செங்குளம்

வெளியே கிளம்புவதற்காக வாயிலுக்கு வந்தவனுக்கு, வாசலருகே ‘உள்ளே செல்லலாமா,வேண்டாமா’ ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டுத் தயக்கத்துடன் நின்றிருந்த கௌரியைக் கண்டு இதயம் ஒரு முறை நின்றுப் பின் தாறுமாறாக எகிறிக் குதித்தது.பார்வையைத் திருப்பி வயல்வெளியை நோக்கியபடித் தன்னைச் சமன்செய்து கொண்டவன், “ம்க்கும்” என்று தொண்டையைச் செறுமி மீண்டும் அவள் புறம் திரும்பினான். அவன் முதலில் ஏதாவது பேசுவான் என்று காத்திருந்தபடி கௌரியும், போ சொன்னது நீ, திரும்பி வந்து என் முன்னாடி நிக்குறதும் நீ! அதனால, எதுவாயிருந்தாலும் நீயே பேசுடியாத்தா! என்பது போல் மாறனும் நிற்க, அங்கே சில நிமிடங்களுக்கு மௌனம் மட்டுமே நிலவியது. பின் தயக்கத்தை உடைத்து அவனை நிமிர்ந்து நோக்கியவள் “உ..உள்ளே வரலாமா?” என்றாள். பதில் கூறாமல் சிறு தலையசைப்புடன் உள்ளே காட்டியவன் முன்னே நடந்தான்.

முற்றத்தைக் கடந்து டிவி இருந்த அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவன் கூறும் முன்பே அமர்ந்தவள் வீட்டைச் சுற்றி நோட்டமிட்டாள். அவள் நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்த்தபடி சுவரில் சாய்ந்து கொண்டு, கைக்கட்டியபடி நின்றிருந்தான் மாறன். பச்சையும்,கருப்புமாய்க் காட்டன் புடவைக் கட்டியிருந்தாள். கழுத்தில் மெல்லிய சங்கிலி, காதில் மிகச் சிறிய ஒற்றைக் கல் தோடு, நெற்றியில் கண்ணுக்குத் தெரியாதச் சிறிய கருப்புப் பொட்டு. பாவாடை-தாவணியில் அன்று கண்ட சிறு பெண் போலல்லாது, இன்று புடவையில், வளர்ந்த குமரியாகக் காட்சியளித்தாள். முகத்திலிருந்த சிறுபிள்ளைத்தனம் மறைந்து முகம் முதிர்ச்சியடைந்திருந்தது. அனுபவம் கற்றுத் தந்த பாடத்தினால் கிடைத்த முதிர்ச்சியாயிருக்கலாம். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் “நீ… நீயும் உ..உட்காரு மாமா” என்றாள். அவள் மீதிருந்தப் பார்வையை அகற்றாமல் “பரவாயில்ல, நிக்கிறேன்” என்றான் அவன்.

அதன் பின் என்ன பேசுவதென்றுச் சற்று நேரம் அமைதியாயிருந்தவள் மீண்டும் நிமிர்ந்து “நீ ஏன் அரசி ஆத்தாவை விட்டுத் தனியா வந்து குடியிருக்கிற?, பாவம்ல அது?, வயசான காலத்துல தனியாக் கஷ்டப்பட்டுட்டிருக்கு” என்றாள். “என்னைத் தவிர எல்லாரோடக் கஷ்டத்தைப் பத்தியும் யோசிப்ப போல” – அலட்டிக் கொள்ளாமல் அவன் அளித்த பதிலில் உதட்டைக் கடித்துக் கொண்டு மீண்டும் அமைதியானாள் அவள். பின் காதோரமுடியை ஒதுக்கியபடி மீண்டும் அவனை நோக்கியவள் நேராகத் தான் வந்ததன் நோக்கத்தைக் கூறி, ஏற்கனவே கார்மேகம் பேசிய விசயத்தை அவள் தொடர்ந்தாள். அவன் முகத்தை இரண்டு நொடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியாமல், அவ்வப்போது பார்வையை வெளியே திருப்பியபடித் தயங்கித் தடுமாறி அவள் ஒருவழியாகக் கூறி முடிக்கையில்.. அவன் இதழ்களில் ஒரு மாயப்புன்னகை தோன்றியிருந்தது.

மேலும் வாசிக்க.... கீழே உள்ள லிங்க்குகளைக் க்ளிக்கவும்.....!!