அத்தியாயம் - 3

Because I’m stupid!

ரிஷி டைரக்ட் செய்யவிருந்த ஹிட்டன் கேமரா ஷூட்டிங் பெசண்ட் நகரில் ஜனசந்தடி குறைவான சாலை ஒன்றில் எடுக்கப்படவிருந்தது. ஐந்தே ஆட்கள் கொண்ட அந்தப் படப்பிடிப்பில் ரிஷியுடன் வழக்கம் போல் அர்ஜூனிருந்தான். ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த காருக்குள் ரிமோட்டினால் இயக்கப்படும் ஆடியோ செட் ஒன்றிருந்தது. ஆட்கள் அந்தக் காரைக் கடக்கையில் அந்த ஆடியோ இயக்கப்படும். அதிலிருந்து ஒலிக்கும் பெண் குரலைக் கேட்டு அவர்கள் பயந்து ஓடுகிறார்களா?,அல்லது உள்ளிருக்கும் பெண்ணை காப்பாற்ற முயல்கிறார்களா? என்பதைப் படமெடுக்க வேண்டும்.

“விஷ்ணு, ஆல் செட்?”

“யெஸ் பாஸ்”

“ஓகே!”என்றவன் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சற்றுத் தள்ளி கேமரா வைக்கப்பட்டிருந்த காருக்குள் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.

முதலில் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் கடந்து சென்றான். உள்ளிருந்து ஒலித்தப் பெண் குரலைக் கண்டுப் பயந்து போனவன் அடித்துப் பிடித்து ஓடி விட்டான். அவனைத் தொடர்ந்து இன்னும் சிலரும் ஓடிச் செல்ல.. சிகரெட்டின் புகையை வெளியிட்டபடி “எவனும் காப்பாத்த நினைக்க மாட்டான் போலடா” என்றான் ரிஷி.

அடுத்ததாக முதியவர் ஒருவர் அந்தக் காரைக் கடந்தார்.பெண் குரலொன்று உச்சஸ்தாதியில் காருக்குள் ஒலிக்கவும் பதறிப் போன முதியவர் வேகமாய் காரின் ஜன்னலைத் தட்டினார். “உள்ளே யாரு, உள்ளே யார் இருக்கீங்க?” என்றவர் கார்க் கதவைத் தன் முழு பலத்துடன் இழுக்கப் பார்க்க…. வேகமாய் அவரருகே ஓடினர் விஷ்ணுவும்,நந்துவும்.

“தாத்தா… தாத்தா… உள்ளே யாருமில்ல. வெறும் டேப் ஒலி தான். அங்கே பாருங்க, கேமரா பாருங்க” என்றான். “என்னப்பா?,எது,எதுல விளையாடுறதுன்னு இல்லையா?” என்றவரைப் பேசி சமாதானம் செய்தனர். அடுத்தப் பத்து நிமிடத்திற்கு ஆள் நடமாட்டமே இல்லாது போக எரிச்சலுடன் எழுந்த அர்ஜூன் “டீ சாப்பிட்டு வரேன் டா” என்று சென்று விட்டான்.

அந்த இரண்டு மணி நேரத்தில் மூன்றாவது முறையாக சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தான் ரிஷி. பொறுமையின்றி சற்று எட்டிப் பார்த்த போது தூரத்தில் ஜீன்ஸ் அணிந்த பெண்ணொருத்தி நடந்து வருவது தெரிந்தது.

“விஷ்ணு டேய்…” – என அவன் தோளைத்தட்டி விட்டு கேமராவின் வழியே அவளை நோக்கினான்.

ஒன்று அவள் உயரமாயிருக்க வேண்டும் அல்லது பெரிய்ய்ய ஹீல்ஸ் செருப்பு அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் சராசரிப் பெண்களின் உயரத்தை விட சற்று அதிக உயரமாய்த் தெரிந்தாள். நீளமாயிருந்த ஒல்லிக் கால்களைக் கடந்து அவள் முகத்தை நோக்கினான். முகம் சரியாகத் தெரியவில்லை. முக்காடிட்டு தலை குனிந்து நடந்து கொண்டிருந்தாள். நெற்றியைச் சொரிந்தபடி சிகரெட் புகையை வெளியிட்டவன் ஆடியோவை ஆன் செய்தான்.

காருக்குள்ளிருந்து சத்தம் கேட்ட அடுத்த நொடிப் பதறியடித்துக் கையிலிருந்த செல்ஃபோனைத் தவறவிட்டு நான்கடி பின்னே சென்றாள் அவள். தோள்ப்பையின் கைப்பிடியை இறுக்கமாய்ப் பற்றியவள் மிரட்சியுடன் சுற்றும்,முற்றும் அவசர,அவசரமாய் நோக்கினாள். ஆட்கள் யாரும் தென்படாததைக் கண்டு முன்னும்,பின்னுமாய் செய்வதறியாது ஓடினாள்.

