அத்தியாயம் - 7
அன்று காலை மணி பதினொன்றரையைக் கடந்திருந்தது. புதிதாக அவன் முயற்சித்த கோட் ஒன்று சரியாக வேலை செய்யாமல் முதல் நாள் இரவிலிருந்துத் தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மாலைக்குள் இது குறித்து அவன் திவ்யாவிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும். மற்றொரு டீமின் உதவியும் தேவைப்பட்டதால், கிடைத்த இடைவெளியில் பாண்ட்ரீக்கு வந்திருந்தான்.
கையில் காஃபியுடன் ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் “ஹாய், என்ன காலைலயே சோக கீதம் வாசிச்சிட்டிருக்கீங்க?”என்று கேட்டபடி மலர்ந்த முகத்துடன் அவனருகே வந்து நின்றாள் ஜான்சி.
அவளைக் கண்டதும்.. நினைவு வந்தவனாக.. “ஜான்சி நான் உங்க கூட பேசனும்” என்றான் அவன்.
சட்டென முகம் மாற பதறிப் போனவள் “எ..என்ன பேசனும்?” என்று வினவ..
“இது தான். இந்த எக்ஸ்ப்ரஷன் தான் என்னைக் குழப்பிடுச்சு. வாங்க, அங்க உட்காரலாம்” என்றழைத்துக் கொண்டு அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான் கௌதம்.
“என்ன விஷயம்?” – தயக்கத்துடன் கேட்டாள் ஜான்சி.
“ஏன் அப்பப்போ என்னைப் பார்த்து இந்த மாதிரி ரியாக்ஷன் கொடுக்குறீங்க?”
“அ…அது..வ..வந்து..”
“என்னை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?”
“…………” – உதட்டைக் கடித்த படிக் காஃபி கப்பை நோக்கினாள் அவள்.
“சொல்லுங்க ஜான்சி”
“தெ..தெரியும்”
“எப்படி?”
“உங்க கூட ***** யுனிவர்சிட்டில ஒன்னாப் படிச்சானே நரேன். அவன் என்னோட கசின். அவன் மூலமா உங்களைத் தெரியும்”
அவள் கூறியதும் முகம் சிரிப்பில் மலர.. “ஹேய்ய்.. நரேன் மாமா பொண்ணா நீ?, உன்னைப் பத்தி அவன் பேசாத நாளே கிடையாது” என்று கூற…
“அவனும் வாயைத் திறந்தா உங்களைப் பத்தி மட்டும் தான் பேசுவான்” என்றவள் தொடர்ந்து “நான் உங்களை மாமா வீட்லப் பார்த்திருக்கேன். ஆனா பேசுனதில்ல. நீங்க இங்க ஜாயின் பண்ணினதும் அவன் கிட்டக் கேட்டேன். காத்ரீனா கூட காதல் தோல்வில ‘க்ர்ர்ர்’ ஆகி சுத்துறதை ஃபோன் பண்ணி சொன்னவன், கம்பெனி மாறின விசயத்தை என்கிட்ட சொல்லாம விட்டுட்டானேன்னு உங்களைத் திட்டுனான்!” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூடப் பல்லைக் கடித்தான் கௌதம்.
‘பரதேசி! என் காதல் தோல்வியைக் கற்பழிப்பு செய்தி மாதிரி ஊர் முழுக்க சொல்லிட்டிருக்கு!’
“என் கிட்ட முதல் நாளே நீ, நரேனோட கசின்னு சொல்லியிருக்கலாம்ல?”-கௌதம்
“சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன். நீ..நீங்க வேற திடீர்ன்னு உ..உன் கன்னத்தைத் தொட்டுப் பார்க்கலாமா, அப்டி,இப்டின்னு பேசுனதும்.. ஃப்ளர்ட் பண்ண ட்ரை பண்றீங்களோன்னூஊஊஊஊ” என்று இழுத்தவளிடம்…
“எல்லாம் நேரம்மா. மேல சொல்லு” – என்றான் அவன்.
“அதான் நீங்க ஒரு மாதிரி பார்த்தாலே… ஓட்டமா ஓடிட்டிருந்தேன்”
“நான் என்னவோ காமப்பார்வை பார்த்த ரேஞ்சுக்கு, ஒருமாஆஆஆதிரி பார்த்தாலேன்னு இழுக்குற? – நொடித்துக் கொண்டவனிடம்..
“பார்த்தீங்களா, பார்த்தீங்களா? இப்போக் கூட ஒரு மாதிரி தான் பேசுறீங்க” – என்று முகம் தூக்கினாள் அவள்.
“ப்ச், இங்க பாரும்மா, நான் சனிக்கிழமை விரதம் இருந்து சந்நியாசி வாழ்க்கைக்குப் பழகிட்டிருக்கிற ஆளு! என்னைக் காமக்கொடூரன் மாதிரி சித்தரிக்கிறதை நிறுத்து ப்ளீஸ்”
“அப்டின்னா..ப்ளீஸ் டோண்ட் யூஸ் தட் வேர்ட் ‘காமம்” – பெரிதாக அலட்டிக் கொண்டவளிடம்..
“அடேங்கப்பா!” என்ற கௌதம் தொடர்ந்து “என் நண்பன் ரொம்பப் பெரிய பாவம் செஞ்சுருக்கான்போலவே” – என சலித்துக் கொண்டான்.
“ஏன் வாம்?” என்றுஅவள்கூற..
“ம்ம், பல வருஷ காலமா உங்களைக் காதலிக்கிறானே! அதைச் சொன்னேன்” – என்று கூறி விட்டு ஓரக்கண்ணில் அவளை நோக்கினான் அவன்.
“…………….” – பதிலின்றி அமைதியாய் இருந்தாள் அவள்.
“ஏன் ஜான்சி?,அவனைப் பிடிக்கலையா உங்களுக்கு?”
“அ..அப்படியெல்லாம் எதுவுமில்ல”
“பின்ன என்ன?”
“நான் அம்மா, அப்பா பார்க்குற பையனைத் தான் கட்டிப்பேன்…..”
“ச்ச, இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு பொண்ணா?, அப்போ அம்மா,அப்பா சம்மதிச்சா ஓகே தான?, இந்த விசயத்தை உடனே என் நண்பன் கிட்ட ஷேர் பண்ணனுமே” – அவசரமாய் செல்ஃபோனைத் தூக்கியவனைத் தடுத்து…
“ஹலோ! எங்க காதலுக்கு உரம் போட எங்களுக்குத் தெரியும். நீங்க உங்க வேலையைப் பாருங்க. பெருசா கிளம்பிட்டாரு, ஷாஜகான் விஜய்ன்னு நினைப்பு மனசுல”-என்றவள் தன் காஃபி கப்பை எடுத்துக் கொண்டு கிளம்பி விட…
“ஃப்ரீயா கிடைக்குற சேவையை மிஸ் பண்றீங்க நீங்க! பரவாயில்ல போங்க” என்றவன் நண்பனுக்குத் தங்களது உரையாடலை மெசேஜ் செய்து விட்டுத் தன் இருக்கைக்குச் சென்றான்.
அன்றைய வேலை இரவு வெகுநேரம் இழுத்துவிட.. எட்டு மணிக்கு மேல் வீட்டிற்குக் கிளம்பியவன்.. கார் பார்க்கிங் அருகேயிருக்கும் ஸ்மோக்கிங் ஜோனில் நின்று.. குளிருக்கு இதமாக சிகரெட் பிடித்தபடி அன்னையிடம் செல்ஃபோனில் உரையாடிக் கொண்டிருந்தான் கௌதம்.
“நீ வேணாம்ன்னு சொன்னியே, மானாமதுரை மதிவாணன் பொண்ணு?,அவளை நம்ம பங்காளி பொன்னைய்யா மகன் சரவணனுக்குக் கட்டிக்கொடுத்து.. அவ இப்போ 3 மாசம் முழுகாம இருக்காளாம்” – ராஜாத்தி.
“ஹ்ம்ம், கல்யாணம் பண்ணி ஜனத்தொகையைப் பெருக்குறவனைத் தான் இந்த உலகம் மதிக்குது! வாட் அ பிட்டி!” - கௌதம்
“போக்கேத்தவன் மாதிரி பேசாத தம்பி”
அவர் தம்பி என்றதும் காண்டாகிப் போனவன் “திட்ட தான செய்றீங்க?, அப்புறம் என்ன தம்பி,தொம்பின்னு மரியாதைவேற?, இப்போ-லாம் தம்பின்ற வார்த்தையைக் கேட்டாலே அலர்ஜியா இருக்கு” என்று அவன் புலம்பிக் கொண்டிருக்கையிலேயே.. தோளில் தொங்கிய லேப்டாப் பையுடன்.. தன் ஹீல்ஸ் பாதங்களால் மெல்ல அடியெடுத்து வைத்தபடி ஸ்மோக்கிங் ஜோனை நோக்கி வந்து கொண்டிருந்தாள் திவ்யா.
‘தம் அடிப்பாளோ’ – அன்னையுடன் பேசியபடியே சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்தவனின் பார்வை அவளையே தொடர.. பத்தடித் தூரத்தில் நின்றவள்.. தன் செல்ஃபோனைக் கையில் எடுத்து யாரையோ அழைத்தாள்.
அடுத்த இரண்டாவது நிமிடம் கையில் சிகரெட்டுடன் அவள் முன்னே வந்து நின்றான் ஷர்மா.
பார்த்துக் கொண்ட நொடியிலிருந்து இருவரும் வெகு தீவிரமாக பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
“என்னடா கௌதம், ஃபோனை வைச்சுட்டியா?” – காதுக்குள் ராஜாத்தி இடையிட்டார்.
“ம்மா, ஃபோனை வைக்காத”
“ஏன்டா?”
“இன்னிக்கு உன் கூட ரொம்ப நேரம் பேசனும்ன்னு தோணுது”
“அதுசரி, என்னடா ஆச்சு உனக்கு?”
“ப்ச், உன்னால இப்ப பேச முடியுமா முடியாதா?, முடியாட்டி வை. நான் நரேனுக்குக் கூப்பிட்டுக்கிறேன்”
“டேய், டேய் வைச்சுடாதடா! என்ன சொல்லிட்டிருந்தேன், ஆங்.. அந்தப் பொன்னையா இருக்கானே! சரியான ஜம்பப் பேர் வழிடா” – எனத் தொடங்கிய ராஜாத்தித் தொண,தொணவெனப் பேசிக் கொண்டிருக்க.. இங்கே இவன் விழிகளை.. தூரத்தில் நின்றிருந்த இருவரிடமும் தீவிரமாகப் பதித்திருந்தான்.
‘கூட நிற்குறவங்களை சிகரெட் புகை பாதிக்கும்ன்ற அறிவு கூடவா கிடையாது?, இவன் லாம் படிச்சு என்ன பிரயோஜனம்?, ஆனா.. சிகரெட் ஸ்மெல்லே பிடிக்காதுன்னு மூக்கைப் பொத்திக்கிற பொண்ணுங்க மத்தியில, இவ ஏன் இப்படி இருக்கா?, இவ தான் பொண்ணே கிடையாதே! பொரிச்சு வைச்சக் கத்திரிக்கா மாதிரி! எப்படி நிற்குறா பாரு’
பொருமியபடி நின்றவன் இருவரது சம்பாஷணையும் முடியும் வரைப் பொறுமையாகக் காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் ஷர்மா சென்று விட.. திவ்யா பார்க்கிங்கை நோக்கி வருவது தெரிந்தது.
அப்போது பார்த்து ராஜாத்தி “நாளைக்குத் திஷா டே-கேர்ல ஏதோ விழாவாம் டா” என்றுகூற..
“என்ன விழா?” என்று சிரித்தவனிடம்..
“அவங்க இந்த டே-கேர்,ப்ளே ஸ்கூலைத் திறந்து 3 வருஷமாச்சாம். அதைக் கொண்டாட விழா நடத்துறாங்க” என்றார் ராஜாத்தி.
“பூபூகிட்ஸ்ல செலிப்ரேஷனா?”
-அவள் தன்னருகே வந்து விட்டதை உணர்ந்து வேண்டுமென்றே அவன் கத்திக் கூற.. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் திவ்யா.
“ஏன்டா கத்துற?,காது கிழியுது. சாதனாவும், அண்ணனும் நாளைக்கு வெளிய போறாங்களாம். இந்தப் பாப்பா வேற என்னைக் கூட வரச் சொல்லித் தொந்தரவு பண்ணுது. ஸ்கூல்ல இருக்குறவளுங்க, தஸ்,புஸ்ன்னு இங்க்லிஷ்ல பேசுவாளுங்க. எனக்கு ஒரு மண்ணும் புரியாது”
விடாது புலம்பிய அன்னையிடம் “சரி புலம்பாத. நானும் வர்றேன் நாளைக்கு. இப்போ ஃபோனை வை” என்று கட் செய்தவன்.. திவ்யாவின் அருகே சென்றான்.
“பூபூ கிட்ஸ்ல ஃபங்க்ஷனா?”
உடன் நடந்த படியே கேள்வி கேட்டவனிடம் ஆமாம் என்றுத் தலையாட்டினாள் அவள்.
“என்ன திடீர்ன்னு?”
“தேர்ட் இயர் அன்னிவர்சரி”
“ஓ!,குழந்தையோட குடும்பத்திலிருந்து யார் வேணா கலந்துக்கலாமா?”
“ம்ம்”
“என் அம்மா?”
“வரலாமே! ஏன் சாதனாவுக்கு என்னாச்சு?”
வெகு இயல்பாகத் தன் அண்ணியைப் பற்றி விசாரித்தவளிடம் திகைப்புடன்.. “என் அண்ணியைத் தெரியுமா உங்களுக்கு?” என்று விசாரித்தான் அவன்.
“ஹ்ம்ம், திஷாவை அவங்க பிக்-அப் பண்ண வரும் போது 4,5 தடவை பார்த்திருக்கேன். இதுல இவ்ளோ சர்ப்ரைஸ் ஆக என்ன இருக்கு?”
“எல்லாமே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க?,நீங்க அங்க டீச்சரா இருக்கீங்களா?”
“இல்ல, நான் அந்த ஸ்கூலோட ஒன் ஆஃப் த பார்ட்னர்ஸ்.”
“ஓ!! ஆனா…” என்று இழுத்தவன்.. “ஏன்?” என்றான்.
“புரியல”
எப்படியும் கிழித்துத் தொங்க விடுவாள் என்று தெரிந்தாலும்.. தொண்டையைச் செறுமித் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு..
“இல்ல, காலகாலத்துல கல்யாணம் பண்ணிக் குழந்தை பெத்து..அதை வளர்க்காம, ஏன் ஊர்ல இருக்குற குழந்தைகளையெல்லாம் வளர்க்குறீங்கன்னு கேட்க வந்தேன்” – என்றான்.
“ஏன், ஸ்கூல் வைச்சு நடத்துற எல்லாரும் குழந்தை பெத்துக்காமலா இருக்காங்க?”
“அதாவது கல்யாணம் பண்ணிக் குழந்தை பெத்துக்கிற ஐடியாலாம் உங்களுக்கு இருக்குன்னு சொல்றீங்களா?”
“உனக்கு என்ன தெரிஞ்சுக்கனும் கௌதம்?” – நேரடியாகக் கேட்டவளிடம்..
“எல்லாமே! உங்களைப் பத்தி எல்லாமே!” – நேரடியாகவே பதிலளித்தான் அவனும்.
“ஏன்?”
“தெரியாது.”
“……………”
“ஏன் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க?” – மெல்லத் தயங்கிக் கேட்டவனிடம்..
“நீ ஏன் கேள்வி கேட்குற, எந்த உரிமைல கேள்வி கேட்குறன்னே எனக்குப் புரியல” – என்றாள் அவள்.
“காதல் தோல்வியா? கேன்சரா?” – அவள் கூறியதை அவன் கண்டு கொள்ளவில்லை.
“கௌதம்”
“இல்ல எய்ட்ஸ்-ஆ?”
சிரிப்பை விழிக்குக் கடத்தி விட்டு.. உதட்டை இறுக்கி நிற்பவளை.. வேடிக்கை பார்த்தான் கௌதம்.
“எந்த உரிமைல கேள்வி கேட்குறேன்னு கேட்டீங்க இல்லையா?, நான் பார்க்க உங்க தம்பி மாதிரி இருக்கேன்னு அன்னைக்கு சொன்னீங்களே?, இப்பவும் அப்டியே நினைச்சுட்டு சொல்லுங்க”
“உனக்கு ஏற்கனவே நிறைய அக்காக்கள் இருக்காங்கன்னு சொன்ன?”
“ஆமா, உறவு முறை தெரியாம தப்பா சொல்லிட்டேன். உங்கக்கிட்ட பேசுனப்புறம் எங்கம்மாட்ட விசாரிச்சேன். பூரா எனக்கு மாமன் பொண்ணுங்களாம்! அக்கா யாரும் கிடையாதாம்! அதனால.. இனி உங்களையே என் அக்காவா ஏத்துக்கிறேன்” – நக்கல் அடித்தவனிடம்..
“முதிர்ச்சி வயசுல இல்லன்னு உன் வாய் தான் சொல்லுது. செய்கை.. நீ சின்னப் பையன்றதைப் படம் போட்டுக் காட்டுது”-என்றாள் அவள்.
“நான் பண்றதுக்குப் பேரு காமெடி-ங்க. இதுக்கு வயசு,வரைமுறையெல்லாம் கிடையாது.”
“……………”
“சரி, நாளைக்கு நீங்க வருவீங்களா?”
“எங்க?”
“பூபூ கிட்ஸ்??”
“வருவேன்.”
“அப்போ நானும் வர்றேன்” – என்றவன் மறுநாள் காலை டே-கேருக்குத் திஷாவுடன் புறப்பட்டு விட்டான், அன்னையையும் அழைத்துக்கொண்டு.
விழா நடக்கும் இடம் முழுதும் பூபூகிட்ஸில் அந்த மாதம் வெளியிடப்பட்டிருந்த வீடியோக்கள் சில ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
A is for ah ah apple, ah ah apple – எனப் பூனை உருவமொன்றுத் திரையில் ஏ ஃபார் ஆப்பிளைப் பாடியபடி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க.. சித்தப்பாவின் கையைப் பற்றிக் கொண்டு “பா..பா.. பால்” எனக் கூடச் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தாள் திஷா.
அலுவலகத்தில் ஹாஸ்டல் வார்டனைப் போல் வலம் வருபவளின் தோற்றத்துக்கும், இங்கு ஹாஸ்யம் குறையாமல்.. திறந்த வாய் மூடாது சிரிப்பவளுக்குமான வித்தியாசத்தை எண்ணி எப்போதும் போல் வியந்தபடி.. திரையில் தெரிந்தவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
“இவங்க எப்பவும் பூனை டிரஸ்ல தான் வருவாங்களா பாப்பா?”
“ஆமா, ஏன்னா.. அவங்க பேரே மிஸ்.கேட் தான?, கண்ணு கூட பூனை மாதிரி இருக்குல்ல சித்தா?, அம்மா சொன்னா, அவங்க கண்ல லென்ஸ் வைச்சிருக்காங்க. அதான் ப்ரௌனா இருக்குன்னு”
“அது லென்ஸ் இல்ல பாப்பா. அவங்களுக்கு நேச்சுரலாவே கண்ணு ப்ரௌனா தான் இருக்கு”
“உனக்கு எப்படித் தெரியும்?”
“நான் தான் தினம் பார்க்குறேனே!” என்று முணுமுணுத்தவன் திஷாவை மற்றக் குழந்தைகளின் அருகே விட்டு விட்டு..அன்னையுடன் அமர்ந்தான்.
ரைம்ஸ் சொல்லும் குழந்தைகள், டான்ஸ் ஆடும் குழந்தைகள், விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகள் என..விதவிதமாய் வித்தைக் காட்டிக் கொண்டிருந்தப் பொடுசுகளை விட.. அதைப் பார்த்து ரசித்துக் கை தட்டி ,கூடச் சேர்ந்து பாடி,ஆடிய திவ்யாவைத் தான் அவனது கண்கள் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.
என்னவோ இருக்கிறது அவளிடம்! தெரிந்து கொண்டே ஆக வேண்டும்! பிடிவாதத்தின் பிடி இறுகிக் கொண்டே சென்றது அவனுள்.
ஓடி, ஆடி அலைவதற்கு ஏற்றவாறு ட்ராக்ஷூட்,ஜெர்க்கின் சகிதம் தூக்கிக் கட்டியக் குதிரை வாலுடன்.. இறுக்கமற்று இலகுவாயிருந்த முகத்துடன்.. சிரிப்பு குறையாமல் வலம் வந்தவளைப் பார்க்கப் பிடித்தது அவனுக்கு.
ஓடி விளையாடிக் கொண்டிருந்தத் திஷா ஒரு கட்டத்தில்.. திவ்யாவை இடித்து சாரி சொல்லி.. பின் அது மிஸ்.கேட் என்று தெரிந்து கொண்டு.. வெட்கச் சிரிப்புடன் அவளருகே நிற்க..
அவளைக் கண்ட மகிழ்ச்சியில் விரலை வாயில் வைத்தபடி.. தோளை இப்புறமும்,அப்புறமும் ஆட்டிக் கொண்டு.. கண்கள் பளிச்சிட நிற்கும் குழந்தையை அள்ளித் தூக்கிக் கொண்ட திவ்யா.. அவள் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சியபடி..
“ஓ மை டியர் திஷா பேபி….” எனக் கூற.. திஷா மேலும் வெட்கப்பட்டுத் திரும்பித் தன் சித்தப்பாவை நோக்கினாள்.
அவள் தன் அண்ணன் மகளைத் தூக்கிய நொடியிலிருந்து அவள் மீது பார்வையைப் பதித்திருந்தவன்.. மென்மையான புன்னகையுடன் இருவரையும் கண்ட படி அமர்ந்திருந்தான்.
“ஃப்ரெண்ட்ஸ் கூட எஞ்சாய் பண்றியா?, ஸ்நாக்ஸ் பிடிச்சிருக்கா?” என்று விசாரித்து.. “அம்மா வரலையா?” என்று கேட்க..
“ம்ஹ்ம் சித்தாவும், பாட்டியும் வந்திருக்காங்க” என்று குழந்தை கூறியதும்.. அது கைக்காட்டியத் திசையில் வந்தவளைக் கண்டு எழுந்து நின்றான் கௌதம்.
அவனைக் கண்டுகொள்ளாமல்.. ராஜாத்தியிடம் அறிமுகத் தோரணையுடன் அவள் அளவாகப் புன்னகைக்க..
“என்னடா நம்மூர் புள்ள மாதிரி இருக்கு இது?, தமிழ் பேசுமா இல்ல இங்க்லிஷ் தானா?” – என்று அவர் புலம்பியபடி மகனைத் தொடர்ந்து எழுந்து நிற்கையிலேயே..
“உ..உட்காருங்க… உட்காருங்க, எழ வேண்டாம்” என்று அவசரமாய்க் கூறியவளைக் கண்டுப் பெரிதாக வாயை விரித்த ராஜாத்தி…
“தமிழ் தானா?,இங்க தமிழ் புள்ளைங்கள்லாம் வேலை பார்க்குறீங்களா?, என்னமோம்மா, நான் வரும் போதெல்லாம் இந்தப் பாப்பா வெள்ளைக்கார டீச்சரோடத் தான் வருது. அதுங்க தஸ்,புஸ்ன்னு இங்கிலிஷ்ல பேசுச்சுகன்னா.. எனக்கு ஒரு மண்ணும் புரியாது. மருமக வேலைக்குப் போயிருவா. அவளையும் தொந்தரவு பண்ண முடியாதுன்னு நான் தான் தினம் அழைச்சிட்டுப் போக வருவேன்” – என்று புலம்ப.. மெல்லப் புன்னகைத்தாள் திவ்யா.
“2,3 பேர் தமிழ் பேசுறவங்க இருக்காங்க. நான் சொல்லி வைக்கிறேன்”
“நல்லதும்மா. நல்லது. நீதான் பாப்பாவோட டீச்சரா?”
“ம்மா, இவங்க இந்த ஸ்கூல் ஓனர்ம்மா” – இடையில் புகுந்துப் பதிலளித்தான் கௌதம்.
“அப்படியா? ,பரவாயில்லயே! நம்ம ஊர்ப் பொண்ணு, இங்க ஸ்கூல் நடத்துறது எவ்ளோ பெரிய விஷயம்?” – என்று சிலாகித்தவரிடம்.. மீண்டும் அளவாய்ப் புன்னகைத்தவள் விடைபெறும் நோக்கத்துடன் மெல்லத் தலையாட்டி நகர்ந்து விட்டாள்.
“ஏன்டா ஓனர்ன்னா.. அளவாத் தான் பேசனும்ன்னு ஏதாவது இருக்கா?,தமிழ் பேசுறவ தான, நல்லாப் பேசுனா என்ன வந்தது?” – ராஜாத்தி நொடித்துக் கொள்ள..திரும்பி அவரை முறைத்தான்.
“அவங்க எல்லார்க்கிட்டயும் அளவாத் தான் பேசுவாங்க”
“உனக்கு எப்படித் தெரியும்?” – சந்தேகமாய் வினவியவரிடம்..
“எப்படியோ தெரியும்” – எனக்கூறி அவன் திரும்பிக் கொள்ள..
அவசரமாய் அவனிடம்.. “என்ன வயசிருக்கும் டா இந்தப் பொண்ணுக்கு?” என்று கேட்டார் ராஜாத்தி.
“32”
“3……………..2ஆஆஆஆ?” – என்ற ராஜாத்தி “ம்க்கும்” என்றபடி மீண்டும் அவனை ஒரு மாதிரி பார்க்க..
“அவங்க எனக்கு அக்கா மாதிரி ராஜாத்தி!,நீ அநாவசியமா உன் மகனை சந்தேகப்படாத.” என்று அவன் சமாதானப் படுத்தியதும்.. “ஹ்ம்ம்,ஹ்ம்ம்” என்ற ராஜத்திக்கு ‘ஹப்பாடா’ மனநிலை.
“அது போக, ஆண்ட்டிகளையெல்லாம் சைட் அடிக்கிறதோட நிறுத்திக்கனும்மா” – தொடர்ந்து கூறியவனிடம்..
“இங்கபாரு, இந்த மாதிரி பேச்செல்லாம் உன் அண்ணிக் கிட்ட வைச்சுக்க” என்று அவர் திரும்பிக் கொள்ள.. “ஹ்ம்ம், உனக்கெல்லாம் 2 பசங்களுக்கு அம்மாவா இருக்கிறதுக்கான தகுதியே இல்ல ராஜாத்தி” என்றவன் திஷாவைக் கவனிக்கத் தொடங்கினான்.
பின் அங்கிருந்த சிறிய ப்ளேக்ரவுண்டில் திஷாவுடன் விளையாடியபடி நின்றவனுக்கு… திவ்யா தன்புறம் நடந்து வருவது தெரிய… அவளை நோக்கிப் புன்னகைத்தான்.
பதிலுக்கு முறுவலிக்காமல் ‘அக்னாலெஜ்ட்’ என்பது போல் லேசாகத் தலையசைத்தவளின் முகம் அவனருகே நின்றிருந்தத் திஷாவைக் கண்டதும் நொடியில் பாவனையை மாற்றிவிட..
பெரிதாகப் புன்னகைத்து “மியாவ்,மியாவ்” என்றபடி அவள் இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டி.. கிளுக்கிச் சிரித்தவளைக் கண்டு “ஹௌ க்யூட் ஷீ இஸ்” என்றவளைக் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
சிரித்தபடி அவள், அவன் புறம் திரும்பவும்.. “ம்க்கும்” எனத் தொண்டையைக் கனைத்துப் பார்வையை மாற்றியவன்..
“இன்னிக்கு ப்ரொடக்ஷன்ல இஷ்யூ எதுவும் இல்ல. ஈமெய்ல் அலெர்ட்ஸ் எதுவும் வரல” – என்று கூற..
புரியாமல் நோக்கியவளிடம்..
“இல்ல, அஃபிசியல்-ஆ மட்டும் தான் உங்க கூடப் பேசனும்ன்னு கண்டிஷன் போடுவீங்களே! அதுக்காக சொன்னேன்!” என்றான்.
“ஏன் அனஃபிஷியல்-ஆ எதுவும் பேசப் போறியா இப்போ?”
“இவ்வளவு நேரம் நீங்க பேசிட்டிருந்தது அனஃபிஷியல்-ஆ தெரியலையா உங்களுக்கு?”
“ப்ச், கௌதம். நான் குழந்தை கிட்டப் பேசிட்டிருந்தேன்”
“அதுவும் யாரோட குழந்தை? கௌதம் வீட்டுக் குழந்தை”
“இப்போ அதுக்கு என்னன்ற?”-எரிச்சலுடன் வினவியவளிடம்..
“ஜூஸ் குடிக்கிறீங்களா?” – என்றான் அவன்.
எப்படியேனும் இன்று அவளோடு இணக்கமாகப் பேசி.. அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆவலுடன் சுற்றிக் கொண்டிருந்தவன்.. முதல் பேச்சே சண்டையில் முடிந்து விடுமோ என்ற பயத்தில் அவசரமாய்ப் பேச்சை மாற்றினான்.
அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி ஜூஸைக் கையில் வாங்கிப் பருகியவளைக் கண்டு ‘எங்கே ஜூஸை மறுத்து விடுவாளோ’ என்ற பயத்துடன் நின்றிருந்தவன் ‘ஹப்பாடா’ என்றப் பெருமூச்சை வெளியிட்டான்.
“குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்குமோ?” – நூல் விடத் தொடங்கினான் அவன்.
“ஆமா. ஏன்? உனக்குப் பிடிக்காதா?”
“குழந்தைகளைப் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா?”
“அப்புறம் ஏன் என்னைக் கேள்வி கேட்குற?”
“தப்பு தான். மன்னிச்சுடுங்க”
“…………..” – கையிலிருந்த பாட்டிலை மூடி விட்டு.. சுற்றி விளையாடிக் கொண்டிருந்தக் குழந்தைகளிடம் பார்வையைத் திருப்பினாள் திவ்யா.
விடாமல் அடுத்துத் தொடங்கினான் அவன்.
“எப்படி இந்த ஐடியா வந்தது?” – கௌதம்.
“எது?”
“குழந்தைங்க, டே-கேர்,ப்ளே ஸ்கூல் எல்லாம்?”
“ஒத்த சிந்தனையிருக்கிற ஃப்ரெண்ட்ஸ் அமைஞ்சா… எல்லாம் சாத்தியம் தான்”
“உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸெல்லாம் இருக்காங்களா?” – ஆச்சரியமாய்க் கேட்டவனை அவள் உணர்ச்சியற்று நோக்க..
“சாரி! நீங்க சொல்லுங்க” என்றான்.
“என்ன சொல்ல?”
“எப்படி இதை ஆரம்பீச்சீங்கன்றதைப் பத்தி”
பெருமூச்சை வெளியிட்டபடி மீண்டும் குழந்தைகளிடம் பார்வையைப் பதித்தவளின் முகம் கனிவாக..
“ஆறு பேர் சேர்ந்த கேங் எங்களோடது. பெருசா குழந்தை,குடும்பம், காசு சேர்க்குறதுன்னு கமிட்மெண்ட் எதுவும் கிடையாது. ஏதாவது பண்ணனும்ன்னு தோணுச்சு. அது குழந்தைங்க சம்மந்தப்பட்டதா இருந்தா நல்லாயிருக்கும்ன்றது சமந்தாவோட ஆசை. உடனே இதைத் தொடங்கிட்டோம்”
“ஏன் சமந்தா அப்படி ஆசைப்பட்டாங்க?”
“ம்??, அவளால இனிக் குழந்தை பெத்துக்கவே முடியாதுன்ற சூழ்நிலையை ஆண்டவன் ஏற்படுத்திட்டதால, இப்படியொரு முடிவுக்கு அவ வந்திருக்கலாம்” – சாதாரணக் குரலில் கூறியவளைக் கண்டு..
“ஓஓஓஓஓஓ” – என்றவனுக்கு என்ன சொல்வதெனப் புரியவில்லை.
இது போல வலி மிகுந்தக் கருப்புப் பக்கங்கள் எதையும் இவளும் கொண்டிருப்பாளோவெனப் பயம் வந்தது.
“அ..அப்போ… உங்களுக்கு?”
“புரியல”
“குழந்தை,குடும்பம்ன்ற கமிட்மெண்ட் உங்களுக்கு ஏன் இல்லை?, நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?”
நேரடியாகப் பாய்ண்ட்டுக்கு வந்து விட்டவனிடம் ஒரு நொடி பதிலேதும் கூறாமல்..தீவிரமாய் யோசித்தாள் அவள்.
“பெருசா ஃப்ளாஷ்பேக் எதுவும் கிடையாது. 24 வயசுல யு.எஸ் வந்தேன். இங்கேயே வேலையை கண்டினியூ பண்ணேன். வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. அப்போ எதுவும் அமையல”
“ஏன்?, உங்களுக்கு செவ்வாய் தோஷமா?”
“அப்படியெல்லாம் எதுவுமில்ல.”
“பின்ன?”
“தெரியல. வேலை சரியில்ல, சம்பளம் பத்தல, சொத்து,சுகமில்ல, தோற்றம் நல்லாயில்ல, குடும்பம் சரியில்லன்னு பொதுவா நம்ம பக்கத்துக் குடும்பங்கள், வர்ற மாப்பிள்ளைங்களை ரிஜெக்ட் பண்ணுவாங்களே! அந்த மாதிரி தள்ளிப் போனது தான்!,வர்க்ல இண்ட்ரெஸ்ட் இருந்த எனக்கு, கல்யாணம் தள்ளிப் போறது பெரிய விஷயமா தெரியல! பெருசா நினைக்கனுமோன்னு தோணுனப்போ.. வயசு ஏறிடுச்சு. மாப்பிள்ளைங்க லிஸ்ட்டெலாம் குறைஞ்சிடுச்சு”
“ஓ!,ஆனா.. உங்க ஃபேமிலி எப்படி உங்களை விட்டு வைச்சிருக்கு?”
“ஃபேமிலின்னு ஒன்னு இருந்தாத் தானே?”
“என்ன சொல்றீங்க?” – அதிர்ச்சியாய் வினவினான் அவன்.
“சின்ன வயசுலயே அம்மா இறந்துட்டாங்க. அப்பா மட்டும் தான். 4 வருஷத்துக்கு முன்னாடி அவரும் போய்ச் சேர்ந்துட்டார்.”
கவலை,சோகம் போன்ற பாவனைகள் எதுவுமின்றி ‘காலைல எழுந்து பல்லு விளக்குனேன்,காபி குடிச்சேன்,இட்லி சாப்பிட்டேன்’ என்பது போல.. தன்னைப் பற்றிய விஷயங்களை மிகச் சாதாரண முக பாவத்துடன் கூறிக் கொண்டிருந்தவளை.. சற்று திகிலுடன் நோக்கினான் அவன்.
“சா….சாரிங்க” – தயங்கிக் கூறியவனைத் திரும்பிப் பார்த்தவள்..
“எங்கப்பா செத்ததுக்கு நீ ஏன் சாரி சொல்ற?” – என நக்கலடிக்க..அதை உதாசீனப்படுத்திவிட்டு..
“பிரதர்ஸ்,சிஸ்டர்ஸ்,ரிலேடிவ்ஸ் யாரும் இல்லையா?” என்றுவினவினான்.
“ஒரு அண்ணன் இருக்கான், வைஃப்,குழந்தையோட”
“அப்டின்னா..அவர் உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பாரே?”
“ஊர்ல இருக்குற அண்ணிங்க எல்லாம் சாதனா மாதிரி இருப்பாங்கன்ற நினைப்பா உனக்கு?”
“ஓ! அண்ணி வில்லி ரோல் ப்ளே பண்றாங்களா?”
“ஆமா! அப்பப்போ காண்டாக்ட்ல இருந்தேன். கடந்த 2 வருஷமா அதுவும் விட்டுப் போச்சு”
“தம்பின்னு யாரையோ சொன்னீங்க?” – அவன் கேட்டதும் மலர்ந்த அவள் முகம்..
“அவன் என் கசின் ப்ரதர். ரொம்பப் பாசக்காரன்! உன்னை மாதிரி தான் நொய்,நொய்ன்னு எல்லாத்துக்கும் கேள்வி கேட்பான். நான் ரத்த சொந்தம்ன்னு நினைக்குற ஒரே ஆளு” – பாசமாய்க்கூற..
“அப்டின்னா..அவர் எதுவும் முயற்சி பண்ணலயா?”-என்றான் அவன்.
“என்ன முயற்சி?”
“உங்க கல்யாணத்துக்காக?”
“என் கல்யாணத்துக்கு அவன் ஏன் முயற்சி பண்ணனும்?,எனக்கு 32 வயசு கௌதம். என் வாழ்க்கையோட கன்ட்ரோல் இப்போ என் கைல இருக்கு”
“சரி, அப்போ நீங்களே யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க”
“யாரையாவதுன்னா?”
“யாரையாவது. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி”
புருவத்தைத் தூக்கி வேறு திசை நோக்கியவள்.. லேசாய்த் தோளைக் குலுக்கினாள்.
“யார் மேலயும் உங்களுக்கு லவ் வந்ததில்லையா?”
“லவ்-ஆ?”
“ஆமா”
“அதுக்கெல்லாம் எனக்கு நேரமிருந்ததில்ல”
“அடப்போங்க! வர்க்கஹாலிக்-ஆ இருந்து.. வாழ்க்கையை நழுவ விட்டிருக்கீங்க நீங்க?”
“கல்யாணம் பண்ணிக்கலேன்னா, வாழ்க்கையே போயிடுச்சுன்னு அர்த்தமா? தப்பு கௌதம்”
“என்னத் தப்பு?”
“கல்யாணம் தான் வாழ்க்கையா?”
“இல்ல தான். ஆனா.. கல்யாணம்ன்றது வாழ்க்கைக்கு முழுமையைக் கொடுக்குற விஷயம்ங்க.”
“அப்படியா?,கல்யாணம் பண்ணி செட்டில் ஆன எல்லாரும், முழுமையான வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்காங்கன்னு நினைக்குறியா?, அதெல்லாம் ஒவ்வொருத்தரைப் பொறுத்தது. மனுஷனைத் திருப்திபடுத்துற, நிறைவா உணர வைக்குற விஷயம் கல்யாணம் தான்றதெல்லாம் சுத்த முட்டாள்த்தனம்!”
“ப்ச், இப்படி யோசிச்சுப் பாருங்க! ஊர்ல இருக்குற குழந்தைங்க மேலயே இவ்ளோ ஈடுபாட்டோட இருக்குற நீங்க, உங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்தா..எவ்ளோ சந்தோசப்படுவீங்க?”
“நிச்சயம்.. அது தான் என் வாழ்க்கையோட மிகப் பெரிய சந்தோசமா இருக்கும் கௌதம்”
“பின்ன என்னங்க?”
“ஐம் நாட் அகைன்ஸ்ட் மேரேஜ் கௌதம். கல்யாணம்ன்றது தனிமனிதனோட அந்தரங்கம். சுயவிருப்பம். எனக்கு 40-வயசுல கல்யாணம் பண்ணனும்ன்னு தோணுனா கூட.. அந்த உரிமையை எனக்குக் கொடுக்குற சமூகம் வேணும்ன்னு தான் நான் சொல்றேன்”
“………………..”
“30 வயசைக் கடந்தும் கல்யாணம் ஆகாம இருக்குறதால.. நான் சந்தோசமா இல்லன்னு அர்த்தம் கிடையாது. கல்யாணம், என் சந்தோசத்தைத் தீர்மானிக்குற விஷயம் கிடையாது. ஐம் ஹாப்பி வித் வாட் ஐம் நௌ.”
“நிஜமாவே 40-வயசுல தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?”
“ஏன், பண்ணிக்கக் கூடாதா?”
“இல்லங்க. மனசளவுல ஏற்படுற முதிர்ச்சியைப் பத்திப் பேசுற நீங்க, உடல்ல நடக்குற மாற்றங்களை கன்சிடர் பண்ண மாட்டேன்றீங்களே?”
“என்ன?”
“30-வயசுக்கு அப்புறம் எலும்புகள் பலமிழந்துடும், குழந்தை பிறப்புக் கஷ்டமாயிடும்ன்னுலாம் டாக்டர்ஸ் சொல்றாங்களே!”
“நான் தான் 30-வயசை ஏற்கனவே கடந்துட்டேனே!”
“அதனால தான் சொல்றேன். 40 வரைக்கும் வெய்ட் பண்ணாதீங்கன்னு”
“கௌதம், விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்ன கதையா இருக்கு, நீ பேசுறது”
“என்னவோ போங்க” என்றவன் “ஆ..ஆனா.. இ..இதுக்கும் நீங்க, ஆஃபிஸ்ல எல்லாரோடயும் இயல்பா பழகாம இருக்குறதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?” என்று கேட்டான்.
ஒரு நொடி யோசித்தவள்.. பின் தோளைக் குலுக்கி “இது ரொம்ப காம்ப்ளிகேடட் ஆன விஷயம் கௌதம். நீ சின்னப்பையன் உனக்குப் புரியாது” – என்று விட.. அவன் பொங்கியெழுந்து.. முறைப்பதற்குள்.. முன்னே நடந்து விட்டாள்.
அது என்ன மாதிரியான காம்ப்ளிகேஷன் என்பது அந்த வாரக் கடைசியில் நடந்த சம்பவத்தின் வாயிலாகப் புரிந்தது அவனுக்கு.
அன்று ஒரு வெள்ளிக் கிழமை..
தசரா விழா என்பதால்.. அலுவலகம் முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயே நிறுவனம் தான் அதுவென்றாலும்.. அங்கு வேலை செய்யும் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால்… அலுவலகமே மினி இந்தியாவைப் போல் காட்சியளித்தது.
குர்த்தா,கால் சட்டையுடன் ஆண்களும், கலர்கலர் சேலையில் பெண்களுமாய் கண்ணுக்குக் குளிர்ச்சியாக வலம் வர.. புன்னகையுடனே அலுவலகத்தினுள் நுழைந்தான் கௌதம்.
எதிர்ப்பட்ட க்ளையண்ட் மேனேஜர் ராய் வெல்ஸ் கூடக் குர்த்தாவில் திரிவதைக் கண்டுச் சிரித்து.. நின்று விஷ் செய்து விட்டுத் தன் இருக்கையை நோக்கி நடந்தான் கௌதம்.
“கௌதம்… இங்க என்ன பண்றீங்க?,அங்க செலிப்ரேஷன் போயிட்டிருக்கு” கையில் கிஃப்ட் பாக்ஸ்களுடன் அவனை அவசரமாய் அழைத்த ஜான்சியிடம்…
“10மினிட்ஸ்! ஒருகால் இருக்கு. முடிச்சிட்டு வர்றேன்” – என்றவன்.. ஐடி கார்டை ஸ்வைப் செய்து விட்டு ஓடிசிக்குள் நுழைந்தான்.
ஆள் அரவமே இல்லாதிருந்த ஓடிசிக்குள் விசிலடித்தபடி நுழைந்தவன்.. லேப்டாப் பையை டெஸ்க்கில் வைத்து விட்டுக் கண்களைச் சுழற்ற.. சற்றுத் தள்ளியிருந்த இருக்கையருகே.. தன் லேப்டாப்பில் ஏதோ செய்தபடித் தீவிர முக பாவத்துடன் நின்றிருந்த திவ்யா தென்பட்டாள்.
பிங்க்கும், அரக்கு பார்டருமாய்.. ஒற்றை முந்தானையுடன்.. சில்க் காட்டன் புடவையில்.. கண்ணை உறுத்தாத அழகுடன்.. எளிமையாய் நின்றவளை ஒரு நொடி.. பொருள் விளங்காதப் பார்வையுடன் நோக்கி விட்டு..
“குட்மார்னிங்” என்று சத்தமிட்டான்.
அறையிலிருந்த அமைதியை கிழித்துக் கொண்டுத் திடீரென அவன் கொடுத்த சத்தத்தில் சற்றும் பதறாமல்…. நிதானமாய் நிமிர்ந்து அவனை நோக்கியவள்.. வழக்கம் போல் பதிலேதுமின்றி லேசாய்த் தலையசைத்து விட்டு லேப்டாப்பை நோக்கிக் குனிந்து கொண்டாள்.
அடுத்து வந்த நிமிடங்களில்.. அவள் தலை நிமிரா விட்டாலும்.. அவன் தன் விழிகளை அவள் மீதிருந்து நகர்த்த முயற்சிக்காமல்.. கைகளை மட்டும் தன் போக்கிற்கு வேலை செய்ய அனுமதித்து விட்டு.. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் ஏதோ உறுத்த நிமிர்ந்து அவனை நோக்கினாள் திவ்யா.
அவன் அப்போதும் தன் பார்வையைத் திருப்பிக் கொள்ளவில்லை.
புருவம் சுருக்கி அவனையே பார்த்தவளின் விழிகளை.. ஒரு நொடி.. நேர்ப் பார்வையாய் நோக்கி விட்டு.. பின் உணர்ச்சிகள் பிரதிபலிக்காத.. அடிக்குரலில்..
“ரொம்ப அழகா இருக்கீங்க” என்றான்.
சுருங்கியிருந்த அவள் புருவங்கள் சட்டென விரிந்த நிலை அவன் வார்த்தைகளால் அவளுக்குண்டான வியப்பை விளக்க.. விழிகளில் பரவிய எச்சரிக்கை உணர்வுடன்.. முகத்தை இறுக்கி.. மூக்கு நுனியில் சுருட்டியவள்.. கைகளைக் கட்டிக் கொண்டு அவனை ஒரு மாதிரி நோக்கினாள்.
அவளது கண்களும், முகமும் வெளிக்காட்டிய பாவனைகள் உள்ளுக்குள் எரிச்சலை உண்டாக்க.. தானும் கைகளைக் கட்டிக் கொண்டு முகத்தைத் தீவிரமாக்கியவன்… மீண்டும்..
“இந்த சாரி-ல நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க” என்றான்.
உஷ்ண மூச்சை வெளியிட்டபடிக் கடகடவெனக் கீ-போர்டைத் தட்டியவள் பின் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு அவனருகே வந்து நின்றாள்.
ஹீல்ஸ் பாதங்களைத் தாண்டித் தரையைத் தழுவிய முந்தானையுடன் முன்னே நடந்து வந்தவளைத் தலை முதல் கால் வரை நோக்கினான் அவன்.
அள்ளிக் கொள்ளச் சொல்லும் அழகு அல்ல அது! அதே நேரத்தில் கையெடுத்துக் கும்பிட வைக்கும் சாத்வீகமும் இல்லை! கவர்ச்சிக்கும்,கண்ணியத்துக்கும் மத்தியில்… சூப்பர் ஃபிகருக்கும்,சுமார் ரகத்துக்கும் இடையே ஓர் இடுக்கில் நிற்கிறாள் அவள்! பிரித்தறியா முடியாத.. அவன் பகுத்தறிவுக்கு எட்டாத.. பெண் வகை ஒன்றுக்குள் இறுக்கமாய்த் தன்னைக் கட்டி வைத்திருக்கிறாள்.
அருகே வந்து நின்று.. அடக்கப்பட்டக் கோபத்துடன் அவள்.. தன்னையே பார்ப்பதை உணர்ந்து.. மறுபடி..
“அழகாயிருக்கீங்க” என்றான்.
“கௌதம்” – பொறுமையற்ற மூச்சுடன் அவள்.
“தேங்க் யூன்னு சொல்லுங்க” – நிதானமாய் அவன்.
“கௌ…தம்ம்..” – வெளிப்படையாய்ப் பல்லைக் கடித்தாள் அவள்.
“என்ன தப்பா சொல்லிட்டேன் இப்போ?, நான் சொன்னது.. வெறும் காம்ப்ளிமெண்ட்ங்க. நன்றின்னு சொல்லி ஸ்மைல் பண்ணிட்டுப் போறதுல.. உங்களுக்கு என்ன கஷ்டம்?”
“…………..”
“திவ்யா…”
“……………”
“என்ன….ங்க? இதையெல்லாம் சாதாரணமா எடுத்துக்கப் பழகுங்க ப்ளீஸ்”
“கௌதம்..” – ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராய் அடிக்குரலில் அவள்.
“சொல்லுங்க..”
“உன்னை மதிச்சு.. அன்னிக்கு நீ கேட்டக் கேள்விகளுக்கெல்லாம்.. நான் நின்னு பதில் சொன்னேன் அப்டின்றதுக்காக.. என் கிட்ட வரம்பு மீறி என்ன வேணும்ன்னாலும் பேசலாம்ன்னு நினைக்காத”
“அப்டியா?” – பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு.. தலை சாய்த்து அவளை நோக்கினான் அவன்.
“அன்னைக்கு என்னைச் சுத்திக் குழந்தைங்க இருந்ததால.. ரொம்பச் சாதாரணமான மனநிலைல நான் இருந்தேன்றதால.. உன்னைக் கேள்வி கேட்க அனுமதிச்சேன். பட், அதை சாக்கா வைச்சு ‘நீங்க அழகாயிருக்கீங்க, அறிவா பேசுறீங்க’ன்னு உளர்ற வேலையெல்லாம் வைச்சுக்காத” – முகம் கோபத்தைக் காட்டாவிட்டாலும், அவள் குரலில் வெயில் அடித்தது.
“உளர்றேனா?, அதுசரி!” – தோள் குலுங்க சிரித்தபடி.. நிதானமாய்ப் பிடரியைக் கோதினான் அவன்.
நக்கலான அவனது பாவனைகளில்.. கோபம் தலைக்கேற…
“அன்னிக்கு உன் கண்ணுல வெறும் அதிகப்பிரசங்கித்தனம் மட்டும் தான் தெரிஞ்சது. ஆனா.. இப்போ… இப்போ.. உன் பார்வையே சரியில்ல!” எனக் குற்றம் சாட்டினாள் அவள்.
இரு கைகளையும் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டு ஒரு அடி முன்னே எடுத்து வைத்து.. அவளை நெருங்கி நின்றவன்..
“எப்படிப் பார்க்குறேன்?” என்று வினவ…
விலகிச் செல்ல அவசரம் காட்டாமல்.. அண்ணார்ந்து அவன் முகம் பார்த்தாள் அவள்.
அவளது விழிகளில் சலனமில்லை. உடல்மொழியில் தடுமாற்றம் இல்லை.
அவனது நெருக்கம் அவளைப் பாதிக்கவில்லை. கல் தூணின் அருகே நிற்பது போல்.. விறைப்பு குறையாமல்.. நிமிர்வுடன் நின்றாள்.
அர்த்தமற்ற ஏமாற்றமொன்று.. அனுமதியின்றி.. உள்ளே பரவ.. பெருமூச்சுடன் அவளை விட்டு விலகி நின்றான் கௌதம்.
பின் மறுபுறம் தலையைத் திருப்பிக் கொண்டு..
“நான் தப்பா-லாம் பார்க்கல” என்றான் விறைத்த குரலில்.
“அதை என்னைப் பார்த்து சொல்லு”
சட்டென அவள் புறம் திரும்பியவன்..
“ப்ச், கழுத்துக்குக் கீழ பார்த்தா தான்ங்க தப்பு. நான் முகத்தை மட்டும் தான் பார்த்தேன்” எனக் கூற..
அவனது வெளிப்படையான பேச்சில்.. முகம் சுருங்க.. அருவெறுப்புடன் நகரப் பார்த்தவளை வேகமாகக் கை நீட்டித் தடுத்தான் அவன்.
“ப்ச், அது காமப்பார்வை இல்ல. ரசனையான பார்வை தான்னு மீன் பண்ண வந்தேன்! என்னைப் பார்த்தா.. பொறுக்கி மாதிரி தெரியுதா உங்களுக்கு?, மறுபடி,மறுபடி அவமானப்படுத்தாதீங்க.” – எரிச்சலுடன் காய்ந்தவனை... நின்று நிதானமாய் நோக்கியவள்..
“நீ என் கிட்டப் பழகுற முறை,கேட்குற கேள்வி,நடந்துக்கிற விதம்.. இது அத்தனைக்கும்.. மோட்டிவ் என்னன்னு நான் கண்டுபிடிக்கிற வரை தான் நீ இப்படித் தைரியமா என் முன்னாடி நின்னு பேச முடியும்” – என்று தில்லான குரலில் கூற..
“கண்டுபிடிங்க. கண்டு பிடிச்சு, எனக்கும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்.” என்றவன்.. கடுப்புடன் தன் கணினியின் புறம் திரும்பிக் கொண்டான்.
முழுக்கோபத்தையும் காலணியில் காட்டி.. தரை அதிர.. அவள் வேகமாக நடந்து போவது தெரிந்தது. கண்டு கொள்ளவில்லை அவன்.
அதன் பின்பு நடந்த தசரா கொண்டாட்டத்தில் அவள் முகம் காட்டவேயில்லை. ‘இவள் மாறப் போவதில்லை’என்றெண்ணிக் கொண்டவன்.. மற்றதை மறந்து.. கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள.. நாள் முழுக்க மகிழ்ச்சியாகக் கழிந்தது அவனுக்கு.
மாலையானதும்.. வீடு திரும்பக் கிளம்பியவனுக்கு... ஜாக் அவனது இருக்கையில் அமர்ந்தபடி யாருடனோ செல்ஃபோனில் சத்தமாக உரையாடிக் கொண்டிருப்பதுக் கேட்டது.
“வெள்ளிக்கிழமை தான்! தசரா தான்! என்ன பண்றது?”
“…………..”
“தண்ணியடிக்கக் காசு இருந்தாலும், கம்பெனி இல்லயே டா தம்பி எனக்கு!, ஒருத்தன் இருந்தான். எவளோ ஒருத்திக்காக என்னைப் பகைச்சுட்டு சுத்திட்டிருக்கான். அவனையும் கூட்டிப் போக முடியாது” – என்று அவன் முடிப்பதற்குள் அவனது தோளைத் தட்டினான் கௌதம்.
“யாரு?” என்றபடித் திரும்பிய ஜாக் இவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொள்ள..
“என் செல்லக் குட்டிக்கு என்ன கோபம்?” என்று அவன் தாடையைப் பற்றிக் கொஞ்சினான் கௌதம்.
“ஏய்,ச்சி,ச்சி! கையை எடு. ஜான் வீட்டுக்குப் போயிருச்சுன்றதுக்காக.. என்னைக் கொஞ்சுவியா நீ?”
“ஷ்ஷ்ஷ், இது தான் வேணாம்ன்றேன்! தேவையில்லாம இப்போ எதுக்கு என்னையும்,அந்தப் பொண்ணையும் இணைச்சுப் பேசுறீங்க?”
“டேய்,கேலி தான டா பண்றேன்?”
“பண்ணாதீங்க. ஜான்சி எனக்குத் தங்கச்சி மாதிரி”
“அடப்பாவி!, போன மாசம் வரைக்கும், நீ ரொமாண்ட்டிக்-ஆ அந்தப் புள்ளையைப் பார்க்குறதும், அந்தப் புள்ள வெட்கப்பட்டு ஓடுறதுமா.. கலகலன்னு இருந்தீங்களே டா!” –வாயைப் பிளந்தவனின்… பொருட்களையெல்லாம் அள்ளி அவன் பையில் திணித்தவன்..
“இந்த மாசம் ஆளை மாத்திட்டேன். ப்ச், வெட்டிப் பேச்சு பேசாம எந்திரிய்யா. பாருக்குப் போவோம்” – எனக் கூற..
“இதுனால தான் டா இளவட்டப் பயலுகளோட நான் சுத்துறதே இல்ல! உங்களுக்கெல்லாம் காதல்ன்னா என்னன்னே தெரிய மாட்டேங்குது” – என்று புலம்பியபடி அவன் பின்னே சென்றான் ஜாக்.
பிண்ணனியில் மெல்லிய ஆங்கிலப் பாடல் ஒலிக்க.. மங்கிய ஒளியுடன்.. போதையில் நின்ற பாருக்குள் நுழைந்த இருவரும்.. கார்னர் சீட்டைப் பிடித்துக் கொண்டுக் கையில் க்ளாசுடன் அமர்ந்து விட்டனர்.
“நீ குடிக்கலயா கௌதம்?” – ஜாக்.
“ம்ஹ்ம் நான் வெள்ளிக் கிழமை விரதம். அதனால குடிக்க மாட்டேன்”
“அப்புறம் ஏன் டா என்னைக் கூட்டி வந்த?”
“கம்பெனிக்கு ஆள் இல்லன்னு தவிச்சுட்டிருந்தீங்களே! அதான்”
“ச்ச, நீ நல்லவன் டா” – என்றபடிக் கண்களைச் சுழல விட்ட ஜாக், இடது மூலையில் அமர்ந்திருந்த ஜோடியைக் கண்டு.. விழியை விரித்து.. ஏதோ கூற வந்துப் பின்.. கௌதமுடைய முகத்தைப் பார்த்தபடி அமைதியாகி விட..
அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கௌதம், அவன் பார்வை சென்ற திசையில் தானும் நோக்கி “என்ன?” என்றான்.
“2 லவ் பேர்ட்ஸ் உட்கார்ந்துருக்கு. சொன்னா.. நீ என் சட்டையைப் பிடிப்ப”
“திவ்யாவா?” – ஆர்வமாய்க் கேட்டவனிடம்..
“ஆமா. கூடவே ஷர்மாவும்” – என்றான் ஜாக்.
“ஓஓஓஓ” – என்றவன் குளிர்பானக் குவளையைக் கையில் எடுத்தபடி.. “இருக்கட்டும். நாம நம்ம வேலையை பார்ப்போம்” என்று விட்டு.. பேச்சை மாற்ற… ஜாக் தன் குடியைத் தொடர்ந்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில்.. அவனது அத்தை மகள் அம்சாவிலிருந்து.. பக்கத்து வீட்டு அலெக்ஸா வரை அனைவரைப் பற்றியும் புலம்பித் தீர்த்த ஜாக்… ஒரு கட்டத்தில் வாழை மட்டையாகி விட.. சிரிப்புடன் எழுந்த கௌதம்.. அவனை நேராக அமர வைத்து…
“நான் காரை ஃப்ரண்ட்ல நிப்பாட்டிட்டு வந்து உங்களைக் கூட்டிப் போறேன். இப்படியே உட்காருங்க” எனக் கூறி விட்டு.. வெளியே நடந்தான்.
மீண்டும் அவன் உள்ளே நுழைகையில்.. ரெஸ்ட் ரூம் அருகே திவ்யா நிற்பது தெரிந்தது.
கண்டு கொள்ளாமல் சென்று விட எண்ணி.. அவளைப் பார்த்தபடியே நகர்ந்தவனின் கால்கள்.. அவளது முகம் காட்டிய பாவனையில் அசையாது நின்று விட.. அவன் விழிகள் அவசரமாய் அவளை ஆராய்ந்தது.
இறுக்கத்தை முறுக்கி முகமாக்கி வைத்திருந்தவளின் கண்களில்… உணர்ச்சிகள் முற்றிலுமாக வடிந்து போயிருக்க.. அகத்தின் அழுத்தம் கொடுத்த பாதிப்பில்.. நகங்களால் உள்ளங்கையைக் குத்திக் கிழித்தபடி... தோள்களைச் சுருக்கி.. உயரத்தைக் குறுக்கி.. வெறித்த பார்வையுடன் நின்றிருந்தாள்.
“ப்ளடி பிட்ச்…”
கௌதம் அவளருகே சென்ற போது கேட்டது இந்த வார்த்தைகளைத் தான். வேகமாகப் பார்வையைத் திருப்பியவன் அப்போது தான் கவனித்தான் அவளருகே ஒரு பெண் நிற்பதை.
முகமும்,உடலும் போதையில் குளித்திருக்க.. விழி வழி கொப்பளித்தக் கோபத்துடன் தகாத வார்த்தைகளால் திவ்யாவைக் கூறு போட்டுக் கொண்டிருந்தாள்.
“மிஸஸ்.ஷர்மா.. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” – கோபம் எல்லையைத் தாண்டியிருந்த போதிலும்.. நிதானத்தை இழக்காமல்.. அடிக்குரலில் அந்த பெண்ணை எச்சரித்துக் கொண்டிருந்தாள் திவ்யா.
“ஏன், என்ன தப்பா சொல்லிட்டேன்? பிட்ச் தான நீ?, கல்யாணமாகி பொண்டாட்டி,குழந்தைங்கன்னு குடும்பமா இருக்குற மனுஷன் பின்னாடி.. தெரு நாய் மாதிரி சுத்திட்டிருக்கிற நீ பிட்ச் தான்!, நாடு விட்டு நாடு வந்து இந்த வேலை பார்க்குறதுக்கு.. நீயெல்லாம் தூக்குல தொங்கி சாகலாம்”
“மிஸஸ்.ஷர்மா, என்னை எக்ஸ்ப்ளைன் பண்ண விடுங்க” – தவிர்க்க முடியா தளர்ச்சி அவள் குரலில் தவழ்ந்தது.
“எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்து என்ன பண்ணப் போற?, என் வீட்டுக்கு வந்து குடியேறப் போறியா?, அந்தாளு ரெண்டு பொண்டாட்டியையும் ஒரே வீட்டுக்குள்ள வைச்சு வாழ்ற அளவுக்குப் பெரிய ஆள் ஆயிட்டானா?” – நக்கலாய் வினவினாள் அந்தப் பெண்.
“நீங்க இப்போ நிதானத்துல இல்ல. போதை தெளியட்டும். எல்லாத்தையும் விரிவா பேசலாம். நீங்க நினைக்குற,கேள்விப்பட்ற எதுவும் உண்மை இல்ல. நீங்க என்னை நம்ப வேண்டாம். உங்க புருஷனை நம்புங்க” – கடைசி வரைப் பொறுமையுடன் புரிய வைக்க முயற்சித்தாள் திவ்யா.
“நம்புனதுக்குத் தான்.. தினம் நைட் உன் தோள்ல தொங்கிட்டு சுத்துறானே” – விரக்தியும்,கண்ணீருமாய் கூறியவள்.. மீண்டும் அவளைக் கோபமாய் ஏறிட்டு…
“உன்னை மாதிரி அடுத்தவன் குடும்பத்தைக் கெடுக்குற ******-க்களையெல்லாம் ஆண்டவன் ரொம்ப நாள் விட்டு வைக்க மாட்டான். கூடிய சீக்கிரமே உருத் தெரியாம அழிஞ்சு போகப் போற நீ” என்று சாபம் விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டுத் தள்ளாடியபடி நடந்து சென்று விட்டாள்.
தரையோடு தரையாகத் தளர்ந்து போய் நின்றவளின் முன்னே சென்று நின்றான் கௌதம்.
அவள் கருமணிகளிரெண்டும் பழுப்பைத் தொலைத்து.. வெளுப்பைப் பெற்றிருந்தது.
துடித்த கன்னங்கள் இரண்டும்.. விழி நீரைத் தாங்கிக் கொள்ளத் தயாராய் இருந்தும்… அணை திறக்க மனமில்லாத அரசாங்கமாய்.. அமைதியாயிருந்தது அவள் கண்கள்.
இதழ்களை அழுத்தமாய் மூடியபடி அசையாது நின்றவளை ஒரு நொடி நோக்கியவன்.. பின்..
“வீட்டுக்குப் போகலாமா?” என்று வினவினான்.
அசையும் சக்தியை இழந்த ஆலமரமாய்.. வேரோடி நின்றவளின் முழங்கையைப் பற்றிக் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு நகர்ந்தான் அவன்.
அவன் கார் அருகே வந்ததும் சுயநினைவு பெற்று.. “நான் பார்த்துக்கிறேன்” என்றபடி விலகியவளிடம்..
“என்னத்த பார்ப்பீங்க? நீங்க பார்த்துக் கிழிச்ச லட்சணத்தைத் தான் நான் பார்த்தேனே! பேசாம, உள்ள ஏறுங்க.” என்றவன் “பெரிய.. பொறுமையின் சிகரம்ன்னு நினைப்பு!” என்று முணுமுணுத்தபடி விறுவிறுவென நடந்து சென்று.. காருக்குள் ஏற.. அவனோடு சண்டையிடும் மனநிலையில் இல்லாதவளும்.. மறுபேச்சின்றி அவனைத் தொடர்ந்து அமர்ந்தாள்.
கண் மூடி இருக்கையில் சாய்ந்திருந்தவளைத் திரும்பிப் பார்த்து சங்கடப்படுத்த விரும்பாமல்.. சாலையில் கண்ணைப் பதித்து அமைதியாகக் காரை ஓட்டினான் அவன்.
அவள் வீட்டு முகவரியை அவன் அறிந்து வைத்திருந்ததனால்.. நேராகச் சென்று அந்தத் தனி வீட்டின் முன்புக் காரை நிறுத்தியவன்.. அவள் இறங்கும் வரைக் காத்திருந்து.. அவளைத் தொடர்ந்து அவள் வீட்டினுள் நுழைந்தான்.
லிவிங் ரூமைத் தொடர்ந்திருந்த டைனிங் டேபிள் நாற்காலியொன்றில் அவள் அமர்ந்ததும்.. அவனும் அவளுக்கெதிரே அமர்ந்தான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவளிடம்..
“உங்க வீக் ஆன மனநிலையை யூஸ் பண்ணி.. உங்கக் கிட்ட நெருங்கி.. கையைப் பிடிச்சு.. கட்டிப் பிடிக்கிற ஐடியாவெல்லாம் எனக்குக் கிடையாது. அதனால அப்படிப் பார்க்காதீங்க”
“…………….”
“கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு.. நானே போயிடுவேன்” – என்றவன் அவள் முகத்தைப் பாராமல்.. வீட்டைப் பார்வையிட்டான்.
மரப்பாச்சி பொம்மையின் பெட்டகம் எப்படியிருக்குமோ.. அப்படியிருந்தது. கல்லும்,மண்ணும் மட்டுமே இருக்கும் கட்டிடடமாக! வெறுமையுடன்!
சுற்றிச் சுழன்ற அவன் பார்வைத் தன் முன்னே.. கண்களை மூடியபடி.. கசங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தவளின் மீது வந்து முடிந்தது.
உணர்ச்சிகளுக்கு உப்பு தடவித் துண்டமாக்கி முகத்தில் தொங்க விட்டிருந்தாள்.
அவன் பார்வையை உணர்ந்ததாலோ என்னவோ… கண்களைத் திறந்தாள் அவள்.
“காம்ப்ளிமென்ட் தான் சொன்னேன். அதனால தேங்க்ஸ் சொல்லி இயல்பா கடந்து போங்கன்னு காலைல சண்டை போட்டியே! அப்படி உன்னை மாதிரி 4 பேர் கிட்ட நான் சிரிச்சா போதும், 40-விதமான பேச்சுக்கள் என்னைப் பத்தி உருவாகுறதுக்கு”
“……………..”
“நீ சொல்ற மாதிரி.. நடந்துக்கிற மாதிரி.. உலகம் அவ்ளோ சிம்பிள்-ஆ இயங்குதுன்னு நினைச்சியா?”
“……………”
“பொம்பளைக்குக் கீழ வேலை பார்க்குறாதான்னு வக்கிரமா யோசிக்குற ஆண்கள் இப்பவும் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?, அப்படிக் கீழ்த்தரமான ஆட்கள் சிலர் பரப்புற தப்பான விசயங்களோட விளைவு… என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்குதுன்னு தெரியுமா?”
“……………….”
“32 வயசா? கல்யாணமாகாத பொண்ணா? ஓகே! அவளை விட மூத்தவன் கிட்ட பழகுறாளா?அப்டின்னா.. நிச்சயம் அவனோட கீப்-ஆ தான் இருப்பா! அவனை விட வயசு சின்னவன் கூட சுத்துறாளா? அப்போ ‘வளைச்சுப் போட்டுட்டா பாரு! பிட்ச்’ன்னு ஈசியா பேசிட்டு போயிடுவோம்! புறணி பேசுறதுல மட்டும் ஆம்பளை,பொம்பளை பாகுபாடெல்லாம் கிடையாது நம்ம ஊர்ல”
“…………..”
“ஆமா எனக்கு 32 வயசு. நான் கல்யாணம் பண்ணிக்கல. சிங்கிள்-ஆ தான் வாழ்றேன். அதனால என்ன இப்போ?, என்னைப் பார்த்தா.. ஆணோட உறவுக்காக டெஸ்பரேட்-ஆ அலையுற ஆள் மாதிரியா இருக்கு?, ஒவ்வொருத்தனையும் எட்ட நிறுத்தி.. 80-அடி இடைவெளியோட ஏகப்பட்ட எச்சரிக்கையோட பழகுறேன்! ஆனாலும்.. என்னை விட்டு வைக்குறாங்களா?”
“……………..”
“என் முகத்துக்கு முன்னாடி சிரிச்சுப் பேசி பம்மிட்டு.. முதுகுக்குப் பின்னாடி தப்பா பேசுறவன் கிட்ட நான் எப்படி இயல்பா பழக முடியும்! நான் இப்படியிருக்கும் போதே நிலைமை தரை துடைக்குது. இதுல நீ சொல்ற மாதிரி இருந்தா.. என்ன ஆகும்?”
பதிலேதும் பேசாமல் அமைதியாக அவள் பேசுவதைக் கேட்டபடி அமர்ந்திருந்தான் கௌதம்.
நோ சேஞ்ச் இன் ஹெர் ஆட்டிடியூட். அவள் வார்த்தைகள் எதிலும் ‘சிம்பதி’ தென்படவேயில்லை. நான்.. நானா இருக்கேன்! நானா வாழ்றேன்! இதுல உங்களுக்கெதுக்கு டா குத்துது?, அதட்டி,உருட்டுற குணத்தோட ஒரு பொம்பளை.. உங்களுக்கு மேலதிகாரியா வேலை பார்த்தா.. அவ ஒழுக்கத்தை விமர்சிப்பீங்களா என்கிற ஆதங்கம் மட்டும் தான்!
“இதையெல்லாம் காதுல வாங்காம துடைச்சித் தூக்கிப் போடத் தெரியாத ஆளுக்கு.. இந்த விசயத்தோட பாதிப்பு எவ்ளோ தீவிரமா இருக்கும்?, மிஸஸ்.ஷர்மா கோபப்படுறதுல தப்பே இல்ல”
“…………..”
“ஆனாலும்.. கைப் பிடிச்சு.. கல்யாணம் பண்ணி, குழந்தை,குட்டியெல்லாம் பெத்துக்கிட்டவங்களுக்கு.. எப்படி அடிப்படை நம்பிக்கை அழிஞ்சு போகும்?, நம்பிக்கை இல்லாம.. எப்படி இத்தனை வருஷம் குடும்பம் நடத்தியிருக்க முடியும்?”
“……………”
“என்னைத் தப்பா பேசுற உரிமையை அவங்களுக்கு யார் கொடுத்தா?, தான் ஒரு சந்தேகப் பேய்ன்ற உண்மையை மறைக்க.. என் மேல பழி போட்டு இஷ்டத்துக்கு அசிங்கமா பேசுவாங்களா?, நான் அப்படிப்பட்டவளா?”
அதுவரை மனமும்,மூளையும் ஒருங்கிணைந்து.. சிந்தனைகளைத் தெளிவாக்க முயன்றதன் விளைவால்.. திருத்தமாகப் பேசிக் கொண்டிருந்தவளின் குரல்.. திடீரெனக் கரகரப்பானது.
தன்மானம் கொடுத்தக் கோபம்! அதை வெளிப்படுத்த முடியாத சுயபச்சாதாபம்!
பசி,ருசி உணராது இறுகிக் கிடந்த மூளையோடு, தான் ‘உறுதியானவள்’ எனத் தனக்குத் தானே சொல்லிச் சொல்லி உருவாக்கிக் கொண்ட கர்வத்தோடு, என்னை எதுவும் பாதிக்காது என முயன்று வளர்த்துக் கொண்டு இறுமாப்போடு.. மிடுக்கும்,நிமிர்வுமாய் அத்தனையையும் போராடி.. சமாளித்து வருபவளுக்கு.. இன்றைய நேரடித் தாக்குதல் கொடுத்தத் தடுமாற்றம்.. நிலை பிறழச் செய்திருந்தது.
முகம் கன்றிச் சிவக்க… அடக்க நினைக்கும் அணையானது.. அவள் சொல் பேச்சுக் கேளாமல்.. அருவியாய்க் கொட்டி விடுமோ என்ற படபடப்புடன்.. இருகை விரல்களையும் ஒன்றாகப் பிணைத்து.. தனக்குத் தானே தைரியம் கொடுத்தபடி.. விறைத்த முதுகுடன் அவள் அமர்ந்திருந்தத் தோற்றம்.. மனதைப் பிசைய.. அவள் மனதை மாற்றும் நோக்கத்துடன்..
ஒரு கையைக் கன்னத்தில் வைத்தபடி அவள் முகம் பார்த்து.. அந்த டைனிங் டேபிளை நிறைத்துக் கொண்டு அமர்ந்தவன்..
“கண்ணம்மா… கண்ணம்மா…… கண்ணிலே….. என்னம்மா…” என்று பாட…
திகைத்து அவன் முகம் பார்த்தவளின் விழிகள்.. அதற்கு மேல் தாங்காது.. பொல,பொலவெனக் கண்ணீரைச் சிந்த.. உதட்டைக் கடித்துக் கட்டுப்படுத்த நினைத்து.. முடியாமல்.. தேம்பித் தேம்பி அழுதாள் அவள்.
தன் அழுகை முகத்தை அவனிடமிருந்து மறைக்க முயற்சிக்காமல்.. பார்வையைத் திருப்பிக் கொள்ளவும் தோன்றாமல்.. அவன் முகம் பார்த்தபடியே அழுதவளை இமைக்காமல் நோக்கினான் கௌதம்.
சிலருடைய சிரிப்பைக் காண்கையிலேயே.. காரணம் அறியாமல்.. தானாக நம் உதடுகளிலும் புன்னகை பூத்து விடும்.
அழுகைக்கும் கூட அதே தியரி தான்.
சத்தமின்றித் தேம்பி அழும் அவளது விழி நீர் அவன் கண்களையும் ஊற்றாக்க… அடைத்தத் தொண்டையைக் கனைத்துச் சரி செய்தவன்…
“அழறீங்க!, சோ, சேட் சாங் வேண்டாம். ஹாப்பி சாங் பாடட்டுமா?” எனக் கேட்டான்.
பதிலின்றித் தேம்பியவளின் முகம் பார்த்தபடி..
“வாழ்க்கையே வாழத் தானே… வா.. என் கண்ணே..
வாழ்ந்து தான் பார்ப்போமா.. வானவில் கோர்ப்போமா…” – என்று சிரித்தபடிப் பாட..
தோள் குலுங்க.. முறுவலிக்க.. முயற்சித்துத் தோற்று.. அகம் கலங்க.. அவன் முகம் நோக்கி.. மீண்டும் தேம்பியவளை…
கன்னத்தில் கை வைத்து அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
