அத்தியாயம் - 9.1

வீட்டு காம்பௌண்ட்டைச் சுற்றிலும் வளர்ந்து நின்ற செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபடி, வேஷ்டியும்,பனியனுமாக வியர்வை வழிய நின்றிருந்தார் கணபதி.

“நான் ஃபேக்டரிக்குக் கிளம்புறேனுங்ப்பா!” – கைக் கடிகாரத்தைச் சரி செய்து கொண்டேத் தன்னருகே நடந்து வந்த மோகனாவை நிமிர்ந்து நோக்கியவர், பதில் சொல்லாது முகத்தைத் திருப்பிக் கொள்ள..

மூக்கு விடைக்கக் கையைக் கட்டிக் கொண்டு அவரை முறைத்து அவள், வாய் திறக்கவிருந்த வேளை..

“ம்க்க்க்க்கும்” என்றபடி வாசலருகே வந்து நின்றான் ரகுவரன்.

அவனைக் கண்டதும் முகம் பதட்டத்தைத் தத்தெடுத்து உதடுகள் நடுக்கமெடுக்க.. தடுமாறிய பார்வையை வேறு புறம் திரும்பி மறைத்தவள்.. தந்தையிடம் ஆரம்பிக்கவிருந்த சண்டையை மறந்து.. விறுவிறுவென முன்னே நடந்து,இல்லை.. ஓடிச் சென்று விட்டாள்.

அவள் சென்றதும் திரும்பி மருமகனை நோக்கியவர், முகத்தை உர்ரென்றாக்கி மீண்டும் செடிகளின் புறம் திரும்பிக் கொள்ள.. சிரிப்புடன் அவரருகே வந்து நின்றவன், அவர் கையிலிருந்த தண்ணீர் பைப்பைக் கையில் வாங்கிக் கொண்டான்.

முறைத்த வண்ணமிருந்தவரிடம் ஒரு பார்வையைச் செலுத்திப் பின், தங்களிருவரையும் கவலையாய் நோக்கியபடி வாசலைக் கடந்துத் தெருவில் இறங்கிச் சென்ற மோகனாவையும் கண்டு விட்டு.. அவரிடம்..

“அவ போயிட்டாங் மாமா, அதனால நடிப்பைக் குறைங்க” என்றான்.

நொடியில் முறைப்பு மாறி பெரிதாய்ப் பற்களைக் காட்டிச் சிரித்தவர், எட்டி மகள் சென்று விட்டதை உறுதி செய்து கொண்டு.. ஆர்வத்துடன்..

“நீ சொன்னதெல்லாம் நெசமா கண்ணு?” எனக் கேட்டார்.

“எதைக் கேட்குறீங்க?” – வேண்டுமென்றே தெரியாதது போல் கேட்டவனிடம்..

“ப்ச், நீ போட்டச் செயினை எந்தக் காரணத்துக்காகவும் கழட்ட முடியாதுன்னு அவ சொன்னதா.. நீ தான கண்ணு சொன்ன?” – என்றார் அவர் குறையாத குதூகலத்துடன்.

“ம்ம்” என்றவன் செடிகளுக்குத் தண்ணீரை பாய்ச்சியபடியே “ஆனா.. என்ற கூட சேர்ந்து வாழ்வேன்னும் அவ சொல்லலயேங் மாமா! “ என்றான்.

“சொல்லுவா சொல்லுவா சீக்கிரமே! நீ சொல்ல வைச்சிடுவ சாமி! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” – என்று உறுதியுடன் கூறியவர், பின் எதையோ யோசித்து சங்கடமாய் அவன் முகம் நோக்கி..

“உ..உனக்கு அவளைப் பிடிச்சிருக்கல்ல கண்ணு?,” எனக் கேட்டார்.

திரும்பித் தன் முகம் பார்த்தவனிடம் “எ..எனக்குத் தெரியும், நான் சொன்னேன்றதுக்காக, என்ற கட்டாயத்துல தான் நீ அவளைக் கட்டிக்க ஒத்துக்கிட்டேன்னு! ஆனா கண்ணு..” – என்று இழுத்தவரிடம்.. லேசாகப் புன்னகைத்தவன்..

“நான் ஃபேக்டரிக்கு வர ஆரம்பிச்சது என்ன காரணத்துக்காகன்னு உங்களுக்குத் தோணுதுங் மாமா?” – எனக் கேட்டான்.

“வேற என்ன?, மாமன் இப்படிப் படுத்தப் படுக்கையாக் கிடக்குறானே! உதவி செய்வோம்ன்ற நோக்கமாட்ருக்கும்”

‘ம்ஹ்ம்’ என்பது போல் தலையாட்டியவனிடம்..

ஆச்சரியத்துடன்.. “மோகனாவுக்காகவா?” என்று அவர் கேட்க.. நடந்து சென்று குழாயை அடைத்து விட்டு வந்தவன்.. தண்ணீர் பைப்பை சுருட்டி வைத்தபடி..

“எனக்கும்,அவளுக்கும் ஒத்து வராதுன்னு சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்துறதுக்காக, அவ முன்ன வைச்சக் காரணங்கள் அத்தனையையும் உடைச்சே ஆகோனும்ன்னு ஒரு வேகம் வந்ததுங் மாமா! ஆரம்பத்துல கோபம் மட்டும் தான் இருந்தது, என்னை என்ன ஆகாவலின்னு நினைச்சாளான்னு! ஆனா.. அடிப்படைல அவ மேல எனக்கிருக்கிற அன்பு,பாசத்தாலோ என்னவோ.. போகப் போக கோபமெல்லாம் மறைஞ்சு.. அவ சொன்னதுல என்ன தப்பிருக்குன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு! எனக்கு வரப் போற வாழ்க்கைத்துணை இப்படித் தானிருக்கோனும்ன்னு ஒரு பொண்ணு வாய் விட்டு சொல்றதுல, எந்தத் தப்புமில்ல தானுங் மாமா?,” – என்றவன்..

பாசம் பொங்கத் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவரிடம்..

“இடையில ஆரம்பிச்ச எனக்கே நிர்வாக விஷயமெல்லாம் பிடிபட ஆரம்பிச்சதும், இதை மாத்தலாம்,அதை மாத்தலாம்ன்னு ஆயிரம் ஐடியா வரும் போது, இதை பாஷனா வைச்சிருக்கிறவளுக்கு, எத்தனை ஆசைகள் இருக்கும்ன்னு புரிஞ்சது! அதனால தான்.. அவ திரும்பி வந்து பொறுப்பெடுத்துக்கும் போது, அவ விருப்பத்துக்கு அடித்தளமாவது அமைச்சு வைக்கோனும்ன்னு தோணுச்சு!”

“………..”

“இதையெல்லாம் நான் அவளை இம்ப்ரெஸ் பண்ணோனும்ன்னு நினைச்சு செய்யலீங் மாமா! இது முழுக்க முழுக்க அவ மேல நான் வைச்சிருக்கற அன்பு,பாசம்,அக்கறையோட வெளிப்பாடு மட்டும் தான்!”

அதுவரை மலர்ந்த முகத்துடன் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர், அவன் கடைசியாகக் கூறியதைக் கேட்டு முகம் மாற..

“வெறும் அன்பும்,அக்கறையும் குடும்பம் நடத்த உதவாது கண்ணு! அதைத் தாண்டிய பிடித்தமும்,பிணைப்பும் இருக்கோனுமில்ல?.” எனக் கேட்டு ‘அது உன்னிடம் உள்ளதா’ என்ற பார்வையோடு அவனைப் பார்க்க..

வேஷ்டியை மடித்துக் கட்டியபடி அவர் முகம் பாராமல் நின்றவன்..

“இதை உங்க மவ கேட்கட்டுமுங் மாமா! அப்போ பதில் சொல்லிக்கிறேன்” எனக் கூறி “காலைச் சாப்பாட்டுக்கு நேரமாகிடுச்சு, வாங்க நீங்க” என்றழைத்துச் செல்ல.. மகிழ்ச்சியும்,கவலையும் ஒரு சேர அவனைப் பின் தொடர்ந்தார் கணபதி.

ரிச்சலும்,பொறுமலும் அதைத் தாண்டிய படபடப்புமாய்த் தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்த மோகனா, விடைத்த மூக்குடன் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த வெங்கடேசன்..

“நீங்க கேட்ட ஃபைல் ரகுவரன் சாரோட கம்ப்யூட்டர்ல இருக்குங் மேடம்! அது அவர் பர்சனல் அக்கௌண்ட்ங்! க்ரெடென்சியல்ஸ் அவர் கிட்ட தானுங் இருக்கு” என்றான்.

“சார் வீட்ல தான் இருக்குறாரு. ஃபோன் பண்ணி பாஸ்வேர்டைக் கேளுங்க. இதையெல்லாம் கூடவா உங்களுக்கு நான் சொல்லித் தரோனும்” – வழக்கம் போல் பாய்ந்தவளிடம்..

“முயற்சி பண்ணிப் பார்த்தேனுங் மேடம்! சார்-ஐ காண்டாக்ட் பண்ண முடியலீங்!” – என்றான் அவன் விறைத்த குரலில்.

எரிச்சலுடன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டவள் பின்..

“நீங்க போங்க! நான் பேசிட்டுச் சொல்றேன்” என்று விட்டு எழுந்து சென்று, அவனது நாற்காலியில் அமர்ந்து, அவனது டெஸ்டாப்பில் லாகின் செய்ய முயன்றாள்.

அவளிட்ட பாஸ்வேர்டுகள் எதுவும் வேலை செய்யாமல் போக, கடுப்பானவள், வேறு வழியின்றி.. அவன் சீட்டில் அமர்ந்தபடி வீட்டிற்கு ஃபோன் செய்தாள்.

“ஹலோ..” – மெல்லிய குரலில் ஒலித்த அவனது குரல், லேசாய் வியர்க்க வைக்க.. அதை ஒதுக்கி விட்டு..

“உன்ற கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் சொல்லு” எனக் கேட்டாள்.

“எதுக்கு?”

“எதுக்கா??” – அவளது பற்கள் தங்களது பங்கிற்குக் கோபத்தைக் காட்டிக் கடிபட்டுக் கொண்டிருக்க.. தொடர்ந்து..

“இதென்ன உன்ற பர்சனல் கம்யூட்டர்ன்னு நினைச்சியா?, உன் இஷ்டத்துக்குப் பூட்டிட்டு போயிட்றதுக்கு?, எனக்கு சில டீடெயில்ஸ் வேணும்! அது உன்ற சிஸ்டம்ல இருக்கிறதா வெங்கடேசன் சொன்னாரு. அதனால, உன்ற பாஸ்வேர்டை சொல்லு” என்றாள்.

“சொல்ல முடியாது”

“ஏய்ய்..”

“என்றி கத்துற?, உன்ற இஷ்டத்துக்கு என்னைய மட்டமா பேசி, என்ற கேரக்டரை அசிங்கப்படுத்தி ஓட விடுவ! இப்ப உன்ற தேவைக்கு நீ கூப்பிட்டுப் பேசுனதும், நீ கேட்குறதுக்கு நான் பொறுப்பா பதில் சொல்லிடோனுமா?”

“நான் ஃபேக்டரி விஷயமா பேசிட்டிருக்கேன்! நீ எதுக்கு உன்ற பர்சனல் விஷயத்தை இதோட சம்மந்தப்படுத்துற?”

“ஃபேக்டரி சம்மந்தமா பேசுறதுக்கு மட்டும் என்றனால வேற ரகுவரனையெல்லாம் உருவாக்கித் தர முடியாது? என்னை என்ன மெஷின்னு நினைச்சியா? நீ ப்ரோக்ராம் பண்ணி வைச்சதை மட்டும் பேசுறதுக்கு?”

“இப்ப என்னன்ற?”

“என்றனால பாஸ்வேர்டை சொல்ல முடியாது. முடிஞ்சதைப் பார்த்துக்க”

“நிர்வாக விஷயம் எல்லாத்தையும் விரல்நுனில வைச்சிருக்கிறத் திமிர்ல தான இப்படிப் பண்ணற?, எப்பிடியும் இவ நம்ம காலைப் பிடிச்சுத்தான ஆகோனும்ன்ற எண்ணத்துல”

மிதமிஞ்சிய கோபத்தில் பெருமூச்சை வெளியிட்டுத் தலை முடியைக் கோதிக் கொண்டவன்..

“இவ்ளோ தான் டி நீ! என்னைப் பத்தி எப்பவுமே உனக்கு மட்டமான எண்ணம் தான்! ஃபோனை வைச்சுட்டுப் போடி – எனக் கூறி வைக்கப் பார்க்க..

“ஏய்..ஏய்.. இரு,இரு” எனத் தடுத்தவள் ஆழ மூச்செடுத்து நெற்றியை நீவிக் கொண்டு..

“சாரி. நான் பேசுனதுக்கு மன்னிப்புக் கேட்டுக்கிறேன்! போதுமா? இப்போ பாஸ்வேர்டை சொல்லு” – என்றாள் விடாப்பிடியாய்.

ஒரு நிமிடம் அமைதியாய் இணைப்பில் இருந்தவன் பின் “சுயநலவாதி” என்று விட்டு ஃபோனை வைத்து விட..

அவன் சுயநலவாதி என்றதில் கோபம் பெருக, முழு வேகத்தில் நொட்,நொட்டென ஃபோன் பட்டனை அழுத்தி மீண்டும் அவனை அழைத்தாள்.

அடுத்துப் பல முறை முயற்சித்தும் அவன் எடுக்காது போக, கைப்பையைத் தூக்கிக் கொண்டு விறுவிறுவென காரை நோக்கிச் சென்றவள், அடுத்தப் பத்தாவது நிமிடம், அவன் முன்பு மூச்சு வாங்க நின்றாள்.

கார் வந்து நிற்கும் அரவம் கேட்டதும், டைப் செய்வதை நிறுத்தி விட்டு, அவன் அறையிலிருந்து வெளியே வந்து நோக்குகையில், அவள் அதி வேகத்தில் மாடியேறிக் கொண்டிருந்தாள்.

“யாரை சுயநலவாதின்ற?”

கடைசிப் படியில் நின்று கொண்டு எடுத்த எடுப்பில் கேள்வி கேட்டவளை, அறை வாசலுக்கும்,படிக்கட்டுகளுக்கும் இடையே இருந்த நடைபாதையில் நின்றபடி நோக்கியவன், கைப்பிடியில் சாய்ந்தபடி கைகளைக் கட்டிக் கொண்டு, அலட்டிக் கொள்ளாமல்..

“உன்னைத் தான்” என்றான்.

“…………” – பதிலற்று ஆத்திரத்துடன் நின்றவளிடம்..

“மாமாவுக்கு ஆபரேஷன்னு தெரிஞ்சும் ஏன் அன்னைக்கு விட்டுப் போன?” எனக் கேட்டான்.

“ஏன்னா… அது ரிஸ்க்கான சர்ஜரி இல்லன்றதால! என்றப்பா எப்பிடியும் நல்லபடியா குணமாகி வந்திடுவாருன்ற நம்பிக்கை இருந்ததால!. அப்பிடி குணமாகி வர்றவரைப் பார்த்துக்க ஒரு கூட்டமே இருக்குன்றதால” – பேசிக் கொண்டே சென்றவளை இடை நிறுத்தியவன்..