பின் மீண்டும் காரருகே வந்து ஜன்னலைப் படார்,படாரெனத் தட்டி “யா…. யாரு?, உ..உள்ள யார் இருக்கா?, வி..விடுங்க… வே…வேண்டாம். அவளை விட்டுருங்க… ப்ளீஸ்.. வேண்டாம்..” எனக் குரல் நடுங்க சத்தமிட்டாள். பின் விறுவிறுவென பத்தடி ஓடிச் சென்று “யா…யாராவது இருக்கீங்களா?, ஹெல்ப்….. ஹெல்ப்… ஹெல்ப் பண்ணுங்க யாருமே இல்லையா இங்க? ஹெல்ப்… ஹெல்ப்….ப்ளீஸ்…”என அழுகைக் குரலில் கத்தியவள் மீண்டும் காரருகே ஓடி வந்தாள்.

உள்ளிருப்பவர்களை அறிந்து கொள்ளூம் நோக்கத்துடன் காரைச் சுற்றி ஓடியவள் இருபுறமும் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை பலம் கொண்ட மட்டும் ஓங்கித் தட்டினாள். உள்ளிருந்து சத்தம் விடாது ஒலிப்பதைக் கேட்டு செய்வதறியாது விழித்தவள் கீழே கிடந்தத் தன் செல்ஃபோனைத் தேடியெடுத்துப் பரபரவென ஏதோ நம்பரை அழுத்தினாள்.

எதிர்முனையில் என்ன ஒலித்ததோ, ச்ச என்றபடி கைப்பையையும்,செல்ஃபோனையும் கீழே எறிந்தவள் அருகே கிடந்த செங்கல்லைத் தூக்கிக் காரின் மீது எறியப் பார்த்தாள்.

தூரத்திலிருந்த காருக்குள் அமர்ந்தபடி அவளைத் திகைத்து நோக்கிக் கொண்டிருந்த மூவரும் வாயடைத்துப் போயினர்.

“விஷ்ணு அவ காரை டேமேஜ் பண்ணப் போறாடா”-என்று ரிஷி சத்தமிட்ட சமயம் விஷ்ணுவும்,நந்துவும் வேகமாய் ஓடினர்.

“மேடம்,மேடம்..”என்று இருவரது குரல் முதுகுக்குப் பின்னால் ஒலித்ததும் கையிலிருந்த செங்கல்லுடன் திரும்பியவள் அவர்களிருவரையும் கண்டு அதிகமாய் மிரண்டாள்.

“யா…யா..யார் நீங்க?, கி..கிட்ட வராதீங்க.. வே..வேண்டாம் கிட்ட வராதீங்க…” – பயத்தில் நடுங்கிய இதழ்களுடன் பின்னே சென்றவளிடம் “மேடம்.. மேடம் இங்க பாருங்க.. கேமரா.. அங்க.. அதோ கார்ல..”என்று விஷ்ணு அருகே வர.. “தள்ளிப் போ…. கிட்ட வராத..”-என்று கண்களை அழுந்த மூடி உச்சஸ்தாதியில் கிறீச்சிட்டாள் அவள்.

“மேடம் நான் சொல்றதைக் கேளுங்க. இது ஒரு ஷூட். ஹிட்டன் கேமரா.. ஹலோ… ஹலோ.. நான் பேசுறதைக் கேட்கிறீங்க இல்லையா?”

“கிட்ட வராதே,கிட்ட வராதேடா ராஸ்கல்”-என்றவள் இருவர் முகத்திலும் கீழே கிடந்த மண்ணை எடுத்துத் தூவினாள்.

“ஹேய்… த்த்தூ…. த்தூ….”என வாய்க்குள் சென்று விட்ட மண்ணைத் துப்பிய விஷ்ணு “மேடம் ப்ளீஸ் காம் டௌன்….” என்றான்.

“பக்கத்தில் வராத. நான்.. நான் இந்தக் கல்லைத் தூக்கி உன் தலையில் போடுவேன்”

“ஷ்ஷ்ஷ்ஷ்…. இது ஒரு சைக்கோ கேஸ் போலவே!”-என எரிச்சலுற்ற ரிஷி கையிலிருந்த சிகரெட்டைத் தூக்கியெறிந்து விட்டு அவர்களருகே ஓடிச் சென்றான். அவனுக்கு முதுகுகாட்டித் தன் முன்னே நின்றிருந்த இருவரிடமும் போராடிக் கொண்டிருந்தவள் கடைசியாக செங்கல்லை அவர்கள் மீது எறியப்பார்த்த போது பின்னிருந்து அவளது இருகைகளையும் அழுந்தப் பற்றினான் ரிஷி.

