அத்தியாயம் - 2
பத்தாண்டுகளுக்கு முன்னால்………
செங்குளம்.
காட்டுத்தீயாய் நம் தாய்த் தமிழ்நாடு முழுதும் பரவி, உக்கிரம் தணியாது பரம்பரை,பரம்பரையாய் நம் மக்களின் ரத்தத்தில் ஊறிப் போயிருக்கும் ஜாதி பட்டியலில் வரும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர், பெருவாரியாக வசிக்கும் குக்கிராம் அது! ஆயிரம் குடும்பங்களை மட்டுமே கொண்ட அந்தக் கிராமத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், ஒரு பஞ்சாயத்து போர்டும் உண்டு! பத்து,இருபது தெருக்களைக் கொண்ட அவ்வூரின் பெரியாண்டவர் தெருவில்…..
“என்னப் பெத்த அப்பன் உள்ளமட்டும்…
எங்களுக்குப் பக்கம் இடறவில்லஅஅஅ… பயமும் வந்து தோணவில்லஅஅஅ....
என்னப் பெத்த அப்பன் கண் மறைய..
எங்களுக்குப் பக்கம் இடறிச்சேஏஏஏ!, பயமும் வந்துத் தோணிருச்சேஏஏஏ!
என்னைப் பெத்த அப்பன் உள்ள மட்டும்..
எங்களுக்குச் சுத்து இடறவில்லஅஅஅ, துக்கம் வந்து சேரவில்லஅஅஅ….
என்னப் பெத்த அப்பன் கண் மறைய….
எங்களுக்குச் சுத்தும் இடறிருச்சேஏஏ!! துக்கம் வந்து சேர்ந்திருச்சேஏஏஏ……..
-பழம்பெரிய மரக்கட்டில் ஒன்றில் நாடிக்கட்டுடனும்,நெத்திக் காசுடனும், ரோஜா மாலைகள் உடலை மறைத்து மலை போல் குவிந்து கிடக்க.. தலைமாட்டில் ஜோதி எரிய.. பன்னீர்,சந்தன வாசனையுடன்.. 70-வயதான மூக்காண்டி பால் வடியும் முகத்துடனும்,லேசாகப் பிளந்த வாயுடனும் உயிரற்றப் பிணமாய்ச் சாய்த்து வைக்கப் பட்டிருந்தார். ஆடிய ஆட்டமென்ன.. இன்று விழுந்து கிடக்கும் கோலமென்ன ரீதியில்.. உயிரோடிருக்கும் வரை,இளமை ஓயும் வரை செய்த அட்டகாசங்கள் மறந்து,மறைக்கப்பட்டு விட்டத் திருப்தியில் பரலோகம் சென்று நாறப்பதவி அடைந்து விட்ட.. மன்னிக்கவும்! சிவபதவி அடைந்து விட்ட .. பெரும் மதிப்புற்குரியப் பெரியவர் அவர்!
கோட்டைக் கட்டி வாழா விட்டாலும், மூன்று பொஞ்சாதிகளைக் கட்டி அம்மூவருக்கும் தன் ஆண்மையை நிரூபித்து விடும் வேகத்தில்.. 12-குட்டிகளை மன்னிக்கவும்,12 மக்களை ஈன்றெடுத்த பெருமையைக் கொண்டவரை எண்ணிக் கண்ணீர் விட்டுக் கதறியபடித் தலைவிரிகோலத்துடன் நான்கைந்து பெண்கள் ஒருவருக்கொருவர் தோள் சேர்த்துக் கொண்டு வட்டமாக அமர்ந்து பாடிக் கொண்டிருந்த ஒப்பாரி அது! நாம் மறந்து,மறைந்து போனப் பாரம்பரியம்!
அத்தெருவிலிருந்த ஓட்டு வீடுகள் அத்தனையையும் தகர்த்தெரிந்து விடும் நோக்கத்துடன் இடியெனத் தெறித்து எகிறிக் கொண்டிருந்தத் தாரை,தப்பட்டையின் ஒலியும்.. மத்தளம்,நாதஸ்வரம் போல் ஒருவரையொருவர் இணைபிரியாத ஜோடியான சங்கும்,மணியும் அரை மணிக்கொரு முறை ஒலித்ததில் எழுந்த ஓசையும்… இது போதாதென்று சர,சர சரவெடிகளும் சேர்ந்து கொண்டு அத்தெருவே கோலாகலமாய்க் காட்சியளித்தது!
