அத்தியாயம் - 3

கண்ணன் முகம் கண்ட கண்கள்.. மன்னர் முகம் காண்பதில்லை..

கண்ணனுக்குத் தந்த உள்ளம்.. இன்னொருவர் கொள்வதில்லை..

கண்ணன் வரும் நாளில்.. கன்னி இருப்பேனோ.. காற்றில் மறைவேனோ...

நாடி வரும் கண்ணன்.. கோல மணி மார்பில்..

நானே.. தவழ்ந்திருப்பேன்..

ளவுகோலை வைத்து வரையப்படும் கோட்டின் நீளம்.. வளைவு,நெளிவுகளின்றி எத்தனைத் துல்லியமாக இருக்குமோ.. அது போலத் தான் பி.சுசீலாவின் குரலும். எத்தனைத் திருத்தம்,அழுத்தம்! உணர்வு மிக்க உச்சரிப்பின் உயிர் நாடியை அசாதாரணமாகத் தொண்டைக்குழிக்குள் வைத்துக் கொண்டு.. ஆர்ப்பாட்டமின்றி.. அனாயசமாகப் பாடுபவரை.. என்ன தான் செய்ய? கட்டிப்பிடித்து முத்தம் தருவதைத் தவிர!

பி.சுசீலா என்றதும்... ‘சொன்னது நீ தானா, அத்தான் என் அத்தான், அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’-என என் வலது மூளையும்,இடது மூளையும் மாற்றி மாற்றி அளித்தப் பரிந்துரையைத் தாண்டி மனம் மட்டும்.. கங்கைக்கரைத் தோட்டத்தின் அழகில் கொள்ளை போய் விட்டது.

கண்ணன் – என் காதலன்! கண்ணன் – என் ஆண்டான்! கண்ணன் – என் அரசன்! மையலைக் கடந்து.. பக்தியைத் தாண்டி.. முழுமையாக.. முற்றிலுமாக.. கண்ணனிடம் சரணாகதி அடைந்து விட்ட நிலை! பரிபூரண சமர்ப்பணம்!

பொறாமை,காதல்,ஏக்கம்,ஆசை,அழுகையென.. கண்ணதாசனின் கை விரல்களில் நகரத் தொடங்கிய உணர்வுகள் அத்தனையும்.. தங்களுக்கெனப் பொருத்தமான இடத்தைப் பிடித்தது தேவிகாவின் முகத்தில் தான்!

இசை,குரல்,வரிகள் அதற்கு இணையாக ஈடு கொடுக்கும் முகம் என அத்தனையும் கட்சிதமாக அமைந்த அழகான பாடல் இது!

பாடல்: கங்கைக்கரைத் தோட்டம்..

இசை: கே.வி.மகாதேவன்.

லோ... கௌதம்.. நான் கெவின் ஜேகப்.”

-சிரித்த முகமாகத் தன்னிடம் கை குலுக்கியவனிடம் பதிலுக்கு முறுவலித்த கௌதம் “தெரியும். நான் இண்டர்வியூ வந்திருந்தப்போ லாராவோட இருந்தீங்க தானே நீங்க?” எனக் கூற.. “யெஸ்,யெஸ்! பரவாயில்லயே! ஞாபகம் வைச்சிருக்கீங்க?” என்று விட்டு.. “ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டீங்களா?” எனக் கேட்டான் ஜேகப்.

“ஆச்சு” என முறுவலித்தவனிடம் “ஓகே! இங்க உட்காருங்க. பத்து நிமிஷத்துல மேனேஜரை மீட் பண்ணலாம்” எனக் கூறி விட்டு நகர்ந்தான்.

கையில் செல்ஃபோன் இல்லாதது.. கையே இல்லாததைப் போன்ற உணர்வைக் கொடுக்க.. மறுபடியும் காத்ரீனாவின் புறம் பறக்கவிருந்த மனதின் சிறகை ஒடித்து.. சுற்றிலும் பார்வையைத் திருப்பினான் கௌதம்.

அவன் லிஃப்ட்டின் அருகே கண்ட அந்த லாவண்டர் மங்கைகளில் முதலாமவள் அவன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வருவது தெரிந்தது.

அறியாமல் கூட அவன் புறம் கருமணிகள் சென்று விடக் கூடாதென்கிற முடிவுடன் நேராகப் பார்த்தபடி நடந்து வந்தவளைக் கண்டவனின் பார்வை இன்னும் ‘ஆராய்ச்சி’ மோட்-ஐ விட்டு வெளி வரவில்லை.

