அத்தியாயம் - 16
Honey! You are my Valentine!
அன்று காலை எழுந்ததிலிருந்தே அர்ஜூன் பெரிய எரிச்சலில் இருந்தான். அனுவைத் தவிர வேறு யாரால் அவனுக்குப் பெரிதாக எரிச்சல் மூட்டி விட முடியும்?, “அஜய் வந்துட்டார். நான் அவரைப் பிக் பண்ணப் போறேன்” எனத் துள்ளிக் குதித்துக் கொண்டு விடியும் முன்னேயே ஓடி விட்டவள், இன்னமும் வந்து சேரவில்லை. அவனுடன் எங்கே ஊர் சுற்றிக் கொண்டுத் திரிகிறாளோ!
“அனு வந்துட்டா டா அர்ஜூன். கூடவே அந்த சப்ப மூக்கனும் வந்திருக்கான்” – என்று வினோத் கூறி விட்டுச் செல்ல கடுப்புடனே எழுந்து வெளியே சென்றான்.
ரெஸ்ட்டாரண்ட் அருகே அவனுடன் கைக் கோர்த்தபடி முழுச் சிரிப்புடன் நின்றிருந்தவளைச் சுற்றிப் பெண்கள் அனைவரும் கூடியிருந்தனர். “நீங்க டிவில பார்க்குறதை விட, நேர்ல ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கீங்க” என்று அவனைப் பார்த்துக் கூறிய ரோஷினி அவனுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள.. சப்பமூக்கும்,டோரிக் கண்ணுமா பார்க்க சைனாக்காரன் மாதிரி இருக்கான், இவன் ஹேண்ட்சம்மா?, என்று புகைந்தபடி அர்ஜூன் அருகே செல்கையில் அஜய் அடுத்து கூறியது அவனை நடந்து கொண்டிருந்த இடத்திலேயே நிற்க வைத்தது.
“நிஜமாவே ஹேண்ட்சம்மா இருக்கேனா?, ஆனா அனு, என் மூக்கு சப்பையா இருக்கிறதா சொல்லித் தினம் இன்சல்ட் பண்றாளே?”- சிரிப்புடன் அஜய்.
“ஏய்ய்ய்ய்ய்ய்ய் அனூஊஊஊஊ” – என்று கோரசாய்ப் பெண்கள் ஏமாற்றமாய்க் குரல் கொடுத்தனர்.
“இப்டி என்னை அவமானப்படுத்துற பொண்ணுக்கு என்ன தண்டனை தரலாம்ன்னு நீங்க நினைக்கிறீங்க?”-அஜய்
“தண்டனையா?,பெஞ்ச் மேல ஏறி நிக்க சொல்லப் போறீங்களா?, எங்க அனு பாவம் சார்”- என்று ரோஷினி கூறியதும் ஏதோ பெரிய ஜோக்கைக் கேட்டு விட்டவன் போலத் தோள் குலுங்க நகைத்தவன் “ம்ஹூம், உங்க அனுவைக் கடத்திக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்” எனக் கூற.. “வாவ்வ்வ்வ்வ்வ்” என்று திகைத்த ரோஷினியைக் காட்டிலும் பன்மடங்கு திகைப்பில் தூர நின்றிருந்தான் அர்ஜூன்.
“இதுக்கு அனு ஓகே சொல்லிட்டாளா?”-ரோஷினி
“யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்கா. அவ யெஸ்ன்னு சொன்னதும் உடனே மோதிரத்தை மாட்டி நிச்சயதார்த்தத்தை முடிச்சுடனும்னு முடிவு பண்ணியிருக்கேன்”- என்று அவன் கூறியதும் “வாவ்வ்வ்வ்வ், மாப்பிள்ளை ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கார்” எனக் கூறிச் சிரித்தாள் ரோஷினி.
இது அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த அர்ஜூனுக்கு வயிற்றிலிருந்து கிளம்பிய புகை காதிலும்,மூக்கிலும் உஷ்ணமாக வெளி வரக் கோபம் தலைக்கேறிப் போய் சிலையாக நின்றிருந்தான். இந்த சப்ப மூக்கன் என்ன வேண்டுமானாலும் உளறிக் கொண்டுத் திரியட்டும்!, ஆனால்… ஆனால்.. இந்த ராங்கி ஏன் அவன் கூறும் அனைத்திற்கும் வெட்கப்பட்டுக் கொண்டு நிற்கிறாள்! அவன் கையை வேறு பிடித்துக் கொண்டு! ச்சை! முகம் கன்ற முஷ்டியை இறுக்கியவன், மேலும் அங்கே நிற்கப் பிடிக்காமல் வந்த பாதையிலேயே திரும்பிச் சென்று விட்டான்.
சிறிது நேரத்திலேயே அறைக்குச் செல்ல வந்த அனு, காரிடாரில், சுவரில் சாய்ந்தபடி யோசனையுடன் நின்றிருந்த அர்ஜூனைக் கண்டு “என்னடா இங்கே நிற்கிற?” என்று விசாரித்தாள். உணர்ச்சியற்று அவளை நோக்கியவனின் பார்வையிலிருந்து எதையும் கண்டறிய முடியவில்லை.
“எங்கடி போன?”-அர்ஜூன்
“அஜய் வந்திருக்கார்ல, அவரைப் பிக்-அப் பண்ண போனேன். உனக்கு மெசேஜ் பண்ணியிருந்தேனே?”
“காலையில 5 மணிக்குப் போனவ, பத்து மணி வரைக்குமா அவனைப் பிக்-அப் பண்ணிட்டிருந்த?”
“டேய், எங்க ரெண்டு பேருக்கும் பண்றதுக்கும்,பேசுறதுக்கும் எவ்வளவோ விசயங்கள் இருக்கும். உனக்கென்ன?, ம்?, ஓஓ, உன் ஆளு ஆர்த்தி வரலையேன்னு உனக்கு எரிச்சலா இருக்கா?”
“ப்ச், அனு………………………………..” – என இழுத்தவனிடம் “நான் டிரெஸ்-சேஞ்ச் பண்ணிட்டு வெளியே கிளம்பனும். பாய்” –எனக் கூறிச் சென்று விட்டாள்.
அன்று முழுதும் அவன் கண்ணிலேயே படாமல், அவன் செய்த ஃபோன் கால்கள் அனைத்தையும் ரிஜெக்ட் செய்து அவனை மெல்ல,மெல்ல வெறியேற்றிக் கொண்டிருந்தாள் அனு. எந்நேரமும் சிரிப்பும்,சந்தோசமுமாய் சுற்றியிருக்கும் அனைவரையும் குதூகலப்படுத்துபவன் எங்கோ பார்வையைப் பதித்தபடி யோசனையுடன் அறைக்குள்ளேயே கிடப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.
“அர்ஜூன், டேய், எழுந்திரு. வெளியே போகலாம்” – அவன் அமைதியானதும் அறையிலிருந்த அனைவரும் எழவு விழுந்ததைப் போல் முகத்தை வைத்துக் கொண்டுத் திரிவதைக் கண்டு எரிச்சலுற்ற வினோத் அர்ஜூனைத் தட்டி வெளியே கிளப்பினான்.
பெண்கள் கூட்டம் மிகுந்தக் கடை வீதியொன்றிற்கு அவனை அழைத்து வந்திருந்தான் வினோத். நாடி,நரம்புகளனைத்தையும் விறைக்கச் செய்து கொண்டிருந்த குளிர்க் காற்றில் இருவரும் மெல்ல நடந்து கொண்டிருந்தனர்.
“யோவ், என்னை எதுக்குய்யா இங்க கூப்பிட்டு வந்த?”- அர்ஜூன்
“டேய்,கேர்ள்ஸ்டா. பாரு,எவ்ளோ கேர்ள்ஸ் இரண்டு பக்கமும் வரிசையா நடந்து போறாங்கன்னு. உன்னைக் குஷிப்படுத்துற விசயம் இது தானடா?” –வினோத்
“ப்ச், நீ வேற ஏன்ய்யா என்னைக் கடுப்பு பண்ணுற?, எனக்கு எவளையும் பார்க்கத் தோணல. போதுமா?”
“அடேங்கப்பா! ஏன்?”
“பார்க்குற முகமெல்லாம் அவ முகம் மாதிரி தான் தெரியுது”
கடகடவெனச் சிரித்தவன் “ஏன் டா இதுக்கு முன்னாடி அனு எந்தப் பையனையும் டேட் பண்ணி நீ பார்த்ததேயில்லையா என்ன?, நீ இந்தத் தடவை கோபப்படுறது எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு” –என்றான்.
