அத்தியாயம் - 15
Help Me! I’m in Love!
“இதோ வர்றேன்…….” – வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு ஓடிச் சென்றுக் கதவைத் திறந்தாள் அனு. நிலப்படியில் சாய்ந்து கொண்டு கையைக் கட்டியபடி நின்றிருந்த அர்ஜூன் அவளைக் கண்டதும் மென்று கொண்டிருந்த சூயிங்கம்மினால் முட்டை விட்டு “ஹாய்…” எனக் கைக்காட்டினான்.
“அர்ஜூன் செல்லக் குட்டி, வாடா, வாடா. உள்ள வா”-ஹரிணி
“என்ன ரொம்பப் பாசமா கூப்பிட்ற?, சரியில்லையே!”-என்றபடி உள்ளே நுழைந்தவன் படுக்கையறையில் சிதறிக் கிடந்த உடைகளையும்,அருகேயிருந்த பெரிய சூட்கேஸையும் கண்டான்.
“நம்ம கொடைக்கானல் ட்ரிப்புக்காக டிரஸ் எடுத்து வைச்சிட்டிருக்கேன். எனக்கு ஹெல்ப் பண்ணுடா செல்லக்குட்டி. ப்ளீஸ்”-அனு
“இதுக்கு மட்டும் ஏன் அஜய்யைக் கூப்பிடாம என்னைக் கூப்பிடுற?” –என்றவன் ஒரே குதியாய்க் குதித்து படுக்கையின் மீது மல்லாக்க விழுந்தான்.
“டேய், எழுந்திருடா. என்ன டிரஸ் எடுத்து வைக்கட்டும்?,சொல்ல்ல்ல்லு” – அவள் கெஞ்சியதும் அருகே கிடந்த 4 சட்டைகளை எடுத்துக்காட்டி “இது ஓகேவா?” என்று கேட்க அவனை ஓங்கி அடித்து அமர வைத்தாள் அனு.
பெட் மீது சம்மணம்மிட்டு அமர்ந்து கொண்டவன் பொறுமையாக “நாம போறது குளிர்ப் பிரதேசத்துக்குடி. மினி ஸ்கர்ட்,ட்ரவுசரெல்லாம் சரி வராது” என்று விட்டு அவள் காட்டிய ஒவ்வொன்றுக்கும் “இது வேண்டாம், இது ஓகே!” என்று கமெண்ட் கூறி ஆடை தேர்வில் உதவினான்.
“ஹய்யா!, வென்ஸ் டே ஈவ்னிங் பார்ட்டில அஜய் கூட போறதுக்காகவே இந்த ஃப்ராக்கை ரெடி பண்ணியிருக்கேன்.”
“அவனும் அங்க வர்றானா?”
“ஏன் இவ்ளோ அதிர்ச்சியா கேட்குற?, அவர் வந்தா என்னத் தப்பு?”
“நான் இருக்கும் போது அவன் ஏன் டி வரணும்?”
“வா..வாட்?”
“இ…இல்ல, அந்த சப்பமூக்கனோட போய் நீ ஏன் ஜோடி சேரனும்னு கேட்டேன்”
“இப்போ நீ புதுசா உன் லிஸ்ட்ல சேர்த்திருக்க ஆர்த்திக்குக் கூடத் தான் கன்னம் டொக்கு விழுந்து போயிருக்கு. அதையெல்லாம் நான் சொல்லிக் காட்டிட்டா இருக்கேன்?”
“ஏய்.. லூசு, அது பேரு ஸ்லிம் ஃபேஸ் டி. ஏஞ்சலினா ஜோலியைப் பார்த்ததில்ல நீ?”
“அடேய்ய்ய்ய்ய்”
“அப்டின்னா அந்தப் பய கண்டிப்பா கொடைக்கானல் வரத் தான் போறானா?”
“யெஸ்”
“அப்போ நான் வர மாட்டேன் டி”
“வராத..” –என்று விட்டு தோளைக் குலுக்கித் திரும்பியவளின் கையைப் பற்றி முறுக்கி “நான் ஏன் டி வராம இருக்கனும், போயும் போயும் அந்த சப்பமூக்கனுக்காக என்னை வராதன்னு சொல்றியா?” என்று கூற “ஆஆஆஆ.. வலிக்குது,வலிக்குது” என்றவள் அவன் தலையில் குட்டி வைத்துச் சண்டையிட்டாள்.
“தலையைத் தொடாதடி”என்றவன் அவள் இரு கைகளையும் பிடித்துத் திருக, வலியில் துடித்துத் துள்ளியவள் படுக்கையில் அமர்ந்திருந்தவனின் மீது பொத்தென விழுந்தாள்.
“அம்மாஆஆஆஆ, அடியேய்…. சீஸ் பர்கர்-ஆ தின்னு உடம்பை வளர்க்காம, அப்பப்போ ஜிம்முக்குப் போடின்னு சொன்னேன்ல, எவ்ளோ வெயிட்டா இருக்க பார்” என்றபடியே தன் மீது விழுந்தவளைக் கீழே தள்ளி மேலே சாய்ந்தான்.
“கையைப் பிடிச்சுத் திருகாதேன்னு எத்தனை தடவைடா சொல்லிருக்கேன்”- என்று சிணுங்கியபடியே அவன் முகம் பார்த்தவள், அவன் தன்னையே ஒரு மாதிரி நோக்குவதைக்கண்டுத் திகைத்து “தள்ளுடா…..”என்று எழப் பார்க்க.. அவனோ கண்டுகொள்ளாமல்,அவள் மீது நன்றாக ஏறிச் சாய்ந்து கொண்டு, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
ஆழ மூச்செடுத்து அவள் வாசம் நுகர்ந்தவன், சற்றும் யோசிக்காமல் தன் இதழ்களை அவள் கழுத்தில் அழுந்தப் பதித்தான். உடல் முழுதும் சூடேறி சிலிர்த்து விட.. சட்டென அவனை உருட்டிக் கீழே தள்ளி விட்டு படுக்கையின் மூலைக்குச் சென்றாள் அனு.