அவனுக்கு எதிர்ப்புறமிருந்த க்யூபிகிலில் அமர்ந்தவளிடம் “குட்மார்னிங் ஜான்சி”என்றபடி அருகே சென்ற ஜேகப் “என் மேசேஜ் கிடைச்சதா?, நேத்து நீ ஜெனரேட் பண்ண ரிப்போர்ட்ல டேட்டா லோட் ஆக மாட்டேங்குது. சீக்கிரம் செக் பண்ணு. பதினோறு மணிக்கு கஸ்டமர் மீட்டிங் இருக்கு. அதுக்குள்ள சரி பண்ணாட்டி டிஷ்யூம் நம்மைச் சும்மா விடாது! ப்ளீஸ் வர்க் ஆன் திஸ் ஆன் ப்ரையாரிட்டி” என்று கடகடவெனக் கூற.. கலங்கிப் போய் அவன் முகம் பார்த்தவள்..

“நேத்து நல்லாத் தானே ரன் ஆச்சு?, நீங்க எப்போ டெஸ்ட் பண்ணீங்க?” எனக் கேட்டு விட்டு மெல்லிய குரலில் “டிஷ்யூம் சீட்-க்கு வந்தாச்சா?” என்றாள்.

அவனும் பதிலுக்கு மெல்லிய குரலில் “மேடம் ப்ரேக் ஃபாஸ்ட்ல பிஸியா இருக்காங்க. அது போக, இன்னிக்கு டீம்-ல புதுசா ஒரு பெரிய தலை ஜாயின் பண்ணுது! அவரோட எப்படியும் அரை மணி நேரமாவது மொக்கை போடுவாங்க! நாம அதுக்குள்ள இந்தப் பிரச்சனையை ஃபிக்ஸ் பண்ணிடலாம்! கோட்-ல பிரச்சனையா? இல்ல பேக் எண்ட் இஷ்யூவான்னு முதல்ல பாருங்க” எனக் கூறிய நொடி.. அவனது டெஸ்க் ஃபோன் அலற..

அதில் திவ்யா.எஸ் என ஒளிர்ந்த பெயரைக் கண்டு “ஓ காட்! அதுக்குள்ள வந்துட்டாங்க போலயே” எனப் பதறியவன் “ஜான், ப்ளீஸ் டேக் கேர்” என்று கூறி விட்டு ஓடிச் சென்று ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தான்.

“குட் மார்னிங் திவ்யா, எஸ் திவ்யா, ஓகே திவ்யா, ஷ்யூர் திவ்யா” என்றவன் ஃபோனை வைத்து விட்டு இவன் புறம் திரும்பி..

“கௌதம், மேனேஜர் வந்தாச்சு. போலாமா?” எனக் கேட்க “சரி” என்றபடி எழுந்தான் அவனும்.

நகத்தைக் கடித்துக் கொண்டு..சுற்றுப்புறம் மறந்து.. சுருக்கியப் புருவங்களுடன் கீ-போர்டையும்,மானிட்டரையும் இஷ்டத்துக்கு இயக்கிக் கொண்டிருந்தவளின் அருகே சென்று பிரச்சனை என்னவெனப் பார்க்கத் துடித்தத் தன் கணினி அறிவின் தாகத்தைத் தீர்க்க முடியாமல் ஜேகபின் பின்னே சென்றான் கௌதம்.

ந்தச் சிறிய மீட்டிங் அறைக்குள் நுழைந்த ஜேகப்பைத் தொடர்ந்துத் தானும் உள்ளே சென்ற கௌதம் முதலில் உணர்ந்தது ஒரு அமானுஷ்ய உஷ்ணத்தைத் தான்.

அமானுஷ்யம் தான்! ஏசி அறைக்குள் உஷ்ணம் எப்படி சாத்தியம்?

சாத்தியம் தான் என்று நிருபிக்க வேண்டி... தன் உள்ளங்கைக்குள் நெரி பட்டுக் கொண்டிருந்த மௌஸின் கீழ் அந்த ஒட்டுமொத்த அறையின் நீள,அகலத்தையும் அடக்கிக் கொண்டு.. மடிக்கணினியின் திரையை வெறித்தபடி.. நிச்சலனமான முகத்துடன் அமர்ந்திருந்தாள் அவள். லாவண்டர் நம்பர் 2.

கதவு திறக்கப்படும் சத்தத்திற்குப் பதிலாய், உயர்த்திய புருவங்களுடன் நிமிர்ந்தவளின் கண்மணிகளிரெண்டும் ப்ரௌன் நிறத்திலிருந்தது.

பூனைக் கண்கள்! அதிலும் காட்டுப் பூனையின் கண்கள்!

சீரியல் வில்லியின் விழியைப் போல ஒரு சீற்றமான பளபளப்பு அதில்!

அவனைக் கண்டதும் வரவேற்பாகத் தாடையைத் தூக்கி இறக்கியவளின் தலையில் நறுக்கெனக் குட்டு வைத்து விடும் வேகம் அவனுக்கு!

அணிந்திருக்கும் ஹீல்ஸைக் கழட்டினால்.. ஐந்தடி உயரத்தைக் கூட எட்ட மாட்டாள்! இன்னாத்துக்கு இதுக்கு இத்தினி சீனு! – என்பது தான் அவனது எண்ணம்!