“எல்லா தடவையும் மாதிரி இது இல்லன்னு தோணுதுடா. பக்கத்துலயே இருக்குன்னு நினைச்சது, கை விட்டுப் போயிடுமோன்னு பயம் வருது”
“அப்போ நீ என்ன நினைக்குறன்னு அவ கிட்ட சொல்ல வேண்டியது தானே?”
“சொன்னேன். ஆனா, ரிஜெக்ட் பண்ணிட்டா”
“அப்போ கஷ்டம் தான்” –என்றவன் குளிர் தாங்க முடியாமல் கைகள் இரண்டையும் பரபரவெனத் தேய்த்துக் கொண்டான்.
இருவரும் ஹோட்டலுக்குத் திரும்புகையில் அறை முழுதும் காலியாயிருந்தது. எங்க போயிட்டானுக என்று முணுமுணுத்தபடித் தன் கைப்பேசியை எடுத்து நோக்கிய வினோத் “டேய்,பசங்க எல்லாரும் பார்ல இருக்கானுக. நான் தண்ணியடிக்கப் போறேன், பாய்..”எனக் கூறி விட்டு ஓடி விட்டான்.
சிறிது நேரம் விட்டத்தை நோக்கியபடி படுக்கையில் சாய்ந்திருந்தவன் பின் கடுப்பாகி எழுந்து வெளியே சென்றான். அணிந்திருந்த ஜெர்க்கினின் கையை சரிப்படுத்தியபடி நடந்து வந்தவன் தொப்பலாக நனைந்தபடி எதிரே ஓடி வந்து கொண்டிருந்த ரோஷினியைக் கண்டு “வெளியே மழை பெய்யுதா?” என்று விசாரித்தான்.
“ரெய்ன் டான்ஸ் ஆடிட்டிருந்தோம்டா, ஆப்போசிட்ல ஒரு பப் இருக்குல்ல, நம்ம பாதிக்கூட்டமும் அங்க தானிருக்கு. உன்னை எல்லாரும் தேடிட்டிருக்காங்க. சீக்கிரம் போ”-எனக் குளிரில் நடுங்கிக் கொண்டே கூறியவள் அறைக்குச் சென்று விட.. பப்-ஐ நோக்கி நடந்தான் அர்ஜூன்.
கூத்தடிக்க இடம் கிடைச்சாப் போதுமே நம்ம பசங்க சாப்பாடு,தூக்கம்ன்னு எல்லாத்தையும் மறந்துடுவானுக என்று முணங்கியபடி பப்-பினுள் நுழைந்த அர்ஜூன் தன்னுடைய டீம் மக்களைத் தேடிச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றினான்.
வலது புற டான்ஸ் ஃப்ளோரில் பார்வையைத் திருப்பியவனின் முகம் ஒரு நொடி திகைத்துப் பின் சிவந்து ரௌத்திரமடைந்தது. ஏனெனில் அங்கே மேலிருந்துக் கொட்டிக் கொண்டிருந்தத் தண்ணீரில் நனைந்தபடி அனுவின் இடையைப் பற்றிக் கொண்டு ஈஈஈஈ-என்ற முகத்துடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தான் அஜய்.
கண்ட மறு நொடி முகம் சுழித்து அருவெறுப்பு கொண்ட அர்ஜூனுக்கு சுற்றுப்புறம் மறந்து அவள் இடையைப் பற்றியிருந்த அவன் கரங்கள் மட்டுமே தென்பட… சற்றும் யோசிக்காமல் விறுவிறுவென ஓடிச் சென்றவன், வெடுக்கென அவளைத் தன்புறம் இழுத்து, என்ன,ஏதென்று புரியாமல் விழித்த அஜய்யின் முகத்தில் ஓங்கித் தன் முஷ்டியால் குத்தி அவனைக் கீழே சாய்த்தான்.
சுற்றி ஆடிக் கொண்டிருந்த அனைவரும் “ஆஆஆஆஆஆ” எனக் கத்த கீழே விழுந்தவனைப் பொருட்படுத்தாமல், பற்றியிருந்த அவள் கைகளை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.
கீழே விழுந்தவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அர்ஜூனிடமிருந்துக் கைகளை விலக்கப் போராடிய அனு, முடியாமல் அவன் இழுத்த இழுப்பிற்குத் தட்டுத் தடுமாறியபடி நடந்து சென்றாள்.
அடங்காத ஆங்காரத்துடன் அவளை இழுத்துக் கொண்டு வெளியேறியவன் விறுவிறுவெனக் கண்,மண் தெரியாமல் நடந்து ஹோட்டல் அறையருகே சென்று நின்றான். அவனிடமிருந்துக் கையை வெடுக்கெனப் பிடுங்கி விடுவித்துக் கொண்டு அவனை ஆத்திரத்துடன் முறைத்தாள் அனு.
முற்றிலும் நனைந்து விட்ட உடலுடன், குளிர்க்காற்றில் உதடு நடுங்க, கைகளை இறுக மடக்கிக் கொண்டு சமாளித்து நின்றவளைக் கண்டு எரிச்சலுற்றவன், தான் அணிந்திருந்த ஜெர்க்கினைக் கழட்டி அவளுக்குப் போர்த்தினான்.
கண்களை இறுக மூடிக் கொண்டு அவள் குளிரைச் சமாளிக்கும் வரையில், மூச்சு வாங்க மிதமிஞ்சிய கோபத்துடன் ஒருவரையொருவர் நோக்கியபடி இருவரும் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றனர்.
தலை முடியிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த நீருடன், குளிர்க்காற்று காதுக்குள் புகுந்ததால் மூக்கிலிருந்து வேறு கிளம்பிய நீரை உறிஞ்சியபடி “அறிவிருக்காடா உனக்கு?” என்று கோபமாக வினவினாள் அனு.
“யாருக்கு?, எனக்கா?, நீ ரொம்பத் தெளிவா இருக்கிறதா நினைப்பாடி உனக்கு?”
“அவனை ஏன் டா அடிச்ச?”
“அவனைக் கொல்லாம விட்டு வந்துட்டேனேன்னு நானே வெம்பிப் போயிருக்கேன். ஏன் அடிச்சன்னு கேக்குற?, எவ்ளோ தைரியம் இருந்தா ராஸ்கல், உன்னைத் தொட்டு ஆடுவான்?, பொறுக்கி…!, ஆனா அவனைச் சொல்லிப் பிரயோஜனம் இல்லடி. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம அத்தனை பேருக்கு முன்னாடி ஈரத்துணி உடம்புல ஒட்டுற மாதிரி தண்ணீல எவனோ ஒருத்தன் கையைப் பிடிச்சு ஆடிட்டிருக்க?”
“அவன் எவனோ ஒருத்தன் இல்ல அர்ஜூன்”
“பின்ன?”
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன்”
ஆத்திரம் தலைக்கேற உதட்டை நெளித்து நக்கலாகச் சிரித்தவன் தலை முடியை இரு கைகளால் அழுந்தப் பற்றினான். குளிரினாலோ, கோபத்தினாலோ கண்களில் நீர் கோர்த்து விட.. கை முஷ்டியை இறுக்கி அருகிலிருந்தத் தூணில் பலமாகக் குத்தினான்.
“வெறியாக்காதடி என்னை. அவன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன்னா, அப்போ நான் யாரு?” – நெஞ்சில் கையைப் பதித்துக் கொண்டு வெகு அருகே தன்னை நெருங்கிக் கேட்டவனைக் கண்டு உள்ளே சென்று விட்டக் குரலுடன் “அர்ஜூன்……………………….” என்றாள் அவள்.
“எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும். பதில் சொல்லு. இத்தனை வருஷமா உன்னை மட்டுமே மனசுல நினைச்சு, பைத்தியம் மாதிரி உன் பின்னாடியே சுத்துற நான் யாரு உனக்கு?, என்னை நினைச்சிட்டிருக்க என்னைப் பத்தி?, கிரண்குமார்,மகேஷ்,அஜய் லிஸ்ட்ல ஒருத்தனா?, ம்?, ஆமான்னு மட்டும் சொல்லிப் பாரேன்… இப்போவே.. இந்த இடத்துலயே உன்னைக் கொன்னுப் போட்டுட்றேன்”
உதட்டைக் கடித்துக் கொண்டு மூக்கு விடைக்கக் கண்களில் கோர்த்திருந்த நீருடன் அவனை ஏறெடுத்துப் பார்த்து விட்டு விறுவிறுவென அறைக்குள் நுழைந்தாள். “இங்க ஒருத்தன் உயிரைக் குடுத்து பேசிட்டிருக்கேன்ல?, எங்க போற” என்று கத்தியவனும் அவள் பின்னால் தொடர்ந்தான்.
“எனக்குப் பதில் சொல்லுடி” – அர்ஜூன்
“வெளியே போ அர்ஜூன்” – அமைதியாகவே வெளி வந்தது அவள் குரல்.
