அத்தியாயம் - 1

விண்ணைத் தொடும் உயரத்துடனும், அடர்ந்து படர்ந்திருந்த வேர்களுடனும் பல்லாண்டுகளாய் ஓங்கிச் செழித்து வளர்ந்திருந்த ராட்சத`மரம் அது! காற்றின் நாதத்திற்கேற்ப அதன் இலைகளும்,கிளைகளும் ஒன்றோடொன்று இணைந்து கைக் கோர்த்து ஆனந்த நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்த இரவு வேளை.. வானமெனும் கருங்கடலில் புள்ளியாய் மினுமினுக்கும் நட்சத்திரங்கள் புடை சூழ நிலா மகள் மெல்ல நீந்திச் சென்று கொண்டிருக்க… அதிக வெப்பமுமல்லாத, அதிகக் குளிருமல்லாத மிதமான அந்த சீதோஷ்ணநிலையை அனுபவித்தபடிக் கண் மூடிக் கயிற்றுக் கட்டிலில் சாய்ந்திருந்தான் நன்மாறன். தன் தலைமுடியைக் களைத்து விளையாடி.. உடல் முழுதையும் மெல்ல.. வருடிச் செல்லும் தென்றல் தந்த சுகத்தில் கவலை மறந்து கிடந்தான்.

அச்சூழ்நிலையின் அமைதியை, முக்கியமாக.. அவன் முகத்தில் குடி கொண்டிருந்த நிம்மதியைக் களைக்கும் நோக்கத்துடன்.. அழகான பெண் குரல் ஒன்று காற்றில் ஊடுருவி அவன் செவிகளை வந்தடைந்தது.

“ஒத்தையில… அத்தமக.. உன்னை நினைச்சு ரசிச்ச மக..

கண்ணு ரெண்டும் மூடலயே.. காலம்,நேரம் கூடலயே!

ஊரு சனம் தூங்கிருச்சு.. ஊதக் காத்தும் அடிச்சிருச்சு..

பாவி மனம்… தூங்கலையே! அதுவும் ஏனோ தெரியலையே..!!

-பாடல் வந்தத் திசையை நோக்கிப் படுத்திருந்த நிலையிலிருந்துத் தலையைத் திருப்பி வேலியைத் தாண்டி சில மீட்டர் தொலைவிலிருந்த அந்த வீட்டின் மீது பார்வையைச் செலுத்தினான் அவன்.

அதுவரை முகத்திலிருந்த மந்தகாசம் மறைந்து விட.. எரிச்சல் மிகுந்த குரலில் “இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல, நக்கலைப் பாரு. ராட்சசி” என்று வாய் விட்டு வைதபடி மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

கௌரியக்கா…. அந்த மாமா மறுபடி உன்னைப் பார்க்க வந்திருக்கார்..”

- படபடத்தக் குரலுடன் வியர்த்து விறுவிறுக்கத் தன் முன்னே வந்து நின்ற கலையரசியை நிமிர்ந்தும் நோக்காமல்.. மேஜையின் மீதிருந்தக் கனமான கணக்கு நோட்டில் பார்வையைப் பதித்தபடித் தீவிர முக பாவத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் கௌரி..

“அக்கா…. உன்ட்ட தான் பேசிட்டிருக்கேன்” – பொறுமையற்ற குரலுடன் கலை.

“ப்ச், அவர் எப்போ வந்தாலும் நான் இல்லைன்னு அனுப்பிடனும்னு சொல்லிருக்கேன்ல?”

“ஆமா, நான் சொன்னதும் கேட்டுட்டுத் தான் மறுவேலை பார்ப்பாரு மனுஷன்”-என்று முணுமுணுத்த கலை “சொல்லிப் பார்த்துட்டேங்க்கா, உங்களைப் பார்க்காம போ மாட்டேன்னு வாசல்லயே நின்னுட்டார்” – அழாக் குறையாக முடித்தாள்.

