அத்தியாயம் - 1
“நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்..
பேரு விளங்க இங்கு வாழனும்..”
ஜாதி,மதம்,ஏழை,பணக்காரன்,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்கிற பெயரில் இத்தாய்த் தமிழ்நாட்டை வேற்றுமைகள் பல சூழ்ந்திருந்தாலும், நம் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக, பாரபட்சம் பார்க்காமல் வழி,வழியாக அனைத்துத் தரப்பு மக்களும் கடைபிடிக்கும் பழக்கம் ஒன்றுண்டு! அது என்னவெனில்.. நம் தமிழ்நாட்டுத் திருமணங்கள் அத்தனையிலும் விடாது ஒலித்து நம் காதுகளைக் களைப்படையச் செய்யும் மேற்கூரியப் பாடல் வரிகள் தான்! என்ன தான் காலம் மாறி,மக்களின் ரசனையில் புதுமை புகுந்திருந்தாலும், இன்றும் கூடப் பல திருமணங்களில் பெண் அழைப்பின் போது “வாராயோ தோழி,வாராயோ” என்ற பாடலும், திருமணத்தன்று “நூறு வருஷம்” என்றப் பாடலையும் ஒலிக்கச் சொல்லிக் கேட்டுத் தொந்தரவு செய்ய ஒரு கூட்டமே உள்ளதென்பதை மறுக்க முடியாது!
அப்பேர்ப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் பாடலை ஒலிக்க விட்டிருந்த அந்தத் திருமண மண்டபம் முழுதிலும் வழக்கமான பரபரப்பு நிறைந்திருந்தது. கால் காசுக்குப் பிரயோஜனமில்லாவிட்டாலும், நானில்லையெனில் இந்தத் திருமணமே நடக்காது என்ற ரீதியில் அங்குமிங்கும் கெத்து குறையாமல் நடமாடிக் கொண்டிருக்கும் 4 பெருசுகள்! திருமணம் எந்தக் குறையுமின்றி நடந்து முடிந்திட வேண்டுமென்கிற டென்ஷனுடன் மணமக்களின் குடும்பத்தார்! மேடை அலங்காரத்தில் செருகப்பட்டிருக்கும் பூவைப் பிடுங்குவதற்காகவே வருகை தந்திருப்பதைப் போல் மேடையை மட்டுமேச் சுற்றி ஓடும் குட்டிப் பிசாசுகள்! அந்த ராமன் வளைத்த வில் கூட இத்தனை முறுக்குடன் இருந்திருக்காது! ஆனால் இந்தக் காளையர்கள் வளைக்க நினைக்கும் கன்னியரிடம் தான் எத்தனை விறைப்பு! பல்வகைப்பட்ட மனிதர்களை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் குழுமச் செய்யும் சிறப்புத் திருமணங்களுக்கு மட்டுமே உண்டு!
மெட்ராசுக்கே உரித்தான கொடூர வெயில் அம்மண்டபத்திலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, நெற்றியில் வழிந்தோடிய வியர்வையைத் தன் வெண்பட்டுச் சட்டையில் துடைத்தபடிக் கையிலிருந்தக் கூடையிலிருந்து ஒவ்வொரு ஜிலேபியாக எடுத்துப் பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தான் வெற்றி என்கிற வெற்றிச் செல்வன்.
“மாமா.. எனக்கு இன்னொரு ஜிலேபி வைங்க..”
வரிசையாக வைத்தபடி நகர்ந்து கொண்டிருந்தவன் அச்சிறுமியின் குரலில் நின்று சிரித்து “உனக்கு இல்லாததா பாப்பா?, எத்தனை வேணும்?, ஒன்னா?,ரெண்டா? இந்தா வாங்கிக்க!” என்றபடிக் கை நிறைய ஜிலேபிகளை அள்ளி அவள் இலையில் வைத்தான்.
“நீ இந்தக் கூடையவே கேட்டாலும் கொடுப்பான்டி இவன்! ஏன்னா.. இந்த சுத்துவட்டாரத்துலேயே இவனை மாமான்னு கூப்பிட்ட ஒரே பொண்ணு நீ தான்! அந்த சந்தோசத்துலயே அள்ளிக் கொடுப்பான்!
சிரிப்புடன் சிறுமியை நோக்கிக் கொண்டிருந்தவன், எதிர்வரிசையிலிருந்து வந்த நக்கல் குரலைக் கேட்டுக் கடுப்புடன் திரும்பினான்.
அவன் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருக்கும் மாலதி அமர்ந்திருந்தாள்! வாயில் ஜிலேபியை அடைத்தபடி!
“இப்போ இன்னாத்துக்கு என்னைய வம்பிழுக்கிற?” – வெற்றி
“ஆமா! இவரு பெரிய ஆணழகன்! இவரை நாங்க வம்பிழுத்திட்டாலும்! உண்மையைத் தான சொன்னேன்!, இந்த ஏரியாவுல வேற எவ உன்னை மாமான்னு கூப்பிடப் போறா?”
“அது என் பிரச்சனை!, நீ ஏன் அநாவசியமா பேசுற?”
“அப்டித் தான் டா பேசுவேன்! போன வாரம் என் தங்கச்சிக் கையப் புடிச்சு இழுத்து ‘நீ உங்கக்கா மாறி இல்ல! ரொம்ப அழகுன்னு சொன்னயாமா?, எவ்ளோ திமிரு இருக்கனும் உனக்கு?”
“அதை உன்ட்ட அப்டியே வந்து சொல்லிட்டாளாக்கும்! உன் தங்கச்சி உன்னை மாறி இல்ல மாலதி! பெரிய லூசு!” – நக்கலுடன் அவன்.
“டேய்.... வெறி ஆயிருவேன் நானு!”
“ஏய், இப்போ என்னான்ற?, உன் மூஞ்சியை விட உன் தங்கச்சி மூஞ்சி அழகா இருந்தா, அழகா இருக்குன்னு சொல்லத் தான் செய்வாங்க! இதுல உனக்கென்ன காண்டு?”
“அடேய்!!!!!!” என்று பொங்கிய மாலதி “ராசி கெட்டவனே! நீ எப்பேர்ப்பட்ட அழகனா இருந்தாலும், எவளும் உன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டா! நீ சைட் அடிச்சாக் கூட குஷ்டம் வந்துடும்ன்னு நம்ம ஏரியாப் பொண்ணுங்க உன்னைக் கண்டாலே ஓடுறாளுக! நீ.. நீ.. என் தங்கச்சியைப் பார்த்து அழகா இருக்கன்னு சொல்லுவியா?, நீ தொட்டதால, நாளைக்கே அவளுக்குக் கை,கால் விளங்காம போயிட்டா, என்னடா பண்ணுவ?” – என்று கத்தத் துவங்க.. அது வரை அவளை வம்பு செய்யும் நோக்கத்துடன் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்தவன், முகம் மாறக் கடுங்கோபத்தில் கொதித்தெழுந்து விட்டான்.
“அடிங்*********! யாரைப் பார்த்து இன்னாடி சொன்ன?” என்று இண்ஸ்டண்டாகக் கெட்ட வார்த்தையை உதிர்த்தவன் அவளை அடிக்கக் கை ஓங்க.. “டேய்,வெற்றி,” என்றபடி ஓடி வந்துத் தடுத்தான் அவனது நண்பன் கதிர்.
“கைய விட்றா! ஒரே அறைல இவ வாயை ஒடைச்சு மூஞ்சியப் பேக்கல, என் பேரு வெற்றி இல்ல! இன்னாடி சொன்ன?, என் கைப்பட்டா, உன் தங்கச்சிக்குக் கை,கால் விளங்காம போயிடுமா!, இப்ப நான் அடிக்கிற அடில உனக்குப் பக்கவாதம் கன்ஃபார்ம்டி!” என்றபடி மீண்டும் பாய்ந்தவனை இழுத்து நிறுத்திய கதிர் “டேய்... டேய்... இப்போ இவ கூட சண்டை போடுறது ரொம்ப முக்கியமா?” என்று எரிச்சலுடன் வினவினான்.
அவன் இழுத்ததில் விலகிய சட்டைக் காலரை சரி செய்தவன் “இன்னாப் பேச்சுப் பேசுறா பார்த்தியாடா?, நான்.. நான் ராசிகெட்டவனாம்! என் கைப்பட்டாலேக் குஷ்டம் வந்துடும்ன்னு சொல்றாடா மாப்ள!” என்று மீண்டும் பொங்க..
“சரி, விட்றா மச்சி! உண்மையைத் தான சொல்லுச்சு அது?” என்றவனைப் பல்லைக் கடித்து முறைத்தவன் காது கூசுமளவிற்குச் சில,பலக் கெட்ட வார்த்தைகளை அவனை நோக்கி உச்சரிக்க... “டேய்,விட்றா,விட்றா!” என்ற கதிர் “ஏய் அவளை விடுடா!, நம்ம அறிவு இப்போ பெரிய பிரச்சனைல மாட்டிருக்கான் டா மாப்ள!, முதல்ல வா கீழே போவோம்” என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.
கோபம் மாறாத முகத்துடன் மாலதியைத் திரும்பி நோக்கியவன் “உன் தங்கச்சிய என் கண்ல படாம வச்சுக்கடி! என் கண் முன்னாடி, அவ வந்தான்னா.. தூக்கிட்டுப் போய் ரேப் பண்ணிடுவேன்!” என்று உறுமி விட்டுச் செல்ல... “அடேய்....”என்று கத்திய மாலதியின் வாயிலும் நாக்கூசும் கெட்ட வார்த்தைகள்!
“என்னாவாம் டா அவனுக்கு?, என்னப் பிரச்சனை?, எதுவாயிருந்தாலும் கல்யாணம் முடிஞ்சதும் பேசித் தீர்த்துக்க முடியாதா?” – எரிச்சல் மாறாத குரலுடன் வினவிய வெற்றியிடம்..
“இந்தக் கல்யாணமே நடக்காது போல மச்சி!” என்றான் கதிர்.
“என்னடா சொல்ற?”
“மாப்ள எஸ் ஆயிட்டான் டா! வேற யாரோ ஒரு பொண்ணை லவ்வுறானாம்! அவளை இழுத்துட்டு ஓடிட்டான் போல! விடிஞ்சதுல இருந்து ஒரே சலசலப்பு மச்சி! இதைக் கூடக் கவனிக்காம நீ என்னடா பந்தி பரிமாறக் கிளம்பிட்ட?”
“இப்போ அறிவு எங்கடா இருக்கான்?” – அவன் வினவிக் கொண்டிருக்கையிலேயே அவர்களை நோக்கி ஓடி வந்த பிரசாத் “டேய், மாப்ள வீட்டாளுங்களோட அறிவு பிரச்சனை பண்ணிட்டிருக்கான் டா! வாங்க டா சீக்கிரம்” என்று பதறியபடி இருவரையும் அழைத்துச் சென்றான்.
