அத்தியாயம் - 4

காட்டு மானை வேட்டை ஆடத் தயங்கவில்லையே!

இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே!

கூட்டு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை புரியவில்லையே..

நான் கொண்டு வந்தப் பெண் மனதில் பெண்மையில்லையே!

ண்ணதாசன் + டி.எம்.எஸ் + சிவாஜிகணேசன். ஈக்வல் டூ போட்டு ரிசல்ட் சொல்லத் தேவையே இல்லாத காம்பினேஷன் இது! கண்ணை மூடிட்டு நூறு மார்க் கொடுத்துடலாம்!

கண்ணதாசன் கவியரசர் இல்லை! கவிக்கடவுள்! என்ன மாதிரியான மூளை அமைப்பைக் கொண்டவராயிருந்தால்.. எல்லா வகையான உணர்வுகளுக்கும் வார்த்தை வடிவம் கொடுத்திருப்பார்! அதிலும் தாபமும்,விரசமும் துள்ளி ஓட வேண்டிய பாடல் இது! ஆனால் வரைமுறையோடு வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் கொள்ளை அழகு!

டி.எம்.எஸ்ஸூம்,கண்ணதாசனும் 50 ரூபாய்க்கு வெளிப்படுத்திய அவஸ்தை உணர்வை.. 500 ரூபாய்க்குத் திரையில் தெறிக்க விட்டவர் நம் நடிகர் திலகம்!

சுருட்டை முடியும், டக்-இன் செய்யப்பட்ட பேண்ட்,சட்டையுமாக ராஜ சுலோசனாவைச் சுற்றி சுற்றி வந்து பாடி.. அவர் கொடுக்கும் ஒவ்வொரு பாவமும்.. அந்தக் கதாபாத்திரத்துக்குள் அவர் ஒன்றிப் போனதன் விளைவை எடுத்துச் சொல்கிறது!

நான்.. கவிஞனுமில்லை! நல்ல ரசிகனுமில்லை!

காதலெனும் ஆசையில்லா... பொம்மையுமில்லை!!

நிச்சயம்.. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமானப் பாடலாக இது இருந்திருக்கும்!!

ந்த வட்ட மேஜையின் ஒரு புறம் தன் மடிக்கணினியில் தான் செய்து வைத்திருந்த ப்ளானை சரி பார்த்தபடி திவ்யாவின் எதிரே அமர்ந்திருந்தான் கௌதம்.

டாஸ்க் பாரில் ஆரஞ்சு நிறத்தில் மின்னிய மெசெஞ்சரைக் க்ளிக்கி சாட் விண்டோவைத் திறந்தான்.

கெவின்.ஜே : ஹாய் மச்சி

கௌதம்.கே: மச்சி???

கெவின்.ஜே: ஜான் எனக்குத் தங்கச்சின்னா, நீ மச்சான் தான?”

கௌதம்.கே: உளறாதீங்க ஜாக்.

கெவின்.ஜே: சரி,சரி அதை அப்புறம் பேசிக்கலாம். டிஷ்யூம் வந்தாச்சா?”

கௌதம்.கே: ம்ம், முன்னால தான் உட்கார்ந்திருக்காங்க.

கெவின்.ஜே: அய்யய்யோ! என் சாட் விண்டோவை க்ளோஸ் பண்ணுய்யா யோவ்! அந்த ரூம்ல இருக்குற நாலு சுவத்துலயும் அந்தம்மா கண்ணு தான் ஒட்டிக் கிடக்குது!

கௌதம்.கே: இருந்தாலும் ,நீங்க இவங்களை ஒரு கார்ப்பரேட் காளியம்மாவா உருவகப்படுத்தி வைச்சிருக்கிறது ரொம்ப ஓவர் ஜாக்.

கெவின்.ஜே: உன் ராசி என்ன?

கௌதம்.கே: ஏன் கேட்குறீங்க?

கெவின்.ஜே: ராசி பலன் பார்த்துட்டிருக்கேன். சொல்லு மேன்.

கௌதம்.கே: ஹாஹாஹா!

கெவின்.ஜே: நீ எவ்ளோ அசிங்கப்பட்டாலும் வெளியே தெரிய வராது. அதனால தைரியமா இரு கௌதம்.

கௌதம்.கே: அதுசரி!

கெவின்.ஜே: சரி,சரி ஆல் த பெஸ்ட்

பதிலாக கௌதம் நன்றி என டைப் செய்கையில் “ஸ்டார்ட் பண்ணலாமா கௌதம்?” என்றபடி திவ்யா இவன் புறம் திரும்ப.. அவசரமாக சாட் விண்டோவை க்ளோஸ் செய்து விட்டு “யா ஷ்யூர்” என்றுத் தன் மடிக்கணினியை அவள் புறம் திருப்பினான் கௌதம்.

தொடர்ந்த அரை மணி நேரம் அவன் கூறிய அத்தனையையும் சலனமற்ற முகத்துடன் பொறுமையாகக் கேட்டாள் அவள்.

இமை சிமிட்டும் நேரம் கூட அவள் கருமணிகள் வேறு புறம் பார்க்கவில்லை. அழுத்தமாய் அவன் முகத்தில் பார்வையைப் பதியம் போட்டிருந்தாள்.

தன் முன்னே அமர்ந்திருப்பது ஒரு ஆண் என்கிற எண்ணமோ, தொடர்ந்து கண் கொண்டு கண் நோக்குகையில் இயல்பாய் எழும் தயக்கமோ சிறிதுமின்றி.. மிகச் சாதாரணமாக அவள் அமர்ந்திருந்த விதம்.. உள்ளுக்குள் ஆச்சரியத்தைக் கொடுத்தது அவனுக்கு.

