அத்தியாயம் - 5
காலையில் நான் ஓர் கனவு கண்டேன்..
அதைக் கண்களில் இங்கே எடுத்து வந்தேன்..
எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்..
கொடுத்து விட்டேன்.. உந்தன் கண்களிலே..
பாடல்: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே..
பாடியவர் – எஸ்.ஜானகி.
‘பாவை கண்டாலே நிலவு நெளியாதோ’-ன்னு பாடின செக்ஸி வாய்ஸ்-ஆ இதுன்னு தான் நினைக்கத் தோணுது!
60ஸ்,80ஸ்,90ஸ்-மூன்று காலகட்டத்திலும் அவரது குரல் வெளிப்படுத்திய வேறுபாட்டை வியக்கத் தெரிந்தவர்கள் மட்டும் தான் அவரது உண்மையான ரசிகர்கள்!
சிங்கார வேலனே தேவா, பொன் மேனி உருகுதே, நெஞ்சினிலே நெஞ்சினிலே – இந்த மூன்று பாடல்களையும் பாடியவர் ஒருவர் தான் என்பதை நம்ப முடிகிறதா?, அதிலும் மூன்று பாடல்களும் மூன்று விதம்!
எதற்கும் அகராதியை ஒருமுறை புரட்டுங்கள்! ‘வெர்சடைல்’ என்ற வார்த்தைக்கான அர்த்தமாக எஸ்.ஜானகியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
எம்.எஸ்.வி இசையில் எஸ்.ஜானகியின் குரல் என்பது மலைத்தேனைப் போன்றதென்றால்.. இளையராஜாவுடன் எஸ்.ஜானகி என்பது அதில் எஞ்சியிருக்கும் தேனடையைப் போன்றது!
இந்தப் பாடல் ஜானகிக்காக மட்டுமல்ல. கண்ணகிக்காவும்! சாரி! விஜயகுமாரிக்காகவும்தான்! என்னவொரு நயனம் அவருக்கு! அதில் அப்பிக் கிடக்கும் அஞ்சனமும்,அது வெளிப்படுத்தும் நளினமும்! க்ளாஸி ஹீரோயின்!! பார்ப்பதற்கும்,கேட்பதற்கும் ரம்மியமான பாடல்!
அந்த வார இறுதியைத் தன் குடும்பத்தாருடன் கழிக்க எண்ணி ஜெர்சி சிட்டிக்கு வருகை தந்திருந்தான் கௌதம். இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்டிருந்தது திஷா பாப்பாவை பார்த்து.
அதுமட்டுமின்றி, நேற்று வீடியோ காலில், அவன் திஷா பாப்பாவோடு பேசிக் கொண்டிருந்த போது.. பின்னிருந்து வேண்டுமென்றே அவன் கண்ணில் படும்படி அமர்ந்து.. சுடச்சுட இட்லியுடன்,கோழிக்குழம்பை ஊற்றி வளைத்துக் கட்டிக் கொண்டிருந்த சாதனாவைக் கண்டு.. கடுப்பாகிப் போனது அவனுக்கு.
‘மகன் கூட இல்லயேன்ற நினைப்பே இந்தம்மாவுக்குக் கிடையாதா?, கோழியும்,கறியுமா நல்லாஆஆ வாழ்றாங்க போலவே!’ என்றெண்ணிக் கொண்டவனின் நாக்கு வீட்டுச் சாப்பாட்டுக்காக வெகுவாக ஏங்கிப் போக, உடனே புறப்பட்டு விட்டான், கோயிந்தம்மாவின் கோழிக் குழம்பை நோக்கி!
அதிகாலையில் பொகிப்சியிலிருந்துக் கிளம்பி வீடு வந்து சேர்ந்தவன் நல்ல உறக்கத்திலிருக்க.. திடீரென அவன் முதுகில் யாரோ பலமாகத் தாக்குதல் நடத்துவதை உணர்ந்து எரிச்சலுடன் கண்விழித்தான்.
எதிரில் நின்றிருந்த சாதனாவைக் கண்டு..
“நிம்மதியா தூங்கக் கூட விட மாட்டியா?” எனப் பாய்ந்தான்.
“வீட்ல தங்குறதே 2 நாள் தான்! இதுல பாதி நேரத்தைத் தூக்கத்துல கழிப்பியா நீ? எழுந்திருடா முதல்ல.” – அவனது க்வில்ட்டை மொத்தமாக இழுத்தபடி சாதனா.
“ஏய்ய்,ஏய்ய்,ஏய்ய்… இப்படியெல்லாம் சட்டுன்னு உறுவாத! என் ட்ரவுசரும் சேர்ந்து கழண்டுடப் போகுது”
“அடச்சைக் கருமாந்திரமே! பெட்-ஐ விட்டுக் கீழ இறங்குடா முதல்ல”
“ஏய், இந்தக் குளிர்ல காலங்கார்த்தால 6 மணிக்குக் கிளம்பி ரெண்டு மணி நேரம் ட்ரைவ் பண்ணி வந்துருக்கேன். திமிரா உனக்கு?”
“உன்னை யாரு அப்படிக் கஷ்டப்படச் சொன்னது?,சொந்த வீட்ல இருந்து வேலைக்குப் போறதை விட்டுட்டு, எதுக்காகக் கம்பெனி மாறனும்?”
“ப்ச், இப்ப என்ன வேணும் உனக்கு?”
“திஷாவோட டே-கேர்ல ஹாலோவீன் இன்னிக்கு. வா போய்ட்டு வருவோம்”
“நான் வர்ல. எனக்கும் மேக்-அப் போட்டு அசிங்கப்படுத்துவ நீ. நான் வர மாட்டேன்” – உடனடியான மறுப்புக் கிளம்பியது அவனிடமிருந்து.
“ச்ச,ச்ச இல்லடா. நாம ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்துட்டு, பாப்பாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்துடலாம்”
“உன் புருஷனைக் கூட்டிட்டுப் போயேன். என் உயிரை ஏன் வாங்குற?”
“அவர் பிரியாணி பண்றதுல பிஸியா இருக்கார்டா”
“அய்யய்யோ அவரா இன்னிக்கு சமையல்?”
“ஏன், என் புருஷன் சமையலுக்கு என்ன குறை?,அவருக்கு நான் செஃப்.நளன்னு பேர் வைச்சிருக்கேன். தெரியுமா?” – பீத்திக் கொண்டவளிடம்..
“விளங்கிடும்” என்றவன் கட்டிலை விட்டுக் கீழிறங்கியபடியே..
“உன் மாமியாரை சிக்கன் க்ரேவி வைக்கச் சொல்லு” – என்று முணுமுணுக்க..
“என்ன?,என்ன சொன்ன?, சரியாக் கேட்கலயே” – என்று காதைத் தேய்த்துக் கொண்டாள் சாதனா.
