அத்தியாயம் - 6
மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத்தான்..
முத்துத் தான் உடல் பட்டுத்தான்..
என்று தொட்டுத்தான்..
கையில் இணைத்தான்… வளைத்தான்..
சிரித்தான்..அணைத்தான்..
‘ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு’-எனத் தத்துவம் பேசிய கண்ணதாசனால்.. எப்படித் திடீரென.. இளமையும்,அழகும்.. காதலும்,கனவும்.. ஆசையும்,நாணமும் நிறைந்த.. பெண்ணாக உருமாறி.. அவள் எண்ணத்தை, அதன் வண்ணத்தைக் கவியாக வடிவேற்ற முடிந்ததோ தெரியவில்லை!
பேரழகிகள் இருவர் கை கோர்த்தபடி திரையைச் சுற்றி வரும் கண் கொள்ளாக் காட்சி அது! சீண்டுபவளுக்கும், சீண்டப்படுபவளுக்கும் ஒரே நிலை தான்! விழித்திரைக்குள் விடாது படம் ஓட்டுபவனிடம் மொத்தமாய் தன்னைப் பறி கொடுத்து விட்டு..தயக்கமுமாய்,மயக்கமுமாய் உலா வரும் மனதின் மலர்ச்சி!
காண்போரின் ரசனையை முழுமையாய்த் தங்களது கண்களுக்குள் கட்டி இழுத்து முடி போட்டு வைத்துக் கொள்கிறார்கள் பெண்கள் இருவரும். காட்சி முடியும் போது தான் முடிச்சு அவிழும் போலும்! அதுவரை திரையை விட்டு அத்தனை எளிதில் பார்வை நகர்ந்து விடுவதில்லை!
மெல்லிசை மன்னர் தனது மெல்லிய இசையை..நம் காதுகளுக்குள் வடிய விட..கண்ணதாசனின் வரிகள்..அதில் மிதந்து.. நனைந்து.. மென்மையாய்.. நம் மனதை வந்தடையும் போது. .நாம் சொர்க்க புரியில்..சொப்பனம் கண்டு கொண்டிருப்போம்!
பாடல்: அத்தான் என் அத்தான்..
படம்: பாவ மன்னிப்பு
காற்றுப் புகாத பெட்டகத்துக்குள் அடைபட்டுக் கிடக்கும் உணர்வு! மூளை மதியிழந்து, மங்கி மண்ணாகிப் போன நிலை!ஆக்ஸிஜனுக்கு ஏங்கும் நுரையீரல்களின் தேவை நிராகரிக்கப்பட்டு விட்டத் தவிப்பு! அடைப்பை உடைத்துக் கொண்டு வெளியேற முனைந்த கைகளையும், தடுப்பை மீறிக் கொண்டு பாயத் துடித்தக் கால்களையும் கட்டுப்படுத்த முடியாத திணறல்!
அந்த மீட்டிங் அறைக்குள் திவ்யாவுடன் அமர்ந்திருந்த ஆறு பேரும், மணி அடித்ததும் வகுப்பறையை விட்டு ஓடத் துடிக்கும் மாணவர்களின் மனநிலையுடன் அமர்ந்திருந்தனர்.
டீம் மீட்டிங் என்ற பெயரில் அனைவரையும் அமர வைத்து..தன் உதட்டை வில்லாக்கி..வார்த்தைகளை அம்பாக்கி.. சட்,சட்டென.. ஒவ்வொருவரின் மூளைக்குள்ளும் ஓட்டை போட்டுக் கொண்டிருந்தத் திவ்யாவை சமாளிக்கத் தெரியாமல்..முடியாமல்..முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் அறுவரும்.
அன்று அமாவாசை என்பதாலோ என்னவோ.. உச்சத்தைத் தொட்டு விட்ட உக்கிரத்துடன்.. உருமாறிப் போய் அமர்ந்திருந்தாள் அவள்.
கேட்பாரற்றுக் கிடப்பில் கிடந்த ‘இஷ்யூ’-க்களை இஷ்டத்திற்குக் கிளறி அவள் கேள்வி கேட்க..என்ன கூறி சமாளிக்கவென யோசித்த ஒவ்வொருவரின் மூளையும்..நொடிக்கொருமுறை அமெரிக்காவிலிருந்து அம்ஜிக்கரை வரை சென்று வந்து கொண்டிருந்தது.
“ஜான்சி, வாட்ஸ் த ஸ்டேட்டஸ் ஆன் த ஆட்டோமேஷன்?”