“ஏன்ய்யா உன் மகன் இன்னொருத்தியைக் காதலிக்கிறது தெரிஞ்சும், எதுக்குய்யா என் பொண்ணு கூடக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுன?, உன் குடும்பப் பிரச்சனைக்கு நாங்க பலிகடாவா?, இப்போ என் பொண்ணு வாழ்க்கைக்கு யாரு பதில் சொல்லுவா?, கல்யாணம் நின்னு போனா, என் பொண்ணைத் தானய்யா ஊர் குறை சொல்லும்?”
-பெண்ணின் தந்தை,அதாவது வெற்றியின் தோழன் அறிவழகனின் தந்தை மாப்பிள்ளையின் தகப்பனை நோக்கி ஆதங்கத்துடன் கத்திக் கொண்டிருக்க... விசயம் கேள்விப்பட்டுப் பாதி முடிந்திருந்த அலங்காரத்துடன் ஓடி வந்து மூச்சு வாங்க அழுகையும்,கோபமுமாய் அவர்கள் முன் நின்றாள் மணப்பெண் மைதிலி.
தங்கையின் கண்ணில் கண்ணீரைக் கண்டதும் கோபம் கொப்பளிக்க, தலை குனிந்து நின்றிருந்த மணமகனின் தந்தையுடையச் சட்டையைக் கொத்தாகப் பற்றிய அறிவு “உன்னையெல்லாம் சும்மா விட்றதே தப்புய்யா! உன் மகன் வேற ஜாதிப் பொண்ணை லவ் பண்றது உனக்குப் பிடிக்கலேன்னா, நீ அவனை தண்டிச்சிருக்கனும்! என் தங்கச்சி என்ன பாவம் பண்ணுனா?, எங்களை நம்பி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டப் பொண்னை, இப்படி ஒரு நிலைமைல நிக்க வைச்சுட்டியே! உன்னைச் சொல்லித் தப்பில்ல! நீ இந்தக் கல்யாணத்தை முடிக்க அவசரப்பட்டப்பவே நாங்க சுதாரிச்சிருந்திருக்கனும்! ச்சி! நீயெல்லாம் மனுஷனா?, எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு” என்று அவர் முகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தியவனை “அறிவு!” என்று அடக்கிய அவன் தந்தை “இந்தாளு கூட சண்டை போட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல!, இப்போ நம்ம பொண்ணு வாழ்க்கைக் கேள்விக் குறியா நிக்குது! அதைச் சரி பண்ண, என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம்! இவங்க முகத்துல முழிக்கிறது கூடப் பாவம்! முதல்ல, இந்த இடத்தைக் காலி பண்ணுவோம்! வா” என்று அவனது கையைப் பற்றித் தன் புறம் இழுத்தார்.
அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த அறிவழகனின் நண்பர்களும் உச்சகட்டக் கோபத்தில் இருந்தனர்.
அறிவழகனின் தந்தையைப் பின்பற்றி அனைவரும் வெளியேற.... வெற்றியின் பார்வை மட்டும் மைதிலியைச் சுற்றி வந்தது.
பாவம்! இந்தப் பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு! விடிஞ்சதும் கல்யாணம்ன்னு ஆசையோட தூங்கி எழுந்திருஞ்சிருந்திருக்கும்! காலங்கார்த்தால இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுவாங்கன்னு கனவா கண்டிருக்கும்! ப்ச்! என்ன மனுஷங்களோ! என்று சிந்தித்தவனின் கண்ணில் மாலதி விழ.. தன்னைப் பார்தததும் ஏதோ முணுமுணுத்தவளைக் கண்டு கொள்ளாமல் திரும்பியவனின் விழிகள் மீண்டும் மைதிலியின் மீது!
ரொம்ம்ம்ம்ம்ம்பவும் சுமாரான முகம் தான்! ஏரியாவில் சுற்றித் திரியும் வயசுப் பையன்கள் ஒருவரும் ஒரு முறை கூடத் திரும்பிப் பார்த்திராத மொக்கை ஃபிகர்! ஆனால் நல்ல குணம் என்று கதிர் கூறியிருக்கிறான்! முக்கியமாக இந்த மாலதி மற்றும் அவளது தங்கையைப் போலல்லாதுக் கொஞ்சம் அடக்கமான பெண் தான்!
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஒரு யோசனை தோன்றியது அவனுக்கு! பேசாம இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?,
வாழ்க்கை வீணாகி விட்டதே எனக் கவலையுடன் நிற்கும் பெண்ணிற்கு, இவன் தாலி கட்டி வாழ்வு கொடுக்கலாமே! ஒரு ஆபத்பாந்தவனாக, மைதிலியின் சிரிப்பை மீட்டெடுக்க வந்த ரட்சகனாக அவன் தன்னை உருவகப்படுத்திக் கொள்ள நினைத்தாலும், அவனது அடி மனது, அவன் மூஞ்சி மீதே காறித் துப்பி ‘டேய் கசுமாலம்,கம்னாட்டி! ஏரியா பூரா.. ராசிகெட்டவன்னு பேர் வாங்கி வைச்சிருக்கிற உனக்கெல்லாம் இப்டிக் கல்யாணம் ஆனாத் தான் உண்டு! கிடைச்ச சான்ஸை வுடாம, நல்லா கெட்டியாப் புடிச்சுக்க! பொண்ணு மூஞ்சி சுமார்ன்னுலாம் பார்க்காத! உனக்காக எந்த அழகியும் தவம் கெடக்கல! வாழ்நாள் பூரா உங்கப்பனை மாறி ஒண்டிக்கட்டையா வாழ்ந்து சாவுறதுக்கு, கிடைச்சதை வைச்சு அனுபவிக்கப் பாரு!’ என்று அறிவுரை வழங்க.. “ம்க்கும்” என்று தொண்டையைக் கனைத்து அனைவரது கவனத்தையும் தன் புறம் திருப்பினான்.
இப்போது அவர்கள் நின்றிருந்தது மணமகள் அறை. அறிவு,மைதிலியின் அன்னை,தந்தை மற்றும் அவனது நண்பர்கள் மூவர் மட்டுமே அந்த அறையிலிருந்தனர்.
“அறிவு.... அப்பா....” என்று இருவரையும் அழைத்து அவர்கள் முன்னே சென்று நின்றவன் “உ...உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா.. மைதிலியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்.
‘தம்பி! தெய்வம் மாதிரி வந்து என் பொண்ணு வாழ்க்கையைக் காப்பாத்திட்டப்பா!’ – என்கிற வாக்கியத்தை அறிவின் தந்தையிடமும் “நீ செய்ற காரியத்துக்கு நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னாப் பத்தாதுப்பா” – என்கிற வாக்கியத்தை அறிவின் அன்னையிடமும் எதிர்பார்த்து நின்றவனுக்குக் கிடைத்ததோ அவர்களது கேவலமான பார்வை தான்!
‘இன்னாத்துக்கு இந்தக் கெய்வி இப்டிப் பார்க்குது!, இன்னா சொல்ட்டேன் இப்போ!’ – அவனது மனசாட்சி சுத்த மெட்ராஸ் பாஷைக்குத் தாவியிருக்க, ‘இன்னாடா ரியாக்ஷன் இது’ என்ற கேள்வியுடன் கதிரை நோக்கினான் வெற்றி.
பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திய கதிர் அறையை விட்டு வெளியேறி விட “அறிவு, உன் ஃப்ரண்டைக் கூட்டிட்டு வெளியே போ-ப்பா” –என்று அடிக்குரலில் சீறினார் அறிவின் தந்தை.
சந்தோஷமான சேதியைத் தான சொன்னேன்!, மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கிட்டுக் குடும்பமா எழவு வூட்ல நிற்கிற மாதிரி நிற்குறானுங்க!, நம்மால இவன் வீட்ல ஒரு நல்லது நடக்கட்டும்ன்னு பெரிய மனசு பண்ணி, இந்த சொரி புடிச்சவளைக் கட்டிக்க ஒத்துக்கிட்டா, என்னைய ஏதோ பிச்சக்காரனைத் தொரத்துறா மாதிரி, விரட்டுறானுங்க!
வெடுக்கென நண்பனின் கையை உதறியவன் “இப்போ எதுக்கு என்னை வெளிய அனுப்புறீங்க?, பெரிய மனுஷத்தன்மையோட நான் ஒரு கேள்வி கேட்டேனே! அதுக்கு எந்தப் பதிலுமே கிடையாதா?” என்று கத்தினான்.
“எதுடா பெரிய மனுஷத்தனம்?, சந்துல சிந்து பாடப் பார்க்குறியோ! உனக்கு என் மக கேக்குதா?, அறிவோட ஃப்ரண்டாச்சே! கல்யாணத்துல கூடமாட இருந்து உதவி செய்வியேன்னு உன்னை உள்ள விட்டா, நீ என் பொண்ணையே கட்டிக்கச் சொல்லிக் கேப்பியோ!” – அள்ளி முடிந்தக் கூந்தலுடன் அறிவழகனின் அன்னை.
“ஆமா, உன் பொண்ணு பெரிய உலக அழகி! ஆசைப்பட்டு நான் கட்டிக்கக் கேட்டுட்டேன்! பருவுக்குள்ள இது மூஞ்சி எங்க இருக்குன்னுத் தேடி தான் கண்டுபிடிக்கனும்! இந்த மூஞ்சிக்காக நான் கேப்-ல கெடா வெட்டுறேனாக்கும்”
“டேய், வெற்றி... என்னடா ரொம்பப் பேசுற?” - அறிவு
“பின்ன என்னடா?, நண்பன் குடும்பம் கதி கலங்கி நிக்குதேன்னு, நான் இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர நினைச்சா.. உங்கம்மா இப்டிப் பேசுது?”
“அறிவு! நீ முதல்ல அவனை வெளியே கூட்டிட்டுப் போ” – அறிவின் தந்தை.
“நான் எதுக்கு சார் வெளிய போகனும்?, இப்ப என்னக் கேட்டுட்டேன்னு அவமானப்படுத்துறீங்க!, இஷ்டமிருந்தா சரின்னு சொல்லுங்க!, இல்லையா முடியாதுன்னு சொல்லுங்க! அதை விட்டுட்டு சில்றத்தனமா நடந்துக்கிறீங்க?”
“டேய்... வெளியே போடா நாயே!” – இப்போது கோபத்தில் பொங்கி விட்டார் அவர்.
“யோவ்! மரியாதையில்லாம பேசுனேனா, மூஞ்சியைப் பேத்துறுவேன்!” – தானும் பதிலுக்குக் எகிறினான் வெற்றி.
