அத்தியாயம் - 9
மருத்துவமனையில் அன்று கௌரியைக் கண்டதோடு சரி, அதன் பின்பு மாறன் அவளை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. பதினெட்டு வயது கூடத் தாண்டாத சிறு பெண் அவள்! விதியின் பிடியில் சிக்குண்டு இத்தனை பெரிய வேதனையைத் தாங்கி உயிரோடு நடமாடிக் கொண்டிருப்பதே பெரிய விசயம்!, அதிலும் ‘இனியும் நீ என் கண் முன்னே வந்தால், என் அன்னையைப் போல நானும் தூக்கு மாட்டிக் கொள்வேன்’ என்று அவள் கூறியதைக் கேட்ட பின், இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கி, கௌரி தெளியும் வரை ஒதுங்கியிருப்பதென முடிவு செய்தான்.
எண்ணத்திலும்,செயலிலும் நேர்மை,நியாயத்துடன் வாழ்ந்தால் போதும், நடக்கும் யாவையும் தன் கட்டுப்பாட்டிலிருக்கும் என்று எண்ணி வைத்திருந்தவனின் செருக்குக்கு விழுந்த மிகப் பெரிய அடியாகவே, நடந்து முடிந்த சம்பவங்களை எண்ணினான் அவன்.
உடம்பில் தெம்பிருக்கும் திமிரில், வயதின் வேகத்தில், சுற்றி 4 பேர் தன் பின்னே திரியும் இறுமாப்பில் கால் பதிக்கும் காரியங்கள் அனைத்தும் கை கூடி விடுமென்று இதுவரை அவன் நம்பியிருந்தது எத்தனை பெரிய தவறு?, விதி,விதி என்கிற கோமாளித் தன் களியாட்டத்தைத் தொடங்கி விட்டால், எப்பேர்ப்பட்டக் கொம்பனாக இருந்தாலும் அதில் சிக்கிச் சின்னாபின்னமாகத் தான் வேண்டும்! இது தெரியாமல், சகலமும் தன் கைவசத்திலிருப்பது போல் கர்வத்துடன் வலம் வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்?
அடி வாங்கிப் பதுங்கிய ஒண்டிவீரன், தனது உயிருக்கு உலை வைக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தான் அவன் நினைத்திருந்தான், அப்படி அவன் ஏதேனும் செய்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் எண்ணியிருந்தானே தவிர, கலவரத்தைத் தூண்டி விட்டு ஊர் ஜனங்களின் உயிரைக் காவு வாங்குவானென்று ஒரு போதும் நினைக்கவில்லை.
இது அவன் தவறு!, பிரச்சனையை திசை திருப்பி நினைத்ததைச் சாதிக்க, ஒண்டிவீரன் என்னவெல்லாம் செய்வானென்று அத்தனையையும் யோசித்திருக்க வேண்டும் அவன்.
போலீசிடமிருந்து உதவி கிடைக்காதென்று புரிந்து கொண்டு, தன்னை நம்பித் தனக்காகக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கானப் பாதுகாப்பை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்!, கூட்டத்திலிருக்கும் கருப்பு ஆடுகளைக் களைய வழி செய்துத் திட்டமிட்டிருக்க வேண்டும்.
எவ்வித முன் யோசனைகளுமின்றி, எடுத்தோம்,கவுத்தோம் என்று அவன் நடந்து கொண்டது, அவனது கர்வத்திற்குப் பெரிய அடியைக் கொடுத்தது.
ஊர்ப்பிரச்சனையிலேயேத் தன்னை மீறி எதுவும் ஒண்டிவீரனால் செய்து விட முடியாதென்றுத் திடமாக நம்பியிருந்தவனுக்குக் கௌரி விசயத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். என்றானாலும் அவள் அவனது மனைவி! ஒண்டிவீரனின் கண் முன்னே அவள் கையைப் பற்றி உரிமையோடு நடமாடுபவன் அவன்! அவனை மீறி, அவள் சுண்டு விரலைக் கூட அவனால் எதுவும் செய்து விட முடியாதென்று நம்பியவன்!
இதோ,இன்று அவளது வாழ்விலும் கபடி ஆடிவிட்டுச் சிவபதவியடைந்து விட்டான் சண்டாளன்! கைக்குள் இருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் தன் போக்கில் குதித்திறங்கி, ஒவ்வொரு பாதையில் ஓடி விட்டதை எண்ணி அவன் மொத்தமாகக் குன்றிப் போனான். கண்ணில் எப்போதுமிருக்கும் கர்வமும்,திமிரும் மறைந்து தயக்கமும்,கலக்கமும் மட்டுமே குடி கொண்டிருந்தது அவனுக்கு.
கண் முன்னே தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் உடனடியாகத் தீர்வு கண்டாக வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான் அவன்.
மாறன் ஜெயிலிலிருந்து வந்ததும் அவனைச் சந்தித்த கரிகாலன், ஒண்டிவீரனால் தூண்டப்பட்ட சாதிக்கலவரத்தைப் பற்றியும், அன்று பிரச்சனையைத் தொடங்கி வைத்து,ஆயுதங்களை சப்ளை செய்த அள்ளக்கைகளைப் பற்றியும் அறிந்து கொண்டு வந்து அவனிடம் விசயத்தைத் தெரிவித்தான். மாறனின் ஆட்கள் ஆளாளுக்குச் சென்று அந்த அள்ளக்கைகள் அத்தனை பேரையும் பிடித்து விசாரித்து ஊர் முன்னே நிறுத்தினர்.
இரண்டு சாதிக்காரர்களையும் ஒன்று கூட்டி இது சாயக்கழிவு பிரச்சனையிலிருந்து ஊர்மக்களைத் திசை திருப்ப நடந்த திட்டமிட்ட சதியென்பதையும், நாம் அனைவரும் ஒன்று கூடி நின்றாலொழிய, இந்தப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாதென்பதையும் உணர்த்தினான்.
