அத்தியாயம் - 5
அலை – 4
காலியாக இருந்த அந்த வகுப்பறையின் கடைசி இருக்கையில் குனிந்தத் தலையுடன் அமர்ந்திருந்த இளவரசனின் கையில் கனமாய் ஒரு புத்தகம். படித்துக் கொண்டிருக்கிறான் போலும்! சுருக்கிய புருவங்களுடன்.. அதி தீவிரமாய் அப்புத்தகத்தின் பக்கங்களில் மூழ்கிப் போயிருந்தவனைக் கண்டபடியே அந்த வகுப்புக்குள் நுழைந்தாள் இளங்கவி.
டொக்,டொக் என அவன் அமர்ந்திருந்த பெஞ்சைத் தட்டிய விரல்களைக் கண்டும்.. அவளை நிமிர்ந்து பார்க்க மனமின்றி.. புத்தகத்திலேயே பார்வையைப் பதித்திருந்தான் அவன்.
கையைக் கட்டிக் கொண்டு கோபத்துடன் அவனை முழுதாக ஐந்து நிமிடம் வெறித்து நோக்கியவள் பின் தனது வலது கையை நீட்டி.. அவன் நாடியைப் பற்றி முகத்தை நிமிர்த்தும் முயற்சியில் இறங்க... பட்டென அவள் கையைத் தட்டி விட்டு தலையைப் பின்னே கொண்டு சென்றான் அவன்.
“என்ன?, எதுக்குத் தட்டி விட்றீங்க?, நீங்க மட்டும் ரெண்டு கையால என் கன்னத்தை இப்புடிப் பிடிச்சு பேசலாம். நான் உங்களை லேசாத் தொட்டா தப்பா?”
“ப்ச். உனக்கு என்ன வேணும் இப்போ?”
“அப்டி என்ன பெருசா நடந்து போச்சுன்னு 10,15 நாளா வீட்டுப்பக்கம் எட்டிப் பார்க்காம இருக்கீங்க?, பரீட்சை,குரூப் ஸ்டடி அதான் கேசவன் வீட்ல தங்கியிருக்கேன்னுல்லாம் பொய் சொல்லாதீங்க.”
“பின்ன?, உனக்கு பயந்துக்கிட்டு நான் வீட்டுப் பக்கம் வராம இருக்கேன்னு நினைச்சியாக்கும்?”
“நீங்க எனக்குப் பயப்பட்ற ஆசாமியா இருந்தா என் பொழப்பு ஏன் இப்டி இருக்கப் போகுது?”
“ஏன் டி பேசிப் பேசியே மனுஷனைக் கொல்ற?”
“என்னைக்குமில்லாம இப்ப மட்டும் என்ன குரூப் ஸ்டடி வேண்டிக் கிடக்கு?, என்ன கலெக்டர் உத்தியோகத்துக்கா பரீட்சை எழுதப் போறீங்க?”
“படிப்பைப் பெருசா மதிக்கிற சூழ்நிலையில நீ இல்ல. அதான் இப்டிப் பேசுற. ஆனா எனக்கு அப்டிக் கிடையாது. நான் படிக்கிற படிப்பு தான் என்னோட, என் குடும்பத்தோட எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகுது.”
“இப்போ யார் உங்களைப் படிக்க வேணாம்ன்னு சொன்னது”
“நீ தான். அமைதியா படிச்சிட்டிருந்தவன் முன்னாடி வந்து நின்னு அநாவசியமா பேசி டிஸ்டர்ப் பண்ற”
“சரி, நான் டிஸ்டர்ப் பண்ணல சாமி” – கோபத்துடன் கூறியவள் அவனுக்கு அருகே இருந்த பெஞ்சில் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
ஆனால் நொடிக்கொருதரம் திரும்பித் திரும்பி தன்னையே பார்ப்பவளை உணர்ந்து எரிச்சலுற்று “என்ன?” என்றான் அவன். புத்தகத்திலிருந்துப் பார்வையைத் திருப்பாமல்!
“என்ன?” – கவி.
“எதுக்கு இப்டி பார்க்குற?”
“பத்து,பதினைஞ்சு நாளா பார்க்கலேல? அதான் பார்க்குறேன்”
“..............”
“நான் என்ன உங்களை மாதிரியா?, முகத்தைப் பார்க்கக் கூட விருப்பப்படாம ஓடி ஒளியுறதுக்கு?, எனக்கெல்லாம் உங்களைப் பார்க்கலேன்னா.. சரியாத் தூக்கம் கூட வராது”
“நான் ஒன்னும் ஓடி ஒளியல”
“..............”
“தினம் உன்னைப் பார்த்துட்டு தான் இருக்கேன். காலைல நீ பஸ்ஸை விட்டு இறங்கும் போது, மதியம் மரத்தடில உட்கார்ந்து சோறு சாப்பிடும் போது, சாயங்காலம் மறுபடி பஸ் ஏறும் போது” – எதிரிலிருந்த கரும்பலகையை வெறித்தபடி அமைதியான குரலில் கூறியவனைப் பதிலின்றி நோக்கினாள் அவள்.