மேட்ஃபினிஷ் நெய்ல் பாலிஷ்ஷில் குளித்திருந்த அவளது நீள நகங்கள்.. முழுவேகத்துடன் கீ-போர்டிலிருந்த ஏ,பி,சி,டி-க்களைப் பிராண்டிக் கொண்டிருக்க.. கோபமே பார்வையாய்.. தன் பூனைக் கண்களை மானிட்டரில் பதித்திருந்தத் திவ்யாவிடமிருந்துக் கேள்வி வந்தது.
இவள் எதைப் பற்றிக் கேட்கிறாள் என்று புரியாமல்..மறு கேள்வி கேட்கவும் முடியாமல்..நாக்குப் பிறழ..வார்த்தை வராமல் தவித்துப் போன ஜான்சி..மெல்ல ஓரக் கண்ணால் ஜேகப்பைப் பார்க்க..
அவனோ ‘நோ ஐடியா’ என்பது போல் முகத்தைச் சுருக்கி விட்டு..
“எ..எந்த ஆட்டோமேஷன் திவ்யா?” என மெதுவாகக் கேட்டான்.
சட்டென விழிகளை ஈட்டியாக்கி இருவரின் மீதும் ஒரே நேரத்தில் எறிந்தவள்..
“சூரஜ், நாம எதைப் பத்திப் பேசிட்டிருக்கோம்ன்னு உங்களுக்குப் புரியுதா?” என்று ஒருவனை வினவினாள்.
அவன் திக்கித் திணறி மெதுவாக..
“இப்போ மேனுவல்-ஆ பண்ணிட்டிருக்கிற ****** டாஸ்க்கை ஆட்டோமேட் பண்றதைப் பத்தி…” எனத் தயங்கிக் கூற..
‘மாட்டினடி ஜான்சி’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ஜான்சி இதற்கு என்ன பதில் சொல்வதெனத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த இடைவெளியில் தடுக்கில் பாய்ந்தாள் திவ்யா.
“ஜான்சி..” – அடிக்குரலில் அவள்.
“யெஸ் திவ்யா..” – பதற்றத்தில் ஜான்சி.
“காலையிலிருந்து ஈவ்னிங் வரைக்கும் நீங்க என்னல்லாம் வேலை செய்றீங்கன்றதை எனக்கு லிஸ்ட் பண்ணி சொல்ல முடியுமா?”
“யெ…யெஸ் திவ்யா” என்றவள் காலை தொடங்கி மாலை வரை தான் பார்க்கும் வேலைகள் ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்திக் கூறினாள்.
மானிட்டரில் பார்வையைப் பதித்த படியே அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தத் திவ்யா.. “ஹ்ம்ம்ம்ம்ம்” என்றபடித் தலையாட்டி விட்டு..
“சூரஜ், யூ டெல் மீ. ஹௌ மச் டைம் இட் டேக்ஸ் டூ டீபக் தி ***** இஷ்யூ யூஸ்வலி” என்றாள்.
“லெஸ் தேன் 30 மினிட்ஸ்” – என்றவனைத் திரும்பி ஒருமுறை முறைத்தாள் ஜான்சி.
ஏனெனில் அந்த வேலையை முடிக்க பொதுவாக ஒன்றரை மணிநேரம் எடுக்கும் எனக் கூறிச் சமாளித்து வைத்திருந்தாள் அவள்.
“படிக்கும் போது நீங்க பார்டர்ல பாஸ் ஆகுற கேஸ்-ஆ ஜான்சி?” – திவ்யா.
அனைவரின் முன்பும் அவமானப்படுத்தியவளைக் கண்டுக் கோபம் பெருகியது ஜான்சிக்கு. பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“சோ, மொத்தமாவே உங்களோட ஒருநாள் வேலை மூன்று மணி நேரம் தான் இல்லையா?,லஞ்ச்,காஃபி ப்ரேக்ன்னு ரெண்டு மணி நேரத்தை சேர்த்துக்கிட்டாலும்.. மீதம்.. 4 மணி நேரம் ஆஃபிஸ்ல ஃப்ரீ-ஆ கழிக்கிறீங்க?”
“……………….”
“ஆனா.. சம்பளம் மட்டும் அந்த 4 மணி நேரத்துக்கும் சேர்த்தே வாங்குறீங்க?”
“……………..”
