அத்தியாயம் - 8

னி சூழ்ந்திருந்தக் காலை வேளை அது. மெல்ல உரச வந்த, சூரியக்கதிர்களின் வெம்மையை ஊதித் தள்ளி விட்டு.. உடம்பில் ஊசி போட்டுக் கொண்டிருந்தது குளிர்க் காற்று.

அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி விட்டு.. குளிரில் நடுங்கிய கரங்களைப் பாக்கெட்டுக்குள் மறைத்துக் கொண்டு.. ஊஃப்ஃப்ஃப் என ஊதி.. காது வழியே உள் நுழைந்தக் காற்றை வெளியேற்ற முயற்சித்தபடி கதவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் கௌதம்.

சிறிது நேரத்தில் கதவைத் திறந்த பெண்மணி, தன்னைக் கேள்வியுடன் பார்ப்பதைக் கண்டு..

“மிஸஸ்.ஷர்மா?” எனக் கேட்டு.. அவள் ஆம் எனத் தலையாட்டியதும் “ஹாய், ஐம் கௌதம். திவ்யாவோட பாய் ஃப்ரெண்ட்” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு முறுவலித்தான் கௌதம்.

ன்றிரவு.. கண்ணீர் சிந்திய அவள் முகத்தைப் பார்த்தபடி வெகு நேரம் அமர்ந்திருந்தவன், அடுத்த சில நிமிடங்களில்.. அவள்.. எச்சில் விழுங்கி.. பெரிய,பெரிய மூச்சுக்களை வெளியிட்டுத் தன்னைச் சமாளித்துக் கொள்ள முயல்வதை உணர்ந்து.. எழுந்து சென்று.. ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்து வந்து அவள் முன்னே வைத்து.. அவளருகிலேயே.. இடைவெளி விட்டு அமர்ந்தான்.

அவனளித்தத் தண்ணீரை அருந்தி விட்டுக் கண்களை அழுந்தத் துடைத்தவள்… அவன் புறம் திரும்பி..

“கண்ணே, கண்ணம்மான்ற வார்த்தைகளெல்லாம் எங்கப்பா என்னைக் கூப்பிட்டுக் கேட்டது! ரொம்ப வருஷமாச்சு! அதான் நீ பாடினதும்.. எமோஷனல் ஆயிட்டேன்! திஸ் இஸ் நாட் மீ. இது தான் இவ பலவீனமோ-ன்னு நீ முடிவு பண்ணிடக் கூடாது”

“………” – விளக்கம் கொடுத்தவளுக்குப் பதிலளிக்காமல் அமைதியாய் அவள் முகம் பார்த்தான் அவன்.

“என்ன?” – கேவல்களுக்கிடையே வினவினாள் அவள்.

“எந்த மனுஷனோட குணத்தையும் ‘இவங்க இப்படித் தான், இது தான் இவங்க கேரக்டர்’-ன்னு டிஃபைன் பண்ண முடியாதுங்க. சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ரியாக்ட் பண்ற சாதாரண மனசைக் கொண்ட அற்ப உயிரனங்கள் நாம!”

“………..”

“உங்களுக்கு மட்டும் தான் பலவீனம் இருக்கா?, எனக்கு இல்லையா?”

பேச்சின்றி ஒரு நொடி சுவரை வெறித்தவள்..

“உன்னைத் தள்ளியே நிறுத்தனும்ன்னு நினைக்குற என் கிட்ட, ஏன் விதி மறுபடி மறுபடி பக்கத்துலக் கூட்டி வருதுன்னு தெரியல! காரணம் புரியல! ஒரு வேளை.. அது வைச்சிருக்கிற.. விளக்கம் விவகாரமானதா இருந்தா.. யோசிக்காம.. எல்லாத்தையும் வெட்டிப் போட்டுடுவேன்” – என்று அடிக்குரலில் கூற…

“நான் வெட்ட வெட்ட முளைக்குற காட்டுச் செடியா இருந்தா என்ன பண்ணுவீங்க?” எனக் கேட்டு வம்பு செய்தவன் “ரொம்ப யோசிக்காதீங்க! அதான் நீங்க என் அக்கான்னும், நான் உங்க தம்பின்னும் ஃபார்ம் ஆயிட்டோமே!, கவலையை விடுங்க” என்று விட்டு…

“சாப்பிடலாமா?” என்று வினவினான்.

பதிலளிக்காமல்.. அவனை ஆராயும் நோக்கத்துடன்.. பார்த்தவளிடம் அவன் என்னவென்று புருவத்தை உயர்த்த… உடனே..

“எனக்குப் பசிக்கல” என்றாள் அவள்.

“எனக்குப் பசிக்குது” என்றவன் செல்ஃபோனில் எதையோ ஆர்டர் செய்ய, சிறிது நேரத்தில் வாசலில் மணி அடித்தது.

டப்பாவைத் திறந்து.. இருவருக்கும் பொதுவாக நடுவில் வைத்தவன்.. மீண்டும் கிட்சனுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வர..

உரிமையாய் தன் வீட்டுக்குள் உலவுபவனை.. என்ன செய்யவென்று தெரியாமல்.. புரியாத பார்வையோடு அமர்ந்திருந்தாள் அவள்.

“சாப்பிடுங்க” என்றவன்.. தானும் ஒரு பீட்சாத் துண்டை கையில் எடுத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கி விட்டான்.

அடுத்த பதினைந்து நிமிடங்கள் எதுவும் பேசிக் கொள்ளாமல்.. இருவரும் உணவில் கவனம் செலுத்தினர்.

உண்டு முடித்து எழுந்தவன் “நான் கிளம்புறேன்” எனக் கூறி அவள் முகம் பார்த்தான்.

லேசாகத் தலையசைத்து விட்டு.. அவனுக்கு முன்பாக வாசலை நோக்கி நடந்தவளைக் கண்டு சிரிப்பு வர, “எப்போடா இவன் கிளம்புவான்னு யோசிச்சிட்டிருந்தீங்க போல!, பீட்சாவுக்குண்டான காசைக் கணக்குல வைச்சுக்கோங்க. கண்டிப்பா நான் திருப்பிக் கேட்பேன்” என்று கூறி விட்டுச் சென்று விட்டான்.

வீடு நோக்கிப் பயணப்பட்டவனின் மனது முழுக்க.. அவள் ஒருத்தியே ஆக்கிரமித்திருந்தாள்.

சமாதான வார்த்தைகள் கூறுவதற்கு.. அவள் சாதாரணப் பெண் அல்ல! அணைத்து ஆறுதல் படுத்த.. அவள் அல்லிப் பூவுமல்ல! அதனால் தான் எதுவும் பேசாமல், கிளம்பி விட்டான்.

தன் பலவீனத்தை அவன் கண்டு கொண்டானே என்கிற எண்ணத்தில்.. இனி நிச்சயம.. அவனிடமிருந்து மொத்தமாகத் தன்னை விலக்கிக் கொள்ளப் பார்ப்பாள் அவள். அப்படி விலகினால்.. என்ன செய்வதென்பது தான் அவனது யோசனையெல்லாம்!

அவளோடு ஒட்டி,உறவாடும் எண்ணமிருக்கிறதா எனத் தெரியவில்லையென்றாலும்.. அவள் விலகலை அத்தனை சுலபமாகக் கடந்து செல்ல முடியுமென்றும் தோன்றவில்லை!