அதற்குள் “சாதனா………” என்ற ராஜம்மாவின் குரல் “அவனை சாப்பிட வரச் சொல்லு” என்று ஒலிக்க…
“சிக்கன் மட்டுமல்ல. கடல் வாழ் உயிரனங்கள் எல்லாம் நம்ம வீட்டு டைனிங் டேபிளுக்கு இன்னிக்கு கெஸ்ட்-ஆ வந்திருக்கு. வந்து நல்லாக் கொட்டிக்க” என்று கூறி விட்டு…
“இவ்ளோ பாசமான அம்மாவுக்கு இப்படி ஒரு மகன்” – என்று புலம்பியபடி செல்ல..
“இப்போ என்ன நான் பாசமா இல்லாததைப் பார்த்த நீ?” – என முழுக்குரலில் கத்தியவனை அவள் கண்டு கொள்ளாமல் முன்னே சென்று விட்டாள்.
உர்ரென்ற முகத்துடனே டைனிங் டேபிளில் வந்தமர்ந்தான் கௌதம்.
சமையலறையிலிருந்துப் பாத்திரங்களை எடுத்து வந்து டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்த விக்ரம்..தம்பியைக் கண்டு..
“என்னடா?” என்றான்.
“என்ன?” – கௌதம்.
“ஏன் உர்ருன்னு இருக்க?”
“ப்ச், பேசாம சோத்தைப் போடுங்க”
“மதியத்துக்குத் தான்டா சோறு. இப்போ இட்லி, தோசை தான்”
“அண்ணாஆஆ” – கடுப்புடன் பல்லைக் கடித்தான் கௌதம்.
“இப்போ எதுக்குடா மூஞ்சியைக் காட்டுற?”
“ம்ம், மூஞ்சியை மூடியா வைச்சிருக்கேன். காட்டாம இருக்குறதுக்கு”
“கௌதம்….”
“எல்லாம் உன் பொண்டாட்டி தான். பேசிப் பேசியே டார்ச்சர் கொடுக்குது”
“ஏய்ய் என்னடி சொன்ன அவனை?” – உடனே சாதனாவிடம் பாய்ந்தான் விக்ரம்.
“ஹ்ம்ம், நான் என்ன சொல்லப் போறேன். நான்-வெஜ் எல்லாம் நாறிப் போறதுக்கு முன்னாடி வந்து சாப்பிடுன்னு தான் சொன்னேன்.”
“அது மட்டுமா சொன்ன?, எங்கம்மா மேல எனக்குப் பாசமே இல்லன்னு சொல்லல நீ?” – கோபத்துடன் கௌதம்.
அண்ணனும்,தம்பியும் தன்னிடம் பாய்வதை உணர்ந்து, அத்தையிடம் தஞ்சமடைந்தாள் சாதனா.
“அவ என்னடா தப்பா சொல்லிட்டா?, உண்மை தான அது?, பாசம் இல்லாததால தான இத்தனை நாளா என் கூடப் பேசாம இருக்க நீ?”
“பேசுனா தான்.. உடனே வாட்ஸ்ஆப்-ல பொண்ணுங்க ஃபோட்டோவா அனுப்பி உயிரை வாங்குறீங்களே?” – சலித்தபடி கௌதம்.
“ஆமா, வயசு உனக்குக் கம்மியாவாடா இருக்கு?,கல்யாண வயசுல இருக்குறவனுக்குப்பொண்ணு பார்க்குறது தப்பா?”
“அண்ணா நான் கிளம்புறேன்! நீங்க செஞ்ச பிரியாணியை, உங்க பொண்டாட்டிக்கும்,அம்மாவுக்குமே கொட்டுங்க.” – அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழப் பார்த்தவனின் தோளை அழுத்தி..அமரவைத்த விக்ரம்..
“அவன் வராம இருந்தா வரல,வரலன்னு புலம்ப வேண்டியது, வந்தா.. அவனை சாப்பிடக் கூட விடாம சண்டை போட வேண்டியது! ஏம்மா இப்படிப் பண்றீங்க?” – எனத் தாயை நோக்கிக் கூற..
“நான் ஒன்னும் பேசலடா! இவன் கல்யாணம் பண்ணாலும் சரி, காசிக்குப் போனாலும் சரி! நான் இனி எதையும் கண்டுக்கிறதா இல்ல. இவனை நினைச்சு, நினைச்சே ராத்தூக்கம் இல்லாம, ப்ரெஷர் ஏறிப் போய் அரை மயக்கத்துல நடமாடிட்டிருக்கேன் நான். என்னைப் பத்திக் கொஞ்சமாவது அக்கறை இருக்கா இவனுக்கு?” – கண்ணைக் கசக்கிக் கொண்டவரிடம்..
“அம்மா ராஜாத்தி.. நீயெல்லாம் வைரம் பாய்ஞ்ச கட்டை! உனக்கு அப்படியெல்லாம் எதுவும் வந்துடாது. நடிப்பைப் போடுறதை நிறுத்து” – என்று எரிச்சலுடன் கூறினான் கௌதம்.
“பார்த்தியா சாதனா?,நான் நடிக்கிறேனாம்”
“விடுங்கத்தை. இவனாவே ஒருநாள் உங்களைத் தேடி வந்து..அம்மா, எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கம்மான்னு கதறுவான். அப்போ பார்த்துக்குவோம்.”
“அம்மா..முதல்ல இது பேச்சைக் கேட்குறதை நீ நிறுத்து. ஊர்,உலகத்துல இருக்குற மாமியார்,மருமகளுங்க எல்லாரும் சண்டை போட்டுக்கிட்டு எவ்ளோ ஜகஜோதியா வாழ்க்கை நடத்துறாங்க! நீங்க ரெண்டு பேரும் மட்டும் ஏன் இப்படிக் கூட்டுச்சதி பண்றதுலயே குறியா இருக்கீங்க?”
“வாயை மூடுடா” – சாதனா.
“ஏன், இந்த வீட்ல நீங்க 2 பேர் மட்டும் தான் பேசனுமா?”
“சும்மா இரேன்டா கௌதம்.” – விக்ரம்.
“நீங்க சும்மா இருந்ததால தான் இந்த அளவுல வந்து நிற்குது. ஒரு தடவையாவது ரெண்டு பேரையும் எதிர்த்துப் பேசியிருக்கீங்களா?,அவங்க என்ன சொன்னாலும் தலையாட்டி வைச்சதோட விளைவு தான், என்னையும் உங்கள மாதிரி மாற்றப் பார்க்குறாங்க”
“இப்போ எதுக்கு அவனை இழுக்குற?”-ராஜாத்தி.
“அதான?” – சாதனா.