“எத்தனை பேர் இருந்தாலும், நீ அவரோட இருக்கிற மாதிரி வருமா?” என்றான்.

“ஏன்? நான் இருக்கோனும்? அவரோட மகள்ன்றதாலயா?, நான் அவர் பெத்த மக-ன்ற நினைப்பு இருந்திருந்தா.. ஏன் என்ற விருப்பத்துக்கு மாறான விஷயத்தைச் செய்யச் சொல்லி என்னை அவரு வற்புறுத்தோனும்?, என்ற விருப்பமின்மை, என்ற கோபம் எதையும் நான் வெளிப்படுத்தக் கூடாதா?, ஹாஸ்பிடல் பெட்ல படுத்துக்கிட்டு அவர் நினைச்சதை சாதிச்சுட்டா, நான் இதான் என்ற தலையெழுத்துன்னு எல்லாத்தையும் ஏத்துக்கோனுமா?,”

“…………..”

“பெத்தவங்க,பெரியவங்க-ன்னு பேரை வைச்சுக்கிட்டு அவங்க எண்ணத்துக்கெல்லாம் பொம்மையா தலையாட்டுனாத் தான் எனக்குப் பொதுநலவாதி பட்டம் கொடுப்பீங்கன்னா எனக்கு அது தேவையே இல்ல! நான் சுயநலவாதியாவே இருந்துட்டுப் போறேன்”

“……..”

“நீ ட்ராயிங் படிக்க ஆசைப்பட்டு உன்றப்பாரோட சண்டை போட்டு நினைச்சதை சாதிச்சுக்கிட்டப்போ, நான் வெளிநாடு போய் படிக்க நினைச்சதுல என்ன தப்பு இருக்கு? ஃபேக்டரி நிர்வாகம் எனக்கு வேணாம், இலக்கியம் தான் முக்கியம்ன்னு கதவை மூடிக்கிட்டு நீ கதை எழுத முடிவு செஞ்சப்போ, எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்ன்னு நான் முடிவு செஞ்சதுல என்னத் தப்பிருக்கு?, எனக்கு மட்டும் எதுக்கு சுயநலவாதி பட்டம் கொடுக்குறீங்க? பொண்ணுன்றதால தான?”

“வேணாம்ன்னு முடிவு செஞ்ச கல்யாணம், வேணாம்ன்றதாகவே இருக்கட்டும்ன்னு தான், உன்னை அந்தச் செயினைக் கழட்ட சொன்னேன்” – அமைதியாய்க் கூறியவனிடம்..

“………….” – பதில் சொல்ல முடியாது திணறி நின்றாள் அவள்.

“முடியாதுன்னு ஏன் சொன்ன?”

“இது என்றம்மையோட தாலி”

“அதெல்லாம், என்ற கையால அது உன்ற கழுத்துல ஏறுறதுக்கு முன்னாடி வரை தான். அது உனக்கும் தெரியும்.”

“இப்போ என்ன பதிலை எதிர்பார்க்குற நீ?”

“நான் எதிர்பார்க்குறதெல்லாம் நீ சொல்லிடவாப் போற?”

“நிச்சயம் மாட்டேன்”

“அப்போ உன்ற மனசுல இருக்கிறதைச் சொல்லு”

“……….” – நின்றிருந்தப் படியின் கைப்பிடியைப் பிடித்தபடித் தலையைக் குனிந்து இறுகக் கண் மூடியவள்..

“ஏன்னா.. இதை வெறும் செயினா நான் நினைக்கல” என்றாள்.

“…………”

“நீ என்ற கழுத்துல கட்டுனத் தாலியா தான் நினைக்குறேன்”

-இதுவரை செயின்,சங்கிலி என்றே குறிப்பிட்டுக் கொண்டிருந்தவள், முதன் முறையாக அதைத் தாலியென்றதில், மகிழ்ச்சியாய்,கிளர்ச்சியாய் ஓர் உணர்வெழுந்து ஆசுவாசப் பெருமூச்சைக் கொடுக்க..

கண்களைத் திறவாமலே, இறுக்கியக் கைகளுடன் பேசிக் கொண்டிருந்தவளின் அருகே வந்து நின்றான் ரகுவரன்.

மூடிய கண்கள், மூடிய நிலையிலேயே நின்றவள், அவன் அருகில் வரும் அரவம் உணர்ந்தும் அசையாதிருந்தாள்.

அவள் நின்றிருந்த படிக்கு, ஒரு படி மேலே சுவரில் சாய்ந்தபடி நின்றவன், இறுக்கிய அவளது கையைத் தொட வேண்டித் தன் கையை நீட்ட.. வெடுக்கெனப் பின்னே இழுத்துக் கொண்டவள், நிமிர்ந்து அவன் முகம் பார்த்து..

“இது நம்ம கலாச்சாரத்துக்கும்,பண்பாட்டுக்கும் நான் கொடுக்கிற மரியாதை! என்றப்பனோட கட்டாயம் இதுல எங்கேயுமில்ல. இது என்ற வீக் பாய்ண்ட்டும் இல்ல. அதனால, கால,காலமா பொம்பளைங்க இந்த விஷயத்துல மட்டும் எப்படியும் அடங்கிட்றீங்கன்னு மட்டமா நினைக்காத” – எரிச்சலோடு கூறியவளிடம், தோளைக் குலுக்கியவன்..

“உனக்கு விருப்பமில்லாம, இது உன்ற கழுத்துல இருக்க வேணாம்ன்னு தான் இப்பவும் நான் சொல்றேன்! கலாச்சாரம்,பண்பாடெல்லாம் ஒழுக்க நெறிகளுக்காக உருவாக்கப்பட்டது தான்! மத்தபடி தனிமனித உரிமை,சுதந்திரம் தான் ரொம்பவும் முக்கியம்! அதாவது உன்ற நிம்மதி,சந்தோஷம் இதெல்லாம் தான் முக்கியம்ன்னு சொல்றேன்” என்றான்.

அவன் கூறிய பதிலில், நிமிர்ந்து அவனை முறைத்தவள்.. கைகளைக் கட்டிக் கொண்டு..

“அதாவது நீ என்ற விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்குற ஆளுன்னு சொல்ல வர்ற?” எனக் கேட்க.. அதுவரையிருந்த மனநிலை மாறி, அலெர்ட்டாகி அவள் முகம் பார்த்தவனிடம்..

“விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்கிறவன் தான், இஷ்டமா,இல்லையான்னு புரிஞ்சுக்காமலே, அப்பிடிப் பண்ணுவானா?”

“எப்பிடிப் பண்ணுவானா?”

“என்ன என்ற வாயால, நீ என்னைக் கட்டிப்புடிச்ச-ன்னு நான் சொல்லோனுமா?”

“சொல்லேன்! கேட்க நல்லாயிருக்கல்ல?”

மறுபடி பல்லைக் கடித்து முறைத்தவள் “அன்னிக்கொரு நாள், பூர்ணி-ஜீவன் மாமா பக்கம் நீ போகாம தடுக்க, மொட்டை மாடில வைச்சு நான் உன்னைக் கட்டிப்பிடிச்சதுக்கு, என்ற முகத்தைக் கூடப் பார்க்காம, என்ற கூட பேசாம திருப்பிக்கிட்டுத் திரிஞ்ச ஆளு நீ” எனக் கூற..

“ஆமா! அப்போ நீ என்ற மாமன் மக மட்டும் தான்! கூடவே வளர்றவ! உன்ற கிட்ட ஒழுக்கமில்லாம நடந்துக்க முடியுமா?, ஆனா இப்போ அப்பிடியா?” என்றவன் தொடர்ந்து..

“இப்போ நீ என்ற பொண்டாட்டியாச்சே” என்று ரசித்துக் கூற..

முகம் ஏகத்துக்கும் சிவப்பாய் மாறுவதை உணர்ந்து பதறிப் போனவள்..

“லூசாட்டம் ஒளப்பிரிக்காத” என்றுத் திட்டினாள்.

“என்ன ஒளப்பறேன்?, உன்ற கழுத்துல இருக்கிற சங்கிலிக்குத் தாலின்னு இப்ப தான நீ பேரு வைச்ச?, அப்ப, அதை உன்ற கழுத்துல கட்டுன நான், உன்ற புருஷன் தான?”

“நீ இப்பிடியே பேசிட்டிரு. நான் போறேன்” – வேகமாய்த் திரும்பியவளை..

“மோகனா…” என்றழைத்து நிறுத்தினான் ரகு.

சுருங்கிய புருவத்தோடு முசுட்டு முகமாய் தன் புறம் பார்த்தவளைக் கண்டு.. முகம் மென்மையாக..

“போதும்…” என்றான் சலிப்பு நிறைந்த குரலில்.

விழி உயர்த்தி அவன் முகம் பார்த்தவளிடம்..

“இந்த சண்டை,வாக்குவாதம்,ஈகோ எல்லாம்… எல்லாமே போதும்! எந்த விஷயத்துக்கும் ஒரு ஸ்டேஜ்ல முடிவு வேணும் தான?, சீக்கிரம் இதுக்கு முற்றுப்புள்ளி வை. ப்ளீஸ்” எனக் கூறியவனை.. ஒரு நொடி அசையாது நோக்கினாள் மோகனா.

இமைக்காமல் தன் விழி நோக்குபவளின் பார்வையைத் தாங்கி நின்றவனிடம்..

“முற்றுப்புள்ளி நான் தான் வைக்கோனுமா?” எனக் கேட்க.. மெலிதாய் விரிந்த புன்னகையுடன் அவளை நோக்கியவன், பின்னாலிருந்த சுவரில் தலை சாய்த்து..

“கண்ணு முன்னால வராத-ன்னு சொல்லியும், தைரியமா வந்து நிற்குற?” எனக் கேட்டான்.

உடனே முகம் பதற்றத்துக்குத் தாவ, சட்டெனத் திரும்பி நடந்தவளிடம்..

“தோணும் போது தான் கட்டிப்பேன்னு சொன்னேன்! இப்போ தோணல! ஆனா.. இனி எப்போன்னாலும் தோணும்” எனத் தொடர்ந்து கூற.. காதை மூடிக் கொண்டு விறுவிறுவெனப் படியிறங்கினாள் மோகனா.

“வெங்கடேசன் கிட்ட பாஸ்வேர்டை சொல்லிட்டேன்! உனக்குத் தேவையான டீடெய்ல்ஸை அவன் தருவான்” என்று அவன் கூறவும்.. நின்று அவனை முறைத்து…

“ஏன்?, அதை என்ற கிட்ட சொல்ல மாட்டியாக்கும்?, உன்ற பாஸ்வேர்டை நான் என்ன அவிச்சா திங்கப் போறேன்?” எனத் திட்டியவளிடம்..

“அதுல, நீ பார்க்கக் கூடாத ஐட்டமெல்லாம் நிறைய இருக்கு” என்றான் அவன்.

“ஐட்டமா?”

“ஆமா! எல்லாம் மலையாள ஐட்டம்” – சிரிப்போடு கூறியவனைக் கண்டு.. அவள்..

“ச்சீ” என்று முகம் சுழிக்க..

“நீ ஏன் விட்டுட்டுப் போன? அதான்” – தொடர்ந்த சிரிப்புடனே கூறியவனை நிமிர்ந்தும் பாராமல்.. அவள் வாசலை நோக்கி நடந்து விட்டாள்.

றுநாள் அவள் முற்றிலும் எதிர்பாரா விதமாக, அவளுக்கு முன்பே அலுவலகம் வந்திருந்தவன், வெங்கடேசனோடு பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவள் புருவம் தூக்க, கண்ணடித்துப் புன்னகைத்தவன்.. அவள் பதறி,வெங்கடேசனை ஒரு பார்வை பார்த்து விட்டுப் பின் “வெட்கங்கெட்டவன்” என்று முணுமுணுத்தபடியேத் தன் இருக்கையில் அமர்வதை சிரிப்பு குறையாது நோக்கினான்.

“இந்த சேஞ்சஸ் ட்ரை பண்ணுங்க வெங்கடேசன், டாலி ஆகுதா பார்ப்போம்” என்றவன் தொடர்ந்து “அடுத்தவாரம் ஆயுத பூஜை வரப் போகுதங்களே வெங்கடேசன், வழக்கமா என்ன பண்ணுவீங்களோ அதையே பண்ணிடுங்க! மாமா கிட்டயும் ஒரு வார்த்தைக் கேட்டுக்கங்க” என்று கூற “சரிங் சார்” என்று புன்னகைத்து விட்டு வெளியேறிய வெங்கடேசனைக் கண்டவள்.. அவன் சென்றதும்..

“உன்ற கிட்ட மட்டும் 32 பல்லையும் காட்டுற மனுஷன், நான்-ன்னா ஏன் டா முகத்தை முடிச்சு போட்டு வைச்சுக்குறாரு?” எனக் கேட்டாள்.

“அவரு மட்டுமா?”

“ஏய்..”

“நிஜமா நீ சிரிக்கிறதைப் பார்த்தே பல நாளாச்சு டா மோகன்! எந்நேரமும் மூஞ்சில முள்ளைக் கட்டிட்டு சுத்துற?”

“என்னை எங்கடா சிரிக்க விட்றீங்க?, நான் சிரிக்கிறதாட்டம் இங்க ஏதாவது நடக்குதா?”

“என்றா மோகன் இப்பிடிச் சொல்லிப் போட்ட?, உன்னைச் சிரிக்க வைக்க, நான் என்றா செய்யோனும்? சொல்லு, சொல்லு, இப்பவே பண்றேன்”

“ம்ம், நீ இந்த இடத்தை விட்டுப் போகோனும்”

“தனியா உட்கார்ந்தா சிரிப்ப?, அப்பிடி செஞ்சா உன்னைப் பார்த்து ஊரே சிரிக்குமே டா மோகன்”

“டேய்..”

“நிஜமா நான் போகட்டுமா?”

“ப்ச்”

“சொல்றி”

“போ வேண்டாம்”

“அதையும் முறைச்சிட்டுத் தான் சொல்லுவியா?”

“ஈஈஈஈஈஈ போதுமா?”

“அய்யய்யோ! வேணாம் டா மோகன்! உன்ற ஆப்ப வாய் ஆல்ரெடி அகலமாத் தான் இருக்கு! அதை நீ அகட்டி வேற காட்டோனுமா?” என்றவனின் முகத்தில் தன் மேஜையின் மீதிருந்தப் பேனாவை அவள் விட்டெறிய.. அதை கேட்ச் பிடித்துத் தன் மேஜையில் வைத்தவன்..

“நீயே இருன்னு சொன்னாலும், இப்போ நான் போயாக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன் டா மோகன், ஆனா.. இன்னிக்கு நீ வாய் நிறைய சிரிக்கிறதாட்டம், பெரிய விஷயமா நடக்கோனும்ன்னு வாழ்த்திட்டுப் போறேன்” என்று விட்டுக் கிளம்ப.. அவன் வெளியேறும் வரை முறைத்தவள், பின் தலையை இட,வலமாக அசைத்துச் சிரித்து விட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

வாழ்த்திச் சென்றவனது வாக்குப் பலிக்கும் வண்ணம் ஓர் நற்செய்தியைச் சொல்ல, மதியம் மூன்று மணியளவில் ஃபேக்டரிக்கு ஃபோன் செய்தார் சுவாமிநாதன்.

