அத்தியாயம் - 10

திருமணப் பேச்சை அவன் தொடங்கியிலிருந்து அவனைத் தவிர்க்க ஆரம்பித்தவள், அவன் கண்ணிலேயே படாமல் போக்குக் காட்டிக் கொண்டிருக்க, விடுவானா மாறன்?, அவள் பின்னே திரிவதை மட்டுமே இப்போது முழு நேரத் தொழிலாக மாற்றியிருந்தான்.

அவள் விதித்தத் தடைகளை மீறி,அவளைச் சந்தித்தவன் அன்பகத்தையும், அவள் தொடங்கப் போகும் அநாதை இல்லத்தையும் ஒன்றாக இணைக்கும் அவளது திட்டம் பலிக்க வேண்டுமானால், அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்க வேண்டுமென்கிற நிபந்தனையை முன் வைத்தான்.

இப்படியொரு அத்துமீறலை அவனிடமிருந்து எதிர்பாராதாதால் திக்குமுக்காடிப் போன கௌரி, அடுத்து என்ன செய்வதென்றுக் குழம்பித் தவித்த நேரம், அடுத்த இடியை அவள் தலையில் இறக்கினான் அவன்.

மாறன் எப்படியும் தன்னுடைய திட்டத்திற்கு ஒப்புக் கொள்வான் என்று நம்பி, அவனது சம்மதம் பெறுவதற்கு முன்பாகவே, அன்பகத்துக்கு அருகேயிருந்த நிலம் ஒன்றை, தனது அநாதை இல்லத்திற்காக விலை பேசியிருந்தாள் கௌரி. இரு இல்லங்களையும் இணைத்துக் கட்டுவது அவளது விருப்பமாக இருந்தது.

ஆனால்… திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாலொழிய இது எதுவுமே நடக்காது என்று கொக்கரித்திருந்த மாறன், அவளை முந்திக் கொண்டு, அவள் பேசிய நிலத்தை தான் வாங்கி விட்டிருந்தான்.

அன்று காலை நிலத்தைத் தன் பேரில் மாறன் பதிவு செய்து விட்ட விசயம் தெரிய வந்ததும், ஆத்திரம் தலைக்கேற அவனை நேரில் சென்று சந்தித்தாள்.

பெரிய வீட்டருகே, ஒற்றையறை கொண்ட வீடொன்றைத் தன் அலுவலக அறையாக உபயோகித்துக் கொண்டிருந்தான் அவன். மேஜை ஒன்றில் கணக்கு,வழக்குகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவனின் முன்னே கோபமாகச் சென்று நின்றாள்.

“நீ.. நீ உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டிருக்க?” -கௌரி

“என்னடி அதட்டுற?”

“நான் விலை பேசுன நிலத்தை, நீ எதுக்கு வாங்குன?, போயும்,போயும் பொட்டச்சிக் கிட்ட மோதி உன் வீரத்தைக் காட்டுறியே! வெக்கமா இல்ல உனக்கு?”

“எடு வெளக்கமாத்த, என்னடி வாய் நீளுது?, எட்டி செவுல்லயே ஒன்னு விட்டேன்னு வையி, 4 நாளைக்கு எந்திரிக்க மாட்ட!”

“கைய வைச்சுப் பாரு, முன்ன மாறி கிடையாது நானு!, உன் கைய ஒடிச்சு அடுப்புல வைக்குற அளவுக்குத் தைரியமான ஆளா எப்பவோ மாறிட்டேன்”

“ஆமாடி, அன்னைக்கு நான் உனக்கு முத்தம் கொடுத்தப்ப, நீ என்னைய அடிச்ச அடிலயே தெரிஞ்சுச்சு!, அன்னைக்குப் பூரா ஒரே வலி! சுடுதண்ணி ஒத்தடம் வைச்சப்புறம் தான் சரியாச்சு!, வாழ்க்கைல என்ன நடந்தாலும் சரி, நல்லாஆஆஆத் தின்னு உடம்ப புஷ்டியா வைச்சுக்கனும்ன்றதுல நீ தெளிவா இருக்க. இல்லடி?”

“தேவையில்லாம பேசாத மாமா”

“பரவாயில்லடி, நீ கும்முன்னு இருக்கிறது தான் மாமனுக்குப் பிடிச்சிருக்கு. இப்பிடியே இரு. அதுபோக, நீ புஷ்டியா இருந்தாத் தான் நாளைக்கு நம்ம புள்ளைகளும் நல்லாக் கொழு,கொழுன்னு பொறக்கும்”

“மாமாஆஆஆஆஆ” – பல்லைக் கடித்தவளைக் கண்டு கொள்ளாமல்..

“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் நம்ம கல்யாணத்த முடிச்சாகனும். என்னால இதுக்கு மேலலாம் காத்திட்டிருக்க முடியாது”

“எனக்கு இஷ்டமில்லன்னு நான் ஓராயிரம் தடவ சொல்லிட்டேன்”

“அப்டின்னா, நீ என்னல்லாம் நினைச்சு இந்த ஊருக்கு மறுபடித் திரும்பி வந்தியோ, அது எதுவுமே நடக்காது. இத்தனை வருசமா தூரமா இருந்து என் நிம்மதியைக் குலைச்சது போதாதுன்னு, இப்ப நேர்ல வந்து உட்கார்ந்துக்கிட்டு, என் உயிரை வாங்குவியோ?, நான் நினைச்சது நடக்காதுன்னா, நீ நினைக்கிறதையும் நான் நடக்க விட மாட்டேன் டி”- எகத்தாளமாக அவன் கூறியதும் மிதமிஞ்சிய ஆத்திரத்துடன் அவனை நோக்கியவள் விருட்டெனத் திரும்பி நடந்தாள்.

“பார்றா! பெருசா சிலுப்பிக்கிட்டுப் போறத! போடி ஏய்ய்.. போடி.. இந்த மாறனை என்ன பொட்டப்பயன்னா நினைச்ச?, உன்னையத் தூக்கிட்டுப் போய் தாலிகட்டியாச்சும், நான் நினைச்சத சாதிப்பேன் டி” – அவள் முதுகுக்குப் பின்னே அவனது குரல் கொக்கரித்தது.

அவள் எண்ணி வைத்திருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகக் கை நழுவிப் போவதை கண்டு அவள் விரக்தியில் மூழ்க, ‘நடிப்பைப் போடாதடி, இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்’-என்ற ரீதியில் தன் முடிவிலிருந்து ஒரு படி கூட கீழிறங்கவில்லை அவன்.

முகம் தொங்கிப் போய் நடமாடிக் கொண்டிருந்தவளிடம் என்னவென்று கார்மேகமும்,ஆத்தாவும் விசாரிக்க, அவர்களிடம் நடந்ததைக் கூறினாள்.