சட்டையை நீவியபடி எழுந்தமர்ந்தவனின் முகம் மாறி முன்னிருந்த விளையாட்டுத்தனம் முற்றிலும் தொலைந்து போயிருந்தது. கோபமாய் அவனை முறைத்துக் கொண்டு நின்றவளின் புறம் திரும்பியவன் “சாரி டி…” என்றான்.
“நீ…. நீ பேசாத டா”
“என்னைக்குமில்லாம, இப்போ ஏன் உன்னைக் கட்டிப்பிடிச்சா கிஸ் பண்ணத் தோணுதுன்னு எனக்குச் சத்தியமா தெரியலடி”
“வெளியே போடா நீ முதல்ல”
“அனு………………………………….”
“போறியா என்ன சொல்ற?” – மிரட்டலாய் அவள் வினவியதும் வேறு வழியின்றி வெளியேறினான் அர்ஜூன்.
ஒரு பெரிய ஆம்னி பஸ் முழுதையும் நிறைத்துக் கொண்டு ரிஷியின் டீம்-டீ அனு,சித்தார்த்,மீராவுடன் மூன்று நாள் பயணமாகக் கொடைக்கானல் கிளம்பி விட்டது.
பஸ்ஸின் கடைசி சீட் முழுதையும் ஆக்கிரமித்திருந்த அராத்துக் கூட்டமான வினோத்,சுதன்,ரோஷினி “மாரிஈஈஈஈ… கொஞ்சம் நல்ல மாறி… ரொம்ப வேற மாறி…”- எனக் குத்துப் பாட்டை ஓட விட்டுக் கூட்டமாய் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன் சீட்டில் சிலர், நடை பாதையில் ஸ்டூல் ஒன்றைப் போட்டுக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டி சிலர், பஸ்ஸில் ஏறியதும் “ஆஆஆ”-வென வாயைப் பிளந்தவாறு உறக்கத்திற்குச் சென்று விட்டிருந்தனர்.
அதையும் கடந்து முன் இருக்கையிலிருந்த ஹரிணி,அனு,மீரா மூவரும் வித விதமாகப் போஸ் கொடுத்து செல்ஃபிக்களைக் க்ளிக்கியபடி நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு நேரெதிரே ஜன்னலருகே அமர்ந்திருந்த அர்ஜூன், தன் உருண்டைக் கண்களை மேலும் உருட்டிப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த அனுவை ‘அப்படியே சாப்பிடுவேன்’ என்கிற பார்வையோடு விடாமல் பார்த்துக் கொண்டிருக்க.. அவனருகே அமர்ந்திருந்த ரிஷியோ பெண்கள் புறம் மறந்தும் கூட திரும்பி விடாமல் கண்களை இறுக மூடியபடி சீட்டில் சாய்ந்திருந்தான்.
கடைசியாக அன்று ஹரிணியிடம் பேசியதோடு சரி, அதன் பிறகு அவன் அவளைப் பார்க்க முயற்சிக்கவேயில்லை. செட்டில் அவளிருக்கும் திசையில் வழி தவறிக் கூடப் போய் விடக் கூடாதென்று வெகு கவனமாக இருந்து வருகிறான். என் முகத்தில் முழிக்க உனக்கு என்னடா தகுதியிருக்கிறது என்று கேட்டாளானால், அவன் அப்படியே மண்ணில் புதைந்து விட வேண்டியது தான்!, தூர இருந்து பார்த்துக் கொண்டிருப்பதே இப்போதைக்குப்போதும் என்று தோன்ற, அவன் அவளை அணுகுவதேயில்லை.
“ரிஷி… டேய்…. தூங்குறியா?”-எனத் தட்டியெழுப்பிய அனு “அங்கே போய் உட்காரு. எனக்கு ஜன்னல் சீட் வேணாம்” என எதிர்ப்புற இருக்கையைக் காட்ட சரியென்று அவன் எழுந்து சென்றதும் அர்ஜூன் அருகே அமர்ந்தாள்.
ஹெட் செட்டை காதில் செருகியபடிக் கண் மூடி அமர்ந்திருந்தவனின் ஐ-பேடை வெடுக்கெனப் பிடுங்கியவள் என்ன பாட்டுக் கேட்கிறான் என்று பார்த்தாள்.
‘செக்ஸ் ட்ரிப்.எம்பித்ரீ’-என்று டிஸ்ப்ளேயில் ஓடிக் கொண்டிருந்த பாட்டின் பெயரைக் கண்டு அவனைக் கேவலமாக முறைத்தாள்.
“ஏன் டா பாட்டுக் கூட இந்த மாதிரி தான் கேட்பியா?”-அனு
“ஆமா டி” – அர்ஜூன்
“எதுக்குடா என்னை இப்படித் திங்குற மாதிரி பார்க்குற?”
“உன்னைப் பார்த்தாலே போதையாகுதுடி. அதான்”
“ச்ச்ச்சிச்சிச்சி” – என்றவளின் தோளில் சாய்ந்து.. “Lets go all night, Lets go all night” என்று அவன் பாட “கண்றாவி” என்று அவனைத் தள்ளி விட்டு எழுந்தவள் ஹரிணியை அங்கே அமர வைத்து விட்டு மீராவின் அருகே சென்றமர்ந்தாள்.
ஹரிணி தன்னருகே அமர்ந்ததும் “ம்க்கும்” என்றபடி நன்றாக நிமிர்ந்து அமர்ந்த அர்ஜூன் ஐ-பேடில் பாட்டை மாற்ற.. அது “குருவாயூரப்பா… திருவருள் தருவாய் நீயப்பா” என்று பாடத் தொடங்கியது.