தொடர்ந்துத் தன்னையே நோக்கும் அவள் விழிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல்.. கணினித் திரையைக் கை காட்டும் சாக்கில்.. யோசிக்கும் சாக்கில்.. அந்த அரை மணி நேரத்தில் அவளிடமிருந்துப் பல முறைப் பார்வையைத் திருப்பியிருந்தான் அவன்.

அவன் முகத்தை உற்றுப் பார்க்கும் எண்ணமோ, கண்களாலே அவனைத் துளைத்து விடும் நோக்கமோ, ஆராய்ச்சிப் பார்வையோ இல்லை அவளுடையது.

அந்த அறைக்குள் போடப்பட்டிருந்த டேபிள்,சேர்களைப் போன்று.. அவனையும் ஒரு உயிரற்றப் பொருளாக எண்ணி.. உணர்வற்றுத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வேளை அவன், அவளை விட நான்கு வயது இளையவன் என்கிற எண்ணத்தினால் மனதிலும்,பார்வையிலும் எந்த வித மாற்றமுமில்லாது.. இயல்பாய் இருக்கிறாள் போலும்!

தான் நேர் கொண்டு பார்த்தாலே.. தடுமாறி வேறு புறம் பார்க்கும் ஜான்சியின் நினைவு வந்தது அவனுக்கு.

அன்று அவன் அப்படிக் கேட்டதும், ஒரு நொடி அசைவற்று அமர்ந்திருந்தவள் பின் அவனை முறைத்து..

“நீங்க என்ன சார்?, சும்மா ஃப்ளர்ட் பண்றீங்கன்னு பார்த்தா.. இதை நெக்ஸ்ட் ஸ்டேஜ்க்கு எடுத்துட்டுப் போக வேற ப்ளான் பண்றீங்க போல?” என்று பொறிந்தாள்.

“ச்ச,ச்ச! நெக்ஸ்ட் ஸ்டேஜ்க்கு எடுத்துட்டுப் போன பல விஷயங்களால.. நிறைய டேமேஜ்க்கு உள்ளாகியிருக்கேன் நான். அதனால இப்போதைக்கு பார்க்குற பொண்ணுங்க எல்லாரையும் சிஸ்டர்ஸ் லிஸ்ட்ல தான் சேர்த்திட்டிருக்கேன்”

“ஓஹோஓஓஓ! – என்றவளின் குரலில் சுதி இறங்கிப் போயிருந்தது.

“பின்ன எதுக்கு அப்படிக் கேட்டீங்க?” – விடாது கேட்டவளை.. ஆராய்ச்சியுடன் நோக்கி..

“ஏன் கேட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்றான்.

“எனக்கு எப்படித் தெரியும்?” – தோளைக் குலுக்கினாள் அவள்.

“நீங்க நல்லா நடிக்கிறீங்க ஜான்சி”

“என்ன நடிக்கிறேன்?”

“காலைல லிஃப்ட் கிட்ட என்னைப் பார்த்த நிமிஷத்துல இருந்து இப்போ வரை என்னை முன்ன,பின்ன தெரியாத மாதிரியே நடிக்கிறீங்களே! அதைச் சொன்னேன்!”

உதட்டைக் கடித்துக் கொண்டுத் தடுமாற்றத்தை மறைத்தவள்..

“நான் எப்போ சொன்னேன் உங்களை முன்ன,பின்ன பார்த்ததில்லன்னு?”

“அப்படி வாங்க வழிக்கு”

“காலைல நீங்க என்னை க்ராஸ் பண்ணி போனப்போ.. பின்னால பார்த்தேன்! இப்போ முன்னால பார்க்குறேன்! என்னைப் போய் நடிக்குறேன்னு சொல்றீங்களே?”

“இது ரொம்பப் பழைய ஜோக் ஜான்சி”

“புதுசா ஏதாவது நீங்க சொல்லுங்க”

“அப்டின்னா.. உங்கக் கன்னத்தைத் தொட்டுப் பார்க்க எனக்குப் பர்மிஷன் கொடுக்க மாட்டீங்க?”

“அய்யோ தெய்வமே! தயவு செஞ்சு இந்தப் பேச்சை விடுங்க”

“இப்போதைக்கு விட்றேன்! ஆனா.. கண்டிப்பா நீங்க எனக்குப் பதில் சொல்லனும்” – என்றவனை முறைத்து “ஆளை விடுய்யா சாமி” எனக் கூறி ஓடி விட்டாள் அவள்.

அதன் பின்பு அவனை எங்கு கண்டாலும், அவசரமாய்த் திரும்பி வேறு புறம் ஓடுபவளை நினைக்கையிலேயே சிரிப்பு வந்தது அவனுக்கு.

குறும்பும்,சுறுசுறுப்புமாய் கலகலவென வலம் வருபவள், பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எத்தனை இனிமையாய் இருக்கிறாள்!

எண்ணங்களின் வெளிப்பாடு கண்களை எட்டும் போது.. அவன் முன்னே தெரிந்தது திவ்யாவின் ரோபோ முகம் தான்.

இவள் மடிக்கணினியின் மனித உருவம்! ப்ரோக்ராம் செய்யப்பட்ட எந்திரம்!

“வாட் ஹாப்பண்ட் கௌதம்? – திவ்யா.

“சாரி??”

“திடீர்ன்னு ப்ளாக் அவ்ட் ஆயிட்டீங்க?”

“இ..இல்ல...” என்று தடுமாறியவன்.. அப்படித் தடுமாறியதற்காகத் தன்னையே திட்டிக் கொண்டு அசராமல் நிமிர்ந்து..