பெருசு,சிறுசு பாராமல் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அந்தப் பெரிய சாவுக்கு ஒன்று கூடியிருக்க.. தாரைத்தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தவரின் அருகே நின்று.. வேஷ்டி அவிழ்ந்து விழப் போவதைக் கூட அறியாமல் முழுப் போதையில்.. நடனம் என்கிற பெயரில் சாமியாடிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டு எதிரே நின்றிருந்த மங்கையர் குழு தலையைக் குனிந்து கொண்டு சிரிப்பை அடக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
“ஏன் ல ஜோதி, எழவு வீட்ல ஆடுறதுன்னா, உன் மாமன் மவன் கரிகாலன் முதல் வரிசைல வந்து நின்றுவான் போல! அடி யாத்தேஏஏஏ! அங்க பாரு, வேட்டி கழண்டது கூடத் தெரியாம…” – என்று கூட்டத்திலொருத்தி முணுமுணுத்துச் சிரிக்க.. எரிச்சலுற்று எதிரேயிருந்தவனை நோக்கிய ஜோதி…
“வாயை மூடுங்கடி, அந்தப் பொசகெட்ட பயலுக்கு இருக்கு இன்னிக்கு, இனிக் குடிக்கவே மாட்டேன்னு என் தலைல அடிச்சுச் சத்தியம் பண்ணிட்டு, என்னா வேலை பார்க்குறான் பாரேன்.. “ – என்று பொறுமிக் கொண்டிருந்த சமயம்..
ஆடிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டம் நின்று “டேய் மாறா.. மாறன் மாமோய்ய்ய்ய்.. மாறன்ண்ணே!!” – எனக் கூவி விசில் அடிக்க.. வெள்ளை,வேஷ்டி சட்டையுடன் முறுக்கு மீசையைத் தடவியபடி நடந்து வந்து கொண்டிருந்தான் 26 வயது நன்மாறன்.
“எங்கண்ணன் வந்துட்டாப்ல!, நல்லா இழுத்து அடிய்யா தப்பு..”எனத் தாரை,தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தவருக்கு ஒருவன் கட்டளையிட... …“வாங்கண்ணே!, வாங்க, வாங்க, நீங்களும் ஒரு ஆட்டத்தைப் போடுங்க” – என்று மற்றொருவன் மாறனை அழைத்தான்.
அனைவருக்கும் தலையசைத்து அருகே வந்தவன், வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, நாக்கைக் கடித்துத் தப்பு (தப்பட்டை) அடிக்கும் அடிக்கு ஏற்ப விரல் மடக்கி விசில் அடித்தபடித் தானும் ரெண்டு ஆட்டத்தைப் போட்டுப் பின்.. அருகில் நின்றவனின் தோளைத் தட்டிச் சிரித்து விட்டு.. பெண்கள் கூட்டத்திற்கு அருகே நின்றிருந்த ராசய்யனிடம் சென்றான்.
“என்ன சித்தப்பு?, இன்னும் யாருக்காகக் காத்திட்டிருக்கீங்க?, சட்டு,புட்டுன்னு பொணத்தைத் தூக்க வேண்டி தான?, இன்னும் என்னத்துக்கு நேரத்தைக் கடத்துறீங்க?” - மாறன்
“எனக்கென்ன ஆசையா?, பெருசு பொணத்தை நடு வீட்ல வைச்சு அழகு பார்க்கனுன்னு?, ஒண்டிவீரன் வராம பொணத்தத் தூக்க சம்மதிக்க மாட்டாய்ங்களாமாப்பா”
“அப்டின்னு சொல்றது யாரு?”
“வேற யாரு, பெருசு சம்சாரம் தான்!”
