அத்தியாயம் - 3
அலை – 2
இளவரசனின் வீடிருக்கும் தெரு முழுதும் குடும்பமாய் வசிப்பவர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் தான். அதில் சிலர் செழியனின் தொழிற்சாலையிலும்,உப்பளத்திலும் பணி புரிபவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரு வகையில் அனைவரும் அவனது தூரத்து சொந்தங்கள் தான். அதனால் அவர்களை அத்தை,மாமா சித்தி,சித்தப்பாவென உறவு சொல்லி அழைப்பதைத் தான் வழக்கமாய் வைத்திருந்தான் அவன்.
செழியன் எப்படியோ! ஆனால்.. அவர் மனைவி லட்சுமி தான் பணக்காரி என்றோ, இவர்களனைவரும் தன் கணவனின் கீழ் பணி புரியும் கூலிக்காரர்கள் என்றோ வித்தியாசம் பார்க்காமல்.. விகல்பமின்றி அனைவரிடமும் சரி சமமாய்ப் பழகுபவர்!
ஆண் பிள்ளை வேண்டி கனவு கண்டவருக்கு ஒரே பெண்ணோடு புத்திர பாக்கியமற்றுப் போக.. ராணி-செந்தாமரையின் வாரிசுகளான இளவரசன் மற்றும் தமிழன்பனின் மீது அவருக்கு ஈடுபாடு அதிகம். அதிலும் அத்தை,அத்தை எனச் சுற்றி வரும் அரசனிடம் அவருக்குத் தனி பாசமே உண்டு.
வளர்ந்த பின்பு, இரு குடும்பங்களுக்கும் இடையேயிருக்கும் ஏற்றத்தாழ்வை உணர்ந்து அரசன் அவரிடமிருந்துத் தானாகவே விலகி நிற்கத் தொடங்கி விட்டானென்றாலும், வீட்டில் தாய்க்கு சமையலறையிலும், தந்தைக்குத் தொழிற்சாலையிலும் உதவி செய்து.. பள்ளி,கல்லூரியில் நல்ல மாணவனாகவும் நடந்து கொண்டு பொறுப்பான ஆண் மகனாகத் திகழ்பவன் மீது அவருக்கு எப்போதும் மதிப்பும்,மரியாதையும் உண்டு.
அப்போது இளவரசனுக்கு ஆறு வயதிருக்கும். வெள்ளை நிறத்தில் கொழு,கொழுவென புஷ்டியாகப் பெரிய கண்களும்,அடர்ந்த இமைகளையுமாய் கன்னத்தில் குழி விழ அழகாய்ச் சிரிக்கும் கவியின் மீது அவனுக்குப் பெரிய ஆசை.
அவள் பிறந்த போது தன் அன்னை,தந்தையிடம் தனக்குத் தங்கச்சி பாப்பா வேண்டுமெனக் கேட்டு அவன் அடம் பிடித்ததெல்லாம் வேறு கதை.
நடக்கத் துவங்கி விட்டக் குழந்தை அத்தெரு முழுதும் வலம் வரத் தொடங்கியதால்.. எப்போதும் அவளைத் தூக்கி வந்துத் தன் வீட்டில் வைத்துக் கொண்டு விளையாடுவது தான் அரசனின் வேலை.
இந்நிலையில் உறவுக்காரர் ஒருவரின் திருமணத்திற்காக வெளியூர் செல்லவிருந்த லட்சுமி அவனிடம் “எந்நேரமும் இவளோடயே விளையாட்றியே! நாங்க இன்னிக்கு ஊருக்குப் போய்ட்டு ஒரு வாரம் கழிச்சுத் தான் வருவோம், அதுவரை நீ பாப்பா இல்லாம எப்படிப் பொழுதைக் கழிக்கப் போற?” என்று கேட்டு விட... வெகுவாக யோசித்தவன்.. கொல்லைப்புறத்தில் குளித்துக் கொண்டிருந்த லட்சுமியின் வீட்டுக் கதவை வெளிப்புறமாகப் பூட்டி விட்டு கவியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து விட்டான்.
அதன் பின்பு எப்படியோ தப்பித்து வெளியே வந்த லட்சுமி, குழந்தையைத் தேடி ராணியின் வீட்டுக்கு வருகையில் “நீங்க பாப்பாவை ஊருக்குத் தூக்கிட்டுப் போயிருவீங்க, நான் தர மாட்டேன்” என அவன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதைக் கண்டு அத்தெருவே சிரித்தது.
“இவனுக்காகவாவது ஒரு தங்கச்சி பாப்பாவுக்கு ஏற்பாடு பண்ணு ராணி” என்று லட்சுமி கேலி செய்ததன் விளைவால் உருவானவன் தான் தமிழன்பன்.
உடன் விளையாடத் தங்கச்சிப் பாப்பா வேண்டுமென்பது தான் அவனது அன்றைய ஏக்கம் என அவனைச் சுற்றியிருந்தோர் நம்பினர். ஏன், அவனும் கூட அப்படித் தான் நினைத்தான்.
ஆனால்.. மீசை முளைத்து,வயதுக்கு வந்து.. தன்னை ஓர் ஆண்மகனாய் அவன் உணரத் தொடங்கிய வேளை.. அவன் கண் முன்னே அதே கன்னக்குழி சிரிப்பும்,அடர்ந்த கண்ணிமைகளுமாய் வலம் வருபவளை எப்போதிருக்கும் இயல்புடன் காணத் தோன்றவில்லை அவனுக்கு.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளே உண்டாகும் இந்த உரிமை கலந்த அன்புக்கு என்ன பெயர் சூட்டுவதென அவன் குழம்பி நின்ற நாட்கள் அவை!
