அத்தியாயம் - 4

அலை – 3

“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு”

“உங்களைக் காதலிக்குறேன்னு அர்த்தம்”

யர்ந்தத் தூக்கத்தில் ஆழ்ந்து போய்க் கிடந்தவன் திடீரெனக் காதருகே ஒலித்த சத்தத்தில் திடுக்கிட்டு விழித்துப் பதட்டத்துடன் எழுந்தமர்ந்தான். சத்தம் வந்தத் திசையில் குத்து மதிப்பாய் துழாவியவனின் கைகளுக்கு அவள் அகப்படாமல் போக.. கண்ணைக் கசக்கிக் கொண்டு விழித்தவன் கண்டது முழு இருட்டில் மூழ்கியிருந்தத் தன் வீட்டைத் தான்.

டக்,டக் என்ற கடிகாரத்தின் ஓசையைத் தவிர எந்தச் சத்தமும் இப்போது அவன் செவிகளைத் தீண்டாதிருக்க.. ‘ச்சை,கனவா’ என்றபடித் தன்னையே அவன் திட்டிக் கொண்டாலும், இன்னமும் படபடப்புக் குறைந்த பாடில்லை அவனுக்கு.

கொஞ்சமும் பயமின்றி.. ரொம்பவும் அசட்டையாக.. எத்தனை பெரிய வாக்கியத்தை உச்சரித்து சென்று விட்டாள்?, ராட்சசி! தூரமாய் நிற்பவளை எங்கோ ஓர் மூலையிலிருந்து ரசிக்கும் போதே.. அநியாயத்திற்கு நொந்து போவான் அவன்! இப்போது.. அந்தப் பெரிய இமைகளை அசால்ட்டாக அசைத்து.. நேர்ப்பார்வையால் காதல் சொல்லி.. அவன் இதயத்தை பெல்ட் கட்டாத நாயாக பாவித்துத் தரதரவெனத் தன்னோடு இழுத்துச் சென்றாளானால்.. என்ன ஆவான்?, உயிர் இருந்தும் கூட.. அவன் ஆன்மா மட்டும் அவனிடமிருந்து விலகி எட்டி நிற்கும் உணர்வு அவனுக்கு!

தன் ஆறடி உயர உடலையும், உள்ளங்கை அகல இதயத்தையும் அவளிடம் கொடுத்து பத்திரப்படுத்தி விட்டு கிறுக்கு பிடித்துப் போய் இவன் திரிய... அவன் ஆன்மா மட்டுமே இருக்கும் சூழ்நிலையை அவனுக்கு எடுத்துக் கூறி.. இந்த போதை தெளிய வழிவகுத்துக் கொண்டிருந்தது.

ஆனால் அதன் முயற்சி அனைத்தையும் தவிடுபொடியாக்குவதைப் போல் அவ்வப்போது அவள் கூறிய அந்த இரண்டு வாக்கியங்களையும் ரீபீட் மோட்-இல் ஒலிக்கச் செய்யும் மனது, அவனைத் தெளிய வைத்து தெளிய வைத்து போதை ஏற்றிக் கொண்டிருந்தது.

கிறுகிறுத்துப் போயிருக்கும் தலை, நேராக நிற்கிறதா அல்லது இன்னமும் சுற்றிக் கொண்டிருக்கிறதா என்றே புரியவில்லை அவனுக்கு.. கை,கால்கள் அத்தனையும் விரல்களை இழந்து லேசாகிப் போய் விட்ட உணர்வு.. கல்லீரல்,கணையம்,இரைப்பை போன்ற அத்தனை பாகங்களையும் நோகாமல் கழட்டித் தூர எறிந்து விட்டு.. இதயம் மட்டுமே உடல் முழுதையும் ஆக்கிரமித்துக் கொண்டதைப் போல் உணர்ந்தான். தலை முதல் கால் வரை ஒட்டு மொத்த உடலிலும் லப்-டப் சத்தம்.

பின்கழுத்தை அழுந்தப் பற்றித் தலையைப் பின்னுக்குச் சாய்த்துக் கண்களை அழுந்த மூடியவனுக்கு.. ஓடிச் சென்று.. நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருப்பவளை உலுக்கி எழுப்பி.. இறுகக் கட்டிக் கொண்டு.. அவளோடே சயனித்து விடும் வேகம் எழுந்து.. மூச்சடைக்க வைத்தது.

பெரிய பெரிய மூச்சுக்களை வெளி விட்டுத் தன்னை சமன் செய்ய முயன்றவன் முடியாமல்..,, “ம்மாஆஆ” என்றான்.

அவன் குரல் கேட்டு அடித்துப்பிடித்து எழுந்த ராணி நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவனைக் கண்டுப் பதறி “என்னய்யா தம்பி?, என்ன பண்ணுது?” எனக் கேட்டபடி அருகே வர....

சுருக்கிய முகத்துடன் “என்னமோ பண்ணுதும்மா இங்க” என்றான்.

“என்னப்பா, என்ன பண்ணுது?” என்றபடியே அவனது நெஞ்சை நீவினார் ராணி.

“நெஞ்சு நிறையா... ஏ...ஏதோ.. அடைச்சிட்டு நிக்கிற மாதிரி இருக்கும்மா”

“நைட் பரோட்டா திங்காதன்னு சொன்னா கேக்குறியா நீ?” – என அதட்டிய ராணியைக் கண்டு எரிச்சலுற்று அவர் கையைத் தட்டி விட்டு “ம்மாஆஆ” என்று கத்தினான் அவன்.

“இரு, சுடு தண்ணில சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைச்சுக் கொண்டாரேன்” – என்று எழப் பார்த்தவரைத் தடுத்து “ஒன்னும் வேண்டாம். பேசாம படு” என்றவன் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

ன்று அமிர்தகடேசுவரர் கோயில் திருவிழா கோடியக்கரையில் கோலாகலமாகத் தொடங்கியிருந்த நாள். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு நாகை மாவட்டத்திலிருந்து பலர் வருகை தரும் காலம் அது.

திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய அமுத கலசத்தை தேவலோகத்திற்கு ஏந்திச் சென்ற வாயு பகவான், அசுரர்கள் ஏற்படுத்திய சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அமுதம் சிறிதளவு சிந்தியதாகவும், அது சிவலிங்கமாக மாறி இக்கோவிலில் தோன்றியதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து அன்னையுடன் வெகுவாகப் போராடி சேலை கட்டிக் கொண்ட இளங்கவி ஒருவழியாகக் கோவிலுக்குக் கிளம்பியிருந்தாள்.

வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்லும் பேருந்தில் அவள் ஏறுகையில் இளவரசன் மற்றும் குடும்பத்தாரும் அவர்களுடன் இணைந்திருந்தனர்.

கூட்டமாக இருந்த பேருந்தில் அவன் படியிலேயே நின்று விட.. ராணியுடன் சேர்ந்து அவனுக்கு எதிரே.. அவன் முகம் பார்க்க முடிந்த ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்தவள்.. தன் முகம் முழுதையும் கண்ணாக்கி.. மிகவும் உரிமையாக அவனைப் பார்வையால் வருடினாள்.

வெள்ளை வேஷ்டியும்,பச்சை நிற சட்டையுமாய் தன் முன்னேயிருந்த இருக்கையின் கைப்பிடியில் தன் இடது கரத்தைப் பதித்திருந்தவனின் முன்னுச்சி முடி.. காற்றோடுக் கரம் கோர்த்திருந்தது. நெற்றியிலிருந்தக் குங்குமத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருந்த அவனது சிவந்த விழிகளைக் கண்டவளுக்கு.. அவன் தூக்கத்தைக் களவாடியதில் ஏக பெருமை!

அதுவரை வெளியே பார்வையைப் பதித்தபடி நின்றிருந்த இளவரசனின் விழிகள்... முன் நெற்றி முடியைக் கோதும் சாக்கில்.. பேருந்தினுள்ளே நோக்க.. அவனுக்கு நேர் எதிரே.. வெள்ளை வெயில் பட்டுத் தெறித்த முகத்துடன்.. கையைக் கட்டிக் கொண்டுத் தன்னையே பார்த்தபடி.. பச்சை நிறப் புடவையில் அழகியாய் அமர்ந்திருந்தவளைக் கண்ட நொடி.. அவனது லப்-டப் இதயத்தின் ஸ்ருதி வெகுவாகக் குறைந்து போனது.

‘உருவம் பார்த்தே... உசுரே போதே..

என்ன மாயம் தான் நீ செஞ்ச..

யாத்தே தாங்கல! தூத்த காட்டுல..

போதை ஏத்துதே மீச..

தீபம் ஊமையா.. போக.. சாபம் தான்..

நானும் கூடத் தான் ஆச..’

முழுச் சத்தத்துடன் பேருந்தில் ஒலித்த பாடலில் லேசாய் வளைந்த அவளது இதழ்களைப் பிரித்தறிய முடியாப் பார்வையுடன்.. தன்னை மறந்து நோக்கினான் அவன்.

அத்தனை நேரமாய் அவன் மீது பதிந்திருந்த கருமணிகளை இடப்புறமாய் நகர்த்தி ஓரப் பார்வையால் ராணி அத்தையை நோக்கியவள்.. அவர் கண்ணை மூடியபடி சாமியாடிக் கொண்டிருப்பதை உறுதி செய்து விட்டு.. மீண்டும் அவனை நோக்கி.. இடது கண்ணைச் சுருக்கி லேசாய்க் கண்ணடித்தாள்.

அவள் செய்கையில் திகைத்துப் பின் முறைத்து.. சட்டெனத் திரும்பி.. கை பதித்திருந்த இருக்கையில் முதுகைச் சாய்த்து.. இழுத்து ஒரு மூச்சை வெளி விட்டான் அவன்.

அவள் செய்ததை ரீவைண்ட் செய்து பார்த்து.. இதழ் விரித்து முழுப் பற்களையும் காட்டி அழகாய் அவன் புன்னகைத்ததை.. அவனுக்கு எதிரேயிருந்த தகர போர்டு அவளுக்குப் பிரதிபலிக்க... தானும் தோள் குலுங்கச் சிரித்தாள் அவள்.

பின்தலை முடியைக் கோதியபடி நிமிர்ந்தவனுக்கு எதிரேயிருந்த போர்டில் அவள் முகமும்,அதில் நெளிந்து கொண்டிருக்கும் புன்னகையும் தெரிய.. “ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... இப்பிடி சொதப்பிட்டியேடா” என்று ஒரு கண்ணைச் சுருக்கி.. நாக்கைக் கடித்து.. அசடு வழியச் சிரித்துப் பின் நிமிர்ந்து.. போர்டில் தெரிந்த அவள் முகத்தை அந்த பஸ் பயணம் முடியும் வரை உரிமையும்,காதலுமாய் நோக்கிக் கொண்டு வந்தான் அவன்.

ம்மா... நீராடுறதெல்லாம் நீ பண்ணிக்க.. இத்தாம்பெரிய சேலையைக் கட்டி விட்டதுமில்லாம.. இதோட கடல்ல வேற முங்கி எழுந்திருக்கனுமா?, ஆளை விடு”

ருத்ரதீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த ஆலயக் கடற்கரையில் ஊரே புனித நீராடிக் கொண்டிருக்க.. தன்னால் முடியாதெனக் கூறித் தன் அன்னையுடன் வம்பு செய்து கொண்டிருந்தாள் இளங்கவி.

“உனக்கு நல்ல புருஷன் கிடைச்சு நீ புள்ள,குட்டியோட நல்லவிதமா வாழனும்ன்னு தான் டி நான் நீராட சொல்றேன்”

“ம்மா.. இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகாத பொண்ணைப் பார்த்து கல்யாணம்,புள்ள,குட்டின்னு லூசு மாதிரி பேசிட்டிருக்க?, போம்மா அந்தப் பக்கம்”

“நான் சொல்ற பேச்சு எதையுமே கேக்கக் கூடாதுன்னு இருக்கியாடி?” – என்று லட்சுமி கத்திய சமயம், இளவரசன் அருகே வர.. அவனை ஓரப்பார்வையால் நோக்கியபடி..