ஒண்டிவீரனின் திடீர் மரணத்தால் நிச்சயம் அவனது அள்ளக்கை ஆபிசர்களும், ஃபேக்டரி ஓனரும் கலங்கிப்போயிருப்பார்கள், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நிச்சயம் ஃபேக்டரியை இழுத்து மூட வேண்டுமென்றும், இதைச் செய்யாது விட்டால், செத்து மடிந்த இத்தனை உயிர்களில் ஒன்று கூட சாந்தி அடையாதென்றும் கூறி, விடாது பேசி அனைவரையும் கரைத்தான்.
மற்றுமொரு உயிர்ப்பலிக்குத் தாங்கள் தயாராக இல்லை எனக் கூறிய அத்தனை பேரிடமும், தன் உயிரைப் பணயம் வைப்பதாகப் பேரம் பேசினான் அவன்.
கலவரத்தைத் தூண்டியவர்கள் அப்ரூவராக மாறி விட, அதைப் பற்றுக் கோலாக வைத்து மேலும்,மேலும் ஆதாரங்களைத் திரட்டி அடுத்த சில மாதங்களில் ஃபேக்டரி ஓனரை உள்ளே தள்ளி, ஃபேக்டரியை இடித்துத் தள்ளும் நிலைக்குக் கொண்டு வந்தான்.
உண்ணாமல், உறங்காமல் அவன் ஓயாது உழைத்ததன் பலனாக அடுத்தடுத்தச் சம்பவங்கள் அவனுக்கு வெற்றியைக் கொடுக்க, அவன் சிறிது சிறிதாக மீண்டு வந்த சமயம் அவன் தலையில் இடியை இறக்கினார் கார்மேகம்.
ஒண்டிவீரன் மீது ஏற்கனவே ஏகப்பட்டக் கடுப்பிலிருந்த ஊர்மக்கள் கௌரியின் இந்த நிலையைக் கண்டு கவலை கொள்ளவில்லை. தந்தை செய்த பாவம் தான் பிள்ளையைத் தொடர்வதாக இரக்கமின்றி சாபமிட்டனர்! பெற்றவன் செய்த தவறுக்குப் பிள்ளை என்ன செய்வாள் என்று பேசும் சிலர் கூட, கௌரியின் ராசி தான் திருமண இரவிலேயே கட்டியவனைக் காவு வாங்கிட்டதென்றுக் கூறினார்கள்.
இது எதுவும் மருமகள் காதில் விழா வண்ணம் கார்மேகம் பார்த்துக் கொண்டாலும், ஜீவனின்றி எங்கோ வெறித்தபடி நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருப்பளைக் கண்டு மனம் வெதும்பி, அவளது மனநிலை மாற்றத்திற்காகத் தானும்,பேச்சியாத்தாவும் கௌரியுடன் பட்டணம் சென்று சில ஆண்டுகளைக் கழிக்கப் போவதாகவும், திட்டமிட்டபடி அங்கேயே அவளது படிப்பைத் தொடரப் போகவதாகவும் மாறனுக்கு ஒரு கடிதத்தை எழுதி விட்டு ஆத்தா மற்றும் கௌரியுடன் இரவோடு இரவாக செங்குளத்தை விட்டு வெளியேறினார் அவர்.
ஆத்திரமும்,கோபமுமாய் அவர்களைத் தேடி அலைந்து திரிந்தவனுக்கு மூவரும் எங்கு சென்றார்களென்றுக் கடைசி வரை கண்டறிய முடியாது போனது. இத்தனை மாதங்களாக நேரடியாக இல்லாவிடினும், மறைமுகமாக அவளைப் பார்த்தும், அவள் நிலையைக் கண்டு வருந்தியும், அவளது மனதை மாற்றக் கார்மேகத்தின் மூலம் முயற்சி செய்து கொண்டுமிருந்தவனுக்கு, இது பெருத்த வலியைக் கொடுத்தது.
பொறுமையாகக் கையாள வேண்டும்! சிறு பெண் தானே அவள்!, வயது முதிர்ந்து மனம் மாறியதும், எல்லாம் தானாகச் சரியாகி விடும் என்று அவன் நினைத்தற்கு மாறாக.. கௌரி விசயம் கை மீறிப் போக, மேலும் நொந்து போனான் அவன்.
அன்று உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து யோசித்துப் பார்த்த போது, கௌரியின் பாதுகாப்புக் கருதி மீண்டும் அவளிடம் கல்யாணம்,அது,இதுவென அவன் தொடங்கினால், அது நிச்சயம் அவளிடம் எதிர்மறை எண்ணங்களைத் தான் தோற்றுவிக்கும் என்று புரிந்து கொண்டான்.
அவர்கள் எண்ணி வைத்தது போல, அவள் பாதியில் விட்டப் பரீட்சையை அடுத்த வருடம் எழுத வைத்து, மேற்படிப்பைத் தொடரச் சொல்வது தான் அவளது மனநிலையை மாற்றும் என்று அவன் திட்டமிட்டு வைத்திருக்க, கார்மேகம் அவனுடன் எந்த விதத்திலும் கலந்தாலோசிக்காமல் தன் போக்கில் முடிவெடுத்தது அவனை மிகவும் கோபப்படுத்தியது.
ஆனால், தான் எடுத்த முடிவை முதற்காரியமாக மாறனிடம் கூறச் சென்றவரைத் தடுத்து நிறுத்தி, இனித் தனக்கும்,அவனுக்கும் எந்த விதத் தொடர்பும் இருக்கக் கூடாதென்றும்,வற்புறுத்தினால் தற்கொலை செய்து கொள்வேனென்றும் கௌரி மிரட்டியதைப் பற்றி அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வெளிச்சத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தவன், கால் இடறித் தலைக்குப்புறக் கீழே விழுந்து விட்டதாகவே எண்ணினான். இனி எழுவதற்கு வாய்ப்பேயில்லை என்பது போல் அடுத்தடுத்து விழும் அடிகளை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவளைக் காணாமல் அவனால் எப்படியிருக்க முடியும்?, ராவுச் சாப்பாட்டிற்கு என்ன உண்பதென்பதைக் கூட அவனிடம் கலந்தாலோசிக்கும் மனிதர், இன்று ஏன் இப்படி அவனிடம் ஒரு வார்த்தை சொல்லாமல், ராவோடு ராவாக மறைய வேண்டும்?, அப்படி என்ன நேர்ந்து விட்டது இப்போது? உடனிருந்த கார்மேகமும், உயிராய் நினைத்த கௌரியும் கண் படா தூரம் சென்று விட்டதை எண்ணி, ஊன்,உறக்கமின்றித் தவியாய்த் தவித்தான் அவன்.