“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்….”என நெற்றியைத் தேய்த்த கௌதம் “என்னால இதுங்க காம்பினேஷனை சகிச்சுக்கவே முடியலண்ணா” – ரத்தக்கண்ணீர் வடித்தவனைக் கண்டு சிரித்தபடி அவன் தோளைத் தட்டி சாப்பிடச் சொல்லிவிட்டு அருகே அமர்ந்த விக்ரம்..
“அவன் சாப்பிட்டு முடிக்கிறவரைக்கும் ரெண்டு பேரும் வாயைத் திறக்கக்கூடாது” என்று மனைவியையும்,அன்னையையும் மிரட்டினான்.
ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு உண்டு முடித்த சாதனாவும்,கௌதமும் அடுத்த அரைமணிநேரத்தில்.. திஷாவின் டே-கேரை நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தனர்.
“இங்க பாரு, பத்து நிமிஷம் தான். அதுக்கு மேல நான் அங்க உட்கார மாட்டேன்” - கௌதம்
“சரிடா! ரொம்பத் தான் பண்ற!” என்று நொடித்துக் கொண்ட சாதனா தொடர்ந்து “ஏன்டா, அதுக்கப்புறம் நீ காத்ரீனா கூடப் பேசவே இல்லையா?” என்று ஆர்வமாய் வினவினாள்.
அவள் கேள்வியில்..உணர்ச்சியற்று சாலையை வெறித்தவன் “ப்ரேக்அப் பண்ணிக்கலாம்ன்னு தெளிவா சொல்லிட்டுப் போனவ பின்னாடி போய்..கெஞ்சிட்டு நிற்க சொல்றியா? என்றான்.
“ரொம்ப ஃபீலிங்க்ஸ்ல இருக்க போலயே டா?”
“நீ கொஞ்சம் வாயை மூட்றியா?”
“முடியாதுடா.”
“…………”
“கௌதம்…”
“…..”
“அத்தை உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்காங்கடா”
“நினைச்சேன். இன்னும் ஆரம்பிக்கலயேன்னு. என்ன, ஃபோட்டோ காட்டப் போறியா?”
“ஆமாடா”
“கிழிச்சு உன் மூஞ்சிலயே எறிவேன். என் கண்ல காட்டாம மரியாதையா உள்ள வை”
“கௌதம், நான் ஒன்னு சொல்றேன். நீ தப்பா எடுத்துக்காத”
“……….”
“முள்ளை முள்ளால தான்டா எடுக்க முடியும்”
“ஓஹோ!”
“ஆமா, ஒரு லவ் ஃபெயிலரைக் கடந்து வரணும்ன்னா, நீ இன்னொரு லவ்வை ஸ்டார்ட் பண்ணியே ஆகனும்டா”
“அதனால?”
“அத்தை பார்த்திருக்கிற பொண்ணைப் பாரு. பிடிச்சிருந்தா பழகு. நாங்க உன்னை இப்பவேக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தல”
“பார்றா! இது என்ன புது டெக்னிக்கா?”
“கௌ….தம்”
“எனக்கு என்னவோ 35 வயசாகிட்ட மாதிரியும், இப்போக் கல்யாணம் பண்ணாட்டி, இனி எனக்குக் கல்யாணமே நடக்காதுன்ற மாதிரியும் பில்ட்- அப் கொடுக்கிறதை முதல்ல நிறுத்துங்க.”
“அப்படி இல்லடா கௌதம்”
“பின்ன?,என் ஜாதகத்துல தோஷம் இருக்குன்னு சொல்லிட்டாங்களா?”
“டேய்ய்ய்”
“பின்ன எதுக்கு இவ்ளோ அவசரம்?”
“ப்ச், போடா”
“எனக்கு இவ தான்னு விதி ஏதாவது ப்ளான் வைச்சிருக்கும்! அது காத்ரீனாவா இருக்கனும்ன்னு நான் வைச்சக் கோரிக்கையை ரிஜெக்ட் பண்ணிடுச்சு. இனி அது யாரைக் கைகாட்டுதுன்னு பொறுத்திருந்துப் பார்ப்போம்”
“ஆமா, நல்லா பார்த்த நீ! அடப் போடா”
இருவரும் ‘பூபூகிட்ஸ்’ டே-கேருக்குள் நுழைந்த போது.. குழந்தைகள் அனைவரும் விதவிதமான ஹாலோவீன் உடைகளில் அனைவரையும் பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.
திஷாவும் கண்ணுக்குக் கீழே மை அப்பி, அடர்சிகப்பு நிற லிப்ஸ்ட்டிக்கைப் பூசிக் கொண்டு பேயைப் போல் சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள்.
இவனைக் கண்டதும் வேகமாய் கையாட்டியவளிடம் சிரித்து விட்டு இரு கை கட்டைவிரல்களையும் நீட்டி “சூப்பர்” எனக்கூறி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
சாதனா அவனைக் கண்டு கொள்ளாமல் அமெரிக்க ஆங்கிலத்தில் வளவளத்தபடி அங்கிருந்த மம்மிகளுடன் ஐக்கியமாகி விட.. ‘போச்சு!,இது இப்போதைக்கு எழுந்து வராது போலவே.. அண்ணீஈஈஈஈஈ’ என்று பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தான்.
பதினைந்து நிமிடமாகியும் அவளது டிஸ்கஷன் தீராமலிருக்க, திஷாவிடம் கை காட்டினான், அன்னையை அழைத்து வரும்படி.
அவள் மகளையும் அசட்டை செய்து விட்டு ஆர்வமாக ஆன்ட்ரியாவுடன் அளவளாவிக் கொண்டிருக்க,உதட்டைப் பிதுக்கி ‘அம்மாவை இப்போதைக்குக் கிளப்ப முடியாது சித்தா, சாரி’ என்று விட்டாள் திஷா.
எழுந்து நின்று அவன் சாதனாவை முறைத்ததும் “ப்ளீஸ்,ப்ளீஸ் 5 மினிட்ஸ்” என்று கெஞ்சியவளிடம் “நல்லா.. ஆப்ப வாயை வைச்சுக்கிட்டு, போற இடத்துலலாம் தட்டு,தட்டா சுட்டுப் போட்றதை வழக்கமா வைச்சிருக்கிற நீ!” என்று அவன் சைகை காட்டித் திட்ட…
ஈஈஈஈஈயெனச் சிரித்து “நன்றி” கூறி விட்டு ஆன்ட்ரியாவுடன் ஆப்பிள்-பை-யைப் பற்றிப் பேசத் தொடங்கி விட்டாள் சாதனா.
எரிச்சலுடன் சுற்றி சுற்றிப் பார்த்தவன், அங்கிருந்த காரிடாரின் கடைசி மூலையில் ‘பூபூகிட்ஸ்-ஸ்டுடியோஸ்’ எனப் பெயர் பலகையிட்டிருந்த அறையையிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு அதனருகே சென்றான்.
