அத்தியாயம் - 10

ள்ளே வா என அவளும் அழைக்கவில்லை.

உள்ளே வரட்டுமா என அவனும் கேட்கவில்லை.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு.. அவளோடு பேசியபடியே திவ்யா வீட்டினுள் சென்று விட… நினைத்தபடி அவள் முகத்தில் சிரிப்பை வரவழைத்து விட்டத் திருப்தியில்.. பெருமூச்சை வெளியிட்டுத் தன் காருக்குள் சென்றமர்ந்த கௌதம்.. கண் மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

சித்தப்பனின் சிறிய வடிவமாக விடாது பேசித் தீர்த்தத் திஷாவிடம்.. தானும் சளைக்காது வளவளத்த திவ்யாவுக்கு மற்றவையனைத்தும் மறந்து போனது.

காற்றுப் புகாத கட்டிடப் பேழையாய் சற்று முன்பு வரைக் காட்சி தந்த வீட்டுக்குள்.. ஓட்டைப் போட்டு உள் நுழைந்த அழகிய தென்றலொன்று.. சந்தனத்தையும்,ஜவ்வாதையும் வீடு முழுக்க வாரி இறைத்து.. நறுமணத்தைப் பரப்பி விட்டது போல்.. சுவாசிக்க,சுவாசிக்கப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வருகை!

கடிகாரத்தின் ஒலியைத் தவிர சர்வ நிசப்தத்தில் ஆழ்ந்திருந்த வீட்டினுள் இருவரும் கோரசாய்ப் பாடிய ரைம்ஸ் சப்தம் காதைக் கிழிக்க.. கோபமும்,சோகமும் முற்றிலும் மறைந்து போய்.. முழுதாய் மலர்ச்சி குடி கொண்டது அவள் முகத்தில்.

“பசிக்கிறது” என்ற குழந்தையிடம் என்ன வேண்டுமென விசாரித்து.. அவள் பீட்சா என்றதும்.. “நாமே செய்வோமா?” எனக் கேட்டு அவள் தலையாட்டியதும்.. கை கோர்த்துக் கொண்டு அவளுடன் கடைக்குச் சென்று வந்தாள் திவ்யா.

காருக்குள் அமர்ந்திருந்தவனை எட்டிப் பார்த்து “சித்தா தூங்கிட்டான்” என்ற திஷாவிடம் பதிலுரைக்காமல் புன்னகைத்தவள்.. திரும்பி அவன் புறம் ஒரு பார்வையை செலுத்தி விட்டு.. வீட்டுக்குள் புகுந்து கொண்டாள்.

இருவரும் பீட்சாக்களை பேக் செய்து.. உண்டு முடித்து.. வெளியே வந்த போது.. கார் கதவில் சாய்ந்து நின்றிருந்தான் கௌதம்.

“ஹாய் பேபி…” – வார்த்தை குழந்தைக்கானது தான் என்றாலும்.. அவன் பார்வை படிந்திருந்தது திவ்யாவினிடத்தில்.

கண்டு கொள்ளாமல் அவள் நிற்க.. அவளது கையைப் பற்றி ஆடிக் கொண்டிருந்தத் திஷா..

“சித்தா… நாங்களே பீட்சா பண்ணி சாப்பிட்டோமே!” என்று பெருமையாய்க் கூறினாள்.

“நீங்க பண்ணீங்களா?, உவ்வேஏஏஏஏஏஏ” எனச் சொல்லி வம்பு செய்து.. அவளிடம் அடி வாங்கியவனை.. மலர்ந்திருந்த முகத்தின் தெளிச்சி குறையாது நோக்கினாள் திவ்யா.

அந்தத் தெளிச்சியும், அது தந்த மலர்ச்சியும் வாடாதிருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எண்ணம் அவன் மனம் முழுதையும் வியாபித்திருக்க.. குனிந்து குழந்தையிடம் “கிளம்பலாமா?” என்றான்.

அவன் கேட்டதும் திவ்யாவின் முகத்தை அவள் திரும்பிப் பார்க்க.. கட்டியிருந்தக் கைகளில் ஒன்றைத் தூக்கி ‘பாய்’ என்பது போல் சைகை காட்டி அவள் இதழ் விரித்துப் புன்னகைத்தாள்.

விளக்கெரிந்த விழிகளில்.. அயர்ச்சி தளர்ச்சியடைந்து.. மலர்ச்சி நிறைந்திருப்பதையும்.. அது தந்த வெளிச்சம்.. முகம் முழுதும் பிரதிபலிப்பதையும் கண்ணுற்றவனுக்கு… தூக்கி நின்ற அவள் கன்னத்து எலும்புகளில் முத்தமிடத் தோன்றியது.

பார்வை மாறத் தன் முகம் நோக்குபவனை.. மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா.

“இன்னிக்கு ராத்திரியாவது தூங்குவீங்களா?”

அருகே விளையாடிக் கொண்டிருந்தக் குழந்தையின் கவனத்தைக் கவராமல் மெல்லிய குரலில் வினவினான் அவன்.

“……………”

“என்னையும் தூங்க விடுவீங்களா?”

இரண்டடி தள்ளி நிற்பவன்.. தன்னை முழுவதுமாய் அடைத்துக் கொண்டு நிற்பதைப் போல் ஒரு பிரம்மை அவளுக்கு. மூச்சடைக்கும் உணர்வுடன்.. காற்றுக்கு வழி விடச் சொல்லி.. அவனை உந்தித் தள்ளும் எண்ணம் தோன்றியது. சில்லிட்ட உள்ளங்கையை இறுக்கிக் கொண்டு நின்றாள்.

“எதையாவது யோசிச்சு.. நீங்களாவே குழம்பித் தூங்காம.. கண்ணு,முகத்தையெல்லாம் வீங்க வைச்சிட்டிருக்காதீங்க ப்ளீஸ். தலையைப் பிடிச்சுட்டு நீங்க ஆஃபிஸ்ல உட்கார்றதைப் பார்த்தா.. எனக்குத் தலைவலி வருது”

காற்றிலிருந்த குளிரோ.. அல்லது அவன் வார்த்தைகளோ.. எது கொடுத்த நடுக்கமோ தெரியவில்லை! பற்கள் தந்தியடித்தது அவளுக்கு.

“வேற வழியே இல்லன்னா.. நானும்,திஷாவும் தினம் உங்க வீட்டு வாசல்ல தான் நிற்போம் சொல்லிட்டேன்”

ஸ்ட்ரிக்ட்டாய் கூறியவனை எரிச்சலுடன் முறைத்தவள் “குழந்தைக்கு ஏன் தொல்லை கொடுக்குற நீ?” என்றாள்.

“அவளைப் பார்த்தாத் தானே நீங்க சிரிக்குறீங்க?” என்றவன் தொடர்ந்து.. “என்னையெல்லாம் ஒரு ஆளா கூட மதிக்கிறதில்ல” என்று முணுமுணுக்க..

“கிளம்பு கௌதம். குளிர் ஜாஸ்தி ஆகுது” என்றாள் அவள்.

நகராமல் இரண்டு நொடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்… பின் தலைமுடியைக் கோதிய படி..

“விட்டுட்டுப் போக மனசே இல்ல” என்று முணுமுணுத்தான்.

நடுங்கிய கரங்களை விரித்து மறுபுறம் திரும்பி நின்றவள்.. “போகாம..? வேற என்ன பண்ணலாம்ன்னு இருக்க?” என்றாள்.

“சொன்னா டென்ஷன் ஆவீங்க!”

நீ சொல்லவே வேண்டாம் ரீதியில்.. விறுவிறுவென நடந்தவளிடம்..

“கோபம் வந்தா என்னைக் கூப்பிட்டு திட்டுங்க! அடிச்சாக் கூடப் பரவாயில்ல. வாங்கிக்கிறேன்! அதை விட்டுட்டு, உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கிட்டீங்கன்னா.. நானும்.. வேற மாதிரி ரியாக்ட் பண்ணுவேன்” – என்று அவன் மிரட்ட..

கண்டு கொள்ளாமல்.. திஷாவைத் தூக்கிக் கொண்டு கார் அருகே சென்றாள் அவள்.

“நாளைக்கு லீவ்-ஆ திஷாவுக்கு?” – கையிலிருந்த குழந்தையிடம் வினவிய திவ்யாவிடம்..

“நோ… லீவ் போட்டா அம்மா அடிப்பா”-என்றாள் திஷா.

“இன்னைக்கு மட்டும் எப்படி லீவ் போட்ட” என்று கேட்டு.. அவள் அவனை முறைக்கவும்..

அவன் கண்டு கொள்ளாமல்.. “பூனைக்குப் பாய் சொல்லு பாப்பா. கிளம்புவோம்” என்றான்.

“பூனையா?” – பல்லைக் கடித்தாள் அவள்.

“அப்படித் தான நீங்க அவ கிட்ட சொல்லி வைச்சிருக்கீங்க?” – என்றவன் திஷாவைப் பின் சீட்டில் வாகாக உட்கார வைத்து விட்டுக் கதவைச் சாத்தினான்.

“கிளம்புறேன்-ங்க” – என்று அவள் முகம் பார்த்துக் கூறியவனிடம் அவள் தலையாட்டாமல்..

“பேக் டூ பேக் ட்ராவல் கஷ்டமாயிருந்தா.. யூ கேன் கனெக்ட் ஃப்ரம் ஹோம் டுமாரோ.. இஃப் யூ வாண்ட்” என்றாள் அவனது மேலதிகாரியாக.

அவளது அதிகாரத்தை அவலாக்கி மென்று தின்னும் நோக்கத்தோடு லேசாகத் தோளைக் குலுக்கியவன்..

“இதுக்கு முன்னாடி எப்படியோ தெரியாது! இனி உங்களைப் பார்க்காம நாளைக் கடத்துறது தான் என் பெரிய கஷ்டமே” எனக் கூறி விட்டு அவள் பதிலை எதிர்பாராமல்.. காரில் ஏறிப் பறந்து விட்டான் கௌதம்.

றுநாள் காலை அலுவலகத்திற்குச் சென்றதும்.. அவன் முதலில் தேடியது திவ்யாவைத் தான்.

இருக்கையில் லேப்டாப்பை வைத்து விட்டு சுற்றி,சுற்றிப் பார்த்தவனைக் கண்டு அனைவரும் ஒரு மாதிரி சிரிக்க..

“திவ்யாவைத் தேடுறீங்களா கௌதம்?” என்றபடி வந்து நின்றான் சூரஜ்.

அனைவரது பார்வையும் தன் மீதிருப்பதை உணர்ந்த கௌதம்.. ஒரு நொடி யோசித்துப் பின் தோளைக் குலுக்கியபடி “யெஸ். வந்துட்டாங்களா அவங்க?” என்று விசாரித்தான்.

