அத்தியாயம் - 1

கண்ணே.. என் முன்னே கடலும் துள்ளாது..

பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது!

-ஜென்டில் மேன் படத்துல வர்ற ஒட்டகத்தக் கட்டிக்கோ பாடல் இது! ஃபாஸ்ட் பீட் தான்! ஆனாலும் ‘உள்ளங்கைத் தேனே.. கள்வன் நான் தானே’-ன்னு எஸ்.பி.பி வாய்ஸ் குழையும் போது காதோரம் குறுகுறுக்கிறதை மறுக்கவே முடியாது!

காது,மூக்கின் வழி உட்புகுந்து ரத்தத்தை உறையச் செய்து கொண்டிருக்கும் பனிக் காற்று நாம் மார்கழி மாதத்திலிருப்பதை.. இல்லையில்லை, இப்போது நாமிருக்கும் இடத்திற்கேற்பக் கூற வேண்டுமானால் டிசம்பர் மாதத்திலிருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தது. லேசான பனிப்பொழிவு, அந்நிய பாஷை பேசியபடி கடந்து செல்லும் வெள்ளை நிற மனிதர்கள், சுற்றிலும் தெரியும் கிறிஸ்துமஸ் கேளிக்கைகள்! ஆம், நாம் நின்று கொண்டிருப்பது ஜெர்மனியின் பழமை வாய்ந்த, புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றான ட்ரெஸ்டன்.

மனிதக் கூட்ட நெரிசலுக்குள் முந்திச் சென்றபடி சற்று நிமிர்ந்து நோக்கினால் ‘ட்ரெஸ்டன் ஸ்ட்ரீசெல் கிறிஸ்துமஸ் மார்கெட்” என்கிற பெயர்ப்பலகை நம்மை வரவேற்கிறது. அதைக் கடந்து உள்ளே நுழைந்தால்…… வாவ்வ்வ்வ்! நம் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து, குளிரில் வறண்டிருந்த நம் இதழ்களில் ஒரு புன்னகை தோன்றுகிறது. பின்னே!, நம் ஊரின் சித்திரைப் பொருட்காட்சியையே வாயைப் பிளந்தபடி சுற்றி வரும் நமக்கு, இது எவ்வளவு பெரிய அதிசயம்?, இதுவல்லவா பிரம்மாண்டம் என்பது! அடேங்கப்பாஆஆஆ!

தின்பண்டங்களின் வாசமும், மதுவின் நெடியும், கிறிஸ்துமஸ் பாடல்களும், எதிர்ப்பட்ட முகங்களிலெல்லாம் தென்பட்ட உற்சாகமும், “ஃப்ரோஹ்லிகே வெய்ஹ்னக்டன்” (மெர்ரி கிறிஸ்துமஸ்)-களும்.. அட,அட,அட!! நம்மைத் துள்ளிக் குதிக்கச் செய்வதில் ஆச்சரியமொன்றுமில்லை.

திடீரென மக்களிடத்தில் தெரிந்த பரபரப்பு ஆர்வமூட்ட, சாலையின் இருபுறமும் நின்றபடி எதையோ எதிர் நோக்கிக் காத்திருந்தவர்களின் இடையே நாமும் நின்றோம்.

பப்பபரப்ப்ப்ப்…. என ட்ரம்பெட் வாசித்தபடி வரிசையாக முன்னே நடந்து வந்த மனிதர்களைத் தொடர்ந்து குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டி ஒன்று ஆஜானுபாகுவான மனிதர்கள் இருவரால் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

சற்று உற்று நோக்கினால் அந்த வண்டி முழுதையும் மிகப் பெரிய கேக் ஒன்று நிறைத்திருப்பது தெரிந்தது. ஆளாளுக்கு செல்ஃபோன்களைத் தூக்கிப் படமெடுக்கத் தொடங்க, நாமும் கூட 2 படங்களை க்ளிக்கிக் கொண்டோம்!