“நான் உங்க கேள்விகளுக்காக இடைவெளி விட்டேன்” என்று சமாளித்து “எனி க்வஸ்டின்ஸ்?” என்றான்.

கெத்து குறையாமல் அவன் கேட்ட விதத்தை அசட்டை செய்து விட்டு “ஸ்லைட் நம்பர் 4,9,12 மூனுலயும் சேஞ்சஸ் பண்ணனும் கௌதம்” என்று கூறி அவன் என்ன மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று விளக்கினாள் அவள்.

அவள் பேசும் விதமும்,விஷயமும்.. அவள் இந்தத் துறையில் பழம் தின்றுக் கொட்டை போட்டு.. அதை விதைத்துச் செடியாக்கியும் விட்டவள் என்பது புரிய.. அவள் கூறிய அனைத்தையும் மறுப்பின்றிக் கேட்டுக் கொண்டான்.

“முடிச்சிட்டு எனக்கு அனுப்புங்க. நான் ரிவ்யூ பண்றேன். அண்ட் ஐ நீட் த சேஞ்சஸ் டூ பீ இன் ப்ளேஸ் இன் அனதர் 30 மினிட்ஸ்” – என்று ஆணையிட்டாள்.

இது தான்! இது தான் பிரச்சனையே! எங்கிருந்து இந்த ஆட்டிடியூட் வருகிறது?

தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் வழக்கத்தை தாத்தா காலத்திலிருந்துத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் நாம்!

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக இந்த அறைக்குள் இவளுடன் அமர்ந்திருக்கிறான் அவன்.

உச்சா வரலாம்! கக்கா வரலாம்! ஏன், காஃபி குடிக்கத் தோணலாம்!

அவனுக்கு மட்டுமல்ல! அவளுக்கும் தான்!

“காஃபி குடித்து விட்டு வந்து வேலையைத் தொடரலாமா” என்று கேட்டிருக்கலாம். அல்லது “எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறீர்களோ, அவ்வளவு நல்லது” எனக் கூறி அவசரத்தை உணர்த்தியிருக்கலாம்.

அதை விட்டு விட்டு ‘நான் உன் மேலதிகாரி. நீ எனக்குக் கீழே வேலை செய்பவன்’ என்பதை நொடிக்கு நொடி நிரூபிக்கும் பொருட்டு எந்நேரமும் அதட்டிக் கொண்டும்,ஆணையிட்டுக் கொண்டும் திரிய வேண்டுமா?

ரத்தக் காட்டேரியா இவள்?

இது என்ன பள்ளிக்கூடமா?, இவள் டீச்சரா? என்ன சொன்னாலும் அவன் கைக்கட்டி வினவுவதற்கு! அனைவரும் சகப் பணியாளர்கள் தானே!

கடகடவென உச்சிக்கு ஏறிய எரிச்சலை.. அங்கேயே லாக் செய்தவன்..

மெல்ல எழுந்தபடி.. “உங்களுக்கு ரெண்டு கிட்னியும் நல்லா வேலை செய்யுதுங்களா?” எனக் கேட்டான்.

“வாட்?” – புருவத்தையும்,முகத்தையும் சுருக்கினாள் அவள்.

“பாத்ரூம் போகனும்ன்றதை இண்டைரக்ட்-ஆ சொல்லிப் பார்த்தேன். ஆனா உங்களுக்குப் புரியல போல”

“.................”

“போகட்டும்ங்களா?, என்னால கம்யூட்டரைத் தான் கண்ட்ரோல் பண்ண முடியும். இதையெல்லாம்.... ம்ஹ்ம்.... முடியாது”

“..........”

பூனைக் கண்கள் எரிச்சலில் பளபளக்க அவள் அவனை இமைக்காது நோக்குவது தெரிந்தது. ஆனாலும் அவன் அடங்கவில்லை.

“மௌனம் சம்மதம்” – என்றவன் தொடர்ந்து...

“அத்தோட எனக்கு காஃபி குடிக்கனும். சிகரெட் பிடிக்கனும். நேரம் பன்னிரெண்டை எட்டிட்டா பசி வேற வந்திடும். சோ, ஐ வில் செண்ட் இட் போஸ்ட் லஞ்ச்” என்று விட்டு.. பொறுமையாகச் சிரித்து “தேங்க்ஸ் இன் அட்வான்ஸ்” எனக் கூறிக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறி விட்டான்.

நின்றால் நிச்சயம் நிம்மதியைப் பறித்திருப்பாள்.

மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவன் மீண்டும் மீட்டிங் அறைக்கு வந்த போது அவளைக் காணவில்லை.

அங்கேயே அமர்ந்து மீதி வேலையையும் முடித்து அவளுக்கு அனுப்பிய போது.. மெசெஞ்சரில் மின்னினாள்.

“கௌதம்” – அவள்.

“யெஸ் திவ்யா”

“கேன் யூ கம் டூ மை டெஸ்க் ஃபார் அ மினிட்?”

‘ஷ்ஷ்ஷ்ஷ்’ – எரிச்சலாய் வந்தது அவனுக்கு. அவன் வாங்கும் சம்பளத்துக்கும், பார்க்கும் வேலைக்கும்.. இவளிடம் பணிந்து போவது ஏகத்துக்கும் கடுப்பைக் கொடுத்தது.

அவளுக்குப் பதிலளிக்காமல் தன் வேலையைத் தொடர்ந்தான் அவன்.

சற்று நேரத்தில் அந்த மீட்டிங் அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் திவ்யா.