அவன் மனம் நொந்து கிடந்தது சில நாட்கள் மட்டும் தான்!, இனியொரு முறை இப்படி மூளை மழுங்கிப் போகுமளவிற்கு எந்த விசயத்துக்காகவும் வருத்தப்படக் கூடாதென்று முடிவு செய்தவன், கார்மேகம் வேலை பார்க்குமிடத்தில்,அவரது நண்பர்கள் அனைவரிடமும் விசாரித்து, அவர் எங்கு சென்றிருப்பார் என்பதைக் கண்டு கொண்டான்.
மறுபடி கௌரியை நேரில் காணும் வரை விடாது அலைந்தவன், அவர்கள் வசிக்குமிடத்தைக் கண்டு கொண்ட பின்னும், நேரில் அணுக முயற்சிக்கவில்லை. தன்னை தேவையில்லையெனத் தூக்கி எறிந்தவர்களிடம் எதற்காகப் பேச வேண்டுமென்கிற ரோஷம் இருந்தது அவனுக்கு.
அது மட்டுமில்லாமல், கௌரியை நெருங்கி அவளை மீண்டும் சஞ்சலப்படுத்த அவன் விரும்பவில்லை. அவள் விரும்பும்படி படித்து, அவள் போக்குக்கு வாழ்க்கை மாறும் வரைத் தூர இருந்து மட்டும் காண்பதென்று முடிவு செய்தான்.
சில,பல வருடங்கள் இப்படியே கழிய.. ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தனர் மூவரும். இந்த முறை அடுத்த அதிர்ச்சியோடு!
பிறந்ததிலிருந்து செங்குளக் காற்றை சுவாசித்து, செங்குளம் ஆற்றுத் தண்ணீரைப் பருகி, தன் நிலத்தில் விளையும் அரிசியை உண்டு, ஊர்ப்பற்றோடு வாழ்ந்த பேச்சியாத்தா, பேத்தி ஒருத்தியின் நலனுக்காக மட்டுமே அவளுடன் பட்டணம் செல்ல சம்மதித்தார்.
நாட்கள் செல்லச் செல்ல, சாதிசனங்கள் சூழ்ந்திராத எங்கோ ஓர் மூலையில் இப்படி ஓடி வந்து ஒளிந்து அநாதையைப் போல் வசித்துக் கொண்டிருக்கும் நிலையை எண்ணி உள்ளுக்குள்ளேயே மருகத் துவங்கினார். அது அவரது உடல்நிலையைப் பாதிக்க, படுத்த படுக்கையாகிப் போனார்.
நாளுக்கு நாள் உடல்நலம் குறைந்து ஆகாரம் எடுத்துக் கொள்ள முடியாமல், மெலிந்து கொண்டிருக்கும் ஆத்தாவைக் கண்டுப் பதறிப் போன இருவரும், என்னவென்று விசாரிக்க… தான் இனி அதிக நாள் உயிரோடு இருக்கப் போவதில்லையென்றும்,கடைசி காலத்தையேனும் சொந்த ஊரில் கழிக்க வேண்டுமென்றும் சீக்கிரம் தன்னை செங்குளத்திற்குக் கூட்டிச் செல்லுமாறும் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டார். அவரது விருப்பப்படி மீண்டும் செங்குளம் வந்து சேர்ந்தனர் மூவரும்.
அவர்களது வசிப்பிடத்தைக் கண்டு கொண்ட நாளிலிருந்து மூவரையும் கண்காணித்து வந்த காரணத்தினால், ஒன்றாக வந்திறங்கிய மூவரையும் கண்டுப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை அவன்.
ஊரார் அனைவரும் ஒவ்வொருவராகப் பெரிய வீட்டுக்கு வந்து பேச்சியாத்தாவிடம் நலம் விசாரித்துச் செல்ல, தானும் சென்று பார்த்து விட்டு வந்தான். அவர் அருகேயே அமர்ந்திருந்த கௌரியைத் தலை நிமிர்த்திக் கூடப் பார்க்கவில்லை. “மாறா….” என்று அவன் கையைப் பற்றியபடித் தழுதழுத்தக் கார்மேகத்தையும் உதறித் தள்ளினான்.
உண்மையில் அவர்கள் மீண்டும் ஊர் வந்து சேர்ந்து விட்டத்தை எண்ணி உள்ளுக்குள் குத்தாட்டம் போடாதக் குறையாக மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தவன், ‘இவிங்களாப் போவாய்ங்க, இவிங்களா வருவாய்ங்க, நான் இவிங்க போனதுக்கும் ஒன்னும் சொல்லக் கூடாதாம், வந்ததும், ‘வந்துட்டீங்களா செல்லங்களா’-ன்னு போய் ஒட்டிக்கனுமாம்!, இந்த மாறனை யாருன்னு நினைச்சாய்ங்க!,’ என்று அவன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்ட போது பழைய மாறன் வெளி வரத் துவங்கியிருந்தான்.
அன்றிலிருந்து மீண்டும் துவங்கியது அவனது ஆட்டம்.
கல்லூரி சென்று படிக்காவிடினும், கரஸ்பாண்டென்ஸிலேயே இளங்கலைப் பட்டத்தை அக்கௌண்ட்ஸ் பிரிவில் முடித்திருந்தாள் கௌரி. ஊருக்குத் திரும்ப வேண்டுமென்று ஆத்தா கூறிய போது அவள் நிறைய விசயங்களை யோசிக்க வேண்டியிருந்தது.