“ஏன்?, கிழவி, அந்தாளு வராம தாலி அறுத்துக்க மாட்டாளாமா?,இது மூக்காண்டிக்கு சம்சாரமா இல்ல ஒண்டிவீரனுக்கா?, பெருசு உயிரோட இருக்கும் போதே கிழவி ஒண்டிவீரனுக்கு வைப்பாட்டியா வாழ்க்கைய ஓட்டுனவ! இப்போ மட்டும் அடங்கிறவாப் போறா?”
“நமக்கெதுக்கு வம்பு?, நடக்குறதை வேடிக்கைப் பார்த்துட்டு,ராத்திரி கறி சோறும்,பாட்டிலும் வாங்கிக் குடுத்துங்காய்ங்கன்னா, குடிச்சிட்டுச் சாய வேண்டி தான்!”
“உன் கவலை உனக்குச் சித்தப்பு” – என்றவன் அதற்குள் “மாறா…” என்று ஒரு பாட்டி அழைக்கவும் “என்ன ஆத்தா.. 4 மணி ஆயிப்போச்சே!,இன்னும் காபித் தண்ணி தராம இருக்காயங்களேன்னு கடுப்புல இருக்க போல!” என்று வம்பு செய்தபடி அருகே சென்றான்.
அவன் நகர்ந்ததும்.. அதுவரை அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டபடிப் பெண்கள் கூட்டத்தின் நடுவே பச்சைத் தாவணி,சிகப்பு ரவிக்கை சகிதம் முகம் முழுக்கக் கோபத்தில் ஜொலிக்கத் தன் பெரிய கண்களை அகல விரித்து அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தப் பதினைந்து வயது கௌரி “எழவு வீட்ல வந்து என்ன பேச்சுப் பேசுறதுன்னு தெரியல?, காட்டேரிப் பய” என்று எரிந்து விழுந்தாள்.
கூடியிருந்தப் பெண்கள் கூட்டம் அவள் புறம் திரும்பி.. அவளை வினோதமாகப் பார்த்து வைக்க.. அவள் பேச்சில் பொங்கி எழுந்த ஜோதி…
“யாரல காட்டேரிங்குற?, உண்மையைச் சொன்னாக் கோபம் வருதோ?, உங்கப்பன் ஒண்டிவீரனுக்கு, மூக்காண்டியோட மூணாவது சம்சாரம் ராக்காயி வப்பாட்டியா இருந்தது உனக்குத் தெரியாது?, ஹ்ம், உங்கப்பனுக்கு அவ மட்டுமா வப்பாட்டி?, உண்மைல உங்கப்பன் தான் டி காட்டேரி!, ஊர்ல ஒத்தப் பொம்பளைய விட்டு வைச்சிருப்பானா?, பெருசா பேச வந்துட்டா!, இனி மாறனைப் பத்தி ஒரு வார்த்தைப் பேசுன, வாயைக் கிழிச்சுப் போடுவேன்” – என மிரட்டினாள்.
“விடு ஜோதி மதினி, அவங்கப்பன் பண்ணதுக்கு அவ பலியா?, பொது இடத்துல அப்பனைப் பத்திப் பேசுனதும் பொங்கி எழுந்துட்டா. போறா.. விடு!”
“இந்தாடி சோதி…. வாயை வைச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்ட?, இவ கோவத்துல போய் அவங்கப்பன்ட்ட வத்தி வைச்சா, யாருடி அனுபவிக்கிறது?”
-நாலாபுறத்திலும் ஏதேதோ பேச்சுக்கள் எழ.. எப்போதும் போல ஒவ்வொரு முறையும், ஊர்க்காரர்களோடு எங்கு கூடினாலும், தான் மட்டும் தனித்து விடப்பட்டு விடும் வேதனையில், தகப்பனை எதிர்த்து ஒரு வார்த்தைச் சொல்ல முடியாதத் துக்கத்தில்.. தொண்டை அடைக்க.. பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள் அவள்.
பாட்டியுடன் தன் சம்பாஷணையை முடித்து விட்டு வந்த மாறன், அவளைக் கண்டதும் “ஏன் டி செவத்தச்சி, ஊரே இங்க கூடியிருக்கிறப்ப, உங்கப்பன் வீட்ல உக்கார்ந்து ****-ஆ புடுங்கிட்டிருக்கான்?” எனக் கேட்க… சுற்றியிருந்த பெண்கள் அனைவரும் கொல்லென சிரித்தனர்.