நடு முதுகைக் கூட எட்டியிராத நான்கே அடிக்கூந்தல் இப்போதுக் கொண்டையிலிருந்து விடுபட்டுத் தோளில் வழிந்து கொண்டிருந்தது.

மாநிறத்திலிருந்தவளது இதழ்களில் ப்ரௌன் நிற லிப் க்ளாஸ் அழுத்தமாய்ப் படர்ந்திருந்தது.

தலை முதல் நுனி வரை அவளைக் காண்போரின் கண்களுக்கு அவள் கொடுக்கும் அதிர்விற்குச் சற்றும் சம்மந்தமில்லாமல்.. அவள் மேனி முழுதிலும்.. மென்மையாய்ப் பரவியிருந்தது அவள் அணிந்திருந்த பர்ஃப்யூம். முரண்பாடு!

தன் கண் முன்னால் ஒருவன் தன்னை அளவிடும் பார்வையுடன் நிற்பது அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை போலும்!

“டேக் யுவர் சீட்ஸ்” – என்றாள் இருவரையும் நோக்கி.

செய்து கொண்டிருக்கும் வேலையை முடித்து விடும் நோக்கத்தோடுத் தன் விரல்களைக் கீ போர்டில் பதித்திருந்தவளை அவளருகிலிருந்த டெலிஃபோன் அழைத்தது.

ஒட்ட வெட்டப்பட்டிருந்த அவளது நகங்களைக் கௌதம் பார்வையிடுகையிலேயே.. தன் ஐவிரல்களால் ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தாள் அவள்.

எதிர்ப்புறம் என்ன கூறியதோ...

“நோ எக்ஸ்க்யூஸ் சுனில். இதற்கு மேல் இதைப் பத்திப் பேச எதுவுமில்ல” – புருவங்களை நெரித்துக் கொண்டு.. மூக்கு விடைக்கப் பதிலளித்தாள்.

“.................”

“உங்களுக்கு ப்ராசஸ் தெரியாதுன்னா அதைப் பத்தி சொல்லிக் கொடுக்க நான் தயாரா இருக்கேன்! ஆனா இங்க அப்படி இல்ல. உங்களுக்கு எல்லாமே நல்லாத் தெரியும். ஆனாலும் நீங்க ஃபாலோ பண்ணல. ஃபாலோ பண்ண மனசில்ல. நமக்கு ரூல்ஸ் போடுற அளவுக்கு இவங்க என்ன பெரிய ஆளுன்ற எண்ணம். ரைட்??”

“..........”

“யூ ஹேவ் பீன் ஹேக்ட் சுனில். யூ நோ வாட் இஸ் ஹாக்கிங்?”

“........................”

“நீங்க என்னோட சூழ்நிலையிலிருந்து யோசிச்சுப் பார்க்கனும். இந்தத் தப்பு ஏன் நடந்ததுன்னு கஸ்டமர் என் கிட்டக் கேள்வி கேட்டா.. நான் என்ன பதில் சொல்லட்டும்?”

“...............”

“டெல் மீ சுனில்”

“..............”

“நான் என்ன பதில் சொல்லனும்ன்னு நீங்களே நல்லா யோசிச்சு இன்னைக்குள்ள எனக்குப் பதில் சொல்லுங்க. இப்போ என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க”

-அடித்தொண்டையிலிருந்து அழுத்தமாய்க் கிளம்பி.. ஆளுமையுடன் ஒலித்த அவளது குரலை சகித்துக் கொள்ளவே முடியவில்லை கௌதமினால்.

பெண்களைக் குறைத்து மதிப்பிடுபவனல்ல அவன். ஆனால்.. தோற்றத்திலும்,அணுகுமுறையிலும் நூற்றுக்குப் பூஜ்ஜியத்தை எட்டுவதற்குக் கூட அவளுக்குத் தகுதியில்லை என நிச்சயமாக நம்பினான்.

மோசமான பாஸ்-களுடன் அவன் அதிக காலம் தங்கியதில்லை! பார்ப்போம்! என்ற நினைப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஃபோனை வைத்து விட்டு.. லேப்டாப்பில் வேலையையும் முடித்து இவர்களிருவரின் புறம் திரும்பினாள் திவ்யா.

“டெல் மீ ஜேகப்! கௌதமுடைய ஆன் போர்டிங் ப்ராசஸ் எல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?”

“தி...தி..திவ்யா” – தந்தியடிக்கத் தொடங்கியப் பற்களுடன் உதட்டை லேசாக ஈரப்படுத்திக் கொண்ட ஜேகப்..

“இவர் வந்து அரை மணி நேரம் கூட ஆகல” என்றான்.

“சோ வாட்?” –தோளை விரித்தவளிடம்..