“அப்பிடி எதுக்கு ஒளிஞ்சிருந்து என்னைப் பார்க்கனுமாம்?” – அடக்கப்பட்டக் கோபத்துடன் வெளி வந்தது அவள் குரல்.
“நீ சொன்ன காரணம் தான்! நைட் நல்லாத் தூங்கனுமே!”
வாயடைத்துப் போய் அவனை ஆ-வென நோக்கியவள், அடுத்த நொடியே கேள்வி கேட்டாள்.
“இதுக்கு என்ன அர்த்தம்?”
“.................”
அவன் புறம் திரும்பி அமர்ந்தவள் ஆர்வத்துடன் அவன் முகம் நோக்குவது.. அவனுக்குப் புரிந்து தானிருந்தது. ஆனாலும் பதில் சொல்ல விரும்பவில்லை அவன்.
“பதில் சொல்லுங்க”
“அர்த்தம் எதுவாயிருந்தாலும்.. அதை அடுத்த நிலைக்கு எடுத்துட்டுப் போற ஐடியா எனக்குக் கிடையாது. அதனால உனக்குப் பதில் சொல்லவும் முடியாது என்னால.”
பொறுமையற்ற மூச்சுடன் புருவத்தை நீவினாள் அவள்.
இன்னமும் அவன் தன் பார்வையைக் கரும்பலகையிலேயே பதித்திருந்தான்.
“இதுக்குப் பேரு என்ன தெரியுமா?” – முழு எரிச்சலுடன் கவி.
“.................”
“கோழைத்தனம்”
“................”
“மனசுல இருக்குற ஆசையை மொத்தமா குழி தோண்டிப் புதைச்சுட்டு யாருக்காக இப்படி வாழ்றீங்க?, அப்படி என்ன நடந்துடும்ன்னு பயப்பட்றீங்க?”
“இது பயம் இல்ல. என்னைச் சேர்ந்தவங்களையும், உன்னைச் சேர்ந்தவங்களையும் நான் சங்கடப்படுத்த விரும்பல. வயசு வேகத்துல நான் செய்ற செய்கையால என்னைப் பெத்தவங்க அவமானப்பட்றதை என்னால தாங்கிக்க முடியாது. “
“என்னைக் காதலிக்கிறது அவமானத்துக்குரிய விஷயமா உங்களுக்கு?”
“அவமானம்ன்ற வார்த்தையே உனக்கு அவமானமா தெரியுதா?, நாளைக்கு இன்னும் விரும்பத்தகாத பல வார்த்தைகளைச் சொல்லி இந்த உணர்வை எல்லாரும் கொச்சப்படுத்துவாங்க. மேல் தட்டுப் பொண்ணை மடக்கி செட்டில் ஆக நான் ப்ளான் பண்ணிட்டதா பேசலாம், இதுல என் குடும்பமும் உடந்தைன்ற பேச்சு வரலாம்! எங்கப்பா, உங்கப்பாவுக்கு நேர்மையா நடந்துக்காம போய்ட்டதா ஊர் சொல்லும்! எங்கம்மா, உங்கம்மாவுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டதா உங்கம்மா நினைக்கலாம்.”
“...............”
“ஆசை மனசுல தோணுறது இயல்பு தான். ஆனா.. அது நிறைவேறியே ஆகனும்ன்ற கட்டாயம் எனக்கு இல்ல. என் சுயநலத்தை விட.. எனக்கு.. என்னைச் சுத்தியிருக்கிற, உன்னைச் சுத்தியிருக்கிற எல்லாரும் முக்கியம்.. எல்லாரோட நிம்மதியும் முக்கியம்”
“..............”
“நான் பேசுறதெல்லாம் பேசிட்டேன். இதுக்கு மேல.. உன் கூடப் போராட எனக்கு சக்தியில்ல. ஒவ்வொரு தடவையும் நீ நெருங்கி வரும் போது.. மனசு ரொம்ப பலவீனப்படுது. நீ விலகிப் போனப்புறம் உன் நினைப்புக் கொடுக்கிற தாக்கத்துல இருந்து.. மீள முடியாம ரொம்ப,ரொம்பத் தவிச்சுப் போயிட்றேன்.. என்னால முடியல சுத்தமா.... தயவு செஞ்சு என்னை இதுல இருந்து காப்பாத்து....”
-கரகரத்துப் போனக் குரலுடன்.. அவள் முகம் பாராமல்.. எங்கோ வெறித்துக் கொண்டு.. சிவந்த கண்களுடன்.. அடித் தொண்டையில் வார்த்தைகளை உதிர்த்தவனை... இயலாமையில் விளைந்த கோபத்துடன்.. கண்ணீர் முட்ட நோக்கினாள் அவள்.
“போ இங்கயிருந்து...” – மீண்டும் புத்தகத்தை நோக்கிக் குனிந்தபடி அவன்.
“................”
“போ-ன்னு சொல்றேன்ல?”