“அதெல்லாம் எனக்கு நல்ல புருஷன் தான் கிடைப்பான்! வீணா நேரத்தைக் கடத்தாம.. எனக்கும் சேர்த்து நீ போய்க் கடல்ல குளி. பயப்படாம போ.. உன் பாடி சைஸையெல்லாம் எந்த அலையும் இழுத்துட்டுப் போய்டாது”

“அடியேய்... நான் கடல் ராணி டி”

“ம்ம், இந்த ஊர்ல பொறந்த அத்தனை பொம்பளைங்களும் இதே டயலாக்-அ தான் சொல்லிட்டுத் திரிங்க”

“அடங்காதவ” – என்ற கடைசிப் பொறுமலுடன் லட்சுமி நகர்ந்து விட.. அடக்கிப் பார்த்தும் முடியாமல்.. வாய் விட்டுச் சிரித்தான் அரசன்.

“எதுக்கு இந்த சிரிப்பு?, எனக்கு நல்ல புருஷன் கிடைப்பான்னு சொன்னதுக்கா?” – இளவரசனை நோக்கி கவி.

பதில் கூறாமல் சிரிப்பை அடக்கியவன் “பதினெட்டு வயசு கூட ஆகாத பொண்ணுக்கிட்டக் கல்யாணம்,புள்ள குட்டின்னு பேசுனா தான் தப்பா? அதே பொண்ணு காதல்,கண்றாவின்னெல்லாம் உளறுனா தப்புக் கிடையாதா?” என்றான்.

“காதல் ஒன்னும் கண்றாவியான விஷயம் கிடையாது”

“ஓஹோ.. இதோ உங்கப்பா வர்றாரு.. அவர் கிட்ட சொல்லு. அவரே தீர்ப்பு சொல்லட்டும்” – அவளிடம் கூல் ஆகக் கூறியவன் அவர்களருகே நெருங்கிக் கொண்டிருந்த செழியனைக் கண்டு புன்னகை புரிந்தான்.

“என்ன பாப்பா, தம்பி கிட்ட என்ன பேசிட்டிருக்கிற?” – செழியன்.

“ம்ம்ம்ம், அவங்க வீட்ல இவர் தான் மீன் குழம்பு வைப்பாராம். கொஞ்சம் எங்கப்பாருக்கும் சொல்லிக் கொடுங்கன்னு கேட்டுக்கிட்டிருந்தேன்”

“அதான, படிப்பைப் பத்தியெல்லாம் பேசிக்கிட்டிருந்தாத் தான் நீ எங்கயோ இருந்திருப்பியே!”

“இப்போ என்ன நான் படிக்காம போயிட்டேன்?”

“சரி,சரி வம்பு பண்ணாத கழுத” – என்ற செழியன் தானும் கடலுக்குச் சென்று விட்டார்.

கடலை வெறித்தபடி அமைதியாக நின்றவனை ஓரப் பார்வையால் பார்த்து விட்டு “ம்க்க்க்க்க்கும்” என்றாள் கவி.

“என்ன?” – இளவரசன்

“கண்ணெல்லாம் இப்பிடி சிவந்து போயிருக்கு?, நைட்டெல்லாம் தூங்கலயோ?” – நமுட்டுச் சிரிப்புடன் அவள்.

“ராட்சசி...” – தன்னை அவள் கண்டு கொண்டது மட்டுமில்லாமல், கேலி வேறு செய்ததில் எரிச்சலுற்று.. மெல்ல முணுமுணுத்தான் அவன்.

“ம்ம்?? என்ன சொன்னீங்க?”

“நீ நல்ல்ல்ல்லாத் தூங்குன போலயே!”

“அப்டிப் பட்டுன்னு சொல்லிட முடியாது. மனசுல இருக்கிறதை உங்க கிட்ட சொல்லிட்டேன்ற நிம்மதி ஒரு பக்கம் இருந்தாலும், நீங்க ஒரு பதிலும் சொல்லாம விலகிப் போனதை நினைச்சுக் கொஞ்சம் வருத்தமாத் தான் இருந்துச்சு. அதான் சரியாத் தூக்கம் வரல”

“நான் என்ன பதில் சொல்லனும்ன்னு எதிர்பார்க்குற?”

“இது என்ன கேள்வி?, ஆமா, நானும் உன்னைக் காதலிக்கிறேன்னு நீங்க சொல்லனும்ன்னு தான் எதிர்பார்ப்பேன்”

“சொல்லிட்டு?”

“ம்???”

“உன் கிட்ட சரின்னு சொல்லிட்டு அப்புறம் என்ன பண்ணனும்?”

“அப்புறம் என்ன அப்புறம்?, நிறைய காதலிக்கனும்.. கல்யாணம் பண்ணனும், புள்ளக்குட்டியெல்லாம் பெத்துக்கனும்”

“இது வெறும் கற்பனை. நான் நடப்பைக் கேக்குறேன்”

“புரியல”

“நான் சரின்னு ஒத்துக்கிட்டா.. நீ இந்த மாதிரி கேனத்தனமானக் கற்பனை பண்ணி கனவு கண்டுக்கிட்டே வீட்ல உட்கார்ந்துடுவ! ஆனா.. நான் அப்டி இல்ல. விடிஞ்சதும் எங்கம்மாவோட வியாபாரத்துக்கு போவேன், எங்கப்பாரோட தொழிலுக்கு உதவுவேன், என் தம்பிக்கு படிப்பு சொல்லித் தரவேன், அதோட என் படிப்பையும் பார்த்துக்குவேன். வரிசை கட்டி நிற்குற பொறுப்புங்களுக்கு மத்தில எனக்கு உன் நினைப்பு,இந்தக் கனவு,கற்பனை எல்லாம் பின்னுக்குப் போயிடும்”

“என்ன சொல்ல வர்றீங்க இப்ப?”