அவள் முகத்திலிருந்து வழக்கம் போல எதையும் கண்டறிய முடியவில்லை அவனால். ஆனால்.. அவள் வரம்பு மீறிப் பேசினால்.. மடிக்கணினியை வீசியெறிந்து விட்டு இப்போதே வெளியேறி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்.

“ஹாய் கௌதம்” – தில்லாலங்கடி போலும் அவள்! அவனுக்கும்,அவளுக்குமான உரையாடல் அப்போது தான் நிகழ்வது போல.. முதலிலிருந்துத் தொடங்கினாள்.

“ஹாய் திவ்யா” – அவளை விடத் தான் சளைத்தவனில்லை என்கிற எண்ணம் அவனுக்கு.

“என்னோட சாட்-ஐ நீங்க பார்க்கலையா?”

“இல்ல! நான் லாராவோட மீட்டிங்-ல இருந்தேன். ஏன், எதுவும் முக்கியமான விஷயமா?”

“......................” – தன் கையிலிருந்த செல்ஃபோனை ஒரு கையால் சுழற்றியபடி அவனை நோக்கியவளின் பார்வை ஆராயும் நோக்கத்துடனிருந்தது.

“சொல்லுங்க” – கௌதம்.

“மாடிஃபைட் ஸ்லைட்ஸ்-ஐ பார்த்தேன்! இட் லுக்ஸ் குட். கமிங் ட்யூஸ் டே கஸ்டமர் மீட் இருக்கு. டிசைன் செஞ்ச ப்ளானை ப்ரசண்ட் பண்ணப் போறது நீங்க. வென்யூ இன்னும் கன்ஃபார்ம் ஆகல. ஐ வில் லெட் யூ நோ பை டுமாரோ”

“ஓகே!”

“இஸ் தேர் எனி திங் எல்ஸ் யூ வான்ன டாக்?”

“நோ! நத்திங் ஃபார் நௌ.”

முடித்துக் கொண்டவனிடம் தோளைக் குலுக்கி விட்டுத் திரும்பி நடந்தவள் நின்று.. வாசல் கதவின் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு அவனை நோக்கி..

“உங்க ஸ்மார்ட்நெஸ்ஸை வேலையில மட்டும் காட்டுங்க” – என்று கூறி விட்டு விறுவிறுவெனச் சென்று விட்டாள்.

‘அப்படித் தான் காட்டுவேன். என்னாடி செய்வ?’

முகம் திருப்பிக் கொண்டு செல்பவளை நிறுத்தி வைத்து எகிறத் துடித்த மனதை அடக்கி.. எரிச்சலும்,கோபமுமாய் தலையைக் கோதிக் கொண்டு அமர்ந்திருந்தவனைக் கண்டு....

“தலைல கை வைக்குற அளவுக்கு என்ன மேன் ஆச்சு?” – என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் ஜேகப். அவனைத் தொடர்ந்து ஜான்சி.

தன் எதிரே வந்தமர்ந்த இருவரிடமும் மெலிதாக சிரித்து ஒன்றுமில்லையெனத் தலையாட்டியவனைக் கவலையுடன் நோக்கினாள் ஜான்சி.

“ஏன் கௌதம்?, டிஷ்யூம் ரொம்பப் படுத்துதா?” – ஜேகப்.

“நாங்க தான் அவங்களைப் பத்தி ஏற்கனவே சொல்லியிருந்தோமே?” – ஜான்சி.

“அடடடா! தலை கலைஞ்சிருந்ததேன்னு கோதி விட்டேன். அது ஒரு தப்பா?” – எனக் கேட்டுச் சிரித்தவனை ஜான்சி அப்போதும் அதே பார்வையுடன் நோக்க..

“என்னைப் பார்த்தாலே ஓடுவ! இப்போ என்ன தைரியமா எதிர்ல வந்து உட்கார்ந்திருக்க?” – என்று வம்பு செய்தான் கௌதம்.

“ப்ச்” – என்றபடி சலிப்புடன் தலை குனிந்தவளைக் கண்டு சிரித்தான் அவன்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்த ஜேகப்.. “என்னய்யா நடக்குது இங்க?, நிஜமாவே நீ தான் என் மச்சானா?” எனக் கேட்க..

“வாயை மூடுங்க ஜாக்” என்று அவன் மீது டஸ்டரை விட்டெறிந்தாள் ஜான்சி.

“இப்படியெல்லாம் நீங்க பேசுனா.. மறுபடி அவ என்னைப் பார்த்து ஓட ஆரம்பிச்சுடுவா ஜாக்” என்றான் கௌதம்.

“ஆமா, நீ ஏன் கௌதமைப் பார்த்து ஓடுற?” – ஜேகப்.

“.....................” – பதில் சொல்லாமல் நெற்றியைச் சொரிந்தாள் ஜான்சி.

“அது ஒரு பழைய கணக்கு ஜாக்.” - கௌதம்

“கணக்கா?”

“ஆமா! சீக்கிரமே தீர்த்து வைச்சிடுவேன்னு நினைக்கிறேன்”

“புரியுற மாதிரி பேசு மச்சி”

“30 வயசு வரைக்கும் சிங்கிளா சுத்துற உங்களுக்கு... சொன்னாலும் புரியாது ஜாக்.”

“யோவ்.. ஒரு பெரிய மனுஷனைக் கலாய்க்குற நீ?” – என்று பொங்கியவனிடம்...

“சரி சரி விடுங்க அங்கிள்” – என்றாள் ஜான்சி

“ஏய்ய்ய்ய்” – என்று அதற்கும் எகிறியவனைக் கண்டுச் சிரித்த கௌதம் மற்றும் ஜான்சியின் விழிகள் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து.. மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டன.