“அந்தக் காட்டுப்பயலுக்கு எம்புட்டுத் தகிரியம் இருந்தா எம் மருமவள மிரட்டுவான்?, அவனை…. அவனை ஒன்னுமில்லாம பண்றேன் பாரு நானு” –என்று துள்ளிய கார்மேகத்தை எரிச்சலுடன் பார்த்த பேச்சி…

“பொட்டச்சிக்கு என்னடி அம்புட்டுத் திமிரு!, அவன் சொல்றப் பேச்சைக் கேட்டு அவனைக் கட்டிக்கிட்டாக் கொறஞ்சா போயிருவ! உன்னையவே நினைச்சுத் தானடி, இத்தனை வயசு வரைக்கும் எவளையும் சீந்தாம, ஒண்டியா வாழ்ந்துட்டிருக்கான்!, இன்னும் அவனை வேதனைப்பட வைக்குற நீயி” – என்று பேரன் சார்பில் பேசினார்.

ஏற்கனவே அவன் மீது ஏகப்பட்டக் கடுப்பிலிருந்தவள் கிழவி பேச்சில் வெகுண்டு “கெழவி, உன் பேரன் கஷ்டப்படுறதைப் பொறுக்க முடியாட்டி, நீ போய்க் கட்டிக்க!, சின்னப் புள்ள ஆசைல மண்ணைத் தூவுற மாதிரி, சில்றத்தனமா வேல பார்த்துக்கிட்டிருக்கவன, நான் கட்டிக்கனுமா?” என்று பாய.. “ம்க்க்க்க்க்க்க்கும்” என்று தொண்டையைக் கனைத்தபடி கரெக்டான நேரத்தில் ஆஜரானான் மாறன்.

“மாறா… வா ராசா…” – பேச்சி

“எலேய், களவாணிப் பயலே, எம் மருமவளை மிரட்டுனியாடா நீயி?”

“ஆமா, மிரட்டுனேன். என்ன அதுக்கு?”

“என்ட்டயேத் தைரியமா ஒத்துக்கிறயான் பாரு, எலேய்,ஒத்தக்கைய வைச்சுக்கிட்டு இவனால என்ன செய்ய முடியும்ன்னா நினைக்கிற?, வெட்டிப் போடுவேன் டா”

“என்னைய வெட்டிட்டு அவளை,எவனுக்குக் கட்டிக் கொடுக்கப் போற?”

“மாமாஆஆ” – எரிச்சலுடன் கௌரி.

“எலேய், சண்டையெல்லாம் வெளிய போய்ப் போடுங்கடா, சும்மா நடுவீட்ல நின்னு கத்திக்கிட்டு” – கிழவி வேறு இடையில்.

“என்னாத்தா, ஆடு வெட்டிருக்கேன், கோழி பறிச்சுருக்கேன்னு என்னைய வாய் நிறையத் திங்கக் கூப்ட்ட?, இப்ப என்ன வெளியே போகச் சொல்ற?”

“ஆமாய்யா, ஆத்தா இன்னிக்கு ஆட்டுக்கறிக் குழம்பும்,வறுவலும் வைச்சிருக்கேன், இவிங்க கிடக்கட்டும்!, நீ வாய்யா, உனக்குச் சோத்தைப் போடுறேன்” – என்ற பாட்டி அடுக்களைக்குள் விரைந்தது. வெடுக்கென்று திரும்பிக்கொண்டு அறைக்குள் கௌரி சென்று விட, மாறனை முறைத்து விட்டுக் கார்மேகமும் வெளியேறினார்.

“இந்தாளு உசுரோட இருக்குற வரைக்கும், இவளை ஒன்னும் செய்ய முடியாது” என்று முணுமுணுத்த மாறன், ஆத்தா போட்ட சோத்தைக் கொட்டிக் கொள்வதில் முனைந்தான்.

குழம்பு,குழம்பு,குழம்பு,ரசம்,ரசம் கடைசியாகத் தயிர் என்று அவன் ஒரு சட்டிச் சோற்றையும்,ரெண்டு,மூன்று கிலோக் கறியையும் முடித்துக் கட்டிய நேரம்…

“அடிச் சிறுக்கி மவள்களா, எம் பேரனுக்குச் சோத்தைப் போட்டு மயக்கி, உங்க பக்கம் இழுக்கப் பார்க்குறீங்களாடி, வளர்த்த ஒருத்திக் குத்துக்கல்லாட்டம் ஒத்தைல வாடிட்டிருக்கிறது தெரியாம… இவனும் இந்தச் சிறுக்கி பின்னாடி, மந்திரிச்சு விட்டது மாறித் திரியுறானே!, மை-ய வைச்சு மயக்கிப் போட்டாளுகளே.. அய்யோ!!!!”

-பெரிய வீட்டு வாசலில் முத்தரசியின் கூக்குரல் தெருவில் போவோர்,வருவோர் அத்தனை பேரையும் நின்று வேடிக்கை பார்க்க வைக்க, அவர் கூறியதைக் கேட்டப் பேச்சியாத்தா பொங்கி எழுந்து..

“யாருடி மைய வைச்சா?, இந்தப் பய எப்படியாச்சும் எம் பேத்திய மறந்துரனும்னு என் வீட்டுக் கொல்லையில, தகடு எழுதி வைச்சவ தானடி நீயி! த்தூ.. ஒரு தாய் வயித்துல பொறந்த உடன்பொறப்பு மாறியாடி நடந்துக்கிற?, உன் கையாலலாம் எம் பேத்தி சோறு தின்றுக்காளேன்னு நினைக்கிறப்ப, என் வயிறு எரியுதுடி” – என்று பதிலுக்குக் கத்த, மாறன் பொறுமையாக தயிர் சோற்றை முடித்து விட்டுத் தண்ணீரைப் பருகுகையில் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் கௌரி.

முத்தரசி மற்றும் பேச்சியின் சண்டையைக் கண்டவள் மாறனை உறுத்து விழித்து “சும்மா கல்யாணம்,கல்யாணம்ன்றியே!, இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு வாழ்ந்துற முடியும்ன்னா நினைக்கிற” என்று கேட்க.. கையிலிருந்தத் துண்டினால் வாயைத் துடைத்தவன், துண்டை அவள் முகத்தில் எறிந்து விட்டு வாசலை நோக்கி விரைந்தான்.

“அன்னைக்கே உன் காதை அறுத்து, தெருநாய்க்குப் போட்டிருக்கனும்டி” – பேச்சி

“அறுப்படி அறுப்ப!, அதுக்கு முன்னாடியே உன் கைய ஒடிச்சு அடுப்புல போட்ருப்பேன் நானு” -முத்தரசி

“அட ச்சி! வாயை மூடுங்கடி கிழட்டுச்சிறுக்கிகளா, சத்தம் வந்துச்சு, குரவளைய நெறிச்சுக் கொன்னுத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டேயிருப்பேன்” – மாறனின் குரல் ஓங்கி ஒலித்ததும் அடங்கிப் போன பெருசுகளிரெண்டும் அவன் முகத்தையே பார்க்க..