காற்றோடு காற்றாகக் காதில் வந்து விழும் இளையராஜாவின் இசை ஏன் அவளை நினைவுபடுத்த வேண்டும்?, டிவி திரையில் கமலஹாசனோடு டூயட் பாடும் ஸ்ரீதேவி வெட்கச் சிரிப்பை உதிர்க்கையில்.. அவள் முகம் மனதில் தோன்றி.. எதற்காக அவனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த வேண்டும்?, பாவாடை-சட்டையிலிருந்து தாவணிக்கு மாறியவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் இவன் எதற்காக வெட்கம் கொள்ள வேண்டும்?, அவளது பெரிய வீட்டோடுத் தன் சிறிய வீட்டை ஒப்பிட்டு எதற்காக மனம் சோர்ந்து போக வேண்டும்?
அன்று வரை தந்தையின் தோள் அளவு உயரமே இருந்தவன், திடீரென வீட்டு நிலப்படியில் நெற்றியை இடித்துக் கொள்ளுமளவிற்கு வளர்ந்து நின்ற போது, இது அத்தனைக்குமான விடை கிடைத்தது.
கிடைத்த விடையால் அவன் உவகை கொள்ளவில்லை! ஒரு விதமான பயம்,இயலாமை போன்றக் கலவை உணர்வுகள் தான்! உள்ளே தோன்றிய உணர்வை வெளிப்படுத்த முடியாமல் அவன் தயங்கியதற்கு முழு முதற்காரணம் ஏழை-பணக்காரன் என்கிற இருவருக்குமான ஏற்றத்தாழ்வு.
அடுத்ததாக செழியன். தனக்குக் கீழ் பணி புரிபவர்களிடம் சிரித்துப் பேசித் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் ரகம் தான் அவர் என்றாலும், ஒரு நாள் கூட தான் முதலாளி என்கிற நிலை தாண்டி அவர் கீழிறங்கியதில்லை.
அவன் என்ன தான் படித்து நல்ல வேலையில், கை நிறைய சம்பளத்துடன் வெற்றி பெற்ற ஆண்மகனாக அவர் முன்னே வந்து நின்றாலும், அவர் தனக்குக் கீழ் பணி புரியும் ஒருவனின் மகனுக்குத் தன் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கப் போவதில்லை.
வித்தியாசம் பாராமல் நெருங்கிப் பேசிப் பழகும் லட்சுமியும்,ராணியும் இதனால் பாதிக்கப்படலாம். இன்னும் எத்தனை,எத்தனையோ காரணங்கள் கண் முன்னே வலம் வந்ததில் சோர்ந்து போய்த் தன் உணர்வுகளுக்கு அவன் முற்றுப்புள்ளி வைத்து விடத் தீர்மானித்தான்.
ஆனால் இம்முற்றுப்புள்ளி, அந்தப் பெரிய இமைக்காரியால் இடப்படப் போகும் காற்புள்ளியால் முடிவிலியாய் நீளும் என்பது அவன் அறியாதது. அதை பிரதிபலிப்பதைப் போன்று அடுத்தடுத்த சம்பவங்களும் நடந்தேறியது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,வேதாரண்யம்.
அந்த மாதம் நடைபெறவிருக்கும் ‘இண்டர் காலேஜ் கல்ச்சுரல் காம்பெடிஷனில்’ அவர்களது கல்லூரி சார்பாகக் கலந்து கொள்ளவிருக்கும் மாணவ,மாணவர்கள் பற்றியப் பெயர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தீவிர முக பாவத்துடன் நின்றிருந்தான் மூன்றாமாண்டு மாணவனான இளவரசன்.
“இத்தினி பேர் கலந்துக்குறாங்களா டா? மாப்ள.. டேய்.. யாரெல்லாம் கலந்துக்க ஆர்வமா இருக்குறீங்கன்னு நீ கேட்டா.. எல்லாப் பன்னாடையும் பேர் குடுக்கத் தான் செய்யும். பேசாம, நல்லா பாடுறவன் யாரு, நல்லா ஆடுறவன் யாருன்னு நாமளே ஒரு ஆடிஷன் மாதிரி வைச்சு ஃபில்டர் பண்ணிக் குறிப்பிட்ட ஆட்களை மட்டும் காம்படிஷனுக்கு அனுப்புவோம். என்ன சொல்ற?” – இளவரசனின் உயிர் நண்பன் கேசவன்.
“ப்ச், நமக்கு எதுக்குடா இந்தத் தலைவலி?, கலந்துக்கனும்ன்னு ஆசைப் பட்றவங்கக் கலந்துக்கிட்டு போறாங்க! உனக்கென்ன?” - இளவரசன்
“போன தடவை நடந்தது மறந்துடுச்சா டா உனக்கு?, பாடுறேன்ற பேர்ல கழுதையாட்டம் கனைச்ச நாதாரிங்களால நம்ம காலேஜ் மானம் காத்துல பறந்துச்சே”
“ஹாஹாஹா, இப்போ என்ன தான் டா பண்ணனும்ன்ற?”
“லிஸ்ட்ல இருக்குறவங்களை பெர்ஃபார்ம் பண்ண சொல்லலாம் மச்சி!, நமக்கு ஓகேன்னு பட்றவங்களை மட்டும் காம்பெடிஷனுக்கு அனுப்புவோம்”
“ம்ம், நல்ல யோசனை தான்! சரி, கூப்பிடு.”