முதலாவதாக ஒண்டிவீரன் வழியாக அவளுக்குக் கிடைத்தச் சொத்துக்கள். அதில் பாதியை ஆட்டையப் போட வேண்டி சுப்பு பல நாட்கள் செங்குளத்தைச் சுற்றியதாகவும், மாறனிடம் செருப்படி வாங்கி ஓடிப் போனதாகவும் கார்மேகத்தின் மூலம் தகவல் அறிந்திருந்தாள் அவள்.
ஊரை விட்டுக் காலி செய்யும் முன்பு நில,புலன்கள் அத்தனைக்குமான பராமரிப்புக்கு ஆட்களை நியமித்திருந்தார் கார்மேகம், அது போக மாறன் பார்த்துக் கொள்வான் என்கிற எண்ணமும் அப்போது அவருக்கு இருந்தது.
பரம்பரைச் சொத்துக்களைத் தவிர்த்து, ஒண்டிவீரன் அவரது பெயரில் குவித்திருந்த சொத்துக்களிலிருந்து வரும் எந்த வருமானத்தையும் அவள் தனது சொந்தத் தேவைகளுக்கு உபயோகிக்கவில்லை.
அந்த சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்தை வைத்து ஒரு அநாதை இல்லத்தை நடத்த வேண்டுமென்று அவள் முடிவு செய்திருந்தாள். அப்படியேனும் அவள் தந்தை செய்த பாவங்களைக் கரைக்க முயற்சிக்கலாமென்று நினைத்தாளோ என்னவோ!
கார்மேகமும் அவளது முடிவை ஆதரிக்க, இருவரும் சேர்ந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கியிருந்தத் தருணம் தான், பாட்டி ஊருக்குத் திரும்ப வேண்டுமெனக் கோரிக்கை வைத்தது.
ஆனால் ஊருக்கு வந்த பின், கௌரியைப் போலவே நன்மாறனும் கூட அவன் பங்குக்கு, பக்கத்து ஊரிலிருந்த அவனது தியேட்டரை இடித்துக் கட்டி முதியோர் இல்லமாக மாற்றி 50 தாத்தா,பாட்டிமார்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறான் என்பதைக் கேட்ட போது, கௌரி இனிய அதிர்ச்சிக்கு ஆளானாள்.
இந்த யோசனை படிக்கும் காலத்திலிருந்தே அவன் மனதில் இருந்தது தான், “கடைசி வரை அப்பன்,ஆத்தாளைக் கூட வைச்சுப் பார்த்துக்கிற கொடுப்பினை தான் எனக்கு அமையல, அதுக்குப் பதிலா, எத்தனையோ பெருசுக பெத்தப் புள்ளைகளாலக் கை விடப்பட்டுத் தெருவுல திரியுதுக, அவங்களலாம் ஒன்னா சேர்த்துச் சோறு போட்டுப் படுக்க இடம் கொடுத்து ஒரு முதியோர் இல்லம் தொடங்குனா தான் என்ன சித்தப்பு?” என்று அவன் ஏற்கனவே கார்மேகத்திடம் பேசியிருக்கிறான்.
சாதாரணப் பேச்சாகத் துவங்கிய விசயத்தை அவன் உண்மையில் செயல்படுத்திக் காட்டுவான் என்று கார்மேகமும் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இப்படியொரு முரட்டு நல்லவனை தான் தூக்கி வளர்த்ததை எண்ணிப் பெருமை கொண்டார்.
ஏற்கனவே துவங்கப்பட்டு,போதுமான ஸ்பான்சர்கள் கிடைக்காமல் இல்லம் நடத்தத் திண்டாடிக் கொண்டிருந்தப் பெரியவர் ஒருவரின் அறிமுகம் கார்மேகத்தின் மூலம் கிடைக்க, அந்த இல்லத்தை மாற்றியமைத்துத் தான் நடத்த முன்வந்தாள் கௌரி.
இதற்கிடையில் மாறன் நடத்திக் கொண்டிருந்த அன்பகத்திற்கும் அவன் அழைக்காமலே வருகை புரிந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டாள். அவளது நடவடிக்கைகள் அத்தனையையும் கவனிப்பதை மட்டுமேத் தொழிலாக வைத்திருந்தாலும், வாயே திறக்கவில்லை அவன்.
திடீரென ஒரு யோசனை தோன்ற, கார்மேகத்திடம் கலந்தாலோசித்தாள் கௌரி.
“ஏன் மாமா, மாறன் மாமா நடத்துற முதியோர் இல்லத்தையும், நான் தொடங்கப் போற அநாதை இல்லத்தையும் ஒன்னாச் சேர்த்தா என்ன?, நாள் பூரா ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டுப் பொழுதைக் கழிக்குற தாத்தா,பாட்டிமார்களோட இந்த அநாதை குழந்தைகளைத் தங்க வைச்சா, எவ்ளோ நல்லாயிருக்கும்?, எத்தனையோ பேர் தன்னோடு பேரன்,பேத்திகளை மிஸ் பண்றதா என் கிட்ட சொன்னாங்க, அப்படியிருக்கைல, இந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது.. நிச்சயம் தன் சொந்தங்களாத் தான் வளர்ப்பாங்க. அநாதை இல்லம்ன்றதைத் தாண்டி ஒரு குடும்பச் சூழல் உருவாக வாய்ப்பிருக்கு இல்லையா?” – எனக் கேட்க, கார்மேகத்திற்கும் அவளது யோசனைச் சரியாகப்பட்டது.
இருவரும் சேர்ந்து ஒரு விசயத்தில் ஈடுபட்டார்களானால் இருவரது வாழ்க்கையிலும் மறுபடி மலர்ச்சியைக் காண வாய்ப்பிருக்கிறது! அவளாகவே யோசனை என்கிற பெயரில் அவனோடு இணைய முன் வரும் போது, இதை ஒத்திப் போடக் கூடாது என்று கணக்குப் போட்டார் கார்மேகம். அவரது முகத்தில் தெரிந்தக் கலவையான உணர்ச்சிகளை வைத்து அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட கௌரி..
“இந்த யோசனை அந்த அநாதைக் குழந்தைகளையும், பெரியவங்களையும் பார்த்தப்புறம் எனக்குத் தோணினது. இதுல எந்த வித சுய விருப்பமோ, இல்ல.. அவரோடு எந்த உறவையும் நான் புதுப்பிச்சுக்கிறதுக்காகவே சொல்லல” – என்று முறைத்தபடிக் கூறினாள்.