“இந்தாத்தா.. என்னையத் தூக்கி வளர்த்தவளே!, நான் என் அத்த மவளைக் கட்டிக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை?, ஏற்கனவே தாலின்ற பேர்ல ஒரு கயித்தைக் கட்டுனவன், அன்னைக்கு ராவுலயே லாரி அடிச்சுச் செத்த மாறி, நானும் செத்துருவேன்னா??, இவளைக் கட்டிக்காம போனா மட்டும், நான் நீண்ட ஆயுசோட வாழுவேன்னு எவன் உனக்குச் சொன்னது?, ஒரு குடிகார ****பய லாரி அடிச்சு செத்ததுக்கு, அவ பலியா?, உன் புருசன் கூடத் தான் உன் கூட வாழ்ந்த பத்தே வருசத்துல செத்துப் போயிட்டான்!, அதுக்காக உன்னைய எவ ராசியில்லாதவன்னு சொல்றா?, இத்தனை வருசமா உன் மூஞ்சில கூட முழிக்காம நான் தள்ளியிருந்தும், உன் வாய் அடங்கியிருக்கா??, இப்பிடியே இருந்தன்னு வையி, நீ செத்தாக் கூட கொள்ளி போட மாட்டான் இந்த மாறன்” – முழுக் கோபத்துடன் அவன் கத்தியதும்…

“அய்யா… ராசா.. என்ன வார்த்தைச் சொல்லிப் போட்ட?, இந்தக் கிழவிக்கு உன்ன விட்டா யாருடா இருக்கா?, நீ தள்ளியிருக்கிறதைப் பொறுத்துக்க முடியாமத் தான டா, அப்பத்தா இப்பிடியெல்லாம் பேசுறேன்?”

“அப்ப வாயைக் கொற நீயி!, போய்ச் சேர்ற காலத்துல என்ட்ட வாங்கிக் கட்டிக்காத!, நான் அந்தப் புள்ளையத் தான் கட்டுவேன்! என்னைக்குன்னாலும் அவ தான் எனக்குப் பொண்டாட்டி!, அவளைப் பத்தி ஒரு வார்த்தை நீ தப்பா பேசுனன்னு தெரிஞ்சுச்சு, கிணத்துல தூக்கியெறிஞ்சு உன்னைக் கொன்னு போடவும் தயங்க மாட்டேன்”

“நீ அவளையே கட்டிக்கய்யா!, அப்பத்தா இனி எதுவும் சொல்லல!” – கிழவி பட்டென்று சரண்டர் ஆகியதும்… “ம்ம்” என்றவன் பேச்சியின் புறம் திரும்பி..

“கெழவி, எம் பேத்தி,எம் பேத்தின்னு சும்மா வாய் நிறைய சொன்னா ஆச்சா?, ஊருக்குத் திரும்பி வந்து இத்தனை நாளாச்சே!, சட்டு,புட்டுன்னு எங்கக் கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறதை விட்டுப்போட்டு, தெண்டமா உக்கார்ந்துருக்க?, கூடப் பொறந்தவளோட மல்லுக்கு நிக்க மட்டும், நல்லா வரிஞ்சு கட்டிக்கிட்டு வர வேண்டியது!, உருப்படியா ஒன்னு செய்யத் தெரியுதா?” – என்று எகிறவும் பேச்சிக்கு ரோஷம் வந்து விட… “எலேய், நல்ல நாள் என்ன நல்ல நாள்?, எம் பேத்தி மணவறைல உட்கார்ற நாள் எல்லாமே நல்ல நாள் தான் டா!, உனக்கு என்னைக்குக் கல்யாணத்தை முடிக்கனும், அதைச் சொல்லு” என்றதும் வாயெல்லாம் பல்லாகிப் போனான் மாறன்.

அனைவரும் பேசிக் கொண்டதைக் கேட்டபடி வெளியே வந்த கௌரி முத்தரசியை நோக்கி “நாங்க ஊர் திரும்புன, இத்தனை நாளா பெரிய வீட்டுப் பக்கம் எட்டிக் கூட பார்க்கல நீயி, இன்னைக்குப் பேரன் சோறு திங்க வந்துருக்கான்னதும் ஓடி வந்துட்ட?” என்று விசாரித்தாள்.

தலையைக் குனிந்தபடிக் கண்ணீர் வடித்த முத்தரசி பின் கௌரியிடம் ஓடி வந்து “என்னை மன்னிச்சுட்றியாத்தா!, புத்தி கெட்டுப் போய் உன்னையப் பத்தி நானே அப்புடிப் பேசிப் போட்டேன்” என்று கதற.. “கெழவி, அழுகைய நிறுத்து” என்று சமாதானப்படுத்தினாள் கௌரி.

மூக்கைச் சீந்திக் கொண்டு கண்ணீரைத் துடைத்த அரசி “உப்புசப்பில்லாம உன் ஆத்தாக்காரி சமைச்சுப் போட்ற சோத்தைத் திங்கத் தான் இவன் வந்தானாக்கும்?” என்று பழையபடித் துவங்கியதும் “யார்றி உப்புசப்பில்லாம சமைச்சது, ஆமா, இவ பெரிய சமையக்காரி, என்னையச் சொல்ல வந்துட்டா” என்று பதிலுக்கு பேச்சிப் பாட்டியும் கத்தியது.

“அய்யய்ய, வாசல்ல நின்னு ஊரைக் கூட்டுனது போதும், முதல்ல ரெண்டு பேரும் உள்ள வாங்க” என்று அதட்டிய கௌரி அவர்களை உள்ளே இழுத்துச் செல்ல.. நிறைந்த மனதுடன் புன்னகைத்துக் கொண்டே வெளியேறினான் மாறன்.

கௌரியிடம் முறைத்துக் கொண்டாலும், அவளது எண்ணங்களைச் செயலாக்கும் பொருட்டு இல்லம் சம்பந்தப்பட்ட விசயங்களில் முழு மூச்சுடன் கார்மேகத்துடன் இணைந்து செயல்பட்டான் மாறன். ஆனால் இதுபற்றி இருவரும் கௌரியிடம் தெரிவிக்கவில்லை.

அன்று அன்பகம் தொடர்பான கணக்கு,வழக்குகள் சிலவற்றை கம்ப்யூட்டரில் ஏற்றச் சொல்லி கனமான நோட்டுக்கள் சிலவற்றைக் கலையிடம் கொடுத்தனுப்பியிருந்தான் மாறன்.