கையிலிருந்தப் பேனாவைச் சுழற்றியபடி முகத்திலிருந்தத் தீவிர பாவத்தை மேலும் அதிகரித்தவள் “சரி, நீ போய் வேலையைப் பாரு” என்றாள்.

மெல்ல சரியெனத் தலையாட்டிய கலை வாசலைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி “அக்கா.. ஒரு தடவை அவர் கூடப் பேசித் தான் பாரேன்!, எத்தனை தடவை உன்னைப் பார்க்கனும்னு அலையுது அந்த மாமா?, பார்க்கவே பாவமா இருக்குக்கா” என்றாள்.

பேனாவை நொட்டெனக் கீழே வைத்து விட்டு அவளை நிமிர்ந்து நோக்கியவள் கைகளைக் கட்டிக் கொண்டு “அதென்னடி வார்த்தைக்கு வார்த்தை மாமா,மாமா-ங்குற?, போன வாரம் வரைக்கும் அண்ணன்னு தானடி கூப்பிட்ட?” – வரவழைத்தக் கோபத்துடன் புருவத்தைச் சுருக்கிக் கொண்டு கேள்வி கேட்டாள்.

“ஹிஹி”-என அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தபடித் தலையைச் சொறிந்த கலை “போனவாரம் வரைக்கும் எனக்குத் தெரியாதுல்ல, நீயும்,அவரும் கட்டிக்கப் போறீங்கன்னு”- என்று முடிப்பதற்குள் “கலை……….” என்று கௌரி அதட்டுகையில் “ம்க்குக்கும்” எனத் தொண்டையைச் செறுமிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.

பதறியபடித் தன்னை நோக்கிய கலையரசியை அலட்சியம் செய்து விட்டு கௌரியின் புறம் திரும்பி.. “அடி ராங்கி! எவ்ளோ ஏத்தமிருந்தா.. உள்ள இருந்துக்கிட்டே இல்லைன்னு சொல்லி அனுப்புவ?” – விட்டால் மூக்கு நுனியாலேயே கௌரியை டூமீல் எனச் சுட்டு விடுபவன் போன்று கடும் கோபத்துடன் காது விடைக்க நின்றிருந்தான் அவன்.

“என்ன மாமா பொசுக்குன்னு உள்ள வந்து போட்ட?, நான் தான் அக்காட்ட சமாதானமாப் பேசி உங்களைப் பார்க்க சம்மதிக்க வைக்கிறேன்னு சொன்னேன்ல?” – தன்னிடம் எகிறிக் கொண்டு வந்த கலையை முறைத்தவன்..

“கிழிச்ச! நீ சம்மதம் கேக்குற லட்சணத்தைத் தான் பார்த்தேன்ல?, போ கழுதேய்.. போ! எல்லாம் நான் பேசிக்கிறேன்! நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு” –என்றான்.

“ஆத்திதிதிதி.. கழுதையாம்ல?, ஆமா, உங்களுக்கு உதவி பண்ண நினைச்சதுக்கு எனக்கு இந்தப் பேச்செல்லாம் தேவை தான்!” – முகவாயைத் தோளில் இடித்து நொடித்துக் கொண்டாள் அவள்.

“உதவி பண்ணுற மொசரைக்கட்டையைப் பாரு!, கருவாச்சி”

“என் மொசரக்கட்டைக்கு என்ன வந்துச்சு!, இவரு பெரிய எம்.ஜி.ஆர் கலரு!, இந்தா.. தெருவுல போற எருமமாடு கூட உங்களை விடக் கலராத் தான் இருக்கு”

“அடிக் கழுத, என்னைய எருமமாடுன்னா சொல்ற?, கிட்ட வந்தின்னு வைய், பல்லை உடைச்சுப் போடுவேன்”

“உடைப்ப,உடைப்ப! ஆளைப்பாரு! இங்க பாருங்க மாமா, உங்க ரெண்டு பேர் தகராறுல நான் என்னத்துக்கு இடைல தலையைக் கொடுக்கனும்?, எதுக்கு இந்த ஏச்சு,பேச்செல்லாம் வாங்கனும்??, நீங்க இந்தக்காவைக் கட்டுனாலும் சரி, கட்டைல போனாலும் சரி. எப்டியோ போங்க”

“கலை.. என்ன பேச்சுப் பேசுற???” – கோபத்துடன் எழுந்து நின்றாள் கௌரி.

