அத்தியாயம் - 3

காதல்! காதல்! காதல்!

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனைக் கண்டு

விரதம் முடிச்சிருச்சாம்..

பிரம்மச்சாரி யாருமிங்கே கிடையாது…

ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது??

ஆகாயத்தைப் பொத்தி வெக்க முடியாது…

உன் கண்ணில்.. உன் காதல்.. அட துள்ளுதே பாரு!!

ந்தப் பெட்டிக் கடையின் பக்கவாட்டிலிருந்த ‘காயின் ஃபோன் பாக்ஸை’ கிட்டத்தட்டக் கட்டிப்பிடித்தபடி பம்மி நின்றிருந்தேன் நான்.

லிட்டர்,லிட்டராய் என் முகத்திலும்,டன்,டன்னாய் என் குரலிலும் விடாது சொட்டிக் கொண்டிருக்கும் காதல் ரசத்தை.. அறிந்தவர்,தெரிந்தவர் எவரும்.. கண்டு விடாமலிருக்க.. ரீசீவரைக் கொண்டு முகத்தில் பாதியை மறைத்திருந்தேன்.

“உன் கிட்ட நான் என்ன சொன்னேன்?, நீ என்ன பண்ணி வைச்சிருக்க?” – கட்டுப்படுத்த முடியாக் குழைவுடன் என் குரல்.

“என்ன சொன்னீங்க?” – மறுபுறம் அவள்.

“அந்த 5 ரூபாயை எதுக்கு யமுனா கிட்ட கொடுத்து விட்ட?”

“கொடுக்காம?, என்னைக் கடன் காரியா சுத்த சொல்றீங்களா?”

“என் கிட்ட நேராவே கொடுத்திருக்கலாம்ல?”

“ப்ச்!அவ கிட்ட காசை மட்டுமா கொடுத்தேன்?, கூடவே ஃபோன் நம்பரும் கொடுக்கல? அதனால தான சார் இப்ப என் கூடப் பேசிட்டிருக்கீங்க! இல்லேன்னா.. நானா பேசுற வரைக்கும் எனக்கென்னன்னு இருந்திருப்பீங்க!”

“ஏய்ய்ய்..”

“ஆமா, சும்மா கைல மோதிரத்தை மாட்டி விட்டு ஹீரோ மாதிரி டயலாக் பேசிட்டா போதுமா?”

“ஹாஹாஹா.. வேற என்ன பண்ணனும்?”

“அடிக்கடி பேசனும்”

“அடிக்கடி பார்க்கனும்” – அவளைப் போலவே நானும் கூற..

“………..” – அமைதியானாள் அவள்.

“ஏய்ய்…”

“ம்ம்ம்..”

“5 ரூபாயைத் திருப்பி வாங்குற சாக்குல உன்னை நேர்ல பார்க்கலாம்ன்னு இருந்தேன் தெரியுமா?”

“………….”

“நீ எல்லாத்தையும் சொதப்பிட்ட”

“இப்போ என்ன?, சீக்கிரமே பார்க்கலாம்” – சமாதானமாய் அவள்.

“எப்போ?” – விடாக்கண்டனாய் நான்.

“சீக்கிரமே……..”

“அதான் எப்போ?”

“ஆமா, நீங்களும் ஒரு செல்ஃபோன் வைச்சுக்கலாம்ல?”

“என்ன பேச்சை மாத்துறியா?”

“ஆமா, பதில் சொல்லுங்க”

“எனக்கு எதுக்கு செல்ஃபோன் எல்லாம்?”

“எப்போ வேணாலும் பேசிக்கலாம்ல?, மெசேஜ் எல்லாம் அனுப்பலாம்”

“வீட்டு யூஸ்க்குன்னு ஒன்னு இருக்கு! ஆனா.. எங்க போனாலும் அந்தக் கண்றாவியை வேற கைல தூக்கிட்டுத் திரிய முடியுமா?, எனக்கு அதெல்லாம் செட் ஆகாது!”

“ம்க்கும்”

“ஆமா, உனக்குன்னு தனியா செல்ஃபோன் வைச்சிக்கிற அளவுக்கு நீ பெரிய பணக்காரியா?”

“ரொம்ப.. இல்ல.. கொஞ்சம் பணக்காரி தான்!”

“அப்படி என்ன வேலை பார்க்குறார் உங்கப்பா?”

