அத்தியாயம் - 8

டேய் வெற்றி...”

காலை நேர பரபரப்பில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தவனை செல்ஃபோனில் அழைத்திருந்தாள் ஜமுனா.

“சொல்லு டி”

“உன்னால எனக்கு எவ்ளோ கஷ்டம் தெரியுமா டா?”

“அப்டியா?, என்ன-ல்லாம் கஷ்டம்ன்னு நைட் பத்து மணிக்கு மேல சொல்லு. பொறுமையாக் கேட்குறேன். இப்போ எனக்கு வேலை இருக்கு. ஃபோனை வை”

“ப்ச், டேய்.. ஒழுங்காக் கிளம்பி தாஷி ஸ்கூலுக்கு வந்து சேரு. உன் பொண்ணு ஏதோ பெரிய சம்பவமாப் பண்ணி வைச்சிருக்கா போல. ஸ்கூல்-லயிருந்து எனக்கு ஃபோன் வந்தது”

“ஏன் என்ன பண்ணுனா?, அவளுக்கு ஒன்னுமில்லையே!”

“அவளுக்கென்ன? நல்லாத் தான் இருக்கா!, இவளால தான் ஒரு பையன் நெத்தி வீங்கிப் போய்.. வுடாமக் கண்ணீரை சிந்தினு இருக்குறானாம்”

“ச்ச அவ்ளோ தானா?, பூலான் தேவி மாதிரி என் பொண்ணை வளர்த்துட்டிருக்கேன் பார்த்தியா! என்னை நினைச்சா எனக்கேப் பெருமையா இருக்கு டி”

“நான் கெட்ட வார்த்தை பேசுறதுக்கு முன்னாடி, மரியாதையா நீயே கிளம்பிரு”

“ப்ச், பொதுவா பேரண்ட்ஸ் மீட்டிங் எல்லாம் நீ தான அட்டெண்ட் பண்ணுவ?, தம்மதூண்டு மேட்டர்க்கு எதுக்குடி என்னையக் கூப்பிட்ற?”

“டேய்.. அடி வாங்குனப் பையனோட பேரண்ட்ஸூம் வந்திருக்காங்களாம். தப்புப் பண்ணது நம்ம பொண்ணு. எனக்கு சங்கடமா இருக்குடா. நீயும் இருந்தா.. ஏதாவது பேசி சமாளிக்கலாம். ப்ளீஸ்.. வா டா”

-கெஞ்சிக் கேட்டுக் கொண்டவளை மதித்து அவனும் தாஷியின் பள்ளிக்குக் கிளம்பினான்.

பிரச்சனை இது தான். தனது ஸ்நாக்ஸ் பாக்ஸிலிருந்த பாதாம் பருப்பைத் தெரியாமல் எடுத்துத் தின்றதற்காக.. ஒரு சிறுவனின் கையை முறித்துத் தாஷி பாப்பா கீழே தள்ளியதில்.. அந்தப் பையன் சுவரில் மோதிக் கொண்டு நெற்றியை வீங்க வைத்திருந்தான்.

“வெட்டி நீ ஜம்முக் கைய முறுக்குற மாதிரி நானும் சும்மா இவன் கைய மட்டும் தான் முறுக்குனேன், அவனா தான் போய் சுவத்துல முட்டிக்கிட்டான்” – என்று தாஷி தன் தரப்பு வாதத்தை முன் வைத்த போது இருவருக்கும் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வதென்றேப் புரியவில்லை.

வெற்றியை ஒரு காட்டுமிராண்டிக் கணவனைப் போல் சித்தரித்து, ஜமுனாவை அவனிடம் தினம்,தினம் அடி வாங்கிச் சாகும் பாவப்பட்டப் பெண்ணினமாக அந்த அறையிலிருந்தோர் எண்ணிக் கொள்ள.. “டேய்.. இன்னாங்கடா, இன்னாத்துக்கு டா என்னைய முறைச்சுப் பார்க்குறீங்க?” என்று முணுமுணுத்த வெற்றி... சங்கடமான முகத்துடன்..

“அ....அ..அது சும்மா விளையாட்டுக்குப் பண்றது மேடம்” என்றான்.

“நீங்க விளையாட்டுக்குப் பண்றீங்களோ, சீரியஸ்-ஆ பண்றீங்களோ! குழந்தைங்க நாம பண்றதைத் தான் சார் ஃபாலோ பண்ணுவாங்க! அவங்க முன்னாடி எப்பவும் கேர்ஃபுல்-ஆ இருங்க” – என்ற அர்ச்சனையோடு இவர்களை ஒதுக்கிய பிரின்சிபால் தாஷியை அந்தச் சிறுவனிடம் மன்னிப்புக் கேட்குமாறுக் கூற... அவள் நிமிர்ந்து வெற்றியின் முகம் பார்த்தாள்.

‘அய்யோ இப்போ சாரி கேக்காட்டிச் சும்மா வுட மாட்டானுங்களே’ என்று எண்ணிக் கொண்ட வெற்றி அந்தச் சிறுவனை நோக்கி..

“அவளோட ஸ்நாக்ஸை நீ திருடி சாப்பிட்டது தப்பு தான?” – என்று வினவினான்.

“தப்பு பண்ணது உங்க பொண்ணு! என் பையனை ஏன் சார் மிரட்டுறீங்க?” – பையனின் அம்மா இடையில் கத்துவதைக் கண்டு கொள்ளாமல்..

“நீ சொல்லு தம்பி” என்றவன் தொடர்ந்து “நீ திருடி சாப்பிட்டதால தான தாஷி கோபப்பட்டா?, அவளுக்குத் தெரியாம எடுத்து சாப்பிட்டதுக்குப் பதிலா, நீ அவக்கிட்ட நேராவே கேட்ருந்தா.. அவளே கொடுத்திருப்பா” – என்றவனின் காதில்..

“இவன் க்ளாஸ்ல இருக்கிற எல்லாரோட ஸ்நாக்ஸையும் எடுத்துத் தின்பான் வெட்டி, அதனால நான் இவன் கேட்டாலும் குடுக்க மாட்டேன்” என்று தாஷி முணுமுணுக்க.. கைப்பிடித்து அவளை அடக்கியவன்..

“நீ தெரியாம எடுத்து சாப்பிட்டதால தான் இந்தப் பிரச்சனையே வந்தது. அதனால நீ தாஷிக் கிட்ட ஃபர்ஸ்ட் சாரி கேளு. அப்புறம், தாஷி உன்னை அடிச்சதுக்கு சாரி கேட்பா” என்றான்.

திருதிருவென விழித்தபடி அவன் தன் தாயைப் பார்க்க அவளோ உறுத்து விழித்து நோ என்றாள். அவளைத் தொடர்ந்து அவன் அவனது தந்தையை நோக்க.. அவரோ ‘சாரி கேளு’ என்றார்.

பரவாயில்லை! அம்மா சரியில்லன்னாலும் அப்பன் நல்லவன் தான் போல!

“சாரி தாஷி” – அவன் கூறியதும் தாஷியும் “சாரி அஸ்வத்” என்றாள்.

ஒருவழியாகப் பஞ்சாயத்தை முடித்துக் கொண்டு அனைவரும் வெளி வருகையில் அந்தச் சிறுவனின் கையில் வெற்றி ஒரு சாக்லேட்டைக் கொடுக்க.. அவன் அன்னையோ “அஸ்வத், கிவ் இட் பேக்” என்று சிடுசிடுத்தாள். அதற்குள் அவன் தந்தை இடைபுகுந்து “வாங்கிக்கோ டா” என்றவன் “சாரி மிஸ்டர்.வெற்றி!, அவ கொஞ்சம் கோபத்துல இருக்கா” என்றான்.

“டெய்லி காலைல பத்து நிமிஷம் தியானம் பண்ண சொல்லுங்க சார்! கோபம் குறைய வாய்ப்பிருக்கு” – என்ற வெற்றியை அந்தப் பெண் முறைத்துப் பார்க்க.. நமுட்டுச் சிரிப்புடன் ஜமுனாவையும்,தாஷியையும் இழுத்துக் கொண்டு நகர்ந்து விட்டான்.

“பெண்கள் சில்லறைகள்-ன்றது எவ்ளோ சரியான வாக்கியம்” – வெற்றி

“ஆமா! ஆண்கள் மட்டும் ரூபா நோட்டு”

“ஏய்... ஆண்கள் அன்பின் அரக்கர்கள் டி”

“வாயை மூடு! உன்னால என் மானம் போனது தான் மிச்சம்! குழந்தை முன்னாடிக் கெட்ட வார்த்தை பேசாத, அடிச்சு விளையாடாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!”

“சரி வுட்றி வுட்றி!, இனி மாத்திக்கிறேன்”

“..........” – பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டு நடந்தவளைக் கண்டுச் சிரித்துத் தாஷியைத் தூக்கிக் கொண்டவன்..

“என் புள்ள என்ன அதுவா போய்-ஆ வம்பு பண்ணுச்சு!, இப்டித் தான் மீ இருக்கனும்! தப்புப் பண்ணா.. மண்டையைப் பொளக்கனும்! சரியா?” – என்றான்.

“புள்ளையக் கெடுக்குறதே நீ தான் டா! மொதல்ல அவளை இறக்கி விடு கீழ! சின்னப்புள்ள மாதிரி இன்னும் தூக்கி வைச்சுக்கிட்டு!”

“எனக்கு அவ எப்பவும் சின்னப்புள்ள தான் டி!” என்றவன் தொடர்ந்து தாஷியிடம் “நான் அவளைத் தூக்காம உன்னை மட்டும் தூக்குறேன்ல, அதான் அவளுக்குப் பொறாமை” என்றான்.

“ஏய்.. குழந்தைக்கிட்ட என்னடா பேசுற?” – என அதற்கும் குதித்தவளிடம் “இனிமே நாம தாஷி முன்னாடி கொஞ்சிப் பேசிக்கலாம். அப்போ தான் அவ பப்ளிக்ல நம்ம மானத்தை வாங்காம இருப்பா” என்று விட்டு “நான் உன்னை இனி டார்லிங்ன்னு கூப்பிடுவேன், நீ என்னை மாமா-ன்னு கூப்பிடனும். சரியா?” என்றான்.

“எங்க ஒரு தடவை கூப்பிடு பார்ப்போம், டார்லிங்ங்ங்ங்ங்” - வெற்றி

“மாமாஆஆஆஆ” – கன்னத்தை ஒரு புறமாகத் தூக்கிக் கொண்டு புருவத்தை உயர்த்தி அவள் அழைத்த விதம் படு கண்றாவியாக இருக்க..

“அப்டியே அம்மா,தாயே-ன்னு கூடச் சேர்த்துக்க! நீ ஒவ்வொரு தடவை கூப்பிடும் போதும் பாக்கெட்ல இருந்துப் பத்து ரூபா எடுத்துப் போட்றேன்”

“ஏய்ய் என்ன நக்கலா?”