“போக முடியாது. நான் போக மாட்டேன் டி”
“ஒழுங்கா அஜய் கிட்ட போய் சாரி கேளு”
“நீ அவன் பேரைச் சொல்லாத. எனக்கு வெறியாகுது”
“வெளியே போ அர்ஜூன், நான் டிரஸ் சேஞ்ச பண்ணனும்”-அவன் தோளைப் பற்றித் தள்ளியவளின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
“அவன் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டதும் நீ உடனே சரின்னு சொல்லிட்டியா?, அப்போ நான் எதுக்குடி இருக்கேன்?, என்னைப் பத்தி ஒருமுறை கூட நீ யோசிச்சதில்லையா?, இத்தனை வருஷத்துல என் மேலக் கொஞ்சம் கூட உனக்கு ஃபீலிங்க்ஸே வரலையா?”
“என்னை அழ வைக்காம வெளியே போ அர்ஜூன்”
“என்னை ரத்தக் கண்ணீர் வடிக்க வைச்சிட்டு நீ ஏன் டி அழனும்?, அவன் எந்தவிதத்துல என்னை விடப் பெருசா தெரியுறான்?, எப்பவும் போல என்னை வெறுப்பேத்த விளையாடுறன்னு பார்த்தா.. கல்யாணம்,அது,இதுன்னு என்னென்னவோ சொல்ற?
“…………………………………”
“நீ அவன் கையைப் பிடிக்கிறதையே என்னால பொறுத்துக்க முடியல. இதுல நீ அவனைக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்துறதை வேற வேடிக்கை பார்ப்பேனா?, என்னால உன்னை விட முடியாதுடி. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா,பிடிக்கலையான்னு யோசிச்சு,யோசிச்சு இனி நாளைக் கடத்த நான் ரெடியா இல்ல”
“வெறி பிடிச்ச மாதிரி நடந்துக்கிற அர்ஜூன்”
“வெறி பிடிச்சு தான் டி போயிருக்கு எனக்கு. நீ என்னைப் பிடிக்கலன்னு சொன்ன நாள்ல இருந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணிருக்கேனாடி?, ஐ லவ் யூன்னு ஆயிரம் தடவை உன் கிட்ட சொல்லியிருக்கேனே தவிர, நீ என்னை லவ் பண்ணுறியான்னு திருப்பிக் கேட்டிருப்பேனா?, நான் விலகி நின்னதால, அப்படியே மொத்தமா உன்னை விட்டுத் தள்ளிப் போயிருவேன்னு நினைச்சுட்டியா?,”
“எத்தனை நாள் ராத்திரி ஒரே படுக்கைல ஒன்னா படுத்திருக்கோம்?, என்னிக்காவது உன்னைத் தப்பா அப்ரோச் பண்ணியிருக்கேனா?, ஒரு தடவை முத்தம் கொடுத்ததுக்கே, பைத்தியம் பிடிச்ச மாதிரி 24 மணி நேரமும் கனவுல இருக்கேன் நான். உனக்கு எப்படிடி எந்த ஃபீலிங்க்ஸூம் இல்லாம போகும்?”
“……………………………………………..”
“பதில் பேசு அனு. பேசத் தெரியாத மாதிரி நடிக்காத. பல்லைத் தட்டிடுவேன்”
கோபத்துடன், கண்களில் நீர் கோர்க்க அவனை நிமிர்ந்து நோக்கியவள் பல்லைக் கடித்தபடி வெடுக்கென மறுபுறம் முகத்தைத் திருப்ப… அருகே நின்றிருந்தவளின் கைகளைப் பற்றி மேலும் அருகிலிழுத்து சற்றும் யோசிக்காமல் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.
கோபமாக ஆரம்பித்தது தான் என்றாலும், கண்களை இறுக மூடியபடி அவன் தோளைப் பற்றியிருந்தவளைக் கண்டு சொக்கிப் போனவனுக்கு மேலும் முன்னேறத் தோன்ற... அவள் கூந்தலில் கை நுழைத்து முகம் முழுதும் முத்தமிட்டவன், மறுபடி அவள் இதழ்களில் தொலைந்து போனான்.
கனவு போல் கடந்த பத்து நிமிடத்தில், முதலில் விழித்தெழுந்தது அனுப்ரியா தான். சட்டென அவனை விலக்கித் தள்ளி விட்டு விலகி நின்றவளைக் கண்டு திடுக்கிட்டவன் “அனு……………..” என்றபடிக் கையைப் பற்ற முயற்சிக்க, ஓடிச் சென்று பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள் அவள்.
தலை முடியைக் கோதி தன்னைச் சமாளித்துக் கொள்ள முயன்றவனுக்கு முடியாமல் போக.. அறைக் கதவைக் கோபத்துடன் சாத்தி விட்டு வெளியேறினான். எதிரே வந்த ரிஷியின் கையைப் பற்றிக் கொண்டு “டேய், தண்ணியடிக்கலாம் வாடா” எனக் கூறி அவனை இழுத்துச் சென்று விட்டான்.
பாட்டில்,பாட்டிலாக மூச்சு விடாமல் குடித்துத் தீர்த்தவனைக் கன்னத்தில் கை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி.
“டேய்…. டேய்.. போதும் டா.. என்னாச்சுன்னு இவ்ளோ குடிக்கிற?” –ரிஷி
“என்னால முடியல டா ரிஷி, சீக்கிரமே நான் காதல் தோல்வில தற்கொலை பண்ணிக்கப் போறேன்” – அர்ஜூன்
“உன்னோட எந்தக் காதல் டா தோல்வில போயிட்டிருக்கு?”
“நக்கலா?, நாயே…….”
“லூசு மாதிரி குடிக்கிறதை நிறுத்திட்டு அனு கிட்ட மனசு விட்டுப் பேசுடா”
“பேசிட்டேன். எதுவுமே சொல்லல அவ. மறுபடி ரிஜெக்ட் பண்ணத் தான் ப்ளான் பண்ணுறா.” – என்றவன் பாதி நேரம் அவளைக் கேவல,கேவலமாகத் திட்டியும் மீதி நேரம் “ஐ லவ் யூ அனு…” என்று அழுதும் கடத்த, மொத்தமாக மட்டையாகிப் போனவனைத் தரதரவென இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்றான் ரிஷி.
அறையை நெருங்குகையில் எதிரே வந்த ஹரிணி இருவரையும் நோக்கி விட்டு அவசரமாக அருகே வந்து ரிஷியின் தோளில் தொங்கிக் கொண்டிருந்த அர்ஜூனின் கையைப் பற்றி நிமிர்த்தினாள்.
“எ..என்னாச்சு?, குடிச்சிருக்கானா?”-ஹரிணி
“யார் இ…து?, ஓ!, ஹரிணியாஆஆஆ?, மாப்ள, உன் லவர் டா.” என்ற அர்ஜூன் இரண்டு கையையும் கூப்பிக் கொண்டு “வணக்கம் ஹரிணி” என்றான்.
“நடு ராத்திரில ஏன் வெளியே சுத்திட்டிருக்க?”-ரிஷி
“இ….இல்ல தூக்கம் வரலைன்னு வெளியே வந்தேன்”-ஹரிணி
“ஹரிணி!!!!!, நீயும் அந்த அனு மாதிரி, என் நண்பனை அழ வைக்காத. உன்னை நினைச்சு,நினைச்சுப் பத்து வருஷமா இவன் ஏங்கிட்டிருக்கான் “ – என இரு கை விரல்களையும் விரித்தவன் “ஹய்யோ ரிஷி, திடீர்னு என் கைல இருபது விரல் வந்துடுச்சுடா” என்று குதிக்க “ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்”என்ற ரிஷி “ஆமாடா, எட்டாவது அதிசயம் இது. நாளைக்கு ஃபோட்டோ பிடிச்சு பேப்பர்ல போடலாம்” என்றவன் இவனை விட்டுட்டு வரேன் என ஹரிணியிடம் கூறி விட்டு அவனைத் தள்ளிக் கொண்டு முன்னே நடந்தான்.
அர்ஜூனை அறைக்குள் தள்ளி படுக்கையில் கிடத்துகையில் விழித்துக் கொண்ட சுதன் “என்னாச்சு சார்?,” என்று வினவ “ஒன்னுமில்ல. இவன் மட்டையாய்ட்டான். நீ தூங்கு” எனக் கூறி அவனைப் படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்தி விட்டு வெளியேறினான்.
“ஆஆஆஆ நெஞ்சு எரியுது…. அனு.. சண்டாளி” என்று விடாது புலம்பிக் கொண்டிருந்தவனைக் கண்டு எரிச்சலுற்று நான்கு தலையணைகளை ஒரேடியாக அவன் முகத்தில் வைத்து அழுத்தி விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டான் சுதன்.