“இல்ல, உங்களை மீட் பண்ணப்புறம் ஆரம்பிக்கலாம்ன்னு....” – என இழுத்தவனைக் கண்டு..

கையைக் கட்டிக் கொண்டு இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள் அவள்.

ஜென்ம,ஜென்மமாக ஜேகப்புடன் பகை கொண்டிருப்பவள் போல.. வன்மத்தை விழிகளில் தேக்கி நோக்கினாள் அவனை.

முகத் தசைகள் ஒன்றில் கூட அதிர்வில்லை. கண்கள் மட்டும் உணர்ச்சிகளைத் தீயாய்க் கொப்பளித்தது.

பாவம் ஜேகப்!சருகாய் நொடியில் தீய்ந்து போனான்!

“இ..இப்போவே ஸ்டார்ட் பண்றேன் திவ்யா” – அவசரமாய்ப் பதிலளித்தான்.

தலையை இருபுறமும் ஆட்டி மறுத்தவள்..

“ப்ராஜக்ட் என்ன சிச்சுவேஷன்ல இருக்குன்றதை நல்லாத் தெரிஞ்சு வைச்சிருக்கிற ரெண்டே பேர் நீங்களும்,நானும் தான். இல்லையா ஜேகப்?”

“ஆமா....ம்”

“அடுப்புல எண்ணெயைக் கொதிக்க வைச்சிட்டு சமைக்கப் பதார்த்தம் தேடிட்டிருக்கான் நம்ம க்ளையண்ட். அவனுக்குத் தேவைப்பட்றதை ரெடிமேட்-ஆ நீட்ட எத்தனை பேர் காத்திட்டிருக்காங்க தெரியுமா? இண்டஸ்ட்ரீல இருக்குற காம்பெடிஷன் பத்தி தெரியாது உங்களுக்கு?, இன்னும் ஒரே வாரத்துல ப்ளானை நாம ப்ரசண்ட் பண்ணனும். இவர் ஜாய்ன் பண்ற நொடியில இருந்து வேலையை ஆரம்பிக்கனும்ன்னு மேனேஜ்மெண்ட்ல இருந்து வர்ற பிரஷர் தெரியும் தானே?”

அவள் விழியோடு, உதடும் சேர்ந்து கொண்டதன் விளைவு.. ஜேகப் சாம்பலாகிக் காற்றில் கரைந்து போயிருந்தான்.

“இ...இப்பவே போய் நான் வேலையைத் தொடங்குறேன்” – என இருக்கையை விட்டு எழுந்தவனைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு கௌதம் புறம் திரும்பினாள் அவள்.

“லாரா உங்களைப் பத்தித் தேவைக்கு அதிகமாகவே பாராட்டினதை வைச்சுத் தான் மேனேஜ்மெண்ட் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இருக்கும் சூழ்நிலை உங்களுக்குப் புரிகிறதில்லையா?, இந்த ப்ராஜக்ட் நம்ம கம்பெனி கைக்குக் கிடைச்சே ஆகனும். அதுக்காகத் தான் உங்களை ஹயர் பண்ணதே!”

“புரியுது” – கௌதம்.

“புரிஞ்சா மட்டும் போதாது. சூழ்நிலையை சமாளிக்கிற விதமா நடந்துக்கவும் செய்யனும்”

“இப்போ என் கைல இந்த டெம்ப்ரரி பாஸ்-ஐத் தவிர ப்ராஜக்ட் சம்மந்தப்பட்ட எதுவுமில்லை. இதை வைச்சு நான் ஏதாவது செய்ய முடியுமா?” – சிரிக்காமல் கேட்டவனிடம்..

“ஐ டோண்ட் எண்டர்டெய்ன் யூஸ்லெஸ் ஜோக்ஸ் ஜெனரலி” –என்றாள் அவள் உணர்ச்சியற்றக் குரலில்.

“ஜோக்ஸ் கேன் நெவர் பீ யூஸ்லெஸ்”

“தட்ஸ் யுவர் ஒபினீயன்”

“ஏன்?, நீங்க வாழ்க்கைல சிரிச்சதேயில்லையா?”

“உங்க ஜோக்கும், என் சிரிப்பும் இப்போ இருக்குற சூழ்நிலையை மாத்துறதுக்கான சக்தி கொண்டதா?”

“இல்ல. ஆனா மாற்ற முடியும்ன்ற நம்பிக்கையை மனசுல விதைக்குற சக்தி கொண்டது”

“ஐ ஹேட் ஆர்க்யூமெண்ட்ஸ்”

“ஏன்?, ஆரோக்கியமான விவாதங்கள் உடலுக்கும்,மனதுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது தானே?”