“முதல்ல, பாட்டு பாடுறவனுங்க லிஸ்ட்டை எடு மாப்ள” – என்ற கேசவன் ஜூனியர் மாணவர்களை அழைத்து லிஸ்ட்டில் இருக்கும் அனைவரையும் ஆடிட்டோரியத்தில் ஒன்று கூட்ட.. பாட்டு,ஆட்டம் என அந்த மாலை நேரம் அழகாய்க் களை கட்டியது.
ஸ்டேஜ் முன்னே போடப்பட்டிருந்த பெஞ்சில் கையிலிருந்த லிஸ்ட்டுடன் அரசன்,கேசவன் மற்றும் இன்னும் சில,பல சீனியர் மாணவர்கள் அமர்ந்து விட.. ஒவ்வொருவராய் மேடை ஏறி பாடத் தொடங்கினர்.
“ஆடிட்டோரியத்துல என்னடி இவ்ளோ கூட்டம்?” - கையில் புத்தகமும்,தோளில் பையுமாக மரத்தடியை நோக்கி நடந்து கொண்டிருந்த கவி, தன் தோழி மலர்க்கொடியிடம் வினவினாள்.
“இண்டர்காலேஜ் காம்பெடிஷனுக்காக ஆள் எடுக்குறாங்களாம்ப்பா”
“ஆள் எடுக்குறாங்களா?, என்னடி சொல்ற?”
“போன தடவை நம்ம காலேஜ் மானத்தை ஜட்டியோட ஓட விட்டானுங்களே! அந்த மாதிரி எதுவும் இந்தத் தடவை ஆயிடக்கூடாதுன்னு முன்னெச்சரிக்கையா நல்லா பெர்ஃபார்ம் பண்றவங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, காம்பெடிஷன்ல கலந்துக்க வைக்குற மாதிரி ஏற்பாடாம்”
“பரவாயில்லையே”
“அந்தக் கேசவனும், இளவரசனும் சேர்ந்து இப்டி ஒரு முயற்சில ஈடுபட்டிருக்கிறதா செய்தி வந்துச்சு”
“என்னமோ நீ அவரைப் பெத்துப் பேரு வைச்ச மாதிரி ரொம்ப உரிமையா இளவரசன்ற?”
“இளவரசனை இளவரசன்னு சொல்லாம வேற எப்படிடி சொல்றது?”
“சீனியர்ன்னு சொல்லு. இல்ல, அண்ணன்னு சொல்லு”
“ஏன்? நீ சொல்லேன் அண்ணன்னு”
“ச்சீ வாயை மூடு”
“அந்தப் பையன் பேரைச் சொன்னாலே நீ ஒரு மாதிரி ஆயிட்ற! என்னடி நடக்குது இங்க?”
“ப்ச், என்ன நடந்தா உனக்கு என்ன?”
“அதான, எனக்கென்ன?, ஆமா, நீ தான் நல்லாப் பாடுவியே!, நீ ஏன் இந்தப் போட்டில கலந்துக்கல?”
“என்ன தான் நீ என் ஃப்ரண்டுன்னாலும், இப்பிடிக் கண்ணு,மண்ணு தெரியாம எனக்காக சப்போர்ட் பண்றது ரொம்பத் தப்புடி! போன தடவையாவது நம்ம காலேஜ் மானம் ஜட்டியோட ஓடுச்சு!, நான் பாடுனா.. கோமணம் கூட மிஞ்சாது”
“ஏய்ய் சீன்-ஐக் குறை! ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆகாது! செல்வி என் கிட்ட எல்லாம் சொல்லுச்சு! அவ ஏரியால நடந்தத் திருவிழாவுல நீ பாட்டு பாடி பால் குக்கர் பரிசு வாங்குன சங்கதி எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?”
“ஏன் தெரிஞ்சுருந்தா என்ன பண்ணிருப்ப?”
“அந்தப் பால் குக்கரை எப்டியாவது உன் கிட்டயிருந்து லவட்டியிருப்பேன்”
“அடச்சீ மூதேவி”
“ஏய்,ஏய் ப்ளீஸ்டி.. நீ ரொம்ப நல்லா பாடுனன்னு செல்வி சொன்னா! நீயும் இந்த காம்பெடிஷன்ல கலந்துக்கோ! வா.. நாமளும் ஆடிட்டோரியத்துக்குப் போவோம்”
“போடி இவளே! செல்வி வீட்டு ஏரியாவுல 4 கிழவிங்க தான் ஆடியன்ஸா உட்கார்ந்திருச்சுங்க! இங்க அப்டியா?, சீனியர்,ஜூனியர்ன்னு எல்லா நாயும் கிண்டல் பண்ணியே சாகடிச்சுடுவானுங்க! ஆளை விடு”
“ஏய்.. அதுக்கெல்லாம் பயப்பட்ற ஆளா நீ?”
“என்னால முடியாதுடி”
“ஏய் ரொம்பப் பண்ணாம வா.. வா-ன்றேன்ல..............” – அவளுடன் போராடி அவளை இழுத்துக் கொண்டு ஆடிட்டோரியத்தை நோக்கி நடந்தாள் மலர்க்கொடி.