அவனது எண்ணத்தை மெய்ப்பிக்கும் வண்ணம், மறுநாள் அவள் அலுவலகத்தில் தென்படவில்லை. அன்று மட்டுமல்ல. அதைத் தொடர்ந்த இரு நாட்களும் கூட அவளைக் காணவில்லை.

ஆனால் ஆஃபிஸ் மெசெஞ்சரில் ஆன்லைனில் இருந்தாள். அவனோடு வேலை தொடர்பாக மட்டுமே பேசினாள்.

முதல் நாள் கண்டு கொள்ளாமல் இருந்தவனால்.. மறுநாளை அப்படிக் கடக்க முடியவில்லை.

காலையிலேயே அவளை செல்ஃபோனில் அழைத்து விட்டான்.

“டெல் மீ கௌதம்” – ஸ்ட்ரிக்ட் ஆஃபிசரின் குரல் அது.

“எப்படியிருக்கீங்க?” – வழக்கம் போல் அவளது டோன்-ஐ புறக்கணித்தான் அவன்.

“ஃபைன் கௌதம்”

“ஆஃபிஸ்ல உங்களைப் பார்க்கவே முடியல?”

“நான் நியூயார்க் வந்திருக்கேன்.”

“ஓ!” என்றவன் தொடர்ந்து “ஏன்?” என்றான்.

“…………..”

“எப்போ வருவீங்க?”

“இதுக்கு நான் பதில் சொல்லுவேன்னு நினைக்குறியா?”

“ஓகே! ஃபோனை வைக்குறேன், பை” என்றவன் வாக்குவாதம் செய்யாமல் கட் செய்து விட்டான்.

தவிர்க்கிறாள் அவனை! தத்ரூபமாகத் தெரிகிறது!

தோளைக் குலுக்கிக் கொண்டவன்… அவள் இல்லாத இந்த நாட்களில் சில,பல வேலைகளை முடிக்க.. முடிவெடுத்துக் கொண்டான்.

அதன் விளைவாக.. அவன் முதலில் சந்தித்தது மிஸ்டர்.ராம் பிரகாஷ் ஷர்மாவை.

“திவ்யாவைப் பற்றிப் பேச வேண்டும்” என்று அவன் அழைத்ததும் உடனே ஒப்புக் கொண்ட ஷர்மா ‘பார்’ ஒன்றின் பெயரைச் சொல்லி அங்கே வரச் சொல்ல.. ‘நான் பேசும் போது, நீங்க நிதானத்தில் இருக்கனும். அதனால காஃபி ஷாப்பில் மீட் பண்ணலாம்” என்றவன்.. அவரை அருகிலிருக்கும் காஃபி ஷாப்பில் சந்தித்தான்.

“ஹலோ கௌதம்..” என்றபடி வந்தமர்ந்த ஷர்மாவின் முகத்தில் ஏகப்பட்டக் குழப்ப ரேகைகள்.

“என்ன சாப்பிட்றீங்க சார்?” – என்று கேட்ட கௌதமிடம்..

“திவ்யாவைப் பத்தி நீங்க என்ன பேசனும்?” என்று விசாரித்தார் அவர்.

“ஓ! தமிழ் பேசுவீங்களா?” – ஆச்சரியமற்றக் குரலில் வினவியவனிடம்..

“பிறந்த வளர்ந்தது, கல்யாணம் கட்டுனது எல்லாம் தமிழ்நாட்டுல தான்”-என்றார்.

“ஓ!”

“திவ்யாவுக்கு என்ன கௌதம்?”-கேள்வியாய் அவன் முகம் பார்த்தார் அவர்.

“அட இருங்க சார், காஃபி குடிச்சிட்டே பேசலாம்” என்றவன்.. தன்னை அளவிடும் பார்வையுடன் நோக்கியவரை அசட்டை செய்து விட்டு.. எழுந்து சென்று 2 காஃபி கப்புகளுடன் வந்தான்.

“திவ்யாவுக்கும்,உங்களுக்கும் ரொம்ப வருஷப் பழக்கமோ” – காஃபியை அருந்தியபடியே கேள்வி கேட்டவனிடம்..

“நீ ஏன் இந்தக் கேள்வியைக் கேட்குற” என்று அவர் மறு கேள்வி கேட்க..

“ம்க்கும், இவ சகவாசம் வைச்சிருக்குற ஆளு கிட்ட அவ்ளோ சீக்கிரம் பதில் வாங்கிட முடியுமா” என்றெண்ணியபடித் தொண்டையைச் செருமிக் கொண்டவன்.. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பற்றிச் சொன்னான்.

“உங்களுக்கும், உங்க வைஃப்க்கும் என்ன பிரச்சனை?, அவங்க ஏன் இப்படி நடந்துக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல எனக்கு எந்த ஆர்வமும் இல்ல. ஆனா.. உங்க 2 பேர் பிரச்சனைல திவ்யாவை ஏன் சார் இழுக்குறீங்க?, அவங்க ஏன் உங்களால சஃபர் ஆகனும்?”

அடக்கப்பட்டக் கோபத்துடன் வினவியவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் சக்தியற்றுத் தலை குனிந்து அமர்ந்திருந்தார் ஷர்மா.

“பப்ளிக் ப்ளேஸ்ன்னு கூடப் பார்க்காம எவ்ளோ கீழ்த்தரமா பேசுனாங்க தெரியுமா உங்க வைஃப்?, பதிலுக்கு திவ்யாவும் பேசியிருந்தா.. பெரிய குடுமிப்பிடி சண்டையாயிருந்திருக்கும்! கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க சார், வழுக்கை விழுந்து 40,42 வயசைத் தொட்டுட்ட நீங்க, இதுக்கெல்லாம் வர்த் ஆன ஆளா?, உங்க வயசென்ன? அந்தப் பொண்ணு வயசு என்ன?, அந்தப் பொண்ணுக்கு லைஃப் இல்லையா?”

“………………”

“ஆஃபிஸ் முழுக்க உங்களுக்கும்,திவ்யாவுக்கும் தொடர்பிருக்கிறதா ஒரு பேச்சு உலவுது. உண்மையை சொல்லுங்க சார்! நீங்க அனுமதிக்காம இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்ல! சீக்ரெட்-ஆ இதையெல்லாம் நீங்க எஞ்சாய் பண்றீங்க தான?”

“கௌதம்ம்ம்” – என்று கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்த ஷர்மா “திவ்யா என்னோட நல்ல தோழி. நான் மரியாதையும்,மதிப்பும் வைச்சிருக்கிற பொண்ணு. தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீங்க” என்று கலங்கிய குரலில் கூற..

“இதுக்கெல்லாம் என்ன சார் முடிவு?, நீங்களும், உங்க வைஃபும் நல்லாயிருங்க,இல்ல நாசமா போங்க. எனக்கு அதைப் பத்தி எந்த அக்கறையும் இல்ல. உங்களால திவ்யா.. எந்த விதத்துலயும் பாதிக்கப்படக் கூடாது. அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க” என்றான் கௌதம் முடிவாக.