“என் உடம்புக்கும்,மனசுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்க ஒரு கப் காஃபி போதும்”

-வழக்கத்திற்கு மாறாய் அளவாய்த் திறந்து மூடிய அவளது இதழ்கள் கடைசியாய் உச்சரித்ததைக் கேட்டு.. ஒரு நொடி சட்டென நிமிர்ந்து அவள் விழி நோக்கியவனைக் கண்டு கொள்ளாமல்..

“ஜேகப்.. இவருடைய அக்ஸஸ் ரிலேடட் விஷயங்களையெல்லாம் இன்னைக்கே முடிங்க. லாஜிஸ்டிக்ஸ் இன்னும் ரெண்டே மணி நேரத்தில முடிஞ்சாகனும்.”

“யெஸ் திவ்யா. யெஸ் திவ்யா”

அவள் கூறிய வாக்கியங்கள் ஒவ்வொன்றுக்கும் ‘யெஸ் திவ்யா’ போட்டுக் கொண்டிருந்த ஜேகப்பைக் காண சிரிப்பு வந்தது அவனுக்கு.

“எங்கயாவது ஸ்டக் ஆனா, இம்மீடியட்-ஆ என்னைக் காண்டாக்ட் பண்ணுங்க. ஐ வில் டேக் கேர் ஆஃப் இட்.”

“ஷ்யூர் திவ்யா” – என்றவன் அவசரமாய் எழுந்து கொள்ளக் கூடவே எழுந்த கௌதமிடம்..

“ஒரு வாரம். இல்ல, இன்னும் ஐந்தே நாட்கள் தான் உங்களுக்கு டெட் லைன். டேட்டா கலெக்ட் பண்ண ஜேகப் ஹெல்ப் பண்ணுவான். ஐந்தாவது நாள் காலை என் டெஸ்க்ல உங்க டிசைன் இருக்கனும்.”

“ஐ வில் ட்ரை மை பெஸ்ட்” – முடித்துக் கொள்ள முனைந்தவனிடமிருந்து முழியைத் திருப்பாமல்..

“நான் எக்ஸ்பெக்ட் பண்ற ஆன்சர் இது இல்ல” என்றாள் அவள்.

“ஆஃபர் லெட்டரை வலது மூளை அக்செப்ட் பண்ணும் போதே, இடது மூளை இதுக்கெல்லாம் தயாராகிடும் மிஸ்.திவ்யா. மிஸ் தானே?”

“..........................”

பதிலின்றி வெறித்தவளிடம் தோளைக் குலுக்கி “ஓகே! ஐந்தாவது நாள் காலை டிசைனுடன் உங்களை சந்திக்கிறேன்” எனக் கூறி விட்டுத் திரும்பி நடந்தான் அவன்.

குத்திக் குறுகுறுத்த முதுகு.. அவள் கண்கள் தன்னைத் தொடர்வதை உணர்த்தினாலும்.. வீம்பாய் முன்னே நடந்தவன்.. கதவைத் திறக்கையில் திரும்பிப் பார்க்க..

அவளோ ‘நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா’ ரீதியில்.. சலனமில்லாத் தன் பார்வையைத் தீவிரமாய்த் திரையில் பதித்திருந்தாள்.

றையை விட்டு வெளியே வந்த ஜேகப் பெருமூச்சை வெளியிட்டபடி “ஒரு நிமிஷம் கௌதம்” எனக் கூறி விட்டு ஜான்சியிடம் ஓடினான்.

“ஜான், என்னாச்சு?” – ஜேகப்.

“பேக் எண்ட்ல ப்ராப்ளம் இல்ல ஜாக். கோட்-ல தான் சேஞ்ச் இருக்கு”

“யார் பண்ணினது?”

“நேத்து ஒரு மாட்யூல் ப்ரடக்ஷனுக்கு வந்திருக்கு. மே பி.. பிகாஸ் ஆஃப் தட்”

“மே பி எல்லாம் டிஷ்யூம் கிட்ட சொல்ல முடியாது ஜான்”

“மெய்ல் பண்ணியிருக்கேன். 30மினிட்ஸ்ல சாட் அவுட் பண்ணிடுவேன்”

“ஷ்யூர்?”

“ஷ்யூர். என்னை நம்புங்க”

“சரி, ஏதாவதுன்னா எனக்குக் கால் பண்ணு. சார் இன்னைக்குத் தான் புதுசா ஜாயின் பண்ணியிருக்கார். அவரையும் விட்டு வைக்கல அந்த டிஷ்யூம். ஃபர்ஸ்ட் டைம் இல்லையா?, அதான் கொஞ்சம் துடுக்கா பதில் சொல்லிட்டார். போகப் போக அவரும் நம்ம க்ளப்ல ஜாய்ன் பண்ணிடுவார்” – வளவளத்த ஜேகப்பைத் தாண்டி ஓரக்கண்ணால் அவனை நோக்கிய ஜான்சி மெல்லப் புன்னகைக்க முயன்றாள்.