“டேய் வெற்றி, நீ யார்க்கிட்டப் பேசிட்டிருக்கன்னு தெரியுதா?” - அறிவு
“ஏய், பெரிய மனுஷனாட்டமா டா பேசுறான் உங்கப்பன்!, இவனுக்கெல்லாம் என்ன மரியாதை?”
“டேய் வெற்றி” – அதட்டியபடி கதிரும்,பிரசாத்தும் வெற்றியின் கரத்தைப் பற்ற..
“கைய வுடுங்கடா!, ஆமா, இல்லன்னு ஒரு பதிலைச் சொல்லச் சொல்லுங்க இந்தாளை!, அதை விட்டுட்டு அநாவசியமாப் பேசுறாரு”
“பதில் தான?, சொல்றேன் கேட்டுக்கடா! பொறந்ததும் பெத்தவளைக் காவு வாங்கிட்ட உனக்கு என் மகளைக் கட்டிக் கொடுத்து, அவளைப் பாதிலயே எமன் கிட்ட அனுப்புறதுக்கு, கடைசி வரை என் வீட்ல ஒண்டியாவே வைச்சுக்குவேன்! ராசிகெட்டப் பயலே! போடா இங்கிருந்து” – அறிவின் தாய் உச்சஸ்தாதியில் கத்தியதும், பொங்கியெழும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அருகிலிருந்தத் தாம்பாளத் தட்டை விசிறியடித்து விட்டு விறு,விறுவென மண்டபத்தை விட்டு வெளியேறினான் வெற்றி.
மண்டப வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தத் தனது பைக்கில் அமர்ந்து ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் அதன் மீது காட்டி உதைத்து, ஆக்ஸிலரேட்டரை முறுக்கியவன், வாசலுக்கு ஓடி வந்த கதிரைத் திரும்பியும் பாராமல் விர்ரென வண்டியைச் செலுத்தினான்,
ராசி! ராசி! ராசி! இந்த ராசிப் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல! ஆண்களுக்கும் கூட உண்டு என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தான் நம் வெற்றிச்செல்வன்! அவன் பிறந்த போது பிரசவத்திலேயே அவனது அன்னை இறந்து விட, அன்று துவங்கியது இந்தப் பிரச்சனை! அத்தோடு நிற்காமல்,அப்போது அவனது தாத்தாவும்,தந்தையும் சேர்ந்து நடத்தி வந்த ப்ளாஸ்டிக் தொழிற்சாலை கடனில் மூழ்கியதும் இவன் பிறந்த ராசியால் தான் என்று குடும்பத்தினரால் பேசப்பட்டது!
வளர்ந்த பின்புப் பத்தாவது படித்துக் கொண்டிருக்கையில், உடன் பயிலும் மாணவியிடம் அவன் லவ் லெட்டரை நீட்ட.. அதை வாங்கிய அன்று மாலையே அந்தப் பெண்ணின் சைக்கிள் மரத்தில் மோதிக் கால் உடைந்துக் கடைசியில் அவளால் அந்த வருடப்படிப்பையேத் தொடர முடியாமல் போனதற்கு அவனும்,அவனது ராசியும் காரணமென்று அவன் இன்று வரை நம்பவில்லை தான்.
அதன் பின்பு அவன் பார்த்த,பேசத் துணிந்த, கைப்பிடித்துக் காதல் பேச முனைந்த அத்தனைப் பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட, ஏரியா முழுதிலும் அவன் ஒரு ராசியில்லாதவன் என்கிற பெயர் பரவ ஆரம்பித்துவிட்டது!
அவனை ஒரு ஆந்த்ராக்ஸ் பவுடரைப் போல் ட்ரீட் செய்யும் தனது ஏரியா பெண்களை அவன் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை! ஏனெனில் அனைவரும் இந்த மைதிலியைப் போல் அட்ட்ட்ட்டுப்பீசுகள்!
அப்படிப்பட்ட கலீஜ் பீஸ் ஒருத்தியின் திருமணம் நின்று போன நிலையிலும் கூட, அடுத்து ஏதேனும் செய்து சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டுமென்கிறப் பரபரப்பிலும் கூட, சுற்றியிருப்போர் அவனது ராசியைக் குறையாகச் சொல்வது அவனை மிகுந்த எரிச்சலுக்குள்ளாக்கியது. அதிலும் அந்தப் பரு மூஞ்சி மைதிலி, அவனை நோக்கிக் கேவலமானப் பார்வையை வீசி அவமானப்படுத்தியதை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
கோபமும்,விரக்தியுமாய் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவனை “ண்ணா,ண்ணா,ண்ணா.. நிறுத்துங்க,நிறுத்துங்க,நிறுத்துங்க” என்றுக் கூவியபடி மூன்று சிறுவர்கள் வழி மறிக்க... தடுமாறியபடி வண்டியை நிறுத்தியவன் தன்னைச் சமன் செய்வதற்குள், அம்மூவரும் படபடவென அவன் வண்டியில் ஏறியிருந்தனர் “லிஃப்ட் கொடுங்கண்ணா, ப்ளீஸ்ண்ணா,ப்ளீஸ்ண்ணா” என்றபடி.
“டேய், இன்னாங்கடா நீங்க வேற, நேர,காலம் தெரியாம! அண்ணன் உங்களுக்கெல்லாம் லிஃப்ட் கொடுக்கிற மனநிலைல இல்லடா,இறங்குங்கடா” – விரக்தியுடன் புலம்பலாக வெளிவந்த அவனது குரலைக் கண்டு கொள்ளாமல் “லிஃப்ட் குடுக்க வண்டி இருந்தா போதும்ங்கண்ணா, உங்க மனசெல்லாம் வேண்டாம்!, வண்டி எடுங்கண்ணா, ப்ளீஸ்,ப்ளீஸ்ங்கண்ணா” என்று நச்சரித்தவர்களிடம் மறுக்க முடியாமல் வண்டியைக் கிளப்பினான்.
“வாழ்க்கையே அலை போலே!, நாமெல்லாம் அதன் மேலே!” – அவன் முதுகில் தபேலா வாசித்த படி பாடிய சிறுவனிடம் “கடல் அலையா?, அடப் போடா! என் வாழ்க்கை வறண்ட பாலைவனத்துல ட்ராவல் பண்ணிட்டிருக்குன்னு நானே சோகத்துல இருக்கேன்!”” என்று மீண்டும் புலம்பியவன் “ஏன் டா பசங்களா, இத்தினி பேரு என் வண்டில ஏறியிருக்கீங்களே!, ட்ராஃபிக் போலீஸ் புடிச்சா, என்னாடா பண்ணுறது?” – என்று வினவினான்.
“இங்க போலீஸெல்லாம் நிக்காதுங்கண்ணா, நீங்க பயப்படாம ஓட்டுங்க!”
“யாரு, நான் பயப்பட்றேனா?, நேரம்டா!, சரி, நீங்கல்லாம் எங்கடா இறங்கனும்?”
“நீங்க அப்டியே போயின்னே இருங்கண்ணா!,நாங்க இறங்க வேண்டிய இடத்துல இறங்கிக்குவோம்” – என்றவர்கள், அவன் ஒரு இருபதடியைக் கூட கடந்திராத நிலையில் “ண்ணா,ண்ணா... நிறுத்துங்கண்ணா,நிறுத்துங்கண்ணா” என்றுக் கத்தி வண்டியில் இருந்துக் குதித்து, மீண்டும் அவன் தடுமாறி நிறுத்தியதும் “தேங்க்ஸ்ங்கண்ணா” என்று கூவி விட்டு, ரோட்டைக் கடந்து எதிர்ப்புறம் சென்று, அங்கு வந்து கொண்டிருந்த வண்டியை நிறுத்தி “ண்ணா,ண்ணா லிஃப்ட்ண்ணா,லிஃப்ட்ண்ணா” என்று கத்தியதைக் கண்டுப் பல்லைக் கடித்தான் வெற்றி.
“டேய்ய்ய் கம்னாட்டிங்களா! பரதேசி நாய்ங்களா! நீங்க விளையாடுறதுக்கு என் வண்டி தான் கிடைச்சதாடா! சின்னப் பசங்கன்னு உங்களை நம்பி ஏத்துனேன் பாரு, சல்லிப்பீசுங்களா!” – விடாமல் கத்திக் கொண்டிருந்தவனைக் கண்டு கொள்ளாமல் “ஊஊஊஊஊ” என்றபடி வண்டியில் பறந்தனர் அச்சிறுவர்கள். அடுத்தப் பத்தடியில் அவர்கள் மீண்டும் அந்த வண்டியை விட்டு இறங்குவது தெரிந்தது.
“போற,வர்றவனுங்க வண்டியை நிப்பாட்டி லிஃப்ட் கேட்டு விளையாட்றதெல்லாம் ஒரு விளையாட்டா டா! கடுப்பேத்துறானுவளே!” என்று புலம்பியபடி வண்டியைக் கிளப்பியவனுக்கு அந்த நாள் இன்னும் சில,பலத் தலைவலிகளை மிச்சம் வைத்திருந்தது.
நேராக வீட்டுக்குச் சென்று வண்டியை நிறுத்தியவன், நெற்றியைத் தேய்த்தபடி திறந்திருந்த கேட்டைக் கடந்து உள்ளே நுழைகையில், வீட்டு வாசற்படியில் ஜிப்பாவும்,கண்ணாடியுமாய் ஈஈஈ-யென இளித்த வாயுடன் நின்றிருந்தான் ஒருவன்.
அவனைக் கண்டதும் “அப்பா இல்லீங்களா தம்பி?” என்று வினவியவனை முறைத்த வெற்றி, “உன்னை இங்க வராதன்னு நான் அடிச்சு விரட்டியும் உனக்குப் புத்தி வரல பார்த்தியா?, உன் கண்ணாடியை உடைச்சு, நான் உன் கண்ணை நோண்டுறதுக்குள்ள மரியாதையா இங்கயிருந்து போயிடு! நான் ஏகக் காண்டுல இருக்கேன் ஏற்கனவே” – அடிக்குரலில் சீறினான்.
இதெல்லாம் எனக்கு அசால்ட்டு என்பது போல் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்த ஷண்முகம் “தம்பி, உன்னை மாதிரி ஆளுங்களைச் சமாளிக்கத் தெரியாமலா நான் தொழில் நடத்துறேன்?,“ திமிருடன் பதில் கூறினான்.
“ஓஹோ” என்று தாடியைத் தடவிய வெற்றி “கற்பகம் லாட்ஜ் தான உன் தொழில் நடக்குற இடம்?, இந்த வாரம் போலீஸ் ரைட்-க்கு ஏற்பாடு பண்றேன்!,” எனக் கூற..