“உனக்குக் கனவு காணுறதைத் தவிர வேற வேலையில்ல. ஆனா எனக்கு அப்டி இல்லன்னு சொல்றேன்”

“நீங்க பார்த்தீங்களா? எனக்கு வேற வேலையில்லன்னு?, எனக்கும் தான் சமைக்கறது,பாத்திரம் கழுவுறது,துணி துவைக்குறது,படிக்கிறதுன்னு ஆயிரம் வேலையிருக்கு”

“நான் எவ்ளோ சொன்னாலும், உனக்குக் கடைசி வரைப் புரியப் போறதில்ல. உன்னால எங்கம்மா மாதிரி மீன் நாத்தத்துல உட்கார்ந்து வியாபாரம் பார்க்க முடியுமா?, இல்ல எங்கப்பா மாதிரி வேலை செய்யத் தான் முடியுமா?, நாங்கல்லாம் உழைக்குற கூட்டம்! உனக்கும்,எனக்கும் கோடி வித்தியாசம் இருக்கு. அதனால இப்டியெல்லாம் பேசிக்கிட்டு இனி என் பக்கம் வராத”

“ஹ்ம்ம்ம்ம், பஸ்ல வைச்சக் கண் வாங்காம பார்த்து 32 பல்லையும் காட்டி சிரிச்ச வேகம் என்ன, இங்க வந்து வசனம் பேசுற சோகம் என்ன?, ஓடிப் போய் கடலுக்குள்ள குதிச்சு 3 தடவை முங்கி எந்திரிங்க. இந்த மாதிரி யோசிக்கிறதையெல்லாம் மூளை நிறுத்திடும். அமிர்தகடேசுவரா... இவருக்கு அருள் புரிவாயாக!” – எப்போதும் போல் நக்கல் அடித்தவளிடம்..

“நீயெல்லாம் அடங்கவே மாட்ட” –என்று அவன் பல்லைக் கடிக்க..

“நன்றி”- எனக் கூறி சாதாரணமாய் பேச்சை முடித்தாள் அவள்.

அப்போதைக்கு நிறுத்திக் கொண்டாலும் தான் ஒரு அடங்காப்பிடாரி என்பதை அடுத்த நாளே அவனுக்கு நிரூபித்தாள்.

மறுநாள் எப்போதும் போல அன்னையின் மீன் வியாபாரத்திற்கு உதவுவதற்காக அவன் மார்க்கெட்டுக்குச் சென்ற போது.. தூக்கிக் கட்டியக் கொண்டையுடனும்,கையில் தராசுடனும் அந்தச் சிறிய முக்காலியில் அமர்ந்து கொண்டுத் தீவிர முக பாவத்துடன் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தாள் கவி.

“300 கிராம் சேர்த்தே இருக்கு. கூட 50 ரூபா போட்டு குடுக்கா”

அவளெதிரே நின்றிருந்த பெண்ணிடம் தராசைப் பார்த்தபடிப் பேரம் பேசியவளைக் கண்டு தூரத்திலேயே நின்று விட்டான் அவன்.

“30-ஆ வாங்கிக்க. நல்லா செவ,செவன்னு அழகான புள்ளையா இருக்கியே!, படிக்கிறியா?” – என்று கேட்டபடி பணத்தை நீட்டிய பெண்ணிடம் “ஹிஹிஹி” எனப் புன்னகைத்தவள்.. மீன் துண்டங்களை ஒரு பாக்கெட்டில் இட்டு அவரது கூடையில் வைத்தபடி “ஆமாக்கா” என்றாள்.

பணத்தை எண்ணி மீன்கள் குவிந்திருந்த சாக்கின் அடியில் வைத்தவள் “அயித்த, அந்தக்கா என்னைய அழகா இருக்கேன்னுச்சு, அதனால 20 ரூபா கம்மியா வாங்கிக்கிட்டேன்” என்று ராணியை நோக்கிக் குரல் கொடுக்க...

“நீ இப்பிடி வியாபாரம் பண்ணுன விளங்கிரும்டியாத்தா என் பொழப்பு” –வாடிக்கையாளர் ஒருவருக்காக மீன்களைச் சுத்தம் செய்தபடி அமர்ந்திருந்த ராணி பதில் குரல் கொடுத்தார்.

“20 ஓவாய்ல தான் உன் வியாபாரம் நிமிர்ந்து நிக்கப் போகுதாக்கும்” என்று திட்டியவள் தன் முன்னே வந்து நின்ற ஒருவர் “இந்த நெய்மீன் எவ்ளோம்மா?” எனக் கேட்டதில் திரும்பி “கிலோ 180 சார்” எனக் கூறியபடி மீண்டும் தராசைக் கையில் எடுக்க.. இயல்பாய் அந்தச் சூழ்நிலையில் பொருந்திப் போய் அமர்ந்திருந்தவளைத் தடதடக்கும் இதயத்துடன் நோக்கினான் அவன்.

எதேச்சையாக அவன் புறம் நோக்கிய கவி உதட்டைச் சுழித்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு “உன் மவன் ஏன் இஞ்சி தின்ன ஏதோ மாதிரி இப்புடி நிக்கிறாப்ல?” என்று ராணியிடம் முணுமுணுத்தாள்.

“அய்யா.. அரசு....” – என்ற ராணியின் குரலில் இமை தட்டி விழித்தவன் பின் எரிச்சலும்,கோபமுமாய் முன்னே நடந்து வந்து.. “நீ நகரு, நான் உரசுறேன்” என்றபடி ராணியை நகர்த்தி விட்டு மீன்களைச் சுத்தம் செய்ய அமர்ந்து விட்டான்.