“பின்ன என்னடி?, எப்பப் பாரு.. மூஞ்சிய உர்ருன்னு வைச்சுக்கினு முசுடு மாதிரி சுத்தினு இருக்குற! ஆசையா என்னைப் பார்க்குறது, வெட்கத்தோட சிரிக்குறது.. இந்த மாதிரி.. சராசரி பொண்ணுங்களுக்கு வர்ற எக்ஸ்ப்ரஷன் ஏதாவது உனக்கு வருதா டி?, ச்சை! என்ன மூஞ்சியோ!”

“ஏய்ய், இப்டித் தான் நான்! அதுக்கு இப்போ இன்னா பண்ணனும்ன்ற?”

“நீ ஒன்னும் பண்ண வேணாம் டி! நான் தான் அடுத்த 4 நாளைக்கு டெய்லி நைட் பாதாம் பால் குடிக்கலாம்ன்னு இருக்கேன்”

“ஏன்?”

“ஏன்னா... சனிக்கிழமை நைட் முக்கியமான மேட்டர்க்கு ப்ளான் பண்ணியிருக்கேன்.. அதான்..”

-அலட்டிக் கொள்ளாமல் போகிற போக்கில் அசால்ட்டாகக் கூறியவனைக் கண்டுப் பல்லை கடித்தாலும்.. சட்டென மறுபுறம் திரும்பிக் கொண்டவளுக்கு.. அநியாயத்திற்குச் சிரிப்பு வந்து தொலைத்தது.

அன்றிரவு சண்டை போட்டு சமாதானமாகியதிலிருந்து இப்படித் தான் உளறிக் கொண்டிருக்கிறான். பேசிப் பேசி வம்புக்கு இழுத்தாலும்.. பெரிதாக அவளிடம் உரிமை எடுத்துக் கொள்ளவில்லை. விருப்பு,வெறுப்பு என்று அவள் அதிகமாய்ப் பேசி வைத்ததில் உண்டானத் தயக்கமோ என்னவோ! ஆனாலும்.. நம்ப முடியாது! அவளது பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து இவன் அவ்வளவு சீக்கிரம் அடங்கிவிடும் ஆள் கிடையாது.

அன்று ஜமுனாவிற்கு மட்டும் விடுமுறையென்பதால் தாஷியையும்,வெற்றியையும் அனுப்பி விட்டு.. வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாள்.

சமைப்பதிலும்,உண்பதிலும் மட்டும் தான் அவன் கில்லாடி! சமையலறையைத் தவிர வீட்டின் எந்த பாகத்தையும் அவனால் சுத்தமாகப் பராமரிக்க முடியாது. அப்பனைக் கொண்டு பிள்ளையுமிருந்தது! அதனால் பொதுவாக ‘க்ளீனிங்’ வேலைகளெல்லாம் ஜமுனாவின் தலையில் தான் விழும்! தாஷி வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்துத் தான் அவள் இதையெல்லாம் செய்ய முனைவது! அவள் மட்டும் வீட்டிலிருந்தால்.. அவள் போடும் குப்பையைப் பொறுக்குவதிலேயே நாள் ஓடி விடும்.

ஒவ்வொரு அறையாகச் சுத்தப்படுத்தி முடித்துப் பின் குளித்து அவள் அக்கடாவென ஹால் ஃபேனின் முன்பு அமர்ந்திருந்த சமயம்.. வெற்றி வந்து சேர்ந்தான். பொதுவாக அவன் பகல் நேரத்தில் வீட்டிற்கு வரும் ஆள் கிடையாது! அவ்வப்போதுத் தாஷியை அழைத்து வரும் படிக் கேட்டால் கூட.. பெரும்போராட்டத்திற்குப் பிறகு தான் ஒத்துக் கொள்வான். அப்படியிருப்பவன் இன்று தானாக வீட்டிற்கு வந்திருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடன்...

“என்னடா இந்நேரத்துக்கு வூட்டுக்கு வந்துருக்கிற?, வேலை முடிஞ்சதா?”-என்றாள்.

“இல்ல” – என்றவன் ஃபிரிட்ஜைத் திறந்துத் தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்தபடி அவள் புறம் திரும்பினான்.

“இன்னாடி அப்டிப் பார்க்குற?, ஏன்? நான் வரக்கூடாதா?”

“நான் கெஞ்சிக் கேட்டாக் கூட ஓவர்-ஆ பண்ணிப்ப! இப்போ என்ன நீயாவே வந்திருக்க?”

“ப்ச்” என்றபடி பாட்டிலை மூடியவன் “நம்ம பிரசாத்தைப் பார்த்தேன் டி” என்றான்.

“யாரு?, பொன்னி அண்ணன் பிரசாத்தையா?, அவன் எப்படி டா இங்க வந்தான்?, என்ன சொன்ன நீ அவன் கிட்ட?” – பரபரப்பாய்க் கேட்டபடி அவனருகே சென்று நின்றாள் ஜமுனா.

“நம்மைப் பத்தி எதுவும் நான் சொல்லிக்கல”

“பின்ன?”

“எங்கப்பனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம். கால் ஒடிஞ்சு போய் படுத்தப் படுக்கையா இருக்கானாம். அதைச் சொல்லிட்டிருந்தான்”

-எங்கோ பார்த்தபடி அசுவாரசியமாகக் கூறியவனிடம் என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை அவளுக்கு.

“நீ போய்ப் பார்க்க வேணாமா?” – மெல்ல வினவினாள்.

“ச்சி! அந்தாளு செத்தாக் கூடக் கொள்ளி போடக் கூடாதுன்னு நினைச்சு வைச்சிருக்கேன். இதுல, நான் போய்.. அந்தாளுக்குக் கால் உடைஞ்சிடுச்சேன்னு இரக்கப்பட்டுப் பக்கத்துல உட்கார்ந்து சேவகம் பண்ணுவேனாக்கும்?”

“நீ பேசுறது ரொம்பத் தப்பு டா வெற்றி. என்ன இருந்தாலும் அவர் உன் அப்பா”

“ரொம்ப ஸ்டாண்டர்ட் டயலாக் டி இது. வேற ஏதாவது சொல்லு”

“முன்னாடியாவது தறுதலையா சுத்திட்டிருந்த! அதனால அந்தாளைக் கரிச்சுக் கொட்டினு இருந்த! இப்ப தான் நல்லா வந்துட்டியே! போய்ப் பார்க்கலாம்ல?”

“.........”

“அவரு உனக்குப் அன்பு,பாசத்தைக் குடுக்கல,படிப்பைக் குடுக்கலன்றதெல்லாம் இருக்கட்டும்! இந்தப் பொறப்பைக் கொடுத்துருக்காரு இல்லையா! அதுக்கான கடமையையாவது நீ செய்யனும் டா வெற்றி”

“பார்ப்போம்”

“யார் அவர் கூட இருந்து பார்த்துக்கிறாங்களாம்?”

“வேற யாரு! புகழ் மாமா தான்”

“ம்ம்.. நீ ஒழுங்காப் போய் பார்த்துட்டு வா டா வெற்றி”

“பார்க்கலாம்”

“என்ன பார்க்கலாம்?”

“நான் யோசிக்கனும்டி. இத்தினி வருஷமா அந்தாளு மேல கொத்தா நான் வளர்த்து வைச்சிருக்கிற வெறுப்பைத் தாண்டி, என்னால அவர் முகத்தைப் பார்க்க முடியுமா?, நல்லாயிருக்கீங்களான்னு பேச முடியுமா?, உதவி வேணும்ன்னா கேளுங்கன்னு சொல்ல முடியுமான்னு நான் யோசிக்கனும்”

“இதெல்லாம் ரொம்ப ஓவர் டா! அப்பாவுக்கு உடம்பு முடியலன்னு பதட்டப்படாம, அவரைப் பார்க்கப் போலாமா,வேணாமான்னு பொறுமையா யோசிப்பானாம்! என்ன ஜென்மமோ நீ”

“நான் பதட்டப்பட்டுப் பதறிட்டு ஓடுற அளவுக்கு அந்தாளு எனக்கு எந்த நல்லதும் பண்ணல”

“பழசையே பேசிட்டிருக்காத டா! இன்னிக்கு இருக்குற நிலைமைய எப்படி சமாளிக்கிறதுன்னு யோசி”

“பார்ப்போம்” – என்றவன் உடை மாற்றி விட்டு சோஃபாவில் தஞ்சம் புக.. “வேலைக்குப் போகலையா டா?” என்று விசாரித்தாள் ஜமுனா.

“ம்ஹ்ம் மூட் இல்ல”

“அடேங்கப்பா! சரி, சாப்ட்டியா?”

“இல்ல டி”

“போய்ச் சாப்பிடு”

“ப்ச், வேண்டாம்!”

“நீ ஓவர்-ஆ பண்ற! இரு, இன்னிக்கு உனக்காக நானே ஒரு ஸ்பெஷல் ரெசிபி ரெடி பண்ணிக் கொண்டு வர்றேன்” – என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தவள்.. அடுத்த அரைமணி நேரமாய்க் காணாமல் போய் விட... ஏதேதோ யோசனையுடன் டிவி முன்பு அமர்ந்திருந்தவன் திடீரென நினைவு வந்து...

“ஏய்ய்ய்” என்று குரல் கொடுத்தான்.

“ம்ம்ம்” – சன்னமாய் வெளி வந்தது அவள் குரல்.

என்ன பம்முறா! சமைக்கிறேன்ற பேர்ல கைய,கிய சுட்டுக்கிட்டாளா! அடித்துப்பிடித்து எழுந்து வந்தவன்.. சமையலறையில் நுழைகையில்.. காய் நறுக்கியபடி நின்று கொண்டிருந்தாள் அவள்.

“இன்னாடி பண்ற?, இந்த வேகத்துலக் காய் வெட்டி.. என்னிக்கு டி சமைச்சு முடிப்ப?”

“ப்ச், பொடிப் பொடியா வெட்டனும் டா வெற்றி! அதான் டைம் எடுக்குது”

“அப்டி இன்னாடி பண்ணப் போற?”

“வெஜ் ஆம்லேட்”

“ஏன் டி ரெண்டு நிமிஷ வேலைக்கு, அரைமணி நேரமா அடுப்படில வேர்த்து ஒழுக நின்னுன்னு இருக்குற?, நவுர்றி அந்தாண்ட...”

“ஏய் ஏய்.. இது என் டிஷ். நான் தான் செய்வேன். நீ தூரப் போ” – கத்தியைக் காட்டி மிரட்டியவளைக் கண்டுத் தலையில் அடித்துக் கொண்டுத் தள்ளி நின்றான்.