“வந்தாச்சு. வந்தாச்சு. மீட்டிங் ரூம் 105“ என்றுத் தாங்களனைவரும் அமர்ந்திருந்த இடத்தின் எதிரிலிருந்த மீட்டிங் ரூமைக் காட்டியவன் அவனை நக்கலாகப் பார்க்க.. கண்டு கொள்ளாமல் மீட்டிங் ரூமை நோக்கிச் சென்றான் கௌதம்.

கதவைத் தட்டி விட்டு உள் நுழைந்தவன்.. தன்னை நிமிர்ந்து பார்த்தவளைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.

க்ரே நிற ஸ்கர்ட்டும்,கருப்பு மேல் சட்டையுமாக.. போனிடெய்லுடன் அமர்ந்திருந்தவளின் முகம்.. மலர்ச்சியைக் காட்டாவிடினும்.. அமைதியுடனிருந்தது.

திருப்தியோடு புன்னகைத்தவன் “குட்மார்னிங்” என்றான்.

பதிலுக்கு வாழ்த்தாமல் அவனைப் பார்த்தவளின் பார்வை ‘இப்போ’ உனக்கு என்ன வேணும்’ என்று வினவியது.

ஆட்காட்டி விரலால் பிடரியைச் சொரிந்தபடிப் புருவம் தூக்கி யோசித்தவன் “ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டீங்களா?” என்று வினவினான்.

“……….”

“நான் இன்னும் சாப்பிடல.”

“கௌதம்..” – மூக்கை விடைக்கத் தொடங்கினாள் அவள்.

“வாங்க போகலாம்” என்றபடி அவளருகே சென்று நின்றான்.

“ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்ற அளவுக்கு உனக்கும்,எனக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இல்ல கௌதம்” – சீறலாய் அவள்.

“இனி நல்ல ரிலேஷன்ஷிப்பை உருவாக்கிக்கத் தான் ஒன்னா சாப்பிடலாம்ன்னு கூப்பிட்றேன்” – விடாக்கண்டனாய் அவன்.

“நீ இப்போ என்ன ட்ரை பண்ற கௌதம்?”

உதடு அவனிடம் பேசினாலும்.. அவள் கண்கள்.. ஜன்னல் வழி வெளியே.. தங்களிருவரையும் கண்டும்,காணாமல் கவனித்துக் கொண்டிருந்தக் குழுவிடமே இருந்தது.

அவள் பார்வையைத் தொடர்ந்துத் தானும் நோக்கியவன்..

“அங்க என்ன பார்வை?, இதையெல்லாம் நீங்க கேர் பண்ற ஆள் கிடையாது. மறந்துடாதீங்க” என்றான்.

“அது.. என் மனசுல எந்த உறுத்தலும் இல்லாத வரைக்கும்”

“இப்போ மட்டும் என்ன பெருசா உறுத்துது உங்களுக்கு?”

“…………….”

“எனக்குப் பசிக்குது. வாங்க” – சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்துடன் நின்றான் அவன்.

“…………” – அவன் பேச்சைக் காதில் வாங்காமல்.. தன் மடிக்கணினியின் புறம் திரும்பிக் கொண்டாள் அவள்.

“நீங்க வராம நான் இங்க இருந்து நகரப் போறதில்ல” என்றவன் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அங்கேயே அமர்ந்து விட்டான்.

கண்கள் கோபத்தை உமிழ.. கணினித் திரையை எரித்துக் கொண்டிருந்தவளை.. பார்த்தபடி அமர்ந்திருந்தவன், பின் எழுந்து அவளருகே சென்றான்.

அவள் அனுமதியின்றி.. கீபோர்டை இயக்கி.. அவள் கணினியை லாக் செய்தவன்.. அவள் கையைப் பற்றி எழுப்பி நிறுத்தினான்.

வெளியிலிருந்தத் தலைகள் ஒவ்வொன்றாகத் திரும்பியும்,நிமிர்ந்தும் ஆர்வத்துடன் நகர்வதைக் கண்டவளுக்குக் கோபமும்,பதற்றமும் பெருக.. பற்றியிருந்த அவன் கரத்தை விலக்க முயன்றபடி..

“வாட் த ஹெல் ஆர் யூ டூயிங் ப்ளடி?” என்றுக் கடித்தப் பற்களுக்கிடையே வார்த்தைகளைத் துப்பினாள்.

“நான் வாயால கூப்பிட்டப்பவே நீங்க வந்திருக்கலாம்”

“கையை விடு கௌதம்”

“முடியாது. நாம இப்படியே தான் வெளிய போகப் போறோம்”

“இது ஆஃபிஸ் கௌதம். உன் இஷ்டத்துக்கு பிஹேவ் பண்ணாத.”

“வெளிய இருக்குறவனுங்க நடந்துக்கிறதைப் பார்த்தா.. இது ஆஃபிஸ் மாதிரியா தெரியுது?”

“கையை விடு..”

“விட்டா.. என் கூட வருவீங்களா?”

பதிலின்றி அவனை முறைத்தாள் அவள்.

“அப்டின்னா.. இப்டியே போகலாம்”

“நான் வரேன் கௌதம். கையை விடு…” – படபடப்பில் மூச்சு வாங்க.. மெல்லிய குரலில் கூறியவளைக் கண்டுச் சிரித்து “ஓகே” எனக் கையை விட்டு.. அவளை அழைத்துக் கொண்டு கேஃபடீரியாவை நோக்கி நடந்தான்.

அவன் அவளது கையைப் பிடித்ததும், பின் ஜோடியாக இருவரும் அறையை விட்டு வெளியேறியதும்.. அலுவலகத்தில்.. அன்றைய தலைப்புச் செய்தியாயிருக்க.. கோபத்தில் ஆடிய இதயத்தின் ஆட்டம் ஒட்டு மொத்த உடலையும் அதிரச் செய்ததில் தள்ளாடிய கால்களுடன் அவன் இழுத்த இழுப்புக்கு உடன் நடந்தாள் திவ்யா.

“இங்க உட்காரலாம்”

முகம் இறுக.. அவன் கைக்காட்டிய இடத்தில் அமர்ந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு.. விலகிச் சென்று இருவருக்குமான உணவை வாங்கிக் கொண்டு அவள் எதிரே வந்தமர்ந்தான்.

கைகளிரெண்டையும் ஒன்றாய் இணைத்து இறுக்கிக் கொண்டு.. மூச்சு வாங்க இருக்கையில் அமர்ந்திருந்தவளின் முன்பு அவன் தட்டை நகர்த்த.. அவள் அசையவேயில்லை.

“இப்படிக் கோபப்பட்டு வேர்த்துப் போய் கை நடுங்குற அளவுக்கு இப்போ என்ன நடந்தது?”

வேக மூச்சுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள்.. தன் குழுவைச் சேர்ந்த இருவர்.. தண்ணீர் அருந்தும் சாக்கில் எதிரே நின்று கொண்டு இவர்களிருவரையும் நோட்டமிடுவதைக் கண்டு.. எச்சில் விழுங்கி முகத்திலிருந்தக் கோபத்தை அகற்றி அவனை நோக்கினாள்.

நொடிக்கு நொடி மாறி,மாறி அவள் முகத்தில் வந்து போகும் பாவனைகளை வேடிக்கை பார்த்த கௌதம்.. ஒரு முழு நீள வாக்குவாதத்திற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டான்.

“இப்போ உன் பிஹேவியருக்கு நான் ரியாக்ட் பண்ணா.. வர்க் ப்ளேஸ் ஹராஸ்மெண்ட்ன்னு உன் சீட்டைக் கிழிச்சு வெளியே அனுப்பிடுவாங்க. தெரியுமா?”

“ரியாக்ட் பண்ணுங்க. நான் வெளியே போறேன். அப்படியாவது உங்களை வெறுத்து.. உங்கப் பக்கம் வராம இருக்கேனான்னு பார்ப்போம்”

“……………”

“சாப்பிடுங்க”

“கௌதம் உன் கிட்ட.. நான் அமைதியா நின்னது ஒரே ஒரு தடவை தான்! ஆனா.. அதுக்கே இப்போ வரை என் மனசாட்சிக்கிட்ட தினம்,தினம் அவமானப்பட்டுட்டிருக்கேன். மறுபடி,மறுபடி என்னைக் கூசிக் குறுக வைக்குற நீ?”

“கூசிக் குறுகுற அளவுக்கு என்ன நடந்துடுச்சு இங்க?, கட்டிப் பிடிச்சு முத்தமா கொடுத்துட்ருக்கோம்?, சாப்பிட தானங்க செய்றோம்?”

“சுத்தி நடக்குற எதுவும் தெரியல உனக்கு?, கண்ணையும்,காதையும் திறந்து தான வைச்சிருக்க?”

“அதனால?”

“கௌ…தம்”

“ஷர்மா கூட உங்களை இணைச்சு தப்பாப் பேசுறாங்கன்னு தெரிஞ்சும், எல்லாத்தையும் டீல்-ல விட்டுட்டு, கெத்தா.. அவர் கூட பார்ல உட்கார்ந்த ஆளு நீங்க! இப்போ ஏன் இவ்ளோ கோபப்பட்றீங்க?”

“அப்போ என் மனசுல எந்தக் குற்றவுணர்ச்சியும் கிடையாது கௌதம்”

“இப்போவும் உங்க மேல எந்தக் குற்றமும் இல்லங்க”

“…………….”

“திவ்யா…” –பொறுமை போய் விட்டது அவனுக்கு.

“இதெல்லாம் எனக்கு.. என் வாழ்க்கைக்கு அநாவசியம்ன்னு தோணுது கௌதம். நீ தேவையில்லாம லிமிட்டை க்ராஸ் பண்ணி என் பௌண்டரிக்குள்ள வர்ற! உன்னால.. உன்னால.. நான் ஏன் மன உளைச்சலுக்கு உள்ளாகனும் சொல்லு?”

“ஒரு காஃபி. 2 ப்ரெட் ஸ்லைஸ்.இதுல மன உளைச்சலுக்கு உள்ளாக என்ன இருக்குன்னு சத்தியமாத் தெரியல எனக்கு”

“உன் ஸ்மார்ட்நெஸ் என்னை எப்பவும் இம்ப்ரெஸ் பண்ணப் போறதில்ல கௌதம்”

“ஏன்? ஏன் இம்ப்ரெஸ் ஆக மாட்டேங்குறீங்க? இது தான் என்னை உங்கப்பக்கம் இழுக்குது”

தலையைப் பிடித்துக் கொண்டு.. சக்தியெல்லாம் வடிந்து போன முகத்துடன் அவனை ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

“எல்லாரையும் போல இயல்பா இருங்களேன்! அதுல என்ன கஷ்டம் உங்களுக்கு?, நண்பர்களே இல்லாத ஆளு கிடையாது நீங்க. ஷர்மாஜில இருந்து அன்னிக்கு வந்தத் தடியனுங்க வரை உங்களுக்குன்னு நேர்மையா இருக்குற ஆட்கள் இத்தனை பேரை சுத்தி வைச்சிருக்கீங்க! அந்த 4 ஃப்ரெண்ட்ஸ்ன்ற நம்பர்… நாற்பதாகுறதுல என்ன பிரச்சனை உங்களுக்கு?”