அவள் நீட்டிய நோட்டுக்களை வாங்கிய கௌரி, ஒவ்வொன்றாக கம்யூட்டரில் ஃபீட் செய்யத் துவங்க… அவளையே பார்த்தபடி அருகே நின்றிருந்தக் கலையரசி.. இந்தச் சில நாட்களாக நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதை அவள் வழக்கமாக்கியிருப்பதைக் கண்டுப் புன்னகைத்துக் கொண்டாள்.

“கௌரியக்கா…”

“என்னடி?”

“உனக்கு நெசமாவே மாறன் மாமாவைப் பிடிக்கலையா?” – அவள் வினவியதும் திரும்பி அவளை நோக்கியவள் “ஏன் அப்பிடிக் கேக்குற?” என்றாள்.

“ப்ச், நீ பதில் சொல்லு, நீ ஏன் அவரைக் கட்டிக்க சம்மதிக்க மாட்டன்றதுக்கு எனக்குக் காரணம் தெரியனும்”

“தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போற?”

“ம், காரணம் நியாயமானதா இருந்தா, மாமாட்ட எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கலாம்ல, அதுக்குத் தான் கேக்குறேன். நீ சொல்லு”

“நான் சொல்ற காரணத்தை அந்தாளு ஏத்துக்கும்ன்னா நினைக்குற?”

“மாட்டாஆஆஆரு தான்!, ப்ச், சும்மா பேச்சை வளர்க்காம, விசயத்துக்கு வாக்கா”

தலையைக் குனிந்தபடி ஒரு நிமிடம் அமைதியானவள் “எல்லாம் பயம் தான் டி” என்றாள்.

“என்ன பயம்?”

“ஒரு வேளை, அரசி ஆத்தா சொன்ன மாதிரி, நான் நெசமாவே ராசியில்லாதவளா இருந்தா?, என்னால மாமனுக்கு ஏதாவது ஆயிட்டா?”

“அடச்சி, வாய மூடு!, கெழவியே நான் சொன்னது தப்புன்னு மன்னிப்புக் கேட்டு மாமா பக்கம் சாய்ஞ்சிடுச்சு! நீ என்ன இன்னும் அதைப் புடிச்சுத் தொங்கிட்டிருக்கவ?”

“……..”

“சரி, ஒரு வேள, அந்தச் சண்டாளன் அன்னைக்கு ராத்திரி செத்துப் போகாம இருந்து, ராசியில்லாதவன்ற பேரை உனக்குக் கொடுக்காம இருந்திருந்தா, என்னாகியிருக்கும்?, அவன் உசுரோடு இருந்து, உன் உசுரை வாங்கிட்டுப் போயிருப்பான்!, தான் ஆம்பளன்ற ஒரு காரணத்துக்காகத் தன்னோட பலத்தைப் பிரயோகிச்சு, உன் கழுத்துல கட்டாயமாத் தாலி கட்டுனவனோட, உன் விருப்பத்த மதிச்சு இத்தனை வருசமா விலகியிருந்து, நீ எப்ப சம்மதம் சொல்லுவன்னு காத்திட்டிருக்கிற மாறன் மாமாவை ஒப்பிடாதக்கா! அவரு உண்மையான ஆம்பள!, அது போக, வாட்டசாட்டமா, காளை மாடு மாதிரி இருக்கிற மாமாவையெல்லாம் எமனால அவ்ளோ சீக்கிரம் ஒன்னும் பண்ணிட முடியாது”

“ப்ச், நீ ஏன் டி இவ்ளோ பேசுற?”

“எனக்கு நீயும்,மாமாவும் ஒன்னு சேரனும்க்கா. ப்ளீஸ்…. சீக்கிரம் சம்மதம்ன்னு சொல்லு”

“அடியேய்… கேனக்கழுத, நான் வேலைய முடிச்சுட்டு உன்னையக் கூப்பிட்றேன்! நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு” – என்று அவள் அடித்து விரட்ட.. கடுப்பாகிப் போன கலை…

“உனக்கும் மாறன் மாமா மேல ஆச தான்! ஆனா ரொம்பத் தான் திமிரு பண்ணிக்கிற! செவப்பா இருக்கேல?, அதான்” – எனக் கூற.. அவளை அடித்து விரட்டி அனுப்பி வைத்தாள் கௌரி.

ஆனால் கலை அத்தோடு நிற்காது மாறனிடம் சென்று “அக்கா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருச்சு மாமா, நீ இன்னைக்கு சாயந்தரம் வன தேவதை கோயில்ல அக்காவைப் பாரு” என்று சொல்லி வைக்க.. ஐயம் கொண்ட மாறன் “கருவாச்சி என்ன உளர்றா..?” என்று நம்பாத பார்வை பார்த்தான்.

ஆனாலும் ஒரு முயற்சியாக மாலை அவளைக் கோயிலில் சந்தித்தான்.

ஊர் எல்லையில் ஒற்றைக் கருவறையும்,அருகிலேயே ஒரு குளத்தையும் கொண்ட அக்கோவிலில், அவர்களிருவரைத் தவிர யாருமில்லை.

அவளுக்கு முன்பே வந்துத் திண்ணையில் அமர்ந்திருந்தவன் அவளைக் கண்டதும் குதித்திறங்கினான். இவன் எதற்காக இங்கேயிருக்கிறான் என்று புருவத்தைச் சுருக்கி யோசித்தபடி வந்த கௌரி, அவனிடம் எதுவும் பேசாமல் கோயில் உள்ளே சென்று விளக்குப் போட்டுச் சாமி கும்பிட்டு விட்டு, குளத்தின் படிக்கட்டுக்குச் சென்றமர்ந்தாள்.

அவளைத் தொடர்ந்து தானும் வந்தமர்ந்தவன்..

“ஏன் டி ஒருத்தன் அய்யனார் சிலையாட்டாம் முன்னாடி நிக்கிறானே!, அவனை என்னன்னு கேப்போம்ன்ற விவஸ்தை இல்லாம உம்பாட்டுக்க, இங்க வந்து உட்கார்ந்துட்டவ?”-என்றான்.

“உன்ட்டப் பேச எனக்கென்ன இருக்கப் போகுது?”- அவன் முகம் பாராமல் நேரே வெறித்தபடிக் கூறியவளிடம்….

“நான் இங்க உட்கார்ந்திருக்கேன். என் முகத்தைப் பார்த்துப் பேசு”

“உன் மூஞ்சில முழிக்கவே எனக்கு இஷ்டமில்ல” – அவள் கூறி முடிப்பதற்குள் பட்டென அவள் பின்னந்தலையில் அவன் அடிக்க, முகத்தைச் சுருக்கிக் கொண்டு எரிச்சலுடன் அவனை நோக்கினாள்.