சீனியர்,ஜூனியர் என ஆண்களும்,பெண்களுமாய்க் குவிந்திருந்த ஆடிட்டோரியத்தின் முன் வரிசையில் மரூன் நிற சட்டையும், கருப்பு நிற பேண்ட்டுமாய்த் தன் நீண்ட கைகளைக் கட்டிக் கொண்டு.. நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி, லேசானச் சிரிப்புடன் மேடையில் பாடுபவரைக் கவனித்துக் கொண்டிருந்த இளவரசனின் மீது தான் அவள் பார்வை முழுதும் பதிந்தது.
பிறந்ததிலிருந்து உப்புக் காற்றில் ஊறிப் போய் வளர்ந்திருந்ததாலோ என்னவோ.. அவன் தேகம்.. கருகருவென்ற நிறத்துடன் கோயில் சிலையை ஒத்திருந்தது. அந்தக் கரு நிறத்தோடு போட்டி போட்டுக் கொண்டு அவன் முன் நெற்றியில் படிந்திருந்த கேசமும், அளவான மீசையும்,கன்னம் முழுதும் விரவிக் கிடந்தத் தாடியும்.. அவன் லட்சணமான முக வடிவைக் கொண்ட ஆண் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.
ஆளை விழுங்கும் பார்வை என்பதற்கான அர்த்தத்தை ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் புரிய வைக்க முயலும் அந்தப் பெரிய விழிகளைத் தொடர்ந்து.. நீண்ட நாசி! மீசைக்கடியில் அழகாய் விரியும் இதழ்களைப் பெற்றிருந்தவன்.. கவர்ச்சியான சிரிப்புக்குச் சொந்தக்காரன் தான்!
சுற்றி எழுந்தக் கைத்தட்டல்களையும், பறக்கும் விசில்களையும் தாண்டித் தயங்கி.. ஓரப் பார்வையால் அவனை அளந்து கொண்டிருந்த இளங்கவியின் கையைச் சுரண்டினாள் மலர்.
“என்னடி?”
“நீ ஏன் அந்த அண்ணாவை அப்படிப் பார்க்குற?”
“செருப்புப் பிஞ்சிடும்”
“ம்க்க்க்க்கும்! சரி, நீயும் போட்டில கலந்துக்க ஆசைப்பட்றதா சொல்லி உன் பேரைக் கொடு போ..”
“என்னால முடியாது. மூடிட்டுக் கொஞ்ச நேரம் நின்னு வேடிக்கை பார்த்துட்டு நடையைக் கட்டுறதுக்கு வழியைப் பாரு”
“நீ சுத்த வேஸ்ட் டி”
-தோழியுடன் சண்டையிட்டு முடித்து அவள் திரும்புகையில், மேடையில் தோன்றிய பெண்ணின் குரலை அவன் ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு ‘எவடி அவ’ ரீதியில் முழுக் கோபத்துடன் திரும்பி மேடையை நோக்கினாள் கவி.
‘விட்டு விட்டு மின்னல் வெட்டும்.. சத்தமின்றி இடி இடிக்கும்...’ – அந்தப் பெண் தொடங்கியதும்...
“அந்த இடியை அப்டியே இவன் தலைல இறக்கு” – பின்னிருக்கையிலிருந்து வந்த குரலைக் கேட்டு சிலர் நகைக்க..
“எவன் டா அது?? வாயை மூடிட்டு சும்மா உட்கார மாட்டீங்களா?” – என்று அதட்டினான் கேசவன்.
‘இது கால மழையல்ல.... காதல் மழை...’ – ஹஸ்கி வாய்ஸில் மீண்டும் அந்தப் பெண்.
“ஆஹான்” – மறுபடி நம் மாணவர்கள்.
‘ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்.. திருடுகிறாய்..
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்..’
“சரியாப் பாடுனம்மா! எங்க க்ளாஸ்ல பென்சில்,அழிலப்பரு அடிஸ்கேல்ன்னு வரிசையா காணாம போயிட்டிருக்கு! திருடுறது எந்தப் பன்னாடன்னு தான் தெரியல” – விடாமல் வம்பு செய்த மாணவனை, எழுந்து நின்று மீண்டும் அதட்டினான் கேசவன்.
‘முதலில் என் பொய்களை.. இரண்டாவது கைகளை..
மூன்றாவது.. வெட்கத்தை...’ – அந்தப் பெண் பாடி முடிக்கவும், சிரிப்புடன் நண்பர்களிடம் திரும்பிய அரசன் ‘ஓகே’ என்பதாய்த் தலையாட்ட சுறுசுறுவெனக் கோபம் கிளம்பியது அவளுக்கு.
“ஏய்.. நானும் போட்டில கலந்துக்கிறேன் டி” – வீராப்புடன் கவி
“ஏன்?ஏன்?ஏன் இந்தத் திடீர் முடிவு?”
“ப்ச், நீ போய் என் பேரைக் குடு. பாடக் கூப்பிடும் போது நான் மேடையேறிக்கிறேன்” – உர்ரென்ற முகத்துடன் கூறியவளை ஒரு மாதிரி நோக்கி விட்டு அரசனின் அருகே சென்றாள் மலர்.
“அண்ணா...”
அவனருகே வந்து அழைத்தவளிடம் என்னவென்பது போல் நிமிர்ந்து நோக்கியவனிடம்..
“என் ஃப்ரெண்டும் காம்பெடிஷன்ல கலந்துக்க ஆசைப்பட்றா. ஆனா.. அவ பேரு இந்த லிஸ்ட்ல இல்ல. அவ பேரையும் கொஞ்சம் எழுதிக்கிறீங்களா?”-என்றாள்.
“அது என்ன கொஞ்சம்?, முழுப் பேரையும் சொன்னாக் கூட எழுதுவோமே” – மொக்கையாய் இடை புகுந்தான் கேசவன்.