“……….”

“ஆஃபிஸ்ல நீங்க இயல்பா பேசிப் பழகுற ஆளா இருந்திருந்தா.. இந்த ஷர்மா விசயத்துல.. நீங்க அப்படிப்பட்ட கேரக்டர் கிடையாதுன்னு உங்கப் பக்கம் பேச.. கண்டிப்பா ஆள் இருந்திருக்கும்! இதை நீங்க எப்போவாவது யோசிச்சிருக்கீங்களா?”

“நான் எப்படி நடந்துக்கனும்ன்னு நீ எனக்குக் க்ளாஸ் எடுக்குறியா?, உன்னை விட 4 வருஷத்துக்கு முன்னாடியே உலகத்தைப் பார்த்துட்ட ஆள் நான்”

“அதனால என்ன பிரயோஜனம்?”

“கௌதம்!!!”

“ஒட்டி உறவாடச் சொல்லி நான் கட்டாயப்படுத்தல. இயல்பா இருங்கன்னு தான் சொல்றேன்! பெரிய பொசிஷன்ல இருக்கீங்க. உங்களைப் பத்தி எல்லா மாதிரியும் பேசுற ஆட்கள் சுத்தி இருப்பாங்க தான்! அதுக்காக நீங்க சிரிக்கிறதைக் கூட கைவிட்டு.. காலைல இருந்து சாயந்தரம் வரைக்கும் விறைப்பா தான் இருக்கனும்ன்னு ஏதாவது இருக்கா?”

“நான் ஏற்கனவே என் வழியைத் தேர்ந்தெடுத்து.. அதுல ட்ராவல் பண்ணிட்டிருக்கேன் கௌதம். இப்போ தடம் மாறுனா.. தலை குப்புற கீழ தான் விழனும்!”

“விழ மாட்டீங்க! விழுந்தாலும் பிடிக்க நான் இருக்கேன்”

“எத்தனை நாளைக்கு”

“வாழ்க்கை முழுக்க”

தோளைக் குலுக்கி நக்கலாய் நகைத்தவளிடம்..

“ஏன், மாட்டேன்னு நினைச்சீங்களா?, நான் உங்களை மாதிரி கிடையாது. என்னை விட வயசு அதிகமா இருக்குற பொண்ணு பின்னாடி சுத்துறதுல எனக்கு எந்த அவமானமும் இல்ல, நான் ரெக்ரெட் பண்ணவுமில்ல. இவன் என்ன நினைப்பான்,அவன் என்ன பேசுவான்னு.. நான் எதுக்காகவும் ஃபீல் பண்ற டைப்பும் கிடையாது”

“நான் உன்னை மாதிரி இருக்கனும்ன்னு கட்டாயம் எதுவும் இருக்கா?”

“இல்ல தான்”

“பின்ன என்ன? என்னை விட்ரு” – கடுப்புடன் கூறியவளிடம்..

“விட்டுட்றேன்! சாப்பிட்டப்புறம்!” என்றவன் “இப்போ சாப்பிடுங்க ப்ளீஸ்” – எனக் கூறித் தன் தட்டிலிருந்த ப்ரெட் துண்டுகளை வைத்து வாயை அடைத்துக் கொள்ள.. அவனை முறைக்க முயன்று.. அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லையென்பதை உணர்ந்து.. பின் தானும் தன் தட்டிலிருப்பதைக் காலி செய்யத் தொடங்கினாள் திவ்யா.

வ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று.. அவர்களது அலுவலக காஃபடீரியாவில் ‘பாத்ரூம் சிங்கர்ஸ்’ என்ற பெயரில் பாட்டுக் கச்சேரி நடக்கும்.

‘சிங்கிங்’ என்ற பெயரில்.. கழுதையாய்க் கனைப்பவர்களையும் கைத்தட்டி ஊக்குவிக்கும் உன்னதமான பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தனர் அந்த அலுவலக மக்கள்.

ன்று காலை அலுவலகம் வந்தது முதல்.. கௌதமை வேலை ஆக்கிரமித்துக் கொள்ள.. பேக் டூ பேக் கால்-களில் பிஸியாக இருந்தான்.

கருப்பு நிறத்தில் ஹூடியுடன் கூடிய ஜெர்சி அணிந்திருந்தவன்.. இரு கைகளையும் பிடரியில் கட்டிக் கண் மூடி ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கையில் லேசாக ஆடியபடி அமர்ந்திருந்தான்.

அருகில் யாரோ வந்து டொக்கென அமரும் சத்தத்தில் விழி திறந்தவன் கண்டது.. ஜன்னல் வழி தெரிந்த காரிடாரில் யாருடனோ செல்ஃபோனில் உரையாடிக் கொண்டிருந்த திவ்யாவை.

மஸ்டர்ட் நிறத்தில் அவள் அணிந்திருந்த மேல் சட்டை அவள் கன்னங்களைப் பொன் மஞ்சள் நிறமாக்க.. மிளிரும் அவள் கன்னங்களை ரசனையாய் பார்த்தபடி ஆடிக் கொண்டிருந்தவன்.. பக்கவாட்டில் தன்னை யாரோ உற்று நோக்குவதைக் கண்டுத் திரும்பிப் பார்த்தான்.

உதட்டை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு அவனைக் கேவலமாக பார்த்துக் கொண்டிருந்த ஜாக்கைக் கண்டுப் பம்மி.. “ம்க்கும்” எனச் செருமி லேப்டாப் புறம் திரும்பினான் கௌதம்.

அப்படியும் அவன் விடாமல் தன்னையே நோக்குவதைக் கண்டு..

“ப்ச், எதுக்குய்யா அப்படிப் பார்க்குற?” என எரிச்சலுடன் வினவ..

“உன் டேஸ்ட் இவ்ளோ கேவலமா இருக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லடா கௌதம். ரசிச்சுப் பார்க்க அந்தம்மா மூஞ்சில என்னடா இருக்கு?” எனக் கேட்டான் ஜாக்.

“என்னவோ இருக்கு. நான் பார்க்குறேன். உங்களுக்கென்ன?”

“உனக்கு ஜான்சி மாதிரி ஆளுங்க தான் செட் ஆவாங்க டா கௌதம், அவளை ஏன் கழட்டி விட்ட?”

“அவர் என்னை பிக்-அப் பண்ணியிருந்தாத் தான கழட்டி விட்றதுக்கு?”- எனக் கேட்டபடி அவர்களருகே வந்து.. இருவருக்கும் நடுவே டெஸ்க்கில் ஏறியமர்ந்தாள் ஜான்சி.

“அப்படி சொல்லு! இந்த மனுஷன் காதுக்குள்ள நல்லாக் கத்தி சொல்லு”-கௌதம்

“ப்ச், அடப் போங்கடா! போயும்,போயும் டிஷ்யூமை சைட் அடிக்குறியே டா தம்பி. என்னால ஏத்துக்கவே முடியலடா” – அங்கலாய்த்துக் கொண்டவனிடம்..

“ஏன், அவங்களுக்கு என்ன குறை?” – குரல் ஜான்சியிடமிருந்து வந்தது.

விழி மலர “ஜான்….சிசிசிசிசிசி” என்றழைத்தக் கௌதமை சட்டை செய்யாமல்..

“என் அளவுக்கு இல்லன்னாலும்.. பார்க்க ஓரளவு நல்லாத் தான் இருக்காங்க அவங்க”

“ஜான்….சீசீசீ” – இப்போது பல்லைக் கடித்தான் கௌதம்.

“ஏன் நான் அவங்களை விட அழகாத் தான இருக்கேன். இல்லைன்னு சொல்வீங்களா?”

‘அய்யய்ய! இந்தப் பிள்ள என்ன இப்பிடிப் பேசுது’ எனத் தலையிலடித்துக் கொண்ட கௌதம்.. தனக்கெனப் பேசும் ஒரே ஜீவனை விட்டு விடக் கூடாதென்கிற எண்ணத்தில்..

“ஆமாமாமாமாமா! நீ.. நீ மேல சொல்லு” என்றான்.

“அழகா இருக்காங்க. நிறைய சம்பாதிக்கிறாங்க. சொந்த வீடு வைச்சிருக்காங்க.”

“ஏய்ய்ய் லூசு மாதிரி பேசாத. இங்க என்ன கௌதம்க்கு நாம மாப்பிள்ளையா பார்த்திட்டிருக்கோம்?, இவன் வயசென்ன?, அந்தம்மா வயசு என்ன?” – கடுப்பில் காய்ந்தான் ஜாக்.

“யோவ்! ஒரே டயலாக்ல என் ஜென்டரை மாத்துற நீ?”

“நீ வாயை மூட்றா” – இடையிட்டக் கௌதமின் மீது எரிச்சலுடன் பாய்ந்தான்.

“ப்ச், யோவ், அவரு யாரைப் பார்த்தா உனக்கு என்ன வந்தது?, ஓவர்-ஆ பொங்குற?” என எகிறிய ஜான்சி..

“வயசெல்லாம் பெரிய மேட்டரே கிடையாது. ஏன், பொண்ணுங்க மட்டும் தான் வயசு மூத்தவனைப் பார்க்கனுமா?, கௌதம் நான் சொல்றேன். டிஷ்யூம் பெஸ்ட் சாய்ஸ். இந்த மாதிரி பொண்ணுங்களையெல்லாம் அவ்ளோ ஈசியா பார்க்க முடியாது.”

“ஆமாமா” – நக்கலாக இடையிட்டான் ஜாக்.

“இவ்ளோ பேசுற இந்த மனுஷன்.. ஒரு தடவையாவது அவங்க கண்ணை நேராப் பார்த்து பேசியிருக்காரா?, அவங்க உத்துப் பார்த்தாலே.. இந்தாளு ரெஸ்ட் ரூமுக்கு ஓடிடும் தெரியுமா”

“ஏய்ய்ய்ய்” – எகிறிய ஜாக்கை கண்டு கொள்ளாமல்..

“எனக்கு என்னவோ அவங்க ரொம்ப நேர்மையான, அழுத்தமான, அன்பான ஆளா இருப்பாங்களோன்னு தோணுது கௌதம். யோசிச்சுப் பார்த்தா.. இந்த ஜாக் மாதிரி ஆளுங்களையெல்லாம் சமாளிக்கனும்ன்னா.. அவங்க கெத்தா இருந்து தான ஆகனும்ன்னு தோணுது?, நான்-லாம் அவங்களை நிறைய தடவை அட்மயர் பண்ணியிருக்கேன்ப்பா”

“ஆமா!, அட்மயர் பண்ணி நீ கொடுத்த காஃபிக்குத் தான் ரிவீட் அடிச்சுச்சே ஒரு நாள்”

“அ…அது… அவங்க பொசிஷனை விட்டு இறங்கி வந்து.. நம்மக் கிட்ட கேஷ்வலா பழகி..நாம அதுல அட்வாண்டேஜ் எடுத்துக்கப் பார்த்தா.. என்ன பண்றது?, அதனால இப்படி ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்களோ என்னவோ..”