சில்லென்ற காற்று முகத்தைத் தீண்டியதும் தூக்கத்திலிருந்து விழித்த ரிஷி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். பஸ்ஸிலிருந்த மக்களனைவரும் கீழிறங்கி டீ குடித்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. கொட்டாவியை வெளி விட்டபடி இருகையையும் நீட்டி சோம்பல் முறித்தவன் தன்னருகேயிருந்த இருக்கையில் ஹரிணி அமர்ந்திருந்திருப்பதைக் கண்டு முதலில் விழித்தான். அடுத்த நொடி அதிர்ந்து எழுந்து பஸ் கம்பார்ட்மென்ட்டில் தலையை இடித்து “ஆஆஆஆஆஆ”என்றபடி மீண்டும் அமர்ந்தான்.
அவன் அசைவில் விழித்த ஹரிணி தலையைப் பிடித்தபடி அமர்ந்திருப்பவனைக் கண்டு “எ…என்னாச்சு…. இடிச்சுட்டியா?” எனக் கேட்டுத் தன் இடது கையினால் அவன் தலையை அழுத்தித் தேய்த்தாள்.
அவள் செய்கையில் மேலும் அதிர்ந்தவன் “போ….போதும், வலிக்கல” எனக் கூறியபடி சட்டென விலக… கொட்டாவியை வெளியிட்டபடி கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து சென்றாள்.
என்ன……?, என்ன செய்கிறாள் இவள்? – பலமாக அடித்துக் கொண்ட இதயத்தைக் கையால் தடவிக் கொண்டவன் சீட்டில் நன்றாக சாய்ந்தமர்ந்தான்.
சிறிது நேரத்திலேயே இரண்டு டீ-கப்களோடு மீண்டும் அவனருகே வந்தமர்ந்தாள் அவள். ஒன்றை அவனிடம் நீட்டி விட்டு அவள் தன்னுடையதை அருந்த… அப்போது படியேறி உள்ளே நுழைந்த சுதன் அவனை ஒரு மாதிரி பார்த்துச் சிரித்து கண்ணடித்து விட்டுச் சென்றான்.
“இன்னும் ஒரு மணி நேரத்துல கொடைக்கானல் ரீச் பண்ணப் போறோம்” – பின் சீட்டிலிருந்து யாரோ குரல் கொடுத்தனர்.
“ஏன் ஊட்டியை விட்டுட்டு கொடைக்கானல் செலக்ட் பண்ணீங்க?” – அவன் புறம் திரும்பியமர்ந்தபடி பக்கத்து சீட்டிலிருந்து கேள்வி கேட்ட ஹரிணி.
என்ன கேள்வியிது என்பது போல் பார்த்தவனிடம் “இல்ல, சொந்த ஊரான ஊட்டியை விட்டுட்டு ஏன் எல்லாரையும் கொடைக்கானல் கூப்பிட்டுப் போறன்னு கேட்டேன்” என்றாள்.
“கொடைக்கானல் போகனும்னு செலக்ட் பண்ணது பசங்க. நான் இல்ல”-ரிஷி
“இல்லையே!, ஊட்டின்னு பேர் சொன்னாலே நீ ரிஜெக்ட் பண்றதா நான் கேள்விப் பட்டேன்”
“.........................................”
“ஏன் அமைதி ஆயிட்ட?”
“ப்ச், காரணம் தெரிஞ்சுக்கிட்டே ஏன் கேள்வி கேட்குற?”-எரிச்சலாய்ப் பதிலளித்தான் அவன்.
“ஹ்ம்ம்.. அதுக்காகக் கடைசி வரை அங்க போகாமலேவா இருந்துட முடியும்?”
“ஏன், நீயும் தானப் பத்து வருஷமா ஊட்டிப் பக்கமே போகாம இருக்க?”-ரிஷி
“உண்மை தான். பேசாம, நாம ரெண்டு பேரும் சேர்ந்து போனா என்ன?” – அவள் கேள்வியில் சட்டெனத் திரும்பி அவளை வியப்புடன் நோக்கினான் அவன். ஆஹா!, இந்தப் பெண்ணுக்கு நிச்சயம் பைத்தியம் தான் பிடித்திருக்க வேண்டும்!
“உங்கப்பா அப்புறம் என்ன ஆனாரு?”-ஹரிணி
இம்முறை வியப்புறாமல் முகம் கன்றத் தலை தாழ்த்தியபடி ஜன்னல் புறம் நோக்கியவனிடம் “அர்ஜூன் எல்லாம் சொன்னான்” என்றாள்.
“அதனால?, அதனால என் மேல பச்சாதாபம் வந்துடுச்சா?”-ரிஷி
“நிச்சயம் இல்லை”
“………………………………………”
“இல்லைன்னு ப்ரூவ் பண்ண, இன்னொரு தடவை உன்னை அறைஞ்சு வேணா காட்டட்டுமா?” – எனக் கை ஓங்கியவளை அவசரமாகத் தடுத்து அவள் கையைப் பற்றி “எ…எல்லாரும் பார்க்கப் போறாங்க. ஏன் இப்படிப் பண்ற?”-என முணுமுணுத்தான்.
இருவரிடமிருந்து சத்தம் வந்ததும் எட்டிப் பார்த்த அர்ஜூன் ஹரிணியின் முகத்திலிருந்த சிரிப்பைக் கண்டு வாயைப் பிளந்தான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே?”-ஹரிணி
“நான் சென்னைக்குப் படிக்க வந்து கொஞ்ச நாள்லயே இறந்து போயிட்டாரு” –ரிஷி
“நீ அவரைக் கடைசி வரைப் பார்க்கவேயில்லையா?”
“நான் ஏன் பார்க்கனும்?, அந்தாளு செத்தப்போ கூட நான் போகல”
“தப்பில்லையா??” – என்றவளின் புறம் வெடுக்கெனத் திரும்பியவன் “தப்பில்ல தான். உன்னால என்னைக் கடைசி வரை மன்னிக்க முடியாம போன மாதிரி, என்னாலயும் அவரை மன்னிக்க முடியல. அதான்” என்றான்.
“உன்னை நான் மன்னிக்கலன்னு யார் சொன்னா?”
இப்போது மீண்டும் வியப்புடன் அவளை நோக்கினான்.