“எனக்கு ஒரே ஒரு பதில் தெரியனும்.” - கவி
“................”
“நீங்க என்னைக் காதலிக்கிறீங்க தான?”
“...............”
“பதில் சொல்லுங்க”
“காதலிக்கிறேனோ இல்லையோ.. மனசு நினைக்கிறதை உனக்கான பதிலா சொல்ற நிலைமைல நான் இல்ல. அதனால போ இங்கயிருந்து”
“ஆமா காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. நீங்க சொன்ன எல்லாரையும் நான் சமாளிக்கிறேன்.”
-ஆர்வமும்,ஆசையும் போட்டி போட அவன் முகம் பார்த்தவளை என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு. மைக் பிடிக்காத குறையாக ஒவ்வொரு முறையும் அவன் தொண்டை வற்றப் பேசுவது எதுவும்.. அவள் மூளையைச் சென்றடைவதாகத் தோன்றவேயில்லை அவனுக்கு. புரிந்தும்,புரியாதது போல்.. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அவள் பிடியிலேயே நிற்பவளைக் கண்டு எரிச்சல் வந்தது.
முழுக் கோபத்துடன் அவள் புறம் திரும்பியவன்.. “எப்படி சமாளிப்ப?” என்றான்.
ஆர்வத்துடன் “நான்..” எனத் துவங்கியவளைக் கையமர்த்தி விட்டு...
“நான் சொல்லட்டுமா எப்படி சமாளிப்ப-ன்னு?” எனத் தொடங்கினான்..
“நேரா உங்கப்பாக் கிட்டப் போய், நம்ம கிட்டக் கூலி வாங்கித் திங்குற செந்தாமரை மகனை நான் காதலிக்குறேன்ப்பான்னு சொல்லிப் பாரு. உடனே, தான் பெத்த ஒரே மக ஆசையை எப்படியும் நிறைவேத்திடனும்ன்னு உங்கப்பா உன் கையப் புடிச்சு என் கைல குடுத்து வாழ்த்து சொல்லுவார்ன்னா நினைச்ச?, என்னடா செஞ்ச என் மகளைன்னு கேட்டு முதல் வேலையா என் கைய,காலை வெட்டி என்னை நடுக் கடல்ல தூக்கி எறிவார்.. அதோடு விடுவார்ன்னு நினைக்குறியா?, ஊர்ல எந்தக் கீழ் வர்க்கத்துக் காரனுக்கும் இந்த மாதிரி ஆசை வந்துடக் கூடாதுன்னு என் குடும்பத்தையே தடம் தெரியாம அழிச்சுடுவார்!” – எனக் கூறி விட்டு...
“ஆனா.. நீ என்ன ஆவ தெரியுமா?, என்னை நினைச்சு 1 மாசம் அழுவ! 2 மாசம் அழுவ!, எண்ணி ஆறே மாசத்துல.. உன் அப்பாவுக்கு பயந்தாவது... எவனாவது ஒரு பணக்காரனுக்குப் பொண்டாட்டியா அவன் கட்டில்ல உட்கார்ந்திருப்ப.”-என்றான்.
மூச்சு விடாமல் முழு ஆங்காரத்துடன் அக்கிரமமாய் வார்த்தைகளைக் கொட்டியவனைக் கண்டு அதிகபட்சக் கோபத்தில் வாயடைத்துப் போய்.. பொல,பொலவெனக் கண்ணீரைச் சிந்திய விழிகளுடன் செய்கையற்று அவனை நோக்கினாள் அவள்.
“இது தான் நான் இத்தனை நாளா உனக்குப் புரிய வைக்க முயற்சி செஞ்ச நடப்பு. ரியாலிட்டி!, அதனால.. இந்தக் காதல்,கருமாந்திரம்,கிரகத்தையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு உங்கப்பாவுக்கு நல்ல மகளா நடந்துக்கப் பாரு!, என்னை.... என்னை நிம்மதியா இருக்க விடு..” – கடைசி வாக்கியத்தைக் கூறுகையில் கம்மிப் போனக் குரலை மறைக்க சட்டென மறுபுறம் திரும்பியவன்... அதற்கு மேல் நொடியும் தாமதிக்காமல் அந்த வகுப்பறையை விட்டு வெளியேறியிருந்தான்.
அதன் பின்பு அவள் எப்படி அந்த வகுப்பறையை விட்டு வெளியேறினாள், எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. இரவுச் சாப்பாடைத் தவிர்த்து.. சூனியமாய்த் தெரிந்த சுற்றுப்புறத்துக்குள் அவனை... அவன் அன்பைத் தேடி அலைந்துத் தோற்று.. விரக்தி கொண்டு.. வெறித்த பார்வையுடன் ரோபோவாய் நடமாடினாள் அவள்.
இடையில் அவள் நெற்றியில் கருப்பசாமிக் கோவில் திருநீற்றைப் பூசி விட்ட அன்னையும், ‘நாளைக்கு அல்லாக் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போய் மந்திரிப்போம் மதினி’ என்ற ராணி அத்தையும்.. அவள் கருத்தை எட்டாமல் போனார்கள்.