ஜான்சி தன் போக்கில் திவ்யாவைப் பற்றிய அனாலிஸிஸ்களை அள்ளி விட.. சிரித்தபடி அமர்ந்திருந்தான் கௌதம்.

“இதயமும்,மூளையும் இருக்குற ஸ்டாச்சு (சிலை) மேன் அது! அதைப் பார்த்து எப்படிடா ரொமான்ஸ் வரும் உனக்கு?, அதைத் தாண்டின மேட்டரெல்ல்ல்ல்ல்லாம்….” என இழுத்த ஜாக்கின் தலையில் அடித்த ஜான்சி…

கௌதமின் புறம் திரும்பி.. “நிஜமா லவ்-ஆ கௌதம்?” என்று ஆர்வமாய் வினவினாள்.

உதட்டை வளைத்து தலை சாய்த்து.. அழகாகச் சிரித்தபடிக் கணினித் திரையைப் பார்த்த கௌதம் “லவ்!!!! இந்த வேர்ட் தான் இப்போ-லாம் என்னை அதிகமா டிஸ்டர்ப் பண்ணுது” எனக் கூறி.. யோசிப்பது போல் பாவனை செய்ய…

“ஓ மை காட்! ஹி இஸ் ப்ளஷிங் ஜாக்” என்ற ஜான்சி.. ஜாக்கின் தோளைத் தட்ட.. அவனோ.. “ஹ்ம்!” என்றபடித் திரும்பிக் கொள்ள.. மற்ற இருவரும் ஜாக்கைக் கண்டு நகைத்த போது… திவ்யா இவர்கள் மூவரையும் கடந்து சென்றாள்.

தனக்கெனப் பேசவும்.. ஆள் இருக்கிறதென்கிற மிதப்பில்.. திவ்யாவைப் பார்த்தவனின் கண்களில் உரிமை உற்சாகமாய் குதித்தோட.. அவன் பார்வையைக் கண்ட ஜான்சியும்,ஜாக்கும் வாயில் விரல் வைத்தனர்.

“அவங்க போய் அரை மணி நேரமாச்சு. தலையைத் திருப்புடா டேய்” கடுப்புடன் முணுமுணுத்த ஜாக்கின் தலையில் தட்டிய கௌதமிடம்..

“கௌதம், இன்னிக்கு பாத்ரூம் சிங்கர்ஸ்-ல நீங்க என் கூடப் பாடுறீங்களா?” என்று வினவினாள் ஜான்சி.

“நீங்க பாடப் போறீங்களா?” – கௌதம்.

“ஏன், எனக்குள்ள ஒரு எஸ்,ஜானகி இருக்காங்க. வேணும்ன்னா நரேன் கிட்டக் கேட்டுப் பாருங்க”

“அவன் சொன்னதால தான் இந்தக் கேள்வியைக் கேட்குறேன்”

“ஹலோஓஓஓஓ”

“ஓகே! ஓகே! எனக்கு அவ்ளோவா பாட வராதே ஜான்சி”

“அதெல்லாம் பரவாயில்ல! சும்மா பாடலாம்! இட் வில் பீ ஃபன். அப்டியே உங்க ஆளுக்கு ஒரு டெடிகேஷனைப் போட்டு விட்டுடலாம்”

“அந்தம்மா கேஃபடீரியா பக்கமே வராது. அதுக்கு டெடிகேஷன் ஒன்னு தான் குறை” – நொடித்துக் கொண்ட ஜாக்கை, முறைத்த ஜான்சி..

“வர வைப்போமா?” என்று வினவினாள்.

ஆர்வத்துடன் “எப்படி?” என்று கௌதம் கேட்க.. அவள் தன் ஐடியாவைக் கூறினாள்.

அதன் படி, கௌதம் மற்றும் ஜான்சி இன்று ஜோடியாகப் பாடப் போவதாக டீம் மற்றும் மேனஜர்களுக்கு மெயில் அனுப்பிய ஜாக் ‘அனைவரும் வாரீர்! உங்கள் ஆதரவைத் தாரீர்’ ரேஞ்சுக்கு பில்ட்-அப் செய்து விட… ஃப்ரை டே! ஃபன் டே! மோடில் இருக்கும் ஐடிவாசிகளும்.. இருவரது பாட்டையும் காணத் தயாராகினர்.

“வி ஷுட் எங்கரேஜ் தீஸ் கைண்ட் ஆஃப் ஆக்டிவிடீஸ்” எனக் கிளம்பிய மேனேஜர்கள்.. திவ்யாவிடம்.. மொத்தக் குழுவையும் அழைத்துக் கொண்டு காஃபடீரியாவில் கூடுமாறு அறிவிக்க.. அவளும் வந்து சேர்ந்தாள்.

வழக்கத்திற்கு மாறாகக் கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு மற்ற டீம்களும் இணைந்து கொள்ள.. மேடையில் நின்றனர் ஜான்சியும்,கௌதமும்.

கூட்டத்தோடு கூட்டமாய்.. ஒரு தூண் ஓரம் நின்றிருந்த திவ்யாவை லொகேட் செய்தது கௌதமின் ஜிபிஎஸ் கண்கள்.

“ம்க்கும்” என்ற ஜான்சி மைக்கில் “ஆரம்பிக்கலாமா?” எனக் கேட்க.. ஹேஏஏஏஏஏஏஏ எனக் குழுவினர் கரகோஷம் எழுப்பவும்.. சிரிப்புடன் தொடங்கினான் கௌதம்.

‘காந்தமாய் என்னை ஈர்க்கும் உந்தன் அன்பு இன்று..

சாந்தமாய் என்னைக் கட்டிப் போடும் ஜாலமென்ன..

கேட்கிறேன்.. கூறடி பெண்மையே!!”

தூரமாய் நின்றவளின் மீதே.. பாடியவனின் பார்வை பதிந்திருக்க.. அவள் எதையும் கண்டு கொள்ளாமல்.. மொபைலுக்குள் முகத்தைப் புதைத்திருந்தாள்.

அவன் குரல் அவள் காதை அடைந்ததாகவேத் தெரியவில்லை அவனுக்கு. ரோபோ முகத்துடன் கைபேசியைப் பார்த்திருந்தாள்.

எப்படியேனும் அவளை நிமிர்ந்து பார்க்க வைத்து விட வேண்டுமென்கிற ஆர்வம்.. உள்ளிருந்து வேகமாய் எழ.. பாடிக் கொண்டிருந்த ஜான்சியின் கையைப் பற்றினான் அவன்.

கூட்டம் குஷியாகிக் கூச்சலிட்டதும்… நிமிர்ந்து மேடையைப் பார்த்தவளின் விழிகளில்.. ஜான்சியின் கையைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்த கௌதம் தென்பட்டான்.

அவளையே கவனித்துக் கொண்டிருந்த கௌதம்.. அவள் முகத்தில் தான் எதிர்பார்த்த எதுவும் தென்படாததை உணர்ந்து.. கடுப்பாகி.. பாட்டை முடித்துக் கொண்டு மேடையை விட்டிறங்கினான்.

ஜான்சி தன்னை ஒரு ராக் ஸ்டாராக இந்த உலகிற்குக் காட்டி விட வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்ததால்.. தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.

‘நைஸ் வாய்ஸ் மேன்’ என்ற சக பணியாளர்களிடம் சிரித்தபடி நகர்ந்தவன்.. திவ்யாவின் அருகே வர.. அவளருகே நின்றிருந்த சூரஜ் நமுட்டுச் சிரிப்புடன் விலகி அவன் நிற்க இடம் கொடுத்தான்.

மேடையின் மீது பார்வையைப் பதித்தபடி கையைக் கட்டிக் கொண்டுத் தூணோடு தூணாக நின்றவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவனை உணர்ந்து.. அவன் புறம் திரும்பாமலே..

“என்ன கௌதம்?” என்றாள் அவள்.

“என்னைப் பாருங்க”

அவன் சொன்னதும் திரும்பி அவனைப் பார்த்தவளிடம்..

“இனி எப்பவும்.. நான் உங்க முன்னாடி நிற்கும் போது.. நீங்க என்னை மட்டும் தான் பார்க்கனும்” என்றான் சட்டமாக.

இமைக்காது ஒரு நொடி அவனைப் பார்த்து விட்டு.. மீண்டும் மேடையை நோக்கியவளிடம்..

“வேற ஒரு பொண்ணோட கையைப் பிடிச்சு ஆட்றேன்! பொறாமையெல்லாம் வரலையா உங்களுக்கு?” என்று வினவினான்.

சிறுபிள்ளைத்தனமான அவன் கேள்வியைக் கேட்டு சிரிப்பு வர.. மறையாது புன்னகைத்தவளின் தோளை இடித்து நெருங்கி நின்றவன்..

“என்ன சிரிப்பு?” என்றான் கடுப்புடன்.

“இல்ல, உன்னைப் பத்தி நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கேன். அப்புறமும் பொறாமைப் படுவேனா?”

“அதாவது?”

“………….”

“அதாவது.. நான் உங்க பின்னாடி மட்டும் தான் லூசு மாதிரி சுத்துவேன்றதை நீங்க நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க. அப்படித் தான?”

“இல்ல”

“பின்ன?”

“எனக்குள்ள பொறாமையைத் தூண்டனும்ன்றதுக்காக நீ இப்படி சின்னப்பிள்ளைத்தனமா நடந்துப்பன்னு எனக்கு நல்லாத் தெரியும்ன்னு சொல்றேன்”

“ப்ச்”

“நீ மெச்யூர்ட் ஆன ஆளா?, இம்மெச்யூர்டானா ஆளான்னு எனக்குப் புரியவே மாட்டேங்குது”

“நான் ரெண்டுத்துக்கும் நடுவுல நிற்குற ஆளு”

“அதுசரி!” – என்றவள்.. ஜான்சி பாடி முடித்து விட்டதைக் கண்டுக் கையைத் தட்டி விட்டு ‘என் வேலை முடிந்தது’ என்பது போல் நகர்ந்து விட்டாள்.

செல்லும் அவளையே கடுப்புடன் அவன் பார்த்துக் கொண்டிருக்கையில் அவன் செல்ஃபோன் அழைத்தது.

“சொல்லு அண்ணி” – எரிச்சல் குறையாத குரலில் பேசியவனிடம்..

“என்னடா?” என்றாள் சாதனா.

“ப்ச், கோபமா வருது அண்ணி”

“ஏன்? ஏன்? ஏன்?”

“பொண்ணுங்க இவ்ளோ காம்ப்ளிகேடட்-ஆ இருப்பாங்களா?”

“ஏன், என்னைப் பார்த்தா காம்ப்ளிகேடட் ஆன ஆள் மாதிரியா இருக்கு?”

“அதை அண்ணன் கிட்டத் தான் கேட்கனும்”

“சரி, என்னாச்சு சொல்லு”

“என்ன சொல்ல?”