“என்னடி சொல்ல வர்ற இப்போ?” –ரிஷி
“நத்திங். கொடைக்கானல் வந்துடுச்சு” – என்றவள் ஆழ மூச்செடுத்து ஜில் காற்றை சுவாசித்து “யூகலிப்டஸ் வாசனை கலந்திருக்கிறக் காற்றை சுவாசிச்சு எவ்ளோ நாளாச்சு” என்று முணுமுணுத்தாள்.
த்ரீ ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிஞ்சி ஆண்டவர் கோவிலிலிருந்துத் தொடங்கி தங்களது ஊர் சுற்றலை தொடரலாமென முடிவு செய்து அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். மேக்கப் முடிந்து தயாராகி வெளியே வந்த அனு காரிடாரின் மூலையிலிருந்த ஆளுயரக் கண்ணாடியில் முன்னும்,பின்னுமாய்த் திரும்பித் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அர்ஜூன்.
இளஞ்சிவப்பு நிறத்தில் முட்டி வரை நீண்ட ஃப்ராக் அணிந்திருந்தவளின் பாதி முதுகு மறைக்கப்படாமல் பளீரென்ற அவளது வெள்ளை நிறத்தை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.
“என்னடி டிரஸ் இது?”-அர்ஜூன்
“எப்படியிருக்கு?” – ஃப்ராக்கை விரித்துக் காட்டிப் புன்னகைத்தாள் அவள்.
“ரொம்ப செக்ஸியா இருக்கு”
“டேய்ய், க்ளாமர்,க்ளாமர்ன்னு ஒரு வார்த்தை இங்கிலிஷ்ல இருக்குடா. அதைச் சொல்லலாம்ல?”
“வெளியே இருக்கிற ஃப்ரீசிங் கோல்ட்க்கு க்ளாமரா வேற டிரஸ் பண்ணுவியாடி நீ?, ஒழுங்கா போய் டிரஸ்ஸை மாத்திடு. இல்ல, என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”
“என்ன மிரட்டுற?, என்னடா செய்வ?, ம்?, என்ன செய்வ?” – அவள் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அவளை இழுத்துக் கண்ணாடியில் சாய்த்தவன் “கண்டபடிக் கிஸ் பண்ணுவேன்” என்று கூற விழி விரித்து வியர்த்துப் போனாள் அவள்.
“என்னைப் பார்க்குறப்பல்லாம் நீ இப்படி தான் டா பேசுற”
“உன்னைக் கிஸ் பண்ணதுல இருந்து நான் ஒரு மாதிரி தான் இருக்கேன்னு ஏற்கனவே சொன்னேன்ல?, நீ ஏன் என்னைத் தூண்டி விடுற மாதிரி நடந்துக்கிற?” – என்றவனிடம் “பரதேசி….”என்றுப் பல்லைக் கடித்தாள் அனு.
கோவிலுக்குப் புறப்படும் முன் பஸ் முன்பு நின்று குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று ரோஷினி கூறியதும் அனைவரும் பஸ் முன்பு கூடினர். தன்னருகேத் தன் தோளை உரசிக்கொண்டு ப்ளூ ஜீன்ஸ்,பிங்க் நிற புல்-ஓவருடன் சிரித்தபடி நின்றிருந்த ஹரிணியைக் கண்டுக் குழம்பித் தான் போனான் ரிஷி.
பஸ்ஸில் அவனருகே அமர்ந்தும்,கோவிலில் கூட நடந்தும் அவள் தன்னருகிலேயே இருப்பதையே கண்ட ரிஷிக்கு அவள் செய்கை ஆச்சரியத்தைக் கொடுத்தது. கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு அனைவரும் சூசைட் பாயிண்ட்டிற்குச் சென்றனர். செல்லும் வழியில் விற்கும் வேர்கடலைகளையும், மாங்காயையும் கொறித்தபடியும், வழியில் தென்படும் பொருட்களை வாங்கிக் கொண்டும் அரட்டையடித்துக் கொண்டே சென்றனர்.
“டேய் சுதன்,ஏன் டா எட்டி எட்டிப் பார்க்குற?, யோசிக்காம குதிச்சுடு” – ரோஷினி
“அனு, நீ என்னைக் காதலிக்கலன்னு சொல்லு. அப்டியே குதிச்சிட்றேன்”-வினோத்.
“அடி நாயே, உன்னை நானே தள்ளிக் கொலை பண்ணிட்றேண்டா”- அர்ஜூன்
பச்சைப் பசேரென பனி மூட்டங்களுடன் ஆழமாய்த் தெரிந்த பள்ளத்தை எட்டிப் பார்த்து ஆளாளுக்கு கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
நன்றாகக் குனிந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சுதனின் முதுகைத் தள்ளிய ஹரிணி அவன் அய்யோ… எனப் பயந்து “ஏன்ம்மா இந்தக் கொலவெறி?” என்று கூறுவதைக் கண்டு சிரித்தபடி சற்றுத் தள்ளி நின்றிருந்த ரிஷியிடம் வந்தாள்.
தன்னை நோக்கி நடந்து வருபவளை ஜெர்க்கினுக்குள் கை நுழைத்தபடி பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகே வந்து நின்றாள்.
“நீ எட்டிப் பார்க்கலையா?”-ஹரிணி
“நீ என்ன ப்ளான் வைச்சிருக்க ஹரிணி?”-ரிஷி
“புரியல”
“இல்ல, என்ன ட்ரை பண்ற நீ?, போன தடவை என் கன்னத்துல அறைஞ்சு எனக்கு உன் முகத்தைப் பார்க்கக் கூடப் பிடிக்கலடான்னு மனசுல இருக்குறதை பட்டுன்னு சொன்னியே?, அதே மாதிரி இப்பவும் என்னைக் குழப்பாம, உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லிடேன்.”
“நீ எட்டிப் பார்க்கலையான்னு கேட்டேன்”-அலட்டிக் கொள்ளாமல் சொன்னதையே சொன்னாள் அவள்.
