அத்தியாயம் - 2

க்காலை வேளையில், ஊரே ‘ப்ரேக் ஃபாஸ்ட்’ உண்ணும் உன்னத நேரத்தில் தானும் எதையேனும் தின்றே ஆக வேண்டுமென்கிறக் கட்டாயத்துடன், வான் ‘டேபிளில்’ ஜம்மென்று அமர்ந்து விட்ட சூரியநாராயணன், அத்தெருவில் சென்று,வந்து கொண்டிருந்த மனிதத் தலைகள் ஒவ்வொன்றிலும் ஸ்ட்ரா போட்டு அனைவரது எனர்ஜியையும் நொடியில் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தார்.

‘இந்தப் பம்மாத்தெல்லாம் என்னாண்ட பலிக்காது மகராசா’ – என்று சூரியனுக்கே சவால் விட்டபடி. சுட்டெரிக்கும் கடும் வெயிலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது அந்த டீக்கடை வாசலில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு கையில் டீயுடனும், மறு கையில் பேப்பருடனும் அமர்ந்திருந்தான் வெற்றி.

“பத்தாவது கூடத் தேறல! ஆனா, படிக்கிறது மட்டும் இங்க்லீஷ் பேப்பரு” – மெதுவாக முணுமுணுத்த டீக்கடைக்காரரை நிமிர்ந்து முறைத்தான்.

“யோவ்! மழைக்காகக் கூடப் பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒதுங்காத ஆளு நீ! நீ.. என்னைக் கேலி செய்வியா?, ஏ,பி,சி,டி 26 எழுத்தையும் கரைச்சுக் குடிச்சவங்க நாங்க! அதான் இங்க்லீஷ் பேப்பர் படிக்கிறோம்! நீ சாத்திட்டுப் போய்... அந்த ரேடியோவை ஆன் பண்ணு”

“தம்பி, கடை என்னோடதுன்ற நினைப்பு இருக்கட்டும்”

“அடேங்கப்பா! அப்போ இந்தா... நீ போடுற டீயை நீயேக் குடி!, கருமம் டீயாய்யா இது?, மாட்டுக்கு வைக்குறக் கழனித் தண்ணியைக் கொதிக்க வைச்சு க்ளாஸ்ல ஊத்தி வித்துக்கிட்டு, வக்கணையானப் பேச்சு வேற?”

“தம்பி, எஃப்.எம்-ல எந்த ஸ்டேஷன் போடடட்டும்?” – விறைப்புடன் அவர்.

“ம்ம்ம்ம், அந்தப் பயம் இருக்கட்டும்! 93.5 போடு” – தோரணையாகக் கூறியவன்...

‘பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சுக்க...

பாவை தவிக்குது.. பக்குவமாப் புடி...

அடியேய்... மனம் நில்லுன்னா நிக்காதடி!’

-‘அப்புடி போட்டுத் தாக்கு’ ரீதியில் எஸ்.பி,பி ஒருபுறம், சில்க் ஸ்மிதாவைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் செக்ஸி வாய்ஸூடன் எஸ்.ஜானகி ஒருபுறம்! போதாதா?, பாடலோடு சேர்ந்து உதட்டைக் கடித்துக் கொண்டுத் தலையை ஆட்டியபடி மீண்டும் பேப்பரில் கவனம் செலுத்தினான் வெற்றி.

அச்சமயம் “மிஸ்டர்.மீசை! எனக்கொரு டீ! சுகர் தூக்கலா!!” – என்று குரல் கொடுத்தபடியே வெற்றியின் எதிரே வந்தமர்ந்தான் கதிர்.

அவன் குரலைக் கேட்டதும், நிமிர்ந்தும் பார்க்காமல் புருவத்தைச் சுருக்கிக் கொண்டுத் தீவிரமாகப் பேப்பரை நோக்கினான் வெற்றி.

“என்ன வெற்றி சார்! பேப்பர் படிக்கிறீங்க போல?”

“ஆமா டா பே-பயலே!”

“எனக்கொரு உதவி செய்யுங்களேன்! மணமகன் கம்பி நீட்டியதால் பாதியில் நின்ற திருமணம்ன்னு எதுவும் நியூஸ் போட்டிருக்கான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்றீங்களா?”

“.....................” –நிமிர்ந்து முறைத்தான் அவன்.

“இ..இல்ல, நம்மக் கைவசம் திடீர் மாப்பிள்ளை ஒருத்தன் இருக்கான்! ஊர்ல எந்தக் கல்யாணம் நின்னாலும், நான் இந்தப் பொண்ணுக்கு வாழ்க்கைக் கொடுக்கிறேன்னு உடனே கிளம்பிருவான்” – அவன் கூறியதும் பட்டெனப் பேப்பரைக் கீழிறக்கினான் வெற்றி.

“இன்னாடா கலாய்க்கிறியா?”

“ஹாஹாஹா.... ஆனா மச்சி, என்னில இருந்துடா உனக்கு இந்தக் கல்யாண ஆசை வந்துச்சு?, ஏரியாக்குள்ள ஒருத்தியும் உன்னை நம்பிக் கழுத்தை நீட்ட மாட்டான்னு இப்டி இறங்கிட்டியோ!”

“டேய் கதிரு! மூடிட்டுப் போயிர்றா! இல்ல, மூஞ்சியை உடைச்சுறுவேன்”

“ஹாஹாஹா.. யோவ் மீசை! சேதி தெரியுமா உனக்கு?” – என்றபடி டீக்கடைக்காரரிடம் விசயத்தைச் சொல்லி அவன் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருக்க.. எரிச்சல் மண்டிப் போய், அவமானத்தில் கருத்து விட்ட முகத்துடன் பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தான் அவன்.

அமர்ந்திருந்த பெஞ்ச்சை இறுகப் பற்றியிருந்தவனின் பார்வை நேர் வெறித்திருக்க, எதிர் வீட்டிலிருந்து வெளி வந்த மாமியைக் கண்ட கதிர் “அம்புஜம் மாமி, அம்புஜம் மாமி! விஷயம் தெரியுமா உங்களுக்கு?” என்றபடி அவரிடமும் சொல்லிச் சிரிக்க.. கடுப்புடன் எழுந்து நின்றவன்... “டேய் அண்ணா.. ரேஷன் கடைல சுகர் வாங்கினு வரச் சொல்லி உன்னை வெளிய அனுப்புனா, நீ டீக்கடை வாசல்ல என்னாடா பண்ணினு இருக்குற?” என்றப் பெண் குரல் கேட்டு இடது புறம் திரும்பினான்.