“சரி, டிசைன் ஓகே ஆய்டுச்சா?, என்ன சொல்லுது டிஷ்யூம்?” – ஜாக்.

“ஓகே ஆய்டுச்சு! செவ்வாய்க் கிழமை ப்ரசண்டேஷன்.”

“ஹ்ம்ம், எப்படியும் ஏதாவது ஸ்டார் ஹோட்டல்ல தான் நடக்கும். நம்ம க்ளையண்ட் அந்த மாதிரி!” – ஜான்சி.

“ஓ! இது வேறயா?”

“ஆமா! உன்னால இந்த ப்ராஜக்ட் நம்ம கம்பெனி கைக்குக் கிடைச்சதுன்னு வை! டின்னர்,பார்ட்டின்னு டிஷ்யூம் அசத்திடும் பாரு”

“சோத்துக்குப் பொறந்தவன்ய்யா நீ” – என்ற ஜான்சி கௌதமிடம் “ஆல் த பெஸ்ட்” எனக் கூற...

“இதையெல்லாம் கைக் குலுக்கி தான் சொல்லனும்?” என்று கலாய்த்த கௌதமைக் கண்டு கொள்ளாமல் “நான் கிளம்புறேன்ப்பா” என்று நகர்ந்து விட்டாள் அவள்.

ப்ரசண்டேஷன் அன்று காலை..

புதிதாக வாங்கியிருந்த செல்ஃபோனில்.. முதல் நாள் இரவு அரைகுறைத் தூக்கத்தில்.. கௌதம் செட் செய்திருந்த அலாரம் ஏழு மணிக்கு ஒலி எழுப்புவதற்குப் பதிலாக.. ஒரு மணி நேரம் கடந்து சாவதானமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

உறக்கத்திலேயே அதை அணைத்தவன் மேலும் தலையணையில் புதைந்த நொடி.. மனதில் செட் செய்திருந்த ப்ரசண்டேஷன் அலாரம்.. அபாய ஒலியுடன் முழுச் சத்தத்தில் ஒலிக்க.. அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தான்.

எட்டு என்று காட்டிய சுவர்க்கடிகாரத்தைக் கெட்ட வார்த்தையில் சபித்து விட்டு.. அவசரமாக படுக்கையை விட்டு இறங்கியவன்.. அடுத்த பதினைந்து நிமிடத்தில் டிரெஸ்ஸிங் டேபிள் முன்பு நின்றிருந்தான்.

விறுவிறுவென சட்டையைப் பேண்ட்டுக்குள் திணித்து.. காலருக்குள் டையை வைத்துக் கட்ட முயன்றவனின் முயற்சி.. அடுத்தப் பத்து நிமிடத்துக்கு நீள... ‘ப்ச்’ என்று சலித்தபடி.... டையைக் கட்டாமலேயே.. ப்ளேசரையும், லாப்டாப்பையும் எடுத்துக் கொண்டு கிட்டத்தட்டக் காரை நோக்கி ஓடினான்.

அடுத்த சில நிமிடங்களில் டிராஃபிக்கில் கலந்து விட்டிருந்தவனுக்கு நேற்றிரவு திவ்யாவுடன் நடந்த செல்ஃபோன் உரையாடல் நினைவிற்கு வந்தது.

“ஆம் ஐ ஸ்பீக்கிங் டூ கௌதம்?” – அலைபேசியிலும் அகந்தையுடன் ஒலித்த அவள் குரலைக் கேட்டு எரிச்சலுற்று..

“யெஸ் ஸ்பீக்கிங்” என்றான்.

“நான் திவ்யா. ப்ரசண்டேஷன் வென்யூ டீடெய்ல்ஸ் கன்ஃபார்ம் ஆயிடுச்சு”

“அப்படியா?”

“*******-ஹோட்டல்ல நடக்குது. காலைல பத்து மணிக்கு”

“ஓகே!”

“நீங்க தங்கியிருக்கிற இடத்துல இருந்து ஹோட்டலுக்கு ரீச் ஆக ஒரு மணி நேரமாகும். நீங்க எப்படி வரலாம்ன்னு ப்ளான் பண்ணியிருக்கீங்க?, இஃப் யூ ஆர் ஓகே, தென் ஐ கேன் பிக் யூ அப்”

-அவளாக முன் வந்து நீட்டிய உதவிக்கரத்தை வெட்டி துவம்சம் செய்து விடும் நோக்கத்துடன்..

“இங்க இருந்து 1 மணி நேரமாகும்ன்னு சொன்னீங்க இல்லையா?” – என்று கேட்டான்.

“ஆமாம்”

“ஹ்ம்ம், பொதுவா என்னால 5 நிமிஷம் கூட பேசாம அமைதியா இருக்கவே முடியாது. சின்ன வயசுல எங்கம்மா ‘நீ வாயை மூடிட்டு பேசாம உட்காரனும்ன்னு சொல்லி ஜன்னல் கம்பியோட சேர்த்துக் கட்டி வைச்சாங்க. அவங்க 5 நிமிஷம் கழிச்சு வந்து பார்த்தப்போ நான் தூங்கிப் போயிட்டேனாம். ஹாஹாஹாஹாஆஆஆஆஆ”

“........................”

“திவ்யா, லைன்ல இருக்கீங்களா?”

“யெஸ் கௌதம். என்ன சொல்ல வர்றீங்க இப்போன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“என்ன சொல்ல வர்றேன்னா.. உங்க கூட வந்தா.. ப்ளாஸ்திரி போட்டு ஒட்டுன மாதிரி வாயை மூடிட்டு வரனும்... விச் இஸ் நாட் அட் ஆல் பாஸிபிள் ஃபார் அ பர்சன் லைக் மீ”

“..................”