அங்கிருந்த 1 மணி நேரமும் விடாது ஒலித்த அவள் குரல் மகிழ்ச்சிக்கு பதில்.. அநியாயத்திற்கு எரிச்சலைக் கொடுத்தது அவனுக்கு. எதை நிரூபிக்க இப்படிச் செய்கிறாளாம்?, அவன் வைக்கும் முற்றுப் புள்ளிகள் அத்தனையிலும் கோடிழுப்பவளைக் கண்டுக் கடுப்பானது.

அங்குமட்டுமில்லாது.. தொழிற்சாலையிலும்,உப்பளத்திலும் கூட வேலை செய்தாள் அவள்.

“எம்மவளுக்குத் திடீர்ன்னு பொறுப்பு வந்துருச்சு போல, அவங்கப்பாரோட ஃபேக்டரிக்குப் போய் வேலையெல்லாம் பார்க்குறா” – என லட்சுமி அத்தை வேறு விசயம் தெரியாமல் தெருவில் போவோர்,வருவோர் அத்தனை பேரிடமும் மகளைக் குறித்துப் பெருமை பேச, மொத்தமாய்க் காண்டாகிப் போனான்.

இவ்வனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் அன்று அவளது தோற்றம் அவனை வெகுவாகப் பாதித்து, அவளிடம் பொங்கியெழ வைத்தது.

அன்று மாலை தொழிற்சாலையில் அவன் தந்தையோடு வேலையில் ஈடுபட்டிருக்கையில் அங்கே வந்து சேர்ந்தவளின் முகமும்,உடலும் அதிகமாகவே சோர்ந்திருப்பது அவளைப் பார்க்கையிலேயே தெரிந்தது. ஆனாலும்.. அந்தப் பெரிய இமை மறைத்த கண்களில் மட்டும் கொஞ்சமும் ஒளி குறையவில்லை.

தலை முதல் கால் வரை அவளைப் பொறுமையாய் ஆராய்ந்தவன், செருப்பு அணிந்திருந்த அவளது வெண் பாதங்கள் தோல் உரிந்து போய் பரிதாப நிலையில் காட்சியளித்ததைக் கண்டு விழி சிவக்கக் கோபம் கொண்டான்.

இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டுமெனத் தீர்மானித்தவன் தந்தைக்கு முன்பே கிளம்பி.. அவளுக்காக வழியில் காத்திருந்தான்.

அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவைக் கசக்கிக் கொண்டு தூரத்தில் தெரிந்த கடலலையைக் கண்டபடி நடந்து வந்தவள், வழியில் நின்றிருந்தவனைக் கண்டு விழி விரித்தாள்.

மனசு மாறிட்டானோ! இருக்காதே! யோசனையுடன் அவனை மேலும்,கீழும் அளந்தபடி வந்து நின்றவளைக் கண்டு மேலும் கோபம் பெருகியது அவனுக்கு.

“என்ன பண்ணிட்டிருக்க நீ?” – நேரடியாகச் சண்டை கட்டினான் அவன்.

“துப்பட்டா நுனியைக் கசக்கிட்டிருக்கேன். ஏன் தப்பா?”

பதில் கூறாமல் முறைத்தவனை அசால்ட்டாய்ப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டாள் அவள்.

“எதை நிரூபிக்க இப்டில்லாம் பண்ற நீ?, பாதத்தைப் பாரு, எப்படியிருக்குன்னு. உப்பளத்துல வேலை செய்ய நானே போக மாட்டேன். உன்னை யாரு அங்க போகச் சொன்னது?”

எரிச்சலும்,கோபமுமாய் வினவியவனைக் கண்டு.. ஒரு காலை பின்னே கொண்டு சென்று பாதங்களை மறைக்க முயற்சித்தவள் “இவரு ஏன் என் காலைப் பார்க்குறாராமாம்” என்று முணுமுணுத்து விட்டு..

“ப்ச், இது என்ன வம்பாப் போச்சு?, எங்கப்பா வைச்சு நடத்துற உப்பளம். நான் அங்க போயிட்டு வர்றேன். உங்களுக்கென்ன அதுல?”

“இத்தனை நாளா இல்லாம இப்ப என்ன புதுசா உங்கப்பாரோடத் தொழில் மேல உனக்கு அக்கறை?”

“...............”

“என்னால தான?,நான் சொன்னதால தான?”

“ஹலோ! ரொம்பல்லாம் கற்பனை பண்ணாதீங்க”

“நான் கற்பனை பண்றேனா?, பேசாத! எனக்குக் கண்ணு,மண்ணு தெரியாம கோபம் வருது. இழுத்து வைச்சு நாலு அறை விட்ருவேன்”

“பார்ரா... உங்களுக்கு இப்டில்லாம் பேசத் தெரியுமா?”

“நாளைலயிருந்து நான் உன்னை ஃபேக்டரிலயோ,மீன் கடைலயோ பார்க்கக் கூடாது. நீ வராத. சொல்லிட்டேன்”

“அடேங்கப்பா!, நீங்க சொன்னா.. நான் கேட்றனுமா?”

“சரி கேட்காத. ஆனா.. ஒரு விசயத்தை நல்லாத் தெரிஞ்சுக்க. நீ என்ன பண்ணாலும், நீ நினைக்குறது நடக்கப் போறதில்ல. உனக்கும்,எனக்கும் இடைல என்ன எழவு இருந்தாலும்,அதுக்கு எதிர்காலமில்ல”

-உள்ளேயிருந்த சோர்வை மறைத்து அதுவரை வாயாடிக் கொண்டிருந்தவளுக்கு, சட்டமாய் அவன் பேசியதைக் கண்டு கடகடவெனக் கண்களில் கண்ணீர் உற்பத்தியாகி, மூக்கு விடைத்தது.

அவனுக்காகத் தான் இது அத்தனையையும் செய்கிறாள். உண்மை தான்! அவள் இத்தனை படியிறங்கி.. அவன் உயரத்திற்கு நிகராக நிற்க முயற்சிக்கும் போது.. அவன் ஒரு படி மேலே ஏறி வரக் கூடாதா?