கையைக் கட்டிக் கொண்டு சுவரில் தலை சாய்த்து நின்றவன், அவள் காய் வெட்டும் கர்ணக் கொடூர அழகை ரசிக்க முயன்றான்.

‘இன்னிக்கு மட்டுமில்லடி! என்னிக்குமே உனக்கு.. சுட்டுப் போட்டாலும் சமையல் வராது’

மனதுக்குள் எண்ணிக் கொண்டவனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வர.. அதை அடக்கிக் கண்ணால் சிரித்தபடி அவளையே நோக்கியவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

கலைந்த முடியும்,கண்ணில் சிரிப்புமாய்.. நெளியும் உதடுகளுடன்.. கைக்கட்டி நின்றவனைக் கண்டு... உள்ளம் சாமரம் வீச.. நொடியில் இதயம் குளிர்ந்து போய்.. ‘சில்’ காற்றொன்றை குப்பென அவள் முகத்தில் அடிக்கச் செய்தது.

‘சிரிக்கும் விழிகளில்.. ஒரு மயக்கம் பரவுதே.....

வார்த்தைகள் தேவையா.....’ – எப்போதும் வெற்றிக்காக மட்டுமே பேக்-க்ரவுண்டில் வரும் இளையராஜா.. இப்போது ஜமுனாவுக்காக ஜென்சியை அழைத்து வந்தார்.

தடுமாறியப் பார்வையை மறைக்க முயன்றபடிக் கீழே குனிந்தவளின் கரங்கள்.. ஏகத்துக்கும் ஆட்டமாட.. மெல்ல மெல்ல விரிந்த சிரிப்புடன் அவள் முகத்தை.. அது பிரதிபலிக்கும் அவள் மனதின் அழகை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

பின் அவளருகே சென்று.. பின்னிருந்து அவள் கையைப் பற்றிக் கடகடவெனக் காய்களைத் துண்டமாக்கினான். அவள் மனதையும்!!

விறுவிறுவென வேலை செய்தவனை திகைப்பும்,வியப்புமாய் அவள் திரும்பிப் பார்க்கையில்...அவனும் அவளை நோக்கித் தனக்கு வெகு அருகே தெரிந்த அவள் கண்களிடம்.. தன் தாடையை உயர்த்தி ‘என்ன’ என்று வினவினான்.

விழி அசையாமல் தன்னையே நோக்குபவளின் கண்கள் என்ன கூறியதோ... இமை தாழ்த்தி.. அவள் இதழ்களை நோக்கி விட்டுப் பின் மீண்டும் அவள் கண்களில் பார்வையை நிலைக்க விட்டான்.

அவன் செய்கையில் தன்னாலேயே தழைந்து விட்டக் கருமணிகள்.. கன்னத்தில் பூக்கத் தொடங்கிய ரோஜாக்களை உணர்ந்த சமயம்... அவள் காதோரத்தைத் தன் ஐவிரல்களால் பற்றிக் குனிந்து.. அவள் கன்னத்தை வருடிப் பின் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான் அவன்.

தானாகக் கதவடைத்துக் கொண்ட அவள் விழிகளுக்குள்.. அவன் பிம்பம் மட்டுமே முழுதாக நிறைய.. கையிலிருந்தக் கத்தியை இறுகப் பற்றினாள் ஜமுனா. ஏனோ.. அழுகை வந்தது.

அவளது உடல்,பொருள்,ஆவி அனைத்திலும் இனி அவன் ஒருவன் மட்டுமே நிறையப் போகின்றான் என்கின்ற திருப்தி மனதையும்,உடலையும் லேசாக்கியது. அன்னை,தந்தை உறவிற்குப் பிறகுக் கணவனாய் வருபவனை மட்டுமே தனக்கான உடைமையாய் எண்ணும் பெண் மனம் மிகவும் விசித்திரமானது.

மூடிய விழிகளிலிருந்துத் துளியாய் வெளி வந்தக் கண்ணீரை உணர்ந்து.... தன் தோளில் சாய்ந்து நின்றிருந்தவளின் கன்னத்தை வருடி மீண்டும் குனிந்தான் அவன்.

“என்னடி??” – அநியாயத்திற்குக் குழைந்து வந்தது அவன் குரல்.

“என்ன?” – விழியில் வழிந்த நீரை அவன் டீ-ஷர்ட் காலரில் துடைத்தபடி அவள்.

“இப்ப எதுக்கு இந்தக் கண்ணீர்?”

“சொல்ல மாட்டேன்”

“ஏய்ய்” – அவன் அதட்டி அவள் பின் கழுத்தைப் பற்றித் தூக்கித் தன் முகம் காணச் செய்ததும்... விழிகளை நிமிர்த்தி அவனை நோக்கியவள்..

“நீ ஏன் இப்டில்லாம் பண்ற?” என்றாள்.

“எப்டில்லாம் பண்றேன்?”

“ப்ச்”

“பிடிக்கலன்னு சொல்லு. இனிப் பண்ண மாட்டேன்”

“பிடிக்கல” – பட்டெனக் கூறி விட்டுக் கண்ணால் சிரித்தவளிடம் குனிந்து.. அவள் கண்களில் முத்தமிட்டு “இப்போ?” என்றான்.

“பிடிக்கல”

அவள் கன்னங்களில் இதழ் பதித்து “இப்போ?” என்றான்.

மீண்டும் தன் கன்னத்தில் மலரத் தொடங்கிய சிவப்புப் பூக்களைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தி அவள் “பிடிக்கல” – என்ற போது.. குரல் வெகுவாக உள்ளே சென்றிருந்தது.

சிரிப்பும்,காதலுமாய் அவள் கன்னங்களைத் தன் இரு கைகளால் பற்றி அவள் நெற்றியில் முத்தமிட்டு அவன் “இப்போ? என்ற போது... பெரிதாய் சிரிப்பில் விரிந்த இதழ்களை மறைத்து அவன் மார்பில் முகம் புதைத்து “ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றவளிடம் “அப்டின்னா ஐ லவ் யூ சொல்லு” என்றான்.

“டேய்ய்...”

“ஏன் டி முறைக்குற?, நான் உன்னைக் காதலிக்கிறேன், நீ என்னைக் காதலிக்கிறியான்னு கேட்க நான் ஒன்னும் 5 வருசத்துக்கு முன்னாடி இருந்த வெற்றி இல்ல. உனக்கு இப்போ ஆப்ஷனே கிடையாது.”

“அடப்பாவி”

“சொல்லுடி ப்ளீஸ்”

“ஐ லவ் யூ” – முறைத்தபடி கூறியவளிடம்..

“அவ்ளோ தானா?” – என்றான் பதிலுக்கு அவனும் முறைத்துக் கொண்டு.

அதுவரை அவன் மீது சாய்ந்து நின்றிருந்தவள், நிமிர்ந்து.. தன் கைகளிரெண்டால் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டுத் தன் காதல் முழுதையும் முகத்தில் நிரப்பி... “நான் போ,போ-ன்னு விரட்டும் போதெல்லாம் என்னை விட்டுடாம, என் கிட்டத் திட்டு வாங்கி,அடி வாங்கி.. என் வீம்பு,பிடிவாதம் அத்தனையையும் பொறுத்துக்கிட்டு.. இப்போ வரை அதே காதலோட,ஆசையோட என் கிட்ட நிற்கிற உன்னை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு டா வெற்றி. அம்மா இறந்தப்போக் கடைசி நிமிஷம் நீ என் கையோட சேர்த்து அவங்கக் கையைப் பிடிச்சப்பவே எனக்குத் தெரியும். நீ என் வாழ்க்கை முழுக்கக் கூட வரப் போற-ன்னு! பாப்பாவுக்காகவும்,எனக்காகவும் இந்த 5 வருஷத்துல எவ்ளோ மாறியிருக்க? உன்னை லவ் பண்ணாம எப்படி டா இருக்க முடியும்?, நான் உன்னைக் காதலிக்கிறேன்.. ரொம்ப... ரொம்ப..!” – உணர்ச்சிவசப்பட்டுக் கண்கள் முழுக்கக் கண்ணீருடன் கூறியவளை இறுக அணைத்துக் கொண்டவனும் “ஐ லவ் யூ டூ” என்றான்.

ன் சம்சாரம் மற்றும் பிள்ளையோடு சேர்ந்து சென்னையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான் வெற்றி என்கிற வெற்றிச் செல்வன்.

பிரசாத்தை வேலூரில் சந்தித்த பிறகு மறுநாளே அவனுக்குக் கதிரிடமிருந்து அழைப்பு வந்து விட்டது. இத்தனைக்கும் அவன் பிரசாத்திடம் தனது அலைபேசி எண்ணைக் கூடப் பகிர்ந்து கொள்ளவில்லை.

அவன் வேலை செய்யும் ஹோட்டலைக் கண்டுபிடித்து எப்படியோ அவனைத் தொடர்பு கொண்ட கதிர், திட்டாதக் கெட்ட வார்த்தையில்லை.

“ஒரே பால் பாட்டிலை மாத்தி,மாத்தி உறிஞ்சுக் குடிச்சிக்கினு ஒன்னா வளர்ந்தவனுங்க டா நாம! நான் இருக்கேனா,செத்தேனான்னு கூடத் தெரியாம இத்தினி வருஷத்தை ஓட்டிட்டியே டா!, கம்னாட்டி! அப்டி என்னடா பண்ணேன் நான் உனக்கு?, என்னாண்ட கூடச் சொல்லிக்காம நீ ஓடிப் போற அளவுக்கு! உனக்கு இன்னா தான் டா பிரச்சனை?, உங்கப்பன் மேல இருக்குறக் கோவத்துல என்னைய ஏன் டா ஒதுக்கி வைச்சிருக்கிற?, அந்த மாலதியைக் கன்னாலம் கட்டிக்கினு நான் அனுபவிக்காதக் கஷ்டமே இல்லடா மச்சி!, அவளும்,அவ அம்மாகாரியும் சேர்ந்துக்கினு என்னைய பாடாப் படுத்துறாளுங்கடா! எப்டியாவது வந்து என்னைக் காப்பாத்து டா” – என்று விடாமல் பேசியவனிடம்.. சத்தியமாகத் தன்னைப் பற்றி என்ன கூறுவதென்றேத் தெரியவில்லை அவனுக்கு.

“வூட்டுக்கு வந்துட்டுக் கூப்பிட்றேன் மச்சி” – என்று அவசரமாக அழைப்பைத் துண்டித்தவன் நேராக ஜமுனாவின் முன்பு வந்து நின்றான்.

“கதிருக்கு நான் வேலை செய்ற இடம் தெரிஞ்சுடுச்சு டி! இனியும் நாம ஒளிஞ்சு வாழ முடியும்ன்னு தோணல எனக்கு”

“ப்ச், நாம ஏன் டா ஒளிஞ்சு வாழனும்?”