சில நொடிகள் அமைதியாக இருந்த ஷர்மா ஆதியோடு அந்தமாக அனைத்தையும் விளக்கினார்.

“நானும்,திவ்யாவும் ஒரே சமயத்துல தான் இந்தக் கம்பெனில ஜாயின் பண்ணோம். சின்ன வயசுப் பொண்ணா இருந்தாலும், என் பொசிஷன்ல நான் என்ன விஷயமெல்லாம் ஹாண்டில் பண்றேனோ, அதையெல்லாம் அவ செஞ்சா. வேலைல அவளுக்கு இருக்கிற ஆர்வம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. டெக்னிக்கலா.. நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணி.. பேசிப் பழக ஆரம்பிச்சது, கொஞ்ச வருசத்துலயே நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆய்ட்டோம். கிட்டத்தட்ட ஆறு வருஷமா எனக்கு அவளைத் தெரியும்! சொல்லப் போனா.. இந்த ஆஃபிஸ்லயே அவ நம்பி, நல்லா பேசுற,பழகுற ஒரே ஆள் நான் தான்!”

லைட்டாக உள்ளே கொஞ்சம் புகைந்தாலும், மறைத்து.. ‘மேல சொல்லுங்க’ ரீதியில் கைக்கட்டி அமர்ந்திருந்தான் கௌதம்.

“எப்போ,எங்க,யார் இந்த அசிங்கமான பேச்சை ஆரம்பிச்சாங்கன்னு தெரியல கௌதம். எங்களுக்குத் தெரிய வந்தப்போ, நாங்க பெருசா அலட்டிக்கல. முகம் பார்த்துப் பேச வக்கில்லாத ஜென்மங்கள் பரப்புற தேவையில்லாத வதந்தியால.. நாம நம்மை மாத்திக்கிறதான்ற நினைப்புல.. ரெண்டு பேருமே அசால்ட்டா இருந்துட்டோம்”

“இப்பவும் அதைப் பெருசா நினைக்க வேணாம்ன்னு தான் சார் நான் சொல்றேன்! ஆனா.. உங்க வைஃப் மாதிரி ஆட்கள் சுத்தி இருக்கும் போது.. இதையெல்லாம் ஹாண்டில் பண்ற வித்தையை நீங்க கத்து வைச்சிக்கிறது அவசியமாப் படுது” – கௌதம்.

“எனக்கும்,என் வைஃப்க்கும் பல வருஷமாவே பிரச்சனை இருந்தது. 15 வருஷமா வேலை,ஆஃபிஸ்ன்னு ஓடுன எனக்கு.. அவளை புறக்கணிக்கிறேன்றது புரியவே இல்லை. குழந்தைங்க வளர ஆரம்பிச்சப்புறம், மொத்தமாவே இடைவெளி விழுந்துடுச்சு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பி.பி ப்ராப்ளம் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகும் போது தான் புரிஞ்சது, நான் ஃபேமிலிக்கு முக்கியத்துவம் கொடுக்காமலே இத்தனை வருஷமா வாழ்ந்திட்டிருந்திருக்கிறேன்றது.”

“ஷ்ஷ்ஷ்ஷ்.. இவன் குடும்பக்கதையைக் கேட்கத் தான் நான் வந்தேனா.. என்பது போல்.. எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் கௌதம்.

“எல்லாம் புரிய ஆரம்பிச்சப்புறம்.. என் வைஃப்,குழந்தைங்க கூட நல்லாப் பழகத் தொடங்கினேன். ஆனா.. என் வைஃப் கிட்ட அது நெகட்டிவ் ரியாக்ஷனை கொடுக்க ஆரம்பிச்சிடுச்சு. இத்தனை நாளா இல்லாம, இப்ப என்ன புது பாசம்ன்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சா. நான் அவளை செக்ஸ்க்கு மட்டும் தான் யூஸ் பண்ணிக்கிறதா என்னைக் குற்றம் சாட்ட ஆரம்பிச்சா.”

“சும்மா நான் அவளை சினிமா,பார்க்ன்னு வெளியே கூட்டிப் போனா கூட.. என் தேவைக்கு நான் அவளை நெருங்கப் பார்க்குறேனேன்ற நினைப்புல.. விலகி நிற்க ஆரம்பிச்சா. நானும் ஒதுங்குனேன். எங்க 2 பேருக்குள்ள ஃபிஸிகல் ரிலேஷன்ஷிப் சுத்தமா இல்லாம போச்சு. அதுவும் அவளைப் பாதிச்சிடுச்சான்னு தெரியல. அவளை நான் இதுக்காகத் தேடி வராததால.. எனக்கு வெளிய யாரோடயோ தொடர்பு இருக்குன்னு அவளாகவே கற்பனை பண்ணிக்கிட்டா”

“…………..”

“ஆஃபிஸ்ல என் கூடப் பழகுறவங்கக் கிட்ட என்னைப் பத்தி விசாரிச்சுருக்கா. அவங்க கொடுத்த அரைகுறை இன்ஃபர்மேஷனை வைச்சுக்கிட்டு.. என்னையும்,திவ்யாவையும் இணைச்சுப் பேசி தினம்,தினம் என்னை டார்ச்சர் பண்ணத் தொடங்கினா.அதனால் நான் அவளை விட்டுப் பிரிஞ்சு வந்து… தனியா வாழ ஆரம்பிச்சேன்”

“……………..”

“இது எதையும் இப்போ வரை நான் திவ்யாக் கிட்ட சொன்னதில்ல. அப்படியும் குடி போதைல ஒரு நாள் ‘என் வைஃப்க்கு என் மேல நம்பிக்கை இல்ல. என்னை டார்ச்சர் பண்ணி வெளியே துரத்திட்டா’ன்னு நான் உளறிட்டேன். அதுக்கும் அவ, அவங்களுக்கு மன ரீதியான பாதிப்பு ஏதாவது இருக்கோ,என்னவோ, நீங்க சைக்காட்ரிஸ்ட்டை கன்சல்ட் பண்ணுங்கன்னு எனக்கு ஆலோசனை சொன்னா. ஃபேமிலி கொடுக்குற ஸ்ட்ரெஸ்-ல தினம் குடிக்குற என்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய் விட்றது கூட அவ தான். எனக்கு ஒரு நல்ல.. நேர்மையான.. தோழியா நடந்துக்கிற பொண்ணு கூடப் போய் என்னை சேர்த்து வைச்சுப் பேசுனா.. எனக்கு எவ்ளோ கஷ்டமாயிருக்கும் கௌதம்?”

“கஷ்டமாத் தான் இருக்கும். அதுக்காக எந்த ஆக்ஷனும் எடுக்காம இப்படியே இருந்துடுவீங்களா சார்?”

“என் வைஃப் கிட்ட என்னைப் புரிய வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன் கௌதம். கல்யாணமாகி இந்த 17 வருஷத்துல நான் பார்க்குற வேலை பின்னாடி தான் ஓடியிருக்கேனே ஒழிய,, என் வைஃபைத் தவிர வேற எவளையும் மனசால கூட நான் நினைச்சதில்ல.”

“நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்க சார். நீங்க திவ்யா கூட பழக ஆரம்பிச்சப்பவே, அவங்களை உங்க வைஃப்,குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி வைச்சிருக்கனும்”

“திவ்யா அவ்ளோ ஓபன் டைப் கிடையாது கௌதம். அப்படியெல்லாம் யாரோடயும் சுலபமா பழக மாட்டா”

“இல்ல சார். அவங்களுக்குக் குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம். ஒரு தடவை அவங்க உங்க குழந்தைகளோட பழகுற விதத்தை உங்க வைஃப் பார்த்திருந்தாங்கன்னா.. அவங்களை சந்தேகப்பட்டுருக்கவே மாட்டாங்க”

அழுத்தமாய்க் கூறியவனை ‘உனக்கு திவ்யாவைப் பத்தி அவ்ளோ தெரியுமா’ என்பது போல் பார்த்து விட்டு…

“எனக்குத் தெரியல கௌதம்” என்றார் ஷர்மா.

“ஆண்,பெண் நட்பை ஏத்துக்கிற விதம், சமூகத்தைப் பொறுத்து மட்டுமில்ல, தனி மனிதனைப் பொறுத்தும் மாறுபடும் சார். திருமண பந்தத்துல இருக்கிற பெண்ணோ,ஆணோ.... தன்னுடைய துணை, தன்னைத் தவிர்த்து வேறு யார் கூடயும் நெருங்கிப் பழகினா.. கோபம் வரத் தான் சார் செய்யும். உங்க பொசிஷன்ல உங்க வைஃப் இருந்து, அவங்க பொசிஷன்ல நீங்க இருந்தா.. எப்படி ரியாக்ட் பண்ணியிருப்பீங்க! வேலை பின்னாடி ஓடி.. வாழ்க்கையைத் தொலைச்ச நீங்க, உங்களுக்குப் புத்தி வந்தப்புறம், நான் திருந்திட்டேன்னு போய் நின்னா.. உடனே எல்லாம் உங்க வழிக்கு வந்துடுமா?, உங்க வைஃப் என்ன மனநிலை இருக்காங்கன்னு நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணியிருக்க வேணாமா?”

“என்னை அவ எப்படி சந்தேகப்படலாம்ன்ற கோபம் அறிவை மழுங்கடிச்சிடுச்சு கௌதம்”

“இயல்பு தான் சார்! இனி அவங்களைப் புரிஞ்சு நடந்துக்க ட்ரை பண்ணுங்க. தப்பெல்லாம் என் மேல தான்னு ஒத்துக்கிற நீங்க.. அவங்கக்கிட்டயும் அதைச் சொல்லிப் புரிய வைங்க. தன்னோட இயலாமையைத் தான் அவங்க திவ்யா மேல கோபமா காட்டியிருக்காங்க. நீங்க உங்க வைஃபோட சேர்ந்து நல்ல படியா வாழனும்ன்றது என்னோட ஆசை தான்னாலும், இனியொரு தடவை.. உங்க வைஃப், திவ்யாவைக் கண்டபடி பேசுறதை என்னால பொறுத்துக்க முடியாது சார். இதை நான் முதலும்,கடைசியுமா சொல்லிட்றேன்”

“கௌதம்…” – ஆச்சரியமாய்த் தன்னைப் பார்த்தவரிடம்..

“ஏன்-ன்னு காரணம் கேட்காதீங்க. ஏன்னா.. எனக்கேத் தெரியாது.” – என்று அவன் கூற…

லேசாக நகைத்தவர் “ஐம் சாரி கௌதம். இனி இப்படி நடக்காது. அதுக்கு நான் பொறுப்பு. இனி என் விஷயத்துல திவ்யா பாதிக்கப்பட மாட்டா. ஆனா.. ஆஃபிஸ்ல என்னையும்,அவளையும் இணைச்சுப் பேசுற ஆளுங்களுக்கு நான் பொறுப்பில்ல” என்றார்.

“அதை நான் பார்த்துக்கிறேன்.” என்றவன் சற்று இடைவெளி விட்டு “இன்னொன்னும் சொல்ல ஆசைப் பட்றேன் சார். இனி திவ்யா கூட பார்-ல உட்கார்றது, ஸ்மோக்கிங் ஜோன்ல நின்னு பேசுறது, குடிச்சிட்டுத் தள்ளாடி அவங்க மேல விழறது.. இதையெல்லாம் கூட நிறுத்திக்கோங்க.” – எச்சரிக்கும் குரலோடு கூறியவனிடம் பிளந்த வாயுடன் தலையாட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவருக்கு.

அடுத்ததாக அவன் வந்து நின்றது மிஸஸ்.ரேகா ஷர்மாவைக் காண!

தவைத் திறந்தவரிடம் தன்னை அவன் அறிமுகப்படுத்திக் கொள்ள.. திவ்யாவின் பாய் ஃப்ரெண்ட் என்று அவன் சொன்னதைக் கேட்டு விழி விரித்த ரேகா.. பின் முகத்தைக் கோபமாக மாற்றி… கதவைச் சாத்த முயன்றபடி.. “அந்த ****** பத்தி பேச எனக்கு எதுவுமில்ல” என்றாள்.

முகம் இறுக ஒரு கையால் கதவைப் பற்றியவன்.. அவள் முயற்சிகளைத் தடுத்து…

“அளவாப் பேசுங்க மேடம். உங்களை விட அதிகமா கெட்ட வார்த்தை பேசுறவன் நான். யோசிக்காம.. வரிசையா எடுத்து விட்ருவேன்” என்று மிரட்ட..

அவன் பேச்சில் வெகுண்டு பல்லைக் கடித்தபடி “கதவை விடுங்க” என்றாள் அவள்.

அவள் முயற்சியை அடக்கி.. உள்ளே நுழைந்து.. கதவைச் சாத்தியவன்.. “உங்களைப் பத்தி போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கேன்றதை சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்” என்று கூற..

“க..கம்ப்ளைண்ட்-ஆ?” என்று திகைப்புடன் வினவினாள்.

“ஆமா, குடி போதைல.. மிஸ்.திவ்யாவை நீங்க வெர்பல் அப்யூஸ் பண்ணியிருக்கீங்க. அதனால மனசுடைஞ்சு போன திவ்யா, எக்ஸ்ட்ரீம் ஸ்ட்ரெஸ்ல சுயநினைவிழந்து.. மயக்கமாகி.. இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காங்க.” – தொடர்ந்து அவன் அள்ளி விட.. பீதி நிறைந்த விழிகளுடன்.. முழித்தபடி நின்றாள் அவள்.

“பார்-ல இருக்குற சிசிடிவி கேமரால எல்லாமே ரெக்கார்ட் ஆயிருக்கு. கொஞ்ச நேரத்துல உங்களை போலீஸ் தேடி வந்து அரெஸ்ட் பண்ணும்”

“என்ன சார் சொல்றீங்க?, நா..நான்… அப்படியெதுவும் தப்பா பேசல. அந்தத் திவ்யா அவ்ளோ நல்லவ கிடையாது. அவளுக்கும்,என் புருஷனுக்கும் தொடர்பு இருக்கு” – என்று அவள் முடிப்பதற்குள்.. கையை ஓங்கியவன்..

“இன்னொரு தடவை அதைச் சொன்னீங்கன்னா.. மூஞ்சியைப் பேத்துருவேன் சொல்லிட்டேன்” என்று கத்த..