வழியில் தென்பட்டக் குழந்தைகளனைத்தும் ‘ஹாப்பிஹாலோவீன்’ எனப் பயமுறுத்த..சிரித்துப் பதில் வாழ்த்துக் கூறியபடி..பாக்கெட்டுக்குள் கைவிட்டுக் கொண்டு நடந்தவன்..ஸ்டூடியோ வாசலிலிருந்தக் கண்ணாடிக் கதவின் வழி உள்ளே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தக் குழந்தைகளோடு நின்றுத் தானும் நோக்கினான்.
“Old macdonald had a farm”- என்கிற குழந்தைப் பாடல் ஒன்றை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒலித்த சத்தத்திற்கு வாசலில் நின்றபடி..இங்கே பாடிக் கொண்டிருந்தக் குழந்தைகளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.
அந்தப் பாடலில் வரும் விலங்குகளைப் பிரதிபலிக்கும் வண்ணம், அதற்கேற்ற உடைகளில் தோன்றிய அறுவர் குழு..குழந்தைகளுக்குப் புரியும்படி வார்த்தைகளை வாயில் மட்டுமல்லாது, கண்ணிலும், பாவனையிலும் கூட உச்சரித்துக் கொண்டிருந்தனர்.
அவன் வந்து நின்ற போது.. பூனைக்கான வரி ஓடிக் கொண்டிருந்தது.
முகம் மட்டும் தெரியும்படி, தலை முதல் கால் வரை..வெள்ளையும்,கருப்புமாக பூனைக்கான உடையணிந்திருந்த பெண்ணின் சிறிய மூக்கில் கருப்பு மை தடவப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்த கன்னத்திலும் பக்கத்திற்கு மூன்றாகக் கோடுகள்..பூனை முடிகளைப் போல் தீட்டப்பட்டிருந்தது.
“on his farm, he had some cats.. e I o..
With a meow meow here and a meow meowthere..
Here a meow, there a meow, everywhere a meow, meow..”
தன் ப்ரௌன் நிறக் கண்களையும், இல்லாத மூக்கையும் சுருக்கிக் கொண்டு மியாவ்,மியாவ் என்றவள்.. முழுப் பல் வரிசையையும் காட்டி சிரிப்புடன் தாவி,ஆடிக் கொண்டு பாட..
அந்தப் பெண்ணின் முக பாவங்களையே பார்த்துக் கொண்டிருந்த கௌதமிற்கு சட்டெனப் பொறி தட்ட..ஒருமுறை அவள் முகத்தை உற்று நோக்கியவன்..அடுத்த நொடி.. கண்ணும்,வாயும் ஒரு சேரப் பிளக்க.. அசைவற்று நின்று விட்டான்.
இப்போது அவள், தன் உடன் நின்றிருந்தவர்களின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு..ஆடிய படி “Old macdonald had a farm,.. e I e I ooo” எனப் பாடிக் கொண்டிருந்தாள்.
உதட்டில் கட்டம் கட்டியிருந்த சிரிப்பு..அவள் முகத்தையே வட்டம் போட்டிருந்தது.
குழந்தைப் பாடல் என்பதாலோ என்னவோ..வயதின் வரைமுறையை வட்டிக்கு விட்டுவிட்டுத் தலை முதல் கால் வரை சிறுபிள்ளைத்தனம் தாண்டவமாட..குழந்தையாகவே மாறிப் போய்.. துள்ளிக் குதித்து சிரித்தபடி பாடிக் கொண்டிருந்தாள்.
காட்டுப்பூனை என அவன் பெயர் வைத்ததின் அர்த்தத்தை மாற்றி..இல்லை, இல்லை, அகராதியையே மாற்றி..
தூக்கிக் கையில் வைத்துக் கொஞ்சத் தோன்றும் சாதுவான வீட்டுப் பூனையாக… அவன் கண் முன்னே கொஞ்சிக் கொண்டிருந்த டிஷ்யூம் என்கிற திவ்யா சொரிமுத்துவை வாயில் ஈட்டியை நுழைத்தாலும் உணர முடியாத..உச்சகட்ட ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
அடுத்தடுத்த டேக்-குகள் எடுக்கப்பட..சற்றும் சோர்வடையாமல்..உடனிருந்தவர்களுடன் திறந்த வாய் மூடாமல் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் நின்றிருந்தவளைக் கண்டு..அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
காலைச் சாப்பாடாக உப்புமாவைத் தின்றவள் போன்று எப்போதும் உக்கிரநிலையில் அலுவலகத்துக்குள் நுழைபவள், மாலை, கடையைச் சாத்தும் வரை அவ்வளவு எளிதில் சாந்தியடைவதில்லை.
உடன் பணி புரியும் ஒருவரிடமும் சம்பிரதாயத்திற்காகக் கூடப் புன்னகை புரியாதவள் அவள்.சீனியரோ,ஜூனியரோ வேலை தொடர்பான உரையாடலைத் தவிர.. சாதாரணப் பேச்சு வார்த்தைகள் எதிலும் பங்கு கொண்டதில்லை.
அச்சுக்குள் அடைபட்டுக் கிடக்கும் களிமண்ணைப் போல்..வடிவம் மாறாமல்..ஒரே நிலையில் வலம் வருபவள்..இன்று சிறுபிள்ளையாய் சிரிப்பதென்ன, ஆட்டுக்குட்டியாய் ஆடுவதென்ன..!
ஆச்சரியம் குறையாமல் நின்றிருந்தவனின் காலைச் சுரண்டினாள் திஷா.
“என்ன பேபி?” – கௌதம்.
“வீட்டுக்குப் போகலாம்ன்னு அம்மா சொல்றா”
“கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம்ன்னு சித்தப்பா சொன்னேன்னு சொல்லு போ”
“ஓகே” – என்றபடி ஓடிச் சென்றவள் மீண்டும் வந்து..
“10 நிமிஷத்துக்கு மேல இருக்கமாட்டேன்னு சொல்லிட்டு, இப்போ நீங்க ஏன் லேட் பண்றீங்கன்னு அம்மா கேட்குறா”
“அது ஒரு கேள்வியின் நாயகி பாப்பா. அப்படித்தான் கேள்வியா கேட்கும்.நீ அம்மாகூட வீட்டுக்குப் போ. சித்தா அப்புறமா வர்றேன்”
“நீயும் வா”
“இல்லடா பேபி! சித்தாவுக்கு முக்கியமான வேலையிருக்கு. பசுத்தோல் போர்த்தியிருக்கிற புலியோட உண்மையான சொரூபத்தை உலகத்துக்குக் காட்ட வேண்டிய கட்டாயத்துல சித்தப்பா இருக்கேன். அதனால நீ போயிட்டு வா”
என்ன புரிந்ததோ! “ஓகே” என்றவள் ஓடி விட்டாள்.