“பின்ன?, உனக்கும்,எனக்கும் எப்டி 5 வயசுல புள்ள வந்ததுன்னு கேட்டா, இன்னாடி சொல்றது?”

“5 வயசுன்னு அவ நெத்தில எழுதியா ஒட்டிருக்கு?”

“இன்னாடி சொல்ற?”

“நாம ரெண்டு பேரும் 5 வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டுப் புள்ளையும் பெத்துக்கிட்டோம்ன்னு அள்ளி விட வேண்டியது தான்”

“நம்புவாங்களா?”

“ஏன் நம்ப மாட்டாங்க?, அம்மா இறந்து போய் அநாதையா நின்னவளை நான் தான் கட்டிக்கிட்டேன்னு சொல்லு!, அங்க இருந்தா தேவையில்லாத பேச்சு வரும்ன்னு தான், இங்க வந்து பொழச்சுன்னு இருக்குறோம்ன்னு சொல்லு. எங்களுக்குக் குழந்தையும் இருக்குன்னு சேர்த்துச் சொல்லிடு. பிரச்சனை முடிஞ்சது”

“அப்டின்ற?”

“ஆமா டா! அதுக்கு மேல எவனும் ஆராய்ஞ்சு பார்க்க மாட்டானுவ! அவ,அவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது, நம்மைப் பத்தி தான் யோசிச்சின்னு இருப்பானுவளா?, நான் சொன்னதை நீ அப்டியே கதிர் கிட்ட சொல்லு”

“சரி டி ரௌடி.”

“உங்கப்பாவைப் பார்க்க என்னைக்கு டா போற?”

“ப்ச்”

“வெற்றி.. என்னிக்குனாலும் நீ போய்த் தான் டா ஆகனும்”

“நான் மட்டுமில்ல. நீயும் தான்”

“நானுமா?”

“பின்ன?, சரோஜாம்மா கூட நீ பேச வேணாமா?, அது மறுபடி கனகா-க்கா வூட்டு மாடில குடி வந்திருக்காம். மகன்,மருமக,பேரன்,பேத்தின்னு எல்லாம் நீயிருந்த வூட்ல தான் இருக்காங்களாம்”

“அப்டியா?, யார் டா சொன்னா?” – ஆர்வமாய் வினவியவளிடம்

“கதிர் தான்” என்றான்.

“சரோம்மா ஃபோன் நம்பர் கிடைக்குமா டா?, கதிர் கிட்ட வாங்கிக் குடேன். பழைய நம்பருக்கு ரொம்ப நாளா ட்ரை பண்ணியும் கிடைக்கல.”

“ஃபோன்ல எதுக்கு?, நேர்லயே பேசலாம். நீ தான் எங்கப்பனுக்கு நான் ஒரு நல்ல மகனா நடந்துக்கனும்ன்னு ஆசைப் பட்றியே!”

“அதுல என்னடா தப்பு இருக்கு?”

“..........”

“ஆக்சுவல்-ஆ உனக்கு அவர் மேல என்னா கோபம்?, அவர் பொம்பளைங்க சகவாசம் வைச்சுக்கிட்டதாலயா?, ஏன் டா அவரும் சராசரி மனுஷன் தானடா?, அவரோட தேவைக்கு அவர் போயிருக்கிறாரு! இதுல நீ ஏன் இவ்ளோ கோபப்பட்ற?”

“என்னடி லூசு மாதிரி பேசுற?”

“ப்ச், டேய்.. கல்யாணத்துக்கு முன்னாடியோ, இல்ல உங்கம்மா உயிரோட இருக்கும் போதோ.. அவர் இந்த மாதிரி போறவர்ன்னு அவர் மேல ஒரு கம்ப்ளைண்ட் இருந்ததா?, இல்லை தான?, பழக்கப்பட்டுட்ட ஒரு விசயத்தை.. பொண்டாட்டி இறந்து போனப்புறம்.. எப்டி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியாம.. இப்டி தேடிப் போயிட்டார். உன்னால செக்ஸ் இல்லாம ஒரு நாள் இருக்க முடியுதா?, அர்த்த ராத்திரில நான் அக்கடான்னு தூங்கினு இருந்தாலும், எழுப்பி விட்றேல?”

-அவள் கூறியதும் குடித்துக் கொண்டிருந்த பானம் புரையேற லொக்,லொக் என இருமியவன் “ச்சை! பொண்ணு மாதிரியா டி பேசுற நீ?, கொஞ்சம் கூடக் கூச்ச,நாச்சமே இல்லாம இவ்ளோ பச்சையாப் பேசுற?” என்று எரிந்து விழுந்தான்.

“ஏன் பொண்ணுங்க இதைப் பத்திப் பேசுனா தப்பா?”

“இப்போ அதுவா பிரச்சனை?”

“உங்கப்பா பெரிய உலகக் குத்தம் எதையும் பண்ணிடல டா வெற்றி”

“ஏய்ய், அந்தாளுக்கு அவ்ளோ தேவை இருந்திருந்தா.. கௌரவமா ஒருத்தியைக் கல்யாணம் கட்டின்னு வந்து வூட்ல குடி வைச்சிருக்கனும் டி! அதை வுட்டுட்டு கண்டவளுங்கக் கிட்டப் போய் பல்லிளிச்சிட்டு நிப்பானா?”

“பொண்டாட்டிய வர்றவ உன்னையக் கொடுமை படுத்திடுவாளோன்னு அவருக்குப் பயம் இருந்ததா நீ தான டா சொன்ன?”

“ஆமா... கொடுமை பண்றதுக்கு புதுசா ஒருத்தி தான் வரனுமா?, இந்தாளு போதாதா?”

“டேய்.. அவ்ளோ கோபம் இருக்கிறவன், நீ அவர்க்கிட்ட நேராவே இதெல்லாம் எனக்குப் பிடிக்கலன்னு சொல்லியிருக்க வேண்டியது தான டா?”

“முகத்தைப் பார்த்துப் பேசிக்கிற அளவுக்கு நாங்க பாசப்பிணைப்போட இருந்தோம்ன்னு நினைச்சியாக்கும்?”

“ப்ச், எது எப்டியோ... அவர் காலமும் ஓடிப் போச்சு! அவர் காசுல திங்க மாட்டேன், தூங்க மாட்டேன்னு ரோஷமா இருந்த நீயும், உன் முயற்சியாலயே முன்னாடி வந்துட்ட!, இனி என்ன டா?, யார் துணையுமில்லாம.. கால் ஒடைஞ்சு போய் கடைசி காலத்துலக் கஷ்டப்படுறவரை ஒரு தடவை நேர்ல பார்த்து.. உன் கடமையைப் பண்ணிட்டு வந்துடு!”

“சரி, அப்டின்னா நாம 3 பேரும் சென்னை போவோம்” – என முடிவெடுத்துத் திட்டமிட்டு இதோ இன்று சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

சென்னையில் நிறைய மாம்ஸ்,அத்தைஸ்,பாட்டி,தாத்தா என அனைவரும் இருப்பதாகக் கூறி தாஷியைப் பயணத்திற்குத் தயார் செய்திருந்தாள் ஜமுனா.

நேரில் வந்து இறங்கிய வெற்றி மற்றும் ஜமுனாவை சொட்டைத் தலையுடனும், தொப்பை வயிறுடனும் வரவேற்ற கதிரைக் கண்டு.. அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி.

“இன்னாடா பரதேசி, மாலதியும்,அவங்கம்மாவும் சேர்ந்துக்கினு நீ திங்குற சோத்துல ஸ்லோ பாய்சன் கலக்குறாளுங்கன்னு சொன்ன?, தொப்பை,கிப்பையெல்லாம் வைச்சு ஆளு.. அரசமரத்துப் பிள்ளையார் கணக்கா இருக்கியே டா”

கலாய்த்த வெற்றியை முறைத்துப் பின் “அவளுங்க 2 பேர் டார்ச்சர் தாங்க முடியாம டெய்லி குடிக்கிறேன் மச்சி. அதான் தொப்பை வந்துடுச்சு” என்று விட்டு... “நீ எப்டிடா இருக்க?, மச்சி.. வாடா.. கட்டிப்புடிச்சுக்கலாம்” என்றபடியே அவனை ஆரத் தழுவிக் கொண்டு.. “உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் டா வெற்றி” என்ற கதிருக்கு லேசாகக் கண் கூட கலங்கியது.

“மன்னிச்சிரு மச்சி! என் சூழ்நிலை அப்புடி! உன்னைத் தினம்,தினம் நினைச்சுப்பேன் தெரியுமா?, நீ என்னைய நினைப்பியா டா?” - வெற்றி

-என்னவோ நீண்ட வருடங்களாய்ப் பிரிந்திருந்தக் காதலர்கள் ஒன்று சேர்ந்ததைப் போல இருவரும் விட்டப் பீலாவைக் கண்ட ஜமுனா எரிச்சலுற்று...

“சீன்-ஐக் குறைங்க டா சாவுகிராக்கிங்களா” என்று கத்தியதும்..

திடுக்கிட்டு அவள் புறம் திரும்பிய கதிர் “டீ...டீ..டீச்சர்! சாரி! நண்பனைப் பார்த்த சந்தோசத்துல உங்கள மறந்துட்டேன்! அவ ஒரு ராங்கி, திமிர்ப்புடிச்ச ஜிகிடின்னு இவன் உங்களைத் திட்டாத வார்த்தை இல்ல! ஆனா.. அதையெல்லாம் மறந்துட்டு.. உங்களுக்காக எங்களையெல்லாம் வுட்டுப் போனான்றதை நினைச்சா... எனக்கு.. எனக்கு...”

“ஏன் டா திக்குற?, உனக்கு.. உனக்குக் காண்டாகுதா?”

“ஆமா! பின்ன! நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? ஒரே தட்ல சோறு துன்னு, ஒரே கட்டில்ல தூங்கி, ஒன்னா ஒன்னுக்குப் போனப் பசங்களையே பிரிச்சு விட்ருக்க?”

“ஏய்ய்ய்.. பின்னாடியே சுத்துது நான் இல்ல. உன் ஃப்ரெண்ட். இன்னா டா கமுக்கமா அமுக்கின்னு நிக்குற?, உன்னால முடியலன்னு உன் ஃப்ரெண்டை வுட்டுக் கலாய்க்கப் பார்க்குறியா?, மூஞ்சி தேய்ஞ்சிடும்! சொல்லி வை” – பேட்டை ரௌடியாக மிரட்டியவளைக் கண்டு...