“இந்தக் காமெடிக்கு நான் வீட்டுக்குப் போய் சிரிக்குறேண்ணா” – பல்லைக் கடித்தபடித் தட்டாமல் பதிலளித்தாள் மலர்.
“சரி தங்கச்சி” – இப்போது பவ்யமாய் கேசவன்.
“பேர் என்னன்னு சொல்லுங்க. எழுதிக்கிறேன்” – எனக் கேட்ட அரசனுக்குப் பதிலாய் அவள் “இளங்கவி, பர்ஸ்ட் இயர் மேத்ஸ்” என்றதும் பட்டென நிமிர்ந்தான் அவன்.
அவள் தன் பெயரைக் கூறுவதையும் அவன் ஆச்சரியமாய் நிமிர்ந்து நோக்குவதையும் திருப்தியுடன் கண்ட கவி கையைக் கட்டிக் கொண்டு கெத்தாய் நின்று கொண்டாள்.
கையிலிருந்த பேப்பரில் அவள் பெயரை எழுதியபடியே அங்குமிங்கும் பார்வையைச் செலுத்தி அவளைத் தேடியவனுக்குச் சிரமம் கொடுக்காமல்.. முன்னே வந்து நின்றாள் கவி.
“யார் இவங்க?” – கேசவன்.
“இவ தான் நான் சொன்ன ஃப்ரெண்ட். இளங்கவி”
“ஓஹோ!! நீங்க தான் இந்த மேடம்க்கு அசிஸ்டெண்ட்டா?”
“ஹலோ என்ன நக்கலா?” – எரிச்சலுடன் கவி.
“ஏம்மா, நீ பாடனும்ன்னா நீ வந்து பேர் கொடுக்க மாட்டியா?, அதென்ன உன் ஃப்ரெண்டை அனுப்புற?”
“அதனால என்ன இப்போ?” – மலர்
“டேய்... டேய்.. விடு டா” – நண்பனை அடக்கிய அரசனிடம்...
“சீனியர்ன்ற பயமே இல்ல இதுங்களுக்கெல்லாம்”-என்று புலம்பினான் அவன்.
“என் பேரை நீங்க எழுதிட்டீங்களா? இல்லையா?” – அரசனிடம் நேரடியாகக் கேட்டாள் கவி.
“எழுதிட்டேன்” - அரசன்
“எப்போ பாடனும்?”
“போய் உட்காருங்க, நாங்களே கூப்பிடுவோம்” – கேசவன் துரத்தியதும் இருவரும் நகர்ந்து விட்டனர்.
அதன் பின்பு ஒரு வித இறுக்கமும்,தயக்கமுமாகவே நாற்காலியில் அமர்ந்திருந்தவன் சத்தியமாக நார்மல் மோட்-இல் இல்லையென்பது அவனைப் பார்க்கும் போதே தெரிந்தது.
வேண்டுமென்றே நேரத்தைக் கடத்தி ஒரு வழியாக அவளைப் பாட அழைத்தான் கேசவன்.
ஆகாய வண்ணச் சுடிதாரில் மிளிர்ந்தவளின் வெள்ளை நிறத் துப்பட்டா காற்றில் பறந்தாட.. வேக நடையுன் மேடையேறியவளைக் கண்டு நிமிர்ந்து அமர்ந்தான் அரசன்.
நீண்ட இமை மறைத்திருந்த அவள் கண்கள் ஸ்லோ மோஷனில் விரிந்து.. முழுவதுமாய்த் தன் மீது படிந்த விதத்தைக் கண்டு உள்ளுக்குள் லேசாக ஆடிப் போனான் அவன்.
ஏன் இப்படிப் பார்க்குறா?, அவளை நிமிர்ந்து பார்க்கத் தயங்கியத் தன் விழிகளின் படபடப்பை மறைக்கப் பின்தலை முடியைக் கோதியபடி எங்கோ நோக்கினான். அவன் கை விரல்களில் ஓடிய ஒவ்வொரு நரம்பிலும் இனிதாய் ஒரு நடுக்கம்.
முடியாது! சத்தியமாக முடியாது! இரண்டே நிமிடம் தான் என்றாலும்.. பார்வையாலே அவன் இதயத்தில் ஓடும் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவள்.. பாடி முடிக்கும் வரை.. அவளை நிமிர்ந்து பார்க்க முடியுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. வெளுத்துப் போன முகத்துடன் அவசரமாய்க் குனிந்தவன் கையிலிருந்தத் தாளில் பார்வையைப் பதித்துக் கொண்டான்.
மேடையில் ஏறி சில நிமிடங்கள் ஆகியும், அவள் வாய் திறவாதிருப்பதைக் கண்டு கடுப்பானக் கேசவன்.. “என்ன? நல்ல நேரம் பார்த்திட்டிருக்கியா?, வாயைத் தொறந்து பாடும்மா” என்றான்.
அவனைத் தவிர அந்த ஆடிட்டோரியத்தில் எவருமில்லை என்பது போல் இளவரசன் ஒருவன் மீது மட்டுமே பார்வையைப் பதித்து விழி அசையாது அசராமல் நின்றவளைக் கண்டுக் குழம்பி..
“மச்சி...” என்று கேசவன் நண்பனின் கையைச் சுரண்டுகையில்.. மெல்ல நிமிர்ந்து, அவன் மேடையில் நின்றவளை நோக்கிய நொடி... திடீரெனத் தோன்றிய பளீர் ஒளியுடன்.. விழி மலர,இதழ் மலர,முகம் மலர... அவள் பாடத் தொடங்கினாள்.