“பிஎஸ்.என்.எல்-ல மேனஜரா இருக்குறார்.”

“அடேங்கப்பா! அம்மா?”

“அம்மா.. ஹவுஸ் வைஃப்”

“ஓஹோ! அப்போ.. ஒரே பொண்ணு.. செல்லப் பொண்ணுன்னு தான் கேக்குறதெல்லாம் வாங்கித் தர்றாங்க போல! எங்காத்தாவும் தான் இருக்கே! ஒத்தப் பையன் நான்.. ஒரு நாள் கூடக் கொஞ்சுனதில்ல”

“ஒரே பொண்ணு இல்ல. ஒரு அண்ணன் இருந்தான்”-கம்மிய குரலில் அவள்.

“இருந்தான்-னா?”

“அது…”

“சொல்லு”

“ப்ச், அது.. என்னை அழ வைக்குற.. ரொம்ப… எமோஷனல் ஆன சேட் ஸ்டோரி.. இப்போ பேச வேண்டாமே”

அவள் குரலில்.. என்ன உணர்ந்தேனோ..

“சரி, இப்போ பேச வேணாம். ஆனா.. ஒரு நாள்.. என் தோள்ல சாய்ஞ்சுக்கிட்டு.. என் கையைப் பிடிச்சுக்கிட்டு.. நீ அந்த சேட் ஸ்டோரியை என் கூட ஷேர் பண்ணியே ஆகனும். சரியா?” – என்றேன்.

ஒரு நொடி பேச்சின்றி அமைதியானவள்.. பின் “ம்ம்ம்ம்ம்” என்றாள்.

“ஏய்ய்.. என்ன?”

“ஒன்னுமில்ல”

“அழறியா?”

“இல்ல…”

“பவி…… என்…ன??”

“வேற ஏதாவது பேசுங்க ப்ளீஸ்…”

“சரி, நீ உன் ஃபோன் நம்பரை என் கிட்டக் கொடுக்கச் சொல்லி யமுனா கிட்ட சொன்னப்போ.. அவ எதுவும் சொல்லலயா?” – உடனடியாக நான் டாபிக்கை மாற்ற.. புன்னகை கொண்ட அவளும்..

“ஹாஹா.. உங்க தங்கச்சி சரியான பேக்கு! ஈசியா ஏமாத்திடலாம் தெரியுமா?” என்றாள்.

“ஏய்.. என்ன கொழுப்பா?”

“பின்ன?, என் பர்த்டேக்கு என்ன கிஃப்ட் வேணும்ன்னு கேட்டு நச்சரிச்சுட்டே இருந்தா. என்ன,ஏதுன்னு கேள்வி கேட்காம உன் அண்ணன் கிட்ட என் ஃபோன் நம்பரைக் கொடுக்கனும். இது தான் நான் உன் கிட்டக் கேட்குற கிஃப்ட். முடியுமான்னு கேட்டேன்!”

“அடிப்பாவி, தைரியம் தான் உனக்கு! அப்புறம் என்னாச்சு?”

“ஒரு நிமிஷம் ஷாக் ஆகி என்னைப் பார்த்தா! அப்புறம் என்ன நினைச்சாளோ.. கொடுக்குறேன்னு ஒத்துக்கிட்டா! உங்கக் கிட்ட ஏதாவது கேட்டாளா?”

“இல்ல, நேரா வந்து என் கிட்ட ஒரு துண்டு சீட்டை நீட்டுனா. இதுல பவித்ராவோட ஃபோன் நம்பர் இருக்குன்னு சொன்னா.”

“ஹாஹாஹா! அப்புறம்?”

“எனக்கு திக்குன்னு ஆயிடுச்சு! ஆனாலும்.. கெத்-ஆ முகத்தை வைச்சுக்கிட்டு.. கைல வாங்குனேன்! முறைச்சுப் பார்த்துட்டு எதுவும் கேட்காம கிளம்பிப் போயிட்டா.”

“பார்த்தீங்களா! ஒரு கேள்வி கூடக் கேட்கல! சும்மாவா! என் நட்பு அவ!”

“அதுசரி! என்னைக்குன்னாலும் தெரிய வேண்டியது தானன்னு நானும் ஒன்னும் சொல்லிக்கல! ஆனா.. விஷயம் தெரியும் போது.. கண்டிப்பா ரகளை பண்ணுவா”

“பின்ன! என்னையெல்லாம் நிச்சயமா.. ஓட விட்டு அடிப்பா..”