“ப்ரொவைட் மீ அன் அப்டேட் ஆன் த ஆட்டோமேஷன் பை டுடே. டிஸ்கஸ் வித் சூரஜ் இஃப் யூ நீட்” – என்றவள்.. அவளை ஒதுக்கி விட்டு..கௌதமின் புறம் திரும்பினாள்.
“கௌதம், டெல் மீ அபௌட் த ஸ்டேட்டஸ் ஆன் த டாஸ்க்ஸ் விச் யூ ஆர் ஹாண்ட்லிங்”
தன்னை நோக்கிக் கேள்வி கேட்டவளின் மீது பார்வையைப் பதித்தான் கௌதம். பதில் கூற விழையவில்லை.
“கௌதம்…” – காளி, கல்கத்தா காளியாக உருவமெடுத்துக் கொண்டிருப்பது, கொடூரமாய்ப் பளபளத்த அவளது விழிகளிலேயே புரிந்தது.
பதில் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு.. முதல்நாள் இரவில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
அவள் அந்தக் காட்டெருமையோடு காரில் பறந்ததும்..காரணமில்லா வெறுப்புடன் வீடு வந்து சேர்ந்தவனுக்கு.. நெஞ்சு முழுக்கப் பற்றி எரிவதைப் போன்றொரு உணர்வு.
வழக்கமான பிராண்ட் அல்லாது..புதிதாக ஒன்றைப் பார்ட்டியில் சுவைத்ததினால் உண்டான எரிச்சலோ.. என்றெண்ணி.. அசிடிட்டி டானிக்கைத் திறந்து வாயில் ஊற்றிக் கொண்டான்.
அப்படியும் அடங்குவதாகத் தெரியவில்லை. பத்தினி எரித்தப் பச்சைமரமாய் தகதகத்துக் கொண்டிருந்தது.
உடை மாற்றி க்வில்ட்டுக்குள் புகுந்தவன், கண்மூடி உறங்க முயற்சித்தான்.
முயற்சி திருவினையாக்காமல் போய்விட.. செல்ஃபோனைக் கையில் எடுத்தபடி அறைக்குள் நடைபயின்றான்.
விரல்கள் மட்டும் திவ்யாவின் எண்ணை அழுத்தியும்,அணைத்தும் விளையாடிக் கொண்டிருந்தது.
பின் தலையைக் கலைத்தபடி, ஒரு நொடி யோசித்தவன்..அவளது எண்ணை அழுத்திவிட்டுக் காதில் வைத்தான்.
“ஹலோ..” – அவள் உறங்கவில்லை போலும்! உடனே எடுத்து விட்டாள்.
“தூங்கலையா நீங்க?,இவ்ளோ நேரம் தூங்காம என்ன பண்றீங்க?, அந்தாளோட தான் இருக்கீங்களா இன்னும்?” – அதுவரை அவன் சுருக்கிட்டுத் தொண்டையோடு கட்டி வைத்திருந்த வார்த்தைகள் சுளுவாய் வந்திறங்கின.
“………….”
“உங்கக் கிட்ட தான் கேட்குறேன்”
“கௌதம்??”
“ஆமா, கௌதம் தான். கேள்வி கேட்குறேன்ல?, பதில் சொல்லுங்க” – பொறுமையற்றுப் பொரிந்தவனிடம்.. நிதானமாய்க் கேட்டாள் அவள்.
“ப்ரொடக்ஷன்ல ஏதாவது இஷ்யூவா கௌதம்?”
“ஷ்ஷ்ஷ்ஷ்”
“ஈமெயில் அலெர்ட்ஸ் ஏதாவது வந்ததா?”
“திவ்யா..” – பல்லைக் கடித்துக் கொண்டு அழுத்தமாய் உச்சரித்தவனிடம்..
“ஐ ஜஸ்ட் வான்ட் டூ லெட் யூ நோ தட்.. வேலை சம்மந்தமா என்ன பிரச்சனைன்னாலும்.. 24 மணி நேரமும் என்னைக் காண்டாக்ட் பண்ண.. உங்களுக்கு ரைட்ஸ் இருக்கு. ஆனா” – என்றவளை இடைமறித்தான் அவன்.
“நீங்க இப்போ எங்க இருக்கீங்க?, உங்க வீட்லயா? இல்ல, அந்த ஷர்மா வீட்லயா?”
“கௌதம்” – நிதானம் நிர்கதி அடைந்து விட்ட நிலையில்.. உணர்ச்சியற்று.. அவள் குரல் வெளி வந்த விதத்தில்.. ஒருநொடி… அமைதியாகிப் போனவன்.. மறுநொடி…
“சாரிங்க” – எனக் கூறி ஃபோனை கட் செய்திருந்தான்.