“ம், என்னைய என்ன உங்கொப்பனை மாதிரி வெறும் பய-ன்னா நினைச்ச?, கட்டைல போறதுக்கு!, சீமராசாடி நானு! அவ்ளோ சீக்கிரமெல்லாம் சாவு வராது! அப்படியே செத்தாலும்.. எங்கப்பத்தா எனக்காக ஓலப் பாடை நெய்யும்டியேய்!”

“மாமாஆஆஆஆஆ” – எரிச்சலின் உச்சகட்டத்தில் கத்தினாள் கௌரி.

“ஹாஹாஹா அடேங்கப்பா! சீமராசாவாம்ல! எந்த சீமைக்கு துரை ராசாவா இருந்தீங்க!, இந்தாரு மாமா, தேவையில்லாம எங்கப்பனை இழுக்கிற வேலையெல்லாம் வைச்சுக்காத!, ஒரு காலத்துல 10-ஏக்கர் நிலத்துல வெவசாயம் பண்ணி ஊருக்கெல்லாம் பொழப்புக் கொடுத்த மகராசன் அவரு!”

“ஆமாமா, அப்படியிருந்த மனுஷன் இப்ப ஓஞ்சு போய் கிடக்குறனால தான், அவர் பெத்து விட்டக் கழுதையெல்லாம்.. ஊரை மேஞ்சுக்கிட்டுத் திரியுது!”

“யாரைச் சொல்றீரு?”

“உன்னையத் தான். நீ போன வாரம் அந்த பாண்டிப் பயலோட பம்பு செட்டுல குளிக்கல?”

“களுக்”-வாயை மூடிக் கொண்டு சிரிப்பை அடக்கத் திணறிக் கொண்டிருந்தாள் கௌரி.

“அம்மாடிடிடிடிடிடி…. நீரு எப்ப அதைப் பார்த்தீரு?” – நிமிடத்தில் வாயடைத்துப் போய் பீதியடைந்த விழிகளுடன் அஞ்சிய பார்வையை அவன் மீது செலுத்தியவளைக் கண்டுத் தோள் குலுங்க நகைத்தான் அவன்.

“இந்த ஊர்ல எனக்குத் தெரியாமக் காக்காக் கூட குஞ்சு பொறிக்க முடியாது!, பம்பு செட்டு, புளியந்தோப்பு, சோளக்காடுன்னு நீயும்,அந்தப் பயலும் ஒளிஞ்சு ஒதுங்குற எல்லா இண்டு,இடுக்கும் எனக்கு நல்லாத்தெரியும்” –விரிந்த வாயின் மீது அடர்ந்து படர்ந்திருந்த மீசையைக் கர்வத்துடன் முறுக்கி விட்டுக் கொண்டான் அவன்.

“எமகாதகன்”என்று மனதுக்குள் முணுமுணுத்தவள் “நீ பெரிய களவாணிப்பயலா இருப்ப போல! உன்னையப் போய் நல்லவன்னு ஊர்ல சொல்றாய்ங்க?, அதை நம்பி, உன்னைக் கட்டிக்கச் சொல்லி இந்தக்காவை வேற வற்புறுத்தினேனே! கௌரியக்கா.. இந்தாளு நமக்கு வேணாம்”

“உனக்கு வேணாம்ன்னு சொல்டி கிறுக்கி!”-அவன்

“கலை, நீ வாயடிச்சது போதும். அன்பகத்துக்குப் போய் நான் கேட்டக் கணக்கு நோட்டையெல்லாம் வாங்கிட்டு வா. போ…” – எரிச்சலுடன் அவளை விரட்டினாள் கௌரி.