உடனே முகத்தை மாற்றி, தொண்டையைக் கனைத்துச் சோடாபுட்டியைச் சரி செய்து கொண்ட கார்மேகம் “நானும் அப்படி எடுத்துக்கலையேம்மா, உன் யோசனையைப் பத்தி அந்தப் பயல்ட்ட பேசிட்டுச் சொல்றேன்” என்றவர், தாமதிக்காமல் மாறனிடம் சென்றார்.
அவர் செங்குளத்திற்குத் திரும்பியதிலிருந்து ஒரு முறை கூட அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை அவன். அன்பகத்தில் அவனைச் சந்திக்க வந்தவரைக் கண்டு புருவம் சுருக்கித் தலையசைப்புடன் வரவேற்றான்.
“மாறா…..”
“சொல்லுங்க சார், என்ன விசயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?”
“என்னடா சாரு,மோருன்ற?, பல்லை உடைக்கப் போறேன் பாரு”
“முன்ன பின்ன தெரியாதவங்களை எனக்கு சார்ன்னு கூப்பிட்டுத் தான் பழக்கம்?”
“நா…நான் நான் உனக்கு முன்ன பின்ன தெரியாதவனா?, படவா ராஸ்கல், உனக்கு *** கழுவுறதுக்கும், மீசை மழிக்கிறதுக்கும் சொல்லிக் கொடுத்தவனே நான் தான் டா!, நான் முன்ன பின்ன தெரியாதவனா?, என்னப் பேச்சு பேசுறடா?”
“எல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்து விட்டுட்டு, ஒரு நாள் சொல்லாம கொள்ளாம ஓடியும் போயிட்டீங்க. அதையும் சேர்த்துச் சொல்லுங்க”
பொறுமையாக அவன் பதில் கூறியதும், என்ன பேசுவதென்றே புரியவில்லை அவருக்கு. தொண்டையைச் செறுமியபடி அமைதியானவர்..
“அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்பிடிடா மாறா..”
“என்ன பொல்லாத சூழ்நிலை?, எப்படிப்பட்ட சூழ்நிலையா இருந்தாலும், நீ என்னையும் கூட்டுச் சேர்த்துட்டுல்ல ஓடியிருக்கனும்?, என்னைய வேத்து ஆளா நினைச்சதால தான விட்டுட்டுப் போனீங்க?”
“அப்பிடிக் கிடையாது டா”
“மாறா,மாறான்னு பொறந்ததுல இருந்து என் கூடயே இருந்துட்டு, அந்தக் கழுதைக்காக என்னையத் தூக்கியெறிஞ்சுட்டுப் போயிருக்க நீயி!, உனக்கு எப்பவும் அவ தான உசத்தி! சொந்த அக்கா மக! நான் அப்படியா?, ஒன்னு விட்ட சொந்தத்துக்குப் பொறந்தவன் தான?”
“டேய் அப்பிடி சொல்லாத டா, மாரி மேல நான் எம்புட்டுப் பாசம் வைச்சிருந்தேனோ, அதே அளவுக்குத் தான் டா உன் அப்பன் மேலயும் வைச்சிருந்தேன்”
“அப்புறம் ஏன் சொல்லாம போன?”
“கௌரி… அந்தப் புள்ள ஒருத்திக்குத் தான் டா! ஊரை விட்டுப் போற விசயத்தை உன் கிட்டச் சொன்னா, செத்துப் போயிடுவேன்னு மிரட்டுச்சு டா”
“ஓஹோ”
“என்னடா?, கதையா சொல்லிட்டிருக்கேன்?”
“சரி, அந்தச் சிறுக்கி சொன்னான்னு என் உறவே வேணாம்ன்னு வெட்டிக்கிட்டுப் போனவரு, இப்ப எதுக்கு என்னையத் தேடி வந்திருக்க?”
“மாறா.. உன்னை விட்டுத் தள்ளியிருந்தாலும் நான் உன்ன நினைக்காத நாளே இல்லடா, ஊர்ப்பயலுக மூலமா நான் உன்னையப் பத்தி எப்பவும் விசாரிச்சுக்கிட்டுத் தான் டா இருந்தேன்”
“நம்பிட்டேன்”
“நிஜம் டா மாறா!, நீ வேணா, மயில்சாமி மகன் கதிரேசனைக் கேட்டுப் பாரு”
“கேட்டுப் பார்த்துருவோம்” – அவன் நக்கலாகவே பதில் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டு எரிச்சலாகிப் போனவர்..
“எலேய் என்னடா ரொம்பத் தான் நக்கல் விட்ற?, காட்டுப் பயலே!, பத்து நிமிசம் இவன்ட்ட நின்னு பேச முடியுதா, கௌரி மனசு மாறனும், நீயும் அவளும் ஒன்னு சேரனும்ன்னு இந்த உசுரை, இருக்கிற ஒத்தக் கைய வைச்சுப் பிடிச்சுக்கிட்டு நிக்கிறேன்! வயசானவன்ற மருவாத இல்லாம, வளர்த்தவன்ற பாசமில்லாம, திமிர்ப்பேச்சு பேசுற நீயி?, களவாணிப் பயலே” – என்று கத்தத் துவங்க.. சித்தப்பு பழையபடித் திட்டுவதைக் கண்டு மாறனுக்குச் சந்தோசமாக இருந்தது.
இதழ்க்கடையில் அவனை மீறிப் புன்னகைப் பூக்க அவரை நிமிர்ந்து நோக்கியவனைக் கண்டு “மாறா… சிரிச்சுட்டியா டா?” எனக் கேட்டு அணைத்துக் கொண்டார் மேகம்.
“ஏ, ச்சி,ச்சி தள்ளிப் போ.. கட்டியெல்லாம் பிடிச்சுக்கிட்டு!, உன் மருமக செய்ய வேண்டியதையெல்லாம் நீ செஞ்சுட்டிருக்கிற?”