குளிரில் இருகைகளையும் பரபரவெனத் தேய்த்து ஊதியபடி வாசலருகே நடந்து கொண்டிருந்தாள் ஹரிணி. “நீ இன்னும் உள்ளே போகலயா?”-என்று கேட்டுக் கொண்டே அருகே வந்தான் ரிஷி.
“என்னாச்சு அர்ஜூனுக்கு?”-ஹரிணி
“தெரியல. அனு கூட ஏதாவது சண்டை போட்டிருப்பான். காலையில சரியாய்டுவான்”
“ஹ்ம்ம், நானும் அப்டி தான் நினைச்சேன்” என்றவள் நிறுத்தி “உனக்கும் இந்தப் பழக்கம் இருக்கா?”-எனக் கேட்டுக் குடிப்பது போல் சைகை செய்தாள்.
“ம்ஹூம். கான்ஷியஸ்நெஸ்ஸை இழக்குற எந்தப் பழக்கத்தையும் வளர்த்துக்கிறதில்லன்னு முடிவு பண்ணியிருக்கேன்”
“ஓஓஓஓ…..” என்றவளின் குரல் மந்தமாவதை உணர்ந்து “ஆனா, சிகரெட் பழக்கம் இருக்கு” என்று அவசரமாகக் கூறினான்.
“ஹ்ம்ம்ம்ம்ம்”-என்றபடி மீண்டும் கைகளைத் தேய்த்துக் கொண்டவளை மஞ்சள் நிற விளக்கு வெளிச்சத்தில் தலை சாய்த்து நோக்கினான் அவன். கருப்பு நிற ட்ராக் ஷூட்டும்,சந்தன நிற ஸ்வெட்டரும் அணிந்திருந்தவள், தலை முடியைத் தூக்கிக் கொண்டையிட்டிருந்தாள். நெற்றியில் கொத்தாகப் புரண்டிருந்த கற்றை முடிகளைத் தொடர்ந்திருந்த விழிகளில் முன்னிருந்த சோகம் முற்றிலும் மாறி புது வெளிச்சம் பரவியிருந்தது.
சிரிப்புடன் அவளை நோக்கியவன் “ரொம்ம்ம்ம்ம்ம்பக் குளிரா இருந்தா… இங்க கூட சாய்ஞ்சுக்கலாம்” எனக் கூறித் தோளைக்காட்டினான்.
உதட்டை மடக்கிச் சிரித்தபடி மறுபுறம் திரும்பியவளிடம் குனிந்து “இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?” என்று வினவினான்.
பதில் பேசாமல் “ஒன்றுமில்லை” எனத் தலையசைத்தவளிடம் “ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” எனக் கூறி அவன் மீண்டும் தன் தோளைக் காட்ட… முத்துப் பற்கள் மின்ன அழகாய்ச் சிரித்தபடி அவனருகே சென்றவள், அவன் மார்பில் வலது கன்னத்தைப் பதித்து மெல்லக் கண் மூடினாள்.
பலமாக அடித்துக் கொண்ட இதயத்தை அடக்க முயன்ற ரிஷி “இதுக்காவது என்ன அர்த்தம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?” எனக் கேட்டான்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “என் ஃபீலிங்க்ஸ்க்கு இன்னும் பேர் வைக்கல” – என்று கூறியதும் புருவத்தைத் தூக்கிக் கண்களை விரித்துச் சிரித்தான்.
தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் தலையில் கன்னத்தைச் சாய்த்தவன் “ஐ லவ் யூ ஹரிணி” என்றான். கண்கள் மூடிய நிலையிலேயே லேசாகச் சிரித்தவள் “இப்போல்லாம் அடிக்கடி நீ இதை சொல்ற. நீ ஏன் இதைச் சொல்லலன்னு குழம்பி, எப்போ சொல்லுவன்னு நான் ஏங்குன நாட்கள் தான் நியாபகம் வருது எனக்கு.”என்றாள்.
அவள் இடையைப் பற்றித் தூக்கித் தன்னோடு அவளை இறுக்கிக் கொண்டவன் அவள் தோளில் நெற்றியைப் பதித்தான்.
“சாரி ஹரிணி…….. எல்லாத்துக்கும்!, அன்னிக்கு சூனியமா போயிட்டிருந்த என் வாழ்க்கையில, சந்தோசமான உணர்வுகளைக் கொண்டு வந்து எனக்கு உயிர் கொடுத்ததே நீ தான். உன்னை எந்த விதத்துலயும் காயப்படுத்தக் கூடாதுன்னு தான் நான் விலகிப் போனேனே தவிர…. உன்னை ஏக்கத்துல தள்ளனும்ன்ற நினைப்பில்ல எனக்கு. சொல்லப் போனா…. அப்பவும்,இப்பவும் உன்னை விட அதிகமா…. உனக்காக ஏங்கிட்டிருக்கிறது நான் தான்”-ரிஷி
“வலியைக் கொடுத்தவனே சந்தோசத்தைக் கொடுப்பான்னும், அவன் கொடுக்கிற சந்தோசம் மட்டும் தான் என் கண்ணுல இருக்கிற சோகத்தை மாத்தும்ன்னும் நான் நினைக்கவே இல்ல. உன்னை முதன்முதல்ல செட்ல பார்த்தப்போ எனக்கு பயம் மட்டும் தான் இருந்தது. இன்னொரு முறை ஓடிடலாம்ன்னு கூட முடிவு பண்ணியிருந்தேன்.”-ஹரிணி
“உன்னோட நல்ல குணங்கள் எல்லாத்தையும் மறந்தே போயிருந்த நான், இங்க உன்னைத் தினம் பார்க்க ஆரம்பிச்சப்புறம், கூட சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சப்புறம் கொஞ்சம்,கொஞ்சமா அந்த இரவுக்கு முந்தைய நாட்கள் எல்லாத்தையும் நியாபகப்படுத்துக்கிட்டேன்”
“அர்ஜூன் என் கிட்ட உனக்கு நடந்த எல்லாத்தையும் சொன்னப்போ, எனக்கு என் மேல தான் ரொம்பக் கோபம் வந்தது. உன் வாழ்க்கைல என்ன நடந்திட்டிருக்குன்ன்னு கூடத் தெரியாம, தெரிஞ்சுக்க முயற்சிக்காம.. உன்னைக் காதலிக்கிறேன்னு மட்டும் சிறுபிள்ளைத் தனமா சொல்லிட்டுத் திரிஞ்சதை நினைச்சா ரொம்ப அவமானமா இருந்தது. உன் முகம் மாறுற விதத்தை வைச்சே உனக்கு ஏதோ நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கிற காதலியா இல்லாம.. உன்னை விட்டு விலகியே நின்னது ரொம்பத் தப்புன்னு தோணுச்சு”
“பதினைந்து வயசுல இருந்து அம்மா,அப்பா ரெண்டு பேரும் இல்லாம வயசுக்கு மீறுன ஏகப்பட்ட விசயங்களைத் தனியா சமாளிக்கிறது எவ்ளோ கஷ்டம்?, உன்னோட அத்தனை கவலைகளுக்கு மத்தில நான் வேறத் தேவையில்லாம உள்ள வந்து உன்னை இன்னும் அதிகமா கஷ்டப்படுத்துனதை நினைச்சா எரிச்சலா வருது”
தன் மீது சாய்ந்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன் “என் அம்மா அகால மரணம் அடைஞ்சதால, என் அப்பா ஒரு கேடு கெட்டவனா இருந்ததால நான் எல்லா விசயத்துக்கும் கஷ்டப்பட்டேன். ஆனா நீ ஏன் தேவையில்லாம என்னால பத்து வருஷத்தை வேதனைல கழிக்கனும்?, என்னைப் பார்க்காம இருந்திருந்தா…. உனக்கு இது எதுவும் நடந்திருக்காதுல்ல?” என்றான்.
“என்னை விட அதிகமா என் தாத்தா தான் ரொம்ப வருத்தப்பட்டார். கடைசி வரை என் கண்ணுல சிரிப்பே வராதோன்னு!” - ஹரிணி
“நான் வேணா, நேரா போய் அவர் கால்ல விழுந்துடட்டுமா?”-ரிஷி
களுக்கெனச் சிரித்து விட்டு அவனை விட்டு ஓரடி விலகி நின்றவள் “ஆஷா என் கிட்ட அடிக்கடிக் கேட்பா. இத்தனை வருஷமா எத்தனை பேரை சந்திச்சிருக்க?, அவங்க யார் மேலயும் உனக்கு லவ் வரலையான்னு!, அப்போ எனக்குத் தெரியல. என்னோட காதல் உணர்வுகள் எல்லாம் உன் கிட்ட தான் மாட்டிட்டிருக்குன்னு!,” என்றாள்.