“சும்மா அடிக்கிற வேலையெல்லாம் வைச்சுக்காத மாமா!, ச்ச” – தலையைத் தேய்த்தபடியேக் கத்தியவளிடம்..

“ஏன் டி! வயசு கடந்து போறதைக் கூடக் கண்டுக்காம, உன்னையே நினைச்சுக்கிட்டு ஒருத்தன் இத்தனை வருசமா காத்துக் கிடக்கேன், நீயி என் முகத்தைப் பார்த்துப் பேசக் கூடப் பிடிக்கலன்னுவியோ!, சங்கறுத்துருவேன் பார்த்துக்க!”

“உன்னை யாரு காத்துக் கிடக்கச் சொன்னா?, அந்த மயில்சாமி மக எழிலரசியக் கட்டிக்கிட்டுச் சந்தோசமா இருக்க வேண்டி தான?”

“நான் எவளையோ கட்டிக்கிட்டத் துக்கத்துல நீ பாட்டுக்க, தூக்குல தொங்கிட்டா என்ன பண்றது?, என்னால உயிர்ப்பலியை மட்டும் பொறுத்துக்கவே முடியாது”

“அய்யே!, நீ இல்லன்னு நான் சாகப் போவேனாக்கும்?, சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத மாமா”

“அப்புறம் ஏன் டி அன்னைக்குக் கிணத்துல குதிச்ச?”

“புத்திக் கெட்டுப் போய்க் குதிச்சுட்டேன் ராசா, பேச்சை விடு”

“அன்னைக்கே உன் காலை ஒடிச்சுத் தூக்கிட்டுப் போய்த் தாலியைக் கட்டியிருந்தேன்னா, இன்னிக்கு எம் முன்னாடி உக்கார்ந்து இம்புட்டுப் பேச்சுப் பேசுவியா நீயி?”

“ஏற்கனவே கையக் கட்டித் தாலிகட்டுனவன், அல்பாயுசுல போயிட்டான்! நீயும் அதையேச் செய்யேன்!, ஆளாளுக்கு இஷ்டத்துக்குத் தாலிகட்ட நான் என்ன கோயில் மரமா?, அப்பிடி மட்டும் ஏதாவது நடந்திருந்தா.. யாராலயும் காப்பாத்த முடியாத அளவுக்கு, நெருப்பை வைச்சுக் கொழுத்திக்கிட்டுச் செத்துருப்பேன்”

“……………………………..”

அவனிடமிருந்து நெடு நேரமாகப் பதில் வராது போனதும், திரும்பி அவனை நோக்கினாள் அவள்.

குளத்து நீரை வெறித்தபடி, உணர்ச்சிகளற்று இறுகிப் போய் அமர்ந்திருந்தவனது முகம் பாறாங்கல்லைப் போலக் காட்சியளித்தது. அந்த முகம் ஏனோ மனதைப் பிசைய.. “மா…..மா….” என்றழைத்தாள்.

மெல்ல அவள் புறம் திரும்பியவன் “இப்ப என்னடி?, உன்னால என்னைக் கட்டிக்க முடியாது. அதான?, சரி. கட்டிக்க வேணாம். காலம் பூரா நான் கன்னிப்பையனா வாழ்ந்து செத்துட்டுப் போறேன்!, அது தான் விதின்னா, அதுப்படியே நடக்கட்டும்” என்றான்.

“எனக்காக நீ என்னத்துக்கு உன் வாழ்க்கையக் கெடுத்துக்கனும்?”

“வேற என்ன செய்யனும்?, வேற எவளையாவது கட்டிக்கனுமா?, சரி,கட்டிக்கிறேன். நீயும் அதே மாதிரி, வேற எவனையாவது கட்டிக்க”

பதில் கூறாமல் அவனை முறைத்துப் பார்த்தாள் கௌரி.

“என்னடி?, உனக்கு என்னைக் கண்டாத் தான வெறுப்பா இருக்கு?, உன் மனசுக்குப் புடிச்ச மாதிரி எவனையாவது கட்டிக்க!, நீ சொல்றத நான் கேக்கனும். நான் சொல்றத மட்டும் நீ கேக்க மாட்டியாக்கும்?”

“லூசு மாதிரி பேசாத மாமா”

“ஹப்பா! ஒரு வழியா இந்தப் பேச்சு லூசுத்தனமா இருக்குன்னு நீயே ஒத்துக்கிட்டியே! அதுவே போதும் சாமி”

“……………”

“நீ நினைச்ச மாதிரி, ரெண்டு இல்லத்தையும் இணைச்சுக் கட்டுற ஏற்பாடெல்லாம் தொடங்கியாச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல, கட்டிட வேலை முடிஞ்சதும், முறையா திறந்து வைப்போம். எங்க,இவனைக் கட்டிக்கச் சம்மதிக்காட்டி இதெல்லாம் நடக்காதோன்னு இனி நீ பயப்பட வேணாம்..”

கார்மேகத்தின் மூலம் ஏற்கனவே இந்தச் செய்தியைக் கேட்டறிந்ததனால் அமைதி காத்தாள் கௌரி.

“அப்போ நான் கிளம்புறேன்” – அவன் எழுந்து படிக்கட்டுகளில் ஏறத் துவங்கியதும் அவசரமாக “மாமா…..” என்றழைத்து நிறுத்தியவள் தானும் எழுந்து சென்று, அவன் முன்னே நின்றாள்.

தயங்கியபடியே “எ…எனக்குக் கொ..கொஞ்ச நாள் டைம் குடுக்கிறியா?”-எனக் கேட்டவளிடம்…

“எதுக்கு?” – என்றான் அவன்.

“……………..”

“நம்ம கல்யாணத்தைப் பத்தி யோசிக்குறதுக்கா?”

“ம்ம்”

“ஹ்ம்ம்ம்ம், அடுத்த வெள்ளிக்கிழமைக்குள்ள எவ்ளோ யோசிக்க முடியுமோ, அவ்ளோ யோசிச்சுக்க” – தோரணையாகக் கூறினான் அவன்.

“ஏன்?”