இந்த உற்சாகக் கூவல்களையும்,நம் ஆச்சரியப் பார்வையையும் கடந்து உள்ளே சென்ற வண்டியின் பின்புறம் ‘ட்ரெஸ்டன் ஸ்டோல்லென் ஃபெஸ்டிவல்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இப்போது கூட்டம் முழுதும் சாரட் வண்டியைத் தொடர்ந்து பின்னே சென்று இதற்காகவே அலங்கரிக்கப்பட்டிருந்த மேடை முன்னே நின்றது.

தொடர்ந்த 30 நிமிடங்கள் ஜெர்மன் பாஷையில் வள,வளவென பேசிக் கொண்டிருந்த மனிதர்களின் புறம் நம் பார்வை செல்லக் கூட இல்லை. ஏனெனில் மேடையில் நின்றிருந்த ‘அவன்’ நம் கவனம் முழுதையும் கயிறு கட்டி இழுக்காதக் குறையாகத் தன் புறம் இழுத்துக் கொண்டிருந்தான்.

பொதுவாகவே உயரமான ஆண்கள் என்றால் நமக்கு ஓர் ஈர்ப்பு, அதிலும் கூடுதலாக முக லட்சணமும் அமைந்து விட்டால்.. ம்க்க்க்க்க்கும்!, நம் பார்வை ஒரு திருட்டுத்தனத்தைத் தாங்கிக் கொண்டு கொஞ்சம் கூட வெட்கமின்றி படாரெனத் தாவி விடும். இன்றும் கூட அப்படித் தான்!

மேடை முழுதும் வெள்ளை நிற கேப்,நீல நிற பேட்ச் சகிதம் செஃப் உடையுடன் 10,12 பேர் நின்றிருந்தனர். சுற்றிலுமிருந்த ஜெர்மன் செஃப்களைக் குள்ளமாக்கிக் கொண்டு ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் நின்றிருந்த அவன் நிச்சயம் ஆசியாவைச் சேர்ந்தவனாயிருக்க வேண்டும். இந்தியனாகக் கூட இருக்கலாம்!

மாநிறத்தில் இருந்தவனது முகத்தில் ஒரு பருவோ,மருவோ.. கூடவே புன்னகையோ.. மருந்துக்கும் இல்லை. ஏதோ யோசனையில், உர்ரென்று முகத்தை வைத்திருந்தான். பரவாயில்லை!, பல்லைக் காட்டி விட்டானானால் நம் வாயில் வழிந்து கொண்டிருக்கும் நயாகராவை யார் துடைப்பது!, வேண்டாம் வினை!

ஹ்ம்ம், எங்கே விட்டேன்! மாசு மருவற்ற சருமம்! யெஸ்! ஆணுடைய முகம் வழுவழுப்பாக இருந்து என்ன பிரயோஜனம்?, மனது கொஞ்சம் நொடித்துக் கொள்கிறது.

வெகு அடர்த்தியான புருவங்களைத் தொடர்ந்து கொஞ்சம்ம்ம்ம் முட்டைக் கண்கள் தான்! சாதாரணமாகப் பார்ப்பதே உறுத்து விழிப்பதைப் போல் தெரிகிறது. அதைத் தொடர்ந்த எடுப்பான நாசி, அளவான இதழ்கள்! கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு,கால்களை அகட்டி வைத்தபடி அவன் நின்றிருந்த தோற்றம் ஊர்க் காவலனை நினைவு படுத்துகிறது.

அதற்குள் அருகிலிருப்பவர்கள் அவனை அழைக்க.. அட…! ஜெர்மன் பாஷையைப் பிசிறில்லாமல் பேசுகிறானே! வெர்ரி குட்! நமக்குத் தெரிந்ததெல்லாம் ‘குட்டன் மார்கன், குட்டே நஹ்ட்” மட்டும் தான்!