இந்த அக்கறை எதற்காக?, அவள் கேட்டாளா?, என்னவோ செய்து விட்டுப் போ என்று தண்ணீர் தெளித்து விட்டிருந்தால் கூட இத்தனை வலித்திருக்காது. காலில் என்ன,கையில் என்ன எனக் கேட்டு அக்கறை காட்டுவானாம். ஆனால் குத்த,குத்தப் பேசி அவளை நோகடிக்கவும் செய்வானாம்.

உதட்டைக் கடித்துக் கண்ணீரை உள்ளே தள்ளியவள்..

“நான் எதிர்காலத்தைப் பத்தியெல்லாம் எப்பவும் யோசிக்கிறதில்ல. எனக்கு நிகழ்காலமே போதும்” – என்றாள்.

“இதுக்குப் பேரு தான் முட்டாள்தனம்”

“இருக்கட்டும். வழி விடுங்க நான் போகனும்”

“நான் விட்டுட்றேன். நீயும் விட்ரு. இனி என் வழில குறுக்க வராம, ஒதுங்கியே இருக்கப் பாரு”

“முடியாதுன்னு சொன்னா என்ன செய்வீங்க?”

“உன் கையைப் புடிச்சு இழுத்துட்டுப் போய் உங்கப்பா முன்னாடி நிக்க வைப்பேன். என் கிட்ட நீ சொன்ன அத்தனையையும் அவர்க் கிட்டயும் சொல்ல வைப்பேன். அதுக்கப்புறம் உங்கப்பா யார் காலை உடைக்கிறாரோ, யார் உயிரைப் பறிக்கிறாரோ.. அவராப் பார்த்து செய்யட்டும்ன்னு கைக் கட்டி நின்னுடுவேன்”

“...............” – பதில் சொல்ல முடியாமல் இறுகிப் போய் நின்றவளை இகழ்ச்சியாய் நோக்கி..

“என்ன பயமா இருக்கா?” என்றான்.

நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு விறுவிறுவென முன்னே நடந்து சென்றவளை.. வேக,வேகமாய் மூச்சு விட்டு அடித்துக் கொள்ளும் இதயத்துடன் நோக்கியவன்.. இரு கைகளாலும் பின்னந்தலையைப் பற்றிக் கொண்டான்.

பின்னே?, ஓய்ந்து போயிருந்தக் கண்கள் தான் என்றாலும், அதில் மிளிரும் பிரகாசத்தோடு போட்டி போட முடியாமல் அந்தச் சோர்வு பின்னடைந்து விட, பளீரிட்டுக் கொண்டிருந்த விழிகளால்.. சுட்டெரிக்கும் பார்வையொன்றை வீசி.. ஏக்கம்,காதல்,ஆசை என அத்தனையையும் கலந்தடித்து நோக்கி.. அவனைக் கலங்கடித்து விட்டு விடுவிடுவெனச் சென்றவளைக் கண்டுத் தலையைப் பிடித்துக் கொள்ளாமல்.. என்ன செய்வான் அவன்?

அடுத்த மூன்று நாட்கள் அவன் கண்ணில் படவேயில்லை அவள்.

“தொண,தொணன்னு பேசிக்கிட்டு 10 நாளா என் கூடவே உட்கார்ந்திருந்தா என் அண்ணன் மவ!, அவ இல்லாம.. இன்னிக்கு வியாபாரம் பண்ணவே எனக்குப் புடிக்கல தம்பி” – எனப் புலம்பிய ராணியை முறைத்து..

“அதுக்கு என்ன தலையெழுத்தா?, உன் கூட வியாபாரம் பண்ணுனாத் தான் அவளால கஞ்சி குடிக்க முடியுமா?, பத்து பேர் வீட்டுக்கு சோறு போட்டுட்டு இருக்காரு அவங்கப்பாரு!, அவளுக்கு எதுக்கு இந்த ஆசை?” என்றான் இளவரசன்.

“ச்ச, ஏன்ப்பு அப்புடிச் சொல்ற?, அவுகளும் ஒரு காலத்துல நம்மள மாதிரி மீன் வியாபாரம் பண்ணிப் பொழச்சவக தான்!, அந்தப் பழக்கத்துக்குத் தான் லட்சுமி மதினி அவளை என் கூட அனுப்புச்சு. இதெல்லாம் அனுபவம் தான்ப்பா!, அவுகளே வித்தியாசம் பார்க்காம பழகுறப்ப.. நாம இப்பிடிப் பேசுறதெல்லாம் தப்பு”

“அந்த ஒரு காலம்ன்றது மாறி அவங்க எப்பவோ முன்னேறிப் போயிட்டாங்க. என்னமோ அவ இனி உன் கூட தினம் வியாபாரத்துக்கு வரப் போற மாதிரி.. அநியாயத்துக்கு வசனம் பேசுற?”

“தினம் வாரேன்னு தான் சொல்லுச்சு. பாவம், உடம்பு முடியல போல, மூஞ்சியெல்லாம் வீங்கிப் போய் படுத்த படுக்கையாக் கிடக்கு. நண்டு ரசம் வைச்சுக் குடுக்கனும் இன்னிக்கு” – என்று புலம்பியபடியே ராணி சென்று விட.. இவனுக்குத் தான் உள்ளே ஒரு உறுத்தல்.

ஐந்து நாட்களுக்கும் மேலாக அவளைக் காணாமல் கடத்தியவனுக்கு, அதன் பின்பு.. தாக்குப் பிடிக்க முடியாது போனது. எங்கோ தொலைந்து போய் விட்ட உணர்வுடன்.. சுற்றுப்புறம் மறந்து போய்.. உம்மென்ற முகத்துடனே வலம் வந்தான். ஆனால்.. தப்பித் தவறி கூட.. அவள் வீடிருக்கும் திசைப்பக்கம் பார்வையைக் கூடச் செலுத்தவில்லை. செலுத்த விரும்பவுமில்லை. கஷ்டமோ,துக்கமோ தனக்குள்ளேயே ஒழிந்து போகட்டுமென்கிற நினைப்புடன் இருந்தான்.