உடனே கிளம்பி வீடு வருமாறு அழைத்தவரிடம்..

“என்னாச்சுங்கப்புச்சி?” என அவள் பதட்டமாகக் கேட்க.. ஹாஹாவெனச் சிரித்தவர்..

“பதறாத கண்ணு! எல்லாம் நல்ல சேதி தான்! புறப்பட்டு வா சாமி!” என்றதோடு வைத்து விட.. அப்போது அறைக்குள் நுழைந்த ரகுவரனும், “ஐயா வீட்டுக்கு வரச் சொல்லி ஃபோன் பண்ணினாரே” எனக் கூற.. இருவரும் என்னவோ,ஏதோ என வீடு நோக்கிப் புறப்பட்டனர்.

டைனிங் ஹாலில் கூடியிருந்த அனைவரும், ஜோடியாக நுழைந்த இவர்களிருவரையும் வியந்து நோக்கிப் பின் மகிழ்ச்சி நிறைந்த பார்வையோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, மீண்டும் அவர்களையே நோக்க.. திரும்பித் தன்னருகே நடந்து வந்தவனை நோக்கினாள் மோகனா.

“என்ன?” – அவள் பார்வையை உணர்ந்து,அவள் புறம் திரும்பியவனிடம்..

“இல்ல, உன்ற முகத்துல எதுவும் ஒட்டியிருக்கா-ன்னு பார்த்தேன்” என்றாள்.

“என்னது?”

“என்ற முகத்துல எதுவும் இருக்கா?”

“ஏய்ய்.. என்றி?”

“அப்புறம் என்னத்துக்கு அத்தனை பேரும் நம்மளயே இப்பிடிப் பார்க்குதுங்க” – சன்னக் குரலில் முணுமுணுத்தவளைக் கண்டு நமுட்டுச் சிரிப்புடன்..

“அது.. நாம சோடியா வர்றோமல்ல?, அதான்.. சந்தோஷத்துல வைச்ச கண் வாங்காம பார்க்குறாங்க” – என்றான்.

“ம்க்கும்” என்று நொடித்துக் கொண்டவள்.. அனைவரையும் ஒரே பார்வையால் சுற்றி வந்து.. பின் தந்தையிடம்…

“காலைல முகத்தைத் திருப்பிக்கிட்டு நின்னீங்க? இப்ப மட்டும் என்னத்துக்கு மருதமலை முருகனைப் பார்க்கறதாட்டம் பரவசமா முகத்தை வைச்சிருக்கறீங்க?” எனக் கேட்க..

அதுவரையிருந்த மகிழ்ச்சிப் பரவச நிலை மாறி.. முகத்தை அஷ்டகோணலாக்கிய கணபதி, “ம்க்கும்” என்று தொண்டையைச் செருமி விட்டு “ஹ்ம்” என்றபடி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

துளசிநாதனோ ஒரு படி மேலே சென்று, முழுக்கை சட்டையும்,பாண்ட்டுமாய், அவர் எதிர்பார்த்தபடி அலுவலகம் சென்று,வரும் மகனின் மாற்றத்தில் தான் உணர்ந்தத் திருப்தியைப் பிரதிபலித்தபடி, மிதப்பான பார்வையுடன் மகனைப் பார்க்க, அவரைக் கண்டு கொள்ளாமல் நாற்காலியை இழுத்துப் போட்டு அவரிடமிருந்து சற்றுத் தள்ளியமர்ந்தான் ரகுவரன்.

தந்தையின் முகத் திருப்பலைக் கண்டு புருவத்தைத் தூக்கி உதட்டை வளைத்தபடி சுவாமிநாதனின் அருகே அமர்ந்த மோகனா, எதிரேநாற்காலியில் அமர்ந்திருந்த பூர்ணியிடம்…

“சூடா இஞ்சி டீ போடு பூர்ணி, தலை வலிக்குது” என்று விட்டு “என்ன விஷயமுங்கப்புச்சி? எதுக்கு இவ்ளோ அவசரமா வரச் சொன்னீங்க?” எனக் கேட்டபடியேக் கண்களை மூடிக் கொண்டு தலையை அழுத்த.. அவரிடமிருந்து பதில் வராததைக் கண்டு நிமிர்ந்து நோக்கினாள்.

பூர்ணியின் அருகே கைகளைக் கட்டியபடி நின்றிருந்த ஜீவரஞ்சன் அவனை முறைத்தவண்ணமிருப்பதைக் கண்டு.. புரியாமல்..

“ஏனுங் மாமா?” என்றாள்.

“உனக்கு டீ வேணுமின்னா, எழுந்து போய் போடு! இல்ல, உன்ற புருஷனைப் போடச் சொல்லு! என்ற பொண்டாட்டியை என்னத்துக்கு வேலை வாங்குற?” என்றான் உஷ்ணத்துடன்.

அவன் பேச்சைக் கேட்டு விழி விரிய, ஒரு நொடி வாயைப் பிளந்தவள், பின்.. ரோஷத்துடன்..

“நான் ஒன்னும் உங்க பொண்டாட்டிக் கிட்டக் கேட்கல! என்றக்கா கிட்டத் தான் கேட்டேன்! 25 வருஷமா எனக்கு அக்காளா இருந்தவளைத் தான் இந்த ரெண்டு வருஷமா நீங்க பொண்டாட்டின்னு கூப்பிட்டிருக்கீங்கங்ன்றதை மறந்துடாதீங்க” என எகிற..

“கண்ணு…” என்றபடி அவளை அடக்க முயன்று இடைபுகுந்த அப்புச்சியிடமும்..

“பின்ன என்னங்கப்புச்சி?, இத்தனை வருஷமா அவ தான எல்லாருக்கும் சமைச்சுப் போட்டிட்டிருக்கா?, இப்ப புதுசா என்ன இவருக்கு அக்கறையாமா?” என்று சத்தமிட்டாள்.

“இத்தனை வருஷம் சமைச்சா! ஆனா.. இனி சமைக்க மாட்டா! அதுவும் குறைஞ்சது பத்து மாசத்துக்காச்சும்” என ஜீவரஞ்சன் அழுத்தமாய்க் கூற..

“அதென்ன கணக்காமா?” – அப்போதும் சுளித்த முகத்தோடு கோபமாய்த் தொடர்ந்தவள், பின் பட்டென மூளையில் மின்னலொன்று தெறித்ததில் விழிகள் விரிய அவனை நோக்க.. அவனோ முறைப்பு மாறி.. இதழ்கள் விரியப் புன்னகைத்தான்.

வெட்கமும்,மகிழ்ச்சியுமாய் விரல்களைப் பிசைந்தபடித் தலை குனிந்து அமர்ந்திருந்த பூர்ணி, மெல்ல நிமிர்ந்துத் தங்கையை நோக்குகையில்..

விழிகள் கண்ணீரால் தெப்பமாகியிருக்க.. அதற்கு நேரெதிராய் பெரிதாய்ப் புன்னகைத்த இதழ்களோடு தன்னையே பார்த்துக் கொண்டிருந்தத் தங்கையைக் கண்டு மகிழ்ச்சியில் அழுகை பெருக, அடக்க முடியாத சிதறிய விழி முத்துக்களோடுத் தானும் புன்னகைத்தாள்.

நொடியில் தன்னை சமாளித்துக் கொண்ட மோகனா, வேகமாய் எழுந்து சென்று.. தமக்கையைக் கட்டிக் கொண்டு உச்சியில் முத்தமிட்டு “என்ற மவ வந்துட்டா, உன்னையெல்லாம் இப்பிடிக் கட்டிப்பேன்னு எதிர்பார்க்காத” என்று மிரட்டிக் கொண்டிருக்க.. தன் தோளைச் சுற்றிப் படர்ந்திருந்த அவள் கைகளை இறுகப் பற்றியபடி நிமிர்ந்து அவளை முறைத்தாள் பூர்ணி.

முழுப் புன்னகையும், விழிகளில் நீருமாய் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தமக்கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தவளையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்த ரகுவரனின் தோளில் மெல்ல இடித்தான் ஜீவரஞ்சன்.

“என்றா?”

“ஏனுங்ண்ணா”

“நீ சித்தப்பா ஆகப் போற டா!”

“வாழ்த்துக்கள்ங்ண்ணா”

“இவ்ளோ தான் உன் ரியாக்ஷனா டா?”

“சந்தோஷத்துல பேச்சு வர மாட்டேங்குதுங்ண்ணா”

“அதுசரி”

“அவ சொல்றதாட்டம், புள்ளையை அவ கிட்டயெல்லாம் கொடுத்து வளர்க்காதீங்ண்ணா! மெஷினாக்கி விட்ருவா! என்ற கிட்டக் கொடுங்க! அறிவா வளர்ப்பேன்” – ஆர்வமாய்க் கூறியவனைக் கண்டு..

“புள்ளையை உங்கக்கிட்டக் கொடுத்துப் போட்டு நாங்க என்றா செய்றது?” என்றான்.

“நீங்க இன்னொன்னு பெத்துக்கங்ண்ணா”

“ஏன்?, அதுக்கு நீங்களே ஒன்னைப் பெத்துக்க வேண்டியது தான?” -பட்டெனக் கூறியவனை அதிர்வாய் நோக்கிய ரகுவரன், பின் மோகனாவை நோக்கி விட்டு..

“மெல்லப் பேசுங்ண்ணா! அவ காதுல விழுந்துடப் போகுது” என்றான் பம்மிய குரலில்.

“ம்க்கும், விளங்கிடும்”

“ப்ச், நாங்க என்ன உங்களை மாதிரி ரொமாண்ட்டிக் கபிள்-ங்களா? அதுக்கெல்லாம்.. எங்களுக்கு காலமாகுமுங்ண்ணா”

“அடப்பாவி”

“விடுங்ண்ணா”

“ஜோடியா போறீங்க,வர்றீங்க.. எல்லாம் சரியாய்டும்ன்னு நாங்க நம்பிட்டிருக்கோம்டா”

“அந்த நம்பிக்கையை மட்டும் விட்றாதீங்ண்ணா”

“டேய்..” – கோபமாய் அவன் தம்பியிடம் பாய்ந்த வேளை..

“எனக்குப் பசிக்கிறதாட்டமிருக்கு! நான் போய் ஏதாவது சாப்பிட்றேன்” என எழப் பார்த்தப் பூர்ணியிடம்..

“இரு,இரு,இரு” என்றபடி அவளைச் சுற்றிக் கூடிய ஒட்டு மொத்தக் குடும்பமும் ‘என்ன வேண்டுமென’ கேட்கத் துவங்க..

“நான் போய் சமைச்சுக்குவேனுங் சித்தப்பா” என்றவளிடம் ‘அதெல்லாம் கூடாது’ என்றனர் அனைவரும்.

“உனக்கு முட்டை பப்ஸ் ரொம்பப் பிடிக்குமே? வாங்கிட்டு வரட்டா கண்ணு?” – துளசிநாதன்.

“அதெல்லாம் எண்ணெய்ப் பலகாரமுங்ப்பா! சும்மா இருங்க” – இது ஜீவன்.

“இந்த நேரத்துல பழங்கள் நிறைய சாப்பிட்டாத் தான் குழந்தை சத்தா வளரும்” – கத்தியையும்,ஆப்பிளையும் கையில் எடுத்தபடி மோகனா.

“உனக்கு என்ன சாப்பிடோனும்ன்னு தோணுது கண்ணு?” – கடைசியாய் கணபதி.

ஆப்பிளை நறுக்கப் போன மோகனாவின் கையைப் பற்றியபடி “அதெல்லாம் வேணாம். சும்மா இரு” என்ற பூர்ணி,

“எனக்கு வெங்காய தோசையும்,தக்காளி பஜ்ஜியும் சாப்பிடனும் போல இருக்குங் சித்தப்பா! நான் செஞ்சுக்குவேனுங்” எனப் பாவமாய்க் கூற..

“அவ தான் செஞ்சு சாப்பிட்டுக்குவேன்னு சொல்றால்ல, விடுங்களேன்” – சலித்த குரலில் அனைவரையும் அதட்டினான் ரகுவரன்.

அதன் பின்பு “சரி,சரி போ கண்ணு! நீ செய்” என்ற துளசி “குருவம்மா..” என்றழைத்து அவளுக்கு உதவி புரியுமாறு கூற..

அடுக்களையை நோக்கி நடந்தவளைப் பின் தொடர்ந்த ஜீவரஞ்சன், “மெதுவா நடடி!” எனக் கடிந்தபடியே உடன் நடக்க..

“ஓடியாடி வேலை பார்த்தா தானுங் மாமா சுகப்பிரசவமாகும்! ரொம்பத் தான் பண்ணுறீங்க எல்லாரும்” எனத் திட்டியவளைக் கண்டு பெரியவர்கள் சிரித்தபடி நகர்ந்து விட்டனர்.

“சமைக்குறப்ப வாந்தி வர்றதாட்டமிருந்தா, கொஞ்ச நாளைக்கு கிட்சன் பக்கம் வராம இரு! சரியா?”

“அதெல்லாம் நான் பார்த்துக்குவேனுங் மாமா”

“நீ பார்த்துக் கிழிச்ச”

“நீங்க மட்டும் பார்த்துக்கிட்டேவா இருக்கப் போறீங்க?, ஃபேக்டரியே கதின்னு கிடக்குற மனுஷனுக்குப் பேச்சைப் பாரு”

“ஃபேக்டரியே கதின்னு கிடந்தனால தான், ரெண்டே மாசத்துல உன்னை அம்மாவாக்கிருக்கேனாக்கும்?”

“அய்யோ வாயை மூடுங் மாமா”

– தொடர்ந்து ஒலித்த ஜீவன்-பூர்ணியின் பேச்சைக் கேட்டு சிரித்து நின்ற மோகனாவின் பார்வை தன்னாலேயே ரகுவரனை நோக்க.., அவர்களது உரையாடலைக் கேட்டுத் தானும் சிரிப்புடன் அமர்ந்திருந்தவன், தன் புறம் பார்த்தவளிடம்..

“என்ன?” என்றான் புருவம் சுருக்கி.

ஒன்றுமில்லையென்பது போல் தலையாட்டி அவனை ஒரு மாதிரி நோக்கி விட்டு நகர எத்தனித்தவளிடம்.. “ஹே நில்லு” என்றழைத்து நிறுத்தியவன்..

“இங்க வா” எனச் சொல்லி தன்னருகேயிருந்த இருக்கையைக் கை காட்டி அமரச் சொன்னான்.

அவன் அழைத்ததும் மறுக்காமல் வந்தமர்ந்தவளின் புறம் திரும்பியமர்ந்தவன்..

“உன்ற தலைக்குள்ள என்ன ஓடுதுன்னு நீ வாயைத் திறந்து சொல்லாமலே புரிஞ்சுக்கிற சக்தியெல்லாம் எனக்கில்ல. அதனால, நீ என்ன நினைக்குறன்னு சொல்லு. நான் தெரிஞ்சுக்கனும்” என்றான்.

“நான் என்ன நினைக்கோனும்??”

“இப்போ எதுக்கு என்னை அப்பிடிப் பார்த்த?”

“எப்பிடிப் பார்த்தேன்?”

“என்னவோ என் மேல குற்றமிருக்கிறதாட்டம்”

“…………”

“என்ன எதிர்பார்க்குற என்ற கிட்டயிருந்து?”