அதே ரோபோ உணர்வுடன் மறுநாள் கல்லூரி சென்றவள்.. வாசல் வரை சென்று விட்டுப் பின் மனதை மாற்றிக் கொண்டு வேறு எங்கோ செல்வதற்குப் பேருந்தில் ஏறினாள்.
தகாத வார்த்தைகளால் அவளைத் திட்டி அனுப்பி விட்டு.. இறுகிப் போய் நாளைக் கடத்திய இளவரசன்.. அன்று அவளைக் காண முயலவில்லை.
கேண்டீனில் வாங்கி வந்திருந்த எலுமிச்சை சாதத்தை நண்பனுக்குப் பிரித்துக் கொடுத்த கேசவன் “டேய்.. ஏன் டா சூனியம் பிடிச்ச மாதிரி எங்கயோ வெறிச்சுப் பார்த்துட்டிருக்க?, எடுத்து சாப்பிடு” என்றான்.
“ப்ச்” என்றபடி உணவை அளந்தவனிடம் “நீ சரியில்ல மாப்ள!, எதையும் வாயைத் தொறந்து சொல்லவும் மாட்டேங்குற!, அன்னிக்கு நீயிருந்த க்ளாஸ் ரூம்ல அந்த ‘ஷ்ரேயா கோஷலுக்கு’ என்ன வேலை?” என்று வினவினான் கேசவன்.
“ஷ்ரேயா கோஷலா?”
“அன்னிக்குப் பாடுச்சுல்ல உன் அயி......த்த மக இளங்கவி! அதைச் சொல்றேன்.”
“..........”
“நீ சொல்ல மாட்ட! ஆனா.. நேத்து அது அழுதுகிட்டே க்ளாஸ் ரூமை விட்டு வெளிய வந்துச்சுன்னு ஒரு பட்சி என் கிட்ட சொல்லுச்சு”
“...........”
“மச்சி, என்னடா?, லவ்வா?”
“வாயை மூடு”
“சரி, நீ சொல்ல வேணாம். ஆனா.. அந்தப் புள்ளைக்கு பறவைகள் சரணாலயத்துல என்னடா வேலை?, எல்லாம் அங்க ஜோடி,ஜோடியாத் தான் சுத்துவாங்க, இந்தப் பொண்ணு ஏன் சிங்கிள்-ஆ சுத்திட்டிருக்கு?”
“என்ன சொல்ற?”
“உன் ஆளு காலேஜ் பேக்-ஓட பேர்ட் சேங்சுவரில ஒத்தையா பர்ஃபாமான்ஸ் குடுத்திட்டிருக்குன்னு சேதி வந்துச்சு மாப்ள. அநேகமா காலேஜ்க்கு போறேன்னு வீட்ல பொய் சொல்லிட்டு அப்பீட் ஆயிருச்சு போல”
“இன்னிக்கு நீ அவளை காலேஜ்ல பார்த்தியா?”
“அப்டின்னா அந்தப் பொண்ணு நிஜமாவே உன் ஆளு தானா?”
“டேய்.....”
“க்ளாஸை கட் அடிச்சுட்டுக் கிளம்பு மச்சி!, சரணாலயத்துல வைச்சு உன் ஸ்ரேயா கோஷல் வாயைத் தொறக்குறதுக்கு முன்னாடி நீ போய் தடுத்து நிறுத்து”
கேலியாய்க் கூறிய நண்பனிடம் கடுப்படித்து விட்டு புறப்பட்டு விட்டான் அவன். அவளைத் தேடி!
கோடியக்கரையின் சிறப்பே அங்குள்ள பசுமைமாறாக் காடுகள் தான். சுமார் 25கி.மீ பரப்பளவு கொண்ட இக்காடுகளில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. அதற்கு எதிர்ப்புறம் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயமும் அமைந்திருக்கிறது.
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு நாடுகளிலிருந்துப் பல வண்ணப் பறவைகள் இங்கு வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் பூநாரை,சிவப்புக்கால் உள்ளான்,வரித்தலை வாத்து, சிறவி, கடல்காகம் எனப் பற்பல பறவைகள் இங்கு வந்து குவிந்து சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்.
அப்பேர்ப்பட்ட ஒரு மழைக்காலத்தில்.. அந்த மதிய வேளையில்.. குளிர்ந்த கடற்காற்றோடு இணைந்து.. இதமாய் அடித்துக் கொண்டிருந்த மிதமான வெயிலை அனுபவித்தபடி.. கரையோரமாய் மெல்ல நடந்து கொண்டிருந்த 4அடி உயரப் பூநாரைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டுக் களையிழந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் இளங்கவி. அவளுடைய தோள்ப்பையும்,செருப்பும் ஒருபுறம் அநாதையாய்க் கிடந்தது.
ஒரு வேகத்தில் அவளைத் தேடிக் கொண்டு சரணாலயம் வரை இளவரசன் வந்து விட்டானென்றாலும்.. தான் பேசிய பேச்சுக்கு மீண்டும் அவள் முகத்தில் முழிப்பது சாத்தியமா என்கிற கேள்வி எழுந்தது அவனுக்கு.