“யார் டா நீ?, என் வீட்ல வந்து என்னையே மிரட்டுற?” என்று அவளும் பதிலுக்குக் கத்த..

விறுவிறுவெனத் தன் செல்ஃபோனைக் கையில் எடுத்தவன்.. யாருக்கோ அழைத்து..

“இவங்க இன்னும் அந்தப் பொண்ணு மேல பழி போடுற மாதிரி தான் பேசுறாங்க! சமாதானம் பேச வந்த என்னையும் மிரட்டுறாங்க. ப்ளீஸ்.. இவங்களை ஜெயில்ல தள்ளி விசாரிங்க” என்று படம் காட்ட.. வேகமாக அவனருகே வந்து அவன் செல்ஃபோனைத் தட்டி விட்டு..

“போ..போலீஸெல்லாம் வேண்டாம். என்…என் குழந்தைங்க பயந்துடுவாங்க” என்று பம்மியபடிக் கூறினாள்.

“குழந்தைங்களா?, அவங்களைப் பத்திப் பேச உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்ல”

“ஏய்ய்ய்ய்”

“இங்க வர்றதுக்கு முன்னாடி உங்க குழந்தைங்களைப் பார்த்துட்டு தான் வந்தேன். எங்கம்மா செத்தாக் கூட என் கிட்ட சொல்லாதீங்கன்னு உங்க மூத்தப் பையன் சொல்லி அனுப்புனான்.”

கண்கள் கலங்க அவள் நிற்பதைப் பார்த்து…

“உங்க வாழ்க்கையை அழிச்சு.. அவிச்சுத் திங்குறது உங்களோட இஷ்டம்! ஆனா.. உங்க குழந்தைங்க சந்தோசத்தை, உங்களைச் சுத்தியிருக்கிறவங்க நிம்மதியைக் குலைக்க.. உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.” –கோபமாய் அவன் கூறியதும்.. தலை குனிந்து நின்றாள் அவள்.

“புருஷன்,பொண்டாட்டி பிரச்சனைல முதல்ல பாதிக்கப்படுறது குழந்தைங்க தான்னு உங்களுக்குத் தெரியாதா?, என்னை விட வயசு மூத்தவங்க நீங்க. உங்களுக்கு அட்வைஸ் பண்ண எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஆனா.. உங்கம்மா வீட்ல வளர்ற உங்க குழந்தைங்களை பார்த்தப்புறம்.. கண்டிப்பா உங்களைப் பார்த்து.. 4 கேள்வியாவது கேட்கனும்ன்னு தோணுச்சு. அதான் வந்தேன்”

“………………”

“நீ யாரு கேள்வி கேட்கன்னு தோணுதா?,எனக்கும் அதே தான் தோணுச்சு. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணை, பப்ளிக்ல வைச்சு அசிங்கமா பேச இந்தப் பொம்பளை யாருன்னு”

“……..”

“யார்,யாரோ சொல்றைதையெல்லாம் அப்படியே நம்பிடுவீங்களா?, உங்க புருஷன் அப்படிப்பட்டவரான்னு நினைச்சுக் கூட பார்க்க மாட்டீங்களா?, அவர் கூட வாழ்ந்து 2 குழந்தைங்களை எப்படிப் பெத்துக்கிட்டீங்க? அடிப்படை நம்பிக்கை இல்லாம.. படுக்கையை எப்படி பகிர்ந்துக்க முடிஞ்சது உங்களால?”

“…………….”

“உங்க புருஷன் நல்லவன்னு எடுத்துச் சொல்ல நான் இங்க வரல. இத்தனை வருஷமா அவர் கூட வாழ்ந்த, உங்களை விடவா அவரைப்பத்தி நாங்க தெரிஞ்சு வைச்சிருக்கப் போறோம்?”

“……………..”

“உங்க புருசனை நீங்க சாமியா நினைச்சாலும் சரி, சந்தேகப்பட்டாலும் சரி! அது உங்க தனிப்பட்ட விஷயம்! ஆனா.. திவ்யாவைப் பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? என்ன தெரியும் உங்களுக்கு அவளைப் பத்தி?”

“……………”

“உணர்ச்சிவசப்பட்டு நீங்க நேத்து அவ்ளோ பேச்சு பேசுனப்பவும், நிதானம் தப்பாம உங்களுக்குப் புரிய வைக்க முயற்சி செஞ்ச ஆள் அவ! அவ உயரமும்,தகுதியும் உங்க கற்பனைக்கு எட்டாத தூரத்துல இருக்கு. நீங்கள்லாம்.. ஈசியா கை நீட்டிப் பேசுற அளவுக்கு சாதாரண ஆள் கிடையாது அவ. அவ ரேஞ்ச் வேற! புரிஞ்சதுங்களா?”

“……………….”

“எந்த ஊர் உங்களுக்கு?”

“ஸ்ரீவில்லிபுத்தூர்”

“கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க மேடம். இது அமெரிக்காவா இல்லாம, ஸ்ரீவில்லிபுத்தூரா இருந்து… நீங்க இந்த மாதிரி.. ஒரு கல்யாணமாகாத பொண்ணு மேல பழி போட்டா.. சுத்தியிருக்கிறவங்களால அந்தப் பொண்ணு என்ன மாதிரியான ஏச்சு,பேச்சுக்களுக்கெல்லாம் ஆளாக வேண்டியிருந்திருக்கும்?, அதுவும் தப்பே பண்ணாத பொண்ணுன்ற நிலைமைல.. அதோட சராசரி வாழ்க்கையே பாதிக்கப்படாதா?, யோசிக்காம.. எது உண்மைன்னு ஆராய்ச்சி பண்ணாம.. நீங்களாவே ஒரு முடிவுக்கு வந்து எல்லாரையும் நோகடிப்பீங்களா?”

“இப்ப நான் என்ன பண்ணனும்?”

அவன் பேசப் பேச அழுகையில் கரைந்தபடி அமைதியாய் நின்றவள்.. கண்களைத் துடைத்துக் கொண்டுக் கேள்வி கேட்க..

“உங்க செல்ஃபோனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கேன். அதுல ஒரு அட்ரஸ் இருக்கு. இன்னிக்கு மதியம் அங்க போங்க. ஷர்மாஜியும் உங்க கூட வருவார். அது ஒரு மனநல மருத்துவமனை. நீங்க ஒரு சைக்காட்ரிஸ்ட்டை கன்சல்ட் பண்ணியே ஆகனும். உங்க மனசுல இருக்குறதை எடுத்து சொல்லுங்க. அவங்க இதுல இருந்து வெளி வர வழி பண்ணுவாங்க”-என்றான் அவன்.

சரியெனத் தலையாட்டியவளிடம்..

“குடிச்சு,குடிச்சு வக்ரத்தை வளர்த்துக்கிறதுக்கு பதிலா.. வாழ்றதுக்கான வழியை யோசிச்சீங்கன்னா.. உங்களை சுத்தியிருக்கிறவங்களுக்கு நல்லது. இல்ல, நான் நாசமாத் தான் போவேன்னு நினைச்சீங்கன்னா.. வலியில்லாம செத்துப் போக நிறைய வழி இருக்கு. அதுல ஒன்னை தேர்ந்தெடுத்து சிம்பிளா.. செத்துடுங்க! உயிரோட இருந்து.. அடுத்தவங்களைக் கொல்லாதீங்க” – என்றவன்..

