அத்தியாயம் - 9

ரு மெய் தீண்டலுக்குப் பிறகு.. ஒரு ஆணுக்குப் பெண் மீது தோன்றும் உரிமையுணர்வென்பது ‘இனி இவள் என்னுடைமை’ என்கிற கர்வத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது.

கைப்பேசியில் கடலை போட்டு.. கண்ணால் நேசத்தைச் சொல்லி.. கவித்துவமாய் காதலை வளர்க்கும் ஒவ்வொரு ஜோடியிடமும் கேட்டுப் பாருங்கள்!.. ஒரு முத்தத்திற்குப் பிறகு அவர்கள் உணர்ந்த நெருக்கத்தின் அளவை! அது தந்த உரிமையின் உணர்வை!

ஏன், படங்களிலும்,கதைகளிலும் வரும் மல்லு வேட்டி மைனர் குஞ்சுகள் கூட.. கற்பழிப்புக் காட்சிக்குப் பிறகு ‘ஆமா,நான் தான் கெடுத்தேன்,அவ இனி எனக்குத் தான் சொந்தம்’ எனக் கெத்துக் காட்டிக் கொண்டு நிற்பதும் உடல் இணைந்து விட்ட இறுமாப்பினால் தானே?

தொடக்கத்திலிருந்துத் திவ்யாவின் மீது கௌதம் எடுத்துக் கொண்ட அதீத உரிமையும், அந்த ஒற்றை இதழ் முத்தத்தின் விளைவால் உண்டானது தான் போலும்!

அந்த உரிமையுணர்வு தான்.., ஷர்மாவைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு அவள் செல்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்.. நடுசாமம் என்றும் பாராமல்.. அலை பேசியில் அழைத்து.. அவளை அதட்டிக் கேள்வி கேட்க வைத்திருக்கிறது!

அந்த உரிமையுணர்வு தான்.. ஜாக் அவளைப் பற்றித் தவறாகச் சித்தரிக்க முயன்ற போது.. அவன் சட்டையைப் பிடித்து சண்டை போட வைத்திருக்கிறது.

அதே உரிமையுணர்வு தான், அவள் கலங்கிக் கரைவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்.. ஷர்மாவிடமும்,அவர் மனைவியிடமும் அதிரடியாய்ப் பேச்சு வார்த்தை நடத்த வைத்திருக்கிறது.

அணைப்பு ஆதி மொழி என்றால், முத்தம் மூத்த மொழி போலும்!

போதையில் கொடுத்தக் கன்னத்து முத்தமும், அதில் உணர்ந்த மென்மையும்.. அது உண்டாக்கிய சிலிர்ப்பும்.. அது தந்த திருப்தியும்.. இதயம் முதல் மூளை வரை உடலின் அத்தனை பாகங்களையும் தீண்டித்.. தாக்கி.. தேங்கி நின்று கொண்டு.. இன்று வரை என்ன இதற்காக அவன் உயிரை வாங்க வேண்டும்?

போதை தெளிந்து விழித்தெழுந்த போது.. மூளையும்,மனதும் வெற்றிடத்தை விலைக்கு வாங்கியது போல்.. காலியாக இருக்க.. அவன் இதழ் மட்டும் உணர்ந்த அவள் கன்னத்தின் ஒரு பகுதி.. அவன் உடலில் செய்து விட்டுப் போன மாயத்தை யார் அறிவர்?

அப்படியென்ன இருந்தது அந்த முத்தத்தில்?, அதிகப்படி மென்மை? அடங்கா வாசம்?, அல்லது இரண்டையும் ஒரு சேர உணர்ந்ததால்.. மனது கண்ட திருப்தி? தெரியவில்லை!

ஆனால்.. அந்த மென்மைக்கான மென்பொருளை கற்றறிந்து கொள்ளும் ஆவல் மட்டும் அடங்கவேயில்லை!

ன் வீட்டுப் படுக்கையறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கௌதம்.. காலிங் பெல் ஒலியில் மெல்ல சோம்பல் முறித்தபடி எழுந்தமர்ந்தான்.

அதற்குள் சத்தம் விடாது ஒலிக்க, அவசரமாய் எழுந்து சென்று அவன் கதவைத் திறந்த போது.. படபடவென நான்கு வெள்ளைக்காரத் தடித் தாண்டவராயன்கள் அவனை இடித்துக் கொண்டு உள்ளே நுழைவதைக் கண்டுக் கண்ணில் நின்ற மீதித் தூக்கமும் பறந்தோடி விட..

“யா… யார்… யார் நீங்க?” என்று பதற்றத்துடன் வினவினான்.

“வீ ஆர் ஃப்ரம் எஃப் பி ஐ”

நால்வரில் ஒருவன் தங்களைக் காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதும் திகைத்துப் போனவன்.. “எஃப்.பி.ஐ-ஆ????” என்று கேட்டபடி முழித்துக் கொண்டு நிற்கையிலேயே.. அவனது அலை பேசி அழைத்தது.

நால்வரும் அவனது வீட்டைச் சுற்றிப் பார்த்த வண்ணம், ஆளுக்கொரு திசையில் நிற்க.. உரிமையாய் டைனிங் டேபிளில் ஏறி அமர்ந்திருந்த ஒருவன் “ஃபோனை அட்டெண்ட் செய்யுங்கள்” எனக் கைக்காட்ட.. நால்வரையும் வித்தியாசமாய்ப் பார்த்தபடித் தன் அறைக்குள் நுழைந்தான் அவன்.

செல்ஃபோன் திரையில் பூனை சிரித்துக் கொண்டிருந்தது.

யோசனையுடன் அட்டெண்ட் செய்து காதில் வைத்தவன் அமைதியாயிருந்தான்.

“கௌதம்..”

வெண்ணெய் தடவாத ரொட்டித் துண்டை ருசிப்பது போல்.. வறண்ட வெற்றுக் குரலொன்றை உணர்ந்தது அவன் காது.

“சொல்லுங்க”

“பயந்துட்டியா?”

“எதுக்கு?”

“வீட்டுக்குப் போலீஸ் வந்துருக்கே?”

காதிலிருந்து ஃபோனை எடுத்து சந்தேகமாய் நோக்கி விட்டு வெளியே எட்டிப் பார்த்தான். லிவிங் ரூமிலிருந்த அவனது குடும்பப்புகைப்படத்தைப் பார்த்து அவர்கள் நால்வரும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

குழப்பத்துடன் “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினான்.

“அனுப்புனதே நான் தான?”

“வா….ஆஆஆட்?” –அதிர்ச்சியுடன் கேட்டவனிடம்..

“நீ பண்ணத் தப்புக்குத் தண்டனை கிடைக்க வேண்டாமா?” – என்று அவள் கூற..

“அப்படி என்னத் தப்பு பண்ணிட்டேன் நான்?” – கெத்தான குரலில் வினவினான் அவன்.

“நேத்து நைட் நீ பண்ணதுக்குப் பேரு என்ன தெரியுமா கௌதம்?”

“…………”

“ஹராஸ்மெண்ட்”

‘அடிப்பாவி’- என வாயைப் பிளந்தவன், பொறுமையற்று… வலது கையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவள் பேசுவதைக் கேட்டான்.

கடித்த உதடுகளும், விடைத்த மூக்கும் அவன் சிறிது,சிறிதாக மூர்க்க மோடுக்கு சென்று கொண்டிருப்பதைக் காட்டியது.

“விருப்பமில்லாத பொண்ணைப் பாலியல் ரீதியா துன்புறுத்துறது பெரிய குற்றம்ன்னு எல்லா நாட்டு சட்டமும் சொல்லுது” – விடாமல் திவ்யா.