அடுத்த நிமிடம் சாதனாவிடமிருந்து ஃபோன் வந்தது.
“ஹலோ” – கௌதம்.
“என்னடா பண்ற?,கிளம்பு வீட்டுக்குப் போகலாம்”
“நான் வர்ல. என் ஃப்ரெண்ட் ஒருத்தனை மீட் பண்ணனும். நான் பார்த்துட்டு வர்றேன். நீ கிளம்பு”
“ம்ம், வரும் போது இப்படியொரு ப்ளான் இருக்குறதா நீ சொல்லவே இல்லையே!”
“ப்ச், இப்போ சொல்றேன். அதனால என்ன?”
“எதுக்குடா கத்துற இப்போ?”
“நொய்நொய்ன்னு கேள்வி கேட்காம ஃபோனை கட் பண்ணு”
“டேய்..டேய்..டேய்..இருடா வைச்சிடாத. ஏதோ பசு,புலின்னு பாப்பாக் கிட்ட கதை சொல்லி விட்ருக்க. என்னடா பண்ற நீ?,உண்மையைச் சொல்லு”
“ஏய், கேள்வி கேட்குறதை நிறுத்திட்டு வீட்டுக்குப் போய் உன் புருஷன் செஞ்சு வைச்சிருக்கிற பிரியாணியைக் கொட்டிக்க போ” – என்றவன் ஃபோனைக் கட் செய்து விட்டு அங்கேயே நின்றான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவள் வெளியே வந்தாள்.
நீளமாய் ஒரு மேக்ஸி, நான்கு இஞ்ச் ஹீல்ஸ், குளிருக்கு இதமாக ஒரு ஜாக்கெட்! மனதிற்கு இதமாக ஒரு புன்னகை!முழுதாய் அவளை நிறைத்திருந்தது.
திஷாவிற்காக வாங்கி வைத்திருந்த பார் சாக்லெட் ஒன்றைச் சுவைத்தபடி..அவள் வண்டியில் சாய்ந்து நின்றிருந்தவன்..தன்னை நோக்கி நடந்து வருபவளின் மீதிருந்து ஒரு நொடி கூடப் பார்வையை அகற்றவில்லை.
அகத்தின் மலர்ச்சி முகத்தில் பிரதிபலிக்க..புதிதாய்ப் பூத்தப் பூவாய்..பூனைக்கண்கள் ஜொலிக்க.. நடந்து வந்தவள்..சராசரி மனித இனம் தான் என்பதை கௌதம் அந்த நொடி உறுதி செய்திருந்தான்.
அருகே நெருங்க,நெருங்க, தன் வண்டியின் முன் நிற்பவனைக் கண்டுகொண்டவளுக்கு.. அதுவரையிலிருந்த மலர்ச்சி மறைந்து போக..அகத்தை அகற்றி..முகத்தை மாற்றி..வழக்கமான கார்ப்பரேட் காளியம்மாவாக அவனிடம் வந்து நின்றாள்.
அவள் முகம் காட்டிய மாற்றத்தைக் கண்டு உதட்டை வளைத்தவன்..
“அந்நியனா நீங்க?” என்றான்.
“சாரி??” – புருவத்தை நெரித்து எரிச்சலைக் காட்டி..மூக்கு விடைக்க..உதட்டை இறுக்கி அவள் கேட்ட விதம்..கடுப்பைக் கொடுக்க…
“Old macdonald had a farm, e i e i o” – என்றான் அவளைப் போலவே.
அவன் செய்கையால் விழிகளில் ஒரு நிமிடம் எட்டிப் பார்த்து விட்டுப் போன சிரிப்புடன் அவன் முகத்தை நோக்கியவள்..
“சோ?” என்றாள்.
“காலைல இருந்து சாயந்தரம் வரைக்கும் எந்நேரமும் பாய்லர் மாதிரி கொதிநிலையிலயே ஆஃபிஸ்க்குள்ள சுத்துவீங்களே! இது என்ன புது அவதாரம்?,சின்னப்புள்ள மாதிரி ரைம்ஸ் பாடிட்டிருக்கீங்க?”
“நீங்க கேள்வி கேட்டா நான் பதில் சொல்லுவேன்னு எப்போ சொன்னேன்?”
“பின்ன?,சொல்ல மாட்டீங்களா?, உங்க பதிலைத் தெரிஞ்சுக்கிட்டாக வேண்டிய கட்டாயத்துல நாங்க இருக்கோம்”
“நாங்க-ன்னா?”
“உங்களுக்குக் கீழ வேலை செய்யுற உங்க அடிமைங்க அத்தனையும் தான்”
“……………”
“என்ன?,அமைதியா நிற்குறீங்க?”
“வழி விடுங்க. நான் கார் எடுக்கனும்”
“முடியாது”
“வாட்?”
“எனக்கு நீங்க பதில் சொல்லுங்க முதல்ல”
“என்ன பதில்?”
“எப்போ இருந்து நீங்க சிரிக்கக் கத்துக்கிட்டீங்க?,ஆடுறது, பாடுறதெல்லாம் எப்படி வந்தது?, ஸ்பிலிட் பர்சனாலிட்டியா நீங்க?”
“…………”
“அதை விடுங்க! ஆஃபிஸ்ல இருக்குறவங்களோட இதே மாதிரி சிரிச்சு சாதாரணமா பழகுறதுல என்ன பிரச்சனை உங்களுக்கு?”
“கௌதம், யூ ஆர் க்ராசிங் யுவர் லிமிட்”
“எத்தனை முறை நீங்க உங்க லிமிட்டை க்ராஸ் பண்ணி கோ-வர்க்கர்ஸ்க்குத் தலைவலியைக் கொடுத்திருக்கீங்க தெரியுமா?”
கையைக் கட்டிக் கொண்டுப் பொறுமையற்று எரிச்சலுடன் நெற்றியைச் சொரிந்தவள்..பின் நிமிர்ந்து..
“லுக் கௌதம்! அது என்னோட வர்க்கிங் ஸ்டைல்! அதை கமெண்ட் பண்ணுங்க! பண்ணாதீங்க! அதனால எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பிடிக்கலைன்னு நினைக்குறவங்க, தாராளமா வேலையை விட்டுப் போகலாம்! யாரையும் நீ என் கீழ தான் வேலை பார்க்கனும்ன்னு கம்பெல் பண்ற அதிகாரம் என்கிட்ட இல்ல. நான் அப்படித்தான். அதுல எந்த மாற்றமும் கிடையாது. ஓகே?, அண்ட் இன்னொரு தடவை இந்த மாதிரி என்கிட்டக் கேள்வி கேட்குற வேலை வைச்சுக்காதீங்க. எப்பவுமே நான் பொறுமையா பதில் சொல்லிட்டிருக்க மாட்டேன்” – என்றவள்..அவனை முறைத்து விட்டு ‘நகர்ந்துசெல்’ எனக் கை காட்ட..