‘செக்கச் சிவந்தன விழிகள்..
கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்...
இமை பிரிந்தது உறக்கம்..
நெஞ்சில் எத்தனை,எத்தனை மயக்கம்..
உன்னிடம் சொல்லிட நினைக்கும்..
மனம் உண்மையை மூடி மறைக்கும்..
ஒரு நாள் யாரோ... என்னப் பாடல் சொல்லித் தந்தாரோ...
கண்ணுக்குள் ராகம்.. நெஞ்சுக்குள் தாளம்..
என்னென்று சொல் தோழி...................’
இப்படிப் பாடினால்.. என்ன அர்த்தமாம்?, என்ன? என்ன சொல்ல வருகிறாள் இவள்?, புரிந்து தான் பாடுகிறாளா?, அவள் பாடிய ஒவ்வொரு வரியின் பொருளும் என்ன இதற்காக.. அவன் தலையைக் கிறுகிறுக்கச் செய்து கொண்டிருக்கிறது?, உயிரோடு இருப்பது தவறா?, துடிக்கும் இதயத்தை ஒரே முயற்சியில் செயலிழந்து விடச் செய்யுமளவிற்குத் தலை முதல் கால் வரை அநியாயத்திற்குப் பரவி ஓடும் இந்த இதம்... அத் கொடுக்கும் அழுத்தம்.. இவளுக்குப் புரியுமா? என்ன செய்கிறாள் இவள் என்னை?
வெகு நேரமாய் மூச்சு விட மறந்துத் திகைத்துப் போய்... மேடையில் நின்றிருந்தவளை வெறித்தவன் முற்றிலும் சிலையாகிப் போயிருந்தான்.
அவன் முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கண்டு வெற்றிப் புன்னகை கொண்டு மேடையை விட்டு இறங்கியவளையும், நண்பனையும் மாறி,மாறிப் பார்த்தான் கேசவன்.
“மச்சி...” – கேசவன்.
“.............”
“டேய்....”
“அவளை செலக்ட் பண்ணாத” – பட்டெனக் கூறினான் இளவரசன்.
“ஏன் டா?”
“வேண்டாம்ன்னா வேண்டாம்”
“நல்லாத் தான பாடுச்சு?”
“அப்டின்னா.. இனி இந்தக் காம்பெடிஷன் வேலையெல்லாம் நீயே பார்த்துக்க! என்னை விட்ரு”
“டேய்.. என்னாச்சுடா?, யாரு டா அந்தப் பொண்ணு?” – மெல்ல வினவிய கேசவனுக்கு அவன் பதில் கூறவேயில்லை.
தோழி பாடி முடித்ததும் பெரிதாகக் கைத் தட்டிய மலர் “உன்னை கண்டிப்பா செல்க்ட் பண்ணுவாங்க பாரு” என்று வாழ்த்தியது.. அன்று நிறைவேறாமல் போய் விட... தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ,மாணவிகளின் பெயர் வரிசையில் அவள் பெயர் இடம் பெறவேயில்லை.
முகம் சுருங்கிப் போய் முழு எரிச்சலுடன் நின்றவளைக் கண்டு “நீ நல்லாப் பாடியும் ஏன் உன்னை செலக்ட் பண்ணாம விட்டாங்க?” என்று குழம்பிய மலர் “சாரிடி” என்றதையெல்லாம் அவள் கண்டுகொள்ளவில்லை.
அன்று மாலை கல்லூரி முடிந்ததும் பஸ் ஸ்டாப்பை நோக்கி கேசவனுடன் நடந்து கொண்டிருந்தவனைக் கல்லூரியிலேயே வழி மறித்தாள் அவள்.
“நில்லுங்க” – கோபமும்,எரிச்சலுமாய்த் தன் கண் முன்னே நின்றவளைக் கண்டு அந்த நாளில் இரண்டாவது முறையாக ஆடிப் போனான் அவன்.
இருவரும் அருகருகே வசித்தாலும்,ஒரே கல்லூரியில் படித்தாலும்.. வளர்ந்த பிறகு எதிரெதிரே நின்று இதுவரைப் பேசிக் கொண்டதில்லை. திடீரென அவள் வழிமறித்து நிறுத்தவும் திகைத்தவன் அடுத்த நிமிடம் முகத்தை மாற்றிக் கொண்டு “என்ன?” என்றான்.
“என்னை ஏன் செலக்ட் பண்ணல?”
“இது என்னம்மா கேள்வி?, நீ அப்படி ஒன்னும் நல்லாப் பாடலன்னு எங்களுக்குப் பட்டுச்சு, அதான் செலக்ட் பண்ணல. விரக்தில உனக்குக் கோபம் வர்றது இயல்பு தான்-ம்மா. வீட்டுக்குப் போய் மத்தி மீனைப் பொரிச்சுத் தின்னு. எல்லாம் சரியாய்டும்”
இடையில் புகுந்து மிகப் பொறுமையாய் கேசவன் கொடுத்த பதிலில் வெகுண்டவள்.. கீழே குனிந்து எதையோ தேடிப் பின் பெரிய கல் ஒன்றைக் கையில் எடுத்து...
“பேசாம போறியா?, இல்ல உன் மண்டையைப் பொளக்கவா?” என்றாள்.
“என்னது?, மண்டையை உடைப்பியா?, ஏய்.. யார் நீ??” – பொங்கி எழுந்த கேசவனைக் கை நீட்டித் தடுத்த இளவரசன்..