“நான் கொடுத்த முத்தம் உங்களுக்கு செக்ஸ் டார்ச்சர்-ஆ?? முட்டாள்தனமா பேசாதீங்க” – எரிச்சலில் கத்தினான் அவன்.

“இல்லைன்னு வேற சொல்லுவியா?”

“ப்ச், இப்போ என்னன்றீங்க?”

“டி போட்டு பேசு கௌதம். நேத்து நைட் கத்துனியே! அந்த மாதிரி”

“திவ்யா….” – பொறுமையற்றக் குரலில் அவன்.

“சாரின்னு ஒரு வார்த்தை உன் வாய்ல இருந்து வரனும்ன்றது என் எதிர்பார்ப்பு.” –நிதானமாய் அவள்.

“சொல்ல முடியாதுடி. உன்னால முடிஞ்சதைப் பாரு”

“அதான் பார்த்துட்டியே! வெளிய போலீஸ் உட்கார்ந்திருக்கு. மறந்துடாத!”

“…………..”

“உன் மேல ஹராஸ்மெண்ட் கேஸ் ஃபைல் பண்ணியிருக்கேன்! நீ காட்டுன மன்மதலீலையை அங்க இருந்த சிசிடிவி படம் பிடிச்சு வைச்சிருக்கு! சாட்சியோட நான் கொடுத்த கம்ப்ளைண்ட்டோட எஃபெக்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல நீ ஜட்டியோட ஜெயில்ல உட்காரும் போது தெரிய வரும்”

“ஹாஹாஹா”

“சிரிக்கிறியா?”

“பின்ன?, என்னவோ இவனுங்க 4 பேரும் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து சைக்கிள் ஓட்டினு வந்திருக்கிற மாதிரி பேசுறீங்க! உங்களுக்கு நல்ல ஹியூமர் சென்ஸ்ங்க”

“உனக்கு பயம் வரலையா கௌதம்?”

“ரொம்பப் பயமாயிருக்குங்க! தலைகீழா கட்டி வைச்சு அடிப்பாங்களா?, இல்ல கரப்பான்பூச்சியை ஃப்ரை பண்ணி சோத்துல போட்டுத் தருவாங்களா?”

“……………..”

“ரெண்டு கையையும் நீட்டட்டுமா?”

“கௌ…..தம்” – பல்லைக் கடித்தபடி அவள்.`

“ஹேண்ட்கஃப் மாட்டுவாங்களே! அதுக்குக் கேட்டேன்”

“……………”

“திவ்யா…”

“………..”

“எனக்கு உங்களைப் பார்க்கனும்..”

பிடரி முடியைக் கோதியபடி ஜன்னலருகே நின்றவனுக்கு.. அதுவரையிருந்தக் கோபமும்,கிண்டலும் விடை பெற்று விட.. ஜன்னல் கம்பியில் பின்னந்தலையை சாய்த்தபடி.. மெல்லிய குரலில் கூறினான் அவன்.

“வந்திருக்கிறவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ் கௌதம்” – அவள் அவனை, அவன் பேச்சை அசட்டை செய்ய முற்பட்டாள்.

“தெரிஞ்சது.”

“நீ பண்ணது தப்புன்னு உன்னை மிரட்டனும்,பயமுறுத்தனும்ன்னு தோணுச்சு”

“நான் இதுக்கெல்லாம் பயப்பட்ற ஆள்ன்னு நினைச்சீங்களா?”

“நான் நினைச்சா.. உன்னைப் பயப்பட வைப்பேன் கௌதம்”

“ட்ரை பண்ணிப் பாருங்க”

“………….”

“உங்களைப் பார்க்கனும்ன்னு நான் சொன்னேன்”

“…………”

“திவ்யா..”

“உன் வீட்டுப் பக்கத்துல இருக்குற ஸ்டார் பக்ஸ்க்கு வா கௌதம்”

“நிஜமாவா?”

“ஆமா”

“இப்போவா?”

“ஆமா”

“நான் இன்னும் பல்லு கூட விளக்கலயே!”

“உன் காமெடியை ரசிக்குற மூட்ல நான் இல்ல கௌதம்.”

“இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்”

-என்றவன் ஃபோனைக் கட் செய்து விட்டு.. வெளியே வந்த போது.. அந்த நால்வரும் அவன் வீட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து.. காஃபி அருந்திக் கொண்டிருந்தனர்.

அடப்பாவிங்களா! என்று வாயில் கை வைத்தவனிடம்..

“உன் வீட்டுக் காஃபி பௌடர் நல்லாயிருக்கும்ன்னு திவ்யா சொன்னா” என்று ஒருவன் சிரிப்புடன் கூற..

“அதுசரி” என்று நொடித்துக் கொண்டவன்.. “என்ன சொல்லி உங்களை இங்க அனுப்பினா?” என்று விசாரித்தான்.

“உன் வீட்டுக்குள்ளப் புகுந்து எஃப்.பி.ஐன்னு சொல்ல சொன்னா. அவ்ளோ தான்” என்றனர்.

“அவ என்ன சொன்னாலும் அப்படியே கேட்பீங்களா?” என்று முறைத்தவன் “இப்போ நான் நிஜமாவே எஃப்.பி.ஐ-யைக் கூப்பிட்றேன். உங்களையெல்லாம் மொத்தமா பிடிச்சிட்டுப் போகட்டும்” என்று கடிந்து விட்டு “உங்களையெல்லாம் பொறுமையா ஒரு நாள் மீட் பண்றேன். இப்போ.. போகும் போதுக் கதவை லாக் பண்ணிட்டுப் போயிடுங்க. என் கிட்ட கீ இருக்கு” என மொழிந்து விட்டு அவசரமாய் வீட்டை விட்டு வெளியேறினான்.

காஃபி ஷாப்பில் அவனுக்கு முன்பே வந்தமர்ந்திருந்தாள் திவ்யா.

டேபிளில் இரண்டு காஃபி கப்புகள் தயாராய் இருந்தது.

ப்ளூ ஜீன்ஸூம்,லாவண்டர் நிற டாப்பும் அணிந்திருந்தாள். முடி நூடுல்ஸாகியிருந்தது.

அந்த ஜன்னலோர இருக்கையில் கைகளைக் கட்டிக் கொண்டு வெளியே வெறித்தபடி அமர்ந்திருந்தாள். வழக்கம் போல் அவள் முகத்திலிருந்து எதையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவளருகே சென்று நின்று.. அணிந்திருந்த ஜாக்கெட்டைக் கழட்டியபடி.. அமர்ந்திருந்தவளின் முகத்தை உரிமையாய் நோக்கினான் அவன்.

வகை,வகையான ஆசைகள் அவன் உதட்டில் வரி,வரியாய் நீண்டு நின்றிருந்தது.

அமர்ந்திருந்த நிலையிலேயே நிமிர்ந்து.. புருவம் தூக்கி.. மேல் கண்ணில் அவனை நோக்கினாள் அவள்.

கட்டியிருக்கும் அவள் கைகளை விரித்து.. தூக்கி நிறுத்தி.. இமைகளை முத்தமிட்டு.. இறுக்கமாய் அணைத்துக் கொள்ளத் தூண்டிய ஹார்மோன்கள் தலை முதல் கால் வரை தறிகெட்டு ஓடுவதை அடக்க முடியாது நின்றவனுக்கு நேற்றைய இரவின் நினைவு வந்தது.