அதை உணராத கௌதம் “இவ்ளோ நீளமா பேசுற அளவுக்கு உங்களுக்கு நேரம் இருக்கா ஜேகப்?” எனக் கேட்க.. துள்ளி எழுந்தவன்..

“கம்,கம் வீ ஹேவ் டூ கோ” – என வேகமாய் முன்னே நடந்தான்.

அதன் பின்பு இரண்டு மணி நேரத்தில் புதிதாக கம்பெனியில் சேர்பவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை விசயங்களும் கடகடவெனக் கிட்டியது கௌதமுக்கு.

“ப்ரேக் எடுத்துக்கலாமா கௌதம்?” – சோர்வாய்க் கேட்ட ஜேகப்பிடம் சிரித்தபடித் தலையாட்டினான் அவன்.

கையில் காஃபியுடன் பான்ட்ரியில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

“ஏன் இவ்ளோ டென்ஷன் ஜாக்? ஜாக்-ன்னு கூப்பிடலாம் தானே?”

“தாராளமா கூப்பிடலாம்” என்றவன் தொடர்ந்து “நடக்குறதையெல்லாம் பார்த்தீங்கள்ல?, டென்ஷன் ஆகாம எப்படியிருக்க முடியும்?” என்றான்.

“எல்லாமே நேரத்துக்கு முடிய நாம நூறு சதவீதம் முயற்சி பண்ணித் தான் ஆகனும். அதுல எந்த மாற்றமும் இல்ல. ஆனா.. விஷயம் நாம நினைச்ச படி நடக்குமா,நடக்காதான்றது சூழ்நிலையைப் பொறுத்தது” – கௌதம்.

“இதை நான் டிஷ்யூம் கிட்ட சொன்னா.. இதெல்லாம் தப்பிக்கிறதுக்கான எக்ஸ்யூஸஸ்ன்னு சொல்லுவாங்க!”

“அது என்ன டிஷ்யூம்??”

“திவ்யா சொரிமுத்து. டி எஸ் எம். அதை மொத்தமா சேர்த்து நாங்க டிஷ்யூம் ஆக்கிட்டோம்! அவங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் புல்லட்ஸ் மாதிரி. நம்ம நெஞ்சைத் துளைக்காம விடாது”

-கண்ணை உருட்டியவனைக் கண்டு கடகடவெனச் சிரித்தான் கௌதம்.

“யார் வைச்சப் பெயர் இது?” – கௌதம்.

“யாருக்குத் தெரியும்?, ஆண்டாண்டு காலமா இந்தப் பெயரை வைச்சுத் தான் கூப்பிட்டிருக்காங்க”

“அவ்ளோ வருஷமாவா அவங்க இந்தக் கம்பெனில இருக்காங்க?”

“ஆமா. எட்டு வருஷத்துக்கும் மேல இருக்கும்” – அவன் கூறிக் கொண்டிருக்கையிலேயே இவர்களைக் கடந்து ஜான்சி, காஃபி வெண்டிங் மெஷினின் அருகே சென்றாள்.

“ஹே ஜான்.. வா,வா, எங்க கூட ஜாய்ன் பண்ணிக்கோ” – என்றழைத்த ஜேகப்பிடம் மறுக்க முடியாமல் தயங்கியபடி அருகே வந்தமர்ந்தாள் ஜான்சி.

“ஒரு வழியா இன்னைக்கு நாம தப்பிச்சிட்டோம்” – ஜான்சியிடம் ஹை-ஃபை கொடுத்துக் கொண்டான் ஜாக்.

“ஏன், இஷ்யூ ரிசால்வ் ஆயிடுச்சா?” – கௌதம்.

“ம்ம், தப்பு எங்க மேல இல்ல. இன்னொரு மாட்யூல்ல கோட் எழுதுன ஆளுங்க மேல! அதனால நாங்கத் தப்பிச்சோம். பேட்ரிக்கோட டீம் பேப்பர் போட்டு வெளியே போற அளவுக்கு டிஷ்யூம் கிட்டக் கிழி வாங்கியிருக்காங்க போல.”

“கஷ்டம் தான்” – என சிலிர்த்துக் கொண்ட ஜான்சியின் முகத்திலும் ஹப்பாடி! தப்பிச்சாச்சு! என்கிற பாவம்!

“வாழ்க்கைல ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் கல்யாணம் பண்ணிடனும் கௌதம்! நமக்குன்னு ஒரு குடும்பம் இல்லாட்டி நாமளும் கூட இந்த டிஷ்யூம் மாதிரி ஆய்டுவோம்”

“ஏன்? கல்யாணம் பண்ணினாத் தான் குடும்பம் வருமா?, அப்பா-அம்மால்லாம் குடும்பத்துல சேர்த்தி இல்லையா?”

“ப்ச், அவங்களால நாம போற இடத்துக்கெல்லாம் கூடவே வர முடியுமா?”