“ம்ம்” – எனத் தலையாட்டிய கலை தயங்கி நின்று அவனை நோக்க.. அவன் என்ன என்றபடிப் புருவத்தைத் தூக்கினான்.

“அ…அது வந்து…??” – கலை

“வந்து…..” –அவன்

“வ…வந்து… பாண்டி விசயத்தை எங்கப்பன்ட்ட போட்டுக் கொடுத்துறாத மாமா! நானே நேரம் பார்த்துப் பொறுமையா சொல்லிக்கிறேன்!”

“ம்ம், ஏதோ அந்தப் பாண்டிப்பய நல்லவன்றதால, உன்னைய விட்டு வைக்கிறேன்! கால,காலத்துல வீட்ல சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு”

அவன் திருமணம் என்றதும் தானாகவே கலையரசியின் முகம் வெட்கத்தில் சிவந்து விட வேகமாகத் தலையாட்டியபடி “கௌரியக்கா.. பேசாம நீ இந்த மாமாவையே கட்டிக்க” என்றுக் கத்தி விட்டு, கௌரியின் கோபப் பார்வைக்குப் பயந்து நில்லாமல் ஓடி விட்டாள்.

அவள் சென்றத் திசையை எரிச்சலுடன் நோக்கிக் கொண்டிருந்தவளைக் கண்டபடி, கையிலிருந்த வண்டி சாவியை மேஜையில் வைத்து விட்டு, எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்தான் அவன்.

அவனைக் கண்டும் காணாததைப் போல் புருவத்தைச் சொரிந்த கௌரி, மெல்ல அமர்ந்தாள்.

நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து சட்டமாக அமர்ந்திருந்தவன், ஏற்கனவே முறுக்கேறி வளைந்து கிடந்த மீசையை மேலும் முறுக்கி விட்டுக் கொண்டான். கட்டியிருந்த கருப்புக் கயிறு அவன் கரத்தை ஆண்மையுடன் காட்ட… வெள்ளை வேஷ்டி,சட்டையில் கம்பீரமாகக் காட்சியளித்தான்.

விடாமல் தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தவனைக் கண்டு எரிச்சலுற்று, நிமிர்ந்து அவனை நோக்கினாள் அவள்.

“என்ன மாமா வேணும் உனக்கு?”

“என்னடி மரியாதை தேயுது?”

“சரி, உங்ங்ங்ங்ங்களுக்கு….. போதுமா?”

“நான் யாருன்னு உனக்கு நினைவிருந்தா தான, மரியாதை தரனும்ற நினைப்பு இருக்கும்?”

“ப்ச், தேவையில்லாம பேசாத”

“என் பேரு நன்மாறன்-ங்க! நீங்க பொறந்து,வளர்ந்ததிலிருந்து இதே ஊர்ல, உங்க கண்ணு படுற தூரத்துல தான் வாழ்ந்திட்டிருக்கேன். இப்போவாவது நினைவு வருதுங்களா?”

“பொய். இடைல ஒரு 4,5 வருஷம் காணாம போய்ட்டீங்க”

“உன் கண்ணுக்குத் தெரியாம போய்ட்டேன்னு வேணா சொல்லு”

“ஏன்?, அதுக்கு முன்னாடி வரைக்கும் என் கண்ணுல பட்டுட்டேவா இருந்தீங்க?”

“ப்ச், பேச்சை மாத்தாதடி, எதுக்கு ஒரு வாரமா என்னைப் பார்க்குறதை தவிர்க்குற?”

“ஏன்னு உங்களுக்குத் தெரியாதா?”

“உன்னைக் கட்டிக்கக் கேட்டதுக்கா என்னைத் தவிர்க்குற?” – பட்டென அவன் கேட்டதும் தலையைக் குனிந்து கொண்டு விரல்களை நோக்கினாள் அவள்.

“கௌரி…”

“ஏற்கனவே சொன்னது தான் மாமா.. இது சரி வராது”

“ஏன் சரி வராது?”

“எப்படி சரி வரும்?”