அவர்களது சொற்படி இரண்டடி முன்னே நடந்து வந்து நின்றவன் மீண்டும் ‘காவலன்’ போஸ் கொடுக்க, அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய கத்தி ஒன்றை (இல்லை அரிவாள் எனச் சொல்லலாம்!) பருமனான செஃப் ஒருவர் வள,வள ஜெர்மன் பாஷையில் ஏதோ கூறியபடி அவன் கையில் கொடுக்க, இதழ் பிரிக்காமல் புன்னகைத்தவன் பவ்யமாகக் குனிந்து அந்தக் கத்தியை வாங்கிக் கொண்டான்.

பின் மேடையிலிருந்து இறங்கி வந்து சாரட் வண்டியின் மீது ஒரே தாவலில் ஏறியவன் ஜனக் கூட்டத்தை நோக்கிக் கத்தியைக் காட்டி ஜெர்மன் பாஷையில் ஏதோ கூவியபடி ஓங்கி ஒரே போடாக கேக்கை வெட்டினான்.

பிளந்து கொண்ட கேக்கைக் கண்டு மக்கள் அனைவரும் குதூகலமாகக் கரகோஷமெழுப்பி தங்கள் சந்தோசத்தைச் சொல்ல.. மற்ற செஃப்களும் வண்டியிலேறி கேக்கைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாக்கெட்டிலிட்டு விற்கத் தொடங்கினர்.

இப்போது நம் கண்கள் கேக்கின் மீது சென்று விட்டது. உலர்ந்த திராட்சை,பாதாம்,பிஸ்தா.. ஓ..காட்… கையைத் துடைத்தபடி அவன் எங்கோ போகிறான். அய்யோ! கேக்கை விட முடியாதே! ஆபத்துக்குப் பாவமில்லை, முன்னே நின்றிருந்த கவுன் பாட்டியை இடித்துத் தள்ளி நாமும் ஒரு பாக்கெட்டை வாங்கிக் கொண்டு அவனைத் தொடர்ந்தோம்.

மைக் பிடித்த ரிப்போர்ட்டர் ஒருவர் அவனிடம் ஜெர்மனில் ஏதோ கேட்க அவன் பதிலளித்தான். அதன் சாராம்சம் இதோ! ஹ்ம்ம்ம், மேன்லியான வாய்ஸ்! ஹிஹிஹி

“ஸ்டோல்லென் என்றழைக்கப்படும் இந்தக் கேக் பாரம்பரியமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ட்ரெஸ்டன் மாகாணத்தில் தயாரிக்கப்படுகிறது. 60 பேக்கரிகள் இணைந்து தயாரித்த இந்தக் கேக் மொத்தமாக 3.5 டன் எடை கொண்டது. 1.2 டன் மாவுடன்,750 கிலோ வெண்ணை, 200 கிலோ சர்க்கரை,1.5 மில்லியன் சுல்தானாக்கள் கொண்ட இந்த கேக் ட்ரெஸ்டன் மக்களால் விரும்பி உண்ணப்படும் பண்டமாகும். இதன் தயாரிப்பில் நானும் பங்கெடுத்துக் கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி”

-லேசான சிரிப்புடன் பேசி முடித்தவனின் ப்ளூ பேட்சை உற்று நோக்கினால் அவன் பெயர் தெரிகிறது.

Shane Nicholas – ‘N’ cakes ஷேன் நிக்கோலஸ் – ‘N’ கேக்ஸ். நம் வர்ணனை இது வரை போதும்! அடுத்தப் பத்தியிலிருந்துக் கதை தொடங்குகிறது.

ஷேன் நிக்கோலஸ்- ரிப்போர்ட்டரிடம் பேசி முடித்ததும் சுற்றிலும் கண்களைப் பரப்பித் தன் நண்பன் காண்டீபனைக் கண்டு கொண்டவன் விறுவிறுவென அவனிடம் சென்றான்.

“கிளம்பலாமா?, எத்தனை மணிக்குக் கோர்ட்டில் இருக்கனும்?” –ஷேன்.

“மத்தியானம் 2 மணிக்கு. மச்சான்,இப்போவே போயாகனுமா?, கொஞ்ச நேரம் ஃபெஸ்டிவெல எஞ்சாய் பண்ணலாம்ல?” – தீபன்

கூட்டத்தை விலக்கியபடி முன்னே நடந்து கொண்டிருந்தவன் நின்று நண்பனை முறைத்தான்.