“என்னடா பொண்ணுன்ற? காம்ப்ளிகேஷன்ற?, திடீர்ன்னு வந்து பாப்பாவைத் தூக்கிட்டுப் போன, எங்க போனீங்கன்னு கேட்டா.. ரெண்டு பேரும் சொல்ல மாட்டேங்குறீங்க?. உன்னையும் வீட்டுப் பக்கம் ஆளைக் காணோம்! மாமியாரும்,மருமகளும் என் தம்பியை என்ன சொன்னீங்க! ஏன் அவன் வீட்டுக்கு வர மாட்டேங்குறான்னு உன் அண்ணன் என்னைத் திட்டுறார்”

“வர்க்ல பிஸியா இருக்கேன். அடுத்த வாரம் வர்றேன்”

“இப்படித் தான் போன வாரம் சொன்ன?”

“அதனால என்ன இப்போ?, ஃப்ரீ ஆனதும் வர்றேன். ஃபோனை வை. வேலையிருக்கு எனக்கு”

“கௌதம்..”

“என்ன?”

“இந்தத் தடவையும் வெள்ளைக்காரியாடா?”

“இல்ல”

“ஹப்பாடா! அப்டின்னா தமிழ்ப் பொண்ணா?”

“ஆமா! தமிழ்ப் பொண்ணு தான்! அதான்.. என்னைத் தவிக்க விட்டு வேடிக்கை பார்க்குறா!”

“இவ்ளோ காண்டாகுறியே மச்சான்! கதற விட்றாளா உன்னை?, அப்படி எந்த அழகியடா பிடிச்சிருக்க?, கௌதம்.. யாருன்னு சொல்லுடா ப்ளீஸ்..”

“ப்ச், நீ உடனே ஆரம்பிக்காத, ஒழுங்கா ஃபோனை வைச்சுட்டு ஓடிடு.”

“போடா! போடா! என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள்.. பூனைக்குட்டி வெளிய வந்து தான் ஆகனும்”

“வெளிய வந்துட்டாலும்! உள்ளேயே உட்கார்ந்து.. பிராண்டி விட்டு உயிரை வாங்குது” என்று நொந்து கொண்டவனிடம்..

“சரி, நாளைக்கு என்ன ப்ளான்?” என்றாள்.

“நாளைக்கு என்ன?”

“டேய்! உன் பிறந்தநாள் டா!”

“ஆமா அது ஒன்னு தான் குறை” - சலித்துக் கொண்டவனிடம்..

“போன தடவை நீ கொண்டு வந்த ப்ளூ பேக்ல புது டிரஸ் வைச்சிருக்கேன். அதைப் போடு நாளைக்கு” – என்றாள் அவள்.

“நீ வேணும்ன்னே ஆரஞ்சும்,பச்சையுமா சட்டை வாங்கி வைச்சிருப்ப. என்னால-லாம் போட முடியாது”

“செல்க்ஷன் அத்தையோடது”

“அப்டின்னா நிச்சயம் போட மாட்டேன்”

“ஓவர்-ஆ பண்ணாதடா. உங்கண்ணன் NYC போய்ருக்கார். இல்லேன்னா.. எல்லாரும் பொகிப்சி வந்திருப்போம்”

“அப்டில்லாம் மொத்தமா வந்து என் உயிரை வாங்கிடாதீங்க”

“டேய்ய்” – திட்டத் தொடங்கியவளைத் தடுத்து ஃபோனைக் கட் செய்து விட்டு இருக்கைக்குச் சென்றான் கௌதம்.

றுநாள் அவனது பிறந்த நாள்.

எழுந்ததும் வீடியோ காலில் திஷா வாழ்த்து சொல்ல.. அவளைத் தொடர்ந்து அண்ணி,அம்மா,அண்ணன் என வரிசையாகக் குடும்பத்தாரின் வாழ்த்து மழையில் நனைந்த படி நாளைத் தொடங்கியவன்.. காலை உணவை உண்டபடி அலுவலக மெயில்களை செக் செய்து கொண்டிருந்தான்.

டீமைச் சேர்ந்தவர்களுடையப் பிறந்த நாட்களின் போதுத் தவறாமல் வாழ்த்து சொல்லி ஒரு ஃபார்மல் ஈமெயிலைத் தட்டி விடுவாள் திவ்யா.

இன்று, இவனது பிறந்த நாளுக்கும் அவளிடமிருந்து மெய்ல் வந்திருந்தது.

‘அதாவது.. நீ எனக்கு ஒரு டீம் மெம்பர் மட்டும் தான்னு சொல்லாம சொல்றா, ம்ம்ம்ம்!’ – என்றபடி உதட்டை வளைத்தவன்.. உண்டு முடித்து அலுவலகம் கிளம்பினான்.

“ஹாப்பி பர்த்டே மேன்! ஹாப்பி பர்த்டே கௌதம்! மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஹாண்ட்சம்”

டீம்-மேட்களிடமிருந்துக் குவிந்த வாழ்த்துக்களுக்குச் சிரித்தபடி நன்றி கூறி நகர்ந்தவன் திவ்யாவை எட்டிப் பார்த்தான்.

மீட்டிங் அறைக்குள் டெலிஃபோனோடு தீவிரமாகப் பேசியபடி படு பிஸியாகத் தெரிந்தாள்.

மணியைப் பார்த்து விட்டு வெளியே சென்றவன், திரும்பி வந்த போது அவன் கையில் சிறிய பூங்கொத்தொன்று முளைத்திருந்தது.

அவள் அமர்ந்திருந்த அறைக்குள் கதவைத் தட்டி விட்டு நுழைந்தான்.

விளக்கிற்குக் கீழே அமர்ந்திருந்ததாலோ என்னவோ.. அணிந்திருந்த பிங்க் நிற சட்டையில் பளிச்செனக் காட்சி தந்தவளைக் கண்களால் அள்ளிய படி.. அருகே சென்றான் கௌதம்.

“நானே உங்களைப் பார்க்கனும்ன்னு நினைச்சேன் கௌதம்”

“இஸ் இட்??” – விழிகளில் ஆர்வத்துடன் அவன் கேட்ட விதத்தை அசட்டை செய்து..

“ஐ வில் நாட் பீ அவைலபிள் இன் த ஆஃப்டர்நூன். 5 மணிக்கு க்ளையண்ட் மீட்டிங் இருக்கு. நீங்க டிசைன் பண்ணின செக்யூரிட்டி ஃபீச்சர்ஸை இன்னிக்கு ரிவ்யூ பண்றாங்க. உங்களுக்கு இன்வைட் வந்ததா?”

இவளிடம் வேறு என்ன எதிர்பார்த்து விட முடியும் என்று சலித்துக் கொண்டவன்..

“ஹ்ம்ம், வந்தது” என்றான் ரோபோ குரலில்.

“நீங்க லாஸ்ட் மீட்டிங்ல ஷேர் பண்ணின ஐடியால க்ளையண்ட்ஸ் ரொம்ப இம்ப்ரஸ் ஆயிருக்காங்க. இன்னிக்கு நீங்கக் காட்டப் போற ப்ளானுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கு”

“தெரியும்ங்க. நானும் இங்க தான வேலை செய்றேன்”

“இது என்ன ஆட்டிடியூட் கௌதம்?”

“பின்ன என்ன?, வேலை சம்மந்தமா மட்டும் தான் என் கிட்ட பேசுவீங்களா? ரொம்பப் பண்றீங்க”

சிறுபிள்ளைத்தனமாய் முறைத்துக் கொண்டவனைக் கண்டு சிரிப்பு வர.. முகத்தில் மென்மை படர்ந்தது அவளுக்கு.

“என்ன ரொம்பப் பண்றேன்?” – திவ்யா.

“இன்னிக்கு எனக்கு பர்த்டே”

“ஸோ?”

“விஷ் பண்ணுங்க”

“பண்ணேனே! காலைலயே! ஈமெய்ல்ல!”

“ப்ச், போன வாரம் சார்லஸ் பிறந்த நாளைக்குக் கூட தான் ஈமெய்ல் அனுப்புனீங்க! நானும்,அவனும் ஒன்னா?”

“எனக்கு நீயும்,அவனும் ஒன்னு தான் கௌதம்” – பொறுமையாய்க் கூறினாள் அவள்.

“கடுப்பு பண்ணாதீங்க ப்ளீஸ்”

“……” – அமைதியாய் கணினியைப் பார்த்திருந்தவளிடம்.. கையிலிருந்தப் பூங்கொத்தை நீட்டினான்.

“என்ன இது?” – புருவம் சுருங்க வினவினாள் திவ்யா.

“எப்படியும் நீங்க எனக்கு எதுவும் கொடுக்கப் போறதில்ல, அதனால தான்.. நானே இந்த பொக்கேயை வாங்கிட்டு வந்தேன்! இப்போ இதை நீங்க.. உங்க கையால எனக்குக் கொடுப்பீங்களாம்! நான் வாங்கிப்பேனாம்” – கண்ணை விரித்துக் கூறியவனைக் கண்டு..

“ஹாஹாஹா” –வென நகைத்தாள் திவ்யா.

“என்ன சிரிப்பு?”

“ஹாஹாஹாஹாஹா…” – பொங்கி,பொங்கிச் சிரித்தவளை.. ரசனையுடன் நோக்கி..

“சிரிக்கும் போது ரொம்ப அழகாயிருக்கீங்க” –என்றான் அவன்.

“ப்ச், கௌதம்” – உடனே முறைத்தவளிடம்..

“இந்த பொக்கேவை எடுத்து.. ஹாப்பி பர்த்டே கௌதம்ன்னு சொல்லி.. என் கைல கொடுங்க”-என்றான் அவன்.

“சின்னப்பிள்ளைத்தனமா பிஹேவ் பண்ணாத கௌதம்!”

“இந்த சின்னப்பிள்ளைத்தனம் தான்ங்க வாழ்க்கை முழுக்க நம்மை உயிர்ப்போட வைச்சிருக்கும்! மெஷின் மாதிரி மாறுறதுக்குப் பேர் தான் மெச்யூரிட்டின்னா.. நான் கடைசி வரை இப்படியே இருந்துட்டுப் போறேன்!”

“……….”

“இந்த பொக்கேவால நீங்க சிரிச்சிருக்கீங்க! நான் உங்களோட 20 வார்த்தை பேசிருக்கேன்! இந்தச் சின்னப்புள்ளைத்தனம் எவ்ளோ அழகா உங்களையும்,என்னையும் கனெக்ட் பண்ணியிருக்கு பாருங்க! தப்பில்லங்க திவ்யா மேடம்….”

“சரி, இப்போ என்ன செய்யனும்ன்ற?”

“சிம்பிள்! பொக்கேவைக் கொடுத்து விஷ் பண்ணுங்க”

“ஓகே!” – என்றவள் பொக்கேவைக் கையிலெடுத்து.. அடக்கமுடியா சிரிப்புடன்..

“தன் பிறந்தநாளுக்குத் தானே பொக்கே வாங்கிக்கிறவனை.. இப்போ தான் முதன்முதலா பார்க்குறேன்! மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் கௌதம்” என்றபடி அவனிடம் நீட்ட..