“ஏன்னா அடுத்த வெள்ளிக்கிழமை உனக்கும்,எனக்கும் நம்ம குல தெய்வக் கோயில்ல கல்யாஆஆஆஆஆணம்” – என்றவனைக் கண்டுத் திகைத்துக் கண்களை அகல விரித்தவளுக்கு ‘அடக் களவாணிப் பயலே’-என்றுக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“டைம் வேணுமாம் டைம்!, போடிக் கேனச் சிறுக்கி! உன் மாமனை அம்புட்டு நல்லவன்னா நினைச்ச?, கல்யாணத் தேதியைக் குறிச்சிட்டுத் தான் டி கட்டிடத்துக்கு அஸ்திவாரத்தைப் போட்டேன்!, நீ ஆசையா மாமான்னு என் பின்னாடி வருவ! என்னைய கட்டிக்கச் சம்மதிப்பன்னு நான் காத்துக்கிட்டிருந்தக் காலமெல்லாம் போதும்!, ஒழுங்காக் கல்யாணத்தைப் பண்ணிட்டு, எனக்குப் புள்ளையைப் பெத்துக் குடுக்குறதுக்கு வழியப் பாரு” என்றவன் புசுபுசுவென உஷ்ண மூச்சை வெளியிட்டபடிக் காளியவதாரம் எடுக்கத் தயாராகிக் கொண்டவளை மதிக்கவேயில்லை.

அவன் கூறிய பிறகு தான் கார்மேகம் மற்றும் பேச்சியாத்தாவின் நடவடிக்கைகளில் வித்தியாசத்தையே உணர்ந்தாள். திருமண வேலையாகத் திரிந்து கொண்டிருந்தனர் இருவரும்.

“கௌரியக்கோவ்!! கலக்கிப் போட்ட போ!, இனி மாறன் மாமாவைக் கையில புடிக்க முடியாது” – என்றுக் கத்திக் கூப்பாடு போட்டக் கலையரசியிடம் ஈஈஈஈ எனப் பல்லைக் காட்டி வைத்தாள்.

இனி அவளால் என்ன செய்ய முடியும்?, அவள் பேச்சை யார் மதிக்கப் போகிறார்கள்?, மனம் சிணுங்கினாலும், ஒரு புறம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனாள்.

முத்தரசியின் பேச்சு கொடுத்த வலியினால் மட்டுமே அவள் அத்தனை வருடங்களை அவனை விட்டு ஒதுங்கியிருந்து கழித்தது. ஊர் திரும்பிய பிறகு, ஊராரின் போக்கில் கூட மாற்றத்தை உணர்ந்தேயிருந்தாள். ‘அப்பன் பண்ணத் தப்புக்கு புள்ள வாழ்க்கைய பலி கொடுக்க முடியுமா, மனசார அந்தப்புள்ள யாருக்கும் கெடுதல் பண்ணது கிடையாது!, பேச்சியாத்தா பொத்தி,பொத்தி வளர்த்த புள்ளை அது!, அதுக்கு ஒரு நல்லதைப் பார்க்காம அது கட்டை வேகுமா?, மாறன் பயலும், இவ தான் வேணும்ன்னு இத்தனை வருசமா வைராக்யமா இருந்துட்டானே!, அவனும் தான் என்ன செய்வியான், சிறுசுல இருந்து அவ தான் பொண்டாட்டின்னு மனசுல நினைச்சு வாழ்ந்தவன்! எப்படியாவது அந்தக் கடவுள் இதுங்க ரெண்டையும் ஒன்னு சேர்த்து வைக்கனும்!’ என்று பலர் பேச்சியாத்தாவிடம் ஆறுதல் கூறுவதை அவளே கேட்டிருக்கிறாள்.

இருந்தத் தடைகள் அனைத்தும் களைந்த பின்பும், இன்னமும் வரட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டு அவனை விட்டுத் தள்ளியிருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை தான்!, ஏனோ மனதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது அவளுக்கு. அந்த ஒரு தாலிக்கயிறு மட்டும் கழுத்தில் ஏறாதிருந்தால், அவள் இத்தனை யோசிக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது! நடப்பது நடக்கட்டுமென அனைத்தையும் இறைவனிடம் கொடுத்து விட்டுத் திருமணத்திற்குத் தயாரானாள் கௌரி.

திருமண நாளன்று காலை கூரைப் புடவையில் தயாராகிக் குலதெய்வக் கோவிலுக்குக் காரில் வந்திறங்கியவளை, வாசலிலேயே வரவேற்றான் மாறன்.

“எலேய், மாப்பிள்ளையா லட்சணமா, மணவறைல உட்கார்றதை விட்டுப்போட்டு இங்க என்னத்துக்குடா நிக்குற?” -கார்மேகம்

“எல்லாம் எம் பொண்டாட்டியப் பார்க்கத் தான்”

“நீ இன்னும் அவ கழுத்துல தாலி கட்டல”

“அதான் இன்னும் பத்து நிமிசத்துல கட்டப்போறேன்ல?” – கார்மேகத்திடம் விடாது பதில் கூறினாலும் அவன் பார்வை கௌரியைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தது.

எளிமையான அலங்காரம்! காதில் பெரிய குடை ஜிமிக்கி, நெற்றியில் பெரிதாய்ச் சிவப்புப் பொட்டு, கண்ணுக்கு அழுத்தமாய் மையிட்டு, உதட்டுக்கு லேசாகச் சாயம் பூசி, மிக,மிக அழகாய் இருந்தாள் அவள்.

அவன் பார்வையை உணர்ந்துத் தலையைக் குனிந்தபடி வெட்கத்தை வெளிப்படுத்தியவளைக் கண்டு, இதழ் விரிந்து புன்னகை பூத்தது அவனுக்கு.

யோசித்துப் பார்த்தால், அவள் வெட்கப்பட்டு இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறான் அவன்!, அவள் என்னவள்! என் பார்வையால் வெட்கம் கொள்கிறாள் என்ற எண்ணமே அவனை வானில் பறக்க வைக்க.. வைத்த கண் எடுக்காமல், அவளையே நோக்கியவனின் தோளில் இடித்தார் கார்மேகம்.

“விரசா உள்ள கூட்டி வாங்கடா, நேரம் கடக்குதுல்ல?” – கோயிலுக்குள்ளிருந்து பேச்சியாத்தா குரல் கொடுக்க.. அவளை அழைத்துப் போக வந்த கலையரசியிடம் “ஏய் கருவாச்சி, நகரு! எம் பொண்டாட்டியக் கூட்டிப் போக எனக்குத் தெரியும்” என்றவன்… வெண்பட்டு வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு.. சட்டெனக் குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டான்.

“அடியாத்த்த்த்த்த்த்த்த்தி” – என்று சுற்றியிருப்பவர்களனைவரும் நகைக்கத் தொடங்க சங்கோஜமாகிப் போன கௌரி ஈஈஈஈஈ என்ற வாயுடன் நடந்து கொண்டிருந்தவனைக் கண்டுப் பல்லைக் கடித்தாள்.

“ஏன் மாமா இப்பிடிப் பண்ற?”

“என்னைக்குன்னாலும் உன்னையத் தூக்கிட்டுப் போய்த் தான் தாலி கட்டுவேன்னு அடிக்கடி சொல்லுவேன்லடி?, அதை நிரூபிக்கத் தான் இப்பிடி!”