“ஏன்?, என்னோட அம்மா எங்க கூட தான் இருக்காங்க”

“ஷ்ஷ்.. நம்ம கேஸ் வேற கௌதம்! இந்த டிஷ்யூம் கூட அம்மா,அப்பா,சொந்தம்ன்னு யாருமேயில்ல. நான் இந்தக் கம்பெனில ஜாய்ன் பண்ணின இந்த 4 வருஷத்துல இவங்க ஒரு தடவை கூட சொந்த நாட்டுக்குப் போய் நான் பார்த்ததில்ல! 31,32 வயசு இருக்கும். கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்குற மாதிரியே தெரியல!”

“ப்ச், அது அவங்க சொந்த விவகாரம். அதைப் பத்தி நீங்க இவ்ளோ யோசிக்கனுமா என்ன?”

“வேற யாராவதுன்னா யோசிச்சிருக்க மாட்டேன்! டிஷ்யூம்ன்றதால எல்லா நெகட்டிவ் பாய்ண்ட்ஸூம் முன்னால வருது”

“ஒரு வேளை கல்யாணத்துல பெருசா நம்பிக்கை இல்லாத ஆளா இவங்க இருக்கலாமில்லையா?, பாய் ஃப்ரெண்ட் கூட லிவிங் டூகெதர்ல இருக்கலாம்”

“இதுக்கு பாய் ஃப்ரெண்டாஆஆஆ?” என முகம் சுழித்த ஜேகப் திடீரென மலர்ந்து சிரித்து “இருக்கலாம்! இருக்கலாம்” என்றான்.

“என்ன?”

“அது வேற ஒரு மேட்டர். ஜான்சியை வைச்சிக்கிட்டுப் பச்சையா பேச முடியாது. இன்னொரு நாள் சொல்றேன்” – என்றவனை முறைத்த ஜான்சி “இல்லாட்டியும் எனக்குத் தெரியாது பாரு” என்று சத்தமாய்க் கூற..

காஃபியை உறிஞ்சியபடி சுவாரசியமாய் அவளை நோக்கினான் கௌதம்.

“அதான, ஆஃபிஸ் அஃபேர்ஸ்ல உனக்கில்லாத ஆர்வம் வேற யாருக்கு இருக்கு?”

“யோவ்! புறணி பேசுறதுல பொண்ணுங்களை மிஞ்சுற ஆளு நீ! நீ என்னைச் சொல்றியா?, ஆனா.. புதுசா வந்து சேர்ந்திருக்கிற மனுஷனைக் கூட விட்டு வைக்காம.. அவரையும் புறணி கேட்க வைச்சிருக்கப் பாரேன்! திறமைய்யா உனக்கு”

“ஏய்.. உன்னை விட நான் 5 வருஷம் சீனியர். மறந்துடாத”

“ஆமாமா! அதனால் தான் டிஷ்யூம் பேச ஆரம்பிச்சாலேப் பரதேசம் போறவன் மாதிரி பம்மிக்கிட்டு நிற்குற!”

“வாயை மூடு! புதுசா வந்தவனும் என்னை ஒரு டும்மாங்கோழின்னு முடிவு பண்ணனுமா?” – என்று அவள் காதருகே முணுமுணுத்தவன்..

“ஹிஹிஹி! இது மூஞ்சி பார்க்குறதுக்கு...சின்ன வயசுல தொலைஞ்சு போன என் தங்கச்சி மாதிரி இருக்கா.. அதான்.. இது என்ன பேசுனாலும் நான் கண்டுக்கிறது இல்ல” – எனக் கூறிச் சிரித்து வைத்தான்.

“மவனே! தங்கச்சின்னு சொன்னதால தப்பிச்ச நீ! இல்ல, தாவாங்கட்டையை நொறுக்கியிருப்பேன்”

ரைமிங்காக அவள் பேசும் வார்த்தைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தவனுக்கு.. இன்று காலை டிரெஸிங் டேபிளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கி நோட்டின் நினைவு வந்தது.

நீள,நீளமாய் வளர்க்கப்பட்டுப் பொருத்தமாய் நெயில் பாலிஷ் அடிக்கப்பட்டிருந்த ஜான்சியின் நகங்களைப் பார்வையிட்டவன்...

“இவ்வளவு நீளமான நகம்... எப்படி வளர்க்குறீங்க?” எனக் கேட்டான்.

அதுவரை அவன் பொறுமையாக ஜான்சியை அளவெடுத்துக் கொண்டிருந்ததைக் கவனித்திருந்த ஜேகப் நமுட்டுச் சிரிப்புடன்..

“நீ எனக்குத் தங்கச்சி தான்னு நான் ஒத்துக்கிட்டேன். சாரோட ஒப்பீனியன் என்னன்னு எதுக்கும் கேட்டு வைச்சுக்க” என்று விட்டு எழுந்து சென்று விட...