ஏற்கனவே கோபத்திலும்,இயலாமையிலும் உதடு துடிக்க நின்றிருந்தவள், அவனது கேள்வியிலும், அனைவரின் கேலியிலும் மேலும் குன்றிப் போனாள்.
அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்துச் சிதற.. கண்ணீர் விட்டபடியே அவனை முறைத்து விட்டு விறுவிறுவென முன்னே நடந்தாள்.
அவள் தன்னைக் கடக்க முயல்கையில்.. விடாது அவளது கையைப் பற்றியவன், “எதுக்குடி எல்லாரும் சிரிக்கிறீங்க?, என் முறை மாமனை நான் திட்றேன், என் மாமன் மவளை நான் வம்பிழுக்கிறேன்!, நீங்க எங்களைப் பார்த்துக் கேலி பேசிச் சிரிப்பீங்களோ?, நீ சொல்றி செவத்தச்சி, உன் மேலயும்,உங்கப்பன் மேலயும் எனக்கில்லாத உரிமையா?, நீ பிடிக்கலன்னு மட்டும் சொல்லு. இனி உங்கொப்பனைப் பத்தி ஒரு வார்த்தை நான் பேசல!” எனக் கூற… பெண்கள் கூட்டம் மேலும் சிரித்தது.
அவனை நிமிர்ந்து பார்த்து “இப்போ கையை விடப் போறீங்களா?, இல்லையா?” – எனக் கூறித் திமிறியவளிடம் “என்னடி, டவுனுக்குப் போய் படிக்கிற தைரியமா?, எதிர்த்தெல்லாம் பேசுற?” எனக் கூறினான்.
“நீங்க இப்போ என் கையை விடல, நான் எங்கப்பாட்ட சொல்லிருவேன்”
“சொல்றி!!, உங்கப்பன்னா எனக்கென்னப் பயமா?, அந்தாளை வெட்டிப் பொலி போட்டு மாறு கால்,மாறு கை வாங்கிற மாட்டான் இந்த மாறன்!” – சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவனிடமிருந்துக் கையை உருவிக் கொண்டு ஓடியவளிடம் “போடி,போடி.. ஒரு நாள் இல்ல, ஒரு நாள்.. உன்னைத் தூக்கிட்டுப் போய்த் தாலி கட்டி, உங்கப்பனை மண்ணைக் கவ்வ வைக்கல???, என் பேரு மாறன் இல்லடி” என்றவனது குரல் அவளை மேலும் துரத்தியது.
கண்ணைத் துடைத்தபடியே ஓடியவள்.. தெருமுக்கில் தனது அம்பாசிடரிலிருந்து இறங்கி வந்த ஒண்டிவீரனைக் கண்டு அஞ்சி,நடுங்கி அப்படியே ஒதுங்கி நின்றாள்.
அடியாட்கள் போன்று தோற்றம் கொண்ட இருவர் பின் தொடர வெள்ளை,வேஷ்டி சட்டையுடனும்,தோளில் துண்டுடனும் நடந்து வந்த ஒண்டிவீரனைக் கண்டு சிலர் எழுந்து நிற்க.. அவர்களிடம் அமரும் படிக் கூறி விட்டு முன்னே வந்தவர்.. கொண்டு வந்த மாலையை மூக்காண்டித் தாத்தாவுக்குச் செலுத்தி விட்டு.. அவரைக் கண்டதும் பொங்கி அழுத.. ராக்காயி-இன் தோளில் ஆதரவாய்த் தட்டினார்.
“என்னண்ணே நடக்குது இங்க?” – அருகே நின்றிருந்த மாறனை மெல்லச் சுரண்டினான் பாண்டி.
“ம், இத்தனை நாளா.. பேருக்குப் புருசனா இருந்தவன் போய்ச் சேர்ந்துட்டான், இனி நமக்குக் கவலையில்லன்னு சந்தோசத்துல அந்தம்மா அழுக.. சரியாச் சொன்ன ராக்குன்னு இந்தாளும் தோளைத் தட்டுறான் போல!” –எனக் கூற, இருவரும் சிரித்துக் கொண்டனர்.