“எலேய்.. அந்தப் புள்ளையப் பத்திப் பேசுனேனா.. பல்லைத் தட்டிக் கைல கொடுத்துருவேன்!”
“அவ மேல இருக்கிற பாசம் உன்னைய என்னன்னவோ செய்ய வைக்குது சித்தப்பு”
“அவ மேல மட்டுமாடா பாசம்? ஏன் உன் மேல இல்லையா?, உனக்காகத் தான டா ஒத்தக் கைய இழந்துட்டு நிக்கிறேன்” – அவர் கூறியதும், கையற்ற அவரது தோள்பட்டையைத் வருடியவன் “செயற்கைக் கை ஆபரேஷனுக்கு உனக்கு ஏற்பாடு பண்ணனும் சித்தப்பு” என்றான்.
“ம்க்கும், போய்ச் சேர வேண்டிய காலம் நெருங்கிடுச்சு எனக்கு, இப்ப ஆபரேஷன் பண்ணி என்ன செய்யப் போறேன்?, போடா டேய்.. போடா, வாழ வேண்டிய எம் புள்ளைக ரெண்டுமே என் கண்ணு முன்னாடி தனித்தனியா நிக்குதுக! மாறா.. என் ஆசையெல்லாம் நீயும்,கௌரியும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கனும்ன்றது தான் டா” – அவர் கூறியதும் முகம் மாறத் தலையசைத்தவன் “எல்லாம் நடந்துரும் சீக்கிரமே, இனி உன் மருமவள சும்மா விட்றதா இல்ல நானு!,” என்றான்.
அதன் பிறகு அவர் கௌரியின் யோசனையை அவனிடம் கூற “பரவாயில்லயே! செவத்தச்சி இம்புட்டு யோசிக்க ஆரம்பிச்சுட்டாளா இப்ப?” என்று வியந்து சிரித்து கார்மேகத்தின் முறைப்பைப் பெற்றுக் கொண்டான்.
“இல்லம் நடத்தப் போறது நீயா இல்ல அவளா?” – மாறன்
“எம் மருமவ தான் டா! ஏன்?”
“அப்ப நீ ஏன் என்ட்ட வந்து பேசிட்டிருக்க?, அவளை வரச் சொல்லு!” – என்று அவன் கூறியதும் சரியெனத் தலையாட்டியவர் கௌரியிடம் சென்று அவன் அவளிடம் இது பற்றிப் பேச விரும்புவதாகக் கூற, கௌரிக்கு அவனை எப்படிச் சந்திப்பது என்கிற மிகப்பெரிய தயக்கம் எழுந்தது.
அப்போது பார்த்துப் பேச்சியாத்தா அவளிடம் வந்து “பார்த்தியாடி இந்த மாறன் பயல?, ஊர்க்காரய்ங்களோட ஒருத்தனா வந்து, என்னையப் பார்த்துட்டுப் போனதோட சரி, அதுக்கப்புறம் எட்டி கூடப் பார்க்கல! அப்பத்தா,அப்பத்தான்னு நான் வைக்குற மீனுக்கும்,கோழிக்கும் என்னையச் சுத்தி சுத்தி வந்தவன், இன்னிக்கு யாரோ மாறி ஒதுங்கி நிக்கிறானேடி” என்று புலம்பியது.
ஊருக்குத் திரும்பியதிலிருந்து பழையபடி நடமாடத் தொடங்கியிருந்தக் கிழவியைக் கண்டுச் சிரித்தவள்..
“கிழவி, நீ உப்புசப்பில்லாம வைக்குற குழம்பு எதுவுமே மாறன் மாமாவுக்குப் பிடிக்காது, ஏதோ நீ ஆசையா கூப்பிட்டுச் சோறு போட்றியேன்னு தான் வேற வழியில்லாம திங்கும்” என்றாள்.
பொசுக்கெனக் கோபம் வர “ஆமா, புடிக்காமத் தான் அரைப்படி சோத்தை ஒருமைல தின்னானாக்கும்?, அடிப்போடி” என்ற கிழவி “நீ ஒரு தடவை அவன் முகத்தைப் பார்த்துப் பேசிட்டு வந்தாத் தான் என்னாத்தா?, அவன்ட்ட சொல்லிக்காம ஊரை விட்டுப் போனது நாம தான?, பய, கோவத்துல இருக்கானோ என்னமோ!, நீ பேசுனா,.. சமாதானமாயிருவியான் டி!” என்றார்.
தயக்கத்துடன் தலையைக் குனிந்தவள் “ம்ம்” என்றாள்.
எப்படி அவனைச் சந்திப்பாள்?, என்னோடு வந்து விடு என்று கெஞ்சியவனிடம் ‘போய் விடு,இனி என் கண் பார்வையில் படாதே’ என்று துரத்தி விட்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்ப்பாள்?
அவளுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒரு பாதுகாவலானாக அவள் பின்னே வரத் தொடங்கியவன்! ‘என்னுடையவள்’ என்கிற உரிமையுடன் அவளைக் காத்து வந்தவன்! அவளுடைய எதிரி! நண்பன்! சகலமும் அவனாய் இருந்தவன். சூழ்நிலைக்கைதியாய் அவனைத் தூக்கியெறிந்து விட்டுச் சென்றவள் அவள்! இந்நொடி வரை அவனுடன் மீண்டும் இணையும் பேராசையோ,ஆவலோ அவளுக்குக் கிடையாது தான்! ஆனால்.. ஊர் திரும்பியதிலிருந்து ஒரு முறை கூட அவளிடம் பேச முயற்சிக்காதவன்,அவள் தானாகச் சென்று பேசினால்.. என்ன கூறுவானோ என்கிற எண்ணம் அவளைக் கவலை கொள்ள வைத்தது.
ஒருவழியாக மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனைச் சந்திக்கச் சென்றாள். கௌரியின் விசயத்தில் முத்தரசி நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் போனதால்.. அவரை விட்டு ஒதுங்கி அவன் தனி வீட்டில் வசித்து வருவதாகக் கூறினார் கார்மேகம். அதனால் அவனது விளை நிலமொன்றின் அருகிலேயேயிருந்த அவன் வீட்டிற்கு வருகை தந்திருந்தாள் கௌரி.