முத்தம் முக்தியை எட்டிய நிலையில்.. அவனது கோபம் தாபமாகியிருக்க, எதிர்ப்பின்றி நின்றவளின் நிலையை உணராது.. பொறுமையாய் அவளிடமிருந்து அவன்.. தன் இதழ்களைப் பிரித்த போது…

இமைக்க மறந்து… மூச்சை அடக்கி.. விறைத்த உடலும்.. கன்றிச் சிவந்த முகமும்… வரண்ட உதடுமாய்.. நேர் வெறிக்கும் விழிகளுடன்.. நின்றாள் அவள்.

அவன் பற்றியிருந்த அவள் கன்னங்களின் சில்லிப்பு மைனஸ் டிகிரியிலிருப்பதை உணர்ந்தவன்.. குனிந்துத் தன் சூடான உதடுகளை அதில் பதித்தான்.

இலவம் பஞ்சு நிறைந்தத் தலையணை ஒன்றுக்கு.. வெல்வெட் உறையிட்டு.. அதில் மொத்தமாய் புதைந்து போன நிலை! தடித்த ரோஜா இதழ்களின் மென்மையை ஸ்பரிசித்து விட்ட உணர்வு!

அந்த மென்மையின் மேன்மையை இரண்டாம் முறையாக உணர்பவனுக்கு… அதன் தாக்கம் இதழோடு.. நிற்காமல் இதயத்தையும் தீண்டுவதாய்த் தோன்றியது!

தீண்டப்பட்ட இதயம்.. இசைக்கும் சுக ராகம்.. உடல் முழுதும் பரவிப் படர.. அதை விட்டுத் தன்னைப் பிரித்துக் கொள்ள முடியாமல்.. அந்த மென்மையில் கலந்து.. கரைந்து நின்றான் அவன்.

மீண்டும்,மீண்டும் கன்னத்தில் பதியும் அவன் இதழ்களின் ஈரம்.. ஈரக்குலை வரை ரௌத்திரத்தைக் கடத்த.. கண்களை அழுந்த மூடி.. அவன் தோளைப் பற்றித் தள்ளியவள்… அவன் முகம் பாராது… மூச்சு வாங்கத் திரும்பி நிற்க..

அதுவரை சொர்க்கத்தில் சொக்கி நின்றவனின் விழிகள், மையல் குறையாது அவளை நோக்கிப் பின் அவள் முகம் காட்டிய அருவெறுப்பில்.. நிதானம் கொள்ள முற்பட.. பிடரி முடியைக் கோதிக் கொண்டு மறுபுறம் திரும்பி நின்றான் அவன்.

குத்திக் கிழிக்கும் குளிரின் தாக்கம் சிறிதுமின்றி.. உடல் முழுதும் சூடாகி.. கொதிநிலையிலிருக்க… அந்த வெப்பம் கொடுத்த வெம்மையை அடக்க முடியாது அவன் திணறிய போது… அவள் அவனிடமிருந்து விலகி நடந்து செல்வது தெரிந்தது.

நடையில் தளர்ச்சியோ,தடுமாற்றமோ இன்றி.. தன் போக்கில் நேராக.. நடந்து செல்பவளைக் கண்டு.. கார் கதவில் நெற்றியை இடித்துக் கொண்டவன், ஓடிச் சென்று அவளைத் தடுக்கத் துடிக்க மனதைக் கடிவாளமிட்டு அடக்கினான்.

வன் முகம் பாராது நேற்று விலகிச் சென்றவள்.. இன்று சலனமற்றப் பார்வையுடன் நேர் கொண்டு தன்னை நோக்குவதைக் கண்டுத் தானும் அவள் முகம் பார்த்தான் கௌதம்.

கோபம்?? ஆசை?? ஆர்வம்?? – ம்ஹ்ம் எதுவுமில்லை அவள் பார்வையில்!

கண்டு கொள்ளாமல்.. குனிந்து.. அவள் முகத்தில் ஊதியவன்…

“உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா?” எனக் கேட்டபடி அமர்ந்தான்.

அவன் ஊதியதில் அனிச்சையாய் கண்களை மூடியவள்.. மீண்டும் விழி திறந்த போது.. அதில் அவனை ஆராயும் நோக்கம் மட்டுமே நிறைந்திருந்தது.

மீண்டும் அவள் பார்வையை அசட்டை செய்து விட்டு..

“தேங்க்ஸ் ஃபார் த காஃபி” என்றபடி அவள் வாங்கி வைத்திருந்தக் காபியை பருகினான் அவன்.

அவன் இதழ்களுக்கிருந்த பொறுமை விழிகளுக்கு இல்லை போலும்! அவசர,அவசரமாய்.. அவளைத் தலை முதல் கால் வரை அலசி.. அள்ளிப் பருகியது.

“கௌதம்…” – ஏதோ முடிவெடுத்து விட்ட உணர்வுடன் அவள் குரல்.

“திவ்யா..” – அவனும் அந்தக் குரலைப் பிரதிபலிக்க முயன்றான்.

பதிலின்றி புருவம் சுருங்க.. இதழ்கள் இறுக… ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

உடனே இரு கைகளையும் தூக்கித் தலையைத் தாழ்த்தி நிமிர்ந்தவன்..

“இனி விளையாடல! நீங்க சொல்லுங்க” எனக் கூறிக் கைகளைக் கட்டிக் கொண்டு நன்றாகச் சாய்ந்தமர்ந்தான்.

ஒரு நொடி வெளியே வெறித்தபடி அமைதியாய் இருந்தவள், பின்.. அவன் முகம் நோக்கி..

“முத்திப் போன முதிர் கன்னிங்க எல்லாம் முழு நேரமும் மூடு-ல தான் சுத்துவாங்கன்ற மாதிரி… சினிமால காட்டுற எதுவும் உண்மை இல்ல கௌதம். நான், நாட்டாமை படத்துல வர்ற டீச்சர் கிடையாது.” – என்றாள்.

உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்க முயன்றவன்.. முடியாமல் தோள் குலுங்க முறுவலித்தபடி அவளை நோக்கினான்.

தலைசாய்த்து அவனை முறைத்தவள்..

“ஆணோட உறவுக்காக ஏங்கித் தவிச்சிட்டிருக்கிற ஐட்டம் மாதிரியும், தொட்டவுடனே கரைஞ்சு காணாம போயிட்ற ஐஸ்க்ரீம் மாதிரியும் சித்தரிக்கப் பட்றதெல்லாம் பொய்.”

பொறுமையாய் விளக்கம் கொடுப்பவளைக் கண்டு புருவத்தைச் சொரிந்தவன்..

“நீங்க ஐட்டம் கேட்டகரில-லாம் வர மாட்டீங்க” என்றான்.

“……………”

“ஏன்னா… அதுக்கான பாடி ஸ்ட்ரக்ச்சர் உங்களுக்கு இல்ல”

பேச்சோடு பேச்சாக.. எதார்த்தமாகக் கூறியவனை.. ‘அட வெட்கங்கேட்ட அற்ப ஜீவனே!’ என்பது போல் கேவலமாகப் பார்த்தவளைக் கண்டு “ம்க்கும்” எனத் தொண்டையைச் செறுமியவன் “உண்மை தான” என்று முணுமுணுக்க.. அவள் அமைதியாய் அவன் முகம் பார்த்தாள்.

“எ..என்ன?” – கௌதம்.

“……………….”

“ஏன் இப்படிப் பார்க்குறீங்க?”

“உன் மோட்டிவ் என்ன கௌதம்?”

“……………”

“செக்ஸ்?”

