அத்தியாயம் - 2

முத்து மாமா.. என்னை விட்டுப் போகாதே..

என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே!

-இதைக் கேட்கும் போது என் டிப்ளமா நாட்கள் நினைவுக்கு வருது! காலேஜ்லயே பெரிய ரௌடி அந்தப் பையன்! பெயர் முத்து….சம்திங்! மறந்துட்டேன்! பெல் பாட்டம் மாதிரி ஒரு பேண்ட் போட்டிருப்பான். ஒரு கைல புக்கைப் பிடிச்சிக்கிட்டு ஸ்டைலா அவன் க்ரௌண்ட்ல நடக்குறதை நான் ‘ஆ-ன்னு’ பார்ப்பேன்! பையன் கிரிக்கெட் ஆடுவான் வேற! போதாதா நம்ம பொண்ணுங்களுக்கு! அவன் வந்தாலே.. உன் ஆள்டின்னு கத்துவாளுக! அப்போ எதேச்சையா இந்தப் பாட்டை நான் முணுமுணுக்க.. அவனுக்காகத் தான் பாடினேன்னு, 2 நாளா என் கேங் முழுக்க இந்தப் பாட்டைப் பாடி பாடி, என்னை வெறுப்பேத்துனாங்க! மறக்கவே முடியாத நாட்கள் அது!

ஹோட்டல் கன்யா. ஆர்.எஸ் புரம், கோயம்புத்தூர்.

“கிட்டு மாமா இதெல்லாம் தேவையா?, ரோட்ல இட்லி சுட்டு விற்கிறவன் கிட்டக் கூட நான் ட்ரைனிங் எடுத்துக்கிறேன். இந்தாளு கிட்ட மட்டும் வேண்டாம். இவருக்கும்,எனக்கும் என்னிக்குமே ஒத்து வராது ப்ளீஸ்.” – டக்-இன் செய்யப்பட்ட பேண்ட்-சட்டை சகிதம், கையில் கல்விச் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பையுடன் தன்னருகே நின்றிருந்தவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தான் 27 வயதான சேத்ரன்.

“வாயை மூடடா பைத்தியம். இத விட உனக்கு நல்ல வாய்ப்பு கிட்டுமோ?, ஆதிசேஷன் ஐயங்கார் அப்படி ஒன்னும் கெட்டவரில்ல. கொஞ்சம் கர்வம் அதிகம். அதனால என்ன?, உலகத்துல எந்தப் பணக்காரன் தான் கர்வமில்லாம இருக்கான்?, நமக்குக் காரியம் ஆகனும்னா 4 பேரை சஹிச்சுண்டு போறதுல எந்தத் தப்புமில்ல. சும்மா முரண்டு பிடிக்காம அவராண்ட பதவிசா நடந்துக்கப் பார். மனுஷன் வந்துட்டார்” – அணிந்திருந்த சட்டையின் மேலிருந்தத் துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்ட கிட்டு வாய் நிறைய பல்லுடன் வந்தவரை வரவேற்றார் கிட்டு.

வெள்ளை வேட்டி,சட்டை பளபளக்க, நெற்றியில் நாமத்துடன் பளீர் சிரிப்புடன் உள் நுழைந்த மனிதரைக் கண்டால் நிச்சயம் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். ஆனால் சேத்ரனுக்கு மட்டும் இவரைக் கண்டாலே மனதுக்குள் எதிர்மறை உணர்வு தான்!

“ம்க்க்கும், என்ன ஓய், நீர் சொன்ன தம்பியாண்டான் இவன் தானா?, பாக்கியம் இறந்தப்போ பார்த்தது. சரியா ஞாபகம் இல்ல. பையன் என்ன படிச்சிருக்கான்?” – ஆதிசேஷன்

யாருக்கு வைத்த விருந்தோ என்பது போல் மேற்கூரையை வெறித்துக் கொண்டிருந்த சேத்ரனை கிட்டு மாமா இடித்துச் சைகை காட்ட, வேறு வழியின்றி அவருக்குப் பதில் கூறினான்.

“நான் ஒரு செர்டிஃபைட் மாஸ்டர் பேக்கர் மாமா. ஸ்கை கலினரி அகாடமில பேஸ்ட்ரி பேக்கர்க்குப் படிச்சிருக்கேன். நிறைய கலினரி ப்ரோக்ராம்ஸ்ல பார்ட்டிசிபேட் பண்ணி சர்டிஃபிகிஷேன் வாங்கியிருக்கேன்.”

“அதாவது இந்த பன்,ப்ரெட்,கேக்ன்னு சமைக்கிறவன். சரியா?”