ஆழ மூச்செடுத்துத் தலையைக் கோதி.. வறண்ட உதடை ஈரப்படுத்திக் கொண்டவனுக்கு..தன் எண்ணத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
நெஞ்சத்தின் எரிச்சல்.. இப்போது மூளையை எட்டியிருந்ததன் விளைவு.. தலை விண்,விண் எனத் தெறித்தது.
தலை முதல் கால் வரை எதற்காக இந்த ரெஸ்ட்லெஸ் உணர்வு? பொறுமையாய் சிந்தித்துப் பார்த்தான்.
ஜாக், அவளையும், ஷர்மாவையும் இணைத்துப் பேசுகையில் அவன் கோபப்பட்டது அவனது இயல்பு! அந்த இடத்தில் எந்தப் பெண் இருந்திருந்தாலும்..அவன் அப்படித் தான் கோபப்பட்டிருப்பான்!
அன்னை,சாதனா,திஷா- எனப் பெண்கள் சூழ வாழ்பவனுக்கு, எதற்காக ஒருத்தியின் மீது அபாண்டமாகப் பழி போட்டு அசிங்கமாக சித்தரிக்க வேண்டும் என்கிற எண்ணம்!
சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தவர்களை,சட்டை செய்யாமல், ஷர்மாவை அவள் தோளில் தாங்கி சென்றது அவனுக்கு அவள் மீது எரிச்சலை உண்டாக்கியிருந்தது.
ஏற்கனவே அலுவலகத்தில் அவளைப் பற்றி எக்குத்தப்பான பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்க, இவள் எதற்காகத் தன் பேருக்கு மேலும் களங்கம் ஏற்படும் வண்ணம், இம்மாதிரியான செய்கைகளில் ஈடுபட வேண்டுமென்கிற ஆதங்கம்!
அது கொடுத்த கோபத்தில், அவளிடம் கேள்வி கேட்டவனுக்கு.. சத்தியமாக நினைவிருக்கவில்லை, சந்தித்து சில நாட்களே ஆன தனக்கு, அவளைக் கேள்வி கேட்க என்ன உரிமையிருக்கிறது என்பது பற்றி!
நினைவு வந்த போது “சாரி” என்று கூறி ஃபோனைக் கட் செய்து விட்டான்.
ஆனாலும் மனம் அடங்க மறுத்தது!
அலுவலகத்தில் அவள் காட்டும் முகம் அவளது இயல்பில்லை என்பதும், சக பணியாளர்களின் மத்தியில் உலவும் அவளைப் பற்றிய எண்ணங்கள் உண்மையில்லை என்பதும்.. அவன் மனதில் உறுதியாய்ப் பதிந்து போனது.
தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அவனிடமிருந்துப் பதில் வராது போகவும், முகம் கோபத்தில் கன்ற..பல்லைக் கடித்தபடி அவள் மறுபுறம் திரும்பும் போது..கௌதமின் தோளை இடித்தான் சூரஜ்.
“சா..சாரி.. என்ன கேட்டீங்க?” – என்று கௌதம் வினவுகையில்.. அவள் அவனைக் கண்டு கொள்ளவேயில்லை!
“லெட்ஸ் வைண்ட் அப் த மீட்டிங் ஓவர் ஹியர். ஒவ்வொரு இஷ்யூக்கும் நான் உங்களைத் தேடி வந்து அப்டேட் கேட்குற மாதிரி வைச்சுக்காதீங்க. மை ஜாப் இஸ் நாட் ரன்னிங் பிஹைண்ட் யூ கைஸ். புரியுதா?” என்றவள் ஒரு தலையசைப்புடன் தன் கணினியின் புறம் திரும்பிவிட.. விட்டால் போதுமென ஒவ்வொருவராக எழுந்து வெளியே சென்று விட்டனர்.
அனைவரும் சென்ற பிறகும் கௌதம் அங்கேயே அமர்ந்திருந்தான்.
“என்ன ட்ரை பண்றீங்க நீங்க?”
கையைக் கட்டிக் கொண்டு.. புருவத்தைச் சுருக்கி.. அவள் முகத்தைத் தீவிரமாய்ப் பார்த்தபடி கேள்வி கேட்டவனை அவள் மதிக்கவுமில்லை. மானிட்டரை விட்டுப் பார்வையைத் திருப்பவுமில்லை.