“சோ.. ஐம் சாரி. நான் என் வெஹிகில்லயே வர்றேன். அட்ரஸ் மட்டும் மெசேஜ் பண்ணுங்க” – என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் “தேங்க்யூ” எனக் கூறி விட்டு கால்-ஐ கட் செய்து விட்டான்.

மறுபுறம் எப்படியும் அவள் புஸ்,புஸ் என மூக்கை ஆக்ஸிலரேட்டராக்கி உறும விட்டுக் கொண்டிருப்பாள்! – என்று எண்ணியவனுக்கு கெக்கேபெக்கேவென சிரிப்பு வந்தது.

இல்லாத அவள் மூக்கை அவ்வப்போது இது போன்று உடைப்பதில் தான் எத்தனை சந்தோசம் கிடைக்கிறது!! அவனே அவனை மெச்சிக் கொண்டான்.

அந்த சந்தோசம் கொடுத்தத் திருப்தியில் தான் அதிக நேரம் உறங்கி விட்டான் போலும்! காஆஆட்!!! பின்னந்தலையைக் கோதிக் கொண்டு வண்டியை விரைவாகச் செலுத்தினான்.

சரியாக 9.35-க்கு திவ்யாவிடமிருந்து அழைப்பு வந்து விட்டது.

அய்யோ! அய்யோ! அய்யோ!-வென அலைபேசியுடன் சேர்ந்து அடித்துக் கொண்ட மனதைக் கண்டு உதட்டைக் கடித்தவன்.. இன்னமும் காரில் தானிருந்தான்.

9.40-க்கு ஹோட்டல் பார்க்கிங்கில் காரை விட்டு விட்டு அதி வேகத்தில் ஓடி ரிசப்ஷனை அடைந்த போது.... அவன் கண்டது.. குறுக்கும்,நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தக் காட்டுப்பூனையைத் தான்!

அதுவரை ஓடி வந்தவன்.. நின்று.. பெருமூச்சு விட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு.. கெத்தாக அவள் முன்பு சென்று நின்றான்.

“குட்மார்னிங் திவ்யா. ஹவ் ஆர் யூ?”

சிரித்த முகமாக வினவியவனைப் பல்லைக் கடித்துக் கொண்டுக் கண்களை அகல விரித்து.. மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்க நோக்கினாள் அவள்.

அவள் முறைப்பில் சற்று அடங்கியவன் பின் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு..

“நான் ஏமாந்துட்டேங்க” என்றான்.

“...........”

“ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் ஆட் பார்த்திருக்கீங்களா நீங்க?”

“...........”

“அதுலயும் இப்படித் தான் அடிச்சுப் பிடிச்சு ட்ராஃபிக்ல ஓடி.. கார்,பஸ்ஸையெல்லாம் தாண்டி எகிறி குதிச்சு வர்ற மாடல்.. கடைசியா ஆஃபிஸ்க்குள்ள நுழையும் போது.. அவன் முகம் படு ஃப்ரஷ்-ஆ இருக்கும்.”

“................”

“நானும் அதே க்ரீமைப் பூசிட்டு தான் ஓடி வந்தேன்! ஆனா, பாருங்க. நான் அப்புன க்ரீம் எல்லாம் வியர்வைல நனைஞ்சு.. வழிஞ்சு.. கரைஞ்சே போச்சு! ச்ச!” சலித்துக் கொண்டவனை நேர்ப் பார்வையால் நோக்கியவள்..

“உன் ஸ்மார்ட்நெஸ்ஸை வேலைல காட்டினா போதும்ன்னு ஏற்கனவே நான் உன்னை எச்சரிச்சுருக்கேன் கௌதம்”

அவள் பேச்சை வேண்டுமென்றேத் தவிர்த்து விட்டு “இப்போ நான் கொஞ்சம் ஃப்ரெஷ் அப் பண்ணனும். போகவா, வேண்டாமா?” என்றான்.

“.......................”

“நான் போறேன்” – என்றவன் தப்பித்து வாஷ்ரூமுக்குள் புகுந்து கொண்டான்.

முகத்தை சரி செய்து கொண்டு அவன் வெளியே வந்த போதும் அங்கேயே நின்றிருந்தாள் அவள்.

“போகலாமா?” – என்று கேட்டு விட்டு முன்னே நடந்தவன் அவள் உடன் வராததைக் கண்டு நின்றான்.

“என்ன?” – கௌதம்,

“இப்படியே டையை தொங்க விட்டுட்டுத் தான் வரப் போறியா?”

“ஓ! இதுவா?, எனக்கும் டை-க்கும் எப்பவும் தகராறு தான்! உள்ள போனோம்ன்னா.. அங்க இருக்குற ஜெண்டில் மேன் யாராவது உதவுவாங்கன்ற நம்பிக்கைல இருக்கேன்”

“உன்னையும்,என்னையும் தவிர நம்ம கம்பெனில இருந்து வேற யாரும் வரல இன்னிக்கு” – தொண்டை நரம்புகள் புடைக்க அடிக்குரலில் சீறினாள் அவள்.

“ஓ! காட்! இது வேறயா?”

“கௌ.....தம்”

“எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதீங்க. என் ப்ரசண்டேஷனுக்கு இம்ப்ரெஸ் ஆனாலும்.. உங்க மூஞ்சியைப் பார்த்து நம்ம கம்பெனி வேண்டாம்ன்னு க்ளையண்ட் ரிஜெக்ட் பண்ணிடப் போறாங்க”

“..................”