“………”

“மோகனா..” – மென்மையான குரலில் பொறுமையாய் அவன் அழைப்பது, தொண்டையை அடைக்கச் செய்ய.. அவனை நிமிர்ந்து பாராமல், டைனிங் டேபிளிலிருந்த ஆப்பிளைக் கையில் வைத்துச் சுற்றியபடி..

“நீ ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்ட?” எனக் கேட்டாள்.

“மாமா என்ற கிட்ட உன்னைக் கட்டிக்கச் சொல்லிக் கேட்டதால”

அவள் கையில் சுற்றிக் கொண்டிருந்த ஆப்பிள் ஒரு நொடி நின்று பின் மீண்டும் சுழலத் தொடங்க.. “வேற?” என்றாள்.

“வேண்டாம்ன்னு சொல்ல, என்ற கிட்ட எந்தக் காரணமுமில்ல. அதனால”

“வேற?”

“வேற என்ன?”

“கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி நாம சந்திச்சிக்கிட்டப்போ சொன்னியே, மாமாவுக்காகத் தான் சம்மதிச்சேன், ஆனா.. இப்போ மாமாவுக்காகன்னு மட்டும்ன்னு தோணலன்னு. அதுக்கு என்ன அர்த்தம்?”

தீவிரமான குரலில் கேள்வி கேட்டவளைக் கண்டு புருவங்கள் விரிய தன் முகம் பாராமல் நேர் வெறித்தபடி அமர்ந்திருந்தவளைக் கைகளைக் கட்டிக் கொண்டு விடைத்த மூக்குடன் நோக்கியவன்..

“இதையெல்லாம் நீ என்னத்துக்கு ஞாபகம் வைச்சிருக்க?” எனக் கேட்டான்.

“………….” –தாழ்ந்து கிடந்த இமைகளோடு பதிலற்று அமர்ந்திருந்தாள் அவள்.

“நினைவுல நிற்குற அளவுக்கு, என்ற பேச்சு உன்னைப் பாதிச்சிருக்கு”

“……….”

உஷ்ணப் பெருமூச்சோடுத் தலையைக் கோதியவன்..

“அதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்க இத்தனை நாளாச்சாக்கும் உனக்கு?” என்றான்.

நிமிர்ந்து அவனை முறைத்தவள் “அப்போ நான் கேட்டிருந்தா மட்டும், நீ பதில் சொல்லியிருப்பியாக்கும்?” எனக் கேட்க..

“பதில் சொல்லியிருந்தா நீ என்னை சும்மா விட்டிருப்பியாக்கும்?” என்றவன் தொடர்ந்து..

“பொறுக்கின்னு பேர் வைச்சிருப்ப” என்றான்.

“……….” – அவள் அமைதி, ஆமோதிப்பாய் தோன்ற, கோபம் கொண்டவன்..

“நான் உன்னைப் பார்க்குற பார்வைல வித்தியாசம் தெரியுதுன்னு அந்தப் பேச்சுப் பேசிட்டுப் போனவ! இப்ப என்னத்துக்குடி அர்த்தம் கேட்குற?, நான் சராசரி ஆம்பள! இவளைத் தான் நீ கட்டிக்கப் போற-ன்னு என்ற கிட்ட ஒருத்தியைக் கைக் காட்டுனா, பார்வை என்ன எல்லாமே எனக்கு மாறத் தான் செய்யும்” என்று கூற..

சட்டெனத் திரும்பி அவனை நோக்கியவள்..

“அப்போ எவளைக் கை காட்டி, இவளைத் தான் நீ கட்டிக்கப் போற-ன்னு சொல்லியிருந்தாலும், உன்ற பார்வை மாறத் தான் செய்யுமா?” – என ஆத்திரமாய்க் கேட்கவும்.. சலிப்பான பார்வை பார்த்தவன்..

“என்னையும், நான் சொல்ற விஷயத்தையும் எப்போ தான் டி நீ சரியா புரிஞ்சுக்கப் போற?” எனக் கேட்டான்.

“நீ முதல்ல சரியாச் சொல்லு. அப்புறம் நான் சரியா புரிஞ்சுக்கிறதைப் பத்தி பேசுவோம்”

“என்ற கிட்ட என்ன எதிர்பார்க்குற நீ?” – நாற்காலியை இழுத்துப் போட்டு அவளருகே நெருங்கி அமர்ந்தவன், அவள் முகம் பார்த்துக் கேள்வி கேட்டான்.

“நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்ன்னு நான் அப்போ கேட்டிருந்தா நீ பதில் சொல்லியிருப்பியா?”

“சொல்லியிருந்திருக்க மாட்டேன்”

“ஏன்?”

“ஏன்னா அப்போ நானே தெளிவில்லாம தான் இருந்தேன்”

“இப்போ?”

“ரொம்பத் தெளிவா இருக்கேன்”

அவனது தெளிந்த பதில் அவள் முகத்தையும் தெளியச் செய்ய..

“என்னன்னு?” – மெல்லிய குரலில் முணுமுணுப்பாய்க் கேட்டவளிடம்..

“இந்த ராட்சசியைத் தவிர எவளோடவும் என்றனால வாழ்க்கையை ஓட்ட முடியாதுன்னு” – எனக் கூற.. பக்கவாட்டில் அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து.. விழி அசையாது நோக்கினாள் அவள்.

“முற்றுப்புள்ளி வைச்சிட்டேனா?”

“முழுசா இல்ல”

“இன்னும் என்ன மிச்சமிருக்கு?”

“அதை நீ தான் யோசிக்கோனும்”

“படுத்தாதடி”

“………….” – அடக்கப்பட்ட சிரிப்புடன் மேஜையில் ஆப்பிளை உருட்டியவளைக் கோபமும்,எரிச்சலுமாய் நோக்கியவனின் கண்கள் அவன் மனநிலைக்கு எதிராய், அநியாயக் காதலைப் பிரதிபலிக்க..

அவன் பார்வையை உணர்ந்து திரும்பியவள் “என்னத்துக்கு முறைக்குற?” எனக் கேட்டாள்.

“ம்ம்ம், உன்ற கன்னத்தைக் கடிச்சு, என்ற கோவத்தைக் காட்டோனும்ன்னு தோணுது. முடியாதல்ல? அதான் முறைக்கிறதோட நிறுத்திட்டேன்”

அவன் பதிலில் பதறி, வேகமாய் நாற்காலியை பின்னே நகர்த்தியவளின் கையைப் பற்றித் தடுத்தான்.

“பஸ்ல சில்மிஷம் பண்ற எவன் டி, தைரியமா முகத்தைப் பார்த்துக் கட்டிப் புடிக்கிறான்?, எந்த அளவுக்குத் தரமிறக்கிப் பேசுற?, வாயைத் திறந்தாலே, வலிக்குற மாதிரி தான் பேசுவியா?”

“நீ மட்டும், வலிக்கிற மாதிரி நடந்துக்கலயா?”

“நான் என்ன பண்ணேன்?”

அவனை ஒரு நொடி முறைத்துப் பல்லைக் கடித்தவள் “மாமா சொன்னாரு. அதான், கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன், மாமா சொன்னாரு, அதான் சங்கிலியை மாட்டுனேன், மாமா சொன்னாரு, அதான் சேர்ந்து வாழ நினைக்கிறேன்னு.. எல்லாத்துக்கும் என்றப்பனை இழுக்குறவன், எந்தப் பொண்ணை என்றப்பா கைக் காட்டியிருந்தாலும் இப்படித் தான நடந்துட்டிருந்திருப்பான்-ன்ற எண்ணம், என்னை அப்படியெல்லாம் பேச வைக்கத் தான் செய்யும்”

“என்ன எந்தப் பொண்ணை,எந்தப் பொண்ணை-ன்ற? அப்பிடி எத்தனை பொண்ணுங்க பின்னால நான் சபலத்தோட திரிஞ்சதை நீ பார்த்த?”

“…………..”

“நீ பேசுனது தப்புன்னு நீ உணரவே மாட்ட டி” என்றவன் அதற்கும் பதிலற்று அமர்ந்திருந்தவளைக் கண்டு கோபத்துடன் நாற்காலியிலிருந்து எழ…

அவசரமாய் அவன் கைப் பற்றி நிறுத்தியவள், நிமிர்ந்து அவன் முகம் பார்த்து..

“சாரி! நான் பேசுனது தப்பு தான்” என்று கூற.. சுருக்கிய புருவங்களுடனே அவளை நோக்கிக் கொண்டிருந்தவனின் கையை விடாமலே…

“நான் உபயோகிச்ச வார்த்தைகள் வேணா தப்பாயிருக்கலாம்! ஆனா.. என்ற கோபம் நியாயமானது” என்றாள்.

தன் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல், உறுதியாய் நின்று தன் உள்ளத்தை வெளிப்படுத்துபவளைக் கண்டு ஒரு புறம் கோபமாய் வந்தாலும், மறு புறம் அவளது எண்ணவோட்டங்களிலிருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறி அவள் சார்பாக விடாது போராடும் தன் மனதை எண்ணிச் சிரிப்பு வர.. குனிந்து அவள் முகம் பார்த்தான் ரகுவரன்.

கலக்கமாய்,கவலையாய்,பதற்றமாய் அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்..

“என்ற மாமனோட வற்புறுத்தலால மட்டுமில்ல! எனக்காகவும் தான் உன்னைக் கட்டிக்க சம்மதிச்சேன்” என்று கூற…

மெல்ல விரிந்த அவள் புருவங்களைத் தொடர்ந்து, அவன் முகத்தில் பதிந்திருந்த அவளது கருமணிகள் அரை வட்டமடித்துத் தரையை நோக்க, முகம் மாற.. இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பதென அவளது இதயம், மூளையோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளை.. சட்டென அவள் காதோரத்தைப் பற்றிக் குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ரகுவரன்.

அடிவயிற்றிலிருந்து அடித்துக் கொண்டு உணர்வில் தொண்டை அடைத்து விட, நின்று போன மூச்சுடன் அவள் அதிரத் துவங்கியிருந்த வேளை “ம்க்க்கும்,ம்க்க்கும்” என்ற சத்தத்தில் அவசரமாய்த் திரும்பி நோக்கினர் இருவரும்.

கையைக் கொண்டு நக்கலாய்ச் சிரித்தபடி ஜீவரஞ்சனும், தயக்கமும்,சங்கடமுமாய் அவன் பின்னிருந்து மெல்ல எட்டிப் பார்த்தபடிப் பூர்ணியும் நின்றிருக்க..

‘போச்சுடா’ ரீதியில் பிடரியைக் கோதிய ரகுவரனை இடித்துத் தள்ளி பதற்றத்தில் ஓடியே போய் விட்டாள் மோகனா.

அவளைத் தொடர்ந்து பூர்ணியும் நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்து விட, எட்டு வைத்துத் தம்பியின் அருகே வந்த ஜீவரஞ்சன்,

“அட்வைஸெல்லாம் ஊருக்கு மட்டும் தான் போல?” என்றான்.

“ஆமா, அது கூடத் தெரியாமலா பிஸினஸ் மேன்-ஆ இருக்கீங்க?”

“டேய்…”

“போங்ண்ணா,போங்ண்ணா” என்றவன் அவன் மேலே எதையும் கேட்டு மானத்தை வாங்கும் முன் நழுவி விட்டான்.

அடுத்து வந்த மாதங்களில் ஒட்டு மொத்தக் குடும்பமும் காட்டிய அக்கறையில் அமிழ்ந்து அவிந்து போன நிலையிலிருந்தப் பூர்ணியை அவ்வப்போது காப்பாற்றும் பணியை ரகுவரன் செவ்வனே செய்து கொண்டிருந்தான்.

ன்று திருப்பூரிலிருந்த கணபதிக்குச் சொந்தமான டெக்ஸ்டைல் கம்பெனிக்குச் சென்று விட்டுத் திரும்பியிருந்தான் ரகுவரன்.

ஃபேக்டரியிலிருந்து அன்றிரவு வெகு நேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்திருந்த மோகனா, சோபாவில் அமர்ந்தபடிக் கணபதியும்,ரகுவரனும் தீவிரப் பேச்சுவார்த்தையில் இருப்பதைக் கண்டு விட்டுத் தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.

உணவுண்ட பின் உறக்கம் வராமல் ரகுவரன் எழுதிய புத்தகமொன்றை வாசித்தபடிக் கட்டிலில் கட்டையை நீட்டியிருந்தவள், கதவு தட்டப்படும் சத்தத்தில் நிமிர்ந்து அறை வாசலை நோக்கினாள்.

“தூங்கிட்டியா?” எனக் கேட்டபடி வாசலருகே நின்றிருந்த ரகுவரனைக் கண்டு, இல்லையெனத் தலையாட்டியபடி அவள் எழுந்தமர.. உள்ளே நுழைந்தவன் “திருப்பூர் கம்பெனி விஷயமா உன்ற கிட்டப் பேசோனும்” எனக் கூறி அவளது படுக்கையருகே இருந்த மேஜையின் மீது ஏறி அமர்ந்தான்.

“ஏன்? எதுவும் பிரச்சனையா?”

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவளது கையிலிருந்தப் புத்தகத்தை நோக்கிச் சிரித்தவன்..

“இது பிசினஸ் சம்மந்தப்பட்ட புத்தகமில்லியே” எனக் கூற..

“ம்க்கும்” எனத் தொண்டையைக் கனைத்தவள் புத்தகத்தை மூடிக் கீழே வைத்து விட்டு..

“நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு முதல்ல” என்றாள்.

“கம்பெனி லாஸ்-ல போயிட்டிருக்கு. நிர்வாகம் பண்ண சரியான ஆட்கள் இல்ல. ஒரு வருஷத்துக்கு முன்னால இருந்தே இந்த நிலைமை தான்! மாமாவால முன்னப் போல அலைய முடியாததால வித்துடலாம்ன்னு ப்ளான் பண்ணியிருக்கிறார். நீ என்ன சொல்ற?”

“அவர் சொல்றது சரி தான்! இனியும் அதைக் கட்டி இழுத்துட்டிருக்கிறதுல எந்தப் பிரயோஜனமுமில்ல”

“அங்கே போயிருந்து முறையா கவனிச்சுக்கிட்டா, எல்லாம் சரியாக வாய்ப்பிருக்கு! நான் போய் அங்க தங்கியிருந்து பார்த்துக்கிறேன், எந்தப் பிரச்சனையுமில்லன்னு மாமா கிட்ட சொன்னேன்! ஆனா.. அவரு மவளுக்காக யோசிக்கிறாரு” – புருவத்தைத் தூக்கி ஓரப் பார்வையால் அவளை நோக்கியபடி கூறியவனிடம்..

“எது?” – என்று அவள் உதட்டை வளைக்க..

“ஆமா, உன்றனால என்னைப் பார்க்காம இருக்க முடியாதுன்னு அவர் நினைக்குறாரு!அது உண்மையில்லையா அப்போ?” – எனக் கண்ணை அகட்டினான் அவன்.

“ப்ச், விளையாட்டுத்தனத்தை விட்டுட்டு சீரியஸ்-ஆ பேசு ப்ளீஸ்”

“அப்டின்னா?, நான் போனாலும் நீ ஃபீல் பண்ண மாட்ட?”