பெரிதாக அவளுடனான காதல் வாழ்க்கையென்று ஒன்றை அவன் இதுவரைக் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை தான். ஆனால்.. மீசை முளைக்கத் தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை.. அவன் அகராதியில் காதல் என்ற வார்த்தைக்கான அர்த்தத்திற்கு நேராகக் கவி என்ற பெயரைத் தான் நிரப்பி வைத்திருக்கிறான். அப்படிப்பட்டப் பெண்ணை, ஏதேதோ கூறி நோகடித்ததுத் தவறு தானே?, விலகிச் சென்றாலும்.. முன்னே நின்று வழிமறிப்பவளை என்ன சொல்லி தள்ளி நிறுத்துவதெனப் புரியாமல்.. அநியாய வார்த்தைகளை உச்சரித்து விட்டான்.
விறைத்த முதுகுடன் கடலை வெறித்தபடி அசையாது அமர்ந்திருந்தவளைக் கண்டு ஒரு நொடி மனம் இளகினாலும்.. மறைத்து.. வேறு வழியின்றி முகத்தில் எரிச்சலைத் தேக்கி அவளை அழைத்தான்.
“காலேஜ்க்கு வராம, வீட்லயும் தங்காம இது என்ன புதுப்பழக்கம்?”
முதுகுக்குப் பின்னே ஒலித்த அவன் குரலில் ஒரு நொடி திடுக்கிட்டாலும் அடுத்த நொடி இறுகிப் போய் அமைதியாய் அமர்ந்திருந்தாள் அவள்.
“எழுந்திரு முதல்ல. எவ்ளோ நேரமா இப்டியே உட்கார்ந்திருக்க?” – என்று கேட்டபடியே அருகே வந்து அவள் பையைக் கையில் எடுத்தான்.
அப்போதும் அசையாது அமர்ந்திருந்தவளின் காலடியில் அவளது செருப்பை வைத்து.. “கிளம்பு போகலாம்” என்றான்.
நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் கடலை வெறித்தவளிடம் பொறுமையற்றக் குரலுடன் “கவி.....” என்றான்.
“என்ன?” – கவி
“வீட்டுக்குக் கிளம்பு”
“வந்த எனக்கு திரும்பிப் போகத் தெரியாதா?”
“ஏன் வந்த?, வீட்ல காலேஜ் போறேன்னு சொல்லிட்டு, இங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ற?”
“ஆர்க்டிக் பிரதேசத்துல இருந்து 18000 கி,மீ கடந்து இந்தப் பூநாரையெல்லாம் நம்மூருக்கு வந்திருக்காமாம். நேர்ல பார்த்து.. வணக்கம் சொல்லாட்டி மரியாதையா இருக்காதுல்ல?, அதான் வந்தேன்”
-எப்போதும் போல அலட்டிக் கொள்ளாமல் பதில் கூறினாள் அவள்.
கழுத்தை நெரிச்சுக் குரவளையைத் திருகுனாக் கூட.. இவ வாய் மட்டும் அடங்கவே அடங்காது!
அவன் பதிலற்று நிற்பதை உணர்ந்து.. ஆடையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டியபடி எழுந்து வந்து அவன் முன்னே நின்றாள்.
“எங்க அடிச்சா உங்களுக்கு ரொம்ப வலிக்கும்?” - கவி
“புரியல”
“நீங்க பேசுன பேச்சுக்கு, உங்கக் கன்னத்துல அறையுறது, என் கோபத்தைக் குறைக்காது. அதான், எங்க அடிச்சா ரொம்ப வலிக்கும்ன்னு கேட்டேன்”
தன்னருகே நெருங்கி உஷ்ணமான மூச்சோடு.. உக்கிரமாய் நின்று கொண்டு.. அடங்காத ஆத்திரத்துடன் கேள்வி கேட்டவளை உணர்ச்சியற்று நோக்கினான் அவன். குறுகுறுவென ஏதோ ஒன்று நெஞ்சின் ஓரத்தை லேசாய்ச் சுரண்டியது.
“தொட்டுப் பாரு!, அப்புறம் உனக்கு சோறு திங்கக் கை இருக்காது. ஒடிச்சு எறிஞ்சுடுவேன்”
தன் பெரிய கண்களை அகல விரித்து அவனை முறைத்துப் பார்த்து.. விடைத்த மூக்குடன் கை ஓங்கியவளின் மணிக்கட்டை அழுத்திப் பிடித்துத் தடுத்தவன்.. அதே உணர்ச்சியற்றப் பார்வையுடனே நின்றிருந்தான்.
முழு பலத்துடன் அவனோடு போராடியவளுக்கு வெற்றி கிட்டாமல் போக.. ஓங்கியக் கையைக் கீழிறக்கி பொல,பொலவெனக் கண்ணீர் உதிர்த்தாள் அவள்.