“வாரம் தவறாம மாமூல் அள்ளி வீசுறேன் தம்பி! என்னைய எந்தப் போலீஸூம் ஒன்னும் செய்ய முடியாது” – என்றான் அவன்.
“அதையும் பார்ப்போம்” என்ற வெற்றி அவனைக் கடந்து உள்ளே செல்ல முயல.. அவன் கைப் பற்றி நிறுத்தியவன் தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு கட்டுப் புகைப்படங்களை எடுத்து நீட்டி “உங்கப்பாவுக்காகக் கொண்டாந்தேன்! ஆனா.. உங்களுக்குக் காட்டுறேன்! நல்ல ஐட்டமாப் பார்த்து செலக்ட் பண்ணுங்க தம்பி! உடனே ஏற்பாடு பண்ணுறேன்! இதுல ஒன்னு,ரெண்டு தொழிலுக்குப் புதுசு! உங்களை மாதிரி இளசுகளுக்காகவே ஸ்பெஷல் ஏற்பாடு” என்று அவன் கண்ணைச் சிமிட்டியதும், ஒரு நொடி இடுப்பில் கை வைத்துப் பெருமூச்சை வெளியிட்டபடி வேறு புறம் நோக்கிய வெற்றி, மறு நொடி திரும்பிய போது, அந்த ஜிப்பாக்காரன் அணிந்திருந்தக் கண்ணாடி பறந்து வாசலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
கையை உதறியபடித் திரும்பியவன் “அந்தாளைக் கெடுக்குறதே நீ தான் டா! பரதேசி நாயே! இனி உன்னை அந்தாளோட (அவனது தந்தை) பார்த்தேன்! கை,கால் ரெண்டுல ஒன்னைக் கழட்டிருவேன்!” என்று எச்சரிக்க.. உதட்டில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தபடி “என்னையே அடிச்சுட்டேல்ல!, இருக்குடா உனக்கு” என்று கொக்கரித்து விட்டுச் சென்றான் ஜிப்பா.
அவன் சென்றதும் முன்னுச்சி முடியை அழுந்தக் கோதி வேக,வேகமாக மூச்சை வெளியிட்டவனுக்கு விண்,விண்ணென்று தலை வலிக்கத் துவங்கியது.
அவன் அடித்த போது கீழே விழுந்த ஃபோட்டோக்களை அள்ளி எடுத்தவன் “இவனை அடிச்சு என்ன பிரயோஜனம்?, அந்தாளை அடிக்க முடியுதா?, பாடைல படுக்க வேண்டிய வயசுல பொம்பள சகவாசம் கேக்குது! கட்டுனவப் போய்ச் சேர்ந்ததும், மறுகல்யாணம் பண்ணிக்கிட்டா, எங்க வர்றவ, பையனைக் கொடுமைப் படுத்திடுவாளோன்னு பயந்து, ஒண்டியாவே புள்ளைய வளர்க்கக் கிளம்புனப் பெரிய மனுஷன் பார்க்குற வேலையா இது! இதுக்கு சித்தின்ற பேர்ல ஒருத்தி வந்துக் கொடுமை பண்ணியிருந்தாக் கூடச் சகிச்சிட்டு வாழ்ந்திருப்பேன்”- என்று புலம்பியபடி உள்ளே சென்று, அந்தப் புகைப்படங்களைப் ஷெல்ஃபில் கிடாசி விட்டு அக்கடாவெனக் கட்டிலில் விழுந்தான்.
மீசை முளைக்கத் துவங்கிய வயதில், உடன் பயிலும் மாணவன் ஒருவனின் மூலமாகத் தான் தந்தையின் இந்தப் போக்கை அவன் கண்டுகொண்டது! வாழ வேண்டிய வயதில் மனைவியை இழந்து விட்டுத் தவிக்கும் மனிதர், உணர்வுகளை அடக்கி வாழுமளவிற்கு மகான் இல்லையென்பது அவனுக்குப் புரிந்து தானிருந்தது. ஆனால்.. முறையாக ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு வந்து வாழ்நாளைக் கடத்துவதை விட்டு விட்டு, விபச்சாரியிடம் சென்று நிற்பதா?, சற்று அவமானமாகத் தானிருந்தது அவனுக்கு.
தந்தையின் இந்தப் பழக்கவழக்கம் அடிக்கடி வீட்டுக்கு வந்து போகும் ஷண்முகத்தினால் உண்டானதென்பதை அறிந்து கொண்ட போது, அந்த வயதிலும் அவனை அடித்துத் துவைத்து விட்டான் வெற்றி.
அவனும்,அவனது தந்தை சதாசிவமும் பெரிதாக அன்பு,பாசத்துடன் ஒட்டி உறவாடும் தந்தை,மகன் கிடையாது! ப்ளாஸ்டிக் தொழிற்சாலை ஊத்திக் கொண்ட பிறகு, சதாசிவத்தின் தந்தையும் இறைவனடி சேர்ந்து விட, அதன் பின் அவருக்கு மிகவும் பிடித்தத் தொழிலான ஹோட்டல் தொழிலை ஆர்வத்துடன் எடுத்து நடத்தி வந்தார்.
சில வருடங்களிலேயே அவருடைய முதலியார் மெஸ் அந்த ஏரியா மக்களிடையே பிரசித்தி பெற்று விட,சென்னையில் இன்னும் இரண்டு இடங்களில் கிளைகளைத் திறந்து இன்று வரை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.
பணம்,காசுக்குக் குறையே கிடையாது வெற்றிக்கு! ஆனால் அவனுக்குத் தான் எதிலுமே பிடிப்பிருந்ததில்லை. பத்தாவது வரை நன்றாகத் தான் படித்து வந்தான்! என்று, தந்தையுடைய இந்தப் போக்கைக் கண்டுகொண்டானோ, அன்றிலிருந்து மொத்தமாய் மாறிப் போனான்! தன்னுடைய இந்தப் பழக்கத்தை மகன் அறிந்து கொண்டானென்பதை, அவன் ஷண்முகத்தின் கையை உடைத்த போதே தெரிந்து கொண்ட சதாசிவம், கொஞ்சமும் அதைச் சட்டை செய்யாமல் தன் போக்கில் இருந்தது அவனை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கியது.
அதுமட்டுமின்றி, சிறு வயதிலிருந்துத் தொடங்கி அவனை உயிருக்கு உயிராய் வளர்த்த அவனது பாட்டி தாட்சாயிணி வேறு, அவனது 16-வது வயதில் இயற்கை எய்தி விட, எதிலுமே பிடிப்பின்றி வாழ்க்கையையே வெறுக்கத் தொடங்கி விட்டான்! போதாதற்கு போகுமிடமெல்லாம் இந்த ராசிப் பிரச்சனை வேறு!
இங்க்லீஷ் மீடியத்தில் முதல் மார்க் வாங்குமளவிற்கு நன்றாகப் படித்துக் கொண்டிருந்தவன், படிப்பைப் பாதியில் விட்டான்! தந்தையுடனான பேச்சை மொத்தமாகத் தவிர்த்தான். ஒரே வீட்டிலிருந்தும் அவரது இருப்பைக் கண்டு கொள்ளாமல் இருந்தான்! எப்போதும் 4 நண்பர்களை உடன் வைத்துக் கொண்டு ஏரியாவிற்குள் வெட்டிப் பையனாக வலம் வரத் தொடங்கினான்.
அவனுக்கும், அவன் தந்தையைப் போல் சமையலில் மிகுந்த ஈடுபாடுண்டு. அவனுக்குள்ளிருந்த ஒரே உருப்படியான விஷயம் இது மட்டுமே! அவ்வப்போது தந்தையின் மெஸ்-க்குச் சென்று ஏதேனும் புதுவிதமாக வெரைட்டியாக சமைத்து வைப்பான். வாடிக்கையாளர்களிடம் அவன் செய்தது ரீச் ஆகி விட்டால், அந்த டிஷ் அவர்களது மெனு கார்டில் சேர்ந்து விடும்.
இதைக் கவனித்த சதாசிவத்திற்கு அவன் தினம் வருகை புரிந்து பொறுப்பாகத் தொழிலைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்கிற ஆசை இருந்தது. தனது தோழனும்,தனது மெஸ்ஸில் வேலை செய்பவருமானப் புகழேந்தியிடம் சொல்லித் தன் ஆசையை மகனிடம் தெரிவித்தார்.
படிப்பையும் பாதியில் விட்டு, இப்படியே வெட்டியாகத் திரிந்து எதை சாதிக்கப் போகிறானாம்?, பொறுப்பாகக் கடைக்கு வந்து தொழிலை கவனித்துக் கொள்ளலாமில்லையா?, என்று தந்தை கேட்டதற்காக.. அந்த ஒரு சொல்லுக்காக மட்டுமே, எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், சத்தியமாகத் தப்பித் தவறி கூட இந்தக் கடையைத் தான் முன்னின்று நிர்வகிக்கும் நிலைமை வந்து விடக் கூடாது என்றுக் கடவுளிடம் ஒரு இன்ஸ்டண்ட் வேண்டுதலை வைத்து விட்டு, கடைப்பக்கம் செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டான்.
‘உங்கப்பனோட காசுல திங்குற,தூங்குற!, அவன் கடையை மட்டும் எடுத்து நடத்த மாட்டியாடா?’ என்று புகழேந்திக் கேட்டதும், அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டுத் தனக்கென்று ஒரு வேலையைத் தேடிக் கொண்டான்.
போகிற போக்கில் சில,பல ஹோட்டல்களில் சமைத்து வயித்துப்பாட்டைப் பார்த்துக் கொண்டாலும், எப்படியேனும் இந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரிலோ,நாட்டிலோ வேலை செய்து வாழ்க்கையைக் கழித்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். கடைசி வரைத் தந்தையின் முகத்தில் விழிக்காமலேயேப் போய்ச் சேர்ந்து விட வேண்டுமென்பது தான் அவனது ஆசை.
அதன்படி அவன் துபாயில் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு முயற்சிக்கையில், கேட்டரிங் முடித்திருக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்த படியால், விட்ட படிப்பை மீண்டும் தொடர முயன்றான்.
குறைந்தபட்சம் பத்தாவது பாஸ் செய்திருந்தால் மட்டுமே கேட்டரிங்கில் டிப்ளமோவேனும் வாங்க முடியும் என்பதால், டுடோரியல் காலேஜ் ஒன்றில் சேர்ந்து படிக்கவும் முயற்சித்தான்.
முயற்சிக்க மட்டுமே முடிந்தது அவனால்! 27-வயதில் புத்தகத்தைத் தூக்கிப் பொறுப்பாகப் படிக்க அமர்வதெல்லாம் முடிகிற காரியமா?, அத்தனை எளிதாக இருக்கவில்லை!