“…………….”

“உடல் ரீதியான தேவை அவசியமாயிருக்க வேண்டிய வயசு தானே இவளுக்கு, சும்மா ட்ரை பண்ணிப் பார்க்கலாமேன்ற எண்ணமா?”

“…………..” – பதில் பேசாமல்.. வரண்டிருந்த உதட்டை ஈரப்படுத்தியவனுக்குக் கோபம் கண்களை எட்டியிருந்தது.

“நேத்து நடந்த எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தேன்…”

“………………..”

“நான் நினைச்சிருந்தா.. உன்னைத் தடுத்திருக்கலாம்! ஆனா… தடுக்கல! அனுமதிச்சிருக்கேன்! ஏன்,எதுக்கு-ன்னு இப்போ வரை யோசிக்கிறேன். பதில் தெரியல”

“………….”

“ஒரு வேளை.. இந்த இன்சிடெண்ட்டை வைச்சு.. இனி நீ என் கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண நினைச்சா… அறுத்துக் கைல கொடுத்திருவேன்றதை சொல்லிடலாம்ன்னு தான் உன்னை வரச் சொன்னேன்”

அடிக்குரலில் அசால்ட்டாக மிரட்டியவளைக் கண்டு லேசாகச் சிரித்தவன்.. டேபிளில் இரு கரங்களையும் பதித்து.. முன்னே சாய்ந்து..

“கூப்பிட்டுப் போய் வச்சு செஞ்சா.. பத்து மாசத்துல புள்ளை பெத்து எடுத்துடுவ! நீ.. நீ…. எனக்கு சம்பவம் பண்ணப் போறியா?” என நக்கலான குரலில் கூறவும்… பல்லைக் கடித்துக் கொண்டு.. அடக்க முடியா ஆங்காரத்துடன் அவள் எங்கோ பார்க்க..

கை நீட்டி அவள் கன்னத்தைப் பற்றித் தன் புறம் திருப்பியவன்..

“உங்களுக்கு மட்டுமில்ல. எனக்கும் திமிரா பேச வரும். அதனால வாயை அடக்குங்க. சரியா?” எனக் கூற.. அவன் விரலைப் பற்றி நெரித்து.. கீழே இறக்கினாள் அவள்.

நெரிபட்ட விரல்களாலேயே.. அவள் விரல்களை அடக்கி.. அவளது ஐவிரல்களுக்குள்ளும், தன் விரல்களைப் பிணைத்துக் கொண்டவன்…

“செக்ஸ் தான் மோட்டிவ்ன்னு சொன்னா.. என்ன செய்வீங்க?”என்றான்.

“…………………..”

“இப்டியே என் கூட… என் பெட் ரூம்க்கு வந்துடுவீங்களா?”

“…………….”

“நான் பொதுவா ஆன்ட்டிஸையெல்லாம் சைட் அடிக்குறதோட நிறுத்திப்பேன்! ஆனா.. கன்னத்தில் முத்தமிட்டால்.. உள்ளம் தான் கள்வெறி கொல்லுதடின்னு பாட்டு பாடாத குறையா உங்கக் கன்னத்து மேல அநியாயத்துக்கு அட்ராக்ட் ஆயிருக்கேன். ஏன்னு தெரியல! எனக்கு அதைத் தொடப் பிடிச்சிருக்கு. கிஸ் பண்ண பிடிச்சிருக்கு. நினைக்கும் போதே… உள்ள ஏதேதோ பண்ணுது.”

“………………..”

“செக்ஸ் எனக்குப் புதுசில்ல. ஆனா.. நிதானமில்லாதப்போ கொடுத்த.. ஒரே ஒரு முத்தம்..! நினைச்சுப் பார்க்கும் போதெல்லாம் சிலிர்க்குற அளவுக்கு.. ஏன் பாதிப்பை உண்டாக்குதுன்னு சத்தியமா புரியல. இனி அந்த முத்தமில்லாம, வாழ்க்கையைக் கடத்த முடியும்ன்னும் தோணல. ”

படபடவெனத் தன் மனதிலிருப்பதைக் கோர்வையாகக் கொட்டியவனை அதே பார்வையுடன் பார்த்திருந்தாள் அவள்.

“எனக்கும் புரியுது. இது வரைக்கும் நான் பார்த்துப் பேசிப் பழகின, சைட் அடிச்ச அழகிங்களோட கம்பேர் பண்ணும் போது.. நீங்க ரொம்ப சுமார் ஃபிகர் தான்றது! போதாததுக்கு நீங்க ‘அக்கா-மாலா’ கேட்டகரி வேற”

-நக்கலடித்தவனின் காலில், அணிந்திருந்த ஹீல்ஸை வைத்து நச்சென அவள் கொடுத்த மிதியில்.. ‘அம்ம்மாஆஆஆ’-வெனக் கதறிப் பல்லைக் கடித்தான் கௌதம்.

“திட்டனும்ன்னு தோணுச்சுன்னா திட்ட மட்டும் செய்ங்க ப்ளீஸ்”

“…………. “ – டேபிளில் கையை ஊன்றியபடி அவனைப் புருவம் சுருங்க நோக்கினாள் அவள்.

“என்னங்க அப்படிப் பார்க்குறீங்க??”

“இது லஸ்ட் தான் கௌதம். நான் கன்ஃபார்ம் பண்ணிட்டேன்” – அக்கறையுடன் பேஷண்ட்டை நோக்கும் டாக்டராய் அவள்.

“ப்ச்”

“நீ ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட்டா பார்த்து கன்சல்ட் பண்ணு!”

“ஹலோ! என்னைப் பார்த்தா செக்ஸ் மேனியக் மாதிரி தெரியுதா?, போற,வர்ற எல்லாப் பொண்ணுங்க மேலயும் இதெல்லாம் தோணுனா தான் தப்பு. உன் ஒருத்தி மேல மட்டும் தோணுற ஃபீலிங்க்ஸ்க்கு பேர் வேற” – எரிச்சலுடன் அவன்.

“அப்டியா? என்ன பேர் அது?”

“இனிமே தான் டிசைட் பண்ணனும்”

“கௌதம்..”

“...........”

“லவ்-ன்னு சொல்லிடாத. நான் லாலி-பாப் சாப்பிட்ற பாப்பா இல்ல.”

லவ்??, காதல்!! இருவருக்குமான உரையாடல் தொடங்கிய நிமிடத்திலிருந்து அவன் தவிர்க்க நினைத்த வார்த்தை அது!

அதுவரையிருந்த இலகுவான மனநிலை மறைந்து விட.. முகம் இறுகிப் போனது அவனுக்கு.

“பதில் பேசு கௌதம்”

“ம்க்கும்” எனத் தொண்டையைச் செறுமியவன்.. அவள் முகம் பார்க்காமல்.. வெளியே விழிகளைப் பதித்து…

“இப்போ நிற்கிற ஸ்டேஜ்ல இருந்து கீழ இறங்கிக் காமம் தான்னு முடிவு பண்ண மனசு இடம் தரல! அதே நேரம்.. மேல ஏறிப் போய்… இது காதல்ன்னு தீர்மானம் பண்ண மூளை ஒத்துக்க மாட்டேங்குது” என்றான்.

“மூளைக்குத் தான் யோசிக்குற சக்தி இருக்கு கௌதம். நீ அது சொல்ற பேச்சைக் கேளு”

“அதை நான் முடிவு பண்ணனும்”

“நீ என்னவோ பண்ணு!” என்றவளுக்கு பொறுமை எல்லை கடந்து விட்டது போலும்! விடாது பேச்சை வளர்த்தபடி.. அவள் அவனைச் சந்திக்க எண்ணியதன் நோக்கத்தை மாற்றிக் கொண்டிருப்பவனைக் கண்டு எரிச்சலுற்றாள்.

