
“அதுல என்ன தப்பிருக்கு?” என்றாள்.
“ஒரு தப்புமில்ல! ஃபேக்டரி வேலையும்,மெஷினும், கம்ப்யூட்டரும் உன்ற கனவுன்னா, எழுத்தும்,சமையலும் என்ற விருப்பம்! கன்னித் தமிழையும்,இந்தக் கவர்ச்சிக் கன்னியையும் நேசிச்சுக்கிட்டே நான் என்ற காலத்தை ஓட்டிக்கிறேன்” – என்றவனை சிரிப்புடன் நோக்கியவளின் கன்னத்தில் மீண்டுமொரு முத்தத்தைப் பதித்தவன்..
“வா,வா அப்பா திட்டப் போறாரு..” எனக் கூறி..
“இன்னும் என்ன கண்ணு பண்றீங்க?”எனக் குரல் கொடுத்த சுவாமிநாதனிடம் “வந்துட்டோமுங்கய்யா” என்றபடியே அவளை இழுத்துக் கொண்டு ஓடிச் சென்றான்.
செல்லும் வழியில் அடுத்த வீட்டில் வண்டியை நிறுத்தியவன், வாசலில் தன்னை எதிர்பார்த்துக் காத்து நின்ற பூர்ணியிடம் ஓடிச் சென்று..
“கிளம்பியாச்சு பூர்ணி” என்றான்.
“நல்லபடியா போய்ட்டு வா கண்ணு! மென் மேலும் வளரோனும்ன்னு வாழ்த்துறேன்” என்ற பூர்ணி சிரிப்புடன் கை குலுக்க..
அவளிடம் புன்னகைத்து விட்டு அவள் வயிற்றருகே குனிந்தவன் “சித்தப்பா போயிட்டு வர்ரேனுங் செல்லக்குட்டி” எனக் கூறி ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸைக் கொடுத்து விட்டு நிமிர..
அவன் செய்கையைப் புன்னகையுடன் பார்த்திருந்தவள், காரில் அமர்ந்திருந்த மோகனாவிடம்..
“கேமரா எடுத்துக்கிட்டியாடி?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்” என்றவள் தன்னருகேயிருந்த பையைத் தூக்கிக் காட்ட, அடுத்து பார்வையை ஜீவனிடம் திருப்பினாள்.
கையைக்கட்டிக் கொண்டு அவளைப் பார்த்திருந்தவனைக் கண்டு “போய்ட்டு அரை மணி நேரத்துல வந்திடுவாரு! ரொம்ப முறைக்காத” என்ற ரகுவரன் தந்தை அடுத்து ஏதும் சொல்லும் முன் அவசரமாய் வந்து வண்டியிலேறினான்.
“கேமராவெல்லாம் எடுத்து வைக்கத் தெரியுது, டைனிங் டேபிள்-ல இருக்குற வெந்நீரை எடுக்கத் தெரியல” என்று மனைவியைக் கடிந்தபடியே வண்டியை ஓட்டிய ரகுவரனின் எண்ணங்களில்,செயல்களில்,மூளையில்,இதயத்தில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது மோகனா மட்டுமே என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!!
காதல்-ன்றது கவர்ச்சியான உறை போர்த்தியிருக்கிற வெற்று டப்பா மாதிரி! கவர்ச்சி குறைந்ததும் டப்பாவைத் திறந்துப் பார்தீங்கன்னா, உள்ள வெறும் காத்து தான் வரும்! அடிப்படை அன்பு மட்டும் தான் எல்லா வகையான உறவுகளையும் பலப்படுத்துது! அந்த அன்புக்கு அக்கறை,கோபம்,சிரிப்பு,சந்தோஷம்,துக்கம்,அழுகைன்னு பற்பல பெயர் இருக்கு! ஒரு உறவுக்குள்ள இணைகிற இருவருக்கிடையில வெளிப்படுகிற எல்லா உணர்வுகளுக்குப் பின்னாலயும் அன்பு மட்டும் தான் ஆட்சி செய்யுது! காலத்துக்கும் குறையாத அன்பிருக்கும் இடத்தில்.. என்றும் இசைக்கும் மோகனராகம்!
**************************THE END******************************