வெளியே கிளம்புவதற்காக வாயிலுக்கு வந்தவனுக்கு, வாசலருகே ‘உள்ளே செல்லலாமா,வேண்டாமா’ ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டுத் தயக்கத்துடன் நின்றிருந்த கௌரியைக் கண்டு இதயம் ஒரு முறை நின்றுப் பின் தாறுமாறாக எகிறிக் குதித்தது.
பார்வையைத் திருப்பி வயல்வெளியை நோக்கியபடித் தன்னைச் சமன்செய்து கொண்டவன், “ம்க்கும்” என்று தொண்டையைச் செறுமி மீண்டும் அவள் புறம் திரும்பினான்.
அவன் முதலில் ஏதாவது பேசுவான் என்று காத்திருந்தபடி கௌரியும், போ சொன்னது நீ, திரும்பி வந்து என் முன்னாடி நிக்குறதும் நீ! அதனால, எதுவாயிருந்தாலும் நீயே பேசுடியாத்தா! என்பது போல் மாறனும் நிற்க, அங்கே சில நிமிடங்களுக்கு மௌனம் மட்டுமே நிலவியது.
பின் தயக்கத்தை உடைத்து அவனை நிமிர்ந்து நோக்கியவள் “உ..உள்ளே வரலாமா?” என்றாள்.
பதில் கூறாமல் சிறு தலையசைப்புடன் உள்ளே காட்டியவன் முன்னே நடந்தான்.
முற்றத்தைக் கடந்து டிவி இருந்த அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவன் கூறும் முன்பே அமர்ந்தவள் வீட்டைச் சுற்றி நோட்டமிட்டாள்.
அவள் நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்த்தபடி சுவரில் சாய்ந்து கொண்டு, கைக்கட்டியபடி நின்றிருந்தான் மாறன்.
பச்சையும்,கருப்புமாய்க் காட்டன் புடவைக் கட்டியிருந்தாள். கழுத்தில் மெல்லிய சங்கிலி, காதில் மிகச் சிறிய ஒற்றைக் கல் தோடு, நெற்றியில் கண்ணுக்குத் தெரியாதச் சிறிய கருப்புப் பொட்டு.
பாவாடை-தாவணியில் அன்று கண்ட சிறு பெண் போலல்லாது, இன்று புடவையில், வளர்ந்த குமரியாகக் காட்சியளித்தாள். முகத்திலிருந்த சிறுபிள்ளைத்தனம் மறைந்து முகம் முதிர்ச்சியடைந்திருந்தது. அனுபவம் கற்றுத் தந்த பாடத்தினால் கிடைத்த முதிர்ச்சியாயிருக்கலாம்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் “நீ… நீயும் உ..உட்காரு மாமா” என்றாள்.
அவள் மீதிருந்தப் பார்வையை அகற்றாமல் “பரவாயில்ல, நிக்கிறேன்” என்றான் அவன்.
அதன் பின் என்ன பேசுவதென்றுச் சற்று நேரம் அமைதியாயிருந்தவள் மீண்டும் நிமிர்ந்து “நீ ஏன் அரசி ஆத்தாவை விட்டுத் தனியா வந்து குடியிருக்கிற?, பாவம்ல அது?, வயசான காலத்துல தனியாக் கஷ்டப்பட்டுட்டிருக்கு” என்றாள்.
“என்னைத் தவிர எல்லாரோடக் கஷ்டத்தைப் பத்தியும் யோசிப்ப போல” – அலட்டிக் கொள்ளாமல் அவன் அளித்த பதிலில் உதட்டைக் கடித்துக் கொண்டு மீண்டும் அமைதியானாள் அவள்.
பின் காதோரமுடியை ஒதுக்கியபடி மீண்டும் அவனை நோக்கியவள் நேராகத் தான் வந்ததன் நோக்கத்தைக் கூறி, ஏற்கனவே கார்மேகம் பேசிய விசயத்தை அவள் தொடர்ந்தாள்.
அவன் முகத்தை இரண்டு நொடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியாமல், அவ்வப்போது பார்வையை வெளியே திருப்பியபடித் தயங்கித் தடுமாறி அவள் ஒருவழியாகக் கூறி முடிக்கையில்.. அவன் இதழ்களில் ஒரு மாயப்புன்னகை தோன்றியிருந்தது.
எதற்காகச் சிரிக்கிறான் என்று குழம்பி “மா…..மா” என்றவளிடம் “ம்ம்” என்றபடித் தலையைக் குனிந்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவனிடம் “உ..உனக்குச் சம்மதம்ன்னா, நாம அடுத்த ஏற்பாட்டைப் பார்க்கலாம்” என்றாள்.
“நான் ஏன் வேணாம்ன்னு சொல்லப் போறேன்!, எனக்குச் சம்மதம் தான்”
-அவன் கூறியதும் முகம் மலர எழுந்து நின்றவள் “ரொ…ரொம்ப தேங்க்ஸ் மாமா.. எ..எனக்குத் தெரியும் நீ ஒத்துக்குவன்னு” என்று கூற.. அவன் பதிலேதும் கூறாமல் மீண்டும் அவன் பார்வையைத் தொடர்ந்தான்.
பின் விரல்களை நோக்கியபடி மீண்டும் தயங்கித் தலை குனிந்தவள் “அ…அப்போ நான் கிளம்புறேன்” என்றபடி வெளியேறப் பார்க்க.. நின்றிருந்த இடத்திலிருந்து நகராமல் அவள் கையை அழுந்தப் பற்றியவன் “அதுக்கு முன்னாடி ரொம்ப நாளா, முடிக்கப்பட வேண்டிய விசயம் ஒன்னு இருக்குங்களே மேடம்” என்றான்.
நெடு நாளைக்குப் பிறகான அவன் ஸ்பரிசத்தில், அவன் கைகளின் அழுத்தத்தில் நடுங்கிப் போனவள், புருவத்தைச் சுருக்கிக் கொண்டு “எ…என்ன?” என்று வினவினாள்.