“என்ன இது?, முன்ன பின்ன பழக்கமில்லாதவங்கக் கிட்ட இப்டித் தான் பேசுவியா நீ?” என்றான் அவளிடம்.
“ஓஹோ! அப்டின்னா முன்ன,பின்ன பழக்கமிருக்கிற உங்க மண்டையை வேணா பொளக்கட்டுமா?”
-அவள் பதிலில் அமைதியாய் நின்று விட்டவனை ஆச்சரியத்துடன் நோக்கி..
“மாப்ள, உனக்கு இந்தப் பொண்ணை ஏற்கனவேத் தெரியுமா டா?” என்றான் கேசவன்.
“தெரியுமாவா??, ஏன்?, துரை என்னைத் தெரியாதுன்னு உங்கக்கிட்ட சொல்லி வைச்சிருக்கிறாராக்கும்?,”
“துரையாஆஆஆஆஆ?” – வாயைப் பிளந்தபடி கேசவன்.
“பக்கத்து,பக்கத்து வீட்ல குடியிருக்கோம். இன்னும் சொல்லப் போனா.. ஒரு வகையில இவரு எனக்கு மாமா மகன்”
“ஓஹோ!, அப்டின்னா உன்னை செலக்ட் பண்ணாம விட்டதுக்கு நீ இவன் மண்டையைப் பொளக்கலாம். தப்பில்ல”
“ஆமா, சார் எப்போ தீர்ப்பு கொடுப்பீங்கன்னு தான் நான் காத்துக்கிட்டிருந்தேன்! யோவ்.. போய்யா அந்தப் பக்கம்”
“என்ன மச்சி உன் அத்தைப் பொண்ணு இப்டிப் பேசுது?”
“ஏய்ய் லூசு மாதிரி உளறாத! அத்தைப் பொண்ணாம் அத்தைப் பொண்ணு” – எரிச்சலுடன் அரசன்.
“அப்டின்னு இந்தப் பொண்ணு தானடா சொல்லுச்சு! ஏன் டா என்னைக் குழப்புறீங்க?”
“யோவ் நீ போ மாட்ட??” – கோபமாய் கவி.
“அதுசரி,” – என்றவன் இருவரையும் ஒரு மாதிரி நோக்கி விட்டு நகர்ந்து விட... அவசரமாய் அவளை நிமிர்ந்து நோக்கிய இளவரசன்..
“என்ன?, எதுக்கு இப்போ பிரச்சனை பண்ற?, காலேஜ்ல வழி மறிச்சு நின்னு பயமில்லாம பேசிட்டிருக்க?”-என்றான்.
“எனக்கென்ன பயம்?”
“சரி, எனக்குத் தான் பயம். என்ன விசயம்? டக்குன்னு சொல்லு”
“நான் நல்லா பாடலயா?”
“............”
“ஏன் என்னை செலக்ட் பண்ணல?”
“.............” – பதில் கூறாமல் எங்கோ தூரத்தில் பார்வையைப் பதித்தபடி அமைதியாய் நின்றவனைக் கண்டு...
“உங்களை நினைச்சுத் தான் பாடுனேன்”– அசராமல் அடுத்த அம்பை எய்தாள் அவள்.
அதிர்ச்சியும்,கோபமுமாய் மூக்கு விடைக்க அவள் புறம் திரும்பியவனிடம்..
“நீங்க என்னை செலக்ட் பண்ணாததெல்லாம் எனக்குப் பிரச்சனையில்ல. என் பாட்டு சொன்ன சேதி உங்களுக்குப் புரிஞ்சதா இல்லையா?, அதைச் சொல்லுங்க” என்றாள்.
“ஏய்ய் என்ன லூசு மாதிரி உளறிட்டிருக்க?”
“ஆமாமா, நேரடியா விசயத்தைச் சொல்லாம, என்னன்னமோ பேசி லூசு மாதிரி உளறிட்டிருக்கேன்” என்று நிறுத்தியவளை சுருக்கிய புருவங்களுடன் கோபம் குறையாமல் நோக்கினான் அவன்.
ஒரு நிமிடம் தொண்டையைச் செருமித் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள், தன் இரு கைகளையும் மார்பின் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவன் பார்வையைச் சந்திக்க முயலாது.. அவன் கழுத்தில் தன் விழிகளை நிறுத்தினாள்.
“இதோ பாருங்க! ராணி அத்தை வைக்குற மீன் குழம்பு அளவுக்கு எங்கம்மாவுக்கு வைக்கத் தெரியல! மீன் குழம்புன்னு இல்ல! கறி,கோழி,இறால்ன்னு அத்தனையும் என் வாய்க்கு ஒப்புற மாதிரி சமைக்கத் தெரிஞ்ச ஒரே ஆள் இந்த ஊர்லயே உங்கம்மா மட்டும் தான்”
“....................” – அதே பார்வையுடன் அவன்.
ஒரு நொடி அவன் கண்களை நோக்கி விட்டுப் பின் கை விரல் நகங்களை ஆராய்ந்தவள்.. அதிலேயே பார்வையைப் பதித்து..
“இத்தனை வருசத்துக்கப்புறம் எங்கம்மா புதுசா எதையும் சமைச்சுக் கத்துக்கப் போறதில்ல! என்ன தான் ராணி அத்தை போடுற மசால் பொடியை வாங்கி நானே சமைச்சாலும் அந்தக் கைப்பக்குவம் எனக்கு வரல” – என்று விட்டு... மீண்டும் தொண்டையைச் செருமியபடி இடப்பக்கம் நோக்கியவள்..