“அதுக்கு வாய்ப்பில்ல! ஏன்னா.. நீ போகப் போறதில்ல”

“ஏன்வாம்?”

“எனக்கு வேற ஐடியா இருக்கு”

“என்ன ஐடியா?”

அவன் கேட்டதும் காலை மடக்கி அமர்ந்து கொண்டவள், இரு கை விரல்களையும் கோர்த்துக் கொண்டு, ஆர்வமான பாவனையுடன் அவன் முகம் பார்த்து..

“நம்ம ஃபேக்டரில தயாராகுற ப்ராடக்ஸ்க்குன்னு தனியா ஒரு டெக்ஸ்டைல் ஷோ ரூம் ஓபன் பண்ணோனும்!” என்றாள்.

“ஏற்கனவே மாமாவுக்கு இருந்த ஐடியா தான் இது”

“யெஸ்! ஆனா.. அப்போ எதிர்பார்த்த அளவு முதல் இல்லாததால தான், அந்தத் திருப்பூர் கம்பெனியை விலைக்கு வாங்குனார்! இப்ப தான் நம்ம பிசினஸ் நல்லாப் போகுதே, அவர் அப்போ நினைச்சதை ஏன் இப்போ ஆரம்பிக்கக் கூடாது? சின்ன அளவுல தொடங்குவோம்! சக்ஸஸ் ஆனா ஓகே! இல்லேன்னாலும் ஓகே!”

“மாமாவோட பேசுவோம் டா மோகன், இதைச் சுத்தியிருக்கிற சாதக,பாதகங்கள் எல்லாத்தையும்!”

“ஹ்ம்ம்”

“நீங்க தான் பிசினஸ் வுமன் ஆச்சே! சக்ஸஸ் பண்ணிடுவீங்க” – புன்னகையோடு கூறியவனிடம்..

“பண்ணிடுவீங்க-ன்ற? அப்போ, நீ என்ற கூட இருக்க மாட்டியா?” – முகத்தைச் சுருக்கி அவள் கேள்வி கேட்டதும்.. அவளை ஒரு நொடி நோக்கியவன் பின்.. அமர்ந்திருந்த மேஜையிலிருந்து இறங்கி.. அவளருகே வந்தமர்ந்தான்.

அவன் தோளை உரசி விடாது கவனமாய் விலகியவளைக் கண்டபடியே..

“உன்ற கூடவே 24 மணி நேரமும் இருக்கறேன்னு தான் சொல்றேன்! நீ தான் ஒத்துக்க மாட்டேன்றியே” என்றான்.

“நான் என்ன பேசிட்டிருக்கேன், நீ என்ன பேசுற?” – முணுமுணுப்பாய்க் கூறியவளிடம்..

“அதையே தான் நானும் கேட்குறேன்! நான் என்ன பேசிட்டிருக்கேன்! நீ என்ன பேசுற?” – என்றவனை முறைத்து.. அவன் தோளைத் தன் முஷ்டியால் அவள் குத்தவும்..

“அம்மாஆஆஆ” என்றவன் “கையாடி இது? கடப்பாறையாட்டமிருக்கு!” எனக் கூறி.. வலிப்பது போல் முகத்தைச் சுளிக்க..

இரு கைகளையும் தூக்கி ஆர்ம்ஸைக் காட்டி “பின்ன? இரும்பு மனுஷி நான்! ஜாக்கிரதை” எனப் புருவம் உயர்த்தி, கண்ணைச் சுருக்கி, உதட்டை நீட்டிப் புன்னகைத்தாள்.

அருகே அமர்ந்திருந்தவளின் மோகனப் புன்னகையில், அதுவரை மூளை மட்டுமே உணர்ந்திருந்த இரவையும்,நிசப்தத்தையும் இதயம் அதிர்வாய் கிரகிக்க.., திறந்திருந்த ஜன்னல் வழி வந்த குளிர்க்காற்று, குளிரூட்டுவதற்குப் பதில் அவனை உஷ்ணமாக்கிச் செல்ல.. முகம் மாற அவளை நோக்கியவன்.. பின்..

“ஒன்னா,ரெண்டா? பதினெட்டுப் பூரியை ஒரே நேரத்துல தின்னு வளர்ந்த பாடியாச்சே இது” எனக் கூற..

முதலில் பல்லைக் காட்டிப் பின் முறைத்து “இதுக்கெல்லாம் நான் டென்ஷன் ஆக மாட்டேன்! இன்னொரு குத்து மூஞ்சில வாங்குறதுக்குள்ள இடத்தைக் காலி பண்ணு” என்றதும்..

அவள் தூக்கிக் காட்டிய ஆர்ம்ஸ்களில் பார்வையைப் பதித்தவன்..

“எல்லாரும் இங்க சுண்டெலி தான் வளர்ப்பாங்க! ஆனா நீ ஒரு பெருச்சாளியையே வளர்த்து வைச்சிருக்கியே டா மோகன்” எனக் கூறி.. அவள் மூக்கை விடைத்துக் கொண்டு கையை இறக்குவதற்குள்.. வேகமாய்க் குனிந்து.. அந்தப் பெருச்சாளியின் மீது தன் இதழ்களைப் பதித்து நிமிர்ந்தான்.

பட்டெனக் கைகளை இறக்கி வியப்பில் பின்னே சாய்ந்தவளைத் தொடர்ந்துத் தானும் அவள் மீதே சாய்ந்தவன், கட்டிலின் விளிம்பில் இரு கைகளையும் பதித்துத் தனக்குக் கீழே கிடந்தவளைக் குனிந்து நோக்கினான்.

ஆச்சரியமாய்,அதிர்ச்சியாய், பதற்றமாய் அவன் முகம் நோக்கியவள், சொக்கிப் போன விழிகளுடன் தன்னையே பார்ப்பவனை.. விழி விரிய இமைக்காது நோக்கினாள்.

அவள் பார்வையைத் தாங்கியபடி இரு நொடி அசையாதிருந்தவன், மெல்ல அவளை நோக்கிக் குனிந்த வேளை.. அவசரமாய் அருகிலிருந்த புத்தகத்தை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டவள், அடித்துப் பிடித்து விலகி எழுந்து.. வெளியே ஓடி விட்டாள்.

தன் பின்பு அடுத்த இரு நாட்கள் மாமனோடு திருப்பூர் கம்பெனியை விற்பது தொடர்பான வேலையில் பிஸியாகி விட்டவன், மோகனா தன் கண்ணில் படாமல் திரிவதை உணர்ந்தும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஃபேக்டரி வேலையில் பிஸியாக இருப்பாளாயிருக்கும் என்றெண்ணி வைத்திருந்தவனிடம் “மேடம் ஃபேக்டரிக்கு வந்து ரெண்டு நாளாச்சுங்” என்று வெங்கடேசன் கூறியதைக் கேட்டு யோசனையாகிப் பின் அன்றிரவு நடந்த சம்பவத்தால் தன்னை தவிர்க்க நினைக்கிறாள் என்று புரிந்ததும் கோபமாகி, உடனே அவளைத் தேடிச் சென்றான்.

பூட்டியிருந்த அவள் அறைக்கதவை அவன் படபடவெனத் தட்டியதில், அதிர்ந்து வேகமாய்க் கதவைத் திறந்தவள் அவனைக் கண்டதும், ஆசுவாசப் பெருமூச்சை வெளியிட்டுப் பின் அவனை நிமிர்ந்து பார்க்கத் தயங்கி, எங்கோ நோக்கியபடி..

“என்னத்துக்கு இப்ப கதவை உடைக்குற?” எனக் கேட்டாள்.

இரவு உடையும்,கொண்டையுமாய் தூக்கமற்றுச் சிவந்திருந்த விழிகளுடன் பக்கிரியாய் நின்றவளை ஆராய்ச்சியுடன் நோக்கி..

“என்ன பிரச்சனை உனக்கு?” எனக் கேட்டான்.

திரும்பி ஒரு நொடி அவன் முகம் நோக்கியவள்.. பின் தலையைக் குனிந்து கொண்டு..

“எனக்கென்ன பிரச்சனை?” என முணுமுணுக்க..

“அதைத் தான் நானும் கேட்குறேன்! எதுக்கு ரெண்டு நாளா ஃபேக்டரிக்கு வர்றதில்ல?, டைனிங் டேபிளுக்கு சாப்பிட வர்றதில்ல?, அந்த வீட்டுக்கும் போறதில்ல? எந்நேரமும் ரூம் கதவை சாத்திக்கிட்டு அப்பிடி என்ன பண்ணறவ?” – என்றவன் அவள் தோளைப் பற்றி நகர்த்தி விட்டு உள்ளே நுழைந்து அறை முழுதையும் ஆராய்ந்தான்.

அவனது அறையிலிருந்தப் புத்தகங்களில் பல அவளது மேஜையில் குடி கொண்டிருக்க.. குழப்பமாய் அவளை ஏறிட்டவனிடம்..

“ம்க்கும்” எனத் தொண்டைச் செருமியவள் “உடம்பு சரியில்லன்னு வெங்கடேசன் கிட்ட சிக் லீவ் சொல்லியிருந்தேனே” என இழுக்கவும்..

“என்ன உனக்கு உடம்பு சரியில்ல?” எனக் கேட்டான் அவன்.

“……….”

“கேட்குறேனல்ல?”

“உடம்புக்கென்ன?, பார்த்தாத் தெரியல?,நல்லாத் தானிருக்கு”

“பின்ன என்றி பிரச்சனை உனக்கு?”

“ஏதோ பிரச்சனை! உனக்கென்னவாம்?, சும்மா இருக்கிறவளைத் தேடி வந்து வம்பிழுத்துக்கிட்டு? நீ கிளம்பு முதல்ல” – முசுட்டு முகத்தோடு அவனை விரட்டியவளை பல்லைக் கடித்துக் கொண்டு நோக்கியவன், அசையாமல் கைகளைக் கட்டியபடி நின்றான்.

அவனது தோரணையில் சிதறிய இதயத்தைப் பொருக்கி எடுத்துக் கொண்டு.. “எ..என்ன?” என்றவளிடம்..

“நான் உனக்கு முத்தம் கொடுத்ததால தான் என்ற முகத்தை பார்க்காமத் தவிர்க்குறியா?” – என நேரடியாகக் கேட்க..

அவன் கேள்வியில்.. உள்ளிருந்து குப்பெனக் கிளம்பிய உணர்வொன்று முகத்தை பலமாகத் தாக்கியதில்.. தடுமாறிய கருமணிகளோடு வேகமாய் மறுபுறம் திரும்பியவள், பதிலொன்றும் சொல்லாமல் மேஜையினருகே சென்று நிற்க..

“என்ன தான் டி உன்ற மனசுல நினைக்குற நீ?, எனக்குப் புரியல! கையைப் பிடிச்சா முறைக்குற! கட்டிப் புடிச்சாக் கேவலமா பேசுற?, முத்தம் கொடுத்தா முகத்தைப் பார்க்க மாட்டேங்குற?, என்ன தான் உன்ற நினைப்பு?”

“……………….”

“என்னைச் சொல்லோனும்! நான் பேசுற பேச்சையே, அன்கம்ஃபர்டபிள்-ஆ இருக்குன்னு சொன்னவ தான நீ?”

“………..”

“சரி டி! நம்ம கலாச்சாரத்தை மதிக்குற உன்றனால அந்தச் செயினைக் கழட்டவும் முடியாது! அதனால அதை வைச்சே, வீட்ல இருக்கிறவங்க அத்தனை பேருக்கும் நாம சேர்ந்து வாழ்வோம்ன்ற நம்பிக்கையை நீ கிழவியாகுற வரைக்கும் கொடுத்துக்கிட்டே இரு! நான் உன்ற முகத்தைப் பார்க்காம, பேசாம, கிட்ட வராம குடும்பம் நடத்துறது எப்பிடின்னு வழி பார்க்குறேன்! எப்பவும், நான் தான உன்ற பின்னால வரோனும்?, பிசினஸ் வுமன் நீங்க ஈகோவை விட்டு இறங்கி வர மாட்டீங்கள்ல?”

தன் போக்கில் பேசிக் கொண்டே சென்றவனைக் கண்டு மூக்கு விடைக்கக் கோபம் கொண்டவள், அவன் புறம் திரும்பாமலேயே..

“வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத” என்று கரகரத்தக் குரலில் கூற..

கோபமாய் அவளருகே நெருங்கி, அவள் தோள் பற்றித் தன் புறம் திருப்பியவனின் முகம் பாராது,மூச்சு வாங்க நின்றவளைப் புரியாது நோக்கியவன், பின் உதட்டைக் கடித்தபடி மெல்ல நிமிர்ந்து.. தன் முகம் பார்த்தவளிடம்.. கோபத்தைக் காட்ட முடியாது..

“ஏன் அவாய்ட் பண்ண நினைக்குற?” எனப் பொறுமையாகக் கேட்டான்.

“வ..வந்து..”

“என்ற முகத்தைப் பார்த்துப் பேசு”

அவன் கூறியதும் ஒரு நொடி அவன் முகம் நோக்கியவள் பின் இறுகக் கண்களை மூடிக் கொண்டு..

“எ..எனக்குத் தயக்கமா இருந்தது..” என்றாள்.

அவள் முகம் காட்டிய பாவனையில் ஒரு நொடி ஆச்சரியமாய் விழி விரித்துப் பின் மொத்தமாய் மயங்கிச் சரிந்தவனின் விரல்கள், அவள் நெற்றி வியர்வையைத் துடைக்கத் துவங்க..

மெல்லிய குரலில் “எதுக்கு?” எனக் கேட்டான்.

நடுங்கிய உதடுகளோடுப் பதிலின்றி நின்றவளிடம்..

“என்ற முகத்தைப் பார்க்குறதுக்கா?” என்று அவன் கேட்டதும்..

முகத்தைத் திருப்ப முயன்றவளைத் தடுத்துத் தன் புறம் நோக்கச் செய்தவன்..

“இப்போ?” என்றான்.

தொண்டைக் குழி உள்ளிறங்க.. மூச்சை அடக்கி.. அவன் விழிகளை நோக்கியவள்.. பின் சட்டெனக் குனிந்து அவன் நெஞ்சில் முகத்தை அழுத்தி… அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

அதிர்வாய் உடல் முழுதும் அதிவேகத்தில் ஓடிய ரத்தம், புதிதாய் ஓர் சிலிர்ப்பைத் தர, அது தந்த மயக்கத்தின் கிறக்கம் தாங்காது மூச்சடைக்கக் கண்களை அழுந்த மூடியவனின் கைகள், தானாய் மேலெழுந்து.. அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொள்ள… அவன் அணைப்பை உணர்ந்து, அவனது சட்டையை இறுகப் பற்றியவளும்.. இன்னும் அவனோடு ஒன்றி நின்றாள்.

அவள் பின்னங்கழுத்தைப் பற்றித் தூக்கித் தன் முகம் காணச் செய்தவனிடம் தடுமாறிய குரலுடன் “என்னை என்ன தான் செய்யச் சொல்ற?” என்று அவள் புருவத்தைச் சுருக்கி முணுமுணுப்பாய்க் கேட்க..

அவள் கேள்வியில் புன்னகைத்து.. சுருக்கிய அவள் புருவங்களைத் தன் பெருவிரலால் நீவியவன் “இனி கட்டிக்கிட்டா தள்ளி விடாத! முத்தம் கொடுத்தா.. முகத்தைத் திருப்பாத” என்றான்.