ரிஷி அவள் கைகளைப் பற்றியதும் மொத்தமாய்ப் பயந்து விட்டவளின் முக்காடு விலகி விட.. அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்து “மேடம் நான் சொல்றதைக் கேளுங்க. ப்ளீஸ் காம் டவுன்… காம் டவுன்” என்று கத்தினான்.

கால்களை உதறி “ராஸ்கல்ஸ் விடுங்கடா என்னை… விடுங்க….. ப்ளீஸ். என்னை விட்டுடுங்க…”என்று கத்தித் தன்னிடமிருந்துத் திமிறியவளை அடக்க முடியாமல் திணறிப் போனான் ரிஷி.

“ஏய்… லுக் அட் மீ. என்னைப் பார். கம் டூ யுவர் சென்ஸஸ்.. இது வெறும் விளையாட்டு தான்.. ஹேய்… நான் சொல்றதைக் கேளு”என்றவன் அவள் கன்னத்தைப் பற்றித் தன் புறம் திருப்பினான்.

அந்த மஞ்சள் நிறத் தெரு விளக்கின் ஒளி வழியே தனக்கு வெகு அருகில் விடாது திமிறியபடி.. முழு பயத்துடனும்,மிரட்சியுடனும் தெரிந்த அந்த முகத்தின் கண்களையும்,இதழ்களையும் கண்ட ரிஷிக்கு ஒரு நொடி சப்தநாடியும் நின்று போனது.

அவனது ஒரு கரத்தினுள் சிக்கி விட்டிருந்தத் தனது இருகைகளையும் அசைக்க முடியாதுத் திணறியவளுக்கு அவனிடமிருந்து புறப்பட்ட வாசம் மேலும் பயத்தைத் தூண்டியது.

அவளது கன்னத்தின் மீது பதிந்திருந்த அவனது விரல்களின் ஸ்பரிசம் அவளுக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். ஒரு நொடி கண்களைப் பெரிதாய் விரித்துப் பின் உடல் விறைத்துத் தன்னை விடுவிக்க முயன்றவள்…. முடியாமல் அழுகையுடன் நின்றாள்.

“மேடம் இது சேனல் ரெட்-ஓட ஹிட்டன் கேமரா ஷோ. நீங்க நினைக்கிற மாதிரி காருக்குள்ள யாருமில்ல. அந்தப் பெண் குரல் வெறும் ரெகார்டட் வாய்ஸ் தான். நாளைப்பின்ன, யாராவது இப்படிக் கற்பழிக்கப்பட்டா எனக்கென்னன்னு போகாம.. மக்கள் உதவி செய்யனும்ன்றதுக்காக நாங்க இந்த வீடியோவை ஷூட் பண்ணிட்டிருக்கோம். ப்ளீஸ்… நாங்க சொல்றதைக் கேளுங்க. காம் டவுன்..” – என்று ஒரு புறம் விஷ்ணு விடாது கத்திக் கொண்டிருக்க… ரிஷி இமைக்க மறந்து சிலையாகிப் போயிருந்தான்.

இது எதையும் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் அவன் கைகளிலிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தவள் தன் முழு பலத்துடன் ஓங்கி அவன் காலை மிதித்தாள். நிலைகுலைந்து சட்டெனக் கீழே விழுந்தவனைப் பொருட்படுத்தாமல் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு ஓட்டமாய் ஓடி விட்டாள்.

அவள் தள்ளியதும் நடப்பிற்கு வந்த ரிஷி நொடியும் யோசிக்காமல் அவள் பின்னேயே ஓடினான்.

“பாஸ்… பாஸ்…. டேய்,இவர் ஏன் டா ஓடுறாரு?” – நந்து.

தன் சக்தி முழுதையும் திரட்டி உயிரைக் கொடுத்து ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவள் போன்று திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தவள் ஒரு இருட்டுத் தெருவுக்குள் மறைந்து போனாள்.

டீக்கடையில் தேநீர் அருந்தியபடி நின்றிருந்த அர்ஜூன், ரிஷி ஒரு பெண்ணின் பின்னே தலைதெறிக்க ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு நொடியும் தாமதிக்காமல் தொடர்ந்து ஓடி வந்தான்.