“இன்னும் என்ன.....ங்க?” – அவனது பொறுமையும் எல்லையை எட்டி விட்டது.

“விளையாடாம டையைக் கட்டுங்க கௌதம்”

“எனக்குக் கட்ட வரலங்க. நீங்க வேணா கட்டி விட்றீங்களா?” என்றவன் “முடியாதுல்ல?, பேசாம வாங்க போகலாம்” என்று முணுமுணுத்து விட்டு முன்னே நடக்க.. அவன் தொங்க விட்டிருந்த டையைப் பற்றி அவனைத் தரதரவென இழுத்துக் கொண்டு ஓரமாக நகர்ந்தாள் திவ்யா.

“எ...எ..என்ன பண்றீங்க?” என்றபடித் தள்ளாடி அவள் பின்னே சென்றான் அவன்.

பரபரவென அடுத்த ரெண்டு நிமிடத்தில் டையைக் கட்டி முடித்து.. அதை அப்படியே அவன் கழுத்தோடு சுருக்கியவளைக் கண்டு... நாக்கை வெளியே நீட்டி “ஆஆஆஆ”-வென அடித்தொண்டையில் கத்தியவன்.. அவள் விட்டதும்.. லொக்,லொக் என இருமித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நிமிர்கையில்.. அவள் முன்னே சென்றிருந்தாள்.

கோபத்தைக் காட்ட முடியாமல் பல்லைக் கடித்தவனும் அவளைத் தொடர்ந்து சென்றான்.

ப்ரசண்டேஷன் தொடங்கிய நிமிடத்திலிருந்து வேறு ஆளாக மாறிப் போன கௌதம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் க்ளையண்ட்டின் செல்லப் பிள்ளையாகிப் போனான்.

இடை,இடையில் உள்ளே புகுந்துத் தன் திறமையைக் காட்ட முனைந்த திவ்யாவைத் தூரத் தள்ளி விட்டு.. மேடையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டான் கௌதம்.

அகத்தின் கன்றல் முகத்தை எட்டி விடாதிருக்க அவள் அரும்பாடு படுவது நன்றாகவே தெரிந்தது.

அனைத்தும் நல்ல படியாக முடிந்ததும்.. அனைவரும் கைக்குலுக்கிக் கொள்ள..

திவ்யாவின் அருகே வந்த க்ளையண்ட் மேனேஜரில் ஒருவர்..

“ஹீ இஸ் டூ குட் திவ்யா. உன்னோட ரிப்போர்ட்டீ உன்னையே மிஞ்சுற அளவுக்குத் திறமையானவனா இருக்கான்” என்று வேறு பாராட்ட.. திவ்யாவின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்த கௌதமிற்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது!

கர்வம்! உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடம்பு முழுக்க செருக்கு மட்டுமே இவளுக்கு! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டடி முட்டாள் பெண்ணே! – என்றெண்ணிக் கொண்டவன்.. வேண்டுமென்றே க்ளையண்ட் சார்பாக வந்திருந்த அனைவரிடமும் சிரிக்க சிரிக்கப் பேசினான்.

மனதிற்கானத் திரையை முகத்தில் வைத்திருப்பவளிடமிருந்துப் பெரிதாக எதுவும் கண்டு கொள்ள முடியா விட்டாலும்.. அவள் தன் மீது நிச்சயம் கொலைக் காண்டில் இருப்பாள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது அவனால்!

நீ படிச்ச ஸ்கூலுக்கு நான் ஹெட் மாஸ்டர்ம்மா! – என்றெண்ணிக் கொண்டு க்ளையண்ட் மேனேஜர்களுடன் மதிய சாப்பாட்டை முடித்தான் கௌதம்.

மதியம் நடைபெற்ற செஷனில் மேடை ஏறியது திவ்யா. பேச்சிலும்,பாவனையிலும் அவளது ஆளுமை அன்று அளவுக்கு அதிகமாகவே ஓடியது.

இங்க நான் தான் எல்லாம்! என்னை மிஞ்ச யாரும் கிடையாது என்ற ரீதியில் அவள் மேடையை ஆண்ட விதத்தைக் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தான்.

பாராட்ட மனதில்லை! திட்ட முயலவில்லை!

கோபம் ,கர்வம்,பிடிவாதமென இருவரும் ஒருவரையொருவர் மட்டம் தட்டுவதில் முனைப்பாக இருந்ததன் விளைவு.. நாள் முடிவில் இருவரும் சோர்ந்திருந்தனர்.

மூன்று மணிக்கே இருட்டத் தொடங்கியிருந்த வானம்.. ஆறு மணிக்கு மழையைக் கொட்டத் தொடங்கியிருந்தது.

அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு.. கவனமாய் திவ்யாவைத் தவிர்த்து விட்டுத் தன் காரில் ஏறினான் கௌதம்.

நின்று பேசினால்.. வார்த்தைக்கு வார்த்தை வாதாட வேண்டி வரும்! அவனிடம் சக்தி இல்லை! நல்ல காஃபி! நிறையத் தூக்கம் வேண்டும்!

ஒரு வாரமாக அவன் கையிலிருந்த மிகப் பெரிய பொறுப்பு.. இன்று வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இருக்கும் திருப்தியான மனநிலையைக் கெடுத்துக் கொள்ள முடியாது.

ஆனால் அவன் எண்ணத்திற்கு எதிர் மறையாக.. ஸ்டார்ட் ஆக மறுத்து மக்கர் செய்தது அவனது கார்.