“இவளுக்கு மாலதியே தேவல போல மச்சி! எப்புடிடா சமாளிக்குற?” – வெற்றியிடம் வினவினான் கதிர்

“ஏய்ய்ய் வாய மூட்றா!, செல்லம்... நீ வூட்டுக்குள்ள போ டா... நான் இந்த நாயைத் துரத்தி வுட்டுட்டு வர்றேன்”

“யாரை டா நாய்-ன்ற?”

“உன்னை இல்ல மச்சி!,” என்ற வெற்றி தொடர்ந்து “ஏய்ய் பாப்பா எங்கடி?” எனக் கேட்டுத் தன் வீட்டிலிருந்து வெளியே வந்தவன்.. டீக்கடை வாசலில் அமர்ந்திருந்த மணியின் அருகே நின்றிருந்தத் தாஷியைக் கையசைத்துக் கூப்பிட்டான்.

“உன் பொண்ணா மச்சி?” எனக் கேட்டு “பாப்பா... மாமா கிட்ட வா” என்றபடி அவளைத் தூக்கிக் கொஞ்சியவன் “அப்டியே உன்னை மாதிரி இருக்கு டா வெற்றி!, பெரிய கண்ணு, நெத்திய மறைக்குற முடி! ஆனா... சிரிக்கும் போது உங்க ரெண்டு பேர் மாதிரியும் இல்லையே டா” – என ஆராய்ச்சி செய்யத் தொடங்கியதும் அவனைத் தடுத்து...

“இவளுக்கு ஜமுனாவோட பாட்டி சாயல் மச்சி” என்றவன் “பாப்பா... அம்மாக் கிட்டப் போ. சாப்பிட்டு வந்து மாமா கூட விளையாடு” என்று அவளை அனுப்பி வைத்தான்.

அதன் பின் தெருவிலிருந்த ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று நலம் விசாரிப்பதிலேயே நாள் கழிந்தது.

கதிர் – மாலதிக்கு மூன்றரை வயதில் ஒரு பையன் இருந்தான். மாலதி பணக்காரப் பெண் என்பதால்.. கதிர் மற்றும், அவனது குடும்பத்தை அவள் பெரிதாக மதிக்காததுக் கதிரைக் கோபத்திற்குள்ளாக்கியிருந்தது. சண்டையும், சமரசமுமாக அவனது வாழ்க்கை ஓடம் சராசரிக்கும் கீழ் ஓடிக் கொண்டிருந்தது.

கதிரின் தங்கை செல்விக்குத் திருமணமாகி அவள் விழுப்புரத்தில் செட்டிலாகியிருந்தாள். ஜமுனாவும்,வெற்றியும் திரும்பி வந்த செய்தி கேட்டு அவளுக்கு மிகவும் சந்தோஷம். கூடிய விரைவிலேயே இருவரையும் வந்து பார்ப்பதாகக் கூறியிருந்தாள்.

இருவரையும் ஜோடியாகக் கண்ட மாலதிக்கு அத்தனை ஆச்சரியமில்லை! ஜமுனாவிற்கு வெற்றியைப் பிடிக்குமென்பதை அவள் ஐந்து வருடத்திற்கு முன்பே கணித்திருந்தாள்.

ஜமுனா திரும்பியதில் பேராச்சரியமும்,பெரு மகிழ்ச்சியும் அடைந்தது சரோம்மா தான். அதிலும் அவள் திருமணம்,குழந்தையெனக் குடும்பமாகத் திரும்பி வந்தது கண்டு சிறிது கோபித்துக் கொண்டாலும், அதன் பின்பு தாஷியை வாரி அணைத்துக் கொண்டார். “பாப்பா அப்படியே உன் அம்மா சாயல் ஜம்மு” என்றபடி!

சென்னை வந்திறங்கியதும் இருவரும் முதலில் சென்றது வெற்றியின் வீட்டிற்குத் தான். கால் காயம் ஓரளவிற்கு ஆறி.. புகழின் உதவியுடன் நடக்கத் தொடங்கியிருந்தார் சதாசிவம். அவர் ஒரு சர்க்கரை நோயாளி என்பதால் தான்.. பட்ட சின்னக் காயம் கூட அவரைப் பெரிதாகப் படுத்தி விட்டிருந்தது.

உடல் மெலிந்து,கழுத்து நீண்டு உள்ளே சென்று விட்டக் கண்களுடன் பாவமாய்க் காட்சி தந்தவரைக் கண்டுத் தன் அன்னையின் நினைவு வந்தது ஜமுனாவிற்கு.

வெற்றியின் மீது கோபப் பார்வையை வீசி “நான் இல்லன்னு ஃபீல் பண்றேன்! இவன் இருந்தும் கண்டுக்காம இருக்குறான்” என்று முணுமுணுக்க.. அவன் தோளைக் குலுக்கியபடி நகர்ந்து விட்டான். நின்று அவரிடம் நலம் விசாரிக்கக் கூட இல்லை. போகிற போக்கில் பார்த்ததோடு சரி!

ஜமுனா தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு.. இருவருக்கும் திருமணமானதைக் கூறிக் குழந்தையை அவரருகே அனுப்பினாள்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு வெற்றியைக் கண்டும் பெரிதாக ரியாக்ட் செய்யாத சதாசிவம், வெற்றியின் குழந்தையை மகிழ்ச்சியுடன் அள்ளிக் கொண்டார். அதிலும் தாட்சாயிணி எனத் தன் அன்னை பெயரை அவன் குழந்தைக்குச் சூட்டியிருப்பதைக் கேட்டு அகமகிழ்ந்து போனார்.

“நீங்க எங்கம்மா சாயல்ல தான் இருக்கீங்க குட்டி” என்று தாஷியைக் கொஞ்சியவரை எந்த வரிசையில் சேர்ப்பதென்றே அவளுக்குத் தெரியவில்லை.

என்ன தான் அவர் வெற்றியிடம் நேரில் பேசா விட்டாலும், அவன் திரும்பி வந்ததே அவருக்குப் பெரிய திருப்தியைக் கொடுத்திருந்தது. ஐந்து வருடங்களாய்.. தன்னந்தனியாய் வாழ்ந்தவருக்குக் கடைசி காலத்தை நினைத்துப் பயம் வந்ததோ என்னவோ... புகழிடமும்,அவன் நண்பர்களிடமும் விடாது அவனைப் பற்றி விசாரித்துச் சோர்ந்து கொண்டிருந்தார்.

கடைசியில் அவன் அவரைத் தேடி வந்தது அவருக்கு அப்படியொரு ஆசுவாசத்தைக் கொடுத்தது. அவர் மகனிடம் பேசவில்லை! மருமகளிடமும் அவ்வளவாகப் பேசிக் கொள்ளவில்லை. ஜமுனாவிடம் வளவளத்ததெல்லாம் புகழேந்தி மட்டும் தான்.

ஆனாலும் அவள் எழுந்து செல்வதற்கு முன் அவரைத் தடுத்தவர்.. வெற்றி தனது ‘முதலியார் மெஸ்’-ஐ எடுத்து நடத்த வேண்டுமென்கிற கோரிக்கையை வைத்து விட்டுக் குழந்தையுடன் ஒதுங்கிக் கொண்டார்.

“நல்லவன் தான்ம்மா அவன்! பொண்டாட்டி மேல எவ்வளவோ ஆசை வைச்சிருந்தான்! இடைல இருந்த ஆளுங்க அதை,இதைச் சொல்லி அப்பன்,மகன் உறவை ஆகாம பண்ணிட்டானுங்க!, இந்தப் பையனும் வளர்ந்தப்புறம் எது,எதையோ நினைச்சுக்கிட்டு அப்பனை வெறுக்க ஆரம்பிச்சுட்டான்! ஹ்ம்ம்ம், நடந்த எதையும் மாத்த முடியாது! யாரு தப்பு,யாரு சரின்னு தீர்ப்பு சொல்றதால ஒரு பிரயோஜனமும் இல்ல. இனி நடக்கப் போறதை நல்லவிதமா யோசிச்சோம்ன்னா எல்லாருக்கும் நல்லது. மெஸ் அவன் உழைப்போட சின்னம். கடையை எடுத்து நடத்தச் சொல்லி நான் வெற்றிக்கிட்ட எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டேன்...பிடி குடுக்க மாட்டேங்குறான். நீ அவனுக்குக் கொஞ்சம் சொல்லிப் புரிய வைம்மா” – என்று புகழேந்தியும் நண்பனின் சார்பாக ஜமுனாவிடம் பேச.. அதை அப்படியே வெற்றியிடம் கூறினாள் ஜமுனா.

“இதோ பாரு! பெத்த அப்பன்,கடமைன்னு ஏதேதோ பேசி நீ தான் என்னை இங்க வரத் தூண்டுன! வந்தாச்சு! பார்த்தாச்சு! அந்தாளும் இப்ப எழுந்து நடமாட ஆரம்பிச்சுட்டாரு. இத்தோட நாம வந்த வேலை முடிஞ்சது. சீக்கிரம் பொட்டி,படுக்கையைக் கட்டிட்டு ஊருக்குக் கிளம்புற வழியைப் பாரு.” – காட்டுக்கத்தலாய் வெற்றி.

“டேய்.. மகனுக்கு உண்டான கடமைகளைக் கூட சரியாச் செய்யாம ஒதுங்கி நின்னு, நீ இருக்கியா,செத்துட்டியான்னுக் கூடத் தெரியாத அளவுக்கு உன் மேல அக்கறையில்லாம இருந்த இந்த மனுஷன் தப்பானவராகவே இருந்துட்டுப் போகட்டும்! அது எதையும் நான் மாத்திப் பேசல! நீ கடந்து வந்தக் கஷ்டம் எல்லாமே.. ரொம்பப் பெருசு தான்! ஆனா.. அவர் உனக்கு செஞ்சதையே நீ அவருக்கு செய்யனும்ன்னு என்ன இருக்கு?, மத்த விசயங்கள்ல எப்டியோ, சின்னதா ஆரம்பிச்ச ஹோட்டல் தொழிலை இன்னிக்கு எவ்ளோ பெருசா வளர்த்திருக்கிறாரு?, எத்தனை நாள் கஷ்டப்பட்டாரோ இந்த நிலைமைக்குக் கொண்டு வர்றதுக்கு?, அவரோட உழைப்பெல்லாம் பிரயோஜனமில்லாம போகப் போகிற மாதிரி தான் இருக்கு நீ நடந்துக்கிறது”

“ஏன் பிரயோஜனமில்லாம போகப் போகுது?”

“அவரால முடியலயாம் வெற்றி. சுகர் பேஷண்ட் வேற! மனுஷன் ரொம்ப நொந்து போயிருக்கார். முன்ன மாதிரி ஹோட்டலைப் பார்த்துக்க முடியலன்னு வேதனைப்பட்றார்”

“அதுக்கென்ன?, கூடவே ஒருத்தரை வைச்சிருக்கிறாரே ஃப்ரண்ட்ன்னு?, அவரைப் பார்த்துக்கச் சொல்லு”

“ப்ச், அவருக்கு மட்டும் வயசு கம்மியாவா இருக்கு?”