வாரத்தில் மூன்று நாட்கள் கிளாஸ் இருந்தது! வயது வித்தியாசமின்றி, அவனோடு சேர்ந்து 20-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் அவன் வகுப்பிலிருந்தனர். தலையெழுத்தேவெனப் பாடம் நடத்தும் ஆசிரியர்களை வைத்துக் கொண்டுக் கல்வி பயில்வதென்பது எத்தனைக் கஷ்டமான விசயம்! கடைசியில் இரண்டு வருடமாகப் பத்தாவது பரீட்சை எழுதியும் அவனால் பாஸ்-ஆக முடியவில்லை!
இப்படியாகச் சோகமும்,விரக்தியும் மட்டுமே நிறைந்தத் தன் வாழ்க்கை ஓடத்தை நினைத்து அவன் மருகிக் கொண்டிருந்த சமயம், அவனது செல்ஃபோன் அழைத்து, அதன் இருப்பை அவனுக்கு உணர்த்தியது. அவனுடன் பயிலும் 35 வயதான பாண்டியன் என்பவர் தான் அழைத்துக் கொண்டிருந்தார்.
“சொல்லுங்க பாண்டியன் சார்” – வெற்றி.
“தம்பி,இன்னிக்குக் க்ளாஸ் இருக்குறது தெரியும் தான?, இன்னிக்கும் நீ அட்டெண்ட் பண்ணாட்டி, இந்த வருஷமும் பரீட்சை ஊத்திக்கும்ப்பா”
“ப்ச், அட்டெண்ட் பண்ணா மட்டும் பாஸ் ஆகிடவாப் போறேன்?, நீங்க வேற ஏன் சார்?”
“ஏன்ப்பா ரொம்ப விரக்தியாப் பேசுற?, நண்பன் தங்கச்சிக் கல்யாணத்துல அடிச்ச போதை இன்னும் தெளியலையா?”
“கல்யாணமே நின்னு போச்சு சார்”
“அய்யய்யோ!, என்னப்பா சொல்ற?”
“எல்லாம் நேர்ல வந்து சொல்றேன் சார்” –என்று கால்-ஐக் கட் செய்தவன், ‘வெட்டியா இப்டி உட்கார்ந்து புலம்புறதுக்குக் க்ளாஸூக்காவது போகலாம்’ என்று முடிவெடுத்து உடைமாற்றிக் கொண்டுத் தன் பைக்கில் டுடோரியல் காலேஜை நோக்கிப் பறந்தான்.
அடையாறை நோக்கி சீரான வேகத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தவனின் காதில் பாந்தமாய் ஒரு ஹெட்செட்! ஹெட்செட்டுக்குள் இளையராஜா! இதமாய் அவனது செவிகளைத் தீண்டியபடி!
“பார்க்கும் பார்வை நீ! என் வாழ்வும் நீ! என் கவிதை நீ!
பாடும் ராகம் நீ! என் நாதம் நீ! என் உயிரும் நீ!”
இசையைப் பொறுத்தவரை என்னை மாதிரி சில பேருடைய வாழ்க்கை 80-களோடயே முடிஞ்சு போச்சு! நாட்காட்டி, கடிகார முள்ளிலிருந்துத் தொடங்கி, நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம்ன்னு பஞ்சபூதங்கள் வரை அத்தனையும் இளையராஜான்ற அரிய வகை இசை-மிருகத்தால மொத்தமா 80-கள்லயே உறைஞ்சு போய்ட்டதாத் தான் நம்புறோம்! என்ன இல்லை அந்த இசைல? ஒரு சாதாரண விடியலை அழகானதா உணரனுமா நீங்க?, அது எப்பேர்ப்பட்ட விடியலா இருந்தாலும் சரி! கார்காலத்துல, விடாம அடிச்சுப் பெய்யுற மழைக்கிடைல சோம்பலா உதிக்கிற சூரியனோடத் தொடங்குதா உங்க காலை?, இல்ல! பனிபொழியுற மார்கழி மாதத்துல வரலாமா,வேணாமான்னு தயங்கி எட்டிப் பார்க்குறக் கதிரவனின் விசிறியா நீங்க?, ரொம்பவும் கவிதையா வேண்டாம்! கொஞ்சம் கூட மனசாட்சியில்லாம அதிகாலை எட்டு மணிக்கே (?!) ஜன்னல் வழியாக் கை நீட்டிக் கூச்சநாச்சம் பார்க்காம உங்களை அங்க,இங்கத் தொட்டுப்பார்க்குற ஆதவனுடனான ரொம்ம்ம்பவும் சாதாரணமானக் காலை நேரம் உங்களோடதா? எதுவாயிருந்தாலும் பரவாயில்ல! எல்லா வகையான விடியலையும் அழகே உருவா... நிமிஷத்துல மாத்திக் காட்டுற வித்தை நம்மாளுக்கிட்ட இருக்கு! சர்வலோக நிவாரணி அவரு! நிறைய்ய்ய்ய்ய்ய்ய இளையராஜா! கொஞ்சமா எஸ்.பி.பி, கொஞ்சமா எஸ்.ஜானகி! A perfect combo ever! எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், இனி வரும் அத்தனை மனுஷப்பிறவிக்கும் கிடைக்கப் போகிறத் தெவிட்டாதப் பேரின்பம் - ராஜா!
செவிப்பறைக்குள் சட்டமாய் அமர்ந்து இனிய கீதம் வாசித்த இளையராஜாவுடன் போட்டி போட்டுக் கொண்டுத் தங்களது காந்தக் குரலால் அவன் இதயத்தைக் கொஞ்சிக் கொண்டிருந்த எஸ்.பி.பியும்,சுசீலாவும் அவனது மனநிலையை சீராக்கி அவன் உதட்டில் புன்னகையைத் தோற்றுவித்தனர்.
சிரிப்புடன் வண்டியின் வேகத்தை அதிகரித்தவன், அந்த ஏகாந்த மனநிலையைக் குலைப்பதற்கென்றே வீட்டிலிருந்து புறப்பட்டு வந்ததைப் போல், அவனுக்கு ஐந்தடி முன்னால், படு ஸ்லோவாகத் தனது ஸ்கூட்டியை செலுத்தியபடி அவனதுப் பொறுமையை வெகுவாக பரிசோதித்துக் கொண்டிருந்த பெண்ணைக் கண்டு மீண்டும் எரிச்சலுற்றான்.
அவளைக் கடந்து செல்லவும் வழி விடாமல், ஒழுங்காக ஓட்டவும் தெரியாமல், ஜிக்-ஜாக் விளையாடிக் கொண்டிருந்தவளால் அவனது பற்கள் ஒன்றையொன்று நற,நறவெனக் கடிக்கத் துவங்க... ‘இவளுங்க வண்டியை எடுத்துக்கிட்டு வீதிக்கு வந்தா, ரோடே இவளுங்களுக்கு சொந்தம்ன்ற மாதிரி தான் ஓட்டுவாளுங்க!, பின்னாடி, முன்னாடி வந்து போறவனைப் பத்தியெல்லாம் யோசனையே பண்றதில்ல! இது என்ன இவ அப்பன் வீட்டு ரோடா?’ – என ஏகத்துக்கும் வாய் விட்டுப் புலம்பியவன்... கடும் எரிச்சலில், அவளை முந்த நினைத்து முன்னே நகர்கையில். அவள் சரியாக நேரே வர, டமாஆஆஆஆஅல் – என இரண்டு வண்டியும் உரசிக் கொண்டதில் தடுமாறி.. வண்டியுடன் பொத்தெனக் கீழே விழுந்தாள் அந்தப் பெண்.
‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. இந்தத் தலைவலி வேறா?!’ என்றெண்ணியபடி அவசரமாக வண்டியை விட்டுக் கீழே இறங்கியவன் “ரியர்வியூ மிர்ரரைக் கூடப் பார்க்காம என்னாத்துக்கும்மா வண்டி ஓட்டுற நீ?” என்று கோபமாக அவளை நோக்கி வினவினான்.
அவன் வண்டியை நிறுத்தி விட்டு அவளருகே வருவதற்குள் சுதாரித்து எழுந்தவள், வண்டியைத் தூக்கி நிறுத்திக் கை முட்டியருகே இருந்த சிராய்ப்பை ஊதியபடி நின்று கொண்டிருந்தாள்.
அதற்குள் அவளைச் சுற்றி 4,5 பேர் சேர்ந்தக் கூட்டமொன்றுக் கூடி விட.. “எனக்கு ஒன்னும் ஆகல, ஒன்னும் ஆகல சார்” என்றபடி நின்றவள் அவனது கேள்வியில் வெடுக்கென நிமிர்ந்து அவனை நோக்கினாள்.
“இடிச்சுக் கீழ தள்ளி விட்டுட்டு என்னையே கேள்வி கேட்குறீங்களா?” – கோபமாய்க் கண்களை விரித்தாள் அவள்.
“பின்ன?., நீ நாளான்னைக்கு வூடு போய்ச் சேர்ற வரைக்கும் நானும் உன் பின்னாடியே வண்டியை தள்ளின்னு வரனுமா?, ஏம்மா நீ வண்டி ஓட்டிப் பழகுறதுக்கு நான் போற ரோடு தான் கிடைச்சதா?”
“அப்போ வேணும்ன்னு தான் இடிச்சிருக்க நீ?” – கையை நீட்டிக் கொண்டு சண்டைக்குத் தயாரானாள் அவள்.
“ஏய், என்னா ரொம்பப் பேசுற?. நீ என்னிக்கு வழி விட்டு, நான் என்னிக்குப் போற வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர்றதுன்னு தான், உன்னைக் க்ராஸ் பண்ணிப் போக ட்ரை பண்ணுனேன்! நிமிஷத்துக்கொரு தடவை கண்ணாடியைப் பார்த்து லிப்ஸ்டிக்கை மட்டும் சரி பண்ணிக்கத் தெரிஞ்ச உங்களுக்குப் பின்னாடி வர்றவனைக் கவனிச்சுப் பார்க்கத் தெரியாதாக்கும்?” – எரிச்சலில் பொங்கினான் அவன்.
“நான் லிப்ஸ்டிக் போட்டிருக்கேன்னு நீ பார்த்தியா?”
“ஏம்மா இப்போ அதுவாப் பிரச்சனை?”
“நானும் வந்ததுல இருந்துப் பார்க்குறேன், அம்மா,அம்மான்ற?. நான் என்ன உன் அப்பனுக்குப் பொண்டாட்டியா? இல்ல, என் வயித்துல நீ பொறந்தியா?”
“ஏய், அதெல்லாம் ஒரு ஃப்ளோல வர்றது! இன்னாத்துக்கு இப்போ நீ கலீஜ்-ஆ பேசுற?”