“மானத்தை வாங்குற மாமா” – என்று திட்டியவளுக்கு வெட்கமும்,மகிழ்ச்சியும் ஒருங்கே எழுந்தது.

சுற்றி நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்த கார்மேகத்திற்கும்,பேச்சியாத்தாவிற்கும் சந்தோசம் தாள முடியவில்லை!, ‘இந்தப் பய இவ மேல எம்புட்டு ஆசை வச்சிருக்கியான்’ என்று முத்தரசி கிழவி கூட ஆச்சரியப்பட்டுப் போனது.

“இன்னிக்குக் கூட ஏன் மாமா தாடியை மழிக்காம வந்திருக்க?”

“நான் தாடிய சிரைச்சா, உன்னால கூட என்னைய அடையாளம் காண முடியாதுடி”

“எலேய், பேசுனது போதும்டா, அவள மனைல உட்கார வையி” –பேச்சி

கிழவி அதட்டியதும், அவளை மனையில் விட்டவன், தானும் அவளருகே அமர்ந்தான். அய்யர் மந்திரம் ஓத, கெட்டிமேள சத்தத்துடன், ஊராரின் ஆசிர்வாதங்களுடன், தன் மனதுக்கினிய காதலியை ஒரு வழியாகக் கரம் பிடித்தான் மாறன்.

அன்றிரவு….

மாறனின் வயற்காட்டில், பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் புல்தரையில் பாய் விரித்து சிலுசிலுகாற்றை அனுபவித்தபடி ஏகாந்த மனநிலையுடன் அமர்ந்திருந்தனர் இருவரும்.

“இந்தக் கொசுக்கடில உட்காரனும்ன்னு ஏன் டி பிடிவாதம் பிடிக்கிற?” - மாறன்

“ப்ச், உனக்குக் கொஞ்சம் கூட ரொமாண்டிக்கா யோசிக்கவே தெரியல மாமா”

“அடேங்கப்பா!, போன வாரம் வரைக்கும் கல்யாணமே வேணாம்ன்னு குதிச்சவ, இன்னிக்கு ரொமான்ஸைப் பத்திப் பேசுற?”

“நீ இப்டில்லாம் பேசுனேனா, நான் எந்திரிச்சுப் போயிடுவேன்”

“சரி, பேசல டி”

“ஏன் மாமா, அதான் அரசி ஆத்தாக் கூட ராசியாய்ட்டேல?, இன்னும் ஏன் இந்த வீட்ல இருக்கனும்ன்ற?”

“தனித்தனியா இருக்குறது தான் டி நல்லது!, நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருந்து அடிச்சுக்கிட்டு எனக்குத் தலைவலியைக் குடுப்பீங்க, தேவையா இது எனக்கு?”

“அதுக்காகக் கிழவிய அப்டியே விட்ற முடியுமா?”

“அப்பப்போ போய்ப் பார்த்துக்க, படுத்துக்கிச்சுன்னா தூக்கிட்டு வந்து வைச்சு சேவகம் பண்ணு”

“ம்ம்ம்ம்ம்”

“கௌரி…..”

“ம்??”

“வீட்டுக்குள்ள போலாம்டி”

“ப்ச், இரு மாமா.. என்ன அவசரம்?, நிலாவைப் பாரேன்! வட்டமா அழகா இருக்கு” – தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்து நிலவை ரசித்தவள், அவனிடமிருந்துப் பதில் வராது போனதும், குனிந்து அவனை நோக்க, அவன் எரிச்சலுடன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

உதட்டைக் கடித்துக் கொண்டுத் தயங்கித் தலை குனிந்தவள் “மா….மா…” என்று இழுத்தாள்.

“என்ன?”

“வ…வந்து..”

“இதுக்கும் டைம் வேணுமா உனக்கு?”

“ம்ம்” – மெல்லத் தலையாட்டிவளைக் கண்டுக் கையினால் தூசி தட்டிக் கொண்டு எழுந்து நின்றவன்..

“இன்னைக்கு ஒரு நாள் என் போக்குல விட்று. நாளைல இருந்து முடிஞ்சா, டைம் எடுத்துக்க” என்று விட்டுக் குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

ன்று அன்பகத்தின் திறப்பு நாள்.

கட்டிட வேலைகள் நிறைவு பெற்று விட்ட நிலையில், கௌரியின் யோசனைப்படி முதியோர் இல்லம் மற்றும் அநாதைச் சிறுவர்கள் இல்லம் இரண்டையும் இணைத்து ‘அன்பகம்’ என்ற பெயரில் ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்க நினைத்தவர்களின் புதிய முயற்சி கைகூடி, அதன் படி இன்று இல்லத்தைத் திறந்தும் வைத்திருந்தனர்.

பெற்றோர்களின் ஆதரவின்றிக் கிடந்தக் குழந்தைகள், தங்களுக்குத் தாத்தா,பாட்டிமார்கள் கிடைத்து விட்டத் சந்தோசத்துடனும் பேரக்குழந்தைகளுக்காக ஏங்கியப் பெரியவர்கள், இக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்தும், திருப்திகரமான மனநிலையிலிருந்தனர்.

கமிஷனர்,கலெக்டர்,மினிஸ்டர் என மாறனின் செல்வாக்கில் பலர் இல்லத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள.. அவர்களை வரவேற்று இல்லத்தைச் சுற்றிக் காட்டியவனின் கண்களோ, தூரத்தில் மண்பானைத் தண்ணீரை எடுத்துப் பருகிக் கொண்டிருந்த கௌரியையேச் சுற்றி வந்தது.

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று விட்டு மனைவியின் அருகே சென்றவன், அவள் கையிலிருந்தத் தம்ளரைப் பறித்தான். அவனை முறைத்து நோக்கியவள்..

“தவிச்ச வாய்க்குத் தண்ணீ கிடைக்க விடாமப் பண்றவிங்களுக்குல்லாம் நரகம் தான் கிடைக்குமாம்”

“கிடைச்சுட்டுப் போகுது!, எத்தன தடவை சொல்லிருக்கேன் டி இங்க வந்து தண்ணி குடிக்காத, வீட்ல இருந்து பாட்டில்ல தண்ணி கொண்டு வான்னு?”