“இப்போ என்னங்க?,உங்க பர்சனல் விஷயத்துல நான் தலையிட்டது தப்பு தான். நடுராத்திரி ஃபோன் பண்ணி உரிமையா கேள்வி கேட்டது பெரிய குற்றம் தான்! ஒத்துக்கிறேன். மன்னிப்பும் கேட்டுக்கிறேன். ஆனா…. நீங்க ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்ங்க்றதை என்கிட்டக் காட்டனும்ன்றதுக்காக இப்படி அத்தனை பேரையும் கூப்பிட்டு வைச்சு மீட்டிங் போட்டு அதட்டி அவமானப்படுத்துறதெல்லாம் நியாயமே இல்லங்க”
நீளமாய்ப் பேசியவனைத் திரும்பிப் பார்த்து புருவத்தைச் சுருக்கினாள் அவள் ‘என்னஉளறுகிறாய்’ என்பதைப் போல்.
“ஆமா. உண்மைதான?” – கௌதம்.
“உன்னை நான் அவ்ளோ பெரிய ஆளா-லாம் நினைக்கல. ” – நக்கலாய் உதட்டை வளைத்தவள் “அதிகப்பிரசங்கி” என்று முணுமுணுக்க..
உச்சத்தில் ஏறி விட்டக் கடுப்புடன்.. “ஆமாமா! அந்த ஷர்மா அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல தான்!” – எனத் தன் பங்குக்கு வாயை விட்டான்..
நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் பார்வை ‘இவ்வளவுதான்நீ’ என்பதோடுத் திரும்பி விட..வெகுண்டெழுந்து விட்டான் அவன்.
“நேத்து அவர் உங்களை லெஃப்ட்ல விட்டு நடந்த விதத்துலயே புரிஞ்சது! அவர் பெரிய ஆளுன்றது! மனுஷன் கீப் லெஃப்ட்ன்றதை சின்சியர்-ஆ ஃபாலோ பண்றார்போல!”
-ஏதோ ஒரு வேகத்தில், அவளைத் திருப்பி அவமானப்படுத்திவிடும் நோக்கத்தில் பேசி விட்டாலும்..ஒரு நொடி.. டைப் செய்து கொண்டிருந்த அவள் விரல்கள் நின்று.. விழிகள் உணர்ச்சியற்றுத் திரையை வெறித்ததைக் கண்டு…..தான் பேசிய கீழ்த்தரமான வார்த்தைகளை எண்ணிக் குன்றிப் போனான் அவன்.
“சாரி” –மனம் எண்ணியதை உதடு உடனே செயல்படுத்தி விடப் பட்டென மன்னிப்புக் கேட்டு விட்டான்.
“பொண்ணுங்களைத் தப்பா பேசுறது என் இயல்பு கிடையாது. சாரி.” – மீண்டும் அவன் கூறியதும்..
“உன் இயல்பு எதுவா இருந்தாலும் அதைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுல எனக்கு எந்த அக்கறையும் இல்ல” என்றாள் அவள்.
மறுபடி அவளது அசட்டையான பேச்சில் கோபம் பெருகக் கன்றியது அவன் முகம்.
“நீ அசிங்கமா பேசி என்னைத் தூண்டி விட்டா.. நான் உடனே கோபப்பட்டுப் பொங்கியெழுந்து உன்னை அறைஞ்சு சீன்க்ரியேட் பண்ணுவேன்னு நினைச்சேனா… வெர்ரி சாரி! நான் ‘சீதாதேவி’ ரகம் இல்ல! முதுகுக்குப் பின்னாடி முனகுற ஆளுங்களுக்காகத் தீக்குளிச்சு என்னை ப்ரூவ் பண்றதுக்கு!”
“…………………….” – முகம் விழுந்து செத்தே போய் விட்டது அவனுக்கு.
“உங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் அடுத்தவன் பெட்ரூம்ல என்ன நடக்குதுன்றதைத் தெரிஞ்சுக்கிறது தான் முழு நேர வேலையே! அதனால உங்களையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு.. நீங்க பேசுறதுக்குக் கோபம் வேற பட முடியுமா?”
அவள் முடிப்பதற்குள் விருட்டென எழுந்து விட்டான் கௌதம்.
“வாயை அடக்கிப் பேசுங்க. நான் அந்த மாதிரி ஆள் இல்ல”- எரிச்சலுடன் அவன் அடிக்குரலில் சீற..பதில் கூறாமல் தோளைக் குலுக்கினாள் அவள்.