“நேத்து ராத்திரி என்னையப் பார்த்து பாடுனியே ஒரு பாட்டு.. ஒத்தையில அத்த மக, உன்னை நினைச்சு ரசிச்ச மக-ன்னு?, அப்பத் தோணலயா இது ஒத்து வராதுன்னு?”

“பாட்டை வெறும் பாட்டா மட்டும் பாரு மாமா, உன்னைப் பார்த்துத் தான் பாடுனேன்னு ஏன் நினைச்சுக்கிற?”

“என் காதுல பட்ற மாதிரி ஏன்டி பாடுற? தைரியம் இருந்திருந்தா அடுத்தப் பத்தியைப் பாடிருக்கனும் நீ! உன்னை எண்ணிப் பொட்டு வைச்சேன், ஓலப்பாயைப் போட்டு வைச்சேன்னு. அப்ப தெரிஞ்சுருக்கும்! இந்த மாறன் யாருன்னு!”

“ஏன்?, என்ன பண்ணியிருப்ப?”

இமை தாழ்த்தி மெல்லச் சிரித்தபடி இரு விரல்களால் அந்த முறுக்குமீசையைத் தடவியவன், தன் அகண்ட கண்களால் அவளை மையலுடன் நோக்கி “எனக்குள்ளயும் ஒரு கமலஹாசன் இருக்கிறது தெரியாதுல்ல உனக்கு?, இழுத்து வைச்சு நச்சுன்னு ஒன்னு செமத்தையாக் கொடுத்திருப்பேன்!” – எனக் கூற… கையைக் கட்டிக் கொண்டுச் சலனமின்றி அவனை நோக்கினாள் அவள்.

அவள் பார்வையில் எரிச்சலுற்றுப் பல்லைக் கடித்தவன் “இந்தக் கையால உன் கன்னத்துல ஒரு அறை விட்ருப்பேன்னு சொன்னேன்டி ஆத்தா!, ஔவையார் ரேஞ்சுக்கு மூஞ்சியை வைச்சுக்காத! கடுப்பாகுதுது மனுஷனுக்கு.” – என்றான்.

“இந்த வயசுல உனக்கு ஏன் மாமா இந்த ஆசை?, உன்னை விட 11 வயசு இளையவ நானு! என்னையக் கட்டிக்கனும்னு சொல்லிக்கிட்டுத் திரியுற?, வெட்கமாயில்ல?” – எரிச்சலுடன் அவள் வினவியதும், அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்துப் பொங்கி எழுந்து அவள் தலையில் நங்கெனக் குட்டு வைத்தவன் “என்னையப் பார்த்தாடி வயசானவன்னு சொல்ற?, 60வயசுலயும் புதுமாப்பிள்ளையாக ஆசைப்பட்டவன் உங்கப்பன். நீ என்னைய லந்தடிக்கிறியா?, பொளந்து கட்டிருவேன்!”

“…………….”

“ஆமாடி! ஆசைன்னு தான் வைச்சுக்கோயேன்!, அதனால என்ன இப்போ?, 36 வயசுல கல்யாண ஆசை வர்றதுல என்னத் தப்பிருக்கு?, இத்தனை வருஷமா எவளையும் கட்டிக்கத் தோணல! ஏன், எந்தப் பொண்ணையும் நான் வேற மாதிரி பார்த்தது கூட இல்ல..” – அவன் முடிப்பதற்குள் இடைமறித்தவள்…

“சும்மா அள்ளி விடாத மாமா!, எனக்கு உன்னைப் பத்தி எதுவுமே தெரியாதுன்னு நினைச்சியா? தெற்குத் தெரு ஜோதி அக்கா மேல உனக்கு ஒரு ‘இது’ இருந்ததில்ல?” –என்றதும் “ம்க்க்க்க்க்க்கும்” எனத் தொண்டையைச் செறுமிக் கொண்டவன் “அ…அதெல்லாம்.. வயசுல அப்டி,இப்டின்னு தோணுறது தான்! காட்டாத்து வெள்ளமா பொங்கி வர்ற உணர்வையெல்லாம் அணை போட்டு நிறுத்த முடியுமா கௌரி??” என்று பதில் கேள்வி கேட்டான்.