“கொண்டு வந்த தண்ணி தீர்ந்துடுச்சு மாமா”

“ஒத்த பாட்டிலைத் தூக்கிட்டு வந்தா, எங்குட்றீ பத்தும்?, வயித்துல 8 மாசப் பிள்ளை வளருதுங்ற பொறுப்பே இல்ல!, ஊர்ல எல்லாருக்கும் காய்ச்சல் பரவிக்கிட்டிருக்காம்! ஒழுங்கா, பார்த்து நடந்துக்கப் பாரு”

“நீ எந்நேரமும் திட்டிட்டே இருந்தன்னு வை, உள்ள வளர்ற குழந்தை அப்பன் ஒரு முசுடுன்னு நினைச்சுக்கப் போகுது”

“ஏய், எம் புள்ளைக்குத் தெரியும்டி என்னையப் பத்தி! நீ ஒன்னும் சொல்லித் தர வேணாம்” – அவன் கூறியதும் அவள் வயிற்றின் ஓரம் இடியொன்றை இடித்து ஆம் என்றது குழந்தை. பல்லைக் கடித்தபடி முறைத்தவள் “கண்டிப்பா பொம்பளப் புள்ள தான் மாமா, அதான் அப்பனுக்கு சப்போர்ட் பண்ணுது” என்றாள்.

“ஹாஹாஹாஹா’-வென நகைத்தவன் “சரி, பேச்சை மாத்துனது போதும். நீ முதல்ல வீட்டுக்குக் கிளம்பு, இவ்ளோ நேரமா நீ எதுவும் திங்காம இருக்குறது தெரிஞ்சா, அப்பத்தா என் தலைய ஆஞ்சுரும்” என்றான்.

“நீ வந்து என்னைய வீட்ல விடு மாமா”

“ஏய், கெஸ்ட் எல்லாம் இருக்காங்கடி, நான் எப்பிட்றி வர்றது?”

“ப்ளீஸ்ஸ்ஸ் மாமா” – கண்ணைச் சுருக்கிக் கெஞ்சியவளிடம் மறுக்க முடியாது தலையாட்டியவன் கார்மேகத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

பைக்கில் செல்லலாமா என்று தயங்கிக்கேட்டவளிடம் 10-பக்கத்துக்கு அட்வைஸ் மழையைப் பொழிந்து விட்டு காரில் அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

“வயித்துல புள்ளைய வைச்சுக்கிட்டு எம்புட்டு நேரம்டி திங்காம திரியிவ நீயி?, புள்ள எடை குறைஞ்சு போச்சு அது,இதுன்னு சொன்னாய்ங்கன்னா, உன் தலையைத் திருகிப் போடுவேன்டி” – விடாது கத்திக் கொண்டிருந்த பேச்சியைக் கண்டு கொள்ளாமல் “ நீ கிளம்பு மாமா.. நான் பார்த்துக்கிறேன்” என்றவளிடம் “இல்ல, நீ சாப்புடு. நீ சாப்ட்டப்புறம் நான் கிளம்புறேன்” என்றான் அவன்.

“அப்டின்னா நீ ஊட்டி விடு” – பதிலுக்கு பேரம் பேசியவளிடம் தலையாட்டி விட்டு அடுக்களைக்குள் நுழைந்தான்.

தட்டில் சாப்பாடு போட்டுக் குழம்பு ஊற்றிப் பிசைந்து அவள் வாயருகே கொண்டு சென்றவனிடம் “என்னைத் தூக்கி இங்க உட்கார வை மாமா” என்று அடுத்த கட்டளையை விதித்தாள் அவள்.

அவள் சொன்னபடியே அவளைத் தூக்கி சமையல் மேடையில் அமர வைத்தவன் சாப்பாட்டை ஊட்டி விடத் தொடங்கினான்.

“நீ இம்ம்ம்ம்ம்புட்டுப் பொறுமைசாலின்னு எனக்கு இப்ப தான் மாமா தெரியும். நான் சொல்றதெல்லாம் கேக்குற?”

“எண்ணி ரெண்டே மாசம் தான்!, அதுக்கப்புறம் எம் புள்ள பேச்சைத் தவிர, உலகத்துல யார் பேச்சையும் கேக்க மாட்டேன்”

“அப்போ, அந்தப் புள்ளயப் பெத்துத் தர்ற அம்மா உனக்கு முக்கியமே இல்ல. அப்பிடித் தான?” – முறைத்துக் கொண்டவளைக் கண்டுச் சிரித்து, அவளை நெருங்கி அவள் கன்னத்தை எச்சில் படுத்தியவன் “அந்த அழகியப் பெத்துத் தரப் போற இந்த அழகியப் பிடிக்காம போகுமா?” என்று கூற.. தன் இரு விழிகளையும் மூடி அழகாய்ச் சிரித்தாள் அவள்.

அவள் உண்டு முடித்ததும் கைக் கழுவி அவள் முன்னே தண்ணீரை நீட்டியவனிடம் வாங்கிப் பருகிக் கொண்டு அவனை நோக்கியவள் இங்க வா என்பது போல் சைகையில் அழைத்தாள்.

அருகே வந்தவனை இறுகக் கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள் “தேங்க்ஸ் மாமா…. எல்லாஆஆஆத்துக்கும்” என்றாள்.

அவள் செய்கையில் சிரித்தபடி அவளைக் கட்டிக் கொண்டவன் அவள் தோள் வளைவில் முத்தமிட்டு “என்னடி?, செம மூட்ல இருக்க போல!, கல்யாணத்தன்னைக்கு நைட் டைம் கேட்ட ஆளா நீயி” எனக் கூற.. அவன் தோளைக் குத்தியவளின் கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டவன்..

“நாங்களும் தேங்க்ஸ்ங்க கௌரி மேடம், வேணாம்ன்னு சொல்லி, விட்டு விலகிப் போனாலும், திரும்பி வந்து என்னையேக் கட்டிக்கிட்டதுக்கு” எனக் கூறிச் சிரிக்க.. சிணுங்கிக் கொண்டவளைத் தன்னோடு அணைத்தவன், அவன்-அவள் என்கிற நிலை எப்போதும் கொடுக்கும் திருப்தியை,முழுமையை,நிறைவை முழுதாக அனுபவித்தபடி முகத்தில் நிரந்தரமாகக் குடி கொண்டு விட்டப் புன்னகையுடன் கண் மூடி நின்றான்.

அதன் பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் மாறனின் மகள் வைஷ்ணவி இப்பூவுலகில் காலடி எடுத்து வைத்தாள். அவளைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வருடத்தில் தன்வியைப் பெற்றெடுத்து, ‘வெள்ளை நிறத்தில் கொழு,கொழுவெனத் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள்’ வேண்டுமென்கிறத் தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டான் மாறன்.

ஒரு பக்கம் வெற்றிகரமாக இல்லத்தை நடத்திக் கொண்டும், ஒரு புறம் குழந்தைகள்,கார்மேகம்,பாட்டிமார்கள் எனக் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டும், விவசாயத்தையும் கை விடாமல், செங்குளம் கிராமத்தின் காற்றை சுவாசித்தபடி நீண்ட நாட்கள் மகிழ்ச்சியான தம்பதிகளாய் நிறைவுடன் வாழ்ந்தனர் மாறனும்,அவனது கௌரியும்.

                                                                                ************************ முற்றும் ********************