“என்னங்க சட்டுன்னு கொடுத்துட்டீங்க?, இந்த பொக்கே இன்னைக்குக் குப்பைக்குத் தான் போகும்ன்னு நினைச்சிட்டிருந்தேன்” என்றவன்.. ஆச்சரியத்துடன் கையில் வாங்கிக் கொண்டான்.

“தேங்க்ஸ்ங்க மிஸ்.கேட்”

“வெல்கம்” – எனச் சிரித்தவள் கணினியிடம் திரும்பிக் கொள்ள.. பூவைக் கையில் வைத்துக் கொண்டு அவளையே நோக்கினான் கௌதம்.

“என்ன?”

“என் கையைக் கொஞ்சம் கிள்ளி வைக்குறீங்களா?”

“எதுக்கு?”

“இல்ல! முறைக்க மாட்டேன்றீங்க! திட்ட மாட்டேன்றீங்க! நான் சொன்னதை ஆர்க்யூ பண்ணாம கேட்குறீங்க! நிஜமாவே நீங்க திவ்யா தானா?”

மெல்லச் சிரித்தபடி கணினித் திரையை நோக்கியவளைக் கண்டு..

“அடிக்கடி சிரிக்குறீங்க வேற! என்னங்க ஆச்சு உங்களுக்கு?” என்றான்.

“போய் ஆஃப்டர்நூன் மீட்டிங்க்கு ப்ரிபேர் பண்ணு கௌதம்”

“இவ்ளோ பொறுமையா பேசாதீங்க. எனக்கு திவ்யாவோட உட்கார்ந்திருக்கிற எஃபெக்ட்டே இல்ல”

“ப்ச், நீ கிளம்பு முதல்ல”

“போறேன் போறேன்! அதுக்கு முன்னாடி ஒன்னு கேட்பேன்! இதே மாதிரி சிரிச்சுட்டே ஒத்துப்பீங்களா?”

“என்ன?”

“…………..” – பதில் கூறாமல் அவள் முகம் பார்த்தான்.

“என்ன கௌதம்?”

“ஈவ்னிங் என்னோட வருவீங்களா?” – தயங்கி வினவினான்.

“எங்க?”

“எங்கேயோ!”

“………..”

“திவ்யா…”

“நான் உன் கூட இயல்பா இருக்கனும்ன்னு நினைச்சாக் கூட.. உன்னோட இந்த மாதிரிப் பேச்சு என்னைத் தள்ளி நிற்க வைக்குது கௌதம்”

“சரி, சாரி! இனி இப்படிப் பேசல. நீங்க தள்ளிப் போக வேண்டாம்”

“……….”

“சாரிங்க”

“……”

“இனி அப்படிக் கேட்க மாட்டேன். சாரி! ஓகே?”

“குட்” என்றவள்.. “ஈவ்னிங் மீட்டிங் முடிஞ்சதும்.. மறக்காம எம்.ஓ.எம் அனுப்பிடு கௌதம்” எனக் கூறி விட்டுத் தலையசைத்தபடி கணினியிடம் திரும்பிக் கொள்ள.. ‘கஷ்டம்’ என்றெண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான் கௌதம்.

அடுத்த ஒரு மணி நேரத்தில்.. குழுவினர் அனைவரும் அவன் பிறந்தநாள் செலிப்ரேஷனுக்காகக் கூடினர் பான்ட்ரியில்.

ஒத்தக் கேக்கை வெட்டி.. அதையும் தாங்களே விழுங்கி விட்டு.. வெட்கமில்லாமல் டீரீட் கேட்கும் வழக்கம் கொண்ட அற்ப ஜீவிகள் நம் ஐடி மக்கள்!

‘ஹாப்பி பர்த்டே டூ யூ’ என ஹை-பிட்சில் தன் காதுக்குள் பாடிய ஜாக் மற்றும் ஜான்சியின் கர்ண கொடூரக் குரலைச் சகித்துக் கொள்ள முடியாமல்.. ஒரு காதைப் பொத்திக் கொண்டு கேக்கை வெட்டினான் கௌதம்.

முதல் துண்டைத் திவ்யாவிடம் நீட்டியவனைக் கண்டு அனைவரும் முறுவலையும்,ஆர்வத்தையும் அடக்கிப் பம்மி நிற்க..

முகம் ஒரு நொடி சுருங்கினாலும்.. மாற்றிக் கொண்டு.. புன்னகைக்க முயன்றபடி அவன் தந்ததைக் கையில் வாங்கிக் கொண்டாள் திவ்யா.

விழிகளைப் பெரிதாக விரித்துத் தன் ஆச்சரியத்தைக் காட்டியவனைக் கண்டு கொள்ளாமல் அவள் கேக்கை விழுங்க.. ஜான்சியும்,ஜாக்கும் இது தான் சமயமென அவன் முகத்தில் கேக்கை அப்பினர்.

அவர்களிருவருக்கும் கேக்கை ஊட்டி, அவர்கள் ஊட்டியக் கேக்கையும் உண்ட படி நின்றவனைக் கண்ட ஜான்சி.. மெல்ல திவ்யாவின் அருகே சென்று.. ஒரு துண்டத்தை நீட்டி..

“நீங்க கௌதம்க்கு ஊட்டுறீங்களா திவ்யா?” எனப் பம்மியபடிக் கேட்க..

ஸ்லோ மோஷனில் திரும்பி.. அவள் தன்னைப் பார்த்த பார்வையில்.. பதறியடித்துப் பத்தடி தூரத்திற்கு ஓடியே விட்டாள்.

கேக் கட்டிங்கின் போது தென்பட்டவள் தான், அதன் பிறகு கௌதம், திவ்யாவைப் பார்க்கவில்லை.

நான்கு மணிக்கு மேல்.. மழை அடித்துப் பெய்யத் துவங்க.. காஃபி கப்போடு பான்ட்ரியில் அமர்ந்திருந்தவனைச் சந்தித்தார் ஷர்மாஜி.

“மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் கௌதம்”

வாழ்த்தியவரிடம் சிரித்தவன்..

“அட நீங்க வேற ஏன் சார்! இவனுங்க தான் கேக்,சாக்லேட்ன்னு சின்னப் பையன் மாதிரி ஃபீல் பண்ண வைக்குறானுங்கன்னா, நீங்களுமா?” எனக் கூற..

“நம்ம இன்டஸ்ட்ரீயோட ஸ்பெஷலே எல்லாரையும் எங்க்ஸ்டர்ஸாவே வைச்சிருக்கிறது தான் கௌதம்” என்று சிரித்தவரிடம்..

“அதுசரி” என்றான் அவன்.

வேலை சம்மந்தமாக அடுத்த சில நிமிடங்கள் உரையாடிக் கொண்டிருந்தவனிடம்.. அவர் தயங்கிபடி..

“ஹவ் இட் இஸ் கோயிங் பெட்வீன் யூ அன்ட் திவ்யா?” என்று வினவ..

பதிலின்றிச் சிரித்தபடிக் குனிந்தவனிடம்..

“வெறும் ஃப்ரண்ட்ஷிப் தானா கௌதம்? நான் தான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேனா?” என்றார் அவர்.

“இப்போதைக்கு எதுவும் சொல்றதுக்கில்ல சார்”

மழுப்பலாகப் பதிலளித்தவனிடம்..

“நான் பெருசா எக்ஸ்பெக்ட் பண்ணேன் கௌதம்! பட், திவ்யா ட்ரான்ஸ்ஃபர் இனிஷியேட் பண்ணினதைப் பார்த்தப்புறம், என் எக்ஸ்பெக்டேஷன் தேவையில்லாததோன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு” என்று அவர் கூற..

குழப்பத்துடன் அவரை நோக்கியவன் “என்ன ட்ரான்ஸ்ஃபர்?” என்று வினவினான்.

“உனக்குத் தெரியாதா?”

“என்ன?”

“திவ்யா நியூயார்க் ஆஃபிஸ்க்கு ரீ-லொகேஷன் ரெக்வஸ்ட் பண்ணியிருக்கா. அதுவும் இம்மீடியேட் ட்ரான்ஸ்ஃபர்”

“……………..” – உள்ளே ஓடி வந்த அதிர்வலையொன்று.. அவனை மொத்தமாகப் புரட்டிப் போட்டுச் செல்ல.. உள்ளத்தின் கலக்கம் முகத்தை எட்டி விடாதிருக்க.. அவன் போராடுவது தெரிந்தது.

“அல்ரெடி கம்பெனி சைட்ல இருந்து அவளை ட்ரான்ஸ்ஃபர் ஆகச் சொல்லி ரொம்ப நாளா கேட்டுட்டிருக்காங்க! ஒன் வீக் முன்னாடி, திடீர்ன்னு இவ கேட்டதும், உடனே ப்ராசஸ் பண்ணிட்டாங்க! மண்டேல இருந்து அங்க தான் ரிப்போர்ட் பண்ணப் போறா!”

“………….” – ஜன்னல் வழி வெளியே தெரிந்த மழையை வெறித்தபடி இறுகிப் போய் அமர்ந்திருந்த கௌதமின் மனதுக்குள் சண்டமாருதம்.

“கௌதம்.. என்னாச்சு?” – நொடிக்குள் அவன் முகம் கூம்பிச் சிறுத்துப் போனதைக் கண்ட ஷர்மா என்னவென்று வினவ..

வேக மூச்சுடன் ஒன்றுமில்லையெனத் தலையசைத்தவன் “சாரி! நான் கிளம்புறேன்.” எனக் கூறி விட்டு விறுவிறுவென எழுந்து நடந்தான்.

கையிலிருந்தக் காஃபி கப்பைத் தூக்கி விட்டெறியும் வேகம்.. நாடி நரம்புகளிலெல்லாம் தீவிரமாய்ப் பரவ.. சிங்கில் கப்பை எறிந்து விட்டு வெளியேறியவனைக் குழப்பத்துடன் பார்த்தார் ஷர்மா.

கோபம்,ஆத்திரம்,ரௌத்திரம் என அவனுக்குள் ஊறிய உஷ்ண ஹார்மோன்கள் கொடுத்த வெம்மையைத் தாங்க முடியாது மூளை மட்டும் உடலிலிருந்து கழண்டு கொள்ள.. சிந்திக்கும் திறனை முற்றிலுமாக இழந்தான் கௌதம்.

கண்ணில் படும் அனைத்தையும் அடித்து நொறுக்கி, கத்திக் கதறி.. உள்ளிருந்தக் கோபத்தை வெளியே துப்பி விட.. உடல் பரபரக்க… ரௌத்திரத்தில் நடுக்கம் கண்டக் கரங்களை அடக்க முடியாமல்.. தன் கார்க் கதவை முழு வேகத்துடன் இழுத்துத் திறந்தான்.

வேகத்தடைகளையெல்லாம் கணக்கில் கொள்ளாமல்.. சீறிக் குலுங்கிப் பாய்ந்த வாகனம்… அவனது கோபத்தின் பிடியில் சிக்கி,சின்னாபின்னமாக..