“ஏன் என்னையும் தள்ளி விடலாம்னு பார்க்குறியா?, அப்டி நீ என்னைத் தள்ளி விட்டு சாகடிச்சாக் கூட நான் நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்” – என்றவனின் வாயைத் தன் வலது கையால் மூடி அழுத்தியவள் “ஷட் அப்” என்றாள்.
அப்போது அருகேயிருந்த ஒரு சிறுமி “ரம்யாஆஆஆஆஆ”எனத் தன் பெயரைக் கத்தி, அந்த மலைத் தொடர் தன் பெயரை எதிரொலித்துக் கூறுவதைக் கேட்டுக் கைத்தட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அந்தக் குழந்தையைத் தொடர்ந்து வினோத்,அர்ஜூன்,அனு என அனைவரும் தங்களது பெயரைச் சொல்லி அதை ஒரு பெரிய வேடிக்கை விளையாட்டாகவே மாற்றி விட, ரிஷியின் புறம் திரும்பி “நீயும் ஏதாவது கத்து” என்றாள்.
“என்னன்னு?”
“ஏதாவது! உன் பேரைச் சொல்லிக் கூடக் கத்து”
“ஹ்ம்ம், ஐ லவ் யூ ஹரிணின்னு வேணாக் கத்தட்டுமா?”- எனக் கூற சிரிப்பு மாறி முகம் சிவந்து போனது அவளுக்கு. அவனை நிமிர்ந்து பார்க்கத் திணறி ஓடி விட்டாள்.
அவளிடம் அவனுக்குப் பிடித்ததே அவளுடைய மௌனம் தான்! ஆனால் இப்போது அதுவே அவனுக்கு எதிரியாகிச் சதி செய்து கொண்டிருந்தது. இரு கைகளால் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு காலை உதைத்துக் கொண்டவன் அவளைத் தொடர்ந்து ஓடிச் சென்றான்.
தன்னந்தனியாக பஸ்ஸின் கடைசி இருக்கையில் ஜன்னலருகே எதிரே தெரிந்த மலைத் தொடரை வெறித்துக் கொண்டிருந்தவள், அருகே அமர்ந்தவனைக் கண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். அவளையே கண்டபடி ஐந்து நிமிடம் பேச்சற்றிருந்தான் அவன்.
“பிடிக்கலையா ஹரிணி?”
“…………………..”
“என்னை அடிக்கனும்னு தோணுதா?”
“………………..”
“ஏதாவது பேசு…. நீ மறுபடி அமைதியாகுறது எனக்குப் பயமாயிருக்கு”
“அ…அன்னிக்கு… அன்னிக்கு ஏன் நீ இதை சொல்லல?” – உள்ளே சென்று விட்ட மெல்லிய குரலில் முணங்கலாய் வந்து விழுந்தது அவளது வார்த்தைகள்.
“என்னைக்கு?”
“நாம கேம் விளையாடின நைட்”
“அப்போ சொல்லாம விட்டதுக்காகத் தான் இப்போ வரை கஷ்டப்பட்டுட்டிருக்கேன். இனியும் சொல்லாம இருக்க முடியும்ன்னு எனக்குத் தோணல.”
உதட்டைக் கடித்தபடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளைக் கண்டு தலையைப் பின்னே சாய்த்துக் கண் மூடியவன் “அப்பவும்,இப்பவும் உலகத்துலேயே கஷ்டம்ன்னு நான் நினைக்குற ஒரே விசயம் உன் கண்ணை ஃபேஸ் பண்றது தான்” என்றான்.
அன்றிரவு ஹோட்டலில் கேம்ப்-ஃபையருக்கு ஏற்பாடு செய்திருந்தபடியால் டீம்-டீ முழுதும் தீ மூட்டப்பட்டிருந்த இடத்தைச் சுற்றியமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தனர்.
தன் கையிலிருந்த கிட்டாரை இசைத்தபடி அர்ஜூன் பாட்டு பாட அனைவரும் கைத்தட்டலும்,விசிலுமாய் அவனை உற்சாகப்படுத்தி பாட்டை ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவராக ஆடியும்,பாடியும் இரவைக் கடத்தத் திடீரென எழுந்த ரோஷினியும்,வினோத்தும் “என்ன மக்களே பாட்டும்,டான்சும் போரடிச்சு உங்களுக்குக் கொட்டாவியை வர வைக்குதா?, நீங்க எல்லாரும் நிமிர்ந்து உட்காருற மாதிரி ஒரு சூப்பர் கேம் ஏற்பாடு பண்ணியிருக்கோம்” எனக் கூற அனைவரும் “என்ன?,என்ன?” என்று ஆர்வமாய் வினவினர்.
“கிஸ்ஸிங்ங்ங்ங்ங் கேம்ம்ம்ம்ம்ம்ம்”- என்று இருவரும் கோரசாய்க் கூறிக் கைத் தட்டியதும் “யாரு,யாருக்குடா முத்தம் கொடுத்து விளையாடுறது?”, “அடப்பாவிங்களா?, சென்சார்ல போட வேண்டிய படத்தை இங்க ஓட்டப் பார்க்குறீங்களா?” – என ஆளாளுக்குக் கத்தத் தொடங்கவும் “அமைதி! அமைதி” எனக் கைக்காட்டி அனைவரையும் அடக்கினர்.
“கேமோட ரூல்ஸைக் கேட்டுட்டு அப்புறம் நீங்க கருத்து சொல்லுங்க. மோர் ஓவர், முத்தம்ன்றது தப்பான விசயம்னு யார் சொன்னா?, கிஸ் இஸ் ஜஸ்ட் அ கிஸ்.” – ரோஷினி.
“ஆமாமா, இப்போ நான் முத்தம் கொடுத்தாக் கூட ரோஷினி எதுவும் சொல்ல மாட்டா”-என்ற வினோத் குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட “ஊஊஊஊஊஊஊஊ” என்றது கூட்டம்.