“உன்னால தான் இவ்ளோ பிரச்சனையும்னு உனக்கு எப்போடா புரியப் போகுது?, நம்ம பேக்கரிக்குன்னு இருந்த ரெபுடேஷன் பாதி அழிஞ்சுடுச்சு. என்ன பண்ணி இழந்ததை மீட்குறதுன்னு நான் ஒவ்வொரு நிமிஷமும் போராடிட்டு இருக்கேன். நீ என்னடான்னா.. ராட்டினம் ஏறலாமா,பஞ்சு மிட்டாய் சாப்பிடலாமான்னு சின்னப்பையன் மாதிரி கேட்டுட்டிருக்க?,”

“சும்மா என்னைத் திட்டாத ஷேன். நான் பண்ணதுல என்ன தப்பிருக்கு?, இரண்டு ஆம்பளைங்க கல்யாணம் பண்ணிக்கிறதெல்லாம்.. ச்சி,ச்சி என்னடா கண்றாவி? இந்தக் கருமத்துக்கு நாம வெட்டிங் கேக் செஞ்சு கொடுக்கனுமாம். சுத்த பிராமணனான நான், இந்த மாதிரி பாவச் செயலுக்குத் துணை போக மாட்டேன்”

“கேனக்…., என்னை கெட்ட வார்த்தை பேச வைக்காத. சேம்-செக்ஸ் மேரேஜை ஜெர்மன் கவர்மெண்ட்டே லீகலைஸ் பண்ணிடுச்சு. நீ இந்தியால இருந்து வந்து இங்க பொழப்பு நடத்திக்கிட்டு அவங்க கூட சண்டைக்குப் போவியா?, இன்னிக்கு கோர்ட்ல பெனால்ட்டி கட்டிட்டா, உன் பங்குன்னு இந்த பேக்கரில ஒரு பைசா கிடையாது. நல்லா ஞாபகம் வச்சுக்கோ! பரதேசி, இந்த நாய்னால, காசு போச்சு, இவ்ளோ நாளா நான் சம்பாதிச்ச பேர்,புகழ் எல்லாம் போச்சு” – எரிச்சலுடன் தலை கோதிய நண்பனைக் கண்ட காண்டீபனுக்கும் உள்ளே கொஞ்சம் உதறல் தான்.

சாதாரணமாக.. வெகு சாதாரணமாக அவன் செய்த விடயம் இன்று பெரு உருவமெடுத்து அவர்களது இத்தனை வருட உழைப்பையும் சுரண்டிச் செல்லுமென்று கனவிலும் நினைக்கவில்லை.

நடந்தது இது தான். ஓரினச் சேர்க்கையும், ஓரினச் சேர்க்கையாளர்களிடையே நடக்கும் திருமணங்களும் அங்கே சாதாரண ஒன்று தான். அப்படி ஒரு ஜோடி தங்களது திருமணத்திற்காக ‘வெட்டிங் கேக்’ செய்ய ஆர்டர் கொடுத்தது இவர்களது ‘N-கேக்ஸ்’ பேக்கரியில்.

தொலைக்காட்சியிலும்,செய்தித்தாளிலும் மட்டுமே இம்மாதிரியான விஷயங்களைப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்தப் பழமைவாதியான தீபனால் தன் கண் முன்னே நிற்கும் ஜோடியை நம்பவே முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

அடக் கருமாந்திரமே என்றெண்ணிக் கொண்டவன் கொஞ்சமும் யோசிக்காமல் முகத்திலடித்தாற் போல் ‘no cakes for a gay couple’ என்று விட்டான்.

இது என் கடை. இங்கு யார் வந்து செல்ல வேண்டுமென்பதைத் தீர்மானிப்பது என் உரிமை என்கிற ரீதியில் அவன் செய்த செயல் அடுத்த ஒரே நாளில் பூகம்பமாய் அவனை ஆட்டி விட்டது.