“நான் கிளம்புறேன்” என்று கூறி வாசலை நோக்கி நடந்தான்.

அவன் பின்னேயே வந்தவளிடம்..

“திவ்யா மயக்கம் போட்டுட்டா-ன்னு நான் சொன்னதெல்லாம் சுத்தப் பொய். அவளை அவ்ளோ சீக்கிரம் யாராலயும்,எதாலயும் சாய்ச்சுட முடியாது. இந்நேரம்.. டீம் மீட்டிங்ன்னு கூப்பிட்டு வைச்சு.. யாரையாவது சாவடிச்சிட்டிருப்பா” என்றவன்.. தொடர்ந்து.. “போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கேன்னு சொன்னதும் பொய் தான். பயப்படாதீங்க. போங்க! போய் புள்ளை,குட்டிங்களைப் படிக்க வைங்க” என்று விட்டு அவள் வீட்டிலிருந்துப் புறப்பட்டு விட்டான்.

றுநாள் மாலை நான்கு மணி வாக்கில் அலுவலகத்திலிருந்துக் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான் கௌதம்.

செல்ஃபோனில் சாதனா அழைக்கவும்.. ப்ளூ டூத்தை ஆன் செய்து விட்டு..

“சொல்லுங்க அண்ணி” என்று சிரிப்புடன் கூறினான்.

“சொல்லு…ங்க அண்ணியா?, டேய்.. கௌதம்.. நீ தானா பேசுறது?”

“நான் தான். ஏன்,நான் உங்களை அண்ணின்னு கூப்பிடக் கூடாதா?” –நக்கலடித்தவனின் குரலில் சிரிப்பு சிந்திச் சிதறியது.

“விட்றா! விட்றா! மரியாதை மனசுல இருந்தாப் போதும்”

“சரி, உனக்கு என்ன வயசு?”

“ஏன் கேட்குற?”

“ப்ச், கேட்டா பதில் சொல்லு”

“33”

“ஓ! உன்னை விடக் கம்மி தான் அவளுக்கு” – என்றவன் உதட்டுக்குள் சிரிப்பைப் புதைக்க..

“எவளை விட? டேய் என்ன டா?”-என்று மறுபுறம் பதறினாள் சாதனா.

“ஒன்னுமில்ல” – பம்மி விட்டான் அவன்.

“ஹ்ம்ம், நீ பேசுறதைப் பார்த்தா.. என் அட்வைஸை நீ சீரியஸ்-ஆ எடுத்துக்கிட்ட மாதிரி தெரியுதே டா?”

“என்ன அட்வைஸ்?”

“ஒரு லவ் ஃபெயிலரைக் கடந்து வரனும்ன்னா.. இன்னொரு லவ்வை நீ ஸ்டார்ட் பண்ணனும்ன்னு அட்வைஸ் கொடுத்தேனே”

“ஹாஹாஹா.. அப்படியா என்ன?”

“நீ இப்படி சிரிச்சு,சிரிச்சுப் பேசுறதைக் கேட்கவே எனக்குப் பயமா இருக்குடா கௌதம்”

“பயப்படாத! நீ நினைக்குற மாதிரியெல்லாம் எதுவுமில்ல. ரொம்ப நாளைக்கப்புறம்.. நான் கொஞ்சம்.. நிம்மதியான,திருப்தியான எதையோ.. சாதிச்ச மனநிலைல இருக்கேன். அவ்ளோ தான்” – ஸ்டியரிங்கை வளைத்தபடி.. பார்வை வெளியே சுழல.. புன்னகை உறைந்திருந்த உதட்டுடன் பேசிக் கொண்டிருந்தவனின் முகத்தில்.. அத்தனை சோபை!

“அப்படி என்ன டா நடந்தது?”

“அதெல்லாம் சொல்ல முடியாது. நீ ஃபோனை வை” என்றவன்.. ஃபோனை கட் செய்து விட்டுப் பாட்டை ஒலிக்க விட்டான்.

கண்ணம்மா உன்னை மனசில் நினைக்கிறேன்..

பார்வை பாரடி.. பெண்ணே!”

–அநிருத்தின் குரல் கொஞ்சிக் கொண்டிருக்க.. ‘கண்ணம்மா’ என்ற வார்த்தையைக் கேட்டதும்.. அதுவரை உதட்டோடு நின்றிருந்த புன்னகை இப்போது கன்னம் வரை நீண்டது அவனுக்கு.

அவன் இங்கு சிரித்தது.. அங்கு.. ஒலித்து விட்டதோ என்னவோ..

திவ்யா காலிங்… என்று திரையில் ஒளிர்ந்த எழுத்துக்களைக் கண்டு.. அவசரமாகக் காரை ஓரம் கட்டி விட்டு.. ஃபோனைக் காதில் வைத்து.. “ஹலோ..” என்றபடிக் கதவைத் திறந்து கொண்டுக் கீழே இறங்கினான்.

“என்ன டா நினைச்சிட்டிருக்க உன் மனசுல?”

பொறுமையின் சிகரம் என்று அவன் அளித்தப் பட்டத்தைக் கிழித்தெறிந்து விடும் வேட்கையுடன்.. அவன் காதுக்குள் பாய்ந்து வந்து விழுந்தது அவள் கோபம்.

“டா…. வாஆஆ?” என்று இழுத்தவன் காதிலிருந்து ஃபோனை எடுத்து ஒரு பார்வை பார்த்து விட்டு.. “ஹலோ…. திவ்யாவோட ஃபோன்ல இருந்து யாருங்க பேசுறீங்க?” என்று கலாய்க்க..

“நடிக்காத டா! ஷர்மாகிட்டயும்,அவர் வைஃப் கிட்டயும் என்னடா சொல்லி வைச்சிருக்க நீ?”

“ஓஓ! செய்தி அதுக்குள்ள எட்டிடுச்சா?”

“கௌதம்…” – ஆங்காரத்தின் அகோரப்பிடியில் அவள் வார்த்தைகள் தடுமாறி வந்து விழுவதை உணர்ந்தவன்..

“இப்போ ஏன் கோபப்படுறீங்க?” என்று பொறுமையாக வினவினான்.

“ஏன்.. ஏன் கோபப்பட்றேன்னா கேட்குற?, ஏன்னு உனக்குத் தெரியாது?, இத்தனை நாளா.. கல்யாணமான ஒருத்தனுக்குக் கீப்-ன்ற பட்டத்தை சுமந்துட்டிருந்தேன்! இப்போ, வயசுல சின்னவனை வளைச்சுப் போட்டுட்டேன்ற பேர் வரப் போறதை நினைச்சு ரொம்ப சந்தோசமா இருக்கேன்! அந்த சந்தோசத்துல தான் உனக்கு ஃபோன் பண்ணிக் கொஞ்சிட்டிருக்கேன்!”

“ரொம்பப் பேசாதீங்க! கீப்-ன்னு பேச்சு வந்தப்பல்லாம்.. அசராமத் தான இருந்தீங்க?, இப்போவும் அதே மாதிரி இருங்க!” - கோபம் வந்து விட்டது அவனுக்கும்.