“என்னடா பண்ண நாயே” என அவன் சட்டையைப் பிடித்த ரோஷினியைக் கண்டு “இவனுக எப்போ ஜோடி சேர்ந்தானுக” என்கிற ரீதியில் நோக்கினான் அர்ஜூன்.
“ஓகே!, அவங்கவங்களுக்கான ஜோடிகளை முதல்ல தேர்ந்தெடுப்போம். அப்புறம் கேமோட ரூலைப் பார்ப்போம்”-என்ற வினோத் ஒரு டப்பாவைத் தன்னருகேயிருந்த டேபிள் மீது வைத்தான்.
“உங்க எல்லாருடைய பேரும் இந்த டப்பாக்குள்ள இருக்கு. இப்போ ஒவ்வொருத்தரா வந்து ஒரு சீட்டை எடுத்து அவங்களுக்கான ஜோடி யாருன்னு தெரிஞ்சுக்கலாம்” – என்று கூற முதலில் சித்தார்த் எழுந்து சென்றான்.
என்ன மாயமோ, மந்திரமோ சரியாக மீராவின் பெயரையே அவன் எடுக்கக் கூட்டம் “ஹேஏஏஏஏஏஏஏஏஏஏ” எனச் சத்தமிட்டது.
“நெக்ஸ்ட் டைரக்டர்,டைரக்டர்”- என ரோஷினி கூறியதும் சிரித்தபடி எழுந்து சென்ற ரிஷி ஒரு சீட்டை எடுத்து அதில் எழுதியிருந்தப் பெயரைக் கண்டு “சாரிடா அர்ஜூன், இதுக்கும்,எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”என்ற படியே சீட்டிலிருந்த அனுவின் பெயரைத் திருப்பிக் காட்டினான்.
“ரிலேக்ஸ், ரிலேக்ஸ் ப்ரோ”- என சுதன் அர்ஜூன் தோளைத் தட்டி “நெக்ஸ்ட் நீங்க போங்க” என்றனுப்பினான். அவன் எடுத்த சீட்டில் ஹரிணியின் பெயர் இருப்பதைக் கண்டு வெற்றிச் சிரிப்பு சிரித்தவன் “பழிக்குப் பழி” என்று கூறிச் சென்றமர்ந்தான்.
சுதன் தனக்கான சீட்டை எடுக்கையில் ஒரு நிமிடம் நின்று “என் பேர் இருக்கிற சீட்டு எனக்கே வந்தா என்ன செய்யனும்?” என்று வினவினான்.
“உனக்கு நீயே முத்தம் கொடுத்துக்க வேண்டியது தான்”-என்று வினோத் கூறியதும் அனைவரும் கொல்லெனச் சிரித்தனர். அவன் பயந்தபடி அவன் பெயரே அவனுக்கு வர நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஏமாற்றத்தில் கீழே விழுந்தான்.
இப்படி ஒவ்வொருவராக மாற்றி,மாற்றி எடுத்துத் தங்களது ஜோடிகளைத் தீர்மானித்துக் கொண்டதும் அந்த கேமைப் பற்றிக் கூறினாள் ரோஷினி.
“ரொம்ப சிம்பிளான கேம் தான். சில ஆங்கிலப் படங்களோட பெயர்களை நாங்க 2 பேரும் நடிச்சுக் காட்டுவோம். அதை நீங்க தனித்தனியா கண்டுப் பிடிச்சு சொல்லனும். அதாவது இப்போ சித்தார்த்-மீரா ஜோடியை எடுத்துக்கிட்டா, நான் சித்தார்த் கிட்ட 2 படங்களோட பெயரையும், இவன் மீரா கிட்ட 2 படங்களோட பெயரையும் நடிச்சுக் காட்டுவோம். 2 பேரும் ரெண்டு அட்டெம்ப்ட்லயும் சரியா சொல்லிட்டா வின்!. ஏதாவது ஒரு அட்டெம்ப்ட்ல ஒருத்தர் சொல்லாம விட்டுட்டா.. என்ன பண்ணனும்னு கேம் ஸ்டார்ட் ஆனதும் சொல்றேன்” என்றவள் மர்மச் சிரிப்புடன் விளையாட்டைத் தொடங்கினாள்.
“தோத்துட்டா என்ன செய்யனும்னு சொல்லவே இல்ல”-என முணங்கியபடி அமர்ந்தான் அர்ஜூன்.
முதலில் சித்தார்த்-மீரா ஜோடி விளையாட்டைத் தொடங்கி வைத்தனர். அவர்களுக்கான படத்தின் பெயர்களைப் பார்த்து விட்டு நடித்துக் காட்டினாள் ரோஷினி.
வினோத்தின் இரு கையையும் பிடித்து நீட்டி,அவன் பின்னே கட்டிக் கொண்டு நின்றவளைக் கண்டதும் சித்தார்த் “டைட்டானிக்” எனக்கூற “ம்ஹூம்” எனத் தலையாட்டித் தான் நின்று கொண்டிருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டி விட்டுப் பின் தலை முடியையும்,தாடியையும் சைகை செய்ய சட்டென “தி ரெவெனெண்ட்” என்றான்.
“வாவ்வ்வ்வ்வ்” எனக் கூட்டம் கைத்தட்டியதும் அடுத்தது மீராவிற்கான படத்தின் பெயரைத் தான் நடித்துக் காட்டினான் வினோத். முகத்தைக் கோரமாக வைத்துக் கொண்டு பேயைப் போலக் காட்டியதும் “டெவில்” என்றவளிடம் அடுத்து,அடுத்து என அவன் கைக்காட்ட “ஈவில்” என்றாள். பின் செத்து விழுந்தது போல அவன் நடித்ததும் “ஈவில் டெட்” எனச் சிரித்தபடியே கூற “என்ன அவளுக்கு மட்டும் ஈசியா சொல்ற?” எனக் கூட்டம் கத்தத்தொடங்கியது.