அதற்கு மேல் அங்கே நின்று மேலும் அவமானப்படாமல்.. விறுவிறுவென வெளியேறி விட்டான் அவன்.
நிற்காமல் நேராக நடந்தவனுக்கு.. எதிரில் ஏதேனும் சுவர் தென்பட்டால்..அப்படியேத் துளையிட்டு.. அண்டார்டிகாவிற்குச் சென்று விடும் வேகம்.
வாழ்க்கையில் இது போல அவன் எந்தப் பெண்ணிடமும் அவமானப்பட்டதேயில்லை! ‘என்னை விட்டுப் போகாதே’ என காத்ரீனாவிடம் கெஞ்சிய போது கூட..அவன் இத்தனை அவமானமாக உணரவில்லை.
அவன்..அவன்..அடுத்தவர்களின் பெட்ரூமை எட்டிப் பார்க்கும் ரகமா?,கடைசியில் பத்தோடு பதினொன்றாக அவனையும் சேர்த்துப் பாடையில் ஏற்றி விட்டாள்! கோபத்தில் வாயை விட்டதற்கு..அவனுக்குத் தேவை தான் இதெல்லாம்!
ஆரம்பத்திலிருந்து அவளுடன் நடக்கும் பனிப்போரில் இன்று வரை ஜெயித்து வந்தவனை, ஒரே வாள் வீச்சில் தலையைக் கொய்து..தரையில் உருளச் செய்து விட்டாள்!
‘ப்ச்’ – பட்ட அவமானக் கறையை எந்த வாஷிங் பௌடரை வைத்துத் துடைத்தெடுக்க?,
தலையைக் கோதியபடி வாஷ்ரூமுக்குள் நுழைந்தவன்.. பேசினில் நின்ற போது..அருகே நின்றிருப்பவன்.. தன்னையே உற்றுப் பார்க்கும் உணர்வில் திரும்பி நோக்கினான்.
ஜாக் தான். அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
“என்ன?” – கௌதம்.
“பெருசா அந்தம்மாவுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்து..என் சட்டையைப் பிடிச்ச..அதான் உன்னை அவமானப்படுத்தி அனுப்பிடுச்சு?”
‘இவனுக்கு எப்படித் தெரியும்’ என்பது போல் பெரிதாக விழித்த கௌதமிடம்..
“மீட்டிங்ல நடந்ததை சொல்றேன்”-எனக் கூற
“ஓ” என்றவன் “ப்ச், பேசாம போய்யா” என்றான்.
“மரியாதையெல்லாம் தேயுது! என்ன மேன்?,ஷர்மாவை விட்டுட்டு இப்போ டிஷ்யூம் உன்னைப் பிடிச்சுடுச்சா?” – வேடிக்கையாகக் கேட்டவனின் தோளைத் தட்டி..இல்லாத தூசியை ஊதியவன்..
“அன்னைக்கு உங்க சட்டையைத் தான் பிடிச்சேன். இன்னிக்கு மூஞ்சியைப் பேக்குற அளவுக்குக் கொலைவெறில இருக்கேன். பேசாம போயிடுங்க.” – என்றுஎச்சரிக்க..
அவசரமாக அவன் பிடியிலிருந்துத் தன்னை விடுவித்துக் கொண்ட ஜாக் “நீ..நீ.. இப்போல்லாம் சரியே இல்ல மேன். விளையாட்டுக்கு நான் சொல்றதைக் கூட சீரியசா நினைச்சு சண்டைக்கு வர்ற?” என்றான்.
“எது விளையாட்டுக்கு பேசுறது?,இதே மாதிரி 10 பேர் பேசுனாங்கன்னா.. அதுவே உண்மைன்ற தோற்றத்துல ஆஃபிஸ் முழுக்க பரவிடாதா?,ஏற்கனவே ஷர்மாவையும், அவங்களையும் சேர்த்து வைச்சு இப்படித் தான் பேசிட்டிருக்கீங்க?”
“ஏய், அது உண்மை. என்னை நம்பு. டிஷ்யூமோட பாய்ஃப்ரெண்ட் ஷர்மா தான்” – எப்படியேனும் அவனை நம்ப வைத்து விடும் வேகத்துடன் ஜாக்.
“அடங்கவே மாட்டீங்களா நீங்க?” – ஸ்லீவ்ஸை ஏற்றியபடியே அவன் கூற.. ‘ஆளை விடுடா சாமி’ என்பது போல் ஓடியே விட்டான்.