“இடிச்சுக் கீழத் தள்ளுனதுக்கு மன்னிப்புக் கூடக் கேட்காம எவ்ளோ தெனாவட்டாப் பேசுற நீ?, நியாயமாப் பார்த்தா, என் கைல பட்டிருக்கிறக் காயத்துக்கு நான் ஆஸ்பத்திரில படுத்துக் கட்டு,கட்டா உன்னைப் பணம் செலவழிக்க வைச்சிருக்கனும், எதுவும் செய்யாம நிற்குறேன் பாரு! என் தப்பு தான்!”
“அடேங்கப்பா! தம்மதூண்டு காயம் இது, 2ரூபா ப்ளாஸ்திரி வாங்கி ஒட்டுனா சரியாப் போயிடப் போகுது! இதுக்கு நீ என்னைய ஆஸ்பத்திரிக்கு இழுப்பியா?, அதுக்குப் பதிலா நான் உன் பல்லை உடைச்சு ஸ்ட்ரச்சர்ல ஏத்திட்டு மொத்தமா செலவழிச்சிக்கிறேன். வர்றியா?” – கை முஷ்டியை இறுக்கினான் அவன்.
“என்னாங்க சார்?, இடிச்சுக் கீழத் தள்ளுனதுமில்லாம, பல்லை உடைப்பேன் அது,இதுன்னு தனியா இருக்கிற ஒரு பொண்ணைப் பார்த்து இந்தாளு பேசுறான், நீங்களும் பார்த்துட்டிருக்கீங்க?, பொண்ணுங்களுக்கு எதிரா நடக்குற அநியாயத்துக்கு முக்கியக் காரணமே உங்களை மாதிரி வேடிக்கைப் பார்க்குறக் கூட்டம் தான்” – டபாலெனத் திரும்பிச் சுற்றியிருப்போரைப் பார்த்து அவள் கேட்டதும் “அதான?, என்னாய்யா நீ ரொம்பப் பேசுற?, நீ வாய்யா போலீஸ் ஸ்டேஷனுக்கு, அங்க வைச்சு எதுன்னாலும் பேசிக்கலாம்! பொம்பளப்புள்ளைட்ட கையை நீட்டப் பார்க்குற நீ?” – என்று கூட்டமும் அவனை நோக்கிக் குரல் கொடுக்க.. எதிரே நின்றிருந்த ட்ராஃபிக் போலீஸ் இவர்களை நோக்கி விரைந்து வந்தார்.
“என்னப் பிரச்சனை இங்க?” என்று விசாரித்தவர் கூட்டத்திலிருந்தோரை விரட்டி விட்டு இவர்களிருவரை மட்டும் தனியே தள்ளி, ட்ராஃபிக்கை க்ளியர் செய்து விட.. ரோட்டோரமாய்த் தன்னையே முறைத்தபடி எரிச்சலுடன் நின்றவளை ஓரக்கண்ணால் நோக்கினான் வெற்றி.
‘கட்டுத்தறிக் காளை நானே, கன்னுக்குட்டி ஆனேனே!
தொட்டுத் தொட்டுத் தென்றல் பேச, தூக்கம் கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே!!!!!!!’
-காதுக்குள் சன்னக்குரலில் இளையராஜா வேறு! ‘ப்ச், நீங்க வேற சிச்சுவேஷன் தெரியாம உள்ள வராதீங்க ராஜா சார்’ என்று முணுமுணுத்தபடி அதை அணைத்து வைத்தான்.
“என்னப் பிரச்சனை ரெண்டு பேருக்கும்?” – ட்ராஃபிக் போலீஸின் முன்பு இருவரும் நின்றிருந்தனர்.
“சார், என் வண்டியை இடிச்சு என்னையக் கீழ தள்ளி விட்டதுமில்லாம, பல்லை உடைப்பேன்னு சொல்லி மிரட்டுறான் சார்!” – பள்ளி சிறுமியைப் போல் புகார் கொடுத்தாள் அவள்.
“ஏய்ய்ய் அவன்,இவன்னு சொன்னேனா, நிஜமாவே பல்லை உடைச்சுடுவேன்” – கோபத்துடன் வெற்றி.
“பார்த்தீங்களா, பார்த்தீங்களா சார்?. உங்க முன்னாடியே எப்புடிப் பேசுறான்னு?”
“சார், கொஞ்சம் மரியாதையா பேசச் சொல்லுங்க! நான் என்னமோ இந்தம்மாவை இடிச்சுத் தள்ளுறதுக்காகவே வூட்ல இருந்து கிளம்பி வந்த மாதிரி பேசுது!, பார்க்கத் தான் சார் சேலை கட்டி அடக்க,ஒடுக்கமாத் தெரியுது! வாயைத் தொறந்தா கூவம் தான்! ஆறா ஓடுது!”
“இதோ பாரு, இந்தக் கமெண்ட் அடிக்கிற வேலையெல்லாம் வேற எவக்கிட்டயாவது வச்சுக்க”
“ஆமா, எனக்கு அதான் பொழப்பு”
“அடச்சீ! வாயை மூடுங்க ரெண்டு பேரும்!, கொஞ்ச நேரம் அமைதியா இல்ல, ரெண்டு பேர் வண்டியையும் ஸ்டேஷனுக்குத் தூக்கிட்டுப் போயிடுவேன்!” – போலீஸ் மிரட்டவும், பல்லைக் கடித்தபடி அமைதி காத்தனர் இருவரும்.
“உன் பேர் என்ன?”
“ஜமுனா” – விரல்களைப் பிசைந்தபடிப் பதலளித்தவளுக்குள் லேசான பதற்றம்.
“எந்த ஏரியா?”
“வேளச்சேரி”
“உன் பேரு?”
“வெற்றி”
“எந்த ஏரியா?”
“வளசரவாக்கம்”
“சரி, வண்டியை இடிச்சதுக்கு அந்தப் பொண்ணுக்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு சட்டுன்னு கிளம்பு நீ!” – வெற்றியிடம் கூறினார் அவர்.
“நான் ஏன் சார் மன்னிப்புக் கேட்கனும்?, பத்து நிமிஷமா இந்தப் பொண்ணு பின்னாடி தான் சார் வந்தேன்!, சின்னப்புள்ள வண்டி ஓட்டுற மாதிரி தட்டுத் தடுமாறி இந்தப்பக்கமும்,அந்தப்பக்கமும் போயிட்டிருக்கு! நான் எவ்ளோ நேரம் தான் சார் பொறுமையா வர முடியும்?, இந்த மாதிரி எல் போர்டுகளுங்களால நாட்டுல எவ்ளோ பிரச்சனை தெரியும்ங்களா சார்?”
“இதுக்கு என்னம்மா பதில் சொல்ற?”
“என் தப்பு தான் சார்! இன்னிக்குத் தான் முதன்முதலா இவ்ளோ பெரிய ரோட்ல வண்டி ஓட்டுறேன்!” – தலை குனிந்துக் கன்றிய முகத்துடன் கம்மிய குரலில் கூறியவள் “அப்டிப் பார்த்தாலும், கீழ விழுந்தது நான் தான சார்?, எனக்கு ஒன்னும் ஆகலன்னு சொல்லிட்டு விலகிப் போயிரலாம்ன்னு தான் நினைச்சேன்! ஆனா.. இந்தாளு பல்லை உடைப்பேன் அது,இதுன்னு ரொம்பப் பேசுனான்” என்றாள் கோபத்துடன்.
அவளது முதல் வாக்கியத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அடுத்துக் கூறியதை டீலில் விட்ட வெற்றி போலீசிடம் “அதோட தப்பு தான்னு அந்தம்மாவே ஒத்துக்கிச்சு சார்!, பிரச்சனை முடிஞ்சது! நான் கிளம்பட்டுமா?” என்றான்.
‘எவ்ளோ திமிரு! கீழ விழுந்தவக் கிட்ட கடைசி வரை மன்னிப்புக் கேட்கல! ஏன்?, அய்யோ விழுந்துட்டாளேன்னு ஒரு கரிசனமானப் பார்வை கூட இல்ல! என்ன ஜென்மம் இவன்?, ஆத்திரத்துடன் அவனை முறைத்தவள்...
“சார், தப்பு என் மேல மட்டும் தான் இருக்கா?, அவர் மேல இல்லையா?, பிஸியான ரோட்ல, பீக் அவர்ஸ்ல ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுறார்! அது தப்பில்லையா?, முதல்ல இந்தாளோட லைசென்ஸ்,ஆர்.சி புக்கெல்லாம் செக் பண்ணுங்க சார்” என்று கிறீச்சிட்டாள்.
“அதான?, ஏய் ஏன் ஹெல்மெட் போடல நீ?, உங்கப் பிரச்சனைல என் வேலையைப் பார்க்காம விட்ட்டுட்டேன் பாரு! தேங்ஸ்சும்மா! யோவ்.. நீ லைசென்ஸை வெளிய எடு முதல்ல” என்று போலீஸூம் அவனை மிரட்ட... அவரை சங்கடமாக ஒரு பார்வை பார்த்தவன்..
“அ..அ..அது வந்து சார், காலைல இருந்துக் கொஞ்சம் மனசு சரியில்ல! அதான் ஹெல்மெட் போடனும்ன்றது மைண்ட்ல இல்லாம போச்சு! லைசென்ஸ் என் கிட்ட இருக்கு சார்! ஆ...ஆனா... பர்ஸை வீட்ல வைச்சுட்டு வந்துட்டேன் சார்! சொ..சொன்னேன் இல்லையா, மைண்ட் அப்செட்ன்னு! அதான்ன்ன்ன்ன்” என்று இழுத்தான்.
“ம்ம்ம்ம், மைண்ட் அப்செட்டா இருந்தாலும் கையில செல்ஃபோன் மறக்காம எடுத்துட்டு வந்திருக்காரு! பத்தாதுக்கு ஹெட்செட் வேற! ஆனா.. ஹெல்மெட்டை மட்டும் மறந்துடுவாரா?, என்ன மாதிரியான அம்னீஷியா இது?, சார்! நாட்டுல நடக்குற பாதி விபத்துல ஹெல்மெட் போடாத ஆளுங்க தான் உயிரை விட்றாங்க! உங்களுக்குத் தெரியாததா?. இவங்க புத்தில உறைக்குற மாதிரி 4 அட்வைஸ் கொடுத்து,நானூறு ரூபா ஃபைனையும் வாங்கிட்டு விடுங்க சார்! நான் கிளம்புறேன்” – என்று விட்டு, அவனிடம் திரும்பி நாக்கைத் துருத்திக் காட்டிக் கோபமாய் முறைத்து விட்டு நகர்ந்தாள் அவள்.