அவள் சொன்ன விதத்தில் நகைத்த நான்.. ஃபோன் பாக்ஸின் டிஸ்ப்ளேயில் நிமிடங்கள் கரைந்து விட்டதை உணர்ந்து.. அவசரமாக.. ஒரு ரூபாயை நாணயத்தை அதன் வாய்க்குள் இட்ட படி..

“ஆமா… ஒரு வேளை நான் அன்னிக்கு அந்த பஸ்ல ஏறாம போயிருந்தா.. என்ன பண்ணியிருப்ப?” – என்றேன்.

“நேரா நீங்க படிக்கிற காலேஜ்க்கு வந்து.. உங்களைப் பார்த்திருப்பேன்” – அசால்ட்டாகக் கூறியவளிடம்..

“நிஜமாவா?” – சந்தேகமாக நான் கேட்க..

“ம்ம்ம்ம்” என எரிச்சலாய் இழுத்தவள் “உங்களுக்கு ஏன் என்னைத் தேடி வரனும்ன்னு தோணவே இல்ல?” எனக் காய்ந்தாள்.

“தெரியல! எப்படியும் உன்னை நான் மறுபடி பார்ப்பேன்னு மனசு சொல்லுச்சு!” – பிடரியைக் கோதியபடி மையலுடன் நான் சொல்ல..

“அடப் போய்யா!” – என சலித்துக் கொண்டாள் அவள்.

“போய்யாவா? ஏய்.. உன்னை விட நான் 3 வயசு மூத்தவன் தெரியும்ல?, ஒழுங்கா மரியாதை கொடு”

“ஆமாமா யமுனா சொன்னா! யுஜி முடிச்சு.. ஒரு வருஷம் பிரேக் விட்டுட்டு.. பிஜி பண்ணிட்டிருக்கீங்கன்னு”

“ஆ….மா! எனக்கு என் சித்தப்பாவோட சேர்ந்து விவசாயம் பண்ணனும்ன்னு ஆசை! ஆனா.. எங்கம்மாவுக்கு நான் நிறைய படிச்சு.. வெளிநாடு போய் சம்பாதிக்கனும்ன்னு ஆசை! யுஜி முடிச்சப்புறம்.. எங்கம்மாவுக்குப் போக்கு காட்டிட்டு வயக்காடே கதின்னு கிடந்தவனை.. பேசிப்,பேசியேக் கரைச்சு காலேஜ்ல சேர்த்து விட்டுட்டார் என் சித்தப்பு”

“ஏன், படிக்கப் பிடிக்கலையா?, இல்லயே! நீங்க நல்லா படிக்கிற ஆசாமின்னு யமுனா சொன்னாளே”

“படிக்க இஷ்டம் தான்! ஆனா.. வெளிநாடு போறதுல தான் விருப்பமில்ல”

“உங்களை அங்கயே செட்டில் ஆகச் சொல்லி யார் சொன்னா? அவங்க விருப்பப்படி கொஞ்ச நாள் போய் சம்பாதிச்சுட்டு வர்றதுல என்ன உங்களுக்கு? காரணமில்லாம.. அப்படி சொல்வாங்களா?”

“என்ன இப்பவே மாமியாருக்கு வக்காலத்தா?”

“ஆமா! பின்ன..! எனக்கே எனக்குன்னு உங்களைப் பெத்துப் போட்டிருக்காங்களே! அந்தப் பாசமாவது இருக்கோனுமில்ல”

“ஹாஹாஹா… நான் அவ்ளோ ஸ்பெஷலா உனக்கு?”

“ம்ம்ம்”

“எப்போயிருந்து?”

“ம்ம்ம்ம், முறுக்குன மீசையோட.. வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு.. முழுப்பல்லையும் காட்டி.. சோளக்காட்டுக்கு நடுவுல நின்னுட்டிருந்தீங்களே! அப்போயிருந்து..”

நிறுத்தி.. நிதானமாய்.. அவள் கூறி முடிக்கையில்.. ஃபோன் பாக்ஸ் ‘பீப்,பீப்’ என்கிற சத்தத்துடன் நின்று போக..

‘என்ன… என்ன சொல்கிறாள் இவள்….????’ என்கிற பதை,பதைப்பில்.. அவசர,அவசரமாய்… 51-வது நாணயத்தை ஃபோன் பாக்ஸில் இட்டு.. அவளது செல்ஃபோன் எண்ணை அழுத்தினேன்.