“இதோ பாரு, நீ இவ்ளோ பண்ணியும், உன் கை,காலை உடைக்காம.. பொறுமையா உட்கார வைச்சு நான் பேசிட்டிருக்கிறதே ரொம்பப் பெரிய விஷயம்! ஏதோ சின்னப் பையன் தானேன்னு ஆரம்பத்திலிருந்து உன்னை நான் அசட்டையா ட்ரீட் பண்ணதோட விளைவு தான் இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டுடுச்சோன்னு இப்போ ஃபீல் பண்றேன்!”

“அர்த்த ராத்திரில அடல்ட் மூவி பார்க்குறவனுக்கு அம்பின்னு பேர் வைக்குறீங்க!”-என்றவன் தொடர்ந்து “ஆமா, நான் சின்னப் பையன் தான்! நீங்க ஆண்ட்டி தான்! அதனால என்ன இப்போ?” – என்று எகிற..

“கடைசியா வார்ன் பண்றேன் கௌதம்! நீ இதையெல்லாம் நிறுத்திக்கிட்டா நல்லது.”

“இல்லேன்னா?, இல்லேன்னா என்ன பண்ணுவீங்க?” – நக்கலாகக் கேட்டனிடம்..

“இந்த வேலையை விட்டு.. இந்த ஊரே விட்டே.. உன்னை ஓட வைப்பேன்” – விழிகளில் தெறித்த வெறுப்புடன் அடிக்குரலில் சீறினாள் அவள்.

தலையாட்டிச் சிரித்து “ஆல் த பெஸ்ட்” எனக் கூறி எழுந்தவன்.. அவள் அமர்ந்திருந்த இருக்கையில் இரு கைகளையும் பதித்து.. அவள் முகம் நோக்கிக் குனிந்து…

“கீழ இறங்கி லஸ்ட் தான்னு டிசைட் பண்றேனோ, இல்ல, மேல ஏறி.. லவ்ன்னு முடிவு பண்றேனோ! ரெண்டுத்துக்குமே என் சாய்ஸ் நீ தான்.. நீ மட்டும் தான்” – எனக் கூறி விட்டு.. மாநிற சருமத்தில்,ரத்தம் சீறிப் பாய்ந்ததன் விளைவாக ப்ரௌன் நிறமாகி விட்ட அவள் முகத்தைப் பார்த்தபடி.. வெளியேறினான் கௌதம்.

இருவருக்குமே புரியவில்லை! ஆணுக்கும்,பெண்ணுக்குமான உறவும்,அன்பும்.. மூளை,மனது,காதல்,காமம்,சாத்திரம்,சம்பிரதாயம் என அண்டத்தின் அத்தனைக்கும் அப்பாற்ப்பட்டதென்பது!

மறுநாள் திங்கட் கிழமை.

வாரக்கடைசி மின்னலாய் மறைந்து விட்டதை எண்ணி நொந்தபடி.. இயந்திரங்களோடு இயந்திரமாய் இருக்கையை நிரப்பியிருந்தனர் மென்பொறியாளர்கள்.

மதியம் நடக்கவிருக்கும் மீட்டிங் ஒன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ரிப்போர்ட்டைத் தயார் செய்தபடி வேலையில் ஈடுபட்டிருந்தான் கௌதம்.

“திவ்யா, ஐ செண்ட் யூ ஆன் ஈமெய்ல் ஃபார் ஆன் அப்ரூவல்”

அவன் அமர்ந்திருந்த க்யூபிகிளில்.. தடுப்பின் மறுபுறம் திவ்யா அமர்ந்திருந்தாள் போலும்! சூரஜ் அவளருகே நின்று பேசிக் கொண்டிருப்பது அவன் காதில் கேட்டது.

அவன் அமர்ந்திருப்பதை அவள் பார்க்கவில்லை போலும்! தெரிந்திருந்தால்.. சத்தியமாக அவனை இந்த ஏரியாவை விட்டுக் காலி செய்ய வைத்திருப்பாள்.

“வென் டிட் யூ செண்ட்?” – திவ்யா

“ஐ செண்ட் இட் ஆன் ஃப்ரை டே திவ்யா”

“ஃப்ரை டே-ல இருந்து வெய்ட் பண்ணிட்டிருந்தீங்களா?, என் கிட்ட இருந்து அப்ரூவல் வரலன்னு தெரிஞ்சதும் மெசேஜ் பண்ணியிருந்திருக்கலாம்ல?, நாம வேலைக்காக வெய்ட் பண்ணலாம். நமக்காக வேலை வெய்ட் பண்ணக் கூடாது”

வழக்கம் போல் பொரிந்து தள்ளியவளைக் கேட்டுச் சிரிப்பு வந்தது அவனுக்கு.

அருகில் சென்று அவள் இரு கன்னத்தையும் பிடித்துக் காது வரை இழுத்து “நோ டென்ஷன்! ஸ்மைல் ப்ளீஸ்” எனக் கூறி வம்பு செய்ய மனம் விழைந்தது.

“நான் நிறைய முறை மெசேஜ் பண்ணேன். உங்கக்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வரல. கால் பண்ணதுக்கும் பதில் இல்ல. இப்போ எஸ்கலேட் ஆயிடுச்சு. கொஞ்சம் சீக்கிரம் அப்ரூவ் பண்ணுங்க”

‘தப்பை உன் மேல வைச்சுக்கிட்டு, என்னைத் திட்டுவியா’ – ரீதியில் சூரஜ் கடகடவெனப் பேச.. நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

அதிலிருந்த உஷ்ணத்தில் தானாகவே அவனது கால்கள் இரண்டடி பின்னால் நகர “இ..இல்ல.. எஸ்கலேஷன் மெய்ல்ஸ் ஆர் ஃப்ளோட்டிங் அரௌண்ட். நான் இப்போ ஸ்டார்ட் பண்ணினாலும், ஜாப் ரன் ஆக 4 ஹவர்ஸ் ஆகும்.” என்று விளக்க முற்பட்டவனிடம்..

“அப்ரூவ் பண்ணிட்டேன்! இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க! மெய்ல்ஸ் நான் ஹாண்டில் பண்ணிக்கிறேன்” என்று கூறி அவள் முடித்து விட..

“மெயில் பண்ணின அடுத்த நிமிஷம் ரெஸ்பாண்ட் பண்ற ஆளு நம்ம டிஷ்யூம்! ரெண்டு நாளாகியும் ரிப்ளை வரலன்னு எனக்கு எவ்ளோ ஆச்சரியம் தெரியுமா?,” – சூரஜ் தன் பக்கத்து சீட் காரனிடம் முணுமுணுப்பதைக் கேட்டு.. இருக்கையில் லேசாகத் தலை சாய்த்து.. தடுப்பைத் தாண்டி அவள் முகத்தைப் பார்க்க முனைந்தான்.

அவள் கண்களும்,முகமும் வீங்கியிருப்பதைப் போல் தோன்றியது. உதடுகளின் வறட்சி, லிப் க்ளாஸை உறிஞ்சி விட்டதன் விளைவால்.. உதடு வெளுத்துப் போய்க் காட்சியளித்தது. எப்போதும் தீட்சண்யத்தில் ஜொலிக்கும் பூனைக் கண்கள்.. இன்று வெளிச்சமற்று டல்லடிக்க.. கலையிழந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.