கதிரின் தங்கை செல்வித் தன் சோடாபுட்டியைத் தூக்கிக் கோபத்துடன் கதிரை முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

‘வாயைப் பாரு! மூதேவி! தங்கச்சியா இது! என்று போகிற போக்கில் ஒரு கமெண்ட்டை உதிர்த்த வெற்றி, அவளைத் தொடர்ந்து, அருகே நின்றிருந்தவளைக் கண்டு விழிகளைப் பெரிதாக விரித்தான். ஏனெனில் அங்கே நின்றிருந்தது அவனது டீச்சரும், ஹிப்-பியூட்டியுமான மிஸ்.ஜமுனா.

‘வானெங்கும் ஊர்வலம்.. வாவென்னும் உன் முகம்..

கண்டால்... மயக்கம்! கலந்தால்.. இனிக்கும்!

செனோரீட்டா ஐ லவ் யூ.. மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ...’

-‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..... இவளைப் பார்க்கும் போதெல்லாம் நீங்க நான்-சிங்க்ல உள்ள வர்றீங்க ராஜா சார்!’ என்று முணுமுணுத்தபடி அவன் அவளை நோக்குகையில், அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பார்வையில் பெரிதாக அலட்டலில்லை. ஏன், குறைந்தபட்சம், இவன் எப்படி இங்கே என்கிறத் திகைப்புக் கூட இல்லை! லேசாகத் தலை சாய்த்துக் கொண்டு, கைகளைக் கட்டியபடி மிகப் பொறுமையாக மேலிருந்துக் கீழ் வரை அவனை அளவெடுத்தாள்.

‘என்னாடா இவ! கொஞ்சம் கூடக் கூச்சநாச்சமில்லாம இப்புடிப் பார்க்குறா!’ - கைகள் தானாக, அணிந்திருந்த டீ-ஷர்ட்டை இழுத்து விட்டுக் கொள்ள, பரபரவெனத் தலை முடியையும் கோதி விட்டுக் கொண்டான் வெற்றி.

‘நீ என்னாத்துக்கு டா இந்த ராங்கியைப் பார்த்து இப்பிடிப் பதறுற?’ – என்றுத் திட்டிய அவன் மனசாட்சி ‘அன்னைக்கு அவ இடுப்பைப் பார்க்குறதுக்கு அவ்ளோ யோசிச்ச நீ! ஆனா.. இவளைப் பாரு, உத்துப் பார்த்தே உன் உள் பனியன் சைஸைக் கண்டுபிடிச்சுடுவா போல” என்று கலாய்க்க... முசுட்டு முகத்துடன் உதட்டை வளைத்தவன் ‘இன்னும் இன்னாடி பார்க்குற?, நான் பல்லு விளக்கிட்டேனா இல்லையான்னு தெரியனுமா?, கிட்ட வா! ஊதிக் காட்டுறேன்!’ என்ற ரீதியில் முறைத்து வைத்தான்.

-விடாது லொட,லொடத்த அவன் மனதின் நக்கல்கள் அனைத்தும் அவனது விழி வழியே ட்ராவல் செய்து, சரியாக அவள் செவிகளை அடைந்து விட்டது போலும்! பல்லைக் கடித்தபடி அவனை முறைத்தவள் தானும் முணுமுணுக்கத் தொடங்கினாள்.

இவன் வூட்ல ட்யூப்-லைட் மாட்ட ஸ்டூலே தேவப்படாது! கம்னாட்டி, எப்புடி வளர்ந்து நிக்குது பாரு! நெத்தியை மறைக்குற அளவுக்கு என்னாத்துக்கு இவ்ளோ முடி! சீக்கிரமே சொட்டை விழுந்துடும்ன்னு சாபம் விட்டாக் கூடப் பலிக்காது போலயே! ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ பாண்டியராஜனுக்கு அப்புறம் நான் பார்க்குற முதல் ஆந்தை முழிக்காரன் நீ தான் டா-ப்பா ராசா! மூக்கு ஒன்னு தான் அந்த முகத்துலயே உருப்படி! வாயைப் பாரு! அக்கிரமமாப் பேசுறதுக்காகவே செதுக்கி வைச்ச மாதிரி!

மகாமட்டமான வார்த்தைகளால் அவனை மனதுக்குள் வர்ணித்துக் கொண்டிருந்தவள் அருகிலிருந்தக் குப்பைத் தொட்டியில் எச்சில் இலையை நுகர்ந்து கொண்டிருந்தத் தெரு நாயை ஒரு பார்வை பார்த்து விட்டு,மீண்டும் அவனை நோக்கினாள்.

அவள் பார்வையில் வெகுண்டெழுந்தவன் ‘அடி ராட்சசி! என்னைத் தெரு நாய்ன்னு சிம்பாலிக்கா சொல்லிக் காட்டுறியா?, வைச்சுக்கிறேன் டி உன்னை!’ – என்று கறுவிக் கொண்டு... “ஏய்ய்ய் புல்டோசரு!, அண்ணன்ற மரியாதை இல்லாம, அவனை வாடா,போடான்ற?. கொழுப்புக் கூடிடுச்சாடி உனக்கு?” என்று செல்வியிடம் பாய்ந்தான் வெற்றி.

உதட்டைச் சுழித்தபடி வேறு புறம் திரும்பிய செல்வியைக் கண்டு எரிச்சலுற்று “ஏன் டி கோத்ரேஜ் பீரோ சைஸ்ல இருந்துக்கிட்டுப் பாதித் தெருவை அடைச்சுட்டு நடக்குறியே! உன்னையெல்லாம் உங்கப்பன் சோறு போட்டு வளர்க்குறானா?, இல்ல தவிடு,புண்ணாக்குன்னு எதையும் தின்னு வளர்றியா?” என்று மேலும் கலாய்க்க.... கோபத்தில் மூச்சு வாங்கக் கதிரை முறைத்தாள் அவள்.

“டேய்,டேய்,டேய்... அவ என் தங்கச்சி டா” – முணுமுணுத்தக் கதிரிடம் “அவ எனக்கும் தங்கச்சி தான் டா! ஏன், அவளைக் கலாய்க்க எனக்கு உரிமையில்லயா?” என்று அவன் கேட்டு வைக்க... பரிதாபமாகத் தங்கையை நோக்கினான் அவன்.

செல்வியை அவன் அதட்டியதில் சற்றுத் திகைத்துக் கலவர முகத்துடன் அவனை நோக்கிய ஜமுனாவைக் கண்டுத் திருப்தியுற்றவன், செல்வியிடம் “யார்றி இவ?, உன் ஃப்ரண்டா?, ரெடிமேட் கடை வாசல்ல நிக்கிற பொம்மை மாதிரி இருக்குறா?, என்ன, ஏரியாவுக்குப் புதுசா?” என்று வினவினான்.

அவன் தன்னைப் பற்றிப் பேசியதும் வெடுக்கென நிமிர்ந்து “ஏய்ய்” என்று ஒரு விரலை நீட்டி உறுமியவளைத் தடுத்து அவள் கையைப் பற்றிய செல்வி, அவளை இழுத்துக் கொண்டு விறுவிறுவென நகரப் பார்க்க... அடுத்த நொடி “ஆஆஆஆஆஆஆ” என்கிற கதிரின் சத்தத்தில் திகைத்து.. நின்று.. திரும்பி அவனை நோக்கினாள்.

கதிரின் வலது கை வெற்றியிடம் சிக்கியிருக்க, அதை அசால்ட்டாக வளைத்தபடி “அண்ணன் கேட்டா பதில் சொல்றப் பழக்கம் இல்லையா தங்கச்சி?” என்று வினவினான் வெற்றி.

“மரியாதையா அவன் கைய விடு! இல்ல, நான் போய் எங்கப்பாவைக் கூட்டி வருவேன்” - செல்வி

“அய்யய்யயோ நான் பயந்துட்டேன்! உங்கப்பன் என்ன இந்த ஏரியா தாதாவா?, 2 பாக்கெட் மிச்சரை வாங்கிக் கொடுத்தா, நொறுக்க்க்கினே சாதுவா உட்கார்ந்து கிடப்பான்!, அவனைக் கண்டு நான் பயப்படப் போறேனா?, ஆனாலும், சரியான தின்னிப் பரம்பரைடி நீங்க!”

“டேய் வெற்றி நீ ரொம்பப் பேசுறடா” - கதிர்

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ பேசுன? ஹாஹா,ஹாஹான்னு! நீ மாமி கூட மஜா பண்றதுக்கு, நான் தான் கிடைச்சேனா?, ஏன் டா நாயே!”

அவன் தனதுக் கையை மேலும் முறுக்கியதில் துடித்தக் கதிர் “மச்சான், மன்னிச்சுர்றா, மன்னிச்சுர்றா!, என்னைப் பார்த்தாப் பாவமா இல்லையா டா?” எனக் கூற..

“அப்போ நான் கேட்டக் கேள்விக்கு உன் தங்கச்சியைப் பதில் சொல்லச் சொல்லு” என்றான்.

“இப்ப என்ன தெரியனும் உனக்கு?, தைரியமிருந்தா, என் முகத்தைப் பார்த்துப் பேசுடா! சாவுகிராக்கி” – முழுத் தொண்டையில் கத்திய ஜமுனாவைக் கண்டு அவன் கதிரின் கையைக் கொஞ்சம் கூடுதலாய்த் திருக...

“ஆஆஆஆஆஆஆஆஆஆஆ” –வென அங்கு நின்றிருந்தோர் அனைவரும் திரும்பிப் பார்க்குமளவிற்குப் பெருங்குரல் எடுத்துக் கத்திய கதிர் “நீ வேற வாயைத் தொறந்து ஏம்மா அவனை ஏத்தி விட்ற?, டேய், கைய விட்றா... அய்யோ! சர்க்கரையை வாங்கிட்டு வீடு போய்ச் சேராம, வாண்டட்-ஆ வந்து வாயைக் கொடுத்து.. சாரி, கையைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனே!” என்று புலம்பி விட்டு “அடியேய் செல்வி!, அவன் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லித் தொலையேன் டி” எனக் கெஞ்சினான்.

“இவ பேரு ஜமுனா. ஏரியாவுக்குப் புதுசு. எங்க வீட்டுக்கு எதிர்ல புதுசா குடி வந்திருக்கிறா! அப்பா இல்ல. அம்மா மட்டும் தான்! அவங்களுக்கும் கை,கால் விளங்காது.. அவ எல்.கே.ஜி படிக்கிறப்ப.......” – மடை திறந்த வெள்ளமாக, ஃபுல் ஸ்டாப் இன்றி வார்த்தைகளைக் கொட்டிய செல்வியை இடைமறைத்தக் கதிர் “மச்சான்,மச்சான்! அவ 5-ங்க்ளாஸ் படிக்கிறப்ப பாவாடைல ஒன்னுக்குப் போனது, எட்டாங்க்ளாஸ் படிக்கிறப்ப வயசுக்கு வந்ததுன்னு அவளைப் பத்தின.. மீதி வரலாறை நான் சொல்றேன் டா! கைய விட்றா.. ப்ளீஸ் டா” என்று கெஞ்ச.. “ம்ம்ம்ம்” என்றபடி பட்டெனக் கையை விட்டான் வெற்றி.

வளைந்திருந்தக் கையை நீவிக் கொண்டு “மனுஷனா டா நீ! காண்டாமிருகம்” என்று கதிர் ஒருபுறம் திட்ட.. செல்வி ஒரு படி மேலே சென்றுத் தன் கையிலிருந்தக் காய்,கறி பையால் அவன் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டு விட்டு... தன் கனத்த சரீரத்தை உருட்டிக் கொண்டு ஓடியே விட்டாள்.

உச்சகட்ட எரிச்சலில் அவனை முறைத்துப் பார்த்த ஜமுனாவைக் கண்டு நக்கலாய்ச் சிரித்த வெற்றி “ஏன் டா இந்த ஏரியாவுக்கு வந்தோம்ன்னு உன்னை ஃபீல் பண்ண வைக்கல! என் பேரு வெற்றி இல்ல டி!” என்று முணுமுணுத்தான்.

“என்ன டா சொன்ன?” – கதிர்.

“கை எப்பிடியிருக்கு மச்சான்?, தேறுமா?, இல்ல மாவுக் கட்டு எதுவும் போடனுமா?”

“போடா!!! பரதேசி நாயே! உன்னைப் பார்த்தாலே, ஏரியாக்காரிங்க விழுந்தடிச்சு ஓடுறதுலத் தப்பே இல்லடா”

“சரி சரி வுடு வுடு!, விசயத்துக்கு வா!, அந்த ராங்கிக்குப் பின்னாடி ஏதோ ஹிஸ்ட்ரி இருக்குன்னியே! அதைச் சொல்லு முதல்ல”

“தெரிஞ்சுக்கிட்டு என்னடா பண்ணப் போற?, மச்சான், இந்தப் பில்லி,சூனியம்,ஏவல் மாதிரி நீ ஒரு கெட்ட்ட்ட்ட்ட வஸ்து டா!, இந்த ஏரியால.. நீ கண் பார்த்துக் காதல் சொன்ன பொண்ணுங்க நிலைமையெல்லாம் மனசுல வைச்சுக்கிட்டுத் தயவு செஞ்சு இந்தப் பொண்னை விட்ரு டா”

நண்பனை சந்தேகத்துடன் நோக்கியவன் “உனக்கு என்ன அவ மேல அவ்ளோ கரிசனம்?” என்று வினவினான்.

“இது பேரு மனிதாபிமானம் டா மாப்ள!, அந்தப் பொண்ணாவது பொழச்சுப் போகட்டுமே-ன்ற நல்ல எண்ணம்”

“அந்த மனிதாபிமானத்தை நீ காட்ட வேண்டியது அவ கிட்ட இல்ல. என் கிட்ட” என்றவன் தொடர்ந்து அவளால் ட்ராஃபிக் போலீஸிடம் கத்திரி வெயிலில் கைக் கட்டி நின்ற கதையையும், டுடோரியல் க்ளாஸில் செருப்பால் டுமீல் வாங்கியக் கதையையும் பொறுமையாய் விவரித்தான்.

“எப்படிப் பார்த்தாலும், ரெண்டு சம்பவத்துலயும் தப்பு உன் மேல தான மச்சி இருக்கு?” -கதிர்

“என்ன டா இன்னொரு கை நல்லா இருக்குன்ற தைரியத்துல வாயை விட்றியா?”

“அ..அ...அப்படியில்ல மச்சி! நியாய,தர்மம்ன்னு ஒன்னு இருக்குல்ல?” – கிட்டத்தட்டப் பம்மினான்.

“நீ நியாய,தர்மம் பார்த்து எதையும் புடுங்க வேணாம்!, நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுடா!, டீச்சருக்கு நம்ம ஏரியால என்ன வேலை?”

“டேய் வெற்றி! நீ நினைக்குற மாதிரி இல்ல டா!, ரொம்பப் பாவம் டா!, அந்தப் பொண்ணுக்கு அப்பா இல்ல! இருக்கிற அம்மாவும் பக்கவாதம் வந்துப் படுத்த படுக்கையா இருக்காங்க!, உறவுக்காரங்க யாரையோ அந்தம்மாவுக்குத் துணைக்கு வைச்சுக்கிட்டு இந்தப் பொண்ணு சம்பாதிச்சுத் தான் டா குடும்பத்தைக் காப்பாத்துது!”

“அவளுக்கு இருக்கிற வாய்க்கு ஒரு குடும்பம் என்ன, விட்டா... 9 குடும்பத்தைக் கூட ஒண்டியா நின்னுக் காப்பாத்துவா!, டேய்... வெள்ளிக் கிழமையான கோவிலுக்கு வருவா, சனிக்கிழமையான ஷாப்பிங் போவான்ற மாதிரி இன்ட்ரெஸ்ட்டிங்கா எதையாச்சும் சொல்வன்னு பார்த்தா.. இழுத்துனு கிடக்குற அவங்கம்மாவைப் பத்தி இன்ஃபர்மேஷன் சொல்லின்னு இருக்குற?, சாவுகிராக்கி”

“டேய் வெற்றி, சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காத! நீயெல்லாம் இந்த உலகத்துல மனுஷனா வாழ்றதுக்குத் தகுதியே இல்லாதவன் டா! இங்கப் பொறுக்கித் தின்னுட்டிருக்க நாய், மேல பறந்துட்டிருக்கிற காக்கா, இதோ.. இந்தக் கடைல டீ ஆத்திட்டிருக்கிற மீசை, இதுங்களைப் போல நீயொரு ஐந்தறிவு ஜீவியா பிறப்பெடுத்துருக்கனும் டா”

“வாயை மூடிட்டுப் போடா!”

“டேய், அந்தப் பொண்ணு நீ நினைக்குற மாதிரி இல்ல!, ஒழுங்கா உன் வாலைச் சுருட்டி வை” –என்று எச்சரித்த கதிரை அவன் கண்டு கொள்ளவேயில்லை.

இந்த அளவிற்கு அவன் அவள் மீது வெறியேறிப் போய் திரிவதற்கானக் காரணம், அந்த செருப்பு சம்பவமும்,அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வும் தான்!

அன்று அவனுக்கிருந்தக் கோபத்தில் அவளை என்ன செய்திருப்பானோ! வாசலருகே அவனுக்காகக் காத்திருந்த லோகேஷூம்,பாண்டியனும் பதறி ஓடி வந்துத் தடுத்து சூழ்நிலையின் சூட்டைக் குறைக்க, பயமும்,ஆத்திரமும் கொண்ட ஜமுனாவோ, உடனே கல்லூரி நிர்வாகத்திடம் அவனைப் பற்றி வத்தி வைத்தாள்.

நிர்வாக அதிகாரி அவனை அழைத்து எச்சரிக்கத் துவங்க, அவன் எப்போதும் போல் எகத்தாளமாய்ப் பேசி எகிறிக் கொண்டு நின்றதில் கடுப்பாகிப் போய் அவன் மீது ஈவ்-டீசிங் கேஸ் பதிவு செய்யப் போவதாக அவர் மிரட்ட... அதற்கும் அசராமல் நின்றவனைப் பாண்டியன் முன் வந்து பேசி மன்னிப்புக் கேட்க வைத்து வெளியே அழைத்து வந்தார்.

நிர்வாகம் முழுதிலும் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்ட எரிச்சலில் ஜமுனாவின் மீது ஏகக் காண்டுடன் அவன் வலம் வர, அவளோ அன்றைய நாளுக்குப் பிறகு காலேஜிற்கு வருகை தரவேயில்லை.

எப்போது சிக்குவாளெனக் காத்துக் கொண்டிருந்தவனின் கண் எதிரேயே அவளைக் குடி வைத்த விதியை எண்ணி வெற்றிப் புன்னகை பூத்தான் அவன். “இருக்குடி உனக்கு!, இந்த வெற்றி யாருன்னு காட்டுறேன்” என்று சூளுரைத்துக் கொண்டான்.

அன்றிலிருந்து ஜமுனாவை விடாது பின் தொடர்வதை சாப்பிடுவது,துங்குவது போல் அன்றாட வேலையாகவே மாற்றிக் கொண்டான்.

மிஸ்டர்.மீசையின் டீக்கடையிலிருந்துத் தொடங்கி 20,30 வீடுகள் கொண்ட அந்தத் தெரு கதிர்,வெற்றி.ஜமுனா ஆகியோரின் இல்லங்களையும் உள்ளடக்கியிருந்தது, அவனுக்கு ரொம்பவும் வசதியாய்ப் போயிற்று.

ஒவ்வொரு முறையும் ஜமுனா அவனது வீட்டைக் கடக்கையில் ஓடி வந்துத் தெருவில் இறங்கி அவளைத் தொடர்ந்து செல்வதை இந்தப் பத்து நாட்களாக வழக்கமாக்கியிருந்தான்.

அன்றும் அப்படித் தான் கையில் ஒரு டீ க்ளாஸூடன் அவன் மிஸ்டர்.மீசையின் டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருந்த சமயம், காலை நேர பரபரப்பை முகத்தில் தேக்கியபடி பஸ் ஸ்டாப்பை நோக்கி விறுவிறுவென நடந்து கொண்டிருந்தாள் ஜமுனா.

அவள் சரியாகக் கடையை நோக்கி வரும் வேளை, இளையராஜா வழக்கம் போல நான்-சிங்கில் “தும்ச்சு,தும்ச்சாக்...” என்றபடி ‘ஏசுதாஸ்-ஸ்வர்ணலதா’-வைக் கையோடு அழைத்து வர.....

பத்தடி தூரத்தில் பச்சை சேலையில் வியர்த்து விறுவிறுக்க நடந்து வருபவளைக் கண்கள் பளிச்சிட நோக்கியவனுக்கு, அதுவரையிருந்தத் தூக்கத்தோடு கூடிய சோம்பல் ‘போயே போச்சு’ ரீதியில் ஓடி ஒளிந்து விட்டது!.

இரு கையால் கைலியைத் தூக்கிக் கட்டியபடி எழுந்து நின்றவன் ‘என்னா சொல்லு, நம்ம டீச்சர் மாதிரி ஒரு கும்க்கா ஃபிகரை ஏரியாலயேப் பார்க்க முடியாது!’ என்று முணுமுணுத்து விட்டு “போடுய்யா, போடுய்யா! அப்புடிப் போடுய்யா மீச!” என்றுக் கத்தினான்.

“யோவ் மீச! காலங்கார்த்தாலயே எங்களை இப்புடி உசுப்பேத்துறியேய்யா? வெள்ளிக்கிழமையானாலே ஆளு ஒரு டைப்-ஆ மாறிட்ற? ஷாம்பூ போட்டத் தலையும்,மல்லிப் பூவுமா.... அப்ப்ப்பாப்பாபாஆஆஆஆ” – என்ற படி மறைமுகமாக அவளைத் தாக்கியவன்.. தொடர்ந்து....

“ஆசை நான் கொண்டு வந்தால்.. அள்ளித் தேன் கொள்ள வந்தால்...

மயங்கிக் கிறங்க... கிறங்கி உறங்க.... ஓஹோஹோஓஓஓஓஓஓ....” – எனத் தன் முழுத் தொண்டைக்கும் கத்திப் பாட..... கோபத்தில் உள்ளங்கையை அழுந்த மூடினாள் ஜமுனா.

முதலில் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடத் தீர்மானித்தவள் பின் மனதை மாற்றிக் கொண்டு அவனை நோக்கி விடுவிடுவென நடந்து வந்தாள்.

“பூவோடு... ஆஆஆஆ.. தேனாட...” – அவள் மீதிருந்தப் பார்வையை அகற்றிக் கொள்ளாமல்! கொஞ்சமும் அசராமல் இன்னமும் பாடிக் கொண்டிருந்தான் அவன்.

“வாயை மூட்றா கெரகத்துக்குப் பொறந்தவனே!” – ஜமுனா.

“குட்ட்ட்ட்ட்ட்ட்ட்மார்னிங்ங்ங்ங் மிஸ்ஸ்ஸ்ஸ்” – கையைத் தூக்கி நெற்றியில் வைத்து சிறுபிள்ளைத்தனமாய் அவன்.

“என்னடா கடுப்பேத்திப் பார்க்குறியா?”

“என்னைப் பெத்தவ கெரகம்ன்னா, நீ நரகம் டி!”

“இருந்துட்டுப் போறேன்!, எதுக்குப் பின்னாடியே வந்து டார்ச்சர் கொடுக்குற?, என்ன தான் டா பிரச்சனை உனக்கு?, என்ன? கண்டதும் காதலா?, அதெல்லாம் உன்னை மாதிரி வெட்டிப் பசங்களுக்கு வர்றது! எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்ல. புரிஞ்சதா?”

-இல்லாத மூக்கை விடைக்க முயன்றபடிக் கோபமாய் அவள் பேசியது, அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது. அவள் உதட்டின் மீது பூத்துப் படர்ந்திருந்த வியர்வைத் துளிகளைக் கண்டு, அவனது ‘லப்டப்’ இதயம் திடீரென ‘திக்திக்’ எனத் துடிக்கத் துவங்க... சட்டெனப் பார்வையைத் திருப்பியவன் அவள் கூறியதை எண்ணிச் சிரித்தான்.

“என்ன டா இளிப்பு?” - ஜமுனா

“இல்ல, பார்க்குறதுக்குக் கில்மா பட போஸ்டர்ல இருக்கிற ஐட்டம் மாறி இருக்குற! உன்னைப் பார்த்து எனக்கு லவ் வேற வரனுமாக்கும்?”

“டேய்ய்ய்ய், தெருப் பொறுக்கி”

“பொறுக்கி தான் டி! பச்சைப் பொறுக்கி! சொல்லிருப்பாளுவளே! இந்த ஏரியாக்காரிக! அதனால, பார்த்துப் பதமா நடந்துக்க! இன்னொரு தடவை இப்டி கிட்ட வந்து எகிறுனா, எக்குத்தப்பா எதாவது பண்ணிடுவேன். புரிஞ்சதா?”

-அடிக்குரலில் மிரட்டியவனை இமைக்காமல் முறைத்துப் பார்த்தவள் சட்டெனக் குனிந்து கீழே கிடந்தக் கல்லை எடுத்து அருகிலிருந்தக் குப்பை மேட்டில் ‘சிவனே’-என நின்று கொண்டிருந்த நாயின் அருகே விட்டெறிந்தாள்.

கல் அதன் மீது படாவிட்டாலும், அது வீல்,வீல் எனக் கத்தியபடி ஓடி விட, திகைப்புடன் தன்னையே பார்ப்பவனைக் கண்டு நக்கலாய்ச் சிரித்தபடி “யோவ் மீசை” என்று டீக்கடைக்காரரைக் கத்தியழைத்து “சொரி நாயெல்லாம் தெருவுக்குள்ள நடமாடுனா, அடிச்சு விரட்டுறதை விட்டுட்டுப் பால் ஊத்திக் கொடுப்பியா நீ?, உனக்குப் பயமா இருக்குன்னா சொல்லு!, நான் துரத்துறேன்” என்று விட்டு... கெத்தாகத் திரும்பி நடந்தாள்.

அவள் விட்டெறிந்தக் கல்லையும், தூரத்தில் நின்றிருந்த நாயையும் கண்டு விட்டு எச்சில் விழுங்கிய வெற்றி, அசராது தன்னையே பார்த்தபடி வசனம் பேசியவளின் துணிச்சலை எண்ணி வியந்து போனான்.

“என்ன டா வெற்றி?, பேயறைஞ்ச மாதிரி நிக்குற?, நம்ம மணி ஏன் டா அப்பிடிக் கத்துச்சு?” – கதிர்.

“பேய் தான் டா அடிச்சிருச்சு” - வெற்றி

“என்ன டா சொல்ற?”

“அந்தத் திமிர்ப் பிடிச்ச ராங்கி தான் டா மணி மேலக் கல்லை விட்டெறிஞ்சுட்டா”

“யாரு ஜமுனாவா?, ஏன் அப்பிடி செஞ்சுச்சு?”

“ம்ம்ம், என்னை அடிக்க முடியலன்றதால, நாயை அடிச்சு விரட்டுறா!, மச்சி, அவளை எதாவது செய்யனும் டா”

“ஏதாவது-ன்னா?”

“ஏதாவதுன்னா.. ஏதாவது..! என்னைப் பார்த்தாலே, அவ பயப்படனும் டா! அந்த மாதிரி!”

“உனக்கு ஏன் டா அவ மேல இவ்ளோ காண்டு?”

“அவ கண்ணுல ஒரு கெத்து இருக்கு மச்சி!, அது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது டா!, பயம்ன்னா கிலோ என்ன விலைன்னு கேப்பா போல! கையைப் புடிச்சு இழுத்தும் கூட அசர மாட்டேங்குறா”

“மச்சான், முன்ன,பின்ன போலீஸ் ஸ்டேஷன் போய்ப் பழக்கமிருக்கா டா உனக்கு?”

“இல்லையே! ஏன்?”

“இனிமே கண்டிப்பாப் போவ டா!”

“ப்ச், டேய்ய்ய்”

“நீ சரியில்ல மச்சி, சரியில்ல!, ரொம்ப ஓவராப் போயிட்டிருக்க! ஏரியாக்காரிங்களோட நீ ரெகுலராப் போடுற வாய்ச்சண்டை மாதிரி தெரியல இது!”

“எதை வைச்சு சொல்ற?”

“அந்தப் பொண்ணு, காலைல 8 மணிக்கு அது வீட்டு பால்கனில துணி காயப்போட வரும்! நீ சரியா அந்த நேரத்துல உன் வீட்டு பால்கனில தோள்-ல டவலும், வாய்ல டூத் ப்ரஷ்ஷூமா நிற்கிற தான?”

“தப்பு மச்சி! நான் பல்லு விளக்குற நேரமாப் பார்த்து தான் அவ துணி காயப் போட வர்றா!”

“ரெண்டு ஸ்டாப் தள்ளியிருக்கிற லிங்கா மெட்ரிக்குலேஷன்ல அந்தப் பொண்ணு வேலை பார்க்குறதைத் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு நீ தினம் காலைலயும்,மாலைலயும் அவ பின்னாடியே போய் பிக்-அப்,டிராப் பண்ணிட்டிருக்கிற விவரம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?”

“ச்ச! லிங்கா ஸ்கூல் பக்கத்துல இருக்கிற ஜெய்குமார் மெஸ்ல தான் நான் வேலை பார்க்குறேன் மச்சி!, அதைப் போய் நீ தப்பா நினைச்சுட்டியே டா”

“டேய் டேய் நடிக்காத டா! அந்தப் பொண்ணு மளிகைக் கடைல மல்லிப் பொடி வாங்கப் போனாக் கூட நீ பின்னாடியே போய் பிஸ்கட் வாங்கித் திங்குறன்னு கேள்விப்பட்டேன் நான்! என் கிட்டயே சீன் போட்றியா?”

“ப்ச், ஆமா. நான் அவ பின்னாடி சுத்துறது உண்மை தான். அதுக்கென்ன இப்போ?”

“எதுக்குடா சுத்துற? காதல்,கண்றாவின்னு எதுவும் சொல்லிடாத டா! அதுக்கு பதிலா.. இந்தா.. என் இடுப்பு, இங்க ஒருதடவை கிச்சு,கிச்சு மூட்டி விடு! நல்லா சிரிச்சுப்பேன்”

“டேய்.. அவ மூஞ்சிக்கெல்லாம் அவ்ளோ வர்த் இல்ல”

“பின்ன?”

“தப்பே பண்ணாத என்னைப் பேசியே தூண்டி விட்டுக் கடைசில காலேஜ் ஓனர் போலீஸ்ல கேஸ் போட்ருவேன்னு சொல்லி மிரட்டுற அளவுக்குக் கொண்டு வந்து விட்டாள்-ல?, இவளை.. இவளை நான் சும்மா விட்றதா?, நான் குடுக்குற டார்ச்சர்ல அவ நேரா மகளிர் காவல் நிலையத்துல போய் நிக்கனும் மச்சி! விசயமில்லாதப்பவே கம்ப்ளைண்ட் பண்ணுவேன்னு மிரட்டுனவ, என்னால.. நிஜமாவே கம்ப்ளைண்ட் கொடுக்கனும்! நான் உள்ள போகனும்!”

“அட நாதாரிப்பய மவனே! ஏன் டா அன்னிக்கு நீ அந்தப் பொண்னை எக்குத்தப்பாப் பார்த்தது உனக்குத் தப்பாவே தோணலையா?”

“நான் மட்டுமா டா பார்த்தேன்?, நியாயமாப் பார்த்தா அவ அன்னைக்குக் க்ளாஸ்ல உட்கார்ந்திருந்த 20 பேர் மேலயும் தான் கேஸ் போடனும். அதென்ன என்னை மட்டும் அவமானப்படுத்துறது?,”

“ம்ம், நியாயம் தான்”

“அவ்ளோ இருக்குறவ, மேல இருந்துக் கீழ வரைக்கும் முழுசா மூடிட்டு சுத்தனும் மச்சி! அதை விட்டுட்டு ஃபீரியா போன தண்ணியை மொண்டு குடிச்சப் பாவத்துக்கு என் மேல கேஸ் போடுவாளோ!”

“உன் உவமைல நான் செத்துட்டேன் மச்சி”

“அதை விடு! முதல்ல அவளை என்ன பண்ணலாம்ன்னு சொல்லு!”

“சொல்றேன் மச்சி! ஆனா.. கொஞ்சம் செலவாகுமே டா!”

“என்ன?”

“நைட் 7 மணிக்கு. டாஸ்மாக்ல சரக்கு வாங்கித் தர்றியா?”

“சாரி மச்சி, அப்போ நான் பிஸி”

“ஏன்?, என்ன பண்ணப் போற?”

“இன்னிக்கு வெள்ளிக்கிழமைல்ல?, நம்மாளு அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு நெய்விளக்கு ஏத்த, அந்த டைம்ல தான் கோயிலுக்கு வருவா. என் ப்ரசன்ஸ் அங்க முக்கியம்ல?”

“அ...ர..சமரத்துப் பிள்ளையாரா????? யார்றா அவுரு?” – என்று வாயைப் பிளந்தக் கதிரையும் சேர்த்து அழைத்துக் கொண்டே அன்று மாலை கோவிலுக்குச் சென்றான் வெற்றி.

கோவில் வாசலிலேயே அமர்ந்து விட்டக் கதிரிடம் ‘சாமி,கண்ணை நோண்டப் போவுது’ என்று பழித்து விட்டு ஜமுனாவுடன் இணைந்து கொண்டான்.

“ரெண்டு நெய் விளக்கு கொடுங்க” – கோவில் வாசலிலிருந்தக் கடையில் நின்றிருந்த ஜமுனாவின் அருகேத் தானும் சென்று நின்றான்.

“அது வேணாம், அது வேணாம், இதோ.. அந்த ரெண்டு விளக்கை எடுக்கா, அதுல தான் நிறைய நெய் இருக்கு” - வெற்றியிடமிருந்து வந்தக் குரலில் நிமிர்ந்து அவனை முறைத்தாள் அவள்.

அவளை டீலில் விட்டு “நமக்குத் தெரிஞ்ச ஆளு தான்-க்கா!, விவரம் தெரியாத பொண்ணு பாவம்!” என்று கூற..

“ஏய்ய், என்ன தான் டா வேணும் உனக்கு?, எதுக்கு என் பின்னாடியே வர்ற?” – சீறிய ஜமுனாவிடம் “எரிச்சல் வருதா டீச்சர்?, அப்போ போலீஸ் ஸ்டேஷன் போலாமா?. ஈவ்-டீசிங்ன்னு கம்ப்ளைண்ட் கொடுங்க! நான் வேணாம்ன்னா சொல்லப் போறேன்?” – அசால்ட்டாகக் கூறினான் அவன்.

‘வேணாம் ஜம்மு!, இவன் நம்மளத் தூண்டி விட்டு வேலை பார்க்குறான்! இந்தத் திடப்பொருளை ஜடப்பொருளா நினைச்சுக்கிட்டு கண்டுக்காம நட!’ –எனத் தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டு முன்னே நடந்தாள்.

தன்னையே நோக்கியபடிப் பின்னால் நின்றவனைக் கண்டு கொள்ளாது, அவள் விளக்கை ஏற்ற... மேலிருந்துக் கீழ் வரை அவளை ஒரு பார்வை பார்த்தவன்,

“ஏன் டீச்சர் நீங்க இன்னிக்குப் புடவை கட்டல?” – என்றான்.

“................”

“சுடிதாரெல்லாம் உங்களுக்கு செட்-ஏ ஆவல”

“................”

“நேத்து ஈவ்னிங் உங்க ஸ்கூல் பஸ் ஸ்டாப்ல நின்னு ஒரு மலமாடு கூட சிரிச்சு,சிரிச்சுப் பேசின்னு இருந்தீங்களே! யாரு அவன்?, உங்க லவ்வரா?”

“.............”

“லவ்வெல்லாம் பண்ணாதீங்க டீச்சர்!, நீங்கப் பாட்டுக்கக் கல்யாணம் பண்ணிப் போயிட்டீங்கன்னா, பாவம் உங்கம்மாவை யாரு பார்த்துக்குவா?”

‘அவ்ளோ நல்லவனா டா நீயியியி’ –ரீதியில், நிமிர்ந்து அவனை ஆச்சரியத்துடன் நோக்கினாள் அவள்.

லேசாகப் புன்னகைத்தவன் “இல்ல, அதுவே இன்னிக்கோ,நாளைக்கோன்னு இழுத்துன்னு கிடக்கிறதாக் கதிர் சொன்னான்! அந்தத் தைரியத்துல நீங்க லவ் பண்ணிடக் கூடாதேன்னு பயத்துல அப்டி சொன்னேன்!” எனக் கூற பல்லைக் கடித்துக் காதைச் சொறிந்தாள் அவள்.

‘ஹாஹாஹாஹா! நான் பிறப்பெடுத்ததே உன்னை வெறுப்பேத்த மட்டும் தான் டி என் டீச்சரு!’

அவன் கொக்கரித்துக் கொண்டிருக்கையில், அவள் ஏதோ ஸ்லோகத்தை உச்சரித்தபடி விறுவிறுவெனப் பிள்ளையாரைச் சுற்றத் தொடங்கினாள்.

தானும் அவள் பின்னேயே சென்றவன் கையில் வைத்திருந்தப் பூவைப் பிய்த்து ஒவ்வொன்றாக அவள் மீதெறிந்தபடி, அவளோடு சேர்ந்து மரத்தைச் சுற்றினான்.

சகித்துக் கொண்டு 2 சுற்றுக்களை முடித்தவள், மூன்றாவது சுற்றில் நின்று அவன் கையிலிருந்தப் பூக்களைப் பறிக்க முயல.. அது அவள் கைக்குச் சிக்கி விடாத வண்ணம் இறுகப் பற்றிக் கொண்டு நக்கல் சிரிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சிரிக்காத டா! பார்க்க சகிக்கல!”

“நீ ஏன் டுடோரியல் காலேஜ்க்கு வர்றதில்ல?”

“..............”

“எனக்குப் பயந்துக்கிட்டு வராம இருந்ததா சொல்லிடாத!, நெஞ்சடைச்சு செத்துடுவேன்”

“ச்சி! மொல்லமாரி! என்னைப் பார்த்தா... உனக்கெல்லாம் பயப்பட்ற ஆள் மாதிரி தெரியுதா?”

“அதான?, நீ பொம்பள தாதாவாச்சே!, பின்ன ஏன் வர்றதில்ல?”

“உங்களுக்கு க்ளாஸ் எடுத்திட்டிருந்த ரமணி சார் 1 மாசம் லீவ்ல போனதால தான், நான் வந்தேன்! டெம்ப்ரரி-ஆ!”

“வந்து... என் கூடத் தகராறு பண்ணி, காலேஜ்ல என் பேரைக் கெடுத்துட்டு சைலண்ட்-ஆ எஸ் ஆய்ட்ட?”

“என்ன உன் பேரைக் கெடுத்தேன்?”

“மேனேஜ்மெண்ட் வரைக்கும் போய் எதுக்குடி என்னைப் பத்தி கம்ப்ளைண்ட் கொடுத்த?”

“பின்ன?, பட்டப்பகல்ல, நடு வகுப்புல வைச்சு நீ என் கையைப் புடிச்சு இழுப்ப!, நான் அமைதியாப் போயிடனுமா?”

“நான் என்ன ஆசைப்பட்டா உன் கையைப் புடிச்சு இழுத்தேன்! நீ ஓவர்-ஆ பேசுன, நான் கோவப்பட்டேன்!”

“அப்போ நீ தப்பே பண்ணலையா?, தப்பும் பண்ணிட்டுத் தெனாவெட்டாப் பேசுறது தான் உன் இயல்பு போல”

“என் இயல்பைப் பத்தி விமர்சனம் பண்ண உனக்கு என்னடி உரிமை இருக்கு?”

“ஏய், இப்போ என்ன பண்ணனும்ன்ற?, நீ ரொம்ப நல்லவன்னு உன் காலேஜ்ல உன்னைப் பத்தி ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்கவா?”

“நீ ஆணியே புடுங்க வேணாம்”

“பின்ன?”

“ஏய், எனக்குத் தெரியாது டி! எனக்குக் கோபம் போற வரைக்கும் இப்பிடித் தான் உன் பின்னாடி வருவேன்” – புருவத்தைச் சுருக்கியபடி முசுட்டு முகத்துடன் கூறியவனைக் கண்டு வாயைப் பிளந்த ஜமுனா “சரியான சைக்கோ” என்று முணுமுணுத்து விட்டு..

“300 ரூபா போதுமா உனக்கு?” – என்றாள் சம்பந்தமில்லாமல்.

“எதுக்கு?”

“ம்ம்ம், நீ பார்க்குற பாடி-கார்ட் வேலைக்குத் தான்”

“ம்ஹ்ம்... கூட 200 போட்டு 500-ஆ குடு”

“மானம் கெட்டப் பரதேசி”

“சரி,சரி நகரு நகரு! இன்னும் 4 சுத்து பாக்கியிருக்குல்ல?” – என்று அவளை இடித்துக் கொண்டு முன்னே சென்றவனை எந்த வகையில் சேர்ப்பதென்றேப் புரியவில்லை அவளுக்கு.

தானாகப் பூத்த முறுவலை அடக்கியபடி பின்னே வந்தவளைத் திரும்பி நோக்கியவன் “பரவாயில்லையே! டீச்சருக்கு சிரிக்கவெல்லாம் தெரியுது” என்று முணுமுணுக்கையில்.... வெளியிலிருந்தப் பூக்கடை ரேடியோவில் வழக்கம் போல் இளையராஜா! இம்முறை ஜெயச்சந்திரன் மற்றும் எஸ்.ஜானகியோடு!

‘வந்துட்டாருய்யா!, இவ கூட இருக்கும் போது மட்டும் மனுஷன் எங்க இருந்து தான் என்ட்ரி கொடுப்பாரோ! – என்றெண்ணிக் கொண்டாலும், அடக்கப்பட்ட சிரிப்புடன் தன்னைக் கடந்து செல்லும் ஜமுனாவைக் கண்ட போது இந்த முறை அவரது இசை அவனோடு ‘சிங்க்’-ல் இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு.

‘நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும்... ஒரே கோலம்..

மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்... கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்!

எண்ணம் ஒரு வேகம்! அதில் உள்ளம் தரும் நாதம்...

தாலாட்டுதே.................................................................’