லேசாகத் தேங்கி விட்டிருந்தக் கண்ணீருடன் அவனை அண்ணாந்து பார்த்துக் கூறியவளைக் கண்டு நெகிழ்ந்து…. அவள் கன்னம் வருடிக் குனிந்தவன் மெல்ல அவள் இதழ்களில் முத்தமிட்டு நிமிர்ந்தான்.
“மறுபடி உன்னை சந்திக்கவே கூடாதுன்னு பிடிவாதமா இருந்தேன். ஆனா உன் கூட வேலை பார்க்கத் தொடங்குனப்புறம் உன் சிரிப்பு,கோபம்,கம்பீரம்,அறிவு,அழகுன்னு அத்தனைலயும் திரும்பவும் ஈர்க்கப்பட்டு எனக்கே தெரியாம உன்னை ரசிக்க ஆரம்பிச்சுட்டேன். உன் கடந்தகாலத் துன்பங்கள் எதுவும் தெரியாதப்பவே, உன்னை மறுபடி நெருங்கத் தொடங்கின மனசு, எல்லாத்தையும் கேட்டப்புறம் எப்படி விலகிப் போகும்?,” என்று நிறுத்தியவள் மெல்லத் தலை குனிந்து கைகளைப் பிசைந்தபடி நிமிர்ந்து “யெஸ்! ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ் வித் யூ ஒன்ஸ் அகைன்” என்றாள்.
அவள் கூறிய அனைத்தையும் விரிந்த விழிகளுடன் திகைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கடைசியாகக் கூறிய வார்த்தைகளில் மொத்தமாக வியந்து போனான்.
சிரிக்க முயன்றபடி நெற்றியை அழுத்தியவனுக்கு புன்னகையை மீறிக் கண்களில் நீர் தேங்கியது. நடப்பை நம்ப முடியாமல் கனவென்று கருதிக் கைகளைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
அழுகையையும்,சிரிப்பையும் முகத்தில் தேக்கிக் கொண்டுக் கண் முன்னே நிற்பவளின் உருவம் உண்மை தான்!, மெல்லக் கையை உயர்த்தி அவள் காதோர முடியை ஒதுக்கிக் கழுத்தை வருடினான்.
“கடந்து போன பத்து வருஷத்தை என்னால திரும்பக் கொண்டு வர முடியாது ஹரிணி. ஆனா, இனி வரப் போற ஒவ்வொரு நாளையும் நிச்சயம் சந்தோசமா மாத்திக் காட்டுறேன்” – என்றவனிடம் பொங்கிய கண்ணீரை அடக்கியபடி “ம்ம்ம்ம்”எனத் தலையாட்டினாள் ஹரிணி.
இன்னமும் நம்ப முடியாமல் இருபுறமும் தலையாட்டியபடித் தலை கோதிக் கொண்டிருந்தவனைக் கண்டு சத்தமில்லாமல் மறுபுறம் திரும்பிச் சிரித்தாள் ஹரிணி.
“ஹனி… நான் ஒன்னுக் கேட்கட்டுமா?”
“என்ன?”
“ஐ ஹேவ் ஃபாலன் இன் லவ் வித் யூ ஒன்ஸ் அகைனை விட ஐ லவ் யூ ரொம்ப ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா இருக்கிறதா தோணல உனக்கு?”
“தோணல”
“ஏய்… விளையாடாதடி. ஒழுங்கா ஐ லவ் யூ சொல்லு”
“எனக்கு இப்போதைக்கு அதைச் சொல்ற ஐடியா இல்ல”-எனக் கூறி ஹ்ம்! என நெற்றி முடியை ஒதுக்கிக் கொண்டவளைக் கண்டு “ஏன் ஏன் ஏன்?” என்றபடி அருகே வந்தான் ரிஷி.
வெளிச்சத்தை மறைத்திருந்த தூணில் சாய்ந்து கைக்கட்டிக் கொண்டு நின்றிருந்தவளின் முகத்தை இருளில் நோக்கிய ரிஷிக்கு முகம் மாறிப் போனது.
அவன் கண்களிலிருந்த சிரிப்பு மாறி,மோகம் குடியேறியதும் திகைத்த ஹரிணி முகம் சிவந்து விழிகளைத் தாழ்த்த.. அவள் காதோரத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தான் ரிஷி.
சில்லிட்டக் கன்னங்களுடன் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் திணறியவளின் நெற்றியில் தன் நெற்றியை அழுத்தியவன் அவள் கண்களில் முத்தமிட்டான்.
சொக்கிப் போன விழிகளில் எதிர்பார்ப்புடன் அவனை நோக்கியவளின் இதழ்களை வருடிக் குனிந்தவன்.. என்ன நினைத்தானோ.. சட்டென விலகி மறுபுறம் திரும்பி நின்று “ஊஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்” என்றான்.
தலை முடியைக் கோதியபடி அவள் புறம் மீண்டும் திரும்பியவன் “என்னால… சத்தியமா முடியாது ஹரிணி…” எனக் கூற, என்னவென்று புரியாமல் அவனை நிமிர்ந்து நோக்கினாள்.
“கிஸ் பண்ணிட்டு பாய்,குட்நைட்ன்னு சொல்லிட்டுப் பிரிஞ்சு போக என்னால முடியாது” - கண்கள் முழுதிலும் மையல் ஏற அவனையே நோக்கினாள் அவள்.
“ஐ நீட் யூ ரைட் நௌ.” – அவன் வார்த்தைகளைக் கேட்டுக் கன்னங்கள் உஷ்ணமாகி விட, வெகுவாகத் திணறி மறுபுறம் நோக்கினாள்.
“மறுபடியும் என்னை ஒரு பொறுக்கின்னு தான நினைக்குற?, ஏதாவது சொல்லு ப்ளீஸ்…” –என்றவனிடம் பதிலேதும் கூறாமல் அருகே வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
அவள் முகத்தை நிமிர்த்தி ஆர்வத்துடன் நோக்கியவனின் இதழ்களில் கண்களை மூடியபடி லேசாக முத்தமிட்டாள். அடுத்த நொடி அவனது ஆழ்ந்த முத்தத்தில் திண்டாடி மூச்சடைத்துப் போனாள்.
மறுநாள் காலைக் கண் விழித்த அர்ஜூன் தான் ஒரு இருள் சூழ்ந்த இடத்தில் சிக்கி மூச்சுக்குத் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அடிப்பாவி அனு!, கடைசியில் அவனை தற்கொலை செய்ய வைத்து சொர்க்கத்துக்கே அனுப்பி விட்டாளா?, ஆனால்.. வினோத்,சுதன் போன்றோரின் குரல்கள் ஏன் தெளிவற்றுக் கிணற்றின் ஆழத்திலிருந்துக் கேட்பது போல் இருக்கிறது?, அவர்களும் தன்னைத் தொடர்ந்து சொர்க்கத்திற்கு வந்து விட்டார்களா?, மூச்சு மேலும் திணறுவது போல் தோன்ற.. முழு பலத்துடன் தடாலென்று எழுந்தான்.
அவன் மீதிருந்த நான்கு தலையணைகளும் நாலாபுறத்தில் சிதற.. தெளிவடைந்தவன், “எந்த நாய்டா என்னைத் தலகாணியை வைச்சு அழுத்திக் கொல்லப் பார்த்துச்சு?” என்று புலம்பியபடி எழுந்து சென்றான்.
போதை இன்னும் தெளியல போலயே! என்று ரிஷியின் அறையை நோக்கி வந்தவன், அறைக்குள்ளிருந்து வெளி வந்த ஹரிணியைக் கண்டு விழி விரித்தான். அவனை அங்கு எதிர்பாராததால் திகைத்து அசடு வழிந்தபடி அவள் ஓடி விட… அவளைத் தொடர்ந்து வெளி வந்த ரிஷி அவனைக் கண்டு “நண்பாஆஆஆஆஆ” என்று அவன் கன்னத்தைக் கிள்ளிக் கட்டிக் கொண்டான்.
“டேய்…. நைட் அடிச்ச போதையெல்லாம் எனக்குத் தெளிஞ்சிருச்சுடா. என்னடா நடக்குது?”- என்று பிளந்தவனின் வாயைப் பொத்தி விட்டுச் சிரித்துக் கொண்டே சென்று விட்டான் அவன்.
அன்று முழுதும் ஹரிணி,ரிஷியின் சேட்டைகளை வியப்பு குறையாமல் திறந்து வாயுடன் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் இருவரையும் கண்டு பெருமூச்சு விட்டான். நமக்கு மட்டும் ஒன்னும் செட் ஆக மாட்டேங்குதே!