அவளது மணிக்கட்டில் பதிந்திருந்தத் தன் கை விரல்களை விலக்கிக் கொள்ளாமல் அவள் அழுவதை அமைதியாய் வேடிக்கை பார்த்தான் அவன்.
ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவள்... ஒழுகிய மூக்கைத் துடைத்தபடி.. விடாது தொண்டையை அடைத்த விம்மல்களுக்கிடையில் அவனை நோக்கிக் கர்ஜித்தாள்.
“எவனோ ஒருத்தன் கட்டில்ல பொண்டாட்டியா உட்கார்றதுக்குத் தான் இன்னிக்கு உங்களை மனசுல நினைச்சுட்டிருக்கேனா நான்?, அப்பிடி என்ன என் மேலக் கேவலமான எண்ணம் உங்களுக்கு?, என்ன தெரியும் உங்களுக்கு என்னைப் பத்தி?, எங்கப்பாரு உங்களை வெட்டிப் போடுற வரைக்கும் நான் வேடிக்கை பார்த்துட்டிருப்பேன்னா நினைச்சீங்க?, என்னமோ, என்னைக் காதலிச்சா உங்கக் குடும்பமே அழிஞ்சு போயிடும்ன்ற ரீதி-ல அவ்ளோ பேச்சு பேசுறீங்க?”
“முதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கோங்க. காசு,பணத்துக்குக் குறைவில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவ தான் நான்! ஆனா.. தினம் சொகுசு மெத்தைல தூங்கி எந்திரிச்சு.. ஆடி கார்ல வீதி உலா போற பெரும்பணக்காரி கிடையாது! என்னமோ எங்கப்பா அம்பானி-ன்ற மாதிரி எப்பப் பாரு.. நீங்க மேல்தட்டு, நான் இட்லித் தட்டுன்னு டயலாக் அடிக்கிறீங்க?”
“நான் என்னைக்காவது எங்கப்பா சம்பாதிக்கிற காசைப் பிரதிபலிக்கிற மாதிரி டிரஸ்ஸாவது உடுத்தியிருக்கேனா?, எங்கம்மாவும்,நானும் இன்னிக்கு வரைக்கும் ரொம்பவும் சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு வர்றோம். அதைத் தெரிஞ்சுக்கோங்க”
“உங்களுக்கு இருக்குறதுப் பேரு என்ன தெரியுமா? தாழ்வு மனப்பான்மை! இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்!, ஆமா, உங்க பொண்ணைக் காதலிக்குறேன். இன்னும் 5,10 வருஷத்துல உங்களை மாதிரி வந்துடுவேன். என்னை நம்பி உங்க பொண்ணைக் கொடுங்கன்னு நிமிர்ந்து நின்னு எங்கப்பாக் கிட்ட பேசுற தைரியம் உங்களுக்கு வேணா இல்லாம இருக்கலாம். ஆனா நான் அப்டி இல்ல”
“எங்கப்பா உங்களைக் கொன்னா.. நானும் தூக்குல தொங்குவேன். இல்ல, அவர் செத்துப் போவேன்னு சொல்லி எமோஷனல்-ஆ என்னை மிரட்டுனா.. எனக்கும் விஷத்தைக் கொடுங்கப்பா, சேர்ந்து சாவோம்ன்னு நிச்சயம் சொல்லுவேன். அதை விட்டுட்டு, மனசை மாத்திக்கிட்டு எவனையோ கல்யாணம் பண்ணிட்டுப் பிள்ளை பெத்துப்பேன்னு என்னைக்கும் நினைக்காதீங்க! பதினெட்டு வருஷமா.. கறி,மீனோடு சேர்த்து நேர்மையையும்,நியாயத்தையும் தின்னு செரிச்சுருக்கேன். அவ்ளோ சுலபமா என்னை யாராலயும் கட்டுப்படுத்த முடியாது. அது எங்கப்பாவாவே இருந்தாலும் ”
படபடவென மூச்சு வாங்கப் பேசி முடித்து.. அவன் முகம் பார்த்தாள் அவள்.
அப்போதும் உணர்ச்சியற்றக் கல்லாய் அசையாது நின்றிருந்தவன், அவள் முடித்ததும்..
“நான் வேணா கைத் தட்டி நீங்க ரொம்ப நல்லாப் பேசுனீங்க! வாழ்த்துக்கள்ன்னு சொல்லட்டுமா?” என்றான்.
பல்லைக் கடித்துக் கோபத்தை அடக்கியவளிடம்..
“நீ சொன்ன 5,10 வருஷம் கழிச்சு நான் முன்னேறி வந்தப்புறம், நீ எவனுக்கும் பொண்டாட்டியாகாம என்னை நினைச்சே உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு நிலைமைல இருந்தா.. உன் முகத்தைப் பார்த்து நீ ஆசைப்பட்ற பதிலை சொல்றேன். அது வரைக்கும் நீ உன் கற்பனைக் கோட்டைக்கு அஸ்திவாரம் போட்டு.. செங்கல் வைச்சுக் கட்டிடம் எழுப்பி வை” என்றான்.