“உனக்கும்,எனக்குமானக் கல்யாணம்”
முகம் இறுக வெடுக்கெனத் திரும்பி அவனை நோக்கியவள் தன் கையை அவனிடமிருந்து உறுவிக் கொண்டு “என்னைக்கோ முடிஞ்ச போன விசயத்தை ஏன் மறுபடி கிளறுற?” என்று கூறினாள்.
“முடிஞ்சு போன விசயமா?, எனக்கும்,உனக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சிட்டதா எனக்கு நியாபகமே இல்லையே!”
“நீ இப்பிடியே பேசிட்டிரு. நான் கிளம்புறேன்” – எனக் கூறி விறுவிறுவென முன்னே நடந்தவளின் கையை இறுகப் பற்றியிழுத்துத் தன்னருகே நிறுத்தினான் அவன்.
பெரும்பாடு பட்டுப் போராடி அவன் கையைத் தட்டி விட்டு முற்றத்தின் மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒட்டடைக்குச்சிகளின் அருகே தஞ்சமடைந்தாள் அவள்.
அவளை ஒருமுறை நோக்கி விட்டுப் பின் நிதானமாக நடந்து சென்று கதவை அடைத்தவனைக் கண்டுப் பதறி “எ…எதுக்கு இப்பக் கதவை சாத்துற” எனக் கத்தியவளிடம் “ம்,இங்கயிருந்து வெளிய போகும் போது, நீ என் பொண்டாட்டியாத் தான் போகனும், அதுக்குத் தான்” என்றான் அவன்.
என்ன.. என்ன சொல்கிறான் இவன் என்று பயந்து.. கலங்கிப் போய் நின்றவள், அவன் தன்னை நோக்கி நடந்து வருவதைக் கண்டுப் பின்னே நகர்ந்து ஒட்டடைக்குச்சிகளை இடித்து நின்றாள்.
அவளை நெருங்கி, அவள் நகர்ந்ததில், அவள் தலையில் விழ இருந்தக் குச்சிகளைப் பிடித்து நிறுத்தியவனுக்குத் தன் மார்பினருகேத் தலையைக் குனிந்தபடிக் கண்களை இறுக மூடிக் கொண்டு நின்றிருந்தவளைக் கண்டு முகம் மென்மையானது!
எத்தனை நாட்கள்! எத்தனை நாட்கள் இந்த நிலைக்காக ஏங்கியிருப்பான்! இவள் உன் அத்தை மகள், இவள் தான் உன் பொண்டாட்டி என்று பெரியவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டப் பின், இந்த நொடி வரை அவளைத் தவிர வேறு எவளையும் அவன் வேறு நோக்கத்துடன் பார்த்தது கூடக் கிடையாது! சண்டாளி! அவள் ஒருத்திக்காக மட்டுமே அவன் ஏங்கி,வாடிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல், எங்கோ ஒளிந்து கொண்டு இத்தனை வருடங்களை வீணடித்து விட்டாள்.
அவன் மார்பில் கை வைத்துத் தள்ளி, அவளை விலக்க நினைத்தவளின் கைகளைத் தன் இருகைகளால் கெட்டியாகப் பற்றியவன், தன் முதுகைச் சுற்றி அந்தக் கைகளைப் படர விட்டு, தன் நெற்றியிலிருந்தக் குங்குமத்தை அவள் நெற்றியில் அழுத்தி “இனிக் கண்ணுக்குத் தெரியாத இத்துணூண்டு பொட்டை வைச்சுட்டுச் சுத்துறத நிறுத்திட்டு, நிறைய குங்குமத்தை வை” என்று அடிக்குரலில் கூறியவன், தன் இருகைகளால் அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.
இல்லம் தொடர்பாக மட்டுமே அவனிடம் பேச வேண்டுமென்று வந்தவள், அவன் செய்கையில் திகைத்து, எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் சிக்கி, அவன் கைகளில் மூச்சுக்குத் திணறி அவனை விலக்கி நிறுத்தப் போராடிக் கொண்டிருந்தாள்.
அவளது செய்கைகளைக் கண்டு கொள்ளாமல், எதிர்ப்புகள் எதற்கும் பதில் கொடுக்காமல், தன் போக்கில் அவளை அணைத்திருந்தக் கைகளை மேலும் இறுக்கி, அவளைத் தன்னோடு புதைத்து விடுபவன் போன்று, அவளுக்கான அவனது ஏக்கத்தை அந்த ஒரு அணைப்பிலேயே நிரூபிக்க முயன்றுக் கண் மூடி லயித்திருந்தான் அவன்.
அவன் தோளைப் பிடித்துத் தள்ளி, அவன் முகம் நோக்கியவள் “நீ…. நீ… பண்றது ரொம்பத் தப்பு மாமா” என்றுக் கோபமாகக் கூற.. “இத முன்னாடியே பண்ணாம விட்டது தான் தப்பு” என்றவன் அவள் தோளில் முகம் பதித்து, அவள் செவியில் முத்தமிட்டு, அவள் முகத்தை இரு கைகளால் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினான்.
விழிகளில் நீர் கோர்க்க.. அவன் செய்கைக்கு உடன்பட முடியாமல் திண்டாடி, விலகவும் வழியற்று கோபமும்,அழுகையுமாய் அவனை நோக்கியவளின் முகத்தை ஏக்கமும்,ஆசையுமாய் நோக்கியவன், குனிந்து அவள் உதடுகளில் இரக்கமின்றி அழுத்தமாக முத்தமிட்டான்.
ஒரு நொடிக் கண்களை அகல விரித்துத் திகைப்பை வெளிப்படுத்தியவள் மறு நொடி, முழு மூச்சுடன் அவனிடமிருந்து விடுபடப் போராடினாள்.
அவள் முயற்சிகளை அனாயசமாக அடக்கி, மீண்டும்,மீண்டும் முத்தமிட்டவன் பின் நிமிர்ந்து “இன்னொரு தடவை, தைரியமிருந்தா… என்னை விட்டுப் போய்ப் பாரு” என்று கூறி விட்டு.. விலகி நடந்தான்.