‘சொப்பனசுந்தரி! என்னடா ஆச்சு உனக்கு?, காலைல வரும் போது தான சாப்பாடு போட்டேன்?’ – என்று புலம்பியவன்.. அடுத்தப் பதினைந்து நிமிடம் என்னென்னவோ செய்து பார்த்தும்.. பிரயோஜனமற்றுப் போக....

டேக்ஸி புக் செய்து சென்று விடலாம் என்றெண்ணி காரை விட்டிறங்கும் போதுத் தன் காரை நோக்கி ஹீல்ஸ் சப்தம் ஒலிக்க நடந்து வந்தாள் திவ்யா.

அவளைக் கண்டதும் தயங்கி நின்றவனைக் கண்டு கொள்ளாது.. அவள் தன் கார் அருகே செல்ல.. உதட்டைக் கடித்தபடிப் பின் தலையைக் கோதியவன்..

“கிளம்பிட்டீங்களா?” என்று சத்தமாகக் கேட்டான்.

கார் கதவைத் திறந்தபடி அவனை நோக்கியவள் ‘ஆம்’ என்பது போல் தலையாட்ட..

“ஆக்சுவலி.. நான் கிளம்பும் போது உங்களைக் காணோம்! அதனால தான் சொல்லிக்க முடியல”

அண்டப்புளுகு, புளுகியவனைக் கண்டு நக்கலாகச் சிரித்து.. காருக்குள் ஏறி விட்டாள் அவள்.

அவசரமாய் அவளருகே சென்றவன்..

“திவ்யா.. இன்னையோட உலகம் நின்னுடப் போறதில்ல. நாளைக்குக் காலைல ஆஃபிஸ் வந்தா.. நீங்க என்னையும்,நான் உங்களையும் ஃபேஸ் பண்ணித் தான் ஆகனும்” என்றான்.

“என்ன வேணும் உங்களுக்கு?”

‘அப்டி பட்டுன்னு கேட்டா எப்டி’ என்று முனகியவன்..

“லெட் அஸ் பீ ஃப்ரெண்ட்ஸ் திவ்யா. இந்த கோல்ட் வார்-ஐ இத்தோட நிறுத்திக்கலாம். வாட் டூ யூ சே?” என்றான்.

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தாள் அவள்.

“திவ்யா.. திவ்யா.. வெய்ட்” என்று மீண்டும் அவளை நிறுத்தியவன்..

“என் கார் ரிப்பேர்” என்றான் சன்னமான குரலில்.

“வாட்?”

“என் கார் ஸ்டார்ட் ஆகலங்க”

“கேட்கலயே!”

பல்லைக் கடித்து நெற்றியைத் தேய்த்தவன் “ஆர்க்யூ பண்ணாம, என்னை என் வீட்ல டிராப் பண்ணுங்க ப்ளீஸ். எனக்கு எனர்ஜி இல்ல”எனக் கூற..

“கெட் இன்” என்பது போல் கண்ணைக் காட்டினாள் அவள்.

அதையே சம்மதமாக ஏற்று.. அவள் காருக்குள் ஏறிக் கொண்டான் அவன்.

நெடுஞ்சாலையில்.. ஹெட் லைட் வெளிச்சத்தில்.. தெறித்த மழையை இரண்டாகக் கிழித்துக் கொண்டு அவள் கைகளில் கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

ஜிப் போட்டு மூடப்பட்டிருந்த அவளது வாயைத் திறக்க முயற்சி எடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.

குளிர், எலும்புகளில் ஓட்டை போட்டது. கார் ஹீட்டரில் ஐந்து நிமிடம் கைகளை நீட்டினான்.

பின் கண் மூடி உறங்க முயற்சித்தான். தூக்கம் வரவில்லை. சீட் பெல்ட் இறுக்குவதைப் போலிருந்தது. அதைத் தளர்த்தினான்.

பின் செல்ஃபோனில் சற்று நேரம் பார்வையை ஓட்டினான். வாந்தி வரும் போலிருந்தது. மோஷன் சிக் நெஸ் உண்டு அவனுக்கு!

ப்ச், வாழ்க்கையில் இது போலொரு ‘போர்’ ஆன நிமிடத்தை அவன் கடந்ததேயில்லை.

சீட்டில் அமர்ந்த நிலையில் விடாது அவன் தத்தளித்துக் கொண்டிருப்பதை அவள் உணரவுமில்லை. கண்டு கொள்ளவுமில்லை.

பின் கடுப்புற்று.. கண் முன்னேயிருந்தப் பொத்தானை அழுத்திப் பாட்டை ஒலிக்க விட்டான்.

‘இந்த மன்றத்தில் ஓடி வரும்... இளம் தென்றலைக் கேட்கின்றேன்..

நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ....’

“ப்ச், இதை விடப் பழைய பாட்டுக் கிடைக்கலயா?, என்ன டேஸ்ட்டோ?” – என்று முணுமுணுத்தவனுக்கு.. தேஜாவூ உணர்வு!

இதற்கு முன்பு இதே வசனத்தை.. இதே நிலையில் சொல்லியிருக்கிறான் அவன்!

திடுக்கிட்ட மனது.. அவள் முகத்தை, அவள் கன்னத்தை, கியரில் பதிந்திருந்த அவள் விரல்களை ஒருமுறை திரும்பிப் பார்க்கச் சொல்லி.. கெஞ்சத் துவங்க.. பிடிவாதமாய்.. அதன் கோரிக்கையை மறுத்து விட்டு.. வெளியே தெரிந்த இருட்டை வெறித்தவனுக்கு...

‘நிச்சயம் அவள், இவளாக இருந்து விடக் கூடாதென்கிற’ எண்ணம் மட்டும் ஓங்கியிருந்தது.