“அறிவு கெட்டத் தனமா பேசாதடா முட்டாள்! உனக்கு அப்படி என்னடா அக்கறை என் மேல?, நான் கேட்டேனா?, உன் அக்கறை வேணும்ன்னு நான் கேட்டேனா?, ஏன் டா என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டேன்றீங்க?,” – அயர்ச்சியுடன் வெளி வந்த அவளது குரலில் சினம் எழ..

“ஏய்.. வாயை மூட்றி! பப்ளிக் ப்ளேஸ்ல பச்சை,பச்சையாக் கிழி வாங்கிட்டு நிற்குறாளேன்னு பரிதாபப்பட்டு.. அந்தக் காட்டெருமையையும், அவன் பொண்டாட்டியையும் உட்கார வைச்சுப் பேச்சு வார்த்தை நடத்திட்டு வர்றேன்! நான்.. நான் உன் நிம்மதியைக் கெடுக்குறேனா?, இப்படியே எத்தனை வருஷத்துக்கு அவன் கீப்-ன்ற பேரோட சுத்தப் போற நீ?, நாய் கூட கல்லை விட்டு எறிஞ்சா… எறியுறவனைப் பார்த்துக் குரைச்சு ரியாக்ட் பண்ணும்டி! நீ.. நீ என்னவோ.. எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்ச மாதிரி.. அந்தப் பொம்பளை பேசுறதையெல்லாம் கேட்டு வாயை மூடிட்டு நிற்குற?, மனுஷி தான நீ?”

“……………….”

“இதையெல்லாம் அன்னைக்கேக் கேட்கத் தான் உன் வீட்டுக்கு உன் கூட வந்தேன்! அதுக்கப்புறம் என் முகத்தைப் பார்த்துத் தேம்பித் தேம்பி அழுதியே.. ஒரு அழுகை?, எவனாலடி அந்த அழுகையை அசட்டையா விட முடியும்?நான் மனசாட்சி இருக்குற ஆளு! பாகுபலி அனுஷ்கா மாதிரி கெத்து குறையாம ஆஃபிஸ்ல வலம் வர்றவ.. இப்படி உடைஞ்சு போய் அழறாளேன்னு எனக்கு மனசு வலிச்சது. உன் அழுகை முகம் மூளைல உட்கார்ந்துக்கிட்டு என்னைத் தூங்க விடாம பண்ணுச்சு. அதான் தேடிப் போனேன்.. அந்த ஷர்மாவையும்,அவன் பொண்டாட்டியையும்”

“……………..”

“பெருசா பேசுற?, என்ன அக்கறை உனக்குன்னு?, அக்கறை தான்! என்னடி இப்போ?, அந்த இடத்துல நீ இல்ல, எவ இருந்திருந்தாலும் நான் அக்கறைப் பட்டிருப்பேன். தெரிஞ்சுக்க” – அவன் விடாது கத்தியதும்..

“எவளாயிருந்தாலும்.. இப்படித் தான் பாய் ஃப்ரெண்டுன்னு சொல்லியிருப்பியா?” – கடித்தப் பற்களுக்கிடையே அவள் வார்த்தைகளைத் துப்பிய விதத்தில்.. பிடரி முடியைக் கோதியவனுக்கு.. கோபத்தில் மூச்சு வாங்கியது.

“…………….”

“அக்கறைப்பட்டு.. நல்லது பண்றதா நினைச்சு.. விஷயத்தைக் காம்ப்ளிகேட் பண்ணியிருக்க நீ”

“திவ்யா…”

“……………..”

“நான் ஒன்னு சொல்றேன் தெரிஞ்சுக்கோ. நீ எவனாவது ஒருத்தனோடக் காதல்,கல்யாணம்ன்னு செட்டில் ஆகுற வரைக்கும் உன்னைப் பத்தின தவறான பேச்சுக் குறையவே போறதில்ல. இதான் உண்மை”

“அதனால?”

“எனக்கு வேற வழி தெரியல. நீ யாரு அவளுக்கு சப்போர்ட் பண்றதுக்குன்னு அவங்க 2 பேரும் கேட்டுடக் கூடாதுன்றதுக்காக அப்படிச் சொல்லிட்டேன். போதுமா?”

“அறிவுகெட்டவனே! நீ அட்வைஸ் பண்ணதும், அப்படியே கேட்டுட்டு.. புருஷனோட சேர்ந்து வாழ்ந்துடும் அந்தப் பொம்பளைன்னு நினைக்குறியா?, நாய் வாலை நிமிர்த்த முடியாதுன்னு நீ படிச்சதில்ல? இப்போ அவ புருஷன் நல்லவன்றதை எல்லார்க்கிட்டயும் பரப்பனும்ன்றதுக்காக.. என் மேல தான் எல்லாத் தப்புமிருக்கிற மாதிரி சித்தரிக்க முயற்சி பண்ணுவா அவ! அவரை விட்டுட்டு நான் உன்னைப் பிடிச்சதால தான்.. இப்போ, அவ புருஷனோட நிம்மதியா வாழ்றான்ற மாதிரி இனி பேச ஆரம்பிப்பா! கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாம நீ பண்ணின காரியத்தோட விளைவைப் பாரு! நீ நல்லது செய்யலன்னு நான் அழுதேனா?, எல்லாரும் பண்ணதைத் தான் நீயும் எனக்குப் பண்ணியிருக்க இப்போ. அது புரியுதா உனக்கு? ” – அடிக்குரலில் அவள்.. வரிசையாக வசை பாட..

அதுவரையிருந்த இதமான மனநிலைக் கெட்டுக் குட்டிச் சுவராகிப் போனக் கொந்தளிப்பில்.. கொதித்துப் போய் நின்றவனுக்கு.. கோபம் கொப்பளித்தது.

அவள் நன்றி கூறுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை தான்! ஆனால்.. தன்னை முட்டாளாக்கி.. முக்காடு போட வைப்பாளென்றும் எண்ணவில்லை.

தீவிரமாக யோசித்து.. அவர்களிருவரிடமும் உரையாடி.. பிரச்சனையை பொறுப்புடன் முடித்து வைத்து விட்டதாக அவன் நினைத்திருக்க.. அவள், தன்னை முதிர்ச்சியற்று விசயத்தைக் கையாண்டிருக்கிறான் என்று குற்றம் சாட்டவும், ஆத்திரம் தலைக்கேறி விட்டது அவனுக்கு.

“இப்போ என்னடி பண்ணனும்ன்ற?” – சீறலான குரலில் கௌதம்.

“இப்பவே ஷர்மாவையும்,அந்த லேடியையும் போய்ப் பாரு! எனக்கும்,திவ்யாவுக்கும் ரிலேஷன்ஷிப் இருக்குன்னு நான் சொன்னது பொய்ன்னு அவங்க மனசுல பதியுற மாதிரி சொல்லிட்டு வா”

அவ்வளவு தான்! கௌதமின் கோபம் எல்லையைக் கடந்து சீறிப் பாயத் தொடங்கியது.

“முடியாதுடி! அதுக்குப் பதிலா உன் கிட்ட வர்றேன்! உன் பாய் ஃப்ரெண்ட்ன்னு சொன்னதை உண்மையாக்குறதுக்காக!” என்றவன் ஃபோனைக் கட் செய்து விட்டுக் காரில் பறந்தான். சொன்னதைச் செயலாக்க!