அடுத்த இரண்டு நாட்களும் திவ்யா இருக்கும் பக்கம் அவன் தலை காட்டவேயில்லை. மீட்டிங்குகள் எதிலும் பங்கு கொள்ளவும் இல்லை. வேலை தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் சாட்டிலும், ஈமெயிலிலும் முடித்துக்கொண்டான்.
மூன்றாவது நாள் காலை அவன் வேலையில் ஈடுபட்டிருந்த போது.. அவளிடமிருந்து ஃபோனில் மெசேஜ் வந்தது.
“கௌதம், ஆர் யூ வர்க்கிங் டுடே?” – திவ்யா.
“யெஸ்” – ஒற்றை வரியுடன் அவன் பதிலளித்தான்.
“உன்னை ஆன்லைனில் பார்க்க முடியலயே”
“நெட்வர்க் இஷ்யூ. என் ஸ்கைப் வர்க் ஆகல”
“ஓ! ஓகே! இன்னிக்கு 12 டூ 1 லாரா அண்ட் ராய் கூட மீட்டிங் இருக்கு. ஐ வில் செண்ட் யூ த இன்விடேஷன்”
“ஓகே”
“சீட்ல உட்கார்ந்துட்டு ஃபோன்ல அட்டெண்ட் பண்ணலாம்ன்னு ப்ளான் பண்ணாதீங்க.”
“………..” – பதில் அனுப்பவில்லை அவன்.
“கௌதம்”
“சொல்லுங்க”
“மீட்டிங் ரூம் 907.”
“ஓகே. ஜாயின் பண்றேன்”
-முடித்துக் கொண்டவன்.. சரியாக 11.45 க்கு மீட்டிங் அறைக்குள் நுழைந்தான். அவனுக்கு முன்பாகவே திவ்யா அங்கே அமர்ந்திருந்தாள். மற்ற இருவரும் வந்து சேர்ந்திருக்கவில்லை.
அவளொருத்தி அங்கு அமர்ந்திருப்பதைப் பொருட்படுத்தாமல்.. விறுவிறுவென உள்ளே சென்றவன், அவளுக்கு எதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்து.. தன் லேப்டாப்புக்குள் தலையை நுழைத்துக் கொண்டான்.
அவன் உள்ளே நுழைந்த நொடியிலிருந்து அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த திவ்யாவிற்கு.. இயல்புக்கு மாறாக அவன் சற்று இறுக்கமாக இருப்பதாகத் தோன்ற..
“கௌதம், ஆர் யூ ஓகே?” என்று வினவினாள்.
நிமிர்ந்து அவளை நோக்கியவன்.. “நோ ஐம் நாட்” என்றான்.
அவனையே கூர்ந்து பார்த்தபடி அமைதியாகி விட்டவளை எரிச்சலுடன் முறைத்து…
“என்ன?, உத்துப் பார்த்து உள் மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கப் போறீங்களா?, இன்னிக்கு என்ன சொல்லி என்னை அவமானப் படுத்தலாம்ன்னு இருக்கீங்க?, ம்?, உங்கக் கூட பேசனும்ன்னா.. மூளைக்குன்னு தனிப்படை அமைக்க வேண்டியதா இருக்கு.” என்றான்.
“கத்தாதீங்க.”
“முடியாது”
“கம்போஸ் யுவர் செல்ஃப் கௌதம். உன் இஷ்டத்துக்கு பிஹேவ் பண்ண இது உன் வீடு இல்ல. வீ ஹேவ் அ மீட்டிங் வித் த க்ளையண்ட்ஸ் நௌ.”
“சோ வாட்?” – விட்டேற்றியாகக் கூறியவனைக் கண்டுப் பல்லைக் கடித்தாள் அவள்.
“என்னைப் பார்த்தா அடுத்தவன் பெட்ரூம்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்குற ஆள் மாதிரியா இருக்கு?,எவ்ளோ கீழ்த்தரமா பேசுறீங்க?” – இரண்டு நாட்களாகக் குற்றம் செய்த உணர்வுடன் வலம் வந்தவனுக்கு வார்த்தைகள் வரிசையாக வந்து விழுந்தது.
“ஆரம்பிச்சது நீ கௌதம். அதை மறந்துடாத”
“அதுக்குத் தான் நான் உடனே சாரி கேட்டேன்ல?”
“அதனால?”