“அப்டின்னா.. ஹோட்டல் நல்லா போயிட்டிருக்கும் போதே.. யாருக்காவது வித்துடச் சொல்லு”

“நீ பேசுறது சரியில்ல வெற்றி. யாரோ ஒருத்தர்க் கிட்டத் தூக்கிக் கொடுக்கத் தான் இத்தினி வருஷமா மனுஷன் உழைச்சாரா?”

“அது அவர் பிரச்சனை. எனக்கும் அந்த ஹோட்டலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல”

“டேய்ய்.. பாவமா இருக்கு டா அவரைப் பார்த்தா.. உனக்குக் கொஞ்சம் கூட இரக்கமே வரலையா?”

“அந்தாளுக்கு என் மேல இரக்கம் இருந்துச்சா?”

“நீ பழசையே பேசி இருக்குற மனுஷனை சாகடிக்குற வெற்றி”

“போய்ச் சேரட்டும்! அந்தாளு இருக்குறதால யாருக்கு லாபம்? இல்லாம போறதால யாருக்கு நஷ்டம்?, வயசாகி நோய்,நொடி வந்து படுத்துட்டா.. செஞ்ச தப்பெல்லாம் இல்லைன்னு ஆயிடுமா?, அந்தாளு பண்ணுன பாவத்துக்குத் தான், இப்டி அநாதையா படுத்துக் கிடக்குறாரு! இதோ பாரு.. இன்னொரு தடவை அந்தாளுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசிக்கிட்டுப் பக்கத்துல வந்த.. புள்ளையைத் தூக்கிட்டு நான் ஊருக்குப் போயிடுவேன்”

“போடா! அந்தாளு எனக்கு அப்பனா உனக்கு அப்பனா?, எப்டியோ போய்த் தொலைங்க! எனக்கென்ன?” – கோபத்தில் பொறிந்துத் தள்ளி விட்டு சரோஜாம்மாவின் வீட்டிற்குச் சென்று விட்டாள் ஜமுனா.

குழந்தையை அவனிடம் விட்டு விட்டுக் கோபத்தில் அவள் அங்கேயே இரவு தங்கி விட.. எரிச்சலும் பொறுமலுமாய் மறுநாள் காலை எழுந்தவன்.. கையில் பூஸ்ட் கலந்தப் பாலுடன் தாஷியை எழுப்பினான்.

சோம்பல் முறித்தபடி எழுந்தவள் வெற்றியின் கையிலிருந்தப் பால் தம்ளரைக் கண்டுத் திடுதிடுவென ஓடியே விட்டாள்.

“ப்ரஷ் பண்ணிட்டு வா மீ, பால் குடிக்கலாம்” – என்று கூறியபடியேத் திரும்பியவன் அவள் அறையில் இல்லாததைக் கண்டு “இவ, அவங்கம்மாவை விடப் பெரிய ராட்சசியாச்சே!” என்று புலம்பியபடி “மீ.... ஒழுங்கா வந்துப் பாலைக் குடி” – எரிச்சலுடன் கத்திக் கொண்டு வெளி வந்தவன்.. தாஷியின் அருகில் நின்றிருந்தத் தந்தையைக் கண்டு முகத்தை இறுக்கி வைத்துக் கொண்டு தரையைப் பார்த்தபடி நின்றான்.

அவன் கையிலிருந்தப் பால் தம்ளரைக் கவனித்து “தாட்சியம்மா பால் சாப்டப் போறீங்களா?” என்று கேட்டபடியேக் குழந்தையைக் கையில் தூக்கினார் சதாசிவம்.

“இல்ல, எனக்கு பூஸ்ட் பிடிக்காது. நான் குடிக்க மாட்டேன்” – சமத்தாய் மறுத்தவளைக் கண்டுச் சிரித்து “பூஸ்ட் வேண்டாம். அய்யா உனக்கு வேற பால் கொண்டாரேன், அது ரொம்ப ருசியா இருக்கும். நீயே ஆசையா வாங்கிக் குடிப்ப பாரேன்” எனக் கூறியபடியே விந்தி விந்தி சமையலறைக்கு அவளுடன் நடந்தார்.

அவளை சமையல் மேடையில் அமர வைத்து விட்டு பாதாம்,முந்திரி,பிஸ்தா என ஏதேதோ போட்டு அரைத்துப் பாலில் விட்டுக் கொதிக்க வைத்து.. ருசியான மசாலா பால் ஒன்றை அவளிடம் நீட்ட.. ஆர்வமாய் வாங்கிக் குடித்ததுக் குழந்தை.

நின்ற இடத்திலிருந்தே இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த வெற்றிக்குத் தந்தையின் போக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

எப்புடி இந்தாளு மாறுனான்? புள்ள மேல வேற இவ்ளோ பாசமா நடந்துக்குறான்! போய்ச் சேர வேண்டிய காலத்துல சொந்தம்ன்னு சொல்லிக்க யாரும் இல்லாம போயிடுமோன்னு பயப்பட்றானோ! பெத்தப் புள்ளைய ராசியில்லாதவன்-னு ஒதுக்கித் தள்ளிட்டு.. காசு கொடுத்து கண்டவளுங்கக் கிட்ட ***** போனப்ப தெரியல, ஒரு நாள் எல்லாம் அடங்கிக் கட்டையை நீட்டுவோம்ன்னு! என்ன ஜென்மமோ!

அவன் புலம்பியபடி நின்றிருக்கையில் சமையறையிலிருந்துத் திரும்பி வந்த சதாசிவம் அவன் முகம் பாராமல்...

“விளம்பரத்துல காட்டுறாங்கன்னு கண்ட,கண்டதையும் வாங்கிப் புள்ளைக்குக் கொடுக்காம.. நல்லா சத்தானதா செஞ்சு கொடுக்கனும்” என்று அறிவுரை வேறு வழங்கவும்.. முற்றிலும் எரிச்சலுற்றவன்..

“ஆடு பகை! குட்டி உறவாம்” என்று முணுமுணுத்து விட்டு விறுவிறுவென நகர்ந்தபடி “இத்த என்ன பண்றது?” என்று கையிலிருந்ததைக் காட்டிச் சத்தமாக புலம்ப... “உங்கப்பனையே குடிக்கச் சொல்லும்மா, இன்னும் நாலடி சேர்த்து வளரட்டும்” எனக் கூறிச் சிரித்து விட்டுப் போனார்.

நடந்து கொண்டிருந்தவன் நின்று, வியப்புடன் அவர் புறம் திரும்புகையில் அவர் உள்ளே சென்றிருந்தார். யோசனையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவனை தாஷியின் குரல் கலைத்தது.

“ஜம்மு,ஜம்மு எனக்கு அய்யா ஒரு டேஸ்ட்-ஆன மில்க் குடுத்தார் தெரியுமா?, அது பூஸ்ட் மாதிரி இல்ல. ரொம்ம்ம்ம்ம்ம்ப யம்மி!”

-அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த ஜமுனாவிடம் தாஷி நடந்தவற்றைக் கூறிக் கொண்டிருக்க.. எரிச்சல் மாறாமல் அவளை நோக்கிய வெற்றி...

“வாடி உங்கொப்பன் மவளே! அங்கயே ஒரேடியா இருந்துட வேண்டியது தான?, இன்னாத்துக்கு இங்க வந்த இப்ப?” – என்று எகிறினான்.

“ஏன்?, இருப்பேனே ஒரேடியா அங்கயே!! என்னாத் தப்பு அதுல?” – அவன் முகம் பாராமல் ரோஷத்துடன் பதிலளித்தவள் தாஷியிடம் “பாப்பா.. உனக்குத் தாத்தாவைப் பிடிச்சிருக்கா?” என்றாள்.

“ம்ம், ரொம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ம்ப!, ஆனா.. ஏன் என்னை தாட்சியம்மா, தாட்சியம்மான்னு கூப்பிட்றாரு?”

“ஹாஹா.. அந்தத் தாத்தாவோட அம்மா பேரும் தாட்சாயிணி தானாம்! அதான் உன்னை அப்டிக் கூப்பிட்றாரு”

“ஓஹோ!! ம்ம், அப்புறம் சொல்ல மறந்துட்டேனே! நேத்து நைட் தாத்தா இந்தச் செயினை எனக்குப் போட்டு விட்டார்” – எனக் கூறி அவள் கழுத்திலிருந்ததைக் காட்டினாள்.

அப்போது தான் வெற்றியும் அதை நோக்கினான். இந்தாளு ரொம்ப ஓவர்-ஆ போறானோ!

ஓரக்கண்ணால் அவனை நோட்டம் விட்டபடி “பாப்பா... தாத்தா நல்லவராத் தான இருக்காங்க! பேசாம நாம இங்கேயே இருந்துடலாமா?” – என்று அவள் கூறி முடிப்பதற்குள்..

“செருப்புப் பிஞ்சிடும்” எனச் சீறினான் வெற்றி.

அவன் கத்தியதில் தானும் கோபம் கொண்ட ஜமுனா “நான் இங்க தான் டி இருப்பேன்! நீயும்,உங்கொப்பனும் எங்க போகனுமோ போங்க” என்றுத் திட்டி விட்டு.. குழந்தையைத் தூக்கி கொண்டுச் சென்று விட்டாள்.

“எங்கயோ போங்கன்னு சொல்லிட்டு ஏன் டி புள்ளையத் தூக்கிட்டுப் போற?” என்று அவன் விடாது கத்தியதை அவள் பொருட்படுத்தவேயில்லை.

அடுத்து வந்த இரண்டு நாட்களுமே தாஷியையும்,சதாசிவத்தையும் கண்டு புகழேந்திக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி இங்கிருந்து சென்ற இத்தனை வருடங்களையும் ஏனோ,தானோ எனக் கழித்துக் கொண்டிருந்த சதாசிவம் தன் பேத்தியைக் கண்டதும் பத்து வயது குறைந்தது போல் துள்ளலுடன் நடந்து கொண்டது அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

ஜமுனாவிற்கும் ஆச்சரியம் தான்! ராசியில்லாதவன் என வெற்றியைக் கேலி செய்யும் கூட்டம், இன்று அவனது நடை,உடை,செயல், மனைவியையும், பிள்ளையையும் நடத்தும் விதம் என அனைத்தையும் கண்டு.. அவனை மிகவும் மரியாதையாக நடத்தியது. ஆளாளுக்கு தாஷியிடம் அவர்களிருவரது சாயல் இருப்பதாகச் சொன்னதும்... அதிலும் சதாசிவம் ஒருபடி மேலே போய் தாட்சாயிணிப் பாட்டியே மறுபிறவி எடுத்து வந்திருப்பதாகச் சொன்னதும்.. அவளுக்குச் சிரிப்பைக் கொடுத்தது! ஆனால்.. ஒரு வகையில்.. எல்லாம் நன்மைக்கு தான்! அவள், அவர்களது குழந்தையாகவே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டாளே!