இரண்டு மணி நேரம் செல்ல வேண்டிய தூரத்தை.. ஒன்னே கால் மணி நேரத்தில் கடந்தவன்.. நேராகச் சென்று ஆஃபிஸ் வாசலில் காரை நிறுத்தி விட்டு அவளை அழைத்தான்.

“வாடி வெளிய!” – அலைபேசிக்கு உயிர் இருந்திருந்தால்.. அவன் வார்த்தைகளில் தெறித்த அனலில்.. கருகிப் போயிருந்திருக்கும்.

“கௌதம், டி போட்டுப் பேசி டாமினேட் பண்ற எவனையும் நான் ஆம்பளைன்ற லிஸ்ட்ல வைச்சுக்கிட்டதே இல்ல”

அவள் நிதானத்திற்குத் திரும்பி விட்டாள் போலும்! அழுத்தமாய், அமைதியாய்ப் பேசினாள்.

“நான் டி போட்டுப் பேசுறது டாமினேஷன்னா, நீ டா போட்டுப் பேசினது எந்தக் கணக்குல வரும்?, வெளிய வா”

பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கத்தவும், படக்கென ஃபோனைக் கட் செய்தாள் அவள்.

ஜீன்ஸ்,டீஷர்ட்,ஸ்னீக்கர் சகிதம் நான்கடி உயரத்தில் நடந்து வந்தவள்.. தூரத்தில்.. கூண்டுப் புலியாய் நடை பயின்று கொண்டிருந்தவனைக் கோபம் குறையாது நோக்கினாள்.

அதீத ஆத்திரத்தின் விளைவால்.. அந்தக் குளிரிலும் வியர்த்து வழிய.. அவளைக் கண்டபடியே கையைத் தூக்கி உதட்டின் மேல் படிந்திருந்த ஈரத்தைத் துடைத்தான் அவன்.

கோபத்தில்.. வேக நடையுடன்.. மூச்சு வாங்க அவனை நெருங்கியவள்..

“நல்லதாப் போச்சு நீ வந்தது. கிளம்பு போகலாம்” என்றபடி அவனது காரைச் சுற்றிக் கொண்டு நடக்கப் பார்க்க.. அவள் கையைப் பற்றி நிறுத்தினான் அவன்.

“வா.. ரெண்டு பேருமே சேர்ந்து போய்.. அவங்கக்கிட்ட.. நீ சொன்னதெல்லாம் பொய்ன்னு சொல்லிட்டு வந்துடலாம்” என்றவளின் கையை அழுந்தப் பற்றியபடியே..

“தேவையில்லை” என்றவன்.. “அதை விட.. நான் உன் பாய் ஃப்ரெண்ட்ன்னு ப்ரூவ் பண்ணிட்டோம்ன்னா.. விஷயம் ஈசியா முடிஞ்சிடும். அதுக்கப்புறம் எவன் உன்னைப் பத்தித் தப்பா பேசுறான்னு பார்ப்போம், பேசுறவன் யார்ன்னு தெரிஞ்சா.. நீ அவனைக் கை காமி. நான் அவன் வாயை உடைக்கிறேன்.” – நக்கலாய்க் கூறியவனிடம்..

விடாதுத் திமிறியபடி.. “பார்த்துப் பேசு கௌதம், உனக்கு என்னைப் பத்தித் தெரியாது” அடிக்குரலில் சீறியவளைக் கண்டு.. உதட்டை வளைத்தவன்..

அவளது இருகைகளையும் தன் ஒரு கரத்தால் அடக்கி.. அவள் இடையை இறுகப் பற்றி.. தன் முகத்தோடு நெருக்கி..

“தெரிஞ்சுக்கனும்ன்னு தான் ஆசைப்பட்றேன். இந்தக் கண்ணை,இந்த வாயை… இந்த நாலடி பாடியை, இந்த ரெண்டடி மனசை…” – அவள் விழிகளுக்குள் தன் பார்வையை நுழைத்து.. அடிக்குரலில்.. கூறியவனைக் கண்டுக் கொதித்துப் போனாள் அவள்.

அவன் பலத்தை எதிர்த்து.. விலக முடியாத அவமானமும், அவன் வார்த்தைகளில் உண்டான அருவெறுப்பும், கண்,மண் தெரியாத ஆத்திரத்தைக் கிளப்ப…

“அசிங்கமா பேசாத கௌதம்! கொன்னு போடக் கூடத் தயங்க மாட்டேன்” கோப மிகுதியில் விழி கலங்க.. சீறியவளின் முகத்தை ஒரு நொடி அசைவற்று நோக்கினான் கௌதம்.

“எம்.எஸ்.வி மியூசிக்ல சுசீலா பாடின பாட்டு அது.”

திடீரென அர்த்தமில்லாமல் பேசியவனைத் திமிறுவதை நிறுத்தி விட்டுக் குழப்பத்துடன் நோக்கினாள் அவள்.

“ரொம்ப நாள் யோசிச்சேன் என்ன பாட்டு அதுன்னு”

“………………” – விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் அவள்.

“உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…”

“…………….” – புரியவில்லை அவளுக்கு.

பற்றியிருந்த அவள் இடையை அழுத்தி.. மேலும் அவளை அருகேயிழுத்தான் அவன்.

“லாவண்டர் வாசம், அடி வயித்துல கொடுத்த உதை, எம்.எஸ்.வி.மியூசிக், காஃபி கப், பிங்க் கலர் லிப்ஸ்டிக்… ஸ்டிக்கி நோட், நீளமான நகம்….”

-வரிசைப்படுத்திக் கொண்டே சென்றவனைக் கண்டு.. முகம் கன்ற.. பார்வையைத் தழைத்தவளுக்கு.. அந்த நொடியை.. அந்தச் சூழ்நிலையை.. அவன் குரலை.. அவன் பிடியை.. சமாளிக்கச் சத்தியமாய்த் தெரியவில்லை.

ஆதியிலிருந்து அவள் அவனைத் தவிர்த்ததற்கான முழு முதற் காரணம் அது.

அவமானக் கன்றலுடன்.. சிவந்து கலங்கித் தாழ்ந்திருந்த அவள் முகத்தை.. மெல்ல நிமிர்த்தி… அவள் கன்னத்தை மெல்ல வருடி…

“கடைசியா…… அந்த முத்தம்..” என்றவனின் விரல்கள் இன்றும் அதே மென்மையை உணர.. தலை முதல் கால் வரை அது கொடுத்த போதையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல்.. குனிந்து.. அவள் கீழிதழ்களில் மெல்ல இதழ் பதித்தான் அவன்.

“இது… என்னைக் காயப்படுத்துனதுக்கு..” என்றவன்.. தொடர்ந்து..

அவள் இரு கன்னங்களையும் பற்றி..

“இது.. இனி வாழ்நாள் முழுக்கக் கிள்ளி வைச்சாலும் பரவாயில்லன்றதுக்காக” என்று மெல்லிய குரலில் கூறியபடி.. தலை சாய்த்து.. அவள் இதழ்களில் தன் ஆறடி உயரத்தையும் அழுந்தப் புதைத்துக் கொண்டான் அவன்.