சிரிப்புடன் தன்னை அன்று காலை எதிர் கொண்டவளின் முகம் கண்ணில் தோன்றி… வெறுப்பைக் கிளப்பியது.

சிரிப்புக்குப் பின் சீற்றத்தை வைத்திருந்திருக்கிறாள்! படுபாவி!

அவள் விலகுவதையும்,ஒதுங்குவதையும் பொறுத்துக் கொள்ள முடிந்தவனால்.. அவன் கண்ணில் படாத தூரத்தின் பின்னே ஒளிந்து கொள்ள நினைப்பவளின் எண்ணப்போக்கை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

வேலையை விட்டு,ஊரை விட்டு உன்னை ஓட வைப்பேன் என்று அவனை மிரட்டி விட்டு.. என்ன எழவிற்காக.. இப்போது இவள் ஓடுகிறாளாம்!

ராட்சசி! ரத்தக் காட்டேரி! காட்டுப்பூனை!

அப்படியென்ன அவளை மீறி நடந்து விடப் போகிறது?, அப்படி என்ன செய்து விடப் போகிறான் அவன்! அவளது எண்ணம் தான் என்ன?, அதன் போக்கு தான் என்ன?

தைரியமும்,திமிருமாய் கெத்து காட்டுபவளிடமிருந்து.. எதற்காக இப்படியொரு செய்கை?, என்ன அர்த்தமாம் இதற்கு?

குழப்பமும்,கோபமுமாய் கேள்வி கேட்ட மனதுக்குப் பதில் கூற முடியாமல் திணறி… அதி தீவிரமாய் காரைச் செலுத்திக் கொண்டிருந்தவனை அந்தக் காட்டுப்பூனையே அழைத்தது.

கோபத்தில்.. பல்லைக் கடித்தபடிக் கண் முன்னேயிருந்த பட்டனை அழுத்தினான்.

காருடைய ப்ளூ டூத்துடன் ஃபோன் இணைக்கப்பட்டிருந்ததால்.. மூடியிருந்தக் காருக்குள்… அவளது குரல்.. ஹ-டெசிபலில் ஒலித்தது.

“வேர் ஆர் யூ கௌதம்..”

“……………”

“மீட்டிங் அட்டெண்ட் பண்ணலயா நீ? க்ளையண்ட்ஸெல்லாம் வெய்ட் பண்ணிட்டிருக்காங்க”

“…………..”

“கௌதம்…”

“ட்ரான்ஸ்ஃபர் இனிஷியேட் பண்ணியிருந்தீங்களா?” – மூச்சுக்காற்றின் சீற்றம்,குரலைப் பாதிக்க.. அடிக்குரலில் ஆங்காரமாய்க் கேட்டவனுக்குப் பதில் கூறாமல் ஒரு நொடி அமைதியாய் இருந்தாள் அவள்.

“கேள்வி கேட்டா, பதில் சொல்லுங்க”

“தட் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸினெஸ் கௌதம். நீ ஏன் மீட்டிங் அட்டெண்ட் பண்ணலன்னு நான் காரணம் கேட்டுட்டிருக்கேன். அதுக்கு பதில் சொல்லு முதல்ல?”

“நன் ஆஃப் மை பிஸினெஸ்! ஹ்ம்ம்ம்” – நக்கலாய்ச் சிரித்தபடி தலையாட்டியவனின் குரலில் என்ன உணர்ந்தாளோ..

“எங்க இருக்க நீ இப்போ?” என்றாள்.

“உன் வீட்டுக்குத் தான் வந்திட்டிருக்கேன்”

“கௌதம், முட்டாள்தனமா பிஹேவ் பண்ணாத”

“என்னை முட்டாளாக்கத் தான நீ இப்படியெல்லாம் பண்ற?”

“கௌதம். ஜஸ்ட் ஸ்டாப் யுவர் நான்சென்ஸ். உன் பர்சனல் இஷ்யூஸ்க்காக வேலைல அசால்ட்டா இருப்பியா நீ? நீ பண்ணிட்டிருக்கிற ப்ராஜெக்டோட வேல்யூ தெரியுமா உனக்கு?, கம்பெனி எவ்ளோ இன்வெஸ்ட் பண்ணியிருக்கு தெரியுமா? எத்தனை பேர் இதுல இன்வால்வ் ஆயிருக்காங்க தெரியுமா? உன் இஷ்டத்துக்கு நீ நடந்துக்கிட்டா கம்பெனி.. உன் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிடும்! இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்”

“தள்ளட்டும்! சொல்லப் போனா, எனக்கு அப்படியெல்லாம் நடக்கனும்ன்றது தான உன் ஆசை?”

“கௌதம்ம்ம்ம்ம்”

“கதவைத் திற”

“………….”

“உன் வீட்டு வாசல்ல நிற்குறேன். கதவைத் திற”

முழு மூச்சாகக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையை சற்றும் பொருட்படுத்தாமல்.. நனைந்து கொண்டு.. அவள் வீட்டு வாசலில் நின்றவனை.. ஜன்னல் வழி நோக்கிய திவ்யாவுக்குக் கோபம் தலைக்கேறியது.

“பெரிய ஹீரோவா டா நீ?, கொட்டுற மழைல சீன் காட்டுறியா?, மரியாதையா இங்க இருந்து போயிடு.”

“கதவைத் திறடி”

“முடியாது டா”

“நீ திறக்குற வரை நான் இங்கயே தான் நிப்பேன்”

“………….”

“எதுக்குடி இந்த ட்ரான்ஸ்ஃபர்?, ம்ம்?, எதுல இருந்து ஓடப் பார்க்குற? யார் கிட்ட இருந்து ஓடப் பார்க்குற?, என் கிட்ட இருந்தா?, அப்டின்னா.. நான் உன்னை பாதிக்குறேனா?, நான் அப்படித் தான் அர்த்தம் பண்ணிக்கப் போறேன்”

“இங்க இருந்து போ கௌதம்” – நறநறத்தப் பற்களுடன் அடிக்குரலில் எச்சரித்தாள் அவள்.

“ஆமா-ன்னு ஒத்துக்கோ!”

“……………..”

“இவ்ளோ தான் உன் தைரியத்தோட அளவா?, ஓடி ஒளியுறது தான் உன் வழக்கமா?”

“வாயை மூடுடா ராஸ்கல்”

“என்னை ஃபேஸ் பண்ணு! என் முகத்தைப் பார்த்துத் திட்டு! கோழை மாதிரி கதவுக்குப் பின்னாடி நின்னு.. என்னை விரட்டாத”

“நான் கோழையாவே இருந்துட்டுப் போறேன். நீ இங்க இருந்து போ முதல்ல”

“திவ்யா….” – முகத்தில் வழிந்த மழை நீரைத் துடைத்தபடி கோபத்தில் கத்தினான் கௌதம்.

“உனக்கும்,எனக்கும் செட் ஆகாது கௌதம்”

“அதனால தான் ஓடப் பார்க்குறியா?”

“நான் ஒன்னும் உனக்குப் பயந்து ஓடல! திரும்பத் திரும்ப அதையே சொல்லாத”

“அப்டின்னா.. கதவைத் திற”

“திறக்க முடியாது டா” – தானும் பதிலுக்குக் கத்தியவளிடம்..

“நீ திறக்காம.. நான் இங்க இருந்து போகப் போறதில்ல” - என்றவனின் பார்வை.. ஜன்னல் திரைக்குப் பின்னே தெரிந்தவளின் முகத்தை நோக்கி நீண்டது.

பாவாடை,சட்டையுடன்.. காதில் ஃபோனை வைத்துக் கொண்டு.. அதீத கோபத்தில் புருவம் சுருங்க நின்றவளைக் கண்டு..

“என்ன நினைச்சு ஊரை விட்டுப் போறீங்க?, ஒரேடியா இவனைத் தலை முழுகிடலாம்ன்னா?” – என்று கரகரத்தக் குரலில் வினவினான்.

“……………….”

“அது அவ்ளோ ஈசின்னு நினைச்சீங்களா? இல்ல, நான் அவ்ளோ சீக்கிரம் உங்களை விட்டுடுவேன்னு நினைச்சீங்களா?”

“…………….”

“ஒரு லவ் ஃபெயிலருக்கு அப்புறம், உங்க பின்னாடி சுத்த ஆரம்பிச்ச மாதிரி, உங்களுக்கப்புறமும் எவ பின்னாடியாவது போய்டுவேன்னு நினைச்சீங்களா?”

“……………….”

“அவளை சுலபமா மறக்க முடிஞ்சது. உங்களை அப்படிக் கடந்து போக முடியும்ன்னு எனக்குத் தோணல”

“……………”

“இது லஸ்ட் இல்ல. இந்த நிமிஷம் நான் கன்ஃபார்ம் பண்றேன்”

“………..”

“கதவைத் திறங்க.”

“………..”

“பொண்ணுக்காக.. குளிரில் நடுங்கிச் செத்துப் போன இளைஞன்னு எனக்குப் பேர் வாங்கிக் கொடுத்துடாதீங்க”

இருளும்,மழையும்,குளிரும்.. அவன் உடலை ஐஸ்கட்டியாக்கி.. செல்களை உறையச் செய்ய… நடுங்கிய உதடுகளுடன்.. தந்தியடித்தவனை.. அவசரமாய் ஜன்னல் வழி நோக்கியவள்..

அதீத குளிரைத் தாங்காது ஆடிப் போய் நிற்பவனைக் கண்டுப் பதறி.. வேகமாக ஓடி வந்துக் கதவைத் திறந்தாள்.

கட்டையாக நின்ற கால்களை சிரமப்பட்டு அசைத்து.. அவள் வீட்டுக்குள் நுழைந்தவன்.. சுவரோரமாய் சாய்ந்தபடி.. நனைந்து..நமத்துப் போய் வெடவெடத்தக் கைகளை இறுக்கி… நடுக்கத்தை நிறுத்த முனைய..

அவன் நின்ற கோலத்தைக் கண்டுப் பயந்து போன திவ்யா…

“எ..என்ன பண்ணுது கௌதம்? அறிவிருக்கா? அப்படி என்னப் பிடிவாதம் உனக்கு?” என்று கத்தியபடி.. என்ன செய்வதெனப் புரியாமல் பார்த்துக் கொண்டே நிற்க..

நடுங்கிய கரங்களை உயர்த்தி.. அணிந்திருந்த ஜாக்கெட்டைக் கழட்டி வீசியவன், ஷூவையும்,சாக்ஸையும் கழட்டியபடி..

“வேடிக்கை பார்த்துட்டே நிற்பீங்களா?, டவல் கொண்டு வாங்க போங்க” என்று எரிச்சலுடன் விரட்டவும்.. நினைவு வந்தவளாக.. ஓட்டமாக ஓடிச் சென்று டவலுடன் வந்தாள்.

ஈரமாயிருந்தக் கைகளைத் துடைத்துப் பின்.. நனைந்து போயிருந்தத் தலையை அவன் துடைக்க.. செய்வதறியாது கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.