“சார்,சார்! என் கிட்ட பர்ஸ் இல்லன்னு சொன்னேனே சார்! ஃபைன் கட்டக் காசு இல்ல சார்!” – என்று அவன் கெஞ்சிக் கொண்டிருப்பதைக் கேட்டபடி சிரிப்புடன் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தாள்.. ம்ஹூம்ம்ம்.. ஊர்ந்தாள் ஜமுனா.
அதன் பிறகு அவன் எவ்வளவோ கெஞ்சியும் ட்ராஃபிக் போலீஸ் ஒப்புக் கொள்ளாததால் கடைசியில் பாண்டியனை ஃபோனில் அழைத்து, அவர் வந்த பின்பு ஃபைனைக் கட்டி விட்டு அவருடன் அவன் க்ளாஸூக்குள் நுழைகையில் அரைமணி நேரம் தாமதமாகியிருந்தது.
“எக்ஸ்யூஸ்மீ மேம்” – என்றுப் பாண்டியன் அழைத்ததும் கரும்பலகையிலிருந்துத் திரும்பி வாசலில் நின்றிருந்த இருவரையும் நோக்கியவளைக் கண்டு மட்டுப்பட்ட சினம் மீண்டும் கொப்பளிக்கப் பல்லைக் கடித்தான் வெற்றி.
உள்ளே வரச் சொல்லி அனுமதி கிடைப்பதற்கு முன்பாகவே விறுவிறுவென உள் நுழைந்துக் கடைசி பெஞ்சில் அமர்ந்தவன் கோபம் குறையாமல் அவளையே நோக்கினான்.
ஜமுனாவிற்கும் இவனாஆஆஆஆ என்கிற அதிர்ச்சி தான்! ஆனாலும் நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டு போர்டின் புறம் திரும்பி விட்டாள்.
“வெற்றி” – பாண்டியன்.
“ம்ம்”
“ஏன் மேடத்தையே வைச்சக் கண் வாங்காமப் பார்க்குற?”
“ம்ம்ம் வேண்டுதல்”
“செம்ம ஃபிகர் இல்ல?, மேடம் புதுசா சேர்ந்திருக்கிறாங்க. பேரு...”
“ஜமுனா.” - வெற்றி
“எப்படித் தெரியும்?”
“மொட்ட வெயில்ல என்னை ட்ராஃபிக் போலீஸ் கிட்டக் கெஞ்ச விட்டு 400ரூபா ஃபைன் கட்ட வைச்சதே இந்த ராட்சசி தான் சார்!” – ஆதங்கத்துடன் அவன் கூறியதைக் கேட்டு களுக்கெனச் சிரித்தார் பாண்டியன்.
பாண்டியனின் சிரிப்பைக் கண்டு கொள்ளாமல் அவளிடமிருந்துப் பார்வையைத் திருப்பாது வெறித்துக் கொண்டிருந்தவனை மெல்லச் சுரண்டினான் லோகேஷ் – சக மாணவன்.
“வெற்றிண்ணா.. மிஸ் எப்புடி??”
“ஷ்ஷ்ஷ்ஷ்... நீயுமா டா?” என்று காண்டான வெற்றி, தொடர்ந்து “அவ வெளித்தோற்றத்தை வைச்சு எந்த முடிவுக்கும் வராதீங்க டா தயவு செஞ்சு! இவளைப் பார்த்தா.. எங்க ஏரியாவுல தண்ணி லாரி வரும் போது, எல்லாரையும் அடிச்சு விரட்டிட்டு 4 குடத்தோட முதல் ஆளா முன்னாடி போய் நிக்குற குருவம்மா அக்கா தான் டா ஞாபகத்துக்கு வருது! கைல இருக்குற குடத்தைச் சும்மா கடாயுதம் மாதிரி வைச்சுக்கிட்டு, சுத்தி இருக்குற எல்லாத்தையும் சுழட்டி,சுழட்டி அடிக்கும் பாரு.....”
“ண்ணா... இப்போ உங்க ஏரியா குருவம்மாக்காத் தண்ணி புடிக்கிற அழகை யாரு வர்ணிக்கச் சொன்னா?, மிஸ்ஸைப் பத்திக் கேட்டா... ச்ச”
“இல்லடா, இவளும் அந்த மாதிரி, அவ ஏரியாவுல பெரிய தாதாவா இருக்கலாம்”
“அது எப்புடி உங்களுக்குத் தெரியும்?”
“நான் தான் பார்த்தேனே! என் ரெண்டு கண்ணால பார்த்தேனே!” – எரிச்சல் மிகுந்த குரலில் வெற்றி கூறிக் கொண்டிருக்கையிலேயேத் தன் கையிலிருந்த டஸ்டரால் மேஜையை டொக்.டொக் எனத் தட்டியவள் “க்ளாஸ்க்கு லேட்டா வந்ததுமில்லாம, என்ன நொய்,நொய்ன்னு அங்கப் பேச்சு வேண்டிக் கிடக்கு?, பாடத்தைக் கவனிக்கிறவங்களையும் கெடுத்துட்டிருக்கீங்க?” என்று கோபமாய் வினவினாள்.
உதட்டை வளைத்து “யாரு? இவனுங்க?” என்றபடிக் கையை நீட்டி அனைவரையும் சுட்டிக் காட்டியவன் “இவனுங்க நீங்க நடத்துற பாடத்தைக் கவனிக்கிறானுங்களாக்கும்?” என்று வினவ... பல்லைக் கடித்தவள் “அவங்கக் கவனிக்கிறாங்களோ இல்லையோ! நீங்க க்ளாஸை டிஸ்டர்ப் பண்ணாம இருங்க போதும்” என்று சீற... அவளை நன்றாக முறைத்தபடிக் கையைக் கட்டிக் கொண்டு சாய்ந்து அமர்ந்து விட்டான் வெற்றி.
இருவருக்கும் வெளிப்படையாக நடக்கும் தகராறைக் கண்டு ஜெர்க்காகி க்ளாஸ் முழுதும் அமைதியாகி விட.. அவளது குரல் மட்டும் கோபத்தில் அடுத்த பத்து நிமிடங்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
மறுபடி தன்னைச் சுரண்டிய லோகேஷைத் திரும்பி நோக்கினான் வெற்றி.
“என்னடா?”
“ண்ணா, உங்களுக்கு மிஸ்ஸை ஏற்கனவேத் தெரியுமா?”
“தெரியும்ன்னு சொன்னா என்ன செய்யப் போற?”
“ஃபோன் நம்பர் கிடைக்குமா?”
“ப்ச், டேய் இவளுக்குப் போய் நீங்க இவ்ளோ ஹைப் கொடுக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர் டா”
“ண்ணா.. உங்களுக்குக் கண்ணு சரியில்ல. இதை விட அழகான பொண்ணை நீங்க இந்த ஏரியாவுலேயே பார்க்க முடியாது. க்ளாஸை ஒரு தடவை சுத்திப் பாருங்க... பெருசு,பொடுசு அத்தனையும் வசியத்துக்கு ஆட்பட்ட மாதிரி எப்புடி கண் சிமிட்டாம உட்கார்ந்திருக்கானுங்கன்னு”
அனைவரையும் ஒரு முறை நோக்கியவன் “ஆமா... இன்னாடா ஆச்சு இவனுங்களுக்கு?. இவ்ளோ நேரம் நல்லாத் தான டா இருந்தானுங்க?, அவ சொன்ன மாதிரி பாடமா டா கவனிக்கிறானுங்க?” என்று ஆச்சரியத்துடன் வினவ... மெல்லச் சிரித்த லோகேஷ்,
“இவனுங்கக் கவனிக்கிறது பாடத்தை இல்ல! மேடத்தை!” என்றான்.
“ப்ச், இவ மூஞ்சில அப்டியொன்னும் அழகு வடியலன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்”
“முகத்தை யாருண்ணா பார்த்தா?”
“டேய், நாதாரிங்களா...” – கோபம் காட்டிய வெற்றியிடம் “ச்சி,ச்சி தப்பா நினைக்காதீங்க! மேடத்தோட ஹிப்-ஐ பார்த்துத் தான் நம்ம பசங்க ஹிப்னாடிசம் ஆன மாதிரி உட்கார்ந்திருக்கிறானுங்க” – என்று லோகேஷ் கூற... ஏனென்றே புரியாமல் எரிச்சல் மண்டியது வெற்றிக்கு.
‘என்னப் பொண்ணு இவ! நடு ரோடுன்னு கூடப் பார்க்காம, அத்தனை பேர் முன்னாடி பெரிய உத்தம புத்திரி மாதிரி வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வந்தா! இப்போ.. எல்லாரும் ஆ-ன்னு பார்க்குற அளவுக்கு இப்பிடி சீன் காட்டிட்டு நிற்கிறா!’ – மனம் விடாது வசை மாரி பொழிந்தாலும், சத்தியமாக அவனால் அவளது முகத்தை தாண்டிப் பார்வையை கீழ் இறக்கி.. வேறு எங்கும் நோக்கத் துணிவு வரவேயில்லை! அது ஏனென்றும் புரியவில்லை!
ஏனோ லோகேஷ் கூறியதைக் கேட்டப் பிறகு, அந்த அறை முழுதும் வெப்பம் கூடி விட்ட உணர்வு அவனுக்கு! ஹெல்மெட் அணியாமலே, தலை முழுக்க வியர்த்துப் போய் விட... நெற்றியோரத்தைத் துடைத்துக் கொண்டவனுக்குத் திடீரென அமர்ந்திருந்த இருக்கை அன்-கம்ஃபர்ட்டபிளாகத் தோன்றியது.
என்ன என்ன என்ன இப்போ?, ஒட்டுமொத்த க்ளாஸ்க்கும் அவ ஃப்ரீ ஷோ காட்டுறா! ஒருத்தன் விடாம எல்லாரும் வாய்ல கொசு போறது தெரியாம ஆ-ன்னு பார்க்குறானுங்க! நான்... நான் ஒருத்தன் பார்க்குறது பெரியக் குற்றம் ஆயிடுமா?, ஏன் இதுக்கு முன்னாடி நான் எந்தப் பொண்ணையும் அப்படிப் பார்த்ததில்லையா என்ன?
ஒருவேளை அவ கண்டுபிடிச்சா, செருப்பால அடிச்சுடுவாளோன்றப் பயமா?, ச்ச,ச்ச வெற்றி! இந்த ஃபீடிங் பாட்டிலைப் பார்த்து நீ பயப்பட்றதா?, சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவன், முன் வரிசையிலிருந்தவனைப் பார்த்தபடி விடாது ஏதோ கூறிக் கொண்டிருப்பவளின் முகத்தை நோக்கினான்.