யோசனையுடன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் நிமிரவும்.. அவசரமாய் இருக்கையை முன்னால் இழுத்துத் தன்னை மறைத்துக் கொண்டான்.

வேலை தாமதமாகத் தொடங்கியதன் காரணத்தைக் கேட்டு அடுத்து சில நிமிடங்களில்.. க்ளையண்ட்டுடன் தொலைபேசியில் மீட்டிங் நடக்க.. தன் தவறை மறைத்து.. அவள் ஏதேதோ காரணங்களை அடுக்கி சமாளிக்க முற்படுவது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

ஒரு மணி நேரம் போராடிப் பின்.. மாலைக்குள் முடிந்து விடும் என வாக்குறுதி கொடுத்து விட்டு நிமிர்ந்தவள்.. பெருமூச்சுடன்.. சீட்டில் தலையை சாய்த்துக் கொள்வது தெரிந்தது கௌதமிற்கு.

என்ன பிரச்சனை இவளுக்கு! – புருவம் சுருங்க அவன் பார்த்திருக்கும் போது.. ஜான்சி அவளருகே காஃபி கப்புடன் செல்வதைக் கண்டான்.

“தி….திவ்யா..” – கண் மூடிச் சாய்ந்திருந்தவளை அழைத்தாள் ஜான்சி.

“ம்க்கும்” என்றபடி நிமிர்ந்தவள் “யெஸ் ஜான்சி” எனக் கேட்டு லேப்டாப்பின் புறம் பார்வையைத் திருப்ப..

“கா..காஃபி…” என்றாள் அவள்.

அவளையும்,காஃபியையும் ஒரு முறை நோக்கி விட்டு..

“நான் கேட்கவேயில்லையே” என்றாள் திவ்யா.

“இ..இல்ல தே..தேவைப்படுமோ..ன்னு….”

“வாட் டூ யூ மீன்?”

“இல்ல. மீட்டிங் ரொம்ப டஃப்-ஆ போனது இல்லையா?, அதனால தான்.. டெ..டென்ஷனைக் குறைக்கக் கா….ஃபி..”

“நான் முதல் தடவையா அட்டெண்ட் பண்றேனா? இல்ல இந்த மாதிரி மீட்டிங்கெல்லாம் எனக்குப் புதுசா?”

“நா.. நான் அப்படி மீன் பண்ணல”

நா வறண்டு போனது ஜான்சிக்கு. காஃபி தான, கழனித் தண்ணி ரேஞ்சுக்கு ரியாக்ட் பண்றாளே! நல்லது செய்றதா நினைச்சு.. என் தலைல நானே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டேனோ! பீதியுடன் நின்றவளிடம்..

“எடுத்துட்டுப் போங்க ஜான்சி. அக்கறைக்கு இங்க அவசியமில்ல ஜான்சி. எனக்குக் காஃபி வேணும்ன்னு தோணுச்சுன்னா.. என்னால எழுந்து போய் குடிச்சுக்க முடியும். எனக்குக் கை,காலெல்லாம் நல்லாவே வேலை செய்யும்” – என்று இயந்திரக் குரலில் கூறியவளிடமிருந்துக் காஃபி கப்பை எடுத்துக் கொண்டு தப்பித்தோம்,பிழைத்தோமென சீட்டுக்கு ஓடி விட்டாள் ஜான்சி.

தவறைச் சுட்டிக் காட்டித் தான் அவளுக்குப் பழக்கமே ஒழிய.. தவறு செய்வது அவளது இயல்பல்ல! கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக.. மனம் ஏகப்பட்ட அலட்டலுக்கு ஆளாவதின் விளைவு.. தாளம் தப்புகிறது வாழ்க்கையில்! எரிச்சலுடன் எழுந்து அவள் எழுந்து செல்ல..

அனைவரும் வெறுப்புடன் முணுமுணுப்பதை உணர்ந்தான் கௌதம்.

வேலை சம்மந்தமாகத் திட்டுவாள் தான்! ஆனால்.. இப்படிப் பேசியது.. இவ்வளவு பேசியது.. இதுவே முதன் முறை! எதற்காக இப்படி நடந்து கொள்கிறாள்!

தூரத்தில் செல்பவளையே தொடர்ந்தது அவன் பார்வை.

மதிய உணவிற்குப் பிறகான மீட்டிங்கிற்காக ஒட்டு மொத்தக் குழுவும் மீட்டிங் அறையில் குழுமியிருந்தது.

திவ்யாவின் எதிரே சூரஜ் அமர்ந்திருக்க.. சூரஜ்ஜின் பின்னே கௌதம் அமர்ந்திருந்தான்.

ஒரு கையால் தலையைப் பற்றியபடி.. சுருக்கிய புருவங்களுடன்.. மறுகையால் மடிக் கணினியை இயக்கிக் கொண்டிருந்தவளையேப் பார்த்திருந்தான் அவன்.

ப்ரொஜக்டர் இயக்கப்பட்டதால்.. மீட்டிங் தொடங்கியதும்.. அறையிலிருந்த விளக்குகள் அணைக்கப்பட.. கணினியிலிருந்தப் பார்வையை எதேச்சையாகத் திருப்பியவளின் கண்களுக்கு.. கூர்ப்பார்வையுடன் தன்னைக் கூறு போட்டுக் கொண்டிருந்தவனின் முகம் தென்பட.. ஒரு நொடி அசைவற்று அவனை நோக்கியவள்.. மறுநொடி விழிகளைத் திரையிடம் திருப்பினாள்.

அதுவரை சோர்வும்,சோம்பலும் நிறைந்திருந்த அவள் முகம்.. சுருங்கிச் சிறுத்து விட.. அழுந்த மூடிய உதடுகளோடு.. சீறலான மூச்சுடன்.. அமர்ந்திருந்தாள்.

மீட்டிங் அறையிலிருந்த அனைவரும் அவளது பதிலுக்காகக் காத்திருப்பதைக் கூட உணராமல்.. திரையையே வெறித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு ஆளாளுக்குப் பார்வையைப் பரிமாறிக் கொள்ள..

“திவ்யா..” என்று மெல்ல அழைத்தான் ஜாக்.

“ஹ்ம்ம்” என்றபடித் திரும்பியவள் அனைவரும் தன் முகத்தைப் பார்ப்பதைக் கண்டு.. தன்னைப் பற்றிப் புறணி பேசுவதைத் தொழிலாக வைத்திருக்கிறவர்களுக்கு, இன்று தானே ஓவர் டைம் வேலை கொடுப்பதை உணர்ந்து.. அவமானத்தில் எரிச்சல் மிக.. சட்டென எழுந்தவள் “ஜாக் நீங்க கண்டினியூ பண்ணுங்க” எனக் கூறி விட்டு விறுவிறுவென வெளியேறினாள்.

அவள் சென்றதும்.. சிறிதும் யோசிக்காமல் தானும் இருக்கையிலிருந்து எழுந்த கௌதம், அவசரமாய் அவளைப் பின் தொடர்ந்தான்.

டொக்,டொக் என ஒலித்த ஹீல்ஸ் சத்தம், அவளது நடையின் வேகத்தை உணர்த்த..

“திவ்யா…” என்றழைத்து அவளை நிறுத்த முயற்சித்தான் கௌதம்.

நிற்காமல் நடந்தவளின் கையை அழுந்தப் பற்றி நிறுத்தினான்.

“நில்லுன்னு சொல்றேன்ல?”

அவன் முகம் பார்க்காமல்.. தன் கையை இழுத்துக் கொண்டவளை சுருக்கிய புருவங்களுடன் நோக்கியவன்..

“என்னாச்சு?, ஏன் டல்-ஆ இருக்கீங்க?” என்று விசாரித்தான்.

தோள் சுருங்க.. வாய் வழியாக மூச்சை வெளியிட்டவள் இன்னமும் பார்வையை எங்கோ பதித்திருக்க..

அவளருகே நெருங்கி.. நெற்றியில் கை வைத்துப் பார்த்துப் பின் கன்னத்தில் நிறுத்தி..

“ஃபீவர்-ஆ?” என்று வினவ…

மீட்டிங் அறை ஜன்னல் வழி ஒட்டு மொத்தக் கூட்டமும் அவர்களிருவரையும் பிளந்த வாயுடன் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு.. கிடுகிடுவென உடல் நடுங்கிப் போனது.

படபடத்து நெற்றி முழுதும் வியர்வை பூக்க.. கூசிக் குறுகி.. குனிந்து நின்றவள்.. மூச்சடக்குவதை உணர்ந்து.. பதறி அவள் தோள் பற்றி உலுக்கினான்.

கலக்கத்தில் சிவந்திருந்த விழிகளால் அவனை நிமிர்ந்து பார்த்து எரித்து விட்டு.. நிற்காமல் நடந்து விட்டாள் திவ்யா.

பத்து மாடியையும் படி வழி கடந்தவள்.. மூச்சு வாங்கத் தன் கார் அருகே சென்று நின்ற போது.. மூர்க்கம் முத்திப் போயிருந்தது.

பூனை மேலே பாய்ந்து பிராண்டத் தயாராகிக் கொண்டிருப்பதை உணராமல்.. “திவ்யா…” எனக் கண்டிப்பான குரலில் அழைத்தபடி அவளருகே நெருங்கி தோள் பற்றியவனை.. நிமிர்ந்து.. குரூரமாய் ஒரு பார்வை பார்த்து.. தன் முழு பலத்தையும் திரட்டி அவன் நெஞ்சில் கை வைத்து வேகத்தோடு தள்ளினாள்.

எதிர்பாராத அவள் தாக்குதலில் தடுமாறி.. அவளது காரில் இடித்துச் சமாளித்து நின்றான்.

ஆத்திரம் குறையாமல், மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்க.. நடுங்கிய உடலுடன்.. கோபத்தில் விழி கலங்க.. நின்றவளைத் திகைப்புடன் அவன் நோக்க..

10 மாடி இறங்கி வந்ததில் நாக்கு வறண்டுத் தாகமெடுத்து.. தண்ணீருக்காக அவள் தொண்டை ஒலியெழுப்பத் தொடங்கியது.

நுரையீரல்கள் இரண்டும் வெளியே வந்துக் குதித்து விடுமளவிற்கு.. லொக்,லொக் என இருமியவளைக் கண்டு.. பதறி..

“தண்ணீ,தண்ணீ” எனத் தேடியவன் அவள் காருக்குள் தண்ணீர் பாட்டில் இருப்பதைக் கண்டு..

“கார் கீ வைச்சிருக்கீங்களா?” என்று வினவினான்.

இருமியபடியே.. நடுங்கிய கரங்களைப் பாண்ட் பாக்கெட்டுக்குள் நுழைக்கவிருந்தவளின் அருகே சென்று அவளைச் சிரமப்படுத்த வேண்டாமென்கிற எண்ணத்துடன் சாவியை எடுக்க முற்பட்டவனை உதறித் தள்ளி நின்றாள் அவள்.

கையோடு வந்து விட்ட சாவியோடு வேகமாக காரைத் திறந்து பாட்டிலை எடுத்துத் திறந்து அவளிடம் நீட்டினான்.

தண்ணீரைக் குடித்துத் தாகத்தை நிறுத்தியவள்.. இன்னமும் மூச்சு வாங்கியபடி நிற்க..

“எதுக்குங்க இவ்ளோ கோபம்?” – அவள் முகம் பார்த்துக் கலங்கிய குரலில் வினவினான் அவன்.

பல்லைக் கடித்து அவனை விடாது நோக்கியவளின் விழிகள் சிவந்து அகோரமாக.. வெறுப்புடன் பார்வையைத் திருப்பினாள்.

“பதில் பேசுங்க ப்ளீஸ்”

“எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் முத்தம் கொடுப்பியா கௌதம்?, அவ யாரு,என்ன,எப்படின்னு தெரியாமலே?”

தொடர் இருமலின் விளைவால் கரகரத்து வந்தக் குரலுடன் வினவியவளிடம்..

“இதுக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன்” என்றான்.

தலையை ஆட்டியபடி எச்சில் விழுங்கியவள்..

“என்னைப் பத்தி என்ன நினைச்ச கௌதம்?” என்றாள்.

“புரியல”

கலக்கம் சூழ்ந்திருந்த விழிகளை வேறு புறம் திருப்பிக் கொண்டு…

“நீ கிஸ் பண்ணப்போ, அமைதியா நின்னேனே! என்னைப் பத்தி அசிங்கமா நினைச்சிருப்பேல?” என்றாள்.

“என்ன அசிங்கமா நினைச்சதைப் பார்த்தீங்க நீங்க?”

“அந்த இடத்துலயே ஓங்கி ஒரு அறை விட்டு.. உன் மூஞ்சியைப் பேக்குறதை விட்டுட்டு.. அமைதியா ஒதுங்கி வந்திருக்கேன்! ஒட்ட நினைச்ச உன்னை மாதிரி ஆம்பளைங்க எத்தனை பேரை ஒதுக்கி,ஓட விட்ருக்கேன்?, ஒழுக்கம்,ஒழுக்கம்ன்னு இத்தனை வருஷமா வாழ்க்கையைக் கடத்திட்டு.. போயும்,போயும் என்னை விடச் சின்ன வயசுல இருக்குறவன் கிட்ட.. என் பலவீனத்தைக் காட்டியிருக்கேன்னா.. நான்…. நான் எவ்ளோ கேவலமான ஆளா இருப்பேன்?, என்னைப் பத்தி ஆஃபிஸ் முழுக்க பேசுற பேச்சு எல்லாத்தையும் உண்மைன்னு ப்ரூவ் பண்ற மாதிரி பிஹேவ் பண்ணியிருக்கேனே!”

அவமானக் கறையின் நிறம்.. சிவப்பாய் வடிவெடுத்து.. அவள் முகம் முழுக்கப் படர்ந்து பரவ… உணர்வுகளுக்கும்,உள்ளத்துக்கும் நடக்கும் போராட்டத்தைத் தாங்க முடியாதவளாகத் தளர்ந்து போய் நின்றவளைக் கண்டவனின் இதயம் கண்டபடி அடித்துக் கொண்டது.

வலிப்பதாய் அவள் வாய் திறந்து கூறவில்லை! அன்றும்! இன்றும்!

ஆனால் வலியின் வீரியத்தை உணர்ந்து கொள்ள முடிந்தவனுக்கு.. அன்று போல்.. இன்றும் அது… கண்ணிலும்,காதிலும் நுழைந்து ஊர்ந்து.. மனதை அசைத்தது.

“அன்னைக்கு சொன்னதைத் தான் இன்னைக்கும் சொல்றேன். உங்களை நீங்க வருத்தப்படுத்திக்காதீங்க. என்னால அதை என்னைக்குமே வேடிக்கை பார்க்க முடியாது”

திரும்பி அவனைக் கோபமாய் முறைத்தாள் அவள். உனக்குப் புரிகிறதா, இல்லையா டா முட்டாள் என்பது போலிருந்தது அவள் பார்வை!

பிடரி முடியைக் கோதிக் கொண்டு அவள் முன்னே சென்று நின்றவன்..

“தப்பு எல்லாம்…. என் மேல! ஓகே?, உங்களை நெருங்குனது, நெருங்க நினைக்குறது நான்! நீங்க இல்ல.” என்றான். அவள் மனதில் இந்த வார்த்தைகளை பதித்து விடும் நோக்கத்தோடு! வேகமாய்!

“……………”

“உத்தமி-ன்ற வார்த்தைக்கு அர்த்தம் நீங்க! எ…எ..எப்படி சொல்ல! திஷா பிறந்தப்போ நான் தான் அவளைக் கைல வாங்குனேன்! இரண்டு கைலயும் நிறைஞ்சிருந்தக் குழந்தையை ஏந்துனப்போ.. என்ன மாதிரி இருந்தது தெரியுமா?, தூய்மையான.. கலப்படமில்லாத…. புனிதமான.. ப்ரசியஸ் ஆன.. சொக்கத் தங்கத்தைக் கைல வைச்சிருக்கிற உணர்வு! உன்னைத் தொட்டப்பவும் அதே தான்!”

யோசித்து யோசித்து.. வார்த்தைகளைக் கோர்த்து.. பதட்டத்துடன் பேசுபவனை நோக்கியவளின் பார்வையில் என்ன இருந்ததெனச் சத்தியமாய்ப் புரியவில்லை அவனுக்கு.

“என்னை நம்புங்க” – கரகரத்தக் குரலுடன் கூறினான்.

கையிலிருந்தத் தண்ணீர் பாட்டிலைக் கசக்கித் தூர எறிந்தவள்.. முகத்தைத் துடைத்தபடித் தன் காரை நோக்கி நடப்பதைக் கையாலாகாதத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவன்.. பின்..

“அப்படிப் பார்த்தா… நீங்க தான் என்னைத் தப்பா நினைக்கனும்! லவ் ஃபெயிலர்ல தண்ணி அடிச்சு மட்டையாகி.. காப்பாத்தி வீட்டுக்குக் கூட்டி வந்த பொண்ணுக்கு முத்தம் கொடுத்ததுக்காக” என்று கத்த..

காரைத் திறந்தபடி அவனை ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

“திவ்யா.. ப்ளீஸ்..”

கண்டுகொள்ளாமல் உள்ளே ஏறினாள் அவள்.

“இப்படியே அழுகை மூஞ்சியோட விட்டுப் போகாதீங்க! நைட் ஃபுல்-ஆ தூக்கம் வராது எனக்கு”

விடாமல் கத்தியவனைக் கண்டு கொள்ளாமல் அவள் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டாள்.

எரிச்சலோடு இரு கைகளால் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டவனுக்கு.. அன்றிரவு உறக்கம்.. கண்களை எட்டாமல் மூக்கோடு நின்று விட்டது.

அவளிடம் ஒப்புக் கொண்டதை போல்.. தொடக்கத்திலிருந்து தவறு செய்தது அவன்!

காத்ரீனாவுடனான காதல் தோல்வி கொடுத்த வலியில்.. முட்டக் முட்டக் குடித்து மட்டையாகி மூளையை மழுங்கச் செய்தவன்.. மூக்கையும்,வாயையும் கூட செயலிழக்கச் செய்யாமற் போனது தவறு தான்!

அந்த லாவண்டர் வாசம்… மங்கிப் போன அவன் மனதில்.. மையலைத் தூண்டியிருக்க வேண்டும்! எப்படியோ போகட்டும் என விடாமல்.. தோள் பற்றி, கரம் பிடித்து வீடு வரை வந்தவளின் மீது ஏதோ தோன்றியிருக்க வேண்டும்! எது அவளை முத்தமிடச் சொல்லித் தூண்டியது! இனி ஆராய்ந்து பிரயோஜனமில்லை! நிலைமை கை மீறிப் போய் நாளாகி விட்டது!

அப்படியே பார்த்தாலும்.. அவள் தன் கோபத்தைக் காட்ட வேண்டியது அவன் மீது. எதற்காகத் தன்னை வருத்திக் கொள்கிறாள்?, கட்டி வைத்து அடித்திருந்தால் கூட இத்தனை வலித்திருக்காது.

வெளுத்த இதழ்களும்,சிவந்த கண்களுமாய்.. லொக்,லொக் என இருமியபடி.. வியர்த்து வழிந்து..நடுங்கி நின்றவளின் முகம் மீண்டும்,மீண்டும் கண்ணில் நின்றது.

எக்குத்தப்பான சிந்தனைகளிலும், குழப்பங்களிலும் தன்னைத் தொலைத்து விட்டுத் தனியாய் நிற்பவளை எண்ணி மனது.. அவன் தூக்கத்தைக் கெடுக்க, மறுநாள் கிளம்பி விட்டான் தன் அன்னையின் இருப்பிடத்தை நோக்கி.

அதிகாலையில் கிளம்பி ஜெர்சி சிட்டியை வந்தடைந்தவன்.. டே-கேருக்குச் செல்லவிருந்தத் திஷாவை நிறுத்தித் தன்னுடன் அழைத்துக் கொண்டு.. ஏன் என்று கேட்ட வீட்டாரிடம் சமாளித்து விட்டு.. மீண்டும் பொகிப்சிக்கு வந்து சேர்ந்தான்.

“எங்க சித்தா போறோம்” – பின் சீட்டிலிருந்துக் குரல் கொடுத்தாள் திஷா.

“ஒருத்தரோட வீட்டுக்கு”

“யார் அவங்க?”

“உனக்கு ரொம்ப பிடிச்சவங்க தான்”

“எனக்குப் பிடிச்சவங்களா?”

“ஹ்ம்ம்”- என்றவன் நேராகச் சென்று திவ்யாவின் வீட்டில் காரை நிறுத்தினான்.

காலிங் பெல்லை அழுத்தி விட்டு அவன் காத்திருக்க.. சில நிமிடங்களில்.. சோர்வில் குளித்த முகத்தோடுக் கதவைத் திறந்தவள்.. அவனை அந்த நேரத்தில் எதிர்பாராமல் வியந்து பின் கோபம் கொண்டு.. விழிகளில் வாள் வீச்சு நடத்த முடிவெடுத்த சமயம்.. அவன் கால்களின் பின்னிருந்து எட்டிப் பார்த்த உருவத்தைக் கண்டு.. திகைத்துப் பின்.. உதட்டோரம் நெளியத் தொடங்கிய முறுவல்.. முழு சிரிப்பாக நீள.. மலர்ந்த முகத்தோடு.. “ஹாய் பேபி…..” என்றபடிக் குனிந்து அவளைத் தூக்கிக் கொள்ள..

“மிஸ்.கேட்” எனத் தன் சித்தப்பனிடம் கூறி வெட்கத்தில் சிரித்தத் திஷாவும் அவளோடு ஒன்றிப் போக..

வெகு நேரம் அழுது தீர்த்தக் குழந்தையொன்றிடம்.. மிட்டாயை நீட்டிய பிறகு.. அது காட்டும் முக பாவனையை, சந்தோசத்தை, சிறுபிள்ளைத்தனத்தை ரசிக்கும் அன்னையின் மனநிலையோடு.. திவ்யாவின் சிரிப்பு நிறைந்த முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கௌதமின் மனது.. காதல்,காமத்தையெல்லாம் கடந்து போயிருந்தது.