“ஹலோ…” - உல்லாசச் சிரிப்புடன் அவள்.

“ஏய்ய்.. என்…னடி சொன்ன இப்போ?, என்னை முன்னமே பார்த்திருக்கியா? எப்போ?, எப்போ பார்த்த?, பார்த்தும்.. ஏன் டி என் கண்ணு முன்னாடி வராம போன?, ஏன் இவ்ளோ நாளை வேஸ்ட் பண்ண வைச்ச! சண்டாளி! சண்டாளி!” – வியப்பில்,மகிழ்ச்சியில்,கோபத்தில் நான் பரபரக்க…

மறுமுனையில் அமைதியாய் இருந்தாள் அவள்.

“பவித்……….ரா” – பொறுமையற்றக் குரலில் நான்.

“……..”

“பேசு…..”

“ஒரு தடவை யமுனா வீட்டுக்குப் போனப்போ.. உங்க ஃபேமிலி ஃபோட்டோஸ் எல்லாம் காட்டுன! அதுல பார்த்தேன்.”

“ஃபோட்டோலயா?”

“ம்ம், நீங்க ஃபைனல் இயர் படிக்கிறப்போ எடுத்த ஃபோட்டோன்னு சொன்னா. ஆனா.. என் கிட்ட ஃபோட்டோ காட்டுனதை உங்க தங்கச்சி மறந்துட்டா போல!”

“ஃபோட்டோ பார்த்துமா, அன்னிக்கு ஹாஸ்பிடல்ல வைச்சு என்னை யாருன்னு கேட்ட?”

“ஆமா!, தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா.. என் கெத்து என்ன ஆகுறது?”

“போடி… லூசு”

“ஃபோட்டோல பார்த்தப்போ... ஆளைப் பாரு கருப்பண்ணசாமி மாதிரின்னு முதல்ல.. கிண்டல் பண்ணத் தான் தோணுச்சு! அப்….புறம்… கொஞ்சமே.. கொஞ்சம்…. சைட் அடிக்கத் தோணுச்சு! அதுக்கப்புறம்… ஏன்னு தெரியல.. உங்க முகம் மனசுல பதிஞ்சு போச்சு!” – லேசான சிரிப்புடன் கூறினாள் அவள்.

எனக்குத் தெரியும்! நான் அழகான ஆண்மகன்களின் வரிசையில் வருபவனல்ல என்று! ஆனால்.. அவள் வார்த்தைகள் என்னைப் பேரழகனாக உணர வைத்தது!

இத்தோடு இரண்டாவது முறை! என்னை அவள் வெட்கப்பட வைப்பது! தாடியைக் கோதியபடி… முறுவலை மறைத்தேன் நான்.

“அப்போ.. இந்த மாதிரி எந்த ஃபீலிங்ஸூம் கிடையாது! ஆனா.. ஹாஸ்பிடல்ல மீட் பண்ணப்போ.. வைச்சக் கண்ணு வாங்காம நீங்க என்னையே பார்த்திட்டிருந்தீங்களா?, உள்ள.. என்னென்னவோ ஆயிடுச்சு”

“……….”

“ஏன் அப்படிப் பார்த்தீங்க?” – கிசுகிசுப்பாய்க் கேட்டவளை வம்பு செய்ய வேண்டி..

“கார்ட்டூன் கேரக்டர் மாதிரி.. இவ்ளோ பெரிய கண்ணை வைச்சிருந்தா.. உத்துப் பார்க்கத் தானடி தோணும்?” – என நான் கேட்க..

“ஹலோ! என்ன கொழுப்பா?” – எனக் கத்தத் துவங்கினாள் அவள்.

“நிஜமா தான்.. நீ பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும்.. உன் வாய் டப்பிங் மட்டும் தான் கொடுக்குது! எக்ஸ்ப்ரஷன் எல்லாம் உன் கண்ல இருந்து வருது.. பார்த்துட்டே இருக்கலாம் போல.. அநியாயத்துக்கு பேசுது உன் கண்ணு”

“……………” – வெட்கப்படுகிறாள் போலும்!

“கண்ணழகி……..” – அவளை மேலும் வெட்கப்பட வைக்க சித்தம் கொண்டது என் குரல்.

“ம்ம்ம்ம்”

“வசியம் பண்ணிட்ட நீ என்னை” – கரகரத்தக் குரலோடு நான்.