பதிலற்றுக் கண்களை மூடியபடி அவன் நெஞ்சில் சாய்ந்து முழுதாய் ஐந்து நிமிடங்களைக் கடத்தியவள்.. பின் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து…

“எ..எ..எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்கிறியா?” எனக் கேட்டாள்.

அவள் முகம் முழுதையும் பார்வையால் வருடி.. நமுட்டுச் சிரிப்போடு மேலும்,கீழுமாய்த் தலையை ஆட்டியவன், அவள் முடிந்து வைத்திருந்தக் கொண்டையை அவிழ்த்து.. அவள் தோளில் வழிந்த முடியைக் காதோரமாய் ஒதுக்கியபடி..

“நீ எவ்ளோ வேணா டைம் எடுத்துக்கோ! ஆனா.. எனக்கு அந்த மாதிரி எந்த அவசியமும் இல்லாததால…” என்றவன்.. மோகனப் புன்னகையுடன்.. அவள் இதழ்களை நோக்க..

அவன் எண்ணம் புரிந்து பதறிய விழிகளோடு தலையைப் பின்னே சாய்த்தவளின் இடை பற்றித் தூக்கி, மேஜை மீது அமர வைத்து.. அவள் காதோரங்களைப் பற்றிக் கொண்டவன்.. அவள் இதழ்களில் லேசாய் முத்தமிட்டு நிமிர்ந்தான்.

அவன் தோளை இறுகப் பற்றியபடித் தன் அகண்ட விழிகளை மேலும் அகட்டியவளைக் கண்டு.. உணர்ச்சி பெருக… ஆழ மூச்செடுத்துக் கண்களை மூடியவன்.. பின் அழுத்தமாய் அவள் இதழ்களுக்குள் புதைந்து கொண்டான்.

அனிச்சையாய் மூடத் தொடங்கிய விழிகளை நிறுத்தி மோகம் பொங்கி வழியும் அவன் கண்களையே ஆச்சரியம் குறையாது நோக்குபவளைத் தன் பார்வையால் தொடர்ந்தவன், நிமிர்ந்து.. அவள் முகம் பார்த்து.. அவள் கன்னத்தில் முத்தமிட்டு… அவள் நெற்றி முட்டி..

“அமெரிக்கால லிப் கிஸ் பண்றவங்கள்லாம் கண்ணைத் திறந்து தான் வைச்சுப்பாங்களா?” எனக் கேட்க..

“கண்ணை மூடிக்கிட்டா நான் உன்னை எப்படிப் பார்க்குறது?” என்றவளின் கேள்வியில் சிரிப்பு வர..

“நான் முத்தம் கொடுத்து முடிச்சப்புறம் பாரு” என்றவனிடம்..

மறுத்துத் தலையசைத்தவள்.. “நான் கண்ணை மூட மாட்டேன்” எனக் கூற..

“அப்பிடியா?” எனக் கேட்டு அவள் இடையைப் பற்றித் தூக்கித் தன் இரு கைகளால் அவளை அள்ளிக் கொண்டவன்,

“நீ கண்ணை மூடிக்கிற வரை நான் முத்தம் கொடுக்கிறதை நிறுத்தப் போறதில்ல” எனக் கூறி மீண்டும் அவள் இதழ்களுக்குள் தொலைந்து போக.. முதலில் ரோஷமாய்க் கண்களைத் திறந்து வைத்துப் பின் தடுமாறிக் கடைசியில் தோற்றுப் பின் சுகமாய் விழி மூடிக் கொண்டவளை உணர்ந்து, மெலிதாய் அவள் இதழ்களுக்குள் புன்னகைத்தான் ரகுவரன்.

முதல் முத்தம் நித்திரையைப் பறித்துக் கொண்டதில் நடுநிசி தாண்டியும் உறக்கம் வராது படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன் எழுந்து டைப் ரைட்டரின் முன்பமர்ந்தான்.

மூளை முழுதும் அவளும்,அவள் வாசமும் நிறைந்திருந்ததாலோ என்னவோ, எழுத்து எட்ட நின்று விட.. தலையைக் கோதிக் கொண்டவன், அவள் அறை நோக்கிச் செல்ல விழைந்த கால்களை அடக்கிப் பார்த்தும் முடியாமல், பின் விறுவிறுவெனப் படியிறங்கினான்.

பெட் சைட் லாம்ப்பின் ஒளியில் புத்தகம் வாசித்தபடிப் படுத்துக் கிடந்தவள், தன் அறை வாசலில் வந்து நின்றவனைக் கண்டு பட்டென எழுந்தமர.. உள்ளே நுழைந்து அவள் கைப் பற்றி எழுப்பியவனைப் பதற்றத்துடன் நோக்கி..

“எ..எ..என்ன பண்ற நீ?” – என்று அவள் வினவியதும்..

“அங்க நான் தூக்கம் வராம புரண்டுட்டிருப்பேனாம்! இவ இங்க ஜாலியா புக் படிச்சிட்டிருப்பாளாம்” – என்று திட்டி அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டவன்.. தன் கன்னத்தில் அழுத்தி..

“உனக்கு எந்த பாதிப்புமே இல்லையா?” எனக் கேட்டான்.

லேசாய்த் தலை குனிந்தபடி “பாதிப்பு இல்லன்னு நீ பார்த்தியா?” – என்ற அவளது முணுமுணுப்பில் அவன் சிரிக்க..

“இந்த ஒரு பக்கத்தை ஒரு மணி நேரமா வாசிக்கிறேன்! ஆனா.. ஒரு மண்ணும் தலைக்கேறல” – கையிலிருந்த புத்தகத்தைக் காட்டி குறை கூறியவளிடம்..

“என்ன பண்ணலாம்?” எனக் கேட்டான் அவன்.

அவன் கையில் சிக்கியிருந்தத் தன் கையை உருவிக் கொண்டுப் புத்தகத்தைத் தன் மார்போடு இறுக்கியபடி,அவனைச் சந்தேகமாய் நோக்கி இரண்டடி நகர்ந்து..

“என்ன பண்ணோனும்?” எனக் கேட்க..

“ஏய்ய்.. ச்சீ” என முகத்தைச் சுருக்கியவன்..

“மொட்டை மாடிக்குப் போகலாம் வா” எனக் கூறி அவள் தோள் பற்றி தள்ளிக் கொண்டு மாடியேறினான்.

தேய் பிறை நிலவு வானில் தேய்ந்து கொண்டிருக்க.. தீண்டிச் சென்றக் குளிர்காற்றில் தோளைக் குறுக்கியபடிக் கையைக் கட்டிக் கொண்டு நின்றவளிடம்..

“உன்ற தொப்பை என்னிக்குமே குறையாதாட்ருக்கு டா மோகன்” என்றபடி ஒற்றை விரலால் அவள் வயிற்றைத் தட்டிக் காண்பிக்க.. அவசரமாய்க் கைகளை இறக்கியவள்.. அவனை முறைத்துத் திரும்பி நின்று கொள்ள..

அவளிரு கைகளையும் பற்றியிழுத்துப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன், அவள் தோளில் நாடியைப் பதித்து..

“இன்னும் இதெல்லாம் அன்கம்ஃபர்டபிள் ஆன ஃபீலைத் தான் கொடுக்குதா?” எனக் கேட்டான் மெல்லிய குரலில்.

“ஆமான்னு சொன்னா கையை எடுத்துடுவியா?”

நமுட்டுச் சிரிப்புடன் கேட்டவளைக் கண்டுக் கடுப்பாகி அவளிடமிருந்துப் பட்டென அவன் விலகி நிற்க, விரிந்த சிரிப்புடன் அவனருகே சென்றவள், அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு..

“அன்கம்ஃபர்டபிள்-ஆ இல்ல! போதுமா?” எனக் கூற.. சிரிப்புடன் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன்..

“எனக்கும் ஒரு காலம் வரும் டா மோகன்! நான் உன்ற பின்னால சுத்துறதாட்டம், அப்போ நீ என்னைச் சுத்தி,சுத்தி வருவ” என்றான்.

“சுத்தி,சுத்தி வர்றதுக்கு நீ என்ன அரசமரத்துப் பிள்ளையாரா?”

“ஏய்ய்..” – ஒற்றை விரலைத் தூக்கி மிரட்டியவனின் விரலைப் பற்றி.. அவனிடமிருந்து விலகி நின்று அவனை நிமிர்ந்து நோக்கியவள்..

“என்ற மேல இன்னும் கோபமிருக்கா?” எனக் கேட்டாள்.

“எதுக்கு?”

“விட்டுட்டுப் போனேனல்ல?”

“சரியாச் சொல்லோனும்ன்னா இன்னிக்கு மதியம் 2 மணிக்கு முன்னால வரை இருந்தது, ஆனா இப்போ இல்ல” – கையைக் கட்டிக் கொண்டு ரசனையாய்க் கூறியவனை முறைத்துப் பின் தயக்கமாய் வேறு புறம் திரும்பிக் கொண்டவளை.. அடக்கப்பட்ட சிரிப்புடன் நோக்கியவன்..

“இப்போ உன்ற முகத்துல வந்து,போற உணர்ச்சிக்கு என்ன பேருன்னு தெரியுமா டா மோகன்?” எனக் கேட்டான்.

“என்ன?” – உடனே சுதாரித்து முகத்தை முசுட்டுத்தனமாய் மாற்றிக் கொண்டவளிடம்.. நக்கலாய் உதட்டை வளைத்து..

“பக்கத்துல வா, சொல்றேன்” என்றவனிடம்..

“நீ இப்படியே பேசிட்டிருந்தா நான் கீழ போய்டுவேன் சொல்லிட்டேன்” என்று அவள் படபடக்க..

“என்றனால இனி உன்ற கிட்ட இப்பிடித் தான் பேச முடியும்” என்றான் அழுத்தமாய்.

“ரகு…..” -என்னை விட்டுவிடேன் ரீதியில் பாவமாய் அழைத்தவளின் கரம் பற்றித் தன்னருகே நிறுத்திக் கொண்டவன்..

“உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?” எனக் கேட்டான்.

முறைப்பாய் அவனை நோக்கியவளின் தலையைத் தட்டி..

“இதுக்காக இல்ல!” என்றவன்.. அவள் காதோரமுடிகளை ஒதுக்கியபடி “நீ என்ற கம்பானியன் டா மோகன்! அதுக்கப்புறம் தான் இந்தச் செயின்,தாலி,புருஷன்,பொண்டாட்டின்ற உறவெல்லாம்! என்ற கூட சிரிச்சு,சண்டை போட்டு,வம்பு வளர்த்து, அக்கறை,பாசமெல்லாம் காட்டி என்ற கூடவே வளர்ந்தவ திடீர்ன்னு விலகிப் போனா.. மிஸ் பண்ணத் தோணாதா?” – என்றவன்.. அமைதியாய் நின்றவளிடம்…

“உனக்கு என்னாட்டம் எதுவும் தோணியிருக்காதே?” என முறைப்புடன் கேட்க.. கண்ணைச் சுருக்கி யோசித்தவள்.. இல்லையெனத் தலையாட்டி..

“எனக்கிருந்ததெல்லாம் கோபம் மட்டும் தான்!” என்றாள்.

“தெரியும் டி! திமிர் பிடிச்சவளே” என்றபடி அவள் தோளைப் பற்றிப் பின்னே தள்ளியவனிடம்...

“அப்புறம் நிறைய உறுத்தலும்!” என்றாள்.

“உறுத்தலா?”

“ஆமா!, அன்னிக்கு நீ மண்டபத்துல இருந்து போனதுக்கு நான் தான காரணம்? ஆனாலும் என்னைக் காட்டிக் கொடுக்காம, நீ தான் தப்பெல்லாம் பண்ணினதாட்டம் பேசுன இல்ல? அதுவும் ஜீவன் மாமா விட்ட அறைக்கு அப்புறமும்! எல்லாத்தையும் நான் பண்ணிட்டு பெருசுங்கக் கிட்ட உன்னை மட்டும் மாட்டி விட்டு வந்துட்டேனோன்ற உறுத்தல்! ஒட்டுமொத்தக் குடும்பமும் என்ற மேல இருக்கிற ஆத்திரத்தையும் சேர்த்து உன்ற கிட்ட காட்டுறாங்களோங்குற பயம் வேற! போதாக்குறைக்கு அந்த பாம் இன்சிடெண்ட், உனக்கு மட்டும் அன்னிக்கு ஏதாவது ஆகியிருந்தா-ன்ற நினைப்பு அப்பப்போ வந்து, நடுங்க வைச்சிடுச்சு!”

“அடேங்கப்பா! என்னைப் பத்தியெல்லாம் யோசிச்சியாடி நீ?”

“உன்னைப் பத்தி மட்டும் தான் அதிகமா யோசிச்சேன்”

“என்ன யோசிச்ச?”

“கல்யாணப் பேச்சுத் தொடங்குனதுல இருந்து உன்ற பேச்சும்,பார்வையும் மாறுனதைப் பத்தி”

“எல்லாத்தையும் கவனிச்சிட்டுத் தானிருந்திருக்க?”

“ஆமா! பட்டுன்னு உன்றனால எப்பிடி மாற முடிஞ்சதுங்குற கோபத்தோட!”

“பட்டுன்னுல்லாம் இல்ல”

“பின்ன?”

“நீ மேல சொல்லு”

“மேல சொல்ல ஒன்னுமில்ல! எந்நேரமும் மனசுக்குள்ள உன்னைப் பத்தி ஓடுன நினைப்பெல்லாம் கோபத்துல,பயத்துல,உறுத்தல்ல வந்தது தான்!”

“அப்டின்னா என்ற பார்வையிலிருந்த மாற்றம் உன்னைக் கொஞ்சம் கூட பாதிக்கலயா?”

“……….”

“மோகனா..”

“இருந்தது. அடி மனசுல எங்கோ ஒரு மூலைல.. உன்ற மேல இருந்த கோபத்தையெல்லாம் தாண்டி!”

மெல்ல விரியத் தொடங்கிய அவன் இதழ்கள்.. பெரிதாய் ஓர் சிரிப்பை உதிர்க்க..

“ஆனா.. நான் ஃபோன் பண்ணினப்போல்லாம், வம்பு பேசி என்னைக் கடுப்பேத்துனதுல அடிமனசுல இருந்தது, அதளபாதாளத்துக்கேப் போயிடுச்சு” – என வேண்டுமென்றே கூறியவள்.. சிரிப்பு குறையாது நின்றவனை ஓர் நொடி தயக்கமாய் நோக்கி..

“ரகு..” என்றாள்.

“சொல்லு”

“வ..வந்து..”

“ம்ம்”

“என்..என்னைக் காதலிக்கிறியான்னு கேட்டா, நீ என்ன பதில் சொல்லுவ?”

இதுவரை ‘காதல்’ என்ற வார்த்தையை இருவருமே உபயோகித்ததில்லை! தயக்கத்துடன் கேள்வி கேட்டு விட்டுத் தவிப்பாய்த் தன் முகம் நோக்குபவளைக் கண்டவனுக்கு.. அவள் கேட்ட ‘முற்றுப்புள்ளியை நான் தான் வைக்கனுமா’ கேள்விக்கு விடை கிடைத்து விட.. உற்சாகமாய்,உல்லாசமாய் தோன்றிய உணர்வலையொன்று.. தலை முதல் கால் வரை தறிகெட்டு ஓடியதில்.. குதூகலித்து..