கடை வாசலில் போலீஸ் வண்டி வந்து நிற்கும் வரை விசயமறியாத ஷேன் நடந்தவற்றை அறிந்து கொண்ட போது தலையலடித்துக் கொள்ளாத குறையாகக் கடுப்பாகி விட்டான்.

“நாம பண்றது வியாபாரம் டா. அவங்க காசு கொடுக்கறாங்க, நாம பண்டம் விற்கிறோம். இதுல அவன் பர்சனல் விசயம் உனக்கு எதுக்குடா?,” என்று காய்ந்தவனிடம் “எனக்குன்னு ஒரு கொள்கை இருக்கு. கண்டவங்களுக்கெல்லாம் கேக் விற்க முடியாது” என்று தீபன் கறாராகக் கூற அவன் மீது கொலைவெறித் தாக்குதலே நடத்தி விட்டான் ஷேன்.

உழைப்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டு சிறிய அளவில் அவன் ஆரம்பித்தத் தொழில் இன்று ஓரளவு பெயர் பெற்று நன்றாகச் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் படுபாவி அனைத்தையும் கெடுத்து விட்டான்.

ஷேன் எவ்வளவோ சமாதானம் பேசியும், தீபன் மன்னிப்புக் கோரியும் கூட அந்த ஜோடி தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை மறக்கத் தயாராக இல்லை. கடைசியில் விஷயம் கோர்ட் வரை சென்று மான நஷ்ட வழக்காக மாறி, அதற்கு ஈடாக பெரிய தொகை ஒன்றை பெனால்ட்டியாகக் கொடுக்க வேண்டிய நிலையில் நிற்கின்றனர்.

காசு போனால் பரவாயில்லை! சம்பாதித்துக் கொள்ளலாம்! ஆனால் இத்தனை வருடமாகப் பெற்ற நற்பெயருக்கல்லவா களங்கம் ஏற்பட்டு விட்டது?,

லோக்கல் நியூஸ் பேப்பர்கள் பேக்கரியின் பெயரைப் பெரிதாகப் போட்டு மானத்தை வாங்கியதிலிருந்து கடைக்கு வரும் கூட்டம் குறைந்து போனது. வாடிக்கையாளர்கள் கூட ஆளைப் பார்த்துத் தான் விற்பனை செய்கிறார்களா எனப் பொறிந்து தள்ளிய போது முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வதென்றே தெரியவில்லை ஷேனுக்கு. ரொம்பவும் போராடித் தான் இந்த ஸ்டோல்லன் ஃபெஸ்டிவலில் இவன் பங்கெடுத்துக் கொண்டதே!

கஷ்டத்திலும்,துக்கத்திலும் உடனிருந்த நண்பனாயிற்றே! உண்மையை விளக்கி அவன் மீது குற்றம் சொல்லி விட்டுத் தப்பித்துக் கொள்ளவும் மனமில்லை.

இப்போதைய அவனது யோசனையெல்லாம் கப்பலேறிய மானத்தை எப்படித் திரும்பத் தரையிறக்குவது என்பது தான்! ஏதேனும் செய்தாக வேண்டும். மக்களை மறுபடி ஈர்க்கும் மந்திரக் கோல் என்னவாயிருக்கும்!

“இன்னொவேடிவ்வா யோசிக்க ஒரு வகையான மூளை வேணும். அது என் கிட்ட மட்டும் தான் இருக்கு” – பெருமையாய் சுடிதார் காலரைத் தூக்கிச் சிரித்தபடி மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொள்ளும் அவள் முகம் கொஞ்சம் கூடச் சம்பந்தமில்லாத இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொந்தரவு செய்கிறது. ப்ச்!

இந்த யோசனைகளுக்கு நடுவில் இருவரும் பேக்கரியை அடைந்திருந்தனர். காலியான இருக்கைகளையும்,சோக முகத்துடன் காட்சியளித்த பணியாளர்களையும் கண்டு விட்டு தன்னறைக்குச் சென்றவன் இருக்கையில் கண் மூடிச் சாய்ந்து விட்டான். இனி என்ன செய்வது???