“ஆமாமா, அணை போட முடியாமத் தான்… புளியந்தோப்புல வைச்சுப் பொங்கி வழிஞ்சுட்ட போல?”

“இங்கப்பாருடி, சும்மா என்னைய வாயடைக்க வைக்கனும்ன்றதுக்காக பாய்ண்ட்,பாய்ண்டா பேசிட்டிருக்காத. இப்போ என்ன?, அந்த ஜோதிக்கும், எனக்கும் இடைல என்னன்னு தெரியனும்? அதான?” என்றவன் சற்று இடைவெளி விட்டு.. “என் கூட்டாளி கரிகாலனோட காதலி அவ!, புளியந்தோப்புல நான் அந்தப் புள்ளைய பார்த்தது கூட, அவிங்க 2 பேர் காதலுக்குத் தூது போற விசயமாத் தான்! எனக்கு அவ மேல எந்தவித ஈர்ப்பும் கிடையாது! இப்போ அவிங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி 3 புள்ளைங்க பொறந்துடுச்சு!, அதனால.. கூறுகெட்டத்தனமான இந்தப் பேச்சை இத்தோட விடு” –என்று முடித்தான்.

“………………”

“அதான் சந்தேகம் தீர்ந்துடுச்சுல்ல?, சம்மதம் சொல்றதுல இன்னும் என்ன யோசனை?”

“பட்டுன்னுத் தலையாட்டுறதுக்கு இது அவ்ளோ சுலபமான விஷயமில்ல மாமா!”

“ஏன்?”

“ஏன்???, ஏன்-ஆ கேட்குற?” – விரக்தியும் வெறுப்புமாய் அவன் முகம் நோக்கியவள் “ஏற்கனவே கல்யாணம்ன்ற பேர்ல என்னையப் பெத்தவன் எனக்குப் பண்ணி வெச்சுட்டுப் போன கூத்தோடப் பலனை இன்னும் அனுபவிச்சிட்டிருக்கேன்! அந்தச் சண்டாளன் போய்ச் சேர்ந்ததுக்கப்புறம் கொஞ்ச,நஞ்சமாக் கஷ்டமாப் பட்டேன்?, இயல்பா வீட்டை விட்டு வெளிய வர முடிஞ்சதா என்னால?, இன்னைய வரைக்கும் இந்த ஊர்ப்பயலுக வாய்ல நான் விழாத நாள் இருக்கா?, இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் நீ என் கிட்ட இப்படிக் கேட்குறது எனக்குப் பத்திக்கிட்டு வருது. ”

“ஓஓஓஓ!, அன்னைக்கு உனக்கு நடந்தது கல்யாணமா??? மனசாட்சியைத் தொட்டு சொல்லு! மாட்டுக்கு மூக்கணாங்கயிறு கட்றாப்ல, உன் கழுத்துல ஒரு களவாணிப்பய மஞ்சக்கயித்தைக் கட்டிட்டா… அதுக்குப் பேரு கல்யாணமா?”

“அது உனக்கும், எனக்கும் புரியும். எல்லாருக்குமே புரிஞ்சுடுமா?,எல்லாரையும் விடு! போய் உங்கப்பத்தாட்ட நீ என்னையக் கட்டிக்க விருப்பப்படுறதா சொல்லிப் பாரு!, முண்டச்சி மேல ஆசைப்படுறியான்னு உன் கண்ணுல கொள்ளிக்கட்டைய விட்டு ஆட்டுறது மட்டுமில்லாம, பஞ்சாயத்து வரைக்கும் போயிரும்!”

“அந்த அளவுக்கு நடக்க நான் விட்ருவேனாடி?, அந்தக் கிழவி ஒரு ஆளுன்னு, அது ஏசுறதுக்கெல்லாம் நீ வருத்தப்பட்டுட்டிருப்பியா?”