“ம்ம், அப்படியும் சொல்லலாம்”

“கண்றாவி அதுல முட்டை,கிட்டையெல்லாம் கலப்பாங்களாமே?, நீ அதெல்லாம் கையால தொடுவியா என்ன?,”- முகத்தைச் சுருக்கிக் கொண்டவரிடம் பொறுமையின்றி “இப்போல்லாம் எக்-லெஸ் கேக் கூட வந்துடுத்து மாமா. மோர் ஓவர், நான் அவ்வளவு ஆச்சாரம் பார்க்குற ஆள் கிடையாது” என்றான் சேத்ரன்.

“ஹ்ம்,அதெப்படி?, பிராமணனா பிறப்பெடுத்துட்டு ஆச்சாரம் பார்க்க மாட்டேன்னா என்ன அர்த்தம்?,சரி,அத விடு. இட்லி,தோசை,பொங்கல்,பூரின்னு விற்கிற என் கடைல நீ என்ன ட்ரைனிங் எடுத்துக்கப் போகுற?”

“அதையே தான் நானும் சொன்னேன். கிட்டு மாமா தான் இங்க அழைச்சிண்டு வந்தார்”

“என்னய்யா கிட்டு?” –ஆதிசேஷன்

“நீ செத்த சும்மா இரேன் டா சேத்ரா. அண்ணா.. பையன் இப்படித் தான் பேக்கரி,பன்னுன்னு பைத்தியக்காரனாட்டம் ஏதாவது பேசிட்டிருப்பான். இவனுக்கு புத்தி சொல்லி நம்ம பக்கத்து சமையலைச் சொல்லிக் கொடுத்து உங்க ஹோட்டல்லயே வேலை போட்டுக் கொடுங்கோ. என் தங்க பாக்கியம் இறந்தப்புறம் இவன் வளர்ந்தது என்னாண்ட தான். அவனுக்குப் பிடிச்சதத் தான் படிக்க வைக்கனும்னு அவங்கம்மா சொல்லிட்டுச் செத்ததால, நான் இந்தப் படிப்பைப் படிக்க சம்மதிச்சேன். இவன் படிப்பை முடிச்சு 4 வருஷமாச்சு. நம்ம ஊர்ல பெருசா எந்த வேலையும் கிடைக்கல. வெளிநாடு போனா.. பெருசா வரலாம்ன்றான். ஆனா என் கிட்ட அவ்ளோ வசதி இல்ல” – கிட்டு முடிக்கும் முன் இடைமறித்த சேத்ரன்,

“நான் உங்க கையிலிருந்து எதையும் கொடுக்கச் சொல்லி கேக்கல மாமா. என் பேர்ல இருக்குற நிலங்களை வித்துத் தாங்கோ. நான் அதை வைச்சு வெளிநாடு போய் பிழைச்சுக்கிறேன். உங்க கிட்ட எந்தக் காரணத்தக் கொண்டும் வந்து நிற்க மாட்டேன்”

“அடிச்சுப் பல்லைக் கழட்டிடுவேன் ராஸ்கல், பேசுனதையே பேசிண்டு!, அப்படி உன்ன தலை முழுகுறதா இருந்தா இத்தனை வருசமா ஏன் டா கூட வைச்சிண்டு இருக்கேன்?, ஒழுங்கா நான் சொல்றதைக் கேட்டு, அண்ணாவோட வேலைக்கு சேர்ந்து 4 காசு சம்பாதிக்கப் பார். ஏழு கழுதை வயசாயிடுச்சு, இவனுக்குன்னு குடும்பம்,குழந்தைன்னு அமைய வேண்டாமா?, எனக்குத் தான் ஆண்டவன் புத்திர பாக்கியமில்லாம பண்ணிட்டான்!”

“மாமா.. ப்ளீஸ்.. இப்போ ஏன் தேவையில்லாம ஏதேதோ பேசுறீங்க?”

“ஆமா டா. தங்கை பையன்னு ஒரு நாள் உன்னைப் பார்த்திருப்பேனா?, நானும்,உன் மாமியும் சொந்தப் பிள்ளையா தானேடா வளர்த்துண்டிருக்கோம்?,நீயும் எங்களை அப்படி நினைக்குறதா இருந்தா நான் சொல்ற பேச்சைக் கேளு.”-என்று மருமகனை மிரட்டியவர் சேஷனிடம் திரும்பி..

“மன்னிச்சுடுங்கோண்ணா. உங்க முன்னாடி வாதம் பண்ண வேண்டியதாயிடுத்து. அப்பா,அம்மா இல்லாத பையன். அதான் கொஞ்சம் முரடா வளர்ந்துட்டான். எனக்காக.. தயவு பண்ணி இவனை உங்க ஹோட்டல்லையே சேர்த்துக்கோங்கோ. பேச்சு தான் இப்படி, சமையல்ன்னு வந்துட்டா, பையன் வெளுத்து வாங்கிருவான்.”