அவனது பேச்சின் அர்த்தத்தை சட்டை செய்யாமல்.. ஜான்சியின் புறம் திரும்பி அமர்ந்தான் கௌதம்.

அவன் கேள்வியில் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து நோக்கிய ஜான்சி, பின் பொறுமையாக காஃபி கப்பைக் கீழே வைத்தாள்.

அதில் படிந்திருந்த பிங்க் நிற லிப்ஸ்டிக்கைக் கண்டு அவளை ஓரக்கண்ணால் நோக்கியபடித் தனது காஃபியைக் கையில் எடுத்தான் கௌதம்.

“பதில் வரலையே??” – கௌதம்.

“ம்ம்?” என்றவள் அவன் முகத்தைப் பாராமல் “இதுக்குன்னு தனியா நர்சரி வைச்சா வளர்க்க முடியும்?, அதுவா வளர்றது தான்!” என முணுமுணுக்க.. சட்டெனப் பூத்தப் புன்னகையை அடக்கி..

“இந்த நகத்தை வைச்சு யாரையாவது கிள்ளி வைச்சிருக்கீங்களா?” என நூல் விட்டுப் பார்த்தான்.

இப்போது அவன் முகத்தை மொத்தமாகத் தவிர்த்து விட்டு...

“நிறைய தடவை” என்றாள் அவள்.

“ஹ்ம்ம்ம்” என்றவனின் இதழ்கள் நகைப்பை நகர்த்தாமல் ஒட்டியே வைத்திருந்தது.

அவனிடமிருந்து அடுத்துப் பேச்சு வராது போக அவனை நேராக நோக்கியவள்..

“ஏ...ஏன் சிரிக்குறீங்க?” எனக் கேட்க...

“தெரியல” என்றவன்... தொடர்ந்து..

“நான் மட்டுமில்ல. உங்களை சுத்தி வீசுற காத்துல கூட.. சிரிப்புப் பரவியிருக்கிற மாதிரி ஒரு ஃபீல் எனக்கு. நல்ல ப்ளசண்ட் ஃபேஸ் உங்களுக்கு. தெரியுமா?” என்றான்.

“ஓஹோ!” என்றபடித் தலையை ஆட்டியவள்.. அவனை ஓரப்பார்வையால் நோக்கி..

“பார்த்து... முழுசா மூணு மணி நேரம் கூட ஆகாத பொண்ணுக்கிட்ட என்னமா ஃப்ளர்ட் பண்றீங்க?” என நக்கலடிக்க..

அதற்கெல்லாம் அசராத கௌதம்..

“ஆமா இல்ல?, உங்க டிஷ்யூம் முகத்தைப் பார்த்துட்டு வந்ததுல இருந்து.. எந்தப் பொண்ணு முகத்தைப் பார்த்தாலும்.. அழகாத் தான் தோணுது. அந்த வேகத்துல உங்க கிட்ட இப்படிப் பேசுறேன் போல” என்றான்.

“அய்யோடா!”

“ஆமா டா!”

“போதும் டா!” என்று கையெடுத்துக் கூப்பியவள் பின் ஃப்ளோவில் டா என்றதற்காக “சாரி” என்று அவசரமாய்ச் சொல்லி விட்டு அந்த இடத்திலிருந்து நகரப் பார்க்க..

“ஜான்சி” என்றழைத்து அவளை நிறுத்தினான் அவன்.

“என்ன?”

“நான் ஒன்னு கேட்டாத் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

“எனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கா-ன்னு கேட்கப் போறீங்களா?”

“ச்ச! ச்ச! தங்கச்சின்னு சொல்லாட்டித் தாவாங்கட்டையை உடைச்சிடுவேன்னு சொல்ற உங்களுக்கெல்லாம் அவ்ளோ சீக்கிரம் பாய் ஃப்ரெண்ட் கிடைச்சிடுவானா?” – என்றவனின் பதிலில் சுருசுருவென எழுந்த கோபத்துடன்..

“ஹலோ! என்ன நக்கலா?” – என்று எகிறினாள் அவள்.

“ஜான்சி, நான் நிஜமாவே ஒன்னுக் கேட்கனும். நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது,”

“என்ன? சொல்லுங்க” – எரிச்சலாய்க் கேட்டாள்.

“வ...வந்து...”

“ம்??”

“நான் உங்கக் கன்னத்தை ஒரு தடவை தொட்டுப் பார்த்துக்கலாமா?” – தயக்கமோ,பயமோ ஏதுமின்றித் தைரியமாய்.. பொறுமையுடன் வார்த்தைகளை உச்சரித்தவனைத் திறந்த வாயுடன் நோக்கிய ஜான்சிக்கு.. மனதில் ஓடியதெல்லாம் இது தான்.

‘இவன் பேசுற பேச்சைப் பார்த்தா... நேத்து லவ் ஃபெயிலர் ஆனவன் மாதிரியா இருக்கு!’