“ம்க்கும்” எனச் செருமிக் கொண்டு மறுபுறம் திரும்பி, அவள் முகம் பாராது நின்றவன் “தெரியாது” என்றான்.

“இது என்ன பதில்?” – டென்ஷன் ஆகி விட்டாள் போலும்!

சிரிப்பை அடக்கி அவள் புறம் திரும்பி நின்றவன்..

“காதலான்னு தெரியாதுன்னு சொல்றேன்” என்றான்.

“அப்டின்னா?”

“இதே கேள்வியை நான் உன்ற கிட்டக் கேட்டா நீ என்ன பதில் சொல்லுவ?”

“நான் முதல்ல கேட்டேன்! நீ தான் எனக்குப் பதில் சொல்லோனும்”

“அதான் தெரியாதுன்னு சொல்லிட்டேனே?”

“தெரியாதுன்னா என்ன அர்த்தம்? நீ… நான்… இ..இது… எதுவும் காதல்-ன்ற கேட்டகரில வராதா?”

-காதல் என்பதற்கான சரியான விளக்கத்தை அவளது மூளை கணக்கிட முயல்வதை அறிந்து கொண்டவனுக்கு..

‘மூளையை மட்டும் வைச்சு யோசிக்கிறதுக்குக் காதல் கால்குலேஷன் இல்ல டா மோகன், 1+1=2-ன்னு சொல்லி முடிக்கிறதுக்கு! அது உணர்வு! இதயமும்,மூளையும் கை கோர்க்கிற மையப்புள்ளி’ என்று அவளிடம் கூறத் தோன்றினாலும்..

திக்கித் தடுமாறி சந்தேகம் கேட்பவளை அள்ளி அணைத்துக் கொள்ளும் வேகம் பிறக்க.. அதை மறைத்து..

“காதல்ன்னு சொல்றதால என்ன பெரிய வித்தியாசம் வந்திடப் போகுது?” எனக் கேட்டான்.

“அது……” என்றவள் பின் யோசித்து “சரி விடு” என்றாள், குழப்பம் ஏறிய முகத்தோடு!

தன் மனதிலிருப்பதை அவனிடம் முழுதாய் வெளிப்படுத்த இன்னமும் தயங்கி நிற்பவளைக் கண்டு ஒரு புறம் எரிச்சல் வந்தாலும், தவிப்பாய் தன் முகம் நோக்கும் அவள் பார்வை உள்ளே ஏதோ செய்ய.. எட்டி அவளை இறுக அணைத்துக் கொண்டவன், அவள் கேள்விக்கான விளக்கத்தைத் தன் அணைப்பால் உணர்த்த முற்பட்டான்!

ஆனால்.. இன்னமும் இதயத்தின் வாசலை பூட்டு போட்டு அடைத்து விட்டு, மூளைக்குள் காதலைத் தேடிக் கொண்டிருக்கும் மோகனா, அவனது அணைப்பின் ஆழத்தை உணராது யோசனையுடனே நின்றாள்.

றுநாள் காலை ஃபேக்டரிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தவள், கண்ணாடியின் முன் நின்று அணிந்திருந்த புடவையை சரிபார்த்துக் கொண்டிருந்த சமயம், அறை வாசலில் நின்றபடி “கிளம்பலாமா?” என்று ரகுவரன் அழைத்ததும்… நிமிர்ந்து அவனை நோக்கியவள்..

“இ..இல்ல, நீ கிளம்பு! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு” என்றாள்.

“என்ன வேலை?”

“……”

“ஏய்.. என்ன?”

“பூ..பூர்ணிக்குக் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணோனும். அதனால நான் வர லேட் ஆகும்” என்றாள்.

“ஹ்ம்ம்” எனத் தலையாட்டியவன் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு அவள் முகத்தை ஆராய்ச்சியாய் நோக்க, டிரெஸ்ஸிங் டேபிளில் ஒரு கையைப் பதித்தபடி உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றவள், அவன் பார்வையை எதிர்கொள்ளாது, வேறு புறம் பார்த்தாள்.

“சரி, அப்போ நான் கிளம்புறேன்” எனக் கூறி அவன் சென்று விட்டதும், ஒரு பெருமூச்சை வெளியிட்டுக் கண்ணாடியின் புறம் திரும்பியவளின் முகம் யோசனையாய்க் காட்சியளித்தது.

அதன் பின்பு ஃபேக்டரியில் அவனோடு சுற்றி வரும் போதும், மதிய வேளையின் போது அவன் உணவுண்ண அழைத்த போதும் ஏதேதோ காரணம் சொல்லி மறுத்தவளின் முகத்தை நின்று நோக்கினான் ரகுவரன்.

“எ..என்ன?” – தடுமாறிய கருமணிகளோடு மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தபடி கேட்டவளிடம்..

“மறுபடி என்ன பிரச்சனை உனக்கு?” என்றான்.

“எ..எனக்கென்ன பிரச்சனை? நான் நல்லாத் தான் இருக்கேன்! பூர்ணியோட வெளியே சாப்பிட்டதால, பசியில்ல. அதான் உன்னை மட்டும் சாப்பிடச் சொன்னேன்! இதுல என்ன பிரச்சனையைக் கண்ட?” – கணினியை ஆபரேட் செய்தபடி அவன் முகம் பார்க்காமல்.. வரவழைத்த சிரிப்புடன் கூறியவளின் தாடையைப் பற்றித் தன் புறம் திருப்பினான் ரகுவரன்.

“அவ்ளோ தானா?” – தன் முகத்தருகே குனிந்து கேள்வி கேட்டவனை.. விழியசையாது நோக்கியவள்.. பதிலற்றுத் தலையசைக்க..

“நிஜமா அவ்ளோ தானா?” என்றான் அவன்.

முறுவலித்த அவள் இதழ்களோடு இசைந்து கொடுக்க முயன்ற அவள் கண்கள், முடியாமல்.. கேள்வியாய்,குழப்பமாய் அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருக்க..

“என்னவோ பேசுது உன்ற கண்ணு” என்றான்.

பட்டென இமைகளைக் கீழிறக்கி உணர்வுகளை கண்களிலிருந்துப் பறித்தவளின் தாடையை உயர்த்தி.. தன் முகம் காணச் செய்தவன்.. குனிந்து அவள் இதழில் முத்தமிட்டு நிமிர்ந்தான்.

ஒரு நொடி கண்களை மூடி சிலிர்த்துப் பின் முழுதாய் சிவந்த முகத்துடன்.. காதலாய் அவனை நோக்கியவளைக் கண்டு.. மீண்டும் இதழ் பதித்தவன்..

“முத்தம் ஒரு வழிச் சாலையில்ல” எனக் கூறி.. அவள் விழிகளை நோக்க.. அவன் தாடையிலிருந்துத் தன் முகத்தை விலக்கிக் கொண்டவள்..

“இதுவே கடைசியா இருக்கட்டும்” என்றாள்.

“எதைச் சொல்ற?”

மேலும்,கீழுமாய் அவனை நோக்கி “ஃபேக்டரில வைச்சு இப்படியெல்லாம் பண்றது” – என்று விட்டு அவள் கணினியின் புறம் திரும்பிக் கொள்ள.. பல்லைக் கடித்து அவளை முறைத்தவன் “சரியான ஜடம்” என்று முணுமுணுத்தபடி நகர்ந்து விட்டான். அவன் சென்ற பின் விழி மூடி கீ-போர்டில் சாய்ந்தவள், கண்களை அழுந்த மூடிக் கொண்டாள். சுகமாய்,சுமையாய் மனம் முழுக்க, உடல் முழுக்க பரவிக் கிடந்த உணர்வுகளின் பாரம் தாங்காது!

ஃபேக்டரியிலிருந்து வீடு திரும்பும் போதும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லியபடி அமைதியாய் வந்தவளைக் கண்டு எரிச்சல் வந்தாலும், கண்டு கொள்ளாமல் இருந்து விட்டான் ரகுவரன்.

ப்படியே நாட்கள் நகர.. ஒரு நாள் காலை கம்பெனி குறித்த ஃபைல் ஒன்றை எடுப்பதற்காக அவன் அறைக்கு மாடியேறினாள் மோகனா.

அவள் நுழைகையில், அவனது அறை காலியாய் இருந்ததைக் கண்டு “ரகு…” என்று அவள் குரல் கொடுக்க..

“குளிச்சிட்டிருக்கேன்! என்ன?” என்றவனின் குரல் பாத்ரூமிலிருந்து ஒலித்தது.

“**** ஃபைல் எடுக்க வந்தேன்” என்றவளிடம்..

“டேபிள் மேல இருக்கு பாரு” என்று அவன் கூறியதும் “பார்த்துட்டேன்” என்றவள் ஃபைலைக் கையில் எடுத்து அதைப் புரட்டியபடியே அவன் மேஜையை நோக்கினாள்.

புதிதாய் ஏதோ கதை தொடங்கவிருக்கிறான் போலும்! ஏகப்பட்டக் குறிப்புகள் அவன் மேஜை முழுதையும் நிறைத்திருந்தது.

“டேபிள்ல இருக்குற எதையும் கலைக்காத” – என்றவனின் குரலில் உதட்டைச் சுழித்தவள்..

“ஒன்னும் தொடல!” என்று நொடித்து விட்டு வெளியே செல்லத் திரும்புகையில்.. திடீரென மூளையில் தோன்றிய பளீச் உணர்வில் அவசரமாய்த் திரும்பி.. மேஜையின் கோடியிலிருந்தத் தங்களது சிறு வயது புகைப்படத்தை நோக்கினாள்.

கூடை நாற்காலியொன்றில் அமர்ந்திருந்த ரகுவரன், மூன்று வயது மோகனாவை மடியில் வைத்தபடி சிரித்துக் கொண்டிருந்தான்.

பல வருடங்களாக அந்த மேஜையை ஆக்கிரமித்திருக்கும் புகைப்படம் தான் அது! ஆயிரம் முறையேனும் அவள் கண்ணில் பட்டிருக்கும்! ஆனால் அதில் புதிதாய் தென்பட்ட மாற்றத்தில், புகைப்படத்தைக் கையிலெடுத்து நோக்கினாள்.

அவன் மடியில் அமர்ந்திருந்த அவளது கால்களுக்குக் கீழே.. கிறுக்கலாய் அவன் கையெழுத்து. உற்று நோக்கி வாசித்தாள்.

வரிசையாய் கவிதைகள்!

கோபமாய்,மகிழ்ச்சியாய்,கவலையாய்,துன்பமாய்,அன்பாய், அக்கறையாய், காதலாய், காமமாய்.. புகைப்படத்தின் முன்னேயும்,பின்னேயும் சிதறிக் கிடந்த அவனது வார்த்தைகள் அனைத்திலும் அவள் மட்டுமே நிறைந்திருந்தாள்!

தனக்கான அவனது உணர்வுகளைக் கையில் ஏந்திக் கொண்டு நிற்கும் உணர்வு அவளுக்கு!

பரவசமாய் அவன் வார்த்தைகளைப் பார்வையால் வருடிக் கொண்டிருந்தவள், சுற்றம் மறந்து.. அவன் எழுத்தின் வடிவத்தில்.. வசமிழந்து நின்றாள்.

அவனது கிறுக்கல்களில் கிறங்கிக் கிறுக்குத்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தவளை “என்ன பண்ற?” என்கிற அவன் குரல் கலைக்க.. சட்டெனப் புகைப்படத்தைப் பின்னே மறைத்துக் கொண்டுத் திரும்பி நின்றாள்.

கலைந்தத் தலைமுடியும்,இடையில் துண்டுமாய், தாடியோடு நின்றவனை நிதானத்துடன் வருடிய அவள் பார்வையில் அநியாயத்திற்குக் காதல் நிறைந்திருக்க.. தாடையை இறக்கி அவளை ஒரு பார்வை பார்த்தவன்,

“சட்டை போடாம நின்றிருக்கேன்! வெட்கமில்லாம இப்பிடிப் பார்க்குறவ?” எனக் கேட்டான்.

“எதுக்கு வெட்கப்படோனும்?”

“அதுசரி! அப்போ இங்கேயே இருந்து.. எல்லாத்தையும் பொறுமையா பார்த்துட்டுப் போ”

“ஏய்ய்.. ச்சீ” – முகத்தை சுழித்தவளைக் கண்டு கொள்ளாது அலமாரியைத் திறந்தவன், தலையைத் துடைத்தபடி உடைகளின் மீது பார்வையைப் பதித்து..

“ஃபைல் எடுத்துட்டியா?” எனக் கேட்டு..

“மாமா கிட்ட ஒரு தடவை கொடுத்து சரி பார்த்துக்க! அவர் ஃபேக்டரிக்குத் தினம் வர்றதில்லைன்னாலும், இதையெல்லாம் அவர் கிட்டக் காட்டுறது நம்ம கடமை, புரிஞ்சதல்ல?” என்றவன் அவளிடமிருந்துப் பதில் வராது போக திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான்.

மோகனப் புன்னகையுடன், விழி முழுக்க அவனை நிரப்பியபடி பரவசமாய் நின்றிருந்தவளிடம்,

“நிஜமாவே நின்னு எல்லாத்தையும் பார்த்துட்டுத் தான் போகப் போறியா?” எனக் கேட்டான்.

இல்லையென்பது போல் தலையசைத்தவள், தன் பார்வையை மாற்றிக் கொள்ளாது நிற்கவும், தலையைத் துடைத்துக் கொண்டிருந்தத் துண்டை படுக்கையில் வீசி விட்டுத் தலையைக் கோதி சரி செய்தவன், பின் இடுப்பில் கை வைத்துக் கொண்டு…

“எதுக்குடி அப்பிடிப் பார்க்குற?” என்றான்.

“எப்பிடிப் பார்க்குறேன்?”

“ஏய்ய்..”

“ஹேண்ட்சம்-ஆ இருந்தா பார்க்கத் தான் செய்வாங்க” -புருவத்தைச் சுருக்கிக் கூறியவளை அவன் ஆச்சரியமாய் நோக்க..

“என்ன?” என்றாள் அவள்.

“திடீர்ன்னு முகத்தைத் திருப்புற, திடீர்ன்னு இப்பிடிப் பேசுற?, என்னை எப்பவும் குழப்பத்துலயே தான் வைச்சிருப்பியாடி நீ?”

“நீ மட்டும் என்னவாம்?”

“நான் என்ன உன்னைக் குழப்புறேன்?”

“அதெல்லாம் சொல்ல முடியாது”

“சரியான சைக்கோ டி நீ”

“தேங்க்ஸ்”

“சரி, கிளம்பு! நான் ட்ரெஸ் மாத்தனும்”

“ம்ம்”

“போடி…”

“………..” – அதே புன்னகையுடன் அசையாது நின்றாள் அவள்.

“ஏய்ய்.. என்ன?”

“இங்க வாயேன்”

“எதுக்கு?”

“ப்ச்”

“என்ன தான் டி உன்ற பிரச்சனை?” – திட்டியபடி அருகே வந்து நின்றவனை ஆசையாய் நோக்கி, எட்டி அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தாள்.