ஒண்டிவீரன் தன் வரவால் ராக்காயியைக் குளிர்வித்து விட்டதால், அடுத்து நடக்க வேண்டிய சடங்குகள் விரைவாக நடைபெற்றன.
ராக்காயியின் மீது பட்டுப்புடவைப் போடப்பட்டு, இனி வாழ்நாள் முடியும் வரை அவளால் அணிந்து கொள்ளவே முடியாத இரு விசயங்களான.. மஞ்சளும்,குங்குமும் அவள் முகத்தில் கடைசியாக அணிவிக்கப்பட்டன. மஞ்சள் பூசிய முகத்தில் பெரிதாகக் குங்குமமிட்டு, கண்ணாடி வளையல்களை இரு கைகளில் மாட்டி, அம்முகத்தை அவளே காண்பதற்கு ஏதுவாக சிறிய முகக் கண்ணாடி ஒன்றை அவளிடம் காட்ட… சுற்றியிருப்போர் அனைவரும் “ஓஓஓஓஓ”-வென அழத் தொடங்கினர்.
அவள் அணிந்திருந்த மஞ்சள் தாலியில் பொட்டிட்டு,பூவிட்டுப் பின், அவளது இரு கைகளையும் ஒன்று சேர்த்துத் தட்டி, அந்தக் கண்ணாடி வளையல்களை உடைக்கச் செய்துப் பின்.. பூ,பொட்டு.. கடைசியாகத் தாலியென அனைத்தும் ஒவ்வொன்றாக அவளிடமிருந்துப் பறிக்கப்பட்டது.
பெண்கள் அனைவரும் வாயை மூடிக் கொண்டு இதைக்கண்டுக் கதற.. ஆண்களின் முகமோ தர்மசங்கடத்தைக் காட்டியது.
இவையனைத்தையும் கண்டுத் தலையை உலுக்கிக் கொண்ட மாறன் “என்ன தான் முறை தப்பிப் போன பொம்பள தான்னாலும், இதையெல்லாம் கண் கொண்டு பார்க்க முடியலடா பாண்டி!, பூவும்,பொட்டும் அந்தப் பொம்பளைக்கு இந்தக் கிழவனாக் கொடுத்தான்?, அதை ஏன் டா அழிக்கிறானுங்க?, எவ்ளோ கொடூரமான சடங்கு இது?, எந்த ஆம்பளை பொண்டாட்டி செத்ததும் இந்த மாதிரி சடங்குக்கு உட்படுத்தப்படுறான்?, ச்சை!, உலகம் முன்னேறி என்னடா பிரயோஜனம்?, நாம இன்னும் அதே இடத்துல தான இருக்கோம்?”என்று பொறுமி விட்டு.. “நான் பொணத்தைத் தூக்கும் போது வர்றேன் டா” என நகர்ந்தான்.
தலையைக் கோதியபடிக் கூட்டத்தைத் தாண்டி வெளியே வந்தவன், தெருமுக்கில் சுவரோடு சுவராகப் பல்லி போல் நின்றிருந்த கௌரியைக் கண்டு “ஏய், முண்டக்கன்னி!, இன்னுமா நீ இங்க நிக்குற?” எனக் கேட்டு, ரிப்பன் வைத்து அவள் அணிந்திருந்த ரெட்டை ஜடைகளில் ஒன்றைப் பற்றியிழுத்தபடி “வாடி என் கூட” என்று இழுத்துச் சென்றான்.
“விடு…. என்னை விடு….” – விடாது திமிறியவளை நின்று முறைத்தவன்.. “விடுங்க மாமான்னு சொல்லு விட்றேன்” என்றான்.
“முடியாது”
“அப்போ விட மாட்டேன்”
“ஆஆஆஆஆ, வலிக்குது! விடு.. விடு…….ங்க…. மா…..மா”
“ம்,இது நல்ல புள்ளைக்கு அழகு”-எனக் கூறி அவள் ஜடையை விடுவித்தவன் “என்னத்துக்கு அப்போ அழுதுக்கிட்டே ஓடுன?” என்று வினவினான்.