முழுதாக ஓய்ந்து போய் உணர்ச்சியற்றப் பார்வையால் வெறித்தாள் அவள்.
அவள் பார்வையைக் கண்டு கொள்ளாமல் கையிலிருந்த அவளது பையைக் கீழே வைத்தவன்..
“வந்த உனக்கு திரும்பிப் போகத் தெரியும்ன்னு சொன்னேல?, அப்புறம் எதுக்கு நான் இங்க நின்னுக்கிட்டு?, கிளம்புறேன்” –என்று விட்டு... அலட்டிக் கொள்ளாமல் திரும்பி நடந்து.. சென்றே விட்டான்.
பற்களை அழுந்தக் கடித்து.. உள்ளங்கையை இறுக்கி.. கோபத்தை, அதைத் தாண்டிய இயலாமையை அடக்க முடியாமல் திண்டாடியவளுக்கு.. எப்படியேனும்.. அவன் மனதில் உள்ள தனக்கான காதலை அவன் வாயாலே ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டுமென்கிற உணர்வு வெறியாக எழுந்தது.
சற்று நேரத்தில் சடசடவென மழை பொழியத் துவங்க.. சொட்டச் சொட்ட நனைந்தபடி நடந்தே வீடு சென்றவள்.. சுற்றி என்ன நடக்கிறதென்பதைக் கொஞ்சமும் உணர முடியாதத் தீவிர சிந்தனையிருந்தாள். அதனாலேயோ என்னவோ, வீடு வரை அவள் பின்னே நடந்து வந்த இளவரசனை அவள் கவனிக்கவேயில்லை.
அடுத்த இரண்டு நாட்களில் புயல் எச்சரிக்கை விடப்பட்டு மீனவர்கள் எவரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லக் கூடாதென அரசு அறிவித்து விட.. அனைவரும் தங்களது வீடுகளையும்,உடைமைகளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். காற்றும்,மழையும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.
அன்றிரவு தன் தந்தைக்குச் சொந்தமான படகுகள் இரண்டையும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவது குறித்துப் பேச வந்த ஆட்களைக் கண்டவளுக்கு மனதில் ஒரு யோசனை தோன்றியது.
புயல் அன்று காலை.. விரைவாக எழுந்து அதே யோசனை முகத்துடன் நகம் கடித்தபடி வீட்டினுள் வலம் வந்தவள், எப்படியோ கேசவனின் செல்பேசி எண்ணைக் கண்டுபிடித்து.. அவனை அழைத்தாள்.
“ஹலோ..” – தூங்கிக் கொண்டிருந்தான் போலும்! கொட்டாவி விட்டபடி பதிலளித்தான் கேசவன்.
“நான் இளங்கவி பேசுறேன்”
“யாரு?”
“உங்க ஃப்ரெண்ட் இளவரசனோட அத்தைப் பொண்ணு”
“ஓ! நீயா?, ஆமா, பேர்ட் சாங்க்சுவரில உனக்கு என்ன வேல?, புல்லு புடுங்கிட்டிருந்தியா?”
“நான் தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்”
“க்க்க்க்க்கும்,க்க்க்க்க்கும்” – பலமாய் இருமியக் கேசவன் “எ....எ...என்ன சொன்ன?” என்று விட்டுப் பின் “அதை எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணி சொல்ற” என்று பதறினான்.
“இன்னும் 5 நிமிஷத்துல நான் கடலுக்குப் போகப் போறேன். இதை உங்க ஃப்ரெண்ட் கிட்ட சொல்லுங்க. மிச்சத்தை அவரே புரிஞ்சுப்பாரு”
“ஏய்ய்.. உங்கக் காதல் சண்டைக்கு நான் தான் பலிகடாவா?, இங்க பாரும்மா.. ஆண்டவன் கொடுத்த உயிரை அவனே தான் எடுத்துக்கனும், நாமளா உயிரை விட நினைக்கிறதெல்லாம் ரொம்பத் தப்பு” – கேசவனின் மொக்கை அட்வைஸை மேலும் கேட்கப் பிடிக்காமல் எரிச்சலுடன் அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
வீட்டில் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் விறுவிறுவென இரண்டே நிமிடத்தில் துறைமுகத்தை அடைந்தவள்... அங்கே தங்களுக்குச் சொந்தமான படகொன்றை கட்டியிழுத்தபடி வேறு ஒரு இடத்திற்கு நகர்த்திக் கொண்டிருந்த ஆட்களின் அருகே சென்றாள்.
“அண்ணா... நான் கடலுக்குப் போகனும். போட் கொடுங்க”
எடுத்த எடுப்பில் மனதில் எண்ணியதைக் கூறியவளைக் கண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள்..
“பாப்பா! 15 வயசுல போட்டை எடுத்துக்கிட்டு நீ தனியா கடலுக்குள்ள போனதை.. இன்னிக்கு வரை சொல்லிக்காட்டி உங்கய்யா என்னைக் கிழிச்சுக் கூறு போட்டுட்டிருக்கார். இப்ப மறுபடியுமா?, போ பாப்பா” – என்றனர்.