கன்னத்தில் கை வைத்தபடி வாயைப் பிளந்து நோக்கியவனைக் கண்டு சிரித்து.. புகைப்படத்தை முந்தானையில் மறைத்துக் கொண்டு விறுவிறுவென அவள் வெளியேறி விட..

என்ன தான் ஆச்சு இவளுக்கு எனப் புலம்பியபடியே எரிச்சலுடன் உடை மாற்றிக் கிளம்பியவன்,மேஜையைக் கடந்து வெளியே செல்கையில்.. எப்பவும் அவன் பார்வை செல்லுமிடத்திலிருக்கும் புகைப்படத்தைக் காணாது ஒரு நொடி நின்று யோசித்தான். பின் பிடரியைக் கோதியபடிப் பல்லைக் கடித்தவன், கடகடவெனக் கீழிறங்கினான்.

சாப்பாட்டு மேஜையில் கையில் ஃபைலுடன் கணபதி அமர்ந்திருக்க, மாடியிலிருந்துக் கீழிறங்குபவனை உரிமையான பார்வையுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மோகனா.

அவள் பார்வையைக் கண்டு கொள்ளாது டைனிங் டேபிளில் வந்தமர்ந்தவன் “அந்த ஈரோடு பார்ட்டி கிட்டப் பேசுனீங்களா மாமா?” என்றபடியே உண்ணத் தொடங்கி விட..

அவள் உண்ணும் விதத்தையும்,பேசும் விதத்தையும் புதிதாகக் காண்பவள் போல் அவ்வப்போது ஓரக் கண்ணால் பார்த்து அவன் முகத்தை மனதில் இருத்திக் கொண்டிருந்தவளைக் கவனித்தாலும், எதிர்வினையின்றி அமர்ந்திருந்தான் ரகுவரன்.

பேச்சின் இடையில் இருமியவனைக் கண்டு அவசரமாய் ஜக்கிலிருந்தத் தண்ணீரை தம்ளரில் ஊற்றி, அவன் புறம் நீட்டியவளை விநோத ஜந்துவைப் பார்ப்பது போல், ஒரு பார்வை பார்த்தவன், அவள் நீட்டிய தண்ணீரை வாங்காது, மாமனின் அருகிலிருந்துத் தண்ணீரை எடுத்துப் பருக, முகத்தைச் சுருக்கியவள்.. மௌனமாய் தன் தட்டில் பார்வையைப் பதித்துக் கொண்டாள்.

இருவரது மௌன நாடகத்தையும் வேடிக்கை பார்த்த கணபதி, கேள்வியாய் ரகுவரனை நோக்க.. அவரிடம் பதில் கூறாது.. தன் தட்டை நோக்கி உண்ணத் துவங்கினான் அவன்.

அவர் உண்டு எழுந்து சென்றதும் அவனை முறைத்தவள்,

“ஏன் நான் தண்ணீ கொடுத்தா குடிக்க மாட்டியாக்கும்?” எனக் கேட்டாள்.

அவளை நிமிர்ந்து பாராது உண்டபடி “சொந்த வீட்டுக்குள்ளயேத் திருட்டு வேலை பார்க்குறவங்க கையால நான் தண்ணீ வாங்கிக் குடிக்கிறதில்ல” என்றான் முறைப்பாய்.

அவன் தன்னைக் கண்டு கொண்டதில் ஒரு நொடி பம்மியவள் பின்..

“இப்ப எதுக்கு முறைக்குற?, அது உன்ற ரூம்ல இருந்தாலும், எனக்கு சொந்தமானதாக்கும்! அதான் எடுத்துட்டு வந்தேன்” என்றாள்.

ஒரு நொடி அமைதியாய் இருந்தவன் பின், “இப்போ உன்ற கேள்விக்கு விடை கிடைச்சிடுச்சா?” எனக் கேட்டான்.

“……………”

பதிலற்று அமர்ந்திருந்தவளின் புறம் திரும்பியவன்..

“நீ சொன்ன ஒரே காரணத்துக்காக கல்யாணத்தை நிறுத்த ஓடிப் போனது, சங்கிலியைக் கழட்டித் தூக்கி எறிஞ்சிடுவேன்னு நீ சொல்லியும் கூட ஒரு வருஷமா உன்னை நினைச்சுக் காத்திருந்தது, உனக்காக ஃபேக்டரிக்குப் போனது, ஒவ்வொரு தடவையும் நீ திட்டி,அசிங்கப்படுத்தி, கேவலமா பேசி விரட்டியும் கூட ரோஷம் கெட்டுப் போய் உன்ற பின்னால வந்தது,என்ற பார்வை,என்ற பேச்சு, என்ற தொடுகை இது எதுவும் காட்டாத உனக்கான என்ற உணர்வுகளை, வெறும் மூனு எழுத்து வார்த்தைப் புரிய வைச்சிடும்ன்னா நினைக்குற?”

“…………..” – அவன் பேச்சிலிருந்த நியாயம் உணர்ந்து கூம்பிப் போன முகத்துடன் விரல்களைப் பார்த்தபடி தலை குனிந்து அமர்ந்திருந்தவளிடம்..

“அப்பிடியென்ன என்ற மேல சந்தேகம் உனக்கு?, காதல்ன்னு ஃபேன்சியான வார்த்தையை யூஸ் பண்ணாத் தான் நம்புவியா நீ என்னை?”

“………….”

“இந்த சில்றத்தனமான காரணத்துக்காக இத்தனை நாளா என்ற கிட்ட சரியாக் கூடப் பேசாம, முகத்தைத் தூக்கிட்டு சுத்தியிருக்க நீ?”

“………”

“ஒன்னு நல்லாத் தெரிஞ்சுக்க! உன்ற மேல இருக்குற என்னோட அன்பு,பாசம்,அக்கறை,ஆசை,ஆர்வம் அத்தனையையும் காதல்-ன்ற ஒரே வார்த்தைல அடக்கிட முடியாது” – என்றவன் கையைக் கழுவி விட்டு எழுந்து சென்று விட..

அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகளை அசை போட்டபடி அமைதியாய் அமர்ந்திருந்தவளுக்குத் தன்னுடைய எதிர்பார்ப்பு முட்டாள்தனமாய் தோன்றத் தொடங்கியது!

அவளிடத்தில் மட்டுமில்ல! அவனைச் சுற்றியிருக்கும் அனைவரிடமும் அவன் காட்டும் அன்பையும்,அக்கறையையும் வார்த்தைகளில் அடக்கி விட முடியாதென்றே தோன்றியது.

ஆனாலும் ‘காதல்-ன்றது ஃபேன்சியான வார்த்தை மட்டும் தான்-ன்னா, என்ன இதுக்குப் பக்கம்,பக்கமா என்னைப் பத்திக் கவிதை எழுதி வைச்சிருக்கானாமாம்?’ என்று பொறுமியவள், பின் ஒரு முடிவுடன் எழுந்து சென்றாள்.

ஃபேக்டரிக்குக் கிளம்பியதும் மாமனிடம் சொல்லி விட்டுச் செல்ல அவர் அறைக்குள் நுழைந்த ரகுவரனிடம்..

“என்ன கண்ணு?, மறுபடி ஏதும் பிரச்சனையா?” எனக் கவலையாய் விசாரித்தார் கணபதி.

இல்லையெனத் தலையாட்ட வந்தவன் பின் அவரை முறைத்து “பிரச்சனையில்லன்ன்னு சொன்னா மட்டும் என்ன பெருசா பண்ணிடுவீங் மாமா?” என்றான்.

“என்ன சாமி இப்பிடி சொல்லற?”

“பின்ன?, ஹாஸ்பிடல்ல வைச்சு அவ கழுத்துல நான் மாட்டுன சங்கிலியோட எல்லாம் முடிஞ்சதுங்களா?, முறையா ஊரைக் கூட்டி எப்போ எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்க?”

முறைப்போடு கேட்க முயன்று தோற்று முழு சிரிப்புடன் கேட்டவனைக் கண்டு மகிழ்ச்சியில் வார்த்தை வராது தவித்த கணபதி அவன் தோளைப் பற்றிக் கொண்டு..

“நி..நிஜமாவா கண்ணு? மோகனா, மோகனா சம்மதிப்பாளா?” எனக் கேட்டார்.

“அதெல்லாம் சம்மதிப்பா! நீங்க சீக்கிரம் ஏற்பாட்டைத் தொடங்குங் மாமா” என்றவனிடம்.. சந்தோஷத்துடன் தலையசைத்தவர்.. மருமகனை வம்பிழுக்கும் நோக்கத்துடன்..

“மறுபடி நீ கல்யாணத்தன்னிக்குக் காணாம போயிட மாட்டேல சாமி?” எனக் கேட்கவும்.. அவரை முறைத்து நின்றவனைக் கண்டு கொள்ளாமல் “முதல்ல போய் துளசி கிட்ட விஷயத்தைச் சொல்லோனும்” எனத் தனக்குள் பேசியபடி முன்னால் நடந்து விட்டார் கணபதி.

வீட்டிலிருந்து வீர நடை போட்டு தான் வளர்ந்த இல்லத்தை வந்தடைந்த மோகனா நேராகத் துளசியின் அறைக்குச் சென்று நின்றாள்.,

“கந்தா,கதிர்வேலா.. என்றப்பனே முருகா..” என்று முணுமுணுத்தபடியேத் தன் நெற்றியில் விபூதியைப் பூசிக் கொண்டிருந்தத் துளசி, அறை வாசலில் நின்ற மோகனாவைக் கண்டுப் புருவம் உயர்த்தினார்.

நாடு திரும்பியலிருந்து இதுவரை அவரிடம் ஜாடையாய்ப் பேசுவதோடு சரி, நேரடியாய் எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்வதில்லை அவள். இரண்டு,மூன்று முறை அவள் பேச முயன்ற போது, அவர் கண்டு கொள்ளாதிருக்கவும், தானும் முறுக்கிக் கொள்ளத் துவங்கியவள், இன்று தன் முன்னே வந்து நிற்பதைக் கண்டு அவர் கேள்வியாய் ஏறிட.. அவரருகே வந்து நின்றவள்.. மெல்லத் தலை குனிந்து கொண்டு.. விரல்களைக் கோர்த்தபடி..

“எனக்கு உங்க பையனைப் பிடிச்சிருக்குங் மாமா! எனக்கு அவனைக் கல்யாணம் கட்டி வைங்க!” என்றாள்.

திடீரென அறைக்குள் பிரவேசித்துத் தலையுமின்றி,காலுமின்றிக் கடகடவெனப் பேசுபவளை ஒரு நொடி புரியாது நோக்கிப் பின் அவள் கூறியதை உணர்ந்து அவர் பெரிதாய் விழி விரிக்க..

அவர் பதிலற்று நிற்பது கண்டு நிமிர்ந்து நோக்கியவள்..

“எதுக்கு அப்பிடிப் பார்க்குறீங் மாமா? நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேனல்ல?, எனக்கு எவனையும் பிடிச்சிருந்தா, அவன் கிட்ட சொல்றதுக்கு முன்னால, உங்கக் கிட்ட தான் முதல்ல வந்து சொல்லுவேன்னு?” எனக் கூறியதும்..

தலை,கால் புரியாது சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன துளசி, இங்க வா என்பது போல் கையசைத்து.. அவள் தன்னருகே வந்ததும் ஒரு கையால் அணைத்துக் கொள்ள..

அவள் கையில் தெரிந்த நடுக்கத்தைக் கண்டு, அவர் கையை இறுகப் பற்றிக் கொண்டவள், “இப்ப கூட வாயைத் திறந்து என்ற கூடப் பேச மாட்டீங்களாக்கும்?, உங்க மவனாட்டம் நீங்களும் அழுத்தக்காரருங் மாமா” என்றாள்.

புன்னகையுடன் அவளை விலக்கி நிறுத்தியவர்..

“நீ எங்களையெல்லாம் விட பெரிய அழுத்தக்காரியாச்சே! நான் பேசலன்னதும் திரும்பிக்கிட்டுப் போயிட்டவ?” என்றார்.

“ஆமா! நான் உங்க வளர்ப்பாச்சே! ரோஷமாத் தான் இருப்பேனுங் மாமா” என்றவள் தொடர்ந்து “என்ற கிட்டக் கை ஓங்குனதுக்கு நீங்க இன்னும் மன்னிப்புக் கேட்கலன்றதை மனசுல வைச்சுக்கங் மாமா” என்றாள்.

“நீ செஞ்சதெல்லாம் தப்புன்னு நீ ஒத்துக்கிற அன்னிக்கு நான் மன்னிப்புக் கேட்குறேன்” என்றவரிடம் உதட்டைப் பிதுக்கியவள் “நீங்க கோவமாவே இருந்துக்குங் மாமா” எனக் கூறவும் வாய் விட்டுச் சிரித்தவர் “அப்பா…” என சுவாமிநாதனை அழைத்தபடி நகர்ந்து விட.. வந்த வேலை முடிந்து விட்டதில் முழுச்சிரிப்போடு ஃபேக்டரிக்குப் புறப்பட்டாள்.

அன்று முழுக்க வேண்டுமென்றே அவள் கண்ணில் படாமல் திரிந்தவனை எண்ணிக் கடுப்பானவள், நாள் முழுதையும் உர்ரென்ற முகத்துடனே கழித்தாள்.

ரகுவரன் கூறியதை கணபதியும்,மோகனா கூறியதை துளசிநாதனும் வீட்டினர் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள.. சந்தோஷத்தில் குதூகலித்தக் குடும்பம் உடனடியாகத் திருமணத்திற்கு நாள் பார்க்கத் துவங்கியது.

இரவு அவள் வீடு திரும்பிய போது ஒட்டு மொத்தக் குடும்பமும் டைனிங் டேபிளில் அமர்ந்தபடி உற்சாகத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு புன்னகையுடனே உள் நுழைந்தாள் மோகனா.

“வாம்மா கல்யாணப் பொண்ணு” என்றபடிப் பூர்ணியும், “வா கண்ணு” என்றபடி எழுந்து வந்து அவள் தோளைக் கட்டிக் கொண்ட சுவாமிநாதனையும் கண்டு சிரித்தவளின் கண்கள் ரகுவரனைத் தேட..

“நீ தேடுற ஆளு இங்க இல்ல” என்றான் ஜீவரஞ்சன்.

உதட்டைப் பிதுக்கி “இன்னும் ஃபேக்டரில இருப்பானாட்ருக்கும்” என்றவளிடம்..

“இன்னும் என்னடி அவன்,இவன்-ன்ற?” – எனப் பாய்ந்த பூர்ணியை முறைத்துப் பார்த்தவள்..

“கல்யாணம் ஆனதும் அவன் மட்டும் எனக்கு மரியாதை கொடுத்தா கூப்பிடப் போறான்?, அவ,இவ-ன்னு தான சொல்லப் போறான்?, அப்போ நான் அவன்,இவன்னு சொல்றதுல என்ன தப்பிருக்கு?” எனக் கேட்கவும்..

“நீ எப்படி வேணும்ன்னாலும் கூப்பிடு சாமி” என்ற சுவாமிநாதனிடம்..

“நீங்க தான் எப்பவும் என்ற கட்சி-ங்கப்புச்சி” எனக் கூறி அவரைக் கட்டிக் கொண்டவளை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் கணபதி.