இந்த ஜோடி அடுத்தடுத்த இரண்டு படங்களையும் சுலபமாகக் கண்டுப்பிடித்து விட “இதெல்லாம் போங்காட்டம்”எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் அனைவரும். அவர்கள் சென்றமர்ந்ததும் அடுத்ததாக ரிஷி-அனு ஜோடி முன்னே வந்து நின்றது.
ஜூராசிக் பார்க்கைப் போல வினோத் நடிக்கத் தொடங்கியதுமே “ஜூராசிக் பார்க், இல்ல வேர்ல்ட்”என சட்டெனக் கூறி அனு டான்ஸ் ஆட “அடப்பாவி வினோத்” என்றான் அர்ஜூன்.
அடுத்ததாக ரோஷினி இண்டர்ஸ்டெல்லர் படத்தின் பெயரை ரிஷியிடம் நடித்துக் காட்ட அவனால்.. கடைசி வரை அவளுடைய நடிப்பைப் புரிந்து கொள்ள முடியாது போனது.
“என்ன டைரக்டர் சார்?” என்ற ரோஷினி படத்தின் பெயரைச் சொல்ல “அதுக்கு நீ என்ன நடிச்சுக் காட்டுன?”என்று சண்டைக்கு வந்தான் ரிஷி.
“அட்டென்ஷன் மக்களே!, இப்போ தான் கேம் சூடு பிடிக்கவே ஆரம்பிச்சிருக்கு.”என்ற ரோஷினி நிறுத்தி “படம் பேரைக் கண்டுபிடிக்க முடியாம போனதால.. டைரக்டர் சார் இப்போ தன்னோட ஜோடியைக் கிஸ் பண்ணனும்” எனக் கூறிக் குதிக்க என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன என்று திகைத்தக் கூட்டம் அடுத்த நொடி கைத் தட்டத் துவங்க.. ரிஷியின் கையைப் பிடித்துத் தள்ளி விட்டு அனுவின் அருகே சென்று நின்றான் அர்ஜூன்.
“என்ன.. என்ன நடக்குது இங்க?, அர்ஜூன், நீ ஏன் டா இங்க நிற்கிற?” – ரோஷினி
“என்னால இதுக்கு ஒத்துக்க முடியாதுடா. ஜோடியை மாத்துங்க”- என்றான். ரிஷியும்,அனுவும் விழுந்து விழுந்து சிரித்தபடி ஆளுக்கொரு புறமாய் செல்ல ரோஷினியுடன் மல்லுக்கு நின்று ஜோடியை மாற்றிக் கொண்டான் அர்ஜூன்.
“டேய்… ஒரு முத்தத்துக்காக, படம் பேர் தெரிஞ்சும் கூட சொல்லாம விட்ரலாம்னு நினைக்காத”-ரோஷினி
“ஏய் ச்சி.. வாயை மூடு”-அர்ஜூன்
“ஓகே!, கேமை முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்” என்றவள் படங்களின் பெயரை நடித்துக் காட்டத் தொடங்கினாள். தனக்களிக்கப்பட்ட படத்தின் பெயர்களை “க்ராவிட்டி, தி காஞ்சுரிங்”என அர்ஜூன் கடகடவெனச் சொல்லி விட. அடுத்ததாக அனுவின் முறை வந்தது.
முதல் படத்தின் பெயரை “காட்சில்லா” என்று சொல்லி விட்டவள், அடுத்ததாக வினோத் நடித்துக் காட்டியதை புரிந்து கொள்ள முடியாமல் திணறினாள்.
“டைம் அப்!, அனு டார்லிங், நீ இப்போ கண்டிப்பா அர்ஜூனுக்கு முத்தம் கொடுத்துத் தான் ஆகனும்” எனக் கூறிக் குதித்துச் சிரித்தவளோடு சேர்ந்து கூட்டமும் விசிலடித்தது.
“நிஜமாவே முத்தம் கொடுக்கனுமா?”, “எங்கிருந்துடா இப்டி ஒரு கண்றாவியான கேமைக் கண்டுபிடிச்சீங்க?”, - என மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டு நேரம் கடத்திய அனு “ஓகே!” என்றபடி அர்ஜூன் புறம் திரும்பி நின்றாள்.
“இதுக்காகத் தானடா நீ ஜோடி மாத்தி சதி பண்ணுன?” – அனு
“நீ இதுக்காகத் தான் பதில் தெரிஞ்சும் சொல்லாம விட்டுட்டியாடி?”- அர்ஜூன்
“ராஸ்கல்……”
சிரிப்புடன் கட்டியிருந்தக் கைகளை விரித்து அவளருகே வந்து நின்றவனை முறைத்தபடியே நெருங்கி அவன் கன்னத்தில் அவள் இதழ் பதிக்க எத்தனிக்கையில், அவளைத் தடுத்து இதழ்களைக் கையால் மூடியவன் “சாரி டார்லிங்” எனக் கூறிச் சிரித்தபடியே குனிந்து அவளை அணைத்துக் கொள்ள.. “ஓஓஓஓ…. நோஓஓஓஓ” என்று கூட்டம் முழுதும் சத்தமிட்டது.
அடுத்ததாக ரிஷியும்,ஹரிணியும் வந்து நின்ற உடனேயே கைத்தட்டலும்,விசிலும் பறக்க “வேலை ஒழுங்கா பார்க்குறீங்களோ இல்லையோ, இதெல்லாம் நல்லாப் பண்றீங்கடா” என்று கூறிச் சிரித்தான் ரிஷி.
“டைரக்டர் சார், ஸ்டார்ட் பண்ணலாமா?,” எனக் கேட்டு ரோஷினி கூறிய இரண்டு படங்களின் பெயர்களையும் இந்த முறை கண்டு பிடித்து விட்டான் ரிஷி. அடுத்ததாக ஹரிணியின் முறை வந்ததும், அனைவரின் பார்வையும் அவள் மீதேயிருந்தது.