வேறு வழியின்றி நகர்ந்தவனுக்கு..அவளை நிறுத்தி வைத்து..தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் வழக்கத்தைப் பற்றிப் பக்கம்,பக்கமாய் விவரித்து விடும் வேகம் தான் என்றாலும்.. அடக்கிக் கொண்டு அமைதியாய் நின்றான்.
அப்படியும் அவளைச் சீண்டி விடும் நோக்கத்துடன்..
“இப்பவே ஃபோன் பண்ணி ஆஃபீஸ் முழுக்க பரப்புவேன்” – என்றான்.
என்னவென்பதைப் போல் நிமிர்ந்து பார்த்தவளிடம்..
“e i e iooooo” – என்று அவன் பாடிக் காட்ட..நக்கலாய் உதட்டை வளைத்தவள்..
“அப்படியே பூபூகிட்ஸ்ன்ற யூடியூப்சேனலையும் சப்ஸ்க்ரைப் பண்ண சொல்லிடுங்க. விளம்பர செலவு மிச்சம்.” என்று கூறி விட்டு..அவன் பல்லைக் கடித்துக் கொண்டு நிற்பதை சட்டை செய்யாமல்..வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்து விட்டாள்.
பொறுமலும்,எரிச்சலுமாய் வீடு வந்து சேர்ந்தவனை சந்தேகமாய்ப் பார்த்தபடி சாதனாவும்,ராஜாத்தியம்மாளும் வரிசையாய் வந்து நிற்க.. இருவரையும் முந்திக் கொண்டு முன்னே வந்த விக்ரம்..
“தம்பி…..அண்ணன் உனக்காக பிரியாணியும்,கோழிவறுவலும் சமைச்சுருக்கேன். வா..மொச்சுக்,மொச்சுக்குன்னு சாப்பிடுவோம்” – எனக் கூறி அவனைத் தள்ளிக் கொண்டு சென்று விட்டான்.
தன்னையே குறுகுறுவென நோட்டம் விட்டுக் கொண்டிருந்த இருவரையும் கண்டு கொள்ளாமல் உண்டு முடித்த கௌதம், தன்னுடன் விளையாட அழைத்தத் திஷாவின் கையைப் பற்றிக் கொண்டு அவளறைக்குள் நுழைந்தான்.
“சித்தா.. இங்க பாரு! நியூபார்பி! இது பாட்டு பாடிட்டே டான்ஸ் ஆடும். தெரியுமா?” – எனக்கூறித் தன் கையிலிருந்த பொம்மையை அவள் இயக்க..
“ஹ்ம்ம், உனக்கும்,உங்கம்மாவுக்கும் என் அண்ணன் காசைக் கரியாக்குறது தான் வேலையே!”என்றான் கௌதம்.
“கரி-ன்னா என்ன சித்தப்பா?”
“ஹ்ம்ம், வாரக் கடைசியான உங்கப்பா சமைச்சுக் கொட்டுறாரே! அதான்!” – என்றவன் அவள் அறையைச் சுற்றி நடந்தபடி..டெட்டி பொம்மையை எடுத்து ஃபுட்பால் ஆட..
“சித்தாஆஆஆஆ..அவன் என் ஹாரி! காலால மிதிக்காதீங்க” என்றுத் திட்டியவள்..அவன் காலைப் பற்றித் தள்ள..
எதிரிலிருந்த கப்-போர்டில் இடித்துக் கொண்டான்.
அப்படியும் அடங்காமல் “அடியைப் போடுறதுல நீ உங்கம்மா மாதிரி பாப்பா” என நக்கலடித்தவனின் கண்ணில்… திஷாவின் டே-கேர் புகைப்படம் கண்ணில் பட்டது.
குழந்தைகளனைவரும் விலங்குகளைப் போல வேடமிட்டு..ஆளாளுக்கொருபுறம் சிரித்துக் கொண்டும்,ஆடிக் கொண்டும் நிற்க..
வாத்து போல மஞ்சள் உடை அணிந்திருந்தத் திஷாவைக் குனிந்தபடி அணைத்துக் கொண்டு நின்ற பூனை உடைப் பெண்ணைக் கண்டு..அந்த ஃபோட்டோவைக் கையில் எடுத்தான் கௌதம்.
திவ்யா தான் அது. இன்று காலையில் அணிந்திருந்த அதே பூனை உடையிலிருந்தாள். உதட்டில் அதே சிரிப்பு! கண்களில் அதே ஜொலி,ஜொலிப்பு!
“யார் பாப்பா இது?” – புகைப்படத்தைப் பார்த்தபடி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவனின் கையைப் பற்றி இழுத்து..அவனைக் குனியச் செய்தவள்… அவன் கைக் காட்டிய நபரைக் கண்டதும்..அகலமாகச் சிரித்து..
“இது… மிஸ்.கேட் (மிஸ்.பூனை)” என்றாள்.
“ப்ச், பாப்பா.. அவங்க போட்டிருக்கிற டிரெஸ் பூனைன்னு எனக்கும் தெரியுது. இவங்களை எப்படி உனக்குத் தெரியும்?,இவங்க பேர் என்ன?”
“அவங்க பேர் மிஸ்.கேட் தான் சித்தா. அப்படித் தான் சொன்னாங்க. எனக்கு நிறைய சாக்லேட்ஸ் கொடுத்தாங்க”
“ஓஹோ!”
“ஆமா..”
“அப்புறம் வேற என்ன சொன்னாங்க?,”
“நான் என் பேரைச் சொல்லி இன்ட்ரொடியூஸ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே!,உன் பேரு திஷா தானன்னு கரெக்டா கேட்டாங்க சித்தா”
“ஹ்ம்ம்” என்றவன்..புகைப்படத்திலிருந்தத் தேதியைப் பார்த்தான்.
மூளை கால்குலேட்டராக மாறி, சில பல கணக்குகளை சரி பார்த்தது.
கார் சம்பவத்திற்குப் பிறகான தேதி அது.
“வேற என்ன சொன்னாங்க?”-கௌதம்.
“ஹக் பண்ணாங்க, கிஸ் பண்ணாங்க, யூ லுக் சோ க்யூட் சொன்னாங்க”
“என்கிட்டயும் தான். அப்புறம்?”
“அவ்ளோதான் சித்தா” – திஷா எரிச்சலாகி விட்டாள் போலும்.
அதன் பின் அவள் ஓடி விளையாடத் துவங்கியதும்..அவளது கவனத்தைக் கவராமல்..அவனுடைய கைப்பேசி.. வாத்தையும்,பூனையையும் தனக்குள் பதிவு செய்து கொண்டது.
அந்த வார இறுதியில்..கௌதம் ப்ரசண்ட் செய்த ப்ராஜக்ட்டிற்கான கான்ட்ராக்ட் கையெழுத்திடப் பட்டதற்காக நிறுவனத்தின் சார்பில் பணியாளர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.