ஆறாம் நாள் இரவு ஃபேக்டரியிலிருந்து சோர்வுடன் திரும்பியவனை வாசலிலேயே வழி மறித்த ராணி ஒரு தூக்குச்சட்டியை அவன் கையில் திணித்து..

“இதை லட்சுமி மதினி வீட்ல குடுத்துட்டு வாப்பா. அம்மா பேச்சி வீட்டு விசேஷத்துக்குப் போறேன்”-என்றார்.

“ப்ச், தமிழ் கிட்டக் குடுத்து விடும்மா. என்னாலலாம் போக முடியாது” – கடுப்படித்தவனிடம்..

“அந்தப் பொடிப் பய, விசேஷ வீட்டுக்கு அப்பவே ஓடிட்டான்ய்யா. லட்சுமி மதினியும், அண்ணனும் ஊருக்குப் போயிருக்காங்க, புள்ள பாவம் பசியோட கிடக்கும். காய்ச்சல் வந்து படுத்த உடம்பு வேற!” – என்று ராணி புலம்ப..

“அப்டின்னா நீ போய்க் குடு” – என்று அவன் மறுத்துக் கொண்டிருக்கையில்.. “ராணி எக்கா” என்ற குரல் கேட்டு அவர் “இந்தா வாரேன்” என்றபடி அவனைக் கண்டு கொள்ளாமல் சென்று விட.. எரிச்சலுடன் தூக்குச்சட்டியை வெறித்தான் அவன்.

எப்போது வாய்ப்பு கிடைக்கும்?, கிடைக்கும் இடைவெளியில் எப்படி சைக்கிள் ஓட்டலாம் எனக் காத்துக் கொண்டிருக்கும் அவனது மனசாட்சியின் ஒரு பகுதி, அவளைக் காணப் போகும் சந்தோஷத்தில் குதி,குதிக்க... மற்றொரு மனமோ.. அவளைக் கண்ட பிறகு.. ஆசைக்கும்,நடப்புக்கும் இடையே சிக்கிக் கொண்டு போராடப் போகும் அவன் பரிதாப நிலையை எண்ணி சோர்வடைந்தது.

நெற்றியை அழுத்தித் தேய்த்தபடி ஒரு நொடி நின்றவன்.. பின் விறுவிறுவென அவளது வீடு நோக்கி நடந்தான்.

திறந்து கிடந்த வாசல் கதவைக் கடந்து உள்ளே சென்றவன்.. சத்தமின்றி அமைதியாக இருந்த வீட்டைச் சுற்றி சுற்றி நோக்குகையில்.. அடுக்களையிலிருந்து ‘லொக்,லொக்’ என அவள் இருமும் சத்தம் வெளி வந்தது.

அதைத் தொடர்ந்து.. பெரிதாய் ஒரு புகை குபு,குபுவென வெளி வர.. என்னவோ,ஏதோவென்று பதறியபடி அருகே சென்றான்.

சப்பாத்தி சுடுவதற்கு முயற்சித்திருப்பாள் போலும். தீய்ந்து போய்க் கருவாடாய்க் காட்சியளித்த ஒரு வட்ட உருவத்தை இரு விரல் நுனியால் தூக்கிக் குப்பையில் கிடாசியவள், பரபரவென ஜன்னலைத் திறந்து வைத்த படி மேலும் லொக்,லொக் என இருமினாள்.

கண்ணில் சேர்ந்து விட்ட நீருடன் திரும்பியவள், அடுக்களை வாயிலில் அவளையே பார்த்தபடி நின்றிருந்தவனைக் கண்டுத் திகைத்ததில்.. மேலும் இருமல் அதிகரிக்க.. ஒரு செம்புத் தண்ணீரைக் கடகடவெனக் குடித்துத் தன்னைச் சமன் செய்ய முயன்றாள்.

அவள் செய்கையைக் கண்டு கொள்ளாமல் கையிலிருந்தத் தூக்குச்சட்டியை சமையல் மேடையில் வைத்தான் இளவரசன்.

அருகிலிருந்தப் பாத்திரங்களைத் திறந்து பார்த்து சப்பாத்தியைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கு அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லையென்பதை உறுதி செய்து விட்டு.. கடகடவென மாவை உருட்டி அவனே சப்பாத்தித் தேய்க்கத் துவங்கினான்.

கையைப் பிசைந்தபடி அவன் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவசரமாய்...

“நான்.. நானே பண்ணிக்குவேன்” எனக் கூற.. அவள் குரல் காதில் ஒலிக்காதது போல் கருமமே கண்ணாயிருந்தான் அவன்.

முழுதாக ஒரு நிமிடம் அமைதியாய் நின்றவள்.. மெல்லிய குரலில்..

“சப்பாத்தி மட்டும் தான் போட வராது. மத்ததெல்லாம் ஓரளவு நல்லாத் தான் சமைப்பேன்” என்றாள்.

ஒரு நிமிடம் தேய்ப்பதை நிறுத்தியவன் தோள் குலுங்க “ஹ்ம்” என நக்கலாய்ச் சிரித்து விட்டு வேலையைத் தொடர.. எரிச்சலுடன் பல்லைக் கடித்தாள் அவள்.

வெந்து விட்ட சப்பாத்தியை அவன் தோசைக் கரண்டியால் எடுத்த சமயம்.. அருகிலிருந்தத் தட்டை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டு அவன் முன்னே நீட்டினாள்.

அவளை ஏற,இறங்க ஒரு பார்வை பார்த்து விட்டு சப்பாத்தியை அவள் தட்டிலிட்டான் அவன்.

ராணி கொடுத்தனுப்பிய இறால் தொக்குடன் அவன் அடுத்தடுத்துத் தட்டிலிட்டச் சப்பாத்திகளைக் கடகடவென உண்டவள்.. “போதும்” எனக் கூறுகையில்.. திருப்தியாய் ஒரு முறுவல் வந்தது அவள் முகத்தில்.