முதல் படத்தின் பெயருக்கே அவள் திணறத் தொடங்க “டைம் அப்!” என்ற வினோத் “மக்களே… நீங்களனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த சூப்பர் ஹிட் இரவுக் காட்சி இதோ தொடங்குகிறது” எனக் கூறி இருவரையும் கைக்காட்டி டான்ஸ் ஆடினான்.
“டேய்,டேய் இன்னொரு சான்ஸ் கொடுங்கடா அவளுக்கு” – ரிஷி
“டேய் பாவம் டா அவ” – அர்ஜூன்
“ரூல்ஸ் எல்லாருக்கும் ஒன்னு தான். ஷீ ஹாஸ் டூ கிஸ் ஹிம்” – அனு
ஆளாளுக்கு ஏதேதோ சொல்வதைக் கேட்டுத் திக்குமுக்காடிப் போன ஹரிணியிடம் “திவ்யா டியர், வேற வழியே இல்ல. நீ டைரக்டரைக் கிஸ் பண்ணியே ஆகனும்… “ என்று ரோஷினி கூறினாள்.
சுற்றியிருந்தக் கூட்டம் எழுந்து நின்று கொண்டு விடாமல் கைத்தட்டி ஆர்ப்பரிக்க.. வேறு வழியின்றி அவனை நிமிர்ந்து நோக்கினாள் அவள். அவன் கண்களில் ஏன் அத்தனை ஆர்வம்?
“விருப்பமில்லாட்டி விட்டுடு”-சத்தத்துக்கு மத்தியில் அவன் குரல் அவள் காதில் விழுந்தது.
“……………………………….”
“எப்பவும் போல நீ ஓடிக் கூடப் போயிடலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க”
“………………………….” – பேச்சற்று ஒரு நிமிடம் இமை தாழ்த்தியவள் நிமிர்ந்துத் தன் பெரிய விழிகளால் அவனை அசையாது பார்த்த பார்வையில் மொத்தமாய் வீழ்ந்து போனான் ரிஷி.
ஹப்ப்பாஆஆஆ!, பெண்ணின் மோகப் பார்வை இப்படி போதை கொள்ள வைக்குமா?, என்ன பார்வையிது?, எதிரிலிருப்பவனை நிமிடத்தில் வீழ்த்திச் சாய்த்து அசரச் செய்யுமளவிற்கு!
திகைப்புடன் அவள் கண்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி எம்பி அவள் அருகே வருகையில், தன்னையும் மீறி ஓரடித் தலையைப் பின்னே இழுத்து ‘நிஜமாகவே முத்தமிடப் போகிறாளா’ என்று வியந்து முறுவலுடன் அவன் முகத்தை மறுபுறம் திருப்பிய சமயம் அவனது இதழோரத்தில் லேசாகப் பதிந்தது அவளது முத்தம்.
ஒரு நொடிக் கண்களை மூடி அவளது இதழின் ஈரத்தை உள்ளிருந்து உணர்ந்தவன் ஆச்சரியத்துடன் அவள் புறம் திரும்பிய சமயம் மண்ணுக்குள் புதைந்து விடுபவள் போன்றுமுகத்தை நன்றாகக் குனிந்து கொண்டிருந்தாள் ஹரிணி.
அப்போது தான் சுற்றியிருந்தக் கூட்டத்தின் சத்தமே ரிஷியின் செவிகளுக்கு எட்ட ஆரம்பித்தது. தன்னருகே வந்து ரோஷினி ஏதோ சொல்லித் திட்டுவதைக் கூர்ந்து கவனித்தான்.
“ஏன் சார், அவ கிஸ் பண்ண வந்தப்போ தலையை சாய்ச்சீங்க?, எப்பேர்ப்பட்ட சீனை எதிர்பார்த்து மக்கள் காத்திட்டிருக்காங்க!, இப்டியா ஏமாத்துவீங்க?” என்று அவள் திட்டி முடிப்பதற்குள் அனைவரும் “ஒன்ஸ் மோர்” கேட்கத் தொடங்கியிருந்தனர்.
இருவரையும் கண்ட அர்ஜூனும், அனுவும் கூட மகிழ்ச்சியில் “ஒன்ஸ் மோர்” கேட்க.. “திவ்யா ரொம்ப வெட்கப் படுறா. அதனால இப்போ நீங்க கிஸ் பண்ணுங்க சார்.” என்ற ரோஷினியை “ரோஷினி ப்ளீஸ்” என்றாள் ஹரிணி.
திடீரென்று வினோத் “லிப் டூ லிப் டூ லிப்” எனக் கைத்தட்டத் துவங்க அவனைத் தொடர்ந்து அனைவரும் “லிப் டூ லிப்” எனச் சத்தமிட்டனர்.
சத்தியமாக அவர்களை அடக்க முடியாதெனத் தெரிந்து கொண்ட ரிஷி, ஹரிணியின் முகத்தை சிரிப்புடன் நோக்கினான்.
“ரெடியா….?”-ரிஷி
“ம்ஹூம், முடியாது..”
“பசங்க விட மாட்டானுக போல”
“அதுக்காக?”-ஹரிணி
“கண்டிப்பா லிப் டூ லிப் டீப்பாஆஆஆ கிஸ் பண்ணித்தான் ஆகனும்”
“ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்”-கண்களைச் சுருக்கியபடி அழகாய்க் கெஞ்சினாள் அவள்.
“உன்னைக் கிஸ் பண்ணிட்டு அப்புறமா ப்ளீஸ் பண்ணிக்கிறேன்…” என்றவன் அவள் இரு கன்னங்களையும் தன் இருகைகளால் பற்றினான்.
கூட்டத்திலிருந்து “ஊஊஊஊஊஊஊஊஊ” என்ற சத்தம் கிளம்பியது.
குனிந்து அவன்,அவளருகே சென்றதும் கண்களை இறுக மூடிக் கொண்டவளைக் கண்டுச் சிரித்து, அவள் நெற்றியில் புரண்ட முடிகளை ஊதி விலக்கி புருவ மத்தியில் அழுந்த முத்தமிட்டு விலகினான் ரிஷிகார்த்திகேயன்.