மது,ஆட்டம்,பாட்டமென கேளிக்கைகளுக்குப் பஞ்சமில்லாத அன்ப்ரஃபசனல் பார்ட்டி அது!
ஆண்கள் பலரும் கையில் குவளையும்,குமரியுமாக வலம் வர.. ஜான்சியும், ஜேகப்பும் அனைவரையும் கலாய்த்த படி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தனர்.
“வில்லியம்ஸ் வாய் வீங்கிப் போயிருக்கிறதைப் பார்த்தியா ஜான்?,காரணம் அந்த ஷெரீனாவோட கிஸ்ஸா இருக்குமோ”
“உங்க வார்த்தைகள்ல லைட்-ஆ பொறாமை தெரியுதே ஜாக்”
“அந்த ஷெரீனா போன மாசம் வரைக்கும் என் ஆளு.”
“ஒன் சைட் லவ்-ஆ?”
“ஆமாமா! அவளுக்குப் பல சைட் லவ் இருக்குன்றது அப்புறமா தான் தெரிஞ்சது”
“வாயை மூடுங்க ஜாக். வில்லியம்ஸ் வாயை வீங்க வைச்ச மாதிரி, உங்க மூஞ்சியை வீங்க வைச்சிடப் போறா”
“செஞ்சாலும் செய்வா. ம்க்க்க்க்க்கும்” – என்றவன் தூரத்தில் அமர்ந்திருந்த கௌதமைக் கத்தி அழைத்தான்.
“கௌதம்..”
“என்ன மேன்?”
“இங்க வா”
“எதுக்கு?”
“என் தங்கச்சி உன்கிட்ட ஏதோ சொல்லனுமாம்”
“செருப்புப் பிஞ்சிடும்” – ஜான்சி.
“சொல்லுங்க ஜான்சி” – உடனே அருகே வந்தமர்ந்தவனைக் கண்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்து..
“பொண்ணுங்கக் கூப்பிட்டாத்தான் வர்றீங்க. என்னடா?” – என ஜாக் கலாய்க்க..
“ஆமா. ஏன், உங்களை எவளும் கூப்பிடலையா?” என்றான் கௌதம்.
“அமெரிக்காவுல வசிக்குற ஆஞ்சநேயரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க?” – என்று ஜான்சி தன் பங்குக்கு ஜாக்கை வார...
“ஹாஹாஹாஹா” –வெனச் சிரித்தான் கௌதம்
“சரி, நீங்க ஏன் சிங்கிளா உட்கார்ந்து சிங்கி அடிச்சிட்டிருக்கீங்க?”
தன்னிடம் கேள்வி கேட்ட ஜான்சியிடம் புன்னகைத்தவன்..எதுவும் கூறாமல்..ஸ்காட்ச்சை உள்ளே தள்ள..
“ஹலோ! கேள்வி கேட்குறோம்ல?” என்று அதட்டினாள் ஜான்சி.
“நான் முக்கியமான ஒருத்தருக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கிறேன்” என்று கூறியவன் திரும்பி வாசலை நோக்கினான்.
அந்தப் பப்பிலிருந்த மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தை ஊடுருவியபடி..உள்ளே நுழைந்த உருவமொன்று..அரவமின்றி..ஒரு ஓரமாக..ஒற்றை இருக்கையொன்றில் அமர்ந்துவிட..எழுந்து அதை நோக்கிச் சென்றான் கௌதம்.
ஒரு டெனிம் ஷர்ட்டும், கருப்பு ஜெக்கிங்க்ஸூமாக அமர்ந்திருந்தத் திவ்யாவின் தலை நூடுல்ஸைக் கொட்டி வைத்தது போல்..முடி முழுக்க..நெளிந்து..நெகிழ்ந்து கிடந்தது.
அவன் அருகே சென்று நின்றதும்..திரும்பி அவனை நோக்கினாள் அவள்.
ப்ரௌன் நிற விழிகளில்..தீட்சண்யம் குறைந்து..தூக்கமும், மயக்கமும் நிறைந்திருந்தது.
சோர்ந்து,களைத்திருந்த முகத்தைக் கண்டவன்..
“குடிச்சிருக்கீங்களா?” என்றான்.
புருவத்தைச் சுருக்கி அவனை ஒருவிதமாக நோக்கி விட்டு… “ப்ச்” என்றபடித் திரும்பிக் கொண்டாள் அவள்.
அதை அசட்டை செய்து விட்டு அவளருகே அமர்ந்தான்.
“எல்லாரும் பப்-க்கு வந்தப்புறம் தான் குடிப்பாங்க, நீங்கக் குடிச்சிட்டு பப்க்கு வந்திருக்கீங்க போல”
“அதனால என்ன இப்போ?”
“அப்டின்னா..நிஜமாவே குடிச்சிருக்கீங்களா?”
“………….”
“இல்ல. நீங்க குடிக்கலன்றது பார்த்தாலே தெரியுது. அப்புறம் ஏன் டல்-ஆ இருக்கீங்க?”
“கௌதம்”
“சொல்லுங்க”
“நான் எல்லா நேரமும் பொறுமையா இருக்க மாட்டேன்”
“அதனால?”
“எழுந்து போ”
“மாட்டேன்”
“…………”
அவள் அமைதியைக் கையில் எடுத்துக் கொண்டு சுற்றுப்புறம் வெறிக்க..அவன் அவளை வெறித்தான்.
அந்த நூடுல்ஸ் மண்டை அவளுக்குப் பொருத்தமாக இருப்பதைப் போன்றொரு உணர்வு அவனுக்கு.
“ம்க்கும்” எனச் செறுமியபடிப் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
விழியைச் சுழற்றினால்… காந்தக் கண்ணழகிகள் சூழ்ந்திருக்கும் கடம்பவனம் அது! அதை விட்டுவிட்டு..இந்தப் பூனைக் கண்ணழகியை உற்றுப் பார்ப்பதா?
30-களிலிருக்கும் ஆன்ட்டி ரகம் இவள்! நாக்குப்பூச்சி சைஸில் இருப்பதால்.. வயதை மறந்துவிட முடியுமா என்ன?
தலையைக் கோதியபடித் தரையை நோக்கியவன் பின் தன் கையிலிருந்த செல்ஃபோனை எடுத்து ஒரு ஃபோட்டோவை அவளிடம் நீட்டினான்.
அவனையும்,புகைப்படத்தையும் மாறி,மாறிப் பார்த்து விட்டு..
“என்ன?” என்றாள்.
“இது யாரு?” – அவளைக் காட்டிக் கேட்டான்.
“நான் தான்”
“இது யாரு தெரியுமா?” – இப்போது திஷாவைக் காட்டினான்.
“யாரு?”