அவன் இழுத்ததில் வலித்தத் தலையைத் தேய்த்துக் கொண்டே அவனை முறைத்தவள் “எல்லார் முன்னாடியும் கேலி பேசி சிரிச்சா எனக்கு அழுகை வராதா?” என்றாள்.
“இன்னிக்கு,நேத்தா உங்கப்பனைப் பத்திப் பேசுறோம்?, இல்ல, அந்தாளு என்ன உத்தமனா அவனைப் பத்திப் பேசாம இருக்கிறதுக்கு?”
“அவரைப் பத்தி என்னமோ பேசிட்டுப் போங்க, அவரால நான் எதுக்காக ஒவ்வொருமுறையும் அவமானப்படனும்?, அவருக்கு மகளாப் பொறந்தது என்னோட தப்பா?, நல்லது,கெட்டதுன்னு நான் எதுல கலந்துக்கிட்டாலும் ஊர்க்காரங்க எங்கப்பனைப்பத்தி பேசியே என்னைய ஒதுக்கி வைக்குறாங்க!, யாருமே என் கூட இயல்பாப் பழகுறது இல்ல! எனக்குன்னு இங்க சிநேகிதிங்க கூடக் கிடையாது தெரியுமா?, நான் என்னத் தப்புப் பண்ணினேன்?, இப்போ புரியுது, எங்கம்மா ஏன் தூக்குப் போட்டு செத்துப் போச்சுன்னு!, நீ வேணா பாரு, இதையெல்லாம் தாங்கிக்க முடியாம நானும் அதே மாதிரி ஒரு நாள் தற்கொலை பண்ணிச் சாகத் தான் போறேன்” – பொறுக்க மாட்டாமல் அதுவரை மனதில் குமுறிக் கொண்டிருந்த அத்தனை சோகத்தையும் வெளிக்காட்டி கோபத்துடன் பொங்கி அழுதாள் கௌரி.
“அய்யய்யய்ய… எனக்கப்புறம் எங்க ஊர்ல டவுனுக்குப் போய் இங்கிலிஷ் மீடியத்துல படிக்கிற ஒரே ஆளு நீ தான்னு நான் எவ்ளோ பெருமையா ஊருக்கெல்லாம் சொல்லிட்டுத் திரியுறேன்?, நீ என்ன கழுத தற்கொலை,அது,இதுன்னு வயசுக்கு மீறின பேச்செல்லாம் பேசுற?, அப்படி உன்னைப் பாதில தூக்கிக் கொடுக்கிறதா இருந்தா, அன்னிக்கே உன் கழுத்துலயும் கயித்தை மாட்டிருக்க மாட்டாளா எங்கத்தை?”
கண்ணீரைத் துடைத்தபடி தரையில் பார்வையைப் பதித்து விசும்பிக் கொண்டிருந்தாள் அவள்.
“கௌரி….”
“………..”
“ஏய்.. செவத்தச்சி.. முண்டக்கன்னி..”
வெடுக்கென முகத்தை நிமிர்த்தி அவனை முறைத்தவளைக் கண்டுச் சிரித்து அவள் தலையைப் பற்றி அருகிலிழுத்தவன்.. அவள் கண்ணீரைத் துடைத்து..
“படிக்கிற வயசுல இருக்கிற சின்னப் புள்ள மனசுல இந்த மாதிரி எண்ணமெல்லாம் வரக் கூடாது. சரியா?, செத்துப் போன உங்காத்தா, வானத்துல சந்தோசமாத் தான் இருக்குறான்னு உனக்குத் தெரியுமா?, உங்கப்பனை மாதிரி ஒரு நாதாரிப்பயலுக்காக இந்த ஊர்ல போன உயிரெல்லாம் போதாதுன்னு, நீயும் வேற உயிர் விடனுமா?, நீ போய்ச் சேர்ந்ததும் உங்கப்பன் திருந்திருவான்னா நினைச்ச?”