“ப்ளீஸ்.. ப்ளீஸ்ண்ணா.. எனக்கு போட் எடுத்துக்கிட்டுத் தனியா கடலுக்குப் போகனும்ன்னு ஆசையா இருக்கு”
“ஏம்மா.. கடல் எப்போ கொந்தளிக்கப் போகுதோ, புயல் எப்போ வரப் போகுதோன்னு ஊரே பயந்து கிடக்கு! இந்த நேரத்துல வந்துத் தனியா கடலுக்குள்ள போறேன்ற?, அங்க பார்த்தேல?, ரெண்டாவது எண் எச்சரிக்கைக் கூண்டு மாட்டியிருக்கிறதை?”
“ரெண்டாவது எண் தானண்ணா?, பெருசா ஒன்னும் நடக்காது. பத்து நிமிஷம் தான் திரும்பி வந்துடுவேன். ஃப்ரெண்ட்ஸ்ங்கக் கிட்ட பெட் கட்டிருக்கேண்ணா. அப்பாரு கிட்டக் கூட அனுமதி வாங்கிட்டேன். நீங்க வேணா கேட்டுப் பாருங்க.. ஆனா.. அண்ணா.. போன மாச சம்பளத்துல இருந்து நீங்க முன்பணமா 1000 ரூபா வாங்கிட்டுப் போய் தண்ணியடிச்சுக் கவுந்த கதை.. எப்டியோ அவரு காதுக்கு எட்டிருச்சு. அதுல இருந்து உங்க மேல கொஞ்சம் கோபமாத் தான் இருக்காரு”
-என்னன்னவோ பேசி அவர்கள் மனதைக் கலைத்தவள், தயக்கத்துடன் நின்றவர்களை அதட்டி,உருட்டி அவர்களது உதவியுடன் போட்டைத் தண்ணீருக்குள் இறக்கி விட்டாள்.
விசைப்படகை இயக்கிப் பழக்கம் தான். எதையும் முயற்சி செய்து பார்க்கும் அசட்டு தைரியத்தில் கற்றுக் கொண்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. 13-லிருந்து 15-வயது வரை முழுக்க முழுக்கத் தந்தையுடன் கடல் பயணத்திலேயே தான் இருந்திருக்கிறாள். அதனால் உண்டான பழக்கம், இன்று இந்த வகையில் உதவுகிறது.
“தேங்க்ஸ்ங்கண்ணா.. 10 நிமிஷம் கரைக்கு வந்துடுவேன்” – என்று விட்டு கடலுக்குள் பாய்ந்திருந்தாள்.
தவழும் குழந்தையாய்.. சின்னச் சின்ன அலைகளுடன்.. சாதுவாய்க் காணப்பட்டக் கடல்ராஜனைக் கண்டு..
“புயல் வரும்,புயல் வரும்ன்னு மக்களை பயமுறுத்துறது தான் இவங்க வேலை!, பூதம் கூட வராது போல” என்று புலம்பி வேறு வைத்தாள்.
திட்டமிட்டபடி அந்தக் குட்டித் தீவில் இறங்கியவள்.. இளவரசனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
இந்த இடைவெளியில் கேசவன் விசயத்தை இளவரசனிடம் கூறியிருக்க.. அவனும் அடித்துப் பிடித்துக் கொண்டுத் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தான்.
பத்து நிமிடம் எனச் சொல்லிச் சென்றவள் முழுதாய் ஒரு மணி நேரம் கடந்தும் வாராமல் இருப்பதைக் கண்டுப் பதறி செழியனிடம் விசயத்தைச் சொல்லலாம் என ஆட்கள் எண்ணிய சமயம் அரசன் வந்து விட..
தான் சென்று அவளை அழைத்து வருவதாகவும்.. செழியனிடம் எதையும் கூறி பயமுறுத்த வேண்டாமென்றும் கூறி விட்டுத் தானும் ஒரு படகில் கடலுக்குச் சென்றான் இளவரசன்.
அதுவரை கட்டுக்குள் இருந்த நிலைமை கை மீறிப் போக.. பத்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு புயல் அந்தத் துறைமுகத்தில் கரையைக் கடக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டது.
குழந்தை உருவத்தில் ஒளிந்திருந்த அந்த ராட்சச அலைகள்... தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி... குட்டி சுனாமிகளாய் கொந்தளிக்கத் துவங்கிய நேரத்தில்.. இளவரசன் தீவை அடைந்திருந்தான்.
எப்படியேனும் அவன் தன் மனதிலிருப்பதை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்துடன் களமிறங்கியவள், முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையொன்றில் சிக்கி விட்டதை உணர்ந்து.. அதில் அவனையும் அகப்பட வைத்த முட்டாள்தனத்தை எண்ணிக் குற்ற உணர்வுடன் கூனிக் குறுகிய சமயம்.. நிலைமை மொத்தமாகக் கை மீறியிருந்தது.