அவளைத் தேடி நான்கு புறமும் ஓடியவனைப் பிடித்து நிறுத்தியவனிடம்.. “கை..கையை விடு அர்ஜூன், நான் அவளைத் தேடனும். அர்ஜூன்.. கையைவிடு. கையை விடுடா இடியட்”-என்று ஆங்காரத்துடன் கத்தியவனை ஓங்கி அறைந்தான் அர்ஜூன்.

ஓடத்துடிக்கும் கால்களைக் கட்டுப்படுத்த முடியாமல் நிலையின்றி அலைபாய்ந்து கொண்டிருந்தவன் “அர்ஜூன், அர்ஜூன்… நான் போகனும்டா. நான் அவளைத் தேடனும். பத்து நிமிஷத்துக்கு முன்னாடி வரை என் கண் முன்னாடியிருந்தவ… சட்டுன்னு மறைஞ்சு போயிட்டா டா. நான் அவ பின்னாடி போகனும். என்னை விடு….” என்று திமிறினான்.

“நிதானத்துக்கு வாடா முட்டாள். இன்னும் நீ பதினெட்டு வயசு சின்னப் பையனில்ல. நடுராத்திரில பைத்தியக்காரன் மாதிரி ரோட்ல ஓடிட்டிருக்க?, வாட் த ஹெல் ஆர் யூ டூயிங்க் ப்ளடி?”-என அர்ஜூன் அவனது தோள்களைக் குலுக்கியதும் தலைமுடியை அழுந்தக் கோதி… அருகேயிருந்த கடை வாசலில் அமர்ந்தான்.

“நான் அவளைப் பார்த்தேன் டா”

“அவ-ன்னா?”

ஒரு நொடி பதிலின்றி அமைதியானவன்.. மெல்ல… “ஹ…ஹரிணி” என்றான்.

“உளறாதே ரிஷி”

“இ..இல்லடா.. நி..நிஜமா பார்த்தேன். என் மேல சத்தியமா பார்த்தேன் டா. என்னை நம்பு ப்ளீஸ்..”

ஷ்ஷ்ஷ்ஷ்… பழையபடி ஆரம்பித்து விட்டான். சேனல் ரெட்டில் வேலைக்குச் சேரும் முன்பு வரை இப்படித் தான் தெருவில் பார்க்கும் பெண்களையெல்லாம் ஹரிணி,ஹரிணி என்பான். மாறி விட்டான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எதற்காக முதலிலிருந்து ஆரம்பிக்கிறான்?

“ரிஷி… ரிஷி… எழுந்திருடா. வா.. போகலாம்”

வேகமாய் அவன் கைகளைத் தட்டிவிட்டுத் தள்ளி நின்றவன் “எ..எங்க வரச் சொல்லுற?, பத்து வருஷமா.. ஒவ்வொரு நிமிஷமும் எவளை நினைச்சுப் பைத்தியமா அலையுறேனோ.. அவளை நான் பார்த்தேன்னு சொல்றேன். போகலாம்ன்னு சொல்ற?, அர்ஜூன்… உனக்கு என்னடா ஆச்சு?, நான் அவளைக் கண்டுபிடிக்காம இங்கிருந்து வர மாட்டேன்”

“முட்டாள்.. முட்டாள்.. அப்படியே அறைஞ்சேன்னா தெரியும். ஆளில்லாத ரோட்ல ஏதோ ஒரு இருட்டு சந்துக்குள்ளே மறைஞ்சு போன ஒருத்தியை எங்க போய்டா தேடுவ?, பார்க்குற பொண்ணெல்லாம் ஹரிணி இல்லடா ரிஷி. சின்னப் பையன் மாதிரி நீ அழுது,வடிஞ்ச காலமெல்லாம் கடந்து போச்சுடா. 29 வயசு உனக்கு. இன்னும் அசிங்கமா ரோட்ல ஓடிட்டிருக்கியேடா?”

“அர்ஜூன்.. நான் அவளைத் தான் டா பார்த்தேன். அய்யோ!, எப்படி உன்னை நம்ப வைப்பேன்!!”

“சரி, நீ அவளைத் தான் பார்த்த. ஓகே?, நான் நம்புறேன். இந்த இடத்துல இப்படியே உட்கார்ந்துட்டா அவ வந்துடுவாளா?, இல்ல தானே?, முதல்ல நம்ம ஷூட் பண்ணதை செக் பண்ணலாம். அவ தான்னு கன்ஃபார்ம் ஆயிட்டா.. அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்கலாம். சரியா? எழுந்து வாடா. வாடா ரிஷி….. ப்ளீஸ்டா” – எனக் கெஞ்சிக் கூத்தாடி அவன் கையைப் பற்றிக் கொண்டு காருக்கு அழைத்துச் சென்றான் அர்ஜூன்.