“ம்ஹ்ம், நான் அவ்ளோ சீக்கிரமெல்லாம் செத்துப் போக மாட்டேன்”
“அதான?, எத்தனை பேர் என்ன ஏசுனாலும் கலங்காம இந்த முண்டக்கண்ணை அகல விரிச்சு முறைச்சுப் பார்க்குற ஆளாச்சே நீயி!, இதைச் சொல்லப் பிடிக்கல தான், ஆனாலும் சொல்றேன். உங்கப்பனுக்கு இருக்கிற தெனாவெட்டுல சரிபாதி உனக்கும் இருக்கு!, அதனால கெத்தை விட்ராத. சரியா?”
சமாதானமாகத் தன்னிடம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தவனைக் குழப்பத்துடன் நோக்கியவள் “நீ என்ன ஒரு நேரம் நல்லாப் பேசுற, சில நேரம் ரொம்பவும் கேலி செஞ்சு கோபம் வர வைக்குற?” என்று வினவினாள்.
“மாரியத்தை மக நீயி!, என் முறைப்பொண்ணு! உன்னைக் கேலி பண்ணாம, யாரடி செவத்தச்சி கேலி பண்ணுவேன்?”
அவன் பதிலில் முகத்தைச் சுழித்தவள் “10-ங் க்ளாஸ் படிக்கிற பிள்ளைக்கிட்ட போய் முறைமாமன் அது,இதுன்னு அசிங்கமா பேசிட்டிருக்க?,ச்சி” என்றாள்.
“அசிங்கமாவா?, கட்டிக்கிறேன்னு தானடி சொன்னேன்?, முத்தம் கொடுக்கிறேன்னா சொன்னேன்?”
“மு….முத்தமா….” என வாயைப் பிளந்தவள் அவனை விட்டு நான்கடி தள்ளி நிற்க..
“என்ன நீ அறியாததைப் பேசிட்ட மாதிரி வாயைப் பொளக்குற?, வயசுக்கு வந்துட்ட புள்ளைக்கு முத்தம்ன்னா என்னன்னு தெரியாதாக்கும்?, மாரியத்தை பதினாறு வயசுலயே உன்னைப் பெத்துருச்சாம்.”
“ஏன் மாமா, இந்த ஊர்லயே பெரிய படிப்புப் படிச்சவன் நீ தான்னு எல்லாரும் பேசிக்கிறாங்க!, ஆனா.. உன் நடையும்,பேச்சும் படிக்காத பாமரப்பய மாதிரி இருக்கு?, உன்னோட கம்பேர் பண்றப்ப, பாண்டி கூட டீசண்ட்டா தெரியுறான்”
“அடியேய் என் அத்த மவளே!! படிப்புங்கிறது அறிவை வளர்த்துக்கத் தான் டி!, பாரம்பரியத்தை மாத்திக்கிறதுக்கு இல்ல!, நான் பேண்ட்-சட்டை போட்டு இந்த மீசை,தாடியை மழிச்சு விட்டுக்கிட்டா உன் கண்ணுக்கு டீசண்ட்டான ஆளாத் தெரிவேனா? ம்?”
அவன் கேள்விக்குப் பதிலளிக்காமல் தோளைக் குலுக்கியவள் “நீ உன் தலை முடியை மழிச்சுக்கிட்டாக் கூட டீசண்ட்டா தெரிய மாட்ட!, ஏன்னா உன் மொசரக்கட்டை அப்பிடி!” எனக் கூற… அவள் பின்னந்தலையில் மட்,மட்டென இரண்டு அடிகளைப் போட்டு “இந்த ஊர்லயே நான் தான் ஆணழகன்னு கல்யாணம் ஆனவ கூட என் பின்னாடி வர்றா… என்.. என் மூஞ்சியை லந்தடிக்கிறியா நீ?, போடி.. போ.. போ-ங்குறேன்ல?” எனத் துரத்தினான்.
அவன் மீண்டும் அடித்ததும் கோபம் வர… அவன் கையைத் தட்டி விட்டு “சும்மா,சும்மா அடிக்காத மாமா.. வலிக்குது ரொம்ப..” எனக் கத்தினாள்.