வெற்றி மட்டும் தான் முழு நேரமும் யோசனையாகச் சுற்றிக் கொண்டிருந்தான். இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் வெறுப்பது சதாசிவம் ஒருவரைத் தான்! ஆனாலும் அந்த மனிதன்.. தாஷியிடம் ஒன்றி.. சந்தோஷ முகத்தோடு வலம் வருவதைக் கண்ட போது.. இந்த மகிழ்ச்சியை நிலைக்க விடாமல்.. தன்னால் அவரிடமிருந்து அவளைப் பிரித்துக் கூட்டிச் செல்ல முடியுமா என்று ஐயம் கொண்டான்.

அவர் கேட்டுக் கொண்டதைப் போல் ஹோட்டலைத் தான் எடுத்து நடத்துவது ஒத்து வருமா என்று கூட யோசித்தான். காரணம்.. அவனிடம் விடாது புலம்பும் புகழேந்தி ஒரு புறம்! நான்கு நாட்களாக அவனருகில் கூட வராமல்.. கோப முகத்துடனே வலம் வரும் ஜமுனா ஒருபுறம்!

அறைக்குள் அமர்ந்து கொண்டுக் கையிலிருந்தத் துணிகளை மடித்தபடி முசுட்டு முகத்துடனிருந்த ஜமுனாவின் முன் சென்று நின்றான் வெற்றி.

“ஏய்ய்ய்” - வெற்றி

“என்ன?”

“பேச மாட்டியா?”

“என்ன பேசனும்?, நீ தான் என்னைய இங்கயே இரு, நானும் என் புள்ளையும் மட்டும் ஊருக்குப் போறோம்ன்னு ஒதுக்கி விட்டுட்டியே” – கோபத்துடன் கேட்டபடித் துணிகளை அசுர வேகத்தில் மடித்துக் கொண்டிருந்தவளிடம்..

“கோவப்படாத டி! ரொம்ப அழகா வேற இருந்துத் தொலைக்குற!” – என்றான்.

நிமிர்ந்து கேவலமாய் ஒரு பார்வையைச் செலுத்தினாள் அவள்.

“அப்புறம் ஏடாகூடமா ஏதாவது பண்ணனும்ன்னு தோணும். நம்ம வீடு மாதிரி இல்ல! இங்க எந்நேரமும் ரெண்டு பெருசுங்க வேற இருக்குங்க!”

“ஓஹோஓஓ! அப்டின்னா.. நீ இங்க இருக்க மாட்டேன்னு சொல்றதுக்கு இது தான் காரணமா?”

“இது.........வும் தான்”

“அடச் சை!”

“என்ன ச்சை?, நமக்கு ரொமான்ஸ் பண்ண பெஸ்ட் ப்ளேஸ்-ஏ கிட்சன் தான்! ஆனா இங்க நீயோ,நானோ கிட்சன்-க்குள்ள எண்டர் ஆக வேண்டிய அவசியமே இருக்காது. ஏன்னா.. எங்கப்பனோ, புகழ் மாமாவோ தான் சமைப்பாங்க”

“ஹேய்.. உங்கப்பா சமைப்பாரா டா?”

“ம்ம்ம்ம், சமைக்கத் தெரியாமலா ஹோட்டல் தொழில் நடத்துறான்?, தள்ளு வண்டில இட்லி,தோசை சுட்டு வித்து இந்தத் தொழிலை ஆரம்பிச்சவன் அந்தாளு”

“ஹ்ம்ம், அப்டில்லாம் கஷ்டப்பட்டு என்ன பிரயோஜனம்?, வளர்ந்து நிற்குறத் தொழிலைக் கட்டிக் காப்பாத்த ஆள் இல்ல அவருக்கு! பாவம்”

“எங்க சுத்துனாலும் ஏன் டி அங்கயே வர்ற?”

“இதோ பாரு, உனக்கு என் கூடப் பேசப் பிடிக்கலேன்னா... வெளிய போ! சும்மா இருக்கிறவக் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு” – எரிச்சலுடன் மொழிந்து விட்டுத் திரும்பி அமர்ந்தவளை ஒரு நொடி முறைத்துப் பின்.. அவள் மடியிலிருந்தத் துணிகளையெல்லாம் தள்ளி விட்டு.. கட்டிலில் ஏறி.. அவள் மடியில் முகம் புதைத்து.. இடையைக் கட்டிக் கொண்டான் அவன்.

அவன் செயலில் வியந்து “ஏய்ய்ய் இன்னாடா?” என்று விசாரித்தாள் ஜமுனா.

“ப்ச், எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டி”

“என்ன குழப்பம்?”

“வாட்ட,சாட்டமா இருந்த மனுஷன் இப்டி ஓய்ஞ்சு,ஒடிஞ்சு போய் இருக்கிறதைப் பார்க்கக் கொஞ்சம் பாவமாத் தான் இருக்கு. ஆனா.. அவர் கேக்குறதைச் செய்ய மனசு வர மாட்டேங்குதே டி”

“இதுக்குப் பேரு தான் ஈகோ”

“ஏய்ய்ய்”

“இல்ல,இல்ல! டேய்... வெற்றி.. நீ என்ன மாதிரி மனநிலைல இருக்கன்னு எனக்குப் புரியுது டா! நீ தாலி கட்டுனதும்.. உடனே சேர்ந்து வாழனும்ன்னு சொன்னப்ப, எனக்கும் இப்டித் தான் இருந்தது! இவன் சொன்னா.. நாம தலையாட்டிடனுமான்னு!”

“ஏய், எதை எதோட டி கம்பேர் பண்ற?”

“எல்லாம் ஒன்னு தான்! ஈகோ-ன்னு சொல்லிட முடியாது! நம்மளக் காயப்படுத்துனவங்களுக்கு எந்த வலியையும் திருப்பிக் கொடுக்க முடியாம.. உடனே அவங்க விருப்பத்துக்குத் தலையாட்டிட்றதான்னு வர்ற... ஒரு மாதிரியானப் பிடிவாதம்! புரியுது எனக்கு.....”

“...............”

“ஆனா.. வெற்றி! அவர் தாஷி கூட பாசமா இருக்குறதைப் பார்க்கும் போது.. அவர் கொஞ்சம் நல்லவரோன்னு தோணுதுடா”

“அந்தாளு நல்லவரோ,கெட்டவரோ.. அது எனக்கு அநாவசியம்”

“சரி, நீ அவரைப் பத்தி நினைக்க வேண்டாம். தாஷியைப் பத்தி யோசி. இங்க இருந்தா சதாசிவம் அய்யா,சரோஜா பாட்டி, புகழ் தாத்தா, கதிர் மாமா,மாலதி அத்தை, செல்வி சித்தின்னு ஏகப்பட்ட சொந்தங்களோட வளரும் டா நம்ம பாப்பா! அங்க நாம ரெண்டு பேரைத் தவிர யார் இருக்கா?, உங்கப்பா தாஷியை மிஸ் பண்றாரோ இல்லையோ.. நாம அங்க போனதும்.. தாஷி இந்த சூழ்நிலையை ரொம்ப மிஸ் பண்ணுவா டா! வந்து ஒரு வாரமாச்சு. ஒரு வேளை சாப்பாடு கூட நான் ஊட்டல. புகழ் மாமா, சரோம்மா தான் மாத்தி,மாத்தி ஊட்றாங்க! அவ இந்த ஒரு வாரமா.. உன்னையும், என்னையும் எதுக்குமே எதிர்பார்க்கக் கூட இல்ல! பட்டாம்பூச்சியாட்டம் சுத்திட்டிருக்கா”

“....................”

“யோசி டா வெற்றி! பாப்பாவுக்காக ப்ளீஸ்”

ஜமுனா கூறியதற்காக மட்டுமன்றித் தனக்காகவும் கூட தந்தையின் ஹோட்டல் தொழிலை எடுத்து நடத்த முடிவு செய்தான் வெற்றி. ஓய்ந்து போயிருப்பவரைக் கண்ணால் கண்ட பிறகு, இவர் எப்படிப் போனால் எனக்கென்னவென்று.. கிளம்பிப் போய் விட முடியுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. எங்கிருந்தாலும் மனதின் மூலையில் உறுத்திக் கொண்டேயிருக்கும். அவர் தான் மகனுக்கான கடமையைச் செய்யாது போனார். அவனேனும் தந்தைக்கானக் கடமையைச் செய்யட்டுமே! யாருக்கு என்ன பாதகம் வந்து விடப் போகிறது! சொல்லப் போனால் புண்ணியம் தான்!

முடிவு செய்ததை அவன் ஜமுனாவிடம் தெரிவிக்க.. அவள் மகிழ்ச்சியுடன் அவனது தந்தை மற்றும் புகழேந்தியிடம் விசயத்தைப் பகிர்ந்து கொண்டாள். வெளிப்படையாக சந்தோஷத்தைக் காட்டா விட்டாலும்.. சதாசிவத்திற்கு ஏகக் குஷியென்பது.. அவர் தாஷியை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்வதிலேயேத் தெரிந்தது.

அதன் பின் இருவரும் ஒருமுறை வேலூர் சென்று தங்களது வேலையை ராஜினாமா செய்தனர். தாஷியின் பள்ளியும் சென்னைக்கு மாற்றப்பட்டது.

‘முதலியார்’ மெஸ்ஸின் மூன்று ப்ராஞ்ச்களையும் சமாளிக்கக் கதிரையும் தன் உடன் தொழிலில் இழுத்துக் கொண்டான் வெற்றி. மாலதியின் அன்னையை முடித்துக் கட்டுவது எப்படி – என யோசித்தபடியே மூன்று வேளை தின்று,தூங்கித் தெண்டமாகத் திரிந்தவனைத் தன்னுடன் தொழிலில் சேர்த்திருந்தான்.

வெற்றியின் முடிவில் சதாசிவத்தை விட புகழேந்திக்குத் தான் ஏக மகிழ்ச்சி! அவனதுத் திறமையை சிறு வயதிலிருந்துக் கண்டவராயிற்றே! புதிது,புதிதாக ஏதேனும் செய்து நிச்சயம் தொழிலை மேம்படுத்துவான் என்று நம்பிக்கையிருந்தது அவருக்கு.

அடுத்த சில மாதங்களில் ஜமுனாவும் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். பாடம் சொல்லிக் கொடுக்கும் போது மட்டும் தான் தாஷி அவளருகே வருவாள். மற்றபடி உண்பது, உறங்குவது, விளையாடுவது அத்தனையும் சரோஜாவிடமும்,சதாசிவத்திடமும் தான்!