கையைக் கழுவிக் கொண்டு நகரப் பார்த்தவனிடம்..

“நன்றியெல்லாம் சொல்லனுமோ??” – அவசரமாய் வினவினாள் அவள்.

நின்று.. திரும்பி அவள் முகம் நோக்கினான் அவன். பச்சையும்,சிகப்புமாய் பாவாடை,சட்டை அணிந்திருந்தாள். குழந்தைக்கும்,குமரிக்கும் இடையேயான ஒரு தோற்றம். அது கூட அவனைக் கவரத் தான் செய்தது.

காலையிலிருந்து தலை வாரவில்லை போலும். அசட்டையாகக் கொத்து முடியை இரண்டு காதோரங்களிலும் செருகி வைத்திருந்தாள். நெற்றியில் பொட்டில்லை. கண்ணில் மையில்லை. காதில் மட்டும் சின்னதாய் ஒரு தோடு. காய்ச்சலில் வாடி,வதங்கிப் போய்... சோர்வை மறையாது எடுத்துக் காட்டிய ஓய்ந்து போன தோற்றத்துடன்.. அவன் முன்னே நின்று, காதலை மீறிய ஒரு அன்பு,பாசத்தை,தாய்மை உணர்வை அநியாயத்திற்கு அவன் நாடி,நரம்புகள் அத்தனையிலும் ஊறச் செய்து கொண்டிருந்தாள் அவள்.

அவன் பார்வை தன்னைக் கோபமும்,காதலுமாய்.. அதை மீறிய இயலாமையுமாய் நோக்குவதைப் புரிந்து கொண்டவள்.. மெல்லத் தலை குனிந்தபடி..

“உங்களுக்காகத் தான் வேலைக்கு வந்தேன். ஒத்துக்கிறேன். அதுக்காக உங்களுக்காக மட்டுமே வந்ததா.. என்னை மட்டமா எடை போடாதீங்க. இப்ப மட்டுமில்ல. இத்துனூண்டா இருக்கும் போதே ராணி அத்தையோட,சரளா மதினியோடல்லாம் நான் வியாபாரத்துக்குப் போயிருக்கேன். பத்தாவது லீவையெல்லாம் உப்பளத்துலயே கழிச்சிருக்கேன். அதான்.. நீங்க என்னைய.. வெள்ளி ஸ்பூன்ல சாப்பிட்டு, தங்க டம்ளர்ல பால் குடிச்ச பெரும்பணக்காரி மாதிரி நடத்துனதும் கோபம் வந்துடுச்சு. பெருசா முறைச்சுக்கிட்டு விறுவிறுன்னு ஓடி வந்துட்டேன்.” என்றவள்.. சற்று நகர்ந்து... கரித்துணியைக் கையில் எடுத்து சமையல் மேடையைத் துடைத்தபடி...

“ஏற்கனவே நீங்க ஏதேதோ நினைப்புல குழம்பிப் போய் உள்ளுக்குள்ளயே மருகிக்கிட்டு இருக்கிறதா மனசுல பட்டுச்சு. உங்களை மேல,மேலக் காயப்படுத்துற மாதிரி நான் நடந்துக்கிட்டேனோன்னு ஒரு மாதிரி.... கஷ்டமா....” என்று பேசிக் கொண்டே ஓரப் பார்வையால் அவனை நோக்கினாள்.

முகம் முழுதும் பரவிப் படர்ந்திருந்தக் காதலுடன்.. அவளையே பார்த்தவனிடம்...

“இ..இப்பவும்... உங்களைக் கஷ்டப்படுத்துற மாதிரி தான் நடந்துக்கிறேனா?” எனக் கேட்க.. வேக மூச்சுடன் ஒரு நொடி எங்கோ நோக்கியவன்.. அடுத்த நொடி.. ஒரே எட்டில் அவளருகே வந்து.. கற்றை முடி ஒதுங்கியிருந்தக் காதோரங்களைத் தன் இரண்டு கைகளாலும் பற்றித் தூக்கித் தன் முகம் காணச் செய்தான்.

“ரொம்ப அறிவாளியா பேசுறதா நினைப்பா?” – குரல் ஏனோ அநியாயத்திற்க்குக் கரகரத்துப் போயிருந்தது.

தன் சூடான கன்னத்தில் பதிந்திருந்த அவனது கரங்களின் சில்லிப்பு... சிலிர்ப்பாய் மாறி.. ரத்தத்தோடு ரத்தமாய் அவள் உடல் முழுதும் ஓட... பதில் கூறாமல் அவன் முகத்தையே விரிந்த விழிகளுடன் நோக்கினாள் அவள்.

என்ன செய்ய வேண்டும் அவன் இப்போது?, மெல்ல,மெல்ல விரிந்து ஆழ் கிணறாய் அகன்று நிற்கும் இந்தக் கரு விழிகளுக்குள் தொபுக்கடீர் எனக் குதித்து விட வேண்டுமா?, இறுக்கமாய் மூடிக் கிடக்கும் இந்தச் சின்ன இதழ்களின் கதவை.. அழுத்தமாய் முத்தமிட்டு.. திறக்கச் செய்ய வேண்டுமா?, இயல்பாய்ச் சிவப்பேறிப் போய்.. அவன் உள்ளங்கையில் பாந்தமாய் அடங்கியிருக்கும் இந்தக் கன்னங்களில்.. தன் கன்னங்கள் புதைய.. அவளுள் மூழ்கிப் போக வேண்டுமா?

முட்டிக் கொண்டு முன்னே வந்து.. வரிசை கட்டி நின்ற அத்தனை உணர்வுகளின் ஆரவாரத்திற்கும் செவி சாய்க்காமல்.. அவள் புருவத்தின் உயரத்தைத் தொட்டு விடத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த நீண்டக் கரு இமைகளிடம் மட்டும் தன்னைத் தொலைத்து விட்டு.. மொத்தமாய் மயங்கிப் போய் நின்றான் அவன்.