“என் அண்ணன் பொண்ணு.”
“ஓஹோ!”
“நடிக்காதீங்க. உங்களுக்கு அவளைத் தெரியாது??”
எரிச்சலுடன் கத்தியவனைப் பொருட்படுத்தாமல் கையிலிருந்தக் குளிர்பானத்தைப் பருகினாள் அவள்.
“என்ன தெரியனும் உனக்கு?” – பொறுமையாய்க் கேள்வி கேட்ட படி அவள்.
“நீங்க தான அது?”
“எது?” – கண்ணில் மின்னல் வெட்டியக் குறும்புடன் வினவியவளிடம்..
அவன் பதில் கூறத் தொடங்குகையில்…
“ஹா……..ய் தி…..வ்…யா” – என்று குளறிய படி வந்த ஒருவன்.. அமர்ந்திருந்தவளின் மீது சரிந்து விழுந்தான்.
“ஹேய்ய்..” என்ற படித் துள்ளி எழுந்து..அவள் மீது கவிழ்ந்து கிடந்தவனை விலக்கிய கௌதம், கடுப்புடன் அவன் முகத்தைத் திருப்ப..
பட்டென அவன் கைகளை விலக்கிய திவ்யா..அந்தக் குடிகாரனின் முதுகைப் பற்றித் தூக்கி..அவனது ஒரு கையைத் தன் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டு..வேடிக்கை பார்த்த ஆஃபிஸ் கூட்டத்தைக் கண்டு கொள்ளாமல்..வாசலை நோக்கி நடந்தாள்.
இடுப்பில் கை வைத்துக் கொண்டு எரிச்சலுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தக் கௌதமின் அருகே வந்த ஜாக்..
“நான் சொன்ன ஆள் இவன் தான். சாரி இவர் தான்” என்றான்.
“என்ன சொன்னீங்க?”
“டிஷ்யூமோட பாய்ஃப்ரெண்ட்”
“………….” – சட்டென முகம் இறுகிப் போனது அவனுக்கு.
“ஆக்சுவலி அவர் பாய் இல்ல. அங்கிள். ஆண்ட்டிக்கு ஏத்த அங்கிள்”
“…………”
“நான் நினைக்குறேன். மேடமோட சொந்த ஊரு கூத்தியார்குண்டா இருக்குமோன்னு”
“ஜாக்…” – மிதமிஞ்சிய எரிச்சலில் அடிக்குரலில் மிரட்டியவனிடம்..
“நம்ம ப்ரோக்ராம் டைரக்டர் மிஸ்டர்.ஷர்மாவுக்கு 40 வயசு. கல்யாணமாகிக் குழந்தை,குட்டியெல்லாம் இருக்கு. ஆனா வைஃபை விட்டுப் பிரிஞ்சு வாழ்றாரு. காரணம், நம்ம டிஷ்யூம்.”என்றான் ஜாக்.
“……………..”
“அதாவது… டிஷ்யூம் தான் ஷர்மாவோட சின்ன வீடுன்னு சொல்றேன்” – என்று அவன் முடிப்பதற்குள்..
“ஜஸ்ட் ஷட் அப்…” என்றபடி அவனது சட்டைக் காலரைப் பற்றிய கௌதம்..முழுக்கோபத்துடன் அவனை உலுக்கி விட்டு..விறுவிறுவென நடந்து வெளியே சென்று விட்டான்.
அவசரமாய் அவன் கார் பார்க்கிங்கிற்கு வருகையில்..அந்த ஷர்மாவைத் தன் காருக்குள் ஏற்ற அவள் அரும்பாடுபட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.
ஓடிச் சென்று அவளருகே நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
அதுவரைத் தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்தக் காட்டெருமையை தம் கட்டி நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தவள், அவனைக் கண்டதும்..பல்லைக் கடித்தபடி..
“ஹெல்ப் பண்ணப் போறதில்லையா நீ?” – என்று வினவினாள்.
கண்களை இறுக மூடித் திறந்து..நெற்றியைத் தேய்த்தவன்..பின் ஒரு கையால் அவனைப் பற்றித் தன்புறம் இழுத்து..அவளது காருக்குள் கிடாசி விட்டுக் கதவை அடைத்தான்.
விறுவிறுவென ஓட்டுநர் இருக்கைக்குச் செல்லவிருந்தத் திவ்யாவை“ஒருநிமிஷம்” என நிறுத்தினான்.
“எங்க கூட்டிட்டுப் போறீங்க இந்தாளை?,உங்க வீட்டுக்கா?, இல்ல அவர் வீட்டுக்கா?”
அசராமல் கேள்வி கேட்டவனை.. முறைத்தாள் அவள்.
“விட்டுட்டுக் கிளம்பிடுவீங்களா?,இல்ல இந்தாளோடவே தங்கிடுவீங்களா?”
“ஷட்அப்.. யூ ப்ளடி.. இடியட்..” – சுற்றத்தில் உஷ்ணத்தைக் கூட்டிவிடும் நோக்கத்துடன் புசு,புசுவென மூச்சுக்காற்றை வெளியிட்டு.. முழுக்கோபத்துடன் கிறீச்சிட்டவள்.. தன் பூனைக் கண்களில் வன்மம் தெறிக்க.. அழுத்தமாய் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு நகரப் பார்க்க..
சட்டென அவள் கையைப் பற்றி நிறுத்தினான் அவன்.
மணிக்கட்டின் மென்மை முகுளத்தைத் தாக்க..உள்ளே எழுந்த சிலிர்ப்பில்..பற்றியிருந்த அவள் கையை ஒரே இழுப்பில் இழுத்து..அவளைத் தன்னருகே வரச் செய்து..அவளது வலது கன்னத்தின் ஓரத்தில்..தன் ஐவிரல்களையும் முழுதாய்ப் பதித்தான் அவன்.
ஆச்சரியமும்,குழப்புமுமாக விழிகளை அகல விரித்தவளிடம்…
“ஊர்ல எவன் குடிச்சாலும், இப்படித் தான் கார்ல அள்ளிப் போட்டு போய்டுவீங்களா?” தன் முகத்திற்கு வெகு அருகே.. அசைந்த அவன் உதடுகளைக் கண்டு..
தன் கருமணிகளை இடப்புறம் அசைத்து… ஆச்சரியத்தைக் குறைத்து..நடப்புக்குத் திரும்பியவள்..அவனிடமிருந்துப் பார்வையை விலக்காது..அவன் விரல்களைப் பற்றி..ஒடிக்காத குறையாக..நெரித்து..
“ஆமா. அதுல நீயும் ஒருத்தன் தான்றதை எப்பவும் மறக்காத” எனக் கடித்தப் பற்களுக்கிடையே கூறி விட்டு..கதவைத் திறந்து கொண்டு வண்டியில் ஏறியமர்ந்தாள்.