அன்றிரவு தூக்கம் வராமல் ஹோட்டலைச் சுற்றியிருந்த மலைப் பாதையில் நடந்து கொண்டிருந்தான் அர்ஜூன். அன்று முழுதும் அவன் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த அனு, இருளை வெறித்தபடி தூரத்தில் நின்று கொண்டிருப்பது கண்ணில் பட, கோபத்துடனே அருகே சென்றான்.
காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பிய அனு, அவனைக் கண்டதும் எங்கோ பார்த்துக் கூட நிற்க, தோள் குலுங்க எரிச்சலுடன் மூச்சு விட்டு “இப்போ என் முகத்தைக் கூட பார்க்க மாட்டேங்குறா” என்றான்.
“என்ன மேடம்?, கல்யாணத் தேதியெல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா?”-அர்ஜூன்.
“நீ அஜய் கிட்ட சாரி கேட்டியாடா?”-அனு
“கொஞ்சம் கூட யோசிக்காம, அப்டியே உன்னைக் கீழேத் தள்ளிக் கொன்னுடுவேன்டி”
“ஏன் டா இப்படிப் பேசுற?”
“அப்டித் தான் டி பேசுவேன். நான் நேத்துக் கேட்ட ஒரு கேள்விக்காவது நீ பதில் சொன்னியா?, அதை விட்டுட்டு அஜய்,அஜய்ன்னு அவனைப் பத்தியே பேசுற?”
அமைதியாய் ஒரு நிமிடம் தலை குனிந்தவள் மெல்ல நிமிர்ந்து “நீ ஏன் கேக்கல அர்ஜூன்?” என்றாள். இதோ வந்து விடுவேன் என்று கண்ணீர் அவள் கண்களில் முட்டிக் கொண்டு நின்றது.
“என்னன்னு கேக்கல?”
“அவனுக்கு முன்னாடி, நீ ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்கல?”- அழுகையுடன் ஆத்திரமாய் வெளி வந்தது அவள் குரல்.
அவள் கோபத்தில் வியந்து “நீ தான டி என்னை ரிஜெக்ட் பண்ணின?” – என்றவனின் குரலும் இப்போது கம்மிப் போயிருந்தது.
“எப்பவோ பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தொன்பது வயசுல உன் லவ் ப்ரபோசலை நான் ரிஜெக்ட் பண்ணினதை இன்னும் மனசுல வைச்சுக்கிட்டு, நீ என் கிட்ட நெருங்காமலே இருப்ப. நான்…. நான் என் வெட்கத்தை விட்டு உன் கிட்ட வந்து, உன்னை நான் ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் அர்ஜூன், என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ ப்ளீஸ்ன்னு கேக்கனுமா?” – அழுகையில் வெடித்துச் சிதறிய அவள் வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போனது அவனுக்கு.
தலை தாழ்த்தி ஒரு நிமிடம் அவள் கூறியதை ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டவனின் இதழ்களில் முறுவல் விரிந்தது.
“சி…சிரிக்காதடா.. நான்.. நான் உன்னைப் பத்தோட பதினொன்னா நினைச்சேனா?, ஏன் டா நீ ரொம்ப ஒழுங்கா?, ரேகா,சங்கீதா,ஆர்த்தியெல்லாம் யாருடா?, பெரிய உத்தமன் மாதிரி என்னைத் திட்டி ஹர்ட் பண்ண உனக்கு என்னடா ரைட்ஸ் இருக்கு?” – இடை,இடையேக் கண்ணீரைத் துடைத்தபடி அழுகையுடன் கத்தியவளைக் கண்டு சிரிப்பு பொங்கியது அவனுக்கு.
“நீ தொட்டுப் பேசுறதையும்,ஹக் பண்றதையும் என்னிக்காவது வெறுப்பா பார்த்திருக்கேனாடா?, என் கண்ணுல என்ன ஃபீலிங்க்ஸ் இருக்குன்னு கூடவா உன்னால புரிஞ்சுக்க முடியல?, தப்பெல்லாம் உன் மேல வைச்சிக்கிட்டு என்னை ஏன் டா திட்டுன?, என் அம்மா கூட என்னை இப்படியெல்லாம் பேசுனதே இல்ல..” என்று மூக்கை சீந்திக் கொண்டவளைக் கண்டு அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் “சாரிடா, சாரிடா, சாரிடா செல்லக் குட்டி” எனக் கூறியபடியே இறுக அணைத்துக் கொண்டான்.
விடாமல் விம்மிக் கொண்டிருந்தவளை “சரிடி,சரிடி விடு,விடு” என்றுத் தோளைத் தட்டிச் சமாதானம் செய்தான். “காலையிலிருந்து அழுது த்ரீ பாக்ஸஸ் டிஷ்யூ பேப்பர்ஸைக் காலி பண்ணிட்டேன். தெரியுமா?” என்றவளிடம் சிரித்துக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “சாரிடி” என்றான்.
கண்களையும்,நாசியையும் துடைத்துக் கொண்டிருந்தவளை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தோளில் இடித்து “மாமா மேல இம்புட்டு ஆசை வைச்சிருந்திருக்க. என்னடி?” என்றான்.
மெல்லத் தலையசைத்து “ம்ம்ம்” என்றவளிடம் “இந்த அஜய்ப்பய என்னடி ஆனான்?,” என்று விசாரித்தான். “நீ அடிச்ச கோபத்துல அவன் நேத்தே போயிட்டான். நாளைக்குத் தான் அவன் கிட்டப் பேசி அவன் ப்ரபோசலை ரிஜெக்ட் பண்ணனும்” என்றாள்.
“ஆமாமாம், ரிஜெக்ட் பண்ணி விட்ரு. இல்லாட்டி மாமாவோட கடுங்கோபத்துக்கு நீ ஆளாக நேரிடும்”
“இங்க பார்ரா, நேத்தோட சரி, இன்னொரு தடவை என்னை அதட்டி உருட்டுன, யோசிக்காம விட்டுட்டுப் போயிடுவேன்”
“அய்யோ, வேணாம்டி. இனிமே அப்படிப் பண்ண மாட்டேன்” – என்றவன் நின்று அவள் புறம் திரும்பி “அனு………….” என்றான்.
“என்ன?”-அனு
“இல்ல, படத்துலலாம் ஹீரோ,ஹீரோயின் ஒன்னு சேர்ந்ததும் லிப் டூ லிப் டீப்பா கிஸ் பண்ணிப்பாங்கள்ல?, நாம அப்டி எதுவும் பண்ணவேயில்ல?”
“ஏன்?, நேத்து பண்ணதெல்லாம் கிஸ்ஸா தெரியலயா உனக்கு?”
“என்னது?, நேத்து நான் உன்னைக் கிஸ் பண்ணேனா?”
“ஆமா ஏன் உனக்கு எதுவும் நியாபகம் இல்லையா?”
“அய்யய்யோ, நேத்துத் தண்ணியடிச்சு மட்டையானது மட்டும் தான் டி நியாபகம் இருக்கு. அனு,அனு ஒன்ஸ்மோர் போலாம் ப்ளீஸ்,ப்ளீஸ்” என்றவனிடம் “நோ வே!” என்றுத் தலையாட்டியபடி முன்னே ஓடினாள் அனு.
மூன்று மாதங்களுக்குப் பிறகு………………………………..
“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” – அப்பார்ட்மெண்ட்டே அதிரும்படியாக பாத்ரூமுக்குள்ளிருந்து கத்தியபடி வெளியே வந்தாள் அனு. அவள் கத்தியதைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அங்கிருந்த படுக்கையில் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான் அர்ஜூன்.
“எழுந்திரு,எழுந்திருடா”-என மிதித்து எழுப்பியவளைக் கண்டு கொட்டாவி விட்ட படி எழுந்தமர்ந்து “ஏன்டி எழுப்புற?” எனச் சிணுங்கிக்கொண்டான் அர்ஜூன்.
“இங்க பாரு, இதைப் பாருடா, நான் என்னடா செய்வேன்?”-எனக்கூறிக் காலை உதைத்துக் கொண்டு அழுதாள்.
அவள் நீட்டியிருந்தது ஒரு ப்ரெக்-கார்ட். கர்ப்பமாயிருப்பதை வீட்டிலிருந்தே சோதித்துக் கொள்ள உதவும் ஒரு சாதனம். அதில் இரண்டு சிகப்புக் கோடுகள் தோன்றி அவள் கர்ப்பமாயிருப்பதை உறுதி செய்திருப்பதைக் கண்களைக் கசக்கிப் பார்த்து “வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்” என்று கத்தினான் அர்ஜூன்.
“வாவ்ன்னா சொல்ற?”எனக் குட்டி வைத்தவள் “டேய், இனி நான் எப்படிடா வேலையைக் கண்டினியூ பண்றது?, என் ப்ரஃபஷனுக்கு இதெல்லாம் எப்படிடா ஒத்து வரும்?”