காதில் புகுந்திருந்தக் குளிர் காற்று.. கண்ணில் நீரை வரவழைக்கவும்.. துடைத்தபடி அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு.. பதறிப் போன முகத்துடன் தன்னையே பார்ப்பவளைக் கண்டு சிரிப்பு வர..

“பாண்ட் நனைஞ்சிடுச்சு. கழட்டனும். கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பிக்கிறீங்களா?, இல்ல,முடியாதுன்னு சொன்னீங்கன்னாலும் எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்ல” எனச் சிரிக்காமல் கூறினான்..

திடுக்கிட்டு அவன் முகம் பார்த்தவள்… அதிர்ச்சியுடன் தன்னை நோக்குவதைக் கண்டு வாய் விட்டுச் சிரித்தவன்..

“போய் ரூம் ஹீட்டரை ஆன் பண்ணுங்க ப்ளீஸ்” என்றான்.

அவன் சொன்னபடி செய்து விட்டு முன்னே வந்து நின்றவளிடம்..

“இன்னொரு டவல் வேணும்” என்றான்.

உடனே எடுத்துக் கொண்டு வந்தாள். இன்னும் என்ன வேண்டும் என்கிற முக பாவத்துடன் நின்றவளின் கண்களில், குற்றம் செய்து விட்டக் குறுகுறுப்பிருப்பதைக் கண்டவன் மீண்டும்..

“ஒரு கப் டீ குடிக்கனுமே” என்றான்.

சலிக்காமல் அதற்கும் சரியென்று தலையாட்டியவள்.. அடுப்படியை நோக்கி நகர்கையில்…

“அதுக்கு முன்னாடி இன்னொன்னு வேணும்” எனக் கூறி நிறுத்தினான்.

என்னவென்பது போல் பார்த்தவளிடம்..

“பக்கத்துல வாங்க” என்றான்.

புருவம் சுருங்க அருகே வந்து நின்றவளைத் தலை சாய்த்து ஒரு நொடி நோக்கியவன்.. பின் அவள் வலது கையைப் பற்றியிழுத்துத் தன்னோடு சேர்த்து.. இறுக அணைத்துக் கொண்டான்.

நொடியில் உடல் முழுக்க.. சூட்டைப் பரப்பியவளின் ஸ்பரிசம் செய்த மாயம்.. இதத்தின் இறுதியாகத் தோன்றியது அவனுக்கு.

அவன் செய்கையை எதிர்பாராது.. நடுக்கமும்,தடுமாற்றமுமாய்.. விலகப் பார்த்தவளைத் தடுத்து… அவளைத் தூக்கி.. தன் சில்லிட்ட பாதங்களின் மேல் நிறுத்தியவன்.. அவள் தோளில் முகத்தை அழுந்தப் புதைத்துக் கொண்டான்.

அவன் முகத்திலிருந்த சில்லிப்பு.. சிலிர்ப்பாய் அவள் உடலெங்கும் ஓடியது.

கூசி எழும்பிய.. அவள் சருமத்தின் மென்மை… சாந்தத்தைக் கொடுக்க.. கண் மூடி வாகாக சாய்ந்து கொண்டான் அவன்.

“மறுபடி நீ தப்பு பண்ற கௌதம்” – கலக்கத்தையும்,தயக்கத்தையும் ஏந்திக் கரகரத்து வந்தது அவள் குரல்.

“கட்டிப்பிடிக்கிறது தப்புன்னு யார் சொன்னது?”

உராய்ந்த அவன் உதட்டின் ஈரத்தை உள் வாங்க முடியாமல்.. நடுங்கியவள்..

“விடு கௌதம்” என்று அழுத்தமாய்க் கூற..

கண்டு கொள்ளாமல்.. தன் அணைப்பை அதிகப்படுத்தினான் அவன்.

அவனை உதறித் தள்ளி விட்டு உள்ளே ஓடி விடும் வேகம் அவளுக்கு. பல்லைக் கடித்துக் கொண்டு சகிக்கத் தோன்றவில்லை. கண் மூடி ரசிக்கவும் முடியவில்லை.

இவ்வனைத்தையும் விட்டு.. இவனை விட்டு.. ஓடி ஒளிந்து விட வேண்டுமென்கிற எண்ணம் மட்டும் மேலோங்கியது.

ஆனால் அது சாத்தியமேயில்லை என்பது போல் அடுத்தடுத்து அவன் குரல் ஒலித்தது.

“லஸ்ட் இல்லன்னா, வேற என்னன்னு நீங்க கேள்வி கேட்கவேயில்ல?” -கௌதம்

“……….”

“வெறும் காமமா இருந்திருந்தா.. மனசு உங்களுக்காக.. இவ்ளோ தவிக்காது,ஏங்காது”

“………..”

“உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க.. நாய் மாதிரி பின்னாடி அலைஞ்சது.. இயல்பா இருங்கன்னு உங்க கூட போராடுனது.. உங்களைப் பத்தி தப்பா பேசுனதுக்காகக் கூட இருக்குறவன் சட்டையைப் பிடிச்சது.. ஷர்மாவோட சண்டை போட்டது, அவர் வைஃப் கிட்டக் கை ஓங்குனது.. இதெல்லாம் லஸ்ட் கேட்டகரில வராது”

“…………….”

“உங்கக் கோபம்,கண்ணீர்,சிரிப்பு,சந்தோஷம்.. அத்தனையும்.. இதயத்தை பாதிக்குது, மூளையை மழுங்கடிக்குது. சண்டித்தனம் பண்ண வைக்குது, பிடிவாதம் பிடிக்க வைக்குது.”

“…………..”

“உங்களை மாதிரி நானும்.. செய்யுற வேலையைப் பெருசா நினைக்கிற ஆளு தான்! ஆனா.. உங்க முன்னாடி.. வேலையெல்லாம் பெருசாத் தோணவே மாட்டேங்குது”

“……………….”

“தூங்குற நேரம் தவிர.. ஒவ்வொரு நொடியையும் உங்களைப் பத்தின சிந்தனைகளோட தான் கடத்துறேன்.”

“…………”

“நான் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்ட காத்ரீனா.. என் மூளைல எந்தக் கடைசிக்குப் போய்ட்டா-ன்னு கூடத் தெரியல”

“……………..”

“என்னை விட 4 வயசு முன்னாடி பிறந்த பெரிய பொண்ணா.. உங்களைப் பார்க்கவே முடியல. என் கைக்குள்ள அடங்குறீங்க. கன்னத்துக்குள்ள என்னை அடக்குறீங்க! உங்களை எப்படித் தள்ளி நிறுத்த முடியும் என்னால?”

“…………..”

“திவ்யா…”

அவன் சட்டையிலிருந்த ஈரம் இடம்பெயர்ந்து விட்டதாலோ என்னவோ.. அறைக்குள்ளிருந்த உஷ்ணத்தை மீறி.. உறைந்து போய் நின்றவளின் முகம் பற்றி நிமிர்த்தினான் கௌதம்.

நேர் கொண்டு பார்க்கும் நேர்த்தியைத் தொலைத்திருந்த அவள் விழிகள்.. அவன் முகத்தைத் தீண்டாமல்.. எங்கோ பதிந்திருக்க.. அவள் முகத்தை அசைத்துத் தன் புறம் திருப்பினான்.

முன்னே நின்ற மூக்கில்.. மெல்ல இதழ் பதித்து அவன் நிமிர்கையில்.. அவள் விழிகளில் மயக்கத்தைத் தாண்டியக் கலக்கம் சூழ்ந்திருந்தது.

“ஒரே அட்டெம்ப்ட்ல சொல்லிட்றேன். என்ன சொன்ன, திரும்ப சொல்லுன்னு கேட்டு நீங்க கோபப்படக்கூடாது. “

மெல்ல விழிகளை உயர்த்தி அவனை நோக்கினாள். பூனைக் கண்களில் கலந்து.. நிறைந்திருந்த கௌதமின் நிறம்.. பழுப்பாகியிருந்தது.

“லைஃப் எந்த நிமிஷம்,எதைக் கொடுக்கும்,எதை எடுத்துக்கும்ன்னு தெரியாது. அதனால.. ஒவ்வொரு நொடியையும், நமக்குப் பிடிச்ச மாதிரி.. அனுபவிச்சு வாழ்ந்துட்டா.. ரெக்ரெட் இல்லாம.. எப்ப வேணா செத்துப் போகலாம்”

“…………….”

“இந்த டயலாக் உங்களுக்கு.”

“……………”

“நான் சொல்ல வந்தது இது இல்ல”

இமைக்காமல்.. அவன் விழிகளையே நோக்கினாள் அவள்.

“கண்ணை மூடுங்க”

புருவத்தைச் சுருக்கியவளிடம்…

“உங்கக் கண்ணைப் பார்த்து சொல்ல முடியும்ன்னு தோணல. அதான், கண்ணை மூடுங்க”

நொடியில் கலக்கம் கரைந்து.. முற்றிலும் மயக்கம் நிறைந்த அவள் கண்கள்.. இமைக்கும் நொடிகளைக் கூட வீணாக்க விரும்பாமல்.. அவன் மீதே படிந்திருக்க..

“இப்படிப் பார்த்தா.. எப்படி சொல்றது” என்று முணுமுணுத்தவன்...

அவள் அசையாது பார்ப்பதை உணர்ந்து… அவளை அணைத்திருந்தக் கரங்களில் அழுத்தத்தைக் கூட்டி.. அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“நான் முத்தம் கொடுக்கும் போது.. தடுக்காததை நினைச்சு.. உங்க மேல நீங்களே பழி சொல்லிக்கிட்டு இனி அழாதீங்க. முடியாதுன்னு நினைச்சீங்கன்னா.. இனி காலம் முழுக்க அழ வேண்டியிருக்கும். ஏன்னா.. நான் முத்தம் கொடுக்குறதை என்னைக்கும் நிறுத்தப் போறதில்ல.

என்னை அவாய்ட் பண்ணி நீங்க மார்ஸ்க்கு மாற்றல் வாங்கிட்டுப் போனாலும்.. நான் உங்க பின்னாடியே தான் வரப் போறேன். அதனால, தேவையில்லாம இனியும் ஓடப் பார்க்காதீங்க.

இனி நீ தான் நான். நான் தான் நீ –ன்ற பந்தத்துக்குள்ள.. நாம ரெண்டு பேருமே சிக்கிடனும்ன்றது என் ஆசை. புரியுதா உங்களுக்கு?

மூளை,மனசு மட்டுமில்ல. கல்லீரலும்,கணையமும் கூட என் ஃபீலிங்க்ஸ்க்கு பேர் வைச்சிடுச்சு” என்று கூறிக் குனிந்து…

சிலையாய் நின்றவளின் கன்னத்தில் இதழ்களை அழுந்தப் பதித்து.. அதன் மென்மையை ரசித்து.. விழி மூடி.. அவள் நெற்றி முட்டி…

“ஐ லவ் யூ” என்றான்.