“அ...அ...அதனால.... உங்களைக் கட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு பர்மனண்ட்டா வந்துட்டா.... ருசி கண்ட என் நாக்குக்குப் பங்கம் வரா..........துன்னு...........” என்று இழுத்தபடியே.. ஓரப் பார்வையால் அவனை நோக்கினாள்.
அவனது கோபம் மாறி விட்டது போலும்! சுருக்கிய புருவம் மாறி இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. இதழ்கள் கூட... லேசாக விரிய முயற்சிப்பதைப் போ.............ல்ல்ல்ல்!!
“என்ன சொல்ல வர்ற?” – பொறுமையுடன் நேர்ப்பார்வையாய் அவன்.
“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு” – அதே நேர்ப்பார்வையுடன் அலட்டிக் கொள்ளாமல் அவள்.
“பிடிச்சிருக்குன்னா??”
“உங்களைக் காதலிக்கிறேன்னு அர்த்தம்”
ஒரு நீண்ட நிமிடம் அமைதியாய் மறுபுறம் நோக்கினான் அவன்.
“நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ, கவி பாப்பாவைத் தர மாட்டேன்னு உங்களோடயே வைச்சுக்கிட்டீங்களாம்! அம்மா சொல்லுச்சு! இப்போவும் அதே மாதிரி சொல்றதால நீங்க ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டீங்க.”
“இப்போ நீ என்ன பாப்பாவா?”
“பாய்ண்ட்! ஆனா.. எனக்கு இப்போ உங்களோடயே இருக்கனும்ன்னு தோணுதே!”
“ஒரு வயசுக்கு அப்புறம் நீயும்,நானும் பேசிக்கிறதைக் கூட நிப்பாட்டிட்டோம்! எது உன்னை இப்படியெல்லாம் பேசத் தூண்டுது?”
“பேசிக்கிட்டதில்ல தான்! ஆனா.. தினம்,தினம் பார்க்குறேனே! நீங்க காலைல எப்போ எழுந்துக்குறீங்க,என்ன பண்றீங்கன்னு எங்கம்மாவும், உங்கம்மாவும் உங்களைப் பத்திப் பேசிப் பேசியே என் மனசு முழுக்க உங்களை நிரப்பிட்டாங்களே!”
“..............”
“என்ன பதிலையே காணோம்”
“என்ன வயசு உனக்கு?”
“18 ஆரம்பிக்க இன்னும் ரெண்டு மாசம் இருக்கு.”
“இந்த வயசுல இதெல்லாம் தப்பு”
“என்ன தப்பு?, இன்னும் ரெண்டு மாசத்துல என்னை நம்பி ஓட்டுரிமையை கவர்மெண்ட்டே குடுக்கப் போகுது! அதோடு சேர்த்து சுயமா முடிவெடுக்கிற உரிமையையும் தான்“
“எங்க இருந்து பேசக் கத்துக்கிற நீ?”
“அப்டியே மழுப்பாம, எனக்குப் பதிலைச் சொல்லுங்க சீக்கிரம். பஸ்ஸூக்கு டைம் ஆச்சு”
“லூசு மாதிரி உளறாம வீடு போய்ச் சேரு. உங்கம்மா உன்னை தேடிட்டிருக்கப் போறாங்க” – என்றபடியே நகரப் பார்த்தவனைக் கை நீட்டித் தடுத்தவள்..
“வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டா நான் இவ்ளோ நேரம் பேசுனேன்ல?, நீங்க மட்டும் ஏன் ஜிலேபி சுட்டுட்டுப் போறீங்க?, எனக்கு ஒழுங்கான பதில் வேணும்.”
“என்ன?, என்ன பதில் வேணும்??” என்று வேகமாய்த் தொடங்கியவன் “நீயும் தமிழும் எனக்கு ஒன்னு தான்! அதனால இந்த மாதிரி உளர்றதை நிறுத்திட்டு வீடு போய்ச் சேர வழியைப் பாரு” என்று முடித்தான்.
“ஓஓஓஓஓஓ...” என்று இழுத்தவள் “அதாவது நான் உங்களுக்குத் தங்கச்சி மாதிரின்னு சொல்ல வர்றீங்க?,அப்படித் தான?” என்றாள்.
“...........” – பதிலற்று எரிச்சலுடன் கீழ் கண்ணால் அவளை நோக்கியவன்... அவளைத் தாண்டிக் கொண்டு முன்னே செல்ல முயல.. மீண்டும் வழி மறித்தவள்..
“ஆமா, நீ எனக்குத் தங்கச்சி மாதிரி தான்னு தைரியமா சொல்லுங்க. உங்களைத் தொந்தரவு பண்ணாம நான் போயிட்றேன்” என்றாள்.
எப்படியெல்லாம் லாக் பண்றா என்று உள்ளே குமுறினாலும் அடக்கி.. ‘கம்’ போட்டு அழுத்தி விட்டதைப் போல் இறுக மூடிக் கிடந்த உதடுகளைக் கஷ்டப்பட்டுப் பிரித்து.. அவளை முறைத்துப் பார்த்துப் பின் “போடி” என்று விட்டு விறுவிறுவென முன்னே நடந்தான் அவன்.
“தேங்க் யூ!!!! இப்போதைக்கு இந்தப் பதிலே போதும்” – என்று கத்தியவள் கலகலவென நகைக்கும் சத்தம் அவன் முதுகுக்குப் பின்னே ஒலித்தது.