“ஏய்.. அதுக்காக ஆங்கர்ஸ் எல்லாரும் குழந்தை பெத்துக்காமலா இருக்காங்க?, பெப்சி உமாவைப் பார்த்ததில்ல நீ?”
“அப்போ நானும் அந்த மாதிரி குண்டு,குண்டுன்னு ஆயிடுவேனா?”
“அந்த மாதிரி ஆக மாட்ட. ஏன்னா, பெப்சி உமா குண்டாயிருந்தாலும் அழகு தான்”
“ரொம்ப முக்கியம். நாயே, கல்யாணமே பண்ணாம கர்ப்பமாயிருந்தா ஊரேக் காறித் துப்பும் டா”-என்று குதிக்க “ஏய்,ஏய் குதிக்காதடி, என் பாப்பாவுக்கு ஏதாவது ஆகிடப் போகுது”-எனக் கூறி அவள் வயிற்றைக் கட்டிக் கொண்டவன் பின் நிமிர்ந்து “அப்டின்னா, கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று வழிந்தபடி வினவினான்.
“கல்யாணத்துக்கு ப்ளான் பண்ணித் தான் என்னை இப்படியொரு நிலைமைக்கு கொண்டு வந்துட்டியாடா?”
“கண்டுப்பிடிச்சிட்டியாடி?”-என்று நகைத்தவனைக் குட்டிக்,கிள்ளி வைத்து அவள் சண்டையிட, சத்தமாய்ச் சிரித்த அர்ஜூன் குரலில் மகிழ்ச்சி பீறிட்டது.
அன்று அலுவலகத்திலிருந்து வெளி வந்த ரிஷியின் முகத்தில் அப்படியொரு சிரிப்பு. முகம் முழுக்க சந்தோசத்தில் ஜொலிக்க… லேசாக சதைப்பிடித்திருந்தக் கன்னங்களுடன் ஆளே மாறிப் போயிருந்தான். எதிர்ப்பட்ட நண்பன் சுந்தர் “டேய் ரிஷி, என்னடா முகத்துல டாலடிக்குது. அது என்னடா வாட்ஸ்-ஆப்ல ஒரே லவ் ஸ்டேட்டஸா வைக்குற?, யாருடா அந்தப் பொண்ணு” என்று கேலி செய்து விட்டுச் செல்ல வரிசைப் பற்கள் மின்ன அழகாய்ப் புன்னகைத்தான்.
அவனது இந்த அளவில்லா சந்தோசத்திற்கு மூன்று விசயங்கள் காரணமாயிருந்தது. ஒன்று, அர்ஜூன்-அனுவின் கல்யாணம். திடீரென இருவரும் ஒரு சேர நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ப்ளான் பண்ணிருக்கோம் என்று கூறுகையில் முதலில் திகைத்தான். ஆனால் அவர்கள் சொன்னக் காரணத்தைக் கேட்ட பின்பு காறித் துப்பி வேறு வழியின்றி “நல்லாயிருங்க” என வாழ்த்தி வைத்தான்.
இரண்டாவது, கபிள் ஃபேண்டஸி ப்ரோக்ராமின் வெற்றி. வரிசையாக ஐந்து எபிசோட்கள் வெளியாகிவிட்டன. மக்கள் மத்தியில் இந்தப் புதுமையான ப்ரோக்ராமிற்கு நல்ல வரவேற்பு. அதிலும் இளசுகள் மனதில் சித்தார்த்,மீரா ட்ரீம் ஸ்டார்ஸ்-ஆகப் பதிந்து விட்டார்கள். இந்த வெற்றியை அவனது டீமை விட அதிகம் கொண்டாடிக் கொண்டிருப்பது சம்பத் சார் தான். ஜேசனிடம் அவர் சம்பள உயர்வு கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூட மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
மூன்றாவது, அவன் இன்று ஹரிணியுடன் ஊட்டிக்குச் செல்கிறான். வெகு நாளைக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் குதூகலத்தில், இரண்டு நாட்களாக ஹரிணியைப் படுத்தியெடுத்திக் கொண்டிருக்கிறான். அவன் வகுப்பில் படித்த மாணவர்கள் அனைவரும் நாளை ஊட்டியில் ஒன்று கூடுகிறார்கள்! அந்த சந்தோசம் வேறு!
அனைத்தையும் தாண்டி அவனது மகிழ்ச்சிக்கான ஒட்டு மொத்தக் காரணம் அவனது காதலி திவ்யஹரிணி! இனி விடியவே போவதில்லையென இருளடைந்த வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் வாழ்வில் மீண்டும் வெளிச்சத்தைக் கொண்டு வந்தவள்! அவள் நினைவில் புன்னகை கொண்டவன் ஃபோனில் அவளை அழைத்தான்.
“ஹனி….., கிளம்பிட்டியா?”
“நான் ரெடியாகி ரொம்ப நேரமாச்சுடா. நீ சீக்கிரம் வராட்டி, நம்மை விட்டுட்டுப் பஸ் போயிடும்”-என்று எதிர்ப்புறத்தில் அவள் குரல் காரமாக ஒலிக்க “இதோ வந்துட்டேன்…”என்று கத்திக் கொண்டே ஓடினான்.
மறுநாள் ஊட்டியில் நண்பர்கள் அனைவரும் ரிஷி-ஹரிணியை ஜோடியாகக் கண்டு மகிழ்ச்சியில் திகைத்துப் பின் இருவரையும் கேலி செய்துக் கொண்டாடினர். ஆஷா, ஆனந்தி,சார்லஸ்,வைலட் என அனைவரையும் மறுபடி சந்தித்த சந்தோசத்தில் அர்ஜூன்,ரிஷி,ஹரிணியின் முகங்கள் புன்னகையுடனே இருந்தது.
அப்போது திடீரென வருகை தந்து அனைவரையும் அதிர்ச்சியாக்கினான் ஜெர்ரி. அவனைக் கண்டதும் திகைத்து எழுந்து நின்ற ரிஷி ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டுத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
கோமா நிலையில் தாய்நாடு திரும்பியவன் அடுத்த ஒரே மாதத்தில் குணமாகி விட்டதாகவும், பின் அங்கேயே படிப்பைத் தொடர்ந்ததாகவும் கூறினான். அனைவரின் முன்பும் சிரித்தாலும் ரிஷியிடம் மட்டும் “சாரி மேன்” என்றவனை “நான் தான் டா சாரி சொல்லனும். உன்னை நல்ல படியா பார்க்குறதே எனக்கு சந்தோசமாயிருக்கு” எனக்கூறி கட்டிக் கொண்டான் ரிஷி
நாள் முழுதும் போதும்,போதுமென ஊட்டியைச் சுற்றிய இருவரும் கடைசியாகத் தங்களது பள்ளிக்கு வருகை தந்தனர். நேராக இருவரது கால்களும் சயின்ஸ் லேப்பை நோக்கிச் செல்ல.. திகிலடைந்து விட்ட முகங்களுடன் முன்னே சென்றனர்.
அங்கு ஒரு சயின்ஸ் லேப் இருந்ததற்கான தடயம் ஏதுமின்றி அந்த இடம் இடித்துக் கட்டப்பட்டு இன்று மியூசிக் ரூமாக மாற்றி வடிவமைக்கப்பட்டிருந்தது. திறந்திருந்த அறையை வியப்புடன் கண்டபடியே இருவரும் உள்ளே நுழைந்தனர்.
டிரம்ஸ்,பியானோ,கிடார்,வீணை,மியூசிக் சிஸ்டம் என அனைத்து வகையான இசைக்கருவிகளுடன் அந்த அறையே திவ்யமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒருவரையொருவர் நோக்கிய இருவரும் புன்னகைத்து அந்த அறை முழுதையும் வலம் வந்தனர்.
அங்கிருந்த மியூசிக் சிஸ்டத்தின் அருகேயிருந்த சிடிக்களில் ஒன்றை ஓட விட்டு, அது ஒலிக்கத் தொடங்கியதும் “ஹனி………….” என்றழைத்த ரிஷி, தன் கையை அவளிடம் நீட்டி “டான்ஸ் வித் மீ” என்று கூற சிரித்துக் கொண்டே அவன் தோளில் கை வைத்து அவனுடன் அசைந்தாடத் தொடங்கினாள் ஹரிணி.