“இல்ல மாமா… இது என்னைக்குமே ஒத்து வராது. விதவைக்கு வாழ்க்கைக் கொடுக்கிறது தான் உன்னோட நோக்கம் அப்டின்னா… ஊர்,உலகத்துல எத்தனையோ பொம்பளைங்க இருக்காங்க. என்னைய விட்ரு”

“அடிச்சுப் பல்லைக் கழட்டிடுவேன்! விதவையாமா! ச்சி… காலைல கட்டாயத் தாலிக் கட்டிட்டு ராத்திரி குடிபோதைல லாரி அடிச்சுச் செத்தவனுக்காக.. நீ உன் வாழ்க்கை முழுசையும் பலி கொடுக்கனுமா?, கௌரி… பத்தாம்பசலித்தனமா பேசாம, படிச்சவ மாதிரி நடந்துக்க!”

மறுத்துத் தலையசைத்தபடி மீண்டும் விரல்களை நோக்கியவள் “இப்போதைக்கு என் வாழ்க்கைப் போயிட்டிருக்கிற விதமே எனக்குத் திருப்தி தான் மாமா! புதுசா எந்த விதமான சலனமோ,சந்தோசமோ எனக்கு வேணாம்! நீ சொன்னது போல, நான் ஔவையாராவே இருந்துக்கிறேன். என்னைய விட்ரு!”

“கௌரி… நான் ரொம்பத் தணிஞ்சு போய், இவ்ளோ தழைவா நடந்துக்கிறது உன் விசயத்துல மட்டும் தான்னு உனக்குப் புரியுதா?”

“………………..”

“வழக்கமான என் பாணில இல்லாம, உன் வழிக்கு வந்து உன்னைச் சரிக்கட்டிடலாம்ன்னு போன நிமிஷம் வரைக்கும் நினைச்சு வந்திருந்தேன்!, ஆனா இனி அது முடியாது போல!”

“புரியல…”

“சம்மதம்ன்னு சொன்னா.. என்ன பாதகம் வரும்ன்னு இவ்ளோ யோசிக்குற நீ, சம்மதிக்காம போனா என்ன நடக்கும்ன்னு யோசிக்க மறந்துட்டியே கௌரி?”

“என்ன சொல்றீங்க?” – அவன் பேச்சு புரியாமல் புருவத்தைச் சுருக்கினாள் அவள்.

அவளைப் போலவே கைகளைக் கட்டிக் கொண்டு விடாது அவளையே நோக்கியவன் “இந்தக் கல்யாணம் நடக்காம போனா.. பாதிக்கப்படப் போறது நீயோ,நானோ இல்ல” – என இடைவெளி விட… அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற பதைபதைப்புடன் பதிலுக்கு அவனையே நோக்கினாள் அவள்.

“50 அநாதைக் குழந்தைகளுக்குக் கிடைக்க இருந்த தாத்தா,பாட்டிங்க கிடைக்காம போயிடுவாங்க. 50 பெரியவங்களுக்கு கிடைக்க இருந்த பேரன்,பேத்திங்கக் கிடைக்காம போயிடுவாங்க”

-அவன் முடித்ததும் கோபத்துடன் பட்டென எழுந்து நின்றவளைத் தொடர்ந்து.. நிதானமாகத் தானும் இருக்கையிலிருந்து எழுந்தான் அவன்.

“எதையும்,எதையும் முடிச்சுப் போடுறீங்க?, இந்தக் கல்யாணத்துக்கும், ஏற்கனவே பேசி முடிவடைஞ்சு போன விசயத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“சம்பந்தம் இருக்கு. நீ கல்யாணத்துக்கு சம்மதிக்காட்டி இது எதுவுமே நடக்காது.– தீர்மானமாகக் கூறியவனைக் கண்டு அவள் வாயடைத்துப் போய் நிற்க.. “யோசிச்சு சொல்லு”என்று விட்டு.. அணிந்திருந்த வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, வழக்கம் போல.. மீசையை முறுக்கியபடி முன்னே நடந்தான் மாறன்.