இத்தனை வருடங்களாக.. வேலூரிலிருந்த வரை குடும்பம்,குழந்தையாக மூவரும் ஒவ்வொரு நாட்களையும் மகிழ்ச்சியாகக் கடத்தியிருந்தனர் தான். ஆனால்.. உறவும்,சுற்றமும் நிறைந்த இந்தச் சூழல் கொடுக்கும் திருப்தியென்பது.. அங்கிருந்த போது கிடைத்த மகிழ்ச்சியை விடப் பன்மடங்கானது.

தான் பிறந்து வளர்ந்த இடத்தில்.. தன்னைச் சார்ந்த உறவுகளுடன் மறுபடி ஒன்றாக இணைந்தது.. இருவருக்கும் அளவிட முடியாத நிம்மதியைக் கொடுத்தது. சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டதைப் போல் திருப்தியாய் உணர்ந்தனர். அவர்களது எண்ணம் போல் வாழ்க்கை மிக மிக அழகானதாக மாறியிருந்தது.

சரியாக மூன்று மாதத்திற்குப் பிறகு...

அன்றிரவு அவர்களது வீட்டு மொட்டைமாடியில் கையில் பால் தம்ளருடன் நின்றிருந்தான் வெற்றி.

“சாரி டா! பாப்பா தூங்க லேட் பண்ணிட்டா” – என்றபடியே மூச்சு வாங்கப் படியேறி வந்த ஜமுனாவிடம் ஒரு பால் தம்ளரைத் திணித்து விட்டு...

“மெதுவா வர வேண்டியது தான?, எதுக்கு இவ்ளோ அவசரம்” என்றான் வெற்றி.

“நீ திட்டுனேனா??”

“ஆமா, நீ எனக்கு ரொம்பப் பயப்படுறவ தான்!”

கண்டு கொள்ளாமல் பாலை உறிஞ்சினாள் ஜமுனா.

“ஆனா ஒன்னு டா வெற்றி.. உங்கப்பா உன்னை விட பெரிய சமையல்காரர் டா! மனுஷன் இந்த பாதாம் பால்ல அப்டி என்ன சீக்ரெட் இன்க்ரிடியண்ட் போட்றாரோ தெரியல”

“ஆமா, நீ தான் பாராட்டிக்கனும்”

“டேய், உனக்குப் பொறாமை டா! நேத்து கொத்துப் பரோட்டா போட்டாரு பாரு!, கிட்சன்ல அவர் பக்கத்துலயே உட்கார்ந்து சுடச்சுட வாங்கி சாப்ட்டோம் நானும் தாஷியும். தெரியுமா?”

“ஹ்ம்ம், இப்டியே அடுத்தவன் சமைக்கிறதை வாங்கித் தின்னே காலத்தை ஓட்டு! ஏன் டி, நீ எப்ப தான் டி சமையல் கத்துப்ப?”

“நான் ஏன் டா கத்துக்கனும்?, அப்புறம் நீ எதுக்கு இருக்க இந்த வீட்ல?, ஆனாலும்.. வெற்றி.. உன் முட்டை தோசையை ரொம்ப மிஸ் பண்றேன் டா”

“வுடு, வுடு.. நாளைக்கு நான் சமையல்கட்டுல இறங்குறேன்! எங்கப்பனை விட நான் தான் பெரிய குக்-ன்னு உன்-ட்டப் பேர் வாங்குறேன்”

“ஹாஹாஹா.. அப்டின்னா.. நான் சொன்ன மாதிரி உனக்குப் பொறாமை தான் போல, என் ராசாஆஆஆஆ” – அவன் கன்னம் பற்றிக் கொஞ்சியவளின் கையைப் பற்றித் தடுத்து.. அவளை மேலும்,கீழும் நோக்கியவன்...

“சேலை கட்டிட்டு வா-ன்னு சொன்னேன்ல? என்றான்.

“ச்சி! இங்க வைச்சா?, போடாங்.....”

“ஏன்?, மொட்டை மாடி,குளுகுளுக் காத்து! இந்த சிச்சுவேஷனுக்கு என்ன டி குறை?”

“ம்ம், அக்கம்பக்கத்துல இருக்கிறவனுக்கு ஃப்ரீ ஷோ காட்ட சொல்றியா? போடா”

“ஹ்ம்ம்ம், தாலியைக் கழட்டிட்டேன்னு ஏமாத்தி அன்னிக்கு என்னை நீ மழைல நனைய விட்டப்போ.. வாசல்ல வைச்சுப் போட்டோமே ஒரு கிஸ்ஸூ! அதெல்லாம் உனக்குத் தப்பா தெரியலயாடி?? ஆனாலும்..... இப்போ-ல்லாம் நீ ரொம்பப் பண்ணிக்கிறடி! அர்த்தராத்திரில அடிச்சு எழுப்புனாலும்.. அசையவே மாட்டேங்குற”

“வாயை மூடு டா”

“ஏய்ய் கடைசியாக் கேக்குறேன் உன்னால இன்னிக்கு முடியுமா முடியாதா?”

-எரிச்சலுடன் அவன் கத்திக் கொண்டிருக்கையில் “ஹே.. அங்க பாரு... கதிரும்,மாலதியும்” என்று கைக் காட்டினாள் ஜமுனா.

“ஹாஹாஹா.. இவனுங்க சேட்டு வூட்டு மாடில குஜால் பண்றதை இன்னுமா வுடல?” – நக்கல் குரலில் சிரித்துக் கொண்டிருந்தவளிடம்..

“அவங்களும் நம்மள மாதிரி சும்மா காத்து வாங்க வந்திருப்பாங்கடி” என்றான் வெற்றி.

“நாம?? காத்து வாங்க???”

“ம்ம்ம்” – என்றபடி அவள் விரல்களைப் பற்றியவனின் தலையில் கொட்டி வைத்து..

“அப்புறம் எதுக்கு டா பாய்,தலகாணியெல்லாம் போட்டு வைச்சிருக்க?” என்றாள்.

“ஏய்ய் நீ வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் மனசுல எந்த நினைப்பும் இல்லடி!, எங்கப்பன் பாதாம்பால்ல என்னத்தக் கலந்தானோ! எக்குத்தப்பாத் தோணுது” – தலையை உலுக்கிக் கொண்டவனைக் கண்டு அவள் கலகலவென சிரிக்கும் சமயம்..

“வெட்றிறிறிறிறிறி.....” என சன்னக்குரலில் அழைத்துக் கொண்டுத் தன் டெடி பியருடன் மேலே வந்தாள் தாஷி.

“ஏய்ய்ய் கஷ்டப்பட்டுத் தூங்க வைச்சுட்டு வந்தா.. நீ என்னடி அதுக்குள்ள எழுந்துட்ட?”-ஜமுனா

“ஏய், புள்ளயைத் திட்டாதடி!” என்று மனைவியை அதட்டியவன் “நீங்க வாங்க மீ...” எனக் கூறி அவளைத் தூக்கியதும்.. “அவ ஒன்னும் தூங்க வைக்கல! நானா தான் தூங்குனேன்” என்று அன்னையைப் பற்றிக் குறை கூறினாள் தாஷி.

“ஏன் டி நான் அரை மணி நேரமாக் கதை சொல்லி, உன்னைத் தட்டிக் கொடுக்கல?” – மீண்டும் கத்தத் துவங்கிய ஜமுனாவைத் தடுத்து “ஓகே! ஓகே! சண்டை வேண்டாம்! பாப்பாவும்,ஜம்முவும் சமாதானம்! ஓகே?” என்ற வெற்றி “வாங்க,வாங்க க்ரூப் ஹக் பண்ணிக்கலாம்” என்றதும் இருவரும் அவனருகே நெருங்கி.. கைகளை ஒருவர் மீது ஒருவர் போட்டுக் கட்டிக் கொண்டனர்.

அதன் பின்பு தாஷியைத் தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு.. அவள் தலை கோதியபடியே சாய்ந்து படுத்து விட்டான் வெற்றி. “கண்ணே... கலைமானே....” எனப் பாட்டு வேறு!

“கர்ணகொடூரமா இருக்கு. தயவு செஞ்சு பாடாதடா ப்ளீஸ்ஸ்ஸ்” – கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சியபடி அவனருகே சாய்ந்தவளைக் கண்டுச் சிரித்துக் கொண்டே கத்திப் பாடினான் அவன்.

சிறிது நேரத்திலேயே தாஷி தூங்கிப் போக.. அவளைச் சரியாகப் படுக்க வைத்து விட்டு.. மனைவியின் தோளைப் பற்றித் திருப்பியவன்.. “ஸ்டார்ட் பண்ணலாமா?” எனக் கேட்டபடி அவள் அருகே சரிய...

“வெய்ட் வெய்ட்” என நிறுத்திய ஜமுனா.. “ஆக்சுவலி எனக்கு ஒரு சந்தேகம் இருக்குடா” என்றாள்.

“என்ன சந்தேகம்?”

“எனக்கு இப்போ-ல்லாம் நிறையத் தூக்கம் வருது. காலைல காஃபி குடிச்சா வாமிட் வேற! க்ளாஸ் எடுத்துட்டிருக்கும் போது.. அப்பப்போ தலை சுத்துற மாதிரியான ஃபீல் வேற!” என்றவள்.. வாயையும்,கண்ணையும் பெரிதாக விரித்துத் தான் அடுத்து சொல்லப் போகும் வார்த்தைக்காகக் காத்திருந்த வெற்றியிடம்.. “ஒருவேளை இது... அதுவா இருக்குமோ??” எனக் கண்ணைச் சுருக்கிய சமயம்....

“எ....என்னடி சொல்ற????????”– எனச் சந்தோசத்தில் பரபரத்தபடியேத் தன் மனைவியின் கை விரல்களை இறுகப் பற்றிய வெற்றிக்குத் தலை,கால் புரியவில்லை.

நீயில்லையே... இனி நானில்லையே.... உயிர் நீயே!!

நீ பாதி.. நான் பாதி கண்ணே!

-இணைந்திருப்பார் இளையராஜா! இன்றும்! என்றும்! எப்பொழுதும்! நாம் வாழும் காலம் முழுமைக்கும்!

மகிழ்ச்சியும்,நிம்மதியுமாய் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மூவரையும் (soon to be 4) காண்கையில் நம் முகத்தில் தோன்றும் புன்னகை, இந்த அகண்ட வானில்.. எங்கோ ஓர் மூலையில்... நிலையற்று நின்று.. ஏக்கமாய் இப்புவியை நோக்கிக் கொண்டிருக்கும் அந்த இரு ஜீவன்களின் முகத்திலும் நிச்சயம் தோன்றியிருக்கும் என்கிற நம்பிக்கையோடு நாமும் விடைபெறுவோம்!