“இந்த இடமும்,அது கொடுத்த வலியையும் உன் மனசுல இருந்து என்னால அழிக்கவே முடியாதா?” – ரிஷி
“ஏன் முடியாது?, இந்தக் கட்டிடம் எப்படித் தன்னோடு பழைய தோற்றம் மாறி புதுசா,புது விசயங்களோட, அழகு குறையாம நிற்குதோ, அதே மாதிரி என் மனசும் இந்த இடத்தில் நடந்தப் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து இப்போ… இங்கே.. ரிஷியோட தோள்ல சாய்ஞ்சு சந்தோசமா நிற்கிறதை மட்டுமே நினைவு வைச்சுக்கும்” – என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவன் “அப்டின்னா இன்னும்,இன்னும் அழகான நினைவுகளை இந்த இடத்திலிருந்துக் கை நிறைய சேகரிச்சிட்டுப் போகலாம்” என்றபடியே அவளை இடையோடுத் தூக்கிச் சுற்றினான்.
“ஆஆஆஆஆஆ”-வென கலகலத்துச் சிரித்தவளை நிறுத்தி மீண்டும் முறுவலித்தவன் “ஹனி…..” என்றான்.
“இனி….. அடுத்து என்ன இனி?”-தயங்கி வெளி வந்தது அவன் வார்த்தைகள்.
“ஹ்ம்,அடுத்து உன் மாமாவைப் பார்க்கப் போகலாம்ன்னு சொன்னியே!”
“ப்ச், அது இல்லடி. இனி லைஃப்ல அடுத்து என்னன்னு கேட்குறேன்”
“என்ன?”
“இல்ல, அர்ஜூன்-அனுவெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறாங்கள்ல?, அதான் நாம எப்போ பண்ணிக்கலாம்ன்ன்னு……”
“ஹாஹாஹா, அதுக்குள்ளயுமா?”
“ஏய்ய், நீயும்,நானும் முப்பது வயசை நோக்கிப் போயிட்டிருக்கோம்”
“ஹ்ம்ம், ஊருக்குப் போனதும் தாத்தாகிட்டப் பேசிட்டுப் பண்ணிக்கலாம்”
“நான் ஏற்கனவே உன் தாத்தா கிட்டப் பேசிட்டேன்” – பட்டெனப் பதிலளித்தவனிடம் “எ…..என்ன?,எப்போ?, என் கிட்ட எதுவுமே சொல்லவேயில்லை?”-என்று படபடத்தவளின் இதழ்களை மூடி “நாம கொடைக்கானல்ல இருந்து வந்தப்பவே நான் அவரை நேர்ல பார்த்து எல்லாம் பேசிட்டேன்” என்றான்.
“ஓஓ!, அதான் தினம் என்னைப் பார்த்து மர்மமா சிரிச்சிட்டிருந்தாரா?, ஓல்ட் மேன் இப்படிப் பண்ணுவார்ன்னு நான் நினைக்கவேயில்ல. ஏய், நீ ஏன் டா என் கிட்ட சொல்லல?”
“சொல்லியிருந்தா மட்டும், அப்பவே கல்யாணம் பண்ணியிருப்பியா என்ன?”
“உனக்கு ஏன் திடீர்ன்னு கல்யாணத்துல அவ்ளோ ஆர்வம்?”
“எனக்கு எப்போவும் உன் கூடவே இருக்கனும்னு தோணுது ஹரிணி. ஒரே இடத்துல தூங்கி, ஒரே தட்டுல சாப்பிட்டு, ஒன்னா உட்கார்ந்து டிவி பார்த்து, ஒன்னா ஷாப்பிங் போய், இதுவரைக்கும் வாழ்க்கைல தனியாவே பண்ணிட்டிருந்த சின்ன சின்ன விசயங்கள் எல்லாத்தையும் உன்னோடு சேர்ந்து ஒன்னா பண்ணனும். பத்து வருஷமா உனக்காக ஏங்கித் தவிச்சதுக்கு ஈடுகட்டுற மாதிரி உன்னோடயே மீதி வாழ்நாள் முழுசையும் கழிக்கனும்”- என்றவன் விழி விரித்துத் தன்னையே நோக்கிக் கொண்டிருந்தவளை மேலும் வியக்க வைக்கத் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்து அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.
இரு கைகளாலும் வாயை மூடிக் கொண்டு விழிகளைப் பெரிதாக விரித்தவளிடம் “வில் யூ மேர்ரி மீ மை ப்ரின்சஸ்?” என்று சிரித்தபடி வினவினான்.
ஒரு நிமிடம் நின்று அவன் கூறிய வார்த்தைகளை கிரகித்துக் கொண்டுப் பின் கண்களில் காதல் வழிய குனிந்து அவன் முகம் பற்றி நெற்றியில் இதழ் பதித்தவள் “ம்ம்ம்ம்” எனத் தலையாட்டினாள்.
கையிலிருந்த மோதிரத்தை அவள் விரலில் அணிவித்து விட்டு அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டவன் “தேங்க் யூ ஹனி….”எனக் கூறி அவளைத் தூக்கிச் சுற்றி இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.
அந்தி மாலை நேரமும், சுற்றுப்புற அமைதியும்,குளிர்க்காற்றும்,அறையில் ஒலித்த பாடலும் சூழ்நிலையை ஏகாந்தமாக்க… என்றும் போல் அன்றும் அவள் இதழ்களில் தன்னைத் தொலைத்து அவளுள் தன் தேடலைத் தொடங்கினான் ரிஷி.
சிறிது நேரத்தில் விசில் ஒலியும் “யார் அங்க?” என்ற செக்யூரிட்டியின் வெண்கலக் குரலும் கேட்க… திடுக்கிட்டு விலகிய ரிஷி அடுத்த நொடி அவள் கையைப் பற்றிக் கொண்டு விறுவிறுவென வெளியே ஓடினான்.
தங்களின் பின்னே ஓடி வந்து கொண்டிருந்த செக்யூரிட்டியிடமிருந்துத் தப்பிக்கும் முயற்சியாகத் தடதடவென ஓடிய இருவரின் முகங்களிலும் சிரிப்பு அநியாயத்திற்குப் பொங்கி வழிந்து இருவரது மனநிலையையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.
மறந்து விட்டதாய் ஹரிணி நினைத்திருந்த பள்ளிப் பருவமும், அந்தப் பதின்வயதில் தோன்றிய அவளுடைய அழகான காதலும் நினைவில் தோன்றி அவளைப் பதினெட்டு வயதிற்கு இழுத்துச் செல்ல.. அருகே ஓடிக் கொண்டிருந்த ரிஷியைப் பள்ளிச் சீருடையில் கற்பனை செய்து பார்த்தவள் மூச்சிரைக்க நின்றாள்.
வேகமாக ஓடிக் கொண்டிருந்த ரிஷியும் நான்கடித் தள்ளி நின்று “எ….என்னாச்சு?” என்று மூச்சு வாங்கக் கேட்டபடி களைந்திருந்தத் தலையைக் கோதினான்.
பதினெட்டு வயதிலிருந்தக் கம்பீரமும்,ஆண்மையும் சற்றும் குறையாமல் இன்னும் அவள் கண்களுக்குப் பேரழகனாய்த் தெரிகிறான்! அவ்வப்போது பழைய சம்பவங்கள் நினைவிற்கு வரும் போது, ஒரு வேளை அவன் மீது தனக்கிருக்கும் காதல் அன்றை விடக் குறைந்து விட்டதோ என்றெண்ணி அவள் குழம்பியிருக்கிறாள். ஆனால்.. அந்தக் குழப்பம் இன்று தீர்ந்து விட்டது. அவனுக்கும்,அவளுக்குமான அழகான நினைவுகளைச் சுமந்து கொண்டு அந்தப் பள்ளி இன்று வரை மாறாதிருக்கும் போது… அவள் காதல் மட்டும் எப்படி மாறிப் போய் விடும்! அனைத்தையும் தாண்டி இதோக் கண் முன்னே தெரிகிறானே! அவளுடைய காதலன்! அளவில்லாக் காதலை அள்ளி,அள்ளிக் கொடுத்தபடி!
சிரிப்பும்,அழுகையும் ஒன்று சேர… “ரிஷி……. ஐ லவ் யூயூயூயூயூயூ” என்று நின்றூ கொண்டிருந்த இடத்திலிருந்துக் கத்தினாள்.
அதை.. அப்போது சற்றும் எதிர்பாராததால் திகைத்த ரிஷி பின் சிரிப்புடன் “எ..என்ன சொன்ன?, கேட்கல” என்று மறுபடிக் கத்தினான்.
“ஐ லவ் யூயூயூயூயூ……”
“ம்ஹூம் இப்பவும் கேக்கல”
“நான் உன்னைக் காதலிக்கிறேன் டா மடையா” – அவள் குரல் கோபமாய் ஒலித்ததும் சத்தமாய்ச் சிரித்த ரிஷியின் குரல் அந்த ஊட்டி மலைத் தொடர் முழுதிலும் மகிழ்ச்சியாய் எதிரொலித்தது.
****************************முற்றும்*****************************