பெரிய விழிகளின் மேலே அகன்ற நெற்றி! தற்போது அந்த விழி முழுதும் கோபக் கனல் தெறித்துக் கொண்டிருந்தது. காரணம் – நிச்சயம் அவனாகத் தான் இருக்க முடியும்! நேர் வகிடெடுத்து சீவப்பட்டிருந்தத் தலை முடி இடை வரை நீண்டிருந்தது. முகத்தில் மூக்கைத் தேட வேண்டும் போல! வடிவான இதழ்கள்.. ஒரு முறை திறந்தால்.. அத்தனை சீக்கிரம் மூடாதென்பது அவள் லொட.லொடப்பதிலேயேத் தெரிந்தது. Not much impressive! But better than mythili! என்று எண்ணியவனின் மனசாட்சி அடப்பாவி என்பது போல் வாயில் விரல் வைப்பது அவனுக்குப் புரிந்தது.
கத்திரி வெயிலை, உச்சந்தலைல ஒரு பக்கம் வாங்கிக்கிட்டு, ட்ராஃபிக் போலீஸ் முன்னாடி லைசன்ஸ் இல்லன்னு நின்னு கெஞ்சிப் பாரு! அப்போப் புரியும் உனக்கு! எல்லாஆஆஆம் இவளால! இவளுக்கு இந்தக் கமெண்ட் போதும் என்று உறுமி, மனசாட்சியைத் தூர அனுப்பி விட்டு மீண்டும் அவளை நோக்கினான் அவன்.
ஒற்றைச் செயின் தழுவியிருந்தக் கழுத்திலேயேத் தெரிந்தது அவளது பால் நிறம்! அதைத் தாண்டிச் செல்ல அவனது பார்வைத் தயங்கி விடக் குனிந்து மூச்சை உள் இழுத்து “இன்னா தான் டா ஆச்சு உனக்கு” என்று தன்னைத் தானேத் திட்டிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.
இது போல் அவன் தொடர்ந்து இரண்டு,மூன்று முறை குனிந்து,நிமிர்ந்து அமர.. அவனை ஓரக்கண்ணில் கவனித்த ஜமுனாவின் கவனம் முழுதும் இப்போது வெற்றியின் மீது!
தயங்கித் தடுமாறியப் பார்வையைப் பிடிவாதமாக நிறுத்தி, நெற்றியில் இடது கையை வைத்தபடி மெல்ல இமை உயர்த்தி அவள் இடையை நோக்கினான் அவன்.
அவள் அணிந்திருந்த கரும்பச்சை நிறச் சேலையின் அடர்நிறத்தோடுப் போட்டிப் போட்டுக் கொண்டு பளீரென எட்டிப் பார்த்த அந்த இரண்டே இஞ்ச் போர்ஷனை அவன் அரை நொடிக் கூடப் பார்த்திருக்க மாட்டான், சட்டெனத் தன் இடது கையால் சேலையை இழுத்துச் செருகிக் கொண்டவளைக் கண்டு வகுப்பே உச்சுக் கொட்டியது.
அய்யோ! போச்சு! நான் பார்த்ததைப் பார்த்துட்டா! – இடித்துரைத்த மனசாட்சி மேலும்,கீழுமாய்க் குதிக்கத் தொடங்க, இப்போது அலட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து ப்ளாக் போர்டில் பார்வையைச் செலுத்தினான் அவன்.
“ஹலோ, சிகப்பு சட்டை! எக்ஸ்யூஸ்மி உங்களைத் தான்!” – அவள் தன்னைத் தான் அழைக்கிறாள் என்று தெரிந்தும், கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தவன், அசிரத்தையாக அவளை நோக்கி என்ன என்றபடி தாடையை உயர்த்தினான்.
“உங்க பேர் என்ன?”
“ஏன் உங்களுக்குத் தெரியாதா?”
“உங்க பேர் என்னன்னுக் கேட்டேன்” – நறநறக்கும் அவளது பற்களின் நடுவே ஒரு முறுக்கைத் திணித்திருந்தால், இந்நேரம் மாவாகி அவள் நாவில் இறங்கியிருக்கும். அத்தனை கடுப்பும்,எரிச்சலும் அவளிடத்தில்!
“வெற்றி”
“மிஸ்டர்.வெற்றி! க்ளாஸ் முடிஞ்சதும் என்னை மீட் பண்ணுங்க” – என்று விட்டு மீதி பாடத்தைத் தொடர்ந்தாள் அவள்.
மிளகாய்ப் பழ சிவப்பாய் மாறிப் போயிருந்த அவளது முகம், அவள் மிதமிஞ்சிய கோபத்தில் இருக்கிறாள் என்பதைப் பறைசாற்றியது. ஆனாலும் சோ வாட்! என்ற ரீதியில் அமைதியாக அமர்ந்திருந்தான் அவன்.
வகுப்பு முடிந்து அனைவரும் காலி செய்தப் பிறகு பாண்டியனும்,லோகேஷூம் அவனிடம் ‘ஆல் த பெஸ்ட்’ சொல்லி விட்டு நகர்ந்து விட்டனர்.
காலியான வகுப்பறையில், அவன் அதே கடைசி வரிசையில் இன்னமும் அமர்ந்திருக்க, கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்துக் கொண்டிருந்த ஜமுனா இன்னும் மேடையிலேயே நின்றிருந்தாள்.
“என்ன விஷயம்ன்னு சட்டுன்னு சொன்னேனா, நான் வீட்டுக்குக் கிளம்புவேன்” – அலட்டிக் கொள்ளாதக் குரலில் வெற்றி.
“என்னமோ நீயும் நானும் வருஷக்கணக்கா பழகின மாதிரி, வா,போன்னு ரொம்ப உரிமையாக் கூப்பிட்ற?”
“கிவ் ரெஸ்பெக்ட்! டேக் ரெஸ்பெக்ட்”
“..................” – கண்ணை மூடி எரிச்சலைக் கட்டுப்படுத்தினாள் அவள்.
“நடுரோட்டுல நீ என் பல்லை உடைச்சுடுவேன்னு கை ஓங்குனப்ப உன்னை வெறும் ரௌடின்னு தான் நினைச்சுருந்தேன்! ஆனா.. இப்போத் தெரியுது நீ ரௌடி மட்டுமில்ல, பெரிய பொம்பளப் பொறுக்கின்னு” - ஜமுனா
“ஓஹோ! மேடம் எதை வைச்சு இந்த முடிவுக்கு வந்தீங்க?”
“குரு ஸ்தானம்ன்றது மாதா,பிதா வரிசைல அடுத்து வர்றது! பாடம் சொல்லிக் கொடுக்கிறக் குருவை இப்படி அசிங்கமா பார்க்குறியே உனக்கெல்லாம் வெட்கமா இல்ல?”
“என்ன நான் அப்படி அசிங்கமாப் பார்த்துட்டேன்?”
“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத! பொறுக்கி ராஸ்கல்...”
“ஏய்ய் என்னடி?, 5-அடி உயரத்தோட பார்க்கப் பச்சப்புள்ளையாட்டம் தெரியுறியேன்னு நானும் பொறுமையாப் பேசுனா, ரொம்பத் துள்ளுற நீ?, ஆமா டி பார்த்தேன்! அதுக்கு என்னான்ற இப்போ?”
“டேய்ய்ய்ய்”
“நான் பார்த்தது மட்டும் தான் உன் கண்ணுக்குத் தெரிஞ்சதா?, ஒட்டுமொத்தக் க்ளாஸூம் அமைதியா இருக்குன்னதும், எல்லாம் பாடம் கவனிக்கிறானுங்கன்னு நினைச்சுட்டியோ?, இன்னிக்கு இங்க உட்கார்ந்திருந்த ஒவ்வொருத்தனும் உன் ரெண்டு இஞ்ச் இடுப்பை வைச்சு 4 பக்கத்துக்குத் தியரியே எழுதுவானுங்க!, வேணும்ன்னா கூப்பிட்டுக் கேட்டுப் பாரு!”
அவன் முடித்ததும் மூச்சு வாங்கக் கோபமும்,ஆத்திரமுமாய் அவனை நோக்கியவளின் முகம் அவமானத்தில் கன்றிச் சிவந்து போயிருந்தது.
“இப்டிப் பார்த்தா?, இப்டிப் பார்த்தா நான் பயந்துடனுமா?, ஏன் டி இழுத்து மூடிட்டுப் போறப் பொண்ணுங்களைப் பார்த்தே சோலிக்கே பீச்சே க்யா ஹேன்னு பாடுற நாதாரிங்க இவனுங்க! அப்பேர்ப்பட்டவனுங்க முன்னாடி ஃப்ரீ ஷோ காட்டிட்டு, இப்போ வந்து பெருசா கண்ணகி மாதிரி என் முன்னாடி அவதாரம் எடுக்கிற?”
“......................” – அறையில் அடிக்கும் அனல் காற்றுக் கூட அவள் விடும் உஷ்ண மூச்சின் முன்புத் தோற்று விடும் போலும்!.
“ஆமா, உங்களை மாதிரிப் பொண்ணுங்களுக்கு என்ன தான் டி பிரச்சனை?, பசங்க பார்க்கனும்ன்னு தான காட்டுறீங்க!, நீங்களே தூண்டி விட்டுட்டு கய்யோ,முய்யோன்னு குதிக்குறது எந்த விதத்துலடி நியாயம்?” – மேலும் என்னவெல்லாம் கூறியிருப்பானோ...
அவன் சற்றும் எதிர்பாராத விதமாக, அவன் அசந்த நொடி பார்த்துத் தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழட்டி அவனை நோக்கிப் படாரென வீசியிருந்தாள் அவள்.
அவள் குனிந்ததும் திகைத்துப் பேச்சை நிறுத்திய வெற்றி அரை நொடியில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, பட்டென நகர்ந்து அவளது செருப்புத் தாக்குதலிலிருந்துத் தப்பித்திருந்தான்.
தன்னைக் கடந்து சென்றுக் கீழே விழுந்த செருப்பை நோக்கியவன், ஆத்திரம் தலைக்கேற, உச்சகட்டக் கோபத்தில் விறுவிறுவென எழுந்து சென்று மேடையில் நின்றிருந்தவளின் கையைப் பற்றித் தன் புறம் இழுத்து, பின்னோடு வளைத்து.. “காலைல உன் பல்லை உடைப்பேன்னு வாய்ல சொன்னதுக்கே, அந்தக் குதி குதிச்சியே! இப்போ உன் கையை உடைச்சு வீட்டுக்கு அனுப்புறேன், உன்னால முடிஞ்சதைப் பாரு டி! யார் மேல செருப்பைக் கழட்டி வீசுற?, திமிர்ப்பிடிச்ச ராங்கி” என்று கண்கள் சிவக்கக் கர்ஜித்தான் வெற்றி.