“உங்கப்பனும் உன்னைய எந்த வகைலயும் கண்டுக்காம விட்டனால தான், நல்லாத் தின்னுத் தின்னு பலூன் மாதிரி ஊதிப் போய்க் கிடக்குற! இப்பிடி செனப்பன்னி மாதிரி இருந்தேன்னா.. மூளைல படிப்பு எப்பிட்றி ஏறும்?,போன மந்த்லி டெஸ்ட்ல மேத்ஸ் எக்ஸாம்ல 99 தான் வாங்கியிருக்கியாமா!, சரவணன் சார் சொன்னாரு!, ஒரு மார்க்கை எங்கடி விட்ட?, தின்னு செரிச்சுட்டியா?”
-இதுவரை அவள் தந்தை கூட அவளது படிப்பைப் பற்றியோ, மதிப்பெண்களைப் பற்றியோ ஒரு வார்த்தைப் பேசியது கிடையாது! ஒவ்வொரு முறையும் நல்ல மதிப்பெண் பெறுகையில் பாராட்டுக்காக ஏங்கிப் போயிருக்கிறாள் அவள்! ஃபீஸ் கட்டுகையில் வருடம் தவறாமல் அவள் பள்ளிக்கு வருகை தரும் அவளது தாய்மாமன் கார்மேகம் கூட அவள் எடுக்கும் மதிப்பெண்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியது கிடையாது! ஆனால்.. இவன்.. இவன் மட்டும் மாதமொரு முறை வரும் அவளது மந்த்லி டெஸ்ட் மார்க்குகளைக் கூட விசாரித்து வைத்துக் கொள்கிறான்.
ஆனால் ஒரு முறை கூடப் பாராட்டியது கிடையாது! நூற்றுக்கு நூறு எடுத்தாலும் கூட, இந்தத் தடவை வாங்கிட்ட,அடுத்தத் தடவை நிச்சயம் கோட்டை விடத் தான் போற பாரு! என்று மிரட்டி விட்டுத் தான் செல்வானே தவிர, வெர்ரி குட் எனக் கூறியதில்லை!
இவன் என்னத்துக்கு என் மார்க்கை விசாரிக்கிறான் என்று பலமுறை கோபப்பட்டிருக்கிறாள்!, தான் மட்டும் தான் இந்த ஊர்லயே படிச்சவன்னு நினைப்பு வைச்சிருக்கிறவனுக்குப் போட்டியா நீ வந்துட்டேல கௌரி, அதான் அவனுக்குப் பொறாமை எனத் தனக்குத் தானே பதில் கூறிக் கொள்வாள்! அவன் திட்டி,மிரட்டிக் கேலி செய்யும் போதெல்லாம்.. அடுத்த பரீட்சையின் போது அவன் முகத்தை மனதில் நிறுத்தி 100 மார்க் எடுத்து விடும் நோக்கத்துடன் தான் அவள் படிப்பதே!
இன்று ஏற்கனவே ஊராரின் உதாசீனத்தினால் மனம் நொறுங்கிப் போயிருந்தவள், அவன் தனது படிப்பைப் பற்றியும் குறை கூறவும், மிக மிக எரிச்சல் கொண்டாள்.
இவனுடன் வாயால் பேசினால் சரி வராது என்று முடிவெடுத்தவள், அருகிலிருந்த குடிசையருகே வைக்கப்பட்டிருந்த சீமாரை (சீமை விளக்குமாறு) எடுத்து அவன் முகத்தைக் குறி வைத்து எறிந்து விட்டாள்..
விளக்குமாறு கண்ணைக் குத்தியதில் கொதித்துப் போனவன் “வெளக்கமாத்தாலயாடி அடிக்கிற?, பொட்டக் கழுதை!” எனத் திட்டி அருகே வர முயல.. அவன் கையில் மாட்டிக் கொள்ளாமல் ஓடியே போய் விட்டாள் அவள்!
அவளைத் துரத்த முயன்றவன் ராசய்யனின் “எலேய் மாறா.. சின்னப்புள்ள கூட என்னடா வெளாடிட்டு இருக்கிற?, பொணத்தத் தூக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க, வாடா” என்று குரல் கொடுத்ததும் “முண்டக்கன்னி உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்டி” என்று முறைத்து விட்டு “இந்தா வர்றேன் சித்தப்பு” எனக் கூறி அவர் பின்னே சென்றான்.