“நான் அப்படிப்பட்ட ஆள் இல்லங்க. என்னைக் காதலிச்சுக் கைவிட்டக் காத்ரீனாவைக் கூட தண்ணி அடிச்சா மட்டும் தான் தப்பா பேசுவேன். அதுவும் அவ விட்டுட்டுப் போன விரக்தி அதிகமானா தான்! மத்தபடி, அநாவசியமா எந்தப் பொண்ணையும் நான் தரக்குறைவா பேசுனதில்ல. ” –தன்னை அவளுக்குப் புரிய வைத்து விடும் நோக்கத்துடன்..பொறுமையாய் விளக்கியவனிடம்..
“சரி. இப்போ அதுக்கு என்னை என்ன சொல்ற?” – என்றாள் அவள்.
“நான் நல்லவன் தான்னு சொல்லுங்க” – நேர்ப் பார்வையுடன் வினவியனிடம்..
“என் கிட்ட காண்டக்ட் செர்டிஃபிகேட் வாங்கி என்ன செய்யப் போற நீ?”-என்று வினவினாள் அவள்.
“ப்ச், அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?,நான் நல்லவன்னு சொல்லுங்க” – சிறு பிள்ளைத் தனமான பிடிவாதத்துடன் கூறியவனை.. விழிகளில் மட்டும் மலர்ந்த சிரிப்புடன் அவனை நோக்கினாள் அவள்.
புருவம் சுருங்க சுணங்கிய முகத்துடன் அவளைப் பார்த்திருந்தவனுக்கு.. அவளது பூனை விழிகள் பூத்தது புரிந்து போக..
“சிரிக்கிறீங்களா?” என்று வினவினான்.
ஆம் என்றோ, இல்லையென்றோ தலையாட்டாமல்..தன் கணினியி ல் பார்வையைப் பதித்தவள்..
“ஊர்ல உன்னை மாதிரி எனக்கொரு தம்பி இருந்தான்” என்று கூற..
“த…த..தம்பியா?” என்றவனுக்குக் குரல் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது..
ஆம் எனத் தலையாட்டியவள் “உன்னை மாதிரி தான் அவனும். என்னை விடச் சின்னப் பையன்” எனச் சொல்ல..
முசுட்டு முகத்துடன் தானும் கணினியின் புறம் திரும்பியவன் “நான் ஒன்னும் சின்னப் பையன் இல்ல” என்றான்.
“ஐ மீன் வயசுல சின்னவன்னு சொல்ல வந்தேன்”
“வயசு என்ன பெரிய வயசு! முதிர்ச்சி வயசுல இல்ல. மனசுல இருக்கு”
“இப்போ எதுக்காக இதைச் சொல்ற நீ?”
“என்ன நீங்க, உரிமையா ஒருமைல பேசுறீங்க?,இனி நீ, வா, போ-ன்னுலாம் சொல்லாதீங்க” – கடுப்போடு கூறியவனை.. புரியாமல் ஒரு பார்வை பார்த்து விட்டு.. “ஓகே” எனத் தோளைக் குலுக்கினாள்.
“சரி, ஊர்,தம்பின்னுஏதோ சொல்லிட்டிருந்தீங்களே!”
“சொல்லி முடிச்சுட்டேனே! உங்களைப் பார்த்தா என் தம்பி மாதிரி இருக்குன்னு”
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் எனத் தலையைச் சொரிந்த மனதை அடக்கி “அதான் ஒரு தடவை சொல்லிட்டீங்களே! திரும்பத் திரும்ப ஏன் அதையே சொல்றீங்க?,மேல சொல்லுங்க” என்றான்.
அதுவரை விழிகளிலிருந்த இலகுத் தன்மை மறைய.. விரைப்புற்றக் கருமணிகளுடன் கணினித் திரையை வெறித்தவள் “மேல சொல்ல ஒன்னுமில்ல” என்று கூறுகையில்..லாராவும், ராய்யும் உள்ளே வந்து விட..
“உங்களைப் பத்தின விஷயங்கள் தங்கமலை ரகசியமாவே இருந்துட்டுப் போகட்டும். உங்கத் திருவாய் வழியா நீங்க எதையும் சொல்ல வேண்டாம். ஆனா என்னைப் பார்த்து.. தம்பி,தொம்பின்னு சொல்றதை இத்தோட நிறுத்திக்கோங்க. எனக்கு ஏற்கனவே நிறைய அக்காக்கள் இருக்காங்க. உங்களையெல்லாம் அக்காவா நினைக்கமுடியாது.” என்று அவசரமாகக் கூறி விட்டு. .தன்னிடம் புன்னகைத்த லாராவிடம் “ஹாய் லாரா” என்று கைக் குலுக்கினான் கௌதம்.