“ஹ்ம்ம்ம், உன் குடும்பப் பிரச்சனையெல்லாம் எனக்கு எதுக்குய்யா கிட்டு?”என்றவர் சேத்ரனை கீழிருந்து மேல் வரை நோக்கி விட்டு..

“ஒரு பிரமாணனுக்கான எந்த அடையாளமும் இவனாண்ட இல்லையேய்யா கிட்டு. தாடியும், மீசையுமா காட்டான் மாதிரி வளர்ந்து நிற்கிறான். அதையெல்லாம் மழிச்சுண்டு வரச் சொல்லு வேலைக்கு சேர்த்துக்கிறேன். ஏதோ உனக்காகவும்,பாக்கியத்துக்காகவும் தான் இதெல்லாம்!, மத்தபடி இவன் முகமும்,பேசுற விதமும் எனக்கு சுத்தமா பிடிக்கல.”

“அய்யோ அப்படி சொல்லாதீங்கோண்ணா. கொஞ்சம்,கொஞ்சமா பையன் மாறிடுவான். நிதர்சனம் புரியாம நடந்துண்டிருக்கான். மாறிடுவான். நீங்க மாத்திடுவேள். அப்போ நாங்க வரோம்ண்ணா. நாளையிலிருந்து பையன் டான்னு நீங்க சொல்ற நேரத்துக்கு வந்துடுவான்.” என்று விட்டு, சேத்ரனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினார் கிட்டு.

வெளியே வந்ததும் டக்-இன் செய்த சட்டையை இழுத்து விட்டுக் கொண்ட சேத்ரன் “ எப்படிப் பேசுறார் பார்த்தீங்களா?, சரியான கர்வம் பிடிச்ச ஆளு. 4 ரெஸ்ட்டாரண்ட் வச்சிருந்தா இவர் பெரிய ஆளாமா?, என்னை மட்டும் வெளிநாடு அனுப்புனீங்கன்னா நான் இத விடப் பெரியாளா வருவேன். இந்த மாதிரி ஒரு ஆள் கிட்ட கைக் கட்டி அடிமை மாதிரி என்னால வாழ முடியாது மாமா. ப்ளீஸ்,புரிஞ்சுக்கோங்கோ. அதுவுமில்லாம, நான் படிச்சது இட்லி,தோசை சுடுறதுக்கில்ல.” என்று பொறிந்தான்.

“கேக்,பன்னெல்லாம் நமக்கு ஒத்து வராது. நம்ம ஊருக்கு இட்லி,தோசை தான் சரி. ஒழுங்கா இந்த வேலையை ஒத்துண்டு பிழைக்கிற வழியைப் பார். இல்லையா,எனக்கும்,உன் மாமிக்கும் காரியம் பண்ணி வைச்சுட்டு நீ எந்த நாட்டுக்கு வேணாலும் போ.” – முடித்துக் கொண்டு சாலையைக் கடந்து விறுவிறுவெனச் சென்று விட்டவரை செய்வதறியாது நோக்கினான் சேத்ரன்.

மறுநாளிலிருந்து வேறு வழியின்றி அன்னை,தந்தைக்கு நிகராக அவன் நினைக்கும் மாமா,மாமிக்காக சேஷனது கன்யா ஹோட்டலில் பணி புரியத் தொடங்கினான்.

அன்னை,தந்தை இருந்தவரை அவனது விருப்பம் ஒன்றே வீட்டில் பிரதானம். படிப்பு,விளையாட்டு, ஏன் தினம் சாப்பிடும் உணவு கூட அவனது விருப்பம் தான். அவர்களது மறைவுக்குப் பின் மாமி,மாமா வீட்டில் கூட அவன் பெரிய மாற்றம் எதையும் உணர்ந்ததில்லை. வாழ்க்கையில் விருப்பமின்றி முதன் முறையாக அவன் செய்யும் காரியம் இந்த வேலையை ஏற்றுக் கொண்டது மட்டும் தான்.

அதுவும் கூட நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ஏனெனில் இத்தனை பிடிவாதமாக இருந்த கிட்டு மாமாவே முன் வந்து அவனது விருப்பத்தை நிறைவேற்றி வெளிநாடு அனுப்பி வைக்குமளவுக்கு வாழ்க்கை, பாதை மாறி பிரயாணித்தது. எல்லாம் அவளால்! அவளது வருகையால்!, ஆனால் இவையனைத்தும் நடந்த விதத்தை தான் அவனால் பல நாட்களுக்கு ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போனது.