“நானா?”

“ஆமா.. முதல்ல கண்ணால!, இப்போ.. பேசிப் பேசியே!”

“அப்போ நான் ஃபோனை வைக்கட்டுமா?”

“வைக்காத”

“………….”

“எனக்கு உன்னை இப்போ நேர்ல பார்க்கனும்”

“…………”

“வரட்டுமா?”

“எங்க?”

“உன் வீட்டுப் பக்கம்”

“அடி விழும்”

“ப்ளீஸ்டி”

“அய்யோ! அப்டியெல்லாம் பண்ணிடாதீங்க! மாட்டுனா.. நான் செத்தேன்”

“ஹாஹாஹா.. என்ன பண்ணிடுவார் உங்கப்பா? வெட்டிப் போட்டுடுவாரா?”

“இல்ல, அதை விடக் கொடுமையா.. என்னை உங்களுக்கேக் கட்டி வைச்சிடுவார். பரவாயில்லயா?”

“உன்னைக் கட்டிக்கிறது கொடுமையா எனக்கு?”

“பின்ன இல்லையா?”

“அதைக் கட்டிக்கிட்டாத் தான் சொல்ல முடியும்?”

“நீங்க எந்த கட்டிக்கிறதை சொல்றீங்க?”

“எப்போ பார்க்கலாம்ன்னு சொல்லு, எந்தக் கட்டிக்கிறதுன்னு அப்போ சொல்றேன்”

“நீங்க இப்படியெல்லாம் பேசுனா.. நான் வர மாட்டேன்”

“உன் கிட்ட இப்படியெல்லாம் பேசாம, வேற எவ கிட்டடி பேசுறது?”

“அதுக்காக?”

“எனக்குப் பார்க்கனும். கட்டிக்கனும். வருவியா வர மாட்டியா?”

“காதலிக்க ஆரம்பிச்சு.. 2 நாள் கூட ஆகல! அதுக்குள்ள நெக்ஸ்ட் ஸ்டேஜ்க்கு போய்ட்டீங்க நீங்க?”

“காதல்ன்றதே எக்ஸ்ட்ரீம் ஸ்டேஜ் தான் டி!”

“அதுசரி” – நொடித்துக் கொண்டவளோடு தொடர்ந்த என் பேச்சு.. கையில் பொன் முடியைப் போல்.. குவியலாய் நான் வைத்திருந்த நூறு ஒரு ரூபாய் நாணயங்களைத் தாண்டி ஓட.. கடைசியில்..

“எங்கப்பா வந்துட்டார், நான் கீழ போகனும், அப்புறம் பேசுறேன்” – என்று அவள் முடித்து வைத்தாள்.

மந்தகாச சிரிப்புடன் ரிசீவரைத் தாங்கியில் பொருத்திய நான், என்னை உற்று நோக்கியக் கடைக்காரரைக் கண்டு கொள்ளாமல் 2 பத்து ரூபாய் டேரி மில்க் சாக்லேட்களை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நேராக யமுனாவின் வீட்டிற்குச் சென்றேன்.

வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தவளிடம் சாக்லேட்களை நீட்டி விட்டு.. அவளுக்கெதிரேயிருந்த திண்ணையில் அமர்ந்தேன்.

என்னை ஒரு மார்க்கமாக நோக்கியவளிடம்..

“படிக்கிறியா தங்கச்சி?” என்றேன்.

“ஆமா”

“படி,படி! நல்லா படி!” – அதிகபட்ச பாசத்தோடு நான்.

“எதுக்கு சாக்லேட்டு?”

“சுசுசுசுசும்மா தான்.. ஏன், உனக்கு முட்டாய் வாங்கிக் கொடுக்க.. இந்தண்ணனுக்கு உரிமை இல்லையா?” – ம்ஹ்ம்! நான் அடங்கப் போவதில்லை!

“அதுசரி! கத்திரிக்கா முத்துனா.. சந்தைக்கு வந்து தான் ஆகனும்” – சாக்லேட்டைப் பிரித்து.. ‘அச்சக்,அச்சக்’ எனக் கோபமாய் மென்றபடி அவள் கூற..

“நாங்க-லாம் அல்ரெடி முத்திப் போய் சந்தைல தான் நிற்குறோம்!” – என்ற என் குரலில் பெரிதாய் வாயைப் பிளந்தாள் அவள்.