அத்தியாயம் - 7
விலகியிருந்த ஜன்னல் திரை வழியாகக் கரம் நீட்டித் தன் கண்ணிமைகளை மெல்ல வருடிய சூரியக் கதிர் வீச்சை சுருக்கிய நெற்றியுடன் உணர்ந்தபடி லேசாக அசைந்தாள் தாட்சாயிணி. கையை நீட்டி சோம்பல் முறிக்கிறேன் என்கிற பெயரில் அருகே படுத்திருந்த ஜமுனாவின் கன்னத்தில் ஒரு இடியை இறக்கி விட்டு.. கொட்டாவியுடன் அவள் கண் விழிக்கையில்.... “குட்மார்னிங் பப்பிஇஇஇஇ” என்றபடிக் கையில் காஃபியும், முகத்தில் சிரிப்புமாய் அவள் முன்பு நின்றிருந்தான் வெற்றி.
அவன் புன்னகையை நொடியில் தனதாக்கிக் கொண்டவள் உதட்டை நெளித்துச் சிரித்துக் கொண்டேத் திரும்பிக் குப்புறப் படுத்துக் கொள்ள... தாஷி இடித்தும் கூட அசையாமல் கண் மூடிக் கிடந்த ஜமுனாவை நோக்கினான் வெற்றி. அவன் கட்டிய தாலியைப் பத்திரமாக மார்புக் கூட்டுக்குள் பதுக்கிக் கொண்டு அழகாய் சயனித்திருந்தவளை சிரிப்பும்,காதலுமாய் பார்த்து வைத்தான்.
“பொன் மானே... என் யோகம் தான்!
பெண் தானோ! சந்தேகம் தான்...!! என் தேவி.....
நான் தேடும் செவ்வந்திப் பூவிது................” - சரியாக என்ட்ரி கொடுத்தார் ராஜா! ராஜா சார் வாழ்க! என்று முணுமுணுத்து விட்டு... கைகளிரெண்டையும் மேலே நீட்டியபடி குப்புறக் கிடந்த நிலையில் மீண்டும் தூக்கத்தைத் தொடரவிருந்த தாஷியை நோக்கி.. “இந்தப் பப்பியை எப்டி எழுப்பனும்ன்னு எனக்குத் தெரியும் டா” எனக் கூறி “ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏ” எனக் கத்தியபடியே குழந்தையின் மீது தடாலடியாகப் பாய்ந்தான்.
“ஆஆஆஆஆ” – எனக் கத்திய தாஷியை விடாது கிச்சு,கிச்சு மூட்டி.. முகம் முழுக்க முத்தமிட்டு.. தன் மீசைக் குத்தியதில் கத்தியவளை மீண்டும் கிச்சு,கிச்சு மூட்டி கிளுக்கிச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான் வெற்றி. வரிசைப்பற்களும், குழி விழும் கன்னமுமாக வயிறு வலிக்கச் சிரிப்பவளைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.
இருவரும் கத்தியதில் அடித்துப் பிடித்து எழுந்த ஜமுனா.. படுக்கையில்.. தனக்கு வெகு அருகே தாஷியைக் கொஞ்சியபடித் தன்னை இடித்துக் கொண்டுப் படுத்திருந்தவனைக் கண்டுத் திடுக்கிட்டு பதறி விலகினாள்.
இது தினம் காலை நடப்பது தான்! வெற்றி ஒரு முரட்டு ஆசாமி என்பதை அவள் அறிவாள்! ஆனால்.. குழந்தையைக் கொஞ்சும் போது கூட முரட்டுத்தனமாய் தான் நடந்து கொள்வான் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டாள்! தாஷி கத்திக் கூப்பாடு போட்டு... பாதி நேரம்.. கண்ணீர் விட்டு அழும் வரை முத்தமிட்டு வம்பு செய்வான்.
ஆனால்.. இதற்கு முன்பு எப்போதும் அவளருகே படுத்திருக்கும் ஜமுனாவை.. ஒன்று, அடித்து எழுப்பி படுக்கையிலிருந்து விலக்கி விட்டுப் பின் குழந்தையின் அருகே படுத்துக் கொண்டு வம்பு செய்வான், அல்லது.. ஜமுனா பிடிவாதமாகக் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தால்.. பாரபட்சம் பாராமல் உருட்டிக் கீழே தள்ளி விட்டுப் பின் பிள்ளையைக் கொஞ்சுவான். இன்று இரண்டுமின்றி வெகு உரிமையாக அவளருகே... அவளை உரசியபடிப் படுத்துக் கொண்டிருந்தவனை.. எழுந்து நின்றுக் கோபமும்,எரிச்சலுமாய் நோக்கினாள்.
அதற்குள் குழந்தையைத் தன் நெஞ்சின் மீது கிடத்தியிருந்தவன்.. தன் கழுத்தைக் கட்டிக் கொண்டுப் படுத்திருந்தவளின் தலையைக் கோதியபடி.. தன்னை முறைத்துக் கொண்டு நின்ற ஜமுனாவை மெல்லிய சிரிப்புடன் நோக்கிப் பின்... உதட்டைக் குவித்து ஒரு முத்தத்தைக் கொடுத்து விட்டு லேசாகக் கண்ணடித்தான்.
பல்லைக் கடித்துக் கொண்டு அவனை முறைத்தவள் எரிச்சலுடன் “ச்ச” என்று விட்டு விடுவிடுவென அறையை விட்டு வெளியேறினாள்.
“பாப்பா எழுந்திருங்க, எழுந்திருங்க” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டுத் தானும் எழுந்தவன் கட்டிலை விட்டு இறங்கி அவளைத் தரையில் நிற்க வைத்துத் தலை முடியை சரி செய்தபடி “இன்னிக்கு நம்ம 3 பேருக்கும் லீவ் தான?, போய் உங்கம்மாக் கிட்ட கோவிலுக்குப் போகலாமான்னு கேளு” என்றான்.
கண்கள் பளிச்சிட “வெளிய போறோமா?” என்று மகிழ்ச்சியுற்ற தாஷியும் ஓடிச் சென்று “ஜம்மு, இன்னிக்குக் கோவிலுக்குப் போலாமா?” என்று வினவ.. அவளை திருப்தியுடன் நோக்கினான் வெற்றி.
ஒரு முறை கூட ஜமுனாவை ‘அம்மா’ என்று தாஷியிடம் குறிப்பிட்டதில்லை அவன். ஆனால் அக்கம்,பக்கத்தாரிலிருந்துத் தொடங்கி அவள் படிக்கும் பள்ளி வரை அனைவரும் ஜமுனாவை ‘அம்மா’ என்றே தாஷியிடம் குறிப்பிடப் பழகியிருந்ததால்.. அவன் கூறியதும் இயல்பாகவே ஓடியது குழந்தை. இனி அவளாகவே தங்கள் இருவரையும் ‘அம்மா,அப்பா’ என்றழைத்தாலும் சரி!, தொடர்ந்து பெயர் சொல்லியே அழைத்தாலும் சரி! இவர்களிருவர் தான் தனது அம்மா,அப்பா என்பது அவள் மனதில் பதிந்ததே போதுமானது.
தூக்கியக் கட்டியக் கொண்டையுடன் சமையலறை வாசலில் நின்று இன்றைய மெனு என்கிற தலைப்பில் சிலேட்டில் எழுதியிருந்தவற்றைக் கண்டு..
“ப்ரேக் ஃபாஸ்ட் ரவா கிச்சடியா?, கிச்சடியெல்லாம் எவன் திங்குறது?” – புலம்பியபடி உள்ளே நுழைந்தாள் ஜமுனா.
பொறுமையாகப் பூண்டு உரித்தபடி நின்று கொண்டிருந்தான் வெற்றி.
“ஏன் டா நீயெல்லாம் பெரிய செஃப்-ஆ இருந்து என்ன பிரயோஜனம்?, ஒரு பூண்டு உரிக்கத் தெரியல உனக்கு?” – திடீரென நக்கலுடன் அவள் குரல் அருகில் ஒலிக்கவும்.. முழுச் சிரிப்புடன் அவளை நோக்கியவன்..
“குட்மார்னிங்டி பொண்டாட்டி” என்றான்.
“பல்லைத் தட்டிடுவேன் டா!” – என்று கத்தி விட்டு “மூஞ்சியைப் பாரு, நல்லா இளிச்சவாயாட்டம் எந்நேரமும் ஈஈஈஈஈ-ன்னு! நேத்து நைட் பீச்சாங் கையால உன் மூக்குலயே ஒன்னு வுட்டேனே! நீயெல்லாம் இன்னுமா திருந்தல?”
“உன் கிட்ட அடி வாங்குறது எனக்குப் புதுசா டார்லிங்?”
“அட மானங்கெட்டவனே”
“புருஷனை ஆசையாக் கூப்பிடாட்டியும் பரவாயில்ல, கொஞ்சமாவது மரியாதையோட கூப்பிடு டி”
“உனக்கு இது போதும்”
“ப்ச், இன்னாடி பேஜார் பண்றதுக்குன்னே கிச்சனுக்கு வந்திருக்கிறியா?”
“இல்ல, நீ பூண்டு உரிக்கிற அழகைப் பார்த்து சொக்கி நிக்கலாம்ன்னு வந்தேன்..”
“ஏய்ய்ய் இன்னாடி?”
“உன்னைச் சொல்லிப் பிரயோஜனமில்ல! உனக்குத் தான் படிப்பறிவு,பட்டறிவுன்னு ஒன்னுமே கிடையாதே”
“உன் வாயை உடைச்சாத் தான் டி நீயெல்லாம் திருந்துவ” – குழம்பு குண்டாவுடன் அவள் மண்டையைப் பிளக்க அவன் எத்தனிக்கையில் அவனைத் தடுத்தவள்.. அவனிடமிருந்தப் பூண்டை வாங்கி.. ஒரு டப்பாவில் கொட்டிப் பின் அந்த டப்பாவை மூடி போட்டு அவன் கையில் திணித்தாள்.
“4.5 தடவை இதைக் குலுக்குனேனா... தோலெல்லாம் தானா உரிஞ்சுடப் போகுது.. இதுக்குப் போய் நேரம் செலவழிச்சுக்கினு வேர்த்து,வழிய நிப்பியா?”
“அடேங்கப்பா! நிஜமாவா டி?”
“பின்ன?, ட்ரை பண்ணிப் பாரு”
E=mc2 எனக் கண்டுபிடித்த ஐன்ஸ்டீன் கூட இத்தனைக் கர்வமாய் இருந்திருக்க மாட்டார். ஒரு மொக்கை மேட்டரை சொல்லி விட்டு கையைக் கட்டிக் கொண்டு மிதப்பாய் போஸ் கொடுத்த ஜமுனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் கூறியதைச் செய்தான்.
டப்பாவை இரு கையாலும் பற்றிக் கொண்டு... டப்பாவோடு சேர்ந்துத் தானும் குதித்தபடி ப்ரேக் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தவனைக் கண்டுத் தலையில் அடித்தாள் ஜமுனா. பாடி இத்தாம் பெருசா இருந்தாலும்... இண்டு,இடுக்கு முதற்கொண்டு டாப் டூ பாட்டம் சிறுபிள்ளைத்தனம்-ன்றதுத் தாண்டவமாடுது!
அவன் இரு கைகளையும் நீட்டி ‘வேவ்’ மூவ்மெண்ட் போடத் துவங்குகையில் “ஹேஏஏஏஏ டான்ஸ் டான்ஸ்” என்றபடி தாஷியும் சேர்ந்து கொள்ள.. ஒரு வழியாக இருவரும் ஆடி முடித்து.. டப்பாவைத் திறந்து பார்க்கையில் ஒரு பூண்டு கூடத் தோல் உரிந்திருக்கவில்லை.
“இன்னாடி இது! பெரிய பருப்பாட்டம் பேசுன?”
முறைத்தவனைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் டப்பாவை மூடியவள்.. “நீ குடுத்த மூவ்மெண்ட்ஸ் அப்டி” என்று விட்டு.. இப்போது டப்பாவைக் குலுக்கியபடித் தானும் ஆடத் தொடங்கினாள்.
இப்போது தாஷி, ஜமுனாவோடு சேர்ந்து கொள்ள.. “இதெல்லாம் டான்ஸ்-ஆ?, காலுக்கடில கங்கு கிடக்குற மாதிரி இப்டி,இப்டின்னு குதிச்சினு இருக்குறா” என்று நொடித்துக் கொண்டான் வெற்றி.
“ஸ்டாப், ஸ்டாப்! லெட்ஸ் ஓபன் த பாக்ஸ்” என்று தாஷி நிறுத்தியதும் நின்றவள் ‘இப்போ பார்’ என்று விட்டு டப்பாவைத் திறக்க.. ‘எரும மாட்டின் மீது மழை பெய்தது’ போல அதே கன்டிஷனுடன் பல்லிளித்தது பூண்டு.
உதட்டை வளைத்துக் கொண்டு “இன்னாடி சயிண்டிஸ்டு! பெரிய எல்லாம் தெரிஞ்சவ மாதிரி டயலாக் அடிச்ச?, காய்ஞ்சு போன பூண்டை சின்னப்புள்ள கூடச் சேர்ந்து டான்ஸ் ஆடின்னு உரிக்கப் பார்க்குறியே! கொஞ்சமாவது அறிவு இருக்கா?” – திட்டத் தொடங்கியவனிடம் இடை புகுந்து..
“காஞ்சு போன பூண்டுன்னு முன்னாடியே சொல்லித் தொலைய வேண்டியது தானடா?” – என்றவளைக் கண்டுப் பல்லைக் கடித்தவன்..
“நானும் அப்பால இருந்து பார்த்துனே இருக்குறேன், மரியாதையே இல்லாம பேசுற நீ” – என்று அவள் கையைப் பற்றி முறுக்கத் துவங்க.. மேலும் இங்கே நின்றால்.. இருவரில் யாராவது ஒருவரிடமிருந்துக் குட்டு கிடைக்கும் என்று பயந்த தாஷி ஓடியே விட்டாள்.
“கைய வுட்றா... வுட்றா.... டேய்ய்ய்! உனக்கு ஹெல்ப் பண்ணத் தான வந்தேன்?” – துள்ளிக் குதித்துக் கொண்டுக் கண்களை இறுக மூடியபடிக் கெஞ்சியவளைக் கண்டவனின் பார்வை... அவளைப் பார்க்கப் பார்க்க மாறிப் போனது.
சட்டென அவளைத் தன் புறம் திருப்பி... அவள் கழுத்தில் முகத்தை அழுந்தப் புதைத்து... நீளமான மூச்சொன்றை உள்ளிழுத்தான் அவன்.
அவன் தன் கைகளை இறுகப் பிடித்ததில் சிவந்த நாடி, அவன் செய்கையின் குறுகுறுப்பில் சிவந்த கழுத்து... இவையிரண்டையும் தவிர உடலின் அத்தனை பாகங்களிலும் ரத்த ஓட்டம் தடைபட்டுப் போனது போல் முழுதாய் வெளுத்துப் போய் நின்றாள் ஜமுனா.
கன்றிச் சிவந்த முகம் கண்ணுக்கு முன்னே தெரிந்தவற்றை மங்கச் செய்ய.. சட்டென அவனிடமிருந்து விலகி அடுக்களை செல்ஃபில் தலையை இடித்துக் கொண்டு நின்றாள்.
அவள் விலகியதும் சுயநினைவு பெற்றவனுக்கும், பார்வை மங்கலாகியிருக்க வேண்டும். அடுப்பைப் பற்ற வைக்க வேண்டி ஸ்டவ்வை ஆன் செய்தவன், கண் முன்னேயிருந்த லைட்டரை வெகு நேரமாய்.. நடுங்கிய கரங்களுடன் தேடிக் கொண்டிருந்தான்..
தன்னாலேயே படபடத்து வியர்த்து வழியத் துவங்க.. அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் அவனைக் கலக்கமாய் நோக்கினாள் அவள்.
ஒரு வழியாக அடுப்பைப் பற்ற வைத்துப் பாத்திரத்தை அதன் மீது வைத்தவன், அவள் புறம் திரும்பிய போது.. வெகுவாகத் தன்னை சமன் செய்திருந்தான்.
“இன்னாடி ரியாக்ஷன் இது?, ரொம்பத் தான் நடுங்குற?, இதுக்கு முன்னாடி எவனையும் கட்டிப் பிடிச்சதில்லையா?”
மூக்கு விடைக்க அவனை முறைத்துப் பார்த்தவள்.. “ஆனா.. நீ இதுலல்லாம் பெரிய கில்லாடி போல! ரொம்ப இயல்பாத் தொட்ற?” என்றாள் நடுங்கும் குரலை அடக்க முயன்றபடி.
“கில்லாடியா இருந்தா.. நான் ஏன் இத்தினி வருஷமா நீ பக்கத்துல இருந்தும்.. பிரம்மச்சாரியா வாழ்க்கைய கழிச்சினு இருக்குறேன்” – எனக் கூறியபடியே மீண்டும் அவளை நெருங்கியிருந்தான் அவன்.
“இ....இன்னாத்துக்கு டா ப..பக்கத்துல வர்ற கம்னாட்டி?, மூ..மூஞ்சில இன்னாடா அது லுக்கு?, வெள்ளைக்கார பக்தைங்கக் கிட்ட ஜொள்ளு வுட்ற சாமியாராட்டம்? ஏ...ஏ..ஏய்ய்ய் கை,கையை வுட்றா” – பதறிக் கொண்டுத் தன் கையை உறுவிக் கொள்ள முயற்சித்தவளின் மீது.. பார்வை எடுக்காமல்.. அவள் உள்ளங்கையைத் தன் கன்னத்தில் அழுத்தி... அதில் அழுந்தத் தன் இதழ்களைப் பதித்தவன்.. மீண்டும் குனிந்து.. அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
‘பறிக்கச் சொல்லித் தூண்டுதே... பவளமல்லித் தோட்டம்....
நெருங்க விடவில்லையே.... நெஞ்சுக்குள்ளக் கூச்சம்.....’
-இந்த நேரத்தில் கூட இடைபுகுந்த ராஜா சார்-ஐக் கண்டுப் புன்னகை பூத்து “சூடேத்துறீங்களே ராஜா சார்” என்று அவன் முணுமுணுக்கையில் அவன் தோளைப் பற்றித் தள்ளி.. விலகி ஓடியிருந்தாள் அவள்.
முன்னே தாஷியையும்,பின்னே ஜமுனாவையும் சுமந்த படி, வெற்றியின் கைகளில் சீரான வேகத்தில்.. கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அந்த பல்சர்.
கம்பியைப் பற்றியபடி உர்ரென்ற முகத்துடன் அமர்ந்திருந்தவளை ரியர் வியூ மிர்ரரில் நோக்கியவன் நமுட்டுச் சிரிப்புடன்.. கண்ணாடியைச் சரி செய்ய.. அவன் தன்னைக் கண்டு தான் சிரிக்கிறான் என்பதைக் கண்டு கொண்ட ஜமுனா.. பல்லைக் கடித்தபடி முறைத்தாள்.
சாலையில் ஒரு பார்வையும், மிர்ரரில் ஒரு பார்வையுமாய் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவன், அவள் முகத்தைக் கண்டு லேசாய்க் கண்ணடிக்க.. தெருவென்றும் பாராமல்.. அவன் தலைமுடியைக் கொத்தாகப் பற்றி ஆட்டு,ஆட்டென்று ஆட்டத் துவங்கினாள் “கசுமாலம், என்னாண்டயே உன் லீலையைக் காட்டுறியா?” என்றபடி.
அவன் தலையோடு சேர்ந்து வண்டியும் ஆட “ஆஆஆஆ” என தாஷியும் “ஏ....ஏ....ஏஏஏஏ” என வெற்றியும் கத்தத் துவங்க.. தன் ஆட்டத்தை நிறுத்தியவள்.. “சும்மா.. பெரிய காதல் மன்னனனாட்டம் சில்றத்தனமா வேலை பார்க்குறதை இத்தோட வுட்ரு. நான் காண்டானேன்னு வை, ஃப்யூச்சர்ல நீ எவளையும் நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு பெருத்த சம்பவமாப் பண்ணி வைச்சுருவேன்! உஷாரா இருந்துக்க” என்று அடிக்குரலில் சீற...
“ஏய்ய்ய், சரி தான் போடி” என்றவனும் அதன் பின்பு முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டான்.
“இப்போ என்னாத்துக்குக் கோவிலுக்குப் போறோம்?” – ஜமுனா
“காரணமாத் தான்”
“என்ன காரணம்?”
“ஏன் டி உன் கழுத்துல தாலி கட்டி மூனு முடிச்சுப் போட்டிருக்கேன்! இனி என் வாழ்க்கை எந்த லட்சணத்துலப் போகப் போகுதோ! என் உசுருக்குக் கேரண்டி வேணும்ன்னு கேட்டு இந்த மனுஷன் கிட்ட சண்டை போட வந்திருக்கேன்” – என்று கூறியபடியே அந்த சிவன் கோவிலின் முன்பு வண்டியை நிறுத்தினான் அவன்.
கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு மூவரும் வீட்டுக்கு வந்ததும், உள்ளே சென்றவளை நிறுத்தியவன் “நீ இந்தப் பிரசாதத்தை எடுத்துனு போய் அந்த வடுகநாதன் சம்சாரத்துக்கிட்ட குடுத்துட்டு வா!” என்றான்.
“எதுக்கு டா?”
“ஏய்ய் சொல்றதைச் செய் டி” – அவன் கோபமாய் அதட்டியதும் முணுமுணுத்தபடியே நகரப் பார்த்தவளை மீண்டும் தடுத்தவன்.. அவள் கையிலிருந்தக் குங்குமத்தை எடுத்து அவளது வகிட்டில் இட்டு.. “இப்போ போ” என்றான்.
பொன் மஞ்சள் கயிறும், நெற்றி நிறையக் குங்குமமாக தன் வீட்டுக்குள் நுழைந்தவளை திரு.வடுகநாதனின் சம்சாரம் பூங்குழலி வாய் நிறையப் பல்லாக வரவேற்க, அவர் பார்வை சென்ற இடத்தைக் கண்ட போது ஜமுனாவிற்குப் புரிந்து போனது அவன் ஏன் தன்னை இங்கே அனுப்பி வைத்தான் என்பது!
அவர்களிருவரைப் பற்றி அக்கம்,பக்கத்தார் அரசல்,புரசலாகப் பேசும் புறணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய அவன் முயற்சியை மெச்சியபடி... ‘இந்த வாரம் வெள்ளிக் கிழமை சுமங்கலிப் பூஜை இருக்கு. ஈவ்னிங் மறக்காம வந்துடு” என்ற பூங்குழலியிடம் ஈ-யென இளித்து வைத்து வீடு வந்து சேர்ந்தாள். இந்த லௌட் ஸ்பீக்கர் அவள் கழுத்தில் தொங்கும் தாலியைப் பற்றி இனித் தெரு முழுக்க செய்தி பரப்பி விடும்!
அன்றிரவு தாஷியை உறங்க வைத்து விட்டு அவளும் கண்ணயரும் நேரம்... “பாப்பா.. தூங்கிட்டாளா?” என்று கேட்டபடி அறைக்குள் நுழைந்தான் வெற்றி.
இருட்டுக்குள் தெரிந்த அவனது வரி வடிவத்தைக் கண்டு அவள் என்ன,ஏதேன்று எழும் முன்னரே.. அவள் தோளைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்து அவளைத் தடுத்தவன்... கட்டில் மீதேறி அவளுக்கும்,தாஷிக்கும் இடையே வாகாகப் படுத்துக் கொண்டான்.
அவன் செய்கையில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவளிடம் “இனி நானும் உங்களோட தான் தூங்குவேன்” எனக் கூறி விட்டுத் திரும்பித் தன் மகள் மீது ஒரு கையை போட்டுக் கொண்டான்.
“இன்னாடா நினைச்சுட்டிருக்க நீ? ரொம்ப ஓவர்-ஆ பண்ணிட்டிருக்க?” – அடக்கப்பட்டக் கோபத்துடன் அடிக்குரலில் சீறினாள் அவள்.
“எதுவுமே பண்ணல, அதுக்குள்ள ஓவர்-ன்ற?”
“இங்க பாரு, இந்த டபுள்-மீனிங்ல பேசுற வேலையெல்லாம் என்னாண்ட வைச்சுக்காத சொல்ட்டேன்”
“சரி, சிங்கிள் மீனிங்லயே பேசுறேன்! சாத்தினு படுடி! குழந்தையப் பக்கத்துல வைச்சுக்கினு உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன்”
-அசால்ட்டாய் அவன் கூறியதும் கோபமுற்றவள் கட்டிலிலிருந்து எழப் பார்க்க.. சுலபமாய் ஒரு கையில் அவள் தோளைப் பற்றி அவளைப் படுக்கையில் சாய்த்தவன்...
“இதுக்கு மேல நான் எதுவும் பண்றதும்,பண்ணாம இருக்கிறதும் உன் கைல தான் இருக்குது. ரொம்ப ஆசைப்பட்டேனா, இன்னொரு தடவை எந்திரிச்சுப் பாரு” – என மிரட்டியதும்.. பல்லைக் கடித்துக் கொண்டு அசையாமல் படுத்தவளைக் கண்டுச் சிரித்து... குழந்தையின் புறம் திரும்பிப் படுத்துக் கொண்டான் அவன்.
மறுநாள் காலை அவள் கண் விழிக்கையில் நல்ல வேளையாக.. அவன் அருகே இல்லை. எரிச்சலும், கோபமுமாய் அவள் வெளியே வருகையில்... “குட்மார்னிங் பப்பி” என்றபடித் தாஷியைத் தூக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டவன்... தன்னைக் கடந்து செல்லவிருந்த ஜமுனாவை நிறுத்தி அவள் கன்னத்திலும் தன் இதழைப் பதித்து “குட்மார்னிங் டி” என்றான்.
“ஹிஹிஹி” – இரண்டு கைகளையும் தன் வாயில் வைத்துக் கொண்டு கேலியாய்ச் சிரித்த தாஷியிடம் “இவளுக்கு முத்தம் குடுக்குறேன்னு நீ பொறாமைப் படாத பாப்பா.. எனக்கு நீ தான் ஃபர்ஸ்ட். அப்பறம் தான் அவ. சரியா?” என்று பேசியபடியே அவன் அடுக்களைக்குள் நுழைந்து விட.. இறுகிய முகத்துடன் எங்கோ வெறித்தபடி விறைத்துப் போய் நின்றாள் ஜமுனா.
அன்று மாலை பணியில் ஈடுபட்டிருந்த வெற்றிக்குத் தாஷியைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும்படிக் கேட்டு ஜமுனாவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
‘ஓகே’ என பதிலளித்தவன் ‘நீ எப்போ வருவ?’ எனக் கேட்டக் கேள்விக்கு அவள் பதில் அனுப்பவேயில்லை.
தாஷியை வீட்டில் விட்டு உடை மாற்றி, உண்ணக் கொடுத்து, ‘அம்மா கொஞ்ச நேரத்தில் வந்துடுவா’ எனக் கூறி விட்டு மறுபடி அவன் ஹோட்டலுக்குத் திரும்பி விட்டான்.
ஆனால் எட்டரை மணிக்குப் பக்கத்து வீட்டுப் புனிதாவின் செல்ஃபோனிலிருந்து அவனை அழைத்தத் தாஷி ஜம்மு இன்னும் வரவில்லையென அழுகைக் குரலில் கூற... பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தான்.
விடாது செல்ஃபோனில் அவளை அழைத்துப் பார்த்தும், முழு ரிங்-ம் சென்று கட்-ஆனதே ஒழிய, அவனது அழைப்பு ஏற்கப்படவில்லை.
அழுதே கரைந்தத் தாஷியை சமாதானப்படுத்தி உண்ண வைத்து.. அவளுக்குப் பிடித்த கார்ட்டூனைப் போட்டு விட்டுப் புனிதாவை துணைக்கு வைத்து விட்டு.. அவள் பள்ளியை நோக்கி விரைந்தான்.
நிமிடத்துக்கொரு முறை அவன் அழைத்துப் பார்த்தும் ஒரு முறை கூட அவள் அவனது அழைப்பை ஏற்கவில்லை.
அனைவரும் சென்று விட்டதாகக் கூறிய பள்ளி வாட்ச் மேனிடம் தகராறு செய்து.. பள்ளியின் உள்ளே சென்று.. அவள் பாடம் எடுக்கும் வகுப்பறை,லேப் எனத் தேடிக் களைத்தவன் மீண்டும்,மீண்டும் அவளது செல்ஃபோனிற்கு அழைப்பு விடுத்துக் கொண்டேயிருந்தான்.
நேரம் ஒன்பதரையைக் கடந்திருக்க.. அவள் பள்ளியிருக்கும் தெரு முழுதையும்.. திருவிழாவில் தொலைந்து போனக் குழந்தையைப் போல் திக்கற்று அங்குமிங்கும் தேடித் திரிந்து... சோர்கையில்... அவனது செல்ஃபோன் அழைப்பை ஏற்றாள் ஜமுனா.
அதுவரை ‘திடுக்.திடுக்’ எனப் பயத்தில் ஸ்வரம் தப்பித் துடித்துக் கொண்டிருந்த இதயம்.. ஒரு நொடி நின்று.. மீண்டும் அசுர வேகத்தில் தாளமிடத் தொடங்க.. நாயாய் அங்குமிங்கும் சுற்றித் திரிந்ததில் தொண்டை வறண்டு போய் இருமல் வந்தது அவனுக்கு.
லொக்,லொக் என்ற இருமல்களுக்கிடையில்.. வெளியே எகிறிக் குதித்து விடும் போல் துடித்துக் கொண்டிருந்த நெஞ்சை இறுகப் பற்றிக் கொண்டு மூச்சு வாங்க.. “ஜ...ஜமுனா.....” என்றான்.
“..............”
“எ...எ..எங்கடி இருக்க?, உனக்கு ஒன்னுமாகலயே?, நல்லா தான இருக்க?, ஹ...ஹலோ.. ஹலோ..... நா..நான் பேசுறது கேட்குதா?”
-பதட்டம் நிறைந்த குரலில் முழுப் பயத்துடன் கூறியவனைக் கேட்டு அவள் மீண்டும் அமைதியைக் கையிலெடுக்க.. ஃபோனைக் காதிலிருந்து எடுத்து டவர் இருக்கிறதா, சௌண்ட் சரியாக இருக்கிறதா என நிமிடத்தில் செக் செய்தவன்.. மீண்டும்...
“ஹ..ஹலோ...” என்றான்.
“ப்ச், எத்தினி தடவ ஹலோ,ஹலோன்னு கூவிட்டிருப்ப?, எனக்கு என்ன ஆகப் போகுது! நான் நல்லாத் தான் இருக்கேன்”
நக்கல் குரலில் அவள் கூறியதும்... தன் வண்டியை இறுகப் பற்றியபடி மண்டியிட்டு அமர்ந்தவன்.. கிஸ்ஸ்ஸ்,கிஸ்ஸ்ஸ் என வெளி வந்து கொண்டிருக்கும் மூச்சுடன்..
“எங்கடி போன?, ஏன் இவ்ளோ நேரம்?, உன் ஸ்கூல் முழுக்க உன்னைத் தேடிப் பார்த்துப் பைத்தியக்காரன் மாதிரி நடுத்தெருவுல நின்னுட்டிருக்கேன் நான்! பாப்பா வேற உன்னைத் தேடி அழுவுறா”
“பாப்பா அழறாளா?, அவளை வூட்ல வுட்டுட்டு நீ இங்க இன்னாடா பண்ணிட்டிருக்க?”
-எரிச்சலுடன் அவள் கேட்டக் கேள்வியில் தன்மானம் சுண்டியெழ.. படக்கென எழுந்து நின்றவன்..
“என்னைப் பார்த்தா கேனையனாட்டம் தெரியுதாடி உனக்கு?, நீ எங்க இருக்க-ன்னு தெரியாம, உனக்கு ஃபோன் பண்ணிப் பார்த்தும் பிரயோஜனம் இல்லாம.... தெரு நாய் மாதிரி ரோட்,ரோட்-ஆ நான் பைத்தியம் புடிச்சுப் போய் சுத்தினு இருப்பேனாம்.. இவ நோவாம ஃபோன் எடுத்துப் பாப்பாவை அழ வுட்டுட்டு நீ என்ன பண்றன்னு கேப்பாளாம்! அவ்ளோ அக்கறை இருக்குறவ எங்க போற-ன்னு புள்ளக்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கனும் டி! எங்கடி இருக்க? அதைச் சொல்லித் தொல முதல்ல” – என்று முழுக்குரலுடன் கத்தினான்.
“...................”
“பதில் பேசித் தொலடி ராங்கி! ஆஸ்பத்திரி,அது,இதுன்னு எங்கயாச்சும் இருக்கியா?. அடிகிடி பட்ருச்சா?, சொல்லித் தொலையேன் டி!”
“...................”
“எனக்கு... எனக்கு ரொம்பப் பயமா இருக்கு ஜமுனா.. ப்ளீஸ்...”
“நான் இப்போ வீட்டுக்கு வரனும்ன்னு நீ ஆசைப்பட்றியா வெற்றி?”
“ம்ம்ம்???”
“நான் இப்போ சொல்லப் போற விசயத்துக்கு நீ ஒத்துக்கிட்டேன்னா.. நான் வீட்டுக்கு வர்றேன். இல்லேன்னா.. இப்டியே எங்கயாவது தொலைஞ்சிட்றேன். நான் செத்துட்டதா என் புள்ளக்கிட்ட சொல்லிட்டு நீ மொத்தமா என்னைத் தலை முழுகிடு..”
“ஏன் டி இப்டிப் பேசுற?”
“பதில் சொல்லு வெற்றி”
“நீ என்ன சொன்னாலும் ஒத்துக்கிறேன். வீட்டுக்கு வா ப்ளீஸ்”
“பேச்சு மாற மாட்டியே”
“மாட்டேன். நான் என்ன பண்ணனும் சொல்லு...”
“.................”
“ஜமுனா........................”
“நம்ம வீட்டு டிரெஸ்சிங் டேபிள்-ல நீ கட்டுனத் தாலியைக் கழட்டி வைச்சிருக்கேன். நீ அதை எடுத்துட்டுப் போய்.. எங்க வாங்குனியோ, அங்கயே திருப்பிக் கொடுத்துடு”
“........................” – இத்தனை நேரமாய் மனதுக்குள் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த பய உணர்வு உண்டாக்கிய உள்ளக் கிளர்ச்சியேக் கொஞ்சமும் அடங்கியிராதிருக்க.. அவள் அடுத்தடுத்து இறக்கியப் பேரிடியோ, அவன் கண்ணில் சரசரவெனக் கண்ணீரை உற்பத்தி செய்தது.
அது கன்னத்தில் இறங்கி விடாதிருக்க முயன்றபடி உதட்டைக் கடித்து மூச்சை உள்ளிழுத்து... ஃபோனைக் காதில் வைத்தபடிப் பரிதவிப்புடன்.. வண்டியில் சாய்ந்தவன்..
ஏக்கம்,வருத்தம்,ஏமாற்றம் அத்தனையையும் தன் குரலில் தேக்கி “ஏன் டி?” என்றான்.
“என்ன ஏன்?, எல்லாஆஆஆமே உன் இஷ்டப்படி தான் நடக்கனுமா?, எனக்குன்னு விருப்பு,வெறுப்பு எதுவும் இருக்கக் கூடாதா?”
“நீ சம்மதிச்சதால தான நான் தாலி கட்டுனேன்?”
“தாலி கட்டுறதுக்கு என் சம்மதத்தை எதிர்பார்த்த மாதிரி, மத்த விசயத்துக்கும் ஏன் எதிர்பார்க்க மாட்டேங்குற?”
“அப்டி என்ன பண்ணிட்டேன் உன்னை? உன் சம்மதமில்லாம?”
“நீ என்னைத் தொட்றது எனக்குப் புடிக்கல வெற்றி” – பட்டெனக் கூறினாள் அவள்.
அதீத கோபத்தில் பல்லைக் கடித்தவனின் அனுமதியில்லாமலேக் கண்ணீர் அவனது கன்னத்தில் இறங்கியது.
“அப்பவும்,இப்பவும்.. நீ ஒருத்தி மட்டும் தான் டி ஏன் தான் நான் இந்த உலகத்துல உயிர் வாழ்றேனோன்னு ஃபீல் பண்ண வைக்கிற”
“.............” – அமைதியாய் இருந்தாள் அவள்.
வேகத்துடன் மூச்சை உள்ளிழுத்தவன் “உன்னைத் தொடாம என்னால இருக்க முடியாதுடி. என்னன்ற இப்போ?” – கோபமாய்க் கூறினான்.
“அப்போ நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்”
“ஜமுனா..........” – இயலாமையுடன் ஒலித்தது அவன் குரல்.
“இப்போ கூட ஏன் புடிக்கலன்னு உன் வாய்ல இருந்து ஒரு கேள்வி வருதா?, இல்ல, கேக்கனும்னாவது உனக்குத் தோணுதா?, உனக்கு எப்பவும் உன்னைப் பத்தி மட்டும் தான் டா நினைப்பு! நீ வேணும்ன்னு நினைக்கிறப்ப, எந்த மறுப்புமில்லாம எல்லாம் கிடைச்சிடனும். நீ வேணாம்ன்னு ஒதுக்கி வைச்சா.. அதுக்கும் மறுப்பு சொல்லாம நான் ஒதுங்கிக்கனும். அப்படித் தான?”
“.........................”
“இந்த 5 வருஷத்துல ஒரு தடவையாவது அந்தத் தாலிய என் முன்னாடி நீட்டிக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்ருக்கியா?, குழந்தைக்காக இது உன் கழுத்துல இருக்கனும்ன்னு சட்டமாப் பேசிட்டு, இப்போ எதுக்கு டா இப்டியெல்லாம் நடந்துக்கிற?”
“..............”
“5 வருசத்துக்கு முன்னாடி, நான் உன்னை மிஸ் பண்றேன்னு சொன்னப்போ... என் வாய்ல இருந்து ஏன் அந்த வார்த்தை வந்தது, உன் மேல எனக்கு இருக்கிற ஃபீலிங்க்ஸ்க்கு பேர் என்னன்னு நான் ஆராய்ச்சி பண்ணிப் பார்க்குறதுக்குள்ள.. அடுத்தடுத்து எல்லாக் கஷ்டமும் என் தலைல வந்து இறங்குச்சு.. அந்த சமயம்... அந்த சமயமும்.. நான் உன்னைத் தான் தேடுனேன்! நீ கூட இருந்தா.. தைரியமா இருக்கும்ன்னு லூசுத்தனமா ஒரு நினைப்பு இருந்துச்சு... அது ஏன்னு கூட அப்போ எனக்குத் தெரியல”
“.............”
“ஆனா.. நீ.. உன் விருப்பத்தை சொல்லிட்டு, உன் இஷ்டத்துக்கு நடந்துக்கிட்டு, என்னைப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம.. என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு கண்டுக்காம.. உன்னைப் பத்தி மட்டுமே யோசிச்சு.. தேவையில்லாத விசயங்களுக்காக.. முட்டாள்த்தனமா என்னைக் காயப்படுத்துன. என் மேல அடிப்படை நம்பிக்கைக் கூட இல்லாதவன் மேல, ஒரு முரடன் மேல, முன் கோபி மேல, யோசிக்கிற அறிவே இல்லாதவன் மேல.. என்ன ஃபீலிங்க்ஸ் வேண்டிக் கிடக்குன்னு என்னை நானே திட்டிக்கிட்டேன்.”
“...................”
“நீ அப்போ மட்டும் தான் யோசிக்காம நடந்துக்கிட்டன்னு நினைச்சேன், ஆனா.. இப்பவும் அப்டித் தான் இருக்க”
“..............”
“கோபப்பட்றதைக் குறைச்சுக்கிட்டுப் பொறுப்பும்,பொறுமையுமா முழுசா மாறிட்ட! ஆனா.. என் விசயத்துல மட்டும் எதுவும் மாறல”
“..................”
“ஐ லவ் யூ – ன்னு அன்னிக்கு நைட் ஒரு வார்த்தை சொன்னியே! திரும்ப.. நான் உன்னைக் காதலிக்கிறேனா இல்லையான்னு கேட்டியா?”
“................”
“எனக்குத் தெரியல. நான் உன்னைக் காதலிக்கிறேனா.. இல்லையான்னே எனக்குத் தெரியல. எனக்கு உன் மேல இருக்கிற உணர்வுகள் என்ன மாதிரியானதுன்னு யோசிக்க.. எனக்கு நீ சான்ஸே குடுக்கல! ஒவ்வொரு தடவையும் நான் யோசிக்கத் தொடங்குறதுக்கு முன்னாடியே... நீ அன்பு,காதல்,கோபம்ன்னு அத்தனையையும் படபடன்னு காட்டிட்டுப் போயிட்ற”
“....................”
“என் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்காம நீ உன் இஷ்டத்துக்குத் தான் இருப்ப-ன்னா.. என்னால உன் கூட ஒரே வீட்ல வாழ முடியாது டா.
– அவள் அடுத்தடுத்துக் கூறிய அனைத்தும் மூளையைச் சென்றடைந்தாலும், அவள் முதலில் கூறிய ‘தாலியைக் கழட்டி வைத்து விட்டேன்’ என்கிற வார்த்தை மட்டுமே மனதைக் குடைந்து கொண்டிருந்தது வெற்றிக்கு.
“நிஜமாவே தாலியைக் கழட்டிட்டியா டி?”
“................”
“என்னைக் கொஞ்சம் கூட உனக்குப் பிடிக்காதா?”
“எனக்குத் தெரியல வெற்றி, அதான் சொன்னேனே, என் விருப்பம் என்னன்னு யோசிக்க நீ சான்ஸே கொடுக்கலன்னு”
“சான்ஸ் கொடுக்கிறதுன்னா?, எப்படி?, நான் உன் கண்ல படாம ஒதுங்கியிருக்கனுமா?”
“..............”
“சரி, நீ வீட்டுக்குப் போ. நான் இனி அங்க வர மாட்டேன்” – என்றபடி ஃபோனை கட் செய்தவன்.. புனிதாவிற்கு அழைத்தான்.
தாஷி என்ன செய்கிறாள் என விசாரித்து விட்டு ஜமுனா இன்னும் சற்று நேரத்தில் அங்கே வந்து விடுவாளென்று கூறி.. அவள் வந்ததும் தனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புமாறும் கூறி விட்டு.. நின்றிருந்த இடத்திலேயே.. தலையைப் பிடித்துக் கொண்டு வண்டியில் சாய்ந்தமர்ந்தான்.
அவன் இணைப்பைத் துண்டித்ததும் தன் கைப்பேசியையே வெறித்த ஜமுனாவிற்கு.. அவனிடம் கெத்து குறையாமல் பேசியிருந்தாலும், கோபமும்,அழுகையும் கரை புரண்டோடியது.
அதன் பின் சற்றும் தாமதிக்காமல் வீடு வந்து சேர்ந்தவள், அதுவரை தாஷிக்குத் துணையிருந்தப் புனிதாவிற்கு நன்றி கூறி விட்டு.. தன்னைக் கண்டதும் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தத் தாஷியை சமாதானப்படுத்தித் தூங்க வைத்தாள்.
அவன் வீடு திரும்பவில்லை. எப்படி வருவான்! அவள் அத்தனைப் பேச்சு பேசி வைத்த பிறகு! ஏனென்றே புரியாமல் அழுகை வந்தது! அவனிடம் என்ன எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம் என்றே தெரியவில்லை! தேவையில்லை என ஒதுக்கி விட்டு அவன் இல்லாமல் வாழ முடியுமென்றும் தோன்றவில்லை. அன்னையை எண்ணி அழுதாள். பின் தன்னைக் கண்டதும் கட்டிக் கொண்டத் தாஷியை நினைத்து அழுதாள். என்னென்னவோ சிந்தனையுடன் சோகமே உருவாக அவள் அந்த இரவைக் கடந்து கொண்டிருந்த சமயம்.. நள்ளிரவில் படபடவெனக் கதவு தட்டப் படும் ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.
மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்ததால் வீடு முழுக்க இருள் சூழ்ந்திருந்தது. செல்ஃபோன் டார்ச்-ஐ ஒளிர விட்டு.. அவள் கதவைத் திறந்த போது.. வாசலில் கொட்டும் மழையில் தொப்பலாக நனைந்த படி.. சிவந்த விழிகளுடன் நின்றிருந்தான் வெற்றி.
“வெற்றி..........................” – அவனைக் கண்ட ஆச்சரியம், அதைத் தொடர்ந்த மகிழ்ச்சி! ஹப்பாடா வந்து விட்டான் என்ற நிம்மதி! இத்தனை நேரமாய்க் காக்க வைத்து விட்டானே என்றக் கோபம் எனத் தன் மனதின் உணர்ச்சிகள் அத்தனையையும் குரலில் தேக்கி அழைத்தவளை இயலாமையுடன் நோக்கினான் அவன்.
தலையைக் கோதியபடி ஒரு நொடி மறுபுறம் நோக்கியவன் பின் மீண்டும் அவள் முகத்தில் பார்வையைப் பதித்து “இ..இதுக்குப் பேரு என்னடி?, ம்?? இப்போ உன் முகத்துல வர்ற உணர்ச்சிக்கு என்ன பேரு?”
“..............”
“பிடித்தம் தான?, காதல் தான?”
“...............”
“நான் அப்படித் தான் டி நினைச்சேன். 5 வருஷமா உன் கூட வாழ்றேன். உன் கண்ணுல தெரியுற உணர்ச்சியைப் படிக்கத் தெரியாதா எனக்கு? அந்த அளவுக்கு முட்டாளாவா இருப்பேன்?, உனக்கு என்னைப் புடிக்கும்ன்னு தெரிஞ்சு தான் தைரியமா உன் கிட்ட தாலியை நீட்டுனேன்”
“................”
“என் மேல இருக்கிற ஃபீலிங்க்ஸ்க்கு என்ன பேருன்னு தெரியலன்னு மனசாட்சி இல்லாம சொல்ற?”
“...............”
அவள் அமைதியைப் பொருட்படுத்தாமல்.. அவனை வெகுநேரமாய்த் துடிக்க வைத்துக் கூறு போட்டுக் கொண்டிருக்கும் விசயத்தை நேராகவே கேட்டான் அவன்.
“தாலி எங்கடி?”
“..........”
“நி....நிஜமாவே கழட்டிட்டியா?”
“...........” – பதிலற்று நின்றவளின் கழுத்தைப் பார்க்கக் கூடப் பயமாக இருந்தது. ஒரு வேளை.. நிஜமாகவே கழட்டியிருந்தாலாயின்.. அதைத் தாங்குமளவிற்கு சக்தியோ.. ஏற்குமளவிற்கு முதிர்ச்சியோத் தனக்கு இல்லையென்றே நினைத்தான் அவன்.
“வாழ்க்கைல எனக்கு எதுவுமே கிடைச்சதில்லடி. நல்ல அம்மா,நல்ல அப்பா, நல்ல படிப்பு, சந்தோசம்,சிரிப்பு எதுவும்...! பெத்துப் போட்டதுமே போய்ச் சேர்ந்துட்டா என்னைப் பெத்தவ! அதுக்கு நான் எப்படி காரணமாக முடியும்? ஆனாலும்.. என் மேல தான் பழி சொன்னாங்க! எங்கப்பன் பண்ணிட்டிருந்தத் தொழில் நான் பொறந்ததால தான் தொங்கிடுச்சுன்னாங்க! ராசியில்லாதவன்னு ஒதுக்கி வைச்சாங்க! ஏன்.. எங்கப்பனே அப்டித் தான் நினைச்சான்! ஒரு நாள் கூட.. மகனேன்னு அந்தாளு தூக்கிக் கொஞ்சுனதில்ல! ஏன், என் பக்கத்துல நின்னு முகம் பார்த்துப் பேசினது கூட கிடையாது! தொழிலே கதின்னு தான் கிடப்பான்! அப்பத்தான்னு ஒரு கெழவி என்னைய சொந்த மகன் மாதிரி வளர்த்துச்சு! அதுவும் பாதிலயே போய்ச் சேர்ந்துடுச்சு.. அதுக்கப்புறம் வாழ்க்கைல எனக்குப் பிடிப்புன்றதே கிடையாது”
“...................”
“எங்கப்பன் மேல இருக்கிறக் கோபத்தை எப்டிக் காட்ட-ன்னு தெரியல! ஸ்கூலுக்குப் போகாம அவாய்ட் பண்ணேன், அவன் காசுல சோறு திங்காம நானே வேலைக்குப் போனேன்.. நிறைய நாள்.. தெருவுல யார் வீட்லயாச்சும் சோறு போடுவாங்க.. வாங்கி சாப்பிட்ருக்கேன்! பிச்சை எடுத்துத் திங்குற மாதிரி தான் இருந்துச்சு, ஆனாலும்.. எங்கப்பன் காசு மட்டும் வேணாம்ன்னு ரோஷமா இருந்தேன்.. ரொம்பக் கேவலமானது டி என்னோட வாழ்க்கை”
“..................”
“என்னை ஒதுக்கி வைச்ச எல்லார்க்கிட்டயும் வாண்டட்-ஆ போய் போய்ப் பேசுவேன்.. கேலி செய்றாங்களேன்னு ஒதுங்கி நின்னா.. என்னைச் சுத்தி யாருமில்லாம.. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்தது! அந்தத் தனிமைக்கு இது எவ்வளவோ பெட்டர்ன்னு தோணுச்சு! அதான் யார் எவ்ளோ கேலி பேசுனாலும்.. பெருசா கண்டுக்கிட்டதில்ல! உண்மையான சந்தோஷம்ன்னு ஒன்னு.. உன்னைப் பார்த்தப்புறம்.. உன் கூடப் பழகனப்புறம் தான் கிடைச்சது.. எனக்கு நீ வேணும்ன்னு மனசு நினைச்சது”
“...........”
“உனக்குத் தெரியாது.. அம்மா இல்லாம வளர்ந்ததாலோ என்னவோ.. பார்க்குற,பழகுற பொண்ணுங்க எல்லார்க்கிட்டயும் தாய்மை உணர்வை மட்டுமே மனசு எதிர்பார்க்கும்! உன்னைக் கட்டிப்பிடிக்கனும்ன்னு ஆசைப்பட்டதுக்கு முன்னாடி, உன் மடில படுத்துக்கனும்ன்னு தான் உன்னை பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்! இந்த 5 வருஷமும் நீ தாஷியை அணைச்சிட்டுப் படுக்கும் போது கூட.. அதே ஃபீலிங் தான்! அந்த நினைப்புல தான்.. நேத்து உன் பக்கத்துல வந்துப் படுத்தேன்......”
“................”
“பாப்பா... பாப்பா வந்தப்புறம் என் லைஃப் எவ்ளோ அழகானதா மாறிடுச்சுத் தெரியுமா?, அம்மாவோட அன்பு கிடைக்காட்டி என்ன, எல்லாத்துக்கும் சேர்த்து தான் என் மகளோட அன்பு கிடைக்குதேன்னு எத்தனை நாள் பெருமை பட்டிருக்கேன்னு தெரியுமா?, நாம அவளை வளர்க்கிறோம்ன்னு சொல்ற ஸ்டேட்மெண்ட் எல்லாம் ரொம்பத் தப்பு! அவ தான் நம்மள வளர்க்குறா! நாம தான் அவளோட சேர்ந்து வளர்றோம்! ஒவ்வொரு நாளும் எத்தனை விசயங்களைக் கத்துக் கொடுக்கிறா! எவ்ளோ சந்தோசத்தைக் கொடுக்கிறா... என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்ததே நீங்க ரெண்டு பேர் தான்னு நான் நினைக்காத நாளே இல்ல...”
“.............”
“5 வருசத்துல எவ்ளவோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்கோம்! ஆனா.. அது எதுவும் எனக்குக் கஷ்டமாவே தெரியல. ஏன்னா.. நீங்க ரெண்டு பேரும் என் கூட இருந்தீங்க. இதுக்கு முன்னாடி நான் கடந்து வந்த வாழ்க்கைய அர்த்தமில்லாததா மாத்துனீங்க!”
“...................”
“எல்லாமே மாறிடுச்சு! என் லைஃப்ல இனி சந்தோஷம் மட்டும் தான்னு நான் கர்வப்பட்ட சமயமாப் பார்த்து.. இது எல்லாத்துல இருந்தும் என்னை விலகிப் போன்னு சொன்னா.. எப்டி டி?, என்னைச் செத்து போகச் சொல்றதுக்குச் சமமாகாதா அது?”
“..................”
“நான் தொட்டா புடிக்கலன்னு மனசாட்சி இல்லாம சொல்ற?, இந்த 5 வருசத்துல அப்டி எத்தனை தடவைடி நான் உன்னைத் தொட ட்ரை பண்னேன்?, இவ்ளோ வெறுப்பு என் மேல வளர்ற அளவுக்கு?”
“................”
“நான் தப்பு பண்ணியிருக்கேன். உன்னைத் தப்பா பேசியிருக்கேன். எல்லாம்... எல்லாம்.. 5 வருசத்துக்கு முன்னாடி தான். இப்போ.. நான் அப்டி இல்ல.”
“....................”
“என்னைப் பார்க்குறப்ப உன் கண்ணுல தெரியுற உணர்வுகளே உன் காதலை சொல்லிடுச்சு டி! நீ சும்மா.. உன் பிடிவாதத்தையும்,கோபத்தையும் விடாம புடிச்சுத் தொங்கிட்டு.. என்னைக் காயப்படுத்தனும்ன்னு நினைச்சேனா.. பண்ணிக்கோ! எத்தனையோ பேர் கஷ்டத்தைக் கொடுத்தப்பவேப் பொறுத்துக்கிட்டேன்! நீயும் உன் பங்குக்குக் கொடுத்துட்டுப் போ... அனுபவிச்சுக்கிறேன்”
“..............”
“ஆனா.. என்னால உன்னை விட்டோ, தாஷியை விட்டோ போக முடியாது. இனி வர மாட்டேன்னு ரோஷமா உன் கிட்ட ஃபோன்ல சொல்லிட்டேன். ஆனா.. என்ன பண்றதுன்னு சத்தியமா தெரியல.. உங்களுக்காகத் தான் என்னைச் சுத்தியிருந்த எல்லாரையும் விட்டு விலகி வந்தேன்.. இப்போ உங்களையும் விட்டுப் போகனும்ன்னா எங்க போறதுன்னு எனக்குத் தெரியல..........”
-விடாது மழையில் நனைந்தபடிக் கடகடவென வாய்க்கு வந்ததைக் கொட்டித் தீர்த்தவனைக் கண்டு... அவள் மனதிலிருக்கும் அத்தனை காதல் உணர்வுகளும் ‘இத இத இதத் தான் எதிர்பார்த்தேன்’ எனக் கூறியபடி அடித்து,பிடித்துக் கொண்டு முன்னே வர... கையைக் கட்டிக் கொண்டு நிலப்படியில் சாய்ந்து நின்றவள்..
“இப்டியே வசனம் பேசிக்கிட்டே எவ்ளோ நேரம் மழைல நனையுறதா உத்தேசம் உனக்கு?” என்றாள்.
சட்டென நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான் வெற்றி. அந்த இருளில்.. டார்ச் வெளிச்சத்தில் பளபளத்த அவள் விழிகளையும், இதழோரம் அடக்கப்பட்டப் புன்னகையையும் கண்டவனுக்கு... அவ்வளவு நேரமுமிருந்த பாரம் குறைந்து... மனம் லேசானது. வம்பிழுக்கிறா! ராட்சசி!
“நீ தான வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொன்ன?”
“வராதன்னு சொன்னா அப்டியே போய்டுவியா?, 5 வருஷத்துக்கு முன்னாடிக் கூடத் தான் போன்னு விரட்டுனேன்! போனியா?, இல்லேல்ல?”
“..............”
“உள்ள வா டா” – அதட்டியவளிடம்...
“ம்ஹ்ம்.. எனக்கு இன்னொரு பதிலும் தெரியனும்” – என்றான்.
“என்ன?”
“உன்னைத் தொடக்கூடாதுன்னு ஏன் சொன்ன?”
“..................”
“சொல்லுடி”
“............”
“நிஜமாவே பிடிக்கலையா?”
“ப்ச்”
“ப்ச்-ன்னா?, என்னடி அர்த்தம்?”
“இப்போ நீ உள்ள வருவியா மாட்டியா டா?”
“நீ என்னைக் கட்டிப்புடிச்சாத் தான் நான் உள்ள வருவேன்” – பிடிவாதமாகக் கூறியபடி அவள் முன்னே வந்து நின்றான் அவன்.
“முடியாதுன்னு சொன்னா?”
“இப்டியே வெளிய போய்டுவேன்”
“சரி போடா” – கொஞ்சமும் அசராமல் பதில் கூறியவளை முறைத்து விட்டு, விறுவிறுவென வெளியே நடந்தவனை... “டேய்.... டேய்.. டேய்....” என்று கத்தியபடியே அவனைத் தொடர்ந்து மழையில் ஓடி வந்தாள் ஜமுனா.
மூச்சு வாங்க... அவன் கையைப் பற்றி நிறுத்தியவள்.. பற்றியக் கையை விடாமல்..
“நடுராத்திரி.. ரோட்ல நின்னுக்கிட்டு ஏன் டா உயிரை வாங்குற?”
“யாரு நான்?. நான் உன் உயிரை வாங்குறேனா?, என்னிக்கோ பண்ணின தப்பையெல்லாம் இன்னும் மனசுல வைச்சுக்கிட்டு மோசமாப் பழி வாங்கி என் உயிரை எடுத்துட்டிருக்கிறது நீ தான் டி”
“சரி, நான் தான்! என் மேல தான் தப்பு! இனி அப்டிப் பேச மாட்டேன். ஓகே?, வா உள்ள..”
“மாட்டேன். நீ என்னைக் கட்டிப்புடிச்சாத் தான் உள்ள வருவேன்”
“டேய்ய்ய்ய்”
“நீ சரிப்பட்டு வர மாட்டடி! அப்பவும்,இப்பவும் என்னைய உன் பின்னாடி அலைய விட்டுப் பார்க்குறது தான் உன் ஆசை”
“ரொம்பப் பேசாத டா”
“கையை விட்றி, நான் போறேன்”
“ஷ்ஷ்ஷ்ஷ்... ரொம்பக் குளிருது டா வெற்றி, ப்ளீஸ்... வா உள்ள போலாம்”
“அப்டின்னா என்னைக் கட்டிப்புடிச்சுக்கோ”
பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவளைக் கண்டு.. உதட்டைப் பிதுக்கி விட்டு முன்னே செல்லப் பார்த்தவனை அவசரமாகத் தடுத்து.. அவனை இறுகக் கட்டிக் கொண்டு..
அவன் மார்பில் தன் முகத்தை அழுந்தப் புதைத்து.. “ப்ளீஸ் டா.. வெற்றி... வா... உள்ள...” என்றவளைச் சிரிப்பும்,கோபமுமாய் நோக்கியவன்... உள்ளம் நிறைந்தத் திருப்தியுடன் அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.
“இப்போவாவது போலாமா?” – தலை நிமிர்த்திக் கேட்டவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.
“இங்க பாரு, இதான் சாக்குன்னு நீ உடனே ஆரம்பிக்காத” – பொறிந்து தள்ளியவளைக் கண்டு கொள்ளாமல் இப்போது முகம் முழுக்க முத்தமிட்டான்.
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட டா” – கோபமாய்க் கத்தியவளிடம்...
“ப்ச், இப்ப என்ன?, நான் உனக்கு முத்தம் கொடுக்கப் போறேன். உனக்கு விருப்பமா, இல்லையா சொல்லுன்னு நான் கேட்கனுமா? போடிங்க....”
“டேய்ய்ய்.......” – பல்லைக் கடித்தவளைப் பொருட்படுத்தாமல்.... அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி.... அவள் விழிகளை ஆசையுடன் பார்வையால் வருடி.. அவள் இதழ் நோக்கிக் குனிந்தவனைத் தள்ளி விட்டு வீட்டுக்குள் ஓடியே விட்டாள் அவள்.
‘பொன் வானம்... பன்னீர் தூவுது இந்நேரம்...
அட எண்ணம் மீறுது.. வண்ணம் மாறுது